கார்த்திகை யானும் கரி முகத் தானும் கனலும் முக் கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை யேத்தும் இராமானுச னென்றன் சேம வைப்பே.-22-
பதவுரை
|
கார்த்திகையானும் |
– |
ஸுப்ரஹமண்யனும் |
|
கரி முகத்தானும் |
– |
கணபதியும் |
|
கனலும் |
– |
(அவர்களுக்குத் துணையாய் வந்த) அக்நியும் |
|
முக் கண் மூர்க்தியும் |
– |
சிவனும் |
|
மோடியும் |
– |
துர்க்கையும் |
|
வெப்பும் |
– |
ஜ்வரதேவதையும் |
|
முதுகு இட்டு |
– |
முதுகுகாட்டி ஒடிப்போன பின்பு (அநந்யகதியான பாணாஸுரனானவன் |
|
மூ உலகும் பூத்தவனே என்று போற்றிட |
– |
“மூன்று உலகங்களையும் திருநாபிக் கமலத்திலே உண்டாக்கினபெருமானே!” (என்னைக்காத்தருள்) என்று போற்ற |
|
வாணன் பிழை பொறுத்த |
– |
(அந்த) பாணாஸுரனுடைய அபராத்தை க்ஷமித்தருளின |
|
தீர்த்தனை |
– |
பாவநனான ஸர்வேச்வரனை |
|
ஏத்தும் |
– |
நித்யம் துதிக்கின்ற |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
|
என் தன் சேமவைப்பு |
– |
எனக்கு ஆபத் தநம். |
***- ஐச்வர்யம் சங்கராதிச்சேத் ஆரோக்யம் பாஸ்கராத் ததா சிவன் பக்கல் செல்வம் பெற விரும்ப வேண்டும்; ஸூர்யன் பக்கல் ஆரோக்யம் பெற விரும்ப வேண்டும்) என்று ஸாமாந்யமாகச் சிலர் சொல்லுவதுண்டே; அதனைக் கொண்டு ஒருவன் அமுதனாரை நோக்கி ‘ஒய்! நீர் எம்பெருமானாரைப் பற்றினால் உம்முடைய தாரித்ரியம் நீங்குமோ? சிவனைப் பற்றினாலன்றே செல்வம் மிகும்’ என்று கூற அந்தச் சிவன் பட்ட பரிபவங்களை விளக்கும் ஒரு இதி ஹாஸத்தைப் பரக்கப்பேசிக் கொண்டு, ‘எம்பெருமானார் தாம் தமக்கு ஆபத் தனம்’ என்கிற திண்ணிய அத்யவஸாயத்தை உறுத்திக் கூறுகின்றார் இதில்.
———————-
வைப்பாய வான் பொருள் என்று,நல்லன்பர் மனத் தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழ்க்கே!–23-
பதவுரை
| நல் அன்பர் |
– |
விலக்ஷண பக்தி யுடையவர்கள் |
| வைப்பு ஆய வான் பொருள் என்று |
– |
“எம்பெருமானார் தாம் நமக்கு ஆபத் ரக்ஷகமான அக்ஷ தநம்” என்று கொண்டு |
| இராமாநுசனை |
– |
எம்பெருமானாரை |
| இரு நிலத்தில் |
– |
இந்தப் பெரிய வுலகத்திலே |
| ஒப்பார் இலாத உறு வினையேன் |
– |
ஒப்பற்ற மஹா பாபியான அடியேன் |
| வஞ்சம் நெஞ்சில் வைத்து |
– |
(என்னுடைய) க்ருத்ரிமமான நெஞ்சிலே வைத்து |
| முப்போதும் வாழ்த்துவன் |
– |
ஸர்வ காலமும் ஏத்தா நின்றேன்; |
| இது |
– |
மிகப் பெரிய அவரை நீசனாகிய நான் வாழ்த்துகையாகிற இது |
| அவன் |
– |
அவ் வெம்பெருமானானாருடைய |
| மொய் புகழ்க்கு |
– |
சிறந்த கீர்த்திக்கு |
| என் ஆம் |
– |
என்னாகுமோ? (அவத்யமமோ?) |
***- “வளவேழுலகின் முதலாய” என்ற திருவாய் மொழியில் ஆழ்வார் நைச்யாநுஸந்தானம் பண்ணினது போல, இப் பாட்டில் இவ்வமுதனாரும் நைச்யாநுஸந்தாநம் பண்ணுகிறார்;.
————-
மொய்த்த வெந் தீ வினையால் பல்லுடல் தொறும் மூத்து, அதனால்
எய்த்தொழிந்தேன் முன நாள்களெல்லாம், இன்று கண்டுயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்
கைத்த மெய்ஞ் ஞானத்து இராமானுச னென்னும் கார் தன்னையே.–24–
பதவுரை
| முன நாள்கள் எல்லாம் |
– |
கீழ்க் கழிந்த அநாதி காலமெல்லாம் |
| பல் உடல் தொறும் |
– |
பல பல சரீரங்கள் தோறும் |
| மொய்த்த வெம் தீ வினையால் மூத்து |
– |
ஆத்மாவை மொய்த்துக் கொண்டிருக்கின்ற அதி க்ரூரமான கர்மத்தாலே கிழத் தனம் வருமளவும் வாஸஞ்செய்து |
| அதனால் |
– |
அத்தாலே |
| எய்த்து ஒழிந்தேன் |
– |
மிக்க பரிதாப மடைந்தேன்; |
| பொய் தவம் போற்றும் புலைச் சமயங்கள் |
– |
கபடமான அநுஷ்டாநங்களை நடத்திப் போருகிற நீச மதஸ்தர்கள் |
| நிலத்து அவிய |
– |
இந் நில வுலகத்திலே அற்றொழியும்படி |
| கைத்த |
– |
நிரஸித்தருளின |
| மெய் ஞானத்து |
– |
உண்மை ஞான முடையரான |
| இராமாநுசன் என்னும் கார் தன்னை |
– |
எம்பெருமானாராகிற காள மேகத்தை |
| இன்று கண்டு |
– |
இன்று அடியேன் ஸேவிக்கப் பெற்று |
| உயர்ந்தேன் |
– |
சிறந்தவனானேன். |
***- நெடு நாளாக ஸம்ஸாரத்திலிருந்து பல பல கருமங்களைப் பண்ணி, அக் கருமங்களின் பலனாகப் பல பல பிறவிகளிற் பிறந்து படாதன பட்டு இப்படியாகவே அநேக பர்யாயம் அவஸந்நனாய்க் கிடந்தேன் நான்; இப்பொழுது பரம உதாரான எம்பெருமானார் இப் பூமியிலவதரித்துப் பல துர் மதங்களை வெறுத் தொழித்தது போல எனது கருமங்களையும் வேரறுத் தொழித்துத் தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே தம்மைக் காட்டி யருளக் கண்டு கிருதார்த்தனானேனென்கிறார்.
பொய்த் தலம் போற்றும் புலைச் சமயங்கள் -ராவண ஸம்ந்யாஸம், காலநேமி ஜபம் முதலியவை போலே மதாந்தரஸ்தர்கள் க்ருத்ரிமமான ஆசாரங்களை அனுட்டிப்பார்களென்க. மெய்ஞ் ஞானத்திராமாநுசன் – “யதார்த்தம் ஸர்வ விஜ்ஞாநம்”என்று ஸ்தாபித்தருளினவர்
——————
காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.–25-
பதவுரை
| கார் எய் கருணை இராமாநுச! |
– |
மேகத்தை யொத்த கருணையை யுடைய எம்பெருமானாரே! |
| நான் |
– |
அடியேன் |
| அல்வலுக்கு நேரே உறைவு இடம் |
– |
துக்கங்களுக்கு நேரே வாஸஸ்தானமாயிருப்பவன்; |
| என்னை |
– |
இப்படிப்பட்ட அடியேனை |
| நீ வந்து உற்றபின் |
– |
ஸ்வீகரித் தருளின பின்பு |
| உன் சீரே |
– |
தேவரீருடைய கல்யாண குணங்களே |
| உயிர்க்கு உயிர் ஆய் |
– |
ஆத்மாவுக்கு தாரகமாய் |
| அடியேற்கு |
– |
அடியேனுக்கு |
| இன்று தித்திக்கும் |
– |
இன்று ரஸியா நின்றது; |
| நின் அருளின் தன்மை |
– |
தேவரீருடைய க்ருபையின் ஸ்வபாவத்தை |
| இ கடல் இடத்தில் |
– |
கடல் சூழ்ந்த இப் பூ மண்டலத்தில் |
| ஆரே அறிபவர் |
– |
அறியக் கூடியவர்கள் ஆருமில்லை. |
***- ஜல ஸ்தல விபாகம் பாராமல் ஸர்வத்ர ஸமமாக வர்ஷிக்கின்ற மேகம் போலே, தாழ்ந்தோர் உயர்ந்தோர் என்னும் வாசி பாராமல் எல்லார் திறத்தும் அருள் புரிகின்ற எம்பெருமானாரே! மிகக் கொடிய துக்கங்களுக்கெல்லாம் இருப்பிடமான என்னை தேவரீர் தாமே வந்து விஷயீகரித்த பின்பு தேவரீருடைய திருக் கல்யாண குணங்களே எனக்குப் பரம போக்யமாய் ஆத்ம தாரகமுமாய் விட்டது. தேவரீர் க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யர் என்னுமிடத்தை இவ் வுலகில் உள்ளபடியே ஒருவருமறியார்கள்.
———–
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என் செய் வினையாம்
மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக் குற்ற வாளர் எது பிறப் பேதியல்வாக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் வியல்வே நம்மை யாட் கொள்ளுமே.–26-
பதவுரை
| என் செய்வினை ஆம் |
– |
என்னாலே செய்யப் பட்ட வினையாகிற |
| மெய் குற்றம் நீக்கி |
– |
நிலை நின்ற தோஷங்களைப் போக்கி |
| விளங்கிய |
– |
(இவனுடைய தோஷங்களைப் போக்கப் பெற்றோமே என்னும் மகிழ்ச்சியாலே உஜ்வலரான |
| மேகத்தை |
– |
பரம உதாரராய் |
| திக்கு உற்ற கீர்த்தி |
– |
திசைகள் தோறும் விரிந்த புகழை யுடையரான |
| இராமாநுசனை |
– |
எம்பெருமானாரை |
| மேவும் |
– |
பொருந்தி யிருக்கின்ற |
| நல்லோர் |
– |
விலக்ஷணர்கள் |
| எக் குற்றவாளர் |
– |
யாதொரு குற்றத்தை யுடையராகவும் |
| எது பிறப்பு |
– |
யாதொரு ஜன்மத்தையுடையராகவும் |
| எது இயல்பு ஆக |
– |
யாதொரு சரிதையை யுடையவராகவும் |
| நின்றோர் |
– |
முன்பு நின்றார்களோ, |
| அக் குற்றம் |
– |
அந்தக் குற்றமும் |
| அப் பிறப்பு |
– |
அந்த ஜன்மமும் |
| அ இயல்வே |
– |
அந்த சரிதையுமே |
| நம்மை |
– |
நம்மை |
| ஆள் கொள்ளும் |
– |
அடிமைப் படுத்திக் கொள்ளவற்று. |
***- ராமாநுஜ பக்தர்களுடைய ஜாதி முதலியவை ஏதாயினும் அவர்களெல்லாரும் அப்படியே நமக்கு உத்தேச்யர்கள் என்று காட்டியவாறு.
—————–
கொள்ளக் குறை வற் றிலங்கிக் கொழுந்து விட் டோங்கிய வுன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக் கிழுக்கிதென்று
தள்ளுற் றிரங்கும் இராமானுச! என் தனி நெஞ்சமே!–27-
பதவுரை
| இராமாநுச |
– |
எம்பெருமானாரே! |
| கொள்ள குறைவு அற்று இலங்கி |
– |
கொள்ளக் கொள்ளக் குறையாமல் தானே விளங்கி |
| கொழுந்துவிட்டு ஓங்கிய |
– |
மேன்மேலும் இளகிப் பதித்து வளர்ந்திருப்பதான |
| உன் வள்ளல் தனத்தினால் |
– |
தேவரீருடைய ஔதார்ய குணத்தாலே |
| வல் வினையேன் மனம் |
– |
மஹா பாபியான எனது நெஞ்சிலே |
| நீ புகுந்தாய் |
– |
(தேவரீருடைய பெருமை பாராதே) வந்து புகுந்தருளிற்று; |
| இது |
– |
(வஸிஷ்டின் சண்டாளர் க்ருஹத்தில் புகுந்தாற் போலே) புகுந்தவிது, |
| வெள்ளை |
– |
பரிசுத்தமாய் |
| சுடர் விடும் |
– |
பரிசுத்தமாய் விளங்கா நின்றுள்ள |
| உன் பெரு மேன்மைக்கு |
– |
தேவரீருடைய ப்ரபாவத்திற்கு |
| இழுக்கு என்று |
– |
அவத்யாவஹம் என்று |
| என் தனி நெஞ்சம் |
– |
எனது துணையற்ற நெஞ்சானது |
| தள்ளுற்று இரங்கும் |
– |
தளர்ந்து ஈடுபடா நின்றது. |
***- ஸ்வாமிந்! தேவரீருடைய பெருமையையும் அடியேனுடைய சிறுமையையும் சிறிதும் பாராமல் “இவன் நம் அடியார் விஷயத்திலே சுபலனாயிரப்பானொருவன்” என்கிற இவ்வளவையே கொண்டு பாபிஷ்டமான என் ஹ்ருதயத்திலே தேவரீர் புகுந்தளிற்று: வஸிஷ்டன் சண்டாளர் மனையிற் புகுந்தாற்போல் தேவரீர் என் நெஞ்சில் புகுந்த விது, தேவரீருடைய பரிசுத்தமாய் விளங்கும் மஹிமைக்கு என்ன அவத்யத்தை விளைத்திடுமோவென்று அஞ்சா நின்றேன்,
————–
நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க் கரிய இராமா னுசன் புகழ் அன்றி யென் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே!–28-
பதவுரை
| நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை |
– |
நெஞ்சிலே கல்மிஷத்தை யுடையனா யிருந்த கம்ஸனை |
| காய்ந்த |
– |
முடித்த |
| நிமலன் |
– |
ஹேயப்ரத்ய நீகனாய், |
| நங்கள் பஞ்சி திருவடி |
– |
ஆச்ரிதர்பக்கல் அபிமாநமுடையளாய் பஞ்சு போல் மெல்லிய திருவடிகளையுடையளான |
| பின்னை தன் காதலன் |
– |
நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனான கண்ண பிரானாடைய |
| பாதம் நண்ணு |
– |
திருவடிகளை ஆச்ரயியாத |
| வஞ்சர்க்கு |
– |
ஆத்மாபஹாரக் கள்வர்களுக்கு |
| அரிய |
– |
துர்லபரான |
| இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
| புகழ் அன்றி |
– |
குணங்களை யொழிய (மற்றொன்றை) |
| என் வாய் |
– |
என் வாக்கானது |
| கொஞ்சி பரவகில்லாது |
– |
குலாவி ஏத்த மாட்டாது; |
| இன்று கூடியது வாழ்வு |
– |
இன்று (எனக்கு) நேர்ந்த வாழ்ச்சியானது |
| என்ன |
– |
ஆச்சரியமானது |
***- நேற்று வரை அபதார்த்தமாய்க் கிடந்த அடியேன் இன்று ஸத்தை பெற்று வாழ்ந்த அதிசயம் சொல்லி முடியுமோ? இன்று உமக்கு வந்த அதிசயம் என்ன வென்று கேட்கிறீர்களோ? எம்பெருமானாருடைய குண கீர்த்தநத்தில் நேற்று வரை உதாஸீநமாய்க் கிடந்த என் வாயானது இன்று அவருடைய திவ்ய கீர்த்திகளை யன்றி வேறொன்றையும் அநுசந்திக்க மாட்டேனென்று அது தன்னிலே ஊன்றிக் கிடக்கிறதே, இதைவிட அதிசய முண்டோ? என்கிறார்.
—————-
கூட்டும் விதி யென்று கூடுங்கொலோ,தென் குருகைப் பிரான்
பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத், தன் பத்தி யென்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டின்ப மெய்திடவே?–29-
பதவுரை
| தென் குருகை பிரான் |
– |
நம்மாழ்வாருடைய |
| பாட்டு என்னும் |
– |
பாசுரங்கள் என்று ப்ரஸித்தமாய் |
| வேதம் |
– |
வேத ரூபமாய் |
| பசும் தமிழ் தன்னை |
– |
செந்தமிழாயிருக்கின்ற திருவாய் மொழியை |
| தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த |
– |
தம்முடைய பக்தியாகிற மாளிகையிலே ஸ்தாபித்தருளிய |
| இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
| புகழ் |
– |
கல்யாண குணங்களை |
| மெய் உணர்ந்தோர் |
– |
உள்ளபடி அறிந்திருக்கு மவர்களுடைய |
| ஈட்டங்கள் தன்னை |
– |
கோஷ்டிகளை |
| என் நாட்டங்கள் கண்டு |
– |
என் கண்களானவை ஸேவித்து |
| இன்பம் எய்திட |
– |
ஸூகிக்கும் படியாக |
| கூட்டும் விதி |
– |
அமைக்க வல்ல (அவருடைய) க்ருபையானது |
| என்று கூடுங்கொல் |
– |
என்றைக்கு வாய்க்குமோ? |
***- நம்மாழ்வா ரருளிச்செய்த தமிழ் வேதத்தைப் பத்தியுடன் பரவும் எம்பெருமானாருடைய திருக்கல்யாண குணங்களை உள்ளபடி உணர்ந்து ஈடுபட்டிருக்கும் மஹான்களுடைய சேஷ்டிகளை அடியேன் ஸேவித்து ஆநந்திக்கும் படியான பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ என்கிறார்.
தன்பத்தி யென்னும் வீட்டின்கண் வைத்த = விலையுயர்ந்த மாணிக்கத்தைச் செப்பிலே வைத்துக் கொண்டிருப்பாரைப்போலே அநர்க்கமான அருளிச்செயலைத் தம்முடைய பக்தியாகிற உயர்ந்த மாளிகையிலே வைத்துப் பேணிக் கொண்டிராநின்ற உடையவர் என்றபடி. நாட்டம் – கண்.
—————
இன்பந் தரு பெரு வீடு வந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தரு நிர யம் பல சூழிலென்? தொல்லுலகில்
மன் பல் லுயிர்கட் கிறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுச னென்னை ஆண்டனனே.–30-
பதவுரை
| தொல் உலகில் |
– |
‘அநாதியான இவ் வுலகத்தில் |
| மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயின் |
– |
நித்யரான எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷியாவன் விஷ்ணுவே’ |
| என மொழிந்த |
– |
என்று (பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த |
| அன்பன் |
– |
பரம காருணிகராய் |
| அனகன் |
– |
நிர்த் தோஷரான |
| இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
| என்னை ஆண்டனன் |
– |
என்னை அடிமை கொண்டருளினார்; |
|
(ஆன பின்பு) |
||
| இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் |
– |
ஆநந்தாவஹமான மோக்ஷம் வந்து ஸித்தித்தாலெனன? |
| எண் இறந்த துன்பம் தரு பல நிரயம் சூழில் என் |
– |
அளவற்ற துக்கங்களைத் தருகிற பல நரகங்கள் வந்து சூழ்ந்து கொண்டால் தான் என்ன? |
***- எம்பெருமானார் என்னை அடிமை கொண்டருளப் பெற்ற பின்பு எனக்கு மோக்ஷம் கிடைத்தாலென்ன? பலபல நரகங்கள் நேர்ந்தாலென்ன? எனக்கு எது பரம ப்ராப்யமோ அது கிடைத்து விட்டது! சரக்கறப் பேசுகிறார்.
நிரயம்-வடசொல். அனகன்-வடசொல் வகாரம்:ஹேய ப்ரதிபடர் என்றபடி.
—————–
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் கால மெல்லாம் மனமே!
ஈண்டு பல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
காண்டகு தோளண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக் கீழ்ப்
பூண்டவன் பாளன் இராமானுசனைப் பொருந்தினமே.–31-
பதவுரை
| மனமே |
– |
நெஞ்சே! |
| நூள் ஆய் |
– |
நாள்களாகவும் |
| திங்கள் ஆய் |
– |
மாதங்களாகவும் |
| ஆண்டுகள் ஆய் |
– |
வருஷ்ங்களாகவும் |
|
(இப்படி) |
||
| நிகழ் காலம் எல்லாம் |
– |
நடந்து செல்லுகிற ஸர்வ காலங்களிலும் |
| ஈண்டு பல் யோனிகள் தோறும் |
– |
திரண்டு பல்வகைப் பட்ட யோனிகள் தோறும் |
| உழல்வோம் |
– |
தட்டித் திரிந்த நாம் |
| இன்று ஒர் எண் இன்றியே |
– |
இன்று ஒரு நினைவு மில்லாதிருக்கச் செய்தே (அகஸ்மாத்தா) |
| காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பு ஆளான் இராமாநுசனை பொருந்தினம் |
– |
கண்ணாரக் காணத் தக்க தோள்களை யுடைய ஸ்வாமியான பேரருளாளனாடைய திரு வடிகளில் அன்பு பூண்ட எம்பெருமானாரைச் சேரப் பெற்றோம் (என்ன பாக்கியம்!,) |
——————-
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.–32-
பதவுரை
|
செறு கலியால் |
– |
(தரும நெரியைத் திரஸ்கரிக்கின்ற கைலினாலே |
| வருந்திய |
– |
துக்கப்பட்ட |
| ஞாலத்தை |
– |
பூமியை |
| வண்மையினால் வந்து எடுத்து அளித்த |
– |
தமதுநிர்ஹேதுக க்ருபையாலே வந்து உத்தரித்து ரக்ஷித்தவரும் |
| அரும் அளித்த |
– |
சரணுகதியென்கிற அரிய தபஸ்ஸை அநுஷ்டித்தவரும் |
| எங்கள் |
– |
எமக்கு ஸ்வாமியுமான |
| இராமாநுசனை |
– |
எம்பெருமானாரை |
| அடைபவர்க்கு |
– |
ஆச்ரயிக்கு மவர்களுக்கு |
| பொருந்திய தேசும் |
– |
ஸ்வரூபாது ரூபமான தேஜஸ்ஸூம் |
| பொறையும் |
– |
க்ஷமாகுணமும் |
| திறலும் |
– |
ஜிதேந்த்ரியத்வமாகிற பலமும் |
| புகழும் |
– |
கீர்த்தியும் |
| நல்ல திருந்திய ஞானமும் |
– |
பரம விலக்ஷணமான அறிவும் |
| செல்வமும் |
– |
பக்தியாகி றஸம்பத்தும் |
| சேரும் |
– |
தானே வந்துசேரும். |
————
அடையார் கமலத் தலர் மகள் கேள்வன் கை யாழி யென்னும்
படையொடு நாந்தகமும் படர் தண்டும்,ஒண் சார்ங்க வில்லும்
புடையார் புரி சங்கமு மிந்தப் பூதலம் காப்பதற்கென்று
இடையே இராமானுச முனி யாயின இந் நிலத்தே.–33-
பதவுரை
| அடை ஆர் கமலத்து அலர் மகள் கேள்வன் |
– |
தளங்கள் நெருங்கிய தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமானுடைய |
| கை ஆழி என்னும் படையோடு |
– |
திருக் கையிலே (விளங்கா நின்ற திருவாழி யென்கிற திவ்யா யுதத்தோடே |
| நாந்தகமும் |
– |
நாந்தக வாளும் |
| படர் தண்டும் |
– |
ரக்ஷணத் தொழிலிலே பரந்திரா நின்ற கதையும் |
| ஒண் சார்ங்கம் வில்லும் |
– |
அழகிய ஸ்ரீ சார்ங்க மென்கிற வில்லும் |
| புடை ஆர் புரி சங்கமும் |
– |
ஒரு பக்கத்துக்குத் தானே ஆபரணமாகப் போரும் படியான அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யமும் (ஆக இப் பஞ்சாயுதாழ்வார்கள்)இந்த பூதலம் காப்பதற்கு என்று |
| இந்தப் பூமியை ரக்ஷிக்கைக்காக இந் நிலத்து |
– |
இப் பூ மண்டலத்திலே இராமாநுச முனி இடையே ஆயின |
|
எம்பெருமானார் பக்கலிலே ஆயினர் |
||
***- ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களும் லோக ரக்ஷண அர்த்தமாக எம்பெருமானார் பக்கலிலே வந்து குடி கொண்டனர் என்கிறார் இப்பாட்டில்.
“அடையார் + புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று இந் நிலத்தே இராமாநுச முனியிடையே ஆயின” என்று அந்வயித்தவாறு. ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்கள் இவர் பக்கலிலே ஆகையாவது – இவருடைய நினைவைக் கடாக்ஷித்து நின்று இவர் அதிகரித்த காரியத்திற்குத் துணை செய்கையாம். அம்பரீஷனுக்குத்த் திருவாழியாழ்வான் ஸஹகரித்தது போல.
இப் பாட்டை மற்றொரு வகையாகவும் அந்வயிக்க இடமுண்டு:- அடையார் +புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று இந்நிலத்திடையே இராமாநுசமுனியாயின” என்று இப் பக்ஷத்தில் ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களே இந் நிலவுலகைக் காக்க எம்பெருமானாராக வந்து திருவவதாரித் தார்க ளென்றதாகிறது.
—————
நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என்
புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப் புகழே.–34-
பதவுரை
| இராமாநுசன் தன் |
– |
எம்பெருமானாருடைய |
| நயம் புகழ் |
– |
கல்யாணகுணங்களானவை |
| நிலத்தை செறுத்து உண்ணும் நீசம் |
– |
பூலோகத்தை ஹிம்ஹித்ததுத் தின்கிற நீசனான |
| கலியை |
– |
கலிபுருஷனாடைய |
| நினைப்பு அரிய பெலத்தை செறுத்தும் |
– |
இவ்வளவென்று நினை முடியாதபடி அளவற்றதான பராக்ரமப்தைத் தொலைத்தவளவிலம் |
| பிறங்கியது இல்லை |
– |
பிரகாசிக்கவில்லை; |
|
(பின்னை எப்போது பிரகாசித்தன? என்னில்;) |
||
| என் பெய் வினை |
– |
என்னாலே செய்யப்பட்ட பாவங்களை |
| தென் புலத்தில் |
– |
யமலோகத்தில் |
| பொறித்த |
– |
எழுதிவைத்த |
| அப் புத்தகம் சும்மை |
– |
அந்த புஸ்தகக் கட்டுகளை |
| பொறுக்கிய பின் |
– |
கொளுத்திவிட்டபின்பு |
| நலத்தை பொறுத்தது |
– |
விளக்கம் பெற்றன. |
***- எம்பெருமானாருடைய ஞானம், சக்தி முதலிய திருக் கல்யாண குணங்கள் எப்போது பிரகாசித்தனவென்றால், இந்நிலவுலகத்தில் கலிபுருஷன் செங்கோல் செலுத்த முடியாதபடி அவனுடைய வலிமையைத் தொலைத்துக் கிருதயுக தர்மமே எங்கும் நடைபெறும் படி செய்தருளினவாறே “இவர் மஹா புருஷர்; அரிய பெரிய ஞான சக்திகனை யுடையவர்” என்று உலகத்தா ரனைவரும் போற்ற நேர்ந்ததனால் கலியின் கொடுமையைக் கெடுத்தது காரணமாகவே இவருடைய திருக் கல்யாண குணங்கள்; நன்றாக விளங்கின – என்பர் சிலர்;
அது தகுதியல்ல; கலிதோஷத்தைப் போக்கினவளவிலும் எம்பெருமானாடைய திருக் குணங்கள் பொலிவு பெறவில்லை. பின்னை எப்போது பொலிவு பெற்றனவென்றால், எனது அளவற்ற பாவங்களை யெல்லாம் சிந்திரகுப்தன் எழுதி வைத்திருந்த பெரிய புத்தகச் சுமையைக் கொளுத்தி விட்டு என்னை நிஷ் கல்மஷனாக்கி அடிமை கொண்டாரென்ற விஷயம் வெளி வந்த பிறகு தான் அவருடைய திருக் குணங்கள் ஆச்சரியமாக விளங்கின என்கிறார்.
இதனால் தம்முடைய பாவங்கள் ஸர்வ சக் தனாலும் போக்க முடியாதவை என்பதும், கலியின் கொடுமையிற் காட்டிலும் கொடுமையிற் காட்டிலும் தமது கொடுமை வலிதாயிருந்ததென்பதும், இப்படி மஹா பாபிஷ்டாராயிருக்க தம்மை க்ஷமித்தருளி உஜ்ஜீவிக்கச் செய்தமையைக் கண்டு உலகத்தாரனைவரும் ஆச்சரியப் பட்டார்களென்பதும் தெரிவிக்கப் பட்டன.
———————-
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்
புயலே எனக் கவி போற்றி செய்யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன் மன்னு மா மலர்த்தாள்
அயரேன் அருவினை என்னை யெவ் வாறின் றடர்ப்பதுவே?–35-
பதவுரை
| ஒரு தெய்வம் |
– |
வேறொரு தெய்வத்தை |
| நயவேன் |
– |
விரும்பமாட்டேன் |
| நால் நிலத்தே |
– |
இவ் வுலகில் |
| சில மானிடத்தை |
– |
சில நீச மனிதர்களைக் குறித்து |
| புயலே என |
– |
‘மேகம் போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி |
| கவி போற்றி செய்யேன் |
– |
கவிகள் கட்டி ஸ்தோத்ரம் செய்ய மாட்டேன்; |
| பொன் அரஙகம் என்னில் |
– |
‘திருவரங்கம்’ என்று சொன்னவாறே |
| மயல் பெருகும் |
– |
அளவற்ற வயாமோஹத்தை யடைகின்ற |
| இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
| மன்னா மா மலர்த் தாள் |
– |
பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை |
| அயரேன் |
– |
மறக்க மாட்டேன்; |
|
(ஆனபின்பு) |
||
| அயரேன் |
– |
கொடிய பாவங்கள் |
| என்னை |
– |
என்னை |
| இன்று |
– |
இன்று முதலாக |
| எவ்வாறு அடர்ப்பது |
– |
எப்படி ஆக்ரமிக்கக் கூடும்? |
———-
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டளிப்பப், பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திடத்தானு மவ் வொண் பொருள் கொண்டவர் பின்
படரும் குணன், எம் இராமானுசன் றன் படி யிதுவே.–36-
பதவுரை
| அடல் கொண்ட நேமியன் |
– |
(ஆச்ரித விரோதிகளை அழிக்கவல்ல) மிடுக்கையுடைய திருவாழியை எந்தினவனாய் |
| ஆர் உயிர் நாதன் |
– |
ஸ்கல ஆச்மாக்களுக்கும் சேஷியான எம்பெருமான் |
| அன்று |
– |
அர்ஜுனனுக்கு ஸாரதியாயிருந்த வக்காலத்தில் |
| ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப |
– |
வேதங்களாகிற கடலில் மறைந்து கிடந்த நல்ல அர்தங்களை ஆராய்ந்து கீதாமூலமாக) உபதேசிக்க |
| பின்னும் |
– |
அதற்குப் பின்பும் |
| காசினியோர் |
– |
பூமியிலுள்ளவர்கள் |
| இடரின் கண் வீழ்ந்திட |
– |
ஸம்ஸார துக்கத்தில் அழுந்திக் கிடக்க, |
| தானாம் |
– |
(எம்பெருமானாராகிற தாமும் |
| அ ஒன் பொருள் கொண்டு |
– |
(முன்பு ஸர்வேச்வரனருளிச் செய்த) அந்தச் சிறந்த அர்த்தங்களைக் கொண்டு |
| அவர் பின்படரும் குணன் |
– |
அந்த ஸர்ஸாரிகளைப்பின் எம்பெருமானாருடைய |
| வடி இது |
– |
ஸ்வபாவம் இது. |
***- முன்பு பகவான் பல சிறந்த அர்த்தங்களை ஸ்ரீ பகவத் கீதா முகத்தாலே வெளிப்படுத்தின வளவிலும் பாழும் ஸம்ஸாரிகள் அவ் வர்த்தங்களைத் தெரிந்து கொண்டு உஜ்ஜீவிக்க மாட்டாமல் மேன்மேலும் ஸம்ஸாரத்தையே பெருக்கிக் கொண்டு அதோ கதியை யடைந்துவிடவே, “ஐயோ! இப்படி நிந்ய ஸம் ஸாரிகளாய்க் கெட்டுப் போகிறார்களே!” என்று அநுதாபங்கொண்ட எம்பெருமானார் அந்த கீதா சாஸ்த் ரத்திலுள்ள பொருள்களையே விளங்க உரைத்துக் கொண்டு, இது கேட்டுத் திருந்துவார் ஆரேணு முண்டோ? என்று ஸம்ஸாரிகளைப் பின் தொடர்ந்து செல்லுகிறார்; நம்மைப் பெறுகற்கு அவர் தாமே முயற்சி செய்து கொண்டு – ஆள் பார்த்து உழி தருகின்றார்; இந்தக் திருக் குணம் உங்களுக்குப் தெரிய வில்லையா? என்கிறார்.
தானும் அவ்வொண் பொருள் கொண்டு = கீதா பாஷ்யம் அருளிச் செய்து என்று கருத்து திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே சரம ச்லோகார்த்தத்தை ஏகாந்தமாகக் கேட்டு அதனை யெல்லாரு மறிந்து உஜ்ஜீவிக்குமாறு கோபுரத்தின் மேலேறி விளம்பரப்படுத்தின திருக் குணத்தை இப் பாட்டில் பேசுகின்றாரென்னவுமாம்.
—————–
படி கொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்தி வெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமா னுசன் குணங் கூறும்,அன்பர்
கடி கொண்ட மா மாலர்த் தாள் கலந் துள்ளங் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே.–37–
பதவுரை
| படி கொண்ட கீர்த்தி |
– |
உலக மெங்கும் பரந்த புகழை யுடைத்தான |
| இராமாயணம் என்னும் |
– |
ஸ்ரீ ராமாயண மென்கின்ற |
| பக்தி வெள்ளம் |
– |
பக்தி ஸமுத்திரம் |
| குடி கொண்ட கோயில் |
– |
நித்ய வாஸம் பண்ணுகிற திவ்ய ஸ்தாநமாயிருக்கின்ற |
| இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
| குணம் கூறும் அன்பர் |
– |
திருக் குணங்களைப் பேசுகின்ற பக்திமான்களுடைய |
| கடி கொண்ட மா மாலர்த் தாள் |
– |
மணம் மிக்குச் சிறந்த பாதார விந்தங்களில் |
| உள்ளம் கலந்து |
– |
நெஞ்சு பொருந்தி |
| கனியும் |
– |
ஸ்நேஹித்திருக்கின்ற |
| நல்லோர் |
– |
மஹாநுபவர்கள் |
| அடி கண்டு கொண்டு |
– |
(இவ்வாதம் வஸ்துவானது உடையவர்க்கு சேஷப்பட்ட தென்கிற) மூலப்பொருளைத் தெரிந்து கொண்டு |
| உகந்து |
– |
ஆதரித்து |
| என்னையும் |
– |
அடியேனையும் |
| அவர்க்கு |
– |
அவ்வெம்பெருமானார்க்கு |
| ஆள் ஆக்கினர் |
– |
ஆட் படுத்தினார்கள் |
***- இப்படிப்பட்ட எம்பெருமானாரை நீரே செ ன்று பற்றினீரோ? அன்றி அவர் தாமே ஸ்வீகரித்தருளினாரே? என்று அமுதனாரைச் சிலர் கேட்க, நானாம் பற்றவில்லை, அவரும் ஸவீகரிக்க வில்லை; அவருடைய ஸம்பந்த ஸம்பந்திகள் என்னைக் கொண்டு சேர்த்தார்கள் என்கிறார்.
அடி கண்டு கொண்டு = அடியாவது மூலம்; எம்பெருமானார்க்கு உரித்தாயிருக்கையாகிற மூலத்தைத் தெரிந்து கொண்டு சேர்த்தார்க் கொள்கை. மருமறிந்து காரியஞ்செய்தார்க் ளென்றவாறு-
—————
ஆக்கி யடிமை நிலைப்பித்தனை யென்னை இன்று, அவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா?முன்பு புண்ணியர் தம்
வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால், உரையா யிருந்த நுண் பொருளே.–38-
பதவுரை
|
(ஸ்வாமிந்!) |
||
| என்னை |
– |
(நெடுநாளாக அஹங்காரியாய்க்கிடந்த) என்னை |
| இன்று |
– |
இன்றைக் தினத்தில் |
| ஆக்கி |
– |
ஒரு பொருளாக்கி |
| அடிமை |
– |
சேஷத்வத்தில் |
| நிலைப்பித்தனை |
– |
நிலைநிறுவத்தினீர்; (இன்று இப்படி செய்தருளின தேவரீர்) |
| முன்பு |
– |
முற்காலமெல்லாம் |
| அவமே போக்கி |
– |
வீணாகப் போக்கி |
| புறந்து இட்டது |
– |
வெளி விஷயங்சளிலே தள்ளி விட்டு வைத்தது |
| என் பொருளா |
– |
என்ன நிமித்தாக? |
| புண்ணியர் தம் |
– |
(தேவரீரை இடைவிடாது அநுபவிக்கும்) பாக்கிய சாலிகளுடைய |
| வாக்கில் பிரியா |
– |
வாக்கை விட்டுப் பிரியாத |
| இராமாநுச |
– |
எம்பெருமானாரே! |
| தெரிவு அரிது |
– |
அறிய முடியாததாக நின்றது; |
| இந்த நுண் பொருள் |
– |
இந்த ஸுக்ஷ்மமான விஷயத்தை |
| உரையாய் |
– |
தேவரீரே அருளிச் செய்ய வேணும் |
***- கூரத்தாழ்வானைக் கொண்டு அடியேனை இன்று திருத்திப் பணி கொண்ட தேவரீர் இதற்கு முற்காலமெல்லாம் இந்த சேஷத்வ ரஸத்தை அடியேனுக்கு ஊட்டாமல் வீணாக விஷயாந்தரங்களிலே அகல வைத்திருந்ததற்கு என்ன காரணம்? இன்று இங்ஙனே திருவுள்ளம் பற்றும்படியாக என்னிடத்தில் என்ன ஸூ ஹ்ருதம் உண்டாயிற்று? ஒன்றுமில்லை; அப்படியிருக்கச் செய்தேயும் தேவரீர் தம்முடைய நிர்ஹேதுக க்ருபையைக் கொண்டே யன்றோ இன்று ஆட்படுத்திக் கொண்டது. ஹா ஹா! இப்படியும் ஒரு க்ருபை யுண்டோ? இவ்வருளின் திறத்தை அறிவாரார்! ஆறிந்த தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்றாராயிற்று.
நிலைப்பித்தனை = முன்னிலை யொருமை வினைமுற்று அவம் – வீண். “இன்று என்னை ஆக்தி அடிமை நிலைப்பித்தனை; முன்பு அவமே போக்கிப் புறத்திட்டது என் பொருளா!” = இன்று ஸ்வீகரித்ததற்கும் இத்தனை நாள் ஒதுக்கி வைத்ததற்கும் என்ன காரணம்?
—————-
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள் கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று ளார் தரமோ?
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே.–39–
பதவுரை
| பொருள் என்றும் |
– |
த்ரவ்யம் என்று சொல்லிக் கொண்டும் |
| புதல்வர் என்றும் |
– |
புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டும் |
| பூமி என்றும் |
– |
க்ஷேத்ரமென்று சொல்லிக் கொண்டும் (அர்த்த புத்திராதிகளையே விரும்பி) |
| மருள் கொண்டு |
– |
அறிவு கெட்டு |
| இளைக்கும் நமக்கு |
– |
வருந்திக் கொண்டு கிடக்கிற நமக்கு |
| இருள் கொண்ட |
– |
அஜ்ஞாநத்தோடு கூடிய க்ரூரமான துக்கங்களை |
| மாற்றி |
– |
போக்கடித்து |
| தன் ஈறு இல் பெரு புகழே தெருளும் தெருள் |
– |
தம்முடைய முடிவில்லாத சிறந்த கல்யாண குணங்களையே சிந்திக்கக் கடவதான ஞானத்தை |
| தந்து |
– |
அருளித்தருளி |
| இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
| செய்யும் சேமங்கள் |
– |
செய்கிற க்ஷேமங்களானவை |
| நெஞ்சே |
– |
ஒ மனமே! |
| மற்று உளார் தரமோ |
– |
மற்ற பேர்களுக்குச் செய்கிற மாதிரியோ (அல்ல; விலக்ஷணம் என்ற படி.) |
***- எம்பெருமானாருடைய திருவருளாலே தாம் பெற்ற நன்மைகளை நினைத்து நினைத்து ஆநந்தமுள்ளடங்காமல் அவ்வாநந்தத்தை நெஞ்சோடே கூடி உலாவுகிறார். நெஞ்சே! – அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாசவார் குழலாள் என்று மயங்கிப் புத்ர தார க்ருஹ க்ஷேத்ரங்களுக்கு மேற்படி வேறொன்று மறியாமல் உடலுக்கே கரைந்து நைந்து கிடந்த நமக்கு அஜ்ஞாநங்களையும் அது காரணமாகவரும் பாவங்களையும் தொலைத்தருளித் தமது திவ்ய கீர்த்திகளையே அநவரதம் பேசும்படியான நிலைமையிலே நம்மைக் கொண்டு நிறுத்தினார் எம்பெருமானார்; இப்படியாக அவர் நமக்குச் செய்தருளும் க்ஷேமங்கள் இவ்வுலகில் வேறு யார்க்காவது கிடைக்கக் கூடியதோ? நம்முடைய பாக்கியமே பாக்கியமன்றே என்றாராயிற்று.
மற்றுளார் தாமோ? என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; இப்படிப்பட்ட க்ஷேமங்களை நமக்கு எம்பெருhனார் தவிர வேறு யாரேனும் அளிக்கக் கூடுமோ? என்றும் இப்படிப்பட்ட க்ஷேமங்கள் நமக்குத் தவிர வேறு ஆர்க்கேனும் கிடைக்கத் தகுமோ? என்றும்.
————–
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம் பொருள் வீடுதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன், இராமானுசன் இந்த மண்மிசையே.–40-
பதவுரை
| சேமம் நல்வீடும் |
– |
(அனைவர்க்கும்) க்ஷேம ரூபமான சிறந்த மோக்ஷம் |
| பொருளும் |
– |
அர்த்தமும் |
| தருமமும் |
– |
தர்மமும் |
| சீர்ய நல் காமமும் |
– |
மிகவுஞ் சிறந்த காமமும் |
| என்ற இவை |
– |
ஆக இப்படி சொல்லப் பட்டுள்ள இவை |
| நான்கு என்பர் |
– |
நான்கு புருஷார்த்தங்கள் என்று (வைதிகர்கள்) கூறுவார்கள்; |
| நான்கினும் |
– |
இந்த நான்கு புருஷார்த்தங்களுள் |
| காமம் |
– |
காமமாவது |
| கண்ணனாக்கே ஆமது |
– |
எம்பெருமான் விஷயத்திலேயே உண்டாமது; |
| அறம் பொருள் வீடு |
– |
தர்ம அர்த்த மோக்ஷங்கள் மூன்றும் |
| இதற்கு என்று |
– |
இந்தக் காம புருஷார்த்தததிற்கு சேஷ பூதங்கள் என்று |
| வாமநன் சீலன் இராமாநுசன் |
– |
வாமநாவதாரம் செய்த பெருமானொடு ஒத்த சீலத்தை யடையரான எம்பெருமானார் |
| இந்த மண்மிசை உரைத்தான் |
– |
இவ் வுலகத்தில் அருளிச் செய்தார் |
***- எம்பெருமானார் இவ்வுலகத்தார்க்கு உபதேசித்தருளின அர்த்தங்களில் ஒரு அர்த்த விசேஷத்தை இப் பாட்டில் எடுத்துரைக்கின்றார்:- ஸகல சாஸ்த்ரங்களாலும் பிரதி பாதிக்கப்படுமவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என நான்கு புருஷார்த்தங்களாம்; அந்த நான்கினுள் காமமென்பது பகவத்விஷய காமம்; விஷயாந்தரங்களைப்பற்றின காமம் சிற்றின்ப மாதலால் அது புருஷார்த்தமன்று; பேரின்பமாகிய பகவத் காமமே காமம். அதுவே புருஷார்த்தம். மற்ற மூன்று புருஷார்த்தமன்று; சொன்ன காம புருஷார்த்தத்திற்கு சேஷப்பட்டவைகள்; காமமே ப்ரதாந சேஷியான புருஷார்த்தம் என்று உலகத்தாரெல்லார்க்கும் உபதேசித்தருளினர் எம்பெருமானார் என்றாராயிற்று.
சேம நல் வீடு மென்று தொடங்கி அறம் பொருள் வீடிதற்கு என்னுமளவும் எம்பெருமானாருடைய உபதேச வடிவம்
கண்ணுக்கேயாமது காமம் = காம க்ரோதங்களைக் கெட்ட குணமாகத் கூறி யிருப்பது தகாத விஷயங்களில் காமம் கூடாதென்பது பற்றி பகவத் விஷயத்தில் காமம் சாஸ்த்ர விஹிதம். ஆழ்வார் =ஸுக்திகளில் இக் காமமே பொலியும்.
வாமநன் சீலன் = வாமநாவதாரம் செய்த எம்பெருமானாருடைய சீலம் போன்ற சீலத்தை யடையவர் என்கை. ஒருவரும் அபேக்ஷியாதிருக்கத் தன் பேறாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து திருவிக்ரமன் போலே வெளியிடுபவர் எம்பெருமானார் என்கிறது.
—————-
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே.–41-
பதவுரை
| எங்கள் மாதவனே |
– |
நமக்கு நாதனான திருமால் தானே |
| மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து |
– |
(இப்பூமியிலுள்ள மநுஷ்யாதி) யோனிகள் தோறும் அவதரித்து |
| கண்உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் |
– |
எல்லாருடைய கண்ணுக்கும் தன்னை இலக்காக்கிக் கொண்டு நின்ற விடத்திலும் (அவனை நம்முடைய நாதனென்று) காண மாட்டாதிருக்க இவ்வுலகத்தாரெல்லாரும் |
| அண்ணல் இராமாநுசன வந்து தோன்றிய அப்பொழுதே |
– |
ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானார் இங்கே வந்தவதரித்தவுடனே |
| நண்ண அரு ஞானம் தலைக் கொண்டு |
– |
பெறுதற்கரிதான ஞானம் அதிகரிக்கப் பெற்று |
| நாரணற்கு ஆயினர் |
– |
ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப் பட்டனர். |
***- எம்பெருமானுடைய அவதாரத்திற்காட்டிலும் எம்பெருமானாருடைய அவதாராமே சிறப்புற்ற தென்கிறார். எம்பெருமான் பலபல யோனிகளிற் பலவகைப் பிறவி பிறந்து கண் காண வந்து நின்று உபதேசங்களாலே ஸ்வ ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுத்த விடத்திலும் யாரும் அவனை லக்ஷியம் பண்ணவில்லை; “அவஜாநந்தி மாம் மூடா:” (என்னை மூடர்கள் அவமானப்படுத்துகிறார்கள்) என்று அவன்றானே சொல்லிக் கொண்டு வருத்தப்பட வேண்டிற்றாயிற்று ஆகையாலே பகவானுடைய அவதாரம் ஸம்ஸாரிகளுடைய தெள்ளறிவுக்கு உறுப்பாக வில்லை. எம்பெருமானாருடை அவதாரமோ வென்னில்; பயன் பெற்றது. இவர் தாம் திருவவதரித்தவடனே எல்லா வுலகத்தாரும் ஆச்சரியமான ஞானத்தைப் பெற்று உஜ்ஜீவித்தார்கள் – என்றாராயிற்று.
————-
ஆயிழை யார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன் தீதில் இராமா னுசன் தொல் லருள் சுரந்தே.–42-
பதவுரை
| மா மலராள் நாயகன் |
– |
லக்ஷ்மீ பதியான |
| அரங்கன் |
– |
பெரிய பெருமாள் |
| எல்லா உயிர்கட்கும் நாதன் என்னும் |
– |
ஸகல ஆத்துமாக்களுக்கும் சேஷி என்று உபதேசிப்பவரும் |
| தூயவன் |
– |
பரம பரிசுத்தரும் |
| தீது இல் |
– |
எவ்வகைக் குற்றமுமில்லாத தவருமான |
| இராமாநுசன் |
– |
எம்பெருமானார்; |
|
(என்னசெய்தாரென்றால்) |
||
| ஆய் இழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளறு அழுந்திமாயும் என் ஆவியை |
– |
அழகிய ஆபரணங்களணிந்த ஸ்த்ரிகளுடைய கொங்கைத் தடத்தில் தங்கும் ஆசையாகிற சேற்றிலே அழுந்தி) நசித்துப் போகிற என் ஆத்மாவை |
| தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான் |
– |
இன்று நிர்ஹேதுக க்ருபை பண்ணி வந்து உத்தரித் தருளினார். |
***- பகவானுடைய அவதார காலங்களில் திருந்தாத ஸம்ஸாரிகளும் எம்பெருமானார் காலத்தில் திருந்திவிட்டார்களென்று கீழ்ப் பாட்டில் கூறியதற்கு வேறு த்ருஷ்டாந்தம் காட்ட வேணுமோ? என்னைத் திருத்திப் பணி கொண்ட விஷயமொன்றே போராதோ வென்பார் போலத் தம்மைத் திருத்தினதைச் சொல்லி ஆநந்தப்படுகிறார்.
————
சுரக்கும் திருவும் உணர்வும் சொலப் புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்க்கு யான் அறஞ் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசனென்று சொல்லுமினே.–43-
பதவுரை
| படியில் உள்ளீர் |
– |
இப்பூமியிலுள்ளவர்களே! |
| யான் உமக்கு உரைக்கின்றனன் |
– |
நான் உங்களுக்கு (ஒரு ஹிதம்) சொல்லுகிறேன்; (என்ன வென்றால்) |
| அறம் சீறும் உறுகலியை துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமின் |
– |
தர்ம மார்க்கத்தில் சீற்றமுடையத் தாய் ப்ரபலமான கலியை ஒட்டி விடும் எம்பெருமானாருடைய திரு நாமத்தைச் சொல்லுங்கள்; (அப்படி சொன்னால்) |
| திருவும் |
– |
பக்திப் பெருஞ்செல்வமும் |
| உணர்வும் |
– |
ஞானமும் |
| சுரக்கும் |
– |
மேன் மேலும் பெருகும் |
| சோல புகில் |
– |
அந்தத் திருநாமத்தைச் சொல்லத் தொடங்கும் போதே |
| வாய் அமுதம் பரக்கும் |
– |
வாக்கிலே அம்ருத ரஸம் வியாபிக்கும் |
| இரு வினை |
– |
மஹா பாபங்கள் |
| பற்று அற ஓடும் |
– |
அடியோடே போய் விடும். |
***- உலகத்தாரை நோக்கி நீங்களெல்லாரும் ஸ்ரீ ராமாநுஜ திவ்ய நாயத்தை வாயாரச் சொல்லுங்கள், உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகுமென்கிறார். ஓ ஜனங்களே! உங்களுக்கு ஓர் அருமையான அர்த்தத்தை உபதேசிக்கிறேன், கேளுங்கள், எம்பெருமானுடைய ஸம்பந்தமுள்ள தேசத்தில் தருமத்திற்கு மாறான கலிபுருஷன் நிற்கப் பெற மாட்டான்; அன்னவரது திருநாமங்களை நீங்கள் அநுஸந்தாநம் பண்ணுங்கள்; உங்களுக்கும் ஜ்ஞாந பக்திகள் தலை யெடுக்கும் பாவங்களும் தொலையும். அத் திரு நாமங்கள் நாவுக்கும் இனிதாயிருக்கும். சொல்லிப் பாருங்கள்.
உமக்கு-யான், உமக்கியான். “யவ்வரீன் இய்யாம்” என்பது நன்னூல்.
நேர்பதினாறே நிரைபதினேழென் றோதினர் கலித்துறையோரடிக் கெழுத்தே” என்ற இலக்கணத்திற்கு மாறாக இப்பாட்டின் மூன்றாமடியில் (ஒற்றொழித்துப்) பதினெட்டெழுத்து
வந்தது என்னெனில்; உமக்கியான் என்ற விடத்தில் ககரத்தின் மேலேறின இகரம் குற்றிய விகர மாகையாவே வண்ணங்கெடாமைக்குக் கழித்து கீழோடே ஒன்றுவித்துப் பதினேழெழுத்தாகவே எண்ணத்தக்கது. கம்பர் இயற்றிய சடகோபரந்தாதியில் “என் முடியா தெனக்கியாதே திரா வணன்றன்” என்ற இருபத்தொன்பதாம்பாட்டிலும் இப்படியே பிரயோகம் வந்தமை காண்க. இந்த நூற்றந்தாதியிலும் மேல் ஐம்பத்து மூன்றாம் பாட்டில் “பற்பல்லுயிர்களும் பல்லுலகியரவும் பரனதென்றும்” என்ற விடத்திலும் இங்ஙனமே கொள்க.
—————–
சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே.–44-
பதவுரை
| அகல் இடத்தோர் |
– |
விசாலமான இப் பூமியிலுள்ளவர்கள், |
| சொல்ஆர் தமிழ் ஒரு மூன்றும் |
– |
சொல் நிரம்பிய இயல் இசை நாடகம் என்கிற ஒப்பற்ற முத் தமிழையும் |
| சுருதிகள் நான்கும் |
– |
நான்கு வேதங்களையும் |
| எல்லை இல்லா அறம் நெறி யாவும் |
– |
கணக்கில்லாத தரும சாஸ்திரங்களையும் மற்றும் எல்லாக் கலைகளையும் |
| தெரிந்தவன் |
– |
அறிந்தவராயும், |
| எண் அரு சீர் |
– |
எண்ண முடியாத குணங்களை யுடையவராயும் |
| நல்லார் பரவும் |
– |
ஸத்துக்களான் துதிக்கப் படுபவராயு மிருக்கிற |
| இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
| திருநாமம் |
– |
திரு நாமத்தை |
| நம்பி கல்லார் |
– |
(என் வார்த்தையை) நம்பிக் கற்கின்றார்களில்லை; |
|
(ஸ்ரீ ராமாநுஜ நாமஸங்கீர் த்தநமே புருஷார்த்த மென்று அறியாதவர்களாய்) |
||
| எதுபேறு என்று காமிப்பரே! |
– |
நமக்குப் புருஷார்த்தம் எது? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஐயோ! |
***- சொல் ஆர் தமிழொரு மூன்றும் = இயல் இசை நாடகம் என மூவகைப்படும் தமிழ் – ‘எழுத்துப் பதின்மூன்று இரண்டசை சீர்முப்பதேழ் தளை ஐந்து, இழுக்கிலடிதொடை நாற்பதின் மூன்று ஐந்துபா இனம் மூன்று, ஒழுகிய வண்ணங்கள் நூறு ஒன்பது ஒண்பொருள் கோள் இருமூ, வழுக்கில் விகாரம் வனப்பெட்டு யாப்புள் வகுத்தனவே” என்று தொகுத்து உணர்த்தப்படும் இயற்றமிழின் இலக்கணங்கள் குறிஞ்சி, செருந்தி, இந்தளம், கொல்லி, நாமரம், தக்கேசி, பஞ்சமம், கைசிகம் காந்தாரம் பாலை யாழ் முதலிய பண்களைக் கொண்டுள்ள தமிழ் இசைத்தமிழாம் இயலுக்கும் இசைக்கும் பொது வானது நாடகத் தமிழாம் தராவிட சாஸ்த்ரங்களெல்லாவற்றையும் அறிந்தவர் எம்பெருமானார் என்கிறது.
சுருதிகள் நான்கும் = ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என வேதங்கள் நான்காம். எல்லை யில்லா அறநெறி = தர்மசாஸ்த்ரங்கட்கு அளவே யில்லை. யாவும் = கீழ்ச் சொன்னவற்றையும் மற்றுமுள்ள கலைகளையும்.
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply