ஸ்ரீ ஆ முக்த மால்யதா (Amuktamalyada) (தெலுங்கு: ఆముక్తమాల్యద) தெலுங்கு மொழிக் காவியக் கவிதையான இந் நூலை விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் இயற்றினார்.
ஆமுக்தமால்யதா எனும் தெலுங்கு மொழிச் சொல்லிற்கு முத்துகளால் ஆன மாலை எனப்பொருளாகும்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்து நூல்களையும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்கிறோம்.
ரகுவம்சம், குமாரசம்பவம், நைஷதம், சிசுபாலவதம், கிராதார்ஜுனீயம் ஆகிய ஐந்தும் வடமொழியின் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.
அதுபோல், தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் உள்ளன – ஆமுக்த மால்யத, மனு சரித்திரம், வசு சரித்திரம், பாரிஜாத அபகரணம், சிருங்கார நைஷதம் ஆகியவையே அந்த ஐந்து காப்பியங்கள்.
அவற்றுள் ஆமுக்த மால்யத என்னும் காப்பியத்தை விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் அரசரான ஸ்ரீகிருஷ்ணதேவ ராயர் இயற்றினார்.
இது பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறும் நூலாகும். ஏழு அத்தியாயங்கள் உள்ள இந்நூலின் முதல் நான்கு அத்தியாயங்களில் பெரியாழ்வாரின் வரலாறும், அடுத்த மூன்று அத்தியாயங்களில் ஆண்டாளின் வரலாறும் சொல்லப்பட்டுள்ளது. விஷ்ணுசித்தர் எனப்படும் பெரியாழ்வாரின் வரலாறும் இந்நூலில் விரிவாக இடம்பெறுவதால், விஷ்ணுசித்தீயம் என்ற பெயரும் இந்நூலுக்கு உண்டு.
இக்கவிதைக் காவியம் ஆண்டாள், திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் மீது கொண்ட பக்தியையும், மையலையும் கூறுவதுடன்,
இறுதியில் திருவரங்கப் பெருமானுக்கும், ஆண்டாளுக்கும் நடைபெற்ற திருமண விழாவைப் புகழ்ந்து பாடும்,
இந்நூல் தெலுங்கு மொழியின் தலைசிறந்த இலக்கியப் படைப்பாக கருதப்படுகிறது.
—————-
முஸ்லீம்களின் படை எடுப்பிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றியவர் இருவர்: தென்னகத்திலிருந்து முஸ்லீம் படை எடுப்பாளர்களை விரட்டியவர் கிருஷ்ண தேவ ராயர்; வடநாட்டிலிருந்து விரட்டியவர் வீர சிவாஜி.கிருஷ்ண தேவ ராயர் போல கோவில்களுக்கு தானம் செய்தவரும் இல்லை; இலக்கியத்தை வளர்த்தவரும் இல்லை. திருப்பதி கோவிலுக்கு வாரி வழங்கியுள்ளார்
———-
நம் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திரனுக்குப் பின் பெரும்பாலான தென்னிந்தியா முழுவதும் ஒரு குடையின் கீழ் இருந்தது என்றால் அது இம்மாமன்னரின் காலத்தில்தான் .
பொதுவாக சரித்திரவியலாளர்கள் கீழ்வரும் நான்கு அரசர்களை மிக கண்ணியத்துடன் அழைப்பார்கள் . அசோகர் , ராஜராஜன் , அக்பர் , கிருஷ்ண தேவராயன் . அதற்கு காரணம் அவர்களின் பிற மத சகிப்புத் தன்மையும் , நிர்வாக திறனுமாகும் .
கிருஷ்ண தேவராயன் , துளுவ நரச நாயக்கன் – நாகலா தேவியின் புதல்வர் . நரச நாயக்கருக்கு இரண்டு மனைவியர் . மூத்தவர் , சுலக்ஷனா தேவி , நாகலா தேவி இளையவர் . அக்கால முறைப்படி மூத்தவரின் மகன் வீரசிம்ம ராயர் அரசரானார் . அவர் போரில் மரணித்துவிட , கிருஷ்ணதேவராயன் முடியரசர் ஆனார் . சங்கம வம்சத்தவராகிய ஹரிஹரர்-புக்கர் ஆகிய இருவரால் துவங்கப்பட்ட விஜயநகர சாம்ராஜ்யம் , சாளுவ வம்சத்தில் பயணித்து , கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட துளுவ வம்சத்தில் நிலைபெற்றது .
கிருஷ்ணதேவராயன் மாபெரும் வீரர். கன்னட மக்களால் ‘கன்னட ராஜ்ய ராம ரமணன்’ என்றும் , தெலுங்கு மக்களால் ‘ஆந்திர போஜன்’ எனவும் பெருமையோடு பேசப் படுகிறார் .
இவ்விரு மொழிகளிலும் கவி பாடும் திறன் கொண்ட கிருஷ்ண தேவராயன் தமிழைப் பாடி தெய்வத் தன்மை பெற்ற ஆண்டாளை , காவிய நாயகியாகக் கொண்டு தெலுங்கில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆமுக்த மால்யதா- வை இயற்றியது–ஆண்டாளின் விருப்பமேயன்றி வேறென்ன ..!
இக் காவியம் இயற்ற அமைந்த கதை மிக சுவாரஸ்யமானது . மாமன்னர் கிருஷ்ண தேவராயரன் , கலிங்க தேசத்தின் மீது படையெடுத்துச் செல்லும் வழியில் விஜயவாடாவில் தங்குகிறான். அருகிலுள்ள ஶ்ரீகாகுளம் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள விஷ்ணு ஆலயத்திற்கு , ஏகாதசியன்று விரதமிருந்து தரிசித்து விட்டு தன் கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
நான்காம் சாம மணியொலி கேட்கிறது . அது கோயிலில் பூசைகளின் போது எழுப்பப்படும் மணியோசை போல பெரிய சத்தம் எழுப்புகிறது . கூடவே சங்க நாதமும் . இருட்டான அந்த அறையில் தெய்வ ஒளி படர்கிறது . அரசனுக்கு பதற்றம் . ஆனால் பரவசம் . ஆம் , அவர்முன்னே தவம் செய்தும் கிட்டாத தெய்வ தரிசனம் . சங்கு , சக்ர , கதை , மலரோடு பரந்தாமன் .
ஆனால் தோள்களிலே மாலை இல்லை. முகத்திலே ஒரு சிறிய வாட்டம் .ஏன் ? இறைவனுக்கே வருத்தமா ? கூப்பிய கரங்களோடு மன்னன் கண்ணீர் வழிய, பார்த்த விழி பார்த்தபடி , பேச நா எழாமல் .இறையே முன் தோன்றினாலும் , பேசினால்தானே தெளிவு பிறக்கும் . முன் , மாவலியிடம் இரந்தவன் , தற்போதும் கேட்கிறான்
“ மன்னா ! என் தோள்கள் மனம் வீசும் மாலைகளின்றி வாடித் துவள்கின்றன . அன்று பெரியாழ்வாரின் நந்தவனத்து மாலையாகிய கோதை நாச்சியார் அணிவித்த மாலைகளே எனக்குப் பிடித்தவை . அக்கோதையைப் பாடி , அப் பாட்டு மாலைகளை திருமலையில் எனக்குச் சாற்று . மகிழ்வேன் . புகழடைவாய்”.
சேவிப்பதையும் மன்னன் மறந்தான் . அதற்குள் காட்சிகளும் மாறின . தான் கண்டது கனவென்று உணர்ந்த மன்னன் , கோதையின் தமிழ்ப் பாசுரத்தில் தோய்ந்தான் . உருகினான் . கரைந்தான் .முடிவெடுத்தான் , பாமாலை பாடி , பூமாலை சூடி , இறையோடு கலந்து , இறைவியான நங்கைக்கு , ‘சூடிக் கொடுத்தவள்’ என்ற சொல்லைக் கொண்டே தன் காவியத்தைத் துவங்கினான் .
பல பணிகளுக்கு இடைய அம் மாமன்னன் இருமுறை ஶ்ரீவில்லிபுத்தூருக்கு வருகை தந்துள்ளான் . ஒரு லட்சம் தங்க காசுகளால் ஆபரணங்கள் செய்து காணிக்கை செலுத்தி உள்ளான் . நவ ரத்தினங்களின் கணக்குகள் எண்ண முடியாதவை .
ஆண்டாள் சன்னதியில் உள்ள கல் மண்டபம் அவன் சமர்பித்ததே . அது இப்போது தங்கத் தகடுகளால் வேயப் பட்டுள்ளது .
ஆமுக்த மால்யதா என்னும் காவியத்தை இயற்றிய சரித்திர நாயகனின் கதைச் சுருக்கம் இதுவே .
.———–
நான் முன்பு கங்கர்களைப் போரில் வெல்வதற்காக அவர்கள் மீது படையெடுத்துச் சென்ற காலத்தில் விஜயவாடா அருகில் சிலவாரங்கள் பாசறை அமைத்தேன். அங்கே உள்ள பெருமாள் கோவிலில் (திவி சீமாவில் உள்ள ஸ்ரீகாகுளம்) ஏகாதசி விரதம் இருந்து அன்றிரவு அங்கேயே உறங்கினேன். அடுத்தநாள் அதிகாலை துவாதசி வரும்போது திடீரென எனக்கு ஒரு அரிய காட்சி கிடைத்தது. ஆஹா.. எப்படி வர்ணிப்பேன் அந்த அதிசய காட்சியை..
நிறமோ, மழையை மடிமீது சுமந்துவரும் மேகங்களை நினைவூட்டுகிறது.. அந்தக் கண்கள்.. ஆகா.. உயர்ந்தவகைத் தாமரை மலர்கள் விரிந்த போது மேலும் செம்மையாகுமே.. அந்தப் பூக்களையும் விட அழகான சிவந்த கண்கள்.. கருடனின் தங்கநிறமான சிறகை விட ஒளி எங்கும் பரவ, மார்பில் கௌஸ்தூப மணி காலைச் சூரியனைப் போல சுடர் விட, பெருமாள் காட்சி அளித்தார். அருகேயே அகலாமல் உள்ள மகாலக்குமி தன் ஒரு கையில் விரிந்த கமலத்தைக் காட்ட, மறு கையால் ஆசியளிக்க, அந்த அற்புதக் காட்சியை எப்படி விவரிப்பேன்.. ஆஹா! இதோ பெருமாளே பேசுகிறாரே..
‘நான் ஆந்திர விஷ்ணு.. நீ வடமொழியில் பல நூல்கள் புனைந்துள்ளாய்.. எனக்காக நீ தெலுங்கு மொழியில் ஒரு நூல் எழுதவேண்டும்.. தேச பாஷைகளில் தெலுங்கு உயரிய பாஷை.. எனக்கு ஒருசமயம் மதுராவில் (வடமதுரை) அளிக்கப்பட்ட மாலையில் அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை. ஆனால் வில்லிபுத்தூரில் கோதை தன் மாலையை அணிவித்தாளே, அவள் மாலையுடன் ரங்கநாதனைக் கலந்ததைப் பற்றி எழுதி என்னை நீ மகிழ்விக்க வேண்டும். மேலும் அந்த மாலையை திருவேங்கடவன் முன்பு நீ சமர்ப்பிப்பாயாக”
ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் சொந்த வாக்கியங்கள்தான் மேலே கண்டவை. தெலுங்கு மொழியில் முதல் முதலாய் ஒரு முழு காவியமாக படைக்கப்பட்ட ‘ஆமுக்தமால்யதா’ எனும் காவியம்தான் பெருமாள் மேலே கேட்டுக் கொண்டதற்கிணங்க ஸ்ரீகிருஷ்ண தேவ ராயரால் எழுதப்பட்டதாகும். அந்தக் காவியத்திலேயே குறிக்கப்பட்ட வார்த்தைகள்தான் இவை.
ஆமுக்தமால்யதா, (அந்த சிறப்பான (ஆணிமுத்ய) மாலை) தமிழின் தெய்வீகத் தேவதையும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியுமான கோதை நாச்சியாரைப் பற்றியும் அவள் தந்தை பெரியாழ்வாரின் பக்தியைப் பற்றியும் பொதுவாகப் பேசும் காவியம் என்றாலும், இதைக் காவியமாக வடித்த கிருஷ்ணதேவராயன், தம் காலத்தே உள்ள அரசாங்க நிலையையும், ஒரு அரசன் என்பவன் எப்படி தருமத்தின் துணைகொண்டு எப்படியெல்லாம் அரசாளவேண்டும் என்பதையும் எழுதியுள்ளான். காவியம் முழுவதும் ஆன்மீகத்தின் ஒளி பரவி உள்ள ஒரு அற்புத படைப்பு இது.
முதலில் ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். சரியாக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1509) அரச பீடம் ஏறிய இந்த துளுவ கிருஷ்ணதேவராயன் ‘திராவிடன்’ எனும் சொல்லுக்கு முழு உரிமையும் கொண்டவன். இவன் ஒருவனே சரியான தென்னிந்தியன் என்று சற்று இந்தக் காலகட்டத்திற்கேற்றவாறு கூட சொல்லலாம். பாருங்கள். இவன் பிறப்பால் துளுவன்.. (மங்களூர் அருகே பிறந்ததாகச் சொல்வார்கள்). ஆட்சி செய்யும் இடமோ, அதாவது தலைநகரம் அமைந்த இடமோ கன்னடம் செழித்தோங்கும் விஜயநகரம். இவன் படைத்த காவியமோ தெலுங்கு மொழியில், காவியத்தின் நாயகியோ தமிழன்னையின் தவப்புதல்வியான ஆண்டாள். திராவிடத்தின் மொத்த உருவத்தையும் தன்னகத்தேக் கொண்ட ஒரு உன்னதத் தலைவன் ஸ்ரீகிருஷ்ண தேவராயன். வடமொழியில் வல்லவனான கிருஷ்ணதேவராயனுக்கு தென் மொழியான தமிழ் மிக நல்ல பரிச்சயம். அதுவும் வைணவத்தை ஆராதிப்பவனான அரசன் தமிழ்ப் பாமாலைகளான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினைக் கரைத்துக் குடித்தவன் என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் அவனே எழுதிய வரிகளைப் படியுங்கள்!
பன்னிரு சூரியர்கள் பிரபஞ்சம் முழுதும்
நடுவிலே நாராயணன் பரிபாலிக்க
ஏன் இந்த வெப்பம் என உணர்ந்தவன்
வெப்பம் தணியவே தனிவழி தேடி
பன்னிரு ஆழ்வாரின் நெஞ்சத்துக் குளிர்ச்சியிலே
தஞ்சம் புகுந்தானோ..அந்தக் குளிர்ச்சியிலே
உறைந்து மணத்திலே மனதைக் கொடுத்த
அந்த அமரர்களின் அதிபதிக்குத் தலை வணங்குவோம்
பன்னிரெண்டு சூரியர்களின் சூட்டைத் தாங்கமுடியாமல் தம்மிலேயே ஆழ்ந்திருக்கும் பன்னிரெண்டு ஆழ்வார்களின் நெஞ்சக்குளிர்ச்சியில் தன்னைப் புதைத்துக் கொண்டானாம்.. ஒரு சில வரிகளில் ஆழ்வார்களை ஸ்ரீகிருஷ்ணதேவராயன் எவ்வளவு பெருமைப் படுத்திவிட்டான்..
பன்னிரு ஆதித்யர்கள் –
தாதா,மித்ரன்,அர்யமா,சக்ரன்,வருணன்,அம்சன்,பகன்,விவஸ்வான்,பூஷன்,ஸவிதா,த்வஷ்டா,விஷ்ணு (மஹாபாரதம் – ஆதி பர்வம்)
ஆண்டாள் அரசனை மிகவும் கவர்ந்தவள் என்றே சொல்லவேண்டும். இவன் காவியத்தில் ஆண்டாளைப் போற்றிப் பாடினாலும், நாச்சியார் திருமொழி வாக்கியங்களை மற்ற காவியப் பொருள்களிலும் தாராளமாக கையாள்கிறான் அரசன். அதுவும் திருவேங்கடவனின் சங்கினைப் போற்றும் பாடலில், ‘கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ’ என ஆண்டாள், கண்ணனின் வாய் எச்சிலின் மகிமையைப் பற்றி சங்கினைக் கேட்பாளே, அதே கேள்விகளை போற்றுதல்களாக மாற்றி ஸ்ரீகிருஷ்ணதேவராயன் தெலுங்கில் வடித்திருப்பது மிகவும் போற்றுதலுக்குரியதுதான். அதே சமயம் ஆண்டாளின் தமிழ் இவனை எப்படியெல்லாம் பாதித்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.
இதோ நாரணன் சங்கை ஊதிவிட்டான்
ஆஹா.. கீதமா சங்கீதமா
நறுமணம் என்றால் இதுதானோ
நல்ல தேனினை உண்டு கொண்டிருந்த
தேனீக்களே.. ஏன் திடீரென அங்கு ஓடுகிறீர்கள்
ஓ, புரிந்து விட்டது.. இந்த நல்ல கமலங்களில்
கிடைக்கும் நறுமணத்தைவிட, இனிய தேனை விட
விட நறுமணம் வீசும் நாரணன் எச்சில்
அந்த சங்கூதலால் கிடைத்துவிட்டதா..
சங்கரைப் பற்றியே இப்படி முப்பது பாடல்கள் காவியத்தில் உள்ளன. இந்தப் பாமாலைகளைப் போலவே தன்னுடைய காவியம் முழுவதும் ஆண்டாளின் தமிழ்த் தாக்கம் அதிகமாகவே தெரியும் வகையில் படைத்திருக்கிறான் அரசன். பொதுவாகவே அரசர்கள் என்போர் கவி புனைவது என்பது ஒத்து வராத விஷயம். அரசர்கள் சபையில் ஆன்றோர் பலர் இருப்ப, அந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் படைக்கும் காவியங்களை மிகவும் ரசித்து அந்தப் புலவர்களைக் கௌரவிப்பதே அரசன் கடமை என சரித்திரத்தில் நிறைய படித்திருக்கிறோம். மகேந்திரபல்லவன் நாடகங்கள் படைத்திருக்கிறான். அவனுக்குப் பிறகு ஒரு சில அரசர்கள் கவிதை உலகத்துக்கு பங்கு அளித்தார்கள்தான் என்றாலும், ஸ்ரீகிருஷ்ணதேவராயனின் இலக்கிய பங்கு என்பது வியப்புக்குரியதுதான்.
ஏனெனில் கிருஷ்ணதேவராயனின் அவையிலேயே அஷ்ட திக்கஜங்கள் என்று பெருமை பெற்ற எட்டு பேர் கொண்ட ஒரு பெரிய புலவர் படையே இருந்தது. அல்லசாணி பெத்தண்ணா என்ற புகழ்பெற்ற தெலுங்குப் புலவர் சபைக்குத் தலைவர் போல இருந்தவர். கன்னட மொழிப் புலவர்கள் பலர் இருந்தனர். ஆனால் தமிழுக்கு என்று பெயர் சொல்லக்கூடிய புலவர் ஒருவரும் அவனுடைய சபையில் அந்தக் கால கட்டத்தில் இல்லாததைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும். ஆனால் தமிழ் அவன் சபையில் இல்லை என்பதை ஈடு செய்யவே கிருஷ்ணதேவராயனே முன்வந்து தமிழ்ப் பாடல்களின் மகிமையை தெலுங்கு மொழியில் இயற்றினானோ என்னவோ.. ஒவ்வொரு சமயம் நினைத்துப் பார்க்கும்போது தமிழன்னை தன்னை உயர்த்திக் காட்ட இந்தக் காவியம் படைக்க இப்படி ஒரு வகை செய்தாளோ என்றுதான் தோன்றும்.
இல்லையேல், ஒரு ராஜா அதுவும் தமிழல்லாத ராஜா, சண்டை போட இருந்த ஒரு இடத்தில், யுத்த கால கட்டத்தில், நாராயணனே முன் தோன்றி, ‘எனக்கு கோதையின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி மாலை தெலுங்கில் காவியமாக வேண்டும், அதையும் அரசனான நீயே செய்யவேண்டும் என்று கேட்பானா? இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியைக் கூட ‘ஆமுக்தமால்யதா’ வில் அரசன் எழுதுகிறான்.. .
‘ஆஹா.. சாட்சாத் நாராயணனே இலக்குமி சகிதம் வந்து என்னிடம் ஆணை போட்டுவிட்டான்.. அமைச்சர்களே.. புலவர்களே.. இதன் நிமித்தம் சொல்லுங்களேன்..’
என ஆன்றோர்களைக் கேட்கவும் அந்த யுத்த பூமியிலும் சபை மளமளவெனக் கூடுகிறது. இலக்குமியின் ஒரு கையில் தெரிந்த கமலம், இந்த யுத்தத்தின் வெற்றியின் பரிசு என்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு காவியம் எழுது என்று சொல்லிவிட்டானே ஆண்டவன்.. காவியத்துக்கே உரிய வகையறாக்கள் ஆராயப்படுகின்றன. கடவுள் வாழ்த்து கூட வைணவ மார்க்கத்தில் முதலில் திரு (இலக்குமி) யைப் போற்றி எழுதப்படவேண்டும் என்று நிர்ணயிக்கிறார்கள். அப்போது ஒரு சிறிய மாற்றம் அரசரால் சொல்லப்படுகிறது. ஆந்திர விஷ்ணு, திருமலையில் நின்றவடிவில் ஆருள் புரியும் திருவேங்கடவன் முன்பு இந்தப் பாமாலையினை சமர்ப்பிக்கும்படி ஆணையிட்டிருப்பதால் இலக்குமியை முன்வைத்து அந்தத் திருவேங்கடவனுக்கே முதல் பாடல் எழுதப் போகிறேன்.. என்று சொல்கிறான். அதுவும் எந்த இலக்குமி, திருவேங்டவன் திருமார்பில் வாசம் செய்வதாக நம்மாழ்வார் சொல்கிறாரே ‘அகலகில்லேன், இறையும் என அலர்மேல்மங்கையுறை மார்பா’ அந்த மகாலக்குமியைப் போற்றவேண்டும் என தேவர் முடிவு செய்கிறார்.
திருமால்.திருமாலின் ஆணையை ஏற்று, தனது இஷ்டதெய்வமான திருமலையப்பனுக்கு அர்ப்பணித்து ஆமுக்த மால்யத என்ற தெலுங்குக் காப்பியத்தை இயற்ற முடிவெடுத்தார் கிருஷ்ண தேவராயர்.
இலக்குமியின் திருமார்பில் ஒளிரும் ஆரத்தின் ஒளி நீயே
அவன் திருமார்பில் ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
ஒருவருக்கொருவர் உள்ளேயே ஒளிந்திருந்தும் இந்த மணிகளின்
வழியே தெள்ளத் தெளிவாய் வெளியே தெரியும் விந்தையை
அளித்த திருவேங்கடவனே, உனக்கு முதல் வணக்கம்!
அவனும் அவளும் ஒன்றுதான்.. ஆனால் அவள் மூலம் அவனிடம் செல்வது என்பது மிக மிக எளிது.. இதுவே ஆண்டாளும், நம்மாழ்வாரும், திருமங்கைமன்னனும் ஏற்கனவே காண்பித்தது என்பது விஜயநகரத்து மன்னன் ஸ்ரீகிருஷ்ணதேவராயனுக்கு பரிபூரணமாகத் தெரிந்திருக்கிறது. அவன் வார்த்தைகளில் உள்ள சத்தியம் ஆணும் பெண்ணும் ஆண்டவனிலிருந்து அகிலம் முழுமைக்கும் ஒன்றுதான் என்ற கருத்து பலமாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தனையும் தமிழின் கருத்து. அப்படியே அண்டை மொழி மூலம் ஆண்டவன் கட்டளையாக, அந்த ஆண்டவனுக்கே அழியாத மாலையாக அழகாகக் கோர்த்து மாலையிட்டவன் ஸ்ரீகிருஷ்ணதேவராயன்.
ஆமுக்தமால்யதா தெலுங்கில் பொருள் அறிந்து படிக்க படிக்க தெலுங்கு மொழியின் மகிமையை விட தமிழின் மகிமை மிக அதிகமாக தமிழராகிய நமக்கு விளங்கும். தமிழராகிய நாம் தலை நிமிர்ந்து நடக்க, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு மகாகாவியம் இந்த ‘ஆமுக்தமால்யதா’ என்று பெருமை கொள்வோம்.
இவருக்கு ஆண்டாளும் ஆழ்வாரும் எப்படி பரிச்சயம் என்றால், இவருக்கு சின்ன வயதிலிருந்தே அரசியல் குரு, அதாவது சந்திரகிரி கோட்டையைத் தலைமையாகக் கொண்டு ஆண்டுவரும் சாலுவ நரசிம்மா என்கிற ப்ராம்மண ராஜாதான் காரணம் என்று சொல்லலாம். இந்த நரசிம்மா என்கிற செல்லப்பாதான் ஸ்ரீவில்லி கோயிலையே புதிதாக செப்பனிட்டுக் கட்டியதாக தகவல் உண்டு. இவருக்கு ஆண்டாளே சின்னப் பெண் வடிவில் தரிசனம் தந்ததாக பர்டன் ஸ்டெஇன் எழுதி இருக்கிறார். கூடவே (அப்போது குட்டி) கிருஷ்ணதேவனும் இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்த செல்லப்பனுக்கு கந்தையாடை என்றொரு ஜீயர்தான் குரு. அந்த குருவின் உதவியும் கிருஷ்ணதேவராயருக்கு கிடைத்திருக்கலாம். மேலும் அகோபில மடத்துத்து ஜீயரையும் ஆமுக்த மால்யதாவில் போற்றுகிறான்.
கிருஷ்ண தேவராயருடைய முதல் அமைச்சர் பெயர் அப்பாஜி. அப்பாஜி கூர்மையான நுண் ணறிவு மிகுந்தவர்.
ஒரு நாள் அரசரும் அமைச்சருமாக மாறு. வேடம் அணிந்து தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார்கள்.. அந்தக் காலத்தில் அரசர்கள் தங்கள் குடிமக்களின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக இவ்வாறு சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.
அரசரும் அமைச்சரும் பம்பை ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்றனர். அந்த ஆற்றங்கரையை ஒட்டியிருந்த வயல்கள் எல்லாம் – நன்றாக விளைந்து பச்சைப்பசேல் என்றிருந்தன. அவற்றுள் அறுவடை ஆகிக் காய்ந்து கிடந்த ஒரு வயலை உழவன் ஒரு.. வன் உழுது கொண்டிருந்தான்.
அவ்வழியே மூன்று பெண்கள் இடுப்பில் நீர் நிறைந்த குடங்களுடன் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் உழவன் உழுது கொண்டிருந்த நிலத்தைப் பார்த்துக் கொண்டே போனார்கள். அவர்களுள் ஒருத்தி, “நீலா, உழவன். உழுகின்றானே, இந்த நிலம் முகத்துக்கு ஆகும்” என்று கூறினாள்.
“தவறு தவறு கமலா. இந்த நிலம் வாய்க்கு ஆகும்” என்று நீலா கூறினாள்.
மூன்றாவது பெண்ணாகிய சுந்தரி, “ அல்ல அல்ல. இந்த நிலம் பிள்ளைக்குத்தான் ஆகும். – நீங்கள் இருவரும் கூறியது சரி அல்ல” என்றாள்.
இவ்வாறு அவர்கள் மூவரும் அந்த நிலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே சென்றனர். அவர்கள் மூவரும் கூறியவைகளை அரசரும் அமைச்சரும் கேட்ட வண்ணம் அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.
அந்தப் பெண்கள் கூறியவை, அரசருக்கு விளங்கவில்லை. அரசர் அமைச்சரைப் பார்த்து, “அமைச்சரே, இந்தப் பெண்கள் ஒரு நிலத்தை முகத்துக்காகும், வாய்க்காகும், பிள்ளைக்காகும் என்று கூறிக் கொண்டு போகிறார்களே, இவர்கள் கூறியதன் பொருள் என்ன?” என்று கேட்டார்.
அமைச்சர் அரசரைப் பார்த்து, “அரசே, முகத்துக்கு ஆகும் என்று கூறினளே ஒருத்தி, அதன் பொருள் என்ன வென்றால், முகத்தில் பூசும் மஞ்சள் பயிரிடுவதற்குத் தகுதியான நிலம் என்பதாகும். மற்றொருத்தி வாய்க்கு ஆகும் என்றாளே, அதன் பொருள் வெற்றிலைக் கொடி பயிரிடுவதற்குத் தகுதியான நிலம் என்பதாகும். இன்னொருத்தி பிள்ளைக்கு ஆகும் என்றாளே, அதன் பொருள் தென்னம் பிள்ளை வைத்து வளர்ப்பதற்கு ஏற்ற நிலம் என்பதாகும்” என்று கூறினார்.
இந்த விளக்கத்தைக் கேட்ட அரசர் பெரும் வியப்பு அடைந்தார்; தம் அமைச்சர் கூறியது சரி தானா என்று தெரிந்து கொள்ள விரும்பினார் ; தமக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பெண்களை நிறுத்தி, அவர்கள் கூறியதற்கு விளக்கம் கூறுமாறு கேட்டார். அவர்கள், அமைச்சர் சொன்னதைப் போலவே கூறினர். அரசர் தம் அமைச்சரின் கூர்மையான அறிவைப் புகழ்ந்து பாராட்டினார்.
கிருஷ்ண தேவராயர், மற்றொரு முறை மாறு வேடத்தில் தம் நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். நல்ல வெய்யிலில் சுற்றி வந்ததால் அவருக்குச் சற்றுக் களைப்பாயிருந்தது. ஒரு சிற்றூரின் குளக்கரை அருகில் வந்ததும் அங்குச் சிறிது நேரம் களைப்பாற விரும்பினார்.
அந்தக் குளம் மிகப் பெரியதாகவும் நீர் நிரம்பி யும் இருந்தது. அதன் ஒரு கரையில் பெரிய ஆலமரம் ஒன்று தழைத்திருந்தது. அதன் கிளைகள் நான்கு புறமும் பரவி விழுதுகள் விட்டு அடர்ந்து, ஒரு மன்னன் தன் நால்வகைப் படைகளுடன் தங்கு வதற்கேற்றவாறு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. அக் கொடிய வெய்யிலிலும் அக்குளக்கரை யில் ஆலமரத்தின் அடியில் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது.
வெய்யிலில் சுற்றிவந்த கிருஷ்ண தேவராயர் அந்த ஆலமரத்தின் அடியில் தம் குதிரையை ஒரு புறம் மாகக் கட்டிவிட்டு, அமர்ந்தார். அவ்வமயம், அவ்வூர்ப் பெண்கள் சிலர் தண்ணீர் எடுத்துச் செல் வதற்காக அக்குளத்திற்கு வந்தனர். தங்கள் குடங்களில் நீரை நிரப்பிக் கொண்டு திரும்பிச் செல்கையில், ஆலமரத்தை ஏறிட்டு நோக்கிய ஒருத்தி, “காலும் கழியும் ஒன்றடி” என்று கூறினாள். அதைக் கேட்ட மற்றொருத்தி, அண்ணாந்து பார்த்து, “இறகும் இலையும் ஒன்றடி” என்று கூறினாள். இவ்விருவர் கூறியதைக் கேட்ட இன்னொருத்தி, “வாயும் கனியும் ஒன்றடி” என்றாள் இவ்வாறு பேசிக் கொண்டே அந்தப் பெண்கள் சென்று விட்டனர்.
மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டிருந்த இராயருக்கு இப் பெண்கள் கூறியதன் பொருள் விளங்க வில்லை. அவர் அரண்மனைக்குத் திரும்பிய பின் தம் அவையிலுள்ள அறிஞர்களிடம் அந்தப் பெண்கள் கூறியவற்றை எடுத்துச் சொல்லி, “அவற்றின் உட்பொருள் என்ன ?” என்று கேட்டார். அவையினர் நீண்ட நேரம் சிந்தித்துப் பார்த்தும், அவர்களுக்கு அவற்றின் உட்பொருள் விளங்க வில்லை .
ஆனால், கிருஷ்ண தேவராயரின் முதல் அமைச் சராகிய அப்பாஜி, அரசரை நோக்கி, “ அந்த மூன்று பெண்களும் ஆலமரத்தைப் பார்த்து இப் படிக் கூறினரா?” என்று கேட்டார். அரசர் ‘ஆம்’ என்று கூறினார். உடனே அப்பாஜி, அந்தப்பெண் கள் கூறியவற்றின் உட் பொருளை விளக்கத் தொடங் கினார்.
அரசே, அந்த ஆலமரத்தில் ஒரு கிளி பறந்து வந்து உட்கார்ந்தது. அதனை அந்த மூன்று பெண் களும் பார்த்தார்கள்; உடனே அதற்கு உவமை கூறத் தொடங்கி விட்டார்கள். காலுங்கழியும் ஒன்றடி’ என்று ஒருத்தி கூறியது, கிளியின் காலும் மரத்தின் கிளையும் ஒன்று போல் இருக்கின்றன என்று பொருள்படுகிறது. “இறகும் இலையும் ஒன்றடி ” என்று மற்றொருத்தி கூறியது கிளியின் இறகும், ஆலமரத்தின் இலையும் ஒன்றுபோல் இருக்கின்றன என்று பொருள் படுகிறது. “வாயுங் கனியும் ஒன்றடி” என்று இன் னொருத்தி கூறியது கிளியின் அலகும் ஆலமரத்துக் கனியும் ஒன்றுபோல் இருக்கின்றன என்று பொருள்படுகிறது. எனவே, அப்பெண்கள் கிளி யையும் ஆலமரத்தையும் இணைத்துத்தான் இவ்வாறு குறிப்பாகப் பேசியிருக்கின்றார்கள் என்று கூறினார்.
தம் முதல் அமைச்சர் கூறிய விளக்கம் பொருத் தமாக இருந்தாலும், அது சரிதானா என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று கிருஷ்ணதேவராயர் கருதினார். எனவே, தம்முடன் அப்பாஜியை அழைத்துக் கொண்டு, அந்தச் சிற்றூருக்குச் சென்று அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்தார். இரு வரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். அவ்வமயம் வழக்கம் போல் நீர் எடுக்க அப்பெண் கள் குளத்திற்கு வந்தனர். அப்பெண்களை அடை யாளம் கண்டு கொண்ட அரசர், அவர்களை அழைத்து, அவர்கள் கூறியவற்றிற்கு விளக்கம் கேட்டார். அப்பெண்கள், ஆல மரத்தில் வந்து நின்ற கிளியைப் பார்த்துத் தாங்கள் அவ்வாறு கூறியதாகச் சொன்னார்கள்.
அரசர், தம் முதல் அமைச்சரின் அறிவுக் கூர்மையின் திறத்தைப் பெரிதும் மெச்சி, அவருக்குப் பரிசுகள் அளித்துப் பெருமைப் படுத்தினார்.
—————-
கிருஷ்ண தேவராயர் ஒரு நாள் கொலு மண்ட பத்தில் அமர்ந்து, ஆட்சி நடத்திக் கொண்டிருக்கையில், தமிழ் நாட்டிலிருந்து நடன மகளிர் மூவர், அவர் கொலுமண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; நடனக்கலையில் பெரும் புலமை பெற்றவர்கள்; கல்வியறிவிலும் சிறந்தவர்கள். அப்பெண்கள் தங்கள் திற மையை அரசர் முன் விளக்கிப் பெருமை பெறவேண் டும் என எண்ணி விசய நகரம் வந்தனர்.
கொலுமண்டபம் வந்து அரசரைக்கண்ட அப்’ பெண்கள் அரசரை வணங்கினர். பிறகு,
“மன்னர் மன்னரே, நாங்கள் மூவரும் தமிழகப் பெண்கள். இசை பிசகாது பாடவும், விதி பிறழாது நடனம் ஆடவும், குழல் ஊதவும், யாழ் இசைக்கவும் எங்களுக்குத் தெரியும். தங்கள் முன் னிலையில் எங்கள் கலைத்திறனைக் காட்டித் தங்கள் அன்பான ஆதரவைப் பெறவே வந்துள்ளோம்” என்று அந்தப் பெண்கள் மூவரும் கூறினார்கள்.
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கும் ஆண்டாளின் திருப்பாசுரங்களில் மனத்தைப் பறி கொடுத்து, அப்பாசுரங்களை “ஆமுக்த மால்யதா” என்னும் பெயருடன் தெலுங்கில் எழுதியவரான கிருஷ்ண தேவராயர், அத்தமிழ்ப் பெண்களின் கலைத்திறனைக் காண விரும்பி, “நாளை நம் அவையில் உங்கள் நடனக் கலையை நாம் காணுவோம்” என்று கூறினார்.
மறு நாள் தமிழகப் பெண்களின் ஆடலைக் காணச் சபை கூடியது. நடனக் கலையில் தேர்ச்சி உடையவர்கள் பலர் தமிழ்ப் பெண்களின் கலைத்திற னைக் காண வந்திருந்தனர். மன்னர் தம் தேவியாருடன் வந்தமர்ந்தார்.
நடன மகளிர், முதலில் மன்னருக்கும் அவையி னருக்கும் வணக்கம் செலுத்தியபின், நடனம் ஆடத் தொடங்கினர். ஆடலுக்கேற்ற இசையும் இசைக் கேற்ற ஆடலும் அவையினர் மனத்தைக் கவர்ந்தன. அப்பெண்களின் ஆடல், நடன இலக்கணத்தினின் றும் இம்மியும் பிசகாமல் சிறப்புற்றிருந்தது. மன் னரும் அவையினரும் இந்நடனத்தைப் பெரிதும் சுவைத்தனர். மன்னர் அவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தி விருதுகள் அளித்து, அவர்கள் மனம் மகிழுமாறு பரிசுகள் அளித்தார்.
நடனப் பெண்கள் மூவரும் மன்னர் மன்னரை வணங்கித் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து அப்பரிசுகளை ஏற்றுக் கொண்டனர். பிறகு, அவர்களுள் ஒருத்தி, “நம் மன்னர் முள்ளும் முரடுமடி ” என்றாள். மற்றொருத்தி, “நம் மன்னர் கல்லும் கரடும் அடி” என்றாள். இன்னொருத்தி “நம் மன்னர் வேரும் விறகும் அடி” என்றாள்.
அவர்கள் ஏன் இவ்வாறு கூறினார்கள்? அவர்கள் கூறியவற்றின் பொருள் என்ன? என்பவற்றை அறிய மன்னர் விரும்பினார்; உடனே தம் முதலமைச் சராகிய அப்பாஜியை நோக்கினார்.
மன்னரின் கருத்தறிந்த அமைச்சர் அப்பாஜி, எழுந்து மன்னரை வணங்கிவிட்டுப் பின்வருமாறும் அப்பெண்கள் கூறியவற்றை விளக்கினார்.
“மன்னர் மன்னா! உங்களை முள்ளும் முரடும் என்றாள் இப்பெண். பலாப்பழம் முள்ளையும் முரட்டுத் தோலையும் மேற்புறத்தில் பெற்றிருக்கிறது. அதைப் போல், நீங்கள் குற்றம் செய்பவர்களுக்கும் பகை வர்க்கும் முள்போன்றவராயும் முரட்டுத்தனம் உடையவராயும் விளங்குகின்றீர்கள். அதாவது கடுமையானவராகவும் வன்மை உடையவராகவும் காணப்படுகின்றீர்கள். பலாப்பழத்தின் தோலை உரித்து விட்டால், உள்ளே பொன்போன்று விளங்கித் தேன்போல் இனிக்கும் சுளைகள் காணப் படுகின்றன. அதுபோல் நீங்களும் அகத்தில் அன்பும் இன் சொல்லும் நிறைந்து விளங்கு கின்றீர்கள். எனவே தீயவர்களுக்குக் கடுமையான வராகவும், நல்லவர்களுக்கு அன்புடையவராகவும் நீங்கள் விளங்குவதால் அப்பெண் உங்களைப் பலாப் பழத்திற்கு ஒப்பிட்டாள்.
மற்றொருத்தி உங்களைக் கல்லும் கரடும் என்றாள். கல் என்பது மலையைக் குறிக்கும். மலை நெடுந் தொலைவிலிருந்து. பார்த்தாலும் நன்கு தெரி யும். அதனுடன் பல்வேறு அரிய பொருள்களை மலை தருகிறது; அளக்கவோ அசைக்கவோ முடியாதது. அதுபோல, நீங்களும் பேராற்றல் படைத்த பகை வராலும் அசைக்க முடியாதவர். வேண்டுவோர் வேண்டியவற்றையெல்லாம் கொடுத்து ஆதரிக்கும் வள்ளல். உங்கள் புகழ் நெடுந்தொலை பரவியிருப் பதால் எங்கிருப்பவர்களும் உங்களை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, மலை என்று அவள் உங்களைக் கூறியது முற்றிலும் பொருந்தும். கரடு என்பது காலடி எனப் பொருள்படும். கால் உடலைத் தாங்குவதுடன் நம்மை நடமாட வைக்கிறது. அதுபோல நீங்கள் உங்கள் நாட்டைத் தாங்கி நாட்டு மக்களை மகிழ்ச்சிப் பெருக்குடன் நடமாட வைக்கின்றீர்கள். அதனால் அவள் உங்களைக் கால்’ –என்னும் பொருளில் கரடு எனக் கூறியது மிகவும் பொருத்தமே யாகும்.
“இன்னொருத்தி உங்களை வேரும் விறகும் என்றாள். வேர் நிறைந்து விறகுபோல் இருப்பது அடிக்கரும்பு ஆகும். அதைப்போல் புறத்தோற்றத் தில் நீங்கள் கடினமாய் இருந்தாலும் அடிக்கரும்பு மிகுந்த இனிப்புடையதாயிருப்பது போல, நீங்கள் அகத்தில் கருணையும், இன்சொல்லும், நிறைந்த வராய்க் காணப்படுவதால், வேரும் விறகும் என்று அவள் கூறியதும் பொருத்தமாகவே இருக்கிறது. –
இவ்வாறு அமைச்சர், அந்தப் பெண்கள் மூவரும் கூறியவற்றை விளக்கியதைக் கேட்ட மன்னரும் அவையினரும் பெருமகிழ்ச்சியடைந் தனர்; அமைச்சரின் அறிவுத் திறமையையும் பாராட் டினர். அரசர் அப்பெண்களுக்கு மேலும் சில பரிசளித்துப் பாராட்டி உபசரித்து அனுப்பி வைத்தார்.
இக்காப்பியத்தைப் பாடி நிறைவு செய்த வாறே, ஆண்டாள் மற்றும் திருமாலின் அருளால் ஒரிசா பகுதியைக் கிருஷ்ண தேவராயர் வெற்றி கொண்டதாக, இக்காப்பியத்தின் நிறைவுப் பாடலின்மூலம் அறிய முடிகிறது. நீல மலையான பூரி ஜகந்நாத்தில் நீலவண்ண ஆடை அணிந்த பலராமனோடும், சுபத்திரையோடும் கண்ணன் வீற்றிருக்கிறான்.
அந்தக் கண்ணன் குவளை மலர்களை வென்ற கண்களைக் கொண்டவன். அவனது கருணை மிகுந்த கடைக்கண் அருளால் ஒரிசா பகுதியின் அதிபதிகளான கஜபதி மன்னர்களை வீழ்த்தியவனும், தோள் வலிமையால் அவர்களை அஞ்சச் செய்தவனுமான கிருஷ்ணதேவராய மன்னர் இயற்றிய ஆமுக்த மால்யத காவியம் இனிய செய்யுட்களுடன் நிறைவடைகிறது என்று நூலை நிறைவு செய்துள்ளார்.
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply