ஸ்ரீ தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்–

தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்

ஞானிகள், புலவர்கள், கலைஞர்கள் என்று சமுதாய நலம் விரும்பிகள் தங்களுக்கிசைந்த ஊடகங்களின் மூலம்
காலந்தோறும் தம்மைக் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர்.
அவ்வகையில் பக்தியும் இசையும் கலந்த வெளிப்பாடாக தியாகராஜரின் வாழ்க்கை அமைகிறது.

காகர்ல ராமப்ரஹ்மம்-சீதம்மா தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்த அவருக்கு
திருவாரூரில் உறையும் கடவுளான தியாகேசரின் பெயரையே கொண்டு காகர்ல தியாகப்ரஹ்மம் என்று பெயர் சூட்டினார்கள்.
இவரது தாய்மொழி தெலுங்கிலும், வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்.
இளவயதிலிருந்தே வால்மீகி ராமாயணத்தின் மீது பேரார்வம் கொண்டவர்.
தந்தை ராமனின் கதையை கதாகாலக்ஷேபம் செய்யும் போதும்,
தாய் புரந்தரதாசரின் பாடல்களைப் பாடும்போதும்
தன்னை மறந்து அதில் லயித்துப்போகும் திர்யாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான்.

வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது.
ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவது போன்ற பாவனையில்,
தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார்.
அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால்
கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது.
அவரது பாடல்களில் தியாகராஜ என்ற பெயரை முத்திரையாக பயன்படுத்தியிருக்கிறார்.

தியாகராஜர் சிறுவனாக இருந்தபோது அவரது குரு சொண்டி வெங்கடரமணய்ய பல வித்வான்களின் முன் அவரை பாடவைத்தார்.
அப்போது பிலஹரி ராகத்திலமைந்த “தொரகுநா இடுவந்டி சேவா” என்ற கீர்த்தனையைப் பாடினார்.
அவரது பாடல் அனைவராலும் பாராட்டப்பட்டது.
வெங்கடரமணய்யவின் தந்தை வெங்கடசுப்பையரின் முன் அவர் பாடிய காம்போதி ராகத்தில் அமைந்த
“மரி மரி நின்னே மொரலிட” என்ற பாடல் அவரது ஆசியையும் பெற்றுத்தந்தது.
வெங்கடசுப்பையரின் வேண்டுகோளுக்கிணங்க சுமார் எட்டுமணி நேரம் தியாகராஜர் பாடியதாக குறிப்பிடுகிறார்கள்.

தியாகராஜரை குறித்து அறிந்த தஞ்சை சரபோஜி மஹாராஜா தியாகராஜரை பாராட்டி பல பரிசுகளை அனுப்பிவைத்தார்.
அரண்மனைக்கு வந்து ஆஸ்தான இசைக்கலைஞர்களில் ஒருவராக இருக்கவும் அழைத்தார்.
பரிசையும் பதவியையும் மறுத்த தியாகராஜர் அந்த வேகத்தில் பாடியதே “நிதி சால சுகமா” என்ற கல்யாணி ராகப்பாடல்.

“மனமே அபரிமிதமான செல்வத்தால் நீ மகிழ்கிறாயா? ராமனுக்குச் செய்யும் சேவையால் மகிழ்கிறாயா?
உண்மையைச் சொல், ஆசாபாசங்கள் உடைய மனிதர்களைப் பாடுவது மகிழ்ச்சியா?
கடவுளைப் பாடுவது மகிழ்ச்சியா தியாகராஜா? ” என்று மனிதர்களைப் பாட விரும்பாத தன்மையை வெளிப்படுத்துகிறார்.
“நிதிசால சுகமா? ” மன்னரின் தவறை அவருக்குப் புரியவைத்தது.
இந்தப் பாடல் இன்றும் பிரபலமான கீர்த்தனையாகப் பல கலைஞர்களாலும் பாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்த சில தினங்களில், தன் தம்பி அவமானம் செய்தவிட்டதாக நினைத்துக் கோபமடைந்த
தியாகராஜரின் அண்ணன் ஜல்பேசன், தியாகராஜர் எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும்,
தினமும் பூஜிக்கும் ராமர் விக்கிரகத்தைக் காவிரியில் எறிந்துவிட்டார்.
வாழ்க்கை தொலைந்து போனதாக வருந்திய தியாகராஜர், “மனமே! அவன் [ராமன்] எங்கே? எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறான்?
எப்போது மனமிரங்கி இங்கு வருவான். பிரகலாதனைக் காப்பாற்ற, ஹிரண்யகசிபுவை நிர்மூலமாக்க கடவுள் வரவில்லையா?
தன் பக்தர்களைக் காப்பாற்ற அவன் ஒளிந்து கொண்டிருக்கவேண்டும்,” [“எந்து தாகி”] என்று ஒரு கீர்த்தனை பாடினார்.
இது புராணக்கதையைச் சான்றாகக் காட்டிக் கெஞ்சலும், கொஞ்சலுமாக அமைகிறது.
சில நாட்களுக்குப் பிறகு விக்கிரகம் கிடைக்கவே அகமகிழ்கிந்து போகிறார்

தியாகராஜருக்கு ஒருமுறை திருப்பதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.
கடவுளைத் தரிசனம் செய்யப்போகும் நேரத்தில் திரைபோடப்படுகிறது.
அவர் வருத்தத்தோடும், உருக்கத்தோடும், “ஓ, திருப்பதி வெங்கடரமணா! திரையை நீ விலக்கமாட்டாயா?
கோபத்திற்கான திரை, ஆணவம், பொறாமைக்கான திரை ஆகியவை எனக்குள்ளிருந்து எல்லாவற்றையும் மறைக்கிறது .
வலைக்குள் சிக்கிக்கொண்ட மிருகம்போல மனம் தீயவைகளில் அலைபாய்கிறது.
நானுன்னை எப்போதும் வணங்குகிறேன். திரையை விலக்கமாட்டாயா?
“தெர தீயகராதா” என்று அவர் கீர்த்தனை இயற்ற, திரை விலகி அவருக்கு திவ்யதரிசனம் கிடைக்கிறது
என்றொரு நிகழ்வு ஒரு கீர்த்தனையில் வெளிப்படுகிறது.

க்ஷீரஸாகர விஹாரா, நீகே தெலியக போதே, ராமா ராமா நீ வாரமு என்று
ஆனந்தபைரவி ராகத்தில் மூன்றுகீர்த்தனைகள் மட்டுமே அவரால் பாடப்பட்டுள்ளன.
அந்த ராகத்தில், “நீ பலமா நாம பலமா” என்ற கீர்த்தனை இருந்தாலும் அவருடைய கீர்த்தனையா என்பது குறித்து விவாதங்கள் உள்ளன.
ஆனந்தபைரவியில் குறைவான பாடல்களை அவர் பாடியதற்குச் சுவையான பலகதைகள் சொல்லப்பட்டாலும்
மிகப் பரவலாகச் சொல்லப்படும் கதையாக கீழ் வருவது அமைகிறது.

ஆனந்தபைரவி மிகப்பழமையான ராகமாகும். அந்த ராகத்தில் பல பாடல்களுண்டு.
இந்த ராகத்திலமைந்த பாடல்களை திருபுவனம் சுவாமிநாத குருக்களும் அவர் சீடர்களும் ஒருமுறை
தியாகராஜர் முன்னால் இந்த ராகத்தைப் பாடினர். அந்த இசையில் மகிழ்ந்த தியாகராஜர் அவர்கள் எதைக்
கேட்டாலும் தருவதாகச் சொன்னார். அவர்கள் ஆனந்தபைரவி ராகத்தில் மேலும் பாடல்களை இயற்றவேண்டாம்
என்ற பொருளில் அந்த ராகத்தைத் தங்களுக்குப் பரிசாகத் தரும்படி கேட்டனர்.
அதை ஏற்றுக்கொண்டு அதற்குப் பிறகு ஆனந்தபைரவியில் அவர் பாடவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இது கதையாக அமைந்தாலும், உண்மை நிகழ்வாக இருந்தாலும் இசைக்கலைஞர்கள் அன்று
ஒருமித்த தன்மையில் வாழ்ந்ததற்கு அடையாளமாகிறது.

பக்தியைப் பலவகைகளில் வெளிப்படுத்துவது ஆழ்நிலைபக்தியின் அடையாளமாகும்.
தனக்குப் பிரியமான ராமனை நாயகன் நாயகி பாவத்தில்[மதுர பாவம்] காணும் தியாகராஜரின் அன்புக்குப்
பல கீர்த்தனைகள் சான்றுகளாகின்றன.
“ஓ, ராமா! ஏன் அருகில் வரமறுக்கிறாய்? அனாதையான பெண்ணுக்கு கணவனைத் தவிர வேறு யாரும் இல்லாததைப்போல
நான் உன்னையே நம்பியிருக்கிறேன். மேருமலையைப்போல நீ உறுதியானவன்.
ஏன் என்னைக் காப்பாற்ற வரமாட்டாயா? “சேரராவதேமிரா” என்று கெஞ்சும் பாவனை வெளிப்படுகிறது.

கடவுளே!என்னுடன் பேச மாட்டாயா? நீ விரும்பியபடியெல்லாம் நான் நடந்துகொள்ளும்போது ஏன் என்மீது கோபம் கொள்கிறாய்?
மற்றவர்கள் என்னைப் பார்த்துச் சிரிப்பது நியாயமாகுமா? கடவுளிடம் அன்பு செலுத்த பெற்றோர் சொல்லித் தந்தார்கள்.
மற்றவர்கள் என்னை வேதனைப் படுத்துகின்றனர் அவையெல்லாம் தெரிந்தும் இன்னும் எவ்வளவு நாள் நீ மௌனமாக இருக்கப்போகிறாய்,
தியாகராஜா? “பலுகவேமி நா தைவமா” என்று புலம்பல் பாணியில் கீர்த்தனை அமைகிறது.

அந்த நினைவின் ஆக்கிரமிப்பில் வேகத்தில் மனதைத் தூதுபோல அனுப்புவதும், கட்டளையிடுவதும் இயல்பாகிறது.
அந்தப் பார்வையில்தான் “மனமே! போய் என் தெய்வத்தை வேகமாகக் கை பிடித்து அழைத்து வா!
எனக்கு பேரானந்தத்தைத்தர அவனை வேகமாக அழைத்துக் கொண்டுவா [சனிதோடி தேவே]” என்று
ராமனைத் தன்னிடம் அழைத்து வரவேண்டியது மனதின் கடமை என்று ஆணையிடுவதாக ஒரு கீர்த்தனை வெளிப்படுகிறது.
மனதைப் பெண்ணாக்கி இயல்பாக மனிதர்கள் நடைமுறையில் எதற்கும் சொல்லும் சொற்களைப் பயன்படுத்தி,
காதலை வெளிப்படுத்துவதாக ஒரு கீர்த்தனை:

“என் பணிப்பெண்–மனம் உன்னிடம் காதல் கொண்டுள்ளாள். ஆனால் நீயோ அதைப் பொருட்படுத்தாமல்,
அவளைக் கைப்பிடிக்காமல் இருக்கிறாய். நான் என் மனப்படுக்கையைத் தந்திருக்கிறேன்.
நீ ஏன் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது? நம்பிக்கையோடு நான் உன்னிடம் அன்புகாட்டுகிறேன்.
ஆனால் பிரமன் என் தலையெழுத்தை வேறுவிதமாக எழுதிவிட்டான் போலிருக்கிறது,’ என்று காதலை
மனம்நொந்த தன்மையில் வெளிப்படுத்துகிறார். [“ராமாபி ராமா”]

“ஓ ராமா இது என்ன வாழ்க்கை, நான் ஏன் பிறந்தேன்?
எவ்வளவு நாள் நான் சகிப்பது?
நான் அவனைப் பார்க்க முடியாவிட்டால்
அவனோடு பேச முடியாவிட்டால்
இந்த வாழ்க்கையால் என்ன பயன்?
அன்போடு அவனைத் தழுவ முடியாவிட்டால் என்ன பயன்? ”

“ஏடி ஜன்மமிதி ஹா” என்ற வராளிராகத்தில் அமைந்த இந்தக் கீர்த்தனை முழுக்க முழுக்கச் சிருங்கார ரசமுடையது.
பிரிவும், வெறுப்புமான வேதனையை வெளிப்படுத்துவது. ராமனைத் தழுவாத வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று
நொந்து கொள்ளும் நிலையிலமையும் இது மதுரபாவத்தின் சிறந்த வெளிப்பாட்டு கீர்த்தனையாகக் கருதப்படுகிறது.

ராமா! எப்போதும் உடனிருந்திருக்கிறாய். கையைப் பிடித்துக் கொண்ட பிறகு விடக் கூடாது. பிறந்ததிலிருந்து என்னைப் பாதுகாக்கிறாய்.
எது நிரந்தரம், எது தற்காலிகம் என்று காட்டியிருக்கிறாய். என்னை விட்டு விடாதே [“பட்டி விடுவராது”] என்ற கீர்த்தனையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தவறுகண்டுபிடித்து மற்றவர்களைக் குறைகூறுவது மனிதனின் இயல்பான குணம்.
இந்தத் தன்மையில் மனிதர்கள் தம்மையே இழந்து விடுவது காலந்தோறும் கண்டிக்கப்பட்டிருக்கிறது.
தியாகராஜர் எளிமையான விளக்கம்தந்து இதை நீக்க நினைக்கிறார்.

“ஓ ராமா! உன்னிடம் என்ன குறை இருக்கிறது? அது என் குற்றம்தான்.
தங்கத்தின் தரம் நன்றாக இல்லாவிட்டால் பொற்கொல்லனை எப்படிக் குறை சொல்லமுடியும்?
உன் மகளால் பிரசவ வலியைப் பொறுக்க முடியாவிட்டால் மருமகனை எப்படிக் குறைசொல்லமுடியும்?
என் முந்தைய பிறவிகளில் நான் நல்லவற்றைச் செய்யாதபோது கடவுளை வழிபட மறந்தபோது
என் கஷ்டங்களுக்கு நான் எப்படி உன்னைக் குறைசொல்லமுடியும் தியாகராஜன் உன் பாதம் வணங்குகிறேன்”
என்பது “மீவல்ல குணதோஷமேமி” என்ற காபி ராக கீர்த்தனையாகும்.

இதில் சாதாரண மக்களுக்கும் புரிகிற, அவர்கள் அறிந்த எளிய உவமைகள், பேச்சுவழக்குச் சான்றுகள் முன்னிறுத்தப்படுகின்றன.
மனதிற்குகந்த ராமனை எந்தச் சூழ்நிலையிலும் குற்றம்சொல்ல தியாகராஜர் தயாராக இல்லை.
தனது சிக்கல்களுக்கு ராமன் உதவாமல்போக, கூடியிருப்பவர்கள் காரணமா என்ற சந்தேகத்தை
ராமனிடம் முன்வைப்பதாக அமையும் ஒரு கீர்த்தனை படித்து ரசிப்பதற்குரியதாகும்.

“ஓ ராமா! என்னைக் காப்பாற்றாமல் நீ விட்டுவிடுவது நியாயமா?
பக்தர்கள் உனக்கு நெருக்கமானவர்கள்
சீதாதேவி என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்றாளா?
நீண்டகாலமாக உன்னைப் பிரிந்திருந்த பரதன்,
நித்திரையை வெற்றி கொண்ட லட்சுமணன்,
உன் பாதத்தைவிட்டு நீங்காத மாருதி ஆகியோர்
எனக்கு உதவவேண்டாமென்று சொல்லி விட்டார்களோ?
பிரமன் என்பக்தியின் தரம்பற்றி உன்னிடம் சொல்லவில்லையா?
வாணி என்னைப்பற்றிச் சிறப்பாக எதுவும் சொல்லவில்லையா?
தியாகராஜா! இது என்ன? ”

“யுக்தமு காது நனு ரக்ஷிஞ்சகனுண்டேதி” என்ற ஸ்ரீ ராகக் கீர்த்தனை ராமனைக் குறைசொல்லாத,
ஆனால் அவனைச் சுற்றியிருக்கும் மற்றவர்களை காரணிகளாக்குகிற நயத்தை மிக அழகாகக் காட்டுகிறது.
மனவடக்கம் என்பது அவரவர் கையிலிருப்பது. அதற்கு வேறு எந்தத்தகுதியும் தேவையில்லை.
“மனிதனுக்குத் தன் மனதை அடக்கத் தெரியாவிட்டால் கோயில்மணி அடிப்பதும் மலர்வைத்து பூஜைசெய்வதுமான வழிபாடு எதற்கு?
வஞ்சக எண்ணம் கொண்டவன் காவேரியிலும், மந்தாகினியிலும் நீராடினால் மட்டும் கடவுள் காப்பாற்றிவிடுவாரா?
காமமும், கோபமும் கொண்டு வாழ்பவன் பூஜைபுனஸ்காரங்களால் எதையும் செய்யமுடியாது தியாகராஜா”
“மனஸு நில்ப சக்திலேக போதே” என்ற ஆபோகி ராக கீர்த்தனை எளிய நிலையில் சாதாரண மனிதனுக்கும் பக்தியின் தன்மையைப் புரியவைக்கிறது.

எது உண்மை பக்தி என்பதை எளிய உவமைகளில் சொல்கிற “பலமு குலமு” என்ற ஸாவேரி ராகத்திலான பிரபலமான கீர்த்தனை கீழே :

“வெறும் உடல்பலத்தால் என்னபயன்?
உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன்?
சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான்
காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா?
கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா?
ஆடு புல்தின்றால் அது உபவாசமா?
வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா?
குரங்கு காட்டில் வசிப்பதால் சந்நியாசியாகிவிடுமா?
உண்மை பக்தியைதான் ஏற்கிறான் தியாகராஜா!”
என்று எளிமையான சான்றுகளால் உயர்ந்த தத்துவத்தையும், உண்மையையும் வெளிப்படுத்துகிறார்.

இது போலவே, மனஅமைதி இல்லாதவனுக்கு மகிழ்ச்சி யில்லை [சாந்தமுலேகா சௌக்யமுலேது] என்ற தத்துவத்தை ஒரு கீர்த்தனை சொல்கிறது.
“புலன்களை அடக்கிக் கொண்டவனும், தத்துவார்த்தமுடையவனும்கூட மன அமைதியில்லாவிட்டால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.
சொத்து, குடும்பம் என்று வாழ்க்கை உயர்ந்தநிலையிலிருந்தாலும், வழிபாடுகள் செய்தாலும் அடிப்படையான அமைதியில்லாவிட்டால்
மகிழ்ச்சியில்லை என்ற கருத்து இக்கீர்த்தனையில் வெளிப்படுகிறது.
இன்றைய உலகில் இதை நம்மால் மிகஅதிகமாகப் பார்க்கமுடிகிறது.
வளர்வுக்கான அடிப்படைச் சிந்தனைத்தளம் நமக்குள்ளிருக்கும்போது அதை வளர்ப்பது நம்முடையதாகிறது என்ற
ஆழமான தத்துவம் அவரால் வெளிப்படுத்தப்படுகிறது.

அவருக்குச் சிவ-வைணவ பேதமில்லை.
ஓம் நமோ நாராயணா என்பதிலுள்ள ’ரா’ என்பதையும், “ஓம் நமசிவாய “என்பதிலுள்ள “மா’ என்பதையும் எடுத்துக் கொண்டு
“ராமா” என்னும் தாரகமந்திரத்தை அவர் ஏற்றதாகச் சொல்லப்படுகிறது.
’எவரணி நிர்ணயிஞ்சிரிரா’ என்ற தேவாம்ருதவர்ஷிணி ராகத்தில் உள்ள கீர்த்தனையில் இது வெளிப்படுத்தப்படுகிறது.

“நீ சிவனா, விஷ்ணுவா பிரம்மனா ?
சிவமந்திரத்தில் உள்ள மா,
நாராயணா மந்திரத்திலுள்ள ரா
இரண்டும் சேர்ந்த்துதான் ராமா என்பதை புரிந்து கொண்ட
மனிதர்களை இத்தியாகராஜன் நமஸ்கரிக்கிறேன் ”
என்பது அப்பாடல் பொருளாகும்.

இஷ்டதெய்வமாக ராமன் இருந்தபோதிலும் பல பாடல்களில் சிவனைப் போற்றியிருப்பது
அவருடைய காழ்ப்பற்ற சிந்தனைக்கு அடையாளமாகும்.
“சிவசிவயெனராதா ஓரீ’, “சம்போ மகாதேவ” “தேவாதிதேவ சதாசிவா” என்பன சிவனைப் போற்றுவதாகின்றன.
சூரியன், சந்திரன், நெருப்பு என்ற முக்கண்ணுடையவன்!விஷ்ணுவும், பிரமனும் சிவனைக் ’கண்டறிய’ முயன்று தோற்றனர்.
சிந்தனைக் கெட்டாத உயர்வுடையவன் அவன் தியாகராஜா என்று சிவனைப் பற்றிய போற்றுதல்கள் இக்கீர்த்தனைகளில் இடம் பெற்றுள்ளன.

செல்வம்தந்து, துன்பங்களை நீக்குபவன் கணபதி. பிரமனும் பிறகடவுளரும் வணங்கும் யானைமுகத்தன் என்று கணபதி
பற்றிச் “ஸ்ரீ கணநாதம்”, “ஸ்ரீ கணபதி” போன்ற கீர்த்தனைகள் பேசுகின்றன.

காவிரியாறு பற்றிய கீர்த்தனைகளுமுண்டு “காவிரியாற்றின் பேரழகைப் பாருங்கள்! . மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி,
பாரபட்சமின்றி அவர்களின் பாவங்களைக் கழுவி, மலையின் ஓரிடத்தில் மலைமீது அதிர்வு ஒலியோடு சீறிப்பாய்ந்தும்,
இன்னொரு இடத்தில் ஆறுதலாய் மென்மையாக ஓடியும், காவிரி அழகாக இருக்கிறது.
பக்தர்கள் காவிரியின் இருபக்கத்திலும் நின்று வணக்கம் செய்கின்றனர் தியாகராஜா” என்று காவிரியைக்
“சாரி வெடலின ஈ காவேரி” என்ற அஸாவேரி ராக கீர்த்தனையாக்குகிறார். சோழநாடும் கீர்த்தனையின் அங்கமாகிறது.
உலகின் அழகான இடம் என்ற மனவெளிப்பாட்டில் “ஈ மஹிலோ ஸொகஸைன சோழசீமயந்து” என்று
“முரிபெமு கலிகேகதா” என்ற முகாரி ராகப்பாடலில் போற்றியிருக்கிறார்.

அவர் கற்ற வேத, உபநிடத, புராணக்கருத்துக்கள், தத்துவார்த்தங்களை மிக எளிமையாக மக்களுக்குக் கீர்த்தனைகளில் வெளிப்படுத்துகிறார்.

“ஸோபிலு சப்தஸ்வர சுந்தருல’ என்ற கீர்த்தனை வேதங்களிலிருந்து தோன்றிய சப்தஸ்வரங்கள் வழிபாட்டிற்குரியவை என்கிறது.
கலியுக மக்களின் பக்தி குறித்தும் தியாகராஜரின் கீர்த்தனை பேசுகிறது.
“ஓ ராமா! பதவியின், பணத்தின்பின்னால் அலைகிறவர்களுக்கு தாரகமந்திரத்தின் சக்தி தெரியாது.
சமைக்கப்பட்ட இனிய அவலின் சுவை காளைமாட்டிற்கு எப்படித் தெரியும் [கலி நருலகு மகிமலு]” என்ற கீர்த்தனை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச்சித்தரின் கருத்தான “சுட்டசட்டி சட்டுவம் அறியுமோ கறிச்சுவை” என்ற கருத்தைத் தியாகராஜர்
“துத்தபாலருசி தெலியு சாம்யமே” என்று “எந்தமுத்தோ” என்ற பிந்துமாலினி ராகப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்.

தியாகராஜரின் கீர்த்தனைகளால் கவரப்பட்டு கோபாலகிருஷ்ணபாரதி அவரைச் சந்திக்கப் போகிறார்.
அந்த நேரத்தில் அவருடைய சீடர்கள் ஆபோகி ராகத்தில் ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருக்கின்றனர்.
அது பாரதியின் மனதைக் கவர்கிறது. தியாகராஜர்-பாரதி இடையே நடக்கும் சுவையான உரையாடல் இங்கு:

தியாகராஜர் : “நீங்கள் எந்த ஊர்? ”
பாரதி : “தாசன் மாயவரம்”
தியாகராஜர் : “அங்கே கோபாலகிருஷ்ணபாரதி என்று ஒரு சங்கீத வித்வான் இருக்கிறாராமே.
உங்களுக்கு அவரைத் தெரியுமா? அவர் சௌக்யமா? ”
பாரதி : “தாசன்தான் அது”
என்று சொல்ல தியாகராஜருக்கு பெரும் வியப்பேற்படுகிறது. சில கணங்கள் அவரையே பார்க்கிறார். பின்பு

தியாகராஜர் : நீங்கள் ஆபோகி ராகத்தில் கீர்த்தனைகள் பாடியிருக்கிறீர்களா?”

பாரதி மௌனமாக இருக்கிறார்.
மாணவர்கள் தொடர்ந்து சிலகீர்த்தனைகள் பாடுகின்றனர். பாரதி விடைபெற்றுத் திரும்புகிறார்.
வழிநெடுகிலும் ஆபோகியே மனதை ஆக்கிரமிக்கிறது.
இரவோடிரவாக சபாபதிக்கு வேறு தெய்வம் சமமாகுமா என்ற ஒரு கீர்த்தனையை உருவாக்குகிறார்.
அடுத்தநாள் தியாகராஜரைச் சந்தித்து அக்கீர்த்தனையைப் பாடிக்காட்டுகிறார்.

தியாகராஜர் : நேற்று ஆபோகி பற்றிக் கேட்டபோது ஒன்றும் சொல்லவில்லையே? ”
பாரதி : “இதற்கு முன்பு ஆபோகியில் ஒன்றும் பாடியதில்லை. நேற்று இரவுதான் பாடினேன்”
என்று பெருமையோடு பதில் தருகிறார்.
இது தியாகராஜரை ஆனந்தத்திற்குள்ளாக்குகிறது.

இதையடுத்து பாரதியிடம் சங்கீத அறிஞர்கள் தியாகராஜரின் பஞ்சரத்னக்கீர்த்தனை போலத் தமிழில் இயற்ற வேண்டுமென்று வேண்ட
அவர் ஹரஹர சிவ சங்கர கருணாகர, சரணாகதியென்று நம்பி வந்தேன், பிறவாத முக்தியைத் தரும்,
மறவாமல் எப்படியும் நினைமனமே உள்ளிட்ட கீர்த்தனைகளைப் பாடுகிறார்.

ஒருமுறை தியாகராஜர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதன் கோயிலருகே உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார்.
அப்போது ரங்கநாதரின் தேர் ஊர்வலம் அந்த வீதியில் வர, அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து தோடி ராகத்தில்
’ராஜு வெடலெ’ என்ற கீர்த்தனையைப் பாடுகிறார்.
ஊர்வலம் வீட்டினருகே வர எதிர்பார்ப்போடு காத்திருக்க, தேர் வேறு ஒருதெருவில் திரும்பி, அசையாமல் நின்றுவிடுகிறது.
ஓர் உண்மையான பக்தன் மன வருத்தம் அடைந்ததால்தான் தேர்நகரவில்லை என்று சிலர் சொல்ல அவர் தேர்முன்பு அழைத்து வரப்படுகிறார்.
அப்போது அவர் “வினரதநா மனவி” மற்றும் “ஓ ரங்கசாயி” என்று இரண்டு கீர்த்தனைகள் பாடுகிறார். தேர் நகர்கிறது.
ஸ்ரீரங்க பஞ்சரத்னம் அப்படி உருவானதுதான்.
இப்படியே கோவூர் பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்னம், திருவொற்றியூர் பஞ்சரத்னம் ஆகியவை அவரால் பாடப்பட்டுள்ளன.

தியாகராஜருக்குப் பல சீடர்களிருந்தாலும் வெங்கடரமண பாகவதர், அவர் மகன் கிருஷ்ணசாமி பாகவதர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இருவரும் இணைந்துதான் தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றை உலகிற்குச் சொன்னவர்கள்.
தியாகராஜர் இயற்றிய மூன்று இசைநாடகங்களை நமக்கு அறிமுகப் படுத்தியவர் வெங்கடேச பாகவதர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களுரைச் சேர்ந்த நாகரத்னம்மா இசை, நடனம் இரண்டிலும் பேரார்வம் கொண்டவர்.
தியாகராஜரின்மீது எல்லையற்ற அன்பும், மரியாதையும் உடையவர்.
அவருடைய பாடல்களில் யதுகுலகாம்போதி ராகத்திலமைந்தவை அவருக்கு மிகப் பிடித்ததாகும்.
எனவே ’ஸ்ரீராமா ஜெயராமா ’என்ற கீர்த்தனையை எல்லா நிகழ்வுகளிலும் பாடித் தன்னையும், மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவார்.
ஒரு நாள் ராமபக்தனான தியாகராஜருக்கு சமாதிமண்டபம் கட்டுவது போன்ற காட்சி கனவில் நாகரத்னம்மாவுக்கு ஏற்பட்டது.
அதற்குப் பிறகு தன் வசதியான வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு நிதிதிரட்டியும்,
உதவிகேட்டும் மண்டபம் கட்டும் பணியைச் செய்து முடித்தாள்.
அந்த மண்டபத்தில்தான் ஆண்டுதோறும் இன்றும் தியாகராஜர் உற்சவம் நடத்தப்படுகிறது.

மிகப் பெரிய அளவுடைய பஞ்சரத்ன கீர்த்தனைகள் மட்டுமின்றி, சிறியதான உத்சவ சம்பிரதாய கீர்த்தனைகள்,
திவ்யநாம சங்கீர்த்தனைகள் என்று பண்டிகைப் பாடல்களை இயற்றியுள்ளார்.
அவற்றில் அவர் தன் ஆழமான பக்திச் சிந்தனைகளை வெளிப்படுத்தி இருப்பதோடு சமஸ்கிருத வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

அவர் வாழ்ந்த காலகட்டத்தில், குறிப்பாகத் தஞ்சையில் இசை மற்றும் நடனத்தோடு இணைந்த இசைநாடகங்களுக்கு
பெரிய அளவு வரவேற்பு இருந்தால் அந்தச் சூழலில் பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரிதம், சீதாராம விஜயம்
என்ற மூன்று இசை நாடகங்களைப் படைத்திருக்கிறார் .
வர்ணனைப்பாடல்கள், விளக்கப்பாடல்கள், உரையாடல்பாடல்கள், அறிமுகவிளக்கம், உரைநடைப் பத்திகளாக அவை அமைந்துள்ளன.
நாடகமாக நடிக்கப்படவில்லையெனினும் அவை அபிநயத்தோடு பாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகலாத பக்தி விஜயம் பக்தியையும், நௌகசரிதம் கண்ணன் கோபிகையருக்கு முக்தியைக் காட்டிய நிகழ்வையும் விளக்குவதாகும்.

சாதாரண மக்களுமறிந்த எளிய ஆனால் மனதில் பதியும் உவமைகளை பல கீர்த்தனைகளில் பயன்படுத்தியுள்ளார்
வழக்கிலுள்ள பழமொழி, மரபுச்சொற்கள், அறநெறிக்கதைகள், உவமைகள், உருவகம் ஆகியவையும் பயன்படுத்தப் பட்டுள்ளன. சில சான்றுகள்;

கையில் மோர் இருக்க நெய்க்கு கவலைப்படுதல்
பாத்திரத்திற்குப் பாலின் சுவை தெரியுமா?
தலைக்கு வந்து தலைப்பாகையோடு போனது
குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுதல்
பிணத்திற்குச் செய்யும் அலங்காரம் போல
மனமே !ராஜபாதை இருக்கும்போது குறுக்குப் பாதையில் ஏன் போகிறாய்?
பாலும் நெய்யும் இருக்கும்போது சாராயத்தை ஏன் தேடுகிறாய்?
ஒரு காசுமில்ல்லாத ஏழைக்குவைரம் கிடைத்ததுபோல
கஞ்சிகூட இல்லாதவனுக்கு அமிர்தம் கிடைத்ததைப் போல,
தெருவில் ஆடுபவனுக்கு விழாமேடை கிடைத்ததுபோல

என்று உவமைகள், சான்றுச் சொற்கள் இயல்பாக வந்து விழுகின்றன.

தியாகராஜர் நாதோபாசனையாக தன் பக்தியை கீர்த்தனைகளின் மூலம் வெளிப்படுத்தி, அதிகமான உலக ஆசைகளின் விளைவையும்,
அதிலிருந்து விடுபடவேண்டியதன் அவசியத்தையும் காட்டுகிறார். எளிய நாமவழிபாட்டின் மூலம் அருளையடையும்
உயர் தத்துவமும் அவரால் விளக்கப்பட்டிருக்கிறது.
“ராமநாமத்தின் கோயில்; . உணர்ச்சி வெளிப்பாட்டில் மீரா;பக்தியில் கபீர்; இசையில் புரந்தரதாசன்;
தொலைநோக்கில் நம்மாழ்வார் என்று சுத்தானந்த பாரதி தியாகராஜரைப் பல உருவங்களில் போற்றுவது குறிப்பிடத்தக்கது.

————-

எப்படிப் பாடினரோ – தியாகராஜர்

ஜனகராஜனின் அரண்மனை; விசுவாமித்திரர் அழகான இரு வாலிபர்களுடன் அரசவைக்குள் நுழைகிறார்.
அந்த வாலிபர்களுள் ஒருவனான ஸ்ரீராமன் யாராலுமே தூக்கி நிறுத்தக் கூட இயலாத சிவதவனுசை நாணேற்றலாமா என எண்ணுகிறான்.
குருவின் அனுமதிக்காக அவர் முகத்தை அண்ணந்து நோக்குகிறான்.
வாலிப மிடுக்கும், எழிலும், கருணையும், ராஜ கம்பீரமும் பொங்கும் முகம், எடுத்த காரியத்தில் ஈடுபட்ட முனைப்பு;
சுருண்ட கேசக் குழல்கள் நெற்றியில் புரண்டு விளையாடுகின்றன;
அந்த அழகில் ஈடுபட்டு மெய்மறந்த ராஜரிஷி விசுவாமித்திரர் பேசவும் மறந்து, கண்ணால் சைகை செய்து அனுமதி அளிக்கிறார்.
சிவதனுசை நாணேற்றுகிறான் ஸ்ரீராமன்.

எப்படிப்பட்டதொரு கண்கொள்ளாக் காட்சி! தியாகராஜர் என்னும் மாபெரும் வாக்கேயகாரர் எழுதிய மிக
ஒரு அழகான சித்திரத்தை அல்லவோ கண்முன் காண்கிறோம். காதாலும் கேட்கிறோம்!

‘அலகலல்ல ஆடககனி ஆராண்முனி எடுபொங்கெனோ’–
சுருண்ட குழல்கள் அசைந்தாடும் அழகில் சொக்கிப் போய் மெய்ப்புளகமுற்று நிற்கும் ராஜரிஷியான விசுவாமித்திரர்
தனது சீடன் ராமன் வில்லை நாணேற்றுவானா எனக் கவலையே படவில்லை!
ராம லாவண்யத்தில் தன் வயமிழந்து நிற்பவராக விசுவாமித்திரர் தியாகராஜரால் உருவகப் படுத்தப்பட்டுள்ளார்.

‘முனிகனு சைக தெலிசி சிவதனுவுனு விரிசே’-
முனிவனின் கண் சைகை அறிந்து வில்லை எடுக்கிற ராமனின் நெற்றியில் புரளும் குழல்களின் அழகில்
நம்மையும் மயங்க வைக்கும் பாடல். இத்தகைய ஒரு நுணுக்கமான விஷயத்தை மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்து
ராமனின் அழகில் ஈடுபட்டு விடும் தியாகராஜரின் இந்த மத்யமாவதி ராகக் கிருதியை
அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் விறுவிறுப்பான பாடாந்தரத்தில் கேட்கலாம்.
மனக்கண்ணில் காட்சியைக் கண்டு நமது பாரம்பரியப் பெருமையை எண்ணி உள்ளம் பூரிக்கலாம்.

இறையனுபவம் என்பது அவனுடைய எண்ணற்ற கல்யாண குணங்களில் (அருள், கருணை, பேராண்மை, இன்ன பிற) ஆழ்ந்து,
அதைப் போற்றுவது. குணம் என்பதில் வடிவும் உருவும் சேரும்.
இவற்றில் ஆழ்ந்து ஈடுபட்டு ராமனை கார்முகில் வண்ணன், தடந்தோளன், தடக்கையன், தாமரைக் கண்ணன்
என்றெல்லாம் வர்ணித்து மகிழ்கிறார் தியாகராஜர்.

ராமனின் எல்லையற்ற ‘அழியா அழகை’த் தமது எல்லையற்ற கற்பனைக்குள் அடக்கிப் பார்த்து மகிழும்
இது போன்ற எண்ணற்ற கிருதிகள்! எத்தனை முயன்று நீந்திப் பார்த்தாலும் ஆழம் காண முடியாத
பெரும் சங்கீத சாஹித்யக் கடல் தியாகராஜருடையது.
இதில் மூழ்கி ஒரு சில அபூர்வமான முத்துக்களை எடுத்துப் பார்த்து, கேட்டு மகிழலாமே!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகராஜர் என நாம் அறிவோம்.
ராமபக்தியில் மூழ்கி, தன்னை, தன் வாழ்வையே ராம சேவையில் கழித்தவர்.
நாரதரின் மறு அவதாரம் எனப் போற்றப் படுபவர். இவர் வாழ்ந்த காலம் 18-ம் நூற்றாண்டு.
திருவாரூரில் பிறந்த இவர் வாழ்ந்த ஊர் திருவையாறு. திருவாரூர் தியாகேசனின் பெயரையே தாய் தந்தையர் இவருக்குமிட்டனர்.
தெலுங்கிலும் சம்ஸ்கிருதத்திலும், சங்கீதத்திலும் மிகத் தேர்ச்சி பெற்ற பரம்பரையில் வந்தவர். தந்தை பெயர் ராமப்பிரம்மம்.
திருவாரூரிலிருந்த ராமப்பிரம்மத்தின் குடும்பம் தியாகராஜரின் கல்விக்காகத் திருவையாற்றுக்குக் குடி பெயர்ந்தது.

தர்க்கம், வியாகரணம் ஆகியவற்றில் நாட்டமின்றி, சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்தார் தியாகராஜர்.
ராமபக்தியிலேயே மூழ்கியிருந்த தியாகராஜர் பிற தெய்வங்களை ஏறெடுத்தும் பாராதிருந்தார்.
‘லாவண்ய ராம கனுலார ஜூடவே’ என்ற பூர்ணஷட்ஜ ராகக் கீர்த்தனையில்
‘உன் மனசு, உன் தினுசு, உன் சொகுசு வேறு தான்! நீ இருக்கும்போது தாமச தெய்வங்களை நான் தொழலாகுமோ?’ எனப் பாடினார்.
ஆனால் இவரது மனைவி சிவபக்தை; ஹரியும் சிவனும் ஒன்றென எண்ணுபவர்.
திருவையாறிலே வாழ்ந்திருந்தாலும் கூட தியாகராஜர் தர்மசம்வர்த்தனி அம்பிகையின் பவனியைப் பார்க்க மாட்டாராம்!
கனவில் தினமும் ராமனைத் தரிசித்து மகிழ்ந்தவர், ஒருமுறை நோயில் படுத்தார்;
அப்போது ராமன் அவர் கனவில் வரவில்லையாம்! ‘எல்லா தெய்வங்களும் சமம்; ஒன்று’ என்ற எண்ணம் அப்போது தான் அவருக்கு உதித்தது.
பின்பு சிவன், அம்பிகை ஆகிய தெய்வங்களின் மீதும் அழகான பல பாடல்களை இயற்றினார்.

இவர் இயற்றிய கீர்த்தனைகள் கிட்டத்தட்ட 24,000 என்பார்கள்.
ஆயினும் சில நூறுகளே தற்போது புழக்கத்திலுள்ளனவாம்.

ஸ்ரீராமனைத் தன் ஆண்டானாக, தோழனாக, குழந்தையாக, மகனாக, தந்தையாக, குருவாக என
எல்லாமாக எண்ணி நவவித பக்தி செய்தவர் தியாகராஜர்.

‘மானமுலேதா தனவாடனி அபிமானமு லேதா’ என்ற ஹமீர் கல்யாணி ராகப் பாடலில்,
“உனக்கு வெட்கம் இல்லையா, உன் தனயனான என்னிடம் அபிமானமும் இல்லையோ?” என்று உரிமையுடன் ராமனைக் கேட்கிறார்.

‘கானமுரா நீவலெ நிர்மோஹினீ,’ எனும் அனுபல்லவி வரிகளில்,
“உன்னைப் போன்ற பற்றற்றவனை (நிர் மோஹியை) நான் கண்டதில்லையே,’ எனப் பரிகசிக்கிறார்.
பரிகாசம் ஏன்? எல்லா பந்த பாசங்களையும் ஒதுக்கி விட்டு, கற்பில் சிறந்தவளான சீதையை ஊராரின் சொல்கேட்டு
வனவாசம் செய்ய அனுப்பினான் ராமன். இசையில் சிறந்த குச லவர்களின் தந்தை,’ எனக் கூறி,
‘இருப்பினும் ஒரு அரசனுக்கு தனது தருமமே முக்கியம் எனக் கருதியே இவ்வாறு செய்தவன்,’ எனவும் ஏத்துகிறார்.

தியாகராஜர் எல்லாப் பாடல்களிலும், அவற்றின் வரிகளினூடே ஒரு தத்துவத்தை, ராம காதையிலிருந்து தாம் ஆழ்ந்து
அனுபவித்த ஏதேனும் ஒரு செய்தியை அல்லது ரசத்தை கோடியிட்டுக் காட்டியிருப்பார்.

‘ஆடமோடி கலதா’ எனும் சாருகேசி ராகப் பாடல்-
‘என்னுடன் ஒரு சொல் பேச நீ ஏன் இவ்வளவு பிணங்குகிறாய் ராமைய்யா?…
கற்க வேண்டியது அனைத்தையும் கற்றறிந்த, சங்கரனுடைய அம்சமான அனுமனிடம் கூட (முதல் சந்திப்பில்)
உனது தம்பியை விட்டுப் பேசச் செய்தவன் நீ… (எளியவனான இந்த) தியாகராஜனிடம் பேச மாட்டாயா..” எனப் பாடிப் பரிதவிக்கிறார்.

‘சதுவுலன்னி தெலிஸி சங்கராம்ஸுடை
ஸதயுடாஸுக ஸம்பவுடு ம்ரொக்க
கதலு தம்முனி பல்க ஜேஸிதிவி கா-
கனு த்யாகராஜு ஆடின மாட(லாட)’

இவையெல்லாம் தான் தியாகராஜரின் கிருதிகளின் மேன்மை எனலாம்.
தான் மட்டுமின்றிக் கேட்பவர்களையும் இறைவனோடு ஒருங்கிணைக்கும் வாக்சாதுர்யம் ததும்பும் கவிநயம், பாவம்!

தியாகராஜர், இறை அனுபவம் மட்டுமின்றி அந்த இறைவன் குடியிருக்கும் இயற்கையையும் போற்றிப் பல பாடல்களை இயற்றியுள்ளார்.
‘முரிபமு கலிகே கதா ராம சம்முனினுத’ என்ற முகாரி ராகப் பாடலை தற்போது புழக்கத்தில் இருக்கும்
இத்தகைய பாடல்களுள் ஒன்றாகக் கொள்ளலாம்.
தென்றல் தவழும் காவேரி நதி தீரத்தை வர்ணிக்கும் கீழ்க்காணும் வரிகள் அவரின் இனிய குரலில் நம்மை மயக்கும்.
நாமும் அங்கு சென்று குடியிருக்க மாட்டோமா என ஏங்கவும் வைக்கும்!

‘ஈடுலேனி மலயமாருதமுசே
கூடின காவேரி தடமந்து
மேடலமித்தெலதோ ஸ்ருங்காரமு
மிம்சு சதனமுலலோ………’

‘ஈடிணையற்ற தென்றல் வீசும் காவேரி நதிக் கரையில் உள்ள அழகிய வீடுகளில் வாழும்
உத்தம புருஷர்கள் வேதங்களை ஓதி இறைவனை வழிபட்டு வருகின்றனர்,’ என்பது இதன் பொருள்.

ஒரு அருமையான அசாவேரி ராகக் கிருதி காவேரி நதியின் பெருமையை விண்டுரைக்கின்றது!
ஒரு ஆடிப்பெருக்கின் போது, காவேரி பூஜையின் சமயம் ஸ்வாமிகள் இதனை இயற்றியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.

ஸாரி வெடலின ஈ காவேரினி ஜூடரே’ எனத் தொடங்கும் கிருதி,
‘கரை புரண்டு வரும் இந்தக் காவேரி நதியைத் தரிசியுங்கள்! யாரிடத்தும் வேறுபாடு கொள்ளாமல் எல்லாருக்கும்
நல்வாழ்வை வழங்கியபடி, ஓரிடத்தில் அலைகள் புரள, பிறிதோரிடத்தில் கர்ஜனை புரிவது போன்ற பெருத்த ஓசையுடனும்,
மற்றோரிடத்தில் அமைதியாக நடை பயின்றும் ஸ்ரீரங்கநாதனைத் தரிசிப்பது போல
ஸ்ரீரங்கத்தின் வழியே பெருக்கெடுத்து ஓடி, ஈரேழுலகங்களையும் உய்விக்கும் ஈசன் உறையும்
பஞ்சநதீஸ்வர க்ஷேத்திரத்தின் வழியே பாய்ந்து, அவ்வீசனையும் தரிசித்து,
எல்லா மக்களும், தேவர்களும் இருகரைகளிலும் கூடி நின்று ‘ராஜராஜேஸ்வரி’ என மலர்களைத் தூவிக் கொண்டாடி
வழிபடும் காவேரி என்னும் இந்தக் கன்யகா மணியைத் தரிசியுங்கள்,’ என ஆனந்த பரவசராய் ஸ்வாமிகள் பாடியது.

காவேரியின் போக்கை எத்துணை அழகாக வர்ணித்துள்ளார்!
‘நடந்தாய் வாழி காவேரி,’ என்று இயற்கையைப் போற்றிக் காவேரியை வழிபட்ட இளங்கோவடிகளுக்கு
இதோ ஒரு போட்டியாளர் எனத்தான் வியக்கத் தோன்றுகிறது!
இத்தனை அழகிய பாடல்களைத் தேர்ந்தெடுத்து மேடைகளில் பாட இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்கள்
முன் வருவார்களா எனக் கேட்கவும் ஆவல் மிகுகின்றது!

திருவையாறு பஞ்சநதீசன் மேலும் அன்னை தர்மசம்வர்த்தனியின் மேலுமாகப் பதினோரு கிருதிகளைத்
திருவையாறு க்ஷேத்ரக் கிருதிகள் என்ற பெயரில் இயற்றியுள்ளார் தியாகராஜர். .

‘விதி சக்ராதுலகு தொரகுணா’ என்ற யமுனாகல்யாணி ராகக் கீர்த்தனையில்,
தர்மசம்வர்த்தனியான அன்னையின் வெள்ளிக்கிழமை தர்பார் வைபவத்தை மிக அழகான சொல்-
இசை ஓவியமாகவே வர்ணிக்கிறார்.

‘பிரம்மா, இந்திரன் முதலான தேவர்களுக்கும் காணக் கிடைக்காத தர்மம் என்னும் கடலில்
துயிலும் அன்னையின் இந்த சேவையைக் காண வாரீர்! அன்னையின் வரவை எதிர் நோக்கி அனைவரும் காத்துள்ளனர்.
விருதுச் சின்னங்களை ஏந்தி நிற்கின்றனர். ஜய ஜய என்ற கோஷங்களை எழுப்புகின்றனர். நாட்டியமாடுகின்றனர்.
மலர்களைச் சொரிகின்றனர். அன்னை பராசக்தி (தர்மசம்வர்த்தனி) மஹாலட்சுமியுடன் சிரித்துப் பேசியபடி வருகிறாள்;
அவளுடைய பிரகாசமான புன்னகையுடன் போட்டியிட்டபடி அவளணிந்துள்ள வைர வைடூரிய ஹாரங்கள் ஜொலிக்கின்றன,’
எனவெல்லாம் நேர்முக வர்ணனையாளர் போல விவரிப்பவர், முத்தாய்ப்பாக,

‘….. அமரகோடுலு தடபட பூமினி தண்டமுலிடகா சந்தோஷமுனனு கடகண்டினி ஜூசெ சொகஸு..’

என உள்ளம் குளிர வைக்கிறார்.
அதாவது,
தேவர்கள் ‘தடபட’ வென பூமியில் விழுந்து தண்டமிட்டு வணங்குவதை கடைக்கண்ணால் பார்த்து
அங்கீகரித்துக் கொள்ளும் அழகை (சொகுசை) நம் கண்முன் படம் பிடித்து வைத்து விடுகிறார்.
இந்த ஒரு அனுபவத்தை உணருவதற்காகவே தர்மசம்வர்த்தனியின் திருக் கோவிலுக்குப் போகத் தோன்றும்!

இந்தக் கிருதியை இறை வழிபாடாக மட்டுமின்றி, முதலில் கண்ட தியாகராஜரின் மற்றும் பல கீர்த்தனைகளைப் போல
தெய்வீக அழகின் ஆராதனையாகவும் நாம் காணலாம்.

இவை அனைத்தும் ஒரு சில துளிகள் தான். இன்னும் பஞ்சரத்னக் கிருதிகள், நௌகா சரித்ரம், ப்ரஹலாத பக்தி விஜயம் எனும் இசை நாடகங்கள்,
ஸ்ரீரங்கம் பஞ்சரத்னம், திருவொற்றியூர் பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்னம் எனும் ஒப்பற்ற இசைச் செல்வங்களை நமக்கு வாரி வழங்கியிருக்கிறார்.
இசை விற்பன்னர்களுக்கு மட்டுமன்றி, அன்றாடம் இறைவனுக்குச் செய்யும் பஜனையிலும் பூஜைகளிலும் சாமானியர்களும்
பங்கேற்று மகிழும் வண்ணம் அழகான எளிய ராகங்களில் ‘
சீதா கல்யாண வைபோகமே.’
லாலி, ஊஞ்சல் வகைப் பாடல்களை உத்சவ சம்பிரதாயக் கிருதிகள் என இயற்றியுள்ளார்.
ராமனை, ‘லாலி ஊகவே,’ எனத் தாலாட்டி மகிழ்ந்துள்ளார்.

‘சீதம்மா என் தாய். ஸ்ரீராமன் என் தந்தை; பரதன், லக்ஷ்மணன், அனுமன் ஆகியோர் உறவினர்கள்,’ எனக்
கொண்டாடிப் பெருமைப் பட்டுள்ளார் (சீதம்ம மாயம்ம – வசந்தா ராக கிருதி).

‘ராம சன்னிதி சேவையே பொன்னிலும் பொருளிலும் மிக உயர்வானது,’ என அறுதியிட்டுக் கூறுகிறார் (நிதி சால சுகமா).

தியாகராஜ கிருதிகள் அளக்க இயலாத பொற்குவியலான சொற் சித்திரங்கள்.
வான் பொய்த்தாலும் தான் பொய்யாத குலமகள் காவேரியின் கரைகளில் பிறந்து வளர்ந்து பண்பட்டு
நமக்கெல்லாம் பெருமை தரும் அருமைத் தென்னக கர்நாடக இசைச் செல்வங்கள்.

தியாகராஜ ஸ்வாமிகள் சமாதியடைந்த தினமான புஷ்ய பகுள பஞ்சமி தினம் ஆண்டு தோறும்
அவருடைய சமாதியில் அனுசரிக்கப் படுகின்றது. கர்நாடக இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி அவருடைய கீர்த்தனைகளைப் பாடி
ஆராதனை செய்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

ஒரு குழு அமர்ந்து ‘எந்தரோ மஹானுபாவுலு’ எனப்பாடிக் கொண்டிருந்தது. எத்தனை பொருள் செறிந்த சொற்கள்.
‘எத்தனையோ மஹான்கள்; அனைவருக்கும் எனது வந்தனம்,’ என்ற மஹா பக்திமானான
ஒரு அடியவரின் கால்பட்ட மண்ணில் நான் நிற்பதை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து அஞ்சலியில் கைகளைக் குவித்தேன்.

தியாகையர், இராமபிரானை அழைக்கு முகமாகப் பாடிய
‘ரா ரா ராஜீவலோசன ராமா’,
ராரா தேவாதி தேவா, ராரா மகானுபாவா’ முதலிய வரிகளைக் கேட்கும்போது
குழந்தை இராமனும் கோசலையுமே மனக் கண்ணுக்குத் தென்படுகின்றனர்.

———–

இங்கே நாமாவளி பாட நாரதர் இருக்கிறார். இதேபோல் பூலோகத்தில் பாடுவதற்கு யார் இருக்கிறார்கள்?’ என்று சீதா தேவி கேட்க,
அதற்கு ராமபிரான், `இந்தக் காரியத்துக்காக ஏற்கெனவே திருவாரூரில் தியாகராஜன் அவதரித்துவிட்டான்’ என்று
பதில் கூறுவதிலிருந்து தொடங்குகிறது `ஶ்ரீதியாகராஜர்’ இசை நாடகம்.

ராமபிரானைப் போற்றி கீர்த்தனைகள் பாடுவதற்கென்றே தோன்றிய ஶ்ரீதியாகராஜர்,
தம்முடைய வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்தபோதும், இடைவிடாது ராமபிரானைத் துதித்து, கீர்த்தனைகளைப் பாடி,
தமது 80-வது வயதில் ராமபிரானின் திருவடி சேரும் வரை நடைபெற்ற சம்பவங்களின் சுருக்கம்தான் `ஶ்ரீதியாகராஜர்’ நாடகம்.

எந்தரோ மகானுபாவலு அந்தரிகி வந்தனமு; நிதி சால சுகமா ராம நூ சந்நிதி சாலசுகமா? போன்ற
பிரசித்தி பெற்ற கீர்த்தனைகளை அருளிய தியாகராஜரின் வாழ்க்கையை விவரிக்கும் இசை நாடகம் இது. `
இப்படி ஒரு நாடகத்தை இதுவரை பார்த்ததில்லை’ என்று பார்த்தவர்கள் பூரிப்புடன் சொல்லும்
இந்த நாடகம் பல வெளிநாடுகளிலும் மேடையேறியிருக்கிறது.

பிச்சை என்பது பசிக்கு நாம் பெறுவது. பிக்ஷை என்பது பக்திக்கு சேர்க்கிறது.

நமக்கு வீடுதேடி வந்தால் அது சாப்பாடு. வெளியில் நாலுபேரிடம் தேடி வாங்கினால் பிரசாதம்.

எல்லோரையும்போல பிரபஞ்சத்தில் நானும் ஒருத்தன்னு சொன்னதோடு, நம்மில் ஒருவராக சுக துக்கங்களில் பங்குகொண்டு வாழ்ந்து காட்டியவர் ராமர்.

நாம் எப்படி வாழறதுன்னு முறையைச் சொல்லிக் கொடுத்து, இந்தப் பிரபஞ்சமே நான்தான்னு சொன்னவர் கிருஷ்ணர்.

பகவான் கூப்பிடும் தொலைவில்தான் உள்ளார். அவருக்கு ஜாதி, மதம் இல்லை.
அவரை அழைக்க பெரிய யாக வேள்வி பூஜைகளோ, வேத பாராயணங்களோ தேவையில்லை.
மனசுத்தியோடு `ராமா, ராமா…’ என்று அழைத்தாலே போதும். பகவான் அனுக்கிரஹம் முழுமையாகக் கிடைக்கும்.

இவையெல்லாம் நாடகத்தில் கைத்தட்டல் பெறும் முக்கிய வசனங்கள்.

————-

சீதம்ம… மாயம்ம…

” ஸ்வாமி ”
வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் ,
குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார் !

எதிரே ஒரு வயதான தம்பதி !
அருகே ,கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன் !,
மெல்லிய குரலில் அந்த முதியவர் இப்போது பேச ஆரம்பித்தார் ;..

” ..ஸ்வாமி …நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிண்டு வரோம் !.
நாளை ராமேஸ்வரம் போகணும் !..இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்துல தங்கிவிட்டு ,
காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம் !.தயவுசெய்து ஒத்தாசை பண்ணணும் !”
கம்மிய குரலில் , பேசினார் அவர்;

வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்றும் ,
பேச்சில் தெரிந்த ஆயாசம் ..இவையெல்லாவற்றையும் தாண்டி , அம்மூவரின் முக லாவண்யமும் ,
தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய …அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது !

ஒரு கணம் நிலை தடுமாறியவர் பின் , மெலிதான புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ;

” அதற்கென்ன … பேஷாய் தங்கலாம் !…இரவு போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ !”
அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின் , அடுக்களையை நோக்கி , உரத்த குரலில் ,
” கமலா …குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..”
என்றார் ;

அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள் ,
அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பில் விரிந்தன !

‘ யார் இவர்கள் ?’

” கமலா …”
தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது ;

” கமலா …..இவர்கள் நமது விருந்தாளிகள் ..! .இன்று நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள் ..
இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய் ! ”
தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவாறே இயல்பாய் பேசினார் அவர் ;

‘ ….அடடா ..வீட்டில் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை .. !..
இப்போது , .ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது ?…
பக்கத்து வீட்டுக்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் ‘
உள்ளுக்குள் எண்ணியவள் , பின் எதையும் வெளிக்காட்டாமல் , புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு ,
அடுக்களையை நோக்கி விரைந்தாள் ;

போன வேகத்திலேயே ,அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள் ,
பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் ….

அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது ;
” அடடா …எங்கே செல்கிறீர்கள் அம்மா ?……..எங்களுக்காக சிரமப்பட வேண்டாம் .! ….
எங்களிடம் , வேண்டிய அளவு தேனும் , தினை மாவும் இருக்கிறது …..
இரண்டையும் பிசைந்து ..ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம் !”

அவளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை , வியப்புடனும் , தர்மசங்கடத்துடனும்
அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் ,
தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர் ;….!

தயக்கத்துடனும் , சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள் , உணவுத்தயாரிக்கும் பொருட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் …
அன்று இரவு ,அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற …..
.தியாகராஜர் , அவர்களுடன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு , பின் , ஒரு கட்டத்தில் உறங்கி போனார் .. ..

.. பொழுது விடிந்தது !
காலைக்கடன்களை முடித்து விட்டு , கூடத்தில் அமர்ந்து , வழக்கம் போல கண்களை மூடியவாறு ,
ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார் .

” ஸ்வாமி .. ..! “..
எதிரே புன்னகையுடன் அந்த முதியவர் !
அருகே , அவரின் பார்யாளும் , மற்றும் அந்த இளைஞனும் …!
அந்த முதியவர் தொடர்ந்தார் ….;

” ரொம்ப சந்தோஷம் …..நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம் …..
இரவு தங்க இடம் கொடுத்து ….வாய்க்கு ருசியாய் ஆகாரமும் கொடுத்து …அன்பாய் உபசரித்ததற்கு மிக்க நன்றி ..”
கூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச ..
அருகே அந்த மூதாட்டியும் , இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு நின்றிருந்தனர் ..
சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப ……

தியாகராஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார் …
அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க …
அவர்கள் செல்வதையே கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்த தியாகராஜரின் கண்களில் ‘ சட்டென்று ‘ ஒரு தெய்வீக காட்சி இப்போது !

அந்த வயோதிகர் , ஸ்ரீ ராமனாகவும் .
அந்த மூதாட்டி , சீதையாகவும் ,
அந்த இளைஞன் , ஸ்ரீ அனுமனாகவும் தோற்றமளிக்க …..
அவருக்குள் இனம் புரியாத ஒரு பதைதைப்பு !

கண்கள் பனிசோர ..நா தழுதழுக்க .. … தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார் !
” என் தெய்வமே ….தசரதகுமாரா ….ஜானகி மணாளா ….நீயா என் கிருஹத்துக்கு வந்தாய் ?…..
என்னே நாங்கள் செய்த பாக்கியம் …அடடா …..வெகு தூரத்திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே …
உன் காலை பிடித்து அமுக்கி , உன் கால் வலியை போக்குவதை விடுத்து , ..
உன்னை தூங்க விடாமல் ..விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தேனே …மகா பாவி நான் ! …..
என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தையும் கொண்டு வந்ததுடன் ,
ஒரு தாய் , தகப்பனாயிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே ! உனக்கு அநேக கோடி நமஸ்காரம் ! ”
நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர் !
அப்போது அவர் திருவாயினின்று , அனிசையாய் ,
” சீதம்ம…..மாயம்ம…”
என்கிற கீர்த்தனை பிறந்தது !

———-

இராம நாமம்-ஸ்ரீராமஜெயம்!

சிறப்புகள் எல்லாம் சிறப்புற, சிறப்புகளின் மகுடமாய் சீர் பெற்று ஓங்கும் நாமம் இராம நாமம்.
இந்த இராம நாமத்தின் சிறப்புகளை இப்படியாக ஒரு வரியில் சொல்லி முடித்துவிட முடியாது.
இப்படி எத்தனையோ மகான்கள், பாடிப் பேரின்பம் பெற்ற நாமம் இராம நாமம்.

இராகம் : ஜன சம்மோதினி

எடுப்பு
இராம நாமம் நல்ல நாமம்
நன்மையின் ரூபமாய் நானிலம் காக்கும்
இராம நாமம் நல்ல நாமம்

தொடுப்பு
தாமரைக்கண்ணனை தன்னிசையால் தினம்
தவத்திரு நாதயோகி தியாகராஜர் கண்ட
இராம நாமம் நல்ல நாமம்

முடிப்பு
ஜனன மரண பயம் தீர்க்கும் இராம நாமம்
ஜனகாதி முனிவர்கள் ஜபித்திடும் நாமம்
மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம்
மாதா பிதா குருவை மதித்த மன்னன்
இராம நாமம் நல்ல நாமம்

இராமன் பரமன். அவன் நாமத்தை தியானித்தல் என்பது சகலகோடி தேவதைகளையும், தெய்வங்களையும் தியானிப்பது ஆகும்.
இராமன் கையில் இருக்கும் கோதண்டமே ப்ரணவம். அதன் இலக்கே, பரமானந்த பேரின்ப நிலை.
அவனது சாரங்கத்தில் தரித்து ஏவப்படும் அம்பெனும் பாணமே, ஜீவன். ஜீவன், இராமானந்த நிலையினை அடைய
வழி வகுக்கும் சாதனமாய், விளங்குகிறது இராமனின் வில்!
அது போலவே இராம நாமமும், அப்பேரின்பத்தினை அடைய வழி வகுக்கும் சாதனம்!

தியாகராஜரின் தோடி இராகப் பாடல் ஒன்றுண்டு.
‘கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக…’ எனத் துவங்கும் அப்பாடலில், தியாகப் பிரம்மம் சொல்லுகிறார்:
‘நீலமேக ஷ்யாமளன் ஆன சுந்திர மூர்த்தியான இராமனை தியானம் செய்து,
இதயக் கமலத்தில், காணப்பெற்றவர்கள், பாக்கியசாலிகள். அவர்கள் மகாராஜாவைப் போன்றாவர்கள்’ என்று.

ப்ரணவம் == பரப்பிரம்மத்தின் சக்தி == கோதண்டம் == இராம நாமம்!

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தியாகராஜர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading