ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-45-77-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

பேறொன்று மற்றில்லை நின் சரண் அன்றி,அப்பேறளித்தற்
காறொன்று மில்லை மற்றச் சரண் அன்றி,என்றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே–45-

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
நின் சரண் அன்றி

தேவரீருடைய திருவடிகளைத் தவிர
மற்று பேறு ஒன்றும் இல்லை

உபேயம் வேறொன்று மில்லை;
அப் பேறு அளித்தற்கு

தேவரீர்  திருவடிகளாகிற அந்த உபேயத்தைத் தருவதற்கு
அச் சரண் அன்றி

அத் திருவடிகள் தவிர
மற்று ஆறு ஒன்றும் இல்லை

வேறு உபாயம் ஒன்று மில்லை;
என்ற இப் பொருளை

என்கிற இவ் வுண்மைப் பொருளை

***-   உபாயமும் உபேயமும் எம்பெருமானார் திருவடிகளே’ என்றிருக்கும் மஹான்களுக்கும் தேவரீர் எவ்வாறு அருள் புரிகின்றதோ அவ்வாறாகவே சிறிதும் வாசி வையாமல் பாவியேனுக்கும் அருள் புரிகின்றதே! இஃது என்ன பெருங்குணம்!! த்ருட விச்வாஸ முடைய ஆழ்வான் ஆண்டான் போல்வாரை அடிமை கொள்வது போலவே அவிச்வாஸியான என்னையும் அடிமை கொள்வதே! இச் செம்மைக் குணத்தின் பெருமையைப் பாசுரமிட்டுச் சொல்ல எனக்கு சக்தி யில்லையே யென்று தடுமாறுகின்றார்.

—————

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம் புதுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே.–46-

பதவுரை

கூறும் சமயங்கள் ஆறும் குலைய

மனம் போன படி சொல்லிக் கொண்டிருக்கிற ஆறு பாஹ்ய மதங்களும் தலைமடங்கும்படி
குவலயத்தே

இப் பூ மண்டலத்திலே
மாறன் பணித்த மறை

நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதத்தை
உணர்ந்தோனை

கற்று அறிந்தவராயும்
மதியிலியேன் தேறும்படி

ஜ்ஞாநஹீகனான நானும் தெளியும்படியாக
என் மனம் புகுந்தானை

என் ஹ்ருதயத்தலே வந்து புகுந்தவராயும்
திசை அனைத்தும் ஏறும் குணனை

எல்லாத் திக்குக்களிலும் பரவிய திருக் குணங்களை யுடையவராயுமிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
இறைஞ்சினம்

வணங்கினோம்.

***- எம்பெருமானார் செய்தருளின அரிய பெரிய உபகாரங்கள் நெஞ்சில் ஊற ஊற, பரவசராய்த் திருவடிகளிலே வணங்குகிறார்:- உலகத்தில் பிரமாணமில்லாமலும் யுக்தி யில்லாமலும் மனம் போனபடி சொல்லிக் கொண்டு திரிகிற மதாந்தரஸ்தர்களை யெல்லாம் பங்கப்படுத்துவதற்காக நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமானது திருவாய் மொழியை ஒதி யுணர்ந்தவரும், அவிவேகியான நான் கூடத் கேறுதலடையும்படி என் நெஞ்சினுள்ளே புகுந்து என் ஸக்தையை நோக்குபவரும், திசைகளெங்கும் பரவிய புகழை யுடையருமான எம்பெருமானாரை வணங்கினோமென்றாராயிற்று.

சமயங்கள் ஆறும் = தேஹாத்மவாதி; தேஹ பரீணுமாத்மவதி, விஜ்ஞாநத்மவாதி, சூந்யவாதி, அத்வைதவாதி, சிவபரத்வவாதி என்றிப்படி ஆறு மதஸ்தர்களுண்டு. வேறு வகைகளும் உண்டு எல்லா மதங்களும் திருவாய் மொழியில நெற்; செய்யப் புல் தேயுங் கணக்கிலே தொலைக்கப் பட்டனவென்க. குவலயம் – வடசொல், தோறும்படி – ‘ஒரு வழியாலும் நாம் உஜ்ஜீவிக்க வகையில்லையே! என்செய்வோம், என்று தடுமாறிக் கிடந்த நானாம் ‘இனி நமக்கொரு குறையுமில்லை’ என்று தேறி மார்விலே கை வைத்துறங்குபடியாக என்கை.

————–

இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்,என் அரு வினையேன்
திறம் செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தை யுள்ளே
நிறைந்தொப்பற விருந்தான், எனக்காரும் நிகரில்லையே!–47-

பதவுரை

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று

‘எல்லாராலும் வணங்கத்தக்க பரதெய்வம் (எது வென்றால்) ஈசனாகிய ஸ்ரீரங்க நாதனேயாம்’ என்று
இ உலகத்து

இப் பூ மண்டலத்திலே
அறம் செப்பும்

ஸாக்ஷாத் தாமத்தை அருளிச் செய்யுமவராய்
அண்ணல்

ஸர்வ ஸ்வாமியான
இராமாநுசன்

எம்பெருமானார்
என் அரு வினையின் திறம் செற்று

என்னுடைய போக்க முடியாத கர்ம ஸமூஹத்தைப் போக்கி
பகலும் இரவும் விடாது

ஸர்வ காலத்திலும்
என் தன் சிந்தை

என் ஹ்ருதயத்தினாள்ளே
நிறைந்து

பரிபூர்ணராகி
ஒப்பு அற இருந்தான்

(இவ்விருப்புக்கு) ஒப்பில்லாதபடி எழுந்தருளி யிருக்கிறார்;
எனக்கு

இப்படிப்பட்ட அருளைப் பெற்ற  எனக்கு
ஆரும் நிகர் இல்லை

ஒப்பாவார் ஆருமில்லை.

***-   ஸ்ரீரங்கநாதனே எல்லாரும் வணங்கத்தக்க பரதெய்வமென்னும் உண்மையை உலகத்தார்க்கு உபதேசிந்து எல்லாரையும் பகவத் ஸமாச்ரயணத்தில் ருசியடையவர்களாக்கிப் போருகின்ற எம்பெருமானார் என்னுடைய தீவினைகளை வேரோடே களைந்தொழித்து அநவரதமும் எனது ஹருதயத்தினாள்ளே பரிபூர்ணரா யெழுந்தருளிரா நின்றார்; இப்படிப்பட்ட பரம பாக்கியம் பெற்றவன் இவ் வுலகில் நானொருவனேயாகையால் – இல்லை யெனக் கெதிரில்லை யெனக் கெதிரே.

————-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?–48-

பதவுரை

புன்மையிலோர் பருகம் பெருமை இராமாநுச

மஹான்கள் பேச வேண்டும்படியான பெருமையை யுடைய எம்பெருமானாரே!
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு

என்னுடைய ஒப்பற்ற தாழ்மைக்கு
நின் அருளின் கண் அன்றி

தேவரீருடைய க்ருபை யினிடத்தில் தவிர
புகல் ஒன்றும் இல்லை

வேறு எவ் விடத்திலும் ஒதுங்க இடமில்லை
அருட்கும்

தேவரீருடைய அந்த க்ருபைக்கும்
அஃதே புகல்

(என் போல்வாருடைய) அந்தத் தாழ்மையே சரணம்; (ஆக இவ் வகையாலே)
இருவோமுக்கும் பயன் ஆனபின்

அடியேனால் தேவரீருக்குப் பயன், அடியேனுக்குப் பயன் என்று ஸித்தமான பின்பு
இனி

இனி மேலும்
பழுதே

வியர்த்தமான
அகலும் பொருள் என்ன

பிரிந்திருக்கைக்குக் காரணம் என்ன?

***-  “எனக்காரும் நிகரில்லையே” என்று களித்துக் கூறின அமுதனாரை நோக்கி எம்பெருமானார் “இக் களிப்பு உமக்கு எத்தனை நாளைக்கு நிற்கும்? நான் உம்மை விட்டுவிடவுங் கூடும்; நீர் என்னை விட்டுவிடவுங் கூடும், இரண்டத் தொன்று நேர்ந்தால் இக் களிப்பு மாறக் கூடியது தானே” என்ன -; இனி நாம் வீணுக விட்டுப் பிரிவதற்குக் காரணமேயில்லை யென்கிறார்.

(“ததஹம் த்வத்ருதேந நாதவாந் மத்ருதே  த்வம் தயநீயவாந் நச-விதி நிர்மித மேதத்ந்வயம் பகவந் பாலய மாஸ்மஜீஹப:”) என்ற ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ந ச்லோகமும் இப் பொருள் கொண்டதே.

அருட்கும் அஃதே புகல் = நீசர்கள் விஷயத்தில் க்ருபை பண்ணினாலன்றோ அருள் விளங்குவதும் பயன் பெறுவதும்.

————

ஆனது செம்மை அற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி யிறந்தது வெங் கலி பூங்கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானதில் மன்னும் இராமானுசனித் தலத் துதித்தே.–49-

பதவுரை

பூ கமலம்  தேன்

தாமரைப் பூக்களிலுண்டான மகரந்தமானது
நதி பாய்

ஆறாகப் பெருகப் பெற்ற
வயல்

கழனிகளையுடைய
தென் அரங்கன்

ஸ்ரீரங்கத்திலே எழுந்தருளி யிருக்கிற பெரிய பெருமாளுடைய
கழல்

திருவடிகளை
சென்னி வைத்து

சிரஸா வஹித்துக் கொண்டு
தான் அதில் மன்னும்

தாம் அத் திருவடிகளிலேயே  ப்ரவணா யிருக்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
இ தலத்து உதித்து

இப் பூமியிலே திருவவதரித்ததனால்
செம்மை அறம் நெறி

ருஜூவான தர்ம மார்க்கமானது
ஆனது

ஸத்தை பெற்றது;
பொய்ம்மை அறு சமயம்

பொய்யே நிறைந்து கிடக்கிற அறு சமயங்களும்
பொன்றி போனது

நாசமடைந்தன;
வெம் கலி இறந்தது

கொடிய கலியுகமும் மாண்டது

 

***- எம்பெருமானார் திருவவதரித்தனாலே இவ் வுலகத்துக்கு உண்டான நன்மைகளை அருளிச் செய்கிறார்  இதில்.  முன்பு குத்ருஷ்டிகளினால் அழிந்து கிடந்த தர்ம மார்க்கம் மீண்டு நிலை பெற்றது;  சாஸ்த்ர விருத்தமான புற மதங்களெல்லாம் தலை சாய்ந்தன; கலி தோஷமும் கெட்டுப் போயிற்று.

 

————-

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்ச மஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றமெல்லாம்
பதித்த வென் புன் கவிப் பா வினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமானுசன் றன் இணை யடியே.–50-

பதவுரை

பரவு தொல் சீர்

உலகமெங்கும் பரவின நித்ய கலயாண குணங்களை யுடையவரும்
எதி தலை நாதன்

யதிகளுக்குத் தலையான நாயகருமான
இராமாநுசன் தன்

எம்பெருமானாருடைய
இணை அடி

திருவடி யிணைகள்

(எப்படிப் பட்டவை யென்றால்)

உத்தமர் சிந்தையுள் உதிப்பன

உத்தமாதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிப்பவை;
ஒன்னலர் நெஞ்சம்

பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது
அஞ்சி கொதித்திட

பயப்பட்டுப் பரிதவிக்கும்படி
மாறி நடப்பன்

மாறி மாறி யிட்டு நடக்குந் தன்மை யுடையன;
கொள்ளை வன்  குற்றம் எல்லாம் பதித்த

அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக் கிடக்கிற
என் புன் கவி

என்னுடைய க்ஷுத்ரமான  கவனமாகிய
பா இனம் பூண்டன

பாசுரங்களைப் (ஸ்தோத்ரமாகப்) பெற்றுக் கொண்டவை.

***-    தமக்குப் பரம ப்ராப்யமான எம்பெருமானார் திருவடிகளை வருணிக்கிறார் இதில் வடுக நம்பி போல்வாரான உத்தமாதிகாரிகளாலே இடைவிடாது சிந்திக்கப்படுவன; பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சிலே பரீதாபத்தை உண்டுபண்ணுவன; பல்வகைக் குற்றங்கள் நிறைந்த எனது கவிகளையும் ஏற்றுக் கொள்வன – அத்திருவடிகள், என்றாராயிற்று.

ஒன்னவர் நெஞ்ச மஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன – பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸிப்பதற்காதப் பல விடங்களிலும் ஸஞ்சரித்தருளினமை அறிக. மாறி நடத்தல் – ஒரு அழகான நடை. நம்பெருமாள் நடை போலே.

————-

அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமானுச னென்னை ஆள வந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே.–51-

பதவுரை

அன்று

முற் காலத்தில்
அடியை தொடர்ந்து

திருவடிகளை அவலம்பித்து
எழும்

செருக்கிக் கிளர்ந்த
ஐவீர்கட்கு ஆய்

பஞ்ச பாண்டவர்களுக்காக (பக் ஷபாதம் பூண்டு)
பாரதப் போர்

பாரத யுத்தத்திலே
முடிய

(துரியோதநாதிகள்) மாளும் படியாக
பரி நெடு தேர்

குதிரை பூண்ட பெரிய தேரை
விடும்

நடத்தின
கோனை

ஸர்வேஸ்வரனை
முழுது உணர்ந்த

(ஸ்வரூப ஸ்வபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத் தெரிந்து கொண்ட
அடியார்க்கு

பாகவதர்களுக்கு
அமுதம்

பரம போக்யமான
இப் படியில்

இப் பூ மண்டலத்தில்
வந்து பிறந்தது என்னை ஆள

வந்து அவதரித்தது  (எதற்காக வெனில்) அடியேனை ஆட் கொள்ளுகைக்காகவேயாம்;

***- பார்த்திடில் மற்று காரணம் இல்லை    –    ஆராய்ந்து பார்க்குமளவில் இது தவிர வேறொரு காரணமில்லை.

—————–

பார்த்தான் அறு சம யங்கள் பதைப்ப,இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினே னிடைத் தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த் தரங்கன் செய்ய தாளிணையோ
டார்த்தான் இவை யெம் இராமா னுசன் செய்யும் அற்புதமே.–52-

பதவுரை

(எம்பெருமானாரானவர்)

அறு சமயங்கள்

(வேத பாஹ்யங்களான) ஆறு சமயங்கள் துடிக்கும் படியாக
பதைப்ப பார்த்தான்

திருக் கண் செலுத்தினார்;
இப் பார் முழுவதும்

இப் பூமண்டலம் முழுவதையும்
புகழ் கொண்டு

தமது கீர்த்தியினாலே
போர்த்தான்

மூடி விட்டார்;
புன்மையினேனிடை

நீசனான அடியேன் பக்கலிலே
தான் புகுந்து

தாமாகவே (நிர்ஹேதுக க்ருபையினால்) வந்து புகுந்து
இரு வினை

பெரிய பாவங்களை
தீர்த்தான்

போக்கி யருளினார்;
தீர்த்து

பாவங்களைப் போக்கினது மன்றியில்
அரங்கன்

ஸ்ரீ ரங்கநாதனுடைய
செய்ய தாள் இணையோடு ஆர்த்தான்

அழகிய திருவடிகளோடே (என்னை)அந்வயிப்பித்தார்;
இவை

ஆகிய இக் காரியங்களெல்லாம்
எம் இராமாநுசன் செய்யும் அற்புதம்

எமக்கு ஸ்வாமியான எம்பெருமானார் செய்தருளின ஆச்சரியச் செயல்களாம்

***-  எம்பெருமானாருடைய ஆச்சரியமான சில செயல்களை எடுத்துக் கூறுகின்றார்:-சாகயர் உலூக்யர் பௌத்தர் சார்வாகர் பாசுபதர் காணுதர் என்றிப்படி சொல்லப்படுகிற புற மதத்தவர்களை யெல்லாம் நடுங்கச் செய்தார்; இப் பூ மண்டலமெங்கும் தமது திருப் புகழே பரவும்படி செய்தார்; ஆத்ம குணமொன்றில்லாத என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து என் பாவங்களைப் போக்கி அழகிய மணவாளனாடைய  பாதங்களிலே என்னை ஆச்ரயிக்கச் செய்தார்; இப் பூமண்டலமெங்கும் தமது திருப்புகழே பரவும்படி  செய்தார்; ஆத்ம குணமொன்றில்லாத என்னுடைய ஹ்ருதயத்திலே பகுந்து என் பாவங்களைப் போக்கி அழகிய மணவாளனாடைய  பாதங்களிலே என்னை ஆச்ரயிக்கச் செய்தார்; இப்படியாக எம்பெருமானார் செய்தருளுமவை யெல்லாம் மிக அற்புதமானவை.

—————

அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல் லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை, இந் நானிலத்தே வந்து நாட்டினனே.–53-

பதவுரை

என்னை ஆள வந்த

என்னை ஆட் கொள்வதற்காக அவதரித்த
கற்பகம்

உதாரரும்
கற்றவர் காமூது சீலன்

ஞானிகள் ஆசைப்படும் படியான சீல குணத்தை யுடையவரும்
அற்புதன்

ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையரும்
செம்மை

ருஜூவாயிருக்குந் தன்மை பொருந்திய வருமான
இராமாநுசன்

எம்பெருமானார்,
கருத அரிய பல் பல் உயிர்களும்

நினைக்கவும் முடியாத படி எண்ணிறந்திருக்கிற ஆத்ம வர்க்கங்களும்
பல் உலகு யாவும்

அவ் வாத்மாக்களுக்கு இருப் பிடமான) அளவிறந்த எல்லா வுலகங்களும்
பரனது என்னும் நல் பொருள் தன்னை

எம்பெருமானுடைய ஸொத்துக்களாம் என்கிற ஸாரர்த்தத்தை
இ நானிலேததே

இவ் வுலகத்திலே
வந்து

வந்தவதரித்து
நாட்டினன்

ஸ்தாபித்தருளினார்.

***- எம்பெருமானார் மதாந்தரங்களைக் கண்டித்து நிலை நாட்டிய ஸித்தாந்தம் இன்னதென்கிறார்.- சிறந்த ஞானிகளனைவரும் கொண்டாடுதற்குரிய திருக் குணங்களையும் அதிமாநுஷ வ்யாபாரங்களுக்கு இருப்பிடமாயுள்ள ஸகல லோகங்களும் ஸ்ரீமந் நாராயணனாக்கே உரிமைப்பட்டவை” என்கிற பரமார்த்தத்தை நிலை நாட்டியளினர் என்கை.

உலகு- யாவும், உலகியாயும்; “யவ்வரீனிய்யாம்” என்பது நன்னூல் விதி.

————–

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் டமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வு கண்டே.–54-

பதவுரை

மண் உலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன்

இப் பூலோகத்தில் மேன் மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை யுடையரான எம்பெருமானாருடைய
இயல்வு

ஸ்வபாவத்தை
கண்டு

பார்த்து,
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன

(துஷ்ட யுக்திகளாவே) நிலை நிறுத்தப் பட்டிருந்த ஷூத்ர மதங்களெல்லாம் ஒழிந்தன;
நாரணனை காட்டிய

ஸ்ரீமந் நாராயணனைப் பிரதிபாதிக்க
வேதம்

வேதங்களானவை
களிப்பு உற்றது

(நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக்கடைந்தன;
தென் குருகை வள்ளல்

அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த)
வாட்டம் இலா

ஒரு குறையுமற்ற
வண் தமிழ் மறை

சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி
வாழ்ந்தது

வாழ்வு பெற்றது.

***- சிங்கத்தைக் கனவில் கண்டாலும் ஸாமன்ய மிருகங்கள் நசித்தொழியும்; அவற்றைக் கொல்லுவதற்காகச் சிங்கம் ஒரு முயற்சி  செய்யவேண்டா அதுபோல, இவ்வுலகில் கிளர்ந்து கிடந்த பாஹ்ய குத்ருஷ்டி மதங்களைத் தொலைப்பதற்காக எம்பெருமானார் ஒரு பிரயத்நமும் எடுத்துக் கொள்ள வில்லை; அவை மாளவே ஸ்ரீ மந் நாராயண பரங்களான வேதங்களின் ஸாரமாகிய அருளிச் செயல்களும் பொலிவு பெற்று ஒங்கின – என்றாராயிற்று.

—————–

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத், தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடியா மெங்கள் கோக்குலமே.–55-

பதவுரை

தொகை இறந்த

கணக்கில்லாத
பண் தரு வேதங்கள்

ஸ்வர ப்ரதாநங்களான வேதங்கள்
பார்  மேல்

இப் பூமியிலே
நிலவிட

ஒங்கி வளரும்படி
பார்த்தருளும்

செய்தருளினவரும்
கொண்டலை

பரம உதாரரும்,
கண்டவர் சிந்தை கவரும்

கணடவர்களின் நெஞ்சைக் கவர்கின்ற
கடி பொழில்

மண மிக்க சோலைகள் சூழ்ந்த
தென் அரங்கன்

தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால்
குலாவும்

கொண்டாடப் படுபவருமான
இராமாநுசனை

எம்பெருமானாரை
மேலி கொழும் குடி

பொருந்தி ஆச்ரயிக்கிற குலம்
எங்கள் கோக்குலம் ஆம்

எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடிய குலமாம்.

***- எம்பெருமானாரை அடி பணிந்து உஜ்ஜீவிக்கும் மஹான்கள் தாம் அடியேனை ஆள்வற்கு உரியவர்கள் என்றாராயிற்று ஸ்ரீ ராமாநுஜ பக்தர்களுக்கு அடியேன் தாஸனாயிருப்பேன் என்றாவது

இராமாநுனை மேவித் தொழுங்குடி எங்கள் கோக்குலமாம் ஸ்ரீ எம்பெருமானாரன்று எமக்கு ஸ்வாமி; அவரை ஆச்ரயிப்பவர்களே எமக்கு ஸ்வாமிகள்.

கோ என்பதற்கு மேன்மை யென்றும் பொருள் உண்டாதலால், எங்கள் கோக்குலம் – எங்களுடைய மேன்மையான குலம் (எப்படிப்பட்டதென்றால்), இராமாநுசனை மேவித் தொழுங்குடியாம் -, என்பதாகவும் உரைக்கலாம். “எங்கள் கோக் குடியே” என்றும் பாட முண்டு; பொருள் ஒன்றே.

———-

கோக்குல மன்னரை மூவெழுகால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்த பின், என்
வாக்குரை யாது, என் மனம் நினை யாதினி மற்றொன்றையே.–56–

பதவுரை

கோக்குலம் மன்னரை

க்ஷத்திரிய குலத்து அரசர்களை
மூ எழு கால்

இருபத்தொரு தலைமுறை யளவும்
ஒரு கூர் மழுவால்

கூர்மை பொருந்திய ஒரு மழுவாலே
போக்கிய

(பரசுராமாவதாரத்தில்) தொலைத்தருளின
தேவனை

எம்பெருமானை
போற்றம்

துதிக்கின்ற
புனிதன்

பரம பரிசுத்தரும்,
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி

உலகமெங்கும் பரவின புகழை யுடையவருமான
இராமாநுசனை

எம்பெருமானாரை
அடைந்த பின்

ஆச்ரயித்த பின்பு
இனி

மேலுள்ள காலமெல்லாம்
மற்று ஒன்றை

வேறு எந்த விஷயத்தையும்
என் வாக்கு

எனது வாக்கானது
உரையாது

சொல்ல மாட்டாது;
என் மனம்

எனது மனமும்
நினையாது

நினைக்க மாட்டாது.

***- அடைந்ததற்பின் வாக்குரையாது என் மனம் நினையாது” என்றும் பாடமுண்டாம்.

—————-

மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்
உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே.–57-

பதவுரை

மற்று ஒரு பேறு

ப்ரயோஜநாந்தரங்களை
மதியாது

கணிசியாமல்
அரங்கன் மலர் அடிக்கு

அழகிய மணவாளனாடைய திருவடித் தாமரைகளுக்கு
ஆள் உற்றவரே

அடிமை பட்டவர்களையே
தனக்கு உற்றவர் ஆ

தமக்கு ஆத்ம பந்துக்களாக
கொள்ளும்

திருவுள்ளம் பற்றுகிற
உத்தமனை

உத்தம புருஷராயும்
நல் தவர் போற்றும்

ப்ரபந்நர்களாலே புகழப் பட்டவராயு மிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
,நானிலத்தே பெற்றனன்

இந்த லோகத்திலே அடியேன் ஆச்ரயிக்கப் பெற்றேன்;
பெற்ற பின்

ஆச்ரயித்த பின்பு
மற்று ஒரு பேதைமை அறியேன்

(வேறு விஷயங்களை விரும்புகை முதலிய) எவ்வித அஜ்ஞான கார்யமும் அறிய மாட்டேன்

***-  “இனி என் வாக்குரையாது, என் மனம் நினையாது மற்றொன்றை” என்று எப்படி நீர் சொல்லக் கூடும்? இருள் தருமா ஞாலத்தில் இருக்கிறீராகையாலே அவிவேகம் வந்து மூடிக் கொள்ள எத்தனை நாழிகை செல்லும்? என்று சிலர் கூற, எம்பெருமானாரை இந்த லோகத்திலே நான் ஆச்ரயித்தேனான பின்பு இனியொரு நாளும் அவிவேகியாக ஆக மாட்டேனென்கிறார்.

நல் தவர் போற்றும் –ப்ரபத்தி யாகிற நல்ல தபஸ்ஸைக் கைப்பற்றின வர்களாலே போற்றப் படுவர்.

————–

பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம் நன்றென்
றோதி மற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள் மெய் விட்
டாதிப் பரனொடொன்றா மென்று சொல்லுமவ் வல்ல லெல்லாம்
வாதில் வென்றான், எம் இராமா னுசன் மெய்ம் மதிக் கடலே.–58-

பதவுரை

பேதையர்

(வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளாத) அவிவேகிகள்
இது வேதப் பொருள் என்ற உன்னி

நாங்கள் சொல்லுகிற இது தான் வேதத்தின் அர்த்தம்’ என்று நிரூபித்துக் கொண்டு
பிரமம் நன்று என்று ஒதி

ப்ரப்ரஹமமான எவ்லாவற்றிலும் விலஷணம்’  என்று சொல்லி
மற்று எல்லா உயிரும் அஃது என்று

அந்தப் ப்ரஹ்மந் தவிர மற்ற எல்லா ஜீவ ராசிகளும் அந்த ப்ரஹமமே’ என்று சொல்லி
உயிர்கள் மெய்விட்டு

‘ஜீவாத்மாக்கள் தேஹத்தை விட்ட பின்பு
ஆதி பரனொடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம்

ஸர்வ காரண பூதுனான பரம புரஷனோடே ஐக்கியத்தை யடைகின்றன’  என்று சொல்லுகின்ற அந்த கோலாஹலங்களையெல்லாம்.
மெய்  மதி கடல்

தத்வ ஜ்ஞாநக் கடலாகிய
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
வாதில் வென்றான்

வாதத்தில் நிரஸித்து வெற்றி பெற்றார்.

***-  எம்பெருமானார் குத்ருஷ்டிகளின் குத்ஹிதமான வாதங்கனைக் கண்டித்த படிகளில் ஒருபடியைச் சொல்லி ஈடுபடுகிறார். சில மூர்க்கர்கள் தாங்கள் சொல்லுவதே வேதங்களின் உண்மையான பொருள் என்று கொக்கரித்துக்  கொண்டு அபார்த்தங்களைப் பிதற்றுவர்கள்.பர ப்ரஹமம் ஸர்வ லிலக்ஷணம்; ஜீவாத்மாக்களெல்லாம் பர ப்ரஹ்மத்தில் ஒர் பகுதி; இப்போது உபாதியினால் வெவ்வேறாகத் தோன்றுகின்றன; அவ் வுபாதி கழிந்த பின் ஜீவாத்மாக்கள் பர ப்ரஹ்மத்தோடு ஒற்றுமை அடைந்து விடுகின்றன என்று மூர்க்கர் பிதற்றும் பிதற்றல்களை யெல்லாம் தத்வ ஜ்ஞான நிதியான எம்பெருமானார் வாதத்தில் கண்டித்து உண்மைப் பொருளை ஸ்தாபித்து வெற்றி பெற்றாரென்கிறது.

பிரமம் – ப்ரஹமம் என்ற வடசொல் விகாரம் உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பரனொடு ஒன்றாம் = ஜீவரத்மாககள் பர ப்ரஹ்மத்தோடு ஐக்கியப்படுவது தான் மோக்ஷம் என்று குத்ருஷ்டிகள் உபபாதிப்பார்கள்; “தத் த்வமஸி” என்றும் “ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி” என்றுமுள்ள வேத வாக்கியங்களுக்கு இப்படி அபார்த்தம் பண்ணுவார்கள். வென்றான்  என்பதை வினை முற்றாகக் கொள்ளாமல் வினையாலணையும் பெயராகக் கொண்டு வாதில் வென்றவராகிய எம்பெருமானார், மெய்ம் மதிக் கடல் ஸத்ய ஜ்ஞாந ஸமுத்ரமா யிருப்பவர் என்று முடிப்பதாக வுரைத்தலுமாம்.

——————

கடலள வாய திசை யெட்டி னுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத் திராமா னுசன், மிக்க நான் மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்திலனேல் உயிரை
உடையவன், நாரணன் என்று அறிவார் இல்லை உற்றுணர்ந்தே.–59-

கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும்

நான்கு ஸமுத்ரங்களை எல்லா விடங்களிலும்
கலி இருளே மிடை தரு காலத்து

கலி புருஷனாகிற அந்த காரமே நெருங்கிக் கிடந்த காலத்தில்
இராமாநுசன்

எம்பெருமானார் (திருவவதரித்து)
நால் மறையின்

நான்கு வேதங்களின்
மிக்க சுடர் ஒளியால்

அளவற்ற தேஜஸ்ஸைக் கொண்டு
அவ்விருளை துரந்திலனேல்

அந்த கலி தோஷத்தைப் போக்கி யிராமற் போனால்
உயிரை உடையவன் நாரணன் என்று

‘எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி ஸ்ரீமந் நாராயணனே என்று
உற்று உணர்ந்து

யாரும் தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

***- என்னப்பனிராமாநுசன் திருவலதரித்து வேதார்த்தங்களை விளங்கக் காட்டியருளா விடில் இவ்வுலகமனைத்தும் அஜ்ஞாந மயமாகவே கிடக்கும்; தைவாதீநமாக என்னப்பன் திருவவதரித்து எங்கும் வியாபித்துக் கிடந்த கலிபுருஷனுடைய தோஷங்களைத் தொலைத்து வேதச் சுடர் விளக்கேற்றி அஜ்ஞாநாந்தகாரங்களைப் போக்கடிக்கவே எல்லாரும் ஸ்ரீமந் நாராயணனே ஸர்வ சேஷி யென்கிற பர மார்த்தத்தைத் தெரிந்து உய்வு பெறலாயிற்று என்றார்.

மிடைதருதல் – நெருங்கியிருத்தல் இடைவிடாது எங்கும் பரவியிருத்தல்.

————-

உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய் மொழியின்-
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந் திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே.–60–

பதவுரை

குணம் திகழ்

ஆத்ம குணங்களால் விளங்குபவரும்
கொண்டல்

(ஔதார்யத்தில்) காள மேகத்தை ஒத்த வரும்
எம் குலம் கொழுந்து

எங்கள் குலத்துக்குத் தலைவருமான
இராமாநுசன்

எம்பெருமானார்

(எங்கே எழுந்தருளியிருப்பரென்றால்)

உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தொறும்

கற்றுணர்ந்த தத்வ  ஞானிகளுடைய கோஷ்டிகளெங்கும்
திருவாய் மொழியின் மணம் தரும் இன் இசை மன்னும் இடம் தொறும்

திருவாய் மொழியினுடைய பரிமளம் மிக்க இனிய இசையுள்ள இடங்களெங்கும்
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும்

பிராட்டி நித்ய வாஸம் பண்ணுகிற அழகிய மார்பை யுடைய திருமால் எழுந்தருளி யிருக்கிற திவ்ய தேசங்களெங்கும்
புக்கு நிற்கும்

எழுந்தருளி யிருப்பார்.

***- ஞானம் தலை யெடுத்த மஹான்களுடைய திரள் எங்கெங்கும் இருக்கின்றதோ அங்கெல்லாம் எழுந்தருளி யிருப்பவரும். திருவாய்மொழியின் பரம போக்யமான இசை எங்கெங்கு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் ஸேவை ஸாதிப்பவரும் ஸ்ரீ யபதியான ஸர்வேச்வரன் எங்கெங்கு ஸந்நிதாநம் பண்ணுகிறாறோ அந்தத் திருப்பதிகளெங்கும் புகுந்து நிற்பவருமான எம்பெருமானார் அஸ்மத் குல கூடஸ்தர்கிறாராயிற்று.

———–

கொழுந்து விட் டோடிப் படரும் வெங் கோள் வினை யால்,]நிரயத்
தழுந்தி யிட் டேனை வந் தாட் கொண்ட பின்னும், அரு முனிவர்
தொழுந் தவத்தோனெம் இராமானுசன் தொல் புகழ் சுடர் மிக்
கெழுந்தது,அத்தால் நல்லதிசயங் கண்ட திரு நிலமே.–61–

பதவுரை

அருமுனிவர் தொழும்

அருமையான நிஷ்டையை யுடைய மஹான்களாலே மஹான்களாலே ஸேவிக்கப் பெற்றவராயும்
தவத்தோன்

ப்ரபத்தியாகிற தபஸ்ஸை யுடையவராயு மிருக்கிற
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானாருடைய
தொல் புகழ்

நித்யமான கல்யாண குணங்கள்
கொழுந்து விட்டு ஒடி படரும் வெம்கோள் வினையால்

மேன் மேலும் அதிகமாகப் பெருகுகின்ற க்ரூரமாய்ப் பரப்லமான துஷ் கர்மத்தாலே
நிரயத்து அழுந்தி யிட்டேனை

ஸம்ஸாரமாகிற நரகத்திலே அழுந்திக் கிடந்த என்னை
வந்து ஆள் கொண்ட பின்னும் சுடர் மிக்கு எழுந்தது

வந்து ஆட்படுத்திக் கொண்ட பின்பும் ஒளி குன்றாதே  முன்னிலும் விசேஷமாக விளங்கா நின்றன:
அத்தால்

அதைக் கண்டு
இரு நிலம்

விசாலமான இப் பூமண்டலம்
நல்ல அதிசயம் கண்டது

மிக்க ஆச்சரியங் கொண்டது.

***- எம்பெருமானாருடைய குணங்கள் மஹா பாபியான என்னை ஆட்படுத்திக் கொண்டவளவோடு த்ருப்தி பெற்று விடமால் இப்படிபட்ட பாபிகள் இன்னும் யாரேனும் கிடைப்பாருண்டோ? கிடைப்பாருண்டோ? என்று இன்னமும் நாக்கு நீட்டிக் கிளர்ந்து செல்லுகின்றன – என்றும் கருத்தாகும்.

————-

இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்றி யான் இறையும்
வருந்தேன் இனி யெம் இராமானுசன்,மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலை யுடைப் புன்மை யினோர்க் கொன்றும் நன்மை செய்யாப்
பெருந் தேவரைப் பரவும், பெரியோர் தம் கழல் பிடித்தே.–62-

பதவுரை

எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானாருடைய
மன்னா மா தாள் மலர் பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு

சிறந்த திருவடித் தாமரைகளில் சேராத ஸ்வபாவத்தை யுடையவர்களான  நீசர் களுக்கு
ஒன்றும் நன்மை செய்ய

ஒரு விதமான உபகாரமும் செய்யாத
பெரு தேவரை

பெரிய பெருமாளை போற்றுகின்ற
பெரியோர் தம்

ஆழ்வானாகிற மஹானாடைய
சுழல் இன்று பிடித்து

திருவடிகளை இன்று ஆச்ரயித்தேனானபின்பு
இரு வினை பாசம் கழற்றி இருந்தேன்

புண்ணியம் பாவமென்று இரண்டு வகையான கரும பாசங்களினின்று விடுபட்டவனானேன்;
யான்

இப்படி நிர்மலனாகப் பெற்ற அடியேன்
இனி இறையும் வருந்தேன்

இனி மேல் கொஞ்சங்கூட வருத்தப் பட்ட மாட்டேன்.

***- ஸ்ரீ ராமநுஜ பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே ஸர்வ ஸ்வதாநம் பண்ண வல்ல பெரிய பெருமாளைப் போற்றா நின்ற கூரத்தாழவானை அடைந்து உஜ்ஜீவித்த அடியேனுக்கு இனி ஒரு வருத்தமும் வினையக் காரணமில்லை யென்று தம்முடைய க்ருதக்ருத்யத்வத்தைக் கூறினாராயிற்று.

இருவினைப் பாசங்கழற்றி = பாவம் போலலே புண்ணியமும் பரகதிக்குப் பிரதிபந்தகம் என்பதை உணர்க. பாவம் இரும்பு விலங்கென்றும் புண்ணியம் பொன் விலங்கென்றும் சாஸ்திரங்கள் கூறும்.

—————–

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந் தோர் சிதைந் தோட வந்திப்
படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே!–63-

பதவுரை

அறுசமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர்

பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள்
சிதைந்து ஒட

பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக
வந்து இப்படியை தொடரும்

இப் பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீகரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற
மிக்க பண்டிதன்

மஹா பண்டிதரான
இராமாநுச

எம்பெருமானாரே!,
பிடியை தொடரும் களிறு என்னயான்

யானைப் பேடையைப் பின்பற்றித் திரிகின்ற ஆண் யானை போல
யான்

அடியேன்
சீர்  பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும்

ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருள வேணும்.

***- ஸ்வாமி! யானையானது தன் பேடையினிடத்துப் பெருங்காதல் கொண்டு அதனையே பின் பிற்றித் திரிவது போல் அடியேன் தேவரீருடைய அழகிய திருவடிகளையே அளவற்ற அபிநிவேசத்தோடு அநுவர்த்தித்துச் செல்லும் படியாக அருள் புரிய வேணுமென்று வேண்டினாராயிற்று.

—————-

பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழுந் தண்ட மேந்திக் குவலயத்தே
மண்டி வந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே -64–

பதவுரை

எங்கள் இராமநுச முனி வேழம்

எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்த கஜமானது.
மாறன்

நம்மாழ்வார்
பண்

இசைகளாலே
தரு

அருளிச் செய்த
பசுந்தமிழ் ஆனந்தம்

செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம்
பாய் மதம் ஆய் விண்டிட

பெருகு மத நீராக ஒழுகப் பெற்று
மெய்ம்மை கொண்ட நல் வேதம் கொழு தண்டம் ஏந்தி

ஸத்திய வாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக் கொண்டு
குவலயத்தே

இப் பூமண்டலத்திலே
மணடி வந்து என்றது

உங்களுடைய பிழைப்பு
உங்கள் வாழ்வு அற்றது

உங்களுடைய பிழைப்பு போயிற்று

***- குத்ஹிதவாகங்கள் பண்ணுகிற துர்வாதிகளே! இனி நீங்கள் பிழைக்க வழியில்லை யென்று நிச்சயித்துக் கொள்ளுங்கள்;

ஏன் என்கிறீர்களோ; எம்பெருமானாரென்னும் ஒரு மதயானை யானது உங்களைப் புடைப்பதாகப் பெரிய தடியை யெடுத்துக் கொண்டு எதிரிட்டு வாரா நின்றது; இதற்குத் தப்பிப் பிழைக்க உங்களாலாகாது-என்கிறார்.

யானைக்கு மத நீர் பெருகுமே; இந்த ஸ்ரீராமாநுஜ கஜராஜனாக்கு எது மதநீர் என்ன; முதலடியிற் கூறுகிறார். திருவாய் மொழியின் அறுபவத்தாலுண்டான ஆநந்த ரஸேமே இந்த கஜராஜனாக்கு மதநீர்ப் பெருக்காம். இதனால்,எம்பெருமானார் எப்போதும் திருவாய் மொழியை அநுபவித்துக் களிப்புறுவர் என்றதாகிறது.

————

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது, தத்துவ நூல்
கூழற்றது குற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
நாழற்றது,நம் இராமா னுசந் தந்த ஞானத்திலே.–65-

பதவுரை

நம் இராமாநுசன்

ஸ்வாமிஎம்பெருமானார்
தந்க ஞானத்தில்

அருளின ஞானத்தினால் துர்வாதிகளுக்கு வாழ்ச்சி அற்றுப் போயிற்று;
மறையவர் தம் தாழ்வு

வைதிகர்களுடைய குறை
என்றும் அற்றது

இனி ஒருநாளும் இல்லாதபடியாயிற்று
தாரணி

பூமண்டவமானது
தவம் பெற்றது

பாக்கியம் பெற்றது;
தத்துவம் நூல்

தத்வபரமான சாஸ்திரங்கள்
கூழ் அற்றது

ஸந்தேஹமற நிச்சயமான பொருளைத் தெரிவிப்பவையாயின;
குற்றம் எல்லாம்பதித்த குணத்கினர்க்கு

பலவகைக் குற்றங்களும் நிறைந்த ஸ்வபாவத்தையடைய ஜனங்களுக்கு
ஆ நாழ் அற்றது

அந்தக் குற்றங்கள் தீர்ந்தன;

***- எம்பெருமானார் இவ்வுலகில் அவதரித்து உபதேசாதி முகத்தாலே உண்டாக்கின தத்துவ ஞானத்தால் பலித்த அம்சங்கள் எவையென்றால்; துர்வாதிகளுடைய வாழ்வு மாண்டது; வைதிகர்களுக்கு இருந்த ஸங்கடங்கள் அற்றுப் போயின; பூ மண்டலம் மஹா பாக்யம் பெற்றது; தத்வ சாஸ்த்ரங்களில் எவ்விதமான ஸந்தேஹமும்  உண்டாகாதபடி நிச்சய ஞானமே உண்டாயிற்று; பாவிகளின் பாவங்களெல்லாம் தொலைந்து போயின; ஆகிய இவை எம்பெருமானார் அருளிச் செய்த தத்துவ ஞானத்தின் பயனாகத் தேறினவை – என்றாராயிற்று.

தொல்லை வாதியர் = வைதிகர் தாம் அநாதியாக வுள்ளவர்; துர்வாதிகளும் அநாதியாக உண்டோவெனில்; பயிருள்ள போதே தொடங்கிக் களையுமுண்டாவதுபோல, பாஹ்யர் குத்ருஷ்டிகள் என்கிற வாதிகளும் பழையராகவே யுண்டென்க.

தரணி என்ற வடசொல் தாரணி யென நீட்டல் விகாரம் பெற்றது. கூழ்-ஸந்தேஹம் நாழ் – குற்றம்.

—————-

ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன் தக வென்னும் சரண் கொடுத்தே.–66-

பதவுரை

மாதவன்

திருமால்
வானம் கொடுப்பது

மோக்ஷம் அளிப்பது

(எப்படிப் பட்டவர்களுக்கு கென்றால்)

ஞானம்  கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு

ஞானம் பக்தி ரூபமாகப் பரீபக்வமாகி அந்த பக்தியினால் நித்யம் உருகுகிறவர்களுக்கேயாம்;
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசன்

மஹா பாபியான எனது ஹ்ருதயத்திலிருந்த கல்மஷங்களைப் போக்கடித்த எம்பெருமானார்
தன்னை எய்தினர்க்கு

தம்மைப் பற்றினவர்களுக்கு
அத்தானம் கொடுப்பது

அந்த மோக்ஷ ஸ்தானத்தை அளிப்பது
(எவ்விதமாக வென்றால்)

தன் தகவு என்னும் சரன் கொடுத்து

தம்முடைய க்ருபையாகிற ஸாதனத்தை (அவர்களுக்குக் கைம் முதலாகக் கொடுத்து (தமது திவ்ய க்ருபையாலே)

***- அடியார்களுக்கு மோக்ஷமளிக்கிற அதிகாரம் எம்பெருமானாக்குமுண்டு, எம்பெருமானார்க்கு முண்டு. எம்பெருமான் அளிப்பது மிகவும் ச்ரமப்படுத்தியே; எம்பெருமானார் அளிப்பது கேவலம் தம்முடைய திருவருளாலே என்கிறார் இதில்.

ஞானமாது நன்றாகக் கனிந்து அது பக்தி பரமபக்தி பரமபக்தி என்னும்படியான அவஸ்தை களை யடைந்து, அதனால் இந்த ஸம்ஸாரத்தில் க்ஷணகால மிருப்பதும் அஸஹ்யமாய் ஆழ்வார்களைப்போல “{ஒரு பகலாயிணரமூழியாலோ’ என்று துடிப்பவர்களுக்குத்தான்; எம்பெருமான் முக்தியளிப்பது;

எம்பெருமானாரோ வென்னில் –க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யராகையாலே அடியார்களிடத்தில் எவ்விதமான க்லேசத்தையும் எதிர்பாராமல் தமது திருவருளைக் கொண்டே அவர்களைக் கரையேற்றுவர் என்றதாயிற்று.

வல் வினையேன் மனத்திலீனங்கடிந்த என்பதற்கு – மாதவனை அடி பணிந்து வருந்துகையாகிற ஈனத்தை எனக்குத் தவிர்த்த எம்பெருமானார் என்று உரைக்கவுமாம்.

—————-

சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை-
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணவை யுமக் கன்றென்றி ராமானுச னுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வா ருயிர்க்கே?-67-

பதவுரை

சரணம் அடைந்த தருமனாக்கு ஆ

தன்னைச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக
பண்டு

முற்காலத்திலே
நூற்றுவரை

துரியோதனன் முதலிய நூறு பேர்களை
மரணம் அடைவித்த மாயவன்

சாகும்படி செய்த எம்பெருமான்
தன்னை வணங்க வைத்த கரணம் இவை

தன்னை வழிபடுவதற்காகவே எற்படுத்தி வைத்த இந்திரியங்களாம் இவை;
உமக்கு அன்று

உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல;
என்று

என்று இவ்வாறாக உபதேசித்து
இராமாநுசன்

எம்பெருமானார்
உயிர்கட்கு

ஆத்மாக்களுக்கு
அரண் அமைத்திலன் எல்

ரக்ஷையைக் கற்பித்தில ராகில்
,ஆர் உயிர்க்கு

இந்த அருமையான ஆத்மாக்களுக்கு
மற்று அரண் ஆர்

வேறு ரஷகராவார் ஆர்? (ஆருமில்லை.)

————-

ஆரெனக் கின்று நிகர்ச் சொல்லில் மாயன் அன்று ஐவரைத் தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினிற் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே.–68–

பதவுரை

மாயன்

ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான்
அன்று

முற் காலத்தில்
ஐயர்

பஞ்ச பாண்டவர்களுடைய
தெய்வம் தேரினில்

தெய்வத் தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்து கொண்டு)
செப்பிய

அருளிச் செய்த
கீதையின்

பகவத் கீதையினுடைய
செம்மை பொருள்

ஸ்வ ரஸமான அர்த்தத்தை
தெரிய

(அனைவரும் எளிதாகத்)தெரிந்து கொள்ளும் படி
பாரினில்

இப் பூமிலே
சொன்ன

(கீதா பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
இராமாநுசனை

எம்பெருமானாரை
பணியும்

ஆச்ரயித்திருக்கும்
நல்லோர்

விலக்ஷண புருஷர்களுடைய
சீரினில்

கல்யாண குணங்களிலே
என் ஆவியும் சிந்தையும்

எனது ஆத்மாவும் மநஸ்ஸூம்
சென்று பணிந்தது

சென்று சேர்ந்து விட்டன;
சொல்லில்

சொல்லுமளவில்
இன்று

இக் காலத்தில்
எனக்கு ஆர் நிகர்

எனக்கு ஆர் ஒப்பாவார்?

————

சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந் தெடுத்தனன் இன்றென்னையே–69-.

பதவுரை

முன் நாள்

ஸ்ருஷ்டிருக்கு முற் காலத்தில்
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து

சிந்தையும் இந்திரியங்களு மெல்லாம் அழிந்து
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு

உப ஸமஹாரத்தை யடைந்து அசேதந ப்ராயமா யிருப்பதைப் பார்த்து
என் தனக்கு

(அப்படி அசேதந ப்ராயராய்க் கிடந்தவர்களில் ஒருவனான) எனக்கு
அவை

அந்தக் கரண களேபரங்களை
அன்று

அக் காலத்தில்
அருளால் தந்த அரங்கனாம்

க்ருபையாலே உண்டாக்கின எம்பெருமானாம்
தன்  சரண் தந்திலன்

தனது திருவடிகளைக் காட்டிக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்க வில்லை;

(அக்குறை நீங்க)

எந்தை இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
தான் வந்து

தாமாகவே வந்து
அது தந்து

அந்தத் திருவடிகளைத் தந்தருளி
இன்று என்னை எடுத்தனன்

இன்று என்னை ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பித்தார்.

—————

என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி யென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே?உன் பெருங்கருணை
தன்னை யென் பார்ப்பர் இராமானுச! உன்னைச் சார்ந்தவரே?–70-

பதவுரை

இராமா நுச

எம்பெருமானாரே!
என்னையும் பார்த்து

(ஒரு குணமில்லாமல் குற்றமே நிறைந்திருக்கிற) என்னையும் நோக்கி
என் இயல்வையும் பார்த்து

(இனி மேலும் எவ்வித நன்மையும் ஸம்பாதித்துக் கொள்ள முடியாமலிருக்கிற) என்னுடைய தன்மையையும் நோக்கி
எண இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில்

எண்ணிறந்த பல திருக் குணங்களை யுடைய தேவரீரையும் நோக்கு மனவில்
அருள் செய்வதே நலம்

( எப்போதும்) அருள் செய் திருப்பதே நல்லது;
அன்றி

இதுவொழிய மேலும் ஆராயுமளவில்
என் பால் நலம் உளதே

என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ? (சிறிதும் இல்லை)

(நன்மை யொன்று மில்லாவிடில் நாம் அருள் செய்யலாகாதென்று திருவுள்ளம் பற்றினால்)

உன்னை சார்ந்தவர்

தேவரீரை ஆச்ரயித்தவர்கள்
உன் பெரும் கருணை தன்னை என் பார்ப்பர்

தேவரீருடைய கிருபையைப் பற்றி என்ன நினைப்பர்கள்?) இளப்பமாக நினையார்களோ.)

————–

சார்ந்த தென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான் மிகவும்
கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே
தீர்ந்ததென் செய்கை முன் செய்வினை நீ செய் வினையதனால்
பேர்ந்தது வண்மை இராமானுச! எம் பெருந்தகையே.–71-

பதவுரை

வண்மை

ஔதார்ய முடையரும்
எம்

எமக்கு ஸ்வாமியும்
பெரு தகை

பெருந் தன்மை யுடையருமான
இராமாநுசா

எம்பெருமானாரே! எனது நெஞ்சு
உன் தாள் இணை கீழ் சார்ந்தது அன்புதான்

தேவரீருடைய உபய பாதங்தளின் கீழ் அமர்ந்து விட்ட பக்தியும்
அத் தாமரை தாள்களுக்கு

அந்தத் திருவடித் தாமரைகள் விஷயத்திலேயே
மிகவும் கூர்ந்தது

மிகவும் அதிகரித்தது.
என் செய்கை

எனது செயலும்
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது

தேவரீருடைய திருக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது;
முன் செய் வினை

முன்னே செய்த பாவங்களெல்லாம்
நீசெய் வினை அதனால் பேர்ந்தது

தேவரீர் செய்தருளின் (கடாக்ஷமாகிற) காரியத்தாலே தொலைந்து போயின.

———————

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை,என்றுன்னி யுள்ளம்
நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறை புக ழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே.–72-

பதவுரை

இராமாநுசன்

எம்பெருமானார்
மிக்க வண்மை செய்து

தமது ஒளதார்ய குணத்தை அதிகமாகக் காட்டி,
தீய சமயம கலகரை

தீய மதங்களி லிருந்து கொண்டு கலஹஞ் செய்கிறவர்களை
கைத்தனன்

ஒழித்து விட்டார்;
தூய

பரிசுத்தமான
முறை நெறி தன்னை

வேத மார்க்கத்தை
காசினிக்கு உய்த்தனன்

பூமியிலே ஸ்தாபித்தருளினார்;
என்று உன்னி

என்று அநுஸந்தித்து
உள்ளம் நெய்த்து

நெஞ்சு கனிந்து
அவ்வன் போடு இருந்து

அந்த ப்ரிதியோடே கூடி யிருந்து
ஏத்தும்

(அவரை) ஸ்தோத்ரம் பண்ணுகிற
நிறை புகழோரருடனே

புகழ் நிறைந்த மஹான்களோடே
என்னை வைத்தனன்

(என்னையும் ஒருவனாக எண்ணும்படி) என்னை வைத்தருளினார்.
நிறைபுகழோருடனே வைத்தனன்:

அஸத்தக்களோடே பழகிக் கிடந்த என்னை ஸத்துக்களோட கூட்டி வைத்தார் என்னவுமாம்.

—————-

வண்மையினாலுந் தன் மாதக வாலும் மதி புரையும்
தண்மையினாலுமித் தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்
திண்மை யல்லா லெனக் கில்லை, மற்றோர் நிலை தேர்ந்திடிலே.–73-

பதவுரை

தன் வண்மையினாலும்

தம்முடைய ஔதார்ய குணத்தாலும்
மா தகவாலும்

பரம க்ருபையாலும்
மதி புரையும் தண்மையினாலும்

சந்திரனை யொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும்
இத் தரணியோர்கட்கு

இப் பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை

யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தை உபதேசிக்கிற எம்பெருமானாரை
உன்னும் திண்மை அல்லால்

சிந்கிப்பதாகிற அத்யவஸாய மொன்று தவிர
தேர்ந்திடில்

ஆராயமளவில்
எனக்கு மற்று ஒர் நிலை இல்லை

அடியேனுக்கு வேறெரு அத்யவஸாய மில்லை.

 

————–

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏரார் குணத்தெம் இராமானுச னவ் வெழில் மறையில்
சேரா தவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே.–74-

பதவுரை

மறையின்  திறம் தேரார் என்று

(இப்பாலிகள்) வேதஞ் சொல்லிகிற வழியை நிரூலித்திகிற தில்லையென்று
தீயவரை

பாவிகளை
மாயவன்

எம்பெருமான்
குறைப்பது

தண்டிப்பது
கூர் ஆழி கொண்டு

கூர்மையான தனது திருவாழியாலே;
கொண்டல் அனையவண் மை

மேகம்போன்ற ஔதார்யகுண முடையவரும்
ஏர் ஆர் குணத்து

(மற்றும்) பல நல்லகுணங்களுடையவருமான
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
அ எழில் மறையில் சேராதவரை சிதைப்பது

அந்த சிறந்த வேதத்தில் அந்வயியாதவர்களே பங்கப் படுத்துவது (எப்படி யென்றால்)

***- எம்பெருமான் தனது ஆஜ்ஞா ரூபமான வேதங்களின் கட்டளைப்படி நடவாத கொடியவர்களைத் தனது திருவாழியைக் கொண்டு த்வம்ஸம் பண்ணி விடுவன்; எம்பெருமானாரோ வென்னில் அவ்வளவு ஆயாஸம் எடுத்துக் கொள்வதில்லை; வேதங்களை அடியோடு ஒப்புக் கொள்ளாத பாஹ்யர்களையும்,வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொண்டு அவற்றில் அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளையும் வாதப் போரில் அப்போதப்போது திருவுள்ளத்தில் ஸ்புரிக்கின்ற நல்ல யுக்கிகளைக் கொண்டு கண்டித்து விடுவர் என்கை.

—————

செய்த் தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண் முகப்பே
மெய்த் தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின் புகழே
மொய்த் தலைக் கும் வந்து இராமா னுச! என்னை முற்று நின்றே.–76-

பதவுரை

செய் தலை

வயல்களில்
சங்கம்

சங்குகளானவை
செழு திரு முத்தம்

அழகிய முத்துக்களை
ஈனும் திரு அரங்கர்

உண்டாக்கு மிடமான திரு அரங்க

மா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள்

கைத் தலத்து

தமது திருக் கையிலே
ஆழியும் சங்கமும் எந்தி

திரு வாழி திருக் கையிலே தரித்துக் கொண்டு
நம் கண் முகப்பே

நமது கண்ணெதிரில்
மொய்த்து

வந்து நெருங்கி
அலைத்து

புத்தியைக் கெடுத்து
உண்னை விடேன் என்று இருக்கிலும்

உன்னை விட மாட்டேன் என்று இருந்தாலும்
இராமாநுசா

எம்பெருமானரே
நின் புகழே

தேவரீருடைய திவ்ய குணங்களே
என்னை வந்து முற்றம் மொய்த்து  நின்று

என் பக்கல் வந்து சூழ்ந்து கொண்டு
அலைக்கும்

ஆகர்ஷிக்கின்றன

***- எம்பெருமான் தனது விலக்ஷணமான அழகைக் காட்டிக் கொண்டு வந்து என் கண்னெதிரே நின்றாலும், என்னை விடாதே வலியப் பற்றினாலும் அவனது அழகில் நான் மோஹிக்கப் பெறுவதில்லை; தேவரீருடைய திருக் குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன பகவத் குணங்களை நான் ஈடுபடுவதில்லை; தேவருடைய திருக் குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன. பகவத் குணங்களுக்கு நான் ஈடுபடுவதில்லை யென்றாராயிற்று.

“செய்த் தலைச்சங்கம் செழுமுத்த மீனாம்” என்கிற விசேஷணம்-திருவரங்கர் என்பதன் பகுதியாகிய திருவரங்கத்தில் அந்வயிக்கும். திருவரங்கம் எப்படிப்பட்ட தென்றால், முத்துக்களை யுதிர்க்கும் சங்குகள் நிறைந்த வயல் சூழ்ந்தது என்றவாறு. ஈனாதல்-பிரஸவித்தல்.

————–

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால்,இப்படி யனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே?–77-

பதவுரை

ஈயாத

(இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத
இன் அருள்

விலக்ஷணமான க்ருபையை
ஈந்தனன்

அடியேனுக்குச் செய்தருளின வரும்
எண் இல் மறை குறும்பை

எண்ணிறந்த      வேத விரோதிமதங்களை
அம்மறை பல்பொருளால் பாய்ந்தனன்

அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித்தவரும்
கீர்த்தியினால்

தமது கீர்த்தியாலே
இப்படி அனைத்தும் எய்ந்தனன்

இப்பூமியெங்கும் வியாபித்தவரும்
என் வினைகளை

எனது கருமங்களை
வேர்பறியகாய்ந்தனன்

வேரோடே அரும் படி போக்கினவரும்
வண்மை

ஔதார்யமே வடிவு கொண்ட வருமான
இராமாநுசற்கு

எம்பெருமானார்க்கு
இனி என் கருத்து

இன்னமும் (செய்யத்தக்கதாகத்) திருவுள்ளத்தில் ஏதேனா முண்டோ?

***- கீழ்ப்பாட்டில் தாம் அபேக்ஷித்தபடியே திருவருளைத் தந்தருளப் பெற்று, க்ருத க்ருத்ய ராய், அவர் செய்தருளின உபகாரங்களை அநுஸந்தித்து, இவை யெல்லாம் செய்த பின்பு இன்னமும் செய்தருள்வதாகத் திருவுள்ளம் பற்றிருப்பது எதுவோ என்கிறார்.

மறைக்குறும்பாவது- வேதத்திற்கு மாறாகச் சொல்லும் தப்புப் பொருள்கள். ஈந்தனன் பாய்த்தனன், எய்ந்தன், காய்ந்தனன், என்பவற்றை வினைமுற்றாகலே கொண்டு உரைத்தலுமாம்.

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading