ஸ்ரீ ஹேதி புங்கவ ஸ்தவம் –ஸ்ரீ நடாதூர் அம்மாள் -ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்-

ஸ்ரீ நடாதூர் அம்மாள் -பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான், ஸ்ரீ கும்பகோணத்தில் சில காலம் தங்கியிருந்தார்.
அப்போது ஸ்ரீ குடந்தையைச் சேர்ந்த கந்தளன் என்ற வேதியருக்குப் பிசாசு பிடித்து விட்டதாகச் சொல்லி அவரது உறவினர்கள்
ஸ்ரீ நடாதூர் அம்மாளிடம் அழைத்து வந்தார்கள்.
கந்தளனின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த ஸ்ரீ நடாதூர் அம்மாள், அவரது உறவினர்களிடம்,
“இவரைப் பிடித்த பிசாசு எது தெரியுமா? அவர் மனத்தில் தோன்றிய பேராசை என்னும் தீய குணமே!
அந்தப் பேராசை அளவுக்கு மீறிச் சென்ற நிலையில், தன்னிலை மறந்து பித்துப் பிடித்தவர் போல் இவர் செயல்படுகிறார்!” என்று கூறினார்.

“இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?” என்று உறவினர்கள் கேட்க,
“ஸ்ரீ திருமால் கையில் சுதர்சனச் சக்கரமாக அமர்ந்திருக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தான் காலச் சுழற்சிக்கு அதிபதி.
அந்த ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் அருள் இருந்தால், முற்காலத்தில் இவர் எப்படி நல்ல மனநிலையில் இருந்தாரோ,
அதே நிலையை அடையலாம்!” என்று சொன்ன ஸ்ரீ நடாதூர் அம்மாள், ஸ்ரீ குடந்தை ஸ்ரீ சக்ரபாணிப் பெருமாள் கோயிலுக்குக்
கந்தளனை அழைத்துச் சென்றார். ஸ்ரீ சக்ரபாணிப் பெருமாளைக் குறித்து முப்பத்தி இரண்டு வரிகள் கொண்ட
‘ஸ்ரீ ஹேதி புங்கவ ஸ்தவம்’ என்ற துதியை இயற்றினார்.
அந்தத் துதியின் ஒவ்வொரு வரியும் ‘ஜய’ என்ற சொல்லுடன் தொடங்கும் விதமாக அமைத்தார்.

1.ஜய! ஹேதீச! லக்ஷ்மீச பாஹ்வலங்கார பூத! – திருமாலின் கரத்துக்கு ஆபரணமாய்த் திகழும் ஆயுதங்களின் தலைவனே!
2.ஜய! பஞ்சாயுதீமுக்ய! நிர்தக்த காசீபுர! – திருமாலின் ஐந்து ஆயுதங்களுள் முதன்மையானவனே! காசீ நகரத்தை எரித்தவனே!
3.ஜய! விஷ்ணு ஹ்ருத்தத்த்வ ஸஞ்ஜாத சக்ர ஸ்வரூப! – திருமாலின் இதயத்திலிருந்து கனிந்து வந்தவனே!
4.ஜய! விஷ்ணு மூர்த்திஷு ஸர்வாஸு விக்க்யாத சிஹ்ந! – திருமாலின் திருமேனிக்கு அடையாளமாகத் திகழ்பவனே!
5.ஜய! விஷ்ணு தாஸ்ய தாந க்ஷம ஸ்ரீஷடாக்ஷர! – உனது ஆறெழுத்து மந்திரத்தால் அடியவர்களை விஷ்ணுவின் தாஸர்களாக ஆக்குபவனே!
6.ஜய! ஸம்ஸ்பர்ச நிர்தக்த ஸர்வாகவாராம் நிதே! – உனது ஸ்பரிசம் ஏற்பட்ட மாத்திரத்தில் அனைத்துப் பாபங்களையும் போக்குபவனே!
7.ஜய! கர்ப்ப ஸம்ஸ்பர்ச ஜாத காஷ்டாகுமார! – கர்ப்பத்திலிருந்து கரிக்கட்டையாகத் தோன்றிய பரீக்ஷித்தைக் காத்தளித்தவனே!
8.ஜய! விப்ரசித்த்யாஸுரீ கல்பநா கல்ப ஸூர்ய! – ப்ரஹ்லாதனை அச்சுறுத்திய விப்ரசித்தியின் ஜாலத்தைத் தவிடுபொடி ஆக்கியவனே!
9.ஜய! தாபேந யஸ்த்வாம் வஹந் கர்மயோக்ய:! – உன்னைத் தோளில் தரிப்பவர்களுக்கு வைதிகக் கர்மங்கள் செய்யும் அதிகாரத்தைத் தருபவனே!
10.ஜய! ஹரிஸ்த்வாம் ததத் ஸவ்யபாணௌ யுத்தயோக்ய: -உன்னை இடக்கையில் ஏந்துகையில் திருமால் போருக்குத் தயாராகிறார்!
11.ஜய! தேவாச்ச மஸ்தேஷு த்வாம் ததுர்தேவ பூதா:! – தேவர்கள் எந்தச் செயலைத் தொடங்கும் முன்பும் உன்னை வணங்குவர்!
12.ஜய! பாஸா விருந்தன் பாஸாம் பதிம் ராத்ரிமாதா:! – உன் ஒளியால் சூரியனை மறைத்து, இருட்டை உண்டாக்கியவனே!
13.ஜய! ஸர்வைநஸாம் தாரணம் யத்வி சிஹ்நம் தவ! – உனது சின்னம் தோளில் இருந்தால் அனைத்துப் பாபங்களும் தொலையும்!
14.ஜய! க்ருஷ்ணார்ஜுநாபீஷ்ட விப்ரக்ரியா தேஜஸா! – அந்தணனின் மகன்களை மீட்கச் சென்ற கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் வழியில் ஒளி தந்தவனே!
15.ஜய! யஸ்ய மூர்த்திர்பவத் சிஹ்நிதா தஸ்ய முக்தி:! – உனது சின்னத்தைத் தோளில் பொறித்துக் கொண்டவர்கள், மோட்சம் அடைவதற்குத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.
16.ஜய! யே அநங்கிதாஸ்தே பத்யமாநா பாசஹஸ்தை:! – உனது சின்னம் இல்லாதவர்கள் யமனின் பாசக் கயிற்றால் பீடிக்கப்படுகிறார்கள்.
17.ஜய! ஸம்ஸ்கார முக்க்யார்ய பாச்சாத்ய துக்தாபிஷேக! – சங்கசக்ர லாஞ்சனம் நிறைவடைந்த பின் பால் திருமஞ்சனம் கண்டருள்பவனே!
18.ஜய! சங்காஸி கௌமோதகீ சார்ங்க ஸுப்ராத்ருபாவ! – பெருமாளின் மற்ற ஆயுதங்களுடன் சகோதர உறவோடு பழகுபவனே!
19.ஜய! மாலேஸ்ஸுமாலேச்ச நக்ரஸ்ய க்ருத்தாஸ்ய கண்ட! – ராவணனின் பாட்டன்களாகிய மாலி, சுமாலி, கஜேந்திரனைப்
பீடித்த முதலை உள்ளிட்டோரின் கழுத்தைக் கொய்தவனே!
20.ஜய! ரக்ஷோஸுராணாம் தநூபாத்த ரக்தார்த்ர மால! – அசுர-ராட்சசர்களின் ரத்தக்கறை படிந்த மாலையை அணிந்தவனே!
21.ஜய! வித்ராவிதோ த்வேஷக்ருத் பௌண்ட்ரகஸ் தேஜஸா தே!- கண்ணனை வெறுத்த பௌண்ட்ரக வாசுதேவனை அழித்தவனே!
22.ஜய! வித்வேஷிணீ தாஹமாஸாதிதா கோட்டவீ ஸா! – பாணாஸுர யுத்தத்தின் போது இடையூறு செய்த பாணாஸுரனின் தாயான கோட்டவியை அழித்தவனே!
23.ஜய! ஹரிஸ்த்வம்பரீஷம் ஹி ரக்ஷந் பவந்தம் வ்யதாத்! – திருமால் அம்பரீஷனை ரக்ஷிப்பதற்கு உதவி செய்தவனே!
24.ஜய! தூர்வாஸஸம் த்வம் பராஜிக்யிஷே தஸ்ய ஹேதோ! – திருமால் துர்வாஸரை வெற்றி கொள்ளக் காரணமாய் இருந்தவனே!
25.ஜய! வேதாச்ச தைவம் பரம் மந்வதே த்வாம் வஹந்தம்! – உன்னை ஏந்தியவனே பரம்பொருள் என்று வேதங்கள் சொல்கின்றன.
26.ஜய! ஹேதீஷு ஸத்ஸ்வேவ ஹந்தா ரிபூணாம் த்வமேவ! – திருமால் எந்த ஆயுதத்தை எடுத்தாலும் அது நீயாகவே ஆகிறாய்.
27.ஜய! தேவஹேதிசிஹ்நேஷு ஸர்வேஷு முக்யோ பவாந்! – ஆயுதச்சின்னங்கள் அனைத்தினுள்ளும் முதன்மையானது உன்னுடைய சக்கரச் சின்னமே!
28.ஜய! விஷ்ணு பக்தேஷு தாஸ்யப்ரதாநம் த்வயைவாங்கநம்! – உனது சின்னத்தை ஏற்பதால், விஷ்ணுபக்தன் தொண்டு செய்வதற்கான தகுதியைப் பெறுகிறான்!
29.ஜய! லீலாவிஹாரே சோத்ஸவே சரஸ்யக்ரணீஸ்த்வம்! – திருமாலின் உற்சவங்களிலெல்லாம் முன்னே செல்பவன் நீயன்றோ?
30.ஜய! தைவாஸுரே ஸங்கரே ரக்தபுக் நிர்பயஸ்த்வம்! – தேவாசுர யுத்தத்தில் பயமின்றிப் போரிட்டுத் தீய சக்திகளின் ரத்தத்தைப் பருகுபவனே!
31.ஜய! தர்சயாத்மபாஸா விரோதீந்யகாநி த்வம் நுத – உன்னை வணங்குபவர்களின் விரோதிகளான பாபங்கள் அனைத்தையும் போக்குபவனே!
32.ஜய! தேஹி விஷ்ணுலோகம் ஏவம் விதே பக்திஹீநே!

பக்தியில்லாத அடியேனுக்கும் ஸ்ரீ விஷ்ணு லோகத்தை அருள்வாயாக! உனக்கு ஜெயம் உண்டாகட்டும்!
“ஸ்ரீ ஸுதர்சன ஸ்தோத்ரம் இதம் வரதார்யேண நிர்மிதம்
படந் ஸித்யதி வை ஸத்யோ ந பயம் தஸ்ய ஹி க்வசித் ”
இந்தத் துதியைப் படிப்பவர்களுக்கு ஸ்ரீ சக்ரபாணிப் பெருமாள் அருளால், அனைத்து வெற்றிகளும் உண்டாகும்.
அவர்களின் அனைத்து பயங்களும் விலகும்.

(வரலாற்றில், ஸ்ரீ சக்கரத்தாழ்வாரைக் குறித்து எழுந்த முதல் ஸ்தோத்திரம் இதுவே என்பது குறிப்பிடத் தக்கது.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தனிக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ குடந்தையில் இத்துதி தோன்றியது. 32 முறை ‘ஜய’ என்ற சொல்
இடம் பெற்றுள்ள இந்தத் துதியைச் சொல்லும் அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்து ஜயங்களும் உண்டாகும்.)

இத்துதியை ஸ்ரீ நடாதூர் அம்மாள் நிறைவு செய்த போது, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் எதிர்த்திசையில் சுற்றினார்.
அவரது சுழற்சிக்கேற்றபடி காலம் இயங்குவதால், அவர் நேர்த் திசையில் சுற்றினால் காலம் முன் நோக்கியும்,
எதிர்த்திசையில் சுற்றினால் காலம் பின் நோக்கியும் செல்லும். இப்போது அவர் எதிர்த்திசையில் சுற்றியதால்,
கடந்த காலத்தில் இருந்த நல்ல மனநிலையை அடைந்தார் கந்தளன்.
அவரைப் பிடித்த பேராசை என்னும் பிசாசு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.

இவ்வாறு காலத்தை நிர்வகிக்கும் காலச் சக்கரமாகிய ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பதால்,
ஸ்ரீ திருமால் ‘அஹஸ் ஸம்வர்த்தக:’ என்றழைக்கப்படுகிறார்.
‘அஹ:’ என்பதற்கு நாள் என்று பொருள். ‘ஸம்வர்த்தக:’ என்றால் சுழற்றுபவர் என்று பொருள்.
நாட்களைச் சுழற்றுவதால், அதாவது காலச் சுழற்சியை உண்டாக்குவதால், ஸ்ரீ திருமாலுக்கு ‘அஹஸ் ஸம்வர்த்தக:’ என்று திருநாமம்.
அதுவே ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்தின் 234-வது திருநாமம்.
வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் அமைய விரும்புவோர் “அஹஸ் ஸம்வர்த்தகாய நமஹ” என்ற இத் திருநாமத்தைத் தினமும் சொல்லலாம்.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ ஹேதி புங்கவ – ஸ்ரீ ஹேதி ராஜ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

One Response to “ஸ்ரீ ஹேதி புங்கவ ஸ்தவம் –ஸ்ரீ நடாதூர் அம்மாள் -ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்-”

  1. T Rathinavel RATHINAVEL Says:

    Very I formative.Thanks for sharing

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading