ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
ஐஸ்வர்யாதி பர தேவதா பர்யந்தமான அபேஷித வஸ்துக்கள் எல்லாம் ஸ்ரீ திருவாய் மொழியே –என்று
ஜகத் பிரசித்தமாக நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் -என்கிறார் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
ஐ ஹிக ஆமுஷ்மிக சமஸ்த சம்பத்தும் -சர்வவித பந்துக்களும் -வகுத்த சேஷியான ஸ்ரீயபதியும் –
ஸ்ரீ நம் ஆழ்வார் -தமக்கு பகவத் நிர்துஹேதுக கிருபையாலே பிரகாசியா நின்று உள்ள அர்த்த விசேஷங்களை-
அடைவே அருளிச் செய்த ஸ்ரீ த்ரமிட உபநிஷத்தே என்று சகல ஜனங்களுக்கும் உபதேசிக்கிற
ஸ்ரீ எம்பெருமானார்-எனக்கு நிரதிசய போக்யர் – என்கிறார்-
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–
ஸ்ரீ திருவாய் மொழியே சொத்தும் -தந்தையும் -தாயும்-குருவும் -ஸ்ரீயபதியான பர தேவதையுமாக-உலகில் பிரசித்தமாகும் படி
நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு மிகவும் இனியர் -என்கிறார்-
இது காறும்-ஸ்ரீ ஆழ்வார்கள் இடம் ஸ்ரீ எம்பெருமானாருக்கு உள்ள ஈடுபாடு கூறப்பட்டது –
இதனில் ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய ஸ்ரீ திருவாய் மொழியையே உலகினர்க்கு இன்றியமையாத சொத்தும்
மாதா பிதா குரு தெய்வமுமாகக் கொள்ளுமாறு அதன் பெருமையை உணர்த்திப் பரப்பிய பேருபகாரம் பேசப்படுகிறது –
ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ திருவாய் மொழியை தமது அனுபவ முறையில் அருளிச் செய்தார் –
ஸ்ரீ எம்பெருமானார் அதன் மாண்பினை உலகில் உள்ள மாந்தர் அனைவரும் உணர்ந்து
மாந்தி மகிழும்படி செய்து சிரஞ்சீவியாக அதனை வளர்த்து அருளினார் என்பது கருத்து-
ஈன்ற முதல்த் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் -என்றனர் ஆன்றோரும் –
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-
உறு பெரும் செல்வமும் -சீரிய பெரிய சொத்தும்
தந்தையும் -பிதாவும்
தாயும் -மாதாவும்
உயர்குருவும் -மேன்மை தங்கிய ஆசார்யனும்
வெறி தரு -மனம் கமழுகிற
பூ மகள் -பூவில் பிறந்த பெரிய ப்ராட்டியாருடைய
நாதனும் -கேள்வனாகிய தெய்வமும்
மாறன்-நம் ஆழ்வார் உடைய
விளங்கிய -வெளிப்பட்டு தோன்றிய
சீர் -இயல்பான பர பக்தி முதலிய குணங்களினுடைய
நெறி -அடைவிலே
தரும்-அருளி செய்யும்
செம் தமிழ் ஆரணமே -செவ்விய தமிழ் வேதமாகிய திருவாய் மொழியே என்று
இம் நீள் நிலத்தோர் -இந்த நீண்ட உலகத்தவர்
அறிதர -தெரிந்து கொள்ளும்படியாக
நின்ற -பிரசித்தமாகும்படி எழுந்து அருளி இருந்த
இராமானுசன் -எம்பெருமானார்
எனக்கு ஆர் அமுது -எனக்கு அருமையான அமுதம் போன்று இனியராவார் –
ஸ்வ சம்பந்தத்தை வுடையவர்களுக்கு இன்னார் என்னும் மதிப்பை கொடுக்குமதாய்
ஹித பரமுமாய் -ப்ரியகரமுமாய் -அஞ்ஞாத ஜ்ஞாபகமுமாய் -பிராப்ய ப்ராபகங்களுமாய்- இருக்கையாலே –
சீரியதாய் -நிரவதிகமான சம்பத்தும் -பிதாவும் -மாதாவும் -சதாசார்யனும் –
பரிமளிதமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரனும் –
ஸ்ரீ ஆழ்வார் பகவத் ப்ரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த -பரபக்தி -யாதி – ச்வபாவங்களின் உடைய அடைவிலே –
உபகரித்து அருளின -திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழியே
என்று இம் மகா ப்ருதிவியில் உள்ளார் அறியும்படி நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் –
அதவா
விளங்கிய சீர் நெறி தரும் என்றது -சீர்த் தொடை யாயிரம் -திருவாய் மொழி -1 2-11 – –
என்னும்படி தமக்கு பிரகாசித்த பகவத் குணங்களை அடைவே உபகரித்து அருளின -என்னவுமாம் –
மாறனுக்கு விளங்கிய –
மயர்வற மதிநலம் அருளப் பட்டவர் என்றபடி –
வேதார்த்தம் -திருவாய் மொழி -தீர்த்த சரணாகதி -நித்ய சிந்தயந்தி -அன்றோ இவர் –
வெறி தரு பூ -பூ மகள் -நாதன் –
பரிமளம் வடிவு -திருத் துழாய் தரித்த நாதன் என்றுமாம் –
நெறி தரும் –
சாத்விக்க சாத்விக்க –
தரும் செந்தமிழ் ஆரணம் -அறிதர நின்ற –
அனைவரும் அறிந்த பின்பு தரித்த ஸ்ரீ ராமானுஜர்-12–பாசுரங்களால் -12-ஆழ்வார் சம்பந்தம் சொல்லி -இந்த பிரகரணம் முடிகிறது –
உறு துணை -என்றவர் –ப்ரீதி காரித கைங்கர்யம் பெற திருவாய்மொழி நிலை நிற்க ஸ்ரீ எம்பெருமானார் திருவடி சேர்வோம் என்றதாயிற்று என்றுமாம் –
கீழே தண் தமிழ் செய்த நீலன் என்று
பெரிய திருமொழி முதலான திவ்ய பிரபந்தங்கள் சம்பந்தம் சொல்லி
இதில் -செம் தமிழ் ஆரணம் -இவையே ஆரமுது-ஸ்வாமிக்கும் நமக்கும் –
உறு -உயர் -விசேஷணம் அனைவருக்கும் -அவனுக்கு இவற்றையே பூ மகள் -ஸ்தானத்தில் சொல்லி ஸ்ரீ யபதி என்றவாறு
உறு பெரும் செல்வமும்
அவிந்தந தனஞ்சய பிரசமதம் தனம் தந்தனம் -என்கிறபடியே அப்ராப்தமான சம்பத் அன்றிக்கே –
தனஞ்சய விவர்த்தனம் தனமுதூட கோவர்த்தனம் சூசாத நம பாதநம்-சூ மனசா சமாராதனம் -என்றும் –
ஸாஹி ஸ்ரீர்ம்ர்தாசதாம் -என்றும் -முக்த ஐச்வர்யத்துக்கு உடல் ஆகையாலே –ப்ராப்தமாய் –
பெரும் –
ஷீணே புன்யே மர்த்த்ய லோகாம் விசந்தி -என்றும் –
ஒரு நாயகம் ஓட வுலகு உடன் ஆண்டவர்-கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண
இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் -என்றும்-சொல்லுகிறபடியே அதி ஸ்வல்பமாய் -அநித்யமாய்-இருக்கை அன்றிக்கே –
கொள்ளக் குறைவற்று இலங்கி – கொழுந்து விட்டோங்கிய -என்கிறபடியே – கொள்ளக் கொள்ள பெருகி வரக் கடவதாய் இருக்கிற –
செல்வமும் –
சம்பத்தும் -அளவியன்ற யந்தாதி யாயிரம் இறே -இது –
உறு பெரும் செல்வமும்
உலகில் வாழ்வதற்கு இன்றியமையாதது செல்வம்-
அது இல்லாத போது தந்தை தாய் குரு தெய்வம் என்று மேல் சொல்லுமவை யனைத்தும் இருந்தாலும் பயன்படாது –
இல்லாதவை போல் ஆகி விடுதலின் செல்வத்தை முந்துற கூறுகிறார் –
இழிகுலப் பிறப்பானும்-அறிவின்மையானும் -இன்னார் என்று ஒரு பொருளாக மதிக்கபடாத வரையும் -மதிக்கப் படுபவராக
செய்ய வல்லது செல்வம் –
உயர் குலத்தாரும் –அறிவுடையாரும் -குலமும் -அறிவும் இல்லாவிடினும் -செல்வம் படைத்தது இருப்பதை ஒன்றினையே கருதி –
அவர் பால் சென்று -அவர் அருள் நாடி நிற்பதை நாம் உலகினில் காண்கிறோம் –
இதனையே வள்ளுவனாரும் –
பொருள் அல்லாதவரை பொருளாகச் செய்யும் பொருள் அல்லது இல்லை பொருள் -என்கிறார் –
திருவாய் மொழியும் தன்னைக் கற்றவரை –
உயர் குலமும் அறிவுடைமையும் இல்லாது இருப்பினும் –
அறியக் கற்று -வல்லார் வைட்ணவர்-என்றபடி –
ஞான ஜென்மத்தை தந்து -வைஷ்ணவராக மதிக்கப்பட செய்து -உயர் குலத்தாரையும் -அறிவுடையாரையும் –
அவர் பால் சென்று அருளை-பாகவத அனுக்ரகத்தை-நாடி நிற்கச் செய்தலின் செல்வமாகப் போற்றப் படுகின்றது -என்க-
ஏனைய செல்வம் போலே அளவுக்கு உட்படாது வாரி வாரி வழங்கத் துய்க்கத் துய்க்கத் குறைவு படாதது
இத் திருவாய்மொழியாம் செல்வம் என்பது தோன்ற –பெரும் செல்வம்-என்கிறார் –
ஏனைய செல்வம் -அறனீனும் இன்பமுமீனும் -இச் செல்வமோ வீட்டு இன்பத்தையும் தருதலின் அதனினும்
மிக்கது என்பது தோன்ற –உறு பெரும் செல்வம் -என்றார்-
அந்தணர் செல்வம் வட மொழி யாரணம் –அந்தணர் மாடு -என்றார் திரு மங்கை மன்னன் –
தந்தையும் தாயும் –
மாதா பித்ர் சஹஸ்ரேப்யோ-வஸ்தலதரம் சாஸ்திரம் -என்று -சகல ஜன உஜ்ஜீவன ப்ரவர்த்தமாய் இறே –
வேதத்வ சாமான்ய விசிஷ்ட வேதம் எல்லாரும் விரும்புவது –
அப்படியே -திராவிட வேத சாகரம் -என்று இத்தை வேதமாக நிதர்சிக்கையாலே –
சகல ஜன உஜ்ஜீவன ஏக ப்ரவர்த்தம் ஆகையாலும் –
பக்தாம்ர்தம் விஸ்வ ஜன அநு மோதனம் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் சொல்லுகிறபடியே
பிரியத்தையே நடத்தக் கடவதாகையாலும் -திரு வாய் மொழியிலே –
வீடு முன் முற்றவும் -என்று தொடங்கி -கண்ணன் கழலினை –என்னும் அளவும் ஆதி அந்தத்திலே
ஹிதத்தையே போதிக்கையாலே ஹிதத்தை நடத்தக் கடவதாகையாலும்
தாயும் தந்தையுமாய் இருக்கும் என்றபடி –
செம் தமிழ் ஆரணம் -நீள் நிலத்தோர் அனைவருடையவும் செல்வம் .தந்தையும் ..பூ மகள் நாதனும் —
ஹிததை நாடும் பிதாவும் -பிரியத்தை கோரும் மாதாவும் -அறியாதன அறிவிக்கும் குருவும் –
பேறும் பெருவிப்பதும் ஆகிய தெய்வமும் -திருவாய் மொழியே -என்றபடி –
மாதா பிதா குரு தெய்வம் எனும் முறையை மாற்றி -பிதாவுக்கு முதலிடம் கொடுக்கப் பட்டு உள்ளது –
இதத்தால் ஹிதத்தை உணர்த்துதலே செம் தமிழ் ஆரணத்துக்கு முக்கிய நோக்கம் ஆகும் என்று தோற்றுகிறது –
அசேஷ ஜகத்தித அனுசாசன ச்ருதி நிகரசிர-என்று உலகு அனைத்துக்கும் ஹிதத்தை கற்ப்பிக்கும் வேதாந்தம் –
என்று வேதார்த்த சந்க்ரஹத்தில் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளி உள்ளமையும் காண்க –
ஹிதத்தை கற்ப்பிதலாவது –
உபாயத்தையும் -உபேயத்தையும் -பகுத்து உணர்த்துதல் –
பேற்றுக்கு உரிய நல் வழியே ஹிதம் என்க –
திரு நாரணன் தாள் சிந்தித்தல் உய்ய உபாயம் என்று ஹிதத்தை உணர்த்துதலின் செம் தமிழ் ஆரணம்
தந்தையாய் ஆயிற்று என்று உணர்க –
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் -என்றபடி பக்தாம்ருதமாய் -இனிமை பயப்பது பற்றி
செம் தமிழ் ஆரணம் இனிப்பு தரும் தாய் ஆயிற்று என்க –
தந்தையும் தாயும் –
மாதா பித்ரு சஹஸ்ரேப்யோ வத்சலதரம் ஹி சாஸ்திரம் –
ஆயிரம் தாய் தந்தையிரினும் மிக்க வாத்சல்யம் கொண்டதன்றோ சாஸ்திரம் -என்றபடி –
மக்கள் இடம் உள்ள குறை பாராது தான் கண்ட நல்லதை சொல்லியே
தீர்த்து திருத்தி உய்வித்தலின் செம் தமிழ் ஆரணம் தந்தையும் தாயும் ஆயிற்று -என்க
உயர் குருவும் –
புத்ரான் பந்தூன் சகீன் குருன் -சர்வ தர்மாம்ச சம் த்யஜ்ய – என்று த்யாஜ்ய கோடியிலே பரி கணிக்கப்பட்ட -குரு அன்றிக்கே –
அத்ர பரத்ர சாபி – என்கிறபடியே உபய விபூதியிலும் இச் சேதனனுக்கு உபாதேய தமனாய் –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -அஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணின சதாசார்யனும் –
இவ் உபகார ஆதிக்யத்தாலே காணும் இவன் பரித்யாஜ்யனாகாதே ஒழிந்தது –
உயர்த்தியை உடையனானதும் – சேதனருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்த்திப்பவன் ஆகையாலே குரு -என்கிறார் –
அந்தகார நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே -என்னக் கடவது இறே –
உயர் குருவும் –
கீழ்ப் பேரின்பம் தரும் செல்வம் ஆதலின் ஏனைய செல்வத்திலும் வேறு பட்டது என்பது தோன்ற –
உறு பெறும் செல்வம் -என்று விசேடித்தது போலே –
இங்கும் பேரின்பத்துக்கு இடையூறாய் நிற்கும் அவித்யை என்னும் இருளை விலக்குதலின் –
ஏனைய குருக்களினின்றும் வேறு பட்டவர் என்பது தோன்ற உயர் குரு -என்று விசேடிக்கிறார்-
ஏனைய குருக்கள் வீட்டு இன்பம் விழைவோருக்கு விடத் தக்கவர்களாய் அன்றோ இருப்பது –
இங்கு கூறப் படும் குருவோ -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவன் என்று அறிக –
தானே தன்னை யறியகிலாது-யானே என் தனதே – என்கிற அஹங்கார மமகாரங்கள் என்னும் செருக்கு உடையானுக்கு –
உடல் மிசை உயிர் என இறைவன் உன்னை உடலாக கொண்டு உள்ளமையின்
உன் ஆத்ம ஸ்வரூபம் ஆகிய உடலை அந்த உயிர் தனக்கேயாக பயன்படுத்துவதே முறை-
உயிர் தன் விருப்பபடி உடலை பயன்படுத்த -அவ் உயிருக்கு அத்தகைய உடல் தனக்கொரு பயன் கருதாது
பயன்பட்டு மகிழ்ச்சியை ஊட்டுவது போலே நீயும் இறைவன் விருப்பபடி பயன்படுத்தப்பட்டு –
தனக்கு ஒரு பயன் கருதாது -அவ் இறைவனுக்கு மகிச்சியை ஊட்டுதல் வேண்டும் –
இதுவே அடிமை எனப்படுவது -இத்தகைய அடிமையே ஆத்மா ஸ்வரூபத்தின் உண்மை நிலையம் -என்று
முன்னம் முன்னம் மறந்த ஆத்மாவினுடைய-அனந்யார்ஹ சேஷத்வத்தை உணர்த்துதலின்
திருவாய் மொழி -உயர் குருவாய் ஆயிற்று என்க –
இனி தாய் தந்தை யரினும் தெய்வத்தினும் உயர்வுடைமை பற்றி –உயர் குரு -என்றார் என்னலுமாம் –
தாய் தந்தையர் சரீரத்தையே உண்டு பண்ணுகின்றனர் –
குருவோ வித்தையினால் ஆத்ம ஸ்வரூபத்தையே உண்டு பண்ணுகிறான் – என்றபடி –
ஆத்மாவுக்கு ஞானப் பிறப்பை தரும் குரு -சரீரப் பிறப்பை தரும் தாய் தந்தை யரினும் உயர்ந்தவன் ஆகிறான் –
தெய்வம் தான் அருள் புரிவதற்கு குரு அருளை எதிர் பார்ப்பது –
உயிர் இனங்கள் புரியும் வினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகளை விளைவித்து கருணை காட்டாது சட்டப் படி நடாத்துவது –
மிக்க மாறுபாடு உடையவர்களை தீ வினை புரிவித்து அவர்களை அதோ கதிக்கு உள்ளாக்குவது –
குருவோ அருள் புரிவதற்கு தெய்வத்தின் அருளை எதிர் பார்ப்பவன் அல்லன் –
வினைகளுக்கு ஏற்ப சட்டப்படி நடாத்தாது நன்மையே பயக்கும் -கருணை காட்டி நடாத்துபவன் –
எவரையும் அதோகதிக்கு உள்ளாக்காது நல் வினையே புரிவித்து மேலே கை தூக்கி விடுபவன் –
இத்தகைய வகைகளில் தெய்வத்தினும் உயர்ந்தவன் குரு என்க –
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப் பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே––ஸ்ரீ திருவாய் மொழி–2-3-2-
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம் முள்ளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே–3-6-9-
வெறி தரு பூ மகள் நாதனும்
வெறி -பரிமளம் -இந்த பதம் புஷ்பத்துக்கு விசேஷணமாய்-பரிமளமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடையளான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு –
பூ மகளார் தனிக் கேள்வன் -என்கிறபடியே வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்றபடி –
அன்றிக்கே –
வெறி தரு பூ மகள் -வெறி –என்கிற பதம் பிராட்டிக்கு விசேஷணமாய் -கந்தத்வாரம் – என்கிறபடியே –
திவ்ய கந்த பிரதமான திரு மேனியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்னவுமாம் –
அன்றிக்கே –
வெறி தரு பூ மகள் நாதனும் –
வெறி –என்கிற பதம் ஸ்ரீ ஈஸ்வரனுக்கு விசேஷணமாய் –
சர்வ கந்த -என்கிறபடியே -திவ்ய பரிமள ஸ்வரூபனான ஸ்ரீ யபதி என்றும் சொல்லவுமாம் –
வெறி தரு பூ மகள் நாதனும்
தெய்வம் என்பது திருமாலே யாதலின் பூ மகள் நாதன் என்கிறார் –
திருமங்கை நின்று அருளும் தெய்வம் -இரண்டாம் திருவந்தாதி -57 – என்றதும் காண்க –
மணம் தரும் பூ –திருமகளையும் தந்தது -மணமே வடிவு கொண்டு வந்தது போலே -மலரிலே தோன்றினவள் பிராட்டி -என்க –
திரு மகள் கேள்வன் -நமக்குப் பிராட்டி புருஷகாரமாய் இருத்தலின் உபாயமாய்ப் பேறு தருவான் ஆகிறான் –
பிராட்டியோடு கூடி இருந்து நாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்பதனால் ப்ராப்யனாகவும்-பெறும் பேறாகவும் -ஆகிறான்
திருவாய் மொழியும் -இவை பத்தும் வீடே – 1-1 11- – என்றபடி வீடு அளிப்பதாலின் உபாயமாகவும் –
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே –10 6-11 – -என்றபடி வீட்டில் உள்ளாறும்
கேட்டு இன்புறும்படி இருத்தலின் ப்ராப்யமாகவும் ஆதலின் -பூ மகள் நாதன் -ஆயிற்று –
திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூம் குழலாள்
பூவினும் மேவிய தேவி மணாளனை
தூ மலராள் மணவாளா-
இனி உறு பெறும் செல்வம் என்று தொடங்கி யதற்கு ஏற்ப –உயர் குரு -என்றது போலே –
உயர் தந்தை –உயர் தாய் –உயர் நாதன் -என்று ஏனையவற்றையும் உயர்ந்தவைகளாக கருதலுமாம் –
ஏனைய தந்தையும் தாயும் போல் அல்லாமல் –தஞ்சமாகிய தந்தையும் தாயுமாகத் திருவாய் மொழி உள்ளது என்றது ஆயிற்று –
ஏனைய தாய் தந்தையர் இடர் நேர்ந்த போது விட்டுச் செல்வாரும் –
விற்றுப் பிழைப்பாரும் கர்மம் தீர்ந்தவாறே -பந்தம் அற்றாருமாய் இருப்பார்கள் அன்றோ –
திருவாய் மொழி அங்கன் அன்றி -எக்காலத்திலும் ஞானப் பாலூட்டி -ஹிதமான நெறியிலே
செலுத்திப் பாதுகாத்தலின் தஞ்சமாகிய தந்தையும் தாயுமாய் ஆயிற்று -என்க –
மலை மகள் நாதன் போன்ற ஏனைய இளம் தெய்வங்கள் பாணாசுரன் போன்றாரைக் காக்கும் திறன் அற்று நின்றன –
அங்கனம் அல்லால் தப்பாது –காப்பாற்றும் பெறும் தெய்வம் பூ மகள் நாதன் -ஆயிற்று என்க —
இவ் அபிநிவேசம் எல்லாம் இவருக்கு எவ் விஷயத்தை பற்ற -என்றால்
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று –
மாறன் –
ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய -பிதாவான காரியாலே சமர்ப்பிக்கப் பட்ட திரு நாமம் ஆய்த்து -இது –
இப்படிப் பட்ட ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு -விளங்கிய -பிரகாசித்த -ஸ்ரீ சர்வேஸ்வரன் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலே
உபய விபூதி வ்ருத்தாந்தகளை எல்லாம் -அடைவே அறியலாம்படி -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற – ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு –
ஏவம் நித்யாத்ம பூகாதாஸ் சடகோப ப்ரனேஷ்யதி – என்கிறபடி நித்ய அபௌருஷேயமாய் இருக்கிற இது –
அவர் தம்மாலே உண்டாக்கப் பட்டது அன்று –தோற்றும் -பிரகாசித்தது -என்றபடி –
ஆகையாலே இறே விளங்கிய –என்று அருளிச் செய்கிறார் .
சீர் நெறி தரும் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ஸ்ரீ யை எல்லாம் -எல்லாரும்-அறியும் படி – சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்குமதாய் –
நெறி -ஒழுக்கம்-அதாகிறது சாத்மிக்க -என்றபடி –
அன்றிக்கே –
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் –
ஸ்ரீ ஆழ்வார் பகவத் பிரசாதத்தாலே தமக்குபிரகாசித்த பர பக்தியாதி ச்வபாவங்களின் உடைய அடைவிலே
உபகரித்து அருளின என்று யோஜிக்க்கவுமாம் –
அங்கன் அன்றிக்கே –
சீர் நெறி தரும் –
அகஸ்த்யோ பகவான் சாஷாத் தஸ்ய வியாகரணம் வ்யதாத் சந்தஸ் சாஸ்திர அநு சாரனே வ்ர்த்தானா அபி லஷணம்-
உக்த மந்யைஸ் சதாசார்யை த்ராமிடச்ய மகாமுனே சம்ச்கர்தச்ய யதாசந்தி பாட்யபந்த ச்ய சர்வத –
லஷணா நிதாதே -சாந்தி திராமிட ஸ்யாபி பூதலே -என்கையாலே
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை நிரை பா -என்று சொல்லப் படுகிற பிரபந்த லஷண பேதமாய் இருக்கும் என்னவுமாம் –
சீர் -என்கிற இது –
எழுத்து அசை தொடக்கமானவற்றுக்கு உப லஷணமாக கடவது –
நெறி –
ஒழுக்கம் அதாவத் ஸ்வபாவமாய்-லஷணம் -என்றபடி –
தருகை –
உடைத்தாகை –
செந்தமிழ் ஆரணமே என்று –
ஆதி மத்திய அவசானங்களிலே ஏக ரூபமாய் திராவிட பாஷா ரூபமான உபநிஷத்தே -என்று -அவதாரணத்தாலே –
அனநயோக வியவச்சேதம் பண்ணுகிறது -இது காணும் ஸ்ரீ எம்பெருமானாருடைய பிரதி பத்தி
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணம் –
சீர்-பரபக்தி -பர ஞான -பரம பக்திகள் -என்னும் நல் இயல்புகள் மறைந்து கிடந்த அவை இறைவன் அருளால்
நம் ஆழ்வாருக்கு வெளிப்பட்டன –
அவை தமக்கு அங்கன் வெளிப்படும் அடைவிலே அவர் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் –
பரபக்தி யாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடல் மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு –
பர ஞானம் ஆவது -அத்தகைய அன்பு முதிர்ந்த நிலையில் ஏற்படும் நேரிடையான தோற்றம் –
பரம பக்தி யாவது ஷண காலமும் பிரிவை சஹிக்க மாட்டாது அனுபவித்தே யாக வேண்டிய பேரன்பு –
ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு சூழ் விசும்பு -திருவாய் மொழி வரையிலும் பர பக்தியும் –
சூழ் விசும்பு அணி முகில் -லில் பர ஞானமும்
முனியே நான் முகனில் பரம பக்தியும் ஸ்ரீ இறைவன் அருளால் விளங்கியதாக பெரியோர் விளம்புகின்ற்றனர் –
இனி சீர்த் தொடை யாயிரம் -என்றபடி
இறைவன் குணங்கள் அவன் அருளால் விளங்க அவ்வடைவில் நம் ஆழ்வார் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் என்னலுமாம் –
எம்பெருமானார்
தமக்கு ஐஸ்வர்யாதி பரதேவதா பர்யந்தமான புருஷார்த்தங்கள் எல்லாம் திரு வாய் மொழியே அன்றி
வேறு ஒன்றை அத்யவசித்து இரார் -என்றபடி –
இந் நீணிலத்தோர் அறிதர நின்ற –
இவ் அர்த்தத்தை விச்தீர்னையான இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின –
அன்றிக்கே –
இவ் அர்த்தத்தை மகா பிருத்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின -என்னவுமாம் –
ஏதத் வ்ரதம் மம – என்கிறபடியே பக்த கங்கணராய் இருக்கிற என்றபடி –
இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –
எனக்கு ஆரமுதே –
அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் -என்றபடி –
நீள் நிலத்தோர் அறிதர நின்ற –
கற்றவர் மற்றவர் என்கிற வேறுபாடு இன்றி உலகம் எங்கும் உள்ள மக்கள் அனைவரும்
செல்வம் தொடங்கி-தெய்வம் ஈறாக நமக்கு பயன்படுவது திருவாய் மொழியே -என்று உணர்ந்து –
கொள்ளும்படி ஸ்ரீ எம்பெருமானார் செம் தமிழ் ஆரணத்தை பரப்பி பேணினார் -என்றபடி –
எனக்கு ஆரமுது –
செம் தமிழ் ஆரணத்தின் இனிமையை நுகர்ந்து நுகர்ந்து தொண்டர்க்கு அமுதான –
அதனால் உயிர் பெற்ற ஸ்ரீ அமுதனார் –
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே -என்றபடி -அவ்வமுது உணவினை தமக்குத் தந்த ஸ்ரீ எம்பெருமானார்
திறத்து பேரன்பு பெருகி -அவ்வின்பத்திலே திளைத்து – அவரையே அருமையான அமுதாகக் கூறுகிறார் -என்க-
ஆரமுது –
அருமையான அமுது .
எப்பொருளும் தானாய், மரதகக் குன்றம் ஒக்கும்;
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம்; கை கமலம்;
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கும் அப்பொழுது என் ஆரா அமுதமே–-ஸ்ரீ திருவாய் மொழி–2-5-4-
இதுகாறும் ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ ஆழ்வார்கள் இடத்திலும் அவர்களுடைய திவ்ய பிரபந்தங்களிலும் உள்ள ஈடுபாடு கூறப் பட்டது –
ஸ்ரீ நம் ஆழ்வார் இடமும் திரு மங்கை ஆழ்வார் இடம் உள்ள ஈடுபாடு
தொடக்கத்திலேயே முதல் இரண்டு பாசுரங்களினால் பேசப் பட்டு இருந்தாலும் -அவர்களுடைய ப்ராதான்யம் கருதி –
இறுதியில் ஸ்ரீ நாத முனியை பேசத் தொடங்கும் முன் அவர்களைப் பற்றி பேசினார் –
அவர்களிலும் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரைப் பற்றி ஒரு பாசுரமும் -ஸ்ரீ நம் ஆழ்வாரைப் பற்றி இரண்டு பாசுரங்களும் அருளிச் செய்தார் –
ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு உள்ள மிக முக்கிய தன்மையை நோக்கி அவரை இறுதியிலே பேசினார் –
அவ்விரு பாசுரங்களில் முறையே –
ஸ்ரீ நம் ஆழ்வாரை அன்றி வேறு ஓன்று அறியாத மதுர கவி ஆழ்வார் உடைய வீறுடைமையும் –
பரபக்தி முதலியவற்றின் அடைவிலே அருளிச் செய்த திருவாய் மொழியினுடைய சீர்மையையும் அருளிச் செய்து முடித்தார் –
ஆயின் ஸ்ரீ ஆழ்வார்களின் அவதார க்ரமத்தை அடி யொற்றி அமுதனார் இங்கு அருளிச் செய்து இலர் –
எந்த முறையை அடி யொற்றி ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்து உள்ளார் எனபது நமக்கு இங்குப் புலப்பட வில்லை-
ஆயினும் ஒருவாறு வரிசைப் படுத்திக் கூறுகிறோம் –
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் முதலில் வரிசையாகப் பேசப் பட்டு உள்ளனர் –
விளக்கு ஏற்றிய இருவரும் முதலிலும் -கண்டு நமக்கு காட்டியவர் பிறகும் பேசப்பட்டு உள்ளனர் –
தாம் இருக்கும் இடத்தில் வந்து இறைவனால் காட்ஷி கொடுக்கப் பட்டவர்கள் பேசப்பட்டனர் முன்னர் –
அர்ச்சை நிலையில் தாம் இருக்கும் இடத்துக்கு வருவிக்கப்பட்டு காட்சி கொடுக்கப் பட்டவரான
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் பேசப்பட்டார் பின்னர் –
அதற்க்கு பிறகு மழிசைக்கு இறைவன் பேசப்படுகிறார் –
பைந்நாகப் பாயை சுருட்டிக் கொண்டு பைம்தமிழ் பாட்டு கேட்க்கைகாக பின் தொடர்ந்து -தான் ஆட் செய்த நிலையை
வெளியிடுவதற்காக மீண்டதும் அப் பைந்நாகப் பாயில் மாறிப் படுத்த நிலையில் -ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாளாய் –
அர்ச்சை நிலையில் காட்சி கொடுக்கப் பட்டவர் ஸ்ரீ பாணற்கு அடுத்து பேசப்படுகிறார் –
மழிசைக்கு இறைவனுக்கு அடுத்து –ஸ்ரீ துளவத் தொண்டர் பேசப்படுகிறார் –
அர்ச்சை நிலையில் ஸ்ரீ அரங்கனால் தன் அழகைக் காட்டி ஆட் கொள்ளப் பட்டவர் -ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
அர்ச்சை எம்பெருமான் சொன்ன வண்ணம் செய்து ஆட் செய்தவன் மூலம் உகப்பித்த மழிசைக்கு இறைவனை
அடுத்து அழகைக் காட்டி ஆதரம் பெருக வைத்து அர்ச்சை எம்பெருமானாம் ஸ்ரீ அரங்கனால் ஆட் கொள்ளப்பட்ட
துளவத் தொண்டரைப் பேசுவது -முறை தானே –
ஆட்செய்தான் அங்கே ஆட்கொண்டான் இங்கே –
பிறகு அவ்வரங்கனை -கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே -என்னும்
வேட்கை மீதூர்ந்த ஸ்ரீ குலசேகரப் பெருமாள் பேசப்படுகிறார் –
ஸ்ரீ அரங்கனை வேட்கை மீதூர்தலினாலும்-ரசிக மனப்பான்மையினாலும் -நேரே காட்டும் வண்ணம் ஸ்ரீ வால்மீகி
தீட்டிய கவிதை திறத்தினாலும் – ஸ்ரீ ராமாயணத்தில் பதினாலாயிரம் அரக்கரோடு தனித்து இருந்து போராடும்
ஸ்ரீ ராம பிரானாக கண்டு படையுடன் அவனுக்கு உதவி புரிந்து – ஆட்செய்யப் புறப்பட்டவர் –
அவர் ஸ்ரீ அரங்கன் அழகைக் கண்டு ஆதரம் பெருகி ஆட்செய்தவருக்கு பிறகு
வீரம் கேட்டு வீணே பயப்பட்டு விரைந்து படையுடன் ஆட்செய்யப் புறப்பட்டவரை பேசுவது பொருத்தம் அன்றோ –
பின்னர் ஸ்ரீ பெரியாழ்வார் பேசப்படுகிறார் –
கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவனாம் -ஸ்ரீ இராமபிரானுடைய ஆற்றலை அறிந்து இருந்தும்
பொங்கும் பரிவாலே அவன் அறிவாற்றல் ஒன்றும் பாராது -அவனைத் தான் காப்பாற்ற போவதாக மயங்கி
படை எடுத்து -புறப்பட்ட ஸ்ரீ குலசேகர பெருமாளுக்கு பின்னர் –
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய அழகு மென்மைகளையே பார்த்து தொல்லை மாலை ஒன்றும் பாராது மயங்கிப்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையரைப் பேசுவது தகும் அன்றோ –
ஸ்ரீ பெரியாழ்வாரை சார்ந்து இருப்பவளான ஸ்ரீ ஆண்டாளை அவரை அடுத்துப் பேசினார் –
பின்னர் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் ஸ்ரீ நம் ஆழ்வாரும் பேசப்படும் போது
ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தேவு மற்று அறியாது பேசின ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும் பேசப்பட்டார் –
————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply