ஸ்ரீ யாதவாப்யுதயம்–மூன்றாம் சர்க்கம் -ஸ்லோகார்த்தங்கள்-

ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ

ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு

———-

இந்த சர்கத்தில் பெருமான் ஸ்ரீக்ருஷ்ண ஜனனம், வஸுதேவ ஸ்துதி, கோகுலத்திற்கு கொண்டு செல்லுதல்,
யமுனா நதி தீரம், குழந்தையை மாற்றுதல், யோகமாயா தோற்றம் ஆகியவை 68 ஸ்லோகங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

1. அத ஜகந்தி ப3பூ4வுர் அநாவிலாநி! அதிமிரா ஹரித: ப்ரசகாசிரே!!
அப4ஜதே3வ நிசா தி3­வச்ரியம் ஜநநபாஜிநி தே3வ தி3வாகரே!!

சர்வேச்வரனாகிய பெருமான் உதயமாகி விட்டான். உலகங்கள் அனைத்தும் உறக்கக் கலக்கமின்றி உணர்வு பெற்றன.
திசைகள் இருள் விலக நன்கு தோன்றின. சூரியன் தோன்றினால் உறக்கம் நீங்கி திக்குகள் சஞ்சாரத்திற்கு அனுகூலமாவது போல்
எம்பெருமானின் அவதாரத்தால் இரவு பகல் போலாகிவிட்டது.

2. நந்ருதுர் அப்ஸரஸோ தி3வி நந்தி3தா:கிமபி கீ3தம் அகீ3யத கின்னரை:
ச்ருதிஸுகை2: ஸமதோஷயத ஸ்வநை:அமரது3ந்து3பி4: ஆநகது3ந்து3பி4ம்

ஸுவர்கத்தில் அப்ஸரஸ்கள் நடனம் ஆடினர். கீதத்தில் தேர்ந்த கின்னரர்கள் அற்புதமான கீதத்தை இசைத்தனர்.
வானிலுள்ள பேரீவாத்யம் ஒலித்தது. ஆநகதுந்துபியான வஸுதேவர் இதைக் கேட்டவுடன் அவர் மனத்தில் ஆனந்தத்தை விளைவித்தது.

3. தசஸு தத்ர தி3சாஸ்வசரீரிணி (திசாஸு அசரீரிணி)ஜயஜயேதி ப3பூ4வ ஸரஸ்வதீ
அஜிதம் ஏகம் அகோ3சரயத் ஸ்வயம் ஸ்வரஸ வ்ருத்திர் அஸௌ அஸுராந்தகம்

பத்து திக்குகளிலும் ஜயகோஷம் உண்டாயிற்று. ஜய ஜய என்ற அசரீரி வாக்கு உண்டாயிற்று.
அசுரர்களை அழித்து ஜெயம் பெறப்போகிறவன் ஆதலாலும், வேறொருவனால் ஜெயிக்கப்பட முடியாததால் அஜிதன் என்று
பெயர் பெற்றிருப்பதாலும் எல்லா ஜெயத்தையும் தன்னிடமே உடையவனாதலாலும் ஜயன் என்ற திருநாமத்தைக் கொண்டதாலும்
அவனை அழைத்தே இக்கோஷங்கள் எழுந்தன என்று கொள்ளலாம்.
பிறந்த ஆறு குழந்தைகளுக்கும் அந்தகனாய் இருந்தவனுக்கு எட்டில் தோன்றியவன் அந்தகனாவதால் பிறந்த போதே ஜய கோஷம்.
மேலும் அஸுராந்தகம் என்பது கம்சனைக் குறிக்காமல் பொதுவாக வந்தது. இவன் ஒருவன் தொலைந்தால் அஸுரர்கள் பூண்டே இல்லாமல்
அற்றுப்போவர் என்பதாகக் கொள்ளலாம்.
மயங்கி வரங்களைக் கொடுத்து ஏமாற்றமடைகிறதாகிய தோல்வியேயற்ற பெருமானுக்கு ஜயகோஷம் எனவும் கொள்ளலாம்.

4. அநதிவேல ஸமீரண சோதி3தை:சிசிர சீகர சீப4ரிதாம்ப3ரை:
ஜலத4ரைர் அபி4தோ தி3வி த3த்4வநே ஸுரக3ஜைர் இவ ஸூசிதமங்க3லை:

ஆகாயத்தில் நிகழும் சம்பவத்தைக் கூறுகிறார். வானில் மேகங்கள் கர்ஜித்தன. அந்த கர்ஜனமானது மங்கள ஸூசகமான
யானைகளின் கர்ஜனை போல் இருந்தது.எங்கும் இவ்வொலி எழுந்தது. காற்று அடக்கத்துடன் வீசியது.
அதனால் குளிர்ச்சியான நீர்த்துளிகளால் அழகாக விளங்கியது ஆகாயம். ஐராவதம் முதலிய யானைகள் தமது தும்பிக்கைகளால்
நீரை எடுத்து மேலே தூவிக் கொள்ளும் போது அது காண்பதற்கு அழகாக இருக்கும்.
மேகங்களும் அவ்வாறே மந்த மாருதத்தால் கிளர்த்தப்பட்ட மேகங்கள், தண்ணீர் துளிகளை எங்கும் சாரல் போல் தூவியது.
காற்று வீசும்போது கோலாகலமாக கிளர்ந்த திக்கஜங்கள் துதிக்கைகளால் நீரைக் கொண்டு மூச்சை விட்டு எங்கும்
வாரி இரைத்து கத்துவது போல், மேகங்கள் முழக்கத்துடன் சாரல் போல் மங்கள நீரை இரைத்தது. (மேகவொலி சுபமாகத் தோன்றியது)

5. வவுரதோ மருதஸ் த்ரித3சாங்க3நா வத3ந ஸௌரப4 ஸாரப்4ருத: சுபா4:
முதி3த நிர்ஜர முக்த ஸுரத்3ரும ப்ரஸவ வ்ருஷ்டி மது4த்3ரவ மேது3ரா:

மங்களகரமான காற்றுகள் வீசின. அவை நறு மணத்தினை எங்கும் பரவச் செய்தன.
தேவ லோகப் பெண்டிரின அழகான முகங்களின் நறு மணத்தைச் சுமந்து வந்தன. மேலும் அவை மகிழ்ச்சியோங்கிய தேவர்கள்
தேவலோக மரங்களில் மலர்களைப் பொழிகின்ற போது அதினின்றும் கிளர்ந்த தேன் பெருக்கினால் தித்திப்பாயும் இருந்தன.
( வவு: அத; மருத: – எவை இல்லாவிடில் உலகம் மரித்து விடுமோ அவை மருத் எனப்படும். மருத – பன்மை. )
மந்தாரமாலா விகலித மகரந்தஸ்நிக்தா-வரதராஜ பஞ்சாசத்)
அழகான காற்று, அதில் நறுமணம், மேலும் இனிப்பு.என்ன ஒரு ஆனந்த மயமான வர்ணனை!

6. மது4ரிபோர் அவதார மஹோத்ஸவே முமுதி3ரே மது4ராபுர தே3வதா:
யத3பி4க3ந்தரி ப4க்தஜநே வரம் த3து3ர் அசேஷம் அதந்த்3ரித சேதஸ:

எம்பெருமானின் அவதார மஹோத்ஸவத்தால் மதுராபுரியின் தேவதைகள் அனைத்தும் மிக்க ஆனந்தமுற்றன.
தங்களை அண்டின பக்தர்களுக்குத் தடையின்றி பரபரப்புடன் அவர்கள் கோரின வரங்களை யெல்லாம் அளித்தனர்.

7. அவத3தா4ந தி4யோ முநயஸ்ததா3 யத3நதீ4தம் அதீ4தவத் அஞ்ஜஸா
நிக3மஜாதம் அசேஷம் அவேக்ஷ்ய தத் நிரவிசந்நிவ முக்திமயீம் த3சாம்

அவன் அவதரித்த போது முனிவர்கள் தாங்கள் முன்னம் ஓதாத வேத வாக்யங்களையும் ஓதினாற்போல்
புத்தி ஊன்றும் சக்தியைப் பெற்று வேதமெல்லாம் கண்டு மோக்ஷம் என்னும் ஆனந்தம் பெற்றாற்போல் ஆனந்தித்தனர்.

8. ப்ரஸத3நம் சரதா3க3ம ஸம்ப4வம் நப4ஸி மாஸி நதீ3பி4ர் உபாத3தே3
மஹிதயோக­3விதா3ம் மதிபி4: ஸமம் ச்ருதிபி4ர் அப்யநுபப்லவநீதிபி4:

அப்போது மழைக் காலத்தின் முதல் மாதமான ஆவணியாயிருந்த போதிலும் சரத் காலத்தில் ஏற்படக்கூடிய தெளிவை ஆறுகள் பெற்றன.
சிறந்த யோகப் பயிற்சி உடையவர்களின் புத்தியும் ந்யாய மீமாம்ஸைகளை ஒழுங்காகப் பெற்று வேதங்களும் தெளிவாக விளங்கின.

9. நிகி2ல சேதன மாநஸ நிஸ்ஸ்ருதா: கலுஷதா: ஸமுதே3த்ய கில க்ஷணாத்
விவிசுர் அம்ப4 இவ ஸ்வயம் ஆபகா3: ஜலநிதே4ர் இவ போ4ஜபதேர் மந:

ஜீவர்கள் எல்லோருடைய மனத்திலும் இருந்த கலக்கமெல்லாம் ஒரு நொடியிலே ஒன்று சேர்ந்து,
ஆறுகளெல்லாம் ஒன்று சேர்ந்து கடலில் விழுவது போல் போஜர்களின் பதியான கம்சனின் மனத்திலே புகுந்தன.
கம்சன், அவனைச் சார்ந்தவர் அனைவரின் மனமும் கலக்கமுற்றன.

10. அஸுர வீர க்3ருஹாணி ப்ருத2க்3விதை4: அசுப4சம்ஸிபி4ர் ஆநசிரே முஹு:
அமரராஜபுரேஷு ஜஜ்ரும்பி4ரே சுப4நிமித்த சதாநி புந: புந:

அசுர வீரர்களின் க்ருஹத்தில் அசுபத்திற்கு குறிகளான பற்பல விதமான துர் நிமித்தங்கள் ஏற்பட்டன.
அமர அரசர்களான திக் பாலகர்களின் நகரங்களில் மேன்மேலும் சுப நிமித்தங்கள் தோன்றின.

11. சரமதஸ் ச ருணாத் இவ தே3வகீ- பதிர் அமுச்யத ச்ருங்கலத: ஸ்திராத்
நிகி2லப3ந்த4 நிவர்தக ஸந்நிதௌ4 விக3லநம் நிக3லஸ்ய கிம் அத்3பு4தம்

பிறப்பவனுக்குத் தீர்க்க வேண்டிய மூன்று கடன்கள். தேவரிணம், ரிஷிரிணம், பித்ருரிணம்.
மூன்றாவதான பித்ரு ரிணம் இப்போது கண்ணன் பிறந்ததால் வஸுதேவர் அந்த ரிணத்திலிருந்து விடுபட்டார்.
அதுபோல கம்சன் இட்ட விடுவிக்கலாகாத விலங்கிலிருந்தும் இப்போது விடுபட்டார்.
எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கும் பகவான் அருகில் இருக்கும்போது விலங்கில் இருந்து விடுபடுதலில் வியப்பென்ன?

12. உதி3தம் ஆத்மநி தே3வக ஸம்ப4வா த3நுஜபே4த3நம் அங்கக3தம் த3தௌ4
கமபி காஞ்சந பூ4ப்4ருத் அதி4த்யகா ஹரிஹயோபல ச்ருங்க3ம் இவாத்3பு4தம்

தன்னிடம் தோன்றிய தங்கத்தை தேவகி தன் மடியில் வைத்துக் கொண்டு வீற்றிருக்கிறாள்.
தங்க நிறமான மேரு மேல் மரகத மணிக் குன்றம் போல அவன் மிளிர்ந்தான்.

13. வித்4ருத சங்க2 ரதா2ங்க3 க3தா3ம்பு3ஜ சப3லித: சுப4யா வநமாலயா
பிதுர் அஸூத முத3ம் ப்ருது2கஸ் ததா3 ஜலதி4டிம்ப4நிபோ4 ஜநநீத்4ருத: (ஸ்ரீமத் பாகவதம் (10/3/ 9 – 10)

வநமாலி கதை சார்ங்கம், சக்கரத்துடன் தோன்றிய அக் கடல் வண்ணனைக் கண்ட தந்தைக்கு அக் குழந்தை
சிறுகடல் போல் தோன்றி ஆனந்தத்தை விளைவித்தது. இங்கு கடலுக்கும் குழந்தைக்கும் சிலேடையான சில அடைமொழிகள் உண்டு.
சங்கம் – பாஞ்சசன்யம், ரதாங்கம் – திருவாழி, கதை – கௌமோதகம், அம்புஜம் ஏந்தி வநமாலை தரித்திருப்பவன் கண்ணன்.
சங்கம் – கடலில் பல சங்குகள் உண்டு. ரதாங்கம் என்று சொல்லப்படும் ப்ராணிகள் உண்டு. சக்ரவாஹம் என்ற பட்சி உண்டு.
மேலும் நீரில் உண்டாவது அம்புஜம். மேலும் வனமாலை என்பது கடல் ஓரத்தில் உள்ள காடுகளின் வரிசை.

14. பிதரம் அப்3ஜபு4வாம் அநபாயிநம் ப்ரியதமாங்கக3தம் பரிபச்யதா
ஸ விபு4ர் ஆநகது3ந்து3பி4நா மஹாந் அவிததை: ஸ்வகு3ணைர் அபி4துஷ்டுவே—(ஸ்ரீமத் பாகவதம் 10/3/12-22)

பல பிரம்மன்களுக்கு பிதாவாய் விளங்குபவன் தன் மனைவியின் மடியில் இருக்கக் கண்டு வஸுதேவர்
ஸர்வ வைபவமுடையவனான பெருமானை அவனுடைய கல்யாண குணங்களைக் கொண்டு புகழலானார்.

வஸுதேவ ஸ்துதி ( 15-22)

15. ப்ரணிபதாமி ப4வந்தம் அநந்யதீ4: அகில காரணம் ஆச்ரித தாரணம்
அநுக3மாத் அநித3ம் ப்ரதமா கி3.ர: கிமபி யத்பத3ம் ஏகம் அதீ4யதே

வேறொன்றிலும் நோக்கின்றி சரணாகதியே புருஷார்த்தமெனக் கொண்டவனும் எல்லாவற்றிற்கும் ஆதாரமானவனும்
அண்டினவருக்கு மோக்ஷமளிப்பவனும் ஆன உன்னை வணங்குகிறேன்.
எப்போது தோன்றின? என்று காலம் குறிப்பிட முடியாத வேதங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எவ்வளவு சொல்லியும் சொல்ல முடியாத
எந்த ஸ்வரூபத்தை ஓதுகின்றனவோ அந்த ஸ்வரூபம் நீயே! (யத் ஏகைக குண ப்ராந்தே – யாதவாப்யுதயம் 2வது ஸ்லோகம்)

16. விஷம கர்ம விபாக பரம்பரா விவச வ்ருத்திஷு தே3ஹிஷு து3ஸ்தரம்
கருணயா தவ தே3வ கடாக்ஷிதா: கதிசித் ஏவ தரந்தி ப4வார்ணவம்

மேலும் கீழுமான பலவகையான வினைகள் விடாமல் மேன்மேலும் உடன்வர அதற்கு வசப்பட்டு பல உடல்கள் எடுத்து
உழன்று வருகின்றனர் ஜீவன்கள். இவர்களில் வெகு சிலரே உனது கருணை கூர்ந்த கடாக்ஷத்திற்கு இலக்காகி
சம்ஸாரமென்னும் கடலைக் கடக்கின்றனர்.
(ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலமெல்லாம் மனமே ஈண்டு பல் யோனிகள் தோறுழல்வோம் )

17. த்வத3நுபா4வ மஹோத3தி4சீகரை: அவசபாதிபி4ர் ஆஹிதசக்தய:
அவதி4பே4த3வதீம் உபபு4ஞ்ஜதே ஸ்வபத3 ஸம்பத3ம் அப்3ஜப4வாத3ய:

பிரமன் முதலானவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஆயுள் எல்லைக்கேற்ப பதவிகளை அனுபவித்து வருகிறார்கள்.
அப்பெரிய பதங்களும் உனது ப்ரபாவம் என்னும் பெருங்கடலின் திவலைகளினால் பெறப்பட்டதெனலாம்.
அதுவும்கூட அவரவர்களின் வினைக்கேற்றவாறே அமைகின்றது.

18. ச்ருதி கிரீட சுபா4ச்ரய விக்3­ரஹ: பரம ஸத்த்வநிதி4: ப்ரதிபத்4யஸே
ஜகத் அநுக்3ரஹ மாருத சோதி3த: விவிதரூப தரங்க3 விகல்பநாம்

உனது திவ்யமங்கள விக்ரஹம் வேதங்களுக்கு க்ரீடமாய் விளங்குகிறது. பாபங்களையெல்லாம் போக்குகிறது.
எளிதில் தியானத்திற்கு இலக்காகிறது. சுத்தமான ஸத்வத்தைப் பெறுவதற்கு இடமான நீ,
காற்றினால் கடல் பல அலைகளை பெறுவது போல் இவ் வுலகை உய்விக்க பல அவதாரங்களை பெறுகிறாய்.

19. த்வயி ந தே3வ யத் ஆயததே ந தத் ஜகதி ஜங்க3மம் அந்யத3தாபி வா
இதி மஹிம்நி தவ ப்ரமிதே பரம் விப4ஜநே விவிதை4: ஸ்திதம் ஆக3மை:

உன்னிடம் எது அதீனமாக இல்லையோ அது என்று எதையுமே சொல்ல இயலாது.
உலகில் ஜங்கமம் என்றும் ஸ்தாவரம் என்றும் கூறப்படும் அனைத்துமே உமக்கு அதீனம். இதுவே உமது மஹத்துவம்.
இப்படி ஒரே வார்த்தையினால் உமது மஹிமையை அளந்துவிட்ட போதும் சாஸ்திரங்களும் ஆகமங்களும்
பிரித்து பிரித்து ஒவ்வொன்றினையும் சொல்வதிலேயே நிலை பெற்று விட்டன.

20. அகில லோகபிதுஸ் தவ புத்ரதாம் அஹம் அயாசம் அநந்ய மநோரத:
வரத3 வாஞ்சித தா3ந த்4ருதவ்ரதே த்வயி ததே3வம் அயத்நம் அபச்யத

வரங்களை அளிப்பவனே! வேண்டுவதை அளிக்க நீ சங்கல்பம் செய்திருந்ததால் நான், இவ் வுலகங்களுக் கெல்லாம் தந்தையான
உன்னையே மகனான வேண்டினேன். அப்போதே வேண்டி யிருந்தபடியால், இப்போது சிறிதும் முயற்சியின்றி அது பலித்துவிட்டது.
(ஸ்ரீமத் பாகவதத்தில் , பகவான் கூறுவதாவது, முன் பிறவியில் நீங்கள் 12000 வருடம் தவம் செய்தீர்கள்.
நான் உங்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று வினவ, என்னை போன்றதொரு பிள்ளையை வேண்டினீர்கள்.
உங்களுடைய ஆசையை நிறைவேற்ற யோசித்தபோது எனக்கு நிகராக யாருமில்லாததால் நானே வந்து பிறந்தேன்.
நீங்கள் மும் முறை கூறியதால், மூன்று பிறவியிலும் நானேதான் பிறந்துள்ளேன் என்றார் ,
ஸ்வயம்புவ மனு காலத்தில் சுதபா – ப்ருஷ்ணிக்கு ப்ருஷ்ணி கர்ப்பர், கச்யபர்-அதிதிக்கு வாமனன்,
இப் பிறவியில் வஸுதேவர்-தேவகி-க்ருஷ்ணன்) ஸ்ரீமத் பாகவதம் (10/3/32-45)

21. அவநிபா4ர நிராகரணார்த்திநாம் க்ரதுபு4ஜாம் அபி4லாஷம் அவந்த்4யயந்
ஜிதரிபூணி ப3ஹூநி த3யாநிதே4 விஹரணாநி விதா4தும் இஹார்ஹஸி

பூமியின் பாரத்தைப் போக்க விரும்பிய தேவர்களின் வேண்டுகோளை வீணாக்காது கருணைக் கடலான நீ
பகைவரை வெல்லும் விளையாட்டுக்களை இந்த அவதாரத்தில் செய்வாயாக!

22. த3நுஜ மோஹந தோ3ஹளிநா த்வயா ஸஹஜலாஞ்சந ஸம்வரணம் க்ஷமம்
தத் அது4நா சமயந் மம ஸாத்4வஸம் யவநிகாம் அதி4க3ச்ச யதேப்ஸிதம்

அசுரர்களை மோகமடையச் செய்வதில் குதூகலமுடைய நீர் அவதார காலத்திலும் உம்மை விட்டு பிரியாமல் உடன் தோன்றிய
அடையாளங்களை ஒளித்து விடுங்கள். நீர் இப்போது மாறி உன்னை இன்னாறென்று தெரியாதபடிக்கு மறைத்துக் கொள்ளுங்கள்!
(என் பிள்ளையென்று கூட தெரியாமல் இருப்பது நலம். ) வஸுதேவர் எட்டு அற்புதமான ஸ்லோகங்களால் பகவானைத் துதித்தார்.
ப்ரணிபதாமி என்று ஆரம்பித்து யதேப்ஸிதம் என்று முடித்தார். தன் பயத்தை அதில் கூறினார். தனக்கு என்ன நேருமோ என்ற பயமல்ல.
கண்ணனுக்கு என்ன ஆகுமோ என்ற பயமே!. (வஸுதேவ ஸ்துதி ஸ்ரீமத் பாகவதம் (10/3/13-22)

23. இதி ஸபீ4தம் அவேக்ஷ்ய த3யாநிதி4: ஸ்மிதமுகோ2 வஸுதே3வம் அபா4ஷத
த்வம் அஸி மே ஜனக: கிமிஹாந்யதா கிமபி தாத முதா4 கதிதம் த்வயா

இப்படி அஞ்சிப் பேசும் வஸுதேவரைப் பார்த்து சுய ரூபத்தில் இருக்கும் கருணைக் கடலான பகவான், கூறினதாவது –
நீர் என்னைப் பெற்ற தகப்பனார். இதில் என்ன மாறுபாடு? இவ்வாறு இருக்க ஏதேதோ சொல்லுகிறீரே?

24. இயம் அமர்த்ய பிது: தவ கே3ஹிநீ தி3விஷதா3ம் ஜநநீ மம சாநகா4
அபி4மதம் யுவயோர் அநவக்3ரஹம் ஸமயபா4வி மயைவ ஸமர்த்யதே

முந்தின ஸ்லோகத்தில் தமது தந்தையான வஸுதேவர் சொன்ன வார்த்தையை தமது புத்திரத் தன்மைக்கு இணங்க
ஏற்க மறுத்து பகவான் கூறியதாவது – இவள் தேவர்களுக்கெல்லாம் தந்தையான உமது மனைவி! தேவர்களுக்கும் எனக்கும் தாய்.
உமது புத்திரனான என்னைப் பார்த்து நீர் இவ்வாறு சொல்லலாமோ? இருப்பினும் நீவிர் செய்து கொண்ட வேண்டுகோளை
நானே சமயம் பார்த்து நிறைவேற்றுவேன். ஈஸ்வரனாக அன்றி உமது புத்திரனாகவே நிறைவேற்றுவேன்.

25. யதி3 விபே4ஷி ப4ஜாமி மனுஷ்யதாம் அத ச மாம் நய நந்த3க்3ருஹம் க்ஷணாத்
து3ஹிதரம் ச ஸமாநய தஸ்ய தாம் க3தப4யோ ப4வ தூ3ரக3தே மயி

நீர் பயப்படுவீராகில், நான் இப்போதே மனிதத் தன்மைக்கு மாறிவிடுகிறேன்.
உடனே என்னை நந்தன் இல்லத்தில் கொண்டு சேர்க்க் வேணும்.
அவருக்கு அங்கு பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடவும்.
நான் தூரத்தில் இருப்பதால் அஞ்சாமல் இருப்பீராக.

26. அத விசம்ய நியோக3ம் அபங்கு3ரம் மது4ஜிதோ மது4ராக்ஷர மந்தரம்
ஹிதம் இத3ம் ப்ரதிபத்4ய தம் ஆத­3தே3 கு3ருதரம் க்ருபயா லகு4தாம் கதம்,

இனிய சொற்களால் ஆன அந்த மதுரிபுவின் ஆணையைக் கேட்டு இந்த ஹிதம் நல்லதென்றே எனக் கருதி
நந்தர் இல்லம் செல்வதே நலமென்று நம்பி, மானிடக் குழந்தையாய் மாறின பெருமானை இலகுவாக
தன் இருகைகளாலும் தூக்கிக்கொண்டார். (ஸ்ரீமத் பாகவதம் 10/3/49)

27. துஹிநபா4நு தி3வாகர லோசநம் நிக3ம நிச்வஸிதம் ஸ்வஸுதஸ்ய தத்
அநுப3பூ4வ முஹுர் முஹுர் ஆத3ராத் அநக3ம் ஆநநம் ஆநகது3ந்து3பி4:

சந்திரனையும் சூரியனையும் கண்களாக உடையதும் வேதங்களைத் தனது கண்களாக உடையதும்,
வேதங்களைத் தனது மூச்சாகக் கொண்டதுமான தன் மகனுடைய அழகிய முகத்தை ஆதரத்துடன்
வஸுதேவர் மேன்மேலும் அனுபவிக்கலானார்.

28. ச்ருதிஸுக3ந்தி4 ததா3நந சந்த்3ரிகா முஷித மோஹதமா முநிஸந்நிப4:
அதி4ஜகாம ஸ தந்மயதாம் க்ஷணாத் அநிமிஷத்வம் உத ப்ரதிஸந்த3தே4

வேதத்தின் நறுமணம் வீசும் மகனின் முகம் என்னும் நிலவினால் அஞ்ஞான இருள் பறிக்கப் படவே தியானத்தால்
முதிர்ந்தவர் போலாகி ஒரே நொடியில் வஸுதேவர் தந்மயராக ( வேறொன்றிலும் நாட்டமில்லாதவராய்)
மகனையே நீடித்து காண்பவரானார். அந்தத் தோற்றமே அவருக்கு நீடித்தது.
ஒருவேளை தமக்கு முன் இருந்த இமை கொட்டாத தன்மையை மீண்டும் பெற்றாரோ?

29. ஜிக3மிஷு: ஸ தி3சோ த3ச: யாத3வ: ஸக்ருத் அவைக்ஷத ஸாத்4வஸ விஹ்வல:
அநக4வைப4வம் அர்ப4கம் உத்3வஹந் அமிதகு3ப்தி நிருத்4த3க3தௌ க்3ருஹே!

பலவிதமான காப்புகள் உள்ள அந்த இல்லத்தில், குறைவற்ற வைபவம் உடைய அக் குழந்தையைக் கையில் ஏந்தியபடி
பரபரப்பும் தளர்ச்சியும் அடைந்தவராய் அச்சத்தால் பத்து திக்குகளையும் ஒரு தரம் சுற்றிப் பார்த்தார்.

30. விஜக4டே ஸஹஸைவ கவாடிகா வ்ரஜம் அத வ்ரஜதோ யது3பூ4ப்4ருத:
உபலகல்பம் அசேரத ரக்ஷகா: ஸரணிம் ஆதி3தி3சுர் க்3ருஹதே3வதா:

நந்த கோகுலம் செல்லும் வஸுதேவருக்காக உடனே கதவு திறந்து கொண்டது. காவலர்கள் அனைவரும் கல்லைப் போல்
அசையாமல் சித்திரங்கள் போல் படுத்திருந்தனர். க்ருஹத்திற்கான தேவதைகளே வழியைக் காண்பித்தனர். ஸ்ரீமத் பாகவதம் (10/3/49)

31. க்ஷரத3ஸூந் இவ யாமிகரக்ஷகாந் முஷிதமஞ்ஜுகி3ர: சுககாரிகா:
யது3குலேந்து: அபச்யத் அமீலிதாந் பரிஜநான் அபி சித்ரக3தாந் இவ

ஒவ்வொரு யாமத்திற்கும் காவல் புரிய தயார் நிலையில் இருப்பவர்கள் இப்போது உயிர் பிரியும் நிலையில் இருப்பவர்கள்
போலிருப்பதையும், கிளி மைனா போன்ற பேசும் பக்ஷிகள் பேசும் வல்லமை யிழந்து நிற்பதையும்,
மற்றும் வேலைக்காரர்கள் கண்கள் திறந்த நிலையிலே சித்திரம் போல செயலற்று நிற்பதையும் வஸுதேவர் கண்டார்.

32. உபயதோ விசிகாம் ஸத3நாந்தராத் குவலயாப4 குமார தநுத்விஷா
சதமகோ2பலமேசகயா த்3ருதம் சமிதஸந்தமஸா: ஹரிதோ ப3பு4:

வீட்டில் இருந்து வெளியே வந்த வஸுதேவருக்கு இந்திர நீலக் கல்லின் ஒளி போன்ற கரு நெய்தல் நிறமான
கண்ணனின் திருமேனியின் ஒளியாலே திக்குகள் இருள் நீங்கி விளங்கின.

33. ச்ருதி மயோ விஹக: பரித: ப்ரபு4ம் வ்யசரதா3சு விதூ4த நிசாசர:
அநுஜகா3ம ச பூ4த4ரபந்நக3: ஸ்ப்புட பணா மணி தீ3பக3ணோத்வஹ:

அரக்கர்களை அழிக்கின்றவனும், வேத மூர்த்தியுமான கருடன் எம்பெருமானைச் சுற்றி வட்டமிட்டு வந்தார்.
பூமியைத் தலையால் தாங்கும் நாகமான ஆதிசேஷனும் மேலாப்பாகப் படங்களை விரித்து அவற்றிலுள்ள
மணிகளை விளக்காகக் கொண்டு (பூமிக்கு பாரம் குறைந்தால் நமக்கும் குறையுமென்று) பின் தொடர்ந்தார்.

34. தி3நகரோபமதீ3தி2பி4ஸ் ததா த3நுஜதே3ஹ விதா3ரண தா3ருணை:
பரிக3த: கில பஞ்சபி4ர் ஆயுதை4: யது3பதி: ப்ரஜஹௌ அஸஹாயதாம்

சூரியன் போன்ற ஒளி பெற்றவைகளும், அசுரர்களின் உடலைக் கிழித்தெறியும் தன்மை யுடையதுமான
பஞ்சாயுதங்களால் சூழப் பெற்ற யதுபதியான வஸுதேவர் தாம் தனித்திருக்கிறோம் என்ற எண்ணத்தை விட்டு விட்டார்.
முன் ஸ்லோகத்தில் கருடனும் ஆதிசேஷனும் செய்த கைங்கர்யத்தை விளக்கினார்.
இங்கு பஞ்சாயுதங்களும் செய்த சேவையினை விளக்குகிறார்.
ஏற்கனவே கருடன் மற்றும் ஆதிசேஷனின் ஒளியோடு இப்போது பஞ்சாயுதங்களின் காந்தியும் சேர்ந்தால் பேரோளியாகி விடாதோ?

35. ப்ரகு3ணம் இந்து நிவேதி3த பத்4த3தி: யது3குலேந்து3ர் அதோ யமுநாநதீ3ம்
பரமபூருஷம் அக்ஷதபௌருஷை: பதக3ராஜ இவாஷு வஹந் யயௌ

குன்றாத சக்தி யுடையவரும், யது வம்ச சந்திரனுமான வஸுதேவர் பக்ஷி ராஜனான கருடனைப் போல விரைந்து
எம்பெருமானை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு சந்திரனால் வழி காண்பிக்கப்பட்டு யமுனையை அணுகினார்.

36. தநு தரங்க3ப்ருஷத்கண சீதல: ஸுரபி4 கைரவ ஸௌஹ்ருத3 வாஸித:
அபி4ஸமேதம் அஸேவத மாருதோ யமுநயா ப்ரஹிதோ யது3புங்க3வம்

மெல்லிய அலைகளின் நுண்ணீர்த் திவலைகளால் குளிர்ந்ததும், மணமுள்ள ஆம்பல் பூக்களால் உண்டான சம்பந்தத்தால்
மணம் பெற்றதுமான மலைய மாருதம் யமுனையை நோக்கி வரும் வஸுதேவரைக் குறித்து யமுனையால் அனுப்பப்பட்டு
அவருக்கு சேவை செய்தது. அவர் களைப்பு நீங்கி சுகப்படும்படி வீசியது.

37. பவந கம்பித பல்லவ பாணிகா ப்ரஹிதபுஷ்பப4ரா பத3வீமுகே
உபஜுஹாவ கில ப்4ரமரஸநை: யது3பதிம் யமுநோபவநஸ்தலீ

கை அசைவது போல் காற்றினால் தளிர்கள் அசைவுற, வரும் வழியில் புஷ்பங்கள் குவியலாக சொரியப் பெற,
வண்டுகள் ரீங்காரம் செய்ய இந் நிகழ்வை காணும் போது யமுனை யாற்றின் கரையில் வளரப் பெற்ற வனமானது
கையைக் காண்பித்து புஷ்பங்களை தூவி வஸுதேவரை அழைக்கின்றது போலும்.

38. நிமிஷிதாஸித நீரஜலோசநா முகுலிதாப்3ஜமுகீ ஸவிது: ஸுதா
லலித தீ3ந ரதாங்க3 யுக3 ஸ்வநா குஹகதை3ந்யம் அசோசத் இவ ப்ரபோ4:

யமுனை சூரிய புத்ரி. அவள் இப்போது கம்சனிடம் உண்டான பயத்தினால் இரவோடு இரவாக வெளியேறி வரும்
வஸுதேவரைக் கண்டு இப்பொழுது என்ன நேரிடுமோ என்று பயந்து சோக முற்றவள் போல் காணப்பட்டாள்.
பயமில்லையாயினும் இந்நிலை கண்டு சோகிப்பது போல் தோற்றமுற்றாள்.
இரவில் மலரும் கருநெய்தல் மலர்களும் மலரவில்லை. தாமரை மலர்களும் மொட்டித்தே இருந்தன.
சக்ரவாகப் பறவைகளும் பிரிவினால் தீனமான குரலை எழுப்பிய வண்ணம் இருந்தன.
இதனால் யமுனை துயரமுற்றவள் போல் காணப்பட்டாள்.

39. விகசகைரவ தாரகிதாக்ருதிம் தநுமதீம் இவ சாரத3யாநீம்
த்வரிதம் அம்பு3நிதே­4ர் அபி4ஸாரிகாம் தரிதும் ஐஹத ஸத்யஸமீஹித:

வஸுதேவர் யமுனையை விரைவில் கடக்க முயன்றார். நக்ஷத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட சரத்கால ராத்திரி என்ற காதலி
தன் காதலனை விரைந்து சென்று அடைவது போல் கருநிறமான யமுனை ஆம்பல் என்னும் நக்ஷத்திரங்களால்
தன்னை அலங்கரித்துக் கொண்டு கடலை நோக்கி விரைந்தது. இது அபிசாரிகை என்னும் பெண்ணின் நிலையை ஒத்திருந்தது.
ஒரு பெண் அபிசாரிக்கும்போது நல்லவர் அதைக் கடத்தல் இயல்பே. வஸுதேவரும் அதையே செய்தார் போல………..

40. ப4வதி கிம் நு ப4விஷ்யதி வா கிம் இதி அநவதா4ரித சௌரி விஹாரயா
சகிதயேவ விரோசந கந்யயா விது4தவீசிகரம் கில விவ்யதே

என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறதோ? சௌரியின் விளையாட்டு எப்படி இருக்கும் என்று விளங்க வில்லையே!
யமுனைக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் என்ன ஆகுமோ என்பவர்கள் கைகளை உதறுவார்கள்.
அதே போல் யமுனை தன் அலைகளாகிற கைகளை உதறுபவள் போல் காணப் பட்டாள்.

41. க4நதம: பரிபாக மலீமஸை: கு3ருபி4ர் ஊர்மிக3ணைர் அநுபப்லுத:
அதிததார தி3நாதி4பதே: ஸுதாம் அநக4யோக3மநா இவ ஸம்ஸ்ருதிம்

பாபங்களுக்கு விரோதியான யோகம் முதிர்ந்த மனம் உடைய மஹாத்மா, தமோகுணம் கலப்பதால் ஏற்படுகின்ற
ஆசா பாசங்களான பசி, தாகம், துக்கம், மோஹம், மூப்பு, இறப்பென்ற அலைகளால் மோதப்படாமல்
ஸம்ஸாரத்தைக் கடப்பது போல் வஸுதேவர் நள்ளிருள் போன்ற கனத்த திரள்களில் அகப்படாமல் யமுனையைக் கடந்தார்.
(அநகம் – அகவிரோதி)

42. யது3பதேர் யமுநா த்வரிதம் யத: ப்ரதியதச்ச ஸமர்ப்பித பத்4த3தி:
ஸ்வயம் அமர்த்ய மதா3வல மஜ்ஜநீ சரணலங்க்யஜலா ஸமஜாயத

யமுனை தேவ யானைகளையும் அமிழ்த்தும் ஆழமுடையதாயினும் வஸுதேவர் போகும் போதும் திரும்பி வரும் போதும்
வழி விடுவதாகி வழியில் காலால் நடந்து கடக்குமளவே தண்ணீர் உள்ளதாயிற்று.

43. அஜநி பஸ்சிமதோ ப்4ருசம் உந்நதா ரவிஸுதா புரத: ஸ்தலசேஷிதா
அதி4ருரோஹ பத3ம் கிம் அஸௌ ஹரே: ப்ரதியயௌ யதி3 வா பிதரம் கி3ரிம்

வஸுதேவருக்கு வழிவிடுவதற்காக யமுனை தன் வெள்ளத்தை நிறுத்திக் கொண்டது. அதனால் மேற்குத் திக்கில் மிக உயர்ந்து,
கிழக்கில் தரையே தெரியும்படி வற்றியிருந்தது. அதனால் இதென்ன விஷ்ணு பதம் என்ற வானத்திற்கு ஏறுகின்றதோ அல்லது
தன் தந்தையான களிந்த மலைக்கே செல்கிறதோ என்று தோன்றலாயிற்று.
(தன் சக்களத்தியான கங்கையைப் போல் தனக்கும் விஷ்ணு பத சம்பந்தம் உண்டென்கிறதோ, உயர்கிறதே, அல்லது வற்றியிருப்பதால்
தனது பர்த்தாவான கடலின் சம்பந்தமே வேண்டாம் என்றெண்ணி பிறந்தகமே போகின்றதோ என்றெல்லாம் தோன்றலாயிற்று.)

44. அக்ருதஸேதும் அநாகலிதப்லவாம் ஜநநஸிந்து4 த்3ருடப்லவம் உத்3வஹந்
ரவிஸுதாம் அதிலங்க்4ய ரமாபதிம் ஸபதி4 கோ4ஷஸமீபம் உபாநயத்

ஸம்ஸாரக் கடலுக்கே திடக் கப்பலான திருமாலையும் தான் சுமந்து கொண்டு அணைக்கட்டு இல்லாமலே,
ஓடம் ஒன்றும் வேண்டாமலே யமுனையைக் கடந்து நொடியிலே இடைச்சேரிக்கு அருகில் சென்றார்.

45. அத கயாசந காரணநித்3ரயா விவச ஸுப்தஜநம் வ்ரஜம் ஆவிசத்
த4நதபத்தந ஸம்பதி3 யத்ர ஸா ஸ்வ ஸுதம் அக்3ர்யம் அஸூயத ரோஹிணீ

எல்லாருக்குமே ஸம்ஸாரத்தில் உறக்கத்திற்கு காரணமான மாயை என்கிற நித்ரையின் வசம் உறங்கிக் கிடக்கும் ஆயர்பாடியில் புகுந்தார்.
குபேரனின் நகரத்தைப் போன்று செல்வம் நிறைந்த அவ்விடத்தில் தானே அவரது மனைவியான ரோஹிணி இவரது மூத்த மகனைப் பெற்றிருக்கிறாள்.
(இங்கே பலராமனைப் பற்றிக் குறிப்பிட்டது, போய்த் திரும்பும் விரைவில் கூட தன் மூத்த மகனைக் கண்டு வந்தார் எனக் கொள்ளும்படி ஆகிற்று)

46. உபக3தே வஸுதே3வஸுதேந்திகம் நரகவைரிணி நந்தகுடும்பி3நீ
அரணிஸம்ப4வ பாவக ஸங்க3மாத் அப4ஜதாத்4வர வேதி3: இவ ச்ரியம்

நரக விரோதியான (நரகாஸுர ஸம்ஹாரம் செய்யப் போகும்) வஸுதேவ குமரன் தன் அருகில் சேர்ந்தவுடன் நந்தன் மனைவி யசோதை,
அரணிக் கட்டையில் இருந்து தோன்றிய அக்னியைப் பெறுவதால் யாகவேதி பொலிவுடன் விளங்குவது போலான அழகைப் பெற்றாள்.

47. ந்யதி4த நந்த3வதூ4ஸவிதே4 ஸுதம் த்3ருதம் உபாதி3த கோ3பகுமாரிகாம்
அத நிநாய ச தேவகநந்த3நீ சயநம் ஆநகது3ந்து3பி4ர் ஆசு தாம் (ஸ்ரீமத் பாகவதம் 10/3/52)

பிறகு வஸுதேவர் நந்தன் மனைவியிடம் தன் குழந்தையை வைத்தார். வைத்ததும் அங்கே பிறந்திருந்த ஆயர் பெண்ணை எடுத்ததும்
மதுராவில் தேவகியின் பள்ளியில் வைத்ததும் எல்லாம் ஒரே நொடியில் ஆயிற்று.

48. அநவபு3த்4த3 ஜநார்த3ந கன்யகா விநிமயஸ்த்வத போ4ஜக3ணேச்வர:
த்3ருஷதி3 தாம் அபி4ஹந்தும் அபாதயத் ப்ரதிஜகா4ந ச ஸா சரணேந தம் (ஸ்ரீமத் பாகவதம் 10/4/1-8)

கம்சன் போஜர்களுக்கு ஈஸ்வரனாய் இருந்த போதிலும் ஆண் பெண் குழந்தைகள் மாறினதை அறியாதவனாய்
அப் பெண் குழந்தையைப் பாறையிலே எறிந்தான். அதுவும் இவனைத் தன் காலால் உதைக்க உதைப்புண்டான்.

49. ந்ருபதி: ஆசு பதா3 நிஹதஸ் தயா நிபதிதோதி3தகந்துகவத் ப4வந்
த3வஸமாவ்ருத சைலநிப4: க்ருதா4 த3ர நிமீலித த்3ருஷ்டிர் அதூ3யத

அரசன் அதன் காலால் உதைக்கப்பட்டு விழுந்தெழுந்த பந்து போலாகி, கோபம் மூண்டு காட்டுத்தீ பரவின
பர்வதம் போலாகி, கண்களை மூடிக் கொண்டு வருந்தினான்.

50. உத3பதத் தி3வம் உக்3ரக4நஸ்வநா யுவதி ரூப யுகா3த்யய சர்வரீ
அஸுரகா4திபி4ர் அஷ்டபி4ர் ஆயுதை4: அலகுபி4: சபலாபி4: இவாச்ரிதா (ஸ்ரீமத் பாகவதம் 10/4/9)

கீழே எறியப்பட்ட அப் பெண் குழந்தையானது ப்ரளய ராத்திரி போன்று பெரிய யுவதி ரூபம் கொண்டு மின்னல்கள் போன்று
மின்னுகின்ற, அசுரர்களை அழிக்கின்றனவான அஷ்ட ஆயுதங்களை ஏந்திக்கொண்டு உக்ரமான கர்ஜனையுடன்
ப்ரளய காலத்து மேகம் கர்ஜிப்பது போலாகி மேல் வானத்திற்கு எழும்பிற்று.

51. அத ச போ4ஜநியந்துர் அயந்த்ரிதா த3நுஜஹந்துர் உத3ந்தம் உதை3ரிரத்
படு க3பீ4ரம் உதா3ரம் அநாகுலம் ஹிதம் அவிஸ்தரம் அர்த்யம் அவிப்லவம் (ஸ்ரீமத் பாகவதம் 10/4/10-13)

எழும்பி மேலே தோன்றி அவனுக்கு அடங்காமல் கர்ஜனை மட்டுமின்றி, கம்சனிடம் அசுரர்களை விடாமல் அழிக்கின்ற
பகவானின் வரலாற்றை பேசியது. கடுமையாகவும், கம்பீரமாகவும், பெருந்தன்மையாகவும், கலக்கமற்றதாகவும், ஹிதமாகவும்,
விரிவில்லாமலும் அர்த்த புஷ்டியுடையதாய் ஸத்யமாகவும் இருந்தது அப்பேச்சு.

52. அஹம் அசேஷ ஸுராஸுர மோஹநீ யவநிகா மது4கைடப4மர்தி3ந:
ப்ரப3ல சும்ப4நிசும்ப4 நிஷூத3நே ப்ரணிஹிதா ஹதயா தவ கிம் மயா

நான் தேவர்கள் அசுரர்கள் எல்லோரையும் மோகத்தில் அழுத்துகின்றவள். மதுகைடபர்களை அழித்து எம்பெருமானுக்குத் திரையானவள்.
அவன் என்னைக் கொண்டு தன்னைப் பிறருக்கு காணாதபடிக்கு வைத்துக் கொள்கிறான்.
அதிக பலம் உள்ள சும்பன் நிசும்பன் போன்ற அசுரர்களைக் கொல்ல அவனால் நான் ஏவப்பட்டிருக்கின்றவள்.
என்னை நீ பாறையில் எறிந்தடிப்பதால் உனக்கென்னவாகும்?

53. வஸதி நந்த3க்3ருஹே விபு3த4 த்3விஷாம் த3மயிதா வஸுதே3வஸமுத்3ப4வ:
அயம் அஸௌ தவ நாசயிதேதி ஸா த3ரம் உதீ3ர்ய ஜகா3ம யதேப்ஸிதம் (ஸ்ரீமத் பாகவதம் 10/4/12)

தேவர்களுக்கு விரோதியானவர்களை அடக்குகின்றவன் வஸுதேவர் குமாரனாகப் பிறந்து நந்தகோபனின் இல்லத்தில் வசிக்கின்றான்.
அப்படிப் பட்டவனே உன்னை யழிக்கப் போகிறான். இவ்வாறு அந்த மாயை சிறிது விரிவாகச் சொல்லித்
தான் சேர விரும்பிய இடத்திற்குத் தடையின்றி சென்றனள்.

54. மது4ஹிரண்யநிபோ4 மது4ராபதி: தி3நஹுதாசந தீ3நத3சாம் க3த:
ச்வஸித ஜல்பித வேபித ஹுங்க்ருதை: அரதிம் ஆயதபீ4திர் அஸூசயத்

மதுவுக்கும், இரணியனுக்கும் ஒப்பான கம்சன் நீடித்த அச்சமுடையவனாய், பகல் நெருப்பு போல தீனமான நிலையுடையவனாகி
மூச்செறிதல், பிதற்றல், நடுக்கமுறல், ஹூங்காரம் செய்தல் போன்ற செயல்களாலே தனக்கு உள்ள வெறுப்பை வெளியிடலானான்.
எதிர்பாராத வகையில் திடீரென்று அதிர்ச்சி யடைந்தவனின் நிலைகள் இவை.

55. ஜடமதி: ஸ ஜநார்த3ந மாயயா விஹஸிதஸ் த்ரபயா ஜநிதவ்யத:
அபக்ருதம் வஸுதேவம் அமோசயத் த3யிதயா ஸஹ தீ3நவிலாபயா (ஸ்ரீமத் பாகவதம் 10/4/14-24)

மூடனான கம்சன் பகவானின மாயையினால் பரிஹசிக்கப் பட்டவனாய் (அவன் அனுப்பிய மாயையை வெல்ல முடியாதவன்,
அவனை எங்கே வெல்லுவது என்றும் ஏன் தங்கையை வீணாகச் சிறையில் இட்டோம் என்றும் ) வெட்கமுற்று
மனவருத்தம் உடையவனாய் எங்களை வீணே சிறையிட்டாயே என்று ஏங்கி அழுகின்ற தேவகியோடு அபஹாரத்திற்கு
இலக்காக்கின வஸுதேவரைச் சிறையில் இருந்து விடுவித்தான்.

56. கிமபி சிந்திதம் ஆக3தம் அந்யதா கிமித3ம் இத்யவசாத் உபஜாதயா
விஷ விதூ3ஷிதயேவ மநீஷயா முஹுர் அதூ3யத மோஹவிசேஷ்டித:

மோஹத்தினால் பல வகையிலும் ஆட்டிவைக்கப் பட்டவனாய், நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று, இதென்ன என்று தன்னை
யறியாமலே தோன்றியதான விஷம் கலந்தது போன்ற எண்ணத்தினால் என்ன என்னமோ சேஷ்டைகளை உடையவனாய் தவிக்கலானான்.

57. அவிஷயே விபதா3ம் அஸுராந்தகே புநர் இயேஷ நிகார பரம்பராம்
நியதி: ஏகமுகீ து3ரதிக்ரமா க்ருததி4யா கிமுதாவிலசேதஸா

முன் ஸ்லோகத்தில் மோகமும் கலக்கமும் கொண்ட கம்சன் செய்வதறியாது பரிதவித்தான்.
இங்கு பாபம் ப்ரக்ஞாம் நாசயதி என்பதேற்கேற்ப விபத்துக்களுக்கு இலக்காகாதவனும் அசுரர்களுக்கு யமனாக இருப்பவனுமான
கண்ணனிடத்தில் மேலும் மேலும் அபகாரத்தைப் பண்ண வேண்டுமென்று திட்டம் கொண்டான். நியதி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரிதானே?
அதை மஹா ப்ரக்ஞன் ஆனாலும் மீள முடியாத போது கலக்க முடையவன் மீறமுடியுமா?

58. பரிப3பூ4வ சுகோப விஸிஷ்மயே பரிஜஹாஸ ஹரிம் ப்ரஜக3ர்ஜ ச
பரிணதேந ப4வாந்தர வாஸநா க்3ரஹ கு3ணேந ப4ஜந் ப4விதவ்யதாம்

முன் ஸ்லோகத்தில் அபஹாரம் பண்ண வேண்டுமென உறுதி பூண்டான் என்று கூறுகிறார்.
இந்த ஸ்லோகத்தில் அதன் பயனாக அவனிடம் உடனே ஏற்பட்ட அங்க விகாரங்களைக் கூறுகிறார்.
ஹரியை பரிஹஸித்தான். அவனை நினைத்து முழக்கமும் செய்தான். என்னை அபஹாரம் பண்ண எண்ணுகிறான் என்று
தனது பலத் திமிரினால் பரிஹஸித்தான் என்கிறார் ஸ்வாமி அப்பைய தீக்ஷிதர்.
இங்கு ஹரிம் என்ற ப்ரயோகத்திற்கு சிங்கம் என்ற பொருள் கொண்டு, வந்திருப்பது சிங்கம் என்றறியாமல் சிங்கத்துக்கு எதிரில்
கர்ஜித்தான் என்றும் கொள்ளலாம் என்கிறார் சேவா ஸ்வாமிகள். அஹங்காரிகள் இவ்வாறு பரிஹஸிப்பது இயற்கை.
முன் ஜென்மத்தில் செய்த அபஹார வாசனை காரணமாக ஆக்ரஹம் ஏற்பட்டு விதிக்கு வசப்பட்டவனாகி
இத்தகைய சேஷ்டைகளைச் செய்யலானான்.

59. க்வசந தா4மநி கம்ஸ நிவேதி3தே ஸப4யம் ஆநகது3ந்து3பி4 ஆவஸத்
ஸ்ம்ருதிக3தேந ஸுதேந ஸஜீவிதா தி3நசதாநி நிநாய ச தே3வகீ

புத்ரனைப் பிரிந்திருக்கும் வஸுதேவர் கம்சன் ஓர் இல்லத்தைக் காட்டி இங்கே இருக்க வேண்டுமென்று அறிவித்ததால்
அச்சத்துடன் அங்கே தங்கலானார்கள். தேவகியும் புதல்வனைப் பிரிந்த துக்கத்துடன் அவனை மனத்தில் நினைத்துக் கொண்டே
உயிர் தரித்து நூற்றுக்கணக்கான நாட்களைக் கழிக்கலானாள்.

60. விக3த கந்யகயா ச யசோத3யா நியதி ஸம்ப்4ருத நிர்ப4ர நித்3ரயா
சிர ஸமாக3த ஜாக3ரயாந்திகே ஹரிர் அபத்யம் அத்ருச்யத த4ந்யயா

இந்த ஸ்லோகத்தில் கோகுலத்தில் நடந்தவற்றை விவரிக்கிறார். தனது மகளை இழந்தது கூடத் தெரியாமல்,
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ என்பது போல் ஆழ்ந்த உறக்கம் கொண்டவள் வெகுநேரம் கழித்தே விழிப்புணர்ச்சி பெற்றவள்
மஹா பாக்யத்தின் பயனாக தனது அருகில் ஹரியை மகனாகக் கண்டாள். கார் வண்ணன் பெருமானோ என்று கண்டு தன்யையானாள்.

61. யத் அவபு4த்4த3 நிராகுல நீதிபி4: முநிக3ணைர் அது4நாபி விம்ருக்3யதே
ததி3த3ம் ஆக3ம மௌளி விபூ4ஷணம் விதி4 வசாத் அப4வத் வ்ரஜபூ4ஷணம் (ஸ்ரீமத் பாகவதம் 10/5/1-18)

கசடற ந்யாயங்களை நிரூபிப்பதில் கை தேர்ந்த முனிவர்கள் திரள் திரளாகக் கூடியும் எந்த தத்துவத்தைத் தேடிக் கொண்டே
யிருக்கின்றனரோ வேதாந்தங்களிலே விளங்கும் அந்த சிறந்த தத்துவமானது வேதாந்தங்களுக்குப் பூஷணமாய் விளங்குவது போல
ஆய்ப் பாடிக்கும் அணி கலனாய் விளங்கி நின்றது என்னே பாக்யம்!

62. அநக4வத்ஸம் அநாகுலதே4நுகம் ப்ரசுர து3க்3த4ம் அசோரப4யோத்3ப4வம்
வ்ரஜம் அநாமயவிச்வஜநம் விபு4: க்ருதயுகா3ஸ்பத3கல்பம் அகல்பயத்

கன்றுகள் தீங்கின்றியும் ஆவினம் அல்லல் அன்றியும், திருட்டு பயமே ஏற்படாததும், கற்றைக் கணங்கள் நிரம்பிய பால் பெருக்குடையதும்,
எத்தகைய பிணியுமில்லாத மக்களை உடையதும், க்ருத யுகமோ என்று எண்ணலாம்படி கோகுலத்தை ஆக்கி விட்டான்.
அவன் விபுவானதால், அவனது வைபவம் தானே!

63. அஜநி கோ3பக்3ருஹேஷு மநோரமை: அமித காந்திபி4ர் அப்ஸரஸாம் க3ணை:
யத் அநுபூ4தி ரஸேந ஸமேஷ்யத: சரண யாத3வ சைசவ யௌவநே

இடையர்களின் இல்லங்களிலே அளவற்ற அழகு பொருந்தியவரும், மனத்திற்கு இனியவருமான அப்ஸரஸ்கள்
திரள் திரள்களாகத் தோன்றினார்கள். அவர்களுக்கும் நமக்கும் சரணான கண்ணனின் சைசவ நிலையும், யௌவநமும்
அவர்களின் அனுபவ ரஸச்சுவை பெறுதலை எதிர்பார்க்கும் அளவுக்கு ஆயிற்று.
சைசவம் – சிசுவான நிலை யௌவநம் ஸ்த்ரீ ஸுகாதிகளை அனுபவிக்கும் நிலை.
சைசவானுபவம் பெற்றோர்க்கும், உற்றார்க்கும் மற்றும் யௌவநாநுபவம் அப்ஸரஸ்களுக்கும் என்பதாம்.

64. ஸுர மஹீஸுர தோஷணம் ஆத3ராத் நவம் உபாதி3த நந்த3 உதா3ரதீ4:
தரல கோ3பக3ணாக3ம ஸங்குலம் தநய ஜன்ம மஹோத்ஸவம் அத்3பு4தம்

முன் ஸ்லோகத்தில் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமிகள் அனுபவிக்கப் போகும் வைபவத்தினை விவரிக்கிறார்.
இதில் மஹா மனஸ்வியான நந்தகோபர் செய்தருளும் வைபவத்தினை விவரிக்கிறார்.
நந்தகோபர் ஆதுரத்துடன் தேவர்களையும் ப்ராம்மணர்களையும் மகிழச் செய்தார். உதாரமான மனதை உடைய நந்தகோபர்,
இங்கு மங்கும் மகிழ்ச்சியோடு சஞ்சரிக்கும் கோபர்களின் கூட்டத்தினால் நெரிசல் மிகுந்ததும், ஆச்சர்யமானதும் முற்றிலும்
புதியதுமான தனது மகனின் பிறந்தநாள் மஹோத்ஸவத்தை செய்தார். (பெரியாழ்வார் திருமொழி 1/1/2)

65. அதி4சகார வதா3ந்யமணே: ச்ரியம் வ்யதி4த கல்பதரோ: அநுகல்பதாம்
அஜநயத் ச ஸுத ப்ரஸவோத்ஸவே மஹதி மேக4 விகத்தந மோக4தாம
கொடையில் சிறந்ததான சிந்தாமணியின் சோபையை அடைந்தார். கல்ப வ்ருஷம் கொடுப்பதில் இவருக்குப் பின் தங்கி விட்டது
என்ற நிலையை ஏற்படுத்தி விட்டார். பெரியதொரு வைபவமான தனது மகனின் பிறந்தநாள் விழாவிலே,
கொடுப்பாரில் என்னைப் போல் பக் ஷபாதம் இன்றி கொடுப்பவர் தாம் உண்டோ என்று பேரிடி முழக்கம் செய்யும் மேகம்
நந்தர் முன்னிலையில் நிற்கவும் தகுதி யற்றதாகி விட்டது. வாரி வழங்கும் வள்ளலானார்.

66. நிதி4ம் அநந்தம் இவ ஸ்வயம் உத்திதம் நிரவதி4ம் நிஜபா4க­3ம் இவோதி3தம்
வ்ரஜபு4வ: ப்ரதிலப்4ய: ரமாபதிம் ஜஹஸு: ஐந்த்3ரம் அஸாரதரம் பத3ம்

திருவாய்ப்பாடியில் இருந்தவர்கள் தாமே காணவான முடிவற்ற நிதியைப் போலவும் எல்லையற்ற தங்கள் பாக்யமே
இவ் வண்ணம் தோன்றி விட்டது போலவுமான லக்ஷ்மிபதியை அடைந்தவர்கள் சிறிதும் சாரமில்லாத இந்திரபதத்தை
பரிஹசிக்கலாயினர். (இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமே ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்)

67. புத்ரம் ப்ரஸூய தபஸா புருஷம் புராணம் காலம் சிரம் விதி4வசாத் க்ருதவிப்ரகர்ஷௌ
சங்கா கலங்கித தி4யாவபி தம்பதீ தௌ தத் வைப4வ ஸ்மரண சாந்தருஜௌ அபூ4தாம்

முன் ஸ்லோகத்தில் கோகுலத்தில் வசிக்கும் பேறு பெற்றவர்கள் கண்ணனை அடைந்ததன் பயனாக இந்திர பதவியையும்
மதிக்காதவர்களாய் சகல சௌபாக்யத்தோடு வாழ்ந்தனர் என்று கூறினார். இந்த ஸ்லோகத்தில் புராண புருஷனை பெருந்தவத்தால்
மகனாகப் பெற்றும் விதியால் அக்குழந்தையுடன் சேர முடியாம விலகியே இருக்க வேண்டிய நிலையில் இருந்து வரும்
தேவகியும் வஸுதேவரும் சந்தேகம் அச்சம் ஆகியவற்றால் கலக்கமுற்று இருப்பினும் அம்மகனின் வைபவத்தை நினைத்து
தாபம் தணியப் பெற்றவர்களாய் வாழ்ந்திருந்தனர். (பெருமாள் திருமொழி 7-ம் திருமொழி ஆலை நீள் கரும்பு)

68. நந்த3ஸத்மநி நவேந்து3ஸந்நிபௌ4 வாஸம் ஏத்4ய வஸுதே3வ நந்த3நௌ
வ்ருத்4தி3ம் ஆபது: அநேஹஸா ஸ்வயம் ஸ்வாது போ4கஜநநீம் ஸுபர்வணாம்

வஸுதேவரின் புதல்வர்கள் இருவரும் புதிய சந்திரனின் ஒளீயும் அழகும் உடையவராய் நந்தளின் திருமாளிகையிலே
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, தேவர்களும், பருவமுடையவரும் சுவைக்கும்படியான
போக ஸம்ருத்தியுடன் வளம் பெற்று வந்தனர்.

——————

ஸ்ரீ கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

——————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading