ஸ்ரீ வராஹ மூர்த்தி ஸ்தோத்திரங்கள்–ஸ்ரீ வராஹ திரு அவதார பரமான அருளிச் செயல்கள் –

ஸ்ரீ வராஹ மூர்த்தி காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

பகவான், மூன்றாவது அவதாரம் வராகம்-பன்றி, குடைந்து சென்றது.
இது உயிரினங்கள் நீரிலிருந்து முழுவதாக நிலத்தில் வாழ இயக்கம் அடைந்த
நிலையை எடுத்துக் காட்டுகிறது

——-

ஸ்ரீ வராஹ மூர்த்தி ஸ்லோகம்
ஸ்ரீ வராஹ மூர்த்தி பூமியைக் காக்க எடுத்த மூன்றாவது அவதாரமான
ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு உரிய ஸ்லோகம்

ஸுத்த ஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம் யஹம் – –
தயா நிதிம் தயா ஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதா பாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம் யஹம்

ஸுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே,
ஸ்ரீ வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே,
கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே,
ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, ஸ்ரீ வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.

———–

ஸ்ரீ வராக அவதாரத்தின் கதை இதுதான்

ஒரு சமயம், மகரிஷிகள் நால்வர் மகா விஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் வந்தனர்.
அங்கு காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் மகரிஷி களைத் தடுத்தார்கள்.

அந்த ரிஷிகள் கோபம் அடைந்து,
“நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்” என்று சாபமிட்டார்கள்.

ஜெய, விஜயர்கள் முனிவர்களைப் பணிந்து வணங்கி,
“உங்கள் சாபப்படி நாங்கள் எப்பிறவி எடுத்தாலும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தை
மறவாதிருக்க அருள் புரிய வேண்டும்” என்று கேட்டனர்.
ஸ்ரீ விஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம், “இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானது தான்.
இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து,
பின், நம் அருளினால் நம்மையே அடைவார்கள்” என்று கூறினார்.

அதன்படி, இருவரும் கசிப முனிவருக்கும், அதிதிக்கும் பிள்ளைகளாகப் பிறந்தார்கள்.
முதலில் பிறந்தவன் இரண்யகசிபு.
அடுத்துப் பிறந்தவன், இரண்யாட்சன்.
இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவம் இருந்து,
‘ எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது’ என்று வரம் பெற்று,
மூன்று லோகங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டான்.
இரண்யாட்சனும் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றுப் பலசாலியாகி, தேவர்களை சிறை பிடித்தான்.
அவர்கள் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இரண்யாட்சன் ஆணவம் அதிகமாகி, வருண பகவானை வம்புக்கு இழுத்தான்.
அதற்கு வருண பகவான், “ அசுரனே, விஷ்ணு பகவான் வராக உருவம் எடுத்து வருவார். அவரிடம் போராடு” என்று சொன்னார்.
அவன் வராக மூர்த்தியைத் தேடிப் பல திசைகளிலும் அலைந்து திரிந்தான்.
நீர்ப் பிரளயத்தில் பூலோகம் மூழ்கியதால், பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார்.
அப்போது அவருடைய சுவாசத்திலிருந்து வெண்ணிறமாக சிறிய வராகம் ( பன்றி ) ஒன்று உருவாகிச்
சிறிது சிறிதாக வளர்ந்து பிரம்மாண்டமான உருவம் எடுத்தது.

பிரளயத்தில் மூழ்கியிருக்கும் பூமியை வெளியே கொண்டுவரச் சமுத்திரத்தில் குதித்தது.
இச் சமயத்தில், எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால், இரண்யாட்சன் சோர்வடைந்து,
அசுர லோகத்தில் சுகமாக இருந்தான். அப்போது நாரதர் அங்கே தோன்றி,
“இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக் கொண்டு நீரில் மூழ்கியிருக்கும்
பூமியை மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.
உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான்.
வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன் கதாயுதத்தால் அடித்தான்.
இருவருக்கும் கடும் போர் உண்டானது.
இரண்யாட்சன் அடித்த அடியால், மகா விஷ்ணுவின் கதாயுதம் கையிலிருந்து நழுவி விழுந்தது.

தேவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இரண்யாட்சன் மீண்டும் தன் கதாயுதத்தால் தாக்க,
மகாவிஷ்ணு தம் இடது காலால் அதைத் தட்டிவிட்டு, தம் கையில் சக்கராயுதத்தை வரவழைத்தார்.
இரண்யாட்சன் சூலாயுதத்தை ஏவினான். சக்கராயுதத்தால் சூலாயுதமும் பொடிப் பொடியானது.
இரண்யாட்சன் ஆவேசமாக மகாவிஷ்ணுவின் மார்பின் மீது ஓங்கிக் குத்தினான்.
இருவருக்கும் உக்கிரமான போர் மூண்டது. இரண்யாட்சனால் சமாளிக்க முடியவில்லை.

பின், அவன் மறைந்து, ஆகாயத்திலிருந்து கற்களையும், அனேகவித பாணங்களையும் கொண்டு தாக்கினான்.
சிறிது நேரம் அவனுடைய ஆற்றலை விளையாட்டாக வேடிக்கை பார்த்தார் மகா விஷ்ணு.
அசுரர்கள் பலர், பயங்கரமான உருவங்களில் இரண்யாட்சனுக்கு உதவியாக வந்தனர்.
அவர்கள் அத்தனை பேரையும் வதம் செய்தார் மஹாவிஷ்ணு.

இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று எண்ணிய மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத்
தலையின் மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின் மீது விழுந்து மடிந்தான்.
அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்.
இது தான் திருமாலின் 3வது அவதாரமான வராக அவதாரம் பற்றியது.

2. வராகரின் பேருருவம்

திரிவிக்கிரம அவதாரத்தை விட பல மடங்கு பெரிய அவதாரம் வராக அவதாரம் என்பதை
ஒரு எளிய உதாரணத்தின் மூலம் ஆழ்வார்கள் காட்டுகின்றார்கள்.
கீழே உள்ள ஏழு உலகங்கள்,மேலே உள்ள ஏழு உலகங்கள், அதைத் தாண்டி அண்ட ஆவரணங்கள் எல்லாம்
கடந்து சென்ற அவனுடைய திருவடியை, பிரம்மன் சத்திய லோகத்தில் வணங்கி கங்கை நீரால் அபிஷேகம் செய்தார்.
ஆனால் வராக அவதாரம் திருவிக்கிரம அவதாரம் விட பெரியது.
‘‘குரமத் யகதோ யஸ்ய மேரு கண கணாயதே” என்ற சுலோகம் வராகத்தின் பேருருவைக் கூறுகிறது
மேருமலையும் வராகத்தின் குளம்படியில் சுருண்டு தூள்தூளாக ஆகியது என்றால்
அவன் உருவத்தை நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. அத்தனை பிரம்மாண்டமானது வராகரின் பேருருவம்.

3.வேதங்களில் வராக அவதாரம்

வராக புராணம் என்பது மகா புராணங்களில் திருமாலின் அவதாரத்தினை விளக்கும் புராணமாகும்.
இப்புராணம் 24,000 ஸ்லோகங்களை கொண்டதும், திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கும்
சாத்துவிக புராண வகையைச் சார்ந்ததும் ஆகும்.
இப்புராணத்தில் திதிகள், விரதங்கள், தீர்த்தங்கள், பாவங்கள், பாவங்களுக்கான பரிகாரங்கள்
ஆகியவையும் கூறப்பெற்றுள்ளன.
வராகர் பற்றிய குறிப்பு கிருஷ்ண யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வராக அவதாரத்தை பொருத்தவரை முதல் குறிப்பு வேதத்தில் சதபத பிராமணத்தில் இருக்கிறது.
நிலவுலகில் வலிமை மிக்க பன்றி ஒன்று எங்கும் படர்ந்து நிரம்பியிருந்த நீரிலிருந்து வெளிவந்ததாகவும்
அந்தப் பன்றியும் படைப்பு கடவுளான பிரஜாபதியும் ஒருவரே என்றும் சதபத பிராமணம் கூறுகின்றது.

நாராயண வல்லியில் வராக அவதாரம் மிக அருமையான முறையில் விளக்கப்பட்டிருக்கிறது.
அதில் பூமிப் பிராட்டியை மீட்டவுடன் வராகன் ஆனந்த சொரூபமாக இருந்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
பகவத் சாஸ்திரத்தில் ஸ்ரீ வராக பெருமானின் உருவம் விளக்கப்படுகிறது.

‘‘விஷ்னோர் மகா வராகஸ்ய நிர்மாண மது நோச்யதே” என்கிற மந்திரத்தில்
கழுத்து வரை மனித உருவாகவும் மேலே திருமுகமண்டலம் வராக முகமாகவும்
இடது முழங்கையில் பூமிப் பிராட்டியை ஏந்திக் கொண்டும்
வலது திருக்கையை இடுப்பில் வைத்துக்கொண்டும்
திருமுகமண்டலம் திரும்பி தேவியின் திருமேனித் தடங்களை முகரும் படியாகவும்
திருவாழ்மார்பன் ஆகவும் திவ்ய ஆபரண பூஷிதனாகவும் கர்ப்பக்கிரகத்தில்
வராக பெருமானை பிரதிஷ்டை செய்து வணங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படித்தான் ஸ்ரீ முஷ்ணத்தில் வராகர் காட்சியளிக்கிறார்.
விஷ்ணு புராணம் வராக அவதாரத்தின் தோற்றத்தை மிக விரிவாகக் கூறுகின்றது.
விஷ்ணு புராணத்தில் இரண்யாட்சனைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை
ஆனால் கடலில் பூமி மூழ்கிய விஷயமும் பகவான் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிய விஷயமும்,
அப்பொழுது பூமி பிராட்டி செய்த ஸ்தோத்திரம் மற்ற தேவதைகள் கூறிய ஸ்துதிகள் கூறப்பட்டுள்ளன.

விஷ்ணு புராணத்தில் ஸ்ரீ வராக அவதார வைபவம்
“தஸ்ய யஜ்ஞ வரஹஸ்ய விஷ்ணோ அமிததேஜச பிரணாமம் யேபி குர்வந்தி தேஷாமபி நமோ நம:”
என்று குறிப்பிடப்படுகிறது
அவர் சப்த சமுத்திரத்திலும் நிற்கும் பொழுது அவருடைய முழங்கால் அளவுக்கு கூட சமுத்திரம் இருக்கவில்லை
என்று புராணங்கள் கூறுகின்றன.
சுவேத வராகத்தின் கர்ஜனை ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்கிறது
(வராகர் பூமியை துக்கிய போது அவரின் மூச்சுக்காற்றின் வேகம் காரணமாக அவரின் வேர்வை
ஜனலோகம் வரை சென்றதாய் விஷ்ணுபுராணம் கூறுகிறது)

தன்னுடைய 100 கைகளால் ஒரு பன்றி இப்பூவுலகை மேலேதூக்கி வந்தது என்று தைத்ரீய ஆரண்யகம் குறிப்பிடுகிறது.
மகாபாரதத்திலும் மார்க்கண்டேய புராணத்தில் விஷ்ணுவின் அவதாரமாக பூவராகர் பெருமை பேசப்படுகிறது.

பிரம்மாண்ட புராணத்தில் ஐந்தாம் அத்தியாயம் வராக பெருமானின் பேருருவை வருணிக்கிறது.

வராக சரம ஸ்லோகம்

வைணவ சமயத்தில் மூன்று மஹா மந்திரங்கள் உண்டு. அதில் ஒன்று சரம ஸ்லோகம்.
அந்த சரம ஸ்லோகத்தில் மூன்று விதமான மந்திரங்கள் உண்டு.
அதில் முதன்மையான சரம ஸ்லோகம் வராக அவதாரத்தில் வராகப்பெருமாள் பூமாதேவிக்கு சொன்னது.

“ஸ்திதே மனஸி ஸூ ஸ் வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”

அவர் சொன்ன அந்த சரம ஸ்லோகத்தின் உடைய பொருள் வராக சரம ஸ்லோகம்
ஸ்திதே மனஸ்,
ஒரு மனிதன் நல்ல உடல்நலத்தோடு இருக்கக் கூடிய நிலையில், வழிபட வேண்டும்.
அப்படி வழிபட்டால் அவர் அந்திம திசையில் ,அவரால் பகவான் திருநாமமும் சொல்ல முடியாத
ஒரு நிலையை அடைந்து,,நினைவிழந்து,இருக்கும்போது,தெய்வத்தினுடைய நாமமும் சிந்தனையோ செய்யவேண்டிய
அவசியம் இல்லாதபடி நானே அவனுடைய அருகில் சென்று அவனை என்னுடைய பதத்திற்கு அழைத்துக் கொள்கிறேன்.

இதை பெரியாழ்வார் மிக அழகான பாசுரத்தில் பாடுகின்றார்.

“துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்பு என்னை வந்துநலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!”

யாகங்களும் வராகனும்
வராகர் பொதுவாக ஆதி வராகர்,
யக்ஞ வராகர் மற்றும்
பிரளய வராகர் ஆகிய மூன்று வடிவங்களில் வணங்கப்படுகிறார்.

வராக பெருமானுக்கு உள்ள தனிச்சிறப்பு, யாகங்களைக் காப்பாற்றுகின்ற மூர்த்தி.
யாகங்கள் நிறைவேற வேண்டும் என்று சொன்னால் அங்கே
வராக பெருமாள் யக்ஞ வராகராய் ஆவாஹனம் ஆக வேண்டும்.
120 (10 யோசனை)கிலோ மீட்டர் அகலமும் 1200 கிலோ மீட்டர் உயரமும் கொண்டவராக
மலையைப் போன்ற பெரிய உருவோடு வெண்மையான கூர்மையான பற்களைக் கொண்டு
தீயைப் பொலிகின்ற ஒளியும் சூரியனைப் போல ஜொலிக்கும் கண்களும் கொண்டு விளங்கியதாக
இந்தப் புராணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வராக மூர்த்தியின் வடிவம் வேத வேள்வியின் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒப்பிடப்படுகிறது.
அவரே ஒரு வேள்விச் சாலை.
உபநிடதங்களும் அவற்றின் மறைபொருளும் அவருக்கு இருக்கை.
சூரியனும் சந்திரனும் அவரது இரு கண்கள்.
வேதத்தின் சாகைகள் அவருடைய காதணிகள்.
அவருடைய நீண்ட முகம் வேள்வியின் சுருக்
அதாவது ஆஜ்யம் விடுகின்ற கரண்டி.
அவருடைய பெருத்த ஓசை சாமவேதம்.
அவருடைய வடிவம் உண்மையும் ஒழுக்கமும் நிறைந்த வடிவம்.
வேத மேடையே அவரது இதயம்.
சோம பானமே அவரது குருதி எப்படி வர்ணிக்கப்படுகிறது.

வராகரைப் போற்றும் துதி நூல்கள்

திருமாலை போற்றும் ஸ்ஹஸ்ரநாமாவளிகள் ஏழு பெயர்கள் வராக அவதாரம் தொடர்புடைய
திருநாமங்கள் ஆக விளங்குகின்றன.
இந்த ஏழு திருநாமங்களும் திருவுருவத்தை வர்ணிக்கின்றன.
பூமியைத் தாங்கும் பெரிய உருவத்தை உடையவன்;
பூமியைத் தாங்கும் பெரிய கொம்புகளை உடையவன்;
வராக முகத்தை உடையவன்;
பூமியை திரும்பவும் அடைந்தவன்;
பர ஞானம் இவற்றைக் கொடுப்பவன் என்று திருநாமங்கள் போற்றுகின்றன.

ஆழ்வார்கள் அனைவருமே மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பொய்கை ஆழ்வார் ஆறு பாசுரங்கள், பூதத்தாழ்வார் இரண்டு பாசுரங்கள், பேயாழ்வார் ஒரு பாசுரம்,
திருமழிசையாழ்வார் ஆறு பாசுரங்கள், நம்மாழ்வார் 11 பாசுரங்கள், குலசேகர ஆழ்வாரும் ஆண்டாளும் ஒரு பாசுரம்,
பெரியாழ்வார் ஏழு பாசுரங்கள்,திருமங்கை ஆழ்வார் 15 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்

இது தவிர ஸ்ரீ வேதாந்த தேசிகன் தேசிக பிரபந்தம், தசாவதார ஸ்தோத்திரம்,பூஸ்துதி, ரகசிய சிகாமணி
போன்ற நூல்களிலும் வராகப் பெருமானைப் போற்றியுள்ளார்.

இது தவிர வராக கவசம், ஸ்ரீ வராக ஸ்தோத்திரம்,வராக உபநிஷத்,
ஸ்ரீ பூவராகர் சுப்ரபாதம், பிரபத்தி, மங்களம் போன்றவை
வராக பெருமானின் பெருமையைப் போற்றும் வண்ணம் உள்ளன.

வராக தலங்கள்

பெருமாள் கோயில் என்று வழங்கப்படும் காஞ்சி வரதர் சந்நதியிலும்,
மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலிலும், மாமல்லபுரத்திலும் ,
திருமலை, திருவிடவெந்தை, திருக்கடல்மல்லை, ஸ்ரீ வில்லிபுத்தூர், முதலிய
தளங்களிலும் வராகர் சன்னதிகள் உள்ளன.
ஸ்ரீ முஷ்ணம் வராகருக் கென்றே உள்ள தலம்.
அக்கால அரசர்கள் பலரும் தங்கள் ஸ்தூபிகளில் வராகர் உருவைப் பயன்படுத்தினர்.
நாணயங்கள் வராகர் பெயரால் வராகன் என்றே வழங்கப்பட்டன.
வராகி மிகிரர் என்ற பெயரில் உள்ள ரிஷி ஜோதிட சாஸ்திரத்தை வரையறை செய்து கொடுத்தார்.
அரசு முத்திரைகளில் வராகர் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டன.

முஸ்தா சூரணம்

ஆச்சாரியர்கள் வராக அவதாரத்தில் மேன்மையை மிக அற்புதமாகப் பேசுகின்றார்கள்.
பகவான் அவதாரம் எடுக்கும் பொழுது அந்த அவதாரத்துக்கு ஏற்ப அத்தனை இலக்கணங்களும்
பொருந்தும் படியாக ஆகி விடுகின்றார். இதற்கு “மெய்ப்பாடு” என்று பெயர்.
வராக அவதாரத்தில் அவருடைய உணவு என்ன என்று சொன்னால்
நிலத்திலேயே அடியில் முளைக்கக் கூடிய கோரைக்கிழங்கு.

தண்ணீர் நிறைந்து உள்ள சதுப்பு நிலங்களில் உண்டாகும் இந்த கோரைக்கிழங்கு சரீர வியாதிகளைப் போக்க வல்லது.
கபம், பித்தம், ஜுரம் முதலியவை இந்த மருந்தினால் தீர்ந்துவிடும்.வராக சேத்திரம் ஆகிய ஸ்ரீ முஷ்ணத்தில்
இந்த முஸ்தா கிழங்கு சூரணத்தை பிரசாதமாகத் தருவர்.
அதனை சர்க்கரையோடு அல்லது வெல்லத்தோடு சேர்ந்து உண்டால் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய
பல்வேறு விதமான நோய்களும் நீங்கிவிடும்.
ஆசாரியர்கள் இந்த கோரைக்கிழங்கை முத்தக்காசு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்கள்.

சங்கல்ப மந்திரம்

நாம் தினசரி சங்கல்ப மந்திரம் சொல்கிறோம்.
அதில் வராகப் பெருமான் பற்றிய குறிப்பு வருகிறது.
‘‘துவிதீய பரார்த்தே ஸ்ரீ சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே” என்று
சங்கல்ப மந்திரம் கூறுகிறோம்.
இது கலியுகத்தின் முதல் பாதம் ஆகும்.மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள்.
தேவர்களுக்கு 365 நாள் ஒரு தேவ ஆண்டு. 1200 தேவ ஆண்டு கலியுகம்.

கலியுகம் ஒரு மகாயுகம்

ஆயிரம் மகாயுகம் ஒரு பிரம்மாவின் பகல். இப்பகலின் முடிவில் ஒரு பிரளயம் ஏற்படும்.
அப்பொழுது எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயமாகவே இருக்கும்.
இரவு முடிந்த பிறகு மறுபடியும் படைப்புத் தொழில் ஆரம்பிக்கும். இது ஒரு கால சுழற்சி.
இதை நாம் ஒரு கல்பம் என்று சொல்லுகின்றோம்.
ஒரு கல்பத்தில் 12 மனுக்கள் வாழ்ந்து போவார்கள்.
ஒரு மநுவின் காலம் ஒரு மன்வந்தரம் எனப்படும் இப்பொழுது 6 மனுக்கள் போய்விட்டனர்.

ஏழாவது மனுவில் கிருத யுகம் திரேதா யுகம் துவாபர யுகம் முடிந்து
கலியுகத்தின் முற்பகுதியில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.
இந்த கல்பம் உண்டாகும் பொழுது தான் பகவான் வராக ரூபம் எடுத்து தண்ணீரில் இருந்து
பூமிப் பிராட்டியை மேலே கொண்டுவந்து நிலை நிறுத்தினார்.
அதனால் நாம் வாழும் கல்பம் ஸ்ரீ ஸ்வேத வராக கல்பம் எனப்படுகிறது.
இதை தினசரி சொல்லி நம்மை அறியாமலே வராகப் பெருமானை வணங்கும் பேறு நமக்குக் கிடைக்கிறது.

————-

வராஹ அவதாரம்:
தியான ஸ்லோகம்

அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந் முக்தாபம் கண்ட
தேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம் ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள்
கட்ககேடே கதாக்யாம் ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.

மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே வராஹ ரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா

————

ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
ஸ்திதே மனஸி ஸூ ஸ் வதே சரீரே சதி யோ நர |
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம் ||

ததஸ்தம் ம்ரியாம்நாம் து காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்|
அஹம் ஸ்மராமி மத்பக்தம் ந்யாயாமி பரமாம் கதிம்||

ஸ்ரீ இராமாயண சரம ஸ்லோகம்
ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே|
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம யுத்த || 18.33

ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் (பகவத் கீதை)
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ|
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச ||18.66
—-

காஷ்ட பாஷாணங்கள் விழுந்து கிடக்கும் போது என்ன செய்வது? –
காஷ்ட என்றால் கட்டை போலும், பாஷாணம் என்றால் கல் போலும்,
நினைவு தப்பி விழுந்து கிடக்கும் நிலையில் பெருமாளை நினைக்க முடியாதே என்ன செய்வதே?

பதில்:
வராஹ சரம ஸ்லோகத்தில் இதற்கான பதில் சொல்லப்பட்டுள்ளது –
“ததஸ்தம் ம்ரியாம்நாம் து காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்|
அஹம் ஸ்மராமி மத்வக்தம் ந்யாயாமி பரமாம் கதிம்||”

வராஹ பெருமாள் பூமா தேவிக்கு தானே கூறும் விளக்கம்:
என்னை பிறப்பு அற்றவனாக நன்கு உணர்ந்து, மனது நல்ல முறையிலும், உடலில் சக்தி இருக்கும்போது
1) எவன் என்னுடைய திருநாமத்தை உரக்க தினமும் சொல்லுகிறானோ
2) எவன் என்மேல் விஸ்வாசம் கொண்டு என் திருவடியிலே புஷ்பங்களை இட்டு அர்ச்சனை பண்ணுகிறானோ
3) அவனது முயற்ச்சியை விட்டு என்னை மட்டுமே உபாயம் என பற்றி
என்னுடைய திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ (சரணாகதி) அவனுக்கு:
அந்திம காலத்தில் அவன் கட்டை மாதிரி கிடக்கும் போது (காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்!),
எல்லாரும் கை விட்ட நிலையில்! பெருமாள் சொல்லறார், நான் கைவிடமாட்டேன்! (அஹம் ஸ்மராமி மத்பக்தம் )

அந்த காலத்தில் என் நாமத்தை சொல்ல வில்லை என்றால் நான் அவனை கை விடுவேனா?
சரணாகதி பண்ணிய நாளிலிருந்து நினைவு தப்பும் வரை என்னை நினைத்து இருந்தான், அவனை விட்டு விடுவேனா?

சரணாகதி செய்த அடியார்(மறந்தும் புறந்தொழா மாந்தர்)என்னுடைய பக்தன், என் பெயரை சொன்னவன்,
என்னுடைய திருவடியில் சரணாகதி பண்ணினவன், அவனை நான் ஒரு நாளும் கை விட மாட்டேன்..

நானே வருவேன், என்னுடன் அர்சிராத்ரி மார்கத்தில் வழித்துனையாக (வழித்துனை பெருமாள் – திருமோகூர்)
அழைத்துக்கொண்டு வைகுந்தம் சென்று (ந்யாயாமி பரமாம் கதிம்) நித்ய கைங்கரியத்தை கொடுத்து அருளுவேன்🙏

எம்பெருமானார் திருக்கச்சி நம்பிகள் மூலமாக வரதராஜ பெருமாளிடம் கேட்ட ஆறு வார்த்தைகளில் ஒன்று –
“அந்திம காலத்தில் பெருமாளை நினைத்தால்தான் வைகுந்தம் கிட்டுமா?
தேவாதி ராஜனும் இதற்கு சரணாகதி செய்து என் மேல் திட விஸ்வாசம் கொண்டிருக்கும்
அடியார்களை கடைசி காலத்தில் என்னை நினைக்காவிட்டாலும் வைகுந்தம் கொடுப்போம்!

இதிலிருந்து நாம் அறியும் விஷயம் என்னவென்றால்
கடைசி காலத்தில் அவர் நம்மை நினைக்க வேண்டும் (அஹம் ஸ்மராமி மத் பக்தம்) என்றால்-
சரணாகதி செய்த பின்னர் நாம் அவரை எப்பொழுதும் (நினைவு தப்பும் வரை) நினைத்து இருக்க வேண்டும்!
கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும்!

———–

த்விதீ யஸ்ய பரார்த்தஸ்ய வர்த்தமானச்ய வை த்விஜ
வராஹ இதி கல்போ அயம் பிரதம பரிகீர்த்தித –1-3-28-

ப்ரஹ்மா நாராயணாக்யோ அசௌ கல்பாதௌ பகவான் யதா
ஸ ஸர்ஜ சர்வ பூதானி ததா சஷ்வ மஹா முநே –1-4-1–என்று
மைத்ரேயர் வராஹ கல்ப படைப்பைப் பற்றியும் கேட்கிறார்-

பவதோ யத் பரம் தத்தவம் தன்ன ஜா நாதி கச்சன
அவதாரேஷூ யத்ரூபம் ததர்சந்தி திவௌ கச –1-4-17-

உனது நிஜமான ஸ்வரூபத்தை யார் தான் அறிவார் -நீ லீலையாக செய்து அருளின அவதாரங்களை அன்றோ
தேவர்கள் ஆராதிக்கின்றனர் -என்றபடி

யத் கின்ஜன் மநஸா க்ராஹ்யம் யத் க்ராஹ்யம் சஷூராதிபி
புத்த்யா ஸ யத் பரிச்சேத்யம் தத் ரூபம் அகிலம் தவ –1-4-19–என்று

மனத்தாலே கிரஹிக்கப் படும் சுகாதிகளும் –கண் முதலிய இந்த்ரியன்களால் கிரஹிக்கப் படும் ரூபம் போன்றவைகளும்
-புத்தியினால் ஆலோசிக்கப் படும் பிரமாணாந்தரங்களும் உன்னுடைய ஸ்வரூபம் அன்றோ

ஸ்ரீ பூமிப் பிராட்டி ஸ்துதிக்கின்றாள்-ஹே சம்பூர்ண ஞான மயனே –ஹே ஸ்தூல மாயனே -ஹே அவ்யயனே –
ஹே அநந்த-ஹே அவ்யக்த -ஹே வ்யக்தமய பிரபோ –
ஹே பராபர ஸ்வரூப -ஹே விச்வாத்மன் -ஹே யஜ்ஞ பதே-ஹே அநக -ஹே பிரபோ – -இத்யாதி

———————

ஸ்ரீ தைத்திரயம் –
அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே -இத்யாதி பஞ்ச பிரகார பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சா ரூபம்

ஸ்ரீ வராஹ புராணம் -சாத்விக புராணங்களில் ஓன்று -24000 ஸ்லோகங்கள் கொண்டது
கைசிக மஹாத்ம்யம் இதில் உள்ளது
48 அத்யாயம் -92- ஸ்லோகங்கள் இதில் உண்டே

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்

மஹர்ஷி கபிலாசார்யா க்ருதஜ்ஞோ மேதிநீ பதி
த்ரிபதஸ் த்ரிதசாத்யஷோ மகாஸ்ருங்க க்ருதாந்தக்ருத் –57-

மஹா வராஹோ கோவிந்தஸ் ஸூ ஷேண கனகாங்கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர –58–

538-த்ரிபத-
ஸ்ரீ வராஹாவதாரத்தில் மூன்று ககுத் திமில் முசுப்பு களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

539-த்ரிதச அத்யக்ஷாய
த்ரி தச -முப்பத்து மூவர் தேவர்களுக்கும் சேவியர் இவரே
பிரளய ஆபத்தில் பிரம்மா முதலியவர்களை உட்பட ஸ்ரீ பூமி தேவியை – ஸ்ரீ வராகமாய் திருவவதரித்து காத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

540- மஹா ஸ்ருங்காய
பூ மண்டலம் அனைத்தும் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு இருக்கும்படி பெரிய கோரைப் பல்லை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

541–க்ருதாந்தக்ருத
ஹிரண்யாக்ஷனை நிரசித்தவர்
யமனைப் போன்ற ஹிரண்யாஷனை அழித்தவர்-ஸ்ரீ வராஹ ஸ்ம்ருதி புராணங்களில் தம்முடைய-
சரண் அடைந்தவர்களை ரஷித்தே தீருவேன் -சித்தாந்தத்தை காட்டியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

542-மஹா வராஹாய
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26-ஸ்லோகம் சொல்லுமே
மிகப் பெரிய ஸ்ரீ வராக ரூபம் எடுத்தவர் -புண்டரீகாஷனாயும் கரு நெய்தல் இதழ் போன்றவருமான ஸ்ரீ மஹா வராஹமானவர்
கோரப் பல்லினால் பூமியை ஏந்திக் கொண்டு பெரிய கருமலை போலே
பாதாளத்தில் இருந்து புறப்பட்டார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –ஸ்ரீ பராசர பட்டர் –

—————–

ஸ்ரீ வராஹ திரு அவதார பரமான அருளிச் செயல்கள் –

ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 -10-9 –

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-3-7-

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை–3-5-5-

எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –

கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –

எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே –5-2-3-

—————————-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே––நாச்சியார் –11-8-

————————

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே-பெருமாள் திருமொழி -2-3-

———–

படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்தது முன் கடைந்த பெற்றியோய் –திருச்சந்த விருத்தம்–28-

——————————

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -திருச்சந்த விருத்தம்-114-

—————————-

வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் -ஸ்ரீ பெரிய திருமொழி–1-1-4-

ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க —
என் தலைவன் –வதரியாசசிராமத்துள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி–1-4-1-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக் கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள – (வரம் கொள்ள -)
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவாய் நினைவார் என் நாயகரே –2-6-3-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செலும் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின்னாகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவலையம் கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்து இருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-1-

இவள் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-2-

என் தன் ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-3

ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-4-

ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-5-

என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-6-

இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-7-

இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-8-

வன முலையாளுக்கு என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-9-

இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை –பாடல் வல்லார் பழ வினை பற்று அறுப்பாரே -2-7-10-

இரும் தண் மா நிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –திரு வயிந்திர புரமே-3-1-1-

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-

வையணைந்த நுதிக் கொட்டு வராகம் ஒன்றாய் மண்ணெல்லாம் இடந்து எடுத்து —
தாள் அணைகிற்பீர் காழிச் சீராம வின்னகரே சேர்மினீரே -3-4-3-

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர் —
நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே — –4-4-8-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை—நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-

மண்ணிடந்து ஏனமாகி –நாங்கை மேய கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -–4-6-2-

வாராகமதாகி இம்மண்ணை இடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8–

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை —
தவமுடையார்கள் ஆள்வர் இக்குரை கடலுலகே –4-10-10-

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–
திரு வெள்ளறை நின்றானே —5-3-5–

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் –
வானும் மண்ணும் நிறையைப் புகுந்து ஈண்டி வணங்கும் நல் தேனும் பாலும் கலந்தந் தன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் தானாய பெருமானைத் தன்னடியார் மனத்து என்றும்
தேனாகியமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால் ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-3-

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

நரனே நாரணனே திரு நறையூர் நம்பி எம்பெருமான் உம்பராளும்
அரனே ஆதி வராகம் முனனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-4-

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திருவுருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய எம்மீசன் காண்மின் -7-8-4-

பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் -7-8-10-

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர் –குறுங்குடியே –9-6-3-

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-

——————————————-

கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!—ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -4-

——–

பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்–20–

—————

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரமெய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

ஆனான் ஆன் ஆயன், மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில், தானாய சங்கே–1-8-8-

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என்னருகில் இலானே –1-9-2-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோளாரத் தழுவும் பாரென்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே -2-8-7-

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–4-2-6-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்–4-5-10-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்–4-10-3-

மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-

கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –5-6-1-

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னை யாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேன மாம் பொழில் தண் சிரீவர மங்கலத் தவர் கை தொழ வுறை
வானமா மலையே அடியேன் தொழ வந்தருளே –5-7-6-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே–7-4-3-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-

ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்கு றைந்தது கடைந் தடைத் துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–8-4-3-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

தானே உலகெல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே––10-5-3-

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என்னன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ -10-10-7-

——–

இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் –ஸ்ரீ முதல் திருவந்தாதி-2-

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மா வடிவில் நீ யளந்த மண் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-9-

என்னுள்ளம் ஓவாது எப்போதும் —கேழலாய் பூமி இடந்தானை ஏத்தி எழும் –ஸ்ரீ முதல் திருவந்தாதி-25-

இடந்தது பூமி –பேரோத வண்ணர் பெரிது –ஸ்ரீ முதல் திருவந்தாதி-39-

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் -உராய் உலகளந்த ஞான்று -வராகத்
தெயிற்றளவு போதாவாறு என் கொலோ எந்தை அடிக்களவு போந்தபடி -ஸ்ரீ முதல் திருவந்தாதி-84

ஊனக் குரம்பையின் உள் புக்கிருள் நீக்கி ஞானச் சுடர் கொளீஇ நாள் தோறும் ஏனத்துருவாய்
உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-91-

———————————————————————————–

நீ யன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே நீ யன்று உலகிடந்தாய் என்பரால்
நீ யன்று காரோதம் முன் கடைந்து பின்னடைத்தாய் மா கடலை பேரோத மேனிப்பிரான் -இரண்டாம் திருவந்தாதி–30-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும் குரா நற் செழும் போது கொண்டு வராகத்
தணி யுவன் பாதம் பணியுமவர் கண்டீர் மணியுருவம் காண்பார் மகிழ்ந்து –இரண்டாம் திருவந்தாதி-31-

மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்நெஞ்சே இரு –இரண்டாம் திருவந்தாதி–36

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து -இரண்டாம் திருவந்தாதி-47

——————————————————————–

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——மூன்றாம் திருவந்தாதி–45-

கேழலாய் மீளாது மண்ணகலம் கீண்டு அங்கோர்
மாதுகந்த மார்வதற்கு பெண்ணகலம் காதல் பெரிது –மூன்றாம் திருவந்தாதி-54

——————————————

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்—நான்முகன் திருவந்தாதி -70-

வகையால் மதியாது மண் கொண்டாய்

—————————-

நீலத் தடவரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போலே
பொலிந்த எமக்கு எல்லா விடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப்பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலங்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -திரு விருத்தம் -39-

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம்மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும்கேழ்பவருளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -திரு விருத்தம் -45-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத் துருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –99-

—————————————-

படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் –ஸ்ரீ திருவாசிரியம்–6-

—————————————————

யாமே யாருவினையோம் செயோம் எண் நெஞ்சினார்
தானே அனுக்கராய்ச் சார்ந்து ஒளிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு -பெரிய திருவந்தாதி -7-

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடமுன் படைத்தான் என்பரால் -பாரிட
மாவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகாவாலவை -42-

—————————————–

ஏழ உலகு எயிற்றினில் கொண்டனை –திருவெழு கூற்றிருக்கை

——————————-

மன்னிவ் வகலிடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை -பெரிய திருமடல்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூமா தேவிப்பிராட்டி ஸமேத ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading