ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ இராமன் குடிகொண்ட அற்புத க்ஷேத்திரம் திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ தில்லை விளாகத்தில் உள்ள
ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில். இன்றேறக் குறைய 150 ஆண்டுகளுக்கு முன் குளம் வெட்ட தோண்டியபோது
பூமியில் ஸ்வயம்புவாய் ஸ்ரீ சீதாதேவி ஸமேத ஸ்ரீ ராமப்பிரானின் 5அடி உயர பஞ்சலோக சிலைகள் கிடைத்தன.
மூலவரே பஞ்சலோக விக்ரஹமாய் எழுந்தருளி இருக்கும் க்ஷேத்திரம் இது.
ஸ்தலபுராணம்:
குரைகடலை அடலம்பால் மறுகவெய்து – குலைகட்டி மறுகரையை அதனாலேறி*
எரிநெடுவேல் அரக்கரொடு இலங்கை வேந்தன்-இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து –
பின் திரும்பும் வழியிலே
ஸ்ரீ பாரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைகிறார். முனிவர் அவருக்கு விருந்தளித்து உபசரிக்கிறார்.
அப்போது 14 ஆண்டு காலம் நிறைவுற்றதால் தமக்காக காத்திருந்து தாம் வராவிட்டால் அக்னியில் வீழ்வேன் என்று
ஸ்ரீ பரதன் வைத்த வேண்டுகோள் நினைவில் வர ஸ்ரீ அனுமனை அழைத்து ஸ்ரீ பரதனிடம் தாம் திரும்பும் செய்தியை தெரிவிக்க ஆக்ஞேபிக்கிறார்.
அவ்வண்ணமே செய்வதாய் ஸ்ரீ அனுமன் சொல்லின் செல்வனாய் கிளம்புகிறார்.
ஸ்ரீ பரத்வாஜ முனிவர் ஸ்ரீராமனை உபசரித்த இடமே தற்போது தில்லை விளாகமாக விளங்குகிறது.
கால ஓட்டத்தில் அனைத்தும் மறைந்து இது ஒரு சிவஸ்தலமாக விளங்கியது.
எம்பெருமான் கண்டெடுக்கப் பட்டபின் சிவன் கோவில் வளாகத்திலேயே எம்பெருமானுக்கு கோவில் எழுப்பப்பட்டது.
தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த எம்பெருமானுக்கு பரமசிவனார் தம்மிடத்தினையே தந்ததால்
இது தில்லைவளாகம் ஆயிற்று.
ஸ்ரீ ராமபிரானின் கோவில் பக்கத்திலேயே சிவபெருமான் கோவிலும் நடராஜர் சன்னதியும் ஆறுகால பூஜையும் சிறப்பாக நடந்து வருகின்றன.
ஸ்ரீகோதண்டராமன். – நின்ற திருக்கோலம்.
கிழக்கே திருமுகமண்டலம்.
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர
தன்னிகரிற் சிலைவளைத்து அன்று இலங்கை பொடி செய்த தடந்தோளன் மகிழ்ந்து இனிதுறை கோவில்.
ஸ்ரீ கோதண்டத்தையும் ஸ்ரீ இராமசரத்தினையும் தன் கைகளில் கொண்டு முடிவில்லாததோர் எழில் திருமுகத்தனாய் காட்சியளிக்கிறார் ஸ்ரீராமபிரான்.
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடலரக்கர்தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த
ஸ்ரீ கோலவில்லிராமன் முகத்தில் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தருகிறார்.
திரிபங்கம் என்று சொல்லப்படும் மூன்று வளைவுகளுடன் கூடிய திருமேனி. திருவிளையாடு திண்தோள்,
இடுப்பு மற்றும் முழந்தாள் வளைவுகள். திருமார்வில் போரினால் ஏற்பட்ட வடுக்கள்,
தேமல்கள் மனிதர்களுக்கு உள்ளது போலவே சேவையாகின்றன.
கைகளில் விரல்களும் மனிதர்களைப் போலவே நீண்ட தனித்தனி விரல்களுடன், நகங்களுடன் சேவையாகின்றன.
காமாராம ஸ்திரகதலிகா ஸ்தம்ப ஸம்பாவநீயம்
க்ஷௌமாச்லிஷ்டம் கிமபி கமலா பூமி நீளோபதாநம்
ந்யஞ்சத் காஞ்சீ கிரண ருசிரம் நிர்விசத் யூருயுக்மம்
லாவண்யௌக த்வயமிவ மதிர் மாமிகா ரங்கயூந:
ஸ்வாமி வேதாந்த தேசிகன் அரங்கனது தொடையழகை மன்மதனது தோட்டத்தில் செழித்து வளர்ந்த
இரண்டு வாழைத்தண்டுகளுக்கு ஒப்பிடுவது போல எழிலார்ந்த தொடைகள்.
மனிதர்களின் முழந்தாள்களைப் போலவே உருண்டு திரண்ட முழந்தாள்கள்.
கால்களில் பச்சை நரம்போடுவது சேவையாகிறது.
கால்களில் “பாராளும்படர் செல்வம் பரதநம்பிக்கே யருளி ஆராவன்பு இளையவனோடு அருங்கானம் அடையுமும்
திருத் தாயார் ஸ்ரீ கௌசல்யை கட்டிய ரக்ஷையும் சேவையாகின்றது.
கால்களிலும் மச்சங்கள், தேமல்கள் வடுக்கள் மற்றும் காகுத்தன் தன் திருவடியிலும்
அதேபோல் நீண்ட திருவிரல்களும் பத்து சந்திரனையொத்த நகங்களும் சேவையாகின்றன.
திருக்கரங்களில் ஸ்ரீ கோதண்டம் மற்றும் ஸ்ரீ இராமசரம். மற்ற திருத்தலங்களில் அர்த்தசந்த்ர பாணத்துடன் காட்சியளிக்கும்
ஸ்ரீராமன் இங்கு ஸ்ரீ ராமசரம் எனப்படும் அம்புடன் காட்சி தருகிறார்.
ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீ இராமசரம் மூன்று இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
காகாசுரன், வாலி மற்றும் இராவண வதத்திற்காக ஸ்ரீராமன் அதைப் ப்ரயோகிக்கிறார்.
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடி பரவசமடையலாம்.
ராமஸ்ய தயிதா பா4ர்யா நித்யம் ப்ராண ஸமாஹிதா
ஜனகஸ்ய குலே ஜாதா தேவமாயேவ நிர்மிதா
ஸர்வலக்ஷண ஸம்பந்நா நாரீணாம் உத்தமா வதூ: (ஸம்க்ஷேப ராமாயணம் )
ஜனகரின் குலத்தில் உதித்தவள், ராமனின் ப்ராணன் போன்றவள், தெய்வங்களின் மாயையால் பிறந்தவள்,
பெண்களில் சிறந்தவள், ராமனுக்கு மகிழ்ச்சி ஊட்டக்கூடிய காரியங்களையே செய்பவள்.
தசரதனின் மருமகள் ரோஹிணி சந்திரனை பற்றுவது போல் ஸ்ரீ ராமனைத் தொடர்ந்த வாராரும் முலை மடவாள் ஸ்ரீ வைதேவி!
மாற்றுத்தாய் வனம்போகேயென்றிட* ஈற்றுத்தாய்பின் தொடர்ந்து எம்பிரான் என்றழ
* கூற்றுத்தாய் சொல்லக்கொடிய வனம் போன * ஸ்ரீ ராமனைப் பின்பற்றி சென்ற மத்தமாமலர்க்குழலி!
கனங்குழையாள் பொருட்டாக் கனை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழுவேற்றுவித்த எழில்தோள் எம்மிராமனின்
ஸ்ரீ மைதிலி முகத்தில் தன் நாதனை திரும்ப அடைந்த மகிழ்ச்சி இலங்க கையில் தாமரையுடன் காட்சி யளிக்கிறாள்.
கல்யாணத் திருக்கோலம் என்பதால் ஸ்ரீ சீதையின் புடவையும் எம்பெருமானின் வஸ்திரமும் முடிந்து வைத்த கோலத்தில்
தான் எப்பொழுதும் சேவை சாதிக்கிறார்கள்.
ராமனுக்கு இடப்புறத்தில் இலக்குவன்.
ஓதமாகடலைக் கடந்தேறி * உயர்கொள் மாக் கடிகாவை யிறுத்து *
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடியிலங்கை மலங்க எரித்து* தூது வந்த ஸ்ரீ வாயு புத்திரன்.
எல்லாத் தலங்களிலும் அனுமன் கூப்பிய கையோடு காட்சி தருவார்.
இந்த க்ஷேத்திரத்தில் ராமனின் ஆக்ஞையை ஏற்கும் தோற்றத்தில் தோளில் சார்த்திய கதையோடு சேவை சாதிக்கிறார்.
இந்த அனுமனுக்கு தயிர்சாத நைவேத்தியம் விசேஷம். வரப் ப்ரசாதி. அனுமனுக்கு தயிர் சாத ப்ரார்த்தனை செய்து கொண்டால்
ஒரு மண்டல்த்திற்குள் அவர்களின் ப்ரார்த்தனை கைகூடுவது கண்கண்ட உண்மை.
ஸ்ரீ இராமனை ஸ்ரீ ஜானகியோடு சேர்த்து வைத்த ஸ்ரீ அனுமன் நம்முடைய ப்ரார்த்தனைகளையும் செவ்வனே நிறைவேற்றி வைக்கிறார்.
திருமணம் கைகூடாதவர்களும், புத்திரபாக்யம் அற்றவர்களும் இந்த மாருதியை ப்ரார்த்தனை செய்ய மனம் போல் மாங்கல்யம் தான்.
முன்பு இரட்டைக் கொம்புடைய தேங்காய் இங்கு விசேஷம். இப்போது அந்த ம்ரம் பட்டுப் போய்விட்டது.
ஸ்ரீ சிறிய திருவடி அனுமன் அருகிருக்க, ஸ்ரீ பெரிய திருவடி கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் சன்னதிக்கு எதிரே காட்சியளிக்கிறார்.
இவருக்கு பஞ்சமியில் உளுத்தம்பருப்பு மோதகம்(அமிர்தகலசம்) சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தால் ப்ரார்த்தனைகள் கைகூடும் என்பது உறுதி.
ஸ்ரீ ராமநவமி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
உற்சவத்தின் ஆறாம் நாள் ஸ்ரீராம – ஸ்ரீ சீதாதேவி திருக்கல்யாணம் நிகழும்.
ஆலயத்தின் பின் பகுதியில் ஸ்ரீ ராம தீர்த்தமும், தெற்குப் பக்கத்தில் ஸ்ரீ சீதா தீர்த்தமும் வடக்கு திசையில் ஸ்ரீ அனுமார் தீர்த்தமும் உள்ளது.
ராமர் கோவிலின் வடக்குப்புறத்தில் சிவன் கோவில்.
கிழக்கு நோக்கி காட்சி தரும் ஸ்ரீ ராமனின் முன் மண்டபத்தில் நாம் வடக்கு நோக்கி நின்றோமானால் இருவரையும் ஒருசேர தரிசிக்கலாம்.
சிவன் கோவிலில் நடராஜர் சன்னிதியும் உண்டு. ஆகவே இந்த தலம் ஆதி தில்லை என்றும் அழைக்கப்படுகிறது.
நேரடியாக ரயில் வசதியோ பஸ் வசதியோ இல்லை.
ஸ்ரீ மன்னார்குடியில் இறங்கி பெருகவாழ்ந்தான் வழியாக முத்துப்பேட்டை சென்று அங்கிருந்து
ஸ்ரீ தில்லை விளாகத்தை பேருந்தின் மூலம் அடையலாம்.
ஸ்ரீ மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை சாலையில் கோபாலசமுத்திரத்தில் இறங்கி உள்சாலை வழியாக நடந்தோ
அல்லது வேறு வாகனங்கள் மூலம் சென்றடையலாம். தங்கும் வசதியோ உணவு வசதியோ இல்லை.
முன்பே தகவல் சொன்னால் ததியாராதனத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.
சென்னையிலிருந்து திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம் போன்ற இடங்களுக்கு ரயில் வசதி இருப்பதால்
அங்கே இறங்கி பின்னர் கார் மூலமாகவும் செல்லலாம்.
கோவில் நடை திறக்கும் நேரம் காலை 7.00 – 12.00. மாலை 5.00 – 8.00 .
தகவல் தொடர்புக்கு : ஸ்ரீ கோதண்டராம பட்டர்
அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோவில்
தில்லைவிளாகம், திருவாரூர் மாவட்டம் – 614706
தொலைபேசி : 8056856894
ஸ்ரீ சீதா தேவி, ஸ்ரீ லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமசந்திரனுக்கு மங்களம்
——————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா தேவி, ஸ்ரீ லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமசந்திரன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply