ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 87–(மஹாதேவேநாந்தகவதம்)–மந்தர மலைக்குச் சென்ற அந்தகன் |-

மந்தர மலைக்குச் சென்ற அந்தகன்; அந்தகனை அழித்த பரமசிவன்

வைஷ²ம்பாயந உவாச
அந்த⁴கோ நாரத³வச꞉ ஷ்²ருத்வா தத்த்வேந பா⁴ரத |
மந்த³ரம் பர்வதம் க³ந்தும் மநோ த³த்⁴ரே மஹாஸுர꞉ ||2-87-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பரதனின் வழித்தோன்றலே, நாரதரின் சொற்களைக் கவனமாகக் கேட்ட பேரசுரன் அந்தகன் மந்தர மலைக்குச் செல்லும் விருப்பம் கொண்டான்

ஸோ(அ)ஸுராந்ஸுமஹாதேஜா꞉ ஸமாநீய மஹாப³ல꞉ |
ஜகா³ம மந்த³ரம் க்ருத்³தோ⁴ மஹாதே³வாலயம் ததா³ ||2-87-2

பெருஞ்சக்தியும், பலமும் வாய்ந்தவனும், பலத்தின் செருக்கில் மிதப்பவனுமான அந்தகன், (தன்னைச் சுற்றிலும்) பிற அசுரர்களைத் திரட்டிக் கொண்டு மஹாதேவனின் வசிப்பிடமான மந்தர மலையை அடைந்தான்.

தம் மஹாப்⁴ரப்ரதிச்ச²ந்நம் மஹௌஷதி⁴ஸமாகுலம் |
நாநாஸித்³த⁴ஸமாகீர்ணம் மஹர்ஷிக³ணஸேவிதம் ||2-87-3

பெரும் மேகங்களாலும், பெரும் மூலிகைகளாலும், அறம்சார்ந்த சித்தர்களாலும் அது மறைக்கப்பட்டிருந்தது. அங்கே பெரும் முனிவர்கள் வாழ்ந்தனர்,

சந்த³நாக³ருவ்ருக்ஷாட்⁴யம் ஸரலத்³ருமஸங்குலம் |
கிந்நரோத்³கீ³தரம்யம் ச ப³ஹுநாக³குலாகுலம் ||2-87-4

வாதோத்³தூ⁴தைர்வநை꞉ பு²ல்லைர்ந்ருத்யந்தமிவ ச க்வசித் |
ப்ரஸ்ருதைர்தா⁴துபி⁴ஷ்²சித்ரைர்விலிப்தமிவ ச க்வசித் ||2-87-5

யானைகள் பலவும், சந்தனம், அகரு மரங்களும், இன்னும் பல்வேறு மரங்களும் அங்கே நிறைந்திருந்தன. கின்னரர்களின் பாடல்களால் அழகூட்டப்பட்டதிருந்த அது, காற்று வீசுவதற்கு ஏற்ப மலர்ந்த மரங்கள் ஆடுவதைப் போல ஆடிக் கொண்டிருந்தது.(4,5)

பக்ஷிஸ்வநை꞉ ஸுமது⁴ரைர்நத³ந்தமிவ ச க்வசித் |
ஹம்ஸை꞉ ஷு²சிபதை³꞉ கீர்ணம் ஸம்பதத்³பி⁴ரிதஸ்தத꞉ ||2-87-6

பறவைகள் வெளியிடும் இனியவொலி அங்கே நிரம்பியிருந்தது, அன்னங்கள் அழகாக அசைந்து கொண்டிருந்தன

மஹாப³லைஷ்²ச மஹிஷைஷ்²சரத்³பி⁴ர்தை³த்யநாஷ²நை꞉ |
சந்த்³ராம்ஷு²விமலை꞉ ஸிம்ஹைர்பூ⁴ஷிதம் ஹேமஸஞ்சயம் ||2-87-7

அசுரர்களை அழிக்கும் பெருஞ்சக்திவாய்ந்த எருமைகளாலும், சந்திரக் கதிர்களைப் போன்று வெண்மையான சிங்கங்களாலும் அஃது {அந்த மலை} அலங்கரிங்கப்பட்டிருந்தது. {மொத்த மலையும் தங்கக் குவியலைப் போலத் தோன்றியது}

ம்ருக³ராஜஸமாகீர்ணம் ம்ருக³வ்ருந்த³நிஷேவிதம் |
ஸ மந்த³ரம் கி³ரிம் ப்ராஹ ரூபிணம் ப³லத³ர்பித꞉ ||2-87-8

{சிங்கங்கள் பலவும் அந்த மலையில் உலவிக் கொண்டிருந்தன}. நூற்றுக்கணக்கான மான்கள் அங்கே நிறைந்திருந்தன.
அங்கே வந்த அவன் {அந்தகன்}, அங்கே தன்வடிவில் இருந்த சிறந்த மலையிடம்,

வேத்ஸி த்வம் ஹி யத²வத்⁴யோ வரதா³நாத³ஹம் பிது꞉ |
மம சைவ வஷே² ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம் ||2-87-9

“என் தந்தை பெற்ற வரத்தினால் நான் எவராலும் கொல்லப்பட முடியாதவன் என்பதை அறிவாயாக. அசையும் {உயிருள்ள} படைப்புகளையும், அசையாத {உயிரற்ற} படைப்புகளையும் உள்ளடக்கிய மூவுலகங்களும் என் ஆளுகையின் கீழ் உள்ளன.

ப்ரதியோத்³து⁴ம் ந மாம் கஷ்²சிதி³ச்ச²த்யபி கி³ரே ப⁴யாத் |
பாரிஜாதவநம் சாஸ்தி தவ ஸாநௌ மஹாகி³ரே |
ஸர்வகாமப்ரதை³꞉ புஷபைர்பூ⁴ஷிதம் ரத்நமுத்தமம் ||2-87-10

ஓ! மலையே, என் மீது கொண்ட அச்சத்தால் எவராலும் என்னுடன் போரிட இயலவில்லை. ஓ! பெரும் மலையே, உன்னுடைய மேட்டுச் சமவெளியில் {தாழ்வரையில்}, விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் அளிக்கவல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையும், ரத்தினங்களுடன் கூடியவையுமான பாரிஜாத மரங்களைக் கொண்ட காடு {பாரிஜாதவனம்} இருப்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ததா³சக்ஷ்வோபபோ⁴க்ஷ்யாமி தத்³வநம் தவ ஸாநுஜம் |
கிம் கரிஷ்யஸி க்ருத்³த⁴ஸ்த்வம் மநோ ஹி த்வரதே மம ||2-87-11

என் மனம் ஆவலால் நிறைந்திருக்கிறது. உன் மேட்டுச் சமவெளிகளில் அந்தக் காடு எங்கே இருக்கிறது என்பதை விரைவாகச் சொல்வாயாக. ஓ! மலையே, நான் உன்னிடம் கோபம் கொண்டால் உன்னால் என்னை எதிர்த்து ஏதும் செய்ய முடியாது

த்ராதாரம் நாநுபஷ்²யாமி மயா க²ல்வர்தி³தஸ்ய தே |
இத்யுக்தோ மந்த³ரஸ்தேந தத்ரைவாந்தரதீ⁴யத ||2-87-12

மறுபுறம் நான் உன்னை ஒடுக்கித் துன்புறுத்தினால், உன்னைப் பாதுகாக்கவல்லவர் எவரையும் நான் காணவில்லை” என்றான். இவ்வாறு சொல்லப்பட்டதும் மந்தர மலை அங்கேயே அப்போதே மறைந்து போனது.

ததோ(அ)ந்த⁴கோ(அ)திருஷிதோ வரதா³நேந த³ர்பித꞉ |
முமோச நாத³ம் ஸுமஹதி³த³ம் வசநமப்³ரவீத் ||2-87-13

வரத்தில் செருக்கடைந்திருந்த அந்தகன் பெருங்கோபத்தால் தூண்டப்பட்டவனாக, பயங்கரச் சிங்கமுழக்கம் செய்தபடியே

மயா த்வம் வை யாச்யமாநோ யஸ்மாந்ந ப³ஹு மந்யஸே |
அஹம் சூர்ணீகரோமி த்வாம் ப³லம் பர்வத பஷ்²ய மே ||2-87-14

“ஓ! மலையே, என்னால் வேண்டப்பட்டும் நீ போதுமான மதிப்பைக் காட்டவில்லை. இப்போது என் பலத்தைப் பார். இந்தக் கணத்திலேயே நான் உன்னை நொறுக்குகிறேன் {பொடியாக்குகிறேன்}” என்றான்.

ஏவமுக்த்வா கி³ரே꞉ ஷ்²ருங்க³முத்பாட்ய ப³ஹுயோஜநம் |
நிஷ்பிபேஷ கி³ரேஸ்தஸ்ய ஷ்²ருங்கே³ஷ்²வந்யத்ர வீர்யவாந் ||2-87-15

ஸ ஹதைரஸுரை꞉ ஸர்வைர்வரதா³நேந த³ர்பித꞉ |
தம் ப்ரச்ச²ந்நநதீ³ஜாலம் மந்யமாநம் மஹாகி³ரிம் ||2-87-16

வரத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருந்த பெரும் பலம்வாய்ந்த அந்தகன் இதைச் சொல்லிவிட்டு, பல யோஜனைக்குப் பரந்திருந்த ஒரு சிகரத்தை மற்ற அசுரர்களின் துணையுடன் பிடுங்கி, அதை {மற்ற சிகரங்களுடன் தேய்த்து} நொறுக்கத் தொடங்கினான். ஓ! வீரா, இதன் காரணமாக அந்தப் பெரும் மலையில் இருந்த ஓடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.(15,16)

விதி³த்வா ப⁴க³வாந்ருத்³ரஷ்²சகாராநுக்³ரஹம் கி³ரே꞉ |
ஸவிஷே²ஷதரம் வீரம் மத்தத்³விபம்ருகா³யுதம் ||2-87-17

நதீ³ஜாலைர்ப³ஹுதரைராசிதம் சித்ரகாநநம் |
நப⁴ஷ்²ச்யுதை꞉ புரா யத்³வத்தத்³வதே³வ விராஜதே ||2-87-18

ருத்ரன் இவை அனைத்தையும் அறியவந்தபோது, அந்தகனால் பிடுங்கப்படுவதற்கு முன்பு இருந்ததைப் போலவே, மதங்கொண்ட யானைகளும், பல்வேறு ஓடைகளும், பல வண்ணங்களிலான தோட்டங்களும் நிறைந்த அதே அழகுடன் மீண்டும் அதைத் தோன்றச் செய்து தன் தயவை வெளிப்படுத்தினான்.(17,18)

அத² தே³வப்ரபா⁴வேண ஷ்²ருங்கா³ண்யுத்பாடிதாநி து |
க்ஷிப்தாநி சாஸுராநேவ க்⁴நந்தி வீராணி பா⁴ரத ||2-87-19

அதன்பிறகு, அந்தகனால் பிடுங்கப்பட்ட பயங்கரச் சிகரங்கள், அந்தத் தலைவனுடைய {சிவனுடைய} சக்தியின் மூலம் அசுரர்களுக்கு அழிவைக் கொண்டு வந்தன.

க்ஷிப்த்வா யே ப்ரபலாயந்தே ஷ்²ருங்கா³ணி து மஹாஸுரா꞉ |
ஷ்²ருஞ்கை³ஸ்தைஸ்தை꞉ ஸ்ம வத்⁴யந்தி பர்வதஸ்ய ஜநாதி⁴ப ||2-87-20

ஓ! மன்னா, அந்த மலைச் சிகரங்கள், தங்களை வேருடன் பிடுங்கியவர்களும், தப்பி ஓடுபவர்களுமான அசுரர்களை நசுக்கின

யே ஸ்வஸ்தா²ஸ்த்வஸுராஸ்தத்ர திஷ்ட²ந்தி கி³ரிஸாநுஷு |
ஷ்²ருங்கை³ஸ்தேந ஸ்ம வத்⁴யந்தே மந்த³ரஸ்ய மஹாகி³ரே꞉ ||2-87-21

எனினும், மந்தர மலையின் மேட்டுச் சமவெளிகளில் சுகமாக அமர்ந்திருந்த அசுரர்கள் கொல்லப்படவில்லை.

ததோ(அ)ந்த⁴கஸ்ததா³ த்³ருஷ்ட்வா ஸேநாம் தாம் மர்தி³தாம் ததா² |
ருஷித꞉ ஸுமஹாநாத³ம் நர்தி³த்வைவம் ததா³ப்³ரவீத் ||2-87-22

இவ்வாறு தன் படைவீரர்கள் நசுக்கிக் கொல்லப்படுவதைக் கண்ட அந்தகன், பயங்கரச் சிங்கமுழக்கம் செய்தபடியே

ஆஹ்வயே தம் வநம் யஸ்ய யுத்³தா⁴ர்த²முபதிஷ்ட²து |
கிம் த்வயாசல யுத்³தே⁴ந ஹதா꞉ ஸ்ம ச்ச²த்³மநா ரணே ||2-87-23

“ஓ! மலையே, போரில் வஞ்சகத்தால் நாங்கள் கொல்லப்பட்டோம். நான் ஏன் உன்னுடன் போரிட வேண்டும்? உன்னுடைய முகப்பில் அமைந்திருக்கும் தோட்டத்தின் உரிமையாளனை நான் அழைக்கிறேன். அவன் போரிட முன்வரட்டும்” என்றான்.

ஏவமுக்தே த்வந்த⁴கேந வ்ருஷபே⁴ண மஹேஷ்²வர꞉ |
ஸம்ப்ராப்த꞉ ஷூ²லமுத்³யம்ய தே³வோ(அ)ந்த⁴கஜிகா⁴ம்ஸயா ||2-87-24

இவ்வாறு சொல்லப்பட்டதும் அவனைக் கொல்ல விரும்பிய மஹாதேவன், தன் கதாயுதத்தை {சூலத்தை} எடுத்துக் கொண்டும், தன் காளையைச் செலுத்திக் கொண்டும் அங்கே வந்தான்.

ப்ரமதா²நாம் க³ணைர்தீ⁴மாந்வ்ருதோ வை ப³ஹுலோசந꞉ |
ததா² பூ⁴தக³ணைஷ்²சைவ தீ⁴மாந்பூ⁴தக³ணேஷ்²வர꞉ ||2-87-25

நுண்ணறிவு மிக்கவனும், முக்கண் தேவனுமான அந்தப் பூதகணேஷ்வரன் {பூத கணங்களின் தலைவனான சிவன்}, பூத கணங்கள் சூழ அங்கே வந்தான்

ப்ரசகம்பே தத꞉ க்ருத்ஸ்நம் த்ரைலோக்யம் ருஷிதே ஹரே |
ஸிந்த⁴வஷ்²ச ப்ரதிஸ்ரோதமூஹு꞉ ப்ரஜ்வலிதோத³கா꞉ ||2-87-26

மஹாதேவன் கோபத்தால் தூண்டப்பட்டபோது, மொத்த உலகமும் நடுங்கியது, ஆறுகள் எரியும் {கொதிக்கும்} நீருடன் நேர்மாறான போக்கில் பாய்ந்தன

ஜக்³முர்தி³ஷோ²(அ)க்³நிதா³ஹாஷ்²ச ஸர்வே தே ஹரதேஜஸா |
யுயுது⁴ஷ்²ச க்³ரஹா꞉ ஸர்வே விபரீதா ஜநாதி⁴ப ||2-87-27

சிவனுடைய காந்தியால் திசைகள் அனைத்தும் பற்றி எரிந்தன. கோள்கள் ஒன்றோடொன்று போரிடத் தொடங்கின. ஓ! குருவின் வழித்தோன்றலே, அந்நேரத்தில் மலைகள் அனைத்தும் அசைந்தன

சேலுஷ்²ச கி³ரயஸ்தத்ர காலே குருகுலோத்³வஹ |
ப்ரவவர்ஷாத² பர்ஜந்ய꞉ ஸதூ⁴மாங்கா³ரவ்ருஷ்டய꞉ ||2-87-28

மழையின் தேவன், புகையுடன் கூடிய கரித்துண்டுகளை {நெருப்புக் கங்குகளைப்} பொழிந்தான். சந்திரன் வெப்பமானான், சூரியன் குளிர்ந்தான்.

உஷ்ணபா⁴ஷ்²சந்த்³ரமாஷ்²சாஸீத்ஸூர்ய꞉ ஷீ²தப்ரப⁴ஸ்ததா² |
ந ப்³ரஹ்ம விவிது³ஸ்தத்ர முநயோ ப்³ரஹ்மவாதி³ந꞉ ||2-87-29

பிரம்மவாதிகள் வேதங்களை மறந்தனர். ஓ! பாவமற்றவனே, அந்நேரத்தில் குதிரைகள் பசுக்களையும், பசுக்கள் குதிரைகளையும் ஈன்றன

வட³வா꞉ ஸுஷுவுர்கா³ஷ்²ச க³வோ(அ)ஷ்²வாநபி சாநக⁴ |
பேதுர்வ்ருக்ஷாஷ்²ச மேதி³ந்யாமச்சி²ந்நா ப⁴ஸ்மஸாத்க்ருதா꞉ ||2-87-30

மரங்கள் சாம்பலாகி பூமியில் விழுந்தன. காளைகள் பசுக்களை ஒடுக்கத் தொடங்கின, பசுக்கள் காளைகளைச் செலுத்தத் தொடங்கின

பா³த⁴ந்தே வ்ருஷபா⁴ கா³ஷ்²ச கா³வஷ்²சாருருஹுர்வ்ருஷாந் |
ராக்ஷஸா யாதுதா⁴நாஷ்²ச பிஷா²சாஷ்²சாபி ஸர்வஷ²꞉ ||2-87-31

திசைகள் அனைத்திலும் ராட்சசர்களும், யாதுதானர்களும், பிசாசங்களும் நிறைந்திருந்தனர்

விபரீதம் ஜக³த்³த்³ருஷ்ட்வா மஹாதே³வஸ்தாதா²க³தம் |
முமோச ப⁴க³வாஞ்சூ²லம் ப்ரதீ³ப்தாக்³நிஸமப்ரப⁴ம் ||2-87-32

தெய்வீகனான மஹாதேவன், இத்தகைய மாறுபட்ட நிலையில் அண்டத்தைக் கண்டு, நெருப்பைப் போன்று பிரகாசமிக்கத் தன் கதாயுதத்தை {சூலத்தை} ஏவினான்.(31,32)

தத்பபாத ரஹோத்ஸ்ருஷ்டமந்த⁴கோரஸி து³ர்த்³த⁴ரம் |
ப⁴ஸ்மஸாச்சாகரோத்³ரௌத்³ரமந்த⁴கம் ஸாது⁴கண்டகம் ||2-87-33

ஓ! மன்னா, ஹரனால் ஏவப்பட்ட அந்தப் பயங்கரக் கதாயுதம் {சூலம்}, நல்லோரின் பாதையில் முள்ளாக இருந்த அந்தகாசுரனின் மார்பில் பாயந்த உடனேயே அவனைச் சாம்பலாக்கியது

ததோ தே³வக³ணா꞉ ஸர்வே முநயஷ்²ச தபோத⁴நா꞉ | வத³வா꞉
ஷ²ங்கரம் துஷ்டுவுஷ்²சைவ ஜக³ச்ச²த்ரௌ நிப³ர்ஹிதே ||2-87-34

உலகின் பகைவன் கொல்லப்பட்டபோது, தேவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும் சங்கரனை {சிவனைத்} தணிவடையச் செய்யத் தொடங்கினர் {துதிக்கத் தொடங்கினர்}.

தே³வது³ந்து³ப⁴யோ நேது³꞉ புஷ்பவ்ருஷ்டி꞉ பபாத ஹ |
த்ரைலோக்யம் நிர்வ்ருதம் சாஸீந்நரேந்த்³ர விக³தஜ்வரம் ||2-87-35

தேவதுந்துபிகள் முழங்கின, மலர் மாரி பொழிந்தது. ஓ! மன்னா, மூவுலகங்களும் கவலையில் இருந்து விடுபட்டு நிம்மதியடைந்தன

ப்ரஜகு³ர்தே³வக³ந்த⁴ர்வா நந்ருதுஷ்²சாப்ஸரோ க³ணா꞉ |
ஜேபுஷ்²ச ப்³ராஹ்மணா வேதா³நீஜுஷ்²ச க்ரதுபி⁴ஸ்ததா³ ||2-87-36

தேவர்களும், கந்தர்வர்களும் பாடத் தொடங்கினர், அப்சரஸ்கள் ஆடத் தொடங்கினர். பிராமணர்கள் வேதமோதவும், வேள்விகளைச் செய்யவும் தொடங்கினர்.

க்³ரஹா꞉ ப்ரக்ருதிமாபேது³ரூஹுர்நத்³யோ யதா² புரா |
ந ஜஜ்வால ஜலே வஹ்நிராஷா²꞉ ஸர்வா꞉ ப்ரஸேதி³ரே ||2-87-37

கோள்கள் தங்கள் இயல்பு நிலையை அடைந்தன, ஆறுகள் முறையான போக்கில் பாய்ந்தன. நீரில் நெருப்பு எரியவில்லை {ஆறுகளில் பாய்ந்த நீர் கொதிநிலையில் இல்லை}. {திசைகள் அனைத்தும் தெளிந்தன} மக்கள் அனைவரும் நம்பிக்கைகளை வளர்க்கத் தொடங்கினர்.

மந்த³ர꞉ பர்வதஷ்²ரேஷ்ட²꞉ புநரேவ ரராஜ ஹ |
ஷ்²ரியா பரமயா ஜுஷ்ட꞉ ஸர்வதேஜ꞉ஸமுச்ச்²ரயாத் ||2-87-38

மலைகளில் முதன்மையான மந்தரம், தூய்மையுடனும், செழிப்புடனும், பிரகாசத்துடனும் மீண்டும் அழகில் ஒளிர்ந்தது

ரேமே ஸோமஷ்²ச ப⁴க³வாந்பாரிஜாதவநே ஹர꞉ |
ஸுப்ரசாராந்ஸுராந்க்ருத்வா ஷ²க்ராதீ³ந்த⁴ர்மத꞉ ப்ரபு⁴꞉ ||2-87-39

தலைவன் ஹரன், இவ்வாறு தேவர்களுக்கு நன்மையைச் செய்து, பாரிஜாதவனத்தில் மீண்டும் உமையுடன் விளையாடத் தொடங்கினான்” என்றார் {வைசம்பாயனர்}

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
அந்த⁴கவதே⁴ ஸப்தாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading