ஸ்ரீ திருக் கடிகை என்னும் ஸ்ரீ சோளசிம்மபுரம் —

மூலவர்– யோக நரசிம்மர் (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்–அம்ருதவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)

உற்சவர்–  பக்த வத்ஸல பெருமாள் (தக்கான்)-பக்தோசித பெருமாள்

தீர்த்தம்–   அம்ருத தீர்த்தம் தக்கான் குளம் பாண்டவ தீர்த்தம்

விமானம்–ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்)-ஹேமகோடி விமானம் என்றும் சொல்லப்படும்.

நாமாவளி – ஸ்ரீ அம்ருதவல்லீ ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ஹாய நமஹ

காட்சி கண்டவர்கள்–ஆஞ்சநேயர், ஸப்த ரிஷிகள்

இங்கு கீழே உற்சவரும், சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற  பெரிய மலைமீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு
சக்கரங்களுடன் இலங்கும் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர்.

 ——————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -3-பாசுரங்கள் மங்களாசாசனம் –

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசை யிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. –பெரிய திருமொழி -8-9-4-

கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ.–பெரிய திருமொழி -8-9-9-

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73

————–

ஸ்ரீ பேயாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61

——————————————————————

சீரருளால் நம்மைத் திருத்தி நாம் முன்னறியாக்
கூரறிவும் தந்தடிமை கொண்டதற்கே – நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான்–108 திருப்பதி அந்தாதி-பிள்ளைப் பெருமாளையங்கார்.-

———
 
வழித்தடம்:–அரக்கோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சோளசிம்மபுரம் எனவும், சோளிங்கர் எனவும் கடிகாசலம் எனவும் வழங்கப்பெறும்.
———
யோகத்தில் கண்மூடி இருக்கும் நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண்திறந்து பார்த்து அடியார்களுக்கு அருள்புரிவதாக ஐதிகம் உள்ளது.
குறிப்பாக, கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தப்
பெருமாளைத் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். இறைவனின் திருமேனி அவயவங்களுக்குள் ஒரு போட்டி வந்ததாம்.
அவரது திருவடி, என்னிடம் தான் பக்தர்கள் சரணாகதி செய்கிறார்கள், நான்தான் பெரியவன் என்றதாம்.
திருக்கரம், நான்தான் சரண் அடைபவர்களுக்கு அபயம் அளிக்கிறேன், நானே பெரியவன் என்றதாம்.
இதுபோல் ஒவ்வொரு அவயவமும் போட்டி போட்ட நிலையில், திருமால் தீர்ப்பு தந்தாராம்,

என் கண்கள் கடாட்சம் புரிவதால் தான் பக்தன் வந்து சரணாகதியே செய்கிறான், எனவே கண்ணே மற்ற அவயவங்களை விட உயர்ந்தது என்று.

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் என்று ஆண்டாள் பாடியபடி

நரசிம்மப் பெருமாளின் திருக்கண் நோக்குக்கு இலக்காகும் பேற்றினை  நாமும் பெறுவோமாக.
————
 
முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
பாசுரம்:
 மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே – பெரிய திருமொழி (1731)
 
பாசுரம் பதவுரை:
 
மிக்கானை – சிறந்தவனும்
மறை ஆய் விரிந்த விளக்கை – வேதமாக விரிவுபெற்ற விளக்குப் போன்றவனும்
என்னுள் புக்கானை – என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனும்
புகழ் சேர் – கீர்த்தி வாய்ந்தவனும்
பொலிகின்ற பொன் மலையை – ஜ்வலிக்கின்ற பொன் மலை போன்றவனும்,
தக்கானை – தகவுடையவனும்
கடிகை தட குன்றின் மிசை இருந்த – கடிகை யென்னும் பெரிய திருமலையின் மீது எழுந்தருளியிருக்கின்ற
அக்காரக் கனியை – அக்காரக் கனியுமான திருக்கண்ணபுரத்தெம்பெருமானை
 அடைந்து உய்ந்து போனேன்-.
 
மிக்கான் – மிகுந்தவன்; ஸர்வஸ்மாத்பரன் என்றபடி. 
“மறையாய் விரிந்த விளக்கை” என்பதற்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுண்டு;
“வேறொன்றால் காணவேண்டாதே தனக்குத்தானே ப்ரகாசமாயிருப்பது;
ப்ரமாணங்களாலே அறியப் பார்க்குமன்று அவற்றாலே ப்ரகாசிக்கிற மேன்மைக்கு எல்லையின்றிக்கே யிருப்பது.” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அருளிச்செயல். 
இதனால், எம்பெருமானே மறையாய் விரிந்தவன் என்றதாகிறது. 
ஆசார்யஹ்ருதயத்தின் முதல் சூர்ணிகையில் “மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினாலருள் செய்தான்” என்றருளிச் செய்தபடியை நோக்குங்கால் மறையாய் விரிந்த விளக்கென்று அகாரத்தைச் சொல்லிற்றாக விளங்குகின்றது. 
அவ்விடத்து மணவாளமாமுனிகள் வியாக்கியானத்தில் அகாரபரமாகவே தெளிவாக வியாக்கியானம் செய்தருளப்பட்டிருக்கிறது. 
(எல்லா வாக்குக்களும் அகாரமே) என்கையாலே, அகாரந்தானே நான்மறைகளாகப் பரம்பிற்றென்ப. 
ஆக, ‘மறையாய் விரிந்த விளக்கு’ என்று அகாரத்தை சொல்லிற்றாகிலும் அகார வாச்யனான எம்பெருமானே இவ்விடத்திற்குப் பொருள்;
வாச்ய வாசக பாவஸம்பந்தத்தைப் பற்றினது ஸாமாநாதிகரண்யம். 
ஆக, இரண்டுவகையான நிர்வாஹங்களும் அறியத்தக்கன.
பொலிகின்ற பொன் மாலை = “கணபுரத்துப் பொன்மாலை போல் நின்றவன்” என்றார் பெரிய திருமடலிலும்.
தக்கான் = சோளஸம்ஹபுரமென்று வழங்கப்படுகிற திருக்கடிகைப்பதி யெம்பெருனுடைய திருநாமம்.  பரமதயாளு என்றபடி.
கடிகைத் தடக்குன்று = என்னும் வடசொல் கடிகை யெனத்திரிந்தது நாழிகை என்றபடி. 
ஒருவர் ஒரு நாழிகைப்பொழுது இத்தலத்திலுறைந்தாலும் அவர்க்கு முத்தி கிடைக்குமாதலால் இத்தலத்திற்குக் கடிகை யென்று திருநாமமென்பர். 
இது சோளதேசம் போன்று வளம்மிக்கு நரசிங்கமூர்த்தி உறைதற்கு இடமாயிருத்தல் பற்றி சோளஸிம்ஹபுரமென்று வழங்கப்படும். 
சோளஸிம்ஹராஜனது புரமென்றும் பொருள் கூறுவர்.
————-
இத்தலத்தைப் பற்றி விஷ்ணுபுராணமும் பாத்ம புராணமும் துணுக்குத் துணுக்குத் தகவல்கள் தருகின்றன.
சப்தரிஷிகளும், வாமதேவர் என்னும் முனிவரும் பிரஹலாதனுக்காக பெருமாள் காட்டின நரசிம்ம அவதாரத்தைக்
காண வேண்டுமென்ற ஆவலால் இம்மலையில் வந்து தவமியற்றத் தொடங்கினர்.
அவர்கள் ஏன் இம்மலையைத் தேர்ந்தெடுத்தனர் என்றால்
முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக்
குறித்து துதித்து பிரம்மரிசி பட்டம் பெற்றாராம்.
எனவே கடிகை நேரத்தில் தாமும் நரசிம்ம மூர்த்தியைக் காணலாம் என்ற பேரவா காரணத்தால்
இம்மலையைத் தெரிவு செய்து தவமியற்றத் தொடங்கினர்.இஃதிவ்வாறிருக்க ஸ்ரீஇராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு எழுந்தருளுந் தருவாயில்
கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து
வருவாயாக என்று கூற, அவ்விதமே ஆஞ்சநேயனும் இம்மலை வந்து சேர்ந்தார்.காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில் நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகட்கு பெருத்த இடையூறு விளைவிக்க
அவர்களொடு பொருது களைத்துப்போன ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க,
அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளுக்கு தடையற்ற நிலையை உண்டாக்குகிறார்.இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய பகவான் நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.

நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயர் ஆனந்த பஜனம் செய்து நிற்க ஆஞ்சநேயா நீ நமது முன்பமர்ந்து யோக ஆஞ்சநேயராக

மக்களுக்கு தீராத பிணிகளையுந் தீர்த்து கலியுகம் முடியும் தறுவாயில் எம்மை வந்தடைவாயாக என்றருளி மறைந்தார்.இதனால் தான் யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. இப்பிரதான கீர்த்தி அனுமனுக்கு
வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லை. கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீஹம்.எனவேதான் பக்தி ரசத்தோடு இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம்.
1) சுமார் ஒரு கடிகை (24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர்
வந்தது. கடிகை – நாழிகை அசலம் – மலை எனவே கடிகாசலமானது.
2) இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் பேய், பிசாசு, சூனியம் என்று சொல்லப்படும் அதீத நோய்கள், தீர இங்கே வந்து விரதம்
கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்லும் காட்சி
கண்கொள்ளாக்காட்சியாகும்.3) தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்ய புருஷர் இத்தலத்தில் பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை
இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார். ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே தக்கான் குளக்கரையிலமர்ந்து
காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித்துதித்து கண்ணீர் சிந்த கருட வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி
தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும்போது கோபுர வாயிலில்
தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர் சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது. இத்திருக்கடிகையில்
தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.4) சோழநாட்டைப் போன்று வளமிகுந்து நரசிம்மப் பெருமாள் உறைதற்கு இடமாதல் பற்றி சோளசிம்மபுரம் என்று அழைக்கப்படுகிறது.
கல்வெட்டுக்களும் இப்பெயரையே குறிக்கின்றன. இப்போது சோளிங்கர் என்பர்.5) சோழன் கரிகால் பெருவளத்தான் தன் நாட்டை 48 மண்டலங்களாகப் பிரித்த போது இப்பகுதியைக் கடிகைக் கோட்டம் என்னும் பெயராலேயே
குறிக்கிறான். இச்செய்தி பட்டினப் பாலையில் பேசப்படுகிறது.

6) இராமானுஜர் தமது விசிஸ்டாத்வைத வைணவக் கோட்பாடுகளை தழைக்க நியமித்த 74 சிம்மாசனங்களில் இதுவும் ஒன்று.
7) ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து இப்பெருமாளை வணங்கி நரசிம்மனின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும்,
தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார்.
அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கட்டத்தில் தானும் ஒருவனாக நின்ற புதன் (நவக்கிரகங்களில்
ஒருவன்) துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய,
துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இக்கடிகாசலத்தில்
பாண்டவதீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து
தன் சாபந்தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று புராணங்கூறும்.
8) ஸ்ரீ  தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள்  பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது பக்தியை வெளிக்காட்டிய இடம்.
இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார்.
ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே தக்கான் குளக்கரையிலமர்ந்து காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித் துதித்து கண்ணீர் சிந்த கருட வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி தந்தார்.
இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும் போது
கோபுர வாயிலில் தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர் சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது.
இத்திருக்கடிகையில் தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.
 
இவரைப் போன்று ஸ்ரீ  எறும்பியப்பா  ஸ்வாமிகள்  என்னும் ஞானியும் இங்குதான் வாழ்ந்தார்.

9) முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

10) ஸ்ரீமந் நாதமுனிகளும், திருக்கச்சி நம்பிகளும், மணவாள மாமுனியும், இராமானுஜரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

11) கி.பி. 1781ல் ஆங்கிலேயருக்கும், ஹைதரலிக்கும் நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப்போர் இத்தலத்தின் முன்பகுதியில் நடைபெற்றபோதும்
அவர்களால் இக்கோவிலுக்கு ஊறு நிகழவில்லை.

12) அஹோபில மலைதான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த இடம். மீண்டும் ஒருமுறை முனிவர்க்காக அந்த அவதாரத்தை இங்கே
மேற்கொண்டதால். தமிழகத்தில் எம்பெருமான் அமர்ந்துள்ள மலைகளிலேயே இது மிகச் சிறப்பானதாகும்.

13) ஏகசிலா பர்வதமென்றும் இதற்கு பெயர். பிரிவுகளும் சேர்க்கைகளுமின்றி ஒரே கல்லில் அமைந்த சிலைபோல் ஒரே கல்லில்
இம்மலை அமைந்திருப்பதால் ஏகசிலா பர்வதம்.

14) இதனைச் சோழசிங்கபுரம் என்று சைவர்கள் அழைப்பர். ஏனெனில்
முன்பு இத்தலத்தில் பெருமாளோடு சிவனும் சேர்ந்து கோயில் கொண்டிருந்தாராம்.

இப்போது சிவனுக்கு தனிக்கோவில் உள்ளது. தொட்டாச்சார்யார் தான் ஒரே

கோவிலில் இருந்த சிவனைப் பிரித்து தனிக்கோவில் அமைத்தவர் என்று கூறுவர்.

15. இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.- பெரிய மலையில் திருக்கோவில் 750 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. 1305 படிகள் ஏறிச் சென்று தான், யோக நரசிம்மர் அருளைப் பெற முடியும். வடக்கு நோக்கி ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுக்களும் கொண்டு மிக அழகாக கோவில் அமைந்துள்ளது. –இவரைத் தரிசித்து விட்டுத் தான் சிறிய மலையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும்.

16-யோக நரசிம்மரின் உற்சவரான அருள்மிகு பக்தோசித சுவாமி மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் இவருக்கே சிறப்பான முறையில் நடைபெறுகிறது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். 
17-சிறிய மலைக் கோவில்:- சிறிய மலையில் அஞ்சனையின் மைந்தனான அருள்மிகு ஆஞ்சநநர் சுவாமி திருக்கோவில் கொண்டுள்ளார்.
இம்மலை 350 அடி உயரமும், 406 படிகளைக் கொண்ட மலைக் கோவிலாகும்.
மலையின் மீது அரங்கநாதர், இராமர், சக்கரத்தாழ்வார்ஆகியோர் சன்னதிகளும், தக்கான் தீர்த்தக்குளமும் அமைந்துள்ளது.
இராம பக்தரான அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமாள் யோகாசனத்தில் யோக ஆஞ்சநேயராக நான்கு கரங்களில், சங்கு சக்கரங்களுடன் மேற்கு நோக்கி யோக நரசிம்ம சுவாமியை சேவித்தவாறு அருள்கின்ற காட்சியானது வேறு எங்குமே காண முடியாத தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
 
18-சிறிய மலை : பெரிய மலைக்கு எதிரில் இயற்கை அழகோடு 406 படிகள் அமைந்து அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது
எழில்மிகு யோக ஆஞ்சநேயர் கோயில். யோக ஆஞ்சநேயருக்கு நான்கு கைகள் உள்ளன.
ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம், மற்ற இருகைகளில் ஜபமாலை உள்ளது.
சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.
பேய் பிசாசு பிடித்தவர் தீராத நோயினால் வருந்துபவர்கள் இம்மலைச் சுனை(குளம்) நீரில் விதிப்படி மூழ்கிப் படிகளில் படுத்தக் கிடந்து வாயு குமாரனை நினைத்து எண்ணிய வரம் பெறலாம்.

19. பெருமாளுக்கு ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு நியமம் உள்ளது. சில தலங்களில் உண்டியல் போடுவது. சில
தலங்களில் மொட்டை. ஆனால் இங்கு பக்தர்கள் படியேறி வந்து தம்மைச் சேவிப்பதை பெருமாளே விரும்புவதாக ஐதீஹம். (இங்கு விஞ்ச் ரயில் போட
முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டு விட்டது)

20. மலை மேல் இருக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு பக்தோசித ஸ்வாமி என்ற பெயருண்டு. பக்தர்கள் உசிதப்படி அருள்பவர் என்பது பொருள்.
அடிவாரத்தில் உள்ள பக்தோசித சுவாமிக்கு தக்கான் எனப் பெயர்.
தீர்த்தத்திற்கும் தக்கான் குளம் என்பதே பெயர். திருமங்கையாழ்வார் இச்சொல்லை எடுத்தாண்டுள்ளார்.

21- அக்காரக் கனி என்றால் என்ன? இனிப்பே உருவான வெல்லமே மரமாகப் பூத்துக் காயாகி கனியாகி நமக்கு கிடைக்கப்பெற்றது போல்
சுவைமிக்க கனியாகும். அது போன்றவராம் இப்பெருமாள் (அதாவது வேண்டிய மாதிரியே வரம் கொடுப்பவர் என்பதுதான்)

22) ‘வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம்

23) கடிகாசலம் என்னும் இங்கு ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக் கனியான எம்பெருமானை சேவித்தாலே மோட்சம் சித்திக்கும் என
நூல்கள் மொழிகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்களும் இருக்கலாம். அவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து
நரசிம்மரைச் சிந்தித்தாலே போதுமென்கிறார் பிள்ளைப் பெருமாளையங்கார்.

இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் – இங்கே வந்து விரதம் கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்லும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்.
 
———-

ஸ்ரீமந்  ந்ருஸிம்ஹ வரதேஸிக பௌத்ர ரத்னம் *

ஸ்ரீனிவாஸ ஸூரி பதபங்கஜ  ராஜஹம்ஸம் *

ஸ்ரீமத் வாதூலகுலவாரிதி பூர்ண சந்த்ரம் *

ஸ்ரீமந்  ந்ருஸிம்ஹ  குருவர்யம் அஹம் ப்ரபத்யே **

பக்தர்களுக்கு அருள் பாலிப்பதன் மூலம் பல வித விந்தைகளைச் செய்வது பெருமாளின் திருக்குணம். ஸ்ரீநரசிம்ம அவதாரத்தினை நிகழ்த்தி பக்தனுக்கு அருளியவர். இந்தக் கலியுகத்திலும் பக்தனுக்குக் காட்சி அளிப்பதில் பெருமாள் சளைத்தவரல்லர் என்பதற்கு வைணவ குரு, ஆசார்யன் ஸ்வாமி தொட்டாச்சாரியாருக்கு சோளிங்கரில் அளித்த காட்சியே சாட்சி. தொட்டாச்சார்யார் வம்சாவளியில் 23ஆவது பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீ கே.கே.சி.பி. ஸ்வாமி சிங்கராச்சார், வழிவழியாக வழங்கிவரும் அந்த நம்பிக்கையைச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்.

ஸ்வாமி தொட்டாச்சார்யார் என்பவர் அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோக நரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார். பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார். இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகன ரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார். சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளிங்கருக்கு எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார். இன்றும் இது ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் விமானத்திற்குப் புண்ணிய கோடி விமானம் என்று பெயர். மூலவரின் திருநாமம் வரதராஜப் பெருமாள். பெருமாள் தன் ஒரு கையில் சக்கரமும், மறுகையில் சங்கும், மூன்றாம் கையில் தாமரையும் நான்காம் கையில் கதையுடனும் கருட வாகனத்தில் மூலவராகவே காட்சி அளிக்கிறார். அவசர அவசரமாகத் தனது பக்தன் தொட்டாச்சார்யாருக்குக் காட்சியளிக்க வந்ததால், ஒரு திருவடி கருடன் தோளிலும் மறு திருவடி கருடனின் கையிலும் இருக்கும்படியாகக் காட்சியளிக்கிறார். கருடனோ இப்பெருமாளை வணங்கினால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதைத் தன் கையில் உள்ள ஞான முத்திரையால் அறிவிக்கிறார்.

மூலவராகவும், உற்சவராகவும் இருக்கின்ற கருடன் உடலில் எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்டு காட்சியளிக்கிறார். கருடாழ்வாரின் தலைக்கு மேலொரு நாகம், காதிற்கு ஒன்று வீதம் இரு நாகம், இரு கையிலும் வளையலாக இரண்டு, மார்பில் ஒன்று, தொடையில் ஒன்று பாதத்தில் ஒன்று என மொத்தம் எட்டு நாகங்கள். காலையில் கருட வாகனத்துடன் பெருமாளைச் சேவித்தால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது. சோளிங்கரில் இந்தப் பெருமாளை வணங்கினால் குழந்தைப் பேறு, திருமண பாக்கியம், சர்ப்ப தோஷ நிவர்த்தி ஆகிய நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். இத்திருக்கோயில் சோளிங்கர் தக்கான் குளக்கரையில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயில் திருப்பணியை ஸ்வாமி தொட்டாச்சார்யார் வம்சத்தினர் தொடர்ந்து ஐந்து நூற்றாண்டுகளாகச் சிறப்புறச் செய்துவந்ததாகத் தெரிவித்த இப்பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீமுதலியாண்டான் ஸ்வாமி, செண்டை மேளம் முழங்க பெருமாள் திருமாசி உத்ராட உற்சவத்தைத் தற்போது இளைஞர்கள் பங்கு கொண்டு செவ்வனே நிகழ்த்துகிறார்கள்” என்றார்.

இதில் நிறைவு நாளான அன்று அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீஸ்வாமி தொட்டாச்சாரியார் திருக்கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பாடு கண்டருளி திருமலைக்கு (பெரியமலை) எழுந்தருளித் தாயார், பெருமாள் சந்நிதிகளில் மங்களாசாசனம் செய்தருளி- பெருமாள் சந்நிதியில் திருப்பாவை சாற்றுமறை தீர்த்த விநியோகம் நடைபெற்றன.

பின்னர் பெருமாளுடன் அலங்காரத் திருமஞ்சனம், திருமொழிச்சாற்று, தீர்த்த விநியோகம் ஆகியவை நடைபெற்றன.

மாலை 5 மணிக்கு ஸ்ரீதக்கானுடன் நான்கு வீதிப் புறப்பாடும், இரவு ஆஸ்தான மண்டபத்தில் திருவாய்மொழிச் சேவை, சாற்றுமறை தீர்த்த விநியோகம் நடைபெற்றன.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading