அத்தியாயம் 42 (579) ராம சீதா விஹார: (ராமர் சீதை மகிழ்ச்சியுடன் இருத்தல்)
பொன் விமானத்தை அனுப்பி விட்டு ராமர், அரண்மனையின் அசோக வனம் என்ற சிறு தோட்டத்திற்குச் சென்றார்.
அந்த உத்யான வனம், சந்தன, அக3ரு, மாமரங்கள், உயர்ந்த கா3லேயகம் என்ற மரங்கள்,
தே3வதா3ரு மரங்கள் நிறைந்து அலங்காரமாக இருந்தது.
சம்பக, அசோக, புன்னாக3, மதூக, பனஸம் இவைகளும், பாரிஜாத மரங்களும் மேலும் அழகூட்டின.
லோத்ர, நீப, அர்ஜுன, நாக3, சப்த பர்ண, அதிமுக்தகம் என்ற வகைகளும், மந்தா3ர, கத3லி, குல்ம (புதர்),
கொடி வகைகளும், நிறைந்து சூழ்ந்து இருந்தன. பிரியங்குகள், கத3ம்ப, வகுலம் போன்றவைகளும்,
ஜம்பூ4 (நாவல்), தா3டிமீ (மாதுளை), கோவிதா3ரம் என்ற செடிகளும், மரங்களும்,
எப்பொழுதும் ரம்யமான மலர்கள், பழங்கள் தரும் மரங்கள், திவ்யமான வாசனையுடன், இயல்பான இளம் துளிர்களும்,
தழைகளும், இவை தவிர, இத்துறையில் வல்லுனர்கள், சில்பிகள் அமைத்து வைத்த அழகிய தாவிர வகைகளுமாக, காட்சி தந்தது.
அழகிய புஷ்பங்களால் கவரப்பட்டு வந்த வண்டுகளின் ரீங்காரம் சூழலை ரமணீயமாக்கின.
இவை தவிர, கோகிலங்களும், ப்4ருங்க3ராஜ என்ற பக்ஷிகளின் கூவல்களும் சேர்ந்து ஒலித்தன.
பல வர்ணங்களில் பக்ஷிகள். சித்ர விசித்ரமான பறவைகள், மாமரங்களிலும், மற்ற மரங்களிலும், வாசம் செய்தன.
அக்னியை ஒத்த பொன் நிற பக்ஷிகள், நீல மேகம் போன்ற வண்ண பக்ஷிகளுடன் சேர்ந்து பறந்தது கண்களைக் கவர்ந்தன.
இவைகளால் மரங்களே பிரகாசமாக விளங்கின. நல்ல மணம் வீசும் மலர்கள் இரைந்து கிடந்தன.
நீர் நிறைந்த தடாகங்கள், பல விதமான உருவங்களிலும், வடிவங்களிலும், மாணிக்கம் பதித்த படிகளுடன்,
தாமரைகளும், உத்பலங்களும், காடாக மண்டி கிடக்க, சக்ரவாக பக்ஷிகள் கூக்குரலிட்டு, அந்த பிரதேசத்தை மேலும் ரம்யமாக்கின.
அதற்கு பதிலளிப்பது போல, தா3த்யூகம், சுக (கிளி), ஹம்ஸங்களும், ஸாரஸ பக்ஷிகளும் கூக்குரலிட்டன.
கரைகளில் செழித்து வளர்ந்திருந்த மரங்களும், பூத்துக் குலுங்கின. கற் பலகைகள் கொண்டு அழகிய பாதைகளும்,
பிராகாரங்களும் அமைக்கப் பட்டிருந்தன. வைடுரியமோ, மணியோ என்பது போல பரிசுத்தமாக பாதுகாக்கப் பட்டிருந்தன.
இளம் துளிர்களும், மலர்களும், மரங்கள் காற்றில் அசையும் பொழுது, கீழே விழுந்து பூமியை மறைத்தன.
தாரா கணங்களுடன் கூடிய ஆகாயம் போல விளங்கியது. இந்திரனுடைய நந்தன வனம் போலவும்,
ப்ரும்மாவின் சைத்ர வனம் போலவும், ராமனுடைய வனமும் அமைந்திருந்தது.
அமர அழகிய ஆசனங்கள் போடப் பட்டிருந்தன. இடை இடையே கொடி வீடுகள் குளிர்ச்சியாகத் தெரிந்தன.
விசாலமான இந்த அசோக வனத்தில் ரகுநந்தனன் பிரவேசித்தார்.
அழகிய விரிப்புகள் போடப் பெற்று தயாராக இருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.
சீதையை கையை பிடித்து அருகில் அழைத்துக் கொண்டார்.
சசியும், புரந்திரனும் போல இருவரும், பலவித மாமிசங்கள், பழங்கள், ஆகாரங்கள் இவற்றை அனுபவித்து மகிழ்ந்தனர்.
அரசன் மனம் நிறைந்து உல்லாசமாக இருக்க, அரண்மனை சிப்பந்திகள் விரைவில் ஏற்பாடுகளைச் செய்தனர்.
நடனமாடுபவர்களும், பாடுபவர்களும் வந்து சேர்ந்தனர். அழகிய இளம் பெண்கள், பானங்களை ஏந்தியாபடி வந்தனர்.
காகுத்ஸன் எதிரில் அவர்கள் நடனமாடினர்.
ராமனே ரமயதாம் வர: – மகிழ்ச்சியூட்டுவதில் வல்லவன்.
அவனை ரம்யமாக உற்சாகப் படுத்த ராமா: – பெண்கள், கூடினர்.
சீதையுடன் அழகிய ஆசனத்தில் அமர்ந்து இந்த கேளிக்கைகளை ரசித்து மகிழ்ந்தார்.
சில நாட்களில், அருந்ததியுடன் வசிஷ்டர் போலவும் காட்சி தந்தார்.
தேவ லோக பெண் போல இருந்த சீதையை மகிழ்விக்க தானும் தினமும் அந்த தோட்டத்துக்கு வந்து பொழுதைக் கழித்தார்.
இப்படி இவர்கள், உல்லாசமாக மன நிறைவோடு இருக்க, பல நாட்கள் கடந்தன.
ஸிசிரம் எனும் பனிக்காலமும் வந்து மறைந்தது. நாளின் முன் பகுதியில் தர்ம காரியங்களைச் செய்து விட்டு,
மீதி நேரத்தை அந்த:புரத்தில் கழிப்பது வழக்கமாயிற்று.
சீதையும் காலை நேரங்களை தெய்வ காரியங்களுக்கு, பர்வ காலங்களுக்கான விசேஷ காரியங்கள்,
மற்றும் தினசரி வேலைகளை கவனித்து செய்ய, மற்றும் மாமியார்களுக்கு பணிவிடை செய்வதுமான
வேலைகளுக்கு ஒதுக்கி விட்டு, கடமைகள் முடிந்த பின் சர்வாலங்கார பூஷிதையாக ராமனிடம் வந்து சேருவாள்.
தேவ லோகத்தில் அமர்ந்திருக்கும் சஹஸ்ராக்ஷனை சசி அணுகியது போல. இப்படி அருகில் வரும் மனைவியை
ராமர் வெகுவாக ரசித்ததோடு, ஸாது, ஸாது என்று அவள் அலங்காரங்களை பாராட்டவும் செய்தார்.
ஒரு நாள், வைதேஹி, உன்னிடத்தில், நம் வம்சம் வளர சந்ததியைப் பெற விரும்புகிறேன்.
உன் விருப்பம் என்ன சொல், உடனே பூர்த்தி செய்வேன் என்றார். சீதை சிரித்தபடி,
புண்யமான தபோ வனங்களைப் பார்க்க வேண்டும் ராமா, கங்கா தீரத்தில் உக்ரமாக தவம் செய்யும் ரிஷிகளைப் பார்க்க வேண்டும்.
தேஜஸ் நிறைந்த முனிவர்கள், பழம், கிழங்குகளைச் சாப்பிட்டபடி, மர நிழல்களில் வாழ்வதைக் காண வேண்டும்.
ஒர இரவு ஒரு பகல், ஏதோ ஒரு தப வனத்தில், முனிவர்களுடன் சேர்ந்து இருந்து விட்டு வர வேண்டும்.
அப்படியே ஆகட்டும் என்று ராமரும் வாக்களித்தார். கவலையின்றி இரு வைதேஹி,
நாளை நிச்சயம் அழைத்துப் போகிறேன் என்று வாக்களித்தார். இதன் பின் நண்பர்களும் வந்து சேர,
எல்லோருமாக பவனத்துக்குள் நுழைந்தனர். தன் வீட்டின் மைய பாகம் வரை சீதையை அழைத்துக் கொண்டு ராமர் உள்ளே சென்றார்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply