ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.
தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் -4-
ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.
————-
ஸ்ரீ விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம்—
3. அத்யாயம் பாரததேச வர்ணனை-
13. அத்யாயம் ஜடபரதர் உபாக்கியானம் –
14. அத்யாயம் பரம்பொருள் தெளிவு-
———-
தேவர்களும் கொண்டாடும் பாரத தேசம் 2-3-24
பா ரதம் -ஞானத்தில் திளைத்து இருக்கும்
மஹான்கள் நிறைந்த பூமி
பரதர் ஆட்சி செய்த பரத கண்டம்
துஷ்யந்தன் சகுந்தலை
ராமன் தம்பி
நாட்டியம் சாஸ்திரம் பரத முனி
ஆதி பரதர் –
சாளக்கிராமம் சென்றாராம் முதிர்ந்த வயசில் -பாக்ய சாலி -த்யானிக்கத் தொடங்கினார்
ராஜ ரிஷியாக அஹிம்சை உள்ளிடட நல்ல குணங்கள்
அச்யுத மாதவா கோவிந்தா வாசுதேவா ஆனந்தா கேசவா கிருஷ்ணா விஷ்ணு ஹ்ருதிகேசா நமோஸ்துதே
ஸ்வப்னத்திலும் திருநாம சங்கீர்த்தனம்
எழுந்து இருக்க ஹரி
உண்ணும் போது கோவிந்தா
தூங்க மாதவா
திரு நாமங்கள் பொருளையும் அறிந்து -சொல்வாராம்
அஜாமலன் நாராயணா பிள்ளையைக் கூப்பிட்டாள் பலன் பெற்றான்
நெருப்பு அறியாமல் கை வைத்தாலும் சுடுமே
மருந்தும் அத்தை அறியாமல் இருந்தாலும் பலன் உண்டே
கண்ணுள்ளே உள்ள காத்தன்மையினால் எண்ணிலும் வரும்
யுக்த ஆகார விகாரஸ்து யுக்த சேஷ்டித்த யுக்த ஸ்வப்னா அபத்தம் -சரியான அளவு -உணவு சேஷ்டிதம் தூக்கம் த்யானம் -ஸ்ரீ கீதை
பெரிய தியாகியாய் இருந்தாலும் இந்த மான் குட்டி மீது பற்றை விடமுடியாமல் தியானித்து
பகவத் தியானத்தையும் கைவிட்டார்
தைல தாராவத் -இதயத்தில் நல்ல எண்ணம் தொடர்ந்து வர வேண்டுமே –
சமாதி பங்கம் ஏற்பட்டு –
மரண நிலையில் புத்ரன் ஸ்தானத்தில் மான் குட்டி –
சரணாகதியை அவன் நமக்காவ் நினைத்து நயாமி கூட்டிச் செல்வானே
ஜெம்பு மார்க்கத்தில் மானாகவே பிறந்து முன் ஜென்ம நினைவுடன் பிறந்தார்
யோக ப்ரஷ்டர் -பற்றி கீதையில் உண்டே
நல்லது செய்தவன் என்றும் கெடுவது இல்லை என்பதே நான்மறையின் தீர்ப்பு
சாளக்கிராமம் க்ஷேத்ரம் சென்றதாம் -அங்கு த்யானம் செய்து –
அடுத்த ஜென்மம் யோகிக்கு மகனாக -கடைக்குட்டி -இங்கும் பரதர் பெயர் உடன்
முன்பு கற்ற வேதம் த்யானம் தொடர்ந்து-ஜடமாகவே இருந்தாராம் ஜட பரதர்
புகழ்ந்தால் கர்வம் வந்து த்யானம் குலையும்
அவமானம் செய்தால் நன்றாக தியானிக்கலாம்
முன்பு சொன்னதுபோல், அழுக்குத் தீர்ப்பது போன்ற செய்கைகள் ஒன்றுமில்லாமல், சிகை, யக்ஞோபவீதம் முதலிய பிராமணக் குறிகளும், நீராடல் சந்தியாவந்தனம் செய்தல் முதலிய பிராமணச் செயல்கள் மட்டுமே உடையவராய், பித்தனைப் போலவே ஜடபரதர் திரிந்துவந்தார்.
இந்நிலையில், சவ்வீர ராஜனுடைய சாரதியானவன் அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து, இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான்.
பாகவதத்தில் ரகுகணன் ராஜா என்று சொல்லும்-
அந்தக் காளியானவள். அவர் மகாயோகி என்பதையறிந்து, அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே, தன் கத்தியினால் வெட்டி, அவனது கழுத்திலிருந்து ஒழுகிய ரத்தத்தை தன் பரிவாரத்துடன் கூடச்சேர்ந்து குடித்து மகிழ்ந்தாள்.
ராஜா பேச இவர் உபதேசம்
மதுரகவி கேட்க திருவாய் மொழி பெற்றோம்
இவை எல்லாம் ஈஸ்வரன் சங்கல்பம்
என்னை பார்க்க வில்லை -உன்னையே பார்க்காதவன் -அஹம் நான் -தேகத்துக்குள் உள்ள ஜீவனையே குறிக்கும் -அணு-ஞான ஆனந்த மயம் -சேஷன் –
ச்யுதன் -அழியும் சரீரம் -ஆத்மா நித்யம்
ஆத்ம ஸ்வரூபம் பேதம் இல்லை -பகவானுக்கு உடல் –
கபிலர் இடம் இத்தையே உபதேசமாகக் கேட்க போன எனக்கு நீர் உபதேசித்தீரே மகிழ்ந்தான்
சிறந்த பக்தி யோக நிஷ்டராக இருந்தாலும் பேற்றில் விளம்பம் ஒரு மானால் ஏற்பட்டது இவருக்கும்
கேட்டவர்களுக்கு பலன் முக்தி யோகம் சித்திக்கும்
நான்காம் அம்சம் இரண்டாம் அத்யாயம் மீன் வரலாறு வரும்
மாந்தாதா வ்ருத்தாந்தம் sun never sets in his raajyam
ஸுபரி -முனிவர் -மீன் சம்மதன் என்ற பெயர் உடன் குடும்பத்துடன் -ப்ரதக்ஷிணம் பண்ணி -வணங்க
நான் வீணாகப் போனேன்
குடும்பமாக அனுபவிக்காமல்
ஆபாஸ விருத்திக்கு ஐம்பது உருவம் கொண்டார்
ஸுபரி குடும்பம் பெருகி விரக்தி யாகி -வானப்ரஸ்தம் சென்று பேறு அடைந்தார்
பலன் -அஷ்ட ஜன்மா -எட்டுத்தலைமுறை அனுக்ரஹம்
தீய மார்க்கம் போகாமல்
எனது நான் அபிமானம் இல்லாமல் நடக்கும்
இவர் பேற்றுக்கு விளம்பம் மீனால் ஏற்பட்டது
நம் முயற்சியால் அடைய -இவ்வளவு விளம்பம்
அவனே கதி -சரணாகதி அடைய வேண்டுமே
———
3. பாரததேச வர்ணனை
சமுத்திரத்துக்கு வடக்கே இமயத்திற்குத் தெற்கே இருக்கிற பூமியானது பரதனுடைய சந்ததியார் வசிப்பதால், பாரதவர்ஷம் என்ற பெயரைப்பெற்றது. மைத்ரேயரே! இதன் பரப்பளவு ஒன்பதாயிரம் யோசனை தூரமாகும். சொர்க்கத்தையடைகிறவர்களும், மோக்ஷத்தையடைகிறவர்களுக்கும் பிரவிருத்தி, நிவர்த்தி கர்வ சாதன பூமியாக இருப்பது இதுவேயாகும். இதில் மகேந்திரம், மலயம், ஸஹ்யம், சுத்திமான், ரீக்ஷம் விந்தியம், பாரியாத்திரம் என்ற ஏழுவித மலைகள் இருக்கின்றன. பிராணிகள் இங்கிருந்து தான் சொர்க்கமடைகிறார்கள். மோக்ஷத்தைப் பெறுகிறார்கள். மிருகாதி பிறவிகளையும் நரகத்தையும் இங்கிருந்தே அடைகிறார்கள். இதைவிட வேறிடத்தில் மனிதர்களுக்கு சொர்க்கானுபவர்க்கங்களுக்கு உரிய கர்மங்கள் விதிக்கப்படவில்லை. இந்தப்பாரத வருஷத்துக்கு இந்திர த்வீபம் கசேரு, தாம்பர பர்ணம், கபஸ்திமான், நாகத்வீபம், சவுமியத்வீபம், காந்தர்வத்வீபம், வாருணத்வீபம், பாரதத்துவீபம் என்ற பெயருடைய ஒன்பது பிரிவுகள் உண்டு. அவற்றில் ஒன்பதாவது பிரிவான பாரதத்துவீபம் என்பதே நாமிருக்கும் இந்தப் பூமியாகும். இது சகரர் தோண்டிய கடலால் சூழப்பட்டுள்ளது. இந்தப்பாரத கண்டமானது தெற்கு வடக்கில் ஆயிரம் யோசனையளவாக இருக்கிறது. கிழக்கில் கிராத தேசமும், மேற்கில் யவனதேசமும் இருக்கின்றன. நடுவில் பிரம்ம க்ஷத்திரிய; வைசிய; சூத்திரர் என்ற நான்கு வருணத்தினரும் வகுப்பின்படி இருக்கின்றனர். யாகங்களைச் செய்வதும், யுத்தஞ்செய்து துஷ்டர்களையடக்குதலும், வாணிபஞ்செய்தலும், சிற்பத்தொழில் செய்வதுமாகிய ஜீவன உபாயங்களிலே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதில் சதத்துரு சந்திர பானக முதலிய நதிகள்; இமயமலையிலிருந்து பெருகுகின்றன. வேதஸ்மிருதி முதலிய நதிகள் பாரியாத்திர பருவதத்திலிருந்து உண்டாகிப் பாய்கின்றன. நருமதை, சுரசை, முதலிய நதிகள் விந்திய மலையில் உற்பத்தியாகின்றன. தாபீ, பயோஷ்ணீ, நிர்விந்தியை முதலிய நதிகள் சஹ்ய பர்வதத்தின் தாழ்வரையின்று உண்டாகின்றன. கிருதமாலை, தாம்பரபருணீ நதிகள் மலயாசலத்தில் உண்டாகின்றன. திரிசாமா, ரிஷிகுல்யா முதலிய நதிகள் மகேந்திரகிரியில் உதிக்கின்றன. குமாரீ முதலிய நதிகள் சுத்திமத்தென்னும் மலையில் பிறந்தவை. இவற்றைச் சார்ந்த உபநதிகளும் வேறு ஆறுகளும் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இவ்வாற்றங்கரையில் குரு பாஞ்சாலம், மத்தியதேசம், பூர்வதேசம், காமரூபம், ஆந்திரம், கலிங்கம், மகதம், பாண்டியதேசம், அபராந்தம், சவுராஷ்டிரம், சூத்திர தேசம், ஆபீரதேசம், பாப்பர தேசம், மாருகம், மாளவம், பாரியாத்தி ரம்சவ்வீரம், சிந்து, ஊணம், சால்வம், கோசலம், மத்திரம், ஆராமம், அம்பஷ்டம், பாரசீகம் முதலிய பல தேசத்து மக்களும் வாசஞ்செய்து கொண்டு, அவற்றின் தண்ணீரைப் பானம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் தான் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகை யுகபேதங்களும் உண்டு.
இங்குதான் யோகியர் தவஞ்செய்கின்றனர். யாகசீலர் யாகஞ்செய்கின்றனர். தானசீலர் தானம் செய்கின்றனர். இவ்விதமான பரலோக சாதகமான நல்ல தருமங்களை ஜனங்கள் ஆதரவோடு செய்து வருகின்றனர். இந்த ஜம்புத்தீவிலே யக்ஞ புருஷனாகவும், யக்ஞ சொரூபியாகவும் இருக்கிற ஸ்ரீவிஷ்ணுபகவான் யக்ஞங்களினால் ஆராதிக்கப்படுகிறான். ஏனெனில் இந்தச் சம்புத் தீவானது பரலோக சாதகமான கருமங்களைச் செய்யத் தகுந்த இடமாகையால், பாரதவருஷம் தான் உயர்வானது. மற்ற பூமியெல்லாம் போகங்களுக்கு உரியனவாம். ஒரு ஜந்து அநேகப் பிறவிகளிலே செய்த புண்ணியத்தினாலே இவ்விடத்தில் மனிதப்பிறவியாகப் பிறக்கும்; இந்தப் பாரத வருஷத்தைப் பற்றித் தேவதைகள் பாடியபாட்டைக் கேளுங்கள். சொர்க்கத்துக்கும் மோக்ஷத்துக்கும் ஏதுவான கர்மங்களுக்குச் சாதகமாயிருக்கிற இந்தப் பாரதவருஷத்திலே தேவஜன்மத்துக்குப் பின்னாயினும் இந்த ஜன்மத்தைப் பெறுவாராயின் அவர்களே புண்ணியவான்கள். அவர்களே தேவர்களிலும் மேலானவர்கள். அவ்விடத்து ஜனங்கள் கர்ம பயன்களிலே கருத்தை வைக்காமல் செய்யும் கருமங்களையெல்லாம் பரமாத்மாவான ஸ்ரீவிஷ்ணுவுக்கு அர்ப்பணஞ்செய்து நிர்மலர்களாய் அந்த அநந்தனிடத்திலே லயத்தை அடைகின்றனர். நமக்குச் சொர்க்கப் பிராப்தி காரணமான கருமம் அனுபவித்தலினாலே அழிந்த பிறகு எவ்விடத்திலே தேக சம்பந்தைப் பெறுவோமா அதையும் அறியோம். இப்போது பாரதவருஷத்திலே பிறவி பெற்று ஞானேந்திரியக் கர்மேந்திரியங்களைக் குறைவறப் பெற்றவர்கள், சுலபமாய், ஆன்மா கடைத்தேறும் வழியைத் தேடச் சக்தி பெற்றவர்களாவார்கள். ஆகையால் அவர்கள் மகாபுண்ணியவான்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மைத்ரேயரே! இப்படி ஒன்பது வருஷங்களாகப் பிரிந்து லக்ஷம் யோசனை பரப்பளவுள்ள ஜம்புத்து வீபத்தின் விவரத்தைச் சுருக்கமாகச் சொன்னேன். இந்த ஜம்புத்து வீபத்தைச் சுற்றிய வளையத்தைப் போல் லவண சமுத்திரமானது லக்ஷ யோசனை விஸ்தாரமுடையதாக அமைந்திருக்கிறது.
13. ஜடபரதர் உபாக்கியானம்
பராசர மகரிஷியே! நான் கேட்டவண்ணம் பூமி, கடல், நதிகள், கிரகங்கள் முதலியவற்றின் ஸ்வரூபங்களையும் மூன்று உலகமும் ஸ்ரீவிஷ்ணுவையே ஆதாரமாகக் கொண்டு நிலைபெற்றிருப்பதையும் ஞானஸ்வரூபமே முக்கியமானது என்பதையும் நீங்கள் எனக்கு விளக்கியருளினீர்கள்! பரத மாமன்னனது சரிதத்தை பின்னர் அறிவிப்பதாகச் சொன்னீர்கள். அதன்படி இப்போது அதைக் கூறியருளல் வேண்டும். யோகத்துடன் கூடி ஸ்ரீவாசுதேவனிடத்தில் இதயத்தை நிலைநிறுத்தித் தியானஞ்செய்து கொண்டு சாளக்கிராம ÷க்ஷத்திரத்தில் வசித்த அந்தப் பரதமகாராஜனுக்கு, ஸ்ரீஹரித்தியான பிரபாவத்தாலும், ÷க்ஷத்திர மகிமையினாலும் மோட்சமுண்டாகாமல், மறுபடி பிராமண ஜன்மம் எப்படி ஏற்பட்டது? அவர் அந்தப் பிராமணப் பிறவியில் என்ன செய்தார்? அந்த விஷயங்களை நீங்கள் எனக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்றார் மைத்ரேயர். உடனே பராசரர் கூறலானார். மைத்ரேயரே! அந்தப் பரத மகாராசன் எம்பெருமானது திருவடிகளையே தியானஞ் செய்துகொண்டு சாளக்கிராமத்திலேயே பலகாலம் வசித்து வந்தார். அவர் மகா குணவான்; மிகவும் உத்தமர், அவர் சொப்பனம் மத்தியம் உள்பட சகல அவஸ்தைகளிலும் யக்ஞேச, அச்சுத கோவிந்த, மாதவ, அநந்த, கேசவ, விஷ்ணோ ஹ்ருஷிகேசா வாசுதேவா, உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்பதை உச்சரித்துக் கொண்டிருந்தாரேயல்லாது வேறொன்றையும் உச்சரிக்கவில்லை. வைதிக கிரியைகளை நடத்துவதற்காக சமித்து, புஷ்பம் தருப்பை முதலியவற்றைச் சேகரிப்பது போன்ற செயல்களைத் தவிர வேறெதையுஞ் செய்ததில்லை. இவ்விதமாகப் பரதர் பற்றில்லாமல் யோக தவம் செய்து வரும் போது, ஒருநாள் மகாநதியில் நீராடிச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து கொண்டிருக்கும்போது, அங்கே கருவுயிர்க்கும் தருணமுடைய மான் ஒன்று, தன்னந்தனியாகத் தண்ணீர் குடிக்க வந்தது. அது நீர் அருந்திக் கொண்டிருக்கும்போது, அதிபயங்கரமான சிங்கத்தின் கர்ஜனைக்குரல் கேட்டது. அந்தக் கர்ஜனையைக் கேட்ட மான் மிகவும் பயந்து திகைத்துப் பரபரப்புடன்; நதியின் உயர்ந்த கரை மீது ஏறிச் சென்றது. அப்போது அதன் கர்ப்பமானது கீழேயிருந்த நதி நீரில் விழுந்து அலைகளிலே மிதந்தது. பரதர் அந்தமான் குட்டியைக் கண்டு இரக்கங்கொண்டு, அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். இது இப்படியிருக்க அந்தமான், கருப்பம் விழுந்த அதிர்ச்சியினாலும் மிக உயரத்தில் ஏறிய வருத்தத்தாலும் கீழே விழுந்து இறந்தது. தாய்மாமன் இறந்ததும் அதன் சின்னஞ்சிறு மான்குட்டி அந்தரமாக இருப்பதையுங்கண்ட பரதயோகி மிகவும் இரக்கங்கொண்டு, அந்தக் குட்டியை எடுத்துக் கொண்டு தமது ஆசிரமம் சேர்ந்தார்.
பிறகு, அவர் மான் குட்டியை வெகு அன்புடனே வளர்த்து வந்தார். ஆசிரமத்தின் அருகாமையில் இருந்த இளம்புற்களை மேய்ந்து கொண்டும், புலியைக் கண்டால் பயந்து ஆசிரமத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொண்டும் காலையில் புறப்பட்டு மேய்ந்து விட்டு, மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பிவந்து தங்கிக்கொண்டும் இருந்தது. இவ்விதமாக அந்த மான் ஓடி விளையாடுவதைக் கண்ட பரதரின் மனம், அதனிடத்தில் பற்றும் பாசமும் கொள்ளலாயிற்று. ராஜ்யம், மக்கள் முதலிய பந்தபாசங்களை விட்டு, யோக நிஷ்டையிலிருந்த அந்த முனிவர் மான் மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார். அதைச் சிறிது நேரம் காணவிட்டாலுங்கூட, ஐயோ நம்முடைய மான்குட்டியைக் காணவில்லையே? அதைச் செந்நாய் தின்றதோ, புலியறைந்ததோ, இன்னமும் வரவில்லையே? என்ன செய்வேன்? என்று வருந்துவார் அந்த மான் விளையாடிய இடங்களில் அதன் சிறு குளம்புகளில் பெயர்க்கப்பட்ட மேடு பள்ளமான இடத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவேன்? அப்படிப்பட்ட என்னுடைய மான் குட்டி எங்கே போயிற்றே தெரியவில்லையே! அது என்னருகே வந்து, தனது கொம்பினால் என்னுடம்பை உரசி, சுகம் உண்டாக்குமோ? அது ÷க்ஷமமாய் இங்கே திரும்பி வந்து சேர்ந்து சுகத்தை உண்டாக்குமோ இங்கு வராமல் துன்பத்தை உண்டாக்குமோ? என்ன செய்வேன்? இப்போதுதான் முளைத்த தனது சிறுபற்களால் கடித்த தருப்பைப் புற்களும் நாணல்களும் சாமவேதிகளான பிரமச்சாரிகளைப் போல் மொட்டையாகத் தோன்றுகின்றனவே? இவ்வாறு அது மறுபடியும் வந்து மேயக் காண்பேனோ? என்று பரத மகரிஷி வருந்துவதும், அது வந்ததும் பெருமகிழ்ச்சியடைவதுமாக இருந்தார். இவ்வாறு அந்த மான் குட்டியின் மீது அன்பு பாராட்டி வந்ததால், ராஜ்ய போகாதிகளைத் துறந்த அவருக்கும் சமாதி நிஷ்டை கலைந்தது. இந்நிலையில் அவருக்கு மரண காலமும் நெருங்கியது. அப்போது, தந்தையை அவனது அன்பு மகன் நோக்குவதைப் போல, அந்த மான்குட்டியானது கண்ணில் கண்ணீர் ததும்ப நோக்கிக் கொண்டிருந்தது. அதுபோலவே, பிரியமான மகனைத் தந்தை பார்ப்பது போல பரதரும் கண்ணீர் ததும்ப மான்குட்டியைப் பார்த்துக் கொண்டே பிராணனை விட்டார். அதனால் மறுபிறவியில் அவர், கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார். ஆயினும் தனது யோகச் சிறப்பினால் பூர்வ ஜன்ம ஞானமுடையவராக இருந்தார். அதனால் வெறுப்புற்றுத் தன் தாயைப் பிரிந்து முன்பிருந்த சாலக்கிராம ÷க்ஷத்திரத்தை அடைந்து, அங்குள்ள உலர்ந்த புற்களையும், சருகுகளையும் தின்று, மானாகப் பிறக்க ஹேதுவான கர்மங்களைக் கழித்து, அங்கேயே மரணமடைந்தார். பிறகு, அந்த ஊரிலேயே, நல்ல ஒழுக்கமும் யோக நிஷ்டையும் மிகுந்த உத்தமமான பிராமணர் குலத்திலே பூர்வ ஜன்ம ஸ்மரணையோடு பிறந்தார். பூர்வஞானம் தோன்றியதால், முன்பு போலவே சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்ந்தவராய் எல்லாவிதமான ஞானத்திலும் தேர்ச்சி பெற்றவராய், ஆத்ம சொரூபத்தைப் பிரகிருதிக்கு வேறாகவும், தேவாதி சகல சரீரங்களிலும் உள்ள ஆத்ம ஸ்வரூபம் யாவும் தம்மைவிடப் பேதமில்லாமல், விலக்ஷணமான ஞானகாரமுள்ளவையாகப் பாவித்து வந்தார்.
வேத சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்தார். அவர் ஆத்மஞானியாக இருந்ததால் எந்தவொரு கர்மத்தையும் செய்யவில்லை, மேலும், அழுக்கு நிறைந்த உடம்போடும், அழுக்கேறிய கந்தை ஆடைகளோடும், ஊத்தைப் பல்லோடும், கண்டோர் அருவருத்து, அவமதிக்கும்படி நடந்து வந்தார். உலகோர் செய்யும் வெகு மதிப்பானது, யாக சம்பத்துக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கும். அவமதிப்போ, கர்வ அகங்காரங்களைப் போக்குவதால் யோக சித்தியைத் தருவதாகும். ஆகையால் யோகியானவன், யாவரும் தன்னிடம் சேராமல், தன்னை அவமானம் செய்யும்படி ஜடனைப் போலக் காட்டிப் பெரியோருடைய ஒழுக்கத்திற்குப் பழுதுவராமல் காத்து நடக்கவேண்டும்! என்று இரணிய கர்ப்பவாக்கியங்களை நினைத்து அந்தப் பிராமணர் வித்துவானாக இருந்தும் மூடனைப் போலவும் பித்தனைப் போலவும் திரிந்து கொண்டிருந்தார். இவ்விதமாக அவர் இருந்ததால், அவருக்கு ஜடபரதர் என்ற பெயர் வழங்கலாயிற்று. புழுத்துக் கெட்டுப்போன உழுந்து, யவதானியம் முதலியவற்றால் செய்த அப்பங்களையோ, கீரையையோ காட்டுக் கிழங்குகளையோ ஏதாவது ஒன்றை அவர் தின்று பிராணதரணை செய்து வந்தார். இந்நிலையில் அவரது தந்தை இறந்தார். அவருடைய தம்பியரும், அண்ணன்மார்களும் மற்றுமுள்ள பந்துக்களும், அற்ப ஆகாரம் கொடுத்து, அவரைக் கொண்டு கழனி வேலையைச் செய்வித்து வந்தார்கள். அவர் அந்த வேலையைக் கூடத் திருத்தமாக செய்யாமல் மூடனைப் போலச் செய்துவந்தார். அவர், இதுபோன்று அற்ப ஆகாரத்தைப் புசித்து வந்தாலும் அவர் உடல் நன்றாகப் பருத்தும் கண்கள் இரண்டும் வித்தியாசமில்லாமல் சமமாக விளங்கவே தோற்றத்தில் மாற்றமின்றி இருந்துவந்தார். அவரது உறவினரும் ஊராரும் கூலி கொடுக்காமல், சிறிது ஆகாரத்தை அவருக்குக் கொடுத்து வேலை வாங்கி வந்தார்கள். அவர்கள் எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் ஜடபரதர் அந்த வேலையைத் தடையின்றிச் செய்தார். முன்பு சொன்னதுபோல், அழுக்குத் தீர்ப்பது போன்ற செய்கைகள் ஒன்றுமில்லாமல், சிகை, யக்ஞோபவீதம் முதலிய பிராமணக் குறிகளும், நீராடல் சந்தியாவந்தனம் செய்தல் முதலிய பிராமணச் செயல்கள் மட்டுமே உடையவராய், பித்தனைப் போலவே ஜடபரதர் திரிந்துவந்தார். இந்நிலையில், சவ்வீர ராஜனுடைய சாரதியானவன் அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து, இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான். பலியிடுவதற்குரிய அலங்காரங்களையெல்லாம் அவருக்குச் செய்து, காளியின் திருக்கோயிலின் எதிரே, கொலை செய்யும் இடத்தில் கொண்டு நிறுத்தினான். அந்தக் காளியானவள். அவர் மகாயோகி என்பதையறிந்து, அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே, தன் கத்தியினால் வெட்டி, அவனது கழுத்திலிருந்து ஒழுகிய ரத்தத்தை தன் பரிவாரத்துடன் கூடச்சேர்ந்து குடித்து மகிழ்ந்தாள்.
பிறகு ஒருநாள், சவ்வீர ராஜனுடைய சேவகன் ஒருவன் ஜடபரதரைப் பிடித்துக்கொண்டு சென்றான். ஜடபரதரை, அரசனது சிவிகையைச் சுமப்பதற்குத் தகுந்த சிவியானாக நினைத்து, அமிஞ்சி பிடித்துப் போட்டான். ஒருநாள் அரசன், இஷிமதி நதி தீரத்தில் இருந்த கபில மகாமுனிரைக் காண்பதற்கு விரும்பினான். துக்கமயமான சம்சாரத்தில் எது உயர்ந்தது! என்பதை அந்த முனிவரிடமிருந்து தெரிந்து கொள்ள அரசன் விரும்பினான். எனவே அவன் பயணப்பட்டான். அவ்வரசனுடைய பல்லக்குப் போயிகளாக அமிஞ்சி பிடித்துப் போட்டிருந்த ஆட்களிலே ஜடபரதரும் சேர்ந்திருந்தார். சகல ஞானமும் உணர்ந்தவராக அவர் இருந்தாலும் கூட, தமது முற்பிறவிப் பாவங்களைத் தொலைக்க, அவர் பல்லக்கை சுமந்து சென்று கொண்டிருந்தார். அப்படிப் போகும் போது, நுகத்தடியளவு தூரம் ஜந்து வொன்றும் இல்லாபடித் தரையைப் பார்த்துக்கொண்டே அவர் மெதுவாக நடந்து சென்றார். மற்றவர்கள் துரிதமாக நடந்தனர். பல்லக்கின் வேகம் குறைந்தது. அதனால் சிவிகையில் இருந்த அரசன் சரியாய் நடங்கள்! என்று சிவிகை யாரை அதட்டினான். அவன் அப்படி அதட்டியும் பல்லக்கின் வேகம் குறைந்ததால், அரசன் மிகவும் கோபத்துடன் சிவியாரே! என் பேச்சையுங் கடந்து ஏனிப்படி நடக்கிறீர்கள்? என்று பலமுறைகள் கூவினான். அதற்கு சிவியாட்கள், மகாராஜா! எங்களின் குற்றமில்லை. இவன்தான் இப்படி நடக்கிறான் என்று ஜடபரதரைக் குற்றம் சாட்டினார்கள். அதைக்கேட்ட அரசன், அடா! என் பல்லக்கைச் சிறிது தூரந்தானே நீ சுமந்திருக்கிறாய்! இதனாலேயே விடாய்த்துப் போய்விட்டாயே! மேலும் நீ வருத்தத்தை! சகிக்க மாட்டாதவனோ! பிரத்யக்ஷத்தில் நீ பருத்தவனாகவே காணப்படுகிறாயே! என்று கேட்டான். அதற்கு ஜடபரதர், அரசே! நான் பருத்தவனும் அல்ல. உனது பல்லக்கை நான் சுமக்கவும் இல்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை. அதனால் நான் ஆயாசமும் அடையவில்லை! என்றார். அதைக் கேட்ட அரசன், அவரது கருத்தைப் புரிந்துகொள்ளாமல் பார்வையில் நீ பருமனாகத்தானே தோன்றுகிறாய்? இப்போது உனது தோளில் என் பல்லக்கு இருக்கிறது. சுமை சுமந்தால் எந்தப் பிராணிக்கும் களைப்பு ஏற்படும் என்பது நிச்சயமாக இருக்க நீ ஏன் பொய் சொல்கிறாய்? என்று கேட்டான். அதற்கு ஜடபரதப் பிராமணர், அரசே! நீ என்னவோ பிரத்யக்ஷமாய்க் கண்டேன் என்று சொன்னாயே அந்த வஸ்துவை முன்னே நான் அறியச் சொல்வாயாக அது பலம் உள்ளது என்பதையும் இல்லாதது என்பதையும் பற்றிப் பிறகு பேசலாம். மேலும் என்னாலே சிவிகை சுமக்கப்பட்டது. அது இப்போதும் என்மேல் இருக்கிறது என்று சொன்னாயல்லவா? இது சுத்தப்பொய். அதைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக? நிலத்திலே இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அவற்றின்மேல் கணைக்கால்கள் இருக்கின்றன. அவற்றிலே தொடைகள் இரண்டும் நிற்கின்றன. அவற்றை ஆதாரமாகப் பற்றி நிற்கிறது. வயிறு, மார்பு, கைகள், தோள்கள் இவையனைத்தும் வயிற்றின் மேல் இருக்கின்றன. இந்தத் தோளின் மீது படிந்திருப்பது சிவிகை இப்படியிருக்க எனக்கு ஏது பாரம்? அந்தச் சிவிகையிலே நீ என்று உன்னால் நினைக்கப்பட்ட தேகம் இருக்கிறது. அந்தத் தேகத்தில் நீ இருக்கிறாய். அதுபோலவே, இந்த தேகத்தில் நான் இருக்கிறேன்.
அரசே! நீயும் நானும் தேகங்களாய் மாறி நிற்கிற மற்றவரும் பிருத்வி முதலிய பஞ்சபூதங்களாலே சுமக்கப்படுகிறோம். இந்தப் பூதவர்க்கமும் குணங்களின் வெள்ளத்திலே வீழ்ந்து, அதன் வசத்தால் நடத்தல் முதலிய செயல்களைச் செய்கின்றன. சத்துவம் முதலான குணங்கள் கருமங்களுக்கு வசப்பட்டிருக்கின்றன. அந்தக் கருமங்கள் அவித்தையினாலே சம்பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வவித்தை சகல பிராணிகளிலும் இருக்கின்றது. ஆத்மாவோ சுத்தமாய், நாசமில்லாததாய், பசி முதலியவைகள் இல்லாததாய் சத்துவாதி குணரகிதமாய், குணமயமான பிரகிருதியைக் காட்டிலும் வேறானதாக இருக்கிறது. அது சகல ஜந்துக்களிலும் தேகம்போல் அநேக அம்சமாய் இராமல் ஒரே அம்சமாக இருக்கிறது. அது வளர்வதுமில்லை; தேய்வதுமில்லை. இப்படியாக ஆன்மாவுக்கு விருத்தியோ தேய்வோ இல்லாமலிருக்க, நான் பருத்திருக்கிறேன் என்று எந்த யுக்தியினாலே சொன்னாய்? அன்றியும் பூமி, பாதம், கணைக்கால், தொடை, இடை முதலான உறுப்புகளின் அடுக்கின் மேலுள்ள தோளில் இருக்கும் பல்லக்கினால் எனக்குப் பாரம் உண்டென்றால் அந்தப் பாரம் உனக்கும் சமமாக இருக்க வேண்டும். மேலும் சகலமான பேருக்கும் இந்தப் பல்லக்கின் பாரம் மட்டுமல்ல, காடு, மலை, வீடு முதலானவற்றைப் பற்றிய பாரமும் உண்டென்றே சொல்ல வேண்டும். இப்படியின்றி, ஆன்மாவானது பிராகிருதங்களான அவயவங்களைவிட வேறு என்பது சித்தப்படும்போது, நான் பாரத்தைச் சுமக்கிறேன் என்பது ஏது? இந்தப் பல்லக்கு எந்தப் பொருளால் ஆனதோ, அந்தப் பொருளால் ஆனது தான் இந்த உடம்புமாகும். இதில் தான் எனக்கும் மற்றவருக்கும் மமத்துவம்! எனது என்ற அபிமானம் உள்ளது! என்று சொல்லி விட்டுப் பல்லக்கைச் சுமந்து கொண்டு சென்றார். இதைக் கேட்டவுடன் அரசன் திடுக்கிட்டு சிவிகையிலிருந்து கீழே இறங்கி ஜடபரத யோகியாரின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, ஐயா! அடியேன் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்தருள வேண்டும். தேவரீர் ஜடனைப்போல ரூபந்தரித்துள்ளீர். தேவரீர் யார் என்றே தெரியவில்லை. என்ன காரணத்தினால் என்ன பயனைக் கருதி இங்கே எழுந்தருளினீர்கள் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்! என்றான். அரசே! நீ யார் என்று என்னைக் கேட்டாயல்லவா? அதற்கு நான் இன்னார் என்று விடையளிக்க முடியவில்லையே! எப்பயனை கருதி எதனால் இங்கே வந்தாய் என்பதற்குப் பதில் சொல்ல வேண்டுவதில்லை. எங்கும் வருவதற்குப் பயன் அனுபவமே. இந்தச் சுகதுக்க அனுபவங்கள். புண்ணிய பாவங்களால் உண்டானவைகளாய். இடத்தையும் காலத்தையும் பற்றியிருப்பதால் ஜீவன்கள் தனது கர்மானுபவத்திற்கு உரியதேச காலங்களிலே தேகாதிகளைப் பெற்று வருகின்றனர் என்றார் ஜடபரதர்.
யோகியாரே! சகல காரியங்களுக்கும் தருமா தருமங்களும் காரணம் என்பதும் சுகதுக்க அனுபவித்திற்காகத் தேகம் பிரவேசிப்பது என்பது சரிதான். ஆனால் நான் இன்னார் என்று ஆன்மாவைக் குறித்துச் சொல்லக்கூடாது என்று கூறினீர்களே? அதையறிய விரும்புகிறேன் ஆத்மா என்பது இல்லாத பொருள். ஆகையால் அப்படிச் சொல்லக்கூடாது என்றால் ஆத்மா இருக்கிற வஸ்துவேயல்லாமல் இல்லாததன்றே இந்த நான் என்னும் சொல் ஆன்மாவின்மேல் பிரயோகிப்பது குற்றம் அல்லவே? இப்படியிருக்க நான் இன்னான் என்று சொல்ல முடியாது என்று நீங்கள் எப்படிச் சொன்னீர்கள்? என்று அரசன் கேட்டான். அரசே! ஆன்மாவைக் குறித்து நான் என்னும் சொல்லைப் பிரயோகிப்பது குற்றமல்ல. அதுவும் சரிதான். ஆனால் நான் இன்னான் என்பதனால் ஆத்மாவல்லாத தேகாதிகளிலே ஆத்மபுத்தியும், இப்படிப்பட்ட பிராந்தியைத் தெரிவிக்கும் சொல்லாவதும் ஆகிய குற்றங்கள் உண்டாம். அரசே! நான் என்று சொல்வது எது? நாக்கும், உதடுகளும், பற்களும், தாழ்களும் தான். நான் என்று சொல்கின்றன என்று நினைக்கிறாயே, அவைகள் அனைத்தும் கருவிகளே யல்லாமல் கர்த்தாவான ஆத்மாவன்று, தேகத்தைக் காட்டிலும் வேறானது. ஞானமே வடிவாகக் கொண்ட நான் என்னும் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறான வடிவுள்ள ஆத்ம ஸ்வரூபம் ஒன்று இருக்குமானால் என்னை இன்னான் என்று சொல்லலாம். அப்படித்தான் இல்லையே? ஆன்மா நித்தியப்பொருள். உடல் முதலியவை அநித்தியப் பொருள்கள். ஆகையால் அரசனாகிய நீயும் இந்தச் சிவிகையைச் சுமக்கின்ற நாங்களும் எல்லாமே இருக்கும் பொருளல்ல. எப்படியெனில் முன்பு மரமாக இருந்தது வெட்டப்பட்டு கட்டையாயிற்று. பிறகு அது நீ ஏறியிருக்கிற பல்லக்கு ஆயிற்று. இந்த நிலையில் அதற்கு மரம் என்றோ கட்டை என்றோ பெயர்களில்லை! மகாராஜா மரத்தின்மேல் ஏறியிருக்கிறார் என்று இவர்களே சொல்வார்களா? அல்லது கட்டையின் மேல் இருக்கிறார் என்றுதான் சொல்வார்களா? சிவிகையில் இருக்கிறார் என்றுதானே சொல்வார்கள்? இதனை ஆராய்ந்தால் சிவிகை என்பது ஒருவகை ஜோடிப்பே ஆகும். அதாவது கட்டைகள் அடுக்கப்பட்ட ஜோடிப்பு. இந்த ஜோடிப்பைப் பிரித்துவிட்டுப் பிறகு பல்லக்கு எங்கே என்பதை தேடிப்பார். அதுபோலவே சலாகை முதலியவற்றைப் பிரித்துக் குடையைத் தேடிப்பார். இந்த நியாயத்தாலேயே, இன்னார், நான் இன்னார் எப்படி என்பது தெரியும், கர்மவசத்தால் உண்டாகியிருக்கிற தேகங்களிலே புருஷன் என்றும் ஸ்திரீ என்றும், மாடென்றும், ஆடென்றும், யானையென்றும், குதிரையென்றும், மரம் என்றும் கொடி என்றும் வழங்கப்படுகின்றன. நீ, நான் என்கிற சொற்களின் முக்கியப் பொருளான ஆன்ம சொரூபமானது ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல, தேவனுமல்ல, மனிதனுமல்ல, மிருகமுமல்ல, மரமுமல்ல. இத்தேவத்துவலதி தர்மங்கள் எல்லாம் கர்மத்தினால் வந்த சரீரரத்தின் ரூபபேதங்களேயாகும். அரசே! நீ உலகத்தாருக்கு அரசன்! தகப்பனுக்கு மகன்! பகைவனுக்கு பகைவன்! மனைவிக்கு மணாளன்! மகனுக்குப் பிதா! இப்படடியிருக்க உன்னை யார் என்று நான் சொல்வேன். மேலும் நீ என்ன சிரசா, கழுத்தா, வயிறா? இந்த உடம்புக்கு நீ யார்? உனக்கு இந்த உடல்யாது? இவ்விதமாய்ச் சகல உறுப்புகளுக்கும் வேறாய் இருக்கிற நீயே நன்றாக ஆலோசித்து நான் யார் என்று சிந்தித்துக்கொள். உண்மை இப்படியிருக்க என்னை நான் இன்னான்! என்று வேறுபடுத்தி எப்படிச் சொல்லமுடியும் என்று ஜடபரதர் விளக்கினார்.
——————
14. பரம்பொருள் தெளிவு
ஆத்ம தத்துவத்தைப் பற்றி ஜடபரதர் கூறியதும் அரசன், அவரை நோக்கி சுவாமீ! சகல ஜந்துக்களிலும் பிரகிருதியிலும் வேறாய் ஞானஸ்வரூபமாய் மகத்தானதாய் ஒரேவிதமான ஆத்ம ஸ்வரூபம் உண்டென்றும் கூறினீர்கள். சிவிகையை நான் சுமக்கவில்லை; என்னிடத்தில் சிவிகையும் இல்லை; இந்த உடல் சுமக்கின்றது. நம்மைவிட அது வேறானது. திரிகுணங்களின் ஏவலினால் பஞ்சபூதங்கள் அசைகின்றன. அந்தக்குணப் பிரவிருத்தியும் கருமத்தினால் ஏவப்படுகிறது. ஆகையால் அவற்றால் எனக்கென்ன என்றும் தாங்கள் இத்தகைய பரமார்த்தங்களைக் கூறினீர்கள். மகானே! நான் இந்தச் சம்சாரத்தில் எது உயர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கபில மஹாமுனிவரிடம் போகப் புறப்பட்டேன். இதனிடையில் அந்தப் பரமார்த்த விஷயத்தைத் தேவரீர் அருளிச் செய்ததால் என்மனம் தங்களையே நாடுகின்றது. கபில முனிவர் உலக அஞ்ஞானத்தைப் போக்கும் பொருட்டு பூமியில் இறங்கிய ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமானவர். தங்களையே அந்தக் கபிலராக நான் கருதுகிறேன். ஆகையால் அடியேனுக்கு எது உயர்ந்ததோ அதனை அறிவிக்க வேண்டும், என்றான். அரசே! இப்போது நீ என்னை உயர்வைப் பற்றிக் கேட்கிறாயா? அல்லது பரமார்த்தத்தைப் பற்றிக் கேட்கிறாயா? சிரேயசு என்பதும் பரமார்த்தம் என்பதும் ஒன்றல்ல. எந்த மனிதன் தனது இஷ்ட தேவதைகளை ஆராதித்துப் பணம் முதலிய சம்பத்துக்களை இச்சிக்கின்றானோ அந்தச் செலவப்பேறே சிரேயசு எனப்படும். அதுபோலவே, சந்தானத்தை இச்சிப்பவன் அதையடைவது சிரேயசாகும். யக்ஞாதி கர்மங்களைச் செய்து சுவர்க்காதிகளைப் பெற நினைப்பவனுக்கு அந்தச் சுவர்ககாதிகளே சிரேயசாகும். எந்தவொரு பயனையுங்கருதாமல் யாகாதி கர்மங்களைச் செய்பவனுக்கு அந்தக் கருமமே உயர்வாகும். யோக நிஷ்டையிலிருந்து ஆத்மத் தியானஞ் செய்வோருக்கு அதுவே உயர்ந்தது. அந்த ஆன்மாவுக்குப் பரமாத்மாவோடு ஒன்றாகக் கூடுதல் மேலான சிரேயசாகும். இப்படி ஒன்றுக்கொன்று மேலான ஏழு சிரேயசுகள், முக்கியமானவைகள். இவற்றின் உட்பிரிவான சிரேயசுகளும் உண்டு. இவையெல்லாம் பரமார்த்தங்களல்ல. எப்படியெனில் பணமே பரமார்த்தமானால் அதைத் தருமத்திற்காகவும், காமத்திற்காகவும் செலவு செய்வார்களல்லவா? அப்படிச் செலவு செய்வதனால் அது பரமார்த்தம் ஆகமாட்டாது. இதனால் சாதிக்கப்படுகின்ற தர்ம, காமங்களும் அழியக்கூடியவை. ஆதலால் அவை பரமார்த்தம் என்று சொல்லப்படமாட்டா; காரியங்கள் எல்லாம் காரணங்களுக்குப் பரமார்த்தமேயல்லாமல் யாவற்றுக்கும் ஆகமாட்டாது. ராஜ்யம் முதலானவை பரமார்த்தம் என்றால், அவை நிலையானதாகாமையால் அவை பரமார்த்த மாகாத்ரிக்கு, யஜுர், சாமம் என்ற வேதங்களின் விதிப்படி செய்கின்ற யாக கருமத்தையே பரமார்த்தம் என்று நீ நினைத்திருந்தாயானால், அதுவுமல்ல மண் என்ற காரணப்பொருளினால் உண்டாக்கப்படும் குடம் முதலியவைகளுக்கான காரியங்கள் எல்லாம் காரணமான மண்ணின் தன்மையையே அடைந்திருப்பதைப் போல், நாசப்படத்தக்க சமித்து; நெய், தர்ப்பை முதலியவற்றால் செய்யப்படும் யாகாதி கர்மமும் நாசப்படத்தக்கது. ஆகையால் அதுவும் பரமார்த்தமாகாது. பரமார்த்தம் என்பது நாசப்படாததாக ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டதேயாகும்! யாதொரு பயனையும் விரும்பாமற் செய்கிற யாகங்கள், மோக்ஷத்துக்குச் சாதனமானவை. ஆகையால் அவை பயனைக் கொடுத்தவுடன் நசிப்பதால் அது பரமார்த்தமல்ல ஆன்மத் தியானமும், விசதம் விசத்தரம், பிறவற்றினின்றும் தெளிவு, நற்றெளிவு என்று இவ்வகைப்பட்ட அவஸ்தா பேதங்களை யடைதலாலும், போனதை நினைத்தல், பிரத்யக்ஷத் தோற்றம் முதலாக க்ஷணந்தோறும் மாறுதலினாலும் அது பரமார்த்தமன்று.
பரமாத்மாவோடு ஆத்மா ஐக்கியமாகின்ற யோகமே பரமார்த்தம் என்று சிலர் நினைக்கிறார்கள் அல்லவா? அப்படிப்பட்ட யோகம் பொய்; ஆகையால் அதுவும் பரமார்த்தம் அன்று! அந்த யோகம் ஏன் பொய்யென்றால் ஒரு பொருள் மற்றொரு பொருளாக ஆகமாட்டாதாகையால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாக மாறமாட்டாது. ஆகையால் அரசே! நான் முன்பு சொன்னவைகள் யாவும் சிரேயசுகள் என்பதில் ஐயமில்லை. பரமார்த்தம் எதுவென்று சுருக்கமாகச் சொல்கிறேன், கேள். தேகத்தைப் போலப் பல பொருளாயிராமல் ஒரு பொருளாயும், ஞானத்தினால் எங்கும் வியாபிக்கக் கூடியதாயும், தேகத்தைப் பற்றிய வித்தியாசமின்றிச் சமமாயும், நிர்மலமாயும், சத்துவாதிகுண சம்பந்தம் இல்லாததாயும், பிரகிருதிக்கு வேறுபட்டதாயும், உற்பத்தி விநாச விருத்தி க்ஷயாதிகள் இல்லாததாயும், நுண்மையினாலே அக்கினி வாயு ஜலாதிகளான அழிக்கும் பொருள்களுக்கு உட்படாததாயும், பற்றிக்கொள்ளுதல் முதலான தோஷங்கள் இன்றி, தேகாதிகளுக்கு அதிபதியாயும் இருக்கிற ஆத்மஸ்வரூபம் எதுவுண்டோ அது மேலான ஞானவடிவமாய், அவித்யா ரூபங்களான ஜாதி நாமாதிகளோடு பூதம், வர்த்தமானம், பவிஷியத் என்ற மூன்று காலங்களிலேயும் கூடாதது. தன்னுடையதும் பிறரதுமான தேகங்களில் இருக்கின்ற அந்த ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி எல்லாம் ஒரே விதம் என்ற ஞானம் எதுவுண்டோ, அந்த ஞானஸ்வரூபம் தான் பரமார்த்தமாம்! ஆதலால் தேக வித்தியாசத்தினால் மாறுபாடாக நினைப்பவர்கள் யதார்த்தத்தை அறியாதவர்கள். புல்லாங்குழலின் உள்ளே நுழைந்த காற்று ஒன்றாயிருந்தும் அதன் துவார பேதங்களினால் அந்தக் காற்றுக்கு ஆறுவகை ஸ்வரபேத நாமதேயம் உண்டாவதைப்போல, ஆத்துமஸ்வரூபம் பேதம் இல்லாததாக இருந்தும், அதற்குப் புறம்பான கர்ம பேதத்தினால் வந்த சரீர பேதத்தைப் பற்றி, தேவன், மனிதன் என்ற விவகாரம் உண்டாகிறது. அந்தக் கர்மாவாகிய மறைவு அழிந்தால் அந்தத் தேவாதிபேதம் இல்லவேயில்லை என்று அறிவாயாக! என்று ஜடபரதர் உபதேசித்தார்.
————–—————–
இவ்விதமாக குழந்தைப் பிறந்தவுடன் முனிவர்கள் ஒன்றுகூடி, பிறந்த இந்தக் குழந்தை, யாருடைய முலைப்பாலைப் பருகும்? என்று கேட்டார்கள். அப்போது அங்கே வந்த தேவேந்திரன் என்னைத் தாயாக வைத்து முலையுண்ணும் என்று சொல்லித் தனது பவித்திர விரலை, அந்தக் குழந்தையின் வாயில் கொடுக்க, அந்தப் பிள்ளை அந்த விரலிலிருந்து ஒழுகிய அமிர்தத்தைக் குடித்து ஒரே நாளில் வளர்ந்தது. இந்திரனுக்கு மாந்தாதா என்ற பெயரும் உண்டு. ஆகையால் அந்த அரசகுமாரனுக்கு மாந்தாதா என்ற பெயர் உண்டாயிற்று. அவன் மாமன்னனாகி பூமண்டலத்தை ஆண்டு வந்தான். இவனைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு. அதாவது எவ்வளவிலே சூரியன் உதயமாகிறானோ, எவ்வளவிலே அஸ்தமனமாகிறானோ, அந்த எல்லைகளுக்கு உட்பட்ட பூமண்டலம் முழுமையும் மாந்தாதாவின் ராஜ்யமாக இருந்தது! என்பது தான் அந்தப் பாடலாகும்.
அந்த மாந்தாதா, சசபிந்து என்பவனின் மகளாகிய இந்துமதி என்பவளை மணந்து, புருகுச்சன், அம்பரீஷன், நாபாகன் என்ற பிள்ளைகளையும் ஐம்பது பெண்களையும் பெற்றான். அந்தக் காலத்தில் ரிக் வேதமறிந்த சவுபரி என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கிப் பன்னிரண்டு ஆண்டுக்காலம் தவஞ்செய்து கொண்டிருந்தார். அந்தத் தண்ணீரில் சம்மதன் என்ற மிகப்பெரிய மீன் ஒன்று, பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், உறவினர்களாகிய தன் கிளைகள் அநேகம் முன்னும் பின்னும் பக்கங்களிலும் வாலிலும் தலையிலும் ஏறி விளையாடச் சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அதனால் சவுபரி முனிவரது மனஒருமைப்பாடு நீங்கியது. அவர் அந்த மச்சம் தன் கிளைகளோடு கூடி அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் கண்டு, ஓ! இந்த மீனோ விரும்பத்தகாத ஈனப் பிறப்பிற் பிறந்தது. ஆயினும் அது மிகவும் பாக்கியமுள்ளது. ஏனென்றால் புத்திர பவுத்ராதிகள் விளையாடிக் கொண்டிருக்க, அவற்றோடு இணைபிரியாமல் சஞ்சரித்து மகிழ்கின்றது. இதைப் பார்க்க நமக்கே எவ்வளவு ஆசையுண்டாகிறது? ஆகையால் நாமும் இப்படியாவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசித்து அந்தத் தடாகத்திலிருந்து வெளியே வந்து, சந்தானத்துக்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு மாந்தாதா மன்னனிடம் வந்தார். இவர் வந்த செய்தியை அறிந்த மன்னன் அவரை எதிர்கொண்டழைத்து உபசரித்தான். அவனை சவுபரி முனிவர் நோக்கி, அரசனே! நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ எனக்குக் கன்னிகாதானம் கொடுக்க வேண்டும். என்னுடைய வேண்டுதலை மறுக்காதே! ககுஸ்த வமிசத்தாரிடம் வந்த யாசகர் தாம் விரும்பியதைப் பெறாமலிருந்ததில்லை அல்லவா? இவ்வுலகில் எத்தனையோ அரசர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குங் கன்னிகைகள் இருக்கிறார்கள். ஆயினும், யாசகரின் இஷ்டத்தை நிறைவேற்றும் விரதமுடையது உனது குலம். உனக்கு ஐம்பது பெண்கள் இருக்கிறார்களல்லவா? அவர்களில் ஒருத்தியை எனக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டும். என் பிரார்த்தனை நிறைவேறாமற் போயின் நான் வருந்துவேன். நான் வருந்தாமல் இருக்க, என் துன்பத்தை நீதான் நீக்கவேண்டும் என்றார். இவ்விதமாகச் சவுபரி முனிவர் சொன்னவுடன், மாந்தாதா மன்னன் அவரை உற்றுப் பார்த்தான். மூப்பினால் தளர்ந்து, தலை நரைத்திருந்தார் சவுபரி முனிவர்! ஆனாலும் அவருடைய வலிமையைப் பற்றிய பயத்தினால் அவரது விண்ணப்பத்தை மறுக்கமாட்டாமல் மாந்தாதா மன்னன் தலைகுனிந்து நெடுநேரம் யோசித்தான். அப்போது சவுபரி முனிவர், அரசனே! எதைப் பற்றிச் சிந்தனை செய்கிறாய்? நான் ஒன்றும் தகாததைச் சொல்லவில்லையே? அவசியம் யாருக்காவது கொடுத்தே தீரவேண்டிய கன்னியை எனக்குக் கொடுக்கும்படித்தானே நான் கேட்டேன்? இதனால் நீ புண்ணியம் பெறுவாய்! என்றார்.
அவரை அரசன் நோக்கி தவமுனிவரே! எனது குலமுறைப்படி, கன்னிகை யார் மீது இஷ்டப்படுகிறாளோ, அந்த வரனுக்கே அவளைக் கொடுப்பது வழக்கம். இது இப்படியிருக்கத் தேவரீரது வேண்டுதலோ எமது எண்ணங்களுக்கு மேற்பட்டது. அதனால் தான் செய்வதறியாமல் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதைக்கேட்ட முனிவர் இந்த அரசன் நமது வேண்டுகோளை மறுக்க இதை ஓர் உபாயமாகச் சொல்லிவிட்டான் என்றே யோசித்தார். ஏனென்றால் இந்த முனிவன் முழுக்கிழவன். ஆகையால் எத்தகைய பெண்ணும் இவரை விரும்பமாட்டாள். அப்படியிருக்க நல்ல பருவமுடைய நம் கன்னியர் இவரை விரும்புவார்களோ? ஆகையால் தானே ஆசையற்றுப் போகட்டுமே என்று அரசன் நினைத்தே அப்படிக் கூறிவிட்டான். இனி அதற்கேற்ப நடக்கவேண்டும் என்று சவுபரிக் கிழவர் தமது மனதில் எண்ணிக்கொண்டு அரசனைப் பார்த்து, அரசனே! உங்கள் குலவிரதத்தை நான் அழிக்கவிரும்பவில்லை; என்னை உமது கன்னிகைகள் இருக்கும் அந்தப்புரத்திற்குப் போகும்படி, அந்தப்புரக் காவலாளிக்குக் கட்டளையிடுவாயாக. கன்னிகையே என்னைக் கதாலிப்பவளாயின் நான் கல்யாணஞ் செய்து கொள்கிறேன். இல்லாவிட்டால் முதிர்ந்த வயதில் இந்த முயற்சி எனக்கு ஏனென்று விட்டு விடுகிறேன்! என்றார். பிறகு அவர் கூறியபடியே செய்யும் வண்ணம் அந்தப்புரக் காவலாளிக்கு அரசன் கட்டளையிட்டான். அக்காவலாளியோடு சவுபரி முனிவர் கன்னிப் பெண்களின் அந்தப்புரத்தினுள்ளே போகும்போது சித்த கந்தர்வர்களைவிட மேம்பட்ட அழகான ரூபத்தை எடுத்துக் கொண்டார். சேவகன், முனிவரை அந்தப்புரத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு அங்கிருந்த கன்னியரைப் பார்த்து உங்கள் தந்தையான அரசரிடம் இந்த முனிவர் கன்னிகை வேண்டி வந்தார். கன்னிகைகளில் யார் பிரியப்பட்டு இவரை வரித்துக் கொள்கிறார்களோ, அவர்களையே அவர்களிஷ்டப்படி இந்த முனிவருக்குக் கொடுப்பேன் என்று மகாராஜா கட்டளையிட்டிருக்கிறார் என்றான். அதைக் கேட்டதும் அரசகுமாரிகள் அந்த முனிவரை வந்துப் பார்த்தார்கள். முனிவரின் புதுவடிவத்தையும் இளமை துள்ளும் மோகன ரூப அழகுகளையும் கண்டு அக்கன்னிகைகள் அனைவரும் காமாவேசமுடையவர்களாகி நல்ல மதத்த ஆண் யானையை பெண் யானைகள் சூழ்வதைப் போலச் சூழ்ந்து கொண்டு, நான் நான் என்று பரபரப்புடன் போட்டியிட்டு அவரை வரித்தார்கள். இதனால் அப்பெண்களிடையே கலகம் ஏற்பட்டது; அவர்கள் அனைவருமே அவரை விரும்பினார்கள். எனவே அங்கு நடந்தவற்றைக் காவலாளி அரசரிடம் தெரிவித்தான். அதைக் கேட்டதும் மாந்தாதா மன்னன் மிகவும் வியப்படைந்து, என்ன இது? இனி என்ன செய்வேன்? என்ன சொல்லி விட்டேன்? என்று மனம் கலங்கி, தனக்கு விருப்பம் இல்லாதிருந்தும், வாக்குக் கொடுத்து விட்டதற்காகப் பயந்து, தன் கன்னிப்பெண்களையெல்லாம் சவுபரி முனிவருக்கே திருமணஞ் செய்து கொடுத்தான்.
பிறகு, சவுபரி முனிவர் அரசகுமாரிகளை அழைத்துக் கொண்டு ஆசிரமத்தை அடைந்தார். அதன்பிறகு சிற்பியான விசுவகர்மாவை அழைத்து தமது மனைவியருக்குத் தனித்தனியாக மாளிகைகளையும் அன்னங்கள் நீந்தும் தடாகங்களையும் மலர் வனங்களையும் அமைத்துக் கொடுக்கச் செய்தார். அவ்வாறே விசுவகர்மாவும் அமைத்துக் கொடுத்தான். பின்பு, சவுபரி மாமுனிவரது ஆக்ஞையினால் அந்த மாளிகைகளில் நந்தனம் என்ற மகாநதியானது நித்தியமாக இருந்து வந்தது. அந்த மாளிகைகளில் ராஜகுமாரிகள் வசித்து போகங்களிலும் போஜன வகையிலும் திருப்தியடைந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அவர்களுடைய தந்தையான மாந்தாதா மன்னன் ஒரு சமயம் தன் பெண்கள் மீதுள்ள அன்பினால், அவர்களைப் பார்ப்பதற்காக முனிவரது ஆசிரமத்தை அடைந்தான். ஆசிரமம் இருந்த இடத்தில் ஸ்படிக மயமாய் விளங்கிய மாடமாளிகைகளைக் கண்டு அதிசயித்து ஒரு மாளிகையினுள்ளே நுழைந்தான். அங்கிருந்த தனது மகளைக் கண்டு, கண்களில் கண்ணீர் ததும்ப மகளே! நீ சுகமாக இருக்கிறாயா? அல்லது அசுகமாக இருக்கிறாயா? முனிவர் உன்னிடத்தில் அன்பாக இருக்கிறாரா? நீ நம்முடைய அந்தம்புரவாசத்தை நினைக்கிறாயா? என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் தந்தையே! நான் சுகமாகவே இருக்கிறேன். எனக்கென்று ரமணீயமான உப்பரிகையும், அழகான தோட்டமும், நீர்ப்பறவைகளோடு தாமரை முதலியவை விளங்கும் தாடகங்களும், மனதிற்கினிமையான போஜனங்களும், திவ்வியமான ஆடையாபரணங்களும் மிகவும் பரிமளமுள்ள மலர்களும் மிகவும் மென்மையான சயனா சனங்களும் இன்னும் இல்லறத்துக்குரிய யாவுமே நன்றாக இருக்கின்றன ஒரு குறையும் எங்களுக்கில்லை. இருப்பினும் பிறந்த இடம் எப்படி மறக்கும்? ஆனால் துக்கத்துக்குக் காரணம் ஒன்றும் இருக்கிறது. அது என்னவென்றால், என் கணவராகிய அந்த முனிவர் எப்போதும் என்னிடமே காதல்கொண்டு, என்னை விட்டுப்பிரியாமல் இருக்கிறார். எனது சகோதரிகளே நினைப்பதில்லை இது தான் என்மனதை வருத்துகின்றது என்றாள்.
பிறகு மாந்தாதா மன்னன் மற்றொரு மகளின் மாளிகைக்குச் சென்று, அவளிடமும் முன்போலவே, அவளது சுகத்தைப் பற்றி விசாரித்தான். அதற்கு அவளும் தனக்கு கிருஹ பூஷண, சயன, போஜனாதி சவுக்கியங்களில் ஒன்றும் குறைவில்லை என்றும், ஆயினும் தன் கணவன் தன்னை விட்டுப் பிரியாமல் எந்நேரமும் தன்னுடனேயே மகிழ்ந்திருப்பதினால் தனது சகோதரிகளுக்கு நேர்ந்துள்ள துக்கமே தனக்குத் துக்க காரணமாக இருக்கிறதென்றும் சொன்னான். பிறகு மன்னன் இதுபோலவே ஒவ்வொரு புதல்வியின் மாளிகைக்கும் சென்று விசாரித்தான். எல்லோரும் ஒன்றுபோலவே பதில் சொல்லி, அவனை நன்கு உபசரித்தார்கள். இதனால் மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஏகாந்தத்தில் உட்கார்ந்திருந்த சவுபரி முனிவரைக் காணச் சென்று, அவரால் மரியாதை செய்யப்பெற்று, வெகு விநயத்துடன் அவரை நோக்கி, ஓ மகானுபவரே! தங்களின் உயர்வான சித்தியின் பிரபாவத்தைக் கண்டேன். நான் இதுபோன்ற சம்பத்து விலாசம் இருப்பதைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. இது எவ்வளவோ அவ்வளவும் உமது தவத்தின் பயன் ஆகும்! என்று சொல்லி, அவரை மிகவும் புகழ்ந்தான். பிறகு அவருடன் சிலகாலமிருந்து, இஷ்டமான போகங்களை அனுபவித்து, அதன் பிறகு தனது தலைநகரை அடைந்தான். சிலகாலத்துக்குப் பிறகு, சவுபரி முனிவரின் பத்தினிகளான குமாரிகளுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகள் மீது சவுபரி முனிவருக்கு நாளுக்கு நாள் ஆசையும், அன்பும் அதிகமாயிற்று. அதனால் அவர் மமதையடைந்து, இந்தக் குழந்தைகள் மழலைச் சொற்களைச் சொல்லிக்கொண்டு சிற்றடிகளால் நடக்குமோ? இவர்கள் யவனமுடையவர்களாவார்களோ? இவர்கள் திருமணம் புரியத்தக்க பெண்களோடு கூடியிருக்கக் காண்பேனோ? இவர்களுக்குக் குழந்தைகள் உண்டாகுமோ? அக்குழந்தைகள் வளர்ந்து மனைவியரோடு சேர்ந்து சந்தானமுடையவர்களாக இருப்பதை நான் கண்டு களிப்பேனோ என்று இந்தவிதமாகக் காலம் செல்லச் செல்ல அவரது மனோரதங்கள் வளர்ந்து கொண்டே இருந்ததால், அவர் வேறு சிந்தனையில்லாமல் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது சவுபரி முனிவர் தமக்குத் தாமே யோசிக்கலானார். ஓஹோ! எனக்கு நேர்ந்த மோகத்தை என்னவென்று சொல்வேன்? பதினாலாயிரம் ஆண்டுகள் சென்றாலும் இந்த மனோரதங்கள் ஒழியாது போலத் தோன்றுகிறதே! ஏனென்றால் முன்பு இருந்த மனோரதங்கள் நிறைவேற நிறைவேற புதியதான வெவ்வேற மனோரதங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனவே. நாம் கோரியபடி குழந்தைகள் பிறந்து தவழ்ந்து சித்தடிவைத்து நடந்து வளர்ந்து பருவம் அடைந்து மணஞ்செய்து மக்களையும் பெறக் கண்டோம். இப்பொழுதோ, நமது மனமோ, பேரன்மாருக்கும் சந்ததியுண்டாவதைக் காண விரும்புகிறது. அதைக் கண்டாலும் வேறொன்று மேலும் உண்டாகும். அது நிறைய, வேறொன்று உண்டாகும். மேன்மேலும் ஆசையுண்டாவதைத் தடுப்பதுதான் எப்படி? மரணம் அடைவதனால் மாத்திரம் இந்த மனோரதங்களுக்கு முடிவுண்டாகுமேயன்றி வேறொன்றினாலும் முடிவுண்டாகாது.
இது இப்போது தான் எனக்கு நன்றாகத் தெரிகிறது. இவ்வாறு கோரிக்கைகளிலே அழுந்தியிருப்பவனுக்கு ஒருபோதும் மனமான பரம்பொருளைப் பற்றமாட்டாது. தண்ணீரில் வாசஞ்செய்யும்போது மித்திரனான மச்சத்தின் சேர்க்கையினால் அல்லவோ எனது சமாதி நிஷ்டைக்குலையலாயிற்று? சகவாச தோஷத்தால் அல்லவா, நான் அரசகுமாரிகளை மனைவியர்களாக அடைய நேர்ந்தது. இந்தப் பெண்டிரைக் கொண்டதால் அன்றோ மேன்மேலும் ஆசைப்பெருக்கம் உண்டாயிற்று. ஒரு பெண்டிரைக் கொள்வதும் ஒரு புத்திரனைப் பெறுவதுமே வெகு துக்கத்துக்குக் காரணமாக இருக்கும்போது ஐம்பது பெண்டிரையும் நூறு பிள்ளைகளையும் பெற்று நான் துக்கத்தைப் பெருக்கிக் கொண்டேனே? நான் தண்ணீரிலிருந்து செய்த தவப்பேற்றுக்கு இந்தச் செல்வப்பேறு இடையூறாயிற்றே? மச்சத்தின் கூட்டுறவால் ஏற்பட்ட மக்கட்பேற்றின் விருப்பத்தால் மனங்கவரப்பட்டுப் போனேனே? சங்கமற்றிருப்பதே முனிவர்களுக்கு மோக்ஷத்தின் காரணமாகும் சங்கத்தினால் குற்றங்கள் அல்லவா உண்டாகும்? யோக நிஷ்டை கை கூடியவனும் சங்கத்தால் வீழ்வானாகில் அற்ப சித்தியுள்ள என்போன்றோருக்கு கேட்கவும் வேண்டுமோ? இனிமேலாவது தக்க முயற்சிசெய்து, ஆன்மாவைக் காக்கவேண்டும். ஆகையால் எல்லாவற்றையும் அளிக்கவல்லவனும் இத்தகையது என்று சிந்திக்க ஒண்ணாத திவ்யச் சொரூபமுள்ளவனும், அணுவுக்கு அணுவாயும், மகத்துக்கு மகமாயும் இருப்பவனும், முன்பு ஒரு யுகத்திலே வெண்மையாயும் இந்த யுகத்திலே கருமையாயுமிரா நின்ற திவ்விய மங்கள விக்கிரஹமுள்ளவனும், பிரகிருதிக்கு உட்படாத தூய்மையுருவும், பிரகிருதிக்கு உட்பட்ட சுத்தமல்லாத சொரூபமுடையவனும், லோகேசுவரனுமான ஸ்ரீவிஷ்ணுபகவானை ஆராதிக்கக் கடவேன். சகல தேஜோரூபியாகவும், சர்வ ஸ்வரூபியாகவும், வெளிப்பட்டதும் வெளிப்படாததுமான திருமேனியை உடையவனாகவும், காரிய காரண ரூபியாகவும், தேச காலாதி பரிச்சேதமில்லாதவனாகவும் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவினிடத்திலே மீண்டும் பிறவியில்லாமல் இருத்தற்கு என் சித்தம் சஞ்சலமின்றி ஸ்திரமாக இருக்கக் கடவது. சர்வ பூதாத்துமகனாகவும் நிர்மலனாகவும் சர்வேசுவரனாகவும் ஆதி மத்யாந்தர ரகிதனாகவும் இருக்கும். அந்த அநந்தனைக் காட்டிலும் வேறாகத் தோன்றும்படியான பொருள் ஒன்றும் இல்லையோ அந்தத் தேசிகனுக்கு எல்லாம் தேசிகனாக எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவை சரணமாகப் பற்றுகிறேன்! என்று இவ்விதம் தனக்குத்தானே சிந்தித்த சவுபரி முனிவர், புத்திரர்களையும் வீடு, தோட்டம் முதலிய யாவற்றையும் பற்றற விட்டு, தமது மனைவியருடன் வனத்துக்குச் சென்று, வானப் பிரஸ்தர் செய்யவேண்டிய நித்தியக்கர்ம அனுஷ்டானங்களைச் செய்து கொண்டு, சகல பாவங்களையும் போக்கிக் கொண்டு, அதனால் பக்குவமான சித்த நிலையை அடைந்து, அக்கினிகளே ஆத்மாவிலே ஏற்றிவிட்டுச் சந்நியாச ஆசிரமத்தில் பிரவேசித்தார். அவ்விதமாகி, சகல கிரியாக லாபத்தையும் எம்பெருமானுக்கே ஆராதனமாகச் சமர்ப்பித்து நாசம் இல்லாததும், விகார சூன்யமானதும் மரணாதிகளுக்கு இடமாகாததும் அளவற்றதும், பரம பாகவதர்கள் அடையும்படியானதுமான விஷ்ணுலோகம் என்று சொல்லப்படும் பரமபதத்தை அடைந்தார். மைத்ரேயரே! மாந்தாதா மன்னனைப் பற்றிய வரலாற்றிலேயே, இந்த சவுபரி முனிவரின் சரிதத்தையும் நான் உமக்கு சொன்னேன். இதை எவன் ஸ்மரிக்கிறானோ, படிக்கிறானோ, படிக்க வைக்கிறானோ, கேட்கிறானோ, கேட்பிக்கிறானோ, தரிக்கிறானோ, எழுதுகிறானோ, எழுதுவிக்கிறானோ, அதன்படி நடக்கிறானோ, நடத்துவிக்கிறானோ, உபதேசிக்கிறானோ, அவர்களுக்கெல்லாம் எட்டுப் பிறவிகள் வரையிலும் தீயச் சிந்தையும், தீய ஒழுக்கமும் தீயவழியில் மனம் வாக்கு செல்லுதலும், பரித்தியாகம் செய்ய வேண்டியவைகளிலே அபிமானமும் உண்டாவதில்லை!
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
February 12, 2023 at 12:53 am |
Adiyen is a bhagavata in the USA. The moderators of Ramanuja.org had teamed up with Sri KSV on an endeavour called satyanveshana. They seek truth beyond tradition. KSV’s findings have been written in a book called Adiyen is a bhagavata in US. Sarvankasha which is his commentary to Vedanta Desika’s Tattva Mukta Kalapa. Adiyen doesn’t understand sanskrit. From pages 363 to 385 on the online version, it is related to devata vaadam. Can you please read the following pages if you are aware of sanskrit in the link below and tell me if the KSV acharya accepts Narayana paratvam or not, because to me it appears like he doesn’t. I am quite confused and nervous with the comments that the acharya has made since I have very limited knowledge of sanskrit. If you know sanskrit, kindly read the information and get back to me as soon as possible. If you don’t know sanskrit, please contact some other bhagavata who knows and ask them to translate and summarize for me. Here is the link to the online version (Pages 363 to 385): https://archive.org/details/tattvamuktaakalaapa-sarvankasha-sri-ksv/page/363/mode/2up
Dhanyosmi