***- இராம பிரானுடைய ஒரு விலக்ஷ்ணமான தன்மையை யருளிச் செய்கிறாரிதில்.
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-
பதவுரை
| புல் பா முதல் ஆ |
– |
புல்லாகிற பதார்த்தம் முதலாகவும் |
| புல் எறும்பு ஆதி |
– |
மிக அற்பமான எறும்பு முதலாகவும் |
| நல் பால் அயோத்தியில் வாழும் |
– |
(ராமகுணங்கள் நடையாடுகிற) நல்ல தேசமான அயோத்யாபுரியில் வாழ்கிற |
| சராசரம முற்றவும் |
– |
ஸ்தாவர ஜங்கமங்களானவை யெல்லாவற்றையும். |
| ஒன்று இன்றியே |
– |
ஒருவிதமான ஸாதநாநுஷ்டானமுமில்லாமலிருக்கச் செய்தேயும் |
| நான் முகனார் பெற்ற நாட்டுளே |
– |
பிரமன் படைத்த இவ்வுலகுக் குள்ளே |
| நல பாலுக்கு உய்த்தனன் |
– |
நல்ல ஸ்வபாவத்தையுடைத்தாம் படி பண்ணினான்; |
|
(ஆதலால்) |
||
| கற்பார் |
– |
(உலகில்) கற்க விரும்பு மவர்கள் |
| இராமபிரானை அல்லாமல் மற்றும் கற்பரோ |
– |
(குணக்கடலாகிய) ஸ்ரீராமனைத் தவிர மற்றொரு வ்யக்தியைக் கற்க நினைப்பர்களோ? |
தசரத சக்ரவர்த்தியின் கட்டளையின்படி இராமபிரானைத் தேரிலேற்றிக் கொண்டு போய்க் கங்கைக்கரையில் விட்டுத் திரும்பியவத்த சுமந்த்ரன் சக்ரவர்த்தியிடம் சொல்லுகிறான்-
விஷயே தே மஹாராஜ! ராமவ்யஸநகர்சிதா: அபிவ்ருகூஷா: பரிம்லாநாஸ் ஸபுஷ்பாங்குர கோரகா: உபதப்தோதகா நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச, பரிசுஷ்கபலாகாநி வநாந்யுபவநாநி ச என்றான்.
மஹாராஜரே! உம்முடைய திருக்குமாரன் நாட்டைவிட்டுக் காட்டுக்குப் புறப்பட்டுச் செல்லுகிறேனேயென்கிற துயரத்தினால் மரங்களெல்லாம் வாடி யுலர்ந்துபோயின; நதிகள், குளங்கள், குட்டைகளெல்லாம் கரையருகிலும் அடிவைக்க வொண்ணாதபடி கொதிப்படைந்தன; சிறிய தோட்டங்கள் பெரிய தோட்டங்களென்கிற வாசியின்றிக்கே பொழில்களெல்லாம் இலையுலர்ந்து அழகழியப் பெற்றன என்கிறான்.
இப்படி அசேதநவஸ்துக்களையுங்கூட விசாரப்படுத்திக்கொண்டே காட்டுக்கெழுந்தருளினவன் பதினாலாண்டு கடந்த பிறகு மீண்டு திருபயோத்தித்கு எழுந்தருளுகையில் அகால பலிநோவ்ருகூஷா: என்னும்படியாயிற்று.
ஆகவிப்படி தன்னுடைய விச்லேஷத்தில் வாடியுலர்ந்தும் ஸம்ச்லேஷத்தில் செழிப்பற்றோங்கியும் நின்றன அசேதனங்களென்றால் அவன்றன்னுடைய குணப்பெருமையை என்னென்று சொல்லுவது!
கூரத்தாழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில்-வம்சம் ரகோரநுஜிக்ருக்ஷுரிஹாவதீர்ண: திவ்யைர் வவர்ஷித ததாத்ர பவக்குணௌகை: த்வத்ஸந்நிதி ப்ரபவசைத்யஜீஷோ யதாஹி; வ்ருகூஷாச்ச தாந்திமலபந்த பவத்வியோகே என்றச்லோகத்தினால் இக்குணத்திற்கு உருகினார்.
ஆசார்ய ஹருதியத்தில் “கோஸல கோகுலசராசரம் செய்யுங் குண மொன்றின்றியே அற்புதமென்னக் கண்டோம்” என்ற சூர்ணையும் அதன் வியாக்கியானமும் ஸேவிக்கத்தக்கன.
இப்பாசுரத்தில் “புற்பாமுதலா” என்று தொடங்கி மூன்றடிகளாலும் கீழே விவரித்த மஹா குணமே அருளிச் செய்யப்படுகிறதாகப் பிள்ளான் முதலான ஸகல ஆசாரியர்களும் ஒரு மிடறாக அருளிச்செய்தார்கள்.
ஸ்ரீவேதாந்த தேசிகர் ஒருவர் தாம் த்ரமிடோபநிஷத் தாத்பாய் ரத்நாவளியில் இத்திருவாய்மொழிக்கான ச்லோகத்தில் இப்பாசுரத்தின் பொருளாக—ஸாகேதே முக்திதாநாத்” என்றருளிச் செய்தார்; அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றிய கதையை இப்பாசுரத்திற்கு அர்த்தமாகக் கருதினார்.
ஆறாயிரப்படி ஸ்ரீஸீக்தி காண்மின்;-“ப்ராக்ருத வஸ்துக்களே தாரக போஷக போக்யமாயிருக்கக் கடவ இப் ப்ரக்ருதிமண்டலத்திலே வைத்துக்கொண்டு திருவயோத்யையிலே வர்த்திக்கிற தூர்வாதி நிகில ஜந்துக்களையும் கர்மயோகாத்யு பாயம் பண்ணுதிருக்கச் செய்தேயும் திருநாட்டிலுள்ளாரைப்போலே தன் திருவடிகளே தாரக போஷக போக்யமாக்கியருளின் இம மஹாகுணத்தை யுடையனாயிருந்த இராமபிரானையல்லாமல் மற்றுங் கற்பரோ வென்று அவனுடைய குணங்களை யநுபவிக்கிறார்.” என்று
இப்படியிருக்கவும் தேசிகன் வேறுவகையாகப் பொருள் கூறியது வாதிகேஸாஜீ அழகியமணவாளச் சீயருடைய பன்னீராயிரவுரையில் ப்ரதிபத்தியின் கனத்தாலே யென்று தெரிகிறது. அவ்வுரையில் அங்ஙனே பொருளுரைக்கப்பட்டது.
மற்றுங் கற்பரோ” என்ற விடத்து மற்றும் என்றது தேவதாந்தரங்களைக் கருதியன்று; ஸ்ரீராமாவதாரந்தவிர மற்றுள்ள விபவ வவதாரங்களையும் பரத்வாதி நிலைகளையும்..
பாவோ நாந்யத்ர கச்சதி என்று திருவடி சொன்னதும், என்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றிகளைக் காணாவே என்று திருப்பாணாழ்வார் அருளிச் செய்ததும் இங்கே நினைக்கத்தக்கன.
புற்பாமுதலா-பா என்று வஸ்துவைச் சொல்லுகிறது; புல்லாகிற வஸ்து முதற்கொண்டு என்றபடி.
அன்றியே, பா—பரம்பின, புல் முதலா என்றும் யோஜிப்பதுண்டு. ஒன்றின்றியே நிர்ஹேதுகமாகவென்றபடி.
நானமுகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன்-நற்பாலென்றது நல்ல பான்மை யென்றபடி. விலக்ஷணமான ஸ்வபாவம;
அதாவது இராமபிரானுடைய குணங்களையே தாரக போஷக போக்யமாகக் கொண்டிருக்கையாகிற வைலக்ஷண்யம்.
இப்படிப்பட்ட தன்மைக்கு ஆளாம்படி செய்தனன் என்கை.
இங்கே ‘நான்முகனார் பெற்ற நாட்டுளே’ என்றதற்கு ப்ரயோஜனமென்? என்னில்; பிரமனை நியாமகனாக்கி அவனுக்கு வசப்பட்டதாம்படி செய்திருக்கிற இந்த நாட்டிலே புல்லெறும்பு முதலானவற்றுக்கு வேறே உணவுகள் நியதங்களாயிருக்கவும் அந்த நியதியை (நாட்டின் தன்மையை)த் தவிர்த்தருளின்படி சொல்லுகிறது.
——————-
நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-
பதவுரை
| நாட்டில் பிறந்தது |
– |
(தன்வாசியறியாத) இக்கொடிய வுலகத்திலே வந்து பிறந்தது |
| படாதனபட்டு |
– |
ஸம்ஸாரிகளும் அநுபவியாத கிலேசங்களையநுபவித்து |
| மனிசர்க்கு ஆ |
– |
செய்தநன்றியறியாத மனிசர்களுக்காக |
| நாட்டை நலியும் அரக்கரை நாடி தடிந்திட்டு |
– |
உலகத்தை ஹிம்ஸிக்கின்ற ராவணாதி ராக்ஷ்ஸர்களை ஆராய்ந்து சென்று கொன்று |
| நாட்டை அளித்து |
– |
(இப்படியாக) நாட்டைரக்ஷித்து |
| உய்ய செய்து |
– |
உஜ்ஜீவனப்படுத்தி |
| நடந்தமை கேட்டும் |
– |
பின்பு திருநாட்டுக்கு நடந்த படியைக் கேட்டிருந்தும் |
| நாட்டில் பிறந்தவர் |
– |
(அப்பெருமானுடைய திருக்குணங்கள் நடையாடுகிற) நாட்டிலே பிறந்தவர்கள் |
| நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ |
– |
நாராயணனான அந்த ஸ்ரீராமனுக்கல்லது மற்றொருவர்க்கு ஆட்படுவர்களோ? |
“அவதாரகார்யம் சமைந்தவளவிலே எழுந்தருளுகையன்றியே பதினோராயிரமாண்டு எழுந்தருளியிருந்து ரக்ஷித்த சீலாதிக்யத்தை யருளிச் செய்கிறார்” என்பது பன்னீராயிரப்படியின் அவதாரிகை.
“தன்னை யொழியச் செல்லாமையைப் பிறப்பித்து இங்கே யவர்களை யிட்டுவைத்து, தானே யெழுந்தருளுகை யன்றிக்கே கூடக்கொண்டுபோனானென்று, கீழ்ச்சொன்னவதிற் காட்டில் அதிக குணத்தை யருளிச்செய்கிறார்” என்பது பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸீக்தி.
நாட்டில் பிறந்தவர் நாரணற்கன்றி ஆளாவரோ? ஸ்ரீராமகுணங்கள் நடையாடுகிற தேசத்திலே பிறந்த பாக்கியசாலிகள் அந்த ஸ்ரீராமபிரானுக்கன்றி யாளாவரோ? என்றபடி.
ராவணவதமானபிறகு நான்முகக்கடவுள் வந்து பவாந் நாராயணோ தேவ: என்றனனாதலால் இங்கு இராமபிரானை நாராயண சப்தத்தினாலகுளிச்செய்கிறபடி.
நாட்டில் பிறப்பது நாராயணனுக்கு (இராமபிரானுக்கு) ஆளாவதற்காகவே யென்பது முதலடியின் கருத்து.
மேல் மூன்றடிகளாலே அவன் செய்த மஹோபகாரத்தைக் சொல்லுகிறது.
கருமங்களுக்கு வசப்பட்ட ஸம்ஸாரிகளுங்கூட அருவருக்கும்படியான நாட்டிலே வந்து பிறந்தானே! என்று இதை நினைத்து உருக அருவருக்கும்படியான நாட்டிலே வந்து பிறந்தானே! என்று இதை நினைத்து உருக வேண்டாவோ?
நாமெல்லாரும் பத்துமாஸம் கர்ப்பவாஸம் பண்ணினால் அவன் ததச்ச த்வாதசே மாஸே என்னும்படி பன்னிரண்டு மாஸம் கர்ப்பவாஸம் பண்ணினானே! என்று இதையும் நினைத்து உருகவேண்டாவோ?
இப்படி பிறந்தது மாத்திரமேயோ? ஸம்ஸாரிகள்படாத பாடுகளையும் பட்டானே!,
ஒருவன் பிறந்தால் இருக்கும் நாள் தானும் தன் மனைவியுமாகச் சேரவிருந்து ஜீவித்துப்போவதுண்டே, அப்படியுமன்றிக்கே பிராட்டி ஓரிடத்திலும் தான் மற்றோரிடத்திலுமாக வர்த்திக்க வேண்டினது முதலாகப்பட்ட பாடுகளையும் நினைத்து உருகவேண்டாவோ?
இப்படிபடாத பாடுகள் பட்டது யாருக்காக? (மனிசர்க்கா) தங்களுக்காக அநுக்ரஹத்தாலே படுகிற இந்த மஹா குணத்தை குணஹாநியாச் சொல்லி நிந்திக்கும் நன்றி கெட்ட நம்போல்வார்க்காகவன்றோ இத்தனை பாடு பட்டது என்று, இதை நினைத்தும் உருகவேண்டாவோ?
இன்னமும் விரோதி நிரஸனங்கள் பண்ணின படிகளையும் நினைக்க வேண்டாவோ?
ஈற்றடிக்கு ஆறாயிரப்படி காண்மின்;- “இப்படி லோகத்தை ரக்ஷித்தருளியதும்- ந:க்ருதம் கார்யம்-ப்ரஹருஷ்டோ திவமாக்ரம் என்று ப்ரஹ்மா விண்ணப்பஞ் செய்தபோதே யெழுந்தருளாதே ஸ்வ விச்லேஷத்தாலே விநஷ்ட ப்ராயமான திருநகரியில் சராசர ஜந்து ஜாதத்தை யெல்லாம் மீண்டெழுந்தருளி யுய்யச் செய்து பின்னைத் திருநாட்டிலே யெழுந்தருளின இம் மஹா குணத்தைக் கேட்டும் சேதநராபிருப்பர் பவாந் நாராயணோ தேவ: என்று சொல்லப்படுகிற தசரதாத்மஜனான நாராயணனுக்கு அடிமையாகாதிருக்கும்ப்டி யெங்ஙனே யென்கிறார்.”
ஈட்டு ஸ்ரீஸீக்தி காண்மின்;- நிரபராதமான நாட்டை நலிகிற ராவணாதி கண்டகரை அவர்களிருந்த விடங்களிலே தேடிச் சென்று கொன்று லங்காத் வாரத்திலே விஜயஸ்ரீ பரிவ்ருதராய்க் கொண்டெழுந்தருளி நிற்க, அவ்வளவிலே ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து ததிதம் ந: க்ருதம் கார்யம்-ப்ரஹருஷ்டோ திவமாக்ரம என்று, நாங்கள் அர்த்தித்தவையடைய எங்களளவு பாராதே தேவரீர் செய்தருளிற்று; இனி தன்னுடைச்சோதியேற எழுந்தருளவமையும் என்ன; அவ்வளவிலே ருத்ரன் ‘நாடடைய தேவரீருடைய விச்லேஷத்தாலே விநஷ்ட ப்ராயமாய்க்கிடக்கிறது; திருத்தாய்மாரையும் திருத்தம்பிமாரையும் திருப்படைவீட்டிலுள்ள ஜனங்களையும், மீண்டுபுக்குச் சிலநா ளெழுந்தருளியிருந்து ஈரக்கையாலே தடவிரக்ஷித்தெழுந்தருள வேணும்’ என்ன, கடல் ஞாலத்தளிமிக்கானென்னும்படியே பதினோராயிரமாண்டு எழுந்தரூளியிருந்து ரக்ஷித்தபடியைச் சொல்லுகிறது—நாட்டை யளித்தென்று.”
உய்யச் செய்து நடந்தமை யென்றது—நெடுநாள். இருந்து, தன்னாலல்லது செல்லாதபடி பண்ணி அவர்களை யெல்லாம் விட்டுப்போகாதே கூடவே கொண்டு போனபடியைச் சொன்னவாறு.
—————-
***- நிச்சலும் சிந்திப்பது தவிர வேறொன்றுமறியாத சிசுபாலனையுமுட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட மஹாகுணத்தை
யறிந்தவர்கள் அப்படிப் பட்ட குணவானுடைய திருக்குணங்களையன்றோ காதாரக் கேட்கவேணுமென்கிறார்.
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-
பதவுரை
| கேட்பார் |
– |
எம்பெருமானுடைய நிந்தைகளையேகா தாரக்கேட்கவேணுமென்கிற விருப்பமுடையவர்களுக்குங் கூட |
| செவி சுடு |
– |
கர்ணகடோரமான |
| கீழ்மை வசவுகளேவையும் |
– |
மிகத் தண்ணிய தூஷணைகளையிட்டு தூஷிக்குமவனாய் |
| சேண் பால் பழம் பகைவன் சிசுபாலன் |
– |
நெடுங்காலத்துப் பகைவனான சிசுபாலனுங்கூட |
| திரு அடி |
– |
ஸ்லாமியான கண்ண பிரானுடைய |
| தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்தும் |
– |
திருவடிகளிலே ஸாயுஜ்யம்பெற்றபடியை யறிவாரை அறிந்து வைத்தும், |
| கேட்பார்கள் |
– |
நல்லது கேட்க வேணுமென்றிருக்குமவர்கள் |
| கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ |
– |
எம்பெருமானுடைய கீர்த்திகளை யொழிய வேறொன்று கேட்பாரோ? |
கேட்பார்கள் என்றது—செவிடராயிருக்கை யன்றிக்கே செவிப்புலனையுடையவர்கள் என்றபடி. கேசவன் கீர்த்தியைக் கேட்பதே காதுக்கு ப்ரயோஜனமென்ற தாயிற்று
தொண்டர்க்கு இனியானைக் கேளாச்செவிகள் செவியல்ல கேட்டாமே என்றார் திருமங்கையாழ்வாரும்.
காது குளிர கேட்கவேண்டிய கேசவன்கீர்த்திந்களில் ஒரு கீர்த்தியை யெடுத்துரைக்கின்றார் மேல் மூன்றடிகளில்.
எம்பெருமானை நிந்திப்பவர்கள் பலருளர் என்றாலும் சிசுபாலனைப் போல் நிந்திப்பவர்கள் இலர். அவன் நிந்திப்பது எங்ஙனேயிருக்குமென்னில்; (கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளேவையும்) இங்கே ‘கேட்பார்’ என்றதற்கு ஆசாரியர்கள் அருளிச்செய்யும் பொருள் ஆச்சரியமானது.
ஈடு;-“பகவந்நிந்தைக்கு ஜீவனம் வைத்துக்கேட்கும் தண்ணியர்களுங் கூடப் பொறுக்க மாட்டாமை செவி புதைத்து இத்தனை அதிரச் சொன்னாய், இப்படி சொல்லப்பெறாய் காண், என்று சொல்லும் படியான வசவுகளே வைகை” என்பதாம்.
அதாவது பகவத் ஸன்னிதிகளிலே வேதபாராயணம் செய்தல் அருளிச் செயலோதுதல் மற்றும் ஸ்ரீராமாயண பகவத்கீதாதி பாராயணஞ் செய்தல் முதலானவற்றுக்காக மஹாதார்மிகர்கள் நிதியேற்படுத்தி உபகரிப்பது போலே’ பகவானை இரவும் பகலும் நிந்திப்பவர்களுக்கு நாங்கள் நிதி வைத்திருக்கிறோம்’ என்று சொல்லி மிகுந்த ஆதரத்தோடு பகவந்நமிந்தனைகளைக் கேட்பாரும் சிலர் இருக்கக் கூடுமே;
அப்படிப்பட்டவர்களுங் கூடசிசுபாலன் செய்யும் பகவாநிந்தைகளைக் கேட்குமளவில் ‘அப்பப்ப! இவ்வளவு கடோரமாக நிந்திக்கை தகுதியன்று; இது எங்களாலும் கேட்கப்போகவில்லை’ என்றுசொல்லிக் காதை மூடிக் கொள்ளும்படியிருக்குமாம்.
அப்படிப்பட்ட கொடிய நிந்தகனாம் சிசுபாலன். அவன் இப்பிறவியில் மாத்திரமன்று பகைவனானது; மற்றும் பல ஜன்மங்களிலே இப்படிப்பகைவனாயிருந்தா னென்கிறது சேட்பால் பழம்பகைவன் என்று. ப்ரதிபவமபராத்து: என்றார் ஆளவந்தாரும்.
அவனுக்குங் கூட தன் திருவடிவாரத்தில் அத்தாணிச்சேவகத்தை யளித்திட்டானன்றோ
அருட்கடலான எம்பெருமான். திருமழிசைப்பிரானும் திருச்சந்த விருத்தத்திலே வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர் செய்து நின்ன செற்றத்தீயில் வெந்தவர்க்கும் வந்து உனையெய்தலாகுமென்பர்’ என்றருளிச்செய்தார்.
சிசுபாலனிடத்தில் என்ன நன்மை கண்டு எம்பெருமான் இங்ஙனே அருள்செய்தானென்னில்; வைகிறவனுக்கும் பேர் சொல்லி வையவேணுமே; ஆகவே நாமஸங்கீர்த்தந ஸீக்ருதம் பெரியதுங் கண்டானாயிற்று எம்பெருமான்.
திருவடிதாட்பாலடைந்த—திருவடியென்றது ஸ்வாமிவாசகம் பூத்த்திருவடி தாள்கள் என்ற இராமானுச நூற்றந்தாதியுங் காண்க.
“தாட்பாலடைந்த தன்மையறிந்துமே” என்றாலே போதுமாயிருக்க, “தன்மையறிவாரையறிந்துமே” என்றது ஏதுக்காக வென்னில்; முதலடியிலே கேட்பார்கள் மற்றுங் கேட்பரோ என்று சொல்லியிருக்கையாலே, கேட்குமவர்கள் குணஜ்ஞர்களிடத்திலன்றோ கேட்கவேணும்; இப்படிப்பட்ட மஹாகுணஜ்ஞர்கள் இல்லாமற் போகவில்லையே. அன்னவர்கள் இருக்கிறார்களென்பதை யறிந்து வைத்தும் அவர்கள் பக்கலிலே சென்று இத்தகைய மஹா குணங்களைக் கேளாதே மற்றுங் கேட்பரோ என்றபடி.
—————
***- ப்ரளயத்திலே மங்கிக் கிடந்த ஜகத்தை மீளவு முண்டாக்கின மஹா குணத்தை யறிந்து
வைத்தால் இப்படிப்பட்ட குணசாலிக்கே யன்றோ ஆளாகப் பெற வேணுமென்கிறார்.
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-
பதவுரை
| பன்மை படர் பொருள் ஆதும் இல்பாழ் நெடுங்காலத்து |
– |
பலவகைப்பட்ட விரிவான பதார்த்தங்கள் ஒன்றுமில்லாதபடி வெகுகாலம் சூந்யமாயிருந்தபோது |
| நன்மை புனல் பண்ணி |
– |
நன்மை மிகுந்த காரணஜலத்தை முந்துற முன்னம் ஸ்ருஷ்டித்து |
|
(பிறகு) |
||
| நான்முகனை பண்ணி |
– |
பிரமனைப் படைத்து |
| தன் உள்ளே |
– |
தன்னுடைய ஸ்வருபத்தின் ஏகதேசத்திலே |
| தொன்மை மயக்கிய |
– |
பண்டு தான் ஸம்ஹரித்த பதார்த்களை |
| தோற்றிய |
– |
பழையபடி உண்டாக்கின |
| சூழல்கள் |
– |
இப்படிப்பட்ட மஹா குணங்களை |
| சிந்தித்து |
– |
சிந்தனை செய்து |
| தன்மை அறிபவர் தாம் |
– |
அவனுடைய அஸாதாரண லக்ஷ்ணத்தை அறியவல்லவர்கள் |
| அவற்கு அன்றி ஆள் ஆவரோ |
– |
அப்பெருமானுக் கொழிய வேறொருவனுக்கு அடிமைப்படலாகுமோ? |
தன்மையறிபவர் என்றது—தத்வஸ்திதியை உள்ளபடியே யறியுமவர்கள் என்றபடி
விசித்ராதேஹஸம்பத்திரீச்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹமந் ஹஸ்தபாதா திஸம்யுதா” என்கிறபடியே நம்முடைய கரணக்ராமங்கள் பகவத் விஷயத்தில் அந்வயிப்பதற்காகவே படைக்கப்பட்டன வென்கிற தத்துவத்தையறியும் விவேகிகள் என்றதாயிற்று. மற்றும் பலவகையாகவும் நிர்வஹிப்பதுண்டு.
தன்னைப் படைத்தவனுக்குத் தான் அடிமையாகவேணுமென்பதை ஒருவர் சொல்லவேணுமோ?
“கச்ச த்யேய:? காரணம் து த்யேய:” என்றன்றோ ஒதிற்று. முதல் தனிவித்தாகிய மூலக் காரணப் பொருளை யறிந்து அதற்கன்றோ ஆட்படவேணும்;.
தேவ மநுஷ்யாதிரூபத்தாலே பலவகைப்பட்டு, கருமங்களுக்கேற்றவாறு விஸ்த்ருதமான பதார்த்தங்கள் ஒன்றுமில்லாத காலத்து, முற்பட ஜலஸ்ருஷ்டியைப் பண்ணி, பின்னே சதுர்முகனையும் ஸ்ருஷ்டித்து, தன் ஸங்கல்ப ஸஹஸ்ரத்தின் ஏகதேசத்திலே சேதநாசேதநஸமஸ்த வஸ்துக்களையும் ஸ்ருஷ்டித்தருளின் இந்த மஹாகுணத்தை யநுஸந்தித்தால் அந்த பரம காருணிகனுக்கன்றி மற்றுமொருவற்கு ஆளாக வழியுண்டோ வென்றாராயிற்று.
————-
***- அழிந்த ஜகத்தை யுண்டாக்கினவளவே யல்லாமல், அந்தஜகத்தை ப்ரளயங்கொள்ள மஹாவராஹமா யெடுத்து
ரக்ஷித்த மஹாகுணத்தை யநுஸந்தித்தால் அவன்திருவடிகளே தஞ்ச மென்றிருக்க வேண்டாவோவென்கிறார்.
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–7-5-5-
பதவுரை
| பெரு புனல் தன்னுள் ஆழ அழுந்திய ஞாலத்தை |
– |
எல்லையற்ற பிரளய ஜலத்திலே மிக ஆழமாக அழுந்திக்கிடந்த பூமியை |
| தாழப்படாமல் |
– |
அநர்த்தப்படாதபடிக்கு |
| தன் பால் ஒரு கோடு இடை தான் கொண்ட |
– |
தன் திருமேனியில் ஏக தேசமாயிருப்பதொரு கோட்டினிடத்திலே தானாகவே இடந்தெடுத்துக் கொண்ட |
| கேழல் திரு உரு ஆயிற்று |
– |
ஸ்ரீ வராஹரூப மெடுத்த படியை |
| கேட்டும் உணர்ந்தும் |
– |
இதிஹாஸ புராணமுகங்களாலே கேட்டும் மனனம் பண்ணியும் வைத்து |
| சூழல்கள் சிந்திக்கில் |
– |
தம்தமமுடைய அபி மதங்கள் ஸித்திப்பதற்கு விரகு பார்க்குமளவில் |
| மாயன் கழல் அன்றி சூழ்வரோ |
– |
ஆச்சரிய சேஷ்டிதனான அப்பெருமானுடைய திருவடிகளையொழிய வேறொன்றை ஆச்ரயிப்பரோ? |
சூழல்கள் சிந்திக்கில்- சூழலாவது உபாயம்? ,நமக்கொரு உஜ்ஜீவநோ பாயம் சேமித்து வைத்துக் கொள்ள வேணுமே, என்று சிந்திப்பாருண்டே அங்ஙனே சிந்தைசெய்யுமளவில் என்றபடி.
மாயன் கழலன்றிச் சூழ்வரோ?—ரக்ஷ்ய வர்க்கங்களை ரக்ஷிக்கவேண்டு மென்று நினைத்தவளவிலே தன்னை யழியமாறியும் காரியஞ் செய்யத துணியும் மாயவனது கழலையன்றி மற்றொன்றைப் பற்றுவாருண்டோ?
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாந் தேசுடைய தேவர் என்ற நாச்சியார்திருமொழிப் பாசுரம் நினைக்கத் தகும்.
ஆழப்பெரும்புனல்தன்னு ளழுந்திய—ஆழமான மஹார்ணவத்திலே அழுந்திய என்றாவது, பெரும்புனல் தன்னுள் ஆழவழுந்திய என்றாவது யோஜிப்பது.
தாழப் படாமல்-காலதாமதத்திலே உருமாய்ந்து போகாதபடி; அனர்த்தப்டாதபடி; தரைப்படாதபடி. ஒரு கோட்டிடை கோடு – தம்ஷ்ட்ரா
கேட்டும் உணர்ந்தும் கேட்பது ஒருகால்; அதனை மறவாமல் மேன்மேலும் ஸ்மரிப்பது உணர்வாம்.
——————-
***- தன் மேன்மை பாராமல் தான் இரப்பாளனாய் வாமநப்ரஹ்மசாரியாய் மஹாபலியின் செருக்கை யடக்கித்
தேவர்களைக் காத்தருளின மஹாகுணத்தையறிந்து வைத்து மற்றொருவர்க்கு ஆளாகவொண்ணுமோ வென்கிறார்.
கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6-
பதவுரை
| வாட்டம் இலா வண்கை மாவலிவாதிக்க |
– |
ஒருகாலும் குறையாத ஔதார்யத்தையுடைய மஹாபலியானவன் (தன் செருக்காலே) நலிய |
| வாதிப்புஉண்டு |
– |
ஹிம்ஸைபட்டு |
| ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு |
– |
திரண்டு சென்று ப்ரார்த்தித்த தேவர்களுடைய |
| இடர் நீக்கிய |
– |
இடரை நீக்குவதற்காக |
| கோடு அம் கை வாமனன் ஆய் செய்த கூத்துக்கள் கண்டும் |
– |
ஏற்றகையையுடைய ஸ்ரீவாமன மூர்த்தியாய்ச் செய்தருளின மநோஹர சேஷ்டிதங்களை யநுஸந்தித்து வைத்தும் |
| கேட்டும் உணர்ந்தவர் |
– |
புராண முகத்தாலே கேட்டும் அறிவுடையராயிருந்தவர்கள் |
| கேசவற்கு அன்றி ஆள் ஆவரோ |
– |
அந்தப்பெருமானுக்கல்லது மற்றொருவதற்கு அடிமையாவரோ? |
“வாட்டமிலாவண்கை” என்று மாவலிக்கு விசேஷணமிட்டு அவனுடைய ஔதார்யத்தைச் சிறப்பித்துக் கூறினது—எம்பெருமானுடைய யாசகத்வத்திற்கு நிரூபகமாக.
இந்திரனோ மாவலியால் தகர்ப்புண்டு தன் பதவியை யிழந்து கண்ணுங்கண்ணீருமாய் நின்று யாசகனாயிரா நின்றான்; மஹாபலியோ யஜ்ஞத்திலே தீக்ஷிதனாயிருந்து யார் ஏது கேட்டாலும் கொடுக்கக் கடவேனென்று ஒப்புயர்வற்ற ஔதார்யம் கொண்டாடியிராநின்றான்; இவ்விரண்டையும் பார்த்தானெம்பெருமான்;
இந்த உதாரன் பக்கலிலே நாம் யாசகனாய்ச் சென்று இந்திரனுடைய அபேக்ஷுதத்தைப் பூர்த்திசெய்ய இயலுமென்று துணிந்து குறட்பிரமசாரியாய் பிக்ஷுகனாய் வந்தான்; ஆகவே இங்கு “வாட்டமிலா வண்கைமாவலி” என்றது நன்று.
இந்த அழகை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே தைத்யௌதார்யேந்த்ரயாச்ஞாவிஹதிமபநயந் வாம நோ ர்த்தீ த்வமாஸீ: என்றருளிச் செய்தார்.
வாதிக்க—பாதிக்க; வாதிப்புண்டு—பாதைப்பட்டு. பாதா என்கிற வடமொழிப் பகுதி யுணர்க.
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந்தார்க்கு—சென்றிரந்த ஈட்டங்கொள் தேவர்கட்கு என்று யோஜித்துக்கொள்வது.
இவ்விடத்தில் பெரியவாச்சான் பிள்ளை யருளிச்செயல் காண்மின்;-ஈச்வராபிமாநிகளாய் ‘ஒருவர்பக்கல் செல்லக்கடவோ மல்லோம்’ என்றும் ‘எல்லார்க்கும் இடுமதொழிய ஒருவர் பக்கல் ஒன்றுங் கொள்ளக்கடவோ மல்லோம்’ என்று மிருக்குமவர்களாய்த் தம்மில் தாம் சேர்த்தி யின்றிக்கே யிருக்கிற தேவர்கள் ஆபத்தின் மிகுதியாலே தம்மிலே யொரு மிடறாய் பக்நாபிமாநிகளாய்ச் சென்று இரந்தவர்களுக்கு.” என்று.
நம்பிள்ளையீடு;-க்ராமணிகளைப் போலவே ஒருவர் உச்ச்ராயம் ஒருவர் பொறாதே தலையறுப்பாரும் தலையறுப்புண்பாருமாய்த் திரியக்கடவ ஜாதியிறே. இப்படி சேராச் சேர்த்தியாயிருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தந்தான் அபிமானங்களைப் போகட்டு எல்லாருமொரு மிடறாய் வந்து விழுந்தார்கள்.”
இடர்நீக்கிய ‘உங்கள் கோரிக்கையின்படியே உங்கள் அபேக்ஷிதத்தைத் தலைக் கட்டித்தருகிறேன்’ என்கிற ப்ரதிஜ்ஞாவசனத்தாலே து:க்க நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுத்த என்றபடி.
(கோட்டங்கை) கோடு+அம் கை=கோட்டங்கை: கோடு என்று கொள்ளுகையைச் சொன்னபடி; அதாவது கையேற்கை.
செய்த கூத்துக்கள்–கூத்துப்போலே மநோஹரமான சேஷ்டிதங்களை யென்றபடி.
கண்டும்–கண்ணுலே காண்பது போலவே சாஸ்த்ரங்களால் அறிகையும் ஆஸ்திகர்கட்கு ப்ரத்யக்ஷமேயாதலால் இங்ஙனே சொல்லக் குறையில்லை.
—————-
***- தேவதாந்தர பஜநம் பண்ணிக் கிடந்த மார்க்கண்டேயனை விஷயீதரித்தலாகிற மஹா குணத்தை
யநுஸந்தித்தால் அப்பெருமானுக்கன்றி யாளாவரோ வென்கிறார்.
கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7
பதவுரை
| வண்டு உண் மலர் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு |
– |
வண்டுகள் மதுபானம் பண்ணுகிற பூமாலையையுடைய (பாலகனான) மார்க்கண்டேயனுக்கு |
| வாழும் நாள் |
– |
ஆயளுக்காக |
| இண்டை சடை முடி ஈசன் |
– |
நிபிடமான ஜடாமண்டலத்தையுடையவரான சிவபிரான் |
| உடன் கொண்டு உசா செல்ல அங்கு |
– |
தன்னோடுகூட அவனை யழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே செல்ல அந்நிலையிலே |
| கொண்டு |
– |
அவனை விஷயீகரித்து |
| தன்னோடும் கொண்டு |
– |
தன்னோடே கூட்டிக் கொண்டு |
| உடன் சென்றது |
– |
பிரியாதே யிருந்த படியை |
| உணர்ந்தும் |
– |
புராணாதி முகத்தாலேயறிந்தும் |
| கண்டும் தெளிந்தும் கற்றார் |
– |
கண்ணாரக் கண்டும் நெஞ்சாரத்தெளிந்தும் கற்றவர்கள் |
| கண்ணற்கு அன்றி ஆள் ஆவரோ? |
– |
கண்ணபிரானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரோ |
“கண்டுந் தெளிந்துங் கற்றார்” என்பதை உருபு பிரித்துக் கூட்டி “கற்று தெளிந்து கண்டார் என்று அந்வயிப்பர் நம்பிள்ளை.
முதலிலே யொன்றைக்கற்பது; பிறகு அதிலே மனனத்தனால் தெளிவு பிறப்பது; பிறகு அவ்வர்த்தம் கண்ணாற் கண்ட மாதிரியேயாவது: ஆக விங்ஙனே முறையாதலால். ப்ரிய ஹிதங்களை ச்ரவணம் பண்ணித் தங்களிலே மனனம் பண்ணி அவற்றை ஸாகூஷாத்கரித்தவர்கள் கண்ணனுக்கன்றி யாளாவரோ? என்கை.
ம்ரு கண்டு வென்னும் முனிவர் பிள்ளை யில்லாக் குறையால் பிரமானைக் குறித்துத் தவஞ் செய்தபோது, பிரமன் ப்ரத்யக்ஷ்மாகி முனிவரே! அறிவில்லாமையும் அங்கஹீதத்வமும் பெரும்பிணியும் தீய குணங்களுமுடையனாய்ப் பத்தியும் அழகு பொலிந்த வடிவமும் ஆரோக்யமும் நற்குணமுடையனாய்ப் பதினாறுபிராயமே வாழ்பவனான குமாரனை விரும்புகின்றீரோ’ சொல்லும்’ என்ன;
முனிவர் ‘ஆயுள் சிறிதேனும் அறிவும் அழகும் குணமும் சிறந்து பிணியிலனாகும் ஸத்புத்ரனையே வேண்டுகின்றேன்’ என்று தம் கருத்தைக் கூற,
நான்முகக் கடவுள் அவ்வாறே ….புராணபேதத்தால் இக்கதை சிறிது பேதப்படுவதுமுண்டு.
பிரமனுடைய அநுக்ரஹத்தினால் ம்ருகண்டு முனிவர்க்குப் பிள்ளை பிறந்ததாகவும், அப்பிள்ளை ஒரு நாள் வீதியில் விளையாடிக்கொண்டிருக்கு மிருப்பைத் தாய் தந்தையர் ஆனந்தமாகக் கண்டுகொண்டிருக்குங்கால் ‘இப்பிள்ளைக்கு ஆயுள் குறுகிற்று’ என்று ஆகாசவாணி யொன்று செவிப்பட, அதனால் அத்தாய் தந்தையர் மிக்க வருத்தங்கொண்டதாகவும்,
அது கண்ட மார்க்கண்டேயன் ‘இதற்கு நீங்கள் வருந்தவேண்டா, அவ்வாபத்தை நானே போக்கிக் கொள்ளுகிறேன்’ என்று அவர்களைத் தேற்றித் தான் சிவபூஜை செய்யத் தொடங்கின னென்பதாகவும் சில புராணங்கள் கூறும்.]…………அநுக்ரஹித்தனர்.
அங்ஙனம் ஊழ்வினையால் பதினாறு பிராயம் பெற்றுப் பிறந்த புத்திரனான மார்க்கண்டேயன் தனது அல்பாயுஸ்ஸைக் குறித்து வருந்திய தாய் தந்தையரைத் தேற்றித் தான் விதியைக் கடந்து வருவதாகச் சொல்லி, தீர்க்காயுஸ்ஸு பெறுதற் பொருட்டுத் தினந்தோறும் சிவ பூஜை செய்து வருகையில், ஒருநாள் யமன் தூதரை யனுப்ப,
அவர்கள் மார்க்கண்டேயனது தவக்கனலால் அவனே அணுகமாட்டாது அவன் செய்யும் சிவ பூஜைச் சிறப்பைக் கண்டஞ்சி வெருண்டோடி யமனிடம் செய்தி சொல்ல, யமனும் கோபித்துத் தனது மந்திரியான காலனை ஏவ,
அவன் வந்து நயபயங்களாலழைக்கவும் மார்க்கண்டேயன் வரமாட்டேனென்று சொல்லிவிட, பிறகு யமன் மிகக் கொதித்துத் தானே நேரில் வந்து மார்க்கண்டேயனைக் காலபாசத்தாற் கட்டியிழுக்கத் தொடங்குகையில்
அம்முநிகுமாரன் சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ள, யமன் சிவலிங்கமுமுட்பட வலித்திழுக்கும்போது சிவபிரான் ஸ்ரீமந்நாராயணனைச் சிந்தைசெய்து அவனது திருவருள் பெற்று அங்குநின்று வெளிப்பட்டு யமனைக் காலாலுதைத்துத் தள்ளி முனிமகனுக்கு என்றும் பதினாறு பிராயமாகவே அனேக கல்பகாலமளவும் இனிது வாழும்படி தீர்க்காயுஸ்ஸைக் கொடுத்தருளினன் என்பதாகப் புராண வரலாறு.
இங்ஙனம் சிவபிரான் மார்க்கண்டேயனுக்கு அருள் செய்தது திருமாலினருளால் தான் பெற்ற சக்தியினாலே யென்பதும், அச்சிவபிரானுக்கு அந்தராத்மாவாய் நின்று தொழில் செய்தவன் ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணனே யென்பதுமாகிய உண்மைபற்றி அவ்வரலாற்றை ப்ரயோஜககர்த்தாவின் காரியம் போலத் திருமாலின் மேலேற்றிக் கூறுவதுமுண்டு.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றந் தன்னை யஞ்சி, நின்சரணெனச் சரணாய்த் தகவில் காலனையுகமுனிந்தொழியா, பின்னையென்றும் நின்திருவடி பிரியாவண்ண மெண்ணிய பேரருள் எனக்கும் அன்னதாகுமென் றடியிணையடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே என்ற பாசுரத்தில் இக் கதையை சிவபிரானுடைய ப்ரஸ்தாவமேயில்லாமல் அருளிச் செய்துள்ளார்.
சில புராணங்களில் மேலெந்தவாரியாகப் பார்க்கும்போது, பரமசிவனே மார்க்கண்டேயனுக்கு அபயமளித்ததாகக் காணப்படினும், மஹாபாரதத்தில் ஆரண்யபர்வத்தில் நூற்றுத் தொண்ணுலீற்றிரண்டா மத்யாயத்தில் மார்க்கண்டேயன் தானே தருமபுத்திரை நோக்கிச் சொல்லுமளவில் ஸ்ரீமந்நாராயணனுடைய வார்த்தைகளை அநுவதிக்குமிடத்;து (பித்ருபக்தோ ஸ்ரீ ஸி விப்ரர்ஷெ! மாஞ் சைவ சரணம் கத) என்றுள்ள ச்லோகத்தினால் இவன் ஸ்ரீமந் நாராயணனைச் சரணம் புகுந்தவனென்பது நன்கு விளங்கும்.
ஸ்ரீபாகவதத்திலும் பன்னிரண்டாம் ஸ்கந்தத்தில் எட்டாமத்தியாயத்தில் “ஆராதயந் ஹருஷீகேசம் ஜிக்யே ம்ருத்யும் ஸீதுர்ஜயம்” என்று ஸ்பஷ்டமாகச் சொல்லிற்று ஸ்ரீமந் நாராயணனை ஆராதித்து, வெல்லவொண்ணுத யமனையும் வென்றொழித்தான் என்றது.
மார்க்கண்டேயன் இங்ஙனம் நெடுநாள் வாழ்ந்துவருகையில், மஹாப்ரளயத்தைத் தான் காணவேணுமென்று ஆசைகொண்டு எம்பெருமானைப் போற்றிப் பிரார்த்தித்து அங்ஙனம் காணும்போது, மஹாப்ரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனொருவனையன்றி மற்றைத் தேவரெவரையும் பிழைத்திருக்கக் காணாதவனாய் அப்பெருமானது திருவயிற்றினுள்ளே அனைவரையுங் கண்டு முடிவில் தான் நற்கதி பெறுதற் பொருட்டுத் திருமாலையை சரணமடைய, அப்பெருமான் அவனைத் தனது திருவடிகளிற் சேர்த்துக் கொண்டானென்பது மார்க்கண்டேய சரிதத்தின் முடிவு.
இப்பாட்டில் “இண்டைச் சடைமுடி யீசன்” என்றருளிச செய்ததன் கருத்தை அடியறிந்து ஆசாரியர்கள் வெளியிட்டருளின அழகு வாசாமகோசரம். ஆறாயிரப்படி ஸ்ரீ ஸீக்தி காண்மின்;-“மாதா பிதாக்களாலே மஹாதபஸா லப்தனாய் அநவரதம் உபலாலிதனாயிருந்த மார்க்கண்டேயன் தன்னுடைய ஆயுரர்த்தமாக ருத்ரனை யாச்ரயிக்க, அவனும் மத்ஸமீஹித ஸித்திக்காக நானும் பரமபுருஷனை நோக்கி தபச்சர்யை பண்ணி வர்த்திக்கிறது என்று சொல்லித் தன்னுடைய தபோ வேஷத்தையும் காட்டி அவனுடைய திருவடிகளையே ஆச்ரயிப்போம் வாவென்று அவனைக்கொண்டு ருத்ரன் வந்து ஆச்ரயிக்க.”
உசாச்செல்ல = உசாவிச் செல்ல. உசாவுதல் வார்த்தையாடுதல்.
——————
***- நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி ஆச்ரிதரக்ஷ்ணம் பண்ணின மஹாகுணத்தைப் பேசுகிறாரிதில்.
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-
பதவுரை
| எல்லை இலாத பெரு தவத்தால் |
– |
அபரிமதமான மஹாத பஸ்ஸீக்களாலே |
| பல செய் மிறை |
– |
பலவகையாகச் செய்யப்ப பட்டலோகபீடையை யுடையனாய் |
| அமரரை அல்லல் செய்யும் |
– |
(விசேக்ஷித்து) தேவர்களுக்குத் துன்பங்களை யுண்டுபண்ணினவனான |
| இரணியன் ஆகத்தை |
– |
ஹிரண்யாஸீரனுடைய உடலை, |
| மல்லல் அரி உரு ஆய் செய்த |
– |
பெரிய நரசிங்க வடிவையுடைனாய்க் கொண்டு இருபிளவாகச் செய்த |
| மாயம் அறிந்தும் |
– |
ஆச்சரியத்தை யறிந்து வைத்தும் |
| செல்ல உணர்ந்துவர் |
– |
பூர்த்தியான ஞானத்தைப் பெற்றவர்கள் |
| செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ |
– |
லக்ஷ்மீபதியான அப்பெருமானுடைய திருக்குணங்களையன்றி வேறென்றைக் கற்பரோ? |
செல்லவுணர்ந்தவர் என்றது—உணர்ச்சி எவ்வளவு தூரம் செல்லாமோ அவ்வளவும் செல்ல விவேகிக்கவல்லவர்கள் என்றபடி.
ஜச்வர்ய கைவல்யங்களில் மாத்திரம் நின்றுவிடாதே எல்லே நிலமான பகவதநுபவம் வரையிலும் உணர்ச்சியைச் செல்லவிட்டவர்கள் என்றபடி.
அன்னவர்கள் திருவுக்குந்திருவாகிய செல்வானுடைய சீர்களையேயன்றோ கற்பார்.
இப்போது தாம் விவக்ஷித்த சீர் இன்னதென்கிறது மேல் மூன்றடிகளில்.
அளவிறந்த தபஸ்ஸீக்களைச் செய்து அதனால் அபரிமிதமான வரங்களைப் பெற்று. அப்படி வரங்கொடுத்த தெய்வங்களையும் கண்ணீர்பாயவிட்ட இரணியனது உடலே, பெரியவடிவுகொண்ட நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றிப் பிளந்த ஆச்சரியத்தை யறிந்துவைத்தும் அந்த ஆச்ரித வாத்ஸல்ய குணத்தை யல்லது வேறொன்றைக் கற்பரோ?
மல்லல்-பெருமை; ”அபரிமிதபரிமாண ந்ருஸிம்ஹரூவதரனாய்க் கொண்டு” என்பது ஆறாயிரப்படி.
“மஹாவிஷ்ணும் என்னும்படியே ஹிரண்யன் குளப்படியாம்படியாகப் [ குளப்படி= குளம்பு அடி. குரமாத்ரமென்றபடி] பெரிய வடிவைக்கொண்டு” என்பது ஈடு.
செய்த மாயம்-நரஸிம்ஹதநு ரகௌணீ ஸமஸமய ஸ்முத்பவச்ச பக்தகிரஸ்தம்பே ச ஸம்பவஸ்தே என்று ஆழ்வான் காட்டின மாயங்கள்
—————–
***- பஞ்சபாண்டவர்களுக்குக் கையாளாயிருந்து இழிதொழில் செய்து பார்த்தஸாரதி யென்று பேர்பெற்றுத்
தாழநின்று அநிஷ்டவர்க்கங்களை அகற்றின மஹாகுணத்தைப் பேசுகிறார்.
மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே –7-5-9-
பதவுரை
| தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க |
– |
தாயாதி முறையில் சண்டை செய்து கிளர்ந்ததுர்யோதநாதிகள் தொலைய |
| ஓர் ஐவர்க்கு ஆய் |
– |
விலக்ஷ்ணர்களான பஞ்சபாண்டவர்களுக்காகி |
| தேசம் அறிய |
– |
ஸகலலோக ப்ரஸித்த மாம்படி |
| ஓர் சாரதி ஆய் சென்று |
– |
ஒப்பற்ற ஸாரதியாகப் போய் |
| சேனையை நாசம் செய்திட்டு |
– |
எல்லாம் சேனைகளையும் அழியச்செய்து |
| நடந்தநல்வார்த்தை அறிந்தும் |
– |
தன்னடிச் சோதிக் கெழுந்தருளினானென்கிற நல்வார்த்தையை யறிந்தும் |
| மாயம் அறிபவர் |
– |
மிகவும் ஆச்சரியமான பகவத் கதைகளை யறியுமவர்கள் |
| மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ |
– |
அப்பெருமானுக்கல்லது மற்றொருவர்க்கு அடிமையாவரோ? |
தாயம் செறும்-தாயப்ராப்தியாலே செறுகிற என்ற டி பங்காளிமுறையாலே சண்டை செய்தமையைச் சொன்னபடி.
தேசமறிய வோர்சாரதியாய்ச் சென்று-இற்றைக்கும் அர்ச்சாவதாரத்திலுங் கூட அனைவரு மறிந்துகொள்ளுமாறு பார்த்தசாரதி யென்று பேர்பெற்று நிற்கிறானன்றோ.
தேசமறிய என்றவிடத்து நம்பிள்ளை யருளிச் செய்வது காணீர்; “நாட்டில் ஸ்வாதந்த்ர்ய பாரதந்த்ர்யங்கள் வ்யவஸ்திதமானவிடத்திலும் ரஹஸ்யத்திலேயிறே அவை ப்ரயோகிப்பது. பர்த்தாவும் பார்யையைக் காலைப்பிடிப்பது ரஹஸ்யத்திலேயிறே. இப்படி யிருக்கச் செய்தேயிறே ஜகத்ப்ரஸித்தமாம்படி தன்னைத் தாழவிட்டது”
நடந்த—திருநாடேற வெழுந்தருளின என்றபடி. க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந மோஹயித்வா ஜகத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்த்தாந முத்தமம் என்ற மஹா பாரத ச்லோகம் இங்கே யநுஸந்திப்பது.
————-
***- ஸர்வதர்மாந் பரித்யஜ்ய இத்யாதி சரமச்லோக மருளிச்செய்த மஹாதுணத்திலே யீடுபட்டுப் பேசுகிறார்.
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-சேர்த்து-சேர்த்தி -பாட பேதம் –
பதவுரை
| வார்த்தை அறிபவர் |
– |
சரமச்லோகமாகிற நல்வார்த்தையை யறியும்வர்கள். |
| போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை பேர்த்து |
– |
ஸ்வருபவிளக்கத்தை மறைக்கின்ற பிறப்பு வியாதி கிழத்தனம் மரணம் முதலான வற்றை விட்டுக் கழியும்படி பண்ணி |
| பெரு துன்பம் வேர் அற நீக்கி |
– |
கைவல்யாநுபவமாகிற மஹாநர்த்தத்திலும் புகாமே காத்து |
| தன் தாளின் கீழ் சேர்த்து |
– |
தன்னுடைய திருவடிகளின் கீழே சேர்த்துக்கொண்டு |
| அவன் செய்யும் சேமத்தை எண்ணி |
– |
இப்படியாக அவன் செய்தருளும் ஸீக்ஷ்மங்களை யநுஸந்தித்து |
| தெளிவு கூற்று |
– |
தெளிவு பெற்று வைத்து |
| மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ |
– |
அப்பெருமானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரொ? |
வார்த்தை யறிபவர் என்றது—மாமேகம் சரணம் வ்ரஜ-ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்ற வார்த்தையை யறியுமவர்கள் என்றபடி.
முமுக்ஷுப்படியிவ் சரமச்லோக ப்ரகரணத்தின் முடிவில் இப்பாசுரத்தைச் சரமச்லோகார்த்தமாக நிர்வஹித்தருளின்படி காண்க.
ஸர்வபா பேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்றதின் அர்த்தமே மேல்மூன்றடிகளாலும் பேசப்படுகிறது.
போர்த்த பிறப்பு=ஆத்மஸ்வரூபம் தெரியாதபடி அறிவைக்கெடுக்கும் ஜன்மம்.
கருமமடியாகப் பிறக்கிறோமாதலால் பிறக்கப்பிறக்க ஒளிமழுங்கி “ஸம்ஸாலீரிகள் தங்களையும் ஈச்வரனையும் மறந்து கொல்லும் வியாதி என்னும்படி பலபல நோய்களும் வந்து புகும்; (மூப்பு) இடிவிழுந்தாற்போலே வந்து நிற்குங் கிழத்தனம். (இறப்பு) இப்படி யிருக்கச்செய்தே திடீரென்று ஒருநாள் நேரும் மரணம். இவற்றை யெல்லாந் தொலைத்து. அதாவது மீண்டு மீண்டும் பிறந்து அநர்த்த்ப்படாதபடி செய்தருளி யென்றபடி.
இதற்கு மேல் பெருந்துன்பமாவது—ஜன்மம் தொலைந்த பின்பும் நேரக்கூடியதான கைவல்ய மோக்ஷமாகிற மஹானர்த்தம். அதையும் ஸவா ஸநமாகப் போக்குகையாவது அதிலே நசையறும்படி பண்ணுகை.
ஆக இவ்வளவு நன்மைகளையுஞ் செய்து, தன் தாளின் கீழ் சேர்த்து—பாதரேகை போலே தன் திருவடிகளின் கீழ் அந்வயிப்பித்துக் கொண்டு.
அவன் செய்யும் சேமத்தை யெண்ணி = இதற்குப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்வது காணீர்;-“இவனுக்கு ஒன்றுஞ்செய்யாதாரைப்போலே என் செய்வோ மென்றிருக்கு மென்னுதல்; இக் கைங்கர்யத்துக்கு நிலவரான நித்ய ஸூரிகளோடே சேர்த்து யாவதாத்மபாவியாக்கு மென்னுதல்.”
‘எண்ணித் தெளிவுற்று வார்த்தையறிபவர் மாயவற்காளன்றி யாவரோ? என்று அந்வயிப்பது.
————–
இத்திருவாய்மொழியைக் கற்பவர்கள் இவ்விருள்தரு மாஞாலத்தில் இருக்கச் செய்தேயும்
தெளிந்த சிந்தையராயிருப்பர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-
பதவுரை
| தெளிவு உற்று |
– |
ஸ்வரூபத்தில் தெளிவு பெற்று |
| வீவு இன்றி நின்றவர்க்கு |
– |
அந்தத் தெளிவுக்கு ஒரு நாளும் விச்சேதமில்லாமலிருப்பவர்களுக்கு |
| இன்பம் கதி செய்யம் |
– |
இன்பமே வடிவெடுத்ததான கதியைச் செய்விப்பவனாய் |
| தெளிவு உற்ற கண்ணனை |
– |
தெளிவு தானே வடிவெடுத்திருப்பவனான எம்பெருமானைக் குறித்து |
| தென் குருகூர் சடகோபன் சொல் |
– |
ஆழ்வார் அருளிச்செய்ததான |
| தெளிவு உற்ற ஆயிரத்துள் |
– |
தெளிந்த ஆயிரத்தினுள்ளை |
| இவை பத்தும் வல்லார் அவர் |
– |
இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள் |
| பா மரு மூஉலகத்துள்ளே |
– |
பாபபூயிஷ்டமான உலகத்திலிருந்துவைத்தே |
| தெளிவு உற்ற சிந்தையர் |
– |
தெளிவு பெற்ற மனமுடையராவர். |
தெளிவுற்று நின்றவர்க்கு, லீவு இன்றி நின்றவர்க்கு—உபாயமும் உபேயமும் அவனே யென்று தெளிந்திருக்குமவர்களுக்கு;
இந்தத் தெளிவு இருக்கச் செய்தேயும் சிலர் ஆபாஸபுத்திகளைக் கொண்டு வாதங்கள் செய்து புத்திபேதத்தை யுண்டாக்க முயலக்கூடும்;
அப்போதும் தளராதே யிருக்குமவர்கள்-வீவின்றிநின்றவர்;
ஆக, ஒருபடியாலும் சலிப்பிக்க வொண்ணாத திண்ணிய அத்யவஸாயமுடையார்க்கு என்றபடி
யுத்தம் செய்யமாட்டேனென்று நின்ற அர்ஜுநன் கீதையைக் கேட்டுத்தலைக்கட்டி “ஸ்திதோ ஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ.” என்று தளும் புதல் தீர்ந்து நின்றானன்றே; அப்படிப்பட்டவர்களைச் சொல்லுகிறது.
இவ்விடத்து ஈடு முப்பத்தாறாராத்தில் ஒரு ஸம்வாதம் அற்புதமாகவுள்ளது காணீர்;-“அர்ஜுநன்தான் எம்பெருமானைப் பெற்றானே இல்லையோ?” என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்டாராம். அதற்கு நஞ்சீய ரருளிக்செய்த உத்தரம்: அர்ஜுநன் பெற்றனா இல்லையா என்கிற விசாரம் உமக்கு எதற்காக? யார் யார் பெற்றார்கள் என்று அவர்களையெல்லாம் ஆராய்ந்துபார்த்தோ நாம் பற்றவேணுமேயொழிய, பெற்றவர்களைப் பார்த்தன்று காணும். குளிர்ந்த தண்ணீர் கண்டால் தாஹித்தவன் குடிக்கந் காணாநின்றோம்; இது குடித்து யார் யார் தாஹம் தீர்ந்தார்கள் என்று விசாரித்துப் பார்த்தா குடிக்கிறோம்: இல்லையே”—என்று அருளிச் செய்தாராம்.
இன்பக்கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனை-இன்பமயமான கதி—அர்ச்சிராதிகதி; அதைப் பண்ணித தருமவனென்கை.
சேதநன் தெளிவுறாமல் கலங்கியே கிடந்தாலும், இவன் தெளியாத இழவுதீர எம்பெருமான் தான் நெளிந்திருந்து காரியஞ் செய்வனென்க.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த, தெளிவுற்றவாயிரம்-
இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி காண்மின்;- “ஸஹ்யத்திலே கலங்கின நீரானது ஒரோ ப்ரதேசங்களிலே வந்து தெளிந்து உபயோக யோக்யமாமாப் போலே, அதிக்ருதாதிகாரமாய் கூளமும் பலாப்பிசினும் போலே ஒன்றை நிஷ்கர்ஷித்துப் பிரிக்க வொண்ணாதபடியாயிருக்கிற வேதார்த்தமானது ஸர்வாதிகாரமாய் ஸர்வஸம்சயங்களும் தீர்ந்து தெளிந்தது இவர் பக்கலிலே வந்தவாறே.”
இப்படிப்பட்ட ஆயிரத்தினுள் இத்திருவாய்மொழியை வல்லார்கள் இவ்வாழ்வார் தம்மைப் போலவே தெளிவு படைத்த நெஞ்சுடையராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டினராயிற்று.
———————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply