***– பறவைகளைத் தூதுவிடுகிற பதிகமானாலும், ஆசாரியர்களே இங்குப் பறவைகளாகக் கருதப்படுகிறார் களென்பதை இம் முதற் பாட்டில் தெளிய வைத்தருளுகிறாராழ்வார்–
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-
பதவுரை
| எம்கானல் அகம் கழிவாய் |
– |
எங்கள் உத்யானத்தில் உள்ளிருக்கிற கழியிலே |
| இரை தேர்ந்து |
– |
இறைதேடி |
| இங்கு இனிது அமரும் |
– |
இங்கே பொருந்தி வர்த்திக்கிற |
| செம் கால மட நாராய் |
– |
சிவந்த காலையுடைய அழகிய நாரையே! |
| திருமூழிக் களத்து உறையும் |
– |
திருமூழிக்களத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய் |
| கொங்கு ஆர் பூ துழாய் முடி |
– |
தேன் மிகுந்த திருத்துழாமை முடியிலே அணிந்தவனான |
| எம் குடக்கூத்தற்கு |
– |
குடக்கூத்தாடும் எம்பெருமானுக்கு |
| என் தூது ஆய் |
– |
என் தூதாய்ச்சென்று (திரும்பி வந்து) |
| அமரோடே |
– |
உன்னைச் சேர்ந்தவர்களோடுஙகூட |
| நும் கால்கள் |
– |
(எனக்காக வழிநடந்த) உங்களுடைய கால்களை |
| என் தலைமேல் |
– |
எனது தலைமீது |
| கெழுமீரோ |
– |
சேர்க்கிறீர்களா? (சேர்க்க வேணும்) |
”நுங்கால்களென் தலைமேல் கெழுமீரோ அமரோடே” என்னுமீற்றடி அமைந்த அழகை என் சொல்வோம்!
முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் தூது போகைக்கு வண்டுகளையழைக்கும்போதே “எம்மீசர் வண்ணோர் பிரானார் மாசில் மலடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே!” என்றார்.
எம்பெருமானுடைய திருவடியிணையின்கீழ்த் தம்மைச் சேர்ப்பிக்க வல்ல ஆற்றல்வாய்ந்த ஆசாரியர்களையே தூதர்களாகக் கொண்டதாய் நன்கு காட்டியருளினார்.
அப்படிப்பட்ட ஆசாரியர்கள் ஸபரிவாரராகத் தம் தலைமீது திருவடிகளை வைக்கப் பெறுவதே பெறாப்பேறு என்னுமிடத்தை முடிவான இத்தூதுபதிகத்திலே உயிராகவைத்து அருளிச் செய்கிறாராயிற்று.
எங்கனால்–என்ற விடத்து நம்பிள்ளை வீடு பரமபோக்யமானது; – “பகவத் விஷயத்தில் உபகாரகரோடு ஐகரஸ்யம் ப்ராப்தமாயிருக்க, எம் என்றது–ஒன்றைத் தம்ம சாக்கிக் கொடுத்தல்லது தரிக்கமாட்டாத உபகாரஸ்ம்ருகியாலே சொல்லுகிறது, பிறர்க்கு உபகரிக்கைக்காக வரும் மமகாரம் உத்தேச்யமாயிருக்குமிறே. தன்னை பகவத் விஷயத்துக்கு ஆக்கினவன்றே தன்லாதடங்கலும் அங்குத்தைக்கு சேஷமாயிருக்க, உபகாரஸ்ம்ருதியிறே இப்படி சொல்லுவித்தது. ஆத்ம ஸமர்ப்பணத்துக்கும் அடி இதுவிறே” என்று,
‘எம் கானல்’ என்று மமகாரம் தோற்றச் சொல்லுவது ஸ்வரூபவிருத்தமல்லா வென்று சங்வை;
ஏதாவதொன்றை ஸ்வகீயமாக்கி அத்தலைக்குக் கிஞ்சித்கரித்தாகவேண்டு மென்கிற ஆசை படியாக இங்ஙனே சொன்னதாகையாலே குற்றமில்லை யென்று பரிஹாரம்.
அகங்கழிவாய் இரை தேர்ந்து என்றது–அந்தரங்கமாய் வந்து வர்த்திக்கிறபடியைச் சொன்னவாறு,
தூதனுப்ப உங்களைத் தேடிப்பிடியாக வேண்டாதபடி அருகே வந்து வர்த்திக்கப்பெற்ற பாக்கியம் என்னே ! என்று உன்குழைந்து சொல்லுகிறபடி.
ஸ்வாபதேசத்தில் ஆசாரியர்களைத் தூது விடுவதாகச் சொல்லுகையாலே, எம்பெருமானார் திருமாளிகையிலேயே வந்திருந்து ப்ரவசநம் செய்தருளின பெரிய நம்பியைப் போன்ற ஆசாரியர்களை இங்குக் கருதுவதாகக் கொள்ளலாம்.
செங்கால மடநாராய்! என்று கால்களை விசேஷித்துச் சொல்லுகையாலே ஆசாரியன் திருவடிகளே தஞ்ச மென்கிற அர்த்தமும் காட்டப்படுகிறது.
—————–
***– திருமூழிக்களத்திலே தாமும் தாமுகந்த அடியார்களுமாயெழுந்தருளியிருக்குமிருப்பிலே நானும் வந்து அடிமை செய்யப் பெறலாகாதோ? அந்த கோஷ்டியிலே அந்வயிக்கை நான் அயோக்யனோ வென்று கேளுங்கோளென்று சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்.
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-
பதவுரை
| நுமரோடும் பிரியாதே |
– |
உங்களினத்தார்களை வீட்டுப் பிரியாமல் |
| நீரும் நும் சேவலும்ஆய் |
– |
தம்பதிகளாய்க் கொண்டு |
| அமர்காதல் குருகு இனங்காள் |
– |
கூடிக் களித்துவர்த்திக்கும்படியான ப்ரணயத்தையுடைய குருகினங்களே |
| அணி மூழிக்களத்து உறையும் |
– |
திருமூழிக்களத்திலே நித்யவாஸம் பண்ணுகிற |
| தம்மால் இழிப்புண்டு |
– |
தம்மால் உபேக்ஷிக்கப்பட்டு (அது காரணமாக) |
| எமலாரும் பழிப்புண்டு |
– |
எம்மைச் சேர்ந்தவர்களாலும் பழிக்கப்பட்டு |
| இங்கு என் |
– |
இருக்குமில்விருப்பில் என்ன ப்ரயோஜனம்? (இப்படியிருப்பதை விடமுடிந்துபோவதே நன்றல்லவா? |
| தமரோடு அங்கு உறைவார்க்கு |
– |
தம்முடைய அஸாதாரண பரிஜனத்தோடே அங்கே நித்யவாஸம் பண்ணுகிறவர்க்கு |
| தக்கிலம் ஏ |
– |
நாம் தகுந்திருக்கமாட்டோமோ? (அவருடைய அநுபவம் நமக்குத்தகாதாவென்ற) கேளுங்கள். |
[நுமரோடும் பிரியாதே] மேலே எம்பெருமானைச் சொல்லுமிடத்து “தமரோடு அங்குறைவார்க்கு” என்று சொல்லுகையாலே அவன் தமரோடு கூடி வாழுகிறப்போலே நீங்கள் நுமரோடுகூடி வாழப்பெறுகிறீர்கள். அவனுடைய ஸாம்யாபத்தி உங்கள் திறத்திலே பலித்திருப்பதுபோலே என் திறத்திலும் பலிக்கவேண்டாவோ? அவன் தன் அபிமதர்களோடே கூடி வாழுகிறப்போலவும்; நீங்கள் உங்களபிமதர்களோடே கூடிவாழுகிறாப் போலவும் நானும் என்னபிதமதனோடே கூடிவாழும்படி செய்யவேண்டாவோ? என்பது குறிப்பு.
‘குறைவாளர்காரியம் குறைவற்றார்க்குத் தீர்ககவேண்டாவே? உண்டார்க்கு பட்டினி கிடந்தார்பசி பரிஹரிக்க ப்ராப்தமிதே’ என்பது ஈடு.
மூன்றாமடியை–”அணிமுழிக்களத்துறையும் தம்மாவிழிப் புண்டு எமராலும் பழிப்புண்டு இஙகு ஏன்?” என்று அந்வயித்துப் பொருள் கொள்ள வேணும்.
திருமூழிக்களத்து நாயனார் யாத்ருச்சிகமாக ஒருகால் கலந்து கைவிட்டார். அதுவே ஹேதுவாக பந்துக்களும் கைவிட்டார்களென்னை? இப்படி அத்தலைவர்க்குமாகாதே உற்றாருறவினர்க்குமாகாதே கைவல்யம் போலே யிருக்கிற இவ்விருப்புக்கு என்ன ப்ரயோஜனமுண்டு? என்றபடி.
தமரோடு அங்குறைவார்க்கு=எம்பெருமான் என்னையுபேக்ஷிப்பதற்கு ஹேதுவில்லை; ஆனாலும் திருமூழிக்களத்திலே தன்னை யுகந்த பர்கவதர்களோடு கூடி வாழப்பெற்ற இனியைலே என்னை மறந்திருக்கினறவத்தனை என்று காட்டுவதும் இங்கு விவக்ஷிதம்.
அந்தத் தமரோடே நானும் ஒருவனாகத் திருவுள்ளம்பற்ற ப்ராப்தியில்லையோ வென்று கேளுங்கள் என்றாராயிற்று.
————
***– திருவாய்மொழியாயிரத்தினுள் அது விடுகிற பதிகங்கள் நான் கென்று சொன்னோமே; அவற்றும் ஒவ்வொரு பாட்டு உயிராக வைக்கப்படுகிறது, இப்பதிக்த்திற்கு உயிரான பாட்டு இது;
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-
பதவுரை
| தட புனல் வாய் |
– |
பெரிய ஜலாசயத்திலே |
| இரைதேரும் |
– |
இரை தேடித்திரினிற் கொக்கு இனங்காள் குருகு இனங்காள்! |
| குளிர் மூழிக்களத்து உறையும் |
– |
குளிர்ந்த திருமூழிக்களத்திலே நித்ய வாஸம் பண்ணுமவராய் |
| செம் கமலத்து அலர் போலும் கண் கைகால் |
– |
செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண் திருக்கை திருவடிகளை யுடையராய் |
| செம் கனி வாய் |
– |
சிவந்து களிர்ந்த திருப்பவளத்தை யுடையராய் |
| அக் கமலத்து இலை போலும் திருமேனி |
– |
அந்தத் தாமரையின் இலையை யொத்த திருமேனியையுமுடையரான |
| அடிகளுக்கு |
– |
ஸ்வாமிக்கு |
| தக்கிலமே கேளீர்கள் |
– |
நாங்கள் தகுந்ததிருக்கமாட்டோ மாவென்று கேளுங்கள் |
கீழ்ப்பாட்டில் தமரோடு அங்குறைவார்க்கு என்று சொன்னபடி தம்மை யுகந்த பாகவதர்களோடுண்டான சேர்த்தியில் இனிமையாலே பிரிந்தார்க்கு உயிர்தரித்திருக்க வொண்ணாதபடியான தம்முடைய வடிவழகை மறந்து நம்மை நினையாதிருக்கினறாரத்தனை;
இவ்வடிவழகைப் பிரிந்தார் தரிப்பரோவென்று அவ்வழகையறிவித்து விட்டால் வாராதிருக்கமாட்ரென்று கொண்டு செக்கமலத்தல்போலுங் கண்கைகால் செங்கனிவாய் அக்கமலத்திலைபோலுந் திருமேனியடிகளுக்குத் தக்கிலமே கேளீர்கள் என்றும்,
பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக்கை யாருக்கு–தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்றென்றுரையீரே என்றும்
வடிவழகு பற்றாசாகத் தூதுவிடுகிற பதிகமிது என்று அறிவதற்கு இப்பாட்டு நிதானாமாயிருக்கும்.
ஆசார்யஹருதயத்தில் *தம்பிழையும் சிறந்த செல்வமும் * என்ற சூர்ணையில் *தமரோட்டை வாஸம் மறப்பித்த ஸெளந்தர்யத்தை யுணர்த்தும் அர்ச்சை காலாந்தூதுக்கு விஷயம் * என்பது காட்டப்பட்டிருப்பது முணர்க.
தக்கிலமே கேளீர்கள் என்றதற்கு நம்பிள்ளை யீடு;– “நாம் ஒன்றிலே துணியும்படி அறுதியாகக் கேட்டுப் போருங்கோள். அவர் இன்னும் இதுவேணுமென்றிருந்தாராகில் ப்ராணன்களை வருந்தி நோக்கிக் கொண்டு கிடக்கவும், வேண்டாவென்றிருந்தாராகில் நரமுமொன்றிலே துணியும்படி அறுதியாகக் கேட்டு விடுங்கோள” என்று.
அதாவது, இரண்டத்தொன்று கேட்டு வந்து சொல்லுங்கோள்; இத்தலையில் அவர்க்கு அபேக்ஷையுளதென்று தெரியவந்தால் வருந்தியாகிலும் பிராணனைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறேன்;
அவர்க்கு அபேக்ஷைபில்லை, உபேக்ஷைதான் என்று தெரிய வந்தால் வேண்யுத்க்ரதனத்திலே நுணிந்த பிராட்டியைப்போலே ஏதோவொரு வழியிலே துணிகிறேன் என்றவாறு.
கொக்னிங்காள் குருகினங்காள்–குருகு என்பது கொக்கிலே ஒரு ஜாதி பேதம், குருகு–கொய்யடிநாரை என்பர்.
[அக்கமலத் திலைபோலுந் திருமேனி] கீழ் எட்டாம் பத்தில் சாயல் சாமத் திருமேனி தண்பாசடையா *என்றதையும் இங்கு நினைப்பது–
தம் பத்மதளபத்ராக்ஷம் * என்ற ஸ்ரீராமாயண ச்லோகத்தை நிர்வஹிக்குமிடத்து இப்பாசுரம் உதவியாகும். எங்ஙனேயென்னில்;
பத்ரம் என்றாலும் நம் என்றாலும் பர்யாயமாயிருக்க தளபத்ராக்ஷம் என்றது பொருந்துமோ வென்று சிலர் சங்கிப்பர்கள்;
அதற்கு ஸமாதானமாவது, *அக்ஷமிந்த்ரிகாயயோ * என்ற நிகண்டின்படி அக்ஷசப்தமானது கண்ணையும் மேனியையும் சொல்லக் கடவதாகையாலே (இரண்டுற மொழிதலால்) அவ்விரண்டு பொருளையும் இங்குக் கொண்டு
பத்மதளம் போன்ற அக்ஷத்தையுடையவர்–தாமரையிதழ் போன்று நீண்டழகிய திருக்கண்களை யுடையுவர்; பத்மபத்ரம் போன்ற அக்ஷத்தையுடையவர்–தாமரையிலை போன்று பசுமையான திருமேனியையுடையவர் என்று நிர்வஹிப்பதாம்.
எம்பெருமானது திருமேனிக்குத் தாமரையிலையை யொப்பாகச் சொல்லுவதற்கு இப்பாசுரம் ப்ரமாணமென்க.
—————-
***– சில மேகங்களை நோக்கி ‘என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் உங்களுக்கு ஏதேனும் தண்டனை நேருமோ?’ என்கிறாள்.
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-
பதவுரை
| அணிமுகில்காள் |
– |
அழகிய மேகங்களே |
| திருமூழிக்களம் என்னும் செழு நகர் வாய் |
– |
திருமூழிக்கவாமென்கிற திவ்ய க்ஷேத்திரத்திலே வர்த்திப்பவராய் |
| திருமேனி அடிகளுக்கு |
– |
சிறந்த திருமேனியையுடையரான ஸ்வாமிக்கு |
| தீ வினையேன் விடு தூது ஆய் |
– |
பாபியான நான் விடுகிற தூதாய்ச் சென்று |
| அவட்கு திருமேனி அருளீர் என்றக்கால் |
– |
பராங்குச நாயகிக்கு உமது திரு மேனியைக் கொடுத்தருளீர் என்று ஒரு வார்த்தை சொன்னால் |
| உம்மை |
– |
இவ்வுபகாரம் செய்கிற உங்களை |
| தம் திருமேனி ஒளி அகற்றி |
– |
உங்கள் வடிவிலுள்ள புகாரை மாற்றி |
| தெளி விசும்பு கடியுமே |
– |
நிர்மலமான ஆகாசத்தில் நீங்கள் வர்த்திக்கமுடியாதபடி தண்டிப்பரோ |
எம்பெருமானுக்குத் திருமேனி யடிகளென்ற ஒரு திருநாமஞ் சாத்துகிறாராயிற்று ஆழ்வார்.
வடிவழகையே நிரூபகமாகக் கொண்ட ஸர்வஸ்வாமி யென்று பொருள்.
ஸ்வரூபகுண சேஷ்டிதங்களினால் ஜகத்தையடையத் தோற்பிக்குமது ஒருபுறமிக்க, வடிவழகாலே தோற்பித்து அடிமை கொள்வது தலையாயிருக்கையாலே திருமேனியடிகள் என்கிறார்.
“அவசா ப்ரதிபேதிரே என்கிறபடியே ப்ரதிகூலர்க்கும் ஆகர்ஷகமாயிறே வடிவிருப்பது” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
கண்ணபிரான் பாண்டவ தூதனாய்த் துரியோதனனிட மெழுந்தருள, அக்கண்ணன் வருகையையறிந்த துரியோதனன் ‘கண்ணனுக்கு ஒருவரு மெழுந்து மரியாதை செய்யலாகாது’ என்று உறுதியாய் நியமித்துத் தானும் ஸபையிலே உறுதியுடமிருக்க,
கண்ணபிரான் அங்நேற வெழுந்தருளின வளவிலே, ஸபையிலிருந்த அரசர்களனைவரும் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவின் சோதியைக் கண்டு பரவசராயெழுந்துவிட, துரியோதனன் தானும் துடை நடுங்கி யெழுந்திருந்துவிட்டு,
உடனே ‘ஐயோ! நம் உறுதி தடுமாறி விட்டதே ! ஒரு மரியாதையும் செய்யக்கூடாதென்றிருந்த வுறுதி குலைந்து மரியாதை செய்யும்படியாகச் செய்துவிட்டதே இந்தத் திருமேனி யழகு !’ என்று கண்ணனையுற்று நோக்கினானாம்.
இதனைப் பெரியாவாரருளிச் செய்கிறார். சுழல் மன்னர் சூழக்கதிர்போல் விளங்கி யெழலுற்று மீண்டேயிருந்துன்னை நோக்கும் சூழலைப் பெரிதுடைத்துச் சோதனன் என்று.
தீவினையேன் விடுதூதாய்=”திருமேனியடிகள்” என்று என்னாலே பேரிடப்பெற்ற அவருடைய திருமேனி ஸர்வ ஸாதாரணமானது; எனக்கு அஸாதாரணமாயுமிருந்தது ;
அப்படிப்பட்ட திருமேனியை யிழந்து உங்கள் காலிலே விழவேண்டும்படியான பாபத்தைப் பண்ணினேனேயென்று தீவினையேன் என்கிறாள் ; எதிர்மறையிலக்கணையால் நல்வினையேன் என்றபடி ;
பாகவதர்களின் திருவடிகளியேல விழப்பெறுகை நல்வினைப் பயனன்றோ.
நான் விட்ட தூதாய் நீங்கள் திருமூழிக்களத்தேறச் சென்று அத்திருமேனி யடிகளை நோக்கி திருப்புளியடியிலே கிடக்கிற வொருத்தி உம்முடைய திருமேனியிலே ஆசைவைத்து கைகின்றாள்; அவளுக்கு உமது திருமேனியைக் கொடுத்தருளீர் என்று சொல்லுங்கோள்;
இந்த வொருவாய்ச சொல்லுக்கும் துர்ப்பிக்ஷமுண்டோ? இப்படி வாக்குதவி புரிந்தால், உம்மைத் திருமேனி யொளிசுற்றித் தெளிவிசும்புகடியுமே?=
உங்கள் வடிவிற் புகரையும் போக்கி நில்மலமான ஆகாசத்தில் நின்றும் உங்களை யோட்டி விடுவிரோ? உங்களுக்குப்ப பண்டில்லாத புகரையும் உண்டாக்குவரே யல்லது உள்ள புகரைக் கொள்ளை கொள்ள மாட்டார் என்கிறாள்.
—————————-
***– இப்பாட்டும் மேகவிடுதூது, பரமபதத்திற்பண்ணுமாதரத்தை என் பக்கலிலே பண்ணினவரன்றோ அவர்;
உங்கள் வார்த்தை கேட்டவாறே பதறியோடி வருவர்; எனக்காக வொருவார்த்தை விண்ணப்பஞ்செய்யுங்கோளென்று
பின்னையும் மேகங்களை யிரக்கிறாள் ஆறாயிரப்படியருளிசெயல் காணமின்–
”அவளுக்கருளி ரென்னவமையுமோ? இன்னாருக்கருளீரென்ன வேண்டாவோ வென்னில், யாவவொருத்தியுடைய நெஞ்சை உமக்குத் திருநாடாகக் கொண்டு நீர் உறைகிறீர் அவளுக்கு அருளீரென்று சொல்லிகோளென்கிறாள்” என்று.
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-
பதவுரை
| தெளிவிசும்பு கடிது ஒடி |
– |
நிர்மலமான ஆகாசத்திலே விரைந்து பறந்து சென்று |
| தீ வளைத்துமின் இலகும் |
– |
கொள்ளி வட்டம் போலே அழகிய மின் விளங்கப்பெற்ற |
| ஒளி முகில்காள் |
– |
அழகிய மேகங்களே |
| திரு மூழிக்களத்து உறையும் |
– |
திருமூழிக்களத்தில் நித்யவாஸஞ் செய்தருள்கின்ற |
| ஒண் சுடர்க்கு |
– |
அழகிய தேஜோராசியாயும் |
| தீ வினை யேன் மனத்து |
– |
பாபியான என்னுடைய மனத்திலே |
| தெளிவிசும்பு திருநாடு ஆ உறையும் |
– |
தெளிவிசும்பான திருநாட்டிலே பண்ணும் வியாமோஹத்தைப்பண்ணி வாத்திப்பவராயும் |
| துளி வார்கள் குழலார்க்கு |
– |
துளித்து ஒழுகின்ற மதுவையுடைய மயிர் முடியையுடையார்யுமிருக்கிற பெரியவர்க்கு |
| என் தூதுஉரைத்தல் செய்யுமின் |
– |
எனது தூதுமொழியைச் சொல்லுங்கள் |
தெளிவிசும்புகடிதோடித் தீ வளைத்து மின்னலக்கு மொளிமுகல்காள்!= ஆகாசத்திலே வேகமாக ஸஞ்சரிக்கையும், கொள்ளிவட்டம்போல மின்னல் விளங்கப்பெறுகையும் மேங்களுக்கு இயல்பு.
ஆசாரியகளை மேகமாக விலக்ஷிக்கையாலே அவர்களிடத்தும் இந்த விசேஷணம் பொருந்தும். ஆசாரியர்களுக்கு லீலாவிபூதி, நித்யவிபூதின்று ஒரு வாசியின்றி உபயவிபூதியும் ஒரு நீராயிருந்து இங்குப்போல அங்கும் ஸஞ்சரிக்க வல்லமையுண்டாதலால் அதையிட்டுத் தெளிவிசும்புகடி தோடுகை சொல்லிற்று.
மேகத்தில் மின்மின்னுவது எப்போதும் கிடையாது; நன்றாக மழை பெய்ய நிற்கும் ஸமயத்தில்தான் மின்மின்னும். தீ வளைத்து மின்னிலகுமென்றதனால் வர்ஷிக்கஸித்தமாயிருக்கிற மேகங்களென்று காட்டப்பட்டு, மஹார்த்தங்களை வர்ஷிக்க ஸஜ்ஜர்களாயிருக்கு மாசாரியர்கள் காட்டப்பட்டாராயினர்.
மேகங்களை விளிக்கிறதபோது ஒளிமுகில்காள்! என்று விளித்து, எம்பெருமானையும் ஒண்சுடர் என்ற சொல்லால் இங்குச் சொல்லியிருக்கையாலே, ஆசாரியர்கள் எம்பெருமானிற் காட்டில் வேறு பட்டவர்களல்லர் என்பதும், அவனோடு பரம ஸாம்யம் பெற்றவர்களே யென்பதும் தெரிவிக்கப்பட்டதாம்.
பரமபதத்திலே பண்ணும் வியாமோஹத்தை ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே பண்ணி எம்பெருமான் வர்த்திக்கிறானென்பது மூன்றாமடியின் கருத்து.
இங்குத் தீவினையேன் என்றது–நெஞ்சிலே விளங்கா நிற்கவும் காணபாட்டாதபடி பாபத்தைப் பண்ணினேனே யென்று நொந்து சொல்லுகிறபடி.
(துளிவார்கட் குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே) திருமுடியிலே மாலை சாத்தியிருப்பவர்க்கு என்கையாலே ரக்ஷண தீக்ஷிதர் என்பது காட்டப் பட்டது.
ஆர்த்த ரக்ஷணத்திற்கென்று தனிமாலையிட்டிருக்கு மெம்பெருமானுக்கு என் விண்ணப்பத்தைத் தெரிவிக்க வேமென்றதாயிற்று.
—————-
***– சில வண்டுகளைக் குறித்துச் சொல்லுகிறாள்–
எம்பெருமான் பகலிலே சென்று விண்ணப்பஞ்செய்யுமிடத்து உங்கள் வார்த்தை விலைச் செல்லும்படி பிராட்டி ஸன்னதியிலே வைத்துச் சொல்லுங்கோள் என்று. ‘தூதுரைத்து மறுமாற்றம் கொண்டு வாருங்கள்’ என்னாமல் “தூதுரைத்தல் செப்புமின்கள்” என்று இவ்வளவே சொல்லுகையாலே
“என்” தூதவாக்யத்தையறிவித்தால் போதும், “ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதேயென்றிருப்பவர்க்கு இவ்வளவே போதும்” என்று காட்டப்பட்டதாம்
தூமொழிவாய் வண்டினங்காள் ! =இனிய பேச்சாலே எம்பெருமானையும் வசப்படுத்திக் கொள்ள வல்லவர்கள் ஆசார்யர்கள் என்பது காட்டப்பட்டது.
தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-
பதவுரை
| தூ மொழி வாய்வண்டு இனங்காள் |
– |
தூய மொழியை வாயிலேயுடைய வண்டினங்களே |
| போது இரைத்து மது நுகரும் பொழில் |
– |
பூக்களிலே இரைத்துக்கொண்டு மதுபானம் பண்ணும் பொழில்களையுடைய |
| மூழிக்களத்து உறையும் |
– |
திருமூழிக்களத்திலே வாழ்பவராய் |
| தம்மார்வகத்தே மாதரை வைத்தார்க்கு |
– |
தமது திருமார்பிலே பிராட்டியைத்தாக்கி நிற்பவராய் பெரியவர்க்கு |
| என்வாய் மாற்றம் |
– |
என் வாய்ப்பாசுரமான |
| தூது உரைத்தல் செப்புதீர் எல் |
– |
தூது வாக்யத்தைச் சொல்லப் பார்த்தீர்களாகில் |
| சுடர் வளையும் கனையும் |
– |
(எனது) அழகிய கைவனைகளையும் சேலையையும் பற்றி |
| தூது உரைத்தல் செப்பு மின்கள் |
– |
தூதுக்குப் பாசுரமாகச் சொல்லுங்கோள் |
எம்பெருமானுறையும் திருமூழிக்களம் எப்படிப்பட்டதென்ன, போதிரைத்து மது நுகரும்பொழில்களை யுடையது என்கிறார்; புஷ்பவிகாஸதசையில் ஹர்ஷத்தாலே கோலாஹலம் பண்ணிக் கொண்டு உங்களுக்கு மதுபானம் பண்ணலாம்படியான சோலைகளையுடையது என்றபடி.
என் காரியத்திற்காகவே நீங்கள் போகவேண்டா; போமிடத்தில் உங்கள், காரியமும் ஸித்திக்குமென்று காட்டுகிறவிதனால்–ஆசாரியர்களுக்கு சிஷ்யோஜ்ஜீவனக்ருத்யம் ஸ்வார்த்தமேயொழிய பரார்த்தமன்று என்பது காட்டப்பட்டதாம்.
மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு=நீங்கள் சொல்லுமளவே வேண்டுவது; உங்கள் வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருக்கவும், கேட்டுக் கொண்டாடுகைக்கும் அருகே புருஷகாரஸம்பத்தில் குறையில்லை யென்றடி.
தூதுரைத்தல்செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே=இதற்கு இரண்டு படியாகப் பொருள் நிர்வஹிப்பர்;
நீங்கள் தூதுவிண்ணப்பம் செய்வதானால் எது விஷயமாகச் சொல்ல வேணும் தெரியுமோ? என்னுடைய கைவளையையும் சேலையையும் பற்றிச் சொல்லுங்கோள்– இவை சிதிலமானபடியைச் சொல்லுங்கோள் என்பதாக வொரு நிர்வாணம்.
நீங்கள் தூது சொன்ன மாத்திரத்திலே எனக்குக் கைவளையும் சேலையும் ஆம்–நான் பேறு பெற்றேனாவேன் என்பதாக மற்றொரு நிர்வாஹம்.
—————–
***– சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்–எம் பெருமானைக்கண்டு, நீர் சிலரோடே கலந்து அவர்களைத் துறந்து அதுவே புகழாக வீற்றிருக்குமிவ்விருப்பு தருமோமென்று சொல்லுங்கோள் என்கிறாள்.
சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-
பதவுரை
| படர் பொழில்வாய் குருகு இனங்காள் |
– |
பரந்து சோலையகத்தே வாழ்கிற குயிலினங்களே |
| சுடர் வளையும் கலையும் கொண்டு |
– |
(எனது) அழகிய கைவளையையும் சேலையையும் கைக்கொண்டு |
| அருவினையேன் தோள் துறந்த |
– |
போக்கவரிய பாவஞ்செய்த என்னை விட்டுப்பிரிந்த |
| படர் புகழான் |
– |
பரந்த புகழையுடையவனும் |
| பங்கயம் கண் |
– |
செந்தாமரைக்கண்ணனும் |
| சுடர்பவளம் வாயனை கண்டு |
– |
அழகிய பவழம்போன்ற வாயையுடையவனுமான எம்பெருமானைக் கண்டு |
| எனக்கு |
– |
எனக்காக |
| ஒரு நாள் |
– |
ஒரு கால் |
| ஓர் தூய் மாற்றம் ஒன்று பணியீர் |
– |
ஒரு நல்வார்த்தை சொல்ல வேணும். |
சுடர் வளையுங்கலையுங்கொண்டு அருவினையேன் தோற்துறந்த படர்புகழான் என்கையாலே – அடியார்களை இப்பாடு படுத்துவதையே தனக்குப் பெரும்புகழாக நினைத்திருப்பவர் என்றதாகிறது.
தன்பாலீடுபட்டவர்களை மற்றொன்றுக்கு ஆகாதபடியாக்கிக் கொள்ளுகைதானே எம்பெருமானுக்குப் படர்புகழ்.
இப்புகழோடே திருமூழிக்களத்திலுறையும் பெருமான் பங்கயக்கண்சுடர் பவளவாயன்–இவ்வழகையநுபவித்தவன் பிரிந்து ஆறியிருப்பளோவென்று சொல்ல வேணுமென்பது கருத்து.
—————–
***– அவருடைய வடிவழகுக்கு என்ன அபாயம் நேருகிறதோவென்று அஞ்ச வேண்டாதபடி. ஸீரக்ஷிதாமாக வொரு திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருந்தார்;
இனி நம்முடைய ஆர்த்தி தீர்க்குமத்தனையே வேண்டுவது; ஆன பின்பு என்னுடைய ஆர்த்தியை அறிவியுங்கோளென்று சில வண்டுகளையும் தும்பிகளையுங்குறித்துச் சொல்லுகிறான்.
ஆறாயிரப்படி காண்மின்; – “வண்டினங்காள் தும்பிகாள்! உன்னழகைக் காணப்பெறாதே அவளிழந்துபோமித்தனையோ வென்று சொல்லிகோளென்கிறான்” என்று.
எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-
பதவுரை
| இரு பொழில் வாய் |
– |
பெரிய சோலையிலே |
| இரை தேர்ந்து |
– |
இரையான மதுவைத்தேடிக் கொண்டு |
| மனக்கு இன்பம் பட மேவும் |
– |
மனதுக்கு இனிமையுண்டாம்படி கலந்துவர்த்திக்கிற |
| வண்டு இனங்கன காள் தும்பிகாள் |
– |
வண்டுகளே ! தும்பிகளே ! |
| கனம் கொள் திண் மதின் புடை சூழ் |
– |
கனத்துத் திண்ணிய மதிவாலே சுற்றும் சூழப்பட்ட |
| திருமூழிக்களத்து |
– |
திருமூழிக்களத்திலே வாழ்பவராய் உறையும் |
| புனம் கோள் கரியா மேனி |
– |
தன்னிலத்தில் வளருகிற காயாம்பூப் போன்ற மேனி நிறத்தையுடையவராய் |
| பூ துழாய் முடியார்க்கு |
– |
பூந்துழாயை முடியிலே அணித் துள்ளவரான பெரியவர்க்கு |
| எனக்கு ஒன்று பணியீர்கள் |
– |
எனக்காக வொரு வார்த்தை சொல்லவேணும். |
எனக்கு ஒன்று பணியீர்கள்=அத்தலையில் சென்று எனக்காக வொருவார்த்தை சொல்லுங்கோள; நீங்கள் ஒரு வார்த்தை சொல்லாவிடில் முடியும்படியான நிலைமையன்றோ என்னுடையது, [இரும்பொழில்வாய் இத்யாதி] நீங்கள் மாத்திரம் இன்புற்றிருந்தால் போதுமோ? பிறரை வாழ்விப்பதன்றோ உங்களுடைய வாழ்ச்சி. மனக்கு–மனத்துக்கு; அத்துச்சாரியை பெறாதசொல்.
யாரிடத்திற்சென்று என்ன வார்த்தை சொல்லவேணு மென்ன; [கனக்கொள் இத்யாதி] கனத்துத் திண்ணிய மதிள்சூழ்ந்த திருமூழிக்கனத்திலே ரக்ஷணத்திற்குத் தனிமாலையிட்டிருக்கும் பெருமானுடைய புனக்கொள் காயாமேனியிலே[வடிவழகிலே] எனக்குள்ள விருப்பத்தைச் சொல்லுங்கோளென்றபடி.
—————
***– எம்பெருமானுடைய வடிவழகுதான் நினைக்க நினைக்க ஆழ்வாரை யுருக்குகின்றதென்னுமிடம் நன்கு தெரிவிக்கப்படுகிறது இப்பாட்டில்.
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-
பதவுரை
| நீர் ஏந்து இள குருகே |
– |
நீராலே யேந்தப்படுகிற இளங்குருகே |
| பூ துழாய் முடியார்க்கு |
– |
திருத்துழாயைத் திருமுடியிலே அணிந்துள்ளவரும் |
| பொள் ஆழி கையாருக்கு |
– |
அழகிய திருவாழியைக் கையிலேயுடையவரும் |
| திருமூழிக்களத் தாருக்கு |
– |
திருமூழிக்களத்தில் வாழ்பவருமான பெரியவர்க்கு |
| பூண் ஏந்து முலை பயந்து |
– |
ஆபரணமணிந்த முலைகள் வைவர்ணிய மடைந்து |
| என் இணை மலர் நீர்ததும்ப |
– |
மலர்போன்ற எனது கண்ணைகள் நீர்மல்கும்படி |
| தாம் தம்மை கொண்டு அகல்தல் |
– |
அவர்தாம் தம்முடைய திருமேனியையுங்கொண்டு அகன்று போவதானது |
| நகவு அன்று என்று உரையீர் |
– |
தருமமன்று என்று சொல்லுங்கோள் |
“தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரை” எனகிற [ஈற்றடி] வார்த்தை மிகவியத்தக்கது;
எம்பெருமான் என்னைவிட்டுப் பிரிந்து போம்போது தன்னுடைய திருமேனியை இங்கு வைத்திட்டன்றோ போயிருக்கவேண்டும்;
அந்தத் திருமேனியையுங்கொண்டு அகன்று போனாரே, இது தகவேலவென்று கேளுங்கோளென்று குருகினங்களை நோக்கிக் கூறுகின்றாள்.
உலகில் விநோதமாகப் பேசுகிறவர்கள் “நடந்தால் உடலும் கூடக்கூட வருகிறது, இதுதான் எனக்குப்பெரிய வியாதி” என்று சொலுவதுண்டு ;
இதுவொரு ஹாதஸ்பவசன்மாகக் கொள்ளப்படுகிறது. இந்த முறையில்தானுள்ளது இங்கு ஆழ்வாருடைய வாசகமும்.
‘தாம் போகவேணுமானால் தம்மை வைத்துவிட்டுப் போகவேண்டாவோ’ என்கிற இவ்வார்த்தையின் கருத்து இவ்வளவே–
அவர் இறைப்பொழுதும் பிரிந்துபோகவேதகாது என்பதாம்; அவருடைய பிரிவு ஆற்றவொண்ணாததென்பதை முதலடியால் முதலிக்கிறார்;
பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு=அவர் திருமுடியிலே திருத்துழாய் மாலை சாத்திக்கொண்டிருக்குமழகு ஒன்றுபோதுமே;
அதற்குமேல் கையுந்திருவாழியுமானவழகு “சுடராழியும் பல்லாண்டு” என்று ஆலத்திவழிக்க வேண்டும்படியன்றோவுள்ளது;
இவ்வழகுகளை நினைத்தன்றோ நான் வைவர்ணியமடைந்தும் கண்ணீர் சோர்ந்தும் நிற்பது;
இந்நிலையைச் சென்று சொல்லவேணுமென்றாளாயிற்று.
————-
***– நான் முடிவதற்கு முன்னே என்னிலைமையைத் திருமூழிக்களத்தெம்பெருமானுக்கு உரையீரென்று சில அன்னங்களையிரக்கிறாள்.
தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-
பதவுரை
| தடபுனல் வாய் |
– |
விசாலமான நீர்நிலங்களிலே |
| இரை தேர்ந்து |
– |
இரை தேடிக்கொண்டு |
| மிக இன்பம் பட மெவும் |
– |
பேரானந்தமாகச் சேர்ந்து வாழ்கிற |
| மெல நடைய அன்னங்காள் |
– |
மெல்லிய நடையையுடைய அன்னங்களே |
| மேனி மிக மெலிவு எய்தி |
– |
சரீரம் மிகவும் மெலிவடைந்து |
| மேகலையும் ஈடு அழிந்து |
– |
மேகலையும் தங்காதபடியாகி (அதற்கு மேலே) |
| என் அகமேனி ஒழியாமே |
– |
என் அந்தரங்க ஸ்வரூபம் குலையாத பழிக்கு |
| திருமூழிக்களத் தார்க்கு |
– |
திருமூழிக்களத்துறையும் பெருமாளுக்கு |
| தகவு அன்று என்று உரையீர்கள் |
– |
இப்படியுபேக்ஷிப்பது நியயாமன்றென்று சொல்லும் கோள் |
தகவன்றென்று உரையீர்கள்–மருமதத்தில் பொற்றும்படியான வார்த்தை இதுதானென்று ஆழ்வார் திருவுள்ளம்.
கருணையையே நிரூபகமாகக் கொண்டு அருளாளனென்றும் பேரருளாளனென்றும் விருதுசுமந்து திரிகிற அவர்க்குக் கருணையில்லை யென்னுங்கோ ளென்கிறாள்.
‘தகஜவ இல்லை’ என்னாதே ‘தகவு அன்று ‘ என்கையாலே–அவரிடத்திலே கருணை இல்லை யென்னப்போகாது;
கடலில் நீர் வற்றிற்று என்னவொண்ணாதப்பாலே அருட்கடலான அவரிடத்திலே கருணைவற்றிற்று என்னலாகாது;
நீர் செய்வது கருணையின் காரியமன்று என்னுங்கோள்–என்கிறாளென்றுங் கொள்ளலாம்.
எந்த அன்னங்களைக் குறித்துச் சொல்லுகிறோளோ அந்த அன்னங்களை “தடம் புனல் வாயிரைதேர்ந்து மிகவின்பம்படமேவும் மென்னடைய” என்று விசேஷிக்கிறாள். இதனால் மஹாசாரியர்களே இங்கு அன்னமாக விளிக்கப்படுகிறார்களென்பது தெரியவரும்.
தங்களுக்குப் பரம போக்யமான அர்த்தங்களைத் தேடுவதிலேயே நோக்குடையவர்களும் அதுவே பேரின்பமாக விருப்பவர்களும் நல்ல நடத்தையை யுடையவர்களுமாயிருப்பவர்களை விளித்தபடி.
தன்னுடைய இருப்பைச் சொல்லுகிறாள் மூன்றாமடியில்; உடம்புமிக மெலிந்து அரையில் துணியும் தங்காதபடியன்றோ நானிருப்பது. என் அகமேனியொழியாமே–இதற்கு ‘உரையீர்கள்’ என்பதனோடே அந்வயம்.
‘என் அகமேனியொழியாதே யீர்கள்’ –அவனுக்கு அந்தரங்கரீரமாயிருக்கிற நான் வழிவதற்கு முன்னே உரையீர்கள் என்றபடி,.
ஸகலாத்மாக்களும் எம்பெருமானுக்கு வீரமாயிரக்கச் செய்தேயும். ஆழ்வார் விசேஷித்து அவனுக்கு அந்தரங்காரீரமாகையாலே அகமெனி எனப்பட்டது.
என் அகமேனி யென்றது–அப்பெருமானுக்கு அந்தரங்கரீரமாயிருக்கின்ற என்னாத்ம ஸ்வரூபம் என்றபடி.
—————–
***– இத்திருவாய்மொழியானது தன்னைப்பயிலுமவர்கட்கு பகவத்விச்லேஷ ஹேலுவான ஸம்ஸார வியாதியையறுக்கு மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-
பதவுரை
| ஒழிவு இன்றி |
– |
நிரந்தரமாக |
| திருமூழிக்களத்து உறையும் |
– |
திருமூழிக்களத்திலே வாழ்கிற |
| ஒண் சுடரை |
– |
தேஜோமூர்த்தியான எம்பெருமானை |
| ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழி யாள் அலற்றிய சொல் |
– |
மபிரிந்து தரிக்கமாட்டாத வொரு மென்கிளிமொழித் தலைவி சொன்ன சொல்லாகவைத்து |
| வழு இல்லாவண் குருகூர் சடகோபன் உரைத்த |
– |
அன்பில் குறைவில்ல தவரான ஆழ்வார் ஆழ்ந்து அருளிர் செய்க |
| அழிவு இல்லா ஆயிரம் |
– |
நித்யவேதமான இவ்வாயிரத்தினுள் |
| இப்பத்தும் |
– |
இப்பதிகம் |
| நோய் அதுக்கும் |
– |
ஸம்ஸார வியாதியைத் தீர்த்துக் கொடுக்கும் |
திருமூழிக்களத்து ஒழிவின்றியையும் ஒண்சுடரை=எம்பெருமான் ராமகிருஷ்ண யவதாரங்கள் பண்ணியிருந்து ஒரு காலவிசேஷத்திலே தன்னடிச் சோதிக்கு எழுந்தருளியாகிறது.
அர்ச்சாவதாரம் அப்படியன்றே. ‘ஸம்ஸாரம் கிழங்கெடுத்தலல்லது பேரேன்’ என்றிருக்குமிருப்பாகையாலே அழிவின்றியுறையு மென்கிறது.
திருநாட்டில் விளங்கப்பெறாத திருக்குணங்களும் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பது இங்கே யாதலால் ஒண்சுடரை என்றது.
இரண்டாமடியில் அணிமழலைக் கிளிமொழியாள் என்றது ஆழ்வார் தம்மையன்று எம்பெருமானைப் பிரிவில் தரிக்கமாட்டாத ஸ்வபாவையாயிருப்பாளொரு பிராட்டி அவனைப் பிரிந்து அவற்றின பாசுரத்தாலே, தத்ஸத்ருசஸ்வபாவரான வண்குருகூர்ச்சடகோபன் எம்பெருமானைப் பிரிந்தலற்றின இப்பத்து என்பது ஆறாயிரப்படிய்ருளிச் செயல்.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 15, 2022 at 2:43 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply