ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —ஒன்பதாம் பத்து–பாசுரங்கள்- 81-90-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அவதாரிகை –

இதில் -சோபாதிக பந்துக்களை விட்டு நிருபாதிக பந்துவை பற்றச் சொல்லுகிற ஸ்ரீ ஆழ்வார்
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
தன்னைப் பற்றினாரை தனக்கு அபிமதரான பாகவதர்கள் திருவடிகளிலே சேர்த்து ரஷிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனே
பிராப்யமும்-பிராபகமும் சர்வ வித பந்துவும் – அல்லாதார் அடங்கலும் ஔபாதிக பந்துக்கள் – ஆன பின்பு –
அவனை ஒழிந்த ஔபாதிக பந்துக்களை விட்டு
பிராதா பார்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா -என்னும்படி
நிருபாதிக-சர்வவித பந்துவுமாய் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை புக்கு உஜ்ஜீவித்துப் போருங்கோள் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிறரைக் குறித்து உபதேசிக்கிற கொண்ட பெண்டீரில் அர்த்தத்தை
கொண்ட பெண்டிர் தாம் முதலா -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-

————————————————–

வியாக்யானம்–

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார்-
கையில் தனத்தை அழிய மாறிக் கொண்ட ஸ்திரீகள் கொண்ட -என்று
அதில் ஔபாதிகதவம் தோற்றுகிறது-
தான் என்று கொண்ட பெண்டீரில் ப்ராதான்யம் தோற்றுகிறது –
இப்படி களத்திர புத்ராதி யாகச் சொல்லப் படுகிற பந்து வர்க்கம் எல்லாம் –
கூடும் உற்றார் -என்ற பாடமான போது
ஆகந்துகமாக வந்து கூடினவர்கள் -என்றாகிறது –

கன்மத்தால் அண்டினவர் என்றே யவரை விட்டு –
கர்ம ஔபாதிகமாக அடைந்தவர்கள் என்றே-ஔபாதிக பந்து வர்க்கங்களை விட்டு –
கொண்ட பெண்டீர் மக்கள் உற்றார் -என்று தொடங்கி அருளிச் செய்ததை
அனுவதித்து அருளிச் செய்தபடி –

தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை தனக்கு சேஷ பூதர் ஆனவர்கள் உடன் சேர்க்கும்
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயுங்கோள் -என்றார் –

ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –
எத்தனை அறிவில்லாதவர்கள் விஷயத்திலும்
ஹிதத்தை தம்முடைய தீர்க்க தர்சிக்கும்-யசஸை உடையரான ஸ்ரீ ஆழ்வார்-முற் காலத்திலே-
இப்படி ஆத்மஹித தர்சியான இவரும் ஒருவரே -என்றபடி –

ஆர்க்கும் ஹிதம் பார்க்கை யாவது –
கொண்ட பெண்டீர் -என்று தொடங்கி-தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணை -என்றும்
துணையும் சார்வும் ஆகுவார் போல் -என்று தொடங்கி -புணை ஓன்று உய்யப் போகல அல்லால் இல்லை கண்டீர் பொருள் -என்றும்
பொருள் கை யுண்டாய் -என்று தொடங்கி -அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே -என்றும்
அரணாம் அவர் -என்று தொடங்கி -சரண் என்று உய்யப் போகில அல்லால் இல்லை கண்டீர் சதிரே -என்றும்
சதிரம் -என்று தொடங்கி -எதிர் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே -என்றும்
இல்லை கண்டீர் இன்பம் -என்று தொடங்கி -சொல்லி உய்யப் போகில அல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே -என்றும்
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் -என்று தொடங்கி வடமதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே -என்றும்
வாழ்தல் கண்டீர் குணம் இது -என்று தொடங்கி வீழ் துணையாப் போமிதினில் யாதும் இல்லை மிக்கதே -என்றும்
யாதும் இல்லை மிக்கு இதினில்-என்று தொடங்கி -தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே -என்றும்
கண்ணன் அல்லால் -என்று தொடங்கி -அவன் அன்றி மற்று இல்லை -என்றும்
இப்படி பஹூ முகமாக
சர்வர்க்கும்-சர்வ ஹிதங்களையும் உபதேசித்து அருளிற்று -என்கை-

இம் மட வுலகர் கண்டதோடு பட்ட-அபாந்தவ-அரஷக-அபோக்ய-அஸூக அநுபாய பிரதி சம்பந்தியைக் காட்டி -என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

————————————————————————————–

அவதாரிகை –

இதில் –
பந்து க்ருத்யம் எல்லாம் செய்ய வேணும் -என்று பேசின ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து-
அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
இப்படி நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வவித பந்து க்ருத்யமும் செய்ய வேணும்-என்று
ஸ்ரீ திருப் புளிங்குடியிலே போய்ப் புக்கு-அங்கே ஸ்ரீ பிராட்டியாரோடு கூட-
பள்ளி கொண்டு அருளுகிற-ஸ்ரீ காய்ச்சின வேந்தைக் குறித்து –
திருப் பவளத்தைத் திறந்து ஒரு இன் சொல்லுச் சொல்ல வேணும் –
மா ஸூ ச -உபாயத்துக்கு சோகப்படாதே– க்ரியதாம் மாம் வத -கைங்கர்யம் –
திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி அருள வேணும்-
திருவடிகளைத் தலைக்கு அலங்காரமாக வைத்து அருள வேணும் –
ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ தேவருமாக திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்க வேணும்-
கண் முகப்பே நாங்கள் சசம்ப்ர்ம ந்ருத்தம் பண்ணும்படி உலாவி அருள வேணும்-என்றால் போலே
ஒரு கோடி வெள்ளங்களை-அவர் சந்நிதியிலே-அசல் அறியாதபடி- பிரார்த்திக்கிற பண்டை நாளில் -அர்த்தத்தை
பண்டை யுறவான இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————–

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—82-

தண்டற -தடை இல்லாமல் –

——————————————————–

வியாக்யானம்–

பண்டை யுறவான பரனைப் –
உலகுக்கு ஓர் முந்தை தாய் தந்தையே முழு வேழு உலகுண்டாய் -என்றும்
தாய் இருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -என்னும்படியும்
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் -என்று
அநாதி சித்தமான சம்பந்தத்தை யுடைய-சர்வ ஸ்மாத் பரனை –
அன்றிக்கே –
கண்கள் சிவந்து -தொடங்கி -நடந்து வருகிற- ஸ்ரீ திரு மந்திர பிரதிபாத்யமான நவவித சம்பந்த யுக்தனான-
சர்வ ஸ்மாத் பரனை -என்றாகவுமாம்-

புளிங்குடிக்கே கண்டு –
ஸ்ரீ திருப் புளிங்குடி கிடந்தானே -என்னும் படி-ஸ்ரீ திருப் புளிங்குடியிலே கண்டு
என் மனக்கே -என்னுமா போலே ஸ்ரீ புளிங்குடிக்கே -என்று இருக்கிறது –

எனக்கு எல்லா வுறவின் காரியமும் –
குடி குடி வழி வந்து ஆட்செய்யும் தொண்டர் -என்றும்
வழி வருகின்ற அடியர் -என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர் -என்றும்-சொல்லும்படியான எனக்கு
ப்ராதுஸ் சிஷ்யச்ய தாஸ்ய-என்னும்படி -சர்வவித பந்துத்வ காரியமும்-
விகல்பமாக -ஏதாவது ஒரு வழியில் -பரதன் பிரார்த்தனை -எல்லா உறவின் காரியமும் வேணும் -என்கிறார் ஸ்ரீ ஆழ்வார்
தாயே தந்தை என்றும் தாரமே மக்கள் என்றும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –1-9–

தண்டற நீ செய்தருள் என்றே யிரந்த –
தண்டு -விளம்பம்-விளம்பம் இன்றிக்கே -என்னுதல்
பரப்ரேரிதனாய் அன்றிக்கே -என்னுதல் –
இவற்றில் ஒன்றிலும்-இடை விடாமல்-தடை அற தேவர் நடத்தி அருள வேணும் என்று அர்த்தித்து -என்னுதல் –

அதாவது –
சோதிவாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்றும்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும்
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம்கொள் மூ வுலகும் தொழ இருந்து அருளாய் -என்றும்
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -என்றும்
நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் -என்றும்
காய்சினப் பறவை ஊர்ந்து -காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டு-ஏந்தி எம் இடர் கடிவானே -என்றும்
இம் மட வுலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே -என்றும்
இருந்திடாய் வீற்று இருந்து கொண்டே -என்றும்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்
மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க-நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -என்றும்
இப்படி
ஆத்ம தர்சன-பரமாத்மா -தர்சனம் –பல அனுபவ-பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்ட படி -என்கை-
இப்படி செய்து அருள வேணும் -என்று அர்த்தித்த-

சீர் மாறன் தாளிணையே –
கைங்கர்ய சம்பத்தை -யுடையவர்-என்னுதல்
பக்த்யாதி குணங்களை யுடையவர்-என்னுதல் –
ஏவம் விதராண ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –

உய்துனை என்று உள்ளமே ஓர்-
நாசத்தை விளைக்கும் துணை போல்-அன்றிக்கே-உஜ்ஜீவனத்தைப் பண்ணும் துணை என்று
மனசே-அனுசந்தித்துப் போரு-என்கிறார் –

————————————————————————

அவதாரிகை –

இதில்-சீல குணத்திலே ஆழம் கால் பட்டு ஸ்ரீ ஆழ்வார் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உம்முடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேணுமோ –நாமே பிரார்த்திதுச் செய்ய வேண்டும்படி அன்றோ
நமக்கு யுண்டான ஸ்ரீ நாராயணத்வ பிரயுக்தமான ரக்த ஸ்பர்சம் –
ஆன பின்பு நாமே உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்யக் கடவோம் -என்று
அவன் அருளிச் செய்ய
தனது பெருமை பாராதே-எனது சிறுமை பாராதே-இப்படி அருளிச் செய்வதே
இது ஒரு சீலம் இருக்கும் படியே -என்று அவனுடைய சீல குணத்திலே வித்தராகிற
ஓர் ஆயிரத்தில் அர்த்தத்தை-ஓரா நீர் வேண்டினவை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

—————————————————

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்து மை–83-

—————————————————-

வியாக்யானம்–

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன் –
ஓரா -ஓர்ந்து-அது வேணும் இது வேணும் என்று ஆராய்ந்து – நீர் அர்த்தித அவை உள்ளதெல்லாம் என்னுதல்
அன்றிக்கே
நீர் அர்த்திதவற்றை எல்லாம்-இன்னது உபகரிக்க வேணும்-இன்னது உபகரிக்க வேணும் என்று நாம் நிரூபித்து -என்னுதல்
இப்படி பந்து க்ருத்யமாய் உள்ளவற்றை எல்லாம்-நாமே அர்த்திகளாய் செய்கிறோம் –

அதுக்கு உடலாக –
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக் காட்ட-
ஸ்ரீ ராமோ நாராயண ஸ்ரீ மான் -என்னும்படி சர்வ வித பந்துத்வமும் நடத்தும் படி
நான் ஸ்ரீ நாராயண சப்த வாச்யன் அன்றோ -என்று
அத்தாலே பெரிதான தன் சர்வ வித பந்துத்வத்தைக் காட்ட -அத்தை –
ஓர் ஆயிரம் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையன்
ஸ்ரீ நாராயணன் நாங்கள் பிரான் அவனே –என்று அனுசந்தித்து –

அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் –
அதாவது –
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -என்றும்
அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -என்றும்
விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே -என்றும்
இனமேதுமிலானை அடைவதுமே-என்றும்
என் மனம் உடைவதும் அவர்க்கே ஒருங்காகவே -என்றும்
ஆகம் சேர் நரசிங்கமதாகி -என்றும்
நின்ற வேங்கடம் நீண் நிலத்து உள்ளது -என்றும்
தொழுது எழுதும் என்னுமிது மிகை -என்றும்
தாள தாமரையான் -என்று தொடங்கி-நாளும் என் புகழ் கோ சீலமே -என்றும்
சீலம் எல்லை இலான் -என்றும்
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் அருள் உண்டு – கிருபை –

அந்த கிருபை –
மாட்டி விடும் நம் மனத்து மை –
நம்முடைய அஞ்ஞானத்தை நிச்சேஷமாகப் போக்கும் –

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று பிற்காலிக்கிற கலக்கத்தை
சீல குண பிரகாசத்வத்தாலே சேஷியாதபடி நசிப்பிக்கும் –
சாமான்யமான அஞ்ஞானம் ஆகவுமாம்-

————————————————

அவதாரிகை –

இதில் -விலஷண விக்ரஹ உக்தனானவனை காண-ஆசைப்பட்டு கூப்பிடுகிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ் – சீலாதிகனாய் -அதுக்கு ஊற்றுவாயான ஸ்ரீ பிராட்டியோடு நித்ய சம்யுக்தனாய் –
இரண்டு இடத்திலும் அழகு பெற தரித்த ஸ்ரீ ஆழ்வார்களை யுடையனான-ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று
தாமும் தம்முடைய கரண க்ராமங்களுமாக விடாய்த்துக் கூப்பிட தூணிலே தோற்றி சிறுக்கனுக்கு உதவினாப் போலே
மானசமாகத் தோற்றி தன் குணங்களை அனுபவிப்பிக்க
அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற -மையார் கரும் கண்ணியில் அர்த்தத்தை
மையார்கண் மா மார்பில் மன்னும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத வுய்யுமே இன்னுயிர்–84-

———————————————-

வியாக்யானம்–

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை –
அஸி தேஷணையான லஷ்மி-வஷஸ் ஸ்தலத்திலே நித்ய வாசம் பண்ணும்படியாக
அத்தாலே ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-

கையாழி சங்குடனே காண வெண்ணி –
அச் சேர்த்தியை காத்தூட்ட வல்ல ஸ்ரீ ஆழ்வார்கள் உடன் அனுபவிக்க எண்ணி –
இத்தால் – மையார் கரும் கண்ணி -என்று தொடங்கி-உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -என்று
முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –
வைதேஹீம் லஷ்மணம் ராமம் நேத்ரைர நிமிஷை ரிவ-என்றும்
அவஷ்டப்ய சதிஷ்டந்தம் ததர்சத நுரூர்ஜிதம் -என்னும் படி-ஆயிற்றே அபேஷிததது

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் –
யகாவத்தான பிரேமத்தோடே கூப்பிட்டு அப்படியே கண்டு ஹ்ருஷ்டரான –
அதாவது
கண்ணே உன்னைக் காணக் கருதி -என்று தொடங்கி -நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பன் -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்று தொடங்கி-நரசிங்கமகதாய உருவே -என்றும் –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு -என்று தொடங்கி -அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -என்றும்
உலகம் அளந்த அடியானை யடைந்தேன் அடியேன் உய்ந்த வாறே -என்றும்-
இவற்றாலே அவற்றை வெளி இட்டார் -என்கை-

மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர் –
இப்படி பகவத் விஷய பக்தியை உடைய ஸ்ரீ ஆழ்வார் திருநாமத்தை அனுசந்திக்கவே
உஜ்ஜீவிக்கும் -விலஷணமான ஆத்ம வஸ்து –

———————————————————

அவதாரிகை –

இதில் -ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்ட ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்ப் பிறந்த அனுபவம் மானஸ அனுபவம் ஆகையாலே-அவனை பாஹ்ய கரணங்களாலே அனுபவிக்க வேணும்
என்று ஆசைப் பட்டு-அப்போதே அது கிடையாமையாலே சிதில சித்தராய்
அவன் குண சேஷ்டிதாதிகளுக்கு ஸ்மாரகமான லௌகிக பதார்த்தங்களைக் கண்டு அவ்வழியாலே
ஸ்மார்யமாணமான அவன் குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமல் இப்படி ஸ்மாரக பதார்த்தத்தாலே தாம் ஈடுபட்டுச்-செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற -இன்னுயிர் சேவலில் அர்த்தத்தை
இன்னுயிர் மால் இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் -பின்னையவன்
தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85

——————————————————-

வியாக்யானம்–

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று –
கீழில் திருவாய் மொழியில் ஸ்ரீ நரசிங்கமதாய உருவே -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்றும்
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து -என்றும் அருளிச் செய்தவை –
மானஸ சாஷாத்காரம் மாத்ரமாய்-ப்ரத்யஷ சாஷாத்காரம் அல்லாமையாலே
இத்தசையில் எனக்குத் தாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சாஷாத் கரித்தது மானஸ ஞான விஷயம் என்று –

கண்ணால் அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் –
சஷூர் விஷயமாக அவனை தர்சிக்க எண்ணி அது லபியாமையாலே பும்ஸ்த்வம் குலைந்து
ஸ்த்ரீத்வ பத்தியைப் பஜித்து-

பின்னையவன் தன்னை நினைவிப்ப வற்றால் –
இப்படி-ஸ்த்ரீத்வ பத்தியை பஜித்த-அநந்தரம்-அவனை பிரணய கதகத ஸ்வரத்தாலும்
ரூபவத்தையாலும்-ஸ்மரிப்பிக்கும் அவற்றாலே-விகூ ஜக்பிர்வி ஹங்க மை -என்னும்படியான
பஷி சமூஹங்களாலும்-மேக சமூஹங்களாலும்-

தான் தளர்ந்த –
தான்யே வார மணீ யாநி -என்னும்படி-அசஹ்யமாய்-மிகவும் பாரவச்யத்தை அடைந்த –
அதாவது –
இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடை காள்-என்றும்
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் -என்றும்
எவம் சொல்லிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே -என்றும் –
மேற் கிளைக் கொள்ளேல் மின் நீரும் சேவலும் கோழி காள்-ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே -என்றும்
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்-நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ -என்றும்
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன்குரல்-நீ மிழற்றேல்-நின் பசும் சாம நிறத்தனன் கூட்டுண்டு நீங்கினான் -என்றும்
கண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லோடு மின்னு மேகக் குழாங்காள்-காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலன் -என்றும்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்
பண்புடை வண்டோடு தும்பிகாள் பண மிழற்றேன்மின்-புண்புரை வேல்கொடு குத்தல் ஒக்கும் நும் இன் குரல் -என்றும்
நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி -என்றும்
இப்படி
ரூப தர்சனத்தாலும்-நாம சங்கீர்த்தனத்தாலும்-பிரணய கூஜிதத்தாலும் மிகவும் தளர்ந்து
ஜீவநா த்ருஷ்டத்திலும் நசை அற்ற படி -என்கை –
இப்படி மிகவும் பாரவச்யத்தை அடைந்த –

மாறன் அருள் –
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -என்னும்படியான ஸ்ரீ ஆழ்வார் கிருபையை –

உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்-
அனுசந்திக்கும் அவர்களுக்கு-மனஸ்ஸூ- நீராய் உருகும் —
இது ஒரு கிருபாதிக்யம் இருந்தபடியே என்று-ஹிருதயம் த்ரவ்ய பூதமாகும்

மாறன் உரை உன்னும் அவர்க்கு -என்ற பாடம் ஆன போது
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுசந்திக்கப் புக்கால்-இதுவும் ஒரு ஸ்ரீ ஸூக்தியே என்று
மனஸ்ஸூ த்ரவ்ய பூதமாம் –
இவை ஒன்பதனோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே -என்றத்தை பின் சென்ற படி என்றாகவுமாம் –

———————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ ஆழ்வார் உடைய அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தான வித்தராம் ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
ஸ்மாரக பதார்த்தங்களைக் கண்டு நோவு பட்டு செல்லா நிற்கச் செய்தே
இருந்ததும் வியந்தில் தடுமாறாகக் கலந்த கலவி ஸ்ம்ருதி விஷயம்மாக தரிக்க
அத்தாலே
பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை அனுசந்தித்து ப்ரீதராய்ச் செல்லுகிற -உருகுமால் நெஞ்சத்தில் -அர்த்தத்தை
உருகுமால் என் நெஞ்சம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-

என்னால் -என் நா என்றுமாம்

———————————————-

வியாக்யானம்–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி –
ஹ்ருதயா ந்யாமமன் தேவ ஜனச்ய குணவத்தயா-என்னும்படி உன்னுடைய தாழ்ந்த செயல்களை அனுசந்தித்து
என்னுடைய மனசானது த்ரவ்ய த்ரவ்யம் போல் உருகா நின்றது –

பெருகு மால் வேட்கை எனப் பேசி –
அதுக்கு மேலே-அபி நிவேசமும் மிக்குவாரா நின்றது என்று அருளிச் செய்து —

மருவுகின்ற இன்னாப்புடன் –
கீழே-ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்டு அந்த அனுவ்ருதமான வெறுப்போடு-

அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் –
அவனுடைய-இருத்தும் வியந்திலே-அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை-திரு உள்ளத்திலே பொருந்த அருளிச் செய்த-

அதாவது –
உருகுமால் நெஞ்சம் -உயிர் பாட்டாய்
அத்தைப் பின் சென்று
நினை தொறும்-என்று தொடங்கி – நினைகிலேன் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே -என்றும்
நீர்மையால் கார் முகில் வண்ணன் தன் கலவம் அறிகிலேன் -என்றும்
அறிகிலேன் –சிறிய என் ஆர் உயிர் உண்ட திருவருளே -என்றும்
திருவருள் செய்பவன் போலே –கரு வளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே -என்றும்
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும் –என் கண்ணன் என்றவன் காட்கரை யேத்துமே -என்றும்
என் ஆர் உயிர் கோள் உண்டே –காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் -என்றும்
கோள் உண்டான் அன்றி ஆளன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே -என்றும்
தெய்வ வாரிக்கு இங்கு எனது உயிர் பட்டது அங்கு ஆர் உயிர் பட்டது -என்றும்
வாரிக் கொண்டு பருகினான் -கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே -என்றும்
இப்படி
அவன் தாழ நின்று பரிமாறின சீலாதி குணங்களிலே சிதில அந்த கரணராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தி -என்கை –

இப்படி ஈடுபாட்டை யுடையராய் அருளிச் செய்த இச் சொல்லை –
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு –
என்னுடைய நா வானது-எவ்விடத்து-சொல்லாது இருப்பது –

எல்லா விடத்திலும்-நாவினால் நவிற்று –ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்னுதல் –

அன்றியே
என் நா சொல்லாது இருப்பது எங்கு -என்று பாடமாய் –
இதில்-ரசஞ்ஞனான என்னாலே-சொல்லப் படாது இருப்பது எத்தசையிலே எங்கனே-என்றது ஆகவுமாம் –
எல்லா தசையிலும் அனுசந்தியாது இருக்க ஒண்ணாது-என்றபடி –

—————————————————————————————————–

அவதாரிகை –

இதில் வடிவு அழகு பற்றாசாக தூது விட்டு அருளின திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானமாக மாத்ரமாக சென்ற இடத்தில் பாக்ய வைகல்யத்தாலே
குண அனுபவத்தால் வந்த ப்ரீதி கீழ்ப்பட்டு
அப்ரீதி அம்சமே தலை எடுத்து அவனுடைய சௌந்தர்யத்தாலே அபஹ்ருத சித்தராய்
அவ் வழகைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் -என்று கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிற
எங்கானலில் அர்த்தத்தை-அருளிச் செய்கிறார் எம் காதலுக்கு அடி-இத்யாதியாலே -என்கை –

———————————————–

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–87-

——————————————–

வியாக்யானம்–

எம் காதலுக்கு அடி –
என்னுடைய பிரேமத்துக்கு ஹேது –

மால் ஏய்ந்த வடிவு அழகு என்று –
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப அனுபந்தியாய் அனுரூபமான விக்ரஹ சௌந்தர்யம்-என்று –

அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் –
அத்தசையில் அவன் சௌந்தர்யமே பற்றாசாக -ஆலம்பனமாக – அவ்விடத்தில்
அவன் விஷயமாக ஸ்ரீ திரு மூழிக் களத்து உறையும் அவன் விஷயமாக

எங்கும் உள்ள புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன்-
யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்னும்படி சர்வ திக்குகளிலும் உண்டான பஷி சமூஹத்தை
தம்முடைய பிராண ரஷக அர்த்தமாக தூத பரேஷணம் பண்ணும் ஸ்ரீ ஆழ்வார் –

அதாவது –
செங்கால மட நாராய் -என்று தொடங்கி –
என் குடக் கூத்தர்க்கு என் தூதாய் -என்றும் அமர் காதல் குருகினங்காள் -என்று தொடங்கி
தமரோடு அங்கு உறைவாருக்கு தக்கிலமே கேளீரே -என்றும் –
தக்கிலமே கேளீர்கள் -என்று தொடங்கி-கொக்கினங்காள் குருகினங்காள் செக்கமலத் தலர் போலும்
கண் கை கால் செங்கனிவாய்-அக்கமலத்திலை போலும் திருமேனி யடிகளுக்கு -என்றும் –
திருமேனி யடிகளுக்கு என்று தொடங்கி -மாதரைத் தன மார்பகத்தே வைத்தார்க்கு -என்றும்
திரு மூழிக் களத்து உறையும் பங்கயச் சுடர் பவள வாயனைக் கண்டு -என்றும்
புனம் கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கு -என்றும் –
பூம் துழாய் முடியார்க்கு -என்று தொடங்கி-தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீர் -என்றும்
என் அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கு -என்றும்
இப்படி
பூம் துழாய் முடியார்க்கு-என்னும் அளவும்
வடிவு அழகு பற்றாசாக பல பஷிகளைத் தூது விட்டார் -என்கை-

நம் பிழையும்-சிறந்த செல்வமும்-படைத்த பரப்பும்-தமரோட்டை வாசமும்
மறப்ப்பித்த
ஷமா-தீஷா-ஸாரஸ்ய சௌந்தர்யங்களை-யுணர்த்தும்
வ்யூஹ-விபவ-பரத்வத்வய-அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் -என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

அபராத சஹத்வாச்ச விபோஸ் சம்பந்த வைபவாத் ஐகரச்யாச்ச சௌந்தர்யாத் கடக அனயாதசே முனி -என்று
இறே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்தது

மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்-
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் ஆனவை தன்னை மனசாலே அனுசந்தித்தவர்களுக்கு
பிரதிபந்தங்களை தானே சேதித்துப் போகடும் –
துடர் அறு சுடர் அடி -போலே –

——————————————————

அவதாரிகை –

இதில் தூதர் வரும் அளவும் பற்றாமல் ஸ்ரீ திரு நாவாயில் போய்ப் புக வேணும் என்று
மநோ ரதிக்கிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இப்படி விட்ட தூதர் அத்தலைப் பட்டு அவனுக்கு ஸ்வ தசையை அறிவித்து மீண்டு வருவதற்கு முன்னே
பிராப்ய த்வர அதிசயத்தாலே அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ திரு நாவாயிலே போய்ப் புக்கு
அவ்வோலகத்திலே அங்கு உள்ளவர்களோடு கூட சபத்நீகனான அவனைக் கண்டு அனுபவித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –என்று மநோ ரதிக்கிற
அறுக்கும் வினையில் -அர்த்தத்தை
அறுக்கும் இடர் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்—88-

————————————————–

வியாக்யானம்–

அறுக்கும் இடர் என்று –
நம்முடைய துக்கத்தை போக்கி அருளும் என்று -வினை காரணம் -இடர் கார்யம் –

பால் அங்கு விட்ட தூதர் –
ஸ்ரீ திரு மூழிக் களத்து யுறைவார் விஷயமாக அவ் விடத்திலே விட்ட தூதர் –

மறித்து வரப் பற்றா மனத்தால் —
திரும்பி மீண்டு வந்து மறுமாற்றம் சொல்ல பற்றாத திரு உள்ளத்தாலே –

அறப் பதறிச் –
மிகவும் த்வரித்து –
இதம் ப்ரூயாச்ச மே நாதம் ஸூரம் ராமம் புன புன -என்று
ஸ்ரீ திருவடியைத் தூது போக விட்ட-அநந்தரம்-ஸ்ரீ பிராட்டி பதறினால் போலே –

செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் –
அழகிய ஸ்ரீ திரு நாவாயிலே எழுந்து அருளும்படி-எண்ணிய ஸ்ரீ ஆழ்வார் –

அதாவது –
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே -என்றும் –
திரு நாவாய் அடியேன் அணுகப் பெறுநாள் யவை கொலோ -என்றும்-
திரு நாரணன் சேர் திரு நாவாய் யவையுட் புகலாவதோர் நாள் அறியேனே -என்றும் –
திரு நாவாய் வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா –நாளேல் அறியேன்-என்றும்-
விண்ணாளன் விரும்பி யுறையும் திரு நாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொள் கண்கள் -என்றும்-
நாவாய் யுறைகின்ற என் நாரணன் நம்பி ஆவா அடியான் இவன் என்று அருளாயே -என்றும்-
தென் திரு நாவாய் என் தேவே அருளாது ஒழிவாய் -என்றும்-
திரு நாவாய் யாவர் அணுகப் பெறுவார் இனி யந்தோ -என்றும்-
திரு நாவாய் யுறைகின்ற எம்மா மணி வண்ணா அந்தோ அணுகப் பெறு நாள் -என்றும்-
இப்படி த்வர அதிசயத்தை பிரகாசிப்பித்தார் என்கை-

அது எத்தாலே என்னில் –
மையலினால் செய்வது அறியாமல் –
சௌந்தர்யத்தாலே அறிவு கலங்கி அத்தாலே பிராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே
விட்ட தூதர் வருவதற்கு முன்பே த்வரித்தார் –

இவர் பிரேம ஸ்வபாவம் இருந்த படி-என் -என்று-வித்தராய் – அருளிச் செய்கிறார் —

—————————————————————————–

அவதாரிகை –

இதில்-ஒரு சந்தையில் யுண்டான ஸ்ரீ ஆழ்வார் அபிசந்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
அறுக்கும் வினையில் பெரிய த்வரையோடே மநோ ரதித்தவர் த்வர அனுகுணமாக பிராப்ய பூமியிலே புக்கு
அவனை அனுபவிக்கப் பெறுவதற்கு முன்னே
தத் ப்ராப்தி ஸூசகமான அடையாளங்களைக் கண்டு
நோவு பட்டுச் செல்லுகிறபடியை பகல் எல்லாம் பசு மேய்க்கப் போன ஸ்ரீ கிருஷ்ணன்
மீண்டு வருவதற்கு முன்னே அவன் வரவுக்கு அடையாளமான
மல்லிகை கமழ் தென்றல் முதலான வஸ்துக்களைக் கண்டு ஸ்ரீ திரு ஆய்ப்பாடியில் இடைப் பெண்கள்
அந்த ஸ்ரீ கிருஷ்ண விரஹத்தாலே
சந்த்யா சமயத்திலே நோவு பட்டுச் செல்லுகிற துறை மேலே வைத்து அருளிச் செய்கிற
மல்லிகை கமழ் தென்றலில் அர்த்தத்தை-மல்லடிமை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

—————————————————

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன் மால்–89-

மல்லடிமை – பூர்ண அனுபவம் –
மால் -மருட்சி அஞ்ஞானம்-
தொல் நலம் -ஸ்வாபாவக பக்தி – சஹஜ பக்தி –

————————————————

வியாக்யானம்–

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க –
மல்லடிமை -சம்ருத்தமான அடிமை –பரிபூரணமான கைங்கர்யம் –
அது செய்யும் காலம் எப்போதோ என்று ஸ்ரீ சர்வேஸ்வரனை கேட்க –
நாளேல் அறியேன் -எனக்கு உள்ளன -என்று கேட்க –

அவன் சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் –
அவன்-மாலை நண்ணியிலே-மரணமானால் -என்று நாள் அறுதி இட்டு அருளிச் செய்யும்
அத்தனையும் பற்றாத-ஸ்வா பாவிகமான பக்தியாலே —

செல்கின்ற ஆற்றாமை பேசி யலமந்த மாறன் –
தமக்கு நடந்து செல்லுகிற-தரியாமையை அருளிச் செய்து அலமாப்பை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
மல்லிகை கமழ் தென்றல் -என்றும்
புலம்புறு மணி தென்றல் -என்றும்
தாமரைக் கண்ணும் கனி வாயும் -என்றும்
வாடை தண் வாடை -என்றும்
ஆ புகு மாலை -என்றும்
அவனுடை அருள் பெரும் போது அரிதால் -என்றும்
ஆர் உயிர் அளவன்றி கூர் த வாடை -என்றும்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை -என்றும்
ஊதும் அத்தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
மாலையும் வந்தது மாயன் வாரான் -என்றும்
இவை அடியாக-பாதக பதார்த்தங்களாய் உள்ள எல்லா வற்றாலும் நொந்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ ஸூக்ரீவ தர்சன அநந்தரம்- ஸ்ரீ மாருதி தர்சநாத் பூர்வம்
மத்யே ராவண ப்ரேரிரதான-ராஷசீ வசம் ஆபந்னையாய்-ஜீவிதத்தில் நசை ஆற்றாப் போலே
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்கிறார்-
அதாவது –
புகலிடம் அறிகிலம் தமியமாலோ -என்றும்
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ -என்றும்
ஆவியின் பரமல்ல வகைகளாலோ -என்றும்
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
எவம் இனிப் புகுமிடம் எவம் செய்கேனோ -என்றும்
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னை மீர்காள் ஆர் உயிர் அளவன்றிக் கூர் தண் வாடை -என்றும் –
ஆய்ச்சியற்கே ஊதும் அத தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
யாதும் ஒன்றும் அறிகிலம் வம்ம -என்றும்
என் சொல்லி உய்கேன் இங்கு அவனை விட்டு -என்றும் –
அவனை விட்டு உயிர் ஆற்ற கில்லா -என்றும்
இப்படி ஆற்றாமையை அருளிச் செய்து-முன்னாடி தோற்றாமல் அலமந்து நிலம் துழாவின ஸ்ரீ ஆழ்வார் -என்கை-

இப்படியான
மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன மால் –
அதாவது-அவனி யுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்மின் தொண்டீர் –என்று உபக்ரமித்த ஸ்ரீ ஆழ்வார் அருள் –
அஞ்ஞானத்துக்கு பிரதிபடமாக என்னுடைய அஞ்ஞானம் நிவ்ருத்தமாகும் –
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்னக் கடவது இறே –
ஆ புகு மாலைக்கு அவனுடை அருள் பெறும் போது அரிதாயிற்று –
இங்கு-என் தன மால் மாறன் அருள் மாற்றாகப் போகும் -என்று நிச்சிதம் ஆயிற்று –

————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு நாள் அவதி பிறக்க அத்தாலே அவர் பரோபதேசம் பண்ணின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
நாளேல் அறியேன் -என்று கேட்டவர்க்கு உம்முடைய த்வரை அனுகுணமாக உம்முடைய சரீர அவசானத்திலே
உம்மை ஸ்ரீ பரம பத்திலே கொடு போய் அடிமை கொள்ளக் கடவோம் –என்று நாளிட்டுக் கொடுக்க-
விலக்ஷணம் அதிகாரி -த்வரை மிக வேணுமே -ஆர்த்தி அதிகார பூர்த்தி வேணுமே —
அத்தாலே ஹ்ருஷ்டராய்-
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவன் திருவடிகளிலே
புஷ்பாத் உபகரண்ங்களைப் பணிமாறி பக்தியைப் பண்ணுங்கோள் –
அதுக்கு மாட்டாதார் –
இந்த பத்துப் பாட்டையும் பிரீதி பூர்வகமாம் படி அவன் திருவடிகளிலே வணங்குங்கோள் -என்று
சர்வரையும் தத் சமாஸ்ரயணத்தில்-அதிகார அனுகுணமாக மூட்டுகிற-மாலை நண்ணியில் அர்த்தத்தை
மால் உமது வாஞ்சை முற்றும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள் –90-

————————————————

வியாக்யானம்–

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில் சால நண்ணிச் செய்வன் எனத் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் ஆத்மாவுடன் பொருந்தி இருக்கிற
சரீரத்தின் உடைய வியோக அனந்தரத்திலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே மிகவும் கிட்டிச் செய்வன் -என்னுதல்
அன்றிக்கே
உம்மைக் கிட்டி-மிகவும் செய்வன்-என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
அந்தக் கார்யத்திலே-மிகவும் உற்று -என்னுதல் —

இப்படி செய்வன் என்று
ஸ்ரீ கண்ணபுரம் ஓன்று உடையான் -என்று அருளிச் செய்ய – தான் உகந்து –அவனைக் கொண்டு
நாள் அவதி இட்டுக் கொண்ட தாம்-ஹ்ருஷ்டராய் –

மேல் அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன் –
நாள் அவதி இட்டுக் கொடுத்ததுக்கு மேலாக ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே வந்து
அத்யா சன்னனாய் இருக்கிறவனை –

மேல் அவனை -என்று
மேலான அவனை -என்றுமாம் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு-பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று நாள் அவதி இட்டுக் கொடுத்து
அவதி பார்த்துக் கொண்டு நின்றால் போலே நின்றபடி –

சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்-
ஐஸ்வர் யாதிகளும் – சீலாதி குணங்களும்-புற வெள்ளம் இடும்படியான ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நிலையில் –

சேரும் என சீர் மாறன்-
ஆஸ்ரயிங்கோள் என்று-அனைவரையும் குறித்து அருளிச் செய்யும்
ஜ்ஞானப் ப்ரேமாதி குணங்களை யுடைய–ஸ்ரீ ஆழ்வார்-
அதாவது –
திருக்கண்ண புரத்து ஆலில் மேலால் அமர்ந்தான் அடி இணைகளை
காலை மாலை கமல மலரிட்டு –மாலை நண்ணித் தொழுது எழுமினோ என்றும்
திருக்கண்ண புரம் உள்ளி -கள்ளவிழும் மலரிட்டு -நாளும் தொழுது எழுமினோ தொண்டீர் -என்றும் –
திருக்கண்ண புரத்து அண்ட வாணன் அமரர் பெருமானை
தொண்டர் நும் தம் துயர் போக -விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும்
வானை யுந்து மதிள் சூழ் திருக்கண்ண புரம் தான் நயந்த பெருமான் –
மடப்பின்னை தன கேள்வனைத் தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும் –
திருக்கண்ண புரத்து தரணியாளன்–சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -என்றும்
திருக் கண்ணபுரத்து இன்பன் -தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் அன்பனாகும் -என்றும்
செய்யில் வாளை யுகளும் திருக் கண்ணபுரத்து ஐயன் ஆகத்து அணைப்பார் கட்கு அணியனே -என்றும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் பணிமின் -என்றும்
வேத நாவர் விரும்பும் திருக் கன்னபுரத் தாதியானை-அடைந்தார்க்கு அல்லல் இல்லையே -என்றும்
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் கல்லில் ஏய்ந்த மதிள் சூழ்
திருக் கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே என்றும் –
பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர் -இப்பத்தும் பாடி யாடிப் பணிமின் அவன் தாள்களையே -என்றும்
இப்படி
சர்வருக்கும்-சர்வாதிகராமாம்படி-சமாஸ்ரயணத்தை-அருளிச் செய்தார் -என்கை –

மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் –
அதில் துர்பல புத்திகளுக்கு-
மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு
தாள் அடையும் பிரபத்தி -அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்-
சர்வ உபாய ஸூன்யருக்கு – இப் பத்தும் பாடிடும் தண்டன் -என்று-
ஸ்ரீ கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-

ஏவம் வித வைபவ உக்தரான
சீர் மாறன் -தாரானோ -நம்தமக்குத் தாள் –
இப்படி உபதேசிக்கைக்கு உடலான-ஜ்ஞான ப்ரேமாதிகளை யுடைய ஸ்ரீ ஆழ்வார் நம்முடைய ஸ்வரூப அனுகுணமாக
திருவடிகளை உபாய உபேயமாக உபகரித்து அருளாரோ –

நம் தமக்கு –
தம்முடைய திருவடிகளிலே பிறந்து முற்றுண்டு பெற்று
முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -என்று ஆதரித்துப் போருகிற நமக்கு –

ஆகையால் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே நித்ய பிரார்த்யம் என்றபடி –

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading