ஸ்ரீ சங்கரரின் ஸ்ரீ கோவிந்தாஷ்டகம்–

ஸ்ரீ கோவிந்தாஷ்டகம்–

ஸத்யம்ʼ ஜ்ஞானமனந்தம்ʼ நித்யமனாகாஶம்ʼ பரமாகாஶம்ʼ
கோ³ஷ்ட²ப்ராங்க³ண-ரிங்க²ணலோல-மநாயாஸம்ʼ பரமாயாஸம் |
மாயாகல்பித-நாநாகாரமநாகாரம்ʼ பு⁴வனாகாரம்ʼ
க்ஷ்மாமாநாத²மநாத²ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–1-

சத்தியம் ஞானம் அனந்தம் நித்தியம்-இடைவெளியற்றது (அனாகாசம்)-இதயக் குகைவெளியிலுள்ளது (பரமாகாசம்)
எனும் பொருள் மாட்டுத் தொழுவத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அனாயாசமானவன்-மாயையை அடக்கி அதனுள் இருப்போன் (பர-மாயாசம்).
தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும்
உருவமின்றியும் உலகே உருவாகவும் திகழ்வோன்.
ஸ்ரீ-பூ-தேவியரின் நாதனும்
தனக்கு மேல் ஒரு தலைவன் அற்றவனும் (அ-நாதன்)
பரமானந்த வடிவும் ஆகிய அந்த கோவிந்தனை வணங்குவீர்.

———-

ம்ருʼத்ஸ்நாமத்ஸீஹேதி யஶோதா³-தாட³ந-ஶைஶவ ஸந்த்ராஸம்ʼ
வ்யாதி³த-வக்த்ராலோகித-லோகாலோக-சதுர்த³ஶ-லோகாலிம் |
லோகத்ரயபுர-மூலஸ்தம்ப⁴ம்ʼ லோகாலோகமநாலோகம்ʼ
லோகேஶம்ʼ பரமேஶம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||–2-

இங்கு மண்ணைத் தின்கிறாயே என யசோதை அடிக்க வருகையில் குழந்தைப்பருவத்தின் பீதியை அடைந்தவன்.
திறந்த வாயில் லோகாலோக பர்வதங்களுடன் கூடிய பதினான்கு லோகங்களைக் காட்டியவன்.
மூவுலகிற்கும் ஆதாரத் தூணானவன்.
உலங்களுக்கு ஒளியூட்டுபவன் (லோகாலோகம்)
தனக்கு வேறு ஒளி வேண்டாதவன் (அனாலோகம்)
லோகேஸ்வரனும் பரமேஸ்வரனும் பரமானந்த வடிவும் ஆகிய கோவிந்தனை வணங்குவீர்.

உலகங்கள் அனைத்திற்கும் ஒளியூட்டி தன்னொளியால் தானே பிரகாசிப்பவன்
(லோகான் ஆலோகயதி ஸ்வாத்மபா4ஸா ப்ரகாஶயதி இதி லோகாலோக:).
உலக இயக்கமனைத்திற்கும் ஆதாரமாக இருந்தும் அதில் பற்றுக் கொள்ளாது சாட்சியாக நின்று
பார்த்துக் கொண்டிருப்பவன் என்பது வேதாந்த உட்பொருள்.

அங்கு சூரியன் ஒளிர்வதில்லை-நிலவு நட்சத்திரங்கள் இல்லை-இந்த மின்னலும் ஓளிர்வதில்லை
எனில் நெருப்பிற்கு ஏது இடம்
அவன் ஒளிர்கையில்-அனைத்தும் பின்னொளிர்கின்றன
அவனது ஒளியினாலேயே-இவையனைத்தும் ஒளிர்கின்றன-– கட உபநிஷதம் 2.5.9

————–

த்ரைவிஷ்டப-ரிபு-வீரக்⁴நம்ʼ க்ஷிதி-பா⁴ரக்⁴நம்ʼ ப⁴வ-ரோக³க்⁴நம்ʼ
கைவல்யம்ʼ நவநீதாஹாரமநாஹாரம்ʼ பு⁴வனாஹாரம் |
வைமல்ய-ஸ்பு²ட-சேதோவ்ருʼத்தி-விஶேஷாபா⁴ஸ-மநாபா⁴ஸம்ʼ
ஶைவம்ʼ கேவல-ஶாந்தம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–3-

அமரர்பகையாம் அரக்கவீரரை அழிப்பவன் -புவியின் பாரத்தை அழிப்பவன்
பிறவிப்பிணியை அழிப்பவன்
தானொருவனேயானவன் (கைவல்யம்)
வெண்ணெய் உண்பவன் (நவநீதாஹாரம்)
உணவற்றவன் (அனாஹாரம்)
உலகனைத்தும் உண்பவன் (புவனாஹாரம்)
மாசற்றுத் தெளிந்து சிறந்த மனவெளியில் தோன்றுபவன்
தோற்றமற்றவன்
மங்கள வடிவினன் -ஶைவம்-
தனித்து மாறுபாடற்றிருப்பவன் (கேவல சாந்தம்)
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை வணங்குவீர்.

சாந்தம் சிவம் அத்வைதம்’ என்பது பிரம்மத்திற்குரிய அடைமொழியாக மாண்டூக்ய உபநிஷதத்தில் கூறப்பட்டது.
அதனையே ‘சைவம் கேவல சாந்தம்’ என்று இந்த சுலோகத்தின் கடைசி அடி குறிப்பிடுகிறது.

———————-

கோ³பாலம்ʼ பூ⁴லீலா-விக்³ரஹ-கோ³பாலம்ʼ குல-கோ³பாலம்ʼ
கோ³பீகே²லந-கோ³வர்த⁴நத்⁴ருʼதி-லீலாலாலித-கோ³பாலம் |
கோ³பி⁴ர்நிக³தி³த கோ³விந்த³-ஸ்பு²ட-நாமாநம்ʼ ப³ஹுநாமாநம்ʼ
கோ³-தீ⁴-கோ³சர-தூ³ரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–4-

கோ³பாலம்-கோபாலன்
பூ⁴லீலா-விக்³ரஹ-விளையாட்டாய்ப் புவியில் கோபால உருவெடுத்தவன்
கோபால குலத்தவன்
கோபியருடன் விளையாடி கோவர்த்தனம் தூக்கி
கோபர்களை லீலைகளால் சீராட்டியவன்
பசுக்கள் கூவியழைக்கும்
கோவிந்தா என்ற சிறப்பான பெயருடையவன்
மிகப்பல பெயர்களுடையவன்
புலன்களும் புத்தியும் செல்லமுடியாத தூரத்திலிருப்பவன்
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

கோ3 என்ற சொல்லுக்கு பசு, பூமி, சப்தம் (வேதம்), புலன், என்று பல பொருள் உண்டு.
கோபாலன் – பசுக்களை, பூமியை, வேதங்களை, பசுக்களைப் போன்ற உயிர்களைக் காப்பவன்.
கோவிந்தன் – வேதவாக்குகளால் அறியப்படுவன். வேதவாக்குகளை அருளியவன்.
வராகாவதாரத்தில் பூமியையும், கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களையும் காத்தவன்

கடைசி அடியில், கோ3-தீ4-கோ3சர-தூ3ரம் என்பதில் முதல் கோ3 புலன்களையும்,
அடுத்து வரும் கோ3சர என்பது செல்லுதலையும் குறிக்கிறது.

————

கோ³பீ-மண்ட³ல-கோ³ஷ்டீ²-பே⁴த³ம்ʼ பே⁴தா³வஸ்த²மபே⁴தா³ப⁴ம்ʼ
ஶஶ்வத்³கோ³கு²ர-நிர்தூ⁴தோத்³க³த-தூ⁴லீ-தூ⁴ஸர-ஸௌபா⁴க்³யம் |
ஶ்ரத்³தா⁴-ப⁴க்தி-க்³ருʼஹீதாநந்த³மசிந்த்யம்ʼ சிந்தித-ஸத்³பா⁴வம்ʼ
சிந்தாமணி-மஹிமாநம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–5-

சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன்.
வெவ்வேறு உணர்வு நிலைகளை உடையவன்
வேற்றுமையற்றவன்.
பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து
மங்கிய மேனியழகுடையவன்.
சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன்.
அறியவொண்ணாதவன்.
சத்தியப்பொருளென அறியப்படுபவன்.
சிந்தாமணியின் மகிமையுடையவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

“பிரம்மத்தை ஆய்ந்து அறிக” (அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா) என்று தான் பிரம்ம சூத்திரம் தொடங்குகிறது.
அறிதலே விடுதலை, அறிதல் அன்றி வேறேதும் விடுதலையன்று. வேதாந்த விசாரமே அந்த அறிதலுக்கான வழிமுறை.

“அன்பே, அந்த ஆத்மாவை (அறிவினால்) காணவேண்டும், கேட்கவேண்டும், சிந்திக்கவேண்டும்,
தன்னில் நிலைக்க வேண்டும்” (ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்யோ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய:)
– மைத்ரேயியிடம் யாக்ஞவல்கியர், பிரகதாரண்யக உபநிஷதம்.

வலிமையற்றோன் அடைவதில்லை
ஆத்மாவை ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும் அடைவதில்லை.
சரியான உபாயங்களால் முயலும் அறிவுடையோனது ஆத்மா பிரம்மத்தின் இருப்பிடத்தில் சென்றடைகிறது.
சொல்விளக்கங்களால் அடைவதல்ல
அந்த ஆத்மா மேதமையால் அல்ல -கேள்வியின் மிகுதியாலும் அல்ல.
அதற்காக ஏங்குபவன்-அதனையடைகிறான்.
அவனுக்கே தன்னியல்பை வெளிப்படுத்துகிறது ஆத்மா-– முண்டக உபநிஷதம்

—————-

ஸ்னான-வ்யாகுல-யோஷித்³-வஸ்த்ரமுபாதா³யாக³முபாரூட⁴ம்ʼ
வ்யாதி³த்ஸந்தீரத² தி³க்³வஸ்த்ரா தா³துமுபாகர்ஷந்தம்ʼ தா: |
நிர்தூ⁴தத்³வயஶோகவிமோஹம்ʼ பு³த்³த⁴ம்ʼ பு³த்³தே⁴ரந்தஸ்த²ம்ʼ
ஸத்தாமாத்ரஶரீரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–6-

குளியலில் ஆழ்ந்த யுவதிகளின்
ஆடைகளைக் கவர்ந்து மரத்திலேறிக் கொண்டு
பின்பு திக்கே ஆடையாக நின்று
தரமாட்டாயா என்று வேண்டும் அவர்களை
அருகில் அழைப்பவன்.
வேற்றுமையும் சோகமும் மோகமும் அற்றவன்.
[வேற்றுமையும் சோகமும் மோகமும் அழிப்பவன்]
அறிபவன் (புத்தன்)
அறிவின் அகத்துள் இருப்பவன்
உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன்.
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை வணங்குவீர்.

‘நிர்தூ4த-த்3வய-ஶோக-விமோஹம்‘ என்ற சொல்லாட்சி,
இந்தப் பிழைகள் அற்றவன், இவற்றை அழிப்பவன் என்று இரண்டு அர்த்தங்களும் தருவதாக அமைந்துள்ளது.

(விக்ஞாதாரமரே கேன விஜானீயாத்) என்ற உபநிஷத் வாக்கியத்தின் பொருளே இங்கு சுட்டப் படுகிறது.
பிரகதாரண்யக உபநிஷதத்தின் புகழ்பெற்ற உரையாடலின் இறுதியில் இந்த வாக்கியம் வருகிறது.

“யாக்ஞல்கியர்:
நீரில் போட்ட உப்புக் கட்டி, அதைத் திரும்ப எடுக்க முடியாதபடி அந்த நீரிலேயே கரைந்து விடுகிறது.
எப்பகுதியை சுவைத்தாலும் அது உப்பாகவே இருக்கும். அது போல, மைத்ரேயி, அந்தப் பேருயிர் முடிவற்றது,
அளவிட முடியாதது, தூய அறிவே உருக் கொண்டது. இப்பொருள்களினின்று ஆத்மா (தனிப்பட்டு) தோன்றுகிறது,
அவற்றிலேயே (தனிப்பட்ட தன்மை) அழிகிறது. (ஒருமையை) அடைந்தபின், அதற்கு அடையாளமில்லை, பெயரில்லை

மைத்ரேயி:
என் தலைவனே, (ஒருமையை) அடைந்தபின் அடையாளமுமில்லை, பெயருமில்லை என்று கூறி
இங்கு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.

யாக்ஞவல்கியர்:
நான் சொல்வதில் குழப்பம் ஏதுமில்லை. இது நிறைந்த அறிவு, மைத்ரேயி. இருமை என்பது இருக்கையில்,
வேறொன்றைப் பார்க்கிறான், வேறொன்றை முகர்கிறான், வேறொன்றைக் கேட்கிறான், வேறொன்றை வணங்குகிறான்,
வேறொன்றை உணர்கிறான், வேறொன்றை அறிகிறான். ஆனால், அனைத்தும் ஆத்மாவே என்கையில் எவ்வாறு
வேறொன்றை நுகர்வான், எவ்வாறு வேறொன்றைக் காண்பான், எவ்வாறு வேறொன்றைக் கேட்பான்,
எவ்வாறு வேறொன்றை வணங்குவான், எவ்வாறு வேறொன்றை உணர்வான், எவ்வாறு வேறொன்றை அறிவான்?
இவை அனைத்தையும் அறிவது எவனாலோ, அவனை அறிவது எங்ஙனம்? அன்பே, அறிவோனை அறிவது எங்ஙனம்?”

———–

காந்தம்ʼ காரணகாரணமாதி³மநாதி³ம்ʼ காலக⁴நாபா⁴ஸம்ʼ
காலிந்தீ³-க³த-காலிய-ஶிரஸி ஸுந்ருʼத்யந்தம்ʼ முஹுரத்யந்தம் |
காலம்ʼ காலகலாதீதம்ʼ கலிதாஶேஷம்ʼ கலிதோ³ஷக்⁴நம்ʼ
காலத்ரயக³திஹேதும்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||–7-

காந்தன்
காரணங்களுக்கெல்லாம் காரணமானவன்
முதலானவன் முதலற்றவன்
கருமேகச்சுடர்
காளிந்திப் பொய்கையில் காளியன் சிரத்தில்
மீளமீள அழகுநடனம் புரிபவன்
காலமானவன்
காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன்
அனைத்தையும் தோற்றுவிப்பவன்
கலியின் தீங்குகளை அழிப்பவன்
காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை
வணங்குவீர்.

காலம் (காலமானவன்), காலகலாதீதம் (காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன்),
கலிதாஶேஷம் (அனைத்தையும் தோற்றுவிப்பவன்),
கால-த்ரய-க3தி-ஹேதும் (காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்)

————

ப்³ருʼந்தா³வனபு⁴வி-ப்³ருʼந்தா³ரகக³ண-ப்³ருʼந்தா³ராதி⁴த-வந்த்³யாங்க்⁴ரிம்ʼ
குந்தா³பா⁴மல-மந்த³ஸ்மேர-ஸுதா⁴னந்த³ம்ʼ ஸுமஹானந்த³ம் |
வந்த்³யாஶேஷ-மஹாமுநி-மாநஸ-வந்த்³யாநந்த³-பத³த்³வந்த்³வம்ʼ
நந்த்³யாஶேஷ-கு³ணாப்³தி⁴ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–8-

பிருந்தாவன நிலத்தில்
தேவர்களின் கூட்டங்களும்
பிருந்தா முதலான கோபியரும்
வணங்கும் பாதங்களையுடையவன்.
குந்தமலர் போன்ற மாசற்ற புன்னகையின்
அமுதத்தால் மகிழ்விப்பவன்.
சிறந்த ஆனந்தமானவன்.
வணங்கத் தகுந்த மாமுனிவர்கள்
மனதில் போற்றி ஆனந்தமடையும்
இணையடிகளையுடையவன்.
போற்றத்தகுந்த எண்ணற்ற நற்குணங்களின்
கடலென விளங்குபவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

பிருந்தா என்பது கண்ணன் மீது அன்பு கொண்ட கோபிகையின் பெயர். துளசியையும் குறிக்கும்.

மாமுனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடி – புறத்தில் வெளிப்படையாக செய்யும் பூஜையைக் காட்டிலும்
(பாஹ்ய பூஜை) மனத்தினால் செய்யப் படும் பூஜை (மானஸ பூஜை) சிறந்தது என்பது கருத்து

————–

அச்யுத – விலகாதவன்.
பக்தர்களின் இதயத்திலிருந்து விலகாதவன்.
பிரகிருதி குணங்களுக்கு வசமாகாமல் தன் நிலையிலிருந்து விலகாமல் (மாறாமல்) நிற்கும் பொருள்.
‘அச்’ என்பது இலக்கணத்தில் உயிரெழுத்துக்களையும், அதன் வழிப்பொருளாக உயிர்களையும் (ஜீவன்களை) குறிக்கும்.
அசி+யுத = ஜீவன்களிடம் பேதமற்றுப் பிணைந்திருக்கும் அத்வைதப் பொருள்.

மாதவ – மா என்பது திருமகளைக் குறிக்கும். திருமகள் கேள்வன்.
இனிமை தரும் வசந்தத்தின் (மாதவ) நாயகன்.
‘மா’ எனப்படும் மாயைக்குத் தலைவனாக, அதற்கு வசப்படாமலிருந்து அதனை இயக்குபவன்.
மா: அழகு. அழகுகளின் தலைவன்.

விஷ்ணு – வியாபித்திருப்பவன். நிறைந்த பூரண சொரூபன்.
எங்கும் எல்லோராலும் துதிக்கப் படுபவன்.
பிறவித்துயர் என்னும் விஷத்தை அகற்றுபவன்.

கோகுலநாயக – கோகுலம் எனும் ஆயர்பாடியின் தலைவன்
பசுக்கூட்டங்களின் (ஜீவர்களின்) தலைவன்
அக்கூட்டங்களுக்கு உரியதை அடையும்படி செய்பவன்.
அறிஞர் கூட்டங்களின் தலைவன்.

கிருஷ்ண – (பக்தர்களை) வசீகரித்து இழுப்பவன்.
பாவிகளை இழுத்து அழிப்பவன்.
காலச் சக்கரத்தை இழுத்து சுழலச் செய்பவன்.
(துஷ்ட மாடுகளையும் துஷ்ட ஜீவர்களையும்) இழுத்து நேர்வழியில் திருப்பி விடுபவன்.
அழகிய கருநிறமுடையவன்.

கோவிந்தனிடத்தில் சித்தத்தைக் கொடுத்து
கோவிந்தா அச்யுதா மாதவா விஷ்ணோ
கோகுலநாயகா கிருஷ்ணா எனக் கூறி
இந்த கோவிந்தாஷ்டகத்தைக் கற்பவர்
கோவிந்தனின் பாதகமலத் தியானம் எனும்
அமுதநீரால் பாவமனைத்தும் நீங்கி
தன் அகத்துள் இருக்கும்
பரமானந்த அமுதமான
அந்த கோவிந்தனை
அடைவர்.

எட்டு சுலோகங்களுக்குப் பின் பலசுருதியாக இப்பாடல் அமைந்துள்ளது.
தோத்திரங்களின் வழக்கமான பலசுருதிகளைப் போல லௌகீக பலன்களைக் கூறாமல்,
ஞானமே பலனாகக் கூறப்பட்டது.

பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தையெல்லாம்
ஞானத்தோணியால் கடந்து செல்வாய் ஸ்ரீ கீதை (4.36)

பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய
பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.-ஸ்ரீ கீதை (5.17)

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading