தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார்;
நெஞ்சே!
எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை அநுஸந்திக்கப் பார் என்றார்;
அப்படியே அது அநுஸந்திக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு
‘நெஞ்சே! நீ அநுஸந்திக்கும் விதம் என்னே!‘ என்று ஈடுபடுகிறார்.
காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற
ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப
ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட
கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.–2-
பதவுரை
காற்றினை புனலை தீயை–காற்று நீர் தீ முதலான பஞ்ச பூதமயமான ஜகத்தை சரீரமாக வுடையவனும்
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை–அரணாகப் போரும்படியான மதிளை யுடைத்தான இலங்காபுரியை முடித்த காளை போன்றவனும்
இமயம் மேய–இமயமலையில் (திருப்பிரிதியிலே) பொருந்தி வாழ்கிறவனும்
எழில் மணி திரளை–அழகிய மணித்திரள் போன்றவனும்
இன்பம் ஆற்றினை–(வடிவெடுத்த) ஆனந்த வெள்ளமாயிருப்பவனும்
அமுதம் தன்னை–போனவுயிரை மீட்கவல்ல அமுதம் போன்றவனும்
அவுணன்–(இரணியனென்னும்) அசுரனுடைய
ஆர் உயிரை–அருமையான உயிரை
உண்ட–கவர்ந்த
கூற்றினை–ம்ருத்யுவமான எம்பெருமானை
உள்ளம்-நெஞ்சமே!
குணம் கொண்டு–திருக்குணங்களை முன்னிட்டு
கூறு–அநுஸந்திக்கப்பார்;
(என்று தாம் சொன்னதும் அப்படியே அநுஸந்தித்த நெஞ்சை நோக்கி)
நீ கூறும் ஆறே–நீ அநுஸந்தித்த விதம் என்னே! (என்று ஈடுபடுகிறடி.)
காற்றினைப் புனலைத் தீயை=
பஞ்ச பூதங்களில் மூன்று பூதங்களைச் சொன்னது மற்ற பூமியும் ஆகாசமுமாகிற இரண்டு பூதங்களுக்கும் உபலக்ஷணமென்க.
பஞ்ச பூதங்களின் காரியமாகிய உலகங்களைச் சொல்லிற்றாய், உலகங்களைச் சரீரமாகக் கொண்டுள்ளவ னென்ற தாகிறது.
சரீரத்தைச் சொல்லும்படியான சொற்கள் சரீரி பர்யந்தமாகச் சொல்லி நிற்குமென்பது வேதாந்திகளின் கொள்கை யென்றுணர்க.
கடிமதிளிலங்கை செற்ற ஏற்றினை=
பல மதிள்களை அரணாகக் கொண்டிருந்த இலங்கா புரியைச் சுடுகாடாக்கின. மஹாவீரன் என்றவாறு.-
இந்த ப்ராக்ருதமான சரீரம் இலங்காபுரியாகக் கொள்ளத் தக்கது.
அது கடலால் சூழப் பட்டிருக்கும்; இது ஸம்ஸாரமாகிற பெருங்கடலினால் சூழப் பட்டிருக்கும்.
அது பத்துத் தலைகளை யுடையனான ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப் பட்டிருந்தது;
இது பத்து இந்திரியங்களாகிற தலைகளைக் கொண்ட மநஸ்ஸென்கிற ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப் பட்டிருக்கிறது;
அதில் சீதா பிராட்டி தீன தசையை யடைந்திருந்தாள், இதில் ஜீவாத்மா சிறை வைக்கப்பட்டு வருந்திக் கிடக்கிறான்.
அங்குச் சிறிய திருவடி வந்து ஸ்ரீ ராம குணகீர்த்தநம் பண்ணி க்ரமேண சிறை விடுத்தது போல,
இங்கும் அத் திருவடியைப் போல் மஹா பண்டிதர்களும் விரக்தர்களுமான ஆசாரியர்கள் பகவத் குணங்களை உபதேசித்துச் சிறை விடுவிக்க முயல்வார்கள்.
முடிவில் எம்பெருமானால் அவ்விலங்கை அழிந்தது போல இந்த ப்ராக்ருத சரீரமும் எம்பெருமானருளால் தொலையும் என்றுணர்க.
இமயமேய எழில்மணித் திரளை=
இமயம் என்று பொன்னுக்கப் பெயருண்டாதலால் அப்பொருளும் இங்குக் கொள்ளக்கூடியதே;
அப்போது மேற்பதத்தை ‘ஏயு‘ என்று பிரித்து பொன் போலப் புகர் கொண்டவனென்று உரைத்துக் கொள்க.
அன்றியே,
“எண் கையான் இமயத்துள்ளான்“ என்ற விடத்துப் போல,
இமயமலையின் கணுள்ள திருப் பிரிதியில் நித்ய வாஸம் பண்ணுமவனென்னவுமாம்.
அழகிய நீல ரத்னங்களைக் குவித்து வைத்தாற்போல் இனியனாயிருப்பவனென்கிறது எழில் மணித்திரளை யென்றதனால்.
இன்பவாற்றினை =
ஆனந்த வெள்ளமே வடிவெடுத்திருப்பவன். விடாய்த்தவர்களின் விடாயை யெல்லாம் தீர்க்கும் ஆறு;
எம்பெருமான் தாப த்ரயத்தையும் தணிப்பன். குளம் முதலானவை இருந்தவிடத்தே யிருந்து உதவும்;
ஆறு அங்ஙனல்லாமல் வேண்டினவிடத்தே திறந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்ளலாம் படியிருக்கும்;
எம்பெருமானும் அப்படியே. வேண்டுவோர் வேண்டுமிடங்களிலே யெழுந்தருளிக் காதல் கடல்புரைய விளைவிப்பன்.
அமுதந்தன்னை = அன்பர்கட்கு ஆராவமுதமாயிருப்பவன்.
கடலில் தோன்றிய உப்புச் சாறாகிற அமுதம் வாய் கொண்டு பருகலாயிருக்கும்;
இவ் வாராவமுதம் கண்கொண்டு பருகத்தக்கது.
ஏததேவாம்ருதம் த்ருஷ்டவாத்ருப்பந்தி“ என்றது காண்க.
அவுணானாயிரையுண்ட கூற்றினை = கீழ்ச் சொன்னபடியே அமுதமாயிருக்குந் தன்மை அன்பர்களின் திறத்தேயத்தனை;
பிரதிகூலர் திறத்திலோ வென்னில் ம்ருத்யுவாயிருப்பன்;
ப்ரஹலாதாழ்வானுக்குப் பரம போக்யமான அமுதமாயிருந்தவன் தானே இரணியனுக்குக் கூற்றமாயிருந்தானிறே.
அவுணனார் என்று அசுரவர்க்கத்தை யெல்லாம் சொல்லிற்றாகக்கொண்டு உரைத்தலுமாம்.
கூற்று-உடலையும் வேறு கூறார்க்கு யவன் என்று யமனுக்குக் காரணப் பெயர்.
உள்ளம் – அண்மைவிளி; உள்ளமே! என்றபடி.
“உள்ளம்! குணங்கொண்டு நீ கூறு“ என்று அருளிச் செய்தவுடனே
“நீ கூறுமாறு!“ என்று ஈடுபட்டு அருளிச் செய்திருத்தலால், இடையில் திருவுள்ளத்தில் ஒரு விலக்ஷணமான
அநுஸந்தானம் சென்றமை தோன்றும்.
“உள்ளம்! குணங்கொண்டு நீ கூறுமாறே கூறு“ என்று ஒரு வாக்கியமாகவே அந்வயித்து,
‘நெஞ்சமே! எம்பெருமானுடைய திருக்குணங்களை உனக்கு அநுஸந்திக்கத் தெரிந்த வகையிலே அநுஸந்தானம் செய்‘
என்று உரைக்கலாமாயினும் அது அத்துணைச் சிறவாது.
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply