ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கட மாலை –1-20-

ஸ்ரீ வேங்கடம் என்பது – திருமாலினது திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் ஒன்றும்,
வடநாட்டுத் திருப்பதிகள் பன்னிரண்டனுள் முதலதும், “கோயில் திருமலை பெருமாள்கோயில்” என்று சிறப்பாக
எடுத்துக் கூறப்படுகின்ற மூன்று ஸ்தலங்களுள் இடையது மாகிய தலம்.
தன்னை அடைந்தவர்களது பாவமனைத்தையும் ஒழிப்பதனால், “வேங்கடம்” எனப் பெயர் பெற்றது;
வடசொல். வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப் பொருள் காண்க.
இதனை,
“அத்திருமலைக்குச் சீரார் வேங்கடாசல மெனும் பேர், வைத்தன ரதுவே தென்னில்
வேமென வழங்கெழுத்தே, கொத்துறு பவத்தைக் கூறுங் கடவெனக் கூறிரண்டாஞ்,
சுத்தவக்கரங் கொளுத்தப்படு மெனச் சொல்வர் மேலோர்”,
“வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திடச் செய்வதால் நல், மங்கலம் பொருந்துஞ் சீர்
வேங்கடமலை யான தென்று” என்னும் புராணச்செய்யுட்களாலும் அறிக.

ஸ்ரீசைலத்தின் மேற்கிலுள்ள நந்தநபுரமென்னும் ஊரில் புரந்தரனென்னும் பிராமணோத்தமனது குமாரனாகிய
மாதவனென்பவன் தன்மனைவியாகிய சந்திரரேகையென்பவளோடு பூஞ்சோலையிற் சென்று விளையாடிக்கொண்டிருக்கையில்
மாலிநியென்பாளொரு சண்டாள கன்னிகையின் கட்டழகைக் கண்டு காமுற்று அவளைக் கூடி மனையாளைத் துறந்து
அப்புலைமங்கையுடனே சென்று புலால் நுகர்ந்தும் கட்குடித்தும் கைப்பொருள் முழுவதையும் இழந்து பின்பு
வழிபறித்தல் உயிர்க்கொலை முதலிய கொடுந்தொழில் புரிந்து பொருள்சேர்த்து அவளுக்குக்கொடுத்து வந்து
முடிவில் வறியவனாகிப் பலவகை நோய்களையும் அடைந்து அவளால் அகற்றப்பட்டவனாய்ப் பல பாவமுந் தொடரப்
பித்தன்போல அலைந்து திரிந்து இத்திருமலையை அடைந்த மாத்திரத்தில் தனது தீவினையெல்லாம் சாம்பலாகப்பெற்று
முன்னைய பிரமதேஜசைப் பொருந்தி நல்லறிவுகொண்டு திருமாலைச் சேவித்து வழிபட்டுப் பரமபத மடைந்ததனால்
இதற்கு “வேங்கடாசலம்” என்னும் பெயர் நிகழ்ந்ததென்று வடமொழியிலே ப்ரஹ்மாண்ட புராணத்திலும்,
பவிஷ்யோத்தரபுராணத்திலும் கூறப்படுதல் காண்க.

அன்றி, “வேம் என்பது – அழிவின்மை, கடம் என்பது – ஐசுவரியம். அழிவில்லாத ஐசுவரியங்களைத்
(தன்னையடைந்தார்க்குத்) தருதலால், வேங்கடமெனப் பெயர் கொண்டது” என்று வராகபுராணத்திற் சொல்லப்பட்டவாறும் உணர்க.
இனி, தமிழ்மொழியாகவே கொண்டால், வெவ்விய காடுகளை யுடைய தெனப் பொருள்படு மென்க.

திரு என்பதற்கு – மேன்மையான என்று பொருள்கொண்டால் திரு வேங்கடம் என்ற தொடர் –
பண்புத்தொகையும், மேன்மையையுடைய என்று பொருள்கொண்டால் இரண்டாம்வேற்றுமை உருபும்பயனும்
உடன் தொக்க தொகையுமாம். வேங்கடமாலை என்ற தொடர் – வேங்கடத்தினது சம்பந்தமான மாலை யென்று விரித்து
வேங்கடத்தின் விஷயமான பிரபந்த மென்று பொருள்கொண்டு ஆறாம்வேற்றுமைத்தொகையாகவும்,
வேங்கடத் தைப்பற்றிய மாலையென்று விரித்துப் பொருள்கொண்டு இரண்டாம் வேற்றுமை உருபும்
பொருளும் தொக்கதொகையாகவும் உரைக்கத்தக்கது.
மாலா என்ற வடமொழி, மாலையென விகாரப்பட்டது; “ஆவீறு ஐயும்.” மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட பூமாலைபோலச்
சொற்கள்கொண்டு தொடுக்கப்பட்ட பாமாலையாகிய பிரபந்த மென்க; எனவே, மாலையென்பது – உவமையாகு பெயராம்.

மாலையென்பது – பலவகைப்பிரபந்தங்களுள் ஒன்று. அதன் இலக்கணம் – ஒருவிஷயத்தைக்குறித்துப் பலசெய்யுள் கூறுவது.
ஸ்ரீநிவாஸ னென்று வடமொழியிலும், அலர்மேல்மங்கையுறைமார்ப னென்பது தென்மொழியிலும் திருநாமங்கூறப்படுகின்ற
திருவேங்கடமுடையானது திருவடிகளிலே சூட்டும் திருமாலை போலுதலால். திருவேங்கடமாலை எனப்பட்டது;
“அடிசூட்டலாகு மந்தாமம்,”
“செய்யசுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை”,
“கற்றினம்மேய்த்த கழலிணைக்கீ, “ற்ற திருமாலை பாடுஞ் சீர்” என்றார் பெரியாரும்.
இங்கு வேங்கடமென்பது – அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானையுங் குறிக்கும்; உபலக்ஷணம்.
“தேச்யரான பெருமாளைச் சொன்னதெல்லாம் உபஸர்ஜநகோடியிலே யாய் அத்தேசமே யாய்த்து இத்திருமாலைக்கு விஷயம்.

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் “விருந்தேதானும் புதுவது கிளந்த யாப்பின்மேற்றே” என்பதனால்,
“விருந்துதானும், பழங்கதைமேல தன்றிப் புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் தொடுக்கப்படும் தொடர்நிலை மேலது”
என்றுகூறினமையின், இம்மாலை அங்ஙனம் கூறிய விருந்தாமென்று உணர்க.
இனி, இதனைச் சிறுகாப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார்.

நூலின் புறமாக முதலிற் கூறப்பட்ட காப்புச்செய்யுள் இரண்டும்,
அவையடக்கச் செய்யுள் ஒன்றும்,
நூலின் இறுதியிற் கூறப்பட்ட
“ஆதிதிரு வேங்கடமென் றாயிரம்பேரா னிடமென்,
றோதிய வெண்பா வொருநூறுங் கோதில்,
குணவாளபட்ட ரிருகோகனகத்தாள் சேர்,
மணவாள தாசன் றன் வாக்கு” என்ற சிறப்புப்பாயிரச்செய்யுளொன்றும் நீங்கலாக நூறு செய்யுளுடையது,

இந்நூல். வெண்பாவினால் அமைந்தது. இந்நூற்செய்யுள்களெல்லாம் – முன்னிரண்டடியில் திருவேங்கடத்தின் சிறப்பையும்,
பின் னிரண்டடியில் திருவேங்கடமுடையானது சிறப்பையுங் கூறி “ஊர்” என்னுந் துறை யமைய
“திருவேங்கடமென்பது திருமாலின் திருப்பதி” என்னும் வாய்பாடு பொருந்த இயற்றப்பட்டுள்ளன.
இந்நூலின் பிற்பாதியாகிய ஐம்பது செய்யுள்களின் முன்னிரண்டடிகள் – இத்தன்மையோடு சிலேடை யென்னும் அலங்காரமு முடையன.
இந்நூற் செய்யுள்க ளெல்லாவற்றிலும் பின்னிரண்டடிகள் – பெரும்பாலும் திரிபு என்னுஞ் சொல்லணியும்,
சிறு பான்மை யமகம் என்னுஞ் சொல்லணியும் அமையக் கூறப்பட்டுள்ளன.

—–

காப்பு – காத்தல். அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்.
ஆகவே, கவி தமக்குநேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்கவல்லதோர்
கடவுளின் விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து.
இக்காப்புச்செய்யுள், ஆழ்வார்கள் பன்னிருவருட் பிரதானரான நம்மாழ்வாரைப் பற்றியது.
ஸ்ரீவைஷ்ணவ சமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக்காப்புச் செய்யுள், விஷ்ணு பக்தர்களிற் சிறந்த
ஆழ்வாரைக் குறித்த தாதலால், வழிபடுகடவுள்வணக்க மாம். தம்தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலே யன்றி
அக்கடவு ளின் அடியார்களை வணங்குதலும் வழிபடுகடவுள் வணக்கத்தின் பாற்படு மென அறிக.
அவ்வாழ்வாரால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின் சொற் பொருட் கருத்துக்க ளமைய அப்பிரபந்தங்கள்
போலச் செய்யப் படுவது இப்பிரபந்த மென்பதுபற்றி, இந்நூலின்
இக்காப்புச்செய்யுளை ஏற்புடைக்கடவுள் வணக்கமென்று அரிதிற்கொள்ளவும் அமையும்.

காப்பு -நம்மாழ்வாரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

திண்பார் புகழும் திருவேங்கட மாலை
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய்
நாராயணா வடியேனாடும் தமிழ் வேதப்
பாராயணா சடகோபா –

(இதன்பொருள்.) நாராயணா – நாராயணனே!
அடியேன் நாடும் – உனது அடியவனாகிய என்னால் மிகவும் விரும்பப்படுகிற,
தமிழ்வேத பாராயணா – தமிழ் வேதங்களாகிய திவ்வியப்பிரபந்தங்களைக் கூறியருளியவனே!
சடகோபா – சடகோப னென்னுந் திருநாமமுடையவனே! –
திண் பார் புகழும் – வலிய பூலோகத்திலுள்ளவர்கள் எல்லாராலும் புகழப்படுகின்ற,
திருவேங்கடம் – திருவேங்கடமென்னுந் திருப்பதியின் விஷயமான,
மாலை – மாலை யென்னும் பிரபந்தரூபமாக,
நூறும் – நூறுசெய்யுள்களையும்,
வெண்பாவால் – வெண்பாவென்னும் யாப்பினால்,
விளம்புதற்கு – (அடியேன்) சொல்லும்படி,
கண் பாராய் – கிருபைசெய்தருள்வாய்; (என்றவாறு.)

அடியேன் – அடிமை யென்னும் பண்பி னடியாகப் பிறந்த தன்மை யொருமைக் குறிப்பு வினையாலணையும்பெயர்.
“அடியேனாடும்” என்றது.தமிழ்வேதத்துக்கும், தமிழ்வேதபாராயணனுக்கும் அடைமொழியாகத் தக்கது.
இந்த அடைமொழியினால், இந்நூலாசிரியர்க்குத் திவ்வியப்பிரபந் தங்களினிடத்திலும் ஆழ்வாரிடத்திலு முள்ள அன்பு விளங்கும்.

திருமாலடியார்களிற் சிறந்த ஆழ்வார்கள் பன்னிருவருள் ஐந்தாமவராகிய நம்மாழ்வார், மற்றையாழ்வார்கள் போல
லௌகிகவிஷயஞானம் நடை யாடுகையில் எம்பெருமானருளால் ஒருகாலவிசேஷத்தில் தத்துவஞானாதிகள்
தோன்றப்பெற்று அந்தப்பகவானை அனுபவிப்ப தன்றி, திருத்துழாய் பரிமளத்துடனே அங்குரிப்பது போல
இயற்கையிலேயே விலக்ஷணமான ஞானபக்திகளையுடைய ராதலால், மிகுந்த ஏற்றமுள்ளவராய்த்
தத்துவ ஞானப்பிரவர்த்தநத்தில் பிரதம ஆசாரிய ராகக் கொள்ளப்படுவர்.
இவரைப் பகவானுடைய அம்சமென்று பாத்மபுராணம் கூறுகின்றதனால், “நாராயணா” என்று எம்பெருமான்
திருநாமத்தினால் விளித்தார். இவர்க்கு் இருப்பிடமான திருப்புளியமரம், எம்பெருமானுக்குத் திருப்பள்ளி
மெத்தையான ஆதிசேஷனது அம்சமென்று பிரமாண்டபுராணத்திற் கூறப்பட்டிருக்கிறது.

நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளுள் பாண்டிய நாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்றும்
தாமிரபர்ணிநதிதீரத்திலுள்ளதுமான திருக்குருகூ ரென்கிற திவ்வியதேசத்திலே காரியென்பவர்க்கு உடைய நங்கையாரது
திருவயிற்றிலே திருவவதரித்த இவர் பிறந்தபொழுதே தொடங்கி
அழுதல் பால்குடித்தல் முதலிய குழந்தைச்செய்கை யொன்றையுங் கொள்ளாமலே வாட்டமின்றிப் பரிபூர்ணராயிருக்கிற
ஆச்சரியத்தைத் தாய்தந்தையர்கண்டு இவரை அத்திருப்பதியிலுள்ள திருமாலின் திருக்கோயிலுள் கொண்டுபோய்விட,
இவர் அங்குஇருந்த ஒரு புளியமரத்தின்கீழ்ச் சென்று வீற்றிருந்து பதினாறு பிராயமளவும் கண்திறவாமல் மௌனமாய்
எழுந்தருளியிருந்த பின்பு, மதுரகவிகள் இவ்வாழ்வாருடைய மகிமையை அறிந்து வந்து அடைந்து
அடிமைத்தொழில் செய்துவருகையில், ஆழ்வார் இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்ற நான்கு வேதங்களின்
சாரார்த்தங்கள் முறையே அமையத் திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரியதிருவந் தாதி என்ற
நான்கு பிரபந்தங்களை அருளிச்செய்து உலகத்தை உய்வித்தன ரென்ற வரலாறு அறிக;
அத்தன்மைபற்றி, “தமிழ்வேதபாராயணா” என்று விளித்தார்.

பாராயணம் – நியமத்தோடு ஓதுதல். ஸம்ஸ்கிருத வேதங்கள் போலவே தமிழ்வேதங்களும் எவராலும் இயற்றப்படாமல்
நித்தியமாயுள்ளவை யென்றும், அந்த வடமொழி வேதங்கள் ஆதிகாலத்தில் பிரமனது வாக்கினின்று வெளிப்பட்ட
மாத்திரத்தைக்கொண்டு “முன்னந் திசைமுகனைத் தான்படைக்க மற்றவனும், முன்னம்படைத்தனன் நான்மறைகள்” என்று
அவ்வேதங்களை அவன் படைத்தா னென உபசாரமாகச் சொல்வது போலவே,
ஆழ்வாருடைய திருவாய்மலரினின்று ஆதியில் இத்தென்மொழி வேதங்கள் வெளிப்பட்ட மாத்திரத்தைக்கொண்டு
“வேதந் தமிழ்செய்த மாறன் சடகோபன்” என்று இவ்வேதங்களை இவர் இயற்றியதாகச் சொல்லுதல்
உபசார வழக்கென்றும் சித்தாந்த மென்பது, “தமிழ்வேதபாராயணா” என்ற சொல்லின் ஆற்றலால் விளங்கும்.

இனி, பாராயணம் என்ற வடசொல்லுக்கு – முழுவதும் என்று ஒருபொரு ளுள்ளதனால்,
தமிழ் வேதங்க ளெல்லாவற்றையும் வெளியிட்டவ ரென்றும் பொருள் கொள்ளலாம்;
பிற்காலத்தில் அர்ச்சாவிக்கிரகரூபியாயிருந்த இவ்வாழ்வாரை நாதமுனிகள் தக்கபடி உபாசிக்க,
அவர்க்கு ஆழ்வார் பிரசன்னராய்த் தமது நான்கு திவ்வியப் பிரபந்தங்களையும் மற்றுமுள்ள ஆழ்வார்கள்
அருளிச் செய்த வேதப்பொருளமைந்த திவ்வியப்பிரபந்தங்க ளெல்லாவற்றையும் சொல்லியருளின ரென்கிற வரலாறு காண்க.

கர்ப்பத்தி லிருக்கும்பொழுது ஞானமுடையனவாயிருக்கின்ற குழந்தை களைப் பிறந்தவுடனே தனது
ஸ்பர்சத்தால் அஜ்ஞாநத்துக்கு உள்ளாக்கி அழுதல் அரற்றுதல் முதலியன செய்யும்படி பண்ணி விடுந் தன்மையதான
சட மென்னும் வாயு, இவ்வாழ்வார் அவதரித்தபொழுது இவரையும் தொடுதற்கு வர,
அப்பொழுது இவர் அதனை உங்காரத்தால் ஒறுத்து ஓட்டி யொழித்ததனால், சடகோபரென்று இவர்க்குத் திருநாமமாயிற்று.
மாறன், பராங்குசன், நம்மாழ்வார் முதலிய திருநாமங்களும் இவர்க்கு உண்டு.

நாராயணன் – பாராயணன், சடகோபன் என்ற வடமொழிப் பெயர்கள், ஈறுகெட்டு ஈற்றயல் நீண்டு விளியேற்றன.
பார் – இடவாகுபெயர். பார் என்பது – இங்கு மற்றையுலகங்களுக்கும் உபலக்ஷண மென்றாவது,
பார் என்ற சிறப்புப்பெயர் பொதுப்பட உலகமென்ற மாத்திரமாய் நின்ற தென்றாவது கொள்க;
“வேங்கடமே, வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு,”
“உலகுக்கெல்லாம், தேசமாய்த் திகழும் மலைத் திருவேங்கடம்” என்பவாதலின்.
“வெண்பாவாநூறும்” என்ற பாடத்துக்கு – வெண்பா வாகிய நூறுகவியையு மென்க.
கண் பார்த்தல் – கடாக்ஷித்தருளுதல்; ஆய் – ஏவலொருமை வினைமுற்று விகுதி.

———-

இதுவும் அது -திருவேங்கடமுடையானைக் குறித்து அருளிச் செய்கிறார்

மூலமே யென்ற கரி முன் வந்திடர் தொலைத்து
நீலமேகம் போலே நின்றானைப் பாலாய
வேலை நடு விற்றுயிலும் வித்தகனை வேங்கடத்து
மாலை யன்றிப் பாடாதென் வாய்

(இ – ள்.) மூலமே என்ற – ஆதிமூலமே யென்று முறையிட்ட,
கரிமுன் – கஜேந்திராழ்வானுடைய முன்னிலையிலே,
வந்து – எழுந்தருளி,
இடர் தொலைத்து – (அதற்கு முதலையினாலுண்டான) துன்பத்தை நீக்கி,
நீல மேகம் போல நின்றானை – நீலநிறமுள்ள மேகம் போலக் காட்சிதந்து நின்றருளியவனும்,
பால் ஆய வேலை நடுவில் துயிலும் வித்தகனை – பால்மயமான கடலின் நடுவில் யோக நித்திரைகொண்டருளுகிற ஞானசொரூபியுமாகிய,
வேங்கடத்து மாலை – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற திருமாலை,
அன்றி – அல்லாமல், (வேறொருகடவுளை),
என் வாய் பாடாது – எனது வாயானது பாடித் துதியாது; (எ – று.)

ஆசீர்வாதம் நமஸ்காரம் வஸ்துநிர்த்தேசம் என்று வடமொழியிலும், வாழ்த்து வணக்கம் வருபொருளுரைத்தல் என்று தமிழிலுங்
கூறப்படுகிற மூன்றுவகை மங்களங்களுள் வருபொருளுரைத்த லென்னும் வஸ்துநிர்த் தேசரூபமான மங்களமாகும்,
இச்செய்யுள். “தேவு மற்றறியேன்,”
“வேறொன்றும் நானறியேன்” என்றாற்போல,
“மாலையன்றிப்பாடாதுஎன்வாய்” என்று தமது உறுதியான கொள்கையை வெளியிட்டார்;
மறந்தும் புறந்தொழா மாந்தராதலால். பரதேவதையாகிய நாராயணனை வழிபடுதலே யன்றி க்ஷுத்ர தேவதைகளாகிய
பிறதேவதைகளை வழிபடாமை ஸ்ரீவைஷ்ணவர்க்குச் சிறந்த லக்ஷணமென்க.
எம்பெருமானைப்பாடுவதே யன்றித் தனிகர்களான மனிதர்களுமுட்பட மற்றெவரையும் பாடாது
என் வா யென்பதும் இதன் தேர்ந்த கருத்தாகலாம்.
“சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன், கேண்மினோ,
என்னாவி லின்கவி யானொருவர்க்குங் கொடுக்கிலேன்,
தென்னா தெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து,
என்னானை யென்னப்ப னெம்பெருமா னுளனாகவே” என்று ஆழ்வார் அருளிச் செய்தமை அறிக.
ஒருகால் யான் பாடக்கருதினாலும் என்வாய் பாடாது; அது எம்பெருமானையே பாடப்பழகியதும் பிறரைப் பாடப்
பழகாததும் ஆதலால் என்னுங் கருத்து அமைய, “பாடாது என்வாய்” என வாயின்மேல் ஏற்றிக் கூறினார்;
இதனை, “பொய்ம்மைமொழி புகன்றறியேம் புகல மன மெண்ணுகினும்,
மெய்ம்மையலது உரையா நா வேதநவில் பயிற்சியால்” என்ற நைடதத்தோடு ஒப்பிடுக.

நின்றான், வித்தகன், மால் என்ற மூன்றும் – ஒருபொருளின்மேல் வந்த பலபெயர்கள்.
இவற்றில், முந்தின இரண்டையும் விசேடணமாகவும், பிந்தினதை விசேடியமாகவும் கொள்க.
தனக்கு அடிமைப்பட்ட உயிர்களைப் பாதுகாத்தலில் எம்பெருமானுக்கு உள்ள மிக்க ஆதரமும்,
அந்த எம்பெருமான் எப்பொழுதும் இடைவிடாமல் லோகீரக்ஷணசிந்தனை செய்துகொண்டிருத்தலும்,
அப்பெருமான் அடியார்களுக்கு எளிதில் அருள்செய்தற்பொருட்டுத் திருவேங்கடத்தில் எழுந்தருளியிருத்தலும் தோன்றக் கூறினார்.

கஜேந்திராழ்வான் ஆதிமூலமே யென்று பொதுப்படக் கூப்பிட்ட பொழுது எம்பெருமானல்லாத பிறதேவரெல்லோரும்
தாம்தாம் அச் சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதி யொழிய, அதற்கு உரிய திருமால் தானேவந்து
அருள் செய்தன னென நூல்கள் கூறும்.
ஒரு விலங்கினாலே மற்றொரு விலங்குக்கு நேர்ந்த துன்பத்தைத் தான் இருந்தவிடத்திலிருந்தே தீர்ப்பது
சர்வசக்தனான எம்பெருமானுக்கு மிகவும் எளிய தாயினும் அப்பெருமான் அங்ஙனஞ் செய்யாமல் தனது
பேரருளினால்அரைகுலையத் தலைகுலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகாகுணத்தில் ஈடுபட்டு,
அதனை இங்ஙனம் முதலிற் கூறினார். இவ்வரலாற்றில், திருமாலே பரம்பொருளாந்தன்மை வெளியாம்.

“பாலாய வேலை நடுவில் துயிலும் வித்தகன்” என்றது, பரத்வம் வியூகம் விபவம் அர்ச்சை அந்தர்யாமித்வம் என்ற
எம்பெருமானது ஐவகை நிலைகளுள் வியூக நிலையை உணர்த்தும்.
பாலாயவேலை – திருப்பாற்கடல். ஆய, ய் – இறந்தகால இடைநிலை.

—————

அவையடக்கம் –

அவையடக்கமாவது – கற்றோர்சபைமுன் கவி தன்னைப்பற்றித் தாழ்த்திக் கூறுதல்.
அவை – ஸபா என்ற வடசொல்லின் சிதைவு. அடக்கம் – தொழிற்பெயர்;
அடங்கு – பகுதி, அம் – விகுதி, வலித்தல் – விகாரம்.

ஆழ்வார்கள் செந்தமிழை யாதரித்த வேங்கடம் என்
தாழ்வான புன் சொல்லும் தாங்குமால் ஏழ் பாரும்
வெல்லும் கதிர் மணியும் வெம்பரலும் செஞ்சாந்தும்
புல்லும் பொறுத்தமையே போல் –

(இ – ள்.) ஏழ் பாரும் – ஏழு உலகங்களையும்,
வெல்லும் – (தமக்கு) விலையாகக் கொள்ளும்படியான,
கதிர் மணியும் – ஒளியையுடைய இரத்தினங்களையும்,
வெம் பரலும் – வெவ்விய பருக்கைக்கற்களையும்,
செம் சாந்தும் – சிவந்த சந்தன மரங்களையும்,
புல்லும் – புற்களையும்,
பொறுத்தமையே போல் – தான் தரிக்கின்ற தன்மையே போல, –
ஆழ்வார்கள் செந் தமிழை ஆதரித்த வேங்கடம் – ஆழ்வார்கள் அருளிச் செய்த செவ்விய
தமிழ்ப் பாசுரங்களை அன்புடன் ஏற்றுக் கொண்ட திருவேங்கடமலையானது,
என் தாழ்வு ஆன புல் சொல்லும் தாங்கும் – என்னுடைய மிகவும் இழிவாகிய பாடல்களையும் ஏற்றுக் கொள்ளும்; (எ – று.) –
ஆல் – ஈற்றசை; தேற்றப் பொருளதுமாம்.

மிகச்சிறந்த இரத்தினங்களோடு ஒப்ப மிகவும் இழிவான பருக்கைக் கற்களையும், சிறந்த சந்தனமரங்களோடு ஒப்பச்
சிறப்பில்லாத புற்களையும் திருவேங்கடமலை தன்மேற் கொள்ளும் இயல்பின தாதலால்,
அவ்வாறே அம்மலை ஆழ்வார்களுடைய மிகச் சிறந்த தமிழ்ப்பாசுரங்களோடு ஒப்ப எனது
மிகத் தாழ்ந்த பாடல்களையும் அங்கீகரிக்கும் என்னுந் துணிவுபற்றி, யான் இப்பிரபந்தம் பாடத் தொடங்கினேன் என்பதாம்
உபமான உபமேயங்க ளில் முறைநிரனிறை இருத்தல் காண்க.

பகவானுடைய திவ்விய மங்கள குணங்களாகிய அமுதவெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு
நன்றாக ஆழ்ந்திடுபவ ராதலால், இவர்களுக்கு, ஆழ்வார் என்று திருநாமம்.
ஸ்ரீவைஷ்ணவமதத்திற் சிறந்தமெய்யடியார்க ளென்று கொண்டாடப்படுகின்ற ஆழ்வார்கள் பன்னிருவர்; அவராவார் –

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், (அவரதுசிஷ்யரான) மதுரகவியாழ்வார்,
குலசேகராழ்வார், பெரியாழ்வார், (அவர்வளர்த்த திருமகளாரான) ஆண்டாள், தொண்ட ரடிப்பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என இவர்.
இவர்களில் தொண்டரடிப்பொடியாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் தவிர்ந்த மற்றைப்பதின்மரும் திருவேங்கடத்தைப் பாடினரென அறிக.
“ஏழ்பாரும் வெல்லுங் கதிர்” என்பதற்கு – எல்லாவுலகங்களிலுஞ் சென்று பரவி இருளை வென்று அகற்றும்
ஒளியை யுடைய என்று உரைப்பினும் அமையும்.
ஏழ்பாரும் வெல்லும் – ஏழுஉலகங்களிலும் (எல்லாஇரத்தினங்களினும்) மேம்பட்ட என்றுமாம்.
தமிழ் சொல் – பாடல்களுக்குக் கருவியாகு பெயர். தாழ்வான, புல் – ஒருபொருட்பன்மொழி.
ஏழ்பார் – கீழேழும் மேலேழும் ஆக ஈரேழுலக மென்க. செந் தமிழ் – சுத்தமான தமிழ்.

————–

பொன்னும் மணியும் பொலிந்து ஓங்கி பார்மகட்கு
மின்னும் மணி முடி ஆம் வேங்கடமே -மன்னும்
பரமபத நாட்டினான் பை அரவின் சூட்டில்
சிரம பதம் நாட்டினான் சேர்வு –1-

(இ – ள்.) பொன்னும், – மணியும் – நவரத்தினங்களும்,
பொலிந்து – (தன்மீது) விளங்கப்பெற்று,
ஓங்கி – தான் உயர்ந்திருத்தலால்,
பார்மகட்கு மின்னும் மணி முடி ஆம் – பூமிப்பிராட்டிக்கு விளங்குகின்ற இரத்தின கிரீடம் போலிருக்கிற,
வேங்கடம் – திருவேங்கடமலையானது, –
மன்னும் – நிலை பெற்ற,
பரமபதம் நாட்டினான் – பரமபதமென்னுந் திருநாட்டையுடையவனும்,
பை அரவின் சூட்டில் – படத்தையுடைய (காளியனென்னும்) பாம்பினது முடியிலே,
சிரம பதம் நாட்டினான் – ஆட்டப்பயிற்சியையுடைய திருவடிகளை நிறுத்தி நடனஞ்செய்தவனுமாகிய எம்பெருமான்,
சேர்வு – (திரு வுள்ளமுவந்து) சேர்ந்திருக்குமிடமாம்; (எ – று.) – ஆம் – உவமவுருபு.

வேங்கடம் சேர்வு என முடிக்க; இம்முடிபு, இந்நூற்செய்யுளெல்லாவற்றுக்கும் ஒக்கும்.
ஏ – ஈற்றசை; பிரிநிலையாகக்கொள்ளின், இத்திருப்பதி எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றையெல்லாத் திவ்விய
தேசங்களினும் மிகவும் பாங்கான வாசஸ்தானமென்னுங் கருத்துஅமையும்;
அங்ஙனம் சிறப்புடையதாதல், புராணங்களினாலும் விளங்கும். முன்னிரண்டடி – வடிவுபற்றி வந்த உவமையணி.
பரமபதம் என்றும் அழிவில்லாது நித்தியமாயிருத்தலால், அதற்கு, “மன்னும்” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
பரம பதம் – சிறந்த ஸ்தாநம். பரமபத நாடு – பரமபதமாகியநாடு; இருபெயரொட்டு.

வருந்துதலென்னும் பொருளைத் தருகின்ற ச்ரமம் என்னும் வடசொல்லின் திரிபாகிய சிரமம் என்பது –
“சிலைக்குரு விறற்குருகுலகுமரருக்கு வரு சிரமநிலை காண்மி னெனவே” என்ற வில்லிபுத்தூரார் பாரதச் செய்யுளில்
படைக்கலப்பயிற்சி யென்னும் பொருளில் வந்தது போல, இங்கு நடனப்பயிற்சி யென்னும் பொருளில் வந்தது.
கண்ணன் காளியனுடைய முடியின்மேல் ஏறி நர்த்தநஞ்செய்தருளும்போது ஐந்துதலைகளையுடைய அந்நாகம்
எந்தெந்தப்படத்தைத் தூக்குகின்றதோ அந்தந்தப்படத்தைத் துவைத்து நர்த்தனஞ்செய்து நின்று
அப்பாம்பின்வலிமையை யடக்கி அதனை மூர்ச்சையடையச் செய்கையில் பலவகை நடனத்திறங்களைச் செய்து காட்டியமை தோன்ற,
“சிரமபதநாட்டினான்” என்றார்;
அத்தன்மையை, “சுவாமிநர்த்தனமுறைமையில் வட்டமாய்ச் சுற்றுவது முதலான பிராந்தி கதிகளினாலும்,
ஒருபக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்துக்குப் போவது முதலான ரேசககதிகளினாலும், பாதத்தை முன்நீட்டிவைப்பதாகிய
தண்ட பாதகதியினாலும், அந்தச் சர்ப்பராசன் நசுங்கி மிகுந்த உதிரத்தையுங் கக்கினான்” என்ற விஷ்ணுபுராணவாக்கியத்தால் நன்கு அறிக.
“கானகமாமடு விற் காளிய னுச்சியிலே, தூயநடம்பயிலுஞ் சுந்தர”,
“காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட் டவ, னீண்முடி யைந்திலு நின்று நடஞ்செய்து,
மீள வவனுக் கருள் செய்த வித்தகன்” என்ற ஆழ்வாரருளிச் செயல்களையுங் காண்க.

இனி, சிரமபதம் நாட்டினான் என்பதற்கு – வருத்தத்தன்மையை உண்டாக்கியவ னென்றும்,
சிரமத்தை நீக்குகின்ற திருவடியை நிறுத்தியவ னென்றும், மற்றுஞ் சிலவாறும் நலிந்துபொருள் கொள்ளுகின்ற
உரைக ளெல்லாம் சிறவாமை காண்க.
நாட்டினான் – தனது திருவடிபதிந்ததழும்பு என்றும் நிலையாக இருக்கும்படி அழுந்த வைத்தவன்;
“ஓ சர்ப்பராசனே! நீ கருடனுக்குப் பயப்படவேண்டாம்; உன் சிரசில் என்திருவடி பொறித்த வடு இருத்தலைக் கண்டு
உன்னை அவன் ஒன்றுஞ் செய்யமாட்டான்” என்று கண்ணன் காளியனுக்கு வரமளித்தமை காண்க.

சேர்வு – தொழிலாகுபெயர். “சேர்பு” என்றும் பாடம். நாட்டினான் என்பது – மூன்றாமடியில் நாடு என்னும் பெயரினடியாகப்
பிறந்த குறிப்பு வினையா லணையும் பெயரும், நான்காமடியில் நாட்டு என்னும் பிறவினைப் பகுதியடியாப் பிறந்த
தெரிநிலைவினையாலணையும் பெயருமாம்; முந்தினதில், இன் – சாரியை; பிந்தினதில், இன் – இறந்த காலவிடைநிலை.

எல்லா நூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது மர பாதலால், “பொன்” என்று தொடங்கினார்.
மங்கலச் சொற்கள் இன்ன வென்பதை “சீர் மணி பரிதி யானை திரு நில முலகு திங்கள், கார் மலை சொல்லெழுத்துக்
கங்கை நீர் கடல் பூத் தேர் பொன், ஏருறுமிவைமூவாறு மிதிற் பரியாயப்பேரும்,
ஆரு மங்கலச்சொற் செய்யுளாய்ந்து முன்வைக்க நன்றாம்” என்ற நிகண்டினால் அறிக.

—————-

சோதி மதி வந்து தவழ் சோலை மலை யோடிரண்டாய்
மேதினியாள் கொங்கை நிகர் வேங்கடமே –போதில்
இருப்பாற் கடலானிப மூர்ந்தார் கெட்டாத்
திருப் பாற் கடலான் சிலம்பு –2-

(இ – ள்.) சோதி மதி வந்து தவழ் – ஒளிநிறைந்த சந்திரன் வந்துதவ ழப்பெற்ற (மிகவும்உயர்ந்த),
சோலைமலையோடு – திருமாலிருஞ்சோலைமலை யோடு சேர்ந்து,
இரண்டு ஆய் – இரண்டாகி,
மேதினியாள் கொங்கை நிகர் – பூமிப்பிராட்டியினது இரண்டுதனங்கள் போல்கின்ற,
வேங்கடமே -, –
போதில் இருப்பாற்கு – தாமரைமலரில் இருப்பவனான பிரமதேவனுக்கும்,
அடல் ஆன் இபம் ஊர்ந்தார்க்கு – வலிமையையுடைய ருஷபத்தையும் ஐராவதயானையையும் (முறையே வாகனமாகக்கொண்டு)
ஏறிச்செலுத்துபவரான சிவபிரானுக்கும் தேவேந்திரனுக்கும்,
எட்டா – எட்டாத,
திருபால் கடலான் – திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டிருப்பவனான திருமாலினது,
சிலம்பு – திருமலை; (எ – று.)

“சோதிமதிவந்துதவழ் சோலைமலை” என்றது, தொடர்புயர் வுநவிற்சியணி.
“சோலைமலையோ டிரண்டாய் மேதினியாள் கொங்கை நிகர் வேங்கடம்” என்றது, உவமையணி.
சிறப்பும் உயர்வு முள்ள வடக்குத் திருமலையாகிய திருவேங்கடமும், தெற்குத்திருமலையாகிய திருமாலிருஞ்சோலை மலையும்,
பூமியாகிய பெண்ணின் இரண்டு தனங்களாக வருணிக்கப்பட்டன.
பருத்த வடிவத்தையும், மிக்க வலிமையையும், பூமிதேவியின் நாயகனான திருமால் விரும்புமிட மாதலையும் விளக்கும் உவமை.
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரியதிருமடலில்
“தென்ன னுயர்பொருப்பும் தெய்வ வடமலையும்,
என்னு மிவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கு” என்றதை அடியொற்றியது,
இவ்வருணனை, அதன் வியாக்கியாநத்தில், “மேரு மந்தராதிகளைச் சொல்லாதே திருமலைகளைச் சொல்லுவா னென் னென்னில், –
முலைகளாகின்றன, காந்தன் விரும்பி விடாதே படுகாடுகிடக்குமவையாய்த்து; ஸர்வேச்வரன்விரும்பி நித்ய வாசம்
பண்ணுமிடங் களிறே இரண்டு திருமலைகளும்” என்ற வாக்கியம் இங்கு உணரத்தக்கது.
“பொதியமு மிமயமும் புணர்முலை யாக” என்ற பெருங்கதையோடும்,
“கொங்கையே பரங்குன்றமுங் கொடுங்குன்றும்” என்ற திருவிளையாடற் புராணத்தோடும் இதனை ஒப்பிடுக.
மிகப்பலவான சோலைகளையுடையதாதலால், சோலைமலையென்று திருநாமம்: “வநகிரி” என்று வடமொழிப்பெயர்;
“ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே” என்றார் பெரியாழ்வாரும். இத்திருமலை, பாண்டியநாட்டி லுள்ளது.

“பத்துடைய டியவர்க் கெளியவன் பிறர்களுக்கு அரிய, வித்தகன்” என்றபடி எம்பெருமான் அன்புமிக்க அடியார்கட்கு
எளியவனாவனேயன்றி அகங்காரத்தோடு “நாம் தேவர்” என்கிற அமரர்கட்கு எளியவனல்ல னென்பது, பின்னிரண்டடியில் விளக்கப்பட்டது.
எட்டாமை – மனத்தினால் நினைத்தற்கும், மொழியினாற் சொல்லுதற்கும், மெய்யினாற் சேர்தற்கும் இயலாதபடி இருத்தல்.
எட்டாஎன்றது, திருப்பாற்கடலானுக்கு அடைமொழி. ஆன் என்ற பொதுப்பெயர் – இங்கு, பசுவின் ஆணின்மேல் நின்றது.
போது – சிறப்பாய்த் தாமரையைக் குறித்தது.

————

மாலைக்கோ லித்திரியும் வையகத்தோர் தம் பிறவி
வேலைக்கோர் வங்கமாம் வேங்கடமே சோலைத்
தருமா தரை நாட்டான் தண் முல்லை யாயர்
தருமா தரை நட்டான் சார்பு –3-

(இ – ள்.) மாலை – மயக்கத்தை,
கோலி – தம்மிடத்திலே கொண்டு,
திரியும் – (பலவிடங்களிலும்) அலைகின்ற,
வையகத்தோர்தம் – நிலவுலகத்தி லுள்ளாருடைய,
பிறவி – பிறப்பாகிய,
வேலைக்கு – கடலுக்கு,
ஓர் வங்கம் ஆம் – ஒரு மரக்கலம் போன்ற, வேங்கடமே – , –
சோலை தரு – (தேவேந்திரனது நந்தனவனமென்னும்) பூஞ்சோலையி லுள்ள பாரிசாத விருட்சத்தை,
மா தரை நட்டான் – பெரிய பூமியிற் கொணர்ந்து நாட்டியவனும்,
தண் – (நீர்வளத்தாற்) குளிர்ச்சியான,
முல்லை – முல்லைநிலத்தில் வசிக்கின்ற,
ஆயர் – இடையர்கள்,
தரும் – பெற்ற,
மாதரை – பெண்களை (கோபஸ்திரீகளை),
நட்டான் – விரும்பிக் கூடியவனு மாகிய திருமால்,
சார்பு – (திருவுள்ள முவந்து) சார்ந்திருக்கு மிடமாம்; (எ – று.) –
கடற்கு – கடல்கடத்தற்கு.

மால் – மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை முதலியன. கோலி என்ற இறந்தகாலவினையெச்சத்தில்,
கோல் – வினைப்பகுதி. மாலைக் கோலித் திரியும் வையகத்தோர் என்பதற்கு – எம்பெருமானை நாடித் திவ்விய தேசயாத்திரை
செய்கின்ற நிலவுலகத்தாரென்றும் பொருள்கொள்ளலாம்.
காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி மேன்மேல் வருதலாலும், அச்சந்தருதலாலும்,
கடத்தற்கு அரிதாதலாலும், பிறப்புக் கடலெனப்பட்டது.
கடலி லிறங்கியவர் அக்கடலைக் கடந்து அக்கரை சேர்தற்கு மரக்கலம் கருவியாவதுபோலப் பிறப்பில் அகப்பட்டவர்
அதனையொழித்து முத்தி பெறுதற்குத் திருவேங்கடமலை சாதனமாகு மென்க.
எனவே, வேங்கடம் தன்னையடைந்தார்க்கு வினையொழித்து வீடுதரவல்ல தென்றதாம்.

சத்தியபாமையின் பொருட்டுக் கண்ணன் தேவலோகத்திலிருந்து பாரி ஜாத தருவைத் துவாரகைக்குக் கொணர்ந்து
நாட்டின வரலாறும், கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் வளர்ந்தருளியபொழுது தன்னிடங்காதல்கொண்ட
பல கோபகன்னிகைகளைத் தானும் காதலித்து அவர்களோடு கூடிக் குலாவினமையும், பாகவதத்திற் பிரசித்தம்.
முல்லை – காடும், காடுசார்ந்த இடமும். ஆயர் – பசுக்களுக்கு உரியவர்.
நட்டான் – இறந்தகால வினையாலணையும்பெயர்; முறையே நடு, நள் – பகுதிகள். சார்பு – தொழிலாகுபெயர்.

இச்செய்யுளின் பின்னிரண்டடியில் யமகம் அமைந்திருத்தல் காண்க.

————-

நாலு திசை முகமு நண்ணுதலால் ஒண் கமல
மேலுறலால் வேதாவாம் வேங்கடமே சாலுறையு
மண் மயக்கம் தேற்றுவித்தான் மாற்றுதல் போல் ஆரியனால்
உள் மயக்கம் தேற்றுவித்தானூர் –4-

(இ – ள்.) நாலு திசை முகமும் நண்ணுதலால் – நான்கு திசைகளையும் நோக்கிய நான்கு முகங்கள் பொருந்தியிருத்தலால்
(நான்குதிக்கினிடங்களிலுள்ளாராலும் விரும்பி வந்து சேவிக்கப்படுதலால்),
ஒள் கமலம் மேல் உற லால் – பிரகாசமான தாமரைமலரின்மேல் தோன்றியதனால்
(சிறந்த புண்ணிய தீர்த்தங்கள் தன்மேல் தங்கப்பெறுதலால்),
வேதா ஆம் – பிரமனைப் போன்ற, வேங்கடமே – ,-
சால் உறையும் மண் மயம் கம் – பாத்திரத்திற் பொருந்திய மண்ணோடுகலந்த நீரை,
தேற்று வித்தால் மாற்றுதல் போல் – தேற்றாங்கொட்டையைக் கொண்டு அத்தன்மையை மாற்றித் தெளியச்செய்தல் போல,
ஆரியனால் – ஆசாரியனைக்கொண்டு,
உள் மயக்கம் தேற்றுவித்தான் – (எனது) மனத்தின் தடுமாற்றத்தைத் தெளியச்செய்தவ னான திருமாலினது,
ஊர் – வாசஸ்தாநமாம்; (எ – று.)

முன்னிரண்டடி – பிரமனுக்கும் வேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலே டைபற்றிவந்த உவமையணி.
(செம்மொழிச் சிலேடையாவது – சொற்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்படாமல் பலபொருள்படுவது.)
நாற்புறமும் நோக்கிய நான்கு முகமுடையவனாய்த் திசைமுகனென்றும் நான்முகனென்றும் பெயர்பெறுதலும்
திருமாலினது திருநாபித் தாமரைமலரினின்று தோன்றியமையும் பிரமனுக்கும்,
எத்திசையிலுள்ளோராலும் தொழுது ஏத்தியிறைஞ்சப்படுதலும் அநேக புண்ணியதீர்த்தங்களை யுடைமையும்
திருவேங்கடத்துக்கும் அமையும்.
சால் – நீர்கொள்ளும் மட்பாத்திரம். தேற்றாமரத்தின் விதையைத் தேய்த்து அத்தேய்வையை நன்றாகக்குழம்பிய
நீரிற் கரைத்தால் அந்நீர் கலக்கந்தெளிதல், இயல்பு. ஞானம் அநுட்டானம் இவை நன்றாகவேயுடையனான நல்லாசிரியன்
நேர்ந்து தத்துவஞானோ பதேசஞ்செய்து மனத்தைத் தெளிவித்தல் எம்பெருமானது திருவருளின்
வாய்ப்பினா லன்றி அமையா தாதலின், அதனை அப்பெருமான்மேல் ஏற்றி,
“மண்கலந்தநீரைத்தேற்றாங்கொட்டையைக்கொண்டு தெளிவித்தாற்போல, மயங்கிய மனத்தை ஆசிரியனைக்
கொண்டு தெளிவித்தவன்” என்றார்;
உயிர்கட்கு ஆவனசெய்தல் இறைவனது செய லென்க. குழம்பிய நீர் – கலங்கிய மனத்துக்கும்,
தேற்றாம்வித்து – ஆசிரியனுக்கும் உவமையாம். ம்ருண்மயம் என்ற வடசொல், மண்மயம் என விகாரப்பட்டது.
கம், ஆர்யன் – வடசொற்கள். தேற்றுவித்தால், ஆரியனால் என்றவற்றில் – “ஆல்” உருபு – கருவிப்பொருளது.

————–

பாணி பிறை கொன்றை பணி சூடி மானேந்தி
வேணியரனைப் பொருவும் வேங்கடமே -யாணி நிறப்
பீதாம் பரனார் பிரமர் வாழ் அண்டம் கண்
மீதாம் பரனார் விருப்பு -5-

(இ – ள்.) பாணி – நீரையும்,
பிறை – சந்திரனையும்,
கொன்றை – கொன்றையையும்,
பணி – பாம்பையும்,
சூடி – மேற்கொள்ளுதலாலும்,
மான் ஏந்தி – மானைத் தரித்தலாலும்,
வேணி அரனை பொருவும் – சடை முடியையுடைய சிவபிரானைப் போல்கின்ற,
வேங்கடமே -, –
ஆணி நிறம் பீதஅம்பரனார் – ஆணிப்பொன்னிறமுள்ள பீதாம்பரமென்னும் பொற் பட்டாடையை யுடுத்தவரும்,
பிரமர் வாழ் அண்டங்கள் மீது ஆம் பரனார் -பிரமதேவர் வாழ்கின்ற அண்டங்களுக்கு மேலாகிய பரமபதத்தில் எழுந் தருளியிருக்கிறவரும் ஆகிய திருமால்,
விருப்பு – திருவுள்ளமுவந்து வந்து எழுந்தருளித் தங்கியிருக்குமிடம்; (எ – று.)

சிவபிரானுக்கும் திருவேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலேடையுவமை.
சிவபிரான் பகீரதனது வேண்டுகோளினால் கங்கையை முடிமீதுகொண்ட மையும், தக்ஷமுனிவனது சாபத்தினால்
க்ஷயமடைபவனாய்க் கலைகுறைந்து வந்து சரணமடைந்த சந்திரனை முடியின்மீது கொண்டு வரமளித்துப் பாது காத்தமையும்,
கொன்றைமலரை அன்போடு சூடிக்கொள்ளுதலும், தாருகவன முனிவர்களாலேவப்பட்டுத் தன்னைக்
கொல்லவந்த நாகங்களையும் மானையும் வலியடக்கி நாகங்களை ஆபரணமாகக்கொண்டு மானை இடக்கையிலேந்தினமையும் காண்க.

திருவேங்கடமலையும் திவ்வியதீர்த்தங்களும் கொன்றை மரங்களும் நாகங்களும் மான்களும் இருத்தலும்,
மிகவுயர்ந்த அம்மலையின் முடியின்மேல் சந்திரன்வருதலும், இயல்பு.
சிவபிரானுக்கு வேணியையுடையமை கூறியதற்கு ஏற்ப, வேங்கடத்துக்கு அடர்ந்தவனத்தொகுதியை யுடைமை கொள்க.

ஆணிப்பொன் – மாற்றுக்குறைவற்ற பொன். பீதாம் பரமென்பது – பீத அம்பரம் எனப்பிரிந்து,
பொன்னிறமான ஆடையெனப் பொருள்படும்; தீர்க்கசந்தி. அண்டங்கள் அநந்தமென்றும், அவை ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு பிரமன் உளனென்றும், அவ்வண்டங்களுக்கெல்லாம் மேலுள்ளதான பரமபதத்தில் எம்பெருமான்
எழுந்தருளியிருக்கின்றன னென்றும், அந்நிலை ஐந்துவகை நிலையுள் பரத்துவமெனப்படு மென்றும் அறிக.

“ஆர்” என்னும் பலர்பால் விகுதி, இரண்டிடத்தும் உயர்வுப்பொருளில் வந்தது.
பிரமர் – பொருட்பன்மை; உயர்வுப்பன்மையன்று. விருப்பு – முதனிலைதிரிந்த தொழிலாகுபெயர்.

————–

மாலாய்ச் சசி தழுவி வச்சிர மேந்திப்பு கர்மா
மேலாய்ப் புரந்தரனாம் வேங்கடமே -நாலாய்க்
கிளர்வாகு மந்தரத்தான் கேட்ட மாதர் வேட்டுத்
தளர்வாகு மந்திரத்தான் சார்பு –6–

(இ – ள்.) மால் ஆய் – மால்என்னும் ஒரு பெயரைக் கொண்டு (பெரு மையையுடையதாய்),
சசி தழுவி – இந்திராணியைக் கூடி (சந்திரன் தன் மீது பொருந்தப்பெற்று),
வச்சிரம் ஏந்தி – வச்சிராயுதத்தைக் கைக்கொண்டு (வச்சிர ரத்தினக் கற்களைத் தன்மேலுடையதாய்),
புகர் மா மேல் ஆய் – (உத்தம விலக்கணமாகிய) செம்புள்ளிகளையுடைய (ஐராவதமென்னும்) யானைமேல் ஏறுதலால்
(செம்புள்ளிகளையுடையயானைகள் தன்மேல்தங்கப்பெறுதலால்),
புரந்தரன் ஆம் – இந்திரனை யொத்த,
வேங்கடமே – , –
நால் ஆய் கிளர் – நான்காய் விளங்குகின்ற,
வாகுமந்தரத்தான் – மந்தரமலைபோன்ற தோள்களை யுடையவனும்,
அமரர் – தேவர்கள்,
கேட்டு – (தனது சிறப்பைக்) கேள்வி யுற்று,
வேட்டு – (தாம்தாம் சென்றுசேர) விரும்பி,
தளர்வு ஆகும் – (தமக்கு அதுஎளிதிற்கிடைத்திடாமையால் தாம்) தளர்ச்சியடைதற்குக் காரணமான,
அந்தரத்தான் – (பரமாகாசமெனப்படுகின்ற) பரமபதத்தை யுடையவனாகிய திருமால்,
சார்பு – சார்ந்திருக்கு மிடம்; (எ – று.)

இந்திரனுக்கும் திருவேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலேடையுவமை.
மால்என்பது – இந்திரனுக்கு ஒருபெயராதல், “வாசவன் அமரர்கோன்மால் முகிலூர்தி” என்ற திவாகரத்தாலும் விளங்கும்.
மாலாய்ச் சசிதழுவி என்ப தற்கு – ஆசைகொண்டு இந்திராணியை யணைத்து என்றும் பொருள்கொள் ளலாம்.
வடமொழித்திரிபாகிய சசி யென்பது – சந்திரனைக் குறிக்கையில், முயல்வடிவத்தையுடையதென்று காரணப்பொருள்படும்;
சசம் – முயல்: சந்திரனிடத்துக் காணப்படுகின்ற களங்கத்தை முயலென்றல், ஒருவகைக் கவி மரபு.
வஜ்ரம் என்ற வடசொல், வச்சிரமெனத் திரிந்தது. செம்புள்ளிகளை யுடைமை யானைக்கு நல்லிலக்கணமாதலை,
“தீயுமிழ் சிறுகணுஞ் செம்புகரு முடைத்தாய்” என்ற அரசயானையிலக்கணத்தினாலும் அறிக.
புரந்தரன் – வடசொல்; (பகைவர்களுடைய) நகரங்களையழிப்பவ னென்று காரணப்பொ ருள்படும்: புரம் – பட்டணம்.
நால் – நான்கு என்பதன் விகாரம். வாகு – பாஹு என்ற வடசொல்லின் திரிபு.
அழித்தற்கு அரிய வலிமையும் பருமையும் பற்றி, தோளுக்கு மலை உவமைகூறப்படும்.
எட்டுக்குலமலைகளுள் ஒன்றாய் மிகப்பெரியதும் வலியதுமாதல்பற்றி, மந்தரத்தை யெடுத்துக்கூறினார்.
அதனை உவமைகூறியதனால், அம்மலை பாற்கடலைக் கடைந்தமைபோல இத்தோள்கள் பகைவருடைய
போர்க்கடலை எளிதிற் கடக்கவல்லன வென்க.
வேட்டு, வேள் – பகுதி. பரமபதம் தேவர்க்கும் செல்லுதற்கு எளியதன்றென்பது, “கேட்டமரர் வேட்டுத் தளர்வாகு மந்தரம்” என்றதன் கருத்து.

—————

வள்ளி புணர்ந்த ஆறுமுக மன்னி மயில் மேல் கொளலால்
வெள்ளிலை வேல் வேள் போலும் வேங்கடமே –உள்ளினரைத்
தங்கமலப் பார்வையால் தன்னடியார் மேல் வைக்கும்
செங்கமலப் பார்வையான் சேர்வு –7-

(இ – ள்.) வள்ளி புணர்ந்து – வள்ளிநாயகியோடு கூடி (வள்ளிக்கொடி கள் பொருந்தப்பெற்று),
ஆறு முகம் மன்னி – ஆறு முகம் அமையப்பெற்று (நதிகள் தன்னிடத்திலே அமையப்பெற்றதாய்),
மயில் மேல் கொளலால் – மயிலை வாகனமாகக்கொண்டு அதன்மேல் ஏறுதலால் (மயில்களைத் தன் மேற்கொண்டிருத்தலால்),
வெள் இலை வேல் வேள் போலும் – வெள்ளிய இலைவடிவமாகிய வேலாயுதத்தையுடைய முருகக் கடவுளை யொக்கின்ற,
வேங்கடமே – , –
உள்ளினரை – (தன்னைத்) தியானித்த அடியார்களை,
மலம் பார் – (காம வெகுளி மயக்கங்களாகிய) மும்மலங்கள் பொருந்திய உலகத்தில்,
தங்க வையான் – இருக்க வைக்காமல் தனது பரமபதத்திற் சேர்த்துக் கொள்பவனும்,
தன் அடியார்மேல் வைக்கும் – தனது அடியார்க ளிடத்து வைக்கின்ற,
செம் கமலம் பார்வையான் – செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களின் நோக்கத்தை யுடையவனு மாகிய திருமால்,
சேர்வு – சேருமிடம்; (எ – று.)

சுப்பிரமணியனுக்கும் வேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலேடைபற்றி வந்த உவமை.
வள்ளி – சுப்பிரமணியனது மனைவியர் இருவருள் ஒருத்தி. (மற்றொருத்தியின் பெயர் – தேவயானை.)
வள்ளிக்கிழங்கின் கொடியை மிகுதியாகவுடைமையால் வள்ளிமலை யென்று பெயர்பெற்ற கிரியில்
வள்ளிக் கொடிகளுள்ள இடத்திற் பிறத்தலால், இவளுக்கு, வள்ளி யென்று பெயர்.
“ஆறுமுகமன்னி” என்பதற்கு – (திருவேங்கடத்துக்குச் சேருங்கால்) சண்முகதீர்த்தமென்னும்
திவ்வியதீர்த்தம் பொருந்தி என்றும் பொருள் கொள்ளலாம்.
மூன்றாமடியில், வையான் வைக்கும் என வந்தது. முரண்தொடை; “மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றது காண்க.

——————-

புள்ளரவ நீரரவம் போர் மா வரவமறா
வெள்ளரவ வெற்பாகும் வேங்கடமே ஒள்ளரியாய்
மாகனகம் பத்தினர் வாய் கண் கை யுந்தி பதம்
கோகனகம் பத்தினார் குன்று –8-

(இ – ள்.) புள் அரவம் – பறவைகளின் ஒலியும்,
நீர் அரவம் – அருவி நீர்பெருகிய ஒலியும்,
போர் மா அரவம் – போர்செய்கின்ற யானை முதலிய விலங்குகளின் ஓசையும்,
அறா – நீங்காததாய்,
வெள் அரவ வெற்பு ஆகும் – சுத்தமான அரவவெற்பென்று ஒருபெயர்பெற்ற,
வேங்கடமே – , –
ஒள் அரி ஆய் – விளங்குகின்ற சிங்கவடிவமாய்,
மா கன கம்பத்தினார் – ஓங்கிய பருத்த தூணினின்று தோன்றியவரும்,
வாய் கண் கை உந்தி பதம் – வாய் ஒன்றும் கண்கள் இரண்டும் கைகள்நான்கும் நாபிஒன்றும் பாதம் இரண்டும் ஆகிய, கோகனகம் பத்தினார் – பத்துத்தாமரைமலர்களையுடையவ ருமாகிய திருமாலினது,
குன்று – திருமலை; (எ – று.)

அரவம் என்பது – ஓசையென்னும் பொருளில் ரவம்என்ற வடமொழி முதலில் அகரம்பெற்றதும்,
பாம்பென்ற பொருளில் அராஎன்னும் தென்மொழி குறுகி அம்சாரியை பெற்றதுமாம்.
சேஷகிரியென்பதன் பரியாயநாமமாக அப்பொருளில் திருவேங்கடமலைக்கு அரவவெற்பு என்று ஒருபெயர் வழங்கும்;
அப்பெயர்க்கு – புள்ளரவம் முதலிய பலவகையரவங்கள் (ஒலிகள்) நீங்காததாய் அரவவெற்பாகுமென்று
வேறொருவகைக்காரணங் கற்பித்துக் கூறினது, நிருக்தியலங்காரம்; தமிழில் பிரிநிலைநவிற்சியணி யெனப்படும்:
அதன் இலக்கணம் – பெயர்களுக்கு உறுப்பாற்றலால் மற்றொருபொருளைத் தந்துரைத்தல்.
திருமால் நரசிங்கவடிவமாய்த் தூணினின்று வெளிப்பட்டு இரணியனைக்கொன்று பிரகலாதனைப் பாதுகாத்தமை, பிரசித்தம்.
அரி – ஹரி; சிங்கம்; (யானை முதலியவற்றை) அழிப்பது. ஸ்தம்பம், கோகநதம் என்ற வடசொற்கள் – கம்பம், கோகநகம் என விகாரப்பட்டன.
வாய்முதலியவற்றுக்குத் தாமரைமலர் மென்மையழகுகளில் உவமம். ஆய்என்ற வினையெச்சம்.
கம்பத்தினார் என்ற குறிப்புவினையாலணையும் பெயரில் தொக்குநின்ற “தோன்றியவர்” என்பதைக் கொள்ளும்.
பரமபதநாதனது கட்டளையின்படி அவனுக்குப் பலவகைக்கைங்கரியங்களைச் செய்யும் ஆதிசேஷனே இம்மலையுருவானதனாலும்,
மேருமலையினிடமிருந்து ஆதிசேஷனுடனே வாயுவினால் இம்மலை கொணரப்பட்டதனாலும், இதற்கு “சேஷகிரி” என்று பெயர் வாய்த்தது.

————-

துய்ய செம் பொற் கோயில் சுடர் எறிப்பக் கண் முகிழ்ந்து
வெய்ய வன்றேர் மாவிடறும் வேங்கட மேயையிருநூ
றான முகப் பாம்பணையா ரானிரைப்பி னூதி வரும்
கானமுகப் பாம்பணையார் காப்பு –9-

(இ – ள்.) துய்ய – சுத்தமான (மாசற்ற),
செம் பொன் – சிவந்தபொன் மயமான,
கோயில் – திருக்கோயிலினது,
சுடர் – காந்தி,
எறிப்ப – வீசுதலால்,
வெய்யவன் தேர் மா – சூரியனுடைய தேரிற் கட்டிய குதிரைகள்,
கண் முகிழ்த்து – கண்கள் மூடப்பெற்று,
இடறும் – (அதனால்) கால் இடறுதற்குக் காரணமாகின்ற,
வேங்கடமே – , –
ஐ இரு நூறு ஆன முகம் பாம்பு அணையார் – ஆயிரந்தலைகளையுடைய ஆதிசேஷனைத் திருப்பள்ளி மெத்தையாகவுடையவரும்,
ஆன் நிரை பின் ஊதி வரும் – பசுக்கூட்டத்தின் பின்னே ஊதிக்கொண்டுவருகின்ற,
கானம் – சங்கீதம்,
உகப்பு ஆம் – (எல்லாப் பிராணிகட்கும்) ஆநந்தகரமாம்படியான,
பணையார் – வேய்ங் குழலையுடையவருமாகிய திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாத்தருளும் இடம்; (எ – று.)

முன்னிரண்டடி – அதிசயோக்தி. திருவேங்கடமலையிலுள்ள பொன் மயமான திருக்கோயிலின் ஒளி மிகுதியாக வீசுதலால்
சூரியன் தேர்க்குதிரைகள் கண்கூச்சமடைந்து கண்விழிக்கமாட்டாமல் கண்மூடிக்கொண்டு அம் மலையின் உயர்வினால்
அதிற்காலிடறுமென வருணித்தது, பொற்கோயிலின் சிறப்பையும் மலையின் உயர்வையும் விளக்கியவாறாம்.
துய்ய – தூய் என்னும் பண்பினடி முதல்குறுகிற்று. ஐயிருநூறு – பண்புத்தொகைப் பன்மொழித் தொடர்.
பலவிடங்களிற் பரவிமேய்கிற பசுக்கூட்டங்களை ஒருங்குசேர்த்தற் பொருட்டும், அவற்றை மகிழ்வித்தற்பொருட்டும்
கண்ணன் வேணுகரநஞ் செய்தபொழுது அவ்வின்னிசையைச் செவியுற்று அனைத்துயிர்களும் அளவற்ற ஆனந்தத்தை யடைந்தமை, பிரசித்தம்.
கோயில் – கோ + இல்; கடவுளின் இடம்: வகரம்பெறாது யகரம்பெற்றது, இலக்கணப்போலி.
பணை – மூங்கிலின் பெயர், குழலுக்குக் கருவியாகுபெயராய் நின்றது. காநம் – வடசொல்.

—————

மாண்டு பிறக்கும் துயர் போய் வைகுந்தம் புக்கவரும்
மீண்டு தொழக் காதலிக்கும் வேங்கடமே -பாண்டு மகன்
ஏறு இரதப் பாகனார் ஏத்தும் அடியார் நாவில்
ஊறு இரதப் பாகு அனார் ஊர் –10-

(இ – ள்.) மாண்டு – இறந்து,
பிறக்கும் துயர் போய் – (மறுபடி இவ்வுலகிற்) பிறப்பெடுத்தலா லாகிற துன்பம் நீங்கி,
வைகுந்தம் புக்கவரும் – ஸ்ரீவைகுண்டலோகத்தை யடைந்தவர்களும்,
மீண்டு தொழ காதலிக்கும் – (அங்கு நின்று) மீண்டுவந்து வணங்க ஆசைப்படும்படியான,
வேங்கடமே – , –
பாண்டுமகன் ஏறு இரதம்பாகனார் – பாண்டுவினது குமாரனான அருச்சுனன் ஏறிய தேரைச் செலுத்தும் சாரதியானவரும்,
ஏத்தும் அடியார் நாவில் – (தம் மைத்) துதிசெய்கின்ற அடியார்களுடைய நாக்கிலே,
ஊறு – மேன்மேற்சுரக் கின்ற,
இரதம் பாகு அனார் – சுவையுள்ள சர்க்கரைப்பாகு போன்றவரும் ஆகிய திருமாலினது, ஊர் -; (எ – று.)

ஒருபிறப்பின் முடிவிலே கருமமனைத்தும் தொலைந்து முத்திபெற்றவர்க்கு மீண்டும் பிறத்தல் இல்லை யென்றும்,
முத்திபெற்றவர் மீண்டு இவ்வுலகில்வரு தல்இல்லையென்றும் அறிக.
அங்ஙனம் இவ்வுலகினின்று பிறப்புத்துயரமொ ழிந்து மீளாவுலகமாகிய பரமபதத்தை யடைந்தவரும்
திருவேங்கடத்தின் சிறப்பையும் திருவேங்கடமுடையான் பேரானந்தந்தருந் தன்மையையும் கருதி அங்குநின்று மீண்டு
இங்குவந்து தொழவிரும்புவரென வேங்கடத்தின் மகிமையை விளக்கியவாறாம்.
வைகுந்தம் – வடமொழித்திரிபு. பாண்டு மகன் – பாண்டவன்; பொதுப்பெயர் இங்குச் சிறப்புப்பொருளின் மேல்நின்றது.
மகாபாரதயுத்தத்திற் கண்ணன் திருவருளால் அருச்சுனனுக்குத் தேரூர்ந்து அதனால் பார்த்தசாரதியென்று ஒருதிருநாமம்பெற்றமை, பிரசித்தம்.
இரதம் என்பது – தேர்என்ற பொருளில் ரத மென்ற வடசொல்லின் விகாரமும், இனிமை என்ற பொருளில் ரஸமென்ற வடசொல்லின் விகாரமுமாம்.
அடியார்கள் நாப்படைத்தபயன்பெற அதுகொண்டு துதிக்கத் துதிக்க எம்பெருமான் ஆராதவமுமாய் மேன்மேல்
இனியனாகிச்சுவைமயமா யுள்ளவ னென்பது, “ஏத்துமடியார்நாவிலூறு இரதப்பாகுஅனார்” என்பதன் கருத்து;
“அமுதம்பொதி யின்சுவைக் கரும்பினைக் கனியை” என்றார் திரு மங்கையாழ்வாரும்.

—————

கோலியொரு நான்கு குலமறையும் நால் திசையும்
வேலி என நின்று ஏத்தும் வேங்கடமே –வாலி தனை
நண்பாவை யாது அரித்தான் ஞான முதலாழ்வார்கள்
வெண்பாவை ஆதரித்தான் வெற்பு –11-

(இ – ள்.) ஒரு நான்கு குலம் மறையும் – ஒப்பற்ற சிறப்புள்ள நான்கு வேதங்களும்,
நால் திசையும் – நான்கு பக்கங்களிலும்,
வேலி என கோலி நின்று – வேலிபோலச் சூழ்ந்து,
ஏத்தும் – துதிக்கப்பெற்ற, வேங்கடம் – , –
வாலிதனை நண்பு ஆ வையாது அரித்தான் – வாலியை நண்பனாகக் கொள்ளாமல் (பகையாகக் கொண்டு) கொன்றிட்டவனும்,
ஞானம் முதலாழ்வார்கள் வெண்பாவை ஆதரித்தான் – தத்துவஞானத்தையுடைய முதலாழ்வார்கள் மூவரும் இயற்றிய
வெண்பாவினாலாகிய பிரபந்தங்களை அன்போடு ஏற்றுக் கொண்டவனுமான திருமாலினுடைய, வெற்பு – மலை; (எ – று.)

வேங்கடம் வேதப்பிரதிபாத்தியமாய் மகிமைபெறுந் தன்மை, முன்னிர ண்டடியில் விளக்கப்பட்டது.
நாற்றிசையும் என்பதற்கு – நான்குதிக்கிலுள்ளாரும் என்று உரைப்பாரும் உளர்.
வாலீ என்ற வடசொல் வாலியென ஈயீறு இகாரமாயிற்று. இப்பெயர் – வாலில் வலிமையுடையவ னென்றும்,
வாலினின்று பிறந்தவனென்றும் காரணப்பொருள் படும். இவன் – இந்திரன் மகன்; சுக்கிரீவனது தமையன்;
கிஷ்கிந்தா நகரத்தையாண்ட வாநரராசன்; தன்னை யெதிர்த்தாரது வலிமையிற் பாதி தன்னிடம் வந்து கூடும்படி வரம் பெற்றவன்;
இராவணனை ஒருகால் வென்று பின்பு அவனது வேண்டுகோ ளின்படி அவனோடு அக்கினிசாக்ஷியாக நண்புகொண்டவன்.
இராமபிரான் வனவாசஞ்செய்கையில் இராவணன் சீதையை யெடுத்துக்கொண்டுபோன பின்பு அப்பிராட்டியைத் தேடிக்கொண்டு
இலக்குமணனுடனே செல்லுகையில் வழியிலெதிர்ப்பட்ட அநுமான்மூலமாகச் சுக்கிரீவனோடு நண்பு கொண்டு
அவன் வேண்டுகோளின்படி அவனது தமையனும் வாநரராசனு மான வாலியைத்தந்திரமாகக்கொன்று
சுக்கிரீவனுக்குக்கிஷ்கிந்தையில் முடிசூட்டி வைத்தபின் அவனது உதவியால் இராவணாதியரைக் கொன்று
பிராட்டியை மீட்டன னென வரலாறு அறிக.
வாலி முன்னமே இராவணனுடன் அக்கினிசாட்சியாக நட்புக்கொண்டிருந்ததுபற்றி அவனை இராமபிரான் உதவி யாகக்கொண்டால்
இராவணாதி துஷ்டர்களைத் தொலைக்க வகையில்லாமை யால், வாலியை நண்பாகக்கொள்ளாமல் சரணமடைந்த
சுக்கிரீவனது வேண்டுகோளின்படி அவ்வாலியை வதைத்திட்டா னென்க;
வாலியை நண்பா வையாது அரித்ததற்கு மற்றுஞ்சிலகாரணமுங் கூறப்படும். ஆ – ஆக: விகாரம்.

முதலாழ்வார்கள் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், இவர்கள்மூவரும் மற்றையாழ்வார்களுக்கெல்லாம்
முன்னே திருவவதரித்தத னாலும், பின்பு உண்டாகும் பிரபந்தங்களுக்கெல்லாம் இலக்கணமாம்படி ஆதியில்
திருவந்தாதி திவ்வியப்பிரபந்தங்களைத் திருவாய்மலர்ந்தருளிய தனாலும், முதலாழ்வார்க ளென்று பெயர்பெற்றனர்.
(“மற்றுள்ள வாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து,
நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த –
பெற்றிமையோ, ரென்று முதலாழ்வார்களென்னும்
பெயரிவர்க்கு, நின்ற துலகத்தே நிகழ்ந்து” என்ற உபதேசரத்தினமாலையையுங் காண்க.)
இம்மூவரும் நூறுநூறு வெண்பாக்களினாற்பாடிய திவ்வியப்பிரபந்தங்கள், முறையே முதல் திருவந்தாதி, இரண்டாந்திருவந்தாதி,
மூன்றாந்திருவந்தாதி யெனப் பெயர்பெறும். வெண்பா – அதனாலாகிய பிரபந்தத்துக்குக் கருவியாகுபெயர்.
தலைமைபற்றி, முதலாழ்வார்கள் வெண்பாவையாதரித்தமையை எடுத்துக்கூறினார்;
அன்றியும், அவர்கள் நூற்றெட்டுத்திருப்பதிகளுள்ளும் திருவேங்கடத்தை மிகுதியாகப் பாராட்டிக் கூறியமையுங் காண்க.

————-

தெள்ளியது ஓர் வீடு அருளும் சீர் கேட்டு பொன் மலையும்
வெள்ளி மலையும் பணியும் வேங்கடமே –புள்ளின்
கொடி வா கனத்தான் குளிர்ந்த இருண்ட காரின்
வடிவு ஆகன் நத்தான் வரை –12-

(இ – ள்.) தெள்ளியது ஓர் வீடு அருளும் சீர் கேட்டு – தெளிவுள்ள தான ஒப்பற்ற பரமபதத்தைக் கொடுத்தருளுகிற சிறப்பைக் கேள்விப்பட்டு,
பொன் மலையும் வெள்ளி மலையும் பணியும் – பொன்மலையான மகாமேருவும் வெள்ளிமலையான கைலாசமும் வணங்கப்பெற்ற,
வேங்கடமே – , –
புள்ளின் கொடி வாகனத்தான் – பக்ஷிராசனாகிய கருடனது வடிவமெழுதிய கொடியையும் அக்கருடனாகிய வாகனத்தையு முடையவனும்,
குளிர்ந்து இருண்டகாரின் வடிவு ஆகன் – குளிர்ச்சியுள்ளதாய்க் கறுத்துள்ள மேகத்தினது வடிவம் போன்ற திருமேனியையுடையவனும்,
நத்தான் – (பாஞ்சசந்நிய மென்னுஞ்) சங்கத்தையையுடையவனுமாகிய திருமாலினது,
வரை – மலை; (எ – று.)

கர்மபந்தத்தொடர்ச்சியின்றி ஞானாநந்தங்களையேதருந்தன்மையதான முத்தியுலகைத் தன்னையடைந்தார்க்குத்
தந்தருளும் மகிமை திருவேங்கட மலைக்கு இருத்தலை அதன் புகழினாற்செவியுற்று அறிந்து,
அத்தன்மையில்லா தனவான பொன்மலையும் வெள்ளிமலையும் தமதுதாழ்வையும் அம்மலையின் உயர்வையும்நோக்கி
அதற்குத்தாம் கீழ்ப்படிந்து அதனைவணங்கிக் கிடக்குமென்க.
பொன்மலைக்கும் வெள்ளிமலைக்கும் “நாம் பொன்மயமாகவும் வெள்ளி மயமாகவும் இருக்கிறோம்” என்ற
இறுமாப்பு ஒழிதற்குக் காரணமாயிற்று, வேங்கடத்தின் வீடளிக்குந்திற மென்க.
வீடு – (பற்றுக்களை) விட்டு அடையுமிடம்; முக்தி. புள் – இங்குப் பொதுப்பெயர் சிறப்புப் பொருளின் மேலது.
காண்பவர் கண்களுக்குக் காணுமளவிலே குளிர்ச்சியைத் தந்து அவர்களுடைய எல்லாச் சிரமங்களையும்
பரிகரிக்குந் திருமேனியின் தோற்றமுடையா னென்பார், “குளிர்ந்திருண்ட காரின்வடிவாகன்” என்றார்.
ஆகம் – மேனி; அதனையுடையவன் – ஆகன்.

—————–

எப்பூ தலமும் இறைஞ்சி திசை நோக்கி
மெய்ப்பூ சனை புரியும் வேங்கடமே கொப்பூழ்
இலகும் முண்டகம் தர தான் ஈன்று அளிக்கும் ஈர் ஏழ்
உலகும் உண்ட கந்தரத்தான் ஊர் –13-

(இ – ள்.) எ பூதலமும் – நிலவுலகத்தில் எவ்விடத்திலுள்ளவரும்,
திசை நோக்கி – திக்குநோக்கி,
இறைஞ்சி – வணங்கி,
மெய் பூசனை புரியும் – உண்மையான பூசையைச் செய்யப்பெற்ற,
வேங்கடமே – , –
கொப்பூழ் – திருநாபியில்,
இலகும் – தோன்றி விளங்கிய,
முண்டகம் – தாமரை மலர்,
தர – அளிக்க,
தான் ஈன்று – தான்பெற்று,
அளிக்கும் – பாதுகாக்கிற,
ஈரேழ் உலகும் – பதினான்குலோகங்களையும்,
உண்ட – அமுதுசெய்த,
கந்தரத்தான் – கண்டத்தையுடைய திருமாலினது, ஊர் -; (எ – று.)

உலகத்தில் எத்திசையிலுள்ளாரும் திருவேங்கடத்தின் மகிமையைக் கருதி அத்திருப்பதியிருக்கின்ற திசையை நோக்கி
வணங்கி வழிபடுவரென அத்தலத்தின் சிறப்பை விளக்கியவாறு. பூதலம் – இடவாகுபெயர்.
“பந்திக் கமலத் தடஞ்சூ ழரங்கர் படைப்பழிப்புச்,
சிந்தித்திடுவது மில்லைகண்டீ ரத் திசைமுகனோடு,
உந்திக் கமலம் விரிந்தால் விரியு முகக்கடையில்,
முந்திக் குவியி லுடனே குவியு மிம்மூதண்டமே” என்பது சித்தாந்த மாதலால்,
“கொப்பூழிலகு முண்டகந் தரத் தானீன்று” என்றார். பிரமன் முதலானசகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற
யுகாந்தகாலத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றில் வைத்து அடக்கிக் கொண்டு
யோகநித்திரை செய்தருளுகின்றன னென்பது, நூற்கொள்கை
எல் லாவற்றையும் படைத்துக்காத்து அழிக்கின்ற முழுமுதற்கடவுள் திருமாலே யென்ற ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம்,
பின்னிரண்டடியில் விளக்கப்பட்டது. கந்தரம் – வடசொல்; தலையைத் தரிப்ப தென்று காரணப்பொருள்படும்; கம் – தலை

————–

நோவினையும் நோயினையும் நோய் செய் வினையினையும்
வீவினையும் தீர்த்து அருளும் வேங்கடமே –மூ வினை செய்
மூவடிவு ஆய்ப் பச்சென்றான் முன்னாள் அகலிகைக்குச்
சேவடி வாய்ப் பச்சென்றான் சேர்பு –14-

(இ – ள்.) நோவினையும் – (பிறத்தலாலாகின்ற) துன்பத்தையும்,
நோயினையும் – (வாழும்நாளில் வருத்தஞ்செய்கிற) வியாதிகளையும்,
வீவினையும் – மரணவேதனையையும்,
நோய் செய் வினையினையும் – எல்லாத்துன்பங்களையும் உண்டாக்குகிற காரணமான கருமங்களையும்,
தீர்த்து அருளும் – (தன்னை யடைந்தவர்க்கு) நீக்கியருளுகின்ற,
வேங்கடமே – , –
மூ வினை செய் – (படைத்தல் காத்தல் அழித்தல் என்னும்) மூன்று தொழில்களைச் செய்கின்ற,
மூ வடிவு ஆய் – (அயன் அரி அரன் என்னும்) திரிமூர்த்திகளின் வடிவமாய்,
பச்சென்றான் – (அவற்றுள் தானானவடிவத்தில்) பசுமைநிறத்தையுடையவனும்,
முன் நாள் – முற்காலத்தில்,
அகலிகைக்கு – அகலிகையென்னும் பெண்ணுக்கு,
சே அடி வாய்ப்ப – சிவந்த தனது திருவடி சித்தியளிக்கும்படி,
சென்றான் – நடந்தருளியவனுமாகிய திருமால்,
சேர்பு – சேருமிடம்; (எ – று.)

பிறக்குங்காலத்தும் வளர்ந்து உயிர்வாழுங் காலத்தும் இறக்குங்காலத்தும் உண்டாகிற பலவகைத் துன்பங்களும்,
அவற்றிற்கெல்லாம் காரணமான கருமங்களும் தன்னையடைந்தார்க்கு இனி இல்லையாம்படி
தன்மகிமையாற் செய்யுந்தரத்தது திருவேங்கடமென்க.
இனி, நோவு – மனோவியாதி; அதாவது – மனக்கிலேசம் என்றும், நோய் – தேகவியாதி யென்றும் உரைத்தலு முண்டு.
“நோய்செய்வினை” என்றதில் நோய் என்றது, பசி தாகம் பயம் கோபம் முதுமை துன்பம் முதலிய பலவகை
உடற்குற்றங்களையும் பொதுப்பட உணர்த்து மென்க. நோவு, நோய், வீவு – தொழிற்பெயர்கள்.

அகலிகை – அஹல்யா என்ற வடசொல்லின் திரிபு; அப்பெயர் – அழகில்லாமை யில்லாதவ ளென்று பொருள்படும்:
மிக்க அழகுள்ளவ ளென்று கருத்து; ஹல்யம் – அழகின்மை. இவள், கௌதமமுனிவனது மனைவி.
அவளது கல்வடிவமான சாபம் இராமபிரானது திருவடித்துகள் பட்டமாத்திரத்தில் தீர்ந்த தன்மை இராமாயணத்திற் பிரசித்தம்.

————

பித்து மலடு ஊமை முடம் பேய் குருடு கூன் செவிடு
மெய்த்துயர் நோய் தீர்த்து அருளும் வேங்கடமே -பத்தருக்கு
வந்த துக்கம் காப்பான் மலர் உந்தியின் உலகம்
தந்து அதுக்கு அங்காப்பான் தலம் –15-

(இ – ள்.) பித்து – பைத்தியம் பிடித்தலும்,
மலடு – பிள்ளைப்பேறில்லாக் குறையும்,
ஊமை – பேசாமையும்,
முடம் – கைகால்களின் குறைவும்,
பேய் – பேய்பிடித்தலும்,
குருடு – கண்தெரியாமையும்,
கூன் – உடல்வளைதலும்,
செவிடு – காதுகேளாமையும் ஆகிய உடற்குற்றங்களையும்,
மெய் துயர் நோய் – மற்றும் வருத்தத்தைத் தருகின்ற வியாதிகளையும்,
தீர்த்து அருளும் – (தன்னையடைந்தார்க்கு) நீக்கியருளுகின்ற வேங்கடமே – , –
பத்தருக்கு வந்த துக்கம் காப்பான் – தன் அடியார்களுக்கு வந்த துன்பங்களை நீக்கி (அவற்றினின்று அவர்களைப்) பாதுகாப்பவனும்,
மலர் உந்தியின் (உந்திமலரின்) – தனது நாபித்தாமரைமலரின்று,
உலகம் தந்து – உலகத்தை உண்டாக்கி,
அதுக்கு – அவ்வுலகத்தையுண்ணும்பொருட்டு,
அங்காப்பான் – வாய்திறப்ப வனுமாகிய திருமாலினது,
தலம் – இடமாம்; (எ – று.)

திருவேங்கடமலையினது வரப்பிரசாதசக்தி, முன்னிரண்டடியில் விளக்கப்பட்டது.
முதலடி – பெயர்ச்செவ்வெண். பக்தர், து:கம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
காத்தல் – தடுத்தல், பரிகரித்தல். உந்தியின் – ஐந்தனுருபு, நீக்கம்.
உலகம் – சாதியொருமை; ஆனதுபற்றி, “அதுக்கு” என ஒருமையாக் கூறினார்.
அங்காப்பான், அங்கா – பகுதி. மலருந்தியின் உலகந் தந்து அதுக்கு அங்காப்பான் – உலகத்தைப் படைப்பவனும்,
அளிப்பவனும், அழிப்பவனும் அவனே யென்றபடி.

————-

வாடப் பசித்த வரி உழுவை வால் ஆட்டி
மேடத்தைப் பார்த்து உறுக்கும் வேங்கடமே -கூடத்துக்
கம்பவள மா வென்றான் காசினிக்கும் வெண்ணெய்க்கும்
செம்பவளம் ஆ வென்றான் சேர்வு –16-

(இ – ள்.) வாட – வாட்டமுண்டாம்படி,
பசித்த – பசியடைந்துள்ள,
வரி உழுவை – உடற்கோடுகளையுடைய புலிகள்,
மேடத்தை பார்த்து – (வானத்திற் செல்லுகின்ற ஆட்டின்வடிவமான) மேஷராசியைப் பார்த்து,
வால் ஆட்டி உறுக்கும் – (அந்த ஆட்டைக் கொன்று தின்னக் கருதித்) தன்வாலை யசைத்துக் கொண்டு கோபித்து அதனோடுமாறுபடுதற்கு இடமான,
வேங்கடமே – , –
கூடத்து – யானைச்சாலையில்,
கம்பம் – தறியிற் கட்டிவைக்கத் தக்க,
வளம் மா – மதக் கொழுமையையுடைய (குவலயாபீடமென்ற) யானையை,
வென்றான் – கொன்று சயித்தவனும்,
காசினிக்கும் – (யுகாந்தகாலத்தில்) உலகத்தை உண்ணுதற்காகவும்,
வெண்ணெய்க்கும் – (கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெயை உண்ணுதற்காகவும்,
செம் பவளம் ஆ என்றான் – சிவந்த பவழம்போன்ற தனது திருவாய்மலரை ஆவென்று திறந்தவனுமாகிய திருமால்,
சேர்வு – சேர்ந்திருக்குமிடம்; (எ – று.)

பசித்த புலி ஆட்டுக் கடாவை நோக்கி அதனைக் கொல்லச் சீறிமுயலுதல், இயல்பு;
திருவேங்கடமலையிலுள்ள புலி வானத்து மேஷராசியைப் பார்த்து உறுக்கு மென மலையின் உயர்ச்சியை உணர்த்தியபடியாம்.
இது, தொடர்புயர்வுநவிற்சியணி. புலி குறிஞ்சிநிலத்து விலங்காதலால், அதனை யெடுத் துக்கூறினார்.
இனி வருஞ் செய்யுள்களில் இதுபோல வருகின்ற வருணனைகளுக்கெல்லாம் இங்ஙனமே கண்டுகொள்க.
“மேடத்தைப்பார்த்திருக்கும் வேங்கடமே” என்ற பாடத்திற்கு – புலியானது அடுத்துவரும் தனது ஆகாரத்திற்கும்
வலிமைக்குந் தகுந்ததாகிய விருஷபராசியை எதிர்நோக்கிக் கொண்டு அவ்வகை வலிமையில்லாத
மேஷராசியைக் கண்டு உபேக்ஷித்திருக்கு மென்று பொருள். வாலாட்டுதல், கோபக்குறி.
மேஷம் – வடசொல். மேஷ ராசி, சித்திரைமாதத்துக்கு உரியது.
கூடத்து என்பதற்கு – வஞ்சனையாகக் கொல்லுந்தன்மையுள்ள என்றும்,
கம்பம் என்பதற்கு – அசையுந்தன்மையதான என்றும் பொருள் கொள்ளலாம்; கூடம், கம்பம் – வடசொற்கள்.
“யானை, யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” என்றபடி தீராக்கோப முடையதாய் அக்கோபத்தை மறைத்து
வைக்க வேண்டியகாலத்தே மறைத்து வைத்து வெளிப்படுத்தவேண்டிய காலத்தே வெளிப்படுத்தலும்,
“தூங்குங் களிறு” என்றபடி எப்பொழுதும் அசைதலும் யானையின் இயல்பு.

காசினி – பூமி; காச்யபீ என்ற வடசொல் திரிந்தது; இது – இங்கு மற்ற உலகங்களுக்கும் உபலக்ஷணம்.
பவளம் – வாய்க்கு, நிறம்பற்றிய உவமை யாகுபெயர்; திருப்பவளமென்கிற வழக்கும் உண்டு.

————

தாவி வரும் வானரங்கள் தண் குவட்டில் கற்கடகம்
மேவி வரக் கண்டு ஓடும் வேங்கடமே -காவிரி சூழ்
பொன் திரு அரங்கத்தான் போதன் சிவன் என்னும்
மற்று இருவர் அங்கத்தான் வாழ்வு –17-

(இ – ள்.) தாவி வரும் – தாவிக்கொண்டேவருகின்ற,
வானரங்கள் – குரங்குகள்,
தண் குவட்டில் – குளிர்ச்சியான சிகரத்தில்,
கற்கடகம் மேவி வர – (நண்டுவடிவமான) கர்க்கடகராசி பொருந்திவர,
கண்டு – (அதனைப்) பார்த்து,
ஓடும் – அஞ்சியோடுதற்கு இடமான,
வேங்கடமே – , –
காவிரி சூழ் – காவேரிநதி சூழ்ந்த,
பொன் திரு அரங்கத்தான் – அழகிய திருவரங்க மென்னுந் திருப்பதியி லெழுந்தருளியிருப்பவனும்,
போதன் சிவன் என்னும் மற்று இருவர் அங்கத்தான் – (திரிமூர்த்திகளுள்) பிரமன் சிவன் என்னும் மற்றை யிருவரையுந்
தனது அங்கத்தில் உடையவனுமாகிய திருமால்,
வாழ்வு – எழுந்தருளியிருக்குமிடம்; (எ – று.)

வாநரம் என்ற வடசொல் – கொஞ்சங்குறைய மனிதர்போல்வதென்று காரணப்பொருள்படும்.
கர்க்கடகம் – வடசொல். கர்க்கடகராசி, ஆடிமா தத்துக்கு உரியது. திருவரங்கம் – ஸ்ரீரங்கம்;
திருமால்திருப்பதிக ளெல்லாவற்றுள்ளும் இது தலைமையான தாதலால், இதனை யெடுத்துக்கூறினார்.
பொற்றிருவரங்கம் – பொன்மயமான மதில் முதலியவற்றையுடைய திருவரங்கமுமாம்;
“செம்பொன்மதிலேழுடுத்த திருவரங்கப் பெருங்கோயி, லா ணிப்பொற்
றகடுரிஞ்சுமணிக்கதவ நீள்வாயில்” என்பர் திருவரங்கக்கலம்பகத்தும்.
போது – பூ; இங்குத் தாமரைமலர்; அதில் தோன்றியவன், போதன். சிவம் – சுபம்: அதனைச் செய்பவன்,
சிவன். பிரமனைத் தனது திருநாபியிலும், சிவனைத் தனது திருமேனியின் வலப்புறத்திலும் திருமால் கொண்டுள்ளான்;
இத்தன்மை, “பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப், பிரமனைத் தன்னுந்தியிலே தோற்றுவித்துக்,
கறைதங்கு வேற்றடங்கண் திரு வை மார்பிற் கலந்தவன்”,
“வலத்தனன் திரிபுரமெரித்தவன் இடம்பெறத் துந்தித், தலத்தெழு திசைமுகன்” என்ற ஆழ்வாரருளிச் செயல்களாலும் விளங்கும்:
“கேசவன்” என்ற திருநாமம் இப்பொருள் கொண்டதே. வாழ்வு என்ற சொல்லின் ஆற்றலால்,
திருவேங்கடம் திருமாலின் திருவுள்ளத்துக்கு மிகப்பாங்காயிருத்தல் விளங்கும்.

———–

ஒண் சிந்துரத்தை வெறுத்து ஊடும் பிடி வேழம்
விண் சிங்கம் கண்டு அணைக்கும் வேங்கடமே –எண் சிந்தைக்கு
ஓரா இருந்தான் ஒரு நாள் விதூரனுக்கு
வாரா விருந்தான் வரை –18-

(இ – ள்.) ஒள் சிந்துரத்தை – ஒளியுள்ளதாகிய ஆண்யானையை, வெறுத்து -,
ஊடும் – பிணங்குகின்ற,
பிடி வேழம் – பெண்யானையானது,
விண் சிங்கம் கண்டு – வானத்தில்வருகின்ற சிங்கவடிவமான சிங்கராசியைப் பார்த்து,
அணைக்கும் – (அச்சங்கொண்டு ஆண்யானையைத் தானே வலியச் சென்று) தழுவுதற்கு இடமான,
வேங்கடமே – , –
எண் சிந்தைக்கு ஓரா இருந்தான் – (உலகத்தாருடைய) எண்ணுகின்ற மனத்துக்கு அறியப்படாமல் இருந்தவனும்,
ஒரு நாள் – ஒருநாளில்,
விதுரனுக்கு -,
வாரா விருந்தான் – வருதற்குஅரிய விருந்தினனாய் வந்தவனு மாகிய திருமாலினது,
வரை – திருமலையாம்; (எ – று.)

ஊடுதலாவது – ஆண்பாலோடு பெண்பால் அன்புவகையாற்சிறிதுமாறு படுதல்; பிரணயகலகம்.
இங்ஙனம் வலியக்கொள்ளுங் கோபம் இன்பத்தை மிகுவிப்பது என்னுங் கோட்பாட்டை
“ஊடுதல் காமத்திற்கு இன்பம்” என்ற திருக்குறளினாலும் அறிக. பிடி – யானையின் பெண்மைப்பெயர்; இதன் ஆண்மைப்பெயர் – களிறு.
களிற்றினிடத்து ஏதோ ஒரு குற்றத்தைக் கற்பித்து அதுகாரணமாக அதனிடம் வெறுப்புக்காட்டிப் பிடி ஊடிவிலகிநிற்கு மளவில்,
சிங்கராசியைக் கண்டதனால் அஞ்சி அவ்வச்சமிகுதியால் ஊடலை மறந்து தானே ஓடி ஆண்யானையைப் பற்றுக்கோடாகக் கொண்டு
அதனை வலியத்தழுவிய தென்க. ஹிந்துரம், ஸிம்ஹம் என்ற வடசொற்கள் விகாரப் பட்டன. சிங்கராசி, ஆவணிமாதத்துக்கு உரியது.
“எண் சிந்தைக்கு ஓரா இருந்தான்” என்றதனால், எம்பெருமானதுசொரூபம் எவர்க்கும்மனத் தினாற் சிந்தித்து
முற்றும் அறியமுடியாத தென விளங்கும்.
விதுரன் – திருதராட்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பிமுறையாகிறவன்; விசித்திர லீரியன்மனைவியாகிய அம்பிகையால்
ஏவியனுப்பப்பட்ட தாதியினிடம் வியாச முனிவனருளாற் பிறந்தவன்; பாண்டவர்க்கும் துரியோதனாதியர்க்கும் சிற் றப்பன்.
கண்ணன் பாண்டவர்க்காகத் துரியோதனாதியரிடம் தூதுபேசுபவனாய் அத்தினாபுரிக்குப்போனபோது அங்குவேறு
யாருடைய வீட்டிற்கும் செல்லாமல் ஞானபக்திகளிற்சிறந்த விதுரனுடைய திருமாளிகையினுட் புக்கு,
அங்கு அவனால் மிக்கஅன்புடன் அமைக்கப்பட்ட விருந்துணவை அமுது செய்தருளின னென்பது பிரசித்தம்.
விருந்து – புதுமை; விருந்தான் – புதியனாய்ச் செல்பவன். வாரா – ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சம்.

————-

மாது மடக் கன்னி கழை வந்து அணுகி கம்பத்தின்
மீது நடிப பாள் ஒக்கும் வேங்கடமே -ஊது குழல்
பாலன் பால் ஆக்குவித்தான் பஞ்சவர்க்கா நூற்றுவரைக்
காலின் பால் ஆக்குவித்தான் காப்பு –19-

(இ – ள்.) மாது மடம் கன்னி – அழகையும் மடமையையு முடைய இளம்பெண்வடிவமான கந்யாராசி,
கழை வந்து அணுக – மூங்கிலுக்குநேராக வந்து பொருந்தும்போது,
கம்பத்தின் மீது நடிப்பாள் ஒக்கும் – (நாட்டிய) கழைக்கோலின்மேல் ஏறிக்கூத்தாடும்மங்கையை ஒத்தற்கு இடமான,
வேங்கடமே – , –
ஊது குழற்பால் அன்பால் – (தான்) ஊதுகின்ற வேய்ங் குழலின் இனிய இசையினிடத்து அன்பினால்,
ஆ குவித்தான் – பசுக்கள் தன்னைச்சுற்றிவந்து ஒருங்குதிரளும்படி செய்தவனும்,
பஞ்சவர்க்கு ஆ – பஞ்சபாண்டவர்களுக்காக,
நூற்றுவரை காலன்பால் ஆக்குவித்தான் – துரியோதனாதியர் நூறு பேரையும் யமனிடத்திற் சேர்ப்பித்தவனு மாகிய திரு மால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்கும் இடம்; (எ – று.)

அம்மலையிலுள்ள மூங்கிலுக்கு மேல்பெண்வடிவமான கந்யாராசி வரும் போது கழைக்கூத்திபோலுமென்க.
மூங்கிலின்உயர்ச்சியை இங்ஙனங்கூறி யதனால், மலையின்வளத்தை எடுத்துக்காட்டியவாறு.
கந்யா என்ற வடசொல், கன்னியென விகாரப்பட்டது. கந்யாராசி, புரட்டாசிமாதத்துக்கு உரியது.
கண்ணன் குழலூதுகையில் அதன்இசையின் இனிமைக்கு மகிழ்ந்து பசுக்கள் யாவும் அப்பெருமானைச் சூழ வந்து திரளும்.
குழற்பால், பால் – ஏழனுருபு. ஊது குழல் பாலன் பால் ஆ குவித்தான் என்று பிரித்து, குழலூதுகின்ற இடைச்சிறுவனானவனும்
பால்கறக்கும் பசுக்களை ஒருங்குதிரளச் செய்தவனும் என்று உரைப்பாரும் உளர்.
பஞ்சவர் – ஐவர்; பஞ்ச என்னும் வடமொழியெண்ணுப்பெயரினடியாப் பிறந்த பெயர். பஞ்சவர், நூற்றுவர் – தொகைக்குறிப்பு.
காலன் – பிராணிகளின் ஆயுட்காலத்தை வரையறுப்பவன், கண்ணபிரான், தனக்கு உயிர்நிகரான பாண்டவர்களைப்
பாதுகாத்தற் பொருட்டு, அவர்கட்கு பங்காளிகளும் பகையாளிகளு மான துரியோத னாதியரனைவரும்
மகாபாரதயுத்தத்தில் வேரோடுஅழியும்படி பலவகையுதவி புரிந்தமை, பிரசித்தம்;
காலன்பா லாக்குவித்தான் – வீமனைக்கொண்டு கொல்வித்தான்.
ஆக்குவித்தான் என்பதில், கு வி என்ற இரண்டும் – இணைந்துவந்த பிறவினைவிகுதிகள்.

———–

மன்னு குடிக் குறவர் வான் ஊர் துலாத்திடையே
மின்னு மணி நிறுக்கும் வேங்கடமே –என் உள்
அரவிந்தப் போது அகத்தான் அன்பால் அழைத்த
கரவிந்தப் போதகத்தான் காப்பு –20-

(இ – ள்.) மன்னு குடி குறவர் – (குறிஞ்சிநிலத்து) நிலைபெற்ற குடிக ளாகிய குறவர்கள்,
வான் ஊர் துலாத்து இடையே – வானத்திற்செல்லுகிற (நிறைகோல்வடிவமான) துலாராசியினிடத்திலே,
மின்னும் மணி நிறுக்கும்- பிரகாசிக்கிற இரத்தினங்களை வைத்துநிறுத்து எடையறிதற்கு இடமான,
வேங்கடமே – , –
என் உள் அரவிந்தம் போது அகத்தான் – அடியே னுடைய மனமாகிய தாமரைமலரினிடத்தில் எழுந்தருளியிருப்பவனும்,
அன்பால் அழைத்த – பக்திகொண்டு (ஆதிமூலமே யென்று) கூப்பிட்ட,
கரம் விந்தம் போதகத்தான் – துதிக்கையையுடைய விந்தியமலையைப் போன்ற யானையையுடையவனுமாகிய திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்கும் இடம்; (எ – று.)

துலாத்து, அத்து – சாரியை. துலாராசி, ஐப்பசிமாதத்துக்கு உரியது. மணிகள், மலையி லுள்ளவை.
“மலர்மிசை யேகினான்” என்றபடி எம்பெருமான் அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தில் அவர்நினைந்தவடிவோடு
விரைந்து சென்று வீற்றிருத்தலால், “என்உள் அரவிந்தப்போதகத்தான்” என்றார்.
“அன்பால் அழைத்த போதகத்தான்” என்பது, வடமொழிநடை; கஜேந்திராழ்வானால் அன்போடு அழைக்கப்பட்டவ னென்பது கருத்து.
விந்தியகிரி முன்ஒருகால் மகாமேருகிரியோடு மாறுபட்டு மிகப்பெரியதாய் ஓங்கிவளர்ந்தமைபற்றி,
அதனை, யானையின் பருமைக்கும் வலிமைக்கும் உவமையெடுத்துக்கூறினார்.
அரவிந்தம், போதகம் – வடசொற்கள். விந்தம் – வடசொல்திரிபு.
பத்துப்பிராயத்துானைக்குட்டியைப் போதக மென்பர்; அச்சிறப்புப்பெயர் – இங்குப் பொதுப்பட யானையென்ற மாத்திரமாய் நின்றது.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே —சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading