*** கொடிய தாபத்திலே அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காளமேக வர்ஷத்தையோ எதிரிபாரிப்பது ஸஹஜந்தானே;
அதுபோல ஆழ்வாரும் தம்முடைய ஸாம்ஸாரிக தாபங்களெல்லாம் தொலையப்பெறும் ஸமயமாகையாலே இப்போது காளமேகப் பெருமாளைப் பெற்று ஸூகிக்கிறபடியைத் தெரிவித்தருளுகிறார்.
இப்பெருமாளையே மேலே எட்டாம் பாட்டில் தயரதன் பெற்ற மரதக மணித்தட மென்று திவ்ய தடாகமாகவும் அநுஸந்திக்கையாலே தாபம் அகற்றும் பெருமாளேயிவர்; இவரையொழிய மற்றொன்று கதியிலம்…..வேறுதுணையுடையோமல்லோ மென்று அப்பெருமாளைப் பற்றுகிறார்.
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-
பதவுரை
| தாள தாமைரை தடம்அணி |
– |
தாளுரத்தையுடைய தாமரைகள் நிறைந்த தடாகங்களை அலங்காரமாகக் கொண்ட |
| வயல் திருமோகூர் நாளும் மேவி |
– |
வயல்களாலே சூழப்பட்ட திருமோகூரிப்பதியை நித்திய வாஸஸ்தலமாகக் கொண்டு |
| நன்கு அமர்ந்து நின்று |
– |
மிகவும் உகப்போட அங்குப் பொருந்தி நிற்குமவனாய் |
| கமலம் கண் |
– |
செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனாய் |
| அசுரரை தகர்க்கும தோளும் நான்கு உடை |
– |
அசுரர்களை புடைக்க வல்ல நான்கு திருத்தோள்களையு முடையனாய் |
| கனி வாய் |
– |
கனிந்த திருப்பவளத்தை யுடையனாய் ஸேவை ஸாதிக்கின்ற |
| சுரி குழல் |
– |
சுருண்ட திருக்குழல் கற்றையை யுடையனாய் |
| காளமேகத்தை அன்றி |
– |
காளமேகப் பெருமாளைத் தவிர்த்து |
| மற்று ஒன்று கதி இலம் |
– |
வேறொரு துணையுடையோ மல்லோம் |
இவ்வூரிலுள்ள தடாகம் இன்றைக்கும் தாளதாமரைத் தடமென்றே வழங்கப்பெறுன்றது.
வானமாமலையிலுள்ள ஒரு சோலை * தேனமாம் பொழிலென்ற வழங்கப்பெறுதல் போல. ஆழ்வார் திருவாக்கில் வந்த சொல்லையிட்டே வழங்குதல் சிறப்புடைத்தன்றோ,
தாமரைத் தடத்தையும் வயலையும் பேசுகின்ற ஆழ்வாருடைய திருவுள்ளம் யாதெனில்,
* உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடி போலுயர்ந்து காட்ட, வரம்புற்ற கதிரிச் செநநெல் தாள் சாய்த்துத் தலைவணக்குந் தண்ணரங்கமே * என்று பெரியாழ்வார் அநுஸந்திக்கிறதற்கும் இப் பாசுரம் மூலமாயிருக்கும்,
ஆகாசமளவும் ஓங்கியிருக்கிற தாமரையைக் காணும் போது உலகளந்த சேவடியை ஸேவித்தாற் போலவிருக்கும், செந்நெற் பயிர்கள் கதிரிக்கனத்தாலே தலைவணங்கியிருக்கும் வயல் நிலையைக் காணும் போது
* நமந்தி ஸந்தஸ் த்ரை லோக்யாதபி லப்தும் ஸமுந்நதிம்* என்கிறபடியே வணக்கமே வடிவெடுத்திருக்கும் பாகவதோத்தமர்களை ஸேவித்தாற் போலவிருக்கும் என்க.
இப்படிப்பட்ட திருமோகூரிலே, நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று என்கையாலே எம் பெருமாளுக்குப் பரமபத வாஸத்திலுங்காட்டில் இப்படிப்பட்ட திவ்ய தேசங்களில் வாஸமே திருவுள்ளத்துக்கு மிகவும் இனிதாயிருக்கு மென்னுமிடம் காட்டப்பட்டதாகும்,
பரமபதத்தில் பல் விளக்குப் போலே ப்ரகாசம் குன்றியிருந்த திருக்குணங்கள் இருட்டறையில் விளக்குப் போலே ப்ரகாசிப்பது இங்கேயாகையாலே.
அசுரரைத்தகர்க்குந் தோளு நான்குடை: இப்போது அர்ச்சாவதாரத்தில் தானே ஆழ்வாருடைய அநுபவம் நிகழ்கின்றது,
தோள்களினால் அசுரரைத் தகர்த்தது விபவாவதாரத்திலாகிலும் அந்த விரோதி நிரஸநஸாமர்த்தியம் இவ்வர்ச்சாவதார நிலையிலும் ஆழ்வார்க்கு ப்ரகாசித்தமை விளங்குகின்றது.
இவ்விடத்தில் ஈடு “இவர் இப்போதறிந்த படி எங்ஙனேயென்று கேட்க, விடுகாதானாலும் தோடிட்டு வளர்ந்த காதென்று தெரியுங்காணுமென்று அருளிச் செய்தருளின வார்த்தை.’’
கரிகுழல் கமலக்கட்கனிவாய்க் காளமேகம்: ஆழ்வார் நெடுநாள்பட்ட ஸம்ஸார தாபமெல்லாம் ஆறும்படியான சொல்லமைப்பு இது.
* மைவண்ண நறுங்குஞ்சிக் குழல் பின்தாழ* என்றும்
* ’ களிவண்டெங்குங் கலந்தாற் போல் கமழ்பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று * என்றும் சொல்லும் படியான திருக்குழலொழுங்கையும்,
செவ்வித் தாமரை மலர்ந்தாற் போன்ற கடாக்ஷ வீக்ஷணத்தையும்,
உள்உள்ள அபிநிவேசத்தைக் கோட் சொல்லித் தரும் முறுவலையும் அநுபவித்துக் கூறுகிறாராயிற்று.
இப்படிப்பட்ட காளமேகப் பெருமானையன்றி வேறு வழித்துணையுண்டோ? இலம்… இல்லோம் என்றபடி.
————
* *திருமோகூரெம்பெருமானுடைய திருவடிகளல்லது வேறுபுகலுடையோமல்லோம் எந்நாளும் என்கிறாரிப்பாட்டில்
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-
பதவுரை
| ஈன் தண் துழாயிள் அலங்கல் அம் கண்ணி |
– |
பரம யோக்யமான துழாய் மாலையை யுடையனாய் |
| ஆயிரம் பேர் உடையம்மாள் |
– |
ஆயிரந் திருநாமங்களையுடைய ஸ்வாமியாய் |
| அடி நிழல் தடம் அன்றி |
– |
திருவடி நிழலாகிற பொய்கை தவிர |
| நலம் கொள் நால்மறை வாணர்கள் வாழ் திருமோகூர் நலம் கழலவன் |
– |
விலக்ஷணர்களான வைதிகர்கள் வாழுமிடமான திருமோகூர்லே திருவடிகள் பொருந்தியிருக்கப்பெற்றவனான எம்பெருமானுடைய |
| மற்று ஒன்று கதியை |
– |
வேறொரு கதியை |
| யாம் எம்மைக்கும் இலம் |
– |
யாம் ஒரு பிறப்யிலும் உடையோ மல்லோம். |
பாட்டின் தொடக்கத்திலேயுள்ள * இலங்கதி மற்றொள்றெம்மைக்கும்* என்கிற வாக்யத்திற்குப் பாட்டின் முடிவிலேயே அந்நயம்,
“ திருமோகூர் நலங்கழலவனடி நிழல் தடமன்றி யாம் இலங்கதி மற்றொன்றெம்மைக்கும்’’ என்று இயைத்துக் கொள்க.
திருமோகூர்த் திருப்பதியிலெழுந்தருளியிருக்கு மெம்பெருமாளுக்கு “ நலங் கழலவன்’’ என்றொரு திருநாமஞ் சாத்துகிறாராழ்வார்.
நலங்கழலவன்… நன்மைமிக்க திருவடிகளை யுடையவன் என்பது பதப் பொருள்.
திருவடிகளுக்கு நன்மையாவது எனனென்னில், குணமுடையாரைக் கைக்கொள்வது, தோஷம் நிரம்பியவர்களைக் கைவிடுவது என்றொரு விரதங்கொள்ளாமல் * அநாலோசித் விசேஷாசேஷ லோக சரண்ய!* என்று கத்யத்தில் ஸ்வாமி அருளிச் செய்தபடியே ’ இத் திருவடிகளுக்கு ஆகாதார்ல்லைக் என்னும்படியாக அனைவரையும் கைக் கொள்கை. “ ஆச்ர்தருடைய குணதோஷ நிரூபணம் பண்ணாத திருவடிகள்’’ என்பது ஈடு.
திருமோகூர் எப்படிப்பட்டதென்னில், நலங்கொள் நான் மறைவாணர்கள் வாழப் பெற்றது.
’ நலங்கொள்’ என்கிற அடைமொழி நான்மறைக்குமாகலாம. நான் மறைவாணர்க்குமாகலாம்.
நான் மறைக்கு ஆகும் போது அபௌருஷேயத்வம் நித்ய நிர்தோஷத்வம் முதலான நன்மைகளைக் கொண்டிருத்தல் விவக்ஷிதம்.
நான் மறைவாணர்கட்கு ஆகும் போது, வேத தாத்பரியங்களை நன்கறிந்தும் அனுட்டித்தும் அனுட்டிப்பித்தும் போருகையாகிற நலம் விவக்ஷிதம்.
————-
* * * நம்முடைய எல்லாத் துயரங்களுங் கெடுமா திருமோகூரைச் சென்று கிட்டுவோ மென்கிறார்.
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-
பதவுரை
| யாம் |
– |
அடியோங்கள் |
| அன்றி ஒருபுகலிடம் இலம் என்று என்று அலற்றி |
– |
உன்னை யொழிய வேறொரு புகலிடமுடையோ மல்லோமென்று இதையே பலகால் சொல்லியலற்றி |
| நான்முகன் அரனோடு தேவர்கள் நின்று நாட |
– |
ப்ரஹ்மருத்ரர்களோடு தேவ ஜாதிகள் நிலை நின்று ஆச்ரயிச்சு |
| வென்று |
– |
விரோதிகளைத் தொலைத்து |
| இம் மூவுலகு அளித்து உழல்வான் |
– |
இம் மூவுலகங்களையும் ரக்ஷித்து இதுவே யாத்திரையாயிருககும் பெருமானுடைய |
| நாம் நமது இடர் கெட |
– |
நாம் நம்முடைய இடர் தீரும்படி |
| திருமோகூர் |
– |
திருமோகூரிப்பதியை |
| இனி நன்று நணுகும் |
– |
இப்போது நன்றாகக கிட்டக் கடவோம். |
இத்தலத்தில் நான்முகன் சிவன் முதலான தேவர்கள் வந்து பணிகின்றார்களாம்,
அப்போது அவர்கள் சொல்லும் பாசுர மென்னெனில், “அன்றி யாமொரு புகலிடமிலம்’’ என்று பலகாலும் இதைச் சொல்லி அலற்றுகிறார்களாம்.,
அன்றி என்றது “ திருமோகூரப்பனையன்றி’’ என்றபடி.
ப்ரயோஜநாந்தர பரரான அத்தேவர்களுடைய வாயில் அநந்யப்ரயோஜநர்கள் சொல்லக்கூடியதான இப்பாசுரம் வெளிவருவதற்குத் தகுதியில்லை,
ஆயினும் தங்கள் ப்ரயோஜனம் கைபுகுமளவும் வஞ்சனையாக இப்பாசுரம் பேசுவார்களாம்.
அவர்கள் அப்படி வஞ்சகமாகப் பேசினாலும் எம்பெருமான் அவர்களுடைய அநிஷ்ட நிவாரணத்தையும் இஷ்டப்ராபணத்தையும் செய்தே நிற்பனென்கிறது ’வென்றிம் மூவுலகளித்துழல்வான்’ என்பது. வென்று என்றது, அவர்களுடைய விரோதிகளை வெனறு என்றபடி.
—————
* * * தேவரும் முனிவரும் ’இடர்கெட எம்மைப் போந்தளியாய்’ என்று பலகாலுஞ்சொல்லி யேத்தி தொடருகின்றார்களாம்,
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-
பதவுரை
| இடர் கெட போந்து எம்மை அளியாய் என்று | – | எம்மிடர் தீரும்படியாக எழுந்தருளி எம்மை ரக்ஷித்தருள வேணுமென்று பலகாலுஞ் சொல்லி |
| படர் கொள் பாம்பு அணை | – | விர்வான சேஷ சயனத்திலே |
| பள்ளி கொள்வான் | – | பள்ளி கொள்பவனான பெருமானுடைய |
| சுடர் கொள் சோதியை | – | தேஜ புஞ்ஜயமான திருமேனியை |
| ஏத்தி | – | தோத்திரம் செய்து |
| திருமோகூர் | – | திருமோகூரிப்பதியிலே |
| இடர் அடி பரவுதும் | – | நம்மிடர் கெடுமாறு அவன் திருவடிகளைத் துதிப்போம்; |
| தேவரும் முனிவரும் தொடர | – | தேவர்களும் முனிவர்களும் அநுவர்த்தித்து ஆச்ரயிக்கைக்காக . |
| தொண்டீர் வம்மின் | – | பகதர்களே! நீங்களும் வாருங்கள் |
அவர்களுக்காக எம்பெருமான் செய்வது என்னவெனில், படர் கொள் பாம்பணைப் பள்ளிகொள்வான்…* ஸூகஸூப்த, பரந்தப: என்கிறபடியே கிடந்த கிடையில் தானே அவர்களுடைய இடர் கெடும்படியாயிருப்பன், ஸங்கல்பமாத்திரத்தாலே எதையும் நிர்வஹிக்க வல்லவனாகையாலே.
’தொடர’ என்ற செயவெனெச்சத்திற்கு… தொடரும்படியாக வென்று பொருள் கொள்ளுமளவில் படர்கொள் பாம்பணைப் பள்ளி கொண்ட திருக்கோலத்திலே அவர்கள் வந்து தொடரும்படியைச் சொன்னவாறு
ஈச்சவராபிமாநிகளான தேவரும், சாபாநுக்ரஹ ஸமர்த்தர்களான முனிவரும் தாங்கள் இடர்பட்டவாறே ’இடர்கெட எம்மைப் போந்தளியாய், என்று பல்லைக் காட்டிப் பிரார்த்திப்பது தவிர வேறு அறியார்களென்கை.
இரண்டாமடியிலே சுடர்கொள் சோதியை என்றது…எம்பெருமானுக்கு இயற்கையான தேக பொலிவைச் சொல்லுகிறதன்று,
’இவர்கள் ஆபத் காலத்திலேயாகிலும் நம்மைத் தேடி வந்தார்களே! ஒரு பிரயோஜனத்தை விரும்பியாகிலும் நம்மைத் தேடி வந்தார்களே! ஸ்ன்று நீவப்பின் மிகுதியால் வடிவு புகர் பெற்ற படியைச் சொல்லுகிறது,
அன்றியே, விலஷணமான அழகையுடைய இப்பெருமாரன ஸ்வயம் ப்ரயோஜனமாகப் பற்ற வேடியிருக்க, அந்தோ! இடர் கெட நினைத்துப் பற்றப்பார்க்கிறார்களே யென்னும் பரிதாபந் தோற்றச் சொல்லுகிறபடியுமாம்.
இக் கருத்தில் ஒரு சிறு சங்கை தோன்றக்கூடும், அதாவது தேவரும் முனிவரும் இடர்கெட வேணுமென்று கோருவது ஆழ்வார்க்குப் பரிதாகஹேதுவாகிறதென்னில், ஆழ்வார் தாமும் இடர் கெட வேணுமென்று கோருகிறாரே அது கூடுமோ-
* நன்று நாமினி நணுகுதும் நமதிடர்கெடவே* என்றும்
*இடர் கெட வடிபரவுதும் தொண்டீர் வம்மினே* என்றும் சொல்லியிருக்கவில்லையோ?- இது கூடுமோ என்று.
இதற்குப் பர்ஹாரமாவது இவருடைய இடர் வேறு. அவர்களுடைய இடர் வேறு.
* ஏ ஹி பச்ய சரீராணி* என்று ராக்ஷஸர் தின்ற வுடம்பைக் காட்டி இவ்வுடம்பைப் பூண் கட்டிக் கொள்ளத் தேடுகிறவர்கள் அவர்கள்;
* அழுக்குடம்பு மிந்நின்றநீர்மை யினியாமுறாமை* என்று அவ்வுடம்பைப் கழிக்கத் தேடுகிறவர் ஆழ்வார்; ஆகவே இடரில் நெடுவாசியுண்டென்க.
————–
* * * “தெண்டீர் வம்மினே’’ என்று கீழ்ப்பாட்டிற் சொல்லியிருந்தும் மீண்டும் தொண்டீர்வம்மின்’’ என்கிறார்…
அந்தாதித் தொடைக்காகவன்று, *ஏ: ஸ்வாது ந புஞ்ஜீத்* என்றும்* இன்கனி தனியருந்தான்* என்றும் சொல்லுகிறபடியே
தொண்டர்களில் ஒருவரும் இவ்வநுபவத்தை இழக்கலாகாததென்கிற உத்கண்டையாலே மீண்டு மீண்டு மழைக்கிறபடி.
திருமோகூரை வலஞ்செய்து கூத்தாடலாம் வாருங்கோ என்றழைக்கிறார்.
அங்குறையும் பெருமானெப்படிப் பட்டவனென்னில், நஞ்சுடரொளி ஒரு தனிமுதல்வன்…
சுடரொளி மிக்க தன்வடிவழகையும் முதன்மையையுங் காட்டி நம்மை யீடுபடுத்திக் கொண்டவனென்கை.
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-
பதவுரை
| நம் சுடர் ஒளி |
– |
நாம் அநபவித்தற்குரிய தேஜோமய திவ்யமங்கள விகரஹத்தையுடையனாய் |
| ஈன் கரும்பொடு |
– |
இனிய கரும்போடு கூட |
| பெரு செந்நெல் விளைய |
– |
பெரிய செந்நெற் பயிர்கள் விளையும்படியாக |
| ஒரு தனி முதல்வன் |
– |
உலகுககெல்லாம் அத்விதீய காரண பூதனாய் |
| கொண்ட |
– |
தான் பர்கரஹித்தருளின |
| கோயிலை |
– |
ஸன்னிதியை |
| வலம் செய்து |
– |
பிரதக்ஷிணம் பண்ணி |
| அண்டம் உலகு அளந்தவன் |
– |
அண்டங்களையுடைய மூவுலகங்களையும் அளந்து கொண்டவனான எம்பெருமான் |
| இங்கு கூத்து ஆடுதும் |
– |
இங்கே கூத்தாடுவோம்; |
| அணி திருமோகூர் |
– |
அழகிய திருமோகூர்லே |
| எண் திசையும் |
– |
எட்டுத் திசைகளிலும் |
| தொண்டீர் வம்மின் |
– |
தொண்டர்களே! நீங்களும் வாருங்கள். |
அண்ட மூவுலகளந்தவன்…கீழே’ ஒரு தனி முதல்வன்’ என்பதனால் படைப்பவனென்றது,
படைத்து விட்டு விடுகை யன்றிக்கே படைத்த ஜகத்தை வலியார் அபஹரித்தால்
எல்லை நடந்து கொண்டு ரக்ஷிக்கு மவனென்கிறது அண்ட மூவுலகளந்தவனென்பதனால்,
கொண்ட கோயில்… தன் திருவுள்ளத்தாலே உகந்து பர்க்ரஹித்த திவ்யதேசமென்றபடி.
வலஞ்செய்வதும் கூத்தாடுவதும் பக்தர்களின் பணியாதலால் அது செய்யவழைக்கிறபடி.
———–
* * * …….கூத்தன்…… நடராஜனென்று பேர் பெற்ற தேவதாந்தரம் போலே கூத்தாடுகிறவனல்லன்;
நடை நடக்குமழகே கூத்தாடினாற் போலே நெஞ்சைக் கவரும் தாயிருக்குமென்ப.
இங்கு ஈட்டில் “ நடக்கப்புக்கால் வல்லாராடினாப் போலே யுருக்கை’’ என்றருளிச் செய்து உடனே
* அக்ரதா ப்ரயயௌ ராமா:* என்கிற ஸ்ரீ ராமாயணப்ராணம் காட்டப்பட்டுள்ளது.
இந்தப்ரமாணத்தில் யயௌ என்னாமல் ’ப்ரயயௌ’ என்றதனால் நடையில் விசேஷம் காட்டப்பட்டதென்று நம்பிள்ளை திருவுள்ளம்,
இந்த நடையழகு இராமபிரானிடத்திலன்றிக்கே கண்ணபிரானிடத்தும் காணலாயிருக்கையாலே கோவலன் என்கிறது :
* கானகம் படி யுலாவி யுலாவிக் கருஞ்சிறுக்குன் குழலூதின போது, மேனகையோடு திலோத்தமை யரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி, வானகம்பாடியில் வாய்திறப்பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே* என்ற பெரியாழ்வார் திருமொழியை இங்கே யோஜிப்பது.
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-
பதவுரை
| கூத்தன் |
– |
அழகிய நடையையுடையனாய் |
| வாய்த்த தண்பணை வளம் வயல் சூழ் திருமோகூர் ஆத்தன் |
– |
நெருங்கிக் குளிர்ந்த நீர் நிலங்களாலும் செழித்த வயல்களாலும் சூழப்பட்ட திருமோகூரில் எழுந்தருளியருப்பவனான ஆப்தனுடைய |
| கோவலன் |
– |
பசுக்களின் பின்னே சென்று அவற்றை ரக்ஷிக்குமவனாய் |
| குதற்று வல் அசுரர்கள் கூற்றம் |
– |
பீடையைப் பண்ணும் கொடிய அசுரர்களுக்கு மருத்யுவாய் |
| தாமரை அடி அன்றி |
– |
பாதாரவிந்தங்களைத் தவிர்த்து |
| ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவாக்கும் இன்பன் |
– |
துதி செய்கின்ற நமக்கும் தேவர்களுக்கும் இருடிகளுக்கும் ஆனந்தகரனாய் |
| மறறு அரண் இலம் |
– |
மற்றொரு ரக்ஷையுடையோ மல்லோம். |
குதற்று வல்லசுரர்கள்… ஜாதியோ அஸுரஜாதி, அதிலும் வல்லசுரர்…. வன்மையே வடிவெடுத்தவர்கள், அதற்கு மேல், குதற்று வல்லசுரர்கள்…ஸாதுக்களுக்குப் பீடைகள் செய்வது தவிர வேறு தொழிலற்றவர்கள், அப்படிப்பட்டவர்களுக்குக் கூற்றம்… மிருத்யுவாயருப்பவன் எம்பெருமான்.
ஏத்தும் நங்கட்கு மமரர்க்கும் முனிவர்க்குமின்பன்…இன்று ஆச்ரயியக்கிற நமக்கும் நித்ய ஆச்ர்தர்களானார்க்கும் இன்பனாமிடத்தில் வாசியற்றிருப்பவன். வாசியற்றிருக்கை மட்டுமின்றிக்கே, இன்பனாமிடத்தில் முந்துற முன்னம் நமக்கு இன்பனாம் என்கிற விசேஷமும் குறிக் கொள்ளத்தக்கது.
இப்படிப்பட்ட எம்பெருமான் திருமோகூராத்தான்….ஆத்தனென்றது ஆப்த னென்ற வடசொல்விகாரம்; பரமபந்து என்றபடி.
ஈட்டு ஸ்ரீ ஸூக்தி காண்மின்; “தான் தனக்கல்லாத மரணஸமயத்தில்* அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி* என்னும் பரமாப்ததமன்’’….
இப்படிப்பட்ட பெருமானுடைய தாமரையடியன்றி மற்று அரண் இலம்.. வேறு சிலரை ரக்ஷகராகவுடையோமல்லோம். இலம் இல்லோம்.
————-
* * * ……..’ மற்றில மரண்’ என்று சொல்லும்படி அவன் ரக்ஷகனாகவல்லனோ வென்னில், அவருடைய ரக்ஷகத்வமிருந்தபடி பாருங்கோளென்கிறார்
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-10-1-7-
பதவுரை
| வான் பெரு பாழ் தனி முதலா | – | வலிதாய் அபர்ச் சிந்தமாய் போக மோஷங்களை விளைப்பதாய் அத்விதீயமான மூலப்ரக்ருத தொடக்கமாக |
| அதன் வழி | அந்த வழியாலே | |
| தொல் முனி முதலா | பழைய முனிவனான ப்ரஜாபதி முதலாக | |
| சுற்று நீர் படைத்து | – | ஆவரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து |
| முற்றும் தேவரோடு உலகு செய்வான் | – | எல்லாத் தேவ ஜாதியோடுங் கூட எல்லா உலகங்களையும் உண்டாக்குமவன் எழுந்தருளியிருக்கு இடமான |
| நாம சுற்றி வலம் செய்ய | – | நாம் சுற்றி ப்ரதக்ஷிணம் பண்ண |
| நம் துயர் கடிது கெடும் | – | நம் துக்கஙகள் விரைவில் தொலைந்து போம் |
| திருமோகூர் | – | திருமோகூரிப்பதியை |
| மற்று அரண் இலம் | – | (ஆன பின்பு இத்திருப்பதி தவிர) மற்றொரு ரக்ஷகமுடையோ மல்லோம். |
வான்பெரும்பாழென்று தொடங்கி, வான் பெரும்பாழென்று மூலப்ரக்ருதியைச் சொல்லுகிறது.
பாழ் நிலமாயிருந்தால் அதில் அவரவர்களுக்கு வேண்டிய செடி கொடி பயிர்களை விளைத்துக் கொள்ளலாமன்றோ;
அது போல மூலப்ரக்ருதியானது சேதநர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளவுரிய. நிலமாயிருக்கையாலும, அது தானும் எல்லை கடந்திருப்பதாலும் வான்பெரும்பாழ் என்கிறது.
தனி என்பது பெரும்பாழுக்கு விசேஷணமாகக் கொள்ளத்தக்கது, தனி வான் பெரும்பாழென்க.
முதலாச் சுற்று நீர் படைத்து.. மூலப்பிரக்ருதி தொடக்கமாக விவரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து அதன் வழி… இவ்விதமாக யென்றபடி,
தொன்முனி யென்று நான்முகனைச் சொல்லுகிறது. “தேவாதிகளைப் பற்றப் பழையனாய் மனன சீலனான சதுர்முகன் தொடக்கமாக’’ என்பது ஈடு.
முற்றுந் தேவரோடு உலகு செய்வான்= எல்லா தேவ ஜாதி யோடுங்கூட எல்லா உலகங்களையும் உண்டாக்குபவன்.
இப்படிப்பட்ட எம்பெருமானெழுந்தருளியிருக்கிற திருமோகூரை, சுற்றி நாம் வலஞ் செய்ய நம் துயர் கடிதே கெடும்… நாம் சென்று ப்ரதக்ஷிண ப்ரணாமாதிகளைப் பண்ண நம் துயர் விரைவில் தொலையும், வழித்துணையில்லை என்று நாம் படுகிற துக்கம் தொலையுமென்கை.
———
* * -………….. வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது; அந்தத் தடாகத்தை அடியவர்களே! வந்து தொழுமின் என்றழைக்கிறார்.
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-
பதவுரை
| உயர் கொள் சோலை |
– |
உன்னதமான சோலைகளையும் |
| தயதரதன் பெற்ற மரகதம் மணி தடததினை |
– |
தசரத சக்ரவர்த்தி பெற்ற மரகத மணித் தடாகம் போன்றவனான எம்பெருமானை, |
| ஒண் தடம் அணி |
– |
அழகிய தடாகங்களையும் |
| ஒளி திருமோகூர் |
– |
அலங்காரமாக உடைத்தான அழகிய திருமோகூர்லே, |
| அடியவர் |
– |
அடியீர்கள்! |
| ஆயிரம் பெயர்கள் உடைய |
– |
ஸஹஸ்ர நாமப்ரதிபாத்யனாய் அடைந்து வந்து தொழுமின் வந்து கிட்டித் தொழுங்கோள்; |
| வல் அரக்கர் |
– |
புக்கு அழுந்த கொடிய ராக்ஷசகர்கள் புகுந்து மடியும்படியாக |
| துயர் கடிது கெடும் |
– |
கிலேசமெல்லாம் விரைவில் தொலைந்து போம் |
|
(அப்படித் தொழுதால்). |
||
ஸன்னிதிக்குளளே திகழும் தடாக மெதுவென்னில்; தயரதன் பெற்ற மரகதமணித் தடம்;-……..
தசரத சக்ரவர்த்தி இராமனைப் பெற்றானல்லன்; ஒரு மரகதத் தடாகத்தையாயிற்று பெற்றான்;
தடாகத்திற்கும் எம்பெருமாளுக்குமுள்ள பொருத்தங்கள் கீழே (8…5…1) *’ மாயக் கூத்தாவாமனா!* என்கிற பாட்டில் “ கண் கைகால் தூய செய்ய மலர்களா சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத்திருமேனி தண்பாசடையா தாமரை நீள்வாசத் தடம் போல் வருவானே’’ என்று காட்டப்பட்ன்.
*கரசரணஸரோஜே காந்தி மந்தேத்ர மீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே, ஹர்ஸரஸி * என்ற முகுந்தமாலை ச்லோகத்திலும் இப்பொருத்தம் நிரூபிக்கப்பட்டது.
பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் * உத்புல்லபங்கஜ தடாகமிவ* பீப நயந புரஸ்தே* என்கிற இரண்டு லோகங்களினால் இப் பொருத்தத்தை நிரூபித்தருளினார்.
இவற்றில் விட்டுப் போன ஒரு பொருத்தம் இப்பாட்டில் காட்டப்படுகிறது.
அதாவதென்னெனில்; உலகில் ஒரு தடாகம் வெட்டப்பட்டிருந்தால் அதில் பலரும் நீராடுதல் தீர்த்தம் பருகுதல் அனுட்டானம் செய்தல் முதலியன செய்து களிக்குமா போலே சிலர் தாமாகவே கழுத்தில் கல்லைக் கடடிக் கொண்டு அக்குளத்தில் வீழ்ந்து மடிந்து போவதையுங் காணா நின்றோமே;
இத்தன்மை தயரதன் பெற்ற மரகத மணித் தடாகத்திற்கு முண்டென்று காட்டியருளுகிறார் வல்லரக்கர் புக்கழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே என்று.
இத்தால் அரக்கர்களைப் பெருமாள் தாமாகக் கொன்று முடித்தாரல்லர்; விட்டில்கள் விளக்கிலே தாமாக விழுந்து முடிந்து போவது போல அரக்கர் தாங்களாகவே எதிரிட்டு மடிந்து முடிந்து போனார்களத்தனையென்னுமிடம் தெரிவிக்கப்பட்டதாம்.
“பெயர்களாயிரமுடைய’’ என்கிற விசேஷணம் தயரதன் பெற்ற மரகத மணித் தடமாகக் கொள்ளப்பட்ட யென்பெருமானிடத்திலே அந்வயிக்கு மென்று சிலர் கொள்ளுவார்கள்;
அவ்வளவி தூராந்வயம் அவண்டர் பக்கத்திலுள்ள வல்லரக்கர்லேயே இந்வயிக்கக் குறையில்லை.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்…. “ ஈச்வரன் ரக்ஷித்துப் படைத்த பெயர்களோ பாதி போருமாய்த்து இவர்கள் பரஹிம்ஸை பண்ணிப் படைத்த பெயர்; யஜ்ஞசத்ரு ப்ரஹ்மாத்ரு என்றாப் போலேயிறே இவர்கள் படைத்த பெயர்’’.
—————
* * *…….. நமக்கு அரணான திருமோகூரை நாம் கிட்டப் பெற்றோமென்று தம்முடைய லாபத்தைப் பேசி மகிழ்கிறார்.
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-
பதவுரை
| மணி தடத்து அடி |
– |
அழகிய தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும் |
| அசுரரை என்றும் துணிக்கும் வல் அரட்டன் |
– |
அசுரர்களை எப்போதும் நிரஸிக்கின்ற பெருமிடுக்கனுமான எம் பெருமான |
| மலர் கண்கள் |
– |
தாமரைப் பூப் போன்ற திருக்கண்களையும் |
| உறை |
– |
நித்தியவாம் பண்ணுமிடமான |
| பவளம் செவ்வாய் |
– |
பவளம் போன்ற சிவந்த அதரத்தையும் |
| பொழில் திருமோகூர் நம்முடைய நர் அரண் |
– |
சோலைவளம் மிக்க திருமோகூர்பதியாகிற நமக்கு நல்ல ரக்ஷகமான திவ்ய தேசம் அருகேயுள்ளது |
| அணிகொள் நால் தடம் தோள் தெய்வம் |
– |
அழகிய நான்கு திருத்தோள்களையும் உடைய தெய்வமாயிருப்பவனும் |
| நணித்து நாம் அடைந்தனம் |
– |
இதனை நாம் பஜிக்கப் பெற்றோம். |
தெளிந்த தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும் அப்போதலர்ந்த செந்தாமரை போலேயிருக்கிற திருக்கண்களையும் பவளம் போலே சிவந்த திருவதரத்தையுமுடையனாய் ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கவல்ல நான்கு திருத்தோள்களை உடையனாய் அத் திருத்தோள்களுக்கு இரை போரும்படியாக எதிரிட்டு வருகிற அசுரர்களைத் துணிக்குமவனான எம்பெருமான் நித்யவாஸம் செய்தருளுமிடமாய் சோலைகள் சூழ்ந்ததான திருமோகூரிப்பதியானது கட்டிற்று;
இதுவே நமக்கு ரக்ஷகம்; ரக்ஷகம் தேடி நிற்கிற நாம் கிட்டப் பெற்றோம் இத்திருப்பதியை என்றாயிற்று.
—————
* * * …….. அடியார்களின் விஷயத்தில் அபீஷ்டவிக்ரஹ பர்க்ரஹம் பண்ணி ரக்ஷித்தருளுமெம்பெருமான் வர்த்திக்கிற திருமோகூர்த் திருப்பதியின் திருநாமத்தைச் சொல்லி ஏத்துங்கோ என்று, தம்மோடு அந்வயமுடையார்க்கு உரைத்தருளுகிறார்.
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-
பதவுரை
| நமக்கு நாம் அடைந்த நல் அரன் எனறு ஸாதுக்களான தேவர்கள் |
– |
நல் அமரர் நமக்குப் புகலாக நாம் அடைந்த நல்ல ரக்ஷகமான தலம் இதுவென்று |
| எழுந்து அளிப்பான் |
– |
கிளர்ந்து ரக்ஷிக்கும் பெருமான் எழுந்தருளியிருக்குமிடமான |
| தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால் |
– |
தங்களுக்குப் பொல்லாங்கு அஞ்சி வந்தது பணிந்தால் |
| காமரூபம் கொண்டு |
– |
திருவுள்ளமான வடிவைக் கொண்டு |
| திருமோகூர் நாமமே |
– |
திருமோகூரிப்பதியின் பெயரையே |
| நமர்காள நவின்று எண்ணுமின் ஏத்துமின் . |
– |
நம்முடையவர்களே! பயின்று நினையுங்கோள், வாய் விட்டுமேந்துங்கள் |
நல்லமரர், தீமை செய்யும் வல்லசுரரையஞ்சி, நமக்கு நாமடைந்த நல்லரணென்று சென்றடைந்தால், காமரூபங்கொண்டு எழுந்தளிப்பான் என்று அந்வயிப்பது.
அசுரர்கள் எப்போதும் அமரர்கட்குத் தீங்கிழைத்துக் கொண்டே இருப்பாகளாதலால் அவர்கட்கு அஞ்சி எம்பெருமானிடம் வந்து ’ நமக்கு நாமடைந்த நல்லரண்’ ( நமக்கு அஸாதாரணமாக நாம் பற்றின விலக்ஷணமான அரண்) என்று கொண்டு வந்தடைகின்ற நல்லமரர்கட்காக, காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான்.
அடியாருடைய ஆபத் ரக்ஷணதநுரூபமாக வேண்டினபடி பர்க்ரஹிக்கும் திருமேனிக்குக் காமரூபம்.
அதைக் கொண்டு புறப்பட்டு ரக்ஷிக்குமவன் வர்த்திக்கிற திருமோகூர்.
இவ்வூர்ன் பெயரை வாயாலே சொல்லி யநுஸந்தித்து அன்பு மிகுதியினால் ஏத்துங்கோள் நம்முடையவர்களே! என்றாயிற்று.
—————
இத் திருவாய்மொழியைக் கற்கவல்லார்க்கு சரீராவஸானத்தில் வழித்துணையில்லையே என்று க்லேசப்பட வேண்டாதபடி காளமேகம் வழித்துணையாமென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிறார்.
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-
பதவுரை
| நமர்காள் ஏத்துமின் என்று தான் குடம் ஆடு கூத்தனை |
– |
எம்முடையவர்கள்! ஏத்துங்கேளென்று தானே சொல்லிக் குடக் கூத்தாடின பெருமாளைக் குறித்து |
| இவை வண் திருமோகூர்க்கு ஈத்த பத்து |
– |
இப்பத்துப் பாசுரங்களும் திருமோகூர் விஷயமாக ஸமரிப்பித்தவை; |
| குருகூர் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த ஆயிரத்துள் |
– |
நம்மாழ்வாருடைய திருவாக்காலான கைங்கரியமாக வாய்த்த ஆயிரத்துக்குள்ளே. |
| இவை ஏத்த வல்லார்க்கு இடர்கெடும் |
– |
இவற்றைக் கொண்டு எம்பெருமானைத் துதிக்க வல்லவர்களுக்குத் துன்பங்கள் தொலைந்துபோம். |
கூத்துமின் நமர்கானென்று தான் குடமாடு கூத்தனை…. கண்ணன் குடக்கூத்தாடும் போது இங்ஙனே சொல்லிக் கொண்டு ஆடினானாம்;
(அதாவது) ’ நம் சேஷ்டிதத்தை உசுப்பாரெல்லாரும் வந்து கண்டு வாய்படைத்த ப்ரயோஜனம் பெறும் படி ஏத்துங்கோள்’ என்று தானே சொல்லிக்கொண்டு ஆடினான்.
இத்தால், பிறர்க்குப் போலே தனக்கும் மநோஹரமான சேஷ்டிதங்களை உடையவனென்றதாயிற்று.
இப்படிப்பட்ட எம்பெருமானைக் குறித்து ஆழ்வார் வாசிகமான அடிமையிலே அதிகர்த்தார்;
அது இப்பத்தும் திருமோகூர்த் திருப்பதிக்கென்று வகுக்கப்பட்டது; இத்திருவாய்மொழியைக் கொண்டு ஏத்தவல்லார்க்கு இடர் கெடும்…என்றாயிற்று.
திருமோகூர்க்கு ஈத்தபத்திவை என்றவிடத்து அறியத்தக்க தொன்றுண்டு;
திருவாய்மொழித் தனியன்களில்* வான்திழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்றதமிழ் மறைகளாயிரமும்* என்பது மொன்று. இது பட்டரளிச் செய்ததாக ப்ரத்தம். இதில் திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமென்று சொல்லப்பட்டுள்ளது; இது எப்படி பொருந்தும்?
திருவாய்மொழியாயிரத்தில் பல பல திவ்யதேசங்களன்றோ அநுபவிக்கப்பட்டிருக்கின்றன; அவற்றுள் தென் திருவரங்கமுமொன்று; * கங்குலும் பகலும்* என்ற பதிகமொன்றே ஸ்ரீரங்கநாதன் விஷயமாகக் காணா நிற்க, ஆயிரமும் மதிளரங்கர் வண்புகழ் மேலொன்றதென எப்படிச் சொல்லுகிறார்? என்று முன்பே சிலர் கேட்டார்களாம்;
அதற்கு உத்தரமுரைத்தவர்கள், * கங்குலும் பகலும் பதிகத்தின் முவில்* முகில் வண்ணனடி மேல் சொன்ன சொல்மாலையாயிரம் * என்கையாலே திருவாய் மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் திருவடிகளுக்கே ஸமரிப்பிக்கப்பட்டது;
அதிலிருந்து சில திவ்ய தேசங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது;
ஆனது பற்றியே “திருவேங்கடத்துக்கிவை பத்தும்’’ என்றும்
’’ திருமோகூர்க்கு ஈத்த பத்திவை’’ என்றும்
“இவை பத்தும் திருக்குறுங்குடியதன் மேல்’’ என்றும் ஆழ்வார் தாமே யருளிச் செய்கிறார்….. என்றார்களாம்.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 15, 2022 at 6:07 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply