ஶ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி வைபவம்–

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்

தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி வரும்.
அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு அடுத்ததாக 11-ம் நாள் வருவது ஏகாதசி திதி.
ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும்.
சில வருடங்களில் ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு.

ஸ்ரீ பெருமாளை வழிபட உகந்த திதியாக ஏகாதசி இருக்கிறது.
அதிலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது.
இதனை ‘மோஷ ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து ஸ்ரீ விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் என்ற
ஸ்ரீ சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும்.

ஸ்ரீ திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும் மகிழ்ந்தும் நெகிழ்ந்துமாகி நின்ற ஸ்ரீரங்கநாதர்
அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம்.
அதற்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப்
பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும்.
ஸ்ரீ நம்மாழ்வாரின் ஸ்ரீ திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார்.
அதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீ ரங்கநாதரும் அப்படியே ஆகட்டும் என அருளினார்.
அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா,
வரும் டிசம்பர் 3-ந்தேதி திருநெடுங்தாண்டகத்துடன் தொடங்குகிறது.
மறுநாள் 4-ந்தேதி திருமொழி திருநாள் தொடக்கம் (பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள்) விழாவின்
முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 14-ந்தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும்.
ஸ்ரீ நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஸ்ரீரங்கம் கோவிலை பொறுத்தவரை, “ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம்’ முறைப்படி,
நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன.
ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதம் முன்கூட்டியே வரும் ஏகாதசி, “கைசிக ஏகாதசி’ என அழைக்கப்படுகிறது.
மார்கழியில் வரும் ஏகாதசி, “வைகுண்ட ஏகாதசி’ எனப்படுகிறது.
பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், ராப்பத்து உற்வசமும் கொண்டாடப்படும்.

சிலவேளை, மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத் திருநாளும் வந்தால்,
தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம்
கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது.
கார்த்திகை மாதத்தில் தான் பரமபத வாசலும் திறக்கப்படுகிறது.
இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும்
பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள்.
இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்ஸவம் என்று அழைக்கப்படும்.
பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பகல் பத்து உற்சவம் அரையர் சேவையுடன் டிசம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது.
டிசம்பர் மாதம் 24-ந்தேதி ஸ்ரீ நம்மாழ்வார் மோஷம் நடக்கிறது.

ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு
ஸ்ரீ நாதமுனி காலத்தில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான ஸ்ரீ திருமொழிப்பாடல்களையும்,
மற்ற ஆழ்வார்கள் பாடிச்சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக
பகல்பத்து மற்றும் ராப்பத்து உற்சவம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

———-

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும்
ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் மார்கழி மாதம் இறுதியிலும் தை மாதம் முதல் நாட்களிலும்
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம்.
ஆனால் இந்த வருடம் ஶ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது.

விஜயநகர பேரரசு காலத்தில் தைத் திருநாள் ( தை பிரம்மோற்ஸவம்) ஏற்படுத்தப்பட்ட போது
மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும் தை முதல் பகுதியில் தை திருநாளும் வந்தால்
எதைக் கொண்டாடுவது எப்படிக் கொண்டாடுவது என கேள்வி எழுந்து உள்ளது.
இதை அடுத்து ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி 19 வருடங்களுக்கு ஒருமுறை
இந்த ஸ்ரீ வைகுண்டஏகாதசி (பகல்பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில்
ஸ்ரீ பெரிய பெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.

அன்று முதல் 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலேயே
வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த வருட வைகுண்ட ஏகாதசி திருவிழா காண முகூர்த்தக் கால் நிகழ்வு
ஸ்ரீரங்கம் கோயில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் நடைபெற்றது.

இந்த வருட வைகுண்ட ஏகாதசி அட்டவணை-

தமிழ் மாதம் கார்த்திகை 17ஆம் தேதியும் ஆங்கில மாதக் கணக்கின்படி டிசம்பர் மாதம் 3 ஆம் தேதியில்
திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது.

அதனை தொடர்ந்து
04.12.2021 – பகல்பத்து (திருமொழித் திருநாள்),
13.12.2021 – மோகினி அலங்காரம்
14.12.2021 அன்று வைகுந்த ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்க வாசல் திறப்பு என அழைக்கப்படும்
பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.45 மணி ( திருவாய்மொழித் திருநாள்) திறக்கப்பட்டு
எம்பெருமான் பக்தனுக்கு காட்சி அளிக்க உள்ளார்.
19.12.2021 – திருக் கைத்தல சேவை – மாலை 6.00 – 6.15 மணி
21.12.2021 – திருமங்கை மன்னன் வேடுபறி – மாலை 5.30 – 6.00 மணி
23.12.2021 – தீர்த்தவாரி – காலை 11.00 மணி
24.12.2021 – நம்மாழ்வார் மோக்ஷம் – காலை 6.00 – 7.00 மணியுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது.

————

ஏகாதசி-மார்கழி-வளர்பிறை-வைகுண்ட ஏகாதசி பலன்-

ஜாங்காசுரன் என்ற முரன் பெண்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் இழைத்து வந்தான்.
அவனது துன்பங்கள் தொடரவே ஸ்ரீ மாகாவிஷ்னுவிடம் முறையிட
அவருக்கும் அசுரன் முரனுக்கும் 1000 ஆண்டுகள் வரை போர் நீடித்தது.
ஒருநாள் களைப்படைந்தது போல் நடித்த திருமால் அருகில் இருந்த ஸ்ரீ பத்ரிகாசிரமத்தில் ஓய்வெடுப்பது போல் பாசாங்கு செய்தார்.
அவர் உறங்குவதாக நினைத்த முரன் வாளால் வெட்ட வர ஸ்ரீ விஷ்ணுவின் உடலிலிருந்த சக்தி வெளிப்பட்டு
தன் பார்வையாலேயே அசுரனை எரித்தது.
அன்று தனுர்மாத சுக்லபட்ச ஏகாதசியில் நீ என்னுள்ளிருந்து அவதரித்ததால் இந்த திதி உனக்குரியதாகும்.
உன்பெயர் இனி ஏகாதசி என்பதாகும் என்றார்.
தூக்கமின்றி விழிப்புடன் பெருமாளைக் காத்தது போல் கண் விழித்து பெருமாள் நாமத்தை
ஏகாதசியன்று உச்சரித்து விரதம் இருப்போர்க்கு வைகுண்ட முழு பலன்.

ஸ்ரீ சொர்க்கவாசல்-
திரேத யுகம் முடிந்து கலியுகம் பிறந்ததும் வைகுண்டத்தின் வயில் காப்போர்களான ஜெயனும் விஜயனும்
வைகுண்ட வாயிலை மூடி கலியுகம் பிறந்துவிட்டதால்
பொய் புரட்டு வஞ்சம் ஆகியன நிறைந்து உயிர்கள் ஏதும் ஸ்ரீ வைகுண்டத்திற்கு வராது என்பதால் கதவை மூடிவிட்டோம் என்றனர்.
கலியுகத்தில் நம்மாழ்வார் போன்ற ஞானிகளும் அவரைப் பின்பற்றி பக்தர்களும் வருவார்கள்
அவர்களுக்குகாக கதவை திறந்து வையுங்கள் என்றார் விஷ்ணு.
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியன்று உங்களது அர்ச்சாவதார மேனியுடன் சொர்க்கவாசல் புகுந்து வருபவர்களுக்கு
ஸ்ரீ வைகுண்டத்தின் கதவுகள் திறந்தே இருக்கும்.
இதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என ஜெய, விஜயர்கள் வேண்ட அவர்கள் விருப்பபடி
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதால் ஏகாதசி விரதமிருந்து
ஸ்ரீ சொர்க்கவாசல் வழி சொல்வோர் வைகுண்ட பாக்கியம் பெறுவர்.

ருக்மாங்கதன் என்ற அரசன் தன் நாட்டு மக்கள் இக, பர வாழ்வு இரண்டிலும் நிம்மதிகாண வேண்டும் என்று
ஆவல்கொண்டு அதற்கு வழி வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது என்று முடிவு கொண்டு
தன் நாட்டு மக்கள் மாதா மாதம் ஏகாதசி விரதமும், ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி விரதமும்
கண்டிப்பாய் அனுஷ்டிக்க வேண்டும் என்று சட்டம் போட்டான்.
அதனால் மக்கள் அனைவரும் விரதமிருந்ததால் பூமியில் மக்கள் அனைவரும் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.
முன் ஜன்ம கர்ம வினைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அவரவர் தலை யெழுத்தை எழுதுகின்றேன்.
ஆனால் இங்கு அனைவரும் விரதமிருந்து அந்த வினைகளைக் களைந்து விடுகின்றனர்.
ஒருவர் கூட நரகத்திற்கு செல்லவில்லையாததால் பூமியின் சமநிலை இவ்வாறு பாதிப்பது நல்லதல்ல
என்று ஸ்ரீ பிரம்மன் ஸ்ரீ விஷ்ணுவிடம் வேண்டினார்.
ஸ்ரீ விஷ்ணு ருக்மாங்கதனிடம் உன் எண்ணம் நன்மையானதுதான்.
ஆனால் யாருக்கு சொர்க்கம் செல்ல வேண்டும் என்றிருக்கின்றதோ அவர்கள் மட்டும்
விரதங்களை அனுஷ்டிக்குமாறு நீ சட்டத்தை மாற்று என்றார்.
மக்கள் அவரவர் விருப்ப்ப்படி விரதமிருந்து சொர்க்கம் சென்றதால் பூமியில் சமநிலை ஏற்பட்டது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஏகாதசி விரதங்கள் கடைபிடிப்போருக்கு
வெற்றி, செல்வம், ஆரோக்கியம், நிம்மதி கிடைத்து பாவ வினைகள் அழிந்து ஸ்ரீ வைகுண்டப் பதவி கிட்டும்.

வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும்
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.
மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால்
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி ஸ்ரீ முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார்.
அந்த தினமே ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியாக ஸ்ரீ பெருமாள் ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading