ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -1–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

எம்பெருமானுடைய பெருமைகளைப் பன்னி யுரைத்து,
என்னெஞ்சிலே வந்து புகுந்த இப்பெருமானை
இனி நான் ஒருநாளும் விடமாட்டுகின்றிலே னென்கிறார்–

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் ஆண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி யென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே!–1-

பதவுரை

நிதியினை-(அன்பர்கட்கு) நிதிபோன்றவனும்
பவளம் துணை–பவளம்போல் இனியேனும் தூண் போல் தாரகனும்
நெறிமையால்–ஒரு நெறிப்பட்டுச் சிந்திக்க வல்ல வர்களுக்குப் பரம கதியாயிருப்பவனும்
முன்–முன்பு
கஞ்சன் மாளகண்டு–கம்ஸன் முடிந்து போம்படி செய்து
அண்டம்–உலகங்களை
ஆளும்–ரக்ஷித்தருளினவனும்
மதியினை–(அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டே யிருப்பவனும்
மாலை–அடியார் திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும்
வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை–நான் வாழ்த்தி வணங்கும் படியாக என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான எம்பெருமானை
கண்டு கொண்ட–ஸேவிக்கப் பெற்ற
தொண்டனேன்–அடியேன்
விடுகிலேன்–(இனி ஒருநாளும்) விடமாட்டேன்.

நிதியினை =
புதைந்து வைக்கப்படும் பொருள் நிதியெனப்படும்.-
யோ வேத நிஹிதம் குஹாயாம்–தைத்திரீய உபநிஷத்தினால் எம்பெருமான நிதியாக அறியப்படுவன்;
“வைத்த மா நிதியாம் மதுசூதன்“ என்பர் நம்மாழ்வாரும்.
நிலத்தினுள் புதைந்து வைத்து ஆள வேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி;
எம்பெருமானுகிற நிதி அங்ஙனல்லாமல் நெஞ்சிலே புதைந்து ஆளத்தக்கதென வாசி காண்க.

நிதியானது தன்னையுடையவர்களை இரவும் பகலுங் கண்ணுறங்கவொட்டாது;
எந்த வேளையில் யார் கொள்ளை கொள்வாரோவென்று துஞ்சாதிருப்பர் நிதியுடையார்;
எம்பெருமானை யுடையவர்களும்படியே,
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பும், உறக்கமில்லை; கண்டாலும் கையாலே உறக்கமில்லை.

நிதியானது ஸித்தாஞ்ஜனமணிந்த சில பாக்யசாலிகளுக்கே கிடைக்கும்;
எம்பெருமானும் பக்தி ஸித்தாஞ்ஜனம் பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்யவான்களுக்கே-
இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க.

பவளத் தூணை=
தூணானது பலவற்றையும் தரித்துக் கொண்டிருந்து தன் கீழே ஒதுங்குவார்க்கு நிழல் கொடுக்குமா போலே
எம்பெருமானும் ஸகல லோக யோக ஷேம துரந்தரனாய்த் தன்னடிச் சார்ந்தாரெல்லார்க்கும் தரபுங்களைத்
தணிக்குமவனா யிருத்தலால் தூண் என்றது.
கல்தூண் தூண் என்பதற்காகப் பவளத் தூண் என்றது.

நெறிமையால் நினைய வல்லார் கதியினை =
மற்ற பொருள்களை நினைப்பதற்கும் எம்பெருமானை நினைப்பதற்கும் நெடு வாசி யுண்டு;
“நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்துகும்“ என்கிறபடியே எம்பெருமானைச் சிந்தித்த மாத்திரத்திலே
* உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து உடம்பெலாங் கண்ண நீர் சோர நிற்கை ப்ராப்தமாகையாலே
இவ் வண்ணமாக நினைத்தலே நெறிமையால் நினைத்தலாம்; அப்படி நினைப்பார்க்கு உபாயமாயிருப்பவன் எம்பெருமான் என்க.

கஞ்சன்மாளக் கண்டு முன் அண்டமாளும் =
சாதுசனத்தை நலியுங் கஞ்சன் உயிரோடிருக்குமளவும் எம்பெருமானுடைய ஆட்சி குன்றி நின்றமையால்
அவனை உயிர் மாய்த்துத் தன்னுடைய ஜகத் ரக்ஷகவத்தை நிலை நிறுத்திக் கொண்டானென்கிறது.
“நாட்டை ஈரக் கையாலே தடவிக் கம்ஸனால் பட்ட நோவு தீர ரக்ஷித்து“ என்ற வியாக்கியான வாக்கியம் நோக்கத் தக்கது.

மதியினை=
மதி யென்பது வடசொல்; புத்தியென்று பெயர்.
“எய்ப்பென்னை வந்து நலியும் போது அங்கேதும் நானுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தே னரங்கத் தரவணைப் பள்ளியானே!“ என்றும்
“ஆமிடத்தே யுன்னைச் சொல்லி வைத்தேன்“ என்றும் சொல்லுகிறபடியே
நாம் பாங்காயிருக்கும் போது எம்பெருமானைச் சிந்தித்து வைத்தால் பிறகு நாம் சிந்திக்கப் பெறாத குறை தீர
அவன் தானே நம்மைச் சிந்தித்துக் கொண்டிருப்பவன் என்றவாறு.
வராஹ சரம ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
புத்திக்கு வாசகமான மதி யென்னுஞ் சொல் இவ்வளவு அர்த்தத்தைத் தருவது லக்ஷணையால்.
புத்தியின் காரியமாகிய நினைத்தலைத் தானே செய்பவனென்றபடி.

மாலை=
மால் என்னுஞ்சொல்-பெருமையுள்ளவன் கருநிறம் உள்ளவன்,
(அடியாரிடத்தில்) வியாமோஹமுள்ளவன் என்ற பல பொருள்களைக் கொண்டது.
”ஆசா லேஸமுடையார் பக்கல் வ்யாமுக்தனாயிருக்குமவனை” என்பது வியாக்கியான வாக்கியம்.
அடியார்க்கு எத்தனை உபகரணங்கள் செய்திருந்தாலும் ஒன்றும் செய்திலனாகவே தன்னை நினைத்துக் கொண்டு
‘என் செய்வோம், என் செய்வோம்‘ என்றே பாரிப்புக் கொண்டிருக்கை யாய்த்து எம்பெருமானுடைய வியாமோஹத்தின் பரிசு.

வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை=
‘வணங்கி‘ என்றதை எச்சத் திரிபாகக் கொள்க:
வணங்க என்றபடி; நான் வாழ்த்தி வணங்கும்படியாக என் மனத்தே வந்து சேர்ந்தவிதியை என்றவாறு.
அன்றியே,
“என் மனத்து வந்த விதியினை வாழ்த்தி வணங்கி விடுகிலேன்“ என்று அந்வயிக்கவுமாம்.
விதி யென்னும் வட சொல் பாக்கியத்தைச் சொல்லும்.
தம்முடைய பாக்கியமே எம்பெருமானாக வடிவெடுத்ததென்கிறார்.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று காணப்பெற்ற அடியேன் இனி விடமாட்டேன் என்றார் ஆயிற்று .

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading