த்வயி ரக்ஷதி ரக்ஷகை: கிமந்யை–த்வயி சாரக்ஷதி ரக்ஷகை: கிமந்யை: –காமாஸிகாஷ்டகம் – 8
குழந்தை ப்ரஹ்லாதன் “நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”(திருவாய்மொழி 5-7-10) என்று
ஸ்ரீமந் நாராயணனை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்துக்கொண்டு, தன் தந்தை தன்னிடத்தில் செய்த ஹிம்சைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டான். ஆனால் ஸர்வேஸ்வரன் தன் மீது செய்யும் தோஷங்களைக் கூடப் பொறுப்பான், தன் பக்தர்கள் மீது இழைக்கப்படும் தோஷங்களைக் க்ஷணக்காலமும் பொறுக்கமாட்டானன்றோ!
“தனக்குரியனாய் அமைந்த தானவர்கோன் கெட்டான், உனக்குரியனாய மைந்தன் உய்ந்தான்” (நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி – 77) என்றபடி
ஸ்ரீமந் நாராயணனே பரத்வம், நாம் எல்லோரும் அவனுடைய தாஸர்கள்
(தாஸபூதா ஸ்வத ஸர்வே ஹயாத்மான: பரமாத்மந: – மந்த்ரராஜபத ஸ்தோத்ரம் 11) என்று உணர்ந்த ப்ரஹ்லாதன்
ஈசன் அடங்கெழில் அஃதென்று அடங்குக(திருவாய்மொழி1-2-7) என்று அவனுள்ளே அடங்கிப் போனான்.
இதனை உணராத இரணியன் எம்பெருமான் திருக்கைகளாலேயே மாண்டே போனான்.
த்வயி ரக்ஷதி ரக்ஷகை: கிமந்யை–த்வயி சாரக்ஷதி ரக்ஷகை: கிமந்யை: –காமாஸிகாஷ்டகம் – 8
ந்ருஸிம்ஹன் ஒருவனை ரக்ஷிக்கவேண்டும் என்று ஸங்கல்பம் செய்துவிட்டால் மற்ற தெய்வங்கள் காப்பால் என்ன பயன்?
ந்ருஸிம்ஹன் ஒருவனை ரக்ஷிக்கவேண்டாம் என்று ஸங்கல்பம் செய்துவிட்டால் மற்ற தெய்வங்கள் காப்பால் என்ன பயன்?
—————
பாயாதீஷத்பிரசலிதபதோ நாபகச்சன்ன திஷ்டன் | மித்யகோபஸ்ஸபதி நயனே மீலயன் விஷ்வகோப்தா |-கோபால விம்ஸதி – 5-
இடையன் வேடம் தரித்து வெண்ணெயைத் திருடி தன் தாயிடம் அஞ்சி நடுங்கும் கபட நாடகத்தை நடத்தும் இவனே தரணியனைத்தையும் ரக்ஷிப்பவன் என்று கொண்டாடுகிறார் ஸ்வாமி தேசிகன். “அகில புவந ரக்ஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ:” என்றபடி.
“தாஸபூதா: ஸ்வத: ஸர்வே. ஹ்யாத்மான: பரமாத்மன:”(ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்)–என்றபடி
உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும்-எம்பெருமானுடைய தாசர்கள்.
மற்றும் “ஈசன் அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே” (திருவாய்மொழி 1-2- 7) என்று அவனிடத்தில் அடங்கியிருப்பதே-சேதனர்களின் ஆத்ம ஸ்வரூபத்திற்கு லக்ஷணம்.
——————–
பஞ்சவடியில் பர்ணசாலை அமைக்கும்பொழுது, எம்பெருமான் ஸ்ரீராமன் கட்டளையிடுகிறான்:
ரமதே யத்ர வைதேஹீ த்வமஹம் சைவ லக்ஷ்மண |
தாத்ருசோ த்ருஷ்யதாம் தேச: ஸந்நிக்ருஷ்டஜலாசய: ||–ஆரண்யகாண்டம் 15-4
வநராமண்யகம் யத்ர ஜலராமண்யகம் ததா |
ஸந்நிக்ருஷ்டம் ச யத்ர ஸ்யாத்ஸமித்புஷ்பகுசோதகம் ||–ஆரண்யகாண்டம் 15-5
“லக்ஷ்மணா! நீர்நிலை அருகில் இருக்கக் கூடியதும், எந்த இடத்தில் சீதை மகிழ்ச்சியாக இருப்பாளோ, அதேபோல் நீயும் நானும் உகப்புடன் இருப்போமோ, அப்படிப்பட்டதான ஓர் இடத்தைத் தேடிக் கண்டுபிடி. அந்த இடம் மரங்கள் அடர்ந்து அழகாக இருக்க வேண்டும் நீர்வளம் உள்ளதாக இருக்க வேண்டும். அருகிலேயே சமித்து, மலர்கள், தர்ப்பை, நல்ல தீர்த்தம் கிடைக்கும்படியாக இருக்க வேண்டும்.” என்றான்.
அதற்கு லக்ஷ்மணன் பதிலளிக்கிறான்:
பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே |
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத ||–ஆரண்யகாண்டம் 15-7
“இராமா! நான் காலமெல்லாம் தங்கள் அடிமையாக இருப்பவன். அதனால் உனக்குப் பிடித்தமான இடத்தைத் தேர்ந்த்தெடு என்று தாங்கள் கூறுவது முறையல்ல. எந்த இடத்தில் தங்கள் மனம் ஈடுபடுகின்றதோ அதைச் சுட்டிக்காட்டி, இங்கே பர்ணசாலையைக் கட்டு என்று எனக்கு ஆணையிடுங்கள்” என்று விண்ணப்பித்து தான் ஸ்வதந்த்ரன் அல்லன் என்றும் அவ்வாறு ஸ்வதந்த்ரமாக செய்யும் கைங்கர்யம் நிறம் பெறாது என்றும் ஸ்தாபித்து, மேலும்,
பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ்சதே ||-அயோத்யாகாண்டம் 31-25
“நீர் வைதேஹியுடன் கூட மலைத்தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும்போதும் தூங்கும்போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.” என்று தன் சேஷத்வத்தை திருக்கைத்தொட்டு வெளிப்படுத்தினார் இளையபெருமாள்.
——————-
ராமாவதார ஸு ர்யஸ்ய சந்தர்ஸ்ய யதுநாயக
ந்ருஸிம் ஹோ பூமிபுத்ரஸ்ய ஸெம்ய, ஸோம ஸிதஸ்யச
வாமநோ விபுதேந்தரஸ்ய பார்கவோ பார்க்கவஸ்ய
கூர்மோ பாஸ்கர புத்ரஸ்ய ஸைம்ஹிகேயஸ்ய ஸு கர
கேதுர் ம்நாவாதாரஸ்ய யோகாசாந்யேபி கேசரா-தசாவதார ஸ்தோத்திரம்- – சுவாமி வேதாந்த தேசிகர்
ஸ்ரீராமவதாரம் – சூர்யன்
ஸ்ரீகிருஷ்ணவதாரம் – சந்திரன்
ஸ்ரீநரசிம்மவதாரம் – செவ்வாய்
ஸ்ரீகல்கி அவதாரம் – புதன் (சோமபுத்ரன், சந்திரனின் மகன்)
ஸ்ரீவாமன அவராரம் – வியாழன்
ஸ்ரீபரசுராம அவதாரம் – சுக்கிரன்
ஸ்ரீகூர்ம அவதாரம் – சனி (பாஸ்கர புத்திரன்,- சூரியனின் மகன் சனி)
ஸ்ரீவராஹ அவதாரம் – இராகு
ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் – கேது
ஸ்ரீபலராம அவதாரம் – குளிகன் (சனியின் மகன்)
—————-
சரணடைந்த ஆஸ்ரிதர்கள் விஷயத்தில் அவன்தான் “அவிஜ்ஞாதா(அறியாதவன்)”
இது, எம்பெருமான் தன்னளவிலே ஆஸ்ரிதர்கள் எத்தனை அபசாரப்பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீறாமல்
அவர்கள் மேல் கொண்ட பக்ஷபாதத்தினால் அவர்கள் செய்யும் பல்லாயிரம் குற்றங்களையும் பொறுக்கும் அவனின் வாத்ஸல்யத்தைச் சொல்லிற்று.
மற்றொரு பற்றின்றி வந்தடைந் தார்க்கெல்லாங்
குற்றமறியாத கோவலனார் – முற்றும்
வினைவிடுத்து விண்ணவரோடு ஒன்ற விரைகின்றார்
நினைவுடைத்தாய் நீமனமே நில்லு.–(அம்ருதரஞ்சனி 36)
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் ஸ்வாமி கூரத்தாழ்வான் வரதராஜஸ்தவத்தில் பேரருளாளனின் வாத்ஸல்யத்தை அநுபவிக்கையில்
“உபாலம்போயம் போ: ச்ரயதி பத ஸார்வஜ்ஞ்யமபி தே யதோ தோஷம் பக்தேஷ்விஹ வரத நைவாகலயஸி” (வரதராஜஸ்தவம்-20) என்று அருளுகிறார்.
அதாவது பக்தர்களின் தோஷங்கள் ஸ்வல்பமன்றியே மலை மலையாய் குவிந்திருந்தாலும் அவற்றை அறியாதொழிவது
எம்பெருமானுக்கு அவிஜ்ஞாதா என்ற திருநாமத்துக்கு பொருந்துமே தவிர ஸர்வஜ்ஞத்வாநுகுணமாகாது என்றருளுகிறார்.
—————-
அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும்
அடியோமை அறிவுடனே என்றும் காத்து
முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை
முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி
வழிப் படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத்
தந்தையென நின்ற தனித் திருமால் தாளில்
தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே--அம்ருதாஸ்வாதினி – 28
“எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கும் மோக்ஷமென்னும் ஸாதனத்திற்குத் தகுதியாயுள்ள நம்மைக் காத்து,
ஸ்திரமான தர்ம பூத ஞானத்தைக் கொடுத்து எம்பெருமான் நம்மை ரஷித்தருளுகிறான்.
மேலும் அநாதியான கர்ம ஸம்பந்தத்தில் நம்மை அழுத்தாமல் நம்மைக் கரை சேர்ப்பதற்குப் ப்ரதானமான ஸ்தானத்தில் நிற்கின்ற
ஆசார்யர்களிடம் ஒரு ஸம்பந்தத்தை உண்டு பண்ணி, திருமந்திரம் முதலிய மந்திரத்தையும் அந்த மந்திரத்தில் சொல்லப்படும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும்
அவ்வாசார்யன் மூலமாக நமக்கு உபதேஸித்தருளி அவ்வுபாயத்தை அனுஷ்டிக்கும்படி ஓர் தெளிவை ஏற்படுத்தி, நம்மை பரம பதத்தில் கொண்டு சேர்க்கிறான். பின்பு அங்கே நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்கிறான்.
இப்படி பலவிதமான மஹா உபகாரங்கள் செய்ய முற்படும் நிகரற்ற எம்பெருமான் நமக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தில் நிற்கின்றான்.
அப்பெருமானின் திருவடிகளில் நம்மாழ்வாருடைய அனுகிரஹத்தாலே தலை வணங்கப் பெற்றோம்.” என்று ஸாதிக்கிறார்.
————-
த்ரமிடோபநிஷந்நிவேஶஶூந்யாந்
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந் |
த்ருவமாவிஶதி ஸ்ம பாதுகாத்மா
ஶடகோப ஸ்வயமேவ மாநநீய: ॥ –ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸமாக்யாபத்ததி – 2
“எல்லாராலும் போற்றப்படுகின்ற ஸ்வாமி நம்மாழ்வார் அனைவரும் பெருமாளை அடைந்து உஜ்ஜீவிக்கவேண்டுமென்று
திருவுள்ளங்கொண்டு திருவாய்மொழியைத் தந்தருளினார்.
இருப்பினும் பலர் அத்திருவாய்மொழியைக் கற்று உபாஸிப்பதில்லை.
அப்படி கற்காதவர்களும் பெருமாளை அடைவதற்காக ஆழ்வார் தாமே பாதுகையாக அவதரித்து
அனைவரின் ஸிரஸ்ஸிலும் ஸ்ரீசடாரியாக ஸாதிக்கப்பெற்று,
அந்த ஸம்பந்தம் மூலமாக திவ்ய தம்பதிகளின் அநுகிரஹத்திற்குப் பாங்காக அனைவரையும் மாற்றியருளினார்.” என்று
ஆழ்வாரின் அருளிச்செயல்களை அறியாதவர்களும் உய்ய வேண்டுமென்று
அவர் ஸ்ரீசடாரியாகத் திருவவதரித்த வைபவத்தை நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன்.
—————
உலகை ரக்ஷிக்கும் ஸ்ரீ வராஹப் பெருமானின் “குர்குரம்”
கோபாயேதநிசம் ஜகந்தி குஹநாபோத்ரீ பவித்ரீக்ருத –
ப்ரஹ்மாண்ட꞉ ப்ரளயோர்மிகோஷகுருபிர்கோணாரவைர்குர்குரை꞉|
யத்தம்ஷ்ட்ராங்குரகோடிகாடகடநாநிஷ்கம்பநித்யஸ்திதி꞉
ப்ரஹ்மஸ்தம்பமஸௌதஸௌ பகவதீமுஸ்தேவ விச்வம்பரா ||–ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் – 4
“ப்ரளய காலத்தில் கடலுள் மூழ்கிய பூமியை மீட்க ஒரு பெரிய பன்றி வடிவு கொண்டு அவதரித்தான் எம்பெருமான்.
அப்பொழுது அவன் திருமூக்கில் இருந்து எழுந்த “குர்குர்” என்ற ஒலியானது பிரளய காலத்தில் கடல் அலைகள் மோதும்பொழுது எழும்பும் ஒலியைப் போல் மிகுந்திருந்தன.
அவ்வொலிகள் ப்ரஹ்மாண்டங்கள் முழுதும் பரவி அவற்றை பரிசுத்தமாக்கின.
இவ்வொலிகளுடன், வராஹப்பெருமான் தன் கோரைப்பல்லின் நுனியில் பூமியைத் தரித்து எடுத்து வருகிறான்.
அப்பூமி ஒரு பன்றியின் கோரைப்பல்லில் ஒட்டியிருக்கும் கிழங்குபோல காட்சியளிக்கின்றது.
வராஹப்பெருமானின் கோரைப்பல்லை இறுகப் பற்றியிருக்கும் பூமிதேவி சிறிதும் அசையாமல் நிலைத்திருக்கிறாள்.
பெருமைகள் பொருந்திய இந்தப் பூமிதேவி கோரைக்கிழங்கு போல் நின்று பிரமன் முதல் துரும்பு வரை உள்ள அனைத்து சராசரங்களும் உற்பத்தியாகக் காரணமாக இருக்கின்றாள்.
இந்த வராஹப்பெருமானின் திருமூக்கின் ஒலிகள் உலகங்கள் அனைத்தையும் ரக்ஷிக்க வேண்டும்.” என்று ஸ்வாமி தேஶிகன் தலைக்கட்டுகிறார்.
வராஹ அவதார வைபவத்தை இவ்வளவு கவிநயத்துடன் வர்ணநம் செய்ய வேறொரு ஆசார்யன் நம்மிடத்தில் இல்லை.
—————-
மயக்கும் மாதவனின் வேணுகானம்
மஹஸே மஹிதாய மௌளிநா விநதேநாஞ்ஜலிமஞ்ஜநத்விஷே |
கலயாமி விமுக்தவல்லவீ வலயாபாஷிதமஞ்ஜுவேணவே ||
ஜயதி லளிதவ்ருத்திம் சிக்ஷிதோ வல்லவீநாம் சிதிலவலயசிஞ்ஜாசீதளைர்ஹஸ்ததாளை꞉ |
அகிலபுவநரக்ஷாகோபவேஷஸ்ய விஷ்ணோ꞉அதரமணிஸுதாயாமம்சவான் வம்சநால꞉ ||–ஸ்ரீ கோபால விம்ஶதி 15-16
“கண்ணனும் இடைப்பெண்களும் ராஸக்க்ரீடையில் ஈடுபடுகின்றனர்.
அழகிய குழலைத் தன் திருவதரத்தில் வைத்து இனிய ஓசையை எழுப்புகின்றான் கண்ணன்.
அப்பொழுது அழகிய இடைப்பெண்கள் தங்கள் கைகளால் குழலோசைக்கு ஏற்றவாறு தாளம் போடுகின்றனர்.
இடைப்பெண்கள் தங்கள் கைவளையல்களை இறுக்கமின்றி தரித்திருக்கின்றனர்.
ஆதலால் வளையல்களில் இருந்து வரும் ஒலி கை போடும் தாள ஒலியோடு சேர்ந்து மிக இனியதாகின்றது.
இவர்கள் போடும் தாளம் புல்லாங்குழலுக்கு அபிநய சாஸ்த்ரத்தில் உள்ள “லளிதம்” என்னும் அபிநய முறையைக் கற்பிக்கின்றன.
அனைத்துலகையும் காக்கத் தானே எம்பெருமான் கோவலருள் கோவலனாய் அவதரித்திருக்கின்றான்.
குழலூதும் கண்ணனின் செவ்வாயின் அமுதத்தில் கோபியரைப் போல தானும் பங்குகொள்ளும் திருக்குழல் மிகப் பெருமை பெற்று விளங்குகின்றது.
” ஆயர் குலச் சிறுவனாய் அவதரித்து தன் ஸௌலப்ய-ஸௌசீல்யங்களைக் காட்டி அவனிடத்தில் மயங்கச் செய்து நம்மை அடிமை செய்து ஆட்கொள்ளும்
அவன் திருவிளையாடல்கள் தான் எத்துணை! கண்ணனின் வேணு கானத்தைக் கொண்டாடாத ஆழ்வார்கள் இல்லை.
இருப்பினும் ஸ்வாமி தேசிகனின் இவ்வர்ணநம் கோபியரின் வளையல் ஒலி கண்ணன் குழலோசையுடன் இரண்டறக் கலந்து
ஆனந்தத்தை அளிப்பது போல பேரானந்தத்தை நமக்கு அளிக்கிறது.
—————–
மூன்று வேதங்களின் ஸாரமாக உள்ள ஸ்ரீ ஹயக்ரீவனின் ஹலஹலம்
ஸ்வத꞉ ஸித்தம் சுத்தஸ்படிகமணிபூப்ருத்ப்ரதிபடம் ஸுதாஸத்ரீசீபிர்த்யுதிபிரவதாதத்ரிபுவநம் |
அநந்தைஸ்த்ரய்யந்தைரநுவிஹிதஹேஷாஹலஹலம் ஹதாசேஷாவத்யம் ஹயவதனமீடீமஹி மஹ꞉ ||
ஸமாஹார꞉ ஸாம்நாம் ப்ரதிபத₃ம்ருசாம் தாம யஜுஷாம் லய꞉ ப்ரத்யூஹாநாம் லஹரிவிததிர்போதஜலதே꞉ |
கதாதர்பக்ஷுப்யத்கதககுலகோலாஹலபவம் ஹரத்வந்தர்த்வாந்தம் ஹயவதநஹேஷாஹலஹல꞉ ||-ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் 2-3
ஸ்ரீ ஹயக்ரீவனே தமக்கு ஆசார்யனாய் எழுந்தருளி தம் திருவுள்ளத்தில் எழுதியருளிய விஷயங்கள் அனைத்தையும் அனைவரும்
அறிந்து உஜ்ஜீவிப்பதற்காக ஓலையில் எழுதியதாக ஸ்வாமி தேஶிகன் ஸாதிக்கிறார்.
அப்பேற்பட்ட பெருமைகளை உடைய பெருமானின் ஹல-ஹல நாதம் மூன்று வேதங்களின் ஸாரம் என்று இங்கே தலைகட்டுகிறரர்:
“அடியார்களை உய்விக்க எம்பெருமான் தாமாகவே ஸ்ரீ ஹயக்ரீவனாக அவதரித்தான்.
அப்பெருமானின் திருமேனி தூய படிக மணிகளாலாகிய ஒரு மலைபோல் விளங்குகின்றது.
அந்த எம்பெருமானின் அமுதம் போன்ற திருமேனியிலிருந்து வீசும் வெண்மையொளியானது மூவுலகையும் வெண்மை நிறமாக்குகிறது.
அவன் குதிரையுருவுக்கு ஏற்றவாறு கனைக்கும் பொழுது எழும்பும் “ஹல ஹல “ என்னும் ஒலியில் எல்லையற்ற வேதாந்தங்களின் அர்த்தங்கள் அடங்கியுள்ளன.
இவ்வொலியை கேட்பவர்களுக்கு வேதாந்த அர்த்தங்கள் நன்கு விளங்குமாறு செய்கின்றான் இப்பெருமான்.
அடியார்க்கு வரும் எல்லாத் தீங்குகளையும் ஒழிக்கின்ற, தேஜோமயனாய் நிற்கும் ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானை நாம் ஸேவிப்போம்.
ஸ்ரீ ஹயக்ரீவனுடைய “ஹல-ஹல” என்னும் கனைப்பொலி ஸாமவேதத்திலுள்ள எல்லா கிளைகளையும் தொகுத்து ஒன்றுகூடிய வடிவம் போலுள்ளது.
அவ்வொலி ருக்வேத மந்திரங்களுக்கு அர்த்தத்தைக் கூறுவது போல் விளங்குகின்றது.
யஜுர் வேத மந்திரங்களின் பொருள்கள் அனைத்தையும் தன்னுள் அடங்கப்பெற்றது.
கல்வி கற்க உண்டாகும் தடைகள் அனைத்தையும் ஒழித்து ஞானமென்னும் கடலின் அலைவரிசையாய் நிற்கிறது.
இப்படி மூன்று வேதங்களின் ஸாரமாக இருந்து கல்வித் தடைகளை ஒழித்து ஞானச்சுடரை ஏற்றும் வல்லமையை உடையது.
குயுக்திகளைக் கொண்டு வாதம் புரிவதில் செருக்குக்கொண்ட வேற்று மதத்தினரின் ஆரவாரத்தில் பலர் மயங்குவதுண்டு.
அவர்களின் அஜ்ஞானமென்னும் இருளை ஸ்ரீ ஹயக்ரீவனின் “ஹல-ஹல” ஒலி முற்றிலும் ஒழித்து அருள் புரிய வேண்டும்.”
—————
எம்பெருமான் பாதுகைகளின் நாதம்
எம்பெருமானின் விபவ அவதாரத்தின் போது அவன் திருவாயிலிருந்து பல திவ்ய ஒலிகளை எழுப்பி தன் அடியார்களை ரக்ஷித்தான்.
ஸம்ஸாரத்தில் உழன்று அல்லல்படும் நம் போன்ற ஜீவாத்மாக்களை வழிப்படுத்தி வானேற்ற அவனே பல அர்ச்சாவதார மூர்த்தியாக ஆங்காங்கே வீற்றிருக்கிறான்.
திருவரங்கனாக எழுந்தருளி பாதுகைகளைச் சாற்றிக்கொண்டு சஞ்சாரம் செய்யும் போது எழும் நாதங்கள்
நம்மைப் போன்றவர்களையும் ரக்ஷிக்கக் கூடியவையே என்று ஸ்தாபிக்கிறார் நம் கவி ஸிம்ஹம்.
மதுவைரிபதாம்புஜம் பஜந்தீ மணிபாதாவநி! மஞ்ஜுசிஞ்ஜிதேந |
படஸீவ முஹு꞉ ஸ்வயம் ப்ரஜாநாம் அபரோபஜ்ஞம் அரிஷ்டசாந்தி மந்த்ரம் ||
ச்ருதிபி꞉ பரமம் பதம் முராரே꞉ அநிதங்காரம் அநேவம் இத்யுபாத்தம் |
இதம் இத்தமி இதி ப்ரவீஷி நூநம் மணிபாதாவநி ! மஞ்ஜுபி꞉ ப்ரணாதை꞉|| –-ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் – நாத பத்ததி – 7-8-
“ஏ கல்லிழைத்த பாதுகையே! உன்னைச் சாற்றிக்கொண்டு பெருமாள் எழுந்தருளும்போது எழும் உன்னுடைய சப்தத்தைப் பார்த்தால்
லோகத்தில் ஜீவன்கள் படும் எல்லையில்லா துன்பத்தை நீக்குவதற்காக நீ மிகவும் தயை கொண்டு தானாகவே ஒரு புதிய மந்த்ரத்தைச் சொல்லுவது போல இருக்கின்றது.
பெருமாளுடைய ஸ்வரூபத்தையும் நித்யவிபூதியின் ஸ்வரூபத்தையும் அதன் ஸங்கதிகளையும் அறிய முடியாதென்று வேதங்கள் சொல்ல,
அப்படிப்பட்ட விஷயங்களை உன் இனிமையான சப்தங்கள் மூலமாக சுலபமாக அறியலாம்.” என்று நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன்.
——————
திருவேங்கடவன் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையவனாயிருப்பினும் அவனுடைய மற்ற குணங்களனைத்தும் தரம் பெறுவது
அவன் தயையாலேயே என்பதனை “தயா சதகம்” என்னும் ஸ்தோத்ரத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் நிர்தாரணம் பண்ணுகிறார்.
அப்பேற்பட்ட தயையே ஒரு மலை வடிவம் கொண்டுள்ளது என்று இவ்வாறு ரஸோக்தியாக அருளிச் செய்கிறார் நம் ஆசார்ய வள்ளல்:
ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸாநுகம்பயா |
இக்ஷுஸாரஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா ஷர்கராயிதம் ||–ஸ்ரீ தயாசதகம் – 1
அடியார்களிடத்தில் தங்கு தடையின்றி வெள்ளமிட்டு ஓடும் திருவேங்கடமுடையானின் தயையானது ஒரு கரும்பின் சாறு போன்றுள்ளது.
அது அனுபவிக்க பரம போக்கியமாய் இருக்கின்றது. ஸ்ரீநிவாஸனது கருணை வெள்ளமான கரும்பின் சாறு தானே ஒரு ஆறாய்ப் பெருகி,
கனமாகி சர்க்கரையாகி உறைந்து கற்கண்டாக கனமாகி இன்னும் அனைவரும் அனுபவிக்க ஏற்றதாய் உள்ளது.
இந்தக் கருணைதான் திருமலை வடிவம்.
ஸ்ரீநிவாஸனது தயை ஆற்று வெள்ளம்போல் தடையற்று அடியார்களின் மீது பெருகி அவர்கள் பாபங்களைப் போக்கி உய்விக்கிறது. இத்தகைய பெருமைகளை உடைய
மலையப்பனின் தயை அசைக்க முடியாத ஒரு மாமலையாக நிற்கின்றது.
இத்தகைய கருணையே வடிவான திருமலையைச் சரணமடைகின்றேன். என்று ஆழ்வார் அடியொட்டி
ஸ்வாமி தேசிகன் மலையப்பனைப் பற்றாமல் மலையைப் பற்றுவது நன்கு சுவைக்கத் தக்கது.
கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு
கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு
திண்ணம் இது வீடென்னத் திகழும் வெற்பு
தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கடவெற்பு என விளங்கும் வேத வெற்பே.--அதிகாரஸங்கிரஹம் – 43–
எம்பெருமானுடைய திருவடிகள் இரண்டையும் நமக்குக் காட்டித் தரும் மலை;
எத்தைகைய கொடிய பாபத்தையுடையவர்களின் இரண்டு கர்மங்களையும் ஒழிக்கவல்ல மலை;
இதுவே பரமபதமென்று சொல்லும்படியான பெருமையைப் பெற்ற மலை;
பல புண்ய தீர்த்தங்கள் நிறைந்த மலை;
புண்ணியத்தின் புகலிடமாகத் திகழும் மலை;
ஸ்ரீவைகுண்டத்தில் அடையக்கூடிய பகவதநுபவம் அனைத்தையும் அளிக்கக்கூடிய மலை;
நித்யஸூரிகளுக்கும் பூலோகத்தில் உள்ள பாகவதர்களுக்கும் பொதுவாய் நிற்கும் மலை;
இப்பெருமைகள் அனைத்தும் உடைய மலை ஸ்ரீநிவாஸன் நித்யவாஸம் செய்யும், திருவேங்கடமென்று ப்ரகாசிக்கின்ற,
வேதத்தில் போற்றப்பெற்ற திருமலையேயாகும் என்று திருவேங்கடமலையைப் போற்றுகிறார்.
கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு
பாபங்களானவை பூர்வாகங்களென்றும் உத்தராகங்களென்னும் இருவகைப்படும்.
எம்பெருமானைப் பற்றுதற்கு முன்பு புத்திபூர்வமாகப் பண்ணும் பாபங்கள் பூர்வாங்களாம்.
பிறகு ப்ரகிருதி பாரவச்யத்தாலே ப்ராமாதிகமாக நேரும் பாபங்கள் உத்தராகங்களாம்.
இருவினை என்று ஸ்வாமி தேசிகன் இங்கு காட்டுவது
வேங்கடங்கள் மெய்ம் மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்துறைவார்க்கு நமவென்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே-– திருவாய்மொழிப் பாசுரத்தை(3-3-6) அடியொற்றிய இரண்டு வினைகளையே.
கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு
“ஆறெனக்கு! நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று எம்பெருமானின் திருப்பாதங்களே நமக்கு உபாயம் என்று காட்டினார் ஆழ்வார்.
ஸ்வாமி தேசிகனோவென்னில் அத்திருத்தாள்களை நமக்குக் காட்டித்தரும் மலையே திருமலை என்று தலைக்கட்டி அம்மலையே அடியார்களுக்கு உபாய-உபேயங்களாய் நிற்பதாக ஸ்தாபிக்கிறார்.
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
திருமலையானது மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பொதுவான தலமாகவும் அம்மலையிலே வீற்றிருக்கும் திருவேங்கடவன்
இருதலையார்க்கும் பொதுவாய் நிற்கிறான் என்றும்
அவன் பரத்வ-ஸௌலப்யங்களை ஒன்றுசேர மங்களாசாஸனம் பண்ணுகிறார் நம் ஸ்வாமி.
“மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று ஸ்வாமி திருப்பாணாழ்வாரும்
“கண்ணாவானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு” என்று ஸ்வாமி நம்மாழ்வாரும் பாசுரமிட்டது இங்கு அனுசந்திக்கத்தக்கது.
திருமலையின் பெருமையையும் திருவேங்கடத்தானின் தயையையும் பேசித் தலைக்கட்ட முடியாது.
அப்பெருமைகளை உடையவனின் திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகிற பெரியபிராட்டியானவள்
“ஒரு கணப்பொழுதும் பிரிந்திருக்கமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள்.
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Related
This entry was posted on September 4, 2022 at 2:33 am and is filed under Desihan. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply