ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/6-கங்கைப் படலம்–

பொருளடக்கம்
1 இராமன் சீதை இலக்குவனோடு காட்டில் செல்லல்
2 சீதையுடன் செல்லும் இராமன் மருத நிலத்தில் திரியும் அன்னம் முதலியவற்றைக் காணுதல்
3 மூவரும் மருத நிலக் காட்சிகளை கண்ட வண்ணம் கோசல நாட்டைக் கடத்தல்
4 மூவரும் கங்கையை அடைதல்
5 கங்கைக் கரையில் தங்கியிருக்கும் முனிவர்கள் இராமனைக் காண வருதல்
6 வந்த முனிவர்களை இராமன் தரிசித்து மகிழ்தல்
7 முனிவர்கள் இராமனை புகழ்ந்து பாடி ஆடுதல்
8 முனிவர்கள் இராமனைத் தம் இருப்பிடம் அழைத்துச் செல்லுதல்
9 இராமன் வழி வந்த வருத்தத்தை முனிவர்கள் போக்குதல்
10 இராமனை நீராடி அமுது உண்ண முனிவர்கள் வேண்டல்
11 இராமனும் சீதையும் கங்கையில் நீராடுதல்
12 இராமனை கங்கை புகழ்தல்
13 கங்கையில் மூழ்கும் இராமனின் தோற்றம்
14 சீதை கங்கையில் நீராடுதல்
15 சீதை நீராடியதால் கங்கை நறுமணம் பெறுதல்
16 கங்கையின் அலைகள் சீதை மீது மோதுதல்
17 சீதையின் கூந்தல் கங்கை வெள்ளத்தில் தோன்றும் காட்சி
18 சீதை புனித கங்கையில் மூழ்கி எழுதல்
19 இராமன் நீராடியதால் கங்கையின் மகிமை மிகுதல்
20 இராமன் கடன் முடித்து முனிவரின் நல்விருந்து உண்ணுதல்
21 முனிவர் கொடுத்த விருந்தால் இராமன் மகிழ்தல்
22 மிகைப் பாடல்கள்

——————–

இராமன் சீதை இலக்குவனோடு காட்டில் செல்லல்

வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும், போனான்-
“மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!” என்பதோர் அழியா அழகு உடையான். 1-

மையோ – (கண்ணுக்கு இடக்கூட்டிய) மையோ; மரகதமோ –
பச்சைநிறஒளிக்கல்லாகிய மரகதமோ; மறிகடலோ – (கரையின்கண்
அலைகளால்) மறிக்கின்றகடலோ; மழை முகிலோ – பெய்யும் கார்
மேசுமோ; ஐயோ – (உவமை சொல்லமாட்டாத நிலையாகிய) ஐயோ!;
வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் இவன்? – தன்உருவம்
என்று சொல்லப்படுவதாகிய ஒப்பற்ற அழியாத அழகினை உடையன் இந்த
இராமன்; வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறை –
சூரியனது ஒளியானது தன்திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில்
இல்லையாய் மறைந்துவிடும்படி; பொய்யோஎனும் இடையாளொடும் –
இல்லையோ என்று சொல்லத்தக்க நுண்ணிய இடையினை உடைய சீதையோடும்; இளையானொடும் –
தம்பியாகிய இலக்குவனோடும்;போனான் – (காட்டு வழியே) நடந்து
செல்லலானான்.

————-

சீதையுடன் செல்லும் இராமன் மருத நிலத்தில் திரியும் அன்னம் முதலியவற்றைக் காணுதல்

அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள், கடல் அமிழ்தின்
தெளிவு அன்னது ஓர் மொழியாள், நிறை தவம் அன்னது ஓர் செயலாள்,
வெளி அன்னது ஓர் இடையாளடும் விடை அன்னது ஓர் நடையான்
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான். 2-

அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் – வண்டைப்
போன்ற (கரிய) ஒப்பற்றகருமணல் நெருங்கி இருப்பது போன்ற கூந்தலை
உடையவறும்; கடல் அமுதின் தெளிவு அன்னது ஓர்மொழியாள் –
கடலின்கண் கடைந்து எடுத்த தேவர் அமிழ்தத்தின் தெளிவு போன்றது
எனும்படியாகிய ஒப்பற்ற பேச்சினை உடையவளும்; நிறை
தவம் அன்னது ஓர் செயலாள் -நிறைந்த தவத்தைப் போன்ற ஒப்பற்ற
தூய செயலை உடையவளும்; வெளி அன்னது ஓர்இடையாளொடும் –
ஆகாயம் போன்றதாகிய இல்லையான ஒப்பற்ற இடையினை
உடையவளுமாகியசீதையோடும்; விடை அன்னது ஓர் நடையான் –
இடபத்தை ஒத்த ஒப்பற்ற நடையினை உடையஇராமன்; களி அன்னமும் –
செருக்கினை உடைய ஆண் அன்னமும்; மட அன்னமும் -மடப்பத்தை
உடைய பெண் அன்னமும்; நடம் ஆடுவ – சேர்ந்து உலாவிடுவதை;
கண்டான்-.

———

அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா,
நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான்,
துஞ்சும்களி வரி வண்டுகள் குழலின் படி சுழலும்
கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள். 3-

அஞ்சு அம்பையும் – மன்மதனது மலர் அம்புகள் ஐந்தனையும்;
ஐயன்தனது -இராமனது; அலகு – கூர்மையான; அம்பையும் –
கணையையும்; அளவா – அளந்து(தனக்குவமை யாகானென்று தள்ளி);
நஞ்சங்களை – கொடிய விடங்களை; வெல ஆகிய -வெல்லும் தன்மை
படைத்தனவாகிய; நயனங்களை உடையாள் – அழகிய கண்களை உடைய
சீதை;துங்சும் களி வரி வண்டுகள் – உறங்கும் செருக்குடைய அழகிய
வண்டுகள்; குழலின்படி -கூந்தலிற் படியும் தன்மையில்; சுழலும் –
சுற்றியிருக்கப்பெற்ற; கஞ்சங்களை -தாமரை மலர்களை; மஞ்சன் கழல் –
மைந்தனாகிய இராமனது திருவடிகள்; நகுகின்றது -உவமையாகாதென்று
இகழ்ந்து சிரிப்பதனை; கண்டாள்-.

———–

மா கந்தமும், மகரந்தமும், அளகம்தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளடு, பவளந்தரும் இதழான்,
மேகந்தனி வருகின்றது மின்னோடு என, மிளிர்பூண்,
நாகம் நனி வருகின்றது பிடியோடு என, நடவா, 4-

மா கந்தமும் – மிக்க நறுமணத்தையும்; மகரந்தமும் – வாசனைப்
பொடியும் கலந்து பொருந்திய; அளகம் – கூந்தல்; தரும் – பெற்ற;
மதியின் பாகம்தரும் நுதலாளொடு – அரைச்சந்திரன் வடிவாயமைந்து
நெற்றியை உடைய சீதையோடு; பவளம்தரும் இதழான் – பவளத்துக்குச்
செம்மை தரும் திரு அதரத்தை உடைய இராமன்; மேகம்மின்னொடு தனி
வருகின்றது என்ன – மேகம் மின்னலோடு சேர்ந்து தனித்து வருகின்றது
போலவும்; மிளிர் பூண் – அழகிய அணி அணிந்த; நாகம் – ஆண்யானை;
பிடியோடு தனி வருகின்றது என்ன – பெண் யானையோடு தனித்து
வருகின்றது போலவும்; நடவா -நடந்து சென்று.

————

தொளைகட்டிய கிளைமுட்டிய சுருதிச் சுவை அமுதின்,
கிளைகட்டிய கருவிக்கிளர், இசையின், பசை நறவின்,
விளைகட்டியின், மதுரித்துஎழு கிளவிக் கிளி விழிபோல்,
களைகட்டவர் தளைவிட்டெறி குவளைத்தொகை கண்டான். 5-

தொளை கட்டிய கிளை- தொளை பொருந்திய புல்லாங்குழலிலிருந்து;
முட்டிய -தாக்கி எழுப்பிய; சுருதி – காதால் கேட்டு அனுபவிக்கும்
தன்மையதான; சுவை அமுதின்- சுவையுடைய இசை அமுதம் போலவும்;
கிளை கட்டிய கருவி – நரம்புகள் இணைத்துக்கட்டப்பெற்ற யாழிலிருந்து;
கிளர் இசையின் – உண்டாகின்ற இசையைப் போலவும்; பசை நறவின் –
சாரமுள்ள தேனைப் போலவும்; விளை கட்டியின் – நன்றாக விளைந்த
பாகுக் கட்டி போலவும்; மதுரித்து எழு – இனிமை உடையதாகி எழுகின்ற;
கிளவி -பேச்சினை உடைய; கிளி – கிளி போல்பவளாகிய சீதையினது;
விழி போல் -கண்களைப் போல; களை கட்டவர் – களை பறிப்பவர்;
தளைவிட்டு எறி -வயலிலிருந்து வீசி எறிகின்ற; குவளைத் தொகை
கண்டான் – குவளை மலர்களின்கூட்டத்தைப் பார்த்தான்.

———–

மூவரும் மருத நிலக் காட்சிகளை கண்ட வண்ணம் கோசல நாட்டைக் கடத்தல்

‘அருப்பேந்திய கலசத்துணை, அமுதேந்திய மதமா
மருப்பேந்திய’ எனலாம் முலை, மழையேந்திய குழலாள்,
கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள், இடர் காணாள்,
பொருப்பேந்திய தோளானொடு விளையாடினள், போனாள். 6-

‘அருப்பு ஏந்திய கலசத்துணை – அரும்பைத் தன் உச்சியில
கொண்டுள்ள இரண்டுபொற்கலசங்கள்; அமுது ஏந்திய மதமா ஏந்திய
மருப்பு’ – அமுதைத் தன்னிடத்தே வைத்துக்கொண்டுள்ள மதச்
செருக்குடைய ஆண் யானையின் உயர்ந்த தந்தங்கள்; எனல் ஆம் முலை-
என்று சொல்லத்தக்கதாகிய முலைகளையும்; மழை ஏந்திய குழலாள் –
மேகத்தை ஒத்தகூந்தலையும் உடைய சீதை; கருப்பு ஏந்திரம் –
கரும்பாலை; முதலாயின கண்டாள் -முதலியவற்றை (அங்கங்கே)
கண்டவளாய்; பொருப்பு ஏந்திய தோளானொடு – மலையை ஒத்த
திண்ணிய தோளை உடைய இராமனோடு; விளையாடினாள் போனாள் –
விளையாடிக்கொண்டுசென்றாள்.

——-

பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர்
அன்னந்துயில் வதி தண்டலை, அயல்நந்து உளை புளினம்,
சின்னம் தரும் மலர்சிந்திய செறிநந்தன வனம் நல்
பொன் நந்திய நதி, கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார். 7-

பல் நந்து உகு – பல சங்குகள் சுக்கிய; தொகு தரளம் படர்
பந்திகள் படுநீர் – திரண்ட முத்துகளின் தொடர்ந்த வரிசைகள்
பொருந்திய நீர்த்துறைகளையும்; அன்னம் துயில் வதி தண்டலை –
அன்னப் பறவைகள் தூங்குகின்ற சோலைகளையும்; அயல் நந்து உறை
புளினம் – அருகேசங்குகள் தங்கியுள்ள மணல் மேடுகளையும்; சின்னம்
தரும் மலர் சிந்திய செறி நந்தனவனம் -விடுபூவாக விழும் மலர்களைச்
சிதறிய நெருங்கிய பூந்தோட்டங்களையும்; நன் பொன் உந்தியநதி –
நல்ல பொற்பொடிகளைத் தள்ளுகின்ற ஆறுகளையும்; கண்டு – பார்த்து;
உளம் மகிழ்ந்தனர் போனார் – மனம் மகிழ்ச்சி அடைந்தவர்களாய்ச்
சென்றார்கள்.

———–

கால்பாய்வன முதுமேதிகள் கதிர்மேய்வன, கடைவாய்ப்
பால்பாய்வன; நறைபாய்வன மலர்வாய் அளி படரச்
சேல்பாய்வன; கயல்பாய்வன; செங்கால்மட அன்னம்
போல், பாய்புனல் மடவார்படி நெடு நாடு அவை போனார். 8-

முது மேதிகள் – கிழட்டு எருமைகள்; கதிர் மேய்வன –
நெற்கதிர்களைமேய்ந்து; கடைவாய் பால் பாய்வன – தமது கடை
வாயிலிருந்து (மணி பிடியாத அந்நெற்கதிர்களின் அரிசிப்) பால் ஒழுகப்
பெற்றவையாய்; கால் பாய்வன – தமது கால்களால்(நீர்நிலைகளிற்)
பாய்வனவாம்; நறைபாய்வன மலர்வாய் அளிபடர – தேன் ஒழுகப்
பெற்றனவாய மலர்களிடத்து வண்டுகள் மேல் செல்லும்படி; சேல்பாய்வன
கயல் பாய்வன -சேலும் கயலும் துள்ளிப் பாய்வனவாம்; பாய் புனல் –
பாய்ந்து செல்லும் ஆற்றுநீரிலே; செங்கால் மட அன்னம் போல் –
சிவந்த காலை உடைய பெண் அன்னப் பறவைகள்போல; மடவார் –
பெண்கள்; படி – முழுகுகின்ற; நெடு நாடு அவை போனார் -நீண்ட
கோசல தேசத்தைக் கடந்து சென்றார்கள்.

———

மூவரும் கங்கையை அடைதல்

பரிதி பற்றிய பல்கலன் முற்றினர்,
மருத வைப்பின் வளங்கெழு நாடு ஒரீஇ,
சுருதி கற்று உயர் தோம் இலர் சுற்றுறும்
விரிதி ரைப்புனல் கங்கையை மேவினார். 9-

பருதி பற்றிய – சூரியனைப் போன்ற ஒளிபடைத்த; பல்கலன் – பல
அணிகலன்களை; முற்றினர் – நிறைய அணிந்துள்ள மூவரும்; மருத
வைப்பின் – வயல்நிலங்களாகிய செல்வமுடைய; வளம் கெழு நாடு
ஒரீஇ – வளம் பொருந்திய நாடு கடந்து சென்று; சுருதி கற்று உயர் –
வேதங்களை (இடையறாது) கற்று உயர்ந்த; தோம் இலர்- குற்றம் இல்லாத
முனிவரர்; சுற்றுறும் – எப்பொழுதும் சுற்றி இருக்கப் பெற்ற; விரி
திரைப்புனல் கங்கையை – விரிந்த அலைகளையுடைய நீர் நிரம்பிய
கங்கையாற்றை; மேவினார் – அடைந்தார்.

———-

கங்கைக் கரையில் தங்கியிருக்கும் முனிவர்கள் இராமனைக் காண வருதல்

கங்கை என்னும் கடவுள் திருநதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்,
‘எங்கள் செல்கதி வந்தது’ என்று ஏமுறா,
அங்கண் நாயகன் காண, வந்து அண்மினார். 10-

கங்கை என்னும் கடவுள் திருநதி – கங்கை என்று சொல்லப்படும்
தெய்வத்தன்மைஉடைய அழகிய ஆற்றின் கரையில்; தங்கி வைகும்
தபோதனர் யாவரும் – தங்கிஇருக்கின்ற முனிவர்கள் எல்லாரும்; ‘எங்கள்
செல் கதி வந்தது’ என்று ஏமுறா – எங்கள்மோட்ச மாகிய செல்லும்
பேறு எதிர்ப்பட்டது என்று மனத்தின்கண் இன்பம் அடைந்து; அம்கண்
நாயகன் காண- அருளுடைய கண்களை உடைய இராமனைக் காண்பதற்கு;
வந்து அண்மினார் -வந்து அணுகினார்கள்.

————

வந்த முனிவர்களை இராமன் தரிசித்து மகிழ்தல்

பெண்ணின் நோக்கும் சுவையில், பிறர்பிறர்க்கு
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை,
பண்ணின் நோக்கும் பராஅமு தைப்பசுங்
கண்ணின் நோக்கினர், உள்ளங் களிக்கின்றார். 11-

பெண்ணின் நோக்கும் சுவையை – பெண்ணிடத்துக் கருதப்படும்
ஐம்புல இன்பத்தை; பிறர் பிறர்க்கு – ஒருவர் மற்றொருவர்க்கு; எண்ணி –
நினைத்து; நோக்கி -பார்த்து; இயம்ப அரும் எடுத்துச் சொல்லமுடியாத;
இன்பத்தை – இன்பச்சுவையை; பண்ணில் நோக்கும் பராவமுதை –
இசைவடிவான வேதத்தினால் அறியப்படும் மேலானஅமுத வடிவான
பரம்பொருளை; பசுங்கண்ணின் – குளிர்ந்த கண்களால்; நோக்கினார் –
பார்த்து; உள்ளம் களிக்கின்றார் – மனம் மகிழ்ச்சியடைவாராயினர்.

“கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும், ஒண்டொடி
கண்ணே உள” என்னும்குறளை (குறள். 1101.)
கண்டு கேட்டு உற்றுமோந்து உண்டு உழலும்
ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்……
கண்ட சதிர் கண்டொழிந்தேன், அடைந்தேன் உண் திருவடியே” (திவ்ய.
3328) என்னும்நம்மாழ்வார், பாசுரமும் காண்க

————

முனிவர்கள் இராமனை புகழ்ந்து பாடி ஆடுதல்

எதிர்கொடு ஏத்தினர்; இன்னிசை பாடினர்;
வெதிர்கொள் கோலினர், ஆடினர்; வீரனைக்
கதிர்கொள் தாமரைக் கண்ணனைக் கண்ணினால்,
மதுர வாரி அமுதென, மாந்துவார். 12-

வெதிர் கொள் கோலினர்- மூங்கிலால் ஆகிய தண்டத்தை உடைய
முனிவர்கள்; வீரனை – இராமனை; கதிர் கொள் தாமரைக் கண்ணனை-
ஒளி படைத்த தாமரைக்கண்களை உடையவனை; கண்ணினால் – தங்கள்
கண்களால்; மதுர வாரி அமுது என -இனிய பாற்கடல் தந்த அமுதம்
போல; மாந்துவார் – உண்டு; எதிர் கொடு -வரவேற்று; ஏத்தினர் –
துதித்து; இன் இசை பாடினர் – இனிய இசை பாடி; ஆடினர் -(ஆனந்தக்
களிப்பால்) ஆடினர்.

———

முனிவர்கள் இராமனைத் தம் இருப்பிடம் அழைத்துச் செல்லுதல்

மனையின் நீங்கிய மக்களை வைகலும்
நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார்,
அனையர் வந்துற, ஆண்டு எதிர்ந்தார்கள்போல்,
இனிய மாதவப் பள்ளிகொண்டு எய்தினார். 13-

மனையின் நீங்கிய மக்களை – வீட்டை விட்டுப் பிரிந்து சென்ற
பிள்ளைகளை; வைகலும் – நாள்தோறும்; நினையும் நெஞ்சினர் –
நினைகின்ற நெஞ்சத்தோடு; கண்டிலர் நேடுவார் – காணாது
தேடுகின்றவர்கள்; அனையர் வந்துற -அப்பிள்ளைகள் திரும்பத் தாமே
வந்து சேர; ஆண்டு எதிர்ந்தார்கள் போல் – அங்கே(அப்பிள்ளைகளை)
எதிர்ப்பட்ட பெற்றோர்களைப் போல் (மகிழ்ச்சி கொண்டு); இனியமாதவப்
பள்ளி கொண்டு எய்தினார் – இனிமையான தம்முடைய தவச் சாலைக்கு
(மூவரையும்)அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

———

இராமன் வழி வந்த வருத்தத்தை முனிவர்கள் போக்குதல்

பொழியும் கண்ணீர் புதுப்புனல் ஆட்டினர்;
மொழியும் இன்சொலின், மொய்ம்மலர் சூட்டினர்;
அழிவில் அன்பெனும் ஆரமிழ்து ஊட்டினர்;
வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர். 14-

கண்ணின் பொழியும் புதுப்புனல் ஆட்டினர் – முனிவர் கண்களில்
பொழிகின்ற கண்ணீராகிய புதிய நீரால் ஆட்டி; மொழியும் இன்சொலின்
மொய்ம்மலர் சூட்டினர் -பேசுகின்ற இன்சொல்லாகிய நெருங்கிய
மலர்களைச் சூட்டி; அழிவு இல் – கெடுதல்இல்லாத; அன்பு எனும் ஆர்
அமிர்து ஊட்டினர் – அன்பு எனும் அரிய அமுதத்தைக் உண்ணக்
கொடுத்து; (அம் முனிவர்), வழியில் வந்த வருத்தத்தை – (அம் மூவரும்)
வழிநடையால் உடையராய வருத்தத்தை; வீட்டினர் – இல்லாதபடி
போக்கினர்.

“புனையும் கண்ணி எனதுடைய வாசகம் சொல்மாலையே” என்ற ஆழ்வார்
பாசுரம் ‘இன்சொலின் மொய்ம்மலர்’ என்பதனோடு ஒத்தது.

————–

இராமனை நீராடி அமுது உண்ண முனிவர்கள் வேண்டல்

காயும், கானிற் கிழங்கும், கனிகளும்,
தூய தேடிக் கொணர்ந்தனர்; ‘தோன்றல்! நீ
ஆய கங்கை அரும்புனல் ஆடினை,
தீயை ஒம்பினை, செய்யமுது’ என்றனர். 15-

(அம் முனிவர்கள்), கானில் – காட்டிலிருந்து; காயும் கிழங்கும்
கனிகளும் தூயதேடிக் கொணர்ந்தனர் – காய், கிழங்கு, பழம்
ஆகியவற்றைத் தூயவையாய்த் தேடிக் கொண்டுவந்தவர்களாய்; (இராமனை
நோக்கி) ‘தோன்றல்! – யாவரினும் சிறந்து விளங்குபவனே!; நீ-; ஆய
கங்கை அரும் புனல் ஆடினை – அப்படிப்பட்டகங்கையின் அரிய நீரில்
முழுகியவனாய்; தீயை ஒம்பினை – எரியை வளர்த்து (வழிபாடு)முடித்து;
அமுது செய் – உண்பாயாக;’ என்றனர் – என்று சொன்னார்கள்.

——-

இராமனும் சீதையும் கங்கையில் நீராடுதல்

மங்கையர்க்கு விளக்கன்ன மானையும்,
செங்கை பற்றினன், தேவரும் துன்பு அற,
பங்கயத்து அயன், பண்டு, தன் பாதத்தின்
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான். 16-

மங்கையர்க்கு விளக்கு அன்ன மானையும் – (இராமன்)
பெண்களுக்குத் தீபம்போன்றவளாகிய சீதையையும்; தேவரும் துன்பு அற-
தேவர்களும் துன்பம் நீங்கும்படியாக;செங்கை பற்றினன் – தன் சிவந்த
கைகளாற் பிடித்துக் கொண்டு; பங்கயத்து அயன் -தாமரை மலரில்
வீற்றிருக்கும் பிரம தேவன்; பண்டு – முன்னொருகால்; தன்பாதத்தின் –
திருமாலாகிய தன் திருவடிகளில்; அம் கையின் – பிரமனாகிய தன்கையில்
உண்டாகிய கமண்டல நீரால்; தரும் – உண்டாக்கிய; கங்கையின் -கங்கை
யாற்றில்; ஆடினான் – முழுகினான்.

——

இராமனை கங்கை புகழ்தல்

கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழாப்
‘பன்னி நீக்க அரும் பாதகம், பாருளோர்,
என்னின் நீக்குவர்; யானும், இன்று என் தந்த
உன்னின் நீக்கினென்; உய்ந்தனென் யான்’ என்றாள். 17-

கன்னி நீக்க அருங் கங்கையும் – அழியாத் தன்மை என்றும்
நீங்குதல் இல்லாதகங்கையும்; கைதொழா – கைகளால் (இராமன்)
வணங்கி; ‘பாருளோர் – இப் பூமியில் உள்ளோர்; பன்னி நீக்க அரும்
பாதகம் -சொல்லிப் போக்க முடியாத பாவங்களை; என்னின் – என்
மூலமாக; (முழுகி) நீக்குவர்- போக்கிக் கொள்வார்கள்; யானும் – நானும்;
இன்று – இன்றைக்கு; என்தந்த உன்னின்- என்னைத் தந்த திருமாலாகிய
உன்னால்; நீக்கினென் – (என்பாவங்களைப்) போக்கிக் கொண்டேன்;
யான் உய்ந்தனென்’ – நானும் பிழைத்தேன்;’என்றாள் – என்று
சொன்னாள்.

———–

கங்கையில் மூழ்கும் இராமனின் தோற்றம்

வெம் கண் நாகக் கரத்தினன், வெண்ணிறக்
கங்கை வார்சடைக் கற்றையன், கற்புடை
மங்கை காணநின்றாடுகின்றான், வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான். 18-

வெங் கண் நாகத் கரத்தினன் – கொடிய கண்ணை உடைய
யானையின் துதிக்கை போன்றநீண்ட கைகளை உடையவனான இராமன்;
வெண் நிறக் கங்கை வார் சடைக் கற்றையன் -வெண்மையான
நிறமுடைய கங்கை ஒழுகப் பெறுகின்ற சடைத் தொகுதிகளை உடையவனாய்;
கற்புடைமங்கை காண – கற்பிற் சிறந்த சீதை காணும்படியாக; நின்
ஆடுகின்றான் -(நீரில்) நின்று நீராடுகின்றான்; வகிர்த்திங்கள் – பிளந்த
சந்திரனை; (பிறையை) சூடிய – தலை மேல் சூடிய; செல்வனின் – சிவ
பெருமானைப் போல; தோன்றினான் – தோற்றமளித்தான்.

——-

தள்ளும் நீர்ப்பெருங் கங்கைத் தரங்கத்தால்,
வள்ளி நுண்ணிடை மாமல ராளடும்,
வெள்ளி வெண் நிறப் பாற்கடல், மேலைநாள்
பள்ளி நீங்கிய பான்மையின், தோன்றினான். 19-

தள்ளும் நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தால் – மோதுகின்ற நீரை
உடைய பெரியகங்கையின் அலைகளால்; (அங்கே சீதையோடு முழுகி
எழுகின்ற இராமன்) வள்ளி நுண் இடை மாமலராளொடும் –
கொடி போன்ற நுண்ணிய இடையை உடைய தாமரையில் வீற்றிருக்கும்
திருமகளுடன்; வெள்ளி வெண்நிறப் பாற்கடல் – வெள்ளி போன்ற
வெண்மையான நிறத்தை உடைய பாற்கடலில் மேல்; மேலைநாள் –
முன்னொரு காலத்தில்; பள்ளி நீங்கிய பான்மையில் – அனந்தசயனத்தில்
அறிதுயில் ஒழிந்து எழுந்து நின்ற தன்மை போல; தோன்றினான் –
தோற்றமளித்தான்.

——–

சீதை கங்கையில் நீராடுதல்

வஞ்சி நாண இடைக்கு, மடநடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடியன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயலுகப்
பஞ்சி மெல்லடிப் பாவையும் ஆடினாள். 20-

பஞ்சின் மெல்லடிப் பாவையும்- செம் பஞ்சு போன்ற மென்மையான
பாதங்களை உடையசீதையும்; இடைக்கு வஞ்சி நாண – தன்இடைக்கு
வஞ்சிக் கொடி நாணப்பட்டுத்தோற்றொதுங்க; மடநடைக்கு அன்னம்
அஞ்சி ஒதுங்க – அழகிய தன் நடைக்கு அன்னப் பறவைதோற்றுப்
பயந்து பின்னிட; அடி அன்ன கங்சம் நீரில் ஒளிப்ப – தன் பாதம்
போன்ற தாமரை தோற்றுத் தண்ணீரில் மறைந்துகொள்ள; கயல் உக –
கயல் மீன்கள் (கண்ணுக்குத்தோற்றுக்) கெட; ஆடினாள் – நீராடினாள்.

———-

சீதை நீராடியதால் கங்கை நறுமணம் பெறுதல்

தேவ தேவன் செறிசடைக் கற்றையுள்
கோவை மாலை எருக்கொடு கொன்றையின்
பூவு நாறலள்; பூங்குழல் கூந்தலின்
நாவி நாள்மலர் கங்கையும் நாறினாள். 21-

கங்கையும் – கங்கா தேவியாகிய நதியும்; தேவ தேவன் – சிவ
பிரானது; செறி சடைக் கற்றையுள் – செறிந்த சடைக் கற்றைக்குள்;
(நெடுநாள் இருந்ததனால் உளதான) கோவை மாலை எருக்கொடு –
எருக்கம் பூமாலைச் சரத்தோடு; கொன்றையின்பூவும் – கொன்றை மலர்
மணமும்; நாறலள் – இப்பொழுது வீசப் பெறாதவனாய்; பூங்குழல்
கற்றையின் – (சீதையின்) அழகமைந்த கூந்தல் தொகுதியில் உள்ள; நாவி-
கத்தூரிப் புனுகு எண்ணெய் மணமும்; நாள்மலர் – அன்றலர்ந்த மலர்களின்
மணமும்; நாளினள் – வீசப் பெற்றாள்.

———

கங்கையின் அலைகள் சீதை மீது மோதுதல்

நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி,
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள்,
திரைக்கை நீட்டிச் செவிலியின் ஆட்டினாள். 22-

நுரைக் கொழுந்து எழுந்து ஒங்கி நுடங்கலால் – நுரைகளாகிய
வெண்மையானகொழுந்துகள் நீரின்மேல் ஓங்கி எழுந்து வளைந்து
சூழ்வதால்; நரைத்த கூந்தலின் -நரை பாய்ந்த கூந்தலை உடையாள்
போல உள்ள; நங்கை மந்தாகினி – பெண்ணாகிய கங்கை;உரைத்த –
பாராட்டப் பெறுகின்ற; சீதை – சீதையினது; தனிமையை -பெண்டிர்
துணை இல்லாத தனிமையை; உன்னுவாள் – கருதுபவளாய்; செவிலியின் –
செவிலித் தாய் போல; திரைக் கை நீட்டி – அலைகளாகிய கைகளை
நீட்டி; ஆட்டினாள் – நீராட்டினாள்.

———-

சீதையின் கூந்தல் கங்கை வெள்ளத்தில் தோன்றும் காட்சி

மங்கை வார்குழல் கற்றை மழைக்குலம்,
தங்கு நீரிடைத் தாழ்ந்து குழைப்பன,
கங்கை யாற்றுடன் ஓடும் கரியவள்
பொங்கு நீர்ச்சுழி போவன போன்றதே. 23-

மங்கை வார் குழல் கற்றை மழைக்குலம் – சீதையின் நீண்ட
கூந்தல் தொகுதியாகியமேகக் கூட்டம்; தங்கும் நீரிடைத் தாழ்ந்து
குழைப்பன – அவள் குளிக்கின்றநீரிடத்து உள் தாழ்ந்து சுழலுவன (எது
போலும் எனில்); கங்கையாற்றுடன் ஆடும் கரியவள் -கங்கை
யாற்றுடனே வந்து கலக்கின்ற யமுனா நதியின்; பொங்கு நீர்ச்சுழி –
மேல்எழும்பிய கரிய நீர்ச்சுழிகள்; போவன போன்ற – போகின்ற
தன்மை போலும்.

———

சீதை புனித கங்கையில் மூழ்கி எழுதல்

சுழிபட்டு ஓங்கிய தூங்குஒலி ஆற்றுத்தன்
விழியில் சேலுகள் வானிற வெள்ளத்து,
முழுகித் தோன்றுகின்றாள், முதற் பாற்கடல்
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள். 24-

சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று – சுழிகள் உண்டாகப் பெற்று
மேல் எழும்பிஅசைகின்ற பேரொலி உடைய கங்கை ஆற்றில்; தன்
விழியின்சேல் உகள் – தன்கண்களைப் போல் மீன்கள் துள்ளுகின்ற;
வால் நிற வெள்ளத்து – வெண்மையான நிறமுடையநீர்ப்பெருக்கில்;
முழுகித் தோன்றுகின்றாள் – முழுகி எழும்புகின்ற சீதை; முதல்- ஆதி
நாள்; பாற்கடல் அழுவத்து – பாற்கடற் பெருக்கிலே; அன்று எழுவாள் –
அன்று தோன்றியவளாகிய திருமகள்; எனல் ஆயினாள் – என்று
சொல்லும்படிதோன்றினாள்.

——–

இராமன் நீராடியதால் கங்கையின் மகிமை மிகுதல்

செய்ய தாமரைத் தாள்பண்டு தீண்டலால்,
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள்
ஐயன் மேனி எலாம் அளைந்தாள், இனி,
வையம் மா நரகத்திடை வைகுமோ? 25-

செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால் – சிவந்த செந்தாமரை
போலும்திருமாலின் (இராமனின்) திருவடிகள் பண்டு தொடப்பெறுதலால்;
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் – உலகோரது கொடிய பாவங்களை
எல்லாம் போக்கி விளங்குபவனாகிய கங்கை; (இப்போது இராமனாகிய
திருமால் நீராடலால்) ஐயன் மேனி எல்லாம் அளைந்தாள் -இராமனது
திருமேனி முழுதும் தீண்டப் பெற்றவளாக ஆனாள்; இனி – இனிமேல்;
வையம்- கங்கையில் முழுகும் இவ் உலகம்; மா நரகத்திடை வைகுமே –
கொடிய நரகத்திடத்துத் தங்கமோ (தங்காது).

———

இராமன் கடன் முடித்து முனிவரின் நல்விருந்து உண்ணுதல்

துறை நறும்புனல் ஆடிச் சுருதியோர்
உறையுள் எய்தி, உணர்வு உடையோர் உணர்
இறைவன் கைதொழுது, ஏந்துஎரி ஓம்பிப்பின்
அறிஞர் காதற்கு அமைவிருந்து ஆயினான். 26-

(இராமன்) துறை நறும் புனல் ஆடி – கங்கைத் துறையில் மணம்
வீசும் நீரில்குளித்து; கருதியோர் உறையுள் எய்தி – வேத முனிவரர்
தவச்சாலையை அடைந்து; உணர்வுடையோர் உணர் – ஞானிகளால்
உணரப்படுகின்ற; இறைவனைக் கை தொழுது -பரம்பொருளைக் கை
கூப்பி வணங்கி; ஏந்து எரி ஓம்பி – உயர்ந்துள்ள யாகாக்கினியைவழிபட்டு;
பின் – பிறகு; அறிஞர் – ஞானியராய முனிவரது; காதற்கு -அன்பினுக்கு;
அமை விருந்து ஆயினான் – பொருந்திய விருந்தினனாக ஆனான்-.

இராமனும் பரம்பொருளை வழிபட்டான் என்பது நான்
எடுத்துக்கொண்ட அவதாரத்துக்கு ஏற்ப, தன்னை மனிதனாகவே கருதிப்
பரம்பொருளை வழிபட்டான்

———-

முனிவர் கொடுத்த விருந்தால் இராமன் மகிழ்தல்

வருந்தித் தான் தர வந்த அமுதையும்,
‘அருந்தும் நீர்’ என்று அமரரை, ஊட்டினான்,
விருந்து மெல்லடகு உண்டு விளங்கினான்-
திருந்தினார் வயிற் செய்தன தேயுமோ? 27-

வருந்தி – பாற்கடல் கடைந்து வருத்தமுற்று முயன்று; தான் தர
வந்தஅமுதத்தையும் – தான் கொடுக்க வந்த அமுதத்தையும்; அமரரை-
தேவர்களை; ‘நீர் அருந்தும் – நீங்கள் உண்ணுங்கள்’ என்று; ஊட்டினான்-
(தான் உண்ணாதுஅவர்களை) உண்பித்தவனாகிய இராமன்; விருந்து –
முனிவர் இட்ட விருந்தாக; மெல்அடகு – மென்மையான கீரையை;
உண்டு விளங்கினான் – உண்டான்; திருந்தினார்வயின் செய்தன
தேயுமோ – மனம் செம்மைப்பட்டவர்களிடத்துச் செய்த செயல்கள் உயர்வு
தாழ்வுபற்றிக் குறைபடுமோ? (படாது என்றபடி).

———-

மிகைப் பாடல்கள்

அன்ன காரணத்து ஐயனும், ஆங்கு அவர்
உன்னு பூசனை யாவும் உவந்தபின்,
மின்னு செஞ் சடை மெய்த் தவர் வேண்டிட,
பன்ன சாலையின் பாடு இருந்தான் அரோ. 27-1

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading