வன் குறிஞ்சி மாதர் பால் வானோர் மருந்துக்கு
மென் குறிஞ்சித் தேன் மாறும் வேங்கடமே -நன்கு உறிஞ்சி
பேய்த்தநம் சுவைத்தார் பிறர்க்கு அமுது ஈந்து ஈசனுக்கு
வாய்த்த நஞ்சு வைத்தார் வரை –41-
(இ – ள்.) வல் குறிஞ்சி மாதர்பால் – வலிய குறிஞ்சிநிலத்து மகளிராகிய குறத்தியரிடத்து,
வானோர் – தேவர்கள்,
மருந்துக்கு – அமிருதத்துக்கு,
மெல் குறிஞ்சி தேன் மாறும் – குறிஞ்சிமரத்திற் கட்டிய இனிய தேனைப் பண்டமாற்றலாற் கொள்ளப்பெற்ற,
வேங்கடமே – , –
பேய் தநம் – பேய்மகளாகிய பூதனையினது முலையை,
நன்கு உறிஞ்சி சுவைத்தார் – நன்றாக உறிஞ்சிப் பால்குடித்தவரும்,
பிறர்க்கு அமுது ஈந்து – மற்றைத்தேவர்களுக்கு அமிருதத்தைக் கொடுத்து,
ஈசனுக்கு – சிவனுக்கு,
வாய்த்த நஞ்சு வைத்தார் – பொருந்தின விஷத்தை உண்ணவைத்தவரு மாகிய திருமாலினது,
வரை – திருமலை; (எ – று.)
தம்மிடத்து மிகுதியாகவுள்ள பண்டத்தை விலையாகக் கொடுத்து அதற்கு ஈடாகத் தமக்கு வேண்டிய அருமையான பொருளை
வாங்கிக் கொள்ளுகிற பண்டமாற்று முறைப்படி மேலுலகத்திலுள்ள தேவர்கள் திருவேங்கட மலையின்மீது
உள்ள குறிஞ்சி நிலத்து மகளிரிடம் அமிருதங் கொடுத்து அதற்கு ஈடாகத் தேன் பெற்றுக்கொள்கின்றனரென்ற இதில்,
தேவலோகத்துக்கு மிக்க சமீபமாயிருக்கும்படி இத்திருமலை ஓங்கியுயர்ந்துள்ள தென்பதும்,
தேவர்களுடைய சஞ்சாரம் இம்மலையில் நிகழ்கின்ற தென்பதும் விளங்குதலோடு, அமிருதத்தை யுண்பவரான
தேவர்கள் அதனை வெறுத்து ஒழித்து அதனினும் இனிய தென்று விரும்பிப் பெற்றுக்கொள்ளும்படி யுள்ளது
அந்நிலத்துத் தேனினது மிக்கசுவை யென்பதும் தோன்றும். மலையும், மலைசார்ந்த இடமும் – குறிஞ்சிநிலம்.
அந்நிலம், குறிஞ்சிமரத்தை யுடைமையால், அப்பெயர் பெற்றது.
திருமால், திருப்பாற்கடல்கடைகையில் அதனினின்று உண்டான பல பொருள்களுள் விஷத்தைச்
சிவபிரானுக்குக் கொடுத்து உண்ணச்சொல்லி, அதனால் அப்பிரானுக்கு வெப்பமுண்டாகாமல் தணிந்திருக்கும்
பொருட்டு உடனே சந்திரனையுங் கொடுத்து அதனைச் சிரமேற்கொள்வித்து, தேவர் கட்கெல்லாம் அமிருதத்தையும்,
அவர்களில் இந்திரன் முதலிய சிலர்க்கு மற்றுஞ் சிலபொருள்களையுந் தந்து, தான் சில பொருள்களைக்
கொண்டரு ளின னென்ற வரலாறுபற்றி, “பிறர்க்கு அமுதீந்து ஈசனுக்கு வாய்த்தநஞ்சு வைத்தார்” என்றார்;
“வெருவு மாலமும் பிறையும் வெவ்விடையவற்கீந்து” என்றார் கம்பரும்.
சிவபிரானாகிய பாத்திரத்தைக்கொண்டு திருமால் தானே தனது திவ்வியசக்தியால் விஷத்தை அமுதுசெய்தன னென்பர்.
வாய்த்த – தகுதிக்கு ஏற்ற என்றபடி. உறிஞ்சி, உறிஞ்சு – பகுதி. நன்கு – பண்புப்பெயர்; கு – விகுதி.
————–
வாவுகவின் மந்தி நுகர் மாங்கனிக்குக் கற்பகத்தின்
மேவு கவி கை நீட்டும் வேங்கடமே –தாவு கடல்
வேவ இலங்கைக்கு ஒண் தார் வீடணனை வைத்து ஒழிந்தார்
சாவவில் அங்கைக் கொண்டார் சார்பு –42-
(இ – ள்.) வாவு – தாவிச்செல்லும் இயல்புள்ள,
கவின் மந்தி – அழகிய பெண்குரங்கு,
நுகர் – (கைக்கொண்டு) உண்கின்ற,
மா கனிக்கு – மாம்பழத்துக்கு,
கற்பகத்தில் மேவு கவி கை நீட்டும் – கற்பகவிருக்ஷத்திற் பொருந்திய ஆண்குரங்கு கைநீட்டப்பெற்ற,
வேங்கடமே – , –
தாவு கடல் வேவ – அலைபொங்கி யெழு மியல்புள்ள கடல் கொதிப்படையும்படியும்,
ஒள் தார் வீடணனை இலங்கைக்கு வைத்து – பிரகாசமான ஆரத்தை யணிந்த விபீஷணனை இலங்காபுரிக்கு (அரசனாக) வைத்து,
ஒழிந்தார் சாவ – அவனல்லாத அரக்கர் பலரும் இறக்கும்படியும்,
வில் அம் கை கொண்டார் – (கோதண்டமென்னும்) தமது வில்லை அழகியகையில் ஏந்தியவராகிய திருமால்,
சார்பு – சாருமிடம்; (எ – று.)
மேலுலகத்துக் கற்பகச்சோலையிலுள்ள குரங்கு திருவேங்கடமலையின் மாஞ்சோலையிலுள்ள குரங்கை நோக்கிப்
பழங்கேட்கும்படி திருவேங்கட மலையும் அம்மலையில் வளம்பெற்ற சோலைகளும் ஓங்கியுயர்ந்துள்ளன வென்ற பொருளோடு,
கற்பகச்சோலையிலிருந்து வேண்டியவைபெற்று உண்ணும் அக்குரங்கு அவ்விடத்துப் பழங்களினும்
மிகஇனியதென்று விரும்பிக் கைநீட்டி இரக்கும்படி யுள்ளது திருவேங்கடமலைச்சோலையின்
மாம்பழத்துச் சுவை மிகுதி யென்ற கருத்தும், இதில் தோன்றும்.
அணைகட்டுதற்கு இடங்கொடாத சமுத்திரராசனைச் செருக்கடக்கும்பொருட்டு அவன் மீது ஆக்நேயாஸ்திரத்தைப் பிரயோகித்தற்காக
ஒருமுறையும், சாதுவான விபீஷணனை யொழிந்த இராவணன் முதலிய கொடிய அரக்கர் அனைவரையும் அழித்தற்காக
அம்பு எய்தற்கு மற்றொருமுறையும் வில்லையெடுத்து வளைத்தன னென்பார்,
“தாவுகடல் வேவ இலங்கைக் கொண்டார் வீடணனை வைத் தொழிந்தார் சாவ விலங்கைக்கொண்டார்” என்றார்.
இதனை “கடல்வழிவிட நிசிசரர் பொடிபட விருகண்சீறி” என்றாற்போலக் கொள்க.
இராமபிரான், போர்செய்து இராவணாதியரைத் தொலைத்தற்பொருட்டு வாநரசேனையோடு புறப்பட்டுத்
தென்கடற்கரை சேர்கையில், தன்னை வந்து சரணமடைந்த இராவணனது தம்பியான விபீஷணனுக்கு அபயமளித்து
அப்பொழுதே அவனுக்கு இலங்காபுரியி னரசாட்சியை முன்னதாகவே அளித்து முடிசூட்டிவைத்துப் பின்பு
சேதுபந்தனஞ் செய்து கடல் கடந்து இலங்கைபுக்கு அரக்கர்களை அழித்தபின் முன்சங்கற்பித்தபடி மீட்டும்
இலங்கையில் விபீஷணனுக்குப் பட்டாபிஷேகஞ்செய்வித்தன னென்பது,
“இலங்கைக்கு வீடணனை வைத்து ஒழிந்தார் சாவ வில் அங்கைக் கொண்டார்” என்றதனால் விளக்கப்பட்டது.
வீடணன் – விபீஷணன் என்ற வடசொல்லின் விகாரம்; அப்பெயர் – (பகைவர்க்கு) மிகப்பயங்கரனானவனென்று பொருள்படும்.
கவி – கபி யென்ற வடசொல்லின் திரிபு. “வேக,” “சாக” என்ற பாடங்களுக்கு, கு – சாரியை யென்க.
———
வெள்ளிய கல் மீதே விடர் முளைத்த செங்காந்தள்
வெள்ளி அகல் விளக்கு ஆம் வேங்கடமே –வெள்ளி எனும்
வேதியன் நாட்டம் கெடுத்தார் மேதினியைப் பாதலம் என்று
ஒது இயல் நாடு அங்கு எடுத்தார் ஊர் –43-
(இ – ள்.) வெள்ளிய கல்மீதே – வெண்ணிறமான வட்டப்பளிங்குக் கல்லின்மேலே,
விடர் முளைத்த – அக்கற்பிளப்பிலே முளைத்தெழுந்த,
செம் காந்தள் – செந்நிறமான காந்தளின்மலர்,
வெள்ளி அகல் விளக்கு ஆம் – வெள்ளியினாலாகிய தகழியில் ஏற்றப்பட்ட விளக்குப் போலத் தோன்றப் பெற்ற,
வேங்கடமே – , –
வெள்ளி எனும் வேதியன் – சுக்கிரனென்னும் அந்தணனது,
நாட்டம் – கண்ணை,
கெடுத்தார் – போக்கினவரும்,
மேதினியை – பூமியை,
பாதலம் என்று ஓது இயல் நாடு அங்கு எடுத்தார்–பாதாளமென்று பெயர்சொல்லப்படுகிற இயல்பையுடைய உலகமாகிய
அவ்விடத்தினின்று எடுத்தவருமான திருமாலினது, ஊர் – திருப்பதி; (எ – று.)
பளிங்கு வட்டத்து நடுப்பிளப்பில் முளைத்தெழுந்த காந்தட்செடியின் சிவந்த மலருக்கு,
வெள்ளித்தகழியில் ஏற்றிய விளக்கு உவமை கூறப்பட்டது; வடிவுவமை.
வெள்ளிய – வெண்மையென்னும் பண்பினடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம்; இ – சாரியை.
வெள்ளி – வெண்ணிறமுடையது; இ – பெயர்விகுதி. அந்நிறமுடைமைபற்றியே, சுக்கிரனுக்கு வெள்ளி யென்று பெயர்.
விடர் – கற்பிளப்பு. காந்தள் – மலர்க்கு முதலாகுபெயர். “செங்காந்தள்” என்பதில், செம்மை – ஆகுபெயர்ப்பொருளுக்கு ஏற்ற அடைமொழி.
வேதியன் – வேதம்வல்லவன். நாட்டம் – நாடுதற்குக் கருவியானது; அம் – கருவிப்பொருள்விகுதி; பகுதி இடையொற்று இரட்டியது, விரித்தல்.
மேதிநீ – வடசொல்; (திருமாலாற் கொல்லப்பட்ட மதுகைடபரது) மேதசினால் (உடற்கொழுப்பினால்) நனைந்தது. என்று காரணப்பொருள்.
தேசமென்னும் பொருள்தருகிற “நாடு” என்ற சொல், இலக்கணையால், லோகமென்றபொருளில் உபயோகிக்கப்பட்டது.
வெள்ளியெனும் வேதியன் நாட்டங்கெடுத்தார்
“மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில், தக்கதிதன்றென்று தானம்விலக்கிய,
சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய, சக்கரக் கையன்–என்ற பெரியாழ்வார் திருமொழியையுங் காண்க.
“ஓதிய நாட்டங்கு” என்று பாடமாயின், ஓதப்பட்ட அந்நாட்டினின்று என்று பொருள்கொள்க;
அப்பொழுது, அதற்கு ஏற்ப மூன்றாமடியிலும் “வேதியநாட்டம்” என்று பாடங்கொள்ளவேண்டும்:
அத்தொடரில் வேதியன் என்ற உயர்திணைப்பெயரின் ஈற்றுனகரம் வருமொழிப் புணர்ச்சியில்
“சிலவிகாரமா முயர்திணை” என்றதனாற் கெட்ட தென்க. இனி, திரிபு யமகங்களிலே பொருள்நோக்கில் நகரவேறுபாடு
காணப்படினும் அதனை அமைதியாகக் கொள்ளல் மரபு;
அதற்குக்காரணம், வரிவடிவில் மிக்க வேறுபாடு இருப்பினும் ஒலிவடிவில் மிக்கவேறுபாடு இல்லாமை.
————
அல்லி மலர்க் காந்தளின் மேல் ஆடும் சுரும்பினங்கள்
மெல்லியலார் கைக்கழங்கு ஆம் வேங்கடமே -மல்லினரைப்
பண்டு அறைந்த வன்புடையார் பார்த்தனுக்குத் தத்துவ நூல்
விண்டு அறைந்த அன்பு உடையார் வெற்பு –44-
(இ – ள்.) அல்லி – அகவிதழ்கள் நிறைந்ததான,
மலர் காந்தளின் மேல் – செங்காந்தள் மலரின்மேல்,
ஆடும் – அசைந்தசைந்து மொய்த்து எழுகின்ற,
சுரும்பு இனங்கள் – வண்டுகளின் கூட்டங்கள்,
மெல்லியர்கள் கை கழங்கு ஆம் – மகளிர்களாற் கையிற்கொண்டு ஆடப்படுகின்ற கழற்காய் போன்றிருக்கப்பெற்ற,
வேங்கடமே – , –
பண்டு – முன்பு,
மல்லினரை – மற்போர்வீரர்களை,
அறைந்த – தாக்கியழித்த,
வன்பு உடையார் – வலிமை கெடாதவரும்,
பார்த்தனுக்கு – அருச்சுனனுக்கு,
தத்துவம் நூல் – தத்துவசாஸ்திரமாகிய கீதையை,
விண்டு அறைந்த – வெளியிட்டுக் கூறியருளிய,
அன்பு உடையார் – அன்பையுடையவருமாகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)
மெல்லியர் – மென்மையான தன்மையையுடையவர். மகளிரது சிவந்த கை – செங்காந்தளுக்கும்,
திரண்டுஉருண்ட கழற்சிக்காய் – வண்டுக்கும், மகளிர் கைகளிற்கொண்டு ஆடும்போது அக்காய்கள்
அக்கைகளின்மேல் எழுந்தெழுந்து ஆடி மீண்டும் அவற்றில்விழுதல் – காந்தள்மலரின்மேல் வண்டு விழுந்து
எழுந்தெழுந்து மொய்த்தற்கும் உவமை; வடிவுந் தொழிலும் பற்றியது. ஆம் – உவமவுருபு.
மெல்லியர், இ – சாரியை. மல்லினர் – மல்லர்: இன் – சாரியை.
மற்போராவது – படைக்கலமின்றி உடல்வலிமைகொண்டு பலவகையாகச் செய்யும் போர். “பண்டு” என்றது, கிருஷ்ணாவதாரத்தை.
பார்த்தனுக்குத் தத்துவநூல் ஓதியது: – மகாபாரதயுத்தத்தில் முதல் நாட்போர்த்தொடக்கத்தில் எதிர்வந்துநின்ற வீரர்களெல்லாம்
பாட்டனும் அண்ணன் தம்பிமாரும் மாமனும் உறவினரும் கல்வி பயிற்றிய ஆசாரியரும் மனங்கலந்த
நண்பரு மாகவே யிருக்கக் கண்டு “உற்றாரையெல்லாம் உடன்கொன்று அரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்” என்று
எண்ணிப் போர்புரியேனென்று காண்டீவம் கைந்நெகிழத் தேர்த்தட்டின் மீதே திகைத்துநின்ற அருச்சுனனுக்குக்
கண்ணன் தத்துவோபதேசஞ் செய்து தனதுவிசுவரூபத்தைக்காட்டி அவனது மயக்கத்தை ஓட்டி
அவனைப் போர்புரியுமாறு உடன்படுத்தினன் என்பதாம்.
அப்பொழுது உபதேசித்த தத்துவப்பொருளே, ஸ்ரீபகவத்கீதையென வழங்கப்படுகின்ற நூலாம். தத்வம் – வடசொல்; உண்மைப்பொருள்.
தத்துவநூல் – ஜீவாத்மா பரமாத்மா இவர்கட்குஉள்ள சம்பந்தம், கர்மம், பிறப்பு, முத்தி முதலியவற்றின் உண்மையான
தன்மையை உரைத்த சாஸ்திரம். பார்த்தன் – அருச்சுனன்; பிருதையின் மகன்: பிருதை – குந்தி.
விண்டு, விள் – பகுதி. உடையார் என்ற சொல் இரண்டனுள்,
முந்தி னது – உடையென்னும் வினைப்பகுதியின் மேற் பிறந்த எதிர்மறைத்தெரி நிலைவினையாலணையும்பெயரும்,
பிந்தினது – உடைமை யென்னும் பண்பி னடியாப் பிறந்த உடன்பாட்டுக்குறிப்புவினையாலணையும் பெயருமாம்.
இரண்டு அடியிலும் உடையவரென்றே பொருள்கொள்ளுதல், திரிபிலக்கணத் துக்கு ஒவ்வாது.
அல்லி யென்பதன் எதிர்மொழி – புல்லி; அது, புறவிதழைக் குறிக்கும்.
——–
காந்தள் இரவலர் போல் கை ஏற்ப கொன்றை கொடை
வேந்தன் எனப் பொன் சொரியும் வேங்கடமே –பூந்துளவின்
கான் மடங்கா மார்வத்தார் காண விரும்பினர் மேல்
நான் மடங்கு ஆம் ஆர்வத்தார் நாடு –45-
(இ – ள்.) காந்தள் – செங்காந்தள்மலர்,
இரவலர் போல் கை ஏற்ப – யாசகர் யாசித்தற்கு ஏற்கின்ற கை போன்று இருப்ப,
கொன்றை – கொன்றைமரம்,
கொடை வேந்தன் என பொன் சொரியும் – ஈகைக்குணமுடைய அரசன் (அந்த யாசகர்கையிற்)
பொன்னைச் சொரிவதுபோல (க் காந்தள் மலரின்மேல்) பொன்னிறமான தன்மலர்களைச் சொரிதற்கு இடமான,
வேங்கடமே – , –
பூ துளவின் – அழகிய திருத்துழாயினது,
கான் – வாசனை,
மடங்கா – மாறாத,
மார்வத்தார் – திருமார்பையுடையவரும்,
காண விரும்பினர்மேல் – (தம்மைச்) சேவிக்க விரும்பின மெய்யடியார்களிடத்து,
நால் மடங்கு ஆம் ஆர்வத்தார் – பலமடங்கு அதிகமாக வைக்கும் அன்பையுடைய வருமாகிய திருமாலினது,
நாடு – திவ்வியதேசம்; (எ – று.)
முன்னிரண்டடி – வடிவுபற்றிவந்த உவமையணி. கைபோலும் மலரை “கை” என்றும்,
பொன்போலும்மலரை “பொன்” என்றுங் கூறியது, உவமையாகுபெயர்.
கொடை – ‘ஐ’ விகுதி பெற்ற தொழிற்பெயர். இரவலர் – இரத்தலில் வல்லவர்; விடாது இரப்பவரென்க.
பூந்துளவின் கான்மடங்கா மார்வத்தார் – மிக்கபரிமளத்தையுடைய திருத்துழாய்மலையைத் திருமார்பில் எப்பொழுதும் சாத்தியுள்ளவர்.
நான்மடங்கு என்பதில், நான்கு என்பது – பலவென்னும் பொருளின்மேல் நின்றது;
இனி, தம்மிடத்து அடியார்கள் ஒருபங்கு அன்புவைத்தால் அவர்கள் பக்கல்தாம் அவ்வன்பினளவுக்கு
நான்கு பங்காக அன்புவைப்பவ ரென்றும் பொருளாம்.
———-
நாகத்தின் மேல் குறவர் நன்கு எறிந்த மாணிக்கம்
மேகத்தின் மின் புரையும் வேங்கடமே -மாகத்தின்
மாத்தாண்ட மண்டலத்தார் வாய் உண்டு உமிழ்ந்து அளந்து
காத்து ஆண்ட மண் தலத்தார் காப்பு –46-
(இ – ள்.) நாகத்தின்மேல் – யானையின்மேல்,
குறவர் – குறிஞ்சிநில மாக்கள்,
நன்கு எறிந்த – நன்றாக வீசியெறிந்த,
மாணிக்கம் – மாணிக்கமென் னும் இரத்தினங்கள்,
மேகத்தின் மின் புரையும் – மேகத்தினிடத்துக் காணப்படுகிற மின்னல்போல விளங்குதற்கு இடமான,
வேங்கடமே -,-
மா கத்தின் – பெரிய வானத்தில் விளங்குகின்ற,
மாத்தாண்ட மண்டலத்தார் – சூரியமண்டலத்தில் எழுந்தருளியிருப்பவரும்,
வாய் உண்டு – (யுகாந்தகாலத்தில்) வாயினாலே உட்கொண்டு,
உமிழ்ந்து – (பிரளயம் நீங்கின பொழுது மீண்டும்) வெளிப்படுத்தி,
அளந்து – (திரிவிக்கிரமாவதாரத்தில் திருவடியால்) அளந்து,
காத்து – (தாமான நிலையிலே) பாதுகாத்து,
ஆண்ட – (ஸ்ரீராமாவதாரத்தில்) அரசாளப்பட்ட,
மண் தலத்தார் – பூமியையுடையவரும் ஆகிய திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்குமிடம்; (எ – று.)
கருநிறமுள்ள பெரிய மதயானைக்குக் காளமேகமும், செந்நிறமுடைய தாய் விளங்குகின்ற மாணிக்கத்துக்கு
மின்னலும் உவமை யெனக் காண்க. மாணிக்கம் என்ற வடசொல், திரிந்தது. புரையும் – உவமவுருபு.
மாகம் -மஹாகம் என்ற வடசொல்லின் விகாரம். மார்த்தாண்டமண்டலம் என்ற வடமொழித்தொடர், விகாரப்பட்டது.
எம்பெருமான் திவ்வியமான உருவத்துடன் சூரியமண்டலத்தில் எழுந்தருளியிருத்தல்பற்றி, “மாகத்தின் மாத்தாண்டமண்டலத்தார்” என்றார்.
ஆண்ட என்பதற்கு – மனைவியாக ஆட் கொள்ளப்பட்ட என்றும் பொருளுரைக்கலாம்; பூமி தேவியாதல் காண்க.
“பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்ட, பேராளன்” என்ற திருநெடுந் தாண்டகம் இங்குக் காணத்தக்கது.
————
செம்பதும் ராகச் சிலை சூழ் பெரும் பாந்தள்
வெம்பரிதி ஊர் கோள் ஆம் வேங்கடமே -உம்பர் உலகு
ஓதத்தின் அப்பு உற தான் ஓர் ஆலிலைத் துயின்றான்
வேதத்தின் அப்புறத்தான் வெற்பு –47-
(இ – ள்.) செம் – செந்நிறமான,
பதுமராகம் சிலை – பதுமராகக்கல்லை,
சூழ் – சுற்றிக்கொண்ட,
பெரு பாந்தள் – பெரிய மலைப்பாம்பு,
வெம் பரிதி ஊர்கோள் ஆம் – வெவ்விய சூரியமண்டலத்தைச் சுற்றிக் காணப்படும் பரி வேஷம் போன்று தோன்றப் பெற்ற,
வேங்கடமே – , –
ஓதத்தின் அப்பு – பிரளய சமுத்திரத்தின் நீர்வெள்ளம்,
உலகு உம்பர் உற – எல்லாவுலகங்களையுங் கவிந்து அவற்றின்மேற் சென்று பரவ,
தான் ஓர் ஆல் இலை துயின்றான் – (அப்பெருங்கடலில்) ஓர் ஆலிலையின்மேல் தான் யோகநித்திரை கொள்கின்றவனும்,
வேதத்தின் அப்புறத்தான் . வேதங்களுக்கு எட்டாமல் அப்பாற்பட்டவனுமான திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)
பத்மராகம் – வடசொல்; செந்தாமரைமலர்போலச் செந்நிறமுடைய தென்று பொருள்படும்; இது, நவரத்தினங்களுள் ஒன்று.
செந்நிறமுள்ளதாக மிகவிளங்குகிற பதுமராக ரத்தினத்துக்கு – அங்ஙனம் விளங்குகிற சூரிய மண்டலமும்,
அவ்விரத்தினத்தைச் சுற்றிக்கொண்ட பெரும்பாம்புக்கு – சிற்சிலசமயங்களில் சூரியமண்டலத்தைச் சுற்றி அருகிற்
காணப்படுகிற ஊர் கோள்வட்டமும் உவமைகூறப்பட்டன. பரிதி – வடசொல்.
ஊர்கோள் – ஊர்ந்துகொள்வது எனப் பொருள்படும் காரணக்குறி; ஊர்தல் – வளைதல்.
உம்பருலகு உற என்றுஎடுத்து, மேலுள்ள தேவலோகங்களுக்கும் மேலே பொருந்த என்று உரைத்தலும் ஒன்று.
இனி, தேவலோகமுமுட்பட யாவும் கடல்வெள்ளத்தினுள்ளே அகப்பட எனினும் அமையும்.
வேதங்கட்கும் எட்டாதபடியுள்ளது எம்பெருமானது ஸ்வரூபமென்பது, வேதங்களினாலேயே விளங்குகின்றது.
————
கோல மணிப் பாறையில் பாய் கோடரங்கள் செங்கதிரோன்
மேல் அனுமன் பாய்ந்தனைய வேங்கடமே –நாலு மறை
ஆய்ந்த பர தத்துவம் தான் ஆனான் குடம் ஆடல்
வாய்ந்த பரதத்து உவந்தான் வாழ்வு –48-
(இ – ள்.) கோலம் – அழகிய,
மணி பாறையில் – மாணிக்கப்பாறையின் மேல்,
பாய் – பாய்கின்ற,
கோடரங்கள் – குரங்குகள்,
செங் கதிரோன் மேல் அனுமன் பாய்ந்து அனைய – சிவந்த சூரியமண்டலத்தின்மேல் அனுமான் பாய்ந்தாற்போலத் தோன்றுதற்கு இடமான,
வேங்கடமே – ,
நாலு மறை – நான்கு வேதங்களாலும்,
ஆய்ந்த – ஆராய்ந்து கூறப்பட்ட,
பர தத்துவம் – (எல்லாவற்றுக்கும்) மேலான உண்மைப்பொருள்,
தான் ஆனான் -தானேயானவனும்,
குடம் ஆடல் வாய்ந்த பரதத்து – குடமெடுத்து ஆடுதல் பொருந்தின கூத்தைச் செய்வதிலே,
உவந்தான் – திருவுள்ள முகந்தவனுமாகிய திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.) –
மணி – செம்மணி.
சுமேருபர்வதத்தில் கேசரியென்ற வாநர வீரனது மனையாளான அஞ்சனாதேவி வாயுதேவனது அநுக்கிரகத்தால்
ஒரு குமாரனைப்பெற்றுக் கனிகள் கொணர்தற்குக் காட்டிற்குச் செல்ல, அக்குமாரன் பசி பொறுக்கமாட்டாமல்
காலையிலுதித்த ஆதித்த பிம்பத்தைக் கனியெனக்கருதித் கவர்வான் எழுந்து, தந்தையாகியவாயுவினது உதவிகொண்டு
அச்சூரியமண்டலத்தின் மீது பாய்ந்தனனென்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது.
“செழுமலர்த்திரு வனையதாய் செழுங்கனிநாடிப், பழுவமுற்றிடப் பசியினாற்பதைபதைத் திரங்கி,
யழுதாற்றிய பாலக னன்னை முன்னுரைத்த, பழம் நமக்கிதுவாமென ப்பரிதிமேற் பாய்ந்தான்” என்றார் ஒட்டக்கூத்தரும்.
அப்பொழுது சூரியனைப் பிடிக்கவந்த இராகு இவ்வாநரனைக் கண்டு அஞ்சியோடி இந்திரனிடம் முறையிட,
இந்திரன் சினங்கொண்டு வந்து வச்சிராயுதத்தால் மெல்லப்புடைக்க, அக்குரங்கு கன்னத்தில் அடிபட்டுக் கன்னம் சிதையப் பெற்றதனால்,
அதற்கு, பிறகு “ஹநுமாந்” என்ற பெயர் இந்திரனால் வைக்கப்பட்டது.
ஹநுமாந் என்ற வடசொல் – கன்னத்தில் விசேஷமுடையவ னென்று பொருள்படும்;
ஹநு – கன்னம், மாந் – உடைமைப்பொருள் காட்டும் வட மொழிப்பெயர்விகுதி. அப்பெயர், அனுமன் என விகாரப்பட்டது.
செந்நிறமாக விளங்கும் சூரியமண்டலத்தின்மீது பாய்ந்த அநுமானென்னும் தெய்வக்குரங்கை,
செந்நிறமான மாணிக்கப் பாறையின்மேற் பாயும் குரங்குகட்கு உவமை கூறினார்.
நாலு – நான்கு ஈறுகெட்டு னகரம் லகரமாய் உகரச்சாரியைப் பெற்றது. பரதத்வம் – பரம்பொருள்.
குடமாடல் வாய்ந்த பாரதம் – குடக்கூத்து; அதாவது – இடையர்கள் செல்வச்செருக்கினால் தமது மகிழ்ச்சிக்குப்
போக்குவீடாகக் குடங்களையெடுத்து மேலேயெறிந்து மீண்டும்ஏந்தி ஆடுவதொரு கூத்து.
பஞ்சலோகங்களாலும் மண்ணாலுங்குடங் கொண்டு ஆடுவதென்பர். கண்ணபிரானுக்கு அக்கூத்தில் மிகவும்பிரியமாதலை
“குடங்களெடுத் தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே” என்ற பெரியாழ்வார் திருமொழியினாலும் உணர்க.
இப்பாசுரத்தின் வியாக்கியாநத்தில் “பிராமணர் ஐசுவரியம் விஞ்சினால் யாகாதிகள் பண்ணுமாபோலே
இடையர் ஐசுவரியம் விஞ்சினால் செருக்குக்குப் போக்குவிட்டு ஆடுவதொரு கூத்தாய்த்து, குடக்கூத்தாவது,”
“இடையர்க்கு ஐசுவரியந்தானாவது – கோஸம்ருத்தியிறே: அந்த ஸம்ருத்தி குறைவறவுள்ளது தனக்கே யாகையாலே,
அத்தால் வந்த செருக்குக்குப் போக்குவிட்டுக் குடக்கூத்தாடினபடி சொல்லுகிறது; தலையிலே அடுக்குக் குடமிருக்க,
இரண்டுதோள்களிலும் குடங்களிருக்க, இரண்டுகைகயிலும் குடங்களையேந்தி ஆகாசத்திலேயெறிந்து
ஆடுவதொரு கூத்தாய்த்து, குடக்கூத்தாவது” என்ற வாக்கியங்கள் இங்கு உணரத்தக்கன.
குடம் – தயிர்த்தாழி. “குடத்தால் குன்றெடுத்தோ னாடல்,” “நீணிலமளந்தோ னாடிய குடம்” என்றார் பிறரும்.
பரதம் – வடசொல்; பாவம், ரஸம், தாளம் இம் மூன்றையு முடைமைபற்றி, பரதமென்று நாட்டியத்துக்குப் பெயரென்பர்.
———-
கொம்பின் இறால் வாங்க நிமிர் குஞ்சரக்கை அம்புலி மேல்
வெம்பி எழும் கோள் அரவு ஆண் வேங்கடமே -தும்பி பல
போர் காதும் ஈர்ந்தார் புனை அரக்கி மூக்கினொடு
வார் காதும் ஈர்ந்தார் வரை –49-
(இ – ள்.) கொம்பின் – மரக்கொம்பிற்கட்டிய,
இறால் – தேன்கூட்டை,
வாங்க – எடுத்தற்கு,
நிமிர் – உயரத்தூக்கிய,
குஞ்சரம் கை – யானையினுடைய துதிக்கை,
அம்புலிமேல் வெம்பி எழும் கோள் அரவு ஆம் – சந்திர மண்டலத்தைப் பற்றுதற்கு அதன்மேல் கறுக்கொண்டு
எழுகின்ற கரும்பாம்பு வடிவமான (இராகுவென்னும்) கிரகம்போலத் தோன்றப்பெற்ற,
வேங்கடமே -,-
தும்பி பல போர் காதும் – பல வண்டுகள் நெருங்கி மொய்த்து ஒன்றோடு ஒன்று தாக்கப்பெற்ற,
ஈர் தார் – (தேனினாற்) குளிர்ந்த மலர்மாலையை,
புனை – தரித்த,
அரக்கி – சூர்ப்பணகையினது,
மூக்கினொடு – மூக்கையும்,
வார் காதும் – நீண்ட காதையும்,
ஈர்ந்தார் – அறுத்தவராகிய திருமாலினது,
வரை – திருமலை; (எ – று.)
இறாலுக்குச் சந்திரனும், அதன்மீது எடுத்த யானைத் துதிக்கைக்குச் சந்திரன்மீது எழும் இராகுவென்னும் பாம்பும்
வடிவில் உவமம் குஞ்சரம் – வடசொல்; காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்பது என்றும், துதிக்கையையுடையது என்றும் காரணப் பொருள்படுவது.
கிரகணகாலத்திற் சூரியனை மறைக்கின்ற சந்திரன் சாயையும், சந்திரனை மறைக்கின்ற பூமியின்சாயையும்
இராகு கேதுக்களென்னும் பாம்புவடிவமான கிரகங்க ளெனப்படும். பாற்கடல் கடைகையில் உண்டான அமிருத
கலசத்தை யெடுத்துக்கொண்ட திருமால் மிகவும் அழகிய மோகினியென்னும் பெண்வடிவத்தால்
அசுரர்களை மயக்கித் தேவர்களுக்கே அமிருதத்தைப் பங்கிட்டுக் கொடுத்து வருகையில், இராகுவென்னும் ஓரசுரன் தான்
இருத்தற்குஉரிய அசுரர் கூட்டத்தைவிட்டு வஞ்சனையாகத் தேவர்கூட்டத்தினிடையிலே புக்குக் கையேற்று அமிருதத்தை வாங்கி யுண்ண,
அதனைச் சூரியசந்திரர் குறிப்பித்த மாத்திரத்தில் எம்பெருமான் அவனை அகப்பையால் அடித்துத் தலைவேறு உடல்வேறாக்க,
அமிருத முண்டதனால் உயிர்நீங்காத அந்தத் தலையும் உடம்பும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தால் இராகு கேதுக்களென்ற
இரண்டு கிரகங்களாகிச் சூரியன்முதலிய ஏழு கிரகங்களோடு சேர்ந்து கரும்பாம்பு செம்பாம்புவடிவுபெற்று,
தம் மேற்கோள்சொன்ன சூரிய சந்திரர்க்குப் பகையாய்ச் சிற்சிலகாலத்தில் அவர்களைப் பிடித்துக்கொள்கின்றன வென்பது, புராணவரலாறு.
மலர்களின் தேனை யுண்ணுதற்பொருட்டுப் பல வண்டுகள் நெருங்கி மொய்க்கும்போது, நான்முன்னே நான்முன்னே யென்று
ஒன்றன்மேலொன்றாக விழு மென்பது, “தும்பியல போர்காதும்” என்பதன் கருத்து;
இது, தார்க்கு அடைமொழி; அரக்கிக்கு அடைமொழியாகக்கொண்டு, பலயானைகளோடு போர்செய்யும் வலிமையுடைய
என்று பொருள்கொள்ளவும் இடமுண்டு.
ஈர்ந் தார் – குளிர்ச்சியாகிய மாலை யெனக் கொண்டால் பண்புத் தொகையும், குளிர்ச்சியையுடைய மாலையெனக் கொண்டால்
இரண்டனுருபும் பொருளுந் தொக்கதொகையுமாம். ஈர் + தார் = ஈர்ந்தார்; “யரழமுன்னர்” என்னுஞ் சூத்திர விதி.
சூர்ப்பணகை இராமலக்ஷ்மணரிடம் வரும்பொழுது அழகியவடிவங்கொண்டு ஆடையாபரணாதிகளால் தன்னை
யலங்கரித்து வந்தமை தோன்ற, “தும்பிபல போர்காது மீர்ந்தார் புனையரக்கி” என்றார்;
“அறலோதிப், பூ முரலும் வண்டு மிவை பூசலிடு மோசை” என்ற கம்பராமாயணத்தையுங் காண்க.
சூர்ப்பணகையை அங்கபங்கப்படுத்தியது இராமபிரானது திருத்தம்பி யான இளையபெருமாளினது செய்கையாயினும்,
அதனைப் பெருமான் மேல் ஏற்றிச் சொன்னது, இராமபிரானது கருத்திற்கு ஏற்ப அவன் கட்டளையிட்டபடி.
இவன்செய்தன னாதலின் ஏவுதற்கருத்தாவின் வினையாதல்பற்றி யென்க.
அன்றியும், இளையபெருமாளும் திருமாலினது திருவவதாரமே யாதலால், அங்ஙனஞ் சொல்லத் தட்டில்லை.
மற்றும், “ராமஸ்ய தக்ஷிணோபாஹு:” என்றபடி இராமனுக்கு இலக்குமணன் வலத்திருக்கை யெனப்படுதலால்,
அங்ஙனம் கையாகிற இலக்குமணனது செயலை இராமன் மேல் ஒற்றுமைநயம்பற்றி ஏற்றிச்சொல்லுதல் தகுதியே.
“அரக்கிமூக்கை நீக்கிக் கரனோடுதூடணன் தனுயிரை வாங்கி” என்று குலசேகராழ்வாரும்,
“தன் சீதைக்கு, நேரவைனென்றோர் நிராசரிதான் வந்தாளைக்,
கூரார்ந்த வாளாளாற் கொடிமூக்குங் காதிரண்டும்,
ஈராவிடுத் தவட்குமூத்தோனை வெந்நரகஞ், சேராவரையே சிலைகுனித்தான்” என்று திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்தமையுங் காண்க.
“தம்முடைய கையாலேயிறே தண்டிப்பது; …… தம்முடைய தோளாயிருக்கிற இளையபெருமாளை
இடுவித்துத் தண்டிப்பித்தார்” என்ற வியாக்கியாந வாக்கியமும் உணரத்தக்கது.
———-
வண்மை திகழ் வெண் பளிங்கு வட்டத்தில் கண் துயில் மான்
விண் மதியில் மான் ஏய்க்கும் வேங்கடமே -ஒண் மதியால்
நூலைத் தாம் ஒது அரனார் நோக்க அரி யார் துளவ
மாலைத்தா மோதனார் வாழ்வு –50-
(இ – ள்.) வண்மை திகழ் – அழகியதாக விளங்குகின்ற,
வெள் பளிங்கு வட்டத்தில் – வெண்ணிறமான வட்டவடிவுள்ள பளிக்குப்பாறையில்,
கண் துயில் – படுத்துத்தூங்குகிற,
மான் -, விண் மதியின்மான் ஏய்க்கும் – வானத்துச் சந்திரமண்டலத்தின் நடுவிலே காணப்படுகிற மான்வடிவத்தை யொத்திருக்கப்பெற்ற,
வேங்கடமே -,-
ஒள் மதியால் – சிறந்த புத்தியினால் (தமது புத்திவிசேஷத்தால்),
நூலை தாம் ஓது – பல நூல்களைத் தாம்ஓதிய,
அரனார் – சிவபெருமானாலும்,
நோக்க அரியார் – கட்புலனாகக் கண்டு தரிசிக்க முடியாதவரும்,
துளவம் மாலை – திருத்துழாய்மாலையையணிந்த,
தாமோதரனார் – தாமோதரனென்ற ஒருதிருநாம முடையவருமாகிய திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)
பளிங்கு வட்டத்துக்குச் சந்திரமண்டலமும், அதனிடையே அசையாது துயில்கிற மானுக்குச் சந்திரமண்டலத்தின் நடுவிலே
அசைவின்றிக் காணப் படுகிற மான்வடிவமும் உவமை; வடிவு பற்றியது.
பளிங்கு – ஸ்படிகம். வ்ருத்த மென்னும் வடமொழி, வட்டமெனச் சிதைந்தது. ஏய்க்கும் – உவமவுருபு.
மதி – அறிவைக் குறிக்கையில், வடசொல். தாம் – அசை. ஓதுதல் – கற்றலும், கற்பித்தலும், நூலியற்றலும்.
தாமோதர என்ற வடசொல். தாம + உதர எனப் பிரிந்து, (வெண்ணெய் களவாடினதற்கு ஒருதண்டனையாக யசோதையாற் கட்டப்பட்ட)
கயிற்றை வயிற்றிலுடையவனென்று காரணப் பொருள்படும் தாமம் – கயிறு, உதரம் – வயிறு.
——————
சிலேடைகள்
காதல் இற்றுச் சார்ந்தவர்க்கும் காமியத்தைச் சார்ந்தவர்க்கும்
வேதனைக் கூற்றைத் தவிர்க்கும் வேங்கடமே -போதகத்தை
மோதி மருப்பு ஒசித்தார் முன் பதினாறாயிரவர்
ஓதி மருப்பு ஒசித்தார் ஊர் –51-
(இ – ள்.) காதல் இற்று சார் தவர்க்கும் – (பிரபஞ்சவாழ்வில்) ஆசை (முழுவதும்) ஒழிந்து (தன்னிடம் வந்து) சேர்ந்த முனிவர்களுக்கும்,
வேதனை கூற்றை தவிர்க்கும் – பிரமனையும் யமனையும் விலக்குகின்ற:
காமியத்தை சார்ந்தவர்க்கும் – பிரபஞ்சவாழ்வுகளை விரும்பியவர்களுக்கும்,
வேதனை கூற்றை தவிர்க்கும் – துன்பங்களின் வகைகளை ஒழிக்கின்ற:
வேங்கடமே -,-
போதகத்தை – யானையை,
மோதி – தாக்கி,
மருப்பு ஒசித்தார் – அதன் தந்தங்களை முறித்தவரும்,
முன் – முற்காலத்தில் (கிருஷ்ணாவதாரத்தில்),
பதினாறாயிரவர் – பதினாறாயிரம் இளமங்கையருடைய,
ஓதி – கூந்தலின்,
மரு – நறுமணத்தை,
பொசித்தார் – மோந்து நுகர்ந்தவருமான திருமாலினது,
ஊர் – வாசஸ்தாநமாம்; (எ – று.)
“வேதனைக்கூற்றைத் தவிர்க்கும்” என்ற தொடர் – வெவ்வேறுவகையாகப் பிரியாது ஒருவகையாகவே பிரிந்து
இருபொருள்பட்டதனால், செம்மொழிச்சிலேடை; இது, வடமொழியில் அபிந்நபதச்லேஷா எனப்படும்:
பிறவும் இங்ஙனம் வருவன காண்க.
காதலிற்றுச்சார்ந்தவராவார் – எல்லாவகைப்பற்றுக்களையும் முற்றத்துறந்து முத்திபெறுதற்பொருட்டுத் திருவேங்கடமுடையானை
வந்து சரணமடைகிற முனிவர்கள்: அவர்கட்குப் பிரமனையும் யமனையும் விலக்குகின்ற என்றது –
பிரமனால்வரும் பிறப்பையும், யமனால்வரும் இறப்பையும் போக்கி முத்தியளிக்கிற மகிமையையுடைய என்றபடி.
வேதன் என்றது – அவனது காரியமான ஜநநத்துக்கும், கூற்று என்றது – அவனது காரியமான மரணத்துக்கும் இலக்கணை.
காமியத்தைச் சார்ந்தவராவார் – அழியுந்தன்மையனவான இம்மை மறுமைப்பேறுகளை விரும்பி வந்து சேர்பவர்கள்.
அவர்கட்குத் துன்பவகைகளை ஒழிக்கின்ற என்றது –
“பித்து மலடூமை முடம் பேய் குருடு கூன் செவிடு, மெய்த்துயர்நோய் தீர்த்தருளும் வேங்கடமே” என்றவாறு
அவர்களுடைய உடற்குற்றங்களையும் நோய்களையும் மகப்பேறின்மை முதலிய மநோவியாதிகளையும் நீக்கி
அவர்கள் வேண்டிய பயன்களை அவர்கட்கு வேண்டியவாறே உண்டாகச் செய்கின்ற சிறப்பையுடைய என்றபடி.
பற்றற்று வந்தவர்க்கும். பற்றறாதுவந்தவர்க்கும் சமமாக இடையூறகற்றியருள்கின்ற வேங்கடமெனச் சொல் நயத்தாற்
சமத்காரந் தோன்றக் கூறியவாறு காண்க.
கண்ணபிரான் இளமையில் திருவாய்ப்பாடியில்வளரும்போது தன்னிடங் காதல்கொண்ட பதினாறாயிரம் கோப
ஸ்த்ரீகளோடுகூடி இன்பம்நுகர்ந்தமையும், கண்ணன் நரகாசுரனைச் சங்கரித்தபின்பு அவனாற் சிறை
வைக்கப் பட்டிருந்த தேவசித்தகந்தருவாதி கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் பதினாறாயிரம் வடிவமெடுத்து
விவாகஞ்செய்துகொண்டு அவர்களோடு கூடி இன்பம் நுகர்ந்தமையும் பற்றி, “பதினாறாயிரவரோதி மருப்பொசித்தார்” என்றார்.
“ஓதிமருப்பொசித்தார்” என்றது – அவர்களுடைய கூந்தலில் உத்தம இலக்கணமாக இயற்கையில் அமைந்துள்ள
நறுமணத்தையும் நறுநெய்பூசி நன்மலர் சூடுதலாற் செயற்கையில் அமைந்த நறுமணத்தையும், உட்கொண்டு உளங்களித்தவ ரென்றபடி.
ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும் இன்ப வகைகளுள் இங்கு மூக்கினாற் புலம்நுகர்ந்ததைக் கூறியது,
பிறவாறு இன்பம் நுகர்ந்ததற்கும் உபலக்ஷணம்.
உம்மைகள் – எண்ணுப்பொருளன, இற்று என்ற வினையெச்சத்தில், இறு என்ற குறிலிணைப்பகுதி இடை ஒற்று இரட்டி இறந்தகாலங் காட்டிற்று.
சார்தவர் – வினைத்தொகை. தவர் – தவஞ்செய்பவர். “காதலித்துச்சார்ந்தவர்” என்று பாடமோதி, (பரமபதத்தைப்பெற) விரும்பித்
தன்னைவந்தடைந்தவர் என்று உரைப்பாரும் உளர். காம்யம் – வடசொல்; விரும்பப்படும் பொருள்.
வேதன் – வேதங்களை ஓதியவன்; அன்றி, வேதா என்னும் வடசொல்லின் விகார மெனக்கொண்டால், விதிக்குங் கடவு ளென்று ஆகும்;
விதித்தல் – படைத்தல். கூற்று – (உடலையும் உயிரையும் வெவ்வேறு) கூறாக்குபவன்.
இரண்டாம் பொருளில் வேதநா என்ற வடசொல் வேதனையென விகாரப்பட்டது.
கூற்றை என்றது – கூறுஎன்பதன் இரண்டாம் வேற்றுமை விரி.
“தவிர்க்கும் வேங்கடம்” என்றதில், நிலைமொழியிறுதியில் நின்ற மகரவொற்று – வகரத்தின்முன் வந்ததனால், மகரக்குறுக்கம்;
மாத்திரை – கால். போதகம் – வடசொல். போதகத்தை மோதி மருப்பொசித்தார் – போதகத்தை மருப்புஒசித்து மோதினார் என விகுதி பிரித்துக் கூட்டலுமாம்.
முன் – காலமுன்; இதனை, மத்திமதீபமாக முன்நின்ற “ஒசித்தார்” என்பதனோடும் இயைக்கலாம்.
ஒசித்தார். பொசித்தார் – உயர்வுப்பன்மை. பதினாறாயிரவர் -எண்ணடியாப்பிறந்தபெயர்; இங்கே, தொகைக்குறிப்பு.
ஓதி – பெண்மயிர். பொசித்தல் = புஜித்தல். புசித்தல், உண்ணல், நுகர்தல், துய்த்தல் என்பன – ஒருபொருளன.
“ஊர்” என்றது – திருமாலுக்குத் திருவேங்கடம் இயல்பிலுரியதாதலை விளக்கும்.
————–
கேள்வித் துறவோரும் கேடு அற இல் வாழ்வோரும்
வேள்விக்கின மாற்றும் வேங்கடமே -மூள்வித்து
முன்பாரத முடித்தார் மொய் வேந்தர் வந்து அவிய
வன் பாரதம் முடித்தார் வாழ்வு –52-
(இ – ள்.) கேள்வி துறவோரும் – ஞானக்கேள்விகளையுடைய துறவிகளும்,
வேள் விக்கினம் மாற்றும் – மன்மதனால் வரும் இடையூற்றை நீக்குதற்கு இடமான:
கேடு அற இல் வாழ்வோரும் – தீங்கில்லாமல் இல்லற வொழுக்கத்தில் வாழ்பவர்களும்,
வேள்விக்கு இனம் ஆற்றும் – யாகத்துக்கு இனமான நற்செயல்களைச்செய்தற்கு இடமான:
வேங்கடமே – , –
முன்பு ஆ – முற்காலத்தில்,
ரதம் முடி தார் மொய் வேந்தர் வந்து அவிய – தேரையும் கிரீடத்தையும் மாலையையும் உடைய வலிய அரசர்கள் வந்து (பொருது) இறக்கும்படி,
வல் பாரதம் – கொடிய பாரதயுத்தத்தை,
மூள்வித்து முடித்தார் – மூட்டிநிறைவேற்றியவராகிய திருமாலின்,
வாழ்வு – வாசஸ்தாநம்; (எ – று.)
“வேள்விக்கினமாற்றும்” என்ற தொடர் – வெவ்வேறுவகையாகப் பிரிந்து இருபொருள்பட்டதனால், பிரிமொழிச்சிலேடை;
இது, வடமொழியில் பிந்நபதச்லேஷா எனப்படும்: பிறவும் இங்ஙனம் வருவன காண்க.
கேள் வித்துறவோர் – “ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவேயுடையவனான குரு” வினிடத்து உபதேசமொழிகளைக் கேட்டு
உணர்ந்து பற்றுக்களைத் துறந்தவ ரென்றபடி. முத்தியளித்தற்குஉரிய முதற்பொருளை உணர்வதற்கு ஏற்ற உபாயங்களான
கேள்வி விமர்சம் பாவனை என்ற மூன்றனுள் முதலதும், மற்றை இரண்டற்குங் காரணமுமான கேள்வியையுடைமை கூறப்பட்டது.
கேள்வி யெனினும், சிரவண மெனினும் ஒக்கும்.
துறவோர் – துறவையுடை யோர்; துறவாவது – புறமாகிய செல்வத்தினிடத்தும் அகமாகிய உடம்பி னிடத்தும் உளதாகிய பற்றை விடுதல்.
அவர்கள் வேள் விக்கின மாற்றுதல் – எக்காரணத்தாலும் காமஅவாவைக் கொள்ளாமை.
கேடு – துன்பமும், குற்றமும். இல்வாழ்வோர் வேள்விக்கு இனம் ஆற்றுதல் – பிரமயஜ்ஞம், தேவயஜ்ஞம், மநுஷ்யயஜ்ஞம்,
பித்ருயஜ்ஞம், பூதயஜ்ஞம் என்ற பஞ்சமகா யஜ்ஞங்களைத் தவறாதுசெய்தல்;
(பிரமயஜ்ஞம் – வேதமோதுதல் தேவயஜ்ஞம் – ஓமம்வளர்த்தல். மநுஷ்யயஜ்ஞம் – விருந்தினரை உபசரித்தல்.
பித்ருயஜ்ஞம் – தர்ப்பணஞ்செய்தல். பூதயஜ்ஞம் – பலியீதல்.) இவை இல்லறத்தார்க்குஉரிய ஐம்பெருவேள்வி யெனப்படும்.
துறவறத்தாரும் இல்லறத்தாரும் சமமாக அவரவர் தொழிலைச் செய்யப்பெற்ற வேங்கட மெனச் சொல் நயத்தாற் சமத்காரந்தோன்றக் கூறியவாறு காண்க.
துஷ்டர்களையெல்லாம்சங்கரித்துப் பூமிபாரநிவிருத்தி செய்தற்பொருட் டுத் திருவவதரித்த கண்ணபிரான் அதற்கு உபயோகமாகப்
பாண்டவர்க்குத் துணைநின்று பலபடியாகஉதவிப் பாரதயுத்தத்தை ஆதியோடந்தமாகநடத்தி முடித்தமை, மகாபாரதத்திற் பிரசித்தம்
சூதுபோரில் இழந்த இராச்சியத்தை மீளவும் மோதுபோர்செய்து பெறுவதில் தருமபுத்திரனுக்கு உபேக்ஷையுண்டான பொழுதெல்லாம்
அங்ஙனம் வெறுப்புக் கொள்ளாதவண்ணம் பலவாறுபோதித்துப் போர்தொடங்கும்படி தூண்டியும்,
பின்பு போர்த்தொ டக்கத்தில் “உற்றாரையெல்லா முடன்கொன் றரசாளப், பெற்றாலும்வேண்டேன் பெருஞ்செல்வம்” என்று
சொல்லிப் போரொழிந்த அருச்சுனனுக்குக் கீதையை உபதேசித்து அவனைப்போர்புரிய உடன்படுத்தியும்
கண்ணபிரானே பாரதப்போரை மூட்டியவனாதல் காண்க.
கேள்வி – கேட்டல்: ‘வி’ விகுதி பெற்ற தொழிற்பெயர். இல் – வீடு, இல்லறம்.
வேள் – (ஆடவர்க்கும் மகளிர்க்கும்) விருப்பத்தை விளைக்குந்தேவன்; அல்லது, விரும்பப்படும் அழகையுடையவன்:
காமனென்ற வட மொழிப்பெயரும் இவ்விருபொருள்படும். விக்நம் – வடசொல்.
மாற்றும் வேங்கடம், ஆற்றும் வேங்கடம் – பெயரெச்சம், இடப்பெயர் கொண்டது. ‘முன்பா’ என்றது – அவிய,
மூள்வித்து, முடித்தார் என்றவற்றோடு இயையும். முன்பு, பு – சாரியை. ஆ – ஆக என்பதன் விகாரம்.
ரதம் – வடசொல். சிந்தாமணியில், ‘ரவிகுலதிலகன்’ என வடமொழியிற் பிறந்தவண்ணமே தற்சமமாகக் கூறினாற்போல,
இங்கு இரதமெனத் திரியாமல் ரதமென்றே கூறினார். ‘ரதவேந்தர்’ என்றது – அதிரத மகாரத சமரத அர்த்தரத வீர ரென்றவாறு.
முடிவேந்தர் – கிரீடாதிபதிகளான அரசர். தார் என்றது, இங்கு – அடையாளப்பூமாலையோடு போர்ப்பூமாலையையுங் குறிக்கும்.
பாரதம் – பரதவமிசத்தாருள் நிகழும் போர். வாழ்வு என்ற சொல்லின் ஆற்றலால்,
திருவேங்கடம் திருமாலின் திருவுள்ளத்துக்கு மிகப்பாங்காயிருத்தல் விளங்கும்.
————
பொய் ஆம் வினையேனைப் போல்வாரும் அன்பரும் செய்
மெய் ஆம் வழுத்தேயும் வேங்கடமே செய்யாள்
தனத்து வசப் பொற்பு உள்ளார் தானவரை மோதும்
சினத்து வசப் பொற் புள்ளார் சேர்வு –53-
(இ – ள்.) பொய் ஆம் வினையேனை போல்வாரும் – பொய்கலந்த தொழிலையுடைய என்னைப் போன்ற நீசர்களும்,
செய் – செய்த,
மெய் ஆம் வழு – சரீரசம்பந்தத்தாலாகிய குற்றங்கள் (கருமங்கள்),
தேயும் – நீங்குதற்கு இடமான:
அன்பரும் – உள்ளன்புடைய அடியார்களும்,
செய் – செய்கின்ற,
மெய் ஆம் வழுத்து – உண்மையான தோத்திரங்கள்,
ஏயும் – பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
செய்யாள் தனத்து வசம் – திருமகளினது தனத்துக்கு வசப்பட்ட,
பொற்பு உள்ளார் – அழகையுடையவரும்,
தானவரை மோதும் – அசுரர்களைத் தாக்குகின்ற,
சினம் – கோபத்தையுடைய,
துவசம் – கொடியான,
பொன் புள்ளார் – பொன்னிறமான கருடனென்னும் பறவையையுடையவருமாகிய திருமால்,
சேர்வு – (திருவுள்ளமுவந்து) சேருமிடம்; (எ – று.)
பொய்யாம்வினை – உள்ளன்பின்றி அகமொன்று புறமொன்றாக வெளி வேடங்கொண்டு செய்யும் வஞ்சனைச்செயல்.
“பொய்யாம் வினையேனைப் போல்வார்” என்று தம்மைத் தாம் இழித்துக் கூறினார், விநயத்தால்.
மெய்யாம் வழுத்து – மனப்பூர்வமாகச் செய்யுந் தோத்திரம். போலியன்பரும் உண்மையன்பரும் ஒருநிகராக இருக்கப்பெற்ற
வேங்கடமெனச் சொல்நயத் தாற் சமத்காரந்தோன்றக் கூறியவாறுகாண்க.
முன்னிரண்டடியில் “பொய்யாம்”, “மெய்யாம்” என மாறுபட்ட சொற்கள் வந்தது, முரண்தொடை.
“செய்யாள் தனத்து வசம்” என்றது – பொற்புள்ளார்க்கு அடைமொழி.
இத்தொடர் – திருமகளினது திருமேனியழகில் திருமால் ஈடுபடுதலையும். அத்திருமகளை ஈடுபடுத்தவல்ல
திருமாலின் திவ்வியசௌந்தரியத்தையும் விளக்கும்.
துவசப்பொற்புள்ளார் – பக்ஷிராஜனான கருடனை வாகனமுங் கொடியுமாக உடையவர்.
கருடாழ்வானது திருத்தோளின்மேல்ஏறித் திருமால் அசுரசேனையோடு போர்செய்யும்பொழுது, அக்கருடனும் எதிர்க்கிற
அசுரர்மீது கோபம்மூண்டு தன்சிறகுகளினாலும் மூக்கினாலும் கால்களினாலும் அவர்களைத் தாக்கியழித்தல் இயல்பு.
வழுத்து – முதனிலைத்தொழிற்பெயர். செய்யாள் – செந்நிறமுடையவள்; செம்மையென்னும் பண்புப்பகுதி ஈறுபோய்
முன்நின்ற மகரம்யகரமாத் திரிந்தது. ஸ்தநம், வசம், தாநவர், த்வஜம் – வடசொற்கள். தாநவர் –
(காசியப முனிவனது மனைவியருள்) தநுஎன்பவளிடம் பிறந்தவர்: தத்திதாந்தநாமம். “பொற்பே பொலிவு” என்ற
தொல்காப்பியத்து உரியியற்சூத்திரத்தால், பொற்பு என்பது – உரிச்சொல்லென அறிக. “சேர்பு” என்றும் பாடமுண்டு.
———–
கோடல் இலா உள்ளத்துக் கோது இல் அடியவரும்
வேடரும் அங்கைவரை வெல் வேங்கடமே -மூடர்
மனம் ஆம் மனைக்கு ஒன்றார் வன் கஞ்சன் என்னும்
சின மா மனைக் கொன்றார் சேர்பு –54-
(இ – ள்.) கோடல் இலா – கோணுதலில்லாத (நேர்வழிப்பட்ட),
உள்ளத்து – மனத்தையுடைய,
கோது இல் – குற்றமில்லாத,
அடியவரும் – அடியார்களும்,
அங்கு ஐவரை வெல் – அவ்விடத்துப் பஞ்சேந்திரியங்களை வெல்லுதற்கு இடமான:
வேடரும் – வேடர்களும்,
அம் கை வரை வெல் – அழகிய துதிக்கையையுடைய மலைபோன்றயானையை வெல்லுதற்கு இடமான
வேங்கடமே -,-
மூடர் மனம் ஆம் மனைக்கு ஒன்றார் – மூடர்களுடைய உள்ளமாகிய வீட்டில் வந்து பொருந்தாதவரும்,
வல் கஞ்சன் என்னும் சினம் மாமனை கொன்றார் – கொடிய கம்சனென்கிற கோபத்தையுடைய மாமனைக் கொன்றவருமாகிய திருமால்,
சேர்பு – சேருமிடம்; (எ – று.)
“அங்கு” என்பது – அசையுமாம். ஐம்பொறிகளை “ஐவர்” என உயர்திணையாற்கூறியது, இழிபுபற்றிய திணைவழுவமைதி.
ஐந்து என்னும் எண்ணினடியாப்பிறந்த ஐவரென்ற பெயர் – இங்கே தொகைக்குறிப்பு.
“கைவரை” என்றார், யானையை; “கைம்மலை” என்றாற்போல. மூடர், மநஸ் – வடசொற்கள்.
“மூடர் மனமாம் மனைக்கு ஒன்றார்” என்றது – “மலர்மிசையேகினான்” என்றபடி,
அன்பு கொண்டு தியானிக்கின்ற அறிவுடையாரது உள்ளக்கமல த்தைத் தாம் உகக்குமிடமாகக்கொண்டு
அங்கு அவர்நினைத்தவடிவத்துடன் விரைந்து சென்று வீற்றிருக்குந் தன்மைய ரென்ற எதிர்மறைப்பொருளை நன்குவிளக்கும்.
மனைக்கு என்ற நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்ததனால், உருபுமயக்கம். கஞ்சன் – வடசொற் சிதைவு.
மாமன் – இங்கு, தாயுடன்பிறந்தவன். கம்ஸன் – கண்ணனது தாயான தேவகிக்குத் தமையனாதலால்,
கண்ணனுக்கு மாமனாவன். தன்னைக்கொல் லப்பிறந்த தேவகீபுத்திரன் யசோதையினிடம் ஒளித்து வளர்தல் முதலிய
விருத்தாந்தங்களை நாரதர் சொல்லக் கேட்டுக் கம்சன் அதிககோபங்கொண்டு கிருஷ்ணனைக் கொல்ல நிச்சயித்து
வில்விழாவென்கிற வியாஜம் வைத்துக் கண்ணனை மதுரைக்கு வரவழைத்துப் பலவகையில் வதைக்க வழிதேடுகை யில்,
கம்சசபையில் கிருஷ்ணபகவான் வேகமாக எழும்பிக் கம்சனது மஞ்சத்தின்மே லேறி அவனது கிரீடம் கழன்று கீழேவிழும்படி
அவனைத் தலை மயிர் பிடித்துத் தரையில் தள்ளி அவன்மேல் தான் விழுந்து அவனைக் கொன்று ஒழித்தன னென்பது, இங்குக் குறித்த வரலாறு.
———–
மொய்வதன மங்கையர்கள் முன்கையும் யோகியர் தம்
மெய்வயதும் அஞ்சுகம் ஆர் வேங்கடமே -பெய் வளையார்
பால் திருப்பாது அஞ்சி வந்தார் பற்றினார் புன் பிறப்பை
மாற்று இருப் பாதம் சிவந்தார் வாழ்வு –55–
(இ – ள்.) மொய் – (அழகு) மிக்க,
வதனம் – முகத்தையுடைய,
மங்கையர்கள் – மகளிரது,
முன் கையும் – முன்னங்கையும்,
அம் சுகம் ஆர் – அழகிய கிளி (உணவுண்ணுதற்கு) இடமாகப்பெற்ற:
யோகியர்கள் மெய் வயதும் – யோக நிட்டையிலிருக்கின்ற முனிவர்களுடைய உடம்பின் ஆயுளும்,
அஞ்சு உகம் ஆர் – ஐந்துயுகமாகப் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
பெய் வளையார் பால் திருப்பாது – அணிந்த வளையல்களையுடைய மகளிர்பக்கல் (மனத்தைச்) செலுத்தாமல்,
அஞ்சி – அச்சங்கொண்டு,
வந்தார் பற்றினார் – தம்மிடம் வந்து சரணமடைந்தவர்களுடைய,
புல் பிறப்பை – இழிவான சன்மத்தை,
மாற்று – நீக்குகின்ற,
இரு பாதம் – தமது இரண்டு திருவடிகளும்,
சிவந்தார் – சிவந்திருக்கப்பெற்றவரான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)
“மொய்தவனம்” என்பதற்கு – (தாமரைமலரென்று மயங்கி வண்டுகள்) மொய்க்கப்பெற்ற முகமென்று உரைத்தலும் ஒன்று.
மங்கையர் – இளமகளிர்; மங்கைப்பருவத்துக்கு வயதெல்லை – பன்னிரண்டுமுதற் பதின்மூன்றளவும்.
வயஸ், வதநம், சுகம், பாதம் – வடசொற்கள். அஞ்சு – ஐந்து என்பதன் முழுப் போலி.
திருவேங்கடமலையிலுள்ள மகளிர்கையிற் கிளியைவைத்துக் கொண்டு அதற்கு உணவூட்டி அதனோடு கொஞ்சிவிளையாடுதலும்,
அங்குள்ள யோகிகள் அவ்யோகபலத்தால் நீடூழிகாலம் வாழ்தலும், இங்குக் குறிக்கப்பட்டன. யுகமென்பது, உகமெனவிகாரப்பட்டது.
ஆர்தல் – உண்ணுதலும், பொருந்தலும். பெய்வளை – வினைத்தொகை. வந்தார் – முற்றெச்சம்.
இருபாதம் என்ற தொடர் “இருப்பாதம்” என வருமொழி முதல்வலி மிக்கது, திரிபுநயம் நோக்கி யென்க.
இதனைச் சிறுபான்மை எதுகைநயத்தின் பொருட்டு “ஒருக்கால்” என வருதல்போலக் கொள்க:
அன்றி, முற்றியலுகரவீறாகிய எண்ணுப்பெயரின்முன் வலிமிகாமை காண்க.
“செம்” என்ற பண்படிப்பகுதி வினைத்தன்மைப் படும்போது “சிவ” என விகாரப்படும். பாதம்சிவந்திருத்தல், உத்தமஇலக்கணம்.
புன்பிறப்பு என்றது, கர்மசம்பந்த முடைமைபற்றி. பிறப்பைமாற்றுதல் – மீளவும் பிறக்க வேண்டாதபடி முத்திதருதல்.
திருப்புதலென்றவினைக்கு மனத்தையென்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது,
அவாய்நிலையால்; (அவாய்நிலையாவது – ஒருசொல் மற்றொருசொல்லை வேண்டிநிற்றல்.)
———
இல்லக் குறத்தியரும் யாக்கை நிலை வேட்டவரும்
மெல்லக் கிழங்கெடுக்கும் வேங்கடமே -நல்ல
புதுப் பூவை வண்ணத்தான் போர் முகத்துச் செவ்வாய்
மதுப்பூவை வள் நத்தான் வாழ்வு –56-
(இ – ள்.) இல்லம் குறத்தியரும் – (தமக்கு உரிய) வீட்டில் இருக்கின்ற குறப்பெண்களும்,
மெல்ல கிழங்கு எடுக்கும் – மென்றுதின்னும்பொருட்டுக் கிழங்குகளைத் தோண்டி எடுக்கப்பெற்ற,
யாக்கை நிலை வேட்டவரும் – உடம்பு (அழிதலின்றி நெடுநாள்) நிலைத்திருத்தலை விரும்பிய சித்தர்களும்,
மெல்ல கிழம் கெடுக்கும் – மெதுவாக (நாளடைவில்) முதுமைப்பருவத்தை ஒழிக்கப்பெற்ற;
வேங்கடமே -,-
நல்ல புது பூவை வண்ணத்தான் – சிறந்த புதிய (அன்றுமலர்ந்த) காயாம்பூப் போன்ற கரியதிருநிறத்தையுடையவனும்,
போர்முகத்து – யுத்தகளத்தில்,
செம் வாய் மது பூ வை – சிவந்த தனது திருவாயாகிய தேனையுடைய தாமரைமலரில் வைத்துஊதுகின்ற,
வள் நத்தான் – மேன்மையுள்ள (ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னுந் திவ்விய) சங்கத்தை யுடையவனுமாகிய திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)
இல்லம், அம் – சாரியை. குறத்தியர் – குறிஞ்சிநிலத்துமகளிர்; குறவ ரென்பதன் பெண்பால்.
யாக்கை – (எலும்பு நரம்பு முதலியவற்றாற்) கட்டப்பட்ட தெனப் பொருள்படுங் காரணப்பெயர்;
யா – பகுதி; யாத்தல் – கட்டுதல்: ஐ – செயப்படுபொருள்விகுதி, கு – சாரியை, க் – சந்தி. நிலை – நிற்றல்;
‘ஐ’ விகுதிபெற்ற தொழிற்பெயர். வேட்டவரென்ற இறந்தகால வினையாலணையும் பெயரில், வேள் – பகுதி.
“மெல்ல” என்றது. முந்தியபொருளில், மெல்என்ற வினைப்பகுதியடியாப் பிறந்த எதிர்காலச்செய வெனச்சமும்;
பிந்தின பொருளில், மென்மை என்ற பண்பினடியாப் பிறந்த குறிப்புவினையெச்சமுமாம்.
பூவை யென்ற செடியின்பெயர், இங்கு அதன் மலர்க்கு முதலாகு பெயர். வாயாகிய பூ எனறது உருவகம்.
வாய்க்குத் தாமரை மலர் உவமை – செம்மையும் மென்மையும் அழகும் பற்றி. உபமானமாகிய வாய்க்குச் சுவையினிமைகொள்க.
வை – வினைத்தொகை. வர்ணமென்ற வடமொழி வண்ணமெனச் சிதைந்தது. வள்நத்து – பண்புத்தொகை.
திருமால் போர்க்களத்தில் பகைவரை அஞ்சுவித்தற்காகவும், தனது வெற்றிக்கு அறிகுறியாகவும்
சங்கத்தைவாயில்வைத்து முழக்குதல் இயல்பு. மது – வடசொல்.
————-
தேன் இயலும் கூந்தலார் செங்கரமும் மாதவத்தோர்
மேனியும் ஐயம் பொழியும் வேங்கடமே -ஞானியர்கள்
தாம் குறி எட்டு அக்கரத்தார் தாள் உரல் மேல் வைத்து வெண்ணெய்
தாங்கு உறி எட்டு அக்கரத்தார் சார்பு –57-
(இ – ள்.) தேன் இயலும் கூந்தலார் – (சூடிய மலர்களினின்று சொரிகின்ற) தேன்பொருந்திய கூந்தலையுடைய மகளிரது,
செம் கரமும் – சிவந்த கைகளும்,
ஐயம் பொழியும் – (இரப்பவர்க்கு மிகுதியாகப்) பிச்சையிடப்பெற்ற:
மா தவத்தோர் மேனியும் – சிறந்ததவத்தையுடைய முனிவர்களது உடம்பும்,
ஐ அம்பு ஒழியும் – (மன்மதனது) பஞ்சபாணம் பொருந்தாதிருக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
ஞானியர்கள் குறி – (தத்துவ) ஞானமுடையவர்கள் குறிக்கொண்டு தியானிக்கின்ற,
எட்டு அக்கரத்தார் – அஷ்டாக்ஷரமகாமந்திரத்துக்கு உரியவரும்,
உரல்மேல்தாள் வைத்து – உரலின்மேற்காலைவைத்து ஏறி,
வெண்ணெய்தாங்கு உறி எட்டு – வெண்ணெய் வைத்துள்ள உறியை எட்டிப்பிடித்த,
அ கரத்தார் – அழகிய கையை யுடையவருமாகிய திருமால்,
சார்பு – (திருவுள்ளமுவந்து) சார்ந்திருக்குமிடம்; (எ – று.) – தாம் – அசை.
தேன்இயலும்கூந்தல் – நல்லமணத்தே செல்லும் இயல்புள்ள தேனென் னும் உத்தமசாதிவண்டுகள் இயற்கை
நறுமணத்தின் பொருட்டும் செயற்கை நறுமணத்தின் பொருட்டும் மிகுதியாக மொய்க்கப்பெற்ற கூந்தலெனினுமாம்.
மாதவத்தோர் மேனி ஐயம்பொழிதலாவது – அவர்கள் காமவசப்படாதிருத்தல்; மன்மத பாணம் அவர்களுடம்பைத்
துளைத்துவருத்த மாட்டாதனவா யினவென்க. ஐ அம்பு – தாமரைமலர், அசோகமலர், மாமலர், முல்லைமலர், நீலோற்பலமலர்
என்ற ஐந்துபூக்களும் மன்மதனுக்குப் பாணங்களாம். ஜ்ஞாநீ என்ற வடசொல், “ஞானி” என விகாரப்பட்டது. குறி – வினைத்தொகை.
எட்டக்கரம் – திருவெட்டெழுத்தாகிய பெரியதிருமந்திரம். அக்ஷரமென்ற வடசொல், அக்கரமென விகாரப்பட்டது.
கரம் – வடசொல். “அம்” என்பதுபோல “அ” என்பதும் அழகிய என்னும் பொருளதாதலை, பத்துப்பாட்டு நச்சினார்க்கினியருரையிற் காண்க. “பொத்தவுரலைக்கவிழ்த்ததன்மேலேறித், தித்தித்தபாலுந் தடாவினில்வெண்ணெயும்,
மெத்தத்திருவயிறாரவிழுங்கிய, லப்பன்” என்ற பெரியாழ்வார்திருமொழியும்,
“தந்த முறியி லவர் வைத்த தயிர்பால்வெண்ணெ யெட்டாமற், குந்தி யுரலின்மிசை யேறி” என்ற வில்லிபுத்தூரார்வாக்கும்,
இங்கு ஒப்புநோக்கத்தக்கன. “சார்வு” என்றும் பாடம்.
——————
காணை -காண்ஐ-யிலார் சொற்கேட்ட கந்தருவரும் தவரும்
வீணை இராகத்தை விடும் வேங்கடமே –கோணை
இருங்குண்டை ஓட்டினான் ஏற்பு ஒழித்தான் கூனி
மருங்கு உண்டை ஓட்டினான் வாழ்வு –58-
(இ – ள்.) காண் ஐயிலார் சொல் கேட்ட – பார்க்கின்ற வேல்போன்ற கண்களையுடைய மகளிர் பேசுகின்ற சொற்களைச் செவியுற்ற,
கந்தருவரும் -கந்தர்வரென்னுந் தேவசாதியாரும்,
வீணை இராகத்தை விடும் – (அச்சொற் களின் இனிமைக்குமுன் தாம் பாடும் இசையின்இனிமை சிறவாதென்னுங் கருத்தினால்)
வீணையில் இசைவாசித்தலை ஒழியப்பெற்ற:
தவரும் – தவவொழுக்கத்தையுடைய முனிவர்களும்,
வீணை இராகத்தை விடும் – பயனில்செய் கைகளையும் ஆசையையும் துறக்கப்பெற்ற:
வேங்கடமே – , –
கோணை இரு குண்டை – வலிமையையுடைய பெரியஎருதை வாகனமாகவுடைய,
ஓட்டினான் – (கையிற்) கபாலமேந்தியவனான சிவபிரானது,
ஏற்பு – இரத்தல்தொழிலை,
ஒழித்தான் – நீக்கியருளியவனும்,
கூனிமருங்கு உண்டை ஓட்டினான் – (கிருஷ்ணாவதாரத்திற்) கூனியினிடத்து உள்ள உண்டையைப் போக்கியவனுமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)
காணையி லெனவே, கண்ணாயிற்று, கண்ணுக்கு வேல் உவமை – கூரிய வடிவுபற்றியேயன்றி,
ஆடவரை ஆசைநோய்ப்படுத்தி வருத்துதல்பற்றியுமாம்.
காணையிலார் என்றது – அம்மலையில்வாழும் மகளிரது கண்ணழகின் சிறப்பை விளக்கும்.
அயிலென்பது “ஐயில்” என முதற்போலி. கந்தர்வர் – எப்பொழுதும் கையில் வீணைவைத்துக் கொண்டு இசைபாடித்திரியுந் தேவசாதியார்.
வீணா, ராகம் – வடசொற்கள். இரண்டாம்பொருளில், வீண் ஐ இராகத்தை விடும் எனப் பிரித்து –
பயனற்ற ஐம்புலவாசைகளை ஒழிக்கப்பெற்ற என்று உரைத்தலும் ஒன்று.
கோணை – முசுப்பெனப்படுகிற முதுகின்வளைவுமாம். இருங்குண்டை – பண்புத்தொகை; இருமை – பெருமை. குண்டை – ரிஷபம்.
ஓட்டினான் – ஓடு என்னும் பெயரினடியாகப் பிறந்த ஆண்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர்; ஓடு – மண்டையோடு.
இனி, “குண்டை யோட்டினான்” என்பதற்கு – ரிஷபத்தை ஏறிச் செலுத்தியவனென்று உரைத்தல் திரிபிலக்கணத்துக்குப் பொருந்தாதாம்;
நான்காம் அடியில், “ஓட்டினான்” என்பது – ஓடச்செய்தவ னென்னும் பொருளதாதல் காண்க.
ஏற்பு – ஏற்றல்; ‘பு’ விகுதி பெற்ற தொழிற்பெயர்: ஏல் – பகுதி.
கூனி – கூனையுடையவள்; இவள் – நைகவக்ரையென்னும் பெயருடையவள்; இவளது கூனை நிமிர்த்தது,
கிருஷ்ணாவதாரத்தில். “கூனிமருங் குண்டை” என்றது அவளுடம்பிலுள்ள கோணலையும், முதுகுவளைவையுங் குறிக்கும்.
உண்டை = உருண்டை. இனி, “கூனிமருங்கு உண்டை யோட்டினான்” என்பதற்கு –
இராமாவதாரத்தில் மந்தரையென்னுங்கூனியின் முதுகின்புறத்திலே வில்லினால் மண்ணுண்டையைச் செலுத்தியவன் என்றும் உரைக்கலாம்;
“கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனி கூன்,
உண்டை கொண்டரங்க வோட்டி யுண்மகிழ்ந்த நாதன்,”
“கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா” என்ற ஆழ்வார் அருளிச்செயல்கள் இங்கு அறியத்தக்கன.
————
முந்நூல் மறையவர் நா மூது அரம்பை மாரின் நடு
மெய்ந்நூல் நலங்க வரும் வேங்கடமே — பொய்ந்நூலால்
அச்சமயக் கத்தினார் ஆதரிக்கத் தெய்வங்கள்
வைச்ச மயக்கத்தினார் வாழ்வு –59-
(இ – ள்.) முந்நூல் – முப்புரிநூலைத் தரித்த,
மறையவர் – பிராமணர் களுடைய,
நா – நாவானது,
மெய் நூல் நலம்கவரும் – (பொருள்களின்) உண்மையைச் சொல்லுகிற தத்துவசாஸ்திரங்களின் நற்பொருள்களை (ஓதி)க்கிர கித்தற்கு இடமான:
மூது அரம்பைமாரின் நடு – பழமையான தேவமாதர்களினுடைய இடையானது,
மெய் நூல் நலங்க வரும் – (தனதுவடிவத்தின் நுண்மையால்) பஞ்சுநூல் (தனக்கு ஒப்பாகமாட்டாது) கெடும்படி பொருந்திய:
வேங்கடமே -,-
பொய் நூலால் – பொய்ம்மையைக்கூறுகிற சாஸ்திரங்களைக் கொண்டு,
அ சமயம் கத்தினார் – அந்தந்த மதக்கோட்பாடுகளைப் பிதற்றுந் தன்மையுள்ளவர்கள்,
ஆதரிக்க – விரும்பிக்கொண்டாடும்படி,
தெய்வங்கள் வச்ச – பலதெய்வங்களை உண்டாக்கிவைத்த,
மயக்கத்தினார் – மாயையை யுடையவரான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)
வடமும், வடத்தினுள் புரியும், புரியினுள் இழையும் மும்மூன்றா யிருத் தல்பற்றி, உபவீதத்துக்கு “முந்நூல்” என்று பெயர்.
“நூலே கரக முக்கோல் மணையே, ஆயுங்காலை யந்தணர்க் குரிய” என்ற தொல்காப்பியவிதிபற்றி,
முந்நூல் மறையவர்க்கு அடைமொழியாக்கப்பட்டது.
வேதங்களை ஓதுதலோடு ஓதுவித்தற்கும் உரியவர் அந்தணரேயாதலால், அவர் “மறையவர்” எனப்பட்டனர்.
சிலசாதியார்க்கும் பெண்பாலார்க்கும் ஓதுவிக்கவும் ஓதவும் கேட்கவும் ஆகாதென்று மறுக்கப்படுதல் பற்றியும்,
ஓதியுணர்ந்த குருவினிடம் உபதேசங்கேட்டாலன்றித் தெரிதற்குஅரிய மறைந்தபொருளையுடைமைபற்றியும், “மறை” என்று பெயர்
மூதரம்பைமார் – முதுமையென்னும் பண்புப்பெயர் ஈறுபோய் ஆதிநீண்டது. அரம்பை – ரம்பா என்னும் வடசொல்லின் விகாரம்.
அரம்பைமார் – ரம்பை முதலியோர்; மார் – பலர்பாற்பெயர்விகுதி.
தமக்கு உரிய தேவலோகத்தினும் திருவேங்கடம் வசித்தற்கு இனியதால் பற்றியும், அம்மலை உயர்ச்சியால்
தங்களுலகத்துக்கு அருகிலாதல்பற்றியும், திருவேங்கடமுடையானைச் சேவித்தற்பொருட்டும்,
தேவமாதர்கள் அங்கு வந்து தங்குதலால், அவர்கள் அம்மலைக்கு உரியபொருளாகச் சொல்லப்பட்டனர்.
அவர்களிடை நூலினும் நுண்ணிதென்பது கருத்து. நடு – இடையுறுப்பு.
கத்தினார் – கத்து என்னும் முதனிலைத் தொழிற்பெயரின்மேற் பிறந்த பலர்பாற்குறிப்பு வினையாலணையும்பெயர்;
இன் – சாரியை. ஸமயம், தைவம் – வடசொற்கள். வச்ச – வைத்த என்பதன் முழுப்போலி. மயக்கம் – பிறரை மயங்கச்செய்வது;
அம் – கருத்தாப்பொருள்விகுதி.
“வணங்குந் துறைகள் பலபல வாக்கி மதிவிகற்பாற்,
பிணங்குஞ் சமயம் பலபலவாக்கி யவையவை தோறு,
அணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பிவைத்தாய்” என்று ஆழ்வார் அருளிச்செய்தபடி,
எம்பெருமான் ரஜோகுணதமோகுணங்களால் மிக்கவர் கருமகதியால் தன்பக்கல் வாராது வெவ்வேறு துணிவுகொள்ளும் படி
தனது அமிசத்தாற் பலபலதெய்வங்களையும், பலபல மதக்கோட்பாடுகளையும், பல உபாசனை விதங்களையும்
அமைத்து வைத்த விசித்திரசக்தியை வெளியிட்டார்.
சிவபிரான் ஜிநன் புத்தன் முதலியோர் திருமாலின துரூப பேதமாதலையும், அவரவரைத் தலைமையாகக் கொள்ளும்
மதங்கள் ஒவ்வொரு சமயத்தில் அத்திருமாலினாலேயே வெளியிடப்பட்டனவாதலையும் அறிக.
“முந்நூன்மறையவரு மூதரம்பைமாரு நடு” என்ற பாடத்துக்கு – மறையவர் நடுவுநிலைமையாகத் தத்துவநூல்களின்
நற்பொருள்களைக் கிரகிக்கிற எனவும், அரம்பையர் இடையின்வடிவினால் பஞ்சுநூல் கெடும்படிவருகின்ற எனவும் உரைக்க.
————
ஓதும் மறை யோர் புறமும் உள்ளும் கலையின் அரு
மேதை அகலா இருக்கும் வேங்கடமே -கோதை குழல்
சுற்றாத தார் அணியார் தூய திருத்தாள் ஊன்றப்
பற்றாத தாரணியார் பற்று –60-
(இ – ள்.) ஓதும் – வேதமோதுகின்ற,
மறையோர் – அந்தணர்களுடைய,
புறமும் – உடம்பும்,
அரு கலையின் மேதை அகலா இருக்கும் – பெறுதற்கு அரிய மான்தோல் நீங்காதிருக்கப்பெற்ற:
உள்ளும் – (அவர்களுடைய) மனமும்,
கலையின் அருமேதை அகலா இருக்கும் – சாஸ்திரங்களின் நுட்பமான அறிவு பரந்திருக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
கோதை குழல் சுற்றத்தார் அணியார் – ஆண்டாள் தனது கூந்தலில் சூடாத மாலையை அன்புடன் அணிந்துகொள்ளாதவரும்,
தூயதிரு தாள் ஊன்ற பற்றாத தாரணியார் – பரிசுத்தமான சிறந்த தமதுபாதங்களில் ஒன்றை ஊன்றியளத்தற்கு
இடம்போதாத நிலவுலகத்தையுடையவருமாகிய திருமால்,
பற்று – விரும்பிவாழுமிடம்; (எ – று.)
வேதமோதுகிற பிராமணப்பிரமசாரிகள் மான்தோலுபவீதந் தரித்தல், மரபு;
(“முப்புரிநூலொடு மானுரியிலங்கும், மார்பினி னிருபிறப் பொருமா ணாகி” என்ற திருவெழுகூற்றிருக்கையுங் காண்க.)
புறம் – புறத்து உறுப்பு. உள் – அகத்து உறுப்பு. நூல் என்ற பொருளில், கலை என்பது – கலா என்ற வடசொல்லின் விகாரமும்.
அறிவு என்ற பொருளில் மேதை என்பது – மேதா என்ற வடசொல்லின் விகாரமுமாம்.
அகலாஎன்பது – அகலாம லென்னும் பொருளில் ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சமும்;
அகன்றென்னும் பொருளில் செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட் டிறந்தகால வினையெச்சமு மாம்.
அகலுதல் – நீங்குதலும், பரத்தலும். வேதாத்தியயனஞ் செய்பவரது புறமும் உள்ளும் ஒருநிகராக வுள்ளன வெனச்
சொல்நயத்தாற் சமத்காரந் தோன்றியவாறு காண்க.
“கோதை குழல் சுற்றாத தார்அணியார்” என்றது – ஆண்டாள் தனது கூந்தலிற் சூடிக்கொடுத்த மாலையையே
திருவுள்ளமுகந்து அணிபவர் என்ற வாறு.
ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை விட்டு வேறு திருமாலையை அமைத்துப் பெரியாழ்வார் எம்பெருமானுக்குச்சமர்ப்பிக்க,
அதனைப் பெருமான் “இந்த மாலை கோதைமணம் பெறவில்லை” என்று வெறுத்தனனென வரலாறு கூறுதலும் உண்டு.
கோதையென்பது – உயர்திணைப்பெய ராதலின், அதன்முன் வலிமிகவில்லை.
“தாளூன்றப் பற்றாத தாரணியார்” என்றது – உலகமளந்த சமயத்தில் நிலவுலகத்தினும் திருவடிபரந்துநின்றதாதலின்.
அப்பொழுது காலளவிற்கு உலகம் இடம் போதாமையை
“மண்ணும் விண்ணும் என்காற்களவின்மைகாண்மினென்பா னொத்து வான் நிமிர்ந்த” என்ற திருவிருத்தத்தாலும்,
“நின்றகால் மண்ணெலாம் நிரப்பி யப்புறம், சென்று பாவிற்றிலை சிறிது பாரெனா”,
“உலகெலா முள்ளடி யடக்கி” என்ற கம்பராமாயணத்தாலும் அறிக.
“தூயதிருத்தாளூன்றப் பற்றாத தாரணியார்” என்றது – வடமொழி நடை;
அன்றியும், இங்ஙனம் கூறியதில் தமக்கு உரிய பொருளைத் தமக்கு உரியதாக்கிக் கொண்டவர் என்ற கருத்துத் தோன்றும்.
தாரணி – தரணி யென்ற வடசொல்லின் விகாரம். “பற்றாத தாரணியார் பற்று” என்ற அடியில் முரண்தொடை யிருத்தல் காண்க.
—————————————————————–————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply