ஸ்ரீ பகவத் விஷயம் –
ஸ்ரீ பகவானை விஷயமாகக் கொண்டது ஸ்ரீ பகவத் விஷயம் -ஸாதாரண பொருளில்
ஸாரீரகம் -ப்ரஹ்ம மீமாம்ஸா ஸாஸ்த்ரமும் -ஸ்ரீ ராமாயணமும் -ஸ்ரீ மத் பாகவதமும் -அருளிச் செயல்களும் இதுவே
ஸம்ப்ரதாயத்தில் கிரந்த சதுஷ்டய கால ஷேபம் –
1-ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம்
2-ரஹஸ்ய கால ஷேபம்
3-ஸ்ரீ இராமாயண கால ஷேபம்
4-பகவத் விஷய கால ஷேபம் -திருப்பல்லாண்டு -கண்ணி நுண் சிறுத்தாம்பு -திருவாய் மொழி –
ஆக
பகவத் விஷயம் திருவாய் மொழியையும்
அதன் சாரம் பெரிய பெருமாளையும் குறிக்கும்-
நம் ஸ்வாமி எம்பெருமானார் திருமாலை ஆண்டான் இடம் இந்த பகவத் விஷய கால ஷேபம் கேட்டு அருளினார் –
பகவத் விஷயத்தை அந்தரங்கமாக நிரூபிக்கும் கிரந்தமாகையாலும்
அங்கியான ப்ரபந்தமாக இருக்கும்படியாலும்
ஸ்ரீ நாயனார் ஆச்சார்ய ஹ்ருதய ஸூத்ரத்தில் –
இப் பிரபந்த வைலஷண்யம் தன்னை பிரதிபாதிக்கிறார்- –
ஸ்ரீ ராமாயணம் ,நாராயண கதை என்று தொடங்கி ,
கங்கா காங்கேய சம்பவாத் யசத் கீர்த்தனம் பண்ணின எச்சில் வாய் சுத்தி பண்ணாமல் ,
திரு மால் அவன் கவி என்றே , வாயோலை படியே மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு உரிய சொல் வாய்த்த இது
வேதாதிகளில் , பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள் போலே அருளிச் செயல் சாரம்-சூரணை-63-
( வேதங்களில் புருஷ ஸூக்தமும் -தர்ம சாஸ்த்ரங்களுக்குள் மனுவால் சொல்லப்பட்ட மனு தர்ம சாஸ்திரமும் –
மஹா பாரதத்தில் ஸ்ரீ கீதையும் -புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும் )
என்று வேதங்களில் புருஷ சூக்தமும் ,
தர்ம சாஸ்த்ரங்களில் மனு பிரனீதமும் ,
மகா பாரதத்தில் ஸ்ரீ கீதையும்
புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும்
சாரமாய் இருக்குமா போலே –
அந்யகதா கந்த ரஹிதமான அருளிச் செயலிலே சாரமாய் இருக்கும் என்கை-
இத்தால்-தீதில் அந்தாதி -திருவாய் -8-2–11-என்கிற படியே கதாந்திர பிரஸ்தாப தோஷ ராஹித்யாலே ,
ஆர்ஷ பிரபந்தங்களில் ,வ்யாவிருத்தமாய் ,பகவத் பிரதிபாதன சாமர்த்தியத்தாலே ,
பகவத் ஏக பரமான மற்றை ஆழ்வார் பிரபந்தங்களிலும் ,சாரமாய் இருக்கும் என்று
இப் பிர பந்த வைலஷண்யம் சொல்லிற்று ஆயிற்று –
—————
வேதேஷு பவ்ருக்ஷம் ஸூக்தம் தர்ம ஸாஸ்த்ரேஷு மாநவம் பாரதே பகவத் கீதா புராணேஷு ச வைஷ்ணவம் –
புருஷ ஸூக்தத்துக்கும் பகவானுக்கும் உள்ள ஸாம்யத்தை
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் -ஸர்வ ஸ்ருதிஷ் வநு கதம் –யம் பூத பவ்ய -என்று
ஸர்வ ஸ்ருதி வாக்யங்களிலும் அவனும் புருஷ ஸூக்தமும் அந்தர் கதம் என்று அருளிச் செய்கிறார் –
சர்வ ஸ்ருதிஷு அநுகதம் ஸ்திரம் அப்ரகம்ப்யம்
நாராயணாஹ்வயதரம் த்வாம் இவ அந வத்யம்
ஸூக்தம் து பவ்ருஷம் அசேஷ ஜகத் பவித்ரம்
த்வாம் உத்தமம் புருஷம் ஈசம் உதா ஜஹார–23-
எம்பெருமானே -தேவரீர் போலவே சர்வ வேதங்களிலும் ஓதப்பட்டும் -ஸ்திரமானதும் –
குதர்க்கங்களால் அசைக்க ஒண்ணாததும்
நாராயண திரு நாமத்தை உடையதும் நிர் துஷ்டமானதும் சர்வ லோக பாவனமுமான புருஷ ஸூக்தமோ என்றால்
தேவரீரை புருஷோத்தமராகவும் சர்வேஸ்வரராகவும் ஓதி வைத்தது
பகவத் பரதவ ப்ரதிபாதங்களுக்கும் புருஷ ஸூக்தமே பிரதானம் -என்று அருளிச் செய்து
எம்பெருமானுக்கு புருஷ ஸூக்தத்துக்கும் ஆறு விசேஷணங்களால் சாம்யா நிர்வாகத்தையும் அருளிச் செய்கிறார்
1-சர்வ ஸ்ருதிஷு அநுகதம்
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே –சகல வேதங்களிலும் எம்பெருமான் திகழ்வது போலே
புருஷ ஸூக்தமும் ஒவ் ஒரு வேதத்திலும் உண்டாய் இருக்கும்
ருக்வேதே ஷோடசர்ச்சம் ஸ்யாத் -யஜுஷி அஷ்டா தச ர்ச்சகம் –சாம வேதே து சப்தர்ச்சம் ததா வாஜச நேயக-
ஆகவே -சர்வ ஸ்ருதிஷு அநுகதம் -என்றது உபயத்துக்கும் சாதாரணமாய் இருக்கும்
2-ஸ்திரம்
நிலை நிற்கும் தன்மையும் சாதாரணம்
ப்ரமேய பூதனான எம்பெருமானும் பிரமாண மூர்த்தன்யமான புருஷ ஸூக்தமும்
நித்யஸ்ரீர் நித்ய மங்களமாய் விளங்கத் தட்டில்லையே
3-அப்ரகம்ப்யம்
இல்ல செய்ய குதர்க்கிகள் திரண்டாலும் அசைக்க ஒண்ணாதே –
அதே போலே புருஷ ஸூக் தத்தையும் அந்ய பரமாக்க ஒண்ணாதே
4-நாராயணாஹ்வயதரம்
அவனுக்கு நாராயண திரு நாமம் போலே புருஷ ஸூக்தமும்
நாராயண அநு வாகம் என்ற சிறப்பு பிரசித்தி பெற்று இருக்கும்
5-த்வாம் இவ அந வத்யம் -ஸூக்தம் து பவ்ருஷம்
அவன் அகில ஹேயபிரத்ய நீகனாய் இருப்பது போலே இதுவும் ஹேயபிரதி படம் –
தேவதாந்த்ர பாராம்யா சங்கைக்கு அல்பமும் அவகாசம் தாராதே
வேதேஷு பவ்ருக்ஷம் ஸூக்தம் தர்ம சாஸ்த்ரேஷு மானவம்-பாரதே பகவத் கீதா புராணேஷு ச வைஷ்ணவம்
6-அசேஷ ஜகத் பவித்ரம்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ ரகு நந்தன -அசேஷ ஜகத் பவித்ரனாப் போலே இதுவும் தன்னை அனுசந்தித்தாரை
மனன் அகம் மலம் அறக் கழுவி பரம பரிசுத்தராக்கும்
ஆக இப்படிப்பட்ட புருஷ ஸூக்தமானது வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் -என்று தொடங்கி
தேவரீருடைய புருஷோத்தமத்தை முறையிட நின்றது
இந்த ஸ்லோகத்தில் உள்ள ஒவ் ஒரு விசேஷணமும் எம்பெருமானுடைய பரத்வத்தை நிலை நாட்டை வல்லது
என்னும் இடம் குறிக் கொள்ளத் தக்கது
—————-
ப்ரஹ்ம ஸூத்ரங்களிலே பல உபநிஷத்துக்கள் விசாரங்கள் இருந்தாலும்
வேத வியாசர் ஸ்ரீ புருஷ ஸூக்த விசாரம் பண்ண தேவை இல்லாமலே இருந்ததே –
அதில் அபிப்ராய பேதத்துக்கு இடமே இல்லையே
திராவிட வேதம் தமிழ் மறை போல் நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு பிரபந்தங்களும்
குருகூர் சடகோபன் சொன்ன என்று இருந்தாலும் அது த்ரஷ்டாவாய்ப் பார்த்துச் சொன்னதே தானே அன்று
அவரால் உண்டாக்கப் பட்டவை அல்லவே
இதற்கு திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த ஆறு பிரபந்தங்களும் அங்கங்கள்
மற்ற எண்மர் பிரபந்தங்களும் உப அங்கங்கள்-
வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-(இருமை -பெருமை -)–சூரணை-43-
ஸ்ரீ பீஷ்மாச்சார்யார் அருளிச் செய்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் கண்ணபிரான் தானும் ஒருவனாக அமர்ந்து கேட்டு அருளுகிறான்
இதே போல் திருவாய் மொழித் திருநாள் அன்று திவ்ய ஸ்தானத்தில் அமர்ந்து கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்று சொல்லப்படும் கண்ணன் தானே
வேதத்துக்கு ஓம் என்னுமது போல் உள்ளதுக்கு எல்லாம் சுருக்காய் ஓங்கார ஸ்தானத்திலே திருப்பல்லாண்டும்
வாய்த்த திருமந்திரத்தின் மத்யமாம் பதம் போலே நமஸ் ஸப்த ஸ்தானத்திலே சீர்த்த மதுரகவி செய்த கலையான கண்ணி நுண் சிறுத்தாம்பு
27 நக்ஷத்திரங்களில் நடுவானது தானே சித்திரையும்
நாராயண ஸப்தத்திலே கொண்டாடப்பட்ட அர்த்த விசேஷங்களை திருவாய் மொழி அருளிச் செய்யுமே
மற்ற திவ்ய தேசங்களில் முதலில் திருப்பல்லாண்டு பின்பு கண்ணி நுண் சிறுத்தாம்பு பின்பு திருவாய் மொழி பகவத் விஷய கால க்ஷேபமாகும்
ஆழ்வார் திரு நகரியிலும் திரு நாராயண புரத்திலும் மட்டும் கண்ணி நுண் சிறுத்தாம்பு பிரபந்தம் முதலிலே எடுப்பார்கள்
திருவாய் மொழியைக் காத்த குணவாளர்கள் திருக்குருகைப் பிரான் பிள்ளான் நஞ்சீயர் நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஆவார்கள்
விஷயம் என்றால் ராஜ்யம் என்ற பொருளில் உபய விபூதியும் அவனுக்கு உடைமையாக இருந்தாலும் அவன் அபிமானித்து ராஜ்யமாகக் கொள்ளுவதும் திருவாய் மொழியே
—————
இனி பகவத் விஷய சாரத்தைப் பார்ப்போம்
திருவாய் மொழியில் சொல்லப்படுவது உயர்ந்த த்வயார்த்தம்
திருமந்த்ரத்துக்கு விவரணம் த்வயம் –
த்வயத்துக்கு விவரணம் சரம ஸ்லோகம்
மூன்றையும் உபதேசிப்பவனே ஆச்சார்யன் –
நேரே ஆச்சார்யன் என்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை உபதேசிப்பவனையே -என்று ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்
இதற்கு ஸ்ரீ மா முனிகள் –
ஸர்வ மந்த்ர உத்க்ருஷ்டமான பெருமை யுடைத்தான திருமந்திரத்தை ஸம்ஸார நிவர்த்தகத்வ ப்ரபத்தியோடே உபதேசிப்பவன் என்கை
த்வயம் பூர்வ உத்தர வாக்யங்களாலே திருமந்திரத்தில் மத்யம சரம பத விவரணமாய்
சரம ஸ்லோகம் பூர்வ உத்தர அர்த்தங்களாலே திரு மந்திரத்தில் பூர்வ உத்தர வாக்ய விவரணமாய் இருக்கையாலே
மற்ற ரஹஸ்ய த்வயமும் பிரதம ரஹஸ்யத்தோடே அநந்யமாய் இருக்கையாலே
இத்தைச் சொல்லவே அவற்றினுடைய உபதேசமும் தன்னடைவே சொல்லிற்று ஆயிற்று
ஆகையால் இது ரஹஸ்ய த்ரயத்துக்கும் உப லக்ஷணம்
-என்று அருளிச் செய்துள்ளார்
————
ஸ்ரீ தேசிகனும்
வ்யங்யந்தம் மநும் தத் ப்ராயஞ்ச த்வயம் அபி விதன் ஸம்மதஸ் ஸர்வ வேதீ -என்று
ஸர்வ வேதீ -எல்லாம் அறிந்த வித்வான் என்று யாரைச் சொல்லலாம் என்னில்
வ்யங்யந்தம் மநும்-அர்த்த பஞ்சகத்தை நன்றாகத் தெரிவிக்கிற மந்த்ர ராஜமான திருமந்திரம்
தத் ப்ராயஞ்ச த்வயம் -அந்தத் திருமந்த்ரத்துக்கு அனுகுணமான த்வயம்
த்வயம் அபி விதன்ந -அபி ஸப்தத்தாலே சரம ஸ்லோகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமே –
—————
நம் பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம் பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால் -என்பதற்கு
சாதாரணமாக நம் பெருமாள் என்பர் நம்மாழ்வார் என்பர் நஞ்சீயர் என்பர் நம் பிள்ளை என்பர் என்று கொண்டு
இவை எல்லாம் அவரவர் ஏற்றத்தால் சாற்றும் திருநாமங்கள் என்று கொள்ளுவர்
ஆனால் வேறுவிதமாக -நம்மாழ்வார் நஞ்சீயர் நம் பிள்ளை என்று எல்லாம் நம் பெருமாள் சொல்லிக்கொண்டே இருப்பர்
ஏன் என்றால்-நம்மாழ்வார் திருவாய் மொழி அருளிச் செய்ய
நஞ்சீயரும் நம் பிள்ளையும் அதற்கு வியாக்யானம் செய்து அருள
மற்ற வியாக்கியானங்கள் இவற்றுக்கு விஸ்தார ஸங்க்ரஹ பாவமாகையாலே இவையே பரம சாரபூதம் என்று அபிமானித்து இருப்பாரே
————
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் –
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்
வளர்த்த இதத்தாய் ராமானுஜன் -ஸ்ரீ பராசர பட்டர்
உயர்ந்த சோலையையும் மதிளையும் யுடைய கோயிலே நிரூபகமான பெரியபெருமாளுடைய
ஸ்லாக்யமான கல்யாண குண விஷயமாய்
விஸ்திருதமாயிற்று ஆயிரம் திருவாய் மொழியும் -என்றும்
ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகரானால் போலே யாயிற்று
எம்பெருமான்களிலே நம் பெருமாள் அதிகராய் இருப்பாரே –
அத்தைப் பற்றியும் சொல்லிற்று -என்பர் பிள்ளை லோகம் சீயர்
கண்ணனுக்கு தேவகிப்பிராட்டியும் யசோதை பிராட்டியும் போலே திருவாய் மொழிக்கு நம்மாழ்வாரும் ராமானுஜரும்
வான் திகழும் சோலை
உயர்ந்த சோலையையும் மதிளையும் யுடைய கோயிலிலே நிரூபகமான பெரிய பெருமாளுடைய –
ஸ்லாக்யமான கல்யாண குண விஷயமாய் விஸ்திருதமாயிற்று ஆயிரம் திருவாய் மொழியும்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் –7-2-11-என்னக் கடவது இறே
அது தான்
சீர்த் தொடை ஆயிரம் –1-2-11- என்று சீர் கலந்த சொல்லாய் இறே இருப்பது –
நலமுடையவன் –1-1-1-
ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10-என்று உபக்ரமித்து
வாழ் புகழ் நாரணன் –10-9-1-என்று இறே தலைக்கட்டி அருளினார் –
பெரிய பெருமாள் தான் நலம் திகழ் நாரணன் –பெருமாள் –10-11- இறே –
நாராயண பரம் ப்ரஹ்ம
நாராயணா பரா வேதா –என்னக் கடவது இறே —
அத்தாலே -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்-என்கிறது –
இனித்தான்
திருவாய் மொழி பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிக்கிற
1-பரபரன் –1-1-8- என்கிற பரத்வமும்
2-சோராத எப்பொருட்க்கும் ஆதி -2-1-11-என்கிற காரணத்வமும்
3-முழுதுமாய் முழுதியன்றாய் –3-1-8-என்கிற வியாபகத்வமும்
4-மறுகல் ஈசன் –4-1-10- என்கிற நியந்த்ருத்வமும்
5-ஆவா என்று அருள் செய்து -5-1-6- என்கிற காருணிகத்வமும்
6-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் –6-1-10-என்றும்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண் –6-3-7-என்றும் –
சொல்லுகிற சரண்யத்வமும்
7-எண்ணிலாப் பெரு மாயன் –7-1-1- என்கிற சக்தி மதத்வமும்
8-தேவிமார் ஆராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –8-1-1- என்கிற ஸத்ய காமத்வமும்
9-எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –9-1-1-என்கிற ஆபத் ஸகத்வமும்
10-சுரி குழல் கமலக் கட் கனிவாய்க் காள மேகம் –10-1-1-என்ற ஆர்த்தி ஹரத்வமும்
ஆகிற அதில் பத்து அர்த்தமும்
பெரிய பெருமாளைப் பிரதிபாதிக்கிற
கங்குலும் பகலிலும் –7-2- காணலாய் இருக்கும் –
1- வடிவுடை வானோர் தலைவனே -7-2-10-என்று பரத்வமும்
2-முன் செய்து இவ்வுலகம் -7-2-2- என்றும்
விண்ணோர் முதல் -7-2-6- என்றும்
காரணத்வமும்
3-கட்கிலி–7-2-3- என்றும்
என்னுடை ஆவி -7-2-9-என்றும் வியாபகத்வமும்
4- பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் –7-2-7–என்றும்
கால சக்கரத்தாய்–7-2-5- –என்றும்
மூ உலகாளி –7-2-10- என்றும்
நியந்த்ருத்வமும்
5- இவள் திறத்து அருளாய் –7-2-6–என்று காருணிகத்வமும்
6-பற்றிலார் பற்ற நின்றானே -7-2-7- என்று சரண்யத்வமும்
7- அலை கடல் கடைந்த ஆரமுதே –7-2-5- என்று சக்தி மத்வமும்
8-என் திருமகள் சேர் மார்பனே –என்றும்
நில மகள் கேள்வனே –என்றும்
ஆய் மகள் அன்பனே –7-2-9- என்றும்
சக்தியால் நித்யமாகக் கற்பித்த பத்நீ பரிஜா நாதிகளை யுடைய ஸத்ய காமத்வமும்
9- இவ்வுலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் -7-2-2- என்று ஆபத் ஸஹத்வமும்
10- முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –7-2-11- என்று ஆர்த்தி ஹரத்வமும் அருளிச் செய்தார் இறே –
ஆக -எல்லாவற்றாலும் –
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்னத் தட்டு இல்லை இறே
ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகரானால் போலே
எம்பெருமான்களில் நம் பெருமாள் அதிகாரய் இறே இருப்பது
அத்தைப் பற்றவும் சொல்லிற்று –
இப்படிப் பெரிய பெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதித்த திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்
நெடும் காலம் நோற்றுப் பெற்ற முந்தின மாதா ஆழ்வார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் —4-5-10–என்றார் இறே
வருந்திப் பெற்ற பிள்ளையை வளர்த்து எடுக்கும் மாதாவைப் போலே திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் –
வர்த்திப்பித்த மாதா -எம்பெருமானார் ஆயிற்று
ஞானக் கலையான -1-9-8- திரு வாய் மொழிக்கு ஜென்ம பூமி ஆழ்வார் -தத் வர்த்தகர் எம்பெருமானார் –
இப்படி யாயிற்று ஞான சந்தானம் வளர்த்தியோடே நடந்து செல்வது –
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து –பெரிய –8-9-7-என்னுமா போலே
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் ஆவது –
ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப் போனால் வளர்க்கும் தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமா போலே ஆயிற்று –
இவரும் அத்தைக் காத்து வளர்த்த படியும் –
தேவகி பெற்ற யுருவு கரிய ஒளி மணி வண்ணனை –பெரிய –1-3-17–
வளர்க்கும் தாயான யசோதை தன் மிடுக்காலே எடுத்து –
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –பெரியாழ்வார் –2-9-6-என்றும்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தே நின்று –2-9-8-
போதர் கண்டாய் –2-9-6-
தாய் சொல் கொள்வது தன்மம் கண்டாய் –2-9-8-என்று
குற்றம் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப் புடை புடைத்து தன் வசமாக்கி
தீய புஞ்சிக் கஞ்சன் –2-2-5-என்று கருத்தைக் குலைத்து
காப்பாரும் இல்லை -2-3-1—என்று இரந்து
அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை –1-3-12-என்னும்படி
நிறம் பெற வளர்த்து ப்ரமேய சாரத்தை வர்த்திப்பால் போலே
பிரமாண ஸாரத்தை வர்த்திப்பித்த பிரகாரமும் –
அது எங்கனே என்னில் —
இங்கும் ஆழ்வார் அவதரித்து
அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின –10-10-11- பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகளால்
பாஷா கானமான திருவாய் மொழி அபி பூதமாய் வருகிற படியைக் கண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகளாலே அத்தை நிரோதித்து-அத்தை இதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத்
திருவாய் மொழியைத் தன் கை வசம் ஆக்கி
திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு இதன் அர்த்தத்தை வெளியிடுவித்து வர்த்திப்பித்துக் கொண்டு போந்தார் இறே –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்னும்படியான அடியார் ஆகையால் –
ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேணும் இறே அடியானுக்கு —
—————
திருவாய் மொழியிலே பல திவ்யதேசத்து எம்பெருமான்களும் மங்களா ஸாஸனம் செய்யப்பட்டுள்ளார்களே என்னில்
திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
திரு மோகூருக்கு ஈத்த பத்து -என்றும்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்தை ஆழ்வார் -எடுத்துக் கொடுத்ததாக அனுபவம்
ஆக
திருவரங்கத்து எம்பெருமானான பெரிய பெருமாளே பகவத் விஷய சாரம் என்பதே
முன்னோர் மொழிந்த முறையிலே நிரூபித்தமாயிற்று –
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply