***- எம்பெருமான் ஆழ்வாரோடு கலந்ததனால் தனக்குப் புதுக் கணித்த திவ்ய ஸௌந்தர்யத்தைக்
காட்டக் கண்டு அநுபவித்து ஆனந்தம் பொங்கிப் பேசுகிற பாசுரமிது.
கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்
அடியேன் உள்ளானே–8-8-1-
பதவுரை
| கண்கள் சிவந்து பெரிய ஆய் |
– |
திருக்கண்கள் சிவந்தும் பெருத்துமிருப்பனவாய் |
| வாயும் சிவந்து கனிந்து |
– |
திருவதரமும் சிவந்து பழுத்து |
| உள்ளே |
– |
அகவாயிலே |
| வெண் பல் இலகு சுடர் |
– |
வெளுத்த திருமுத்துக்களினுடைய விளங்குகிற சுடரையுடையனாய் |
| இலகு விலகு மகர குண்டலத்தன் |
– |
மிக விளங்கி அசைகிற மகரகுண்டலங்களையுமுடையனாய் |
| கொண்டால் வண்ணன் |
– |
காள மேக நிறத்தனாய் |
| சுடர் முடியன் |
– |
ஒளிமிக்க திருவபிஷேகத்தையுடையனாய் |
| நான்கு தோளன் |
– |
திருத்தோள்கள் நான்குமுடையனாய் |
| குனி சார்ங்கன் |
– |
வளைந்த சார்ங்கவில்லையுடையனாய் |
| ஒண் சங்கு கதைவாள் ஆழியான் ஒருவன் |
– |
அழகிய சங்கும் கதையும் வாளும் ஆழியுமுடையனான வொருவன் |
| அடியேன் உள்ளான் |
– |
அடியேனுடைய உள்ளே விளங்கா நின்றான். |
கண்கள் சிவந்து என்றது எம்பெருமானது இயற்யான கண்ணழகைக் சொல்லுகிறபடியன்று,
* மாயக்கூத்தன் பதிகத்தில் * கண்ணும் வாயும் துவர்ந்தடியேன் * என்று, ஆழ்வார் வைவர்ண்ய மடைந்திருந்தபடிக்கேற்ப எம்பெருமானும் வைவர்ண்யமடைந்திருந்து,
பிறகு * இருத்தும் வியந்து பதிகத்தில் ஆழ்வார் ஆனந்த மிகுதியினால் வைவர்ண்யம் நீங்கித் தன்னிறம்பெற எம்பெருமான்றானும் தன்னிறம் பெற்றபடி சொல்லுகிறது.
ஆசார்யஹ்ருதயத்தில் (58) “மூவாறு மாஸம் மோஹித்து“ என்றவிடத்து வியாக்கியானத்தில் –“*மாயக்கூத்தனில் தாம் கண்ணும் வாயும் துவர்ந்தாப்போலே தம்மைப் பிரிகையாலே அவன் கண்ணும் வாயும் துவர்ந்து, தம்மோடு கலந்தபின்பு அவை தன்னிறம் பெற்றபடியை யநுஸந்தித்து “ஈதென்னப்ரகாரம்!“ என்று ஆறு மனம் மோஹித்து“ என்று மணவாளமாமுனிகள் அருளிச் செய்துள ஸ்ரீஸூக்தி இங்கே அநுஸந்திக்கத்தக்கது.
(பெரியவாய்) பெரிய ஆய் என்று பிரிக்க. திருக்கண்கள் தன்னிறம் பெற்றவளவேயல்லாம் பெருமையும் பெற்றனவாம்.
இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின் –“*ஸதைகரூபரூபாய என்கிறது கர்ம நிபந்தனமான விகாரங்களில்லையென்ற வித்தனையொழிய, ஆச்ரித ஸம்ச்லேஷத்தாலே பிறகும் விகாரமில்லையென்கிறதன்றே.“
வாயும் சிவந்துகனிந்து –திருக்கண்களேயன்றிக்கே திருவதரமும் தன்னிறம் பெற்றபடி சொல்லுகிறது.
உள்ளே வெண்பலிலகுசுடர் –திருவதரத்தில் சிவப்புக்குப் பரபாகசோபையான வெண்ணிறமுடைய திருமுத்துக்களிருக்கிறபடி.
இலகுவிலகு மகரகுண்டலத்தன் – திருக்குழலில் இருட்சிக்கு ப்ரகரசமாய் அலைந்துவருகிற திருமகரகுண்டலங்கள் விளஙகுகிறபடி.
கொண்டல்வண்ணன் –கார்காலத்துக் காளமேகம்போலே வடிவும் குளிர்ந்து கருமைபெற்றது.
இதற்கு முன்பு ஆழ்வாருடம்பு வெளுத்திருந்தாப்போலே இவ்வடிவம் வெளுத்திருந்ததாகவேணும்.
சுடர் முடியன் – தன்னழகாலே எல்லாவழகுகளையும் முட்டாக்கிடவில்ல “திருவபிஷேகத்தையுடையவன்.
ஆழ்வார் * மாயக்கூத்தனில் பட்டவிடாய் தீர்ந்தபின்பே எம்பெருமான் திருமுடியில் திருவபிஷேகம் தரிப்புப்பெற்றதாயிற்று.
* மாயக்கூத்தனில் * முடி சேர் சென்னி யம்மா * என்று ஆழ்வார் கதறினது எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருந்தது போலும்.
நான்கு தோளன் – ஆழ்வாரை யணையப் பெற்றபின் திருத்தோள்களும் பணைத்துப் பேசுகிறார்,
இவற்றை ஆயுதமாக நினையாதே ஆபணங்களாகவே திருவுள்ளம்பற்றி யிருக்கிறபடி.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுடைய வாசாமகோசரமான வைலாக்ஷண்யத்தை நோக்கி ஒருவன் என்கிறார்.
சங்கு கதை சங்குகதை என்றாக வேண்டுமிடத்து, “சங்கதை என்றானது கடைக்குறை.
ஆழ்வார் விஷயமான * யத்கோஸஹஸ்ரமபஹந்தி* என்னும் ச்லோகத்தில் * நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர * என்கிற இரண்டாம் பாதத்தோடு இப்பாசுரத்தை யோஜித்துக் கொள்வது.
—————
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-
பதவுரை
| அண்டத்து அகத்தான் |
– |
அண்டத்துக்குட்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும் அந்த ராத்மாவாய் |
| புறத்து உள்ளான் |
– |
அண்டத்துக்குப் புறம்புபட்ட பதார்த்தங்களுக்கும் அந்தராத்மாவாய். |
| இதுவே படி என்று உரைக்கல் ஆம் படியன் அல்லன் |
– |
இதுவே ப்ரகாரமென்று சொல்லலாவதொரு ப்ரகாரத்தையுடையனல்லாதனாய் |
| பரம்பரன் |
– |
பராத்பரனாய் |
| கடி நாற்றம் சேர் |
– |
விலக்ஷணான பரிமளங்களெல்லாம் சேர்ந்த |
| ஆலையுள் |
– |
தேனிலுள்ள |
| இன்பம் |
– |
சுவையினுடைய |
| துன்பம் கழி நேர்மை |
– |
கோதுகழிந்த ஸாரமான பாகம் போலிருக்கிற |
| ஒடியா |
– |
விச்சேத மற்று நித்யமான |
| இன்பம் பெருமையோன் |
– |
ஆனந்தமயனாய் |
| உணர்வில் உம்பர் ஒருவன் |
– |
அறிவு விஷயத்தில் மேற்பட்டிருப்பவனான ஒருவன் |
| அடியேன் உள்ளான் |
– |
பட்டிருப்பவனான ஒருவன் ஆத்மாவில் அந்தராத்மாவாயிரா நின்றான் |
| உடல் உள்ளான் |
– |
சரீரத்தினுள்ளாமிராநின்றான். |
***- இப்பாட்டின் ஈட்டுத் தொடக்கத்திலுள்ள ஸ்ரீஸூக்திகளிவை காணீர் “திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ஆறுமாஸம் ஆழ்வான் ஸேவித்துநின்று போரப்புக்கவாறே “ஆழ்வார்* அடியேனுள்ளானென்றபடி கண்டாயே என்ன, க்ருதார்த்தனானேனென்று போந்தானாம்,
என்னுள்ளா னென்னவேண்டு மிடத்திலே அடியேனுள்ளா வென்கையாலே ஜ்ஞாநாநந்தங்களன்று வஸ்துவுக்கு நிரூபகம், சேஷத்வமென்கை,
ஜ்ஞாநாநந்தங்களிலுமந்தரங்கம் பகவத் சேஷத்வ மென்கை“ என்று. ஸ்ரீ வசனபூஷணத்திலும் (33) “அஹமர்த்தத்துக்கு ஜ்ஞாநாநந்தங்கள் தடஸ்த மென்னும்படி தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம்“ என்றவிடத்து வியாக்கியானத்தில் “*அடியேனுள்ளா னென்றாரிறே ஆழ்வார், திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ஆழ்வான் ஆறுமாஸம் ஸேவித்துநின்று மஹாநிதியாகப் பெற்ற அர்த்தமிறே இது“ என்று மணவாளமாமுனிகள் அருளிச்செய்த ஸ்ரீஸூக்தி. (இவ்விடத்தில் ஒரு விமர்சனம்)
ஆழ்வாரருளிச்செயல்களில் “அடியேன்“ என்னுஞ் சொல் ஆயிரமிடங்களில் வருகின்றது, முதற் பிரபந்தமான திருவிருத்தத்தின் முதற்பாட்டிலேயே “அடியேன் செய்யும் விண்ணப்பமே“ என்றுள்ளது,
ப்ரக்ருதத்திலும் கீழ்ப்பாட்டின் முடிவில் “ஒருவனடியேனுள்ளானே“ என்றுள்ளது.
இப்படி பலபலவிடங்களிலுள்ள அடியேனென்ற சொல்லிவிட்டு இப்பாட்டிலுள்ள “அடியேனை“ எடுத்துக்காட்டி யருள்வதில் என்ன விசேஷமென்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும், தெளிவாகத் தெரிவிப்போமிங்கு.
எம்பெருமானார் கோஷ்டியிலே உபய வேதாந்த க்ரந்தகாலக்ஷேபம் நடவாநிற்க, ஆத்மாவுக்கு ஜஞாநாநந்தங்களும் சேஷத்வமும் நிரூபகமாகச் சொல்லப்படாநின்றதே, இவற்றினுள் அந்தரங்க நிரூபகம் எது?“ என்று திருவோலக்கத்திலே பிரஸ்தாவம் நிகழ்ந்ததாம்,
ஸ்வாமி ஸர்வஜ்ஞராயெழுந்தருளி யிருக்கச் செய்தேயும் இதனை ஆசார்யமுகேந வெளியிட வேணுமென்று திருவுள்ளம்பற்றி ஆழ்வானை நோக்கி “வாரீர் ஆழ்வான்! திருக்கோட்டியூர்க்குச் சென்று நம்பியை ஸேவித்து இதனை யறிந்துவாரும்“ என்ற நியமிக்க,
ஆழ்வானும் நம்பி ஸன்னிதக்கெழுந்தருளித் தெண்டன ஸமர்ப்பித்துச் செய்தியை விண்ணப்பஞ்செய்து ஆறுமாதம் ஸேவித்திருந்தும் அவர் திருவுள்ளமிரங்கக் காணாமையாலே புறப்படப்புக,
நம்பி அவரையழைத்து “மயர்வற மதிநலமருளப்பெற்ற ஆழ்வார் அடியேனுள்ளானுடலுள்ளா னென்றகுளிச் செய்தபடி கண்டாயே“ என்று மொழிந்துருள,
ஆழ்வானும் தந்யோஸ்மி யென்று எழுந்தருளி இத்தை எம்பெருமானார் திருவடிகளிலே விண்ணப்பஞ் செய்ய, மஹாநிதியான இந்த ஸ்ரீஸூக்தியின் உட்பொருளைத் திருவோலக்கத்திலே விவரித்தருளினார்.
அடியே னென்கிற ஆத்மாவே அடியேயென்கிற சொல்லுக்குப் பொருளாகும். “அடியேன் செய்யும் விண்ணப்பமே“ என்கிற விடத்தை யெடுத்துக் கொள்வோம், தேஹமின்றிக்கே வெறும் ஆத்மா விண்ணப்பம் செய்யமுடியுமாதலால் இங்கு வெறும் ஆத்மாவை அரத்தமாகக் கொள்வதற்கில்லை.
எந்த இடத்திலுமிப்படியே. *அடியேன் சிறிய ஞானத்தன்* (திருவாய்மொழி 1-6-7) என்கிறவிடத்தில் ஞானத்த னென்று ஞானமுடைமை சொல்லி யிருப்பதனால் அது தேஹத்திற்கு ஆத்மாவைத்தானே சொல்லியாக வேண்டுமென்று சிலர் ப்ரமிக்கக்கூடும்,
அங்கும் தேஹவிசிஷ்டனான ஆத்மாவையே சொல்லுகிறது, ஏனெனில் காண்பானலற்றுவன் என்னும் க்ரியையிலே அச்சொல் அந்வயிக்க வேண்டுதலால் வெறும் ஆத்மா அலற்ற முடியாதாகையாலே. ஆகவே அடியேனென்ற சொல் எந்த விடத்தலும் தேஹ விசிஷ்டனான ஆத்மாவையே சொல்லி நிறகுமென்பது திண்ணமாயிற்று.
* ஒருவனடியேனுள்ளானே* என்ற கீழ்ப்பாட்டிலும்படியே. * அடியேனுள்ளா னுடலுள்ளான் * என்னுமிவ்விடத்தில் மாத்திரம் அடியே னென்பதற்கு வெறும் ஆத்மாவே அர்த்தமாகவேண்டிய நிர்ப்பந்தமுள்ளது
ஆத்மாவுக்கு விசேஷணபூதமான தேஹத்திற்கு வாசகமான சொல் உடலென்பது தனிப்பட்ட இருப்பதனால் அடியேனில் தேஹத்தைச் சேர்த்து அர்த்தங் கொள்ளவேண்டிய அவச்யமில்லை.
எம்பெருமான் ஜீவாத்மாவையும் உடல்பொருளையும் அநுப்ரவேசித திருக்குமவன் என்று சொல்ல வேண்டுவது இங்கு விவக்ஷிதம்.
உடலுள்ளானென்பதனால் ஜடப்பொருளை அநுப்ரவேசித்திருக்குவனென்பது சொல்லிற்றாயிற்று.
“ஜீவாத்மாவை அநுப்ரவேசித்திருக்குமவன்“ என்று விவக்ஷிதமான பொருளுக்கு அடியேனுள்ளானென்று வாசகமிடப் பட்டிருக்கின்றது.
ஆத்மா அஹமர்த்தமாகையாலே என்னுள்ளானென்று சொல்லி யிருக்கலாம், அப்போதும் ஆத்மாவிலுள்ளா னென்னும்பொருள் தேறிவிடும்,
ஆனால் ஆழ்வார் அப்படியருளிச் செய்யாமல் அடியேனுள்ளா னென்றருளிச் செய்திருக்கையாலே “ஆத்மாவென்றும் அடியேனென்றும் பர்யாயம்“ என்பது ஆழ்வார் திருவுள்ளமென்று அறுதியிடலாகிறது.
இந்த மருமம் குருகலவாஸ பாக்கியமில்லாதார்க்கு அறிவரிது. திருக்கோட்டியூர் நம்பி ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில்கேட்ட மஹார்த்தமிது.
இது ஆழ்வான் வழியாக ஸ்வாமிக்கு நிதிபோல் கிடைத்தபடியால் இந்த மஹார்த்தம் திருவுள்ளத்திலேயே ஊறியிருந்து கீதாபாஷ்யத்தில் வெளியிடப்பெற்றது. கீதையில் (7-10) * சதுர்விதா பஜந்தே மாம் ஜகாஸ் ஸுக்ருதி நோர்ஜுந, ஆர்த்சோ ஜிஜ்ஞாஸுரத்தார்த்தீ ஜ்ஞாநீ ச * என்றவிடத்தில் ஜ்ஞாநீ என்பதற்கு “விஷ்ணோ தத்வ்வித்“ என்று சங்கரசார்யர் எழுதிவைத்த பொருள்,
நம் ஸ்வாமி அப்பொருளை ஒன்றாக எண்ணாது “பகவச் சேஷதைகரஸ ஆத்மஸ்வரூபவித் ஜ்ஞாநீ“ என்றருளிச் செய்தார். இது ஆழ்வார் ஸ்ரீஸூக்தியாகிற அமுத வெள்ளத்தில் ஆழ்ந்திருப்பது காரணமாகவே யாகும்.
ஆக இங்கு அடியேனுள்ளானென்றது ஆழ்வாரது ஆத்மாவில் வியாபித்தவ னென்கை.
உடலுள்ளானென்றது – அவருடைய தேஹத்திலும் வியாபித்துள்ளானென்றபடி.
அண்டத்தகத்தான் புறத்துள்ளான் – அண்டத்துக்குட்பட்ட பதார்த்தங்களோடு வெளிப்பட்ட பதார்த்தங்களோடு வாசியற எங்குமுள்ளானென்றபடி.
இதுவேபடி யென்றுரைக்கலாம்படியனல்லன் – இதற்கு இரண்டு வகையாகப் பொருள்கொள்ளலாம், –
இன்னபடிப்பட்டவனென்று உரைக்க வெண்ணாதவன். என்றும்,
ஸர்வாத்மநா தன்னோடிடாத்திருப்பதோர் உபமானத்தை யுடையனல்லாதவன் என்றும்.
“ஸர்வகதமுமாய் ஸர்வநிர்வாஹமுமாயிருப்பதொரு வஸ்துவுண்டாகிலிறே ஒப்புச் சொல்லலாவது“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி,
பரம்பன் –மேலான வற்றுக்கெல்லாம் மேலானவன் என்று சொல்லாமத்தனை.
கடிசேர்நாற்றத்தென்று தொடங்கிப் பின்னடிகளின் கருத்து ஆனந்தமயனென்கை. அல்பத்வமும் அஸ்திரத்வமுமாகிற கோதுகழந்த ஆனந்தமே வடிவானவனென்பது பரமதாற்பரியம்.
“அநாக்ராத துக்ககந்த நித்யஸித்த நிரவதிகாநந்தத்தை யுடையவன்“ என்பது ஆறாயிரப்படி
உணர்வில் உம்பரொருவன் – ஞானத்தில் வந்தாலோ மிகவும் மேற்பட்டவன். அத்வி தீய ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனென்றதாயிற்று.
இப்படிப்பட ஸர்வேச்வரன் அடியேனுள்ளானுடலுள்ளான் –என்று யோஜிப்பது. என்னுடைய ஆத்மாவிலும் ஹேயமான சரீரத்திலுமுள்ளான்.
————–
***- எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே தன் விஷயத்தில் இசை வையுமுண்டாக்கி என்னோடே கலந்து
அந்தக் கலவி நிலைத்து நிற்பதற்காக, விலக்ஷணமாய்த் தனக்கு அநந்யார்ஹமான ஆத்மஸ்ரூபத்தையுங் காட்டிக்கொடுத்தருளினா னென்கிறார்.
உணர்விலும் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன்
அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-
பதவுரை
| உணர்வில் உம்பர் ஒருவனை |
– |
அயர்வறும்மரர்களதி பதியை |
| அவனது அருளால் |
– |
அவனுடைய க்ருபையாலே |
| உறல் பொருட்டு |
– |
கிட்டுகைக்காக |
| என் உணர்வின் உள்ளே |
– |
என்னுடைய அபேக்ஷையாகிற ஞானத்துக்குள்ளே |
| இருத்தினேன் |
– |
இருக்கச் செய்தேன் |
| அதுவும் |
– |
அந்த அபேக்ஷை நிர்ஹேதுக க்ருபையடியாக உண்டானதே |
|
(இப்படி என்னை இசைவித்து என்னுள்ளே புகுந்தவன்) |
||
| உணர்வும் உயிரும் உடம்பும் |
– |
விஷயஙகளைப் பற்றுகிற ஞானமும் பிராணனும் சரீரமும் |
|
மற்று உலப்பிலனவும் மற்று முண்டான அளவற்ற ப்ரக்ருதிவிகாரங்களும் |
||
| பழுதே ஆம் உணர்வை பெற ஊர்ந்து |
– |
ஹேய மென்கிற உணர்வைப் பெறும்படியாக நடத்தி |
| இறவு ஏறி |
– |
ஆத்மஸ்வரூபத்தைக் காட்டித்தருகையாகிற முடிவளவும் நடத்தி |
| யானும் தான் ஆய் ஒழிந்தான் |
– |
என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்ல்லாம்படியான அளவும் காட்டித்தந்தான். |
உணர்விலும்பரொருவனை என்றதற்கு * அயர்வறு ம்மரர்களதிபதியானவனை யென்பது தேர்ந்தபொருள்.
உணர்விலும்பர் என்றது உணர்வின்மிக்க நித்யஸூரிகளென்றபடி.
அவர் களிற்காட்டில் வேறுபடாத வொருவன் எனவே. அவர்களது ஸத்தை முதலியவை தன்ன தீனமாயிருக்கையாலே ப்ராப்திக்குறுப்பாக அவ்வடியார்களைக் கூட்டிப் பேசுகிறாரென்றுணர்க. அ
வனதருளாலுறல்பொருட்டு –அவனுடைய ப்ரஸாதத்தாலே அடைந்தற்பொருட்டுறுணர்க. அவனதருளாலுறல்பொருட்டு –அவனுடைய ப்ரஸாதத்தாலே அடைதற்பொருட்டு. என்னுணர்வினுள்ளேயிருந்தினேன் – அவனை என்னுடைய ஞானத்துக்கு விஷயமாக்கினேன் – இச்சித்தேனென்றபடி.
இந்த இச்சைதானும் கம்மடியாக வந்த்தன்று என்கிறார் மேலே அதுவுமனதின்னருளேயென்று. இந்த இச்சை தோன்றினதும் அவன் ப்ரஸாதத்தாலே யென்றபடி.
இப்பதிகத்தில் முதலிலிருந்து இரண்டரைப்பாட்டாலே தன்னையனுபவித்து அனந்தம் ஆத்மஸ்வரூபத்தைக் காட்டிக் கொண்டுத்தானென்று நம் ஆசார்யர்கள் நிர்வஹிப்பதுண்டே,
அதன்படி இரண்டரைப் பாட்டு அற்றது.
இனிமேல் ஆத்மஸ்வரூபவைலக்ஷண்யத்தைக்காட்டிக் கொடுத்தமை சொல்லுகிறது.
உணர்வுமுயிருமுடம்பும் மற்றுலப்பினவும் பழுதேயாமுணர்வைப் பெறவூர்ந்து – விஷயங்களைப்பற்றின ஞானமும் பிராணனும் சரீரமும மற்றும் அபரிச்சேத்யங்களான ப்ரக்ருதி விகாரங்களும் ப்ரக்ருதியும் ஹேயம் –என்னுமிவ்வறிவைப் பெறும்படி நடத்தினபடியைச் சொல்லுகிறது.
இவையெல்லாம் அபுருஷார்த்தமென்று உணர்த்தி என்றபடி.
இறவேறி –முடியப்போய் என்பது பொருள்.
“ஜ்ஞாநாநந்த ஸ்வரூபமாய் பகவச்சேஸதைகரஸமாயிருக்கும் ஆத்மவஸ்து“ என்கிற எல்லை நிலமான ஞனத்தையுண்டாக்கி யென்றபடி.
யானும் தானாயொழந்தான் – அவ்வளவோடும் நில்லாமல்என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லாம்படி தனக்கு ப்ரகாரமாயக் கொண்டு சேஷம் என்னுமிடத்தையும் காட்டித் தந்தானென்கை.
இத்தால் அபேத ச்ருதிகளுக்கு அத்வைதிகள் நிர்வஹிக்கிறபடி யன்றிக்கே நம்மவர்கள் நிர்வஹிக்கிற புடை காட்டப்பட்டதாயிற்று.
———–
***- இவ்வாத்மா தனக்குப் பரபோயமென்னுமிடத்தையும் காட்டித் தந்தருளின படியையருளிச் செய்கிறாரிதில்.
யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப்
பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-
பதவுரை
| யாதும் யவர்க்கும் முன்னோனை |
– |
ஸகல சேதநாசேதநங்களுக்கும் காரண பூதனும் |
| தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனி முதலை |
– |
தானான தன்மையனாயும் சிவனாயும் பிரமனாயும் விஸத்ருதனானப்ரதான காரண பூதனும். |
| தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து |
– |
தனக்குப் பரமபோக்ய மாய்க் கொண்டு ரஸித்து |
| என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை |
– |
என்னுடைய சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வியாபித்துநின்ற ஆத்மாவை சரீரமாக யுடையனுமாய் |
| யானும் தானாய் ஒழிந்தானை |
– |
நானும் தானாய்விட்டவனான எம்பெருமானை |
| உணர்ந்தேன் |
– |
அறிப் பெற்றேன். |
இப்பாட்டின் முடிவிலுள்ள “நின்றவொன்றையுணர்ந்தேனே“ என்பதன் பொருளை முன்னம் தெளியவேண்டும்.
நின்றவொன்று என்கிறவிது ஜீவா த்மஸ்வரூபத்தச் சொல்லுமதாம்.
ஆனாலும் ஆச்ரயமாய் ப்ரகாரியான பரமாத்மாவளவும் சொல்லி நிற்கிறது.
ஏனென்னில், யாதும் யவர்க்கும் முன்னோனென்றும், தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனிமுதலென்றும்…கீழே சொன்ன விசேஷணங்கள் பரமபுருஷனிடத்தில் அந்வயிக்கக்கூடுமேயல்லது ஆத்மஸ்வரூபத்தில் அந்வயிக்கமாட்டாவே.
ஆத்மஸ்வரூபத்தின் அளவு மட்டும் காட்டாதே பரமாத்ம பர்யந்தமாகச் சொல்லி நிற்பதானது –அவ்வாத்மஸ்வரூபம் தனித்து நிற்கமாட்டாதே பரமாத்மாவைப் பற்றியே நிற்குமதென்கிற மருமத்தைக் காட்டுதற்காம்.
இப்படி பரமாத்மாவளவுஞ்செல்ல வாசகமிட்டிருந்தாலும் ஆத்மஸ்வரூபத்தளவிலே அர்த்தம் கொள்ளவேண்டும்.
* தேனும் பாலும் கன்னலும்முது மாகித்தித்தித்து * என்பதனால் இங்குச் சொல்லப்பட்ட போக்யத்தை எம்பெருமானுடையதுபோல் தோற்றும்,
அப்படி கொள்ளலாகாது. ப்ரகாரியான அவனுக்குச் சொன்னது ப்ரகாரத்தில் விவக்ஷையாலே யென்று உணர்க.
ஆத்மாவிலே காட்டக்கண்ட தித்திப்பைப் பரமாத்மாவிலே யேற்றிச் சொன்னதாகக் கொள்க.
யாதும் யவர்க்கும் முன்னோனை யென்றது – ஸகல சேதநாசேதங்களுக்கும் காரணபூதனையென்றபடி.
இப்போது இது சொல்லவேண்டிய அவச்யமென்ன? ஆத்மாவினுடைய போக்யதைதானே சொல்லவேண்டும், ஜகத்காரணத்வம் எதற்காகச் சொல்லுகிறது என்னில், குறிக்கொண்டு கேண்மின்,
இங்கு ஜகத்காரணத்வம் எப்படி சொல்லவேண்டியதன்றோ, அப்படியே, * தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனிமுதலை * என்பதும் சொல்லவேண்டியதன்றுதான்,
ஆயினும் இவை எதுக்குச் சொல்லியிருக்கிறதென்னில், விமுகரானவர்களைக் கர்மாநுகுணமாக ஸ்ருஷ்டித்துவிட்டான்,
ஐச்வர்யகாமரான ப்ரஹ்மருத்ராதிகளுக்கு ஐச்வர்யங்களைக் கொடுத்து அதிகாரபதவிகளைக் கொடுத்துவிட்டான்,
என்னளவிலோவென்னில், அங்ஙனே செய்யாதே, இவ்வாத்மா தனக்கு அந்யார்ஹமாய் போக்யமாயிருக்கிறபடியைக் காட்டித்தந்தான் என்பது இங்கே விவக்ஷிதமென்றுணர்க.
என்ஊனில் உயிரில் உணர்வில் நின்றவொன்றை – என் சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வியாபித்திருக்கின்ற ஆத்மாவைத் தனக்குச் சரீரமாகவுடையவனை என்றபடி.
பாட்டின் முதலிலேயிருக்கிற “யானுந்தானாயொழிந்தானை” என்பது இங்கே கூட்டிக் கொள்ளத்தக்கது.
ஆத்மஸ்வரூபத்தைச் சரீரமாக வுடையவனாகையாலே யானும் தானாய்விட்டானென்ற தாயிற்று.
—————-
***- எம்பெருமானது திருவருளால் நானறிந்த ஆத்ம வஸ்து வேறொருவர்க்கு மறியக் கூடியதன்று,
அறிந்தாலும் ஸாக்ஷாத் கரிக்கக் கூடியதென்று என்கிறதிப்பாட்டில்.
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5-
பதவுரை
| நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு |
– |
நித்யமாய் ஜ்ஞாநைதஸ்வரூபமான ஆத்ம வஸ்துவை எம்பெருமான் தனக்கு ப்ரகாரமாகக் காட்டிக்கொடுக்கக் கண்ட எனக்குப்போலே |
| அதன் நுண் நேர்மை |
– |
அவ்வாத்மஸ்வரூபத்தின் ஸூக்ஷ்ம்மான வைலக்ஷணயம் |
| அது இது என்று |
– |
அப்படிப்பட்டது இப்படிப்பட்டதென்று |
| ஒருவர்க்கு ஒனறும் உணரல் ஆகாது உணர்த்தும் |
– |
மாஞானியர்க்கும் சிறிதும் அறியப்போகாது, வருந்தி ஒருவாறு அறிந்தாலும் |
| மேலும் காண்பு அரிது |
– |
ஸாக்ஷாத்கரிக்கப்போகாது, |
| சென்று சென்று பரம்பரம் ஆய் |
– |
ஒன்றுக்கொன்று மேற்பட்ட தாகி |
| யாதும் இன்றி தேய்ந்து அற்று |
– |
அவற்றின் ஸ்வபாவம் ஒன்றுமின்றிக்கே அவற்றோடு தொற்றற்று |
| நன்று தீது என்று அறிவு அரிது ஆய் |
– |
ப்ராக்ருதங்களுக்குண்டான நன்மை தீமைகள் அறியவரிதாய் |
| நன்று ஆய் |
– |
ஸர்வ விலக்ஷணமாய் |
| ஞானம் கடந்தது |
– |
அவற்றைப் பற்றின ஞானத்திற்கு விஷயமன்றியே யிருந்தது. |
நின்ற வொன்றையுணர்ந்தேனுக்கு –தேஹமென்ன, இந்திரியமென்ன, இவையழிந்தாலுங்கூட அழியாதேயிருந்து இவற்றக்கு நியாமகனுமாய் விலக்ஷணமான ஆத்மாவை (ஆத்மஸ்வரூபத்தையென்றபடி)
எம்பெருமான் காட்டிகொடுக்கக் கண்ட வெனக்குப் போவென்றபடி எம்பெருமான் ஆஸ்மஸ்வரூபத்தைத் தனிப்படக் காட்டிக்கொடுத்தானா?
அல்லது தனக்கு ப்ரகாரமாகவே காட்டிக்கொடுத்தானா? என்னும் விசாரத்தில் இரண்டு படியாகவும் ஆசார்யர்களின் நிர்வாஹமுண்டு,
தனிப்படக் காட்டிக்கொடுத்ததாக எம்பாருடைய நிர்வாஹம்.
ப்ரகாரமான வேஷத்திலே காட்டிக்கொடுத்ததாக ஆண்டானுடைய நிர்வாஹம்.
இரண்டுபடியும் ஸங்கதமேயென்கை.
“உணரப்பெற்றாராகத் தோன்றுகிறது, * மயர்வறமதிநலமருளப்பெற்ற போதே இதையும் உணர்ந்தாராகவேண்டும்,
அப்போது உணர்ந்திலர் என்று சொல்லப்போகாது,
ஆனாலும் * உயர்வறவுயர்நல முடையவன் * என்று அவனுடைய திருக்கல்யாண குணாநுபவத்திலே யிழிந்தவராகையாலே மின்மினிபோலே யிருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தில் இதற்கு முன்பு கண்வைத்திலர்,
பக்திரூபாபந்நஜ்ஞானமுடைமையாலே இத்தை அநுஸந்திக்கைக்கு அவகாசமும் பெற்றிலர்.
இப்போது கீழ்த்திருவாய்மொழியில் இவர் “சிறியேனுடை“ என்று சொன்ன ப்ரஸங்கத்தாலே சிறிதான ஆத்மஸ்வரூபத்தின் பெருமையை நினைப்பூட்டவேண்டியது எம்பெருமானுக்கு ப்ராப்தமாகவே அவன் உணர்த்த உணர்ந்ததாக இங்கு அருளிச்செய்கிறபடி.
உணரப்புக்கவாறே இது இருந்தபடி என்! என்று வியந்து அருளிச்செய்கிறார் அதுனண்ணேர்மை இத்யாதியால்.
“அதனுள் நேர்மை“ என்றும், “அதன் நுண் நேர்மை“ எப்படிப்பட்ட மாஞானியர்க்கும் ஏகதேசமுமறிப்போகாதென்றபடி.
உணர்ந்து மேலுங்காண்பரிது – அறந்தால் பின்னை ஸாக்ஷாத் கரிக்கவும் போகாது.
எம்பெருமான் காட்டிக் கொடுக்கக் கண்ட தமக்குத் தெரிந்தபடியை விவரித்துரைக்கிறார் பின்னடிகளில், சென்று சென்று பரம்பரமாய் –
தைத்திரீயோபநிஷத்தில் முதலில் அந்நமயனைச் சொல்லி, அதற்கு மேல் ப்ராணமயனைச் சொல்லி, அதற்குமேல் மநோமயனைச் சொல்லி அதற்கு மேலாக ••• ஆத்ம ப்ரஷ்தாவம் செய்திருப்பதால் அதையிட்டுச் சென்று சென்று பரம்பரமாய் என்னப்பட்டது.
ஒன்றுக்குமே லொன்றாகச் செலுகிற ச்ரமத்திலே மேம்பட்ட தென்றபடி. என்னப்பட்டது.
ஒன்றுக்குமே லொன்றாகச் சொல்லுகிற அதையிட்டுச் சென்று சென்று பரம்பரமாய் என்னப்பட்டது ஒன்றுக்குமே லொன்றாகச் சொல்லுகிற க்ரமத்திலே மேம்பட்டதென்கிறபடி படியே •••
தேஹமென்ன இந்திரியமென்ன மநஸ்ஸென்ன ப்ராண னென்ன புத்தியென்ன இவற்றிற் காட்டிலும் மேம்பாட்டிருக்கின்றமை சொன்னவாறுமாம்.
யாதுமின்றி -அவ்வற்றியாதுமின்றி- அவற்றிலுடைய காட்டிலம் மேம்பட்ருக்கின்றமை சொன்னவாறுமாம்.
யாதுமின்றி அவற்றினுடயே விகாரஸ்பாவமொன்று மின்றியே, தேய்ந்தற்று –அவற்றோடு ஸம்பந்தலேசம்மற்று என்றபடி.
நன்று தீதென்று அயிவரிதாய் – ப்ராக்ருதமாகையாலெ நன்றென்றும் தீதென்றும் அறியவொண்ணாத மிகவும் புஷ்பம் நன்று கரி தீது என்ற்றிகிறோம்,
தேன்மாங்களினையும் வேப்பங்காயையும் கையிற்கொண்டு பார்க்கும்போதும் அங்ஙனெயறிகிறோம்,
இந்திய கோசர மாகையாலே அப்படி யறிகிறோம். இங்கு அதற்கு ப்ரஸித்தியில்லாதமயாலேஅவ்வறிவு உண்டாகமாட்டாதென்க.
“நன்று தீதெதன்று அறிவரிது“ என்று சொல்லிவைத்து உடனே “நன்றாய்“ என்கிறது –ஸர்வப்ரதகாரத்தாலும் வ்யாவ்ருத்தமான ஜ்ஞாநாத் ஞானத்திற்கு எடுத்தது என்றபடி.
ஆக ஞன்னத்திற்கு எட்டாதது என்றபடி. ஆக இப்படிப்பட்ட ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யாயிற்று ஆழ்வாருக்கு அவன் காட்டித் தந்தது
—————
***- யோகசாஸத்ரத்தில் ஆத்மஷ்வரூப ப்ராப்திக்கு உபாயமாகச் சொல்லப்படுகிற இந்திரிய ஜயம் முதலானவையாகிற
யோகத்தாலே ப்ரக்ருதியில் நின்றும் விடுபட்ட ஆத்ம ஸ்வரூபத்தை ஒருவாறு வருந்தி ஸாக்ஷாத்கரிக்கலா மென்கிறாரிதில்.
நன்றாய் ஞானம் கடந்து போய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே–8-8-6-
பதவுரை
| ஞானம் கடந்து போய் |
– |
இந்திரிய கோசரமாஷயங்களை தப்பிபோய் |
|
இந்திரிய கோசரமான விஷயங்களைத் தப்பிபோய் |
||
| நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து |
– |
கொடுமை மிக்க இந்திரயங்கமுயும் கழித்து |
| ஒன்று ஆய் கிடந்த அரு பெரு அதனை உலப்பு இல் பாழ் அதனை உணர்ந்து உணர்ந்து |
– |
பிரிக்கமுடியாதபடி பொருந்தியிருக்கிற அரிய பெரிய அஸங்க்யாதமான ப்ரக்ருதித்தவத்தை ஆத்மாவிற் காட்டிலும் வேறு பட்டதாக வுணர்ந்து |
| நன்றாய் ஆங்கு சென்று |
– |
ஆத்ம ஸ்வரூபத்தளவுஞ் சென்று |
| இன்பம் துன்பங்கள் செற்று களைந்து |
– |
ஸுகத்துக்கங்களுக்கு அடியான புண்ய பாபங்களையும் விட்டு |
| பசை அற்றால் |
– |
அவற்றில் ருசி வாஸகைகளும் கழியுண்டால் |
| அன்றே |
– |
அன்றைக்கே |
| அப்போதே |
– |
அந்த க்ஷணத்திலேயே |
| வீடு |
– |
ப்ரக்ருதிப்ராக்ருதங்களினிற்று விடு படுகையாகும், |
| அதுவே வீடு வீடு ஆம் |
– |
அதுவே ஆத்மாநுபவமோக்ஷமாம். |
“நன்றாய் ஞானங்கடந்து போய்“ என்றவிது கீழ்ப்பாட்டின் முடிவில் சொன்னதை அநுவாதம் செய்கிறதாகக் கொள்ளலாம்,
அன்றியே, நன்றாய் என்பதை யெடுத்து மூன்றாமடியின் முதலிலே சேர்த்து அந்வயிப்பதுமுண்டு.
ஞானத்தால் காணப்படும் விஷயங்களையும் ஞானமென்கிற சொல்லால் சொல்லத்தகுமாதலால் ஞானங் கடந்து போய் என்றது – சப்தாதி விஷயங்களைத் தப்பிப்போய் என்றபடி.
விஷய ஸந்நிதிபரித்யாகம் சொன்னபடி. நல் இந்திரிய மெல்லாமீர்த்து –நல்லிநதிரிய மென்றது பொல்லாத இந்திரிய மென்றபடி. விஷயங்களைத் தப்பிப்போனாலும் அவையிருந்த விடங்களிலே கொண்டு மூட்டுங கொடுமையன்றொ இந்திரியங்களுடையது.
அப்படிப்பட்ட இந்திரியங்களையுங் கழிக்கவேணுமென்கிறது. இந்திரிய ஜயம் பண்ணி யென்கை.
ஒன்றாய்க்கிடந்த அரும்பெரும் பாழுலப்பிலதனை உயரந்துணர்ந்து -* திலதைலவத்தாரு வஹ்நிவத் * என்றாப்போலே என்னில் எண்ணெய் போலவும் கட்டையில் நெருப்புப் போலவும் பிரித்தெடுக்க முடியாதபடி சேதநனோடு சேர்ந்துகிடப்பதாய் அபரிச் சேத்யமாயிருக்கிற ப்ரக்ருதி தத்துவத்தை நன்றாக வுணர்ந்து,
உலகில் பாழ்நிலமாக ஓரிடமிருந்தால் அதுதன்னிலே நாம் இஷ்டமான பொருளை விளைத்துக்கொள்ளாகிறோமன்றோ,
அதுபோல ப்ரக்ருதியில் போக மோக்ஷங்களை நாம் யதேஷடமாக விளத்துக்கொள்ளலாமென்பது பற்றி ப்ரக்ருதிக்கு பாழ் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அது இவ்வளவென்று அளவிட முடியாதாதலால் உலப்பில்லாததாகக் கூறப்படுகிறது. (உலப்ப-முடிவு)
பாட்டினடியிலேயிருக்கிற நன்றாயென்பதை இனிக் கொண்டு கூட்டி “நன்றாய் ஆங்கு சென்று“ என்றந்வயித்து, தன் பக்கலில் போக்ய தாபுத்தியைப் பிறப்பிக்கக்கடவதான அசித்திலே கால்தாழாமல் ஆத்மஸ்வரூபத்தளவுஞ் சென்று என்று பொருள்காண்க.
இன்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து – அசித்தை த்யாஜ்யமென்று விட்டாலும் ஸுக துக்கங்களுக்கு ஹேதுவான புண்யபாபரூப கருமங்கள் கிடக்குமாகில் பின்னையும் ஸம்ஸாரந்தானே, அது ஆகாமைக்காக அவற்றையும் விடவேணுமென்கிறது.
அவற்றை விட்டாலும் ருசிவாஸநைகள் கிடக்குமாகில் பின்னையும் கருக்குழியிலே புக நேருமே, அது நேராமைக்காகப் பசையும் அறவேணுமென்கிறது.
ஆக விஷயஸ்ன்னிதானத்தில் நின்றும் தப்பிப்போய் இந்திரியங்களையும் வென்று அசித்தத்வ்விவேகமும் பண்ணிப் புண்ணிய பாபங்களையுமுதறி ருசிவாஸனைகளையும வென்று அசித்தத்வ்விவேகமும் பண்ணிப் புண்ணிய பாபங்களையுமுதறி ருசிவாஸனைகளையும் விட்டால், அன்றே அப்போதே வீடு –அக்காலத்திலே அம்முஹூர்த்தத்திலே ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் நின்றும் விடுபடுகையுண்டாம்.
அதுவே வீடு வீடாமே – ஆத்மாநுபவ மோக்ஷமென்பது அதுவே, இதுவும் ஒரு புருஷார்த்தமாம், ஸர்வேச்வரன் ப்ராப்யனாமிடத்தில் அவனுக்கு ப்ரகாரமாய்க் கொண்டு ஆத்மாவும் ப்ராப்யமாகக் கடவதன்றோ, ஆகையாலே இதுவும் புருஷார்த்தமாமே யென்கிறார்.
ஆனால் கைவல்ய மோக்ஷத்தை நிந்திப்பது எதனாலேயென்னில், இதற்கு நம்பிள்ளையருளிச் செய்வது காண்மின் -“தம்முடைய உத்தேச்யத்திலேகதேசத்தைப் புருஷார்த்தத்தில் சரமாவதியாக நினைத்திருக்கையாலேயிறே முன்பு இவர் இத்தைச் சிரித்திருந்தது“ என்று. எம்பெருமானைத் தவிர்த்து கேவலாத்மாநுபவத்தைச் செய்வது தான் நிந்தனைக்கிடமானது என்றதாயிற்று.
———-
***- இங்குச் சொன்னபடியே ஆத்மஸாக்ஷாத்காரம் பண்ணப் பாராமல் வேறு சில வழிகளில் முயன்றால் அம்முயற்சி கைகூடாதென்கிறார்.
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7-
பதவுரை
| அதுவே |
– |
எம்பெருமானுக்கு ப்ரகாரமாகக் கீழே ப்ரஸதாவிக்கப்பட்ட அவ்வாத்மாநுபவமே |
| வீடு |
– |
போக்ஷமாவது |
| வீடு பேறு இன்பம் தானும் அது |
– |
மோக்ஷலாபத்தால் வரும் ஆனந்தமும் அது, |
| தேறி |
– |
இப்படியாக நிஷ்கர்ஷித்து |
| எதுவே தானும் பற்று இன்றி |
– |
ப்ரக்ருதிப்ராக்ருதங்களெல்லாவற்றிலும் ஸங்கமற்று |
| ஆதும் இலிகள் ஆகிற்கில் |
– |
ருசி வாஸனைகளுமில்லாதவர்களாக ஆகப்பெற்றால் |
| அதுவே வீடு |
– |
அதுதான் மோக்ஷம் |
| வீடு பேறு இன்பம் தானும் அது |
– |
மோக்ஷானந்தமும் அதுவே |
| தேறாது |
– |
இப்படி தெளியமாட்டாமல் |
| வீடு எதுஇன்பம் எது என்று எய்த்தார் |
– |
மோக்ஷமாவது எது? ஆனந்தமாவது எது? என்று கலங்கியே நிற்பவர்கள் |
| எய்த்தார் எய்த்தாரே |
– |
என்றும் கலங்கியே கிடப்பர்களத்தனை. |
அதுவே வீடு –ஆத்மாநுபவமோக்ஷமென்பது கீழ்ச்சொன்னவதுவே. வீடுபேற்றின்பந்தானும்
அது – அந்த மோக்ஷத்தைப் பெற்றால் வரும் ஸுகமும் அதுவே, தேறி –இப்படியாகத் தெளிந்து,
எதுவேதானும் பற்றின்றி –ப்ரக்ருதி ப்ராக்ருத வஸ்துக்களில் இவைபோக்யமென்றும், இவை போகோபகரணமென்றும் இவைபோகஷ்தானமென்றும் நினைப்பதனாலுண்டாகிற பற்று அற்று,
ஆது மிலிகள் ஆகிற்கில் –அதில் ருசிவாஸநைகளுமற்றவர்களாக ஆகப்பெற்றால்,
(அதாவது) கருமத்தையலுட்டித்து ஜ்ஞானத்தையுடையராய், கீதையில் இரண்டாமத்யாயத்தில் (55) * ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த்த மநோகதாந், ஆத்மந்யேவாத்மநா துஷ்ட ஸ்தித ப்ரஜ்ஞஸ் த்தோச்யதே * என்கிற ச்லோகத்திற் சொல்லுகிறபடி
ஜ்ஞாந நிஷ்டாகாஷ்டையான ஸ்திதப்ரஜ்ஞாவஸ்தை பிறந்து யோகமும் நிலைநின்று ஆத்மஸாக்ஷாத்காரம் பண்ணப்பெற்ல்,
அதுவே வீடு –கீழ்ச்சொன்ன ஆக்மப்ராப்தியே மோக்ஷம். வீடுபேற்றின்பந்தானுமது –மோக்ஷஸித்தியில் வரும் ஸுகமும் அந்த ஆத்மாதுபவமே.
தேறாது – இப்படி தெளியமாட்டாமல், எதுவேவீடு எது இன்பமென்று எய்த்தார் – மோக்ஷமாவது எது? மோக்ஷ ஸுகமாவது எது? என்று விசாரித்துக்கொண்டு கலங்கி நிற்பவர்கள், எய்த்தார் எய்த்தாரே –என்றும் கலங்கிய நிற்பவர்களென்கை.
“நிராச்ரயமாக ஆத்மஸ்வரூபத்தை அநுஸந்திக்கை நிஷ்ப்ரயோஜநமென்கை“ என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்க.
எம்பெருமானுக்கு ப்ரகாரபூதமாயல்லது ஆத்மா நுபவம் பண்ணலாகாதென்றபடி.
—————
***- பெறுதற்கரிதான இந்த ஞானம் ஒருவாறு கைவந்தாலும் எம்பெருமானைப் பற்றின அந்திம ஸ்மிருதி
யில்லையாகில் இந்த ஞானம் கைபுகுருகைக்குப்பட்ட க்லேசமெல்லாம் பழுதேயாகுமென்கிறார்.
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்
தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8-
பதவுரை
| எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் மொய்த்து |
– |
முடிந்தார் முடிந்தார் முடிந்தாரென்று கூச்சலிட்டு வீட்டிலுள்ளவர்களும் மற்றுமுள்ளவர்களும் திரண்டு |
| ஆங்கு அலறி முயங்க |
– |
அவ்வவஸ்தையிலே அலறிக் கட்டிக்கொள்ள |
| தாம் போகும்போது |
– |
உத்க்ரமணமாகிறவப்போது |
| உன்மத்தர் போல் பித்தே ஏறி |
– |
உன்மத்தர்கள் போல். நெஞ்சு கலங்கி |
| அனுராகம் பொழியும் போது |
– |
அனுராகம் மிகமிகப்பெருங்குங் காலத்தில் |
| எம்பெரும்மானோடு ஒத்தே சென்று |
– |
(கலக்கமற்றுத் தெளிவுபிறந்து) எம்பெருமானிடத்தில் பொருத்தமுண்டாகி |
| அங்கு உள்ளம் கூட கூடிற்றாகில் |
– |
அப்பெருமான் பக்கலிலே நெஞ்சு ப்ரவணமாகப் பெற்றால் |
| நல் உறைப்பு |
– |
நல்லவுறுதியாம். |
|
(அந்திம ஸ்மிருதி யுண்டானால் பலனாகும் என்கை.) |
||
ஆறாயிரப்படியருளிச் செயல் –“இவ்வாத்ம ஸ்வரூப ஆவிர்ப்பாவ லக்ஷண மோக்ஷமானது இந்த்ரிய ஜயமாத்ரத்தாலே கை வாராது, அந்திமதசையிலே பகவத் ஸமாநாகார ஆத்மாநுஸந்தானமும் வேண்டுமென்கிறார்.“ என்று
உயிர் உடலைவிட்டுக் கிளம்புகிறகாலம் ஒன்றுண்டே, அப்போது (முமூர்ஷுவாயிருக்கிற காலத்திலே) உயிர் உடலைவிட்டுப் புறப்படுதற்கு முன்னமே வீட்டிலுள்ளவர்களும் புறம்புள்ளவர்களும் “ஐயோ! முடிந்தான் முடிந்தான் முடிந்தான்!“ என்று பலகாலுஞ் சொல்லி மேலேவிழுந்து அரற்றுவர்களே,
முமூர்ஷுவானவன் கலங்கின நிலைமையிலே நெஞ்சைத் தெளிவித்து த்வயாநுஸந்தானம் பண்ணவும் திருநாமங்களைச் சொல்லவும் பண்ணுகைக்கு முயலாதே நாலுநாள் பொறுத்துப் போகிற பிராணன் முன்னமே போம்படியாக அரற்றுவர்களே.
கலியாணத்திற்கு அழைத்தாலும் வாராதவர்கள் துக்க முண்டாகுங்காலங்களில் தாங்களே வந்து மேல்விழுவர்களென்பது மொய்த்து என்ற சொலாற்றலால் தோன்றும்.
ஆங்கு அலறி முயங்க –இவனுக்குள்ள தெளிவும் போம்படி உடம்பைக் கட்டிக்கொண்டு பெருங்கூச்சலிடுவர்கள்.
இப்படிப்பட்ட நிலைமையிலே, தாம்போகும்போது – இவர்களையும் இவ்வைச்வர்யத்தையும் விட்டுப்போக மனமில்லாமலிருந்தும்,
ம்ருத்யு மீளவொண்ணாமையாலே சரீரத்தைவிட்டுத் தாங்களே போகாநிற்பர்கள், அப்படிப்பட்ட காலத்திலே.
உன்மத்தர்போல் பித்தேயேறி –விரக்தர்களுங்கூட உந்மாத தசையிற்போலே அறிவு கெட்டுக் கலங்கி, அனுராகம் பொழியும்போது –
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரம போக்யங்கள், “இளையாளைப் பொன்னையும் பூட்டிக்கொடுவந்து முன்னே நிறுத்துவர்கள், புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹியாதநாளைக்கும் போர ஸ்நேஹிக்கத் தொடங்கும், ஜீவிகும் நான் லோபத்தாலே இவற்றுகு ஒன்றும் செய்யான், இப்போதாக “புதைத்து வைத்த தனத்தை ஆபரணமாகப் பூட்டிக் காணப்பெற்றிலோம்“ என்று மதகுதிறந்து ஸ்நேஹிக்கும்.“
அனுராகம் பொழியும் விதமிதுவே யென்க. இப்ப கலங்குகிற இவனைத் தனக்கு சேஷமென்று நினைத்திருப்பது போலே இவனும் தன்னை அவனுக்கு சேஷமென்று நினைத்து அல்லது அவனைத் தனக்கு சேஷியென்று நினைத்து அப்பெருமான் பக்கலிலே தன்னெஞ்சு சென்று கூடப் பெற்றதாகில் என்றும் பொருள் கூறுவர்.
“எம்பெருமானோடொத்தே சென்று“ என்பதற்கு –எம்பெருமான் இவனைத் தனக்கு சேஷமென்று நினைத்திருப்பது போலே இவனும் தன்னை அவனுக்கு சேஷமென்று நினைத்து அல்லது அவனைத் தனக்கு சேஷியென்று நினைத்து அப்பெருமான் பக்கலிலெ தன்னெஞ்சு சென்று கூடப்பெற்றதாகில் என்றும் பொருள் கூறுவர்.
———————-
***- கீழ்ப்பாட்டில் அந்திமஸ்மிருதிவேணுமென்று சொல்லிற்று,
அந்த ப்ரஸ்தாவத்தில் ஜீவாதமா வேறு, பரமாத்மா வேறு என்கிற உண்மைப் பொருள் தேறுகையாலே
இப்படியுள்ள ஜீவ பர பேதத்தை யதார்த்தமாகக் கொள்ளாதே, இந்த பேதம் அபரமார்த்தம்,
தத்வஜ்ஞானம் பிறந்த ஆத்மாவும் ப்ரஹ்ம்மும் ஏகதத்வமேயென்று கொண்டு, நித்யஸம்ஸாரியான சேதநனையே
ப்ரஹ்ம்மாகச் சொல்லுகிற மாயாவாதிகள் நினைவுக்கு வர, அவர்களின் பக்ஷத்தை ப்ரதிக்ஷேபிக்கிறார் இப்பாட்டில்.
கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி
எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே–8-8-9-
பதவுரை
| கூடிற்று ஆகில் நல் உறைப்பு |
– |
ஜீவாத்ம ஸ்வரூபமும் பரமாத்ம ஸ்வரூபமும் ஒன்றாகப் பெற்றால் நல்லவாய்ப்புத்தான், |
| கூடாமையை கூடினால் |
– |
அஸம்பாவிதமானவை ஸம்பவிக்கப் பெற்றால் |
| அது |
– |
அந்த ஜீவ்வஸ்துவானது |
| ஆடல் பறவை உயர்கொடி எம்மாயன் ஆவது |
– |
ஆடுபுட் கொடியையுடைய எம்பெருமானாக்கூடும் (இதுதான் அஸம்பாவிதமென்கை) (ஆதலால்) |
| அதுவே |
– |
ஜீவ்வஸ்து வாகவே நிற்குமத்தனை (ஜீவபரபேதம் ஒருகாலும் போகாதென்றவாறு) |
| ஒரு பரிசே விடை பண்ணி |
– |
தங்கள் மனம்போனவொரு விதமாகவே மோக்ஷ வஸ்துவைக் கல்பிப்பார் |
| எதிர்வும் நிகழ்வும் கழிவும் ஆய் |
– |
முக்காலத்து முள்ளாராய் |
| ஒடி திரியும் |
– |
ஸம்ஸார பதவியிலேயே உழன்று கொண்டிருப்பாராய் |
| யோகிகளும் |
– |
(குத்ருஷ்டிகளான) சில மஹாநுபாவர்ளும் |
| உளர், இல்லை அல்லர் |
– |
இருக்கிறார்களே யொழிய இல்லாமற் போகவில்லை. |
| (எதிர்வும் நிகழ்வும் கழிவுமாயுளர், இல்லை யல்லர் |
– |
என்று அந்வயிப்பது) |
கூடிற்றாகில் நல்லுறைப்பு –நித்ய ஸம்ஸாரியான ஜீவஸ்வரூபம் பரமவிலக்ஷண ப்ரஹ்ம ஸ்வரூபமாகக் கூடுமாகில் இது பெறாப் பேறன்றோ என்றபடி. ஆனால் இது ஸம்பாவிதமன்றே என்பதை உடனேயருளிச் செய்கிறார் கூடாமையைக் கூடினா லென்று தொடங்கி
“கூடாமையை“ என்ற விடத்திலுள்ள ஐகாரம் சாரியை, கூடாமை கூடினால் என்றதாகக் கொள்க.
முயற்கொம்பு, ஆகாசத் தாமரை, மலடிமகன் என்று சொல்லுகிறவிவை கூடினால் என்றபடி. உலகில் அஸங்கதங்களானவை ஸங்கதமாகக் கூடுமானால்,
ஆடல்பறவையுயர் கொடியெம்மாயனாவது –ஜீவாத்மா பரமாத்மாவாக ஆய்விடமுடியும்.
இந்த ஸம்ஸாரி சேதநனே பரப்ரஹ்ம்மாக ஆய்விடுகிறபக்ஷத்தில் எம்பெருமானுக்குள்ளதான கருடவாஹனத்வமும் இவனுக்கு ஸம்பவிக்க வேண்டியதாகுமன்றோ, இது ஸம்பாவிதமாகுமோ? இதை ஆலோசிக்கலாமே – என்கைக்காக ஆடல்பறவை யென்றிட்டது.
ஜீவாத்மபரமாத்மாக்களுக்கு பேதமேயொழிய ஐக்கியம் ஒருநாளும் ஸம்பவியாதென்பதை நிகமித்தருளுகிறார்
அது அதுவேயென்று. அவ்வஸ்து அவ்வஸ்துவே யென்றபடி. ஜீவன் ஜீவனேயென்க.
இனிப் பின்னடிகளாலருளிச் செய்வதாவது, இப்படி அஸம்பாவிதமானதைச் சொல்லுவார் சிலருளரோவென்ன, அப்படிப்பட்ட மஹானுபாவர்களும் எக்காலத்திலும் இருக்கின்றார்களே, இல்லாமற்போகவில்லையேயென்று.
(வீடைப்பண்ணி ஒருபரிசே) “ஒருபரசே அவித்யா நிவ்ருத்தியே மோக்ஷமெனறு ஒனறைக்கட்டியென்கை. ஒரு பரிசே யென்றது ஸ்வக போலகல்பனையான ஒரு ப்ரகாரமாய் என்றவாறு ஒன்றைக்கட்டியென்க.
ஒரு பரிசே யென்றது ஸ்வக போலகல்பனையான ஒரு ப்ரகாரமாய் என்றவாறு.
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் – முக்காலத்துமுள்ளவர்களாய். ஓடித்திரியும் யோகிகளுமுளர் –ஜன்ன மரண சக்ரத்திலேயே கிடந்து ஒடித்திரியும் குத்ருஷ்டிகளாகிற மஹானுபாவர்களும் உண்டாயிருக்கிறார்களே, இல்லையல்லரே – இல்லாமையில்லையே,
இங்கே ஈடு, “காலம் அநாதி, பண்ணிவைக்கும் பாபங்களுக்கு எல்லையில்லை, இப்படியிருப்பார் சிலமஹாபுருஷர்கள் உண்டாக்கக் கூடாதோ? ஸம்ஸாரத்தில் கூடாத்துண்டோ?
இங்கு யோகிகளென்றது உண்மையான யோகிகளைச் சொன்னபடியன்று, க்ஷேபித்துச் சொல்லுகிறபடி, எதிர்மறையிலக்கணை.
யோகிகளுமென்ற விடத்து, உம்மை –இதை நிறை. வீட்டை என்றிருக்கவேண்டுவது வீடை என்றிருப்பது எதுகைநயம்பற்றி.
————
***- இப்படிப்பட்ட ஆத்மஸ்வரூபத்தை எனக்குக் காட்டிக் கொடுத்து, பாஹ்ய குத்ருஷ்டிமதங்களில் நான் கைகழியப் போகாதபடி
என்னெஞசிலே எம்பெருமான் புகுந்திருக்கையாலே
என்னுடைய ஸாம்ஸாரிக க்லேசமெல்லாம் தீரப்பெற்றேனென்று களித்துப் பேசும் பாசுரமிது.
உளரும் இல்லை அல்லராய்
உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து
என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே
அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10-
பதவுரை
| இல்லை அல்லர் ஆய் உளரும் |
– |
(அடியார்களுக்கு)இல்லை யென்னாதபடி உளராயிருப்பவராய்) |
| இல்லை ஆகியே |
– |
(மற்றையோர்க்கு) இல்லையாகியே உளராயிருப்பவராய் |
| எம் ஒருவர் உளர் |
– |
எம்பெருமானுளர் |
|
அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் |
||
| வளரும் பிறைப் போலே ஆக்கமும் |
– |
வளர் பிறைக்கு உள்ளது போலே வளர்ச்சியும் |
| தேய் பிளை போல அசைவும் |
– |
க்ருஷ்ணபக்ஷ சந்திரனுக்கு உள்ளதுபோலே தேய்வும் உடைத்தாகி |
| வளரும் கடரும் இருளும் போல் |
– |
ஸூரியனும் இருளும் போலே மாறி மாறி வரக்கூடியதான |
| தெருளும் மருளும் மாய்த்தோம் |
– |
கழித்துக்கொள்ளப்பெற்றோம். |
முதலடிக்கு இரண்டு வகையாகப் பொருள் நிர்வஹிப்பர்கள், உளருமில்லையல்லராய் என்று ஸேச்வரஸாங்க்யமதாநுவாதம், இல்லையாகியே உளராய் என்று நிரீச்வரஸாங்க்யமதாநு வாதம்.
“ஈச்வரனென்பானொருவனுளன், இல்லையென்னவொண்ணாதே அஸ்திமாத்ரமாயிருக்கும்“ என்பது ஸேச்வர ஸாங்க்யமதம்.
இனி, “இல்லையாகியே அவருடைய வுண்மை“ என்பது நிரீச்வரஸாங்க்யமதம்.
அந்த பக்ஷங்களை நிரஸிப்பதாக ஒரு நிர்வாஹம்.
மற்றொரு நிர்வாஹமாவது -* மெய்யர்க்கே மெய்யனாகும் –பொய்யர்க்கே பொய்யனாகும் * என்று திருமாலையிலருளிச் செய்தபடியே, மெய்யரான அடியார்கட்கு இல்லையல்லராய் உளராயிருப்பர், பொய்யான அநாச்ரிதர்க்கு இல்லையாகியேயுளராயிருப்பர் என்பதாக.
(உளரெம்மொருவர்) திருக்குணங்கள் விபூதிகள் முதலியவற்றால் பூரபூர்ணராய்க் கொண்டு உளராய் அவற்றைக் காட்டி யென்னையடிமைகொண்ட அத்விதீயர் என்றபடி.
அவர்வந்து என்னுள்ளத்துள்ளே யுறைநின்றார் –அப்படிப்பட்டவர்வந்து தாம் மயர்வறமதிநல மருளித்திருத்தின எனது நெஞ்சிலே நித்யவாஸம் பண்ணுநின்றார்.
ஆனபின்பு சந்திரனுக்குப் போலே மாறிமாறி வரக்கடவதான வளர்ச்சியும் அழிவும் இல்லாதபடியாகவும்,
சூரியனும் இருளும் மாறிமாறிவருகிறாப்போலே ஜ்ஞானமும் அஜ்ஞானமும் மாறிமாறி வாராதபடியாகவும்
ஆத்ம தர்சனத்தில் ஏக ரூபமான ஞானம் விளைப் பெற்றோமென்றாராயிற்று.
————-
***- இத்திருவாய்மொழி பகவத் ப்ராப்தியைப் பண்ணி தருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
தெருளும் மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-
பதவுரை
| தெருளும் மருளும் மாய்த்து |
– |
ஜ்ஞாரா ஜ்ஞானங்கள் கலசிவருகிற ரீதியை யொழித்து |
| தன் |
– |
தன்னுடைய |
| திருந்து செம்பொன் கழல் அடி கீழ் |
– |
அழகிய செம்பொன்னாலான வீரக்கழணிந்த திருவடிகளின் கீழே |
| அருளி இருத்தும் |
– |
பரம கிருபைபண்ணி ஸ்தாபிக்கிற |
| அம்மான் ஆம் |
– |
ஸ்வாமியாய் |
| அயன் ஆம் சிவன் ஆம் திருமாலால் |
– |
பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை நிர்வஹிக்கிற எம்பெருமானாலே |
| அருளப்பட்ட |
– |
மயர்வற மதிநலமருளப்பெற்ற |
| சடகோபன் |
– |
நம்மாழ்வாருடைய |
| ஓர் ஆயிரத்துள் இ பத்தால் |
– |
ஆயிரத்துள் இப்பதிகம் நிமித்தமாக |
| நம் அண்ணல் கருமாணிக்கம் |
– |
கரியமாணிக்கம் போன்ற நம் ஸ்வாமி |
|
(இத்திருவாய்மொழியை ஓதுமவர்களை) |
||
| அருளி அடி கீழ் இருந்தும் |
– |
கிருபை பண்ணித் தன் திருவடிகளின்கீழே இருத்துவன் |
தெருளும் மருளும் மாய்த்து –தெருளாவது ஞானம். மருளாவது அஜ்ஞானம், மருளைமாய்க்கலாமேயல்லது தெருளையும் மாய்க்கலாமாவென்று சங்கை தோன்றும்.
மருள் கலசாத தெருள் உத்தேச்யமேயொழிய மருளோடு கலசிவருகிற தெருள் உத்தேச்யமன்றே,
அப்படிப்பட்ட தெருளையே மாய்த்ததாக இங்குச் சொல்லுகிறது.
“ஸ்வாநுபவவிரோதியான ப்ராக்ருத விஷயஜ்ஞாநாஜ்ஞாநங்களை வாஸநையோடே போக்கி“ என்பது ஈடு.
தன்திருந்து செம்பொற் கழலடிக்கீழருளியிருத்தும் –அடியார்களை வேறொருவர் காலில் குனியவிடாமல்,
ஸ்ப்ருஹணீயமாய் வீரக்கழலையுடைத்தான தன் திருவடிகளின்கீழே நிர்ஹேதுக கிருபையினால் ஸ்தாபிக்குமியல்வின் எம்பெருமானென்க.
அயனாம் சிவனாம் திருமால் -* மூவர்காரியமுந்திருந்தும் முதல்வன் * என்று பெரியாழ்வார்ருளிச் செய்தபடி
ஸ்ருஷ்டி ஸம்ஹாரத்தொழில்களை நிர்வஹிக்கைக்காப் பிரமனையும் சிவனையும் அநுப்ரவேசித்திருக்கும் திருமால் என்றபடி.
எம்பெருமானாலே மயர்வறமதிநலமருளப்பெற்ற ஆழ்வார்ருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்தும் வல்லாரை அப்பெருமான் அருளித் தன் திருவடிகளின் கீழ்ப் பணிசெய்யக் கொண்டருள்வனென்று
————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 14, 2022 at 2:33 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply