ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–66–ஸ்ரீ குச ஸ்ரீ ஜனனம் (குச லவ பிறப்பு)–

அத்தியாயம் 66 (603) குச லவ ஜனனம் (குச லவ பிறப்பு)

சத்ருக்னன் பர்ணசாலையில் வசித்த அன்று இரவு சீதையும் இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தாள்.

நடு இரவில், முனி குமாரர்கள் வந்து முனிவரிடம் இந்த விவரத்தைச் சொன்னார்கள்.
ப4கவன், ராமபத்னிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
தாங்கள் வந்து குழந்தைகளுக்கு ரக்ஷைகள் செய்யுங்கள் என்றனர்.
பூ4த விநாசினீ என்ற ரக்ஷையைக் கட்டுங்கள் என்றனர்.

முனிவரும் விரைந்து சென்றார்.
இளம் சந்திரன் போல, பிரகாசமாக, தேவ குமாரர்கள் போல அழகாக இருந்த சிசுக்களைக் கண்டார்.

குச முஷ்டி, லவம் என்ற மூலிகைகளைக் கொண்டு காப்புகள் செய்தார்.
முதலில் பிறந்தவன் குசன் என்ற பெயருடன் மந்திர சம்ஸ்காரங்கள் செய்யப் பெற்றான்.
இளையவன் லவன் என்ற பெயருடன். வயது முதிர்ந்த மூதாட்டிகள் குழந்தைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர்.

காப்பாக பயன்பட்ட மூலிகைகளே பெயராக அமைந்தது. குச லவர்கள் என்றே பிரசித்தி பெற்றனர்.
இந்த பெயருடன் அமோகமாக இருப்பார்கள் என்று முனிவர் வாழ்த்தினார்.

மூதாட்டிகள், காப்புக் கயிற்றை முனிவரிடமிருந்து வாங்கி குழந்தைகள் கையில் கட்டி விட்டனர்.
மேலும் கோத்ர பெயரைச் சொல்லி தாலாட்டு பாடினர்.
ராம, சீதா புதல்வர்கள் பிறப்பைக் கொண்டாடினர்.

அர்த்த ராத்திரியில், என்ன கோலாகலம் என்று சத்ருக்னன் வியந்தான். பர்ணசாலைக்குள் சென்று விசாரித்தான்.
யாரோ, ஒரு தாய்க்கு, அதிர்ஷ்ட வசமாக புத்திரர்கள் நலமாக பிறந்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

வெளியில் இருந்தபடியே வாழ்த்தினான். சிராவண மாதத்து, மழைக்கால இரவு.
சத்ருக்னன் சந்தோஷமாக அங்கேயே அந்த இரவைக் கழித்தான்.

விடியற்காலையில், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு விடை பெற்றுச் சென்றான்.
ஏழு நாட்கள் நடந்து யமுனா தீரம் சென்றடைந்தான்.

பிரசித்தி பெற்ற முனிவர்களுடன் அவர்கள் ஆசிரமங்களில் வசிக்கலானான்.
தன்னைக் காட்டிக் கொள்ளாமல், அவர்களுள் ஒருவனாக சாமான்யனாக வசித்தான்.
காஞ்சனன் முதலான முனிவர்களுடன் நட்பு கொண்டான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading