அத்தியாயம் 2 (539) பௌலஸ்த்ய குலோத்பத்தி (புலஸ்திய குலம் தோன்றுதல்)
ஸ்ரீ ராமனின் கேள்விக்கு மகா தேஜஸ்வியான கும்பமுனி என்ற அகஸ்தியர் பதில் சொன்னார். இதைக் கேள்.
அவன் யாராலும் வெல்ல முடியாத பலம் பெற்றதையும், தேஜஸும் பலமும் அவனுக்கு எப்படி வளர்ந்தது
என்பதையும் நான் சொல்கிறேன், என்று ஆரம்பித்தார்.
அதற்கு முன் ராவணன் குலம், அவன் பிறப்பு, வரம் பெற்றது யாரிடம் என்பதை சொல்கிறேன்.
முன்பு க்ருத யுகத்தில் ப்ரஜாபதியின் மகன் புலஸ்தியன் என்ற ப்ரும்ம ரிஷி இருந்தார்.
பிதாமகர் போலவே மகானாக இருந்தார். ப்ரஜாபதியின் புத்ரன் என்பதே போதும், அவன் குணம் தர்மம், சீலம்
இவைகளை தனியாக சொல்ல வேண்டியதில்லை. மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் இவன் அதிக பலசாலியாக இருந்தான்.
தன் குணங்களால் எல்லோருக்கும் பிரியமானவன் ஆனான்.
இமய மலைச் சாரலில் த்ருண பி3ந்து4 என்ற மகானின் ஆசிரமத்திற்கு ஒருமுறை சென்றான்.
யதேச்சையாக சென்றது தான், எதையும் நினைத்து செல்லவில்லை.
அங்கு வசிக்கும் பொழுதும் தன் தவத்தை விடாமலும், ஸ்வாத்யாயம் என்ற படித்ததை மனனம் செய்யும் முறையையும் கவனமாக செய்து வந்தான்.
அச்சமயம் சில ஸ்த்ரீகள் அந்த ஆசிரமத்திற்கு வந்து இடையூறு செய்தனர்.
அவர்களும் அந்த இடத்தின் ரம்யத்தினால் கவரப் பட்டு வந்தவர்களே.
ஆடவும் பாடவும் ஏற்ற இடம். தவிர பூக்களும், பழங்களும் பருவ காலம் இன்றியும் கிடைக்கும் இடம்.
நித்யமான வளமும் அழகும் உடைய இடம் ஆதலால் உல்லாசமாக பொழுது போக்க வந்த தேவ, பன்னக கன்னிகள்.
அதிலும் புலஸ்திய ரிஷி இருந்த இடம் தான் அவர்கள் ஆடவும் பாடவும் ஏற்றதாக இருந்தது போலும்.
தவம் செய்யும் முனிவருக்கு இது இடையூறாக இருந்தது. இது அவர்கள் அறியவும் இல்லை.
முனிவரோ கோபம் கொண்டார். சபித்தார். இந்த பெண்களில் யார் என் முன் வந்தாலும் அவள் கர்பிணி ஆவாள்.
இதைக் கேட்ட பெண்கள் ப்ரும்ம சாபம் என்பதால் பயந்து ஓடி ஒளிந்தனர்.
இதை அறியாத த்ருண பிந்துவின் மகள் மட்டும் மற்றவர்கள் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தாள்.
ராஜ ரிஷியின் மகள், சற்றும் பயமின்றி நடமாடிக் கொண்டிருந்தாள்.
அதே சமயம் ப்ரும்ம ரிஷி, ஸ்வாத்யாயம் செய்ய அந்த இடம் வந்தார்.
தவ வலிமையுடன் கூட வேத கோஷம் கேட்டவள், திடுமென தன் உடல் வெளுக்க,
தெளிவாக தெரிந்த கர்பத்துடன் உடல் மாற்றம் அடைந்தாள்.
தன் தோஷம் என்ன, எதனால் இந்த உரு மாற்றம் என்பதும் புரியாமல் நடுங்கி விட்டாள்.
தந்தையின் ஆசிரமத்தை அடைந்து அவரிடம் அழுகையினூடே எனக்கு என்னவோ ஆகி விட்டது என்றாள்.
த்ருண பிந்து மகளைப் பார்த்து திகைத்தார்.
இது என்ன ஏடாகூடமாக ஆகி விட்டதே, என்ன நடந்தது என்று வினவ, அவள். தெரியவில்லை அப்பா.
நான் புலஸ்திய முனிவரின் ஆசிரமம் போனபொழுது சகிகள் யாரையும் காணவில்லை.
அங்கேயே சற்று நேரம் தேடிக் கொண்டு நின்றேன். திடுமென இது போல ஆகி விட்டது என்று அழுதாள்.
என் உடல் மாற்றத்தைக் கண்டு பயந்து ஓடி வந்தேன் என்றாள். தன் தவ வலிமையால், தியானம் செய்து
நடந்ததை அறிந்து கொண்ட முனிவர், தன் மகளை கையை பிடித்து அழைத்துக் கொண்டு புலஸ்தியர் தவம் செய்யும் இடம் சென்றார்.
புலஸ்தியரைப் பார்த்து, மகரிஷியே, இவள் என் மகள். நல்ல குணங்களுடன் சீலமாக வளர்க்கப் பட்டவள்.
இவளை தானமாக தருகிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு பணிவிடை செய்வாள்.
தவத்துக்கு உதவியாக இருப்பாள். இவள் கவனமாக இவைகளை செய்வாள், சந்தேகமே இல்லை என்று சொல்லவும்,
புலஸ்திய முனிவரும் ஏற்றுக் கொண்டார். அவளுடைய சீலமும், நடத்தையும் முனிவரைக் கவர்ந்தது.
மிகவும் மகிழ்ச்சியோடு அவளிடம் சொன்னார். அழகிய பெண்ணே, உன் பணிவிடைகளால் நல்ல குணத்தால் நான் மிகவும் மகிழ்ந்தேன்.
அதனால் உனக்கு எனக்கு சமமான புத்திரனைத் தருகிறேன். நம் இருவரின் வம்சத்தையும் விளங்கச் செய்பவனாக,
பௌலஸ்தியன் என்ற பெயருடன் புகழ் பெற்று விளங்குவான். நான் வேதம் சொல்லி நீ கேட்டதால்
அவன் விஸ்ரவா என்ற பெயரும் பெறுவான்.
இதைக் கேட்டு அந்த பெண்ணும் மன நிம்மதியடைந்து, நாளடைவில் விஸ்ரவஸ் என்ற மகனைப் பெற்றாள்.
இவன் மூவுலகிலும் பெரும் புகழ் பெற்றான். தர்மம், யஸஸ்-புகழ் இவனிடம் நிறைந்தன.
காட்சிக்கு எளியவனாக, நியாயம் அறிந்தவனாக, கல்வி கற்றவனாக, எல்லா ஜீவன்களையும்
சமமாக காணும் மனப் பான்மையும், விரத ஆசாரங்களுடன் தன் தந்தையைப் போலவே தவம் செய்வதில் ஈடுபாட்டுடன்,
மகன் விஸ்ரவஸ் வளர்ந்தான்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply