ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –41-60-

கருத்து ஆதரிக்கும் அடியேனைத் தள்ளக் கருதிக் கொலோ
திருத்தாது அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை செண்பகத்தின்
மருத்தாது அரிக்கும் அருவி அறா வட வேங்கடத்துள்
ஒருத்தா தரிக்கும் படி எங்கனே இனி உன்னை விட்டே –41-

(இ – ள்.) செண்பகத்தின் – சண்பகமலர்களினுடைய,
மரு – வாசனை யுள்ள,
தாது – மகரந்தப்பொடிகளை,
அரிக்கும் – அரித்துக்கொண்டுவருகிற,
அருவி – நீரருவிகள்,
அறா – எந்நாளும்இடைவிடாது பெருகப்பெற்ற,
வட வேங்கடத்துள் – வடக்கின்க ணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளி யிருக்கின்ற,
ஒருத்தா – ஒப்பற்றகடவுளே! –
கருத்து ஆதரிக்கும் – மனத்தில் (உன்னையே) விரும்புகின்ற,
அடியேனை – தாசனான என்னை,
தள்ள – (உன் பக்கல் சேர்த்துக்கொள்ளாது) தள்ளிவிட,
கருதிக்கொல்ஓ – எண்ணியோ,
திருத்தாது – (ஆட்கொண்டு) சீர்திருத்தாமல்,
அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை – கெடுக்கின்ற பஞ்சேந்திரியங்களுக்கு (என்னை) உணவாக்கிவிட்டாய்;
இனி உன்னை விட்டு தரிக்கும்படி எங்ஙனே – இனி (நான்) உன்னையின்றி உய்யும்வகை எவ்வாறோ? (எ – று.)

இங்ஙனம் தனது அநந்யகதித்வத்தை (அதாவது – திருவேங்கடமுடை யானையன்றி வேறொருரக்ஷகனை யின்றிருப்பதை) வெளியிட்டார்.
“செண்பகத்தின்மருத்தா தரிக்குமருவியறா” என்றது, மலைவளத்தை யுணர்த்தும். கருதிக்கொலோ, கொல் – அசை.
இரையாக்கினை – இலக்காக்கினை யென்ற படி. சம்பகமென்றவடசொல்லின்விகாரமான சண்பக மென்பது,
மோனைத் தொடையின்பொருட்டு, செண்பகம் என்று விகாரப்பட்டது. இந்த மரத்தின்பெயர் – இங்குப் பூவுக்கு முதலாகுபெயர். ஒருத்தன் – ஏகமூர்த்தி.

————-

உன்னைக் கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம்
பொன்னைக் கரி ஒத்த போதும் ஒவ்வார் புகழ்க் கோசலை ஆம்
அன்னைக்கு அரிய முத்தே அப்பனே உன்னை அன்றி பின்னை
முன்னைக் கரி அளித்தாய்க்கு உவமான மொழி இல்லையே –42-

(இ – ள்.) புகழ் – கீர்த்தியையுடைய,
கோசலை ஆம் – கௌசல்யையாகிய,
அன்னைக்கு – தாய்க்கு,
அரிய முத்தே – அருமையான முத்துப்போன்ற குமாரனே!
அப்பனே – திருவேங்கடமுடையானே! –
கரி பொன்னை ஒத்த போதும் – கரியானது பொன்னை யொத்தபோதிலும்,
கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம் உன்னை ஒவ்வார் – நீலகண்டனான சிவன் பிரமன்
முதலிய தேவர்களனைவரும் உன்னை யொக்கமாட்டார்கள்; (ஆதலால்), –
முன்னை கரி அளித்தாய்க்கு – முன்பு கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனான உனக்கு,
உன்னை அன்றி பின்னை உவமானம் மொழி இல்லை – உன்னையே உபமானமாகக் கூறுவதன்றி
வேறோர்உபமானங் கூறும்வகை இல்லை; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

“தன்னொப்பா ரில்லப்பன்”,
“ஒத்தாரை மிக்காரை யிலையாய மாமாயா”,
“ஈடுமெடுப்புமிலீசன்” என்ற திருவாய்மொழியையும்,
“தனக்குவமை யில்லாதான்” என்ற திருக்குறளையுங் காண்க.
கரியமிடற்றன் – நஞ்சுண்ட தனாற் கறுத்த கழுத்தையுடையவன். உம்பர்என்ற மேலிடத்தின்பெயர் – அங்குள்ள தேவர்க்கு இடவாகுபெயராம்;
இதில், உகரச்சுட்டு – மேலிடத்தைக் குறித்தது: இதன் எதிர்மொழி – இம்பர் (இவ்விடம்), அம்பர் என்பன.
புகழ் – “என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப் பெற்ற வயிறுடை யாள்,”
“செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடையள்” என்றபடி நற்குணநற்செய்கைகளிற் சிறந்த புருஷோத்தமனான
இராமபிரானைப் பெற்ற தனா லாகிய கீர்த்தி. கோசலை – கௌஸல்யா என்ற வடசொல்லின் விகாரம்;
கோசலதேசத்தரசனது மக ளென்பது பொருள்: தத்திதாந்தநாமம். கோசலம் – உத்தரகோசலம் தக்ஷிணகோசலம் என இரண்டு பிரிவுள்ளது;
அவற்றில் தக்ஷிணகோசலத்தரசன் மகள் இவள்: (தசரதன், உத்தரகோசலத்து அரசாண்டவன்.)
முத்துப்போ லருமையான மகனை “முத்து” என்றது, உவமையாகுபெயர். உபசாரவழக்கு;
தெளிவுக்கும் நீர்மைக்கும் குளிர்ச்சிக்கும் முத்து உவமைகூறப்படும்:
மேலும் (92-ஆங் கவியில்) “பாவையிரங்கு மசோதைக்கு முத்து” என்பர். “பின்” என்ற இடைச்சொல் – வேறு என்ற பொருளில் வந்தது.
முன் – காலமுன். இவற்றில், ஐ – சாரியை. பின்னை முன்னை என்ற மாறுபட்ட சொற்கள் தொடர்ந்து வந்தது, தொடைமுரணின்பாற்படும்.

————–

இல்லைக் கண்டீர் இன்பம் துன்பம் கண்டீர் கண்ட ஏந்திழையார்
சொல்லை கண்டு ஈர் அமுது என்னும் தொண்டீர் தொல் அசுரன் நிறம்
கல் ஐக் கண்டீரவத்தை திரு வேங்கடவக் காவலனை
மல்லைக் கண் தீர் தரத் தேய்த்தானை வாழ்த்துமின் வாழுகைக்கே –43-

(இ – ள்.) கண்ட – கண்ணுக்கு இலக்காகிய,
ஏந்து இழையார் – தரித்த ஆபரணங்களையுடைய மகளிரது,
சொல்லை – சொற்களை,
கண்டு ஈர் அமுது என்னும் – (இனிமையினாற்) கற்கண்டு என்றும் குளிர்ந்த அமிருதம் என்றும் சொல்லுகிற,
தொண்டீர் – (அவர்கட்குத்) தொண்டுபூண்டொழுகுபவர்களே! –
இன்பம் இல்லை கண்டீர் – (அவ்வாறுஒழுகுதலில் உண்மையான) இன்பம்இல்லை யென்று அறிவீர்கள்;
துன்பம் கண்டீர் – பலவகைத்துன்பமே உண் டென்றும் அறிவீர்கள்;
வாழுகைக்கு – (இனி நீங்கள்) பேரின்பவாழ்வு பெறுகைக்காக, –
தொல் – பழமையான,
அசுரன் – இரணியாசுரனுடைய,
நிறம் – மார்பை,
கல் – கீண்ட,
ஐ கண்டீரவத்தை – அழகிய சிங்கமூர்த்தியா னவனும்,
மல்லை – மல்லர்களை,
கண் தீர்தர தேய்த்தானை – கண்கெடும்படி சிதைத்தவனுமான,
திருவேங்கடம் காவலனை – திருவேங்கடமுடையானை, வாழ்த்துமின் – பல்லாண்டுபாடித் துதியுங்கள்; (எ – று.)

முதலடியில் இரண்டிடத்து உள்ள “கண்டீர்” என்ற சொல் – தேற்றமு முணர்த்திற்று. கண்ட – பார்த்த.
ஏந்து இழையார் – செய்கையழகினால் மேனிமினுக்குபவர் என்றபடி.
“தொல்லசுரன்” என்றது, நெடுங்காலமாக அழிக்கப்படாது கொழுத்துச் செருக்கித்திரிந்த தேவசத்துரு என்றவாறு.
கல் ஐக்கண்டீரவம் – வினைத்தொகை; கல்லுதல் – இடத்தல். கண்டீரவம் என்ற வடசொல் – மிடற்றில்தொனியுடைய தென்று பொருள்படும்;
கண்டம் – கழுத்து, ரவம் – ஓசை. திருவேங்கடக்காவலன் – திருவேங்கடமலைக்குத் தலைவன்,
காவலன் – அரசன்; இது, கா வலன் என்று பிரிந்து காத்த லில்வல்லவ னென்றும்,
காவல் அன் என்று பிரிந்து காத்தற்றொழிலையுடை யவ னென்றும், பொருள்படும்.
மல் – மற்போர்; ஆயுதங்கொண்டன்றித் தேகபலங்கொண்டு செய்யும் போர்: அதனையுடையவர்க்கு ஆகுபெயர்.
கண் தீர்தர என்பதற்கு – கண்ணோட்டமில்லாம லென்று பொருள்கொள் ளினுமாம்.
இனி, கை கால் தலை என்பனபோல, கண்என்பதை உபசர்க்க மென்றலும் ஒன்று.

————-

கைத்தனு மோடுஇசை வெற்பு எனக் காண வெவ்வாணன் என்னும்
மத்தன் நுமோடு இகல் செய்வன் என்றே வந்துவை உறு வேல்
அத்தனும் மோடியும் அங்கியும் ஓட என் அப்பனுக்குப்
பித்தனும் ஓடினன் அங்கத்துத் தான் என்றும் பெண்ணன் என்றே –44-

(இ – ள்.) கை தனு – கையிலேந்திய வில்லானது,
மோடு இசை வெற்பு என காண – உயர்ச்சி பொருந்திய மலைபோலத் தோன்ற,
வெவ் வா ணன் என்னும் மத்தன் – கொடிய பாணாசுரனென்கின்ற உன்மத்தன்,
உமோடு இகல் செய்வன் என்றே வந்து – “உம்முடனே போர்செய்வேன்” என்று வீரவாதங்கூறிக்கொண்டே (கண்ணபிரானுடன் போர்க்கு) வந்த போது, –
என் அப்பனுக்கு – எம்பிரானாகிய அத்திருவேங்கடமுடையானுக்கு முன்,
வை உறு வேல் அத்தனும் – கூர்மைமிக்க வேலாயுதத்தை யேந்திய கையையுடையவனான முருகக்கடவுளும்,
மோடியும் – துர்க்கையும்,
அங்கியும் – அக்கினியும்,
ஓட – தோற்றுஓட,
பித்தனும் – பித்தனாகிய சிவனும்,
அங்கத்து தான் என்றும் பெண்ணன் என்று ஓடினன் – உடம்பில் தான் எப்பொழுதும் பெண்ணையுடையவ னென்றுசொல்லிக்கொண்டு ஓடி னான்; (எ – று.)

“மோடி யோட வங்கி வெப்பு மங்கியோட வைங்கரன், முடுகியோட முருகனோட முக்கணீசன் மக்களைத்,
தேடியோட வாணனாயிரம்புயங்கள் குருதிநீர், சிந்தியோட நேமி தொட்ட திருவரங்கராசரே” என்றார் திருவ ரங்கக்கலம்பகத்திலும்.

“பெண்ணென்றாற் பேயு மிரங்கும்” ஆதலின், எதிர்த்துப் பொருகின்ற கண்ணபிரான் தன்னையழியாமல் உயிரோடு விட்டிடுமாறு
அப்பெருமானுக்கு இரக்கமுண்டாதற்பொருட்டுச் சிவபிரான் “அங்கத்துத் தான் பெண்ணன்” என்று சொல்லிக் கொண்டு ஓடின னென்க.
“அங்கத்துத் தான் என்றும் பெண்ணன்” என்ற தொடரில் – உடம்பில் (ஒருபாதி) தான் எப்போதும் பெண்வடிவையுடையவனான
நபும்ஸக னென்ற பொருளும் தொனிக்கும்: ஒருசார் ஆணுறுப்பும் ஒருசார் பெண்ணுறுப்பும் விரவி ஒருவகையாயினும்
நிரம்பாமல் நிற்றல் பேட்டின்இலக்கணமாதல் காண்க; தான் ஆண்மை நிரம்பாதவ னென்று தெரிவித்துக்கொண்டு ஓடினனென்பது போதரும்.
முருகன் வேற்படையிற் சிறந்தவனாய் வேலனென்று ஒருபெயர் பெறுதலால், “வையுறுவேல் அத்தன்” எனப்பட்டான்;
இவன், சிவபிரானது இளையகுமாரன்: (மூத்தவன் – விநாயகன்.) துர்க்கை – பார்வதியின் அம்சமானவள்.
“உம்மோடு” என்ற முன்னிலைப்பன்மை, கண்ணபிரானுடன் சென்ற பலராமன் பிரத்யும்நன் முதலாயினாரை உளப்படுத்தியது.

மத்தன் – கொழுத்தவன்: புலன்வேறுபட்டவன்; வடசொல். வந்து = வர: எச்சத்திரிபு;
“சொல்திரியினும் பொருள்திரியா வினைக்குறை” என்பது நன்னூல்.
அத்தம் – கை; ஹஸ்த மென்ற வடசொல்லின் விகாரம்; அதனை யுடையவன்,
அத்தன், பித்தன் – மதிமயங்கியவன்; செய்வன தவிர்வன அறியாதவன்; தமோகுணதேவதை. உம் – இறந்ததுதழுவியது.

————–

பெண் ஆக்கு விக்கச் சிலை மேல் ஒருதுகள் பெய்த பொற்றாள்
அண்ணாக்கு விக்கல் எழும் போது எனக்கு அருள்வாய் பழிப்பு
நண்ணாக் குவிக்கச்சு இள முலைப் பூ மகள் நாயகனே
எண் ஆக குவிக்கக் குழல் ஊதும் வேங்கடத்து என் கண்ணனே –45-

(இ – ள்.) பழிப்பு நண்ணா – யாதொருநிந்தனையும் அடையாத,
குவிகச்சு இள முலை பூ மகள் – குவிதலையுடையனவும் கச்சணிந்தனவும் என்றும் இளமை மாறாதனவுமான
தனங்களையுடையவளும் செந்தாமரைமலரில் வாழ்பவளுமாகிய திருமகளுக்கு,
நாயகனே – கணவனே!
எண் ஆ குவிக்க – பேரெண்ணையுடைய (மிகப்பலவான) பசுக்களை ஒருங்குசேர்த்தற்பொருட்டு,
குழல் ஊதும் – புள்ளாங்குழலை ஊதியருளிய,
வேங்கடத்து என் கண்ணனே – திருவேங்கடமலையில்எழுந்தருளியிருக்கிற எனதுகண்ணபிரானே! –
பெண் ஆக்குவிக்க சிலை மேல் ஒரு துகள் பெய்த பொன் தாள் – (ஒருகல்லை அகல்யையென்னும்) பெண்ணாகச் செய்விக்குமாறு
அக்கல்லின்மேல் ஒருதூளியை யிட்ட (நினது) அழகிய திருவடிகளை,
அண்ணாக்கு விக்கல் எழும்போது எனக்கு அருள்வாய் – உள்நாக்கிலிருந்து விக்குள் உண்டாகும் போது (அந்திமகாலத்தில்) அடியேனுக்குத் தந்தருள்வாய்; (எ – று.)

“திருவடியே வீடாயிருக்கும்” என்ற கோட்பாடுபற்றி, “தாள் எனக்கு அருள்வாய்” என்றன ரென்க.
நினதுதிருவடியை என்மீது வைத்தருள்வா யென்றும், என்னை நினதுதிருவடியிற் சேர்த்தருள்வா யென்றுங் கொள்ளலாம். முதலடியினால்,
மிகவலிய கல்லையும் மிகமெல்லிய பெண்ணாக்கவல்ல தெனத் திருவடியின் சிறப்பை விளக்கினார்.

பலவிடங்களிற் பரவிமேய்கின்ற பசுக்கூட்டங்களை ஒருங்குசேர்த்தற் பொருட்டும் அவற்றை மகிழ்வித்தற்பொருட்டும்
கண்ணன் வேய்ங்குழலூதி னமை, பிரசித்தம்.
“பூவிற்குத் தாமரையே” என்றபடி எல்லாமலர்களிலும் தாமரை சிறத்தலால், அது வாளா “பூ” எனப்பட்டது;
“பூவெனப்படுவது பொறிவாழ்பூவே” என்றார் பிறகும்: (பொறி – இலக்குமி.) இரட்டுறமொழித லென்னும் உத்தியால்,
பூமகள் என்பதற்கு – பூமிதேவியென்றும் பொருள் கொள்ளலாம்; (“வாயுமனைவியர் பூமங்கையர்” என்பர் நூற்றெட்டுத்திருப் பதியந்தாதியிலும்:)
இப்பொருளில், பூ – வடசொல். குவி – முதனிலைத்தொ ழிற்பெயர்; இரண்டாம்வேற்றுமையுருபும்பயனுந்தொக்கதொகை;
குவிகிற என்று பொருளுரைத்து, வினைத்தொகை யென்ன லாகாது;
வினைத்தொகையில் “குவிக்கச்சு” என வருமொழிமுதல்வலி மிகா தாதலின். கச்சு – கஞ்சுக மென்ற வடசொல்லின் சிதைவு.
எண் – தொகை; இங்குப் பெருந்தொகை. இனி, எண் – நன்குமதிக்கத்தக்க, ஆ – பசுக்க ளெனினுமாம்.

—————

கண் நனையேன் நெஞ்சு உருகேன் நவைகொண்டு என் கண்ணும் நெஞ்சும்
புண் அணையேன் கல் அணையேன் என்றாலும் பொற் பூங்கமலத்
தண் அனையே நல்ல சார்வாக வேங்கடம் சார்ந்து மணி
வண்ணனையே அடைந்தேற்கு இல்லையோ தொல்லை வைகுந்தமே –46-

(இ – ள்.) கண் நனையேன் – (பக்திமிகுதியாலாகிற ஆநந்தக் கண்ணீரினாற்) கண்கள் நனையப்பெறுகிறேனில்லை;
நெஞ்சு உருகேன் – மனமுருகப் பெறுகிறேனில்லை;
அவை கொண்டு – அக்கண் நனையாமையையும் நெஞ்சுருகாமையையுங் கொண்டு,
என் கண்ணும் நெஞ்சும் புண் அனையேன் கல் அனையேன் – எனது கண்ணும் மனமும் (முறையே) புண்களுக்கு
ஒப்பானவ னாயினேன் கல்லுக்கு ஒப்பானவனாயினேன்;
என்றாலும் – இங்ஙனம் ஆனாலும். –
பொன் பூ கமலம் தண் அனையே நல்ல சார்வு ஆக – அழகிய செந் தாமரைப்பூவில்வீற்றிருக்கின்ற தண்ணளியையுடைய
தாயான பெரியபிராட் டியாரையே நல்லதுணையாகக் கொண்டு,
வேங்கடம் சார்ந்து மணி வண்ணனையே அடைந்தேற்கு – திருவேங்கடமலையை யடைந்து (அங்குஎழுந்தருளியிருக்கிற)
நீலமணிபோலுந் திருநிறமுடையவனான எம்பெருமானையே சரண்புக்கவனாகிய எனக்கு,
தொல்லை வைகுந்தம் இல்லையோ – அநாதியான பரமபதம் கிடையாமற்போகுமோ? (போகாது: நிச்சயமாய்க் கிடைக்கும் என்றபடி); (எ – று.)

பக்திவசப்படுதலாலாகும்மெய்ப்பாடுகளிற் குறைவுற்றிருந்தாலும், பிரா ட்டிபுருஷகாரமாகப் பெருமாள்பக்கல் சரண்புக்கது
பழுதுபடாது பரகதிபெறுவிக்கு மென்பதாம்.
கண்ணும் நெஞ்சும் புண்ணனையேன் கல்லனை யேன்” என்ற தொடர் – கண் புண் அனையேன், நெஞ்சு கல்அனையேன்
என முறையே சென்றுஇயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
பகவத் விஷயத்தில் ஈடுபட்டு ஆநந்தபாஷ்பம்பெறாதஊனக்கண்களின் இழிவுதோ ன்ற அவற்றை “புண்” என்றும்,
அவ்விஷயத்தில் இளகாத மனத்தை “கல்” என்றுங் கூறினார். நவைகொண்டு என்று பதம்பிரித்து,
(கண்நனையாமையும் நெஞ்சு உருகாமையுமாகிய) குற்றங்களைக் கொண்டு என்றலு மொன்று.
மூன்றாமடியில், அனை – அன்னையென்பதன் தொகுத்தல். நல்ல சார்வு – பரகதிக்கு உற்றதுணை.

—————

வைகுந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி என்னை
வைக்கும் தம் ஆய வினை நீக்கிய முத்தர் மாட்டு இருத்தி
வை குந்தம் மாய ஒசித்தாய் வட திரு வேங்கடவா
வைகுண்ட மாயவனே மாசு இலாத என் மா மணியே –47-

(இ – ள்.) குந்தம் மாய ஒசித்தாய் – குருந்தமாம் அழியும்படி முறித்திட்டவனே!
வட திருவேங்கடவா – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனே!
வைகுந்தம் மாயவனே – ஸ்ரீவைகுண்டத்துக்குத் தலைவனான திருமாலே!
மாசு இலாத – குற்றமில்லாத,
என் மா மணியே – எனது தலைவனான சிறந்த மாணிக்கம்போன்றவனே! –
வை குந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி – கூரிய வேற்படை போன்ற கண்களையுடைய மகளிர்
பக்கல் (உண்டாகிற) ஆசையை (எனக்கு) ஒழித்து,
என்னை -, வைகும் தம் ஆயம் வினை நீக்கிய முத்தர்மாட்டு இருத்திவை – தங்கிய தமது தொகுதியான
கருமத்தைப் போக்கிய முக்தர்களில் ஒருவனாக இருக்கச்செய்துவைத்தருள்வாய்; (எ – று.)

குந்தம் – வடசொல், ஆய – உவமஉருபு; இத்தெரிநிலைப்பெயரெச்சத்தில் ய் – இறந்தகாலஇடைநிலை.
முக்தர் – முத்திபெற்றவர்; வடசொல். மாணிக்கம் – ஒளிக்கும், பெறற்கருமைக்கும் உவமை.
என்மாமணியே – “என்தன்மாணிக்கமே” என்பது திருவிருத்தம்.

—————–

பிரிவாற்றாகத தலைவியின் துயர் கண்ட செவிலித்தாய் இரங்கல் –

மணி ஆழி வண்ணன் உகந்தாரைத் தன் வடிவு ஆக்கும் என்றே
துணி ஆழிய மறை சொல்லும் தொண்டீர் அது தோன்றக் கண்டோம்
பணி யாழின் மென்மொழி மாலாகி பள்ளி கொள்ளாமல் சங்கோடு
அணி ஆழி நீங்கி நின்றாள் வேங்கடேசனை ஆதரித்தே –48-

(இ – ள்.) தொண்டீர் – அன்பர்களே! –
“மணி ஆழி வண்ணன் – நீல மணியும் கடலும் போன்ற திருநிறமுடையவனான திருமால்,
உகந்தாரை – தன்னை விரும்பினவர்களை,
தன் வடிவு ஆக்கும் – தன்னைப் போன்ற வடிவமுடையவராகச் செய்துவிடுவான்,’ என்றே -.
துணி ஆழிய மறை சொல்லும் – (பொருள்களைத்) துணிந்துகூறுவதும் ஆழ்ந்தபொருளுள்ளது மான வேதம் சொல்லும்;
அது தோன்ற கண்டோம் – அத்தன்மை இங்குக் கட்புலனாகத் தெரியப் பார்த்தோம்; (எங்ஙனமெனின், –)
பணி யாழின் மெல் மொழி – நுனிவளைந்த வீணையின் இசைபோன்ற மென்மையான சொற்களை யுடைய இப்பெண், –
வேங்கடேசனை ஆதரித்து – திருவேங்கடமுடையானான அத்திருமாலை விரும்பி, (அவனைப்போலவே),
மால் ஆகி பள்ளி கொள்ளாமல் சங்கோடு அணி ஆழி நீங்கி நின்றாள் – ; (எ – று.)

திருமால் தன்னையுகந்தவரைத் தன்வடிவாக்குதலாவது –
தனது அன்பர்க்குத் தான் முத்திநிலையில்தந்தருள்கிற ஸாலோக்யம் ஸாமீப்யம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம் என்ற நான்கு நிலைமைகளில்
ஸாரூப்யநிலையினால் அவர்களைத் தன்வடிவுபோன்ற வடிவமுடையவராகச் செய்தல்.
(ஸாலோக்யம் – கடவுளின் உலகத்தில் வாழ்தல். ஸாமீப்யம் – கடவுளினருகில் வாழ்தல்.
ஸாரூப்யம் – கடவுளின் உருவம்போன்ற உருவத்தைப் பெறுதல்.
ஸாயுஜ்யம் – கடவுளோடு ஒன்றிவாழ்தல்.)

தலைமகளுக்கு – மாலாகுதல் – ஆசைமயக்கமுடையவளாதல்;
பள்ளிகொள்ளாமை – விரகவேதனையால் எப்பொழுதும்படுக்கை கொள்ளாமை;
சங்கோடு அணிஆழி நீங்கிநிற்றல் – (பிரிவுத்துயரால் உடல் மெலிந்தமைபற்றிக் கைகளிலணிந்த) சங்கவளைகளும்
விரலிலணிந்த மோதிரமும் கழன்றுவிழப்பெறுதல்.
திருவேங்கடமுடையானுக்கு – மாலாகுதல் – திருமாலென்னும்பெயருடையனாதல்;
பள்ளிகொள்ளாமல் நிற்றல் – சயனத்திருக்கோலமாகவன்றி நின்றதிருக்கோலமாய் எழுந்தருளியிருத்தல்;
சங்கோடு அணி ஆழி நீங்கியமை – தனதுசங்கசக்கரங்களைத் தொண்டைமான் சக்கரவர்த்திக்குக் கொடுத்துவிட்டதனாற்
சிலகாலம் திருக்கைகளில் திருவாழி திருச்சங்கு இன்றியிருந்தமை;

முன்னொருகாலத்தில் திருவேங்கடமுடையான் தன்மெய்த்தொண்டனான தொண்டைமான் சக்கரவர்த்திக்கு அரியபகைவர்களை
வெல்லுதற்பொருட்டுத் தனது சங்கசக்கரங்களைத் தந்தருளி அதற்கு அடையாளமாகப் பின்பு அவனது வேண்டுகோளால்
அவற்றை அங்கு விக்கிரகரூபத்தில் வெளிப்படையாகக்கைக் கொள்ளாதிருந்தன னென்பதும்;
ஸ்ரீபாஷ்யகாரர் சிஷ்யர்களுடன் திவ்வியதேசயாத்திரையிலே திருமலைக்கு எழுந்தருளினவளவில், அங்குச் சைவர்கள்
திருவேங்கடமுடையானைத் தங்கள்தெய்வமென்று வழக்குப்பேச, உடையவரும்,
‘சூலடமருகங்களையும் ஸ்ரீசங்கசக்கரங்களையும் எம்பெருமான் திருமுன்னர் வைப்பது; அவைகளில் அப்பெருமான்
எவற்றைத் தரித்தருள்கின்றனனோ, அதுகொண்டு அவனை இன்னகடவுளென்று நிச்சயித்துக்கொள்வது’ என்று அருளிச்செய்ய,
அந்த இராமாநுசன்வார்த்தைக்கு அனைவரும் சம்மதித்து அங்ஙனமே செய்ய, ஸ்ரீநிவாஸன் இளையாழ்வார் திருவுள்ளத்தின்படி
திருவாழிதிருச்சங்கு தரித்தபடியைக் கண்டு எல்லாரும் ஆனந்தித்துத் திருவேங்கடமுடையானைத் திருமாலென்றே நிச்சயித்தன ரென்பதும்,
இங்கு அறியத்தக்க கதைகள்.

திருமாலுக்கும் தலைமகளுக்கும் உவமைகாட்டுதற்குப் பொதுத்தன்மையாய் வந்த
“மாலாகிப் பள்ளிகொள்ளாமற் சங்கோடணியாழி நீங்கி நின்றாள்” என்ற தொடர்,
இங்ஙனம் இருபொருள்பட்டுச் சிலேடைக்கு உபகாரமாகநின்றதனால்,
இது, சிலேடைபற்றிவந்த உவமையணியின் பாற்படும்; செம்மொழிச்சிலேடை.

தொண்டீர்என்றது, தலைவியின் தோழியரை விளித்தது. மறைசொல்லும் அதுதோன்றக் கண்டோம் –
பிரதியக்ஷம் அநுமானம் உபமானம் ஆகமம் என்ற பிரமாணங்களில் ஆகமப்பிரமாணத்திற்கண்ட விஷயத்தைப் பிரதியக்ஷத்திற்கண்டோ மென்றபடி.
(பிரளயத்தில் உலகத்தை) அழிப்பதுஎன்பது பற்றியாவது, ஆழ்ந்துள்ளது என்பது பற்றியாவது ஆழியென்று கடலுக்குப் பெயர்வந்ததென்க.
துணிதல் – பொருள்களின்நிலைமையை ஐயந்திரிபற உள்ளபடி சித்தாந்தஞ்செய்து வெளியிடுதல். ஆழிய – இறந்தகாலப்பெயரெச்சம்;
இதில், “இன்” என்ற இடைநிலை ஈறுதொக்கது.
(சிலசாதியார்க்கும் பெண்பாலார்க்கும் ஓதுவிக்கவும் ஓதவும் கேட்கவும் ஆகாதென்று) மறுக்கப்படுதலாலும்,
(எளிதில் உணரலாகாதபடி) மறைந்த ஆழ்பொருளுடைமையாலும், மறையென்று வேதத்திற்குக் காரணக்குறி.
பணியாழின்மென்மொழி – அவ்வகைமொழியையுடைய பெண்ணுக்கு அடையடுத்த சினையாகுபெயர்;
இப்பெயரை அன்மொழித்தொகையென்றல் பொருந்தாது;
“ஐந்தொகைமொழிமேற் பிறதொக லன்மொழி” என்றல் இலக்கணமாதலும், யாழின்என்பது ஐந்தாம்வேற்றுமைவிரியாதலுங் காண்க.
யாழ் – அதன்இசைக்கு முதலாகு பெயர். பணி – யாழ்க்கு அடைமொழி. பணி – பணிவுள்ள என்று உரைத்து,
அதனை மொழிக்கு அடைமொழியாக்குதலு மொன்று. சங்கு – சங்கவளைக்குக் கருவியாகுபெயர். ஆழி – வட்டவடிவமுடையது.
வேங்கடேசன் – வேங்கட + ஈசன்; குணசந்திபெற்ற வடமொழித்தொடர்; “அஆமுன்இஈவரின் இரண்டுங் கெட ஓர் ஏகாரம் தோன்றும்:
” திருவேங்கடமலைக்குத் தலைவனென்பது பொருள். ஆதரித்து – ஆதரமென்ற பெயர்ச்சொல்லின் மேற்பிறந்த இறந்தகாலவினையெச்சம்.

எம்பெருமானை நிரந்தராநுபவம்பண்ணவேண்டு மென்று அபேக்ஷை கொண்டு அவ்வவா உடனே நிறைவேறப்பெறாமையால்
வருந்துகிற ஐயங்காரது நிலைமையை நோக்கிய ஞானிகள், அன்பர்களைநோக்கி, இவர்க்கு இத் தன்மைகள்
எம்பெருமான் அநுக்கிரகித்த ஸாரூப்யபதவியினால் நேர்ந்தன போலுமென்று உரைத்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
பணியாழின்மென்மொழி – விநயத்தோடுபேசும் செவிக்குஇனிய செஞ்சொற்களை யுடையவர்.
மாலாகுதல் – வியாமோகங்கொள்ளுதல். பள்ளிகொள்ளாமை – கவலையற்றிராமை.
சங்கோடணியாழி நீங்குதல் – பரதந்திரமாயிருத்தல் முதலிய ஆத்மாலங்காரமான குணங்கள் நிலைகுலையப்பெறுதல். விவரம் உணர்ந்து கொள்க.

————–

ஆதரிக்க பட்ட வாள் நுதல் மங்கையர் அங்கை மலர்
மீ தரிக்கப் பட்ட நின் அடியே வெள் அருவி செம்பொன்
போது அரிக்கப் பட்டம் சூழ் வேங்கட வெற்ப போர் அரக்கர்
தீது அரிக்க பட்ட கானகத்தூடு அன்று சென்றதுவே –49-

(இ – ள்.) வெள் அருவி – வெண்ணிறமான நீரருவிகள்,
செம் பொன் – சிவந்த பொன்னையும்,
போது – மலர்களையும்,
அரிக்க – அரித்துக்கொண்டுவர,
பட்டம் சூழ் – நீர்நிலைகள் சூழப்பெற்ற,
வேங்கட வெற்ப – திருவேங்கடமலையையுடையவனே! –
பட்டம் வாள் நுதல் – பொற்பட்டத்தையணிந்தபிரகாசமான நெற்றியையுடைய,
மங்கையர் – பட்டத்து மனைவியர்,
ஆதரிக்க – அன்புசெய்யவும்,
அம் கை மலர் மீ தரிக்க – அழகிய தாமரைமலர்போன்ற தங்கள்கைகளின்மீது தாங்கவும்,
பட்ட – பெற்ற,
நின் அடியே – உனது திருவடியே, –
அன்று – அந்நாளில் (இராமாவதாரத்தில்),
போர் அரக்கர் தீது அரிக்க – போர்செய்யவல்ல (இராவணன்முதலிய) இராக்கதர்களா லாகிய தீங்கை யழிப்பதற்கு,
பட்ட கானகத்தூடு சென்றது – உலர்ந்த காட்டிற் சென்றது! (எ – று.) – ஈற்று ஏகாரம் – இரக்கம்.

பட்டமகிஷிகளால் அன்போடு கைம்மலர்மீதுகொண்டு வருடப்படுனவான நினதுதிருவடிகள் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ்செய்தற்
பொருட்டுக் கொடியவனவாசஞ்செய்தனவே! என்று இரங்கிக்கூறியவாறாம்.
பட்டமங்கையர் என்றது, ஸ்ரீவைகுண்டத்திலும் திருப்பாற்கடலிலும் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி வீரலக்ஷ்மி விஜயலக்ஷ்மி
முதலிய தேவிமாரையும், இராமாவதாரத்திற் சீதாபிராட்டியையும்,
கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணி ஸத்யபாமை ஜாம்பவதி ஸத்யை மித்ரவிந்தை சுசீலை ரோகிணி லக்ஷணை என்ற
எட்டுப்பட்ட மகிஷிகளையும் குறிக்கும். பட்டகானகம் – நிழலில்லாதபடி மரங்கள் பட்டுப்போகப்பெற்ற கொடுஞ்சுரம்.

வாள் – ஒளியையுணர்த்துகையில், உரிச்சொல். ‘வெள்ளருவி செம்பொன்’ – முரண்தொடை.
அரக்கர் – ரக்ஷஸ் என்ற வடசொல்லின் சிதைவு. அடியென்பது – சாதியொருமையாதலால், சென்றது என்ற ஒருமை முற்றைக்கொண்டது.

————

கிள்ளை விடு தூது –

சென்ற வனத்து அத்தை மைந்தரை வாழ்வித்து தீய மன்னர்
பொன்ற அனத்தத்தைச் செய்த பிரான் புகழ் வேங்கடத்துள்
நின்றவன் அத்தத்துஜ ஆயுதன் பாதத்துஎன் நேசம் எல்லாம்
ஒன்ற வனத்தத்தை காள் உரையீர் அறம் உண்டு உமக்கே –50-

(இ – ள்.) வனம் தத்தைகாள் – அழகிய கிளிகளே! –
சென்ற வனத்து – (பன்னிரண்டுவருஷம்) வனவாசஞ்சென்ற காட்டினிடத்து,
அத்தை மைந்தரை வாழ்வித்து – தனது அத்தையான குந்தியின் புத்திரர்களாகிய பாண்டவர்களை (த் தீங்கின்றி) வாழச்செய்து,
(பின்பு), தீய மன்னர் பொன்ற அனத்தத்தை செய்த – கொடிய (துரியோதனன்முதலிய) அரசர்கள் அழியு மாறு (அவர்கட்குக்) கேட்டை விளைத்த,
பிரான் – பிரபுவும்,
அத்தத்து ஐ ஆயுதன் – திருக்கைகளில் ஐந்துஆயுதங்களை யுடையவனுமான,
புகழ் வேங்கடத்துள் நின்றவன் – கீர்த்தியையுடைய திருவேங்கடமலையில் நின்றதிருக் கோலமாக எழுந்தருளியிருக்கிற எனதுதலைவனுடைய,
பாதத்து – திருவடிகளில்,
என் நேசம் எல்லாம் – எனதுஅன்புமுழுவதையும்,
ஒன்ற உரையீர் – பொருந்தச் சொல்லுங்கள்:
உமக்கு அறம் உண்டு – உங்கட்குப் புண்ணிய முண்டு; (எ – று.)

தலைவனைப்பிரிந்த தலைவி, இங்ஙனஞ்சொல்லி, தலைவனிடத்துக் கிளிகளைத் தூதுசெல்லவேண்டுகிறாள்.
“இயம்புகின்றகாலத்து எகினம் மயில்கிள்ளை, பயம்பெறு மேகம் பூவை பாங்கி –
நயந்தகுயில், பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே, தூதுரைத்து வாங்குந் தொடை” என்ற இரத்தினச் சுருக்கத்தால்,
தூதிற்கு உரியவை இன்னவை யெனக் காண்க.
பிரிந்த தலைவன் வந்திடுவனென்று ஆறியிருக்கவொண்ணாதே அதன்வரவுக்கு விரைந்து ஆள்விடும்படியாயிற்று, ஆற்றாமைமிகுதி.

“கானகமருங்கில் மேவலன் பணியாற் கடும்பசியுடன் வருங் கடவுண்,
மானவமுனிவன் தாபமுஞ் சாபவருத்தமு முறாவகை யொழித்தாய்” என்ற படி பாண்டவர் வனவாசஞ்செய்கையில்
துரியோதனன் துர்வாசமுனிவனைக் கொண்டு அவர்கட்குச் சாபம்பெறுவித்து அவர்களை அழிக்கமுயன்றபோது
அதற்குக் கண்ணபிரான் தக்கபரிகாரஞ்செய்து அவர்களைச் சாபம்பெறாத படி பாதுகாத்தது முதலிய வரலாறுகள்பற்றி
“சென்றவனத்து அத்தை மைந்தரை வாழ்வித்து” எனப்பட்டது. அவ்வரலாறு வருமாறு: –

“சாபத்தாலும் சாபமொழி தன்னால்வளருந் தவத்தாலும், கோபத்தாலும் பேர்படைத்த கொடிய” துர்வாசமுனிவன்
பாண்டவர் வனவாசகாலத்தில் ஒருநாள் பல முனிவர்களோடும் துரியோதனனரண்மனைக்குச்சென்று அறுசுவையமைந்த
அருவிருந்துண்டு மகிழ்ந்து “உனக்குவேண்டும்வரம் வேண்டுக” என்ன, அவன் செல்வச்செருக்கினாலும் பாண்டவர்களை
இம்முனிவர்சாபத்துக்கு உட்படுத்த வேண்டு மென்னுங் கருத்தினாலும் “இன்றைக்கு எமது மனையில் அமுது செய் ததுபோலவே
நாளைக்குப் பாண்டவர்பக்கல்சென்று அமுதுசெய்யவேண்டு வதே எனக்குத்தரும் வரம்” என்ன,
அங்ஙனமே அம்முனிவன் அநேகமுனி வர்களோடு அடுத்தநாள் மத்தியான மானபொழுது பாண்டவர் இருந்த
ஆச்சிரமத்துக்கு வந்துசேர்ந்து “இன்றைக்குஎங்கட்குநல்லுணவு இடவேண்டும்” என்றுசொல்ல,
அதற்குமுன்னமே பலமுனிவர்களோடும் வேண்டியவாறு உண்டு சூரியனருளின அக்ஷயபாண்டத்தைக் கழுவிக் கவிழ்த்துவிட்ட
பாண்டவர்கள் அம்முனிவர்களை நீராடிவரச் சொல்லியனுப்பிவிட்டு “இதற்கு என் செய்வது!” என்று மனங்கலங்கித்
திரௌபதியுந்தாமுமாகக் கிருஷ்ணனைத் தியானிக்க,

அப்பெருமான் உடனே அங்குஎழுந்தருளிப் பாண்டத்தைக் கொணரச் சொல்லி அதிலுள்ளதொரு சோற்றுப்பருக்கையைத்
தான்உண்டமாத் திரத்தில், அம்முனிவர்யாவரும் வயிறுநிரம்பிப் பசிதணிந்து தெவிட்டித்தேக் கெறிந்து மிகமகிழ்ந்து
பாண்டவர்க்கு ஆசீர்வாதஞ்செய்து போயினர் என்பதாம்.

மற்றும், அமித்திரனென்னும் முனிவனுக்கென்றே பழுக்கின்றதொரு நெல்லிப்பழத்தை வனவாசகாலத்தில் திரௌபதியின்
விருப்பத்தின்படி அருச்சுனன் அம்பெய்து கொய்து அவட்குக் கொடுக்க, அதுகண்ட அங்குள்ளார் பலரும்
“இதனை அம்முனிவன்காணில் அவன்சாபத்தால் உங்கள்கதி என்னாகுமோ!” என்று இரங்கிச்சொல்ல,
அதுகேட்டு அஞ்சிய பஞ்சபாண்டவரும் திரௌபதியும் “இதற்கு என்செய்வது?” என்று பலவாறு ஆலோசித்து
அதற்குப் பரிகாரம் வேறொன்றுங் காணாது கண்ணபிரானைத் தியானிக்க,

உடனே அங்குஎழுந்தருளி நிகழ்ந்தசெய்திசொல்லக்கேட்ட அப் பெருமான்
“நீவிர் அறுவரும் நும்நும்மனத்தினுட்கொண்ட கோட்பாட்டை உரைப்பீராயின், இக்கனி மீண்டும்
அம்மரக்கிளையிற் போய் ஒட்டிக்கொள்ளும்” என்று அருளிச்செய்தபடி தருமன்முதலியஅறுவரும் தம்தம்கருத்து நிகழ்ச்சியை
உண்மையாகச்சொல்ல, ஸ்ரீகிருஷ்ணபகவானது சங்கல்பத் தின்படியே அப்பழம் அம்மரக்கொம்பிற் சென்று சேர்ந்து பழையபடி யிருக்க,
பாண்டவர் அபாயத்தினின்று நீங்கின ரென்ற வரலாறு முதலியன வும் இங்குப் பொருந்தும்.

தீயமன்னர் பொன்ற அனத்தத்தைச் செய்தது – மகாபாரதயுத்தத்திற் கண்ணன் பாண்டவர்க்குப் பலவாறு உதவி அவர்களைக்
கொண்டு துரியோதனாதி துஷ்டராசர்களைத் தொலைத்தமை.
வேங்கடத்துக்குப் புகழ் – “எப்பூதலமும் இறைஞ்சித் திசைநோக்கி மெய்ப்பூசனை புரி”யப்படுந் திறம்.
“ஆழி வளை வாள் தண்டு வில்” என்ற திருமாலின் பஞ்சாயுதங்களுள் சக்கரம் சுதர்சநமென்றும், சங்கம் பாஞ்சஜந்யமென்றும்,
கதை கௌமோதகியென்றும், வாள் நந்தகமென்றும், வில் சார்ங்கமென்றும் பெயர்பெறும்.
“குலமகட்குத் தெய்வங் கொழுநனே” என்றபடி உயர்குலத்திற்பிறந்தவளான தான் தனதுதலைமகனையே தெய்வமாகக் கொண்டு
அவனது திருவடிகளிற் பக்திசெய்யுந்திறந் தோன்ற, ‘ஐயாயுதன்பாதத்து’ என்றாள்.
ஒன்ற உரையீர் – சமயமறிந்து தக்கபடி சொல்லியுணர்த்துங்கள் என்றவாறு.

எல்லாம் என்பது, இங்குப் பொருட்பன்மை குறியாது எஞ்சாமை குறித்தது. பிரான் – உபகாரகன்.

ஐயங்கார் தமது ஆற்றாமையை ஆசாரிய மூலமாக எம்பெருமானுக்குத் தெரிவித்துத் தமது துயரந்தணியக்கருதி
அவர்களைத் தமக்குப்புருஷகாரமா கும்படி வேண்டுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
ஸ்வாபதேசத்தில் “தூது என்பது, கடகமான ஆசார்யவிஷயத்தை” என்றனர் ஆன்றோர்.
பிரிந்த தலைவிதலைவரைச் சேர்த்தற்குத் தூதர்போலப் பிரிந்துநின்ற ஜீவாத்மபர மாத்மாக்களைச் சேர்த்தற்கு
ஆசாரியர் உரியவராதல் காண்க. தம்மையாத ரிப்பவர்பக்கல் அன்புடைமையாலும் அன்பர்கட்கு எளிமையினாலும்
எடுப்பார் கைப்பிள்ளையாகிச் செவிக்கினிய செஞ்சொற்களைக் கொஞ்சிப்பேசுந் தன்மையராய் எம்பெருமானது
பசுஞ்சாமநிறத்தை ஸாரூப்யத்தாற்பெறும் ஆசாரியரைக் கிளியென்னத்தகும். பறவைகட்கு இரண்டு இறகுகள்போல,
ஆசாரியர்க்கு ஞானமும் அநுட்டானமும் உயர்கதிச்செலவுக்கு உறுதுணை யென்க. விவரம் நோக்கிக்கொள்க.

———————

தலைவி செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

உண்ட மருந்து கைக்கும் அன்னை மீர் மதன் ஓர் ஐந்து அம்பும்
கொண்டு அமர் உந்து கைக்கும் குறு காமுனம் கொவ்வைச் செவ்வாய்
அண்டம் அருந்து கைக்கும் திறந்தான் அப்பன் போல் பரியும்
எண் தமரும் துகைக்கும் பொடி காப்பு இடும் இன்று எனக்கே –51-

(இ – ள்.) அன்னைமீர் – தாய்மார்களே! –
உண்டமருந்து – உண்ணப்படு கிற அமிருதமும்,
கைக்கும் – (எனக்குக்) கசக்கும்:
மதனும் – மன்மதனும்,
ஓர் ஐந்து அம்பும் கொண்டு – (தனது) ஒப்பற்ற ஐந்துஅம்புகளையுங் கொண்டு,
அமர் உந்துகைக்கு குறுகா முனம் – போர்செய்வதற்கு வந்துநெருங்குதற்குமுன்பு, –
இன்று – இப்பொழுதே, – எனக்கு – , –
கொவ்வை செவ் வாய் – கோவைப்பழம்போன்ற சிவந்த வாயை,
அண்டம் அருந்துகைக்கும் திறந்தான் – (கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய்முதலியன உண்ணுதற்கே யன்றிக் கற்பாந்தகாலத்தில்)
அண்டகோளங்களை விழுங்குதற்காகவும் திறந்தவனான,
அப்பன் போல் – திருவேங்கடமுடையான் போலவே,
பரியும் – (உயிர்கள்பக்கல்) அன்புகொள்ளுகின்ற,
எண் தமரும் – மதிக்கத்தக்க அடியார்கள்,
துகைக்கும் – மிதிக்கின்ற,
பொடி – திருவடிப்புழுதியை,
காப்பு இடும் – காப்பாக இடுங்கள்; (எ – று.)

குறுகாமுனம் இடும் என இயையும். இரண்டாமடியில் ‘உந்துகைக்கும்’ என்ற உம்மை, எடுத்து முதலடியில் “மதன்” என்பதனோடு கூட்டப்பட்டது.
நான்காமடியில் “தமரும்” என்ற உம்மை – அசைநிலை.

திருவேங்கடமுடையானாகிய தலைவனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாமையாற் பலவாறு நோவுபட,
அத்துயரமாத் திரத்தையேகண்ட செவிலித்தாயர் அந்நோயின்காரணமும் அதற்குப்பரிகா ரமும்,
இன்ன வென்று உணராது வேறுபலவகையாக ஆராய்ந்து பரிகாரஞ் செய்யத்தொடங்கியபோது,
நோயொன்றும் மருந்தொன்று மாதலாலே அந்நோய் தீராது வளர, அதனையாற்றமாட்டாத அத்தலைவி நாணந்துறந்து
தானே தனது நோயையும் நோயின் காரணத்தையும் அந்நோய்தீர்க்கும் மருந்தையும் அம்மருந்தைப் பிரயோகிக்கும் விதத்தையும் உணர்த்துதல்,
இச்செய்யுளிற் கூறிய விஷயம்.

இங்ஙனம் களவை வெளிப்படுத்துதலின் காரணம், தன்கருத்தைச் செவிலித்தாயர்மூலமாக நற்றாய்க்கும்
அவள்மூல மாகத் தந்தைக்கும் மற்றும்பெரியோர்க்குந் தெரிவித்துத் தன்னை அவனுக்கே விரைவில் வெளிப்படையாக
மணஞ்செய்துவைக்கும்படி செய்து கொள்ளும் விருப்பம்.
(“வாராயினமுலையாளிவள் வானோர்தலைமகனாஞ்,
சீராயின தெய்வநன்னோயிது தெய்வத்தண்ணந்துழாய்த்,
தாராயினுந் தழையாயினுந் தண்கொம்பதாயினுங் கீழ்,
வேராயினும் நின்றமண்ணுயினுங் கொண்டு வீசுமினே” என்றபடி)
தலைவனோடு நேரிலாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் இந்நோய்க்குப் பரிகாரமா மென்பாள்
அப்பன் போற் பரியுந் தமர் துகைக்கும் பொடி காப்பிடும்” என்றாள்.
அன்றியும், தன்னைப் போலவே தலைவன்பக்கல் அன்புகொண்டவர்களுடைய சம்பந்தம் தனது நோய்க்குப் பரிகார மென்றுகருதி
இங்ஙனங் கூறினாளுமாம்;
(“தணியும் பொழுதில்லைநீரணங்காடுதிரனனைமீர், பிணியுமொழிகின்றதில்லை பெருகு மிதுவல்லால்,
மணியிலணிநிறமாயன், தமரடிநீறுகொண், டணியமுயலின் மற்றில்லைகண்டீ ரிவ்வணங்குக்கே” என்ற திருவாய்மொழிப் பாசுரத்தையும்,
அதன்வியாக்கியாநங்களில்
“அழகுக்கு ஈடுபட்ட இவளுக்குப் பரிஹாரம், அத்துறையிலகப்பட்டாருடைய அநுபந்தமே யென்றபடி,”
“சௌந்தர்ய சீலாதிகளிலேயாய்த்து இவள் மோகித்தது: நீங்களும், சௌந்தர்யசீலாதிக ளிலே தோற்றிருக்கும்
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பாதரேணுவைக்கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்; பொடிபடத் தீரும்” என்ற வாக்கியங்களையுங் காண்க.

மன்மதனம்பு ஐந்து – தாமரைமலர், மாமலர், அசோகமலர், முல்லை மலர், நீலோற்பலமலர் என்பன.
இவற்றின் பெயர் – முறையே உந்மத்தம், மதநம், சம்மோகம், சந்தாபம், வசீகரணம் எனப்படும்.
இவை செய்யும் அவத்தை – முறையே சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்பன.
அவையாவன – சுப்பிரயோகம் – சொல்லும், நினைவும்;
விப் பிரயோகம் – வெய்துயிர்த்திரங்கல்;
சோகம் – வெதுப்பும், துய்ப்பன தெவிட்டலும்;
மோகம் – அழுங்கலும், மொழிபலபிதற்றலும்; மரணம் – அயர்ப்பும், மயக்கமும்.
“நினைக்கும்அரவிந்தம் நீள்பசலைமாம்பூ, அனைத்துணவு நீக்கும்அசோகு –
வனத்திலுறு, முல்லைகிடைகாட்டும் மாதே முழுநீலம், கொல்லும் மதனம்பின்குணம்” என்ற இரத்தினச் சுருக்கத்தையுங் காண்க.
இவற்றில் மூன்றாவதான அசோகமலரின் அவத்தையாகிய துய்ப்பனதெ விட்டல், “உண்ட மருந்து கைக்கும்” என வெளியிடப்பட்டது.
“மதன் ஐந்தம்புங்கொண்டு அமர்உந்துகைக்குக் குறுகாமுனம்” என்றது, பிரிந்தாரைக் கொல்லும் ஐந்தாம் அம்பான
நீலோற்பலமலரு முட்பட எல்லா அம்புகளையும் மன்மதன் பிரயோகித்தற்குமுன்பு என்றபடி;
அவன் மரணவேதனைப் படுத்திக் கொல்லாதமுன் என்றவாறு. “கொவ்வைச் செவ் வாய்” என்றது, வாயழகில் ஈடுபாடு.

‘மருந்து என்றவிடத்து உயர்வுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. மதன் – மதநன் என்ற வடசொல்லின் விகாரம்;
அது, (பிராணிகளைக்காதலாற்) களிக்கச் செய்பவனென்று பொருள்படும்: “மந்மதன்” என்பதன் முதற் குறையுமாம்.
கொவ்வை என்ற கொடியின் பெயர், அதன் பழத்துக்கு முதலாகுபெயர். அண்டமருந்துகைக்கும் என்ற உம்மை – எச்சப்பொருளது.
காப்பு – காத்தல்; ரக்ஷக மென்ற பொருளில், தொழிலாகுபெயர்.

எம்பெருமான் ஒருகால்வந்துகாட்சிகொடுத்து மறைய, பின்பு பிரிவாற்றாதுவருந்துகிற ஐயங்கார், தம்பக்கல்பரிவுடைய ஞானிகளை நோக்கி, (“நாதனைநரசிங்கனைநவின்றேத்துவார்க ளுழக்கிய, பாததூளி படுதலா லிவ்வுலகம் பாக்கியஞ்செய்ததே,”
“தொண்டரடிப்பொடி, யாடநாம்பெறிற்கங்கை நீர்குடைந்தாடும்வேட்கை யென்னாவதே”,
“தொண்டர்சேவடிச் செழுஞ்சேறு என்சென்னிக் கணிவனே” என்றபடி)
அதிபரிசுத்திகரமான பாகவதபாததூளியைக் கொணர்ந்து என்மேல்இட்டு என்னை ரக்ஷிக்கப் பாருங்கள்
என்று பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்.

ஆராவமுதான எம்பெருமான்பக்கல் ஈடுபட்டு
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங், கண்ண னெம்பெருமான் என்று” கருதி யிருப்பவர்க்குத்
தேவாமிருதத்தினினிமையும் ஒருபொருளாகத்தோன்றா தாதலால், “உண்ட மருந்து கைக்கும்” என்றன ரென்க.
(“தாயொக்குமன்பின்” என்றபடி) தம்பக்கல் பேரன்புடைமையும், தம்மைக் கொண்டு செலுத்த வல்ல திறமுடைமையும்பற்றி,
ஞானிகள் “தாயரே!” என விளிக்கப்பட்டனர். மதன் ஓரைந்தம்புங் கொண்டு அமருந்துகைக்குக் குறுகாமுனம் –
பேரின்பமயனான சர்வேசுவரன் மறைந்தசமயம்பார்த்துக் காமதேவன் வந்துபுகுந்து என் மனத்தைச் சிற்றின்பவழியிற்
செலுத்தாதமுன்பு என்க. ஜீவகாருண்யத்தில் பகவானும் பாகவதருமே ஒருவர்க்கொருவர் ஒப்பானா லுண்டன்றி
வேறுஒப்புமை காணப்பெறாமையால், “அப்பன்போற் பரியு மெண் தமர்’ எனப்பட்டனர். பகவானிடத்துப்போலவே
பாகவதரிடத்தும் ஐயங்கார்க்கு உள்ள பரமபக்தி இங்கு வெளியாகின்றது.

————

எனக்குப் பணியப் பணி ஒரு கால் இரு காலும் நல்க
உனக்குப் பணி இங்கு இருவேம் பணியில் என் ஓர் பணியும்
நினக்குப் பணி வித்துக் கொண்டு உம் பணி நீ பணித்திலை என்
தனக்குப் பணி வெற்பின் மீது ஓங்கி நின்ற தனிச் சுடரே –52-

(இ – ள்.) பணி வெற்பின்மீது ஓங்கி நின்ற – சேஷகிரியெனப்படுகிற திருவேங்கடமலையின்மேல் உயர்ந்து நின்றதிருக்கோலமாய் எழுந்தருளி யிருக்கிற,
தனி சுடரே – ஒப்பற்ற ஒளிவடிவமானவனே! –
ஒரு கால் பணிய எனக்கு பணி – (தலைவனான உன்னை) ஒருதரம் வணங்குதல் (அடியவனான) எனக்கு உரிய தொழில்;
இரு காலும் நல்க உனக்கு பணி – (அடியவனான எனக்கு உனது) இரண்டு திருவடிகளையுங் கொடுத்தல் (தலைவனான) உனக்கு உரிய தொழில்:
இங்கு இருவேம் பணியில் – இவ்வாறுகுறித்த நம்இருவரது வேலைகளில்,
என் ஓர் பணியும் நினக்கு பணிவித்துக்கொண்டு – (ஒருகால் பணிதலாகிய) எனதுதொழிலைமாத்திரம் (உனக்கு நீ) செய்வித்துக்கொண்டு,
உன் பணி என் தனக்கு நீ பணித்திலை – (இருகாலையும்நல்குதலாகிய) உனதுதொழிலை எனக்கு நீ செய்கின்றாயில்லை; (எ – று.)

யான் உன்னை ஒருகால்சரணமடைந்தே னாதலால், நீ எனக்கு முத்தி தந்தருளவேண்டும் என்பதாம்.
பரமபதநாதனதுகட்டளையின்படி அவனுக்குப் பலவகைக்கைங்கரியங்களைச் செய்யும் ஆதிசேஷனே அப்பெருமான்
இனிஎழுந்தருளியிருத்தற்கு மலைவடிவமானதனாலும், மேருமலையினிட மிருந்து ஆதிசேஷனுடனே வாயுவினாற்
கொணரப்பட்ட மலை யாதலாலும், திருவேங்கடத்துக்கு ‘சேஷகிரி’ என்ற பெயர் வாய்த்தது;
‘பணிவெற்பு’ என்றது, அதன்பரியாயநாமமாக நின்றது. சூரியன் சந்திரன் அக்கினி முதலிய சோதிகளெல்லாவற்றினும்
மேம்பட்ட சோதி யென்பார், ‘தனிச்சுடரே’ என்றார்; அகவிருளொழிக்கும்ஆதித்த னென்க. சுடர்என்றது,
நித்தியமாய் ஸ்வயம்பிரகாசமான ஞானத்தைக் குணமாகவும் சொரூபமாகவும் உடையவ னென்றபடி.

எனக்கு, உனக்கு என்ற நான்கனுருபுகள் – தகுதிப்பொருளன. பணிய, நல்க என்ற செயவெனெச்சங்கள் – தொழிற்பெயர்த்தன்மைப்பட்டு
‘பணி’ என்ற பெயர்ப்பயனிலைக்கு எழுவாயாய்நின்றன; ஒருகால், இருகால்’ என்ற விடத்து முரண்தொடை காண்க.
இருவேம் – தன்மைப்பன்மைக்குறிப்புவினை யாலணையும்பெயர்; முன்னிலையை உளப்படுத்திய தன்மைப்பன்மை.
(‘ஒரு கால்பணிய’ எனத் தென்கலைசம்பிரதாயமே உரைக்கப்பட்ட தென்பர்.)
பணிஎன்ற சொல் ஒரேபொருளிற் பலமுறைவந்தது, சொற்பொருட்பின் வருநிலையணி; பணியப்பணி,
ஒருகாலிருகாலும் என வந்தமை – பிராசமெ ன்னுஞ் சொல்லணி: இவ்விரண்டுஞ் சேர்ந்துவந்தது, சேர்வையணி.

————-

தலைவியின் பிரிவாற்றாமை கண்ட செவிலி இரங்கல் –

தனித் தொண்டை மா நிலத்தே புரிவார்க்கு அருள் தாள் உடையாய்
தொனித் தொண்டைமான் நெடுவாய் பிறந்தாய் துங்க வேங்கடவா
முனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி நல்கி என் மூரல் செவ்வாய்க்
கனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் கருமம் அன்றே –53-

(இ – ள்.) மால் நிலத்தே – பெரிய நிலவுலகத்திலே,
தனி தொண்டை புரிவார்க்கு – ஒப்பற்ற அடிமைத்தொழிலைச் செய்யும் மெய்யடியார்கட்கு,
அருள் – தந்தருளுகிற,
தாள் உடையாய் – திருவடியை (பரமபதத்தை) யுடையவனே! –
தொனி தொண்டை மான் – கனைக்கின்ற குரலையுடைய தொண்டையையுடைய குதிரையினது,
நெடு வாய் – பெரிய வாயை,
பிளந்தாய் – பிளந்தவனே!
துங்கம் வேங்கடவா – உயர்ந்த திருவேங்கடமலையில் எழுந்த ருளியிருப்பவனே! – (நீ),
முனி தொண்டைமான் கையில் சங்கு ஆழி நல்கி – ராஜரிஷியான தொண்டைமான்சக்கரவர்த்தியின் கையிலே (நினது)
சங்காழிகளை (சங்கசக்கரங்களை)க் கொடுத்தருளி,
என் மூரல் செவ் வாய் கனி தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் – புன்சிரிப்புள்ள சிவந்த வாயாகிய
தொண்டைப் பழத்தையுடைய மான்போன்றவளான என்மகளது கைகளிலுள்ள சங்குஆழிகளை
(சங்குவளையல்களையும் மோதிரங்களையும்) கவர்ந்துகொள்ளுதல்,
கருமம் அன்று – செய்தக்கசெயலன்று; (எ – று.)

இப்பாட்டுக்குத் துறைவிவரணம், கீழ் 15 – ஆஞ் செய்யுட்குக் கூறிய வாறே கொள்க.
பின்னிரண்டடியிற்கூறிய விஷயம், கீழ் 46 – ஆஞ் செய்யுளில் “சங்கோடணியாழி நீங்கி” என்றதற்கு கூறிய உரைகளால் விளங்கும்.
தொண்டைமான்சக்கரவர்த்தி க்ஷத்திரியசாதியா னாயினும் தவவொ “க்கத்திற்சிறந்து முனிவரையொக்கும்பெருமைவாய்ந்து
திருவேங்கடமு டையான்பக்கல் பக்திமேலிட்டு அப்பெருமானை எப்பொழுதுஞ்சேவித்துக் கொண்டு திருமலையிலேயே
வாசஞ்செய்திருத்தலை யுணர்ந்த பகையரசர்கள் அவனதுநாட்டைக் கைக்கொள்ள, தொண்டைமான் அதனைத்
திருவேங்கடமுடையான்சந்நிதியில் விண்ணப்பஞ்செய்து வணங்கிநிற்க,
பெரு மான் தனது திவ்வியாயுதங்களாகிய சங்சசக்கரங்களைக் கொடுத்து ‘இவற்றைக்கொண்டு, நீ,
பகையரசரைத் தவறாது வென்றிடுக’ என்று சொல்லியருள, தொண்டைமான் அங்ஙனமே பகைவென்று அரசு பெற்றன னென்ற வரலாற்றை,
வேங்கடாசலமாகாத்மியத்திற் பரக்கக் காண்க.

தலைவனது பிரிவு தலைவிக்கு மெலிவைவிளைத்து அவள்கையினின்று வளைகளும் விரல்களினின்று மோதிரங்களும்
கழன்று விழும்படிசெய்தலை அத்தலைவன்மேலேற்றி, “என்மான்கையிற் சங்காழிகோடல் கருமமன்று” என்றாள்:
(“கைப் பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர், செய்ப்புரளவோடுந் திருவரங்கச்செல்வனார்” என்பது நாச்சியார்திருமொழி.)
ஒருவரிடத்துப் பொருளைக்கொடுத்தால் மீண்டும் அப்பொருளை அவரிடத்தினின்றே வாங்க வேண்டியதாயிருக்க
அப்பொருளை வேறொருவரிடத்தில் வாங்குகின்றா யெனத் தொடர்பின்மையணி தோன்றக் கூறியவாறு. ஈற்றுஏகாரம் – தேற்றத்தோடு இரக்கம்.

தொனி – த்வநி யென்ற வடசொல்லின் விகாரம். தொண்டை – மிடறு. தொண்டைமான் – தொண்டைநாட்டரசன்.
மூரல் – பற்களுமாம். கனித் தொண்டை – கோவைப்பழம். மான் – அதுபோன்ற பெண்ணுக்கு உவமையாகு பெயர்; பார்வையில் உவமம்.

எம்பெருமானது பிரிவை யாற்றாது வருந்துகிற ஐயங்காரது நிலைமைக ளைக் கண்ட பரிவுடையறிவுடையாளர்,
அப்பெருமானைநோக்கி “நினக்கு ஆபரணகோடியிற்சேர்கிற ஆயுதங்களை நின்பக்கல் மெய்யன்பு
செய்தவ னுக்கு அருள்பவனான நீ இவரது ஆத்மாலங்காரமான பாரதந்திரியம் முதலிய குணங்களை நிலைகுலையச் செய்தல் நீதியன்று”
என்று அவனுக்கு இவர் பக்கல் இரக்கமுண்டாகுமாறு விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறை பொருள்;
பெருக்கம் ஆய்ந்துஉணர்க. முதல் விளி – சிஷ்டபரிபாலநஞ் செய்தலையும், இரண்டாம் விளி – துஷ்டநிக்கிரகஞ்செய்தலையும் விளக்கும்.

“களிகொண்டெமக்கருள் வேங்கடவா வெதிகட்கரசன்,
அளிகொண் டளித்த வளையாழி வாங்கினை யற்புதமா,
நளிகொண்டபூங்குழற்பெண்ணர சாயினநங்கை செங்கை,
ஒளிகொண்டவால்வளையாழி கைக்கொள்வ துசித மன்றே” என்ற திருவேங்கடக்கலம்பகச்செய்யுள், இதனை ஒருசார் அடி யொற்றியது.

———

பிரிவாற்றாத தலைவி பிறை கண்டு வருந்துதல்

கரு மாதவா இருந்து ஆவன செய்து என் கருத்து இருளைப்
பொரும் ஆதவா விருந்தா வனத்தாய் பொற் சவரி என்னும்
ஒரு மாது அவா விருந்தா வனக்கா உயர் வேங்கடத்து எம்
பெருமா தவா இரும் தாவு அனல் ஏயும் பிறைக் கொழுந்தே –54-

(இ – ள்.) கரு மாதவா – கரிய திருநிறமுள்ள மாதவனென்னுந் திருநா மத்தையுடையவனே!
என் கருத்து இருந்து – எனது மனத்தில் வந்து வீற்றிருந்து,
ஆவன செய்து – (எனக்கு) ஆகவேண்டிய நன்மைகளைச் செய்து,
இருளை பொரும் – அகவிருளாகிய அஜ்ஞாநத்தை மோதியொழித்தற்கு உரிய,
ஆதவா – சூரியனாயுள்ளவனே!
விருந்தாவனத்தாய் – பிருந்தாவனத்தில் விளையாடினவனே!
பொன் சவரி என்னும் – உத்தமகுணமுள்ள சபரியென்கிற,
ஒரு மாது – ஒருபெண்ணுக்கு,
அவா விருந்தா – விரும்பப்பட்ட விருந்தினனானவனே!
வனம் கா உயர் – அழகிய சோலைகள் உயர்ந்திருக்கப் பெற்ற,
வேங்கடத்து – திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற,
எம்பெருமா – எமது தலைவனே! –
பிறை கொழுந்து – இளம்பிறையானது, –
தவா – கெடாத,
இரு – பெரிய,
தாவு – தாவியெரிகின்ற,
அனல் – நெருப்பை,
ஏயும் – ஒத்துச்சுடுகின்றது; (எ – று.)

இயற்கைப்புணர்ச்சி முதலியவகைகளால் தலைவியைக் களவிற்கூடி நின்ற தலைவன் அங்குப் பழியெழுந்ததென்று
தோழியால் விலக்கப்பட்ட பின்னர் அப்பழியடங்கச் சிலநாள் ஒருவழிப்பிரிந்துறைதல், ஒருவழித்தண த்த லெனப்படும்.
அங்ஙனம் பிரிந்துறைகின்ற சமயத்தில் அப்பிரிவையாற்றாதுவருந்துகிற தலைவிக்கு
“காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரு மிந்நோய்” என்றபடி கலவிக்கு உரிய காலத்தின் தொடக்கமான
மாலையிலே விரகவேதனை வளர, அப்பொழுது விளங்கிய இளம்பிறையும் பிரிந்தார்க்குத் துயர்க்கேதுவான
பொருள்களு ளொன்றாதலால் இவளை இன்னும் அதிகமாக வேதனைப்படுத்த,
அத்தாபத்தை யாற்றாத அத்தலைவி தனது நினைப்புமிகுதியால் தலைவனை எதிரில்நிற்கின்றவாறு போலப்பாவித்து,
அங்ஙனம் உருவெளித்தோற்றத்திலே வெளிப்பட்ட அத்தலைவனை முன்னிலைப்படுத்தி இரங்கிக் கூறியது, இது.

ஒருவழித்தணந்து வந்த தலைவன் சிறைப் புறமாக அதனையுணர்ந்த தோழி அவனை முன்னிலையாக்கிக்கூறிய தென்று
இதற்குத் துறைகொள்ளுதலு மொன்று. மற்றும், இது, சந்திரோபாலம்பநத்தின் பாற்படும்; அதாவது –
விரகநோய்கொண்டதலைவி சந்திரனை நிந்தித்தல், கூடினாரை மகிழ்விக்குந் தன்மையதான பிறை பிரிந்து
நிற்கிறஎன்னை இங்ஙனம் தவித்திடாதபடி விரைந்துவந்து வரைந்தருள்வாய் என்பது, குறிப்பு.

விருந்தாவனம் என்பது – கண்ணன் அவதரித்த வடமதுரைக்குச் சிறிது தூரத்தில் யமுநாநதிதீரத்திலுள்ள இடம்.
கண்ணன்வளர்ந்தஇடமான கோகுல மெனப்படுகிற திருவாய்ப்பாடியிலுள்ள நந்தகோபர்முதலான ஆயர்கள்,
அங்குப் பூதனைவந்துஇறந்தது. சகடுமாறிவீழ்ந்தது இரட்டைமருதமரம் முறிந்தது முதலியவற்றை உற்பாதங்களெனக்கொண்டு
அஞ்சி மஹாவநமெ னப்படுகிற அவ்விடத்தை விட்டுக் கன்றுகாலிமுதலிய எல்லாப்பொருள்க ளோடும்
பிருந்தாவனத்திற் சென்று குடியேறினர். நெருஞ்சிற்காடாய்க் கிடந்தஅந்தப்பிருந்தாவனம், கிருஷ்ணபகவான் குளிர்ந்த
திருவுள்ளத்தோடு அநுக்கிரகித்ததனால், பசுக்கள்முதலானவை விருத்தியடைதற்குஏற்ப மிகச் செழிப்புற்றது.
பின்பு அங்கு நெடுநாள் கண்ணன் கன்றுகளையும் பசுக்களையும் மேய்த்தல் முதலிய பலதிருவிளையாடல்கள்
செய்துகொண்டுவளர்ந் தனனாதலால், “விருந்தாவனத்தாய்” என்று விளிக்கப்பட்டனன்.
விருந்தாவனம் – ப்ருந்தாவந மென்ற வடசொல்லின் விகாரம்; நெருஞ்சிக்கா டென்பது பொருள்.

சவரி – ரிசியமூககிரியில் மதங்காச்சிரமத்தில் மதங்கமுனிவரது சிஷ்யர்களுக்கு உபசாரஞ்செய்துகொண்டு
வசித்துவந்த துறவறம்பூண்ட ஒருதவப் பெண்.
க்ஷத்திரியஜாதிஸ்திரீயினிடம் வைசியசாதிபுருஷனுக்குப் பிறந்த பிரதி லோமசாதியார், சபர மெனப்படுவர்; இச்சாதியாரது தொழில் –
தேன்கொ ணர்ந்துவிற்றல். சபரனென்பதன் பெண்பால் – சபரீ; அவ்வடசொல், சவரி யென்று விகாரப்பட்டது.
யோகப்பயிற்சியுள்ள அச்சபரி, தான்வசிக்கும் மதங்காச்சிரமத்துக்கு இராமலக்ஷ்மணர் எழுந்தருளுஞ்செய்தியை
முன்னமே அறிந்து எதிர்நோக்கி, அவ்வனத்திலுள்ள நல்லகனிகளைச் சேர்த்துவைத் துக்கொண்டிருந்து,
அவர்கள் அவ்வாச்சிரமத்துக்கு எழுந்தருளியவுடன் அப்பழங்களை அவர்கட்குச் சமர்ப்பித்து உபசரித்து,
இராமபிரானருளால் தனதுபிறப்பை யொழித்து நற்கதியடைந்தன ளென்பது, இராமாயணவரலாறு;
அதுபற்றி, “பொற்சவரி யென்னும் ஒருமாது அவாவிருந்தா” என்றார்.

ஆவன – பெயர். கருதுவது கருத்து எனக் காரணக்குறி. விருந்தன் = விருந்தினன்.
விருந்து – புதுமை; பண்புப்பெயர்: புதியனாய்வருபவன், விருந்தன்; “இன்” சாரியை பெறாது நின்றது.
அது ஈறுகெட்டு ஈற்றயல்நீண்டு விளியேற்று ‘விருந்தா’ என்று ஆயிற்று. கா – காக்கப்படுவது என்பது
பற்றிச் சோலைக்கு வந்த காரணக்குறி. தவா என்ற ஈறுகெட்ட எதிர்மறைப்பெய ரெச்சத்தில், தபுஎன்பதன் மரூஉவான தவு – பகுதி.
இருந் தா வனல் – இருமையென்ற பண்புப்பெயர் ஈறுபோய் இனமெலி மிக்கது. தாவனல் – வினைத்தொகை.
ஏயும் – உவமவாசகம். பிறப்பது பிறை யெனக் காரணக் குறி; ஐ – கருத்தாப்பொருள்விகுதி:
பிற என்ற பகுதியின் ஈற்றுஅகரம் தொக்கது. “கொழுந்து” என்றது, இளமைகுறித்தது.

பேறுகிடைக்குந் தருணத்தில் மகிழ்ச்சிசெய்வதான ஞானவிளக்கம் உரியகாலத்திற் பேறுகிடையாமையாலே நலிவுசெய்ய,
ஐயங்கார் தாம் அடைந்த தாபத்தை எம்பெருமானைக்குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
இத்தளர்ச்சிநீங்க விரைவில் உன்பக்கல் என்னைச் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்பது, குறிப்பு.
பிறைக்கொழுந்து என்றது – ஸ்வாபதேசத்தில், ஞானோதயத்தையாம். பிறவும் நோக்கிக்கொள்க.

———–

பிறை மாலையால் ஒரு பேதை நைந்தாள் அந்த பேதைக்கு நின்
நறை மாலை தா என்று மானிடம் பாடிய நா வலர்காள்
நிறை மாலை அற்று கவி மாலையால்நினையீர் திரு வெள்
ளறை மாலை வேங்கடத்தே உறை மாலை அரங்கனையே –55-

(இ – ள்.) “பிறை மாலையால் – பிறைச்சந்திரனது தோற்றத்தையுடைய மாலைப்பொழுதினால்,
ஒரு பேதை நைந்தாள் – (உன்பக்கல் காதல்நோய் கொண்ட) ஒருபெண் மெலிவுற்றாள்:
அந்த பேதைக்கு – அப்பெண்ணுக்கு,
நின் நறை மாலை தா – உன்னுடைய வாசனையுள்ள பூமாலையைக் கொடு,” என்று –
மானிடம் பாடிய – (அகப்பொருட்டுறையமைத்து) மனிதர்களின் மேற் கவிபாடிய,
நாவலர்காள் – புலவர்களே! – (நீங்கள்),
நிறை மாலை அற்று – (இங்ஙனம் உங்கள்மனத்தில்) நிறைந்த மயக்கத்தை நீங்கி,
கவி மாலையால் – பாமாலை கொண்டு,
திருவெள்ளறை மாலை அரங்கனை வேங்கடத்தே உறை மாலையே நினையீர் – திருவெள்ளறைலி லெழுந்தருளியிருக்கிற பெரியோனும்
ஸ்ரீரங்கநாதனும் ஆகிய திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானையே கருதிப் பாடுவீராக; (எ – று.)

பகவத்குணாநுபவத்திலாசையுடைய ஐயங்கார், லௌகிகரைப்பார்த்து, “நரஸ்துதிபண்ணினால் என்னபயன் உண்டாகும்?
வேண்டியபயன்களை வே ண்டியவாறே பெறும்படி, என்னோடொப்ப எம்பெருமானை ஸ்தோத்ரம்பண் ணுங்கள்” என்று
இதோபதேசஞ் செய்கின்றார்.
“சொன்னாவில்வாழ் புலவீர் சோறுகூறைக்காக மன்னாதமானிடரை வாழ்த்துதலால் –
என்னாகும், என்னுடனேமாதவனை யேத்தும்” என்ற அருளிச்செயலையுங் காண்க.
“கவி பாடலாகாது” என்ற நிஷேதசாஸ்திரத்துக்கு இலக்கு அஸத்விஷயத்திலாதலும்,
‘கவிபாடுதல் புகழ்முதலியபலவற்றைப் பயக்கும்’ என்ற விதிசாஸ்தி ரத்துக்கு இலக்கு ஸத்விஷயத்திலாதலுமாகிய வேறுபாடு காணத்தக்கது.

கவி தனக்குப் பிரபுவின்பக்கல் உள்ள அன்பை, ஒரு தலைவி அத்தலை மகனிடத்துக் காதல்கொண்டு வருந்த
“அவள்வருத்தத்தை யாற்றுமாறு நின்தோளிற் சாத்திய மாலையை நீ அவட்குக்கொடு’ என்று தூதுசென்ற வித்தகர்
பேசுங் கிளவித்துறைவகையாற் பாடி வெளியிடும் இயல்பைக் குறிப்பிட்டு முதலிரண்டடியில் விளித்தார்.
பிறைமாலையால் – மாலைப்பிறையால் என மொழிமாற்றினுமாம். பேதை – பேதைமையுடைய பெண்ணுக்குப் பண்பாகுபெயர்.
நறை – தேனுமாம். மாநுஷரென்ற வடசொல்லின் விகாரமான மானிடரென்பது –
(காசியபமுனிவனது மனைவியருள்) மநுவென்பவளதுமரபினரான மனிதரையுணர்த்தும்; தத்திதாந்தநாமம்.
இங்கு “மானிடம்” என்றது, சாதிவாசகமாய் நின்றது; மனிதர்களிலும் உயர்ந்தவர் தாழ்ந்தவ ரெனப் பகுத்து
உணராது கண்டவரையெல்லாம் ஒருநிகராகப்பாடுபவ ரென்பது போதரும்:
அன்றியும், இழிப்புப்பற்றி அஃறிணையாகக்கூறின ரென்றுங் கொள்க;
(திருவாய்மொழியில் “வளனாமதிக்கு மிம்மானிடத்தைக் கவி பாடியென்” என்றவிடத்து,
நம்பிள்ளை ‘மநுஷ்யரென்றுசொல்லவும் பாத்தங்காண்கிறிலர் காணும்! அசேதநங்களைச் சொல்லும்படியிலே சொல்லுகிறார்.
தன்னை மெய்யாக அறியாதவன் அசித்பிராய னிறே’ என்று வியாக்கியாந மிட்டமையுங் காண்க.)
நாவலர் – கவிபாடுதல்முதலிய நாவின்வல்ல மையை யுடையவர். மால் – மயக்கம். கவிமாலை – பிரபந்தம். நினையீர் = பாடீர்;
காரணம், காரியமாக உபசரிக்கப்பட்டது. திருவெள்ளறை – சோழநாட்டுத் திருப்பதிகளில் ஒன்று.

————

அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுய
கரம் கண்ண மங்கை நறையூர் கடல் மலை கச்சி கண்ண
புரம் கண்டியூர் தஞ்சை மாலிருஞ்சோலை புல்லாணி மெய்யம்
தரங்கம் பரமபதம் வேங்கடேசற்குத் தானங்களே –56-

(இ – ள்.) அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுயகரம் கண்ண மங்கை நறையூர் கடன்மல்லை
கச்சி கண்ணபுரம் கண்டியூர் தஞ்சை மாலி ருஞ்சோலை புல்லாணி மெய்யம் தரங்கம் (திருப்பாற்கடல்)
பரமபதம் (ஸ்ரீவைகுண்டம்)என்பன, திருவேங்கடமுடையானுக்கு உரியதலங்களாம்.

“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி, ஓர்பதின்மூன்றா மலை நாடு ஓரிரண்டாஞ் – சீர்நடுநாடு,
ஆறோடீரெட்டுதொண்டை அவ்வடநா டாறி ரண்டு, கூறுதிருநா டொன்றாக் கொள்” என்று வகுக்கப்பட்ட
நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளுட் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதிற் சேர்ந்தவை –
திருவரங்கம் திருக்குடந்தை திருக்கண்ணமங்கை திருநறையூர் திருக்கண்ணபுரம் திருக்கண்டியூர் திருத்தஞ்சை என்பன.
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டிற் சேர்ந்தவை – திருக்குருகூர் திருக்குறுங்குடி திருமா லிருஞ்சோலைமலை திருப்புல்லாணி திருமெய்யம் என்பன. தொண்டைநாட்டுத்திருப்பதிகள் இருபத்திரண்டிற் சேர்ந்தவை – திருவட்டபுயகரம் திருக்கடன்மல்லை திருக்கச்சி என்பன.
வடநாட்டுத்திருப்பதிகள்பன் னிரண்டிற் சேர்ந்தது – திருப்பாற்கடல். திருநாடு – பரமபதம்.
இச்செய்யுளில் அரங்கம்முதற் பரமபதம்ஈறாகப் பதினேழுதிவ்வியதேசங்களின் பெயரை அடைமொழியில்லாதபடி
அடக்கிவைத்திருக்கின்ற அழகு அறியத்தக்கது. வேங்கடேசன், ஸ்தாநம் – வடசொற்கள்.

————-

தான அல் நாக மருப்பு ஒசித்தானுக்கு தான் உகந்தது
ஆன வல் நாக முடியில் நின்றானுக்கு தாள் வணங்காத்
தானவன் ஆகம் இடந்தானுக்கு ஆள் என்று தனை எண்ணா
தான் அவனாக நினைந்திருப்பாற்கு என்றும் தான் அவனே –57-

(இ – ள்.) தானம் – மதத்தையுடைய,
அல் – இருள்போன்ற – (கருநிறமுள்ள),
நாகம் – (குவலயாபீடமென்ற) யானையின்,
மருப்பு – தந்தங்களை,
ஒசித்தானுக்கு – ஒடித்தவனும்,
தான் உகந்தது ஆன – தான் விரும்பிய இடமான,
வல் நாகம் – வலிய திருவேங்கடமலையினது,
முடியில் – சிகரத்தில்,
நின்றானுக்கு – நின்றதிருக்கோலமாக எழுந்தருளியவனும்,
தாள் வணங்கா – (தனது) திருவடிகளை வணங்காத (தானே தெய்வமென்று செருக்கிய),
தானவன் – அசுரனான இரணியனது,
ஆகம் – மார்பை,
இடந் தானுக்கு – பிளந்தவனுமான எம்பெருமானுக்கு,
ஆள் என்று – அடிமையென்று,
தன்னை எண்ணா – தன்னைநினையாமல்,
தான் அவன் ஆக நினைந்திருப்பாற்கு – (ஜீவாத்மாவாகிய) தானே அப்பரமாத்மாவாக நினைத்திருக்கிற விபரீதஞானிக்கு,
என்றும் தான் அவனே – எப்பொழுதும் அப்பெருமான் பயன்படாதவனேயாவன்; (எ – று.) –
அவன் – பயனின்மை; அங்ஙனமாகுபவன், அவன்: ஏ – தேற்றம்.

சித் அசித் ஈசுவரன் என்ற தத்துவம்மூன்றில் சித்எனப்படுகிற ஜீவாத்மாவுக்கு ஈசுவரனெனப்படுகிற பரமாத்மா
நியாமகனும் தாரகனுமாய்த் தலைவனாதலும், அப்பரமாத்மாவுக்கு ஜீவாத்மா நியாம்யமும் தார்யமுமாய் அடிமையாதலும்
முதலிய மிக்கவேறுபாடுகள் சாஸ்திரப்பிரசித்தமாக இருக்க, அவற்றையெல்லாம்கருதித் தன்னை
எம்பெருமானுக்கு ஆளென்று எண்ணாமல், “உண்மையாகவுள்ள பரமாத்மாவாகிய பொருளொன்றே மாயையாற்
பிரபஞ்சமாகக் காணப்படுகின்றதே யன்றி ஜீவாத்மாவென்றுஒரு பொரு ளில்லை” என்று துணிந்துகூறும் அத்வைதி,
“ஜீவாத்மாவென்னும் நான் அப்பரமாத்மா” என்னும் பாவனை யுடைய னாதலால்,
“ஆளென்று தன் னையெண்ணாத் தானவனாக நினைந்திருப்பான்” எனப்பட்டான்.
அங்ஙனம் ஜீவாத்மபரமாத்மசொரூபங்களைப் பகுத்துணர்ந்து சர்வேசுவரனுக்கு ஆட் படாதவனுக்கு
அப்பெருமான் அருள்புரியா னென்பது, “என்றும் தான் அவனே” என்பதனால் விளக்கப்பட்டது.
சர்வேசுவரனது திருவடிகளை வணங்காமல் தானே சர்வேசுவர னென்று சொன்ன இரணியனை அப்பெ ருமான் நிக்கிரகித்ததும்,
சர்வேசுவரனுக்கு அடிமையென்று தன்னை யெண் ணிய இரணியபுத்திரனானபிரகலாதனை அப்பெருமான் அநுக்கிரகித்ததும் பிரசித்தம்;
ஆகவே, “தாள்வணங்காத் தானவனாக மிடந்தானுக்கு” என்ற விசேஷ்யம் இங்கு ஓர் அபிப்பிராயத்தோடு கூறப்பட்ட தாகுதலால்,
கருத் துடையடைகொளியணி. தான் அவனாக நினைந்திருக்கின்ற ஜீவாத்மாவுக் குப் பரமாத்மா அந்நினைப்பிற்கு
ஏற்பத் தான் அவனேயாவன்என ஒருசமத் காரந்தோன்றக் கூறினார்; “அவன்” என்பதை இருவகைப்பொருள்படவைத்த நயம், இங்குக் கருதத்தக்கது:
(இதனை, “கழல்வளையைத் தாமுங் கழல்வளையே யாக்கினரே” என்றாற்போலக் கொள்க.)
இது – பிரிநிலைநவிற்சியணி யின்பாற்படும்; பெயர்ச்சொற்களுக்கு உறுப்பாற்றலால் வேறொரு பொருளைத் தந்துரைத்தல்,
இதன் இலக்கணம். அவனாக – எம்பெருமான்போல ஸ்வதந்திரனாக என்றுங் கொள்க.

நாகம – யானையென்ற பொருளில், நகத்தில்வாழ்வ தென்று காரணப் பொருள்படும்: நகம் – மலை.
திருவேங்கடம் எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றையெல்லாத் திவ்விய தேசங்களினும் மிகப்
பாங்கான வாஸஸ்தாந மாதலால், “உகந்ததான நாகம்” எனப்பட்டது;
அங்ஙனஞ் சிறப்புடையதாதல், புராணங்களினாலும் விளங்கும். “நாகமுடியினின்றானுக்கு” என்பதற்கு –
காளியனென்னும் பாம்பினது தலையின்மேல்நின்று நடனஞ்செய்தவனுக்கு என்று பொருள்கூறுதல் பொருந்தாது;
அங்ஙனங்கொள்ளின், இவ்வகைப்பிரபந்தத்திற் செய்யுள்தோறும் பிரபந்தத்தலைவன்பெயரையேனும்
அவனது ஊர்ப்பெயரையேனுங் கூறும் மரபு இச்செய்யுளில் தவறிய தாய்விடும்;
“உகந்ததான” என்ற அடைமொழியின் உரிமையையும் உய்த்துணர்க. தானவனென்பது, அசுரனென்றமாத்திரமாய் நின்றது;
இரணியன் காசியபமுனிவர் மனைவியருள் திதியென்பவளது மகனாதலின்.

இது, யமகச்செய்யுள்.

————–

தானவர் ஆகம் தடிவார் வடமலைத் தண் அம் துழாய்
ஞான வராகர் தரும் அண்டம் யாவையும் நண்ணி அவர்
கால் நவராக விரல் தோறும் அத்திக் கனியின் வைகும்
வானவர் ஆக இருப்பார் அவற்றுள் மசகங்களே –58-

(இ – ள்.) தானவர் – அசுரர்களுடைய,
ஆகம் – உடம்பை,
தடிவார் – துணிப்பவரான,
வட மலை தண் அம் துழாய் ஞானம் வராகர் – திருவேங் கடமலையில்எழுந்தருளியிருக்கிற குளிர்ந்த அழகிய
திருத்துழாய்மாலையை யுடைய ஞானவராகமூர்த்தியான எம்பெருமான்,
தரும் – படைத்த,
அண்டம் யாவையும் – அண்டகோளங்களெல்லாம், –
அவர் கால் நவ ராக விரல்தோறும் – அவருடைய திருவடிகளின் புதிய செந்நிறமாகத்தோன்றுகின்ற விரல்கள்தோறும்,
அத்தி கனியின் – அத்திப்பழங்கள் (அம்மரத்தில் ஒட்டிக்கிடத்தல்) போல,
நண்ணி வைகும் – பொருந்தித் தங்கும்;
வானவர் ஆக இருப்பார் – (அவ்வண்டங்களில்) தேவர்களாக விளங்குபவர்கள், –
அவற்றுள் மசகங்களே – அவ்வத்திப்பழங்களில் மொய்த்துக்கிடக்கின்ற கொசுகுகள் போல்வர்; (எ – று.)

“ஆழிப்பிரானடிக்கீ “ற்பவித்தழியும், பரவையில்மொக்குளைப்போற் பலகோடி பகிரண்டமே” என்றதனாலும்,
அண்டகோளங்கள் எம்பெருமான்திருவடியில் தோன்றுவனவாதல் அறிக.
பிரளயப்பெருங்கடலில்மூழ்கி யிருந்த பூமியை மேலேயெடுக்கநினைத்துத் திருமால் பன்றிவடிவுகொண் டருளிக் கோட்டு
நுனியாற் பூமியையெடுத்துவந்து பூமிதேவியை இடுப்பில் ஏந்திக்கொண்டு அவட்கு ஞானோபதேசஞ்செய்கிற வியாஜத்தால்
தத்துவப் பொருள்களை உலகத்துக்குஉணர்த்தியருளியதனால், “ஞானவராகர்” எனப் பட்டனர்.

தாநவர் என்ற வடமொழிப்பெயர் – (காசியபமுனிவரது மனைவியருள்) தநுவென்பவளது சந்ததியா ரென்று பொருள்படும்;
தத்திதாந்தநாமம். ஜ்ஞாநவராஹர், நவராகம், மசகம் – வடசொற்கள். கனியின், இன் – ஐந்தனுருபு, ஒப்பு – உவமையணி.

இதனால், எம்பெருமானது விராட்ஸ்வரூபத்தின் பெருமையையும், மற்றைத்தேவர்களின் சிறுமையையும் உணர்த்தினார்.
நால்வகைத்தோற்றத்து எழுவகைப்பிறப்பினுட் சிறந்த தேவர்களை மசகங்க ளென்றதனால், மற்றையுயிர்களின் இழிவு தானே விளங்கும்.

—————

பாங்கி வெறி விளக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

மசகம் தரம் என்னல் ஆய நிலையா உடல் வாழ் உயிரை
அசகம் தர வல்லதோ அன்னைமீர் அண்டம் உண்டு உமிழ்வா
ரிசசுந்தர வண்ணர் வேங்கட வாணர் இலங்கையர் கோன்
தெகந்தரம் அறுத்தார் திருப் பேர் சொல்லும் தீங்கு அறவே –59-

(இ – ள்.) அன்னைமீர் – தாய்மார்களே! –
மசகம் தரம் என்னல் ஆய் – கொசுவுக்குச்சமான மென்று சொல்லத்தக்கதாய்,
நிலையா – நிலையில்லாத தாகிற,
உடல் – உடம்பில்,
வாழ் – (விதிவசத்திற்குஏற்ப) வாழ்கிற, உயிரை -,
அச கம் தர வல்லதோ – ஆட்டின்தலையானது கொடுக்கவல்லதோ? (அன்று என்றபடி); (இனி நீங்கள்),
தீங்கு அற – (இத்தலைவிக்கு நேர்ந்துள்ள) துன்பம் ஒழியுமாறு, –
அண்டம் உண்டு உமிழ் வாரிச கந்தர வண்ணர் – அண்ட கோளங்களை (ப்பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டு,
(பிரளயம்நீங்கினவாறே) வெளிப்படுத்தியவரும் தாமரை பூத்ததொரு மேகம் போன்ற வடிவமுடையவரும்,
இலங்கையர்கோன் தெச கந்தரம் அறுத்தார் – இலங்காபுரி யில்வாழ்ந்த இராக்கதர்க்கு அரசனாகிய இராவணனது பத்துத்தலைகளையும் துணித்திட்டவருமான,
வேங்கட வாணர் – திருவேங்கடத்துறைவாரது,
திரு பேர் – திருநாமங்களை,
சொல்லும் – சொல்லுங்கள்; (எ – று.) – தீங்கறச் சொல்லும் என இயையும்.

களவொழுக்கத்தால் தலைமகளைக்கூடிய தலைமகன் பின்பு அவளை வெளிப்படையாக மணஞ்செய்துகொள்ளும்பொருட்டுப்
பொருள்தேடிவருதற்காக அவளைப் பிரிந்துசெல்ல, அந்நிலையிற் பிரிவாற்றாது மிகவருந்திய தலைமகளைச் செவிலித்
தாய்மார் எதிர்ப்பட்டு அவளது வடிவுவேறுபாட்டை நோக்கி இவள் இங்ஙனம் மெலிதற்குக்காரணம் என்னோ?’ என்று
கவலையுற்றுக் கட்டுவிச்சியைக் குறிகேட்க,
அவளும் தன் மரபின்படி ஆராய்ந்து ‘இவளுக்கு’முருகக்கடவுள் ஆவேசித்ததொழியப் பிறிதொன்றுமில்லை’ என்றுகூற,
அது கேட்ட செவிலித்தாயர் உடனே தலைமகள்பக்கல் தமக்குள்ள அன்பின்மிகுதியால் ஏதேனும் ஒரு தெய்வத்தை வழி
பட்டாகிலும் இவளை உயிர்த்திருக்கப் பெறில் அதுவே நமக்கு ஆத்மலாப மென்றெண்ணி வழியல்லாவழியிலே யிழிந்து
அதற்குப் பரிஹாரமாக வேலனெனப்படுகிற வெறியாட்டாளனை யழைப்பித்து அவனைக்கொண்டு ஆவேசம் ஆடுவித்து
ஆடுபலியிடுதல், கள்ளிறைத்தல், இறைச்சிதூவல், கருஞ்சோறுசெஞ்சோறுவைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது
ஒன்றன் மேலொன்றாகச் செய்யத்தொடங்க நோயொன்றும் மருந்தொன்று மாதலால் தான்காதலித்த புருஷோத்தம னான
தலைமகனது தகுதிக்கு ஏலாத அச்செயல்களை நோக்கித் தலைமகள் மேன்மேல் மிகவருந்த,
அவளது துன்பத்தின் மெய்க்காரணத்தை யறிந்த தோழி அச்சமயத்திற் செவிலியரை நோக்கிச் சிலகூறி
வெறிவிலக்கித் தலைவியினது துன்பத்தின் உண்மைக்காரணத்தை யுணர்த்துகின்ற துறை, இது.
இதன் மெய்ப்பாடு, பெருமிதத்தைச்சார்ந்தநகை, பயன் – அறத்தொடுநிற்றல்.

ஆடுபலிகொடுத்தல், இவளுடம்பினின்று உயிர்நீங்காதபடிசெய்து மரண வேதனைப்படுகிற இவளைப்
பிழைப்பிக்கமாட்டாது என்ற பொருளை “உடல் வாழுயிரை அச கம் தரவல்லதோ’ என்றாள்;
தான் கரையேறாதவன் பிறரைக் கரையேற்றமாட்டாமைபோல, தான் கழுத்தறுப்புண்டு இறக்கின்ற ஆடு
இவளுயிரைப் பிழைப்பிக்கமாட்டா தென்க:
“வீழ்வார்க்கு வீழ்வார் துணை” என்றபடி இறக்கிற ஓர்உயிரோ மற்றோர் இறக்கிற உயிரைக் காத்தற்குத் துணையாகும்! என்றாள்.
க்ஷுத்ரதேவதையின் ஆவேசத்தால் வரும் நோய்க்குப் பரிஹாரமாகிற, இவ்விழிப்பொருள் பரம்பொருளிலீடு பாட்டினால்
வந்த நோய்க்குப் பரிஹரமாகா தென்றவாறு.
அற்பப்பிராணியான மசகத்தை உவமை கூறினது, யாக்கைநிலையில்லாமையை விளக்குதற்கு.
அன்னை மீர் – உண்மைக்காரணமுரைக்கப்படுதற்கு உரிமையையும் இவளியல்பிற்கு ஏற்றபடி நன்மைசெய்யும்
வாற்சலியத்தையும் உடையவர்களேயென்றபடி. லோகஸம்ரக்ஷணத்தில் எம்பெருமானுக்கு உள்ள ஆதரத்தையும்,
அற்புதசக்தியையும் குறித்தற்கு, ‘அண்டமுண்டுமிழ் வேங்கடவாணர் இலங்கையர் கோன்தெசகந்தரமறுத்தார்’ என்றார்.
‘வாரிச கந்தர வண்ணர்’ என்றது, தலைவனது திருமேனியழகில் ஈடுபாடு.
அத்தன்மையானவரது திருநாமத்தைச் சொல்லு மென்றது, உலகமுழுவதுக்கும்வந்த நோயைப் பரிஹரித்தவனது
பெயர் தானே இவள்நோயைப்பரிகரித்தற்குத் தக்கதென்றபடி.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் வெறிவிலக்குத்திருப்பதிகத்தில்
“மருந்தாகுமெ ன்றங்கோர் மாயவலவைசொற்கொண்டு நீர்,
கருஞ்சோறும் மற்றைச்செஞ்சோறும் களனிழைத் தென்பயன்,
ஒழுங்காகவேயுலகேழும் விழுங்கியுமிழ்ந் திட்ட, பெருந்தேவன்பேர் சொல்லகிற்கில் இவளைப்பெறுதிரே’ என்று அருளிச்செய்தமை அறிக.
இந்நோய்தீர்த்தற்குத் தலைவனது திருநாமம் தக்கமந்திரமென்க. அம்மந்திரமாகிய மருந்தை இவள் செவியின்
வழியாகச் செலுத்துங்க ளென்றாள்.
திருமாலாகிய தலைமகனால் நேர்ந்த நோய்க்கு அவனது நாமசங்கீர்த்தனமொழிய வேறுபரிகார மில்லை யென்றாள்.

“வாநிசகந்தரவண்ணர்’ என்பதற்கு – கீழ் 11 – ஆஞ் செய்யுளில்
“அம்பரந்தாமரைபூத்தலர்ந்தன்னவவயவர்” என்றதற்கு உரைத்தாங்கு உரைக்க.
அஜகம், வாரிஜகந்தரவர்ணர், தசகந்தரம் என்ற வடமொழித்தொடர்கள் விகாரப்பட்டன.
வாரிஜம் – நீரில்தோன்றுவது: தாமரைக்குக் காரண விடுகுறி: மலர்க்கு முதலாகுபெயர்.
கந்தரம் என்பது – மேகமென்ற பொருளில் நீரைஉட்கொண்ட தென்றும்,
கழுத்தென்றபொருளில் தலையைத்தரி ப்ப தென்றும் காரணப்பொருள்பெறும்: கம் – நீர், தலை. ஒ – எதிர்மறை.
வேங்கடவாணர் – திருவேங்கடமலையில் வாழ்பவர். வாழ்நர்என்பது, வாணர் என மருவிற்று.
தெசகந்தர மென முதலில் எகரம் பெற்றது, மோனைத் தொடையின் பொருட்டு.

எம்பெருமானது சேர்க்கையைப் பெறாமல் வருந்துகின்ற ஐயங்காரது துயரத்தைக்கண்ட ஞானிகள், அவர் பக்கல்
வைத்தபரிவா லுண்டான கலக்கத்தால், எம்பெருமான் உபாயாந்தரங்களால்அடையத்தக்கவனல்ல னென்பதை மறந்து,
தேவதாந்தரபஜநத்தாலாவது இவரது ஆற்றாமையைத் தணிப்பிக்கலாமோவென்று தொடங்கியநிலையில்,
ஐயங்காரதுதன்மையை அறிந்த அன்பர்கள் விலக்கிக்கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைப்பொருள்.
ஞானிகள் தாம் அங்ஙனம் வழியல்லாவழியிலே இழிவார்களோ வென்னில், – ஐயங்கார்பக்கல் தாம்கொண்ட பரிவின்
மிகுதி தம்மைக் கலங்கப்பண்ணு கையால், அமார்க்கங்களாலேயாகிலும் பரிஹரிக்கப்போமோ வென்று முயன்றன ரென்க;
(இதனை, “அயோத்தியாபுரியிலுள்ள சனங்களெல்லாரும் இராமனுடையக்ஷேமத்தின் பொருட்டு எல்லாத்
தேவர்களையும் வணங்கினர்’ என்றதனோடு ஒப்பிடுக.)
“அன்னைமீர்’ என்று விளித்ததனால், முதியரானநீர் இளையரானஎமது வார்த்தையை உபேக்ஷிக்கலாகாதென்று குறிப்பித்தபடி.
“அண்டமுண்டுமிழ்…. திருப்பேர்சொல்லும்’ – காக்குங்கடவுளின்நாமோச் சாரணமே துயரனைத்தையுந் தீர்க்கு மென்றதாம். பிறவுங் கண்டுகொள்க.

—————-

தீங்கு அடமால் அத்தி முன் நின்று காலிப்பின் சென்ற கொண்டல்
வேங்கடமால் கழலே விரும்பார் விலை மாதர் மல
ஆம் கடம் மால் செய மாலாய் அவர் எச்சில் ஆகம் நச்சி
தாங்கள் தமால் அழிவார் இருந்தாலும் சவப் பண்டமே –60-

(இ – ள்.) தீங்கு அட – (முதலையினாலாகிய) தீமையை அழிக்குமாறு,
மால் அத்தி முன் நின்று – (கஜேந்திராழ்வானாகிய) பெரியயானையின் எதிரிலே வந்துநின்று,
காலி பின் சென்ற – (கிருஷ்ணாவதாரத்தில்) பசுக்களை மேய்த்தற்பொருட்டு அவற்றின்பின்னேபோன,
கொண்டல் – நீர்கொண்ட காளமேகம்போன்றவனான,
வேங்கடம் மால் – திருவேங்கடமலையி லெழுந் தருளியிருக்கின்ற திருமாலினது,
கழலே – திருவடிகளையே,
விரும்பார் – விரும்பாதவர்களாய், –
விலை மாதர் – வேசையருடைய,
மலம் ஆம் கடம் – அசுத்தம்நிறைந்த பாண்டம் போன்ற உடம்பு,
மால் செய – மயக்கத்தைச் செய்ய,
மால் ஆய் – (அவர்கள்பக்கல்) மோகங்கொண்டு,
அவர் எச்சில்ஆகம் நச்சி – அவர்களுடைய எச்சிலாகிய உடம்பை விரும்பி,
தாங்கள் தமால்அழிவார் – தாங்கள் தங்கள் குணக்கேட்டினாலேயே அழிபவர்கள், –
இருந்தாலும் – (இறவாமல் உலகத்தில்) உயிர்வாழ்ந்திருந்தாலும்,
சவம் பண்டமே – பிணமாகிய பொருளே யாவர்; (எ – று.)

பகவத்விஷயத்தில் ஈடுபடாது விஷயாந்தரத்தில் ஈடுபட்டவர்களுடைய சன்மம் வீண் என்பதாம்.
மனிதசன்மமெடுத்ததன்பயனான நற்கதிப் பேற்றை அவர்கள் அடையாமையால், அவர்களுயிர்வாழ்க்கை பழுதெனப் பட்டது.
விலைமாதர் – விலைகொடுப்பவர்யாவர்க்கும் தம்நலத்தை விற்கும் பொதுமகளிர்.
மலம் ஆம் கடம் மால் செய மாலாய் அவராகம் நச்சி –
“ஊறியுவர்த்தக்கவொன்பதுவாய்ப்புலனுங், கோதிக்குழம்பலைக்குங்கும்பத் தைப் – பேதை,
பெருந்தோளி பெய்வளா யென்னும் மீப்போர்த்த, கருந் தோலாற் கண்விளக்கப்பட்டு” என்ற நாலடியாரைக் காண்க.
எச்சிலாவது – உண்டு எஞ்சியது; (எஞ்சு – பகுதி, இல் – பெயர்விகுதி, வலித்தல் – விகாரம்.)
விலைமாதருடம்பு, பலரும்விரும்பி நுகர்ந்துவிட்ட தாதலால், ‘எச்சிலாகம்’ எனப்பட்டது.
“நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை, நிலைகலக்கிக் கீழிடுவானும் –
நிலையினும், மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத், தலையாகச் செய்வானும் தான்” என்றபடி
தம்தம் உயர்வுதாழ்வுகட்கு அவரவரு டையசெயலே காரண மாதலால், ‘தாங்கள் தமால்அழிவார்’ என்றார்.
கொண்டல் – எம்பெருமானுக்கு, நிறத்தினாலன்றி, குளிர்ச்சி கைம்மாறுகருதாது கருணைமழைபொழிதல்
தாபந்தீர்த்தல் முதலிய குணங்களாலும் உவமை.

அத்தி – ஹஸ்தீயென்ற வடசொல்லின் விகாரம்; ஹஸ்தம் – கை: இங்கே, துதிக்கை;
அதனையுடையது ஹஸ்தீ எனக் காரணக்குறி. முதலடியில், “முன்நின்று பின்சென்ற” என்றவிடத்து முரண்தொடை காண்க.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading