ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-26-யந்த்ரிகா பத்ததி -குமிழ்கள் அமைப்பும் அனுபவமும் –குடை போன்றவை -மேலும் பல -படலம் -ஸ்லோகங்கள் -801-810-

இந்தப் பத்ததி முழுவதும் பாதுகைகளில் காணப்படும் குமிழை வர்ணிக்கிறார்.

———

உதக்ர யந்த்ரிகாம் வந்தே பாதுகாம் யந்நிவேசநாத்
உபயர்பி பதம் விஷ்ணோ: ப்ரத்யாதிஷ்ட ப்ரஸாதநம்—-801-

மேலே நீட்டியபடி உள்ள குமிழைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் வணங்குகிறேன்.
இப்படியாகக் குழிழைத் தனது மேற்பக்கத்தில் வைத்துள்ளதால் ஸ்ரீரங்கநாதன் திருவடிகள்,
”மேற்பக்கத்தில் தங்களுக்கு ஆபரணம் வேறு வேண்டாம்”, என்று தள்ளியபடி உள்ளன.

மேல் முகமாக நுனியைக் கொண்டுள்ள குமிழ் கொண்ட ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன் –
பெருமாள் திருவடியை ஸ்ரீ பாதுகையில் வைக்கிறார் -குமிழ் மேலே இருக்கிறது -ஸ்ரீ பாதத்திற்கு மேலே ஆபரணமாக –
எப்படி ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பாதத்திற்குக் கீழ்ப்புறம் அலங்காரமாக இருக்கிறதோ அதே போலே –
ஆகவே திருவடிக்கு மேலே வேறு ஒரு திரு ஆபரணம் வேண்டுவது இல்லை –

———————————————————–

ப்ரஸபம் ப்ரதிருத்ய கண்ட காதீந்
பவதீ சௌரி பதாம் புஜாத் அதஸ்தாத்
சரணாவநி தாரயதி அமுஷ்மிந்
உசிதச் சாயம் உபர்யபி ப்ரதீகம்—-802-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளின் கீழ்பக்கத்தில் முள் போன்றவை
ஏறாமல் வலிவுடன் நீ தடுத்துவிடுகிறாய். அந்தத் திருவடிகளின் மேற்புறத்தில் தகுதியான
அழகிய நிழலை உண்டாக்குகின்ற குமிழ் என்ற அவயவத்தைத் தாங்கி நிற்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடிக்குக் கீழ்ப் புறம் இருந்து கொண்டு பாதையில் கிடக்கும் முள் முதலியவற்றைப் பலாத்காரத்துடன்
வலிந்து நசுக்கிப் பெருமாளுக்கு உதவுகிறாய் -மேல் பாகத்திலேயோ குமிழ் என்கிற நிழல் தரும் குமிழைக் கொண்டு
அழகே தருகிறாய் -சாயா -நிழல் -அழகு -இரண்டு பொருள்கள் –

——————————————————————–

முரபிந் மணி பதுகே த்வதீயாம்
அநகாம் அங்குளி யந்த்ரிகாம் அவைமி
ஸ்வயம் உந்நமிதாம் ப்ரதேசிநீம் தே
பரமம் தைவதம் ஏகம் இதி ருசந்தீம்—803–

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி விரல்களுக்கு இன்பமான
பிடிப்பாக உள்ள குமிழானது தானாகவே மேல்புறமாக நீண்டும், ”அனைத்திற்கும் மேற்பட்ட தெய்வம் ஸ்ரீரங்கநாதனே”,
என்று உறுதிபடக் கூறும் ஆள்காட்டி விரல் போன்றும் உள்ளதாக நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பகவானின் பாதுகையே உன் அழகிய குமிழ் பெருமாள் திருவடி விரல்களுக்கு இடையில் அவற்றின் பிடிப்புக்காக இருப்பதை அறிவேன் –
ஆயினும் அது அறுதியிட்டு அழுத்தமாகச் சொல்ல அடையாளமாகக் காடும் ஆள்காட்டி விரலாகத் தோன்றுகிறது –
பல தெய்வங்கள் அவை சமம் என்று எல்லாம் கலக்குகிறவர்களுக்கு மறுப்பாக -எல்லாத் தெய்வங்களுக்கும் மேற்பட்ட பர தெய்வம்
நாராயணன் ஒருவனே என்று பகவத் ஸ்துதியாக அறுதியிடுகிறதோ-குற்றம் அற்ற குமிழ் -அப்படித்தான் எண்ணுகிறேன் –

————————————————————————-

ஸவததே மணி பாதுகே த்வதீயா
பத சாசா யுக யந்த்ரிகா விசித்ரா
பரமம் புருஷம் ப்ரகாச யந்தீ
ப்ரணவஸ் யேவ பரா அர்த்த மாத்ரா—-804-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினகற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஆச்சர்யம் ஏற்படுத்துவதாக உள்ளதும்,
உன் மீது உள்ளதும் ஆகிய இந்தத் திருவடிகளில் இரண்டு விரல்களுக்கும் பிடிப்பாக உள்ள குமிழ் எப்படி உள்ளது என்றால் –
உயர்ந்தவனான ஸ்ரீரங்கநாதனைக் காண்பிக்கின்ற ப்ரணவ மந்த்ரத்தின் இறுதியில் உள்ள ”ம” என்ற எழுத்து போன்று
(ம என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்) இன்பமாக உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே விரல்களுக்கு இடையில் இருக்கும் இந்த ஆச்சர்யமான பிடிப்பு பிரணவ உச்சாரணத்தின் போது
அந்த நாதத்தின் மேல் கேட்கும் பிரசித்தமான அர்த்த மாத்ரை என்னலாம் -பிரணவம் -அகார உகார மகார அஷாரங்களின்
சேர்க்கையாகப் பெருமாளைச் சொல்லும் -பரம புருஷ வாசகம் -இப்படி உன் குமிழைப் பெருமாளின் நிர்தேசகமான
பிரணவ நாத அர்த்த மாத்ரையாகச் சொல்லுவது எனக்கு மிகவும் ரசமாய் இருக்கிறது –

———————————————————————————-

அநுயாத மநோ ரதா முராரே:
பவதீ கேளிரத ஸ்ரியம் ததாதி
சரணாவநி யந்த்ரிகா தவைஷா
தநுதே கூபர ஸம்பதம் புரஸ்தாத்—-805-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை அடைந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற எண்ணியவளாக,
நீ நினைத்தபோது ஸ்ரீரங்கநாதனை அவர்களிடம் அழைத்துப் போகின்ற தேர் போன்று உள்ளாய்.
உனது குமிழ் என்பது அந்தத் தேரின் முன்னே காணப்படும் ஏர்க்கால் போன்ற தோற்றம் அளிக்கிறது.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாளின் மநோ ரதத்தை அனுசரித்து அதே வேகத்தில் நடக்கும் ஒரு விளையாட்டு ரதம் போலே ஸோபிக்கிறாய்
உன்னுடைய குமிழ் தேருக்கு முன்னாள் ஏர்க்கால் கட்டி அதை நிறுத்தி வைக்கும் முளை போல் தோற்றும் –

———————————————————————–

சங்கே பவத்யாஸ் ஸுபகம் ப்ரதீகம்
ரங்கேச பாதாங்குளி ஸங்க்ரஹார்த்தம்
த்ராணாய பாதாவநி விஷ்டபாநாம்
ஆஜ்ஞாகரீம் அங்குளி முத்ரிகாம் தே—-806-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி விரல்களுக்கு ஏற்ற பிடிப்பாக உனது குமிழ் உள்ளது.
இந்தக் குமிழை – அனைத்து உலகங்களையும் காப்பாற்றும் பொருட்டு, உலகினருக்கு இடையூறு செய்பவர்களைக் கண்டு,
”இப்படிச் செய்யாதீர்கள்”, என்று கட்டளை செய்கின்ற உனது ஆள்காட்டி விரலின் முத்திரை என்றே நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே திருவடி திருவிரல்கள் பிடிப்புக்கு உதவும் -குமிழ் உலக ரஷணத்தைக் கருதி உபத்ரவம் செய்யும் துஷ்டர்களை நோக்கி
இப்படித் தப்பு செய்யாதீர்கள் -செய்தால் விட மாட்டேன் -தண்டிப்பேன் -என்று பயமுறுத்தி உத்தரவு பிறப்பிக்கும்
நிலையில் உள்ள ஆள்காட்டி விரல் தான் என்று பூஜிக்கிறேன் –

——————————————————————

அலங்க்ருதம் கர்ணிகயா உபரிஷ்டாத்
உதக்ர நாளம் தவ யந்த்ரிகாம்சம்
பத்மாபதே: பாத ஸரோஜ லக்ஷ்ம்யா:
ப்ரத்யேமி பாதாவநி கேளி பத்மம்—807–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது குமிழின் மேற்புறம் தாமரை மலர்களின் நடுப்பாகத்தில் உள்ள கர்ணிகை
என்னும் பாகத்தினால் அலங்கரிக்கப்பட்டது போன்று உள்ளது. இப்படியாக உள்ள இந்தக் குமிழைக் காணும்போது –
ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கராஜனின் திருவடிகள் என்னும் தாமரை மலரில் காணப்படும் மஹாலக்ஷ்மி,
தனது விளையாட்டிற்காகக் கையில் வைத்துள்ள தாமரைமலர் என்றே எண்ணுகிறேன்
(திருவடியில் உள்ள மஹாலக்ஷ்மிக்காக உள்ள தாமரை மலர் என்று குமிழ்களை வர்ணிக்கிறார்)

ஸ்ரீ பாதுகையே உனது பகுதியான குமிழ் மேலே தாமரைக் காய் போன்று நுனி யுறுப்பும் மேல் நோக்கிப் போகும் காம்பும் கொண்டது –
இது எனக்கு எப்படித் தோற்றுகிறது என்றால் பெருமாள் திருவடித் தாமரையில் லஷ்மி இருக்கிறாள்
அவள் திருக்கையில் வைத்து இருக்கும் விளையாட்டுத் தாமரைப் பூ தான் இது-என்று –

————————————————————————-

உபரி விநிஹிதஸ்ய கேசவ அங்க்ரே:
உபரி பதாவநி யந்த்ரிகாத்மிகா த்வம்
இதி தவ மஹிமா லகூ கரோதி
ப்ரணத ஸுரேஸ்வர சேகராதி ரோஹம்—808–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் மீது நீ குமிழ் ரூபமாக நிற்கிறாய்.
இதனால் உன்னை வணங்கி நிற்கின்ற தேவர்களின் க்ரீடங்களில் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் ஏறுகின்றன
என்ற பெருமையை, உனது பெருமை சிறிதாக்குகிறது.

எது ஒன்றின் மீது வைக்கப்படுகிறதோ, அந்தப் பொருளே உயர்ந்தது, கீழே உள்ள பொருள் சற்றே தாழ்ந்தது என்பது
பொதுவான உண்மை. தேவர்களின் க்ரீடங்களில் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் வைக்கப்படுவதால், அவை உயர்ந்தவையே.
ஆனாலும், அந்தத் திருவடிகள் மீது குமிழ் உள்ளதால், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் சற்றே தாழ்ந்தன.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாளின் திருவடிக்கு கீழ் இருந்து கொண்டு உன் உறுப்பான குமிழ் திருவடிக்கு மேலும் போவதை சேவிக்கும்
நான் சொல்கிறேன் இப்படி உன் பெருமை இருக்க நீ தேவர் ஸ்ரேஷ்டர்களின் தலை மீது ஏறுகிறாய் எனபது ரொம்ப அல்ப விஷயமாகும் –

——————————————————————–

நித்யம் பதாவநி நிபத்த கிரீட சோபம்
பத்மாலயா பரிசிதம் பதம் உத்வ ஹந்த்யா:
அங்கீ கரோதி ருசிம் அங்குளி யந்த்ரிகா தே
ஸாம்ராஜ்ய ஸம்பத அநுரூபம் இவ ஆத பத்ரம்—-809-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எப்போதும் ஸ்ரீரங்கநாச்சியாரால் பிடிக்கப்பட்டபடி உள்ளது.
இந்தத் திருவடிகள் உனக்குக் கிரீடம் போன்று உள்ளது. இப்படிப்பட்ட திருவடிகளைத் தாங்கும் உனது குமிழ் என்பது,
நீயே சக்ரவர்த்தினி என்பதை அறிவிக்கும் குடை போன்ற அழகான தோற்றத்தை அடைகிறது.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடியாகிற கிரீடம் ஏற்று இருக்கிறாய் -அது எப்படிப்பட்டது –
மஹா லஷ்மியின் பிடித்தல் பெற்றதாய் நீ ஏக சக்ராதிபதியாக மஹா ராணியாக இருக்க
உன் குமிழ் அப்பதவிக்கு ஏற்ப ஒரு திருக் குடை போல் தோற்றம் அளிக்கிறது –

——————————————————————

ப்ரதமா கலேவ பவதீ சரணாவநி பாதி ரங்க சந்த்ரமஸ:
ஸ்ருங்க உந்நதிரிவ யத்ர ஸ்ரியம் விபாவயதி யந்த்ரிகா யோக:—-810-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைக் காணும்போது ஸ்ரீரங்கத்தின் சந்த்ரனாகிய ஸ்ரீரங்கராஜனின்
முதல் கலை போன்று உள்ளாய். இப்படியாக உள்ள அந்தக் கலையின் நுனி போன்ற அழகை உனது குமிழ் ஏற்படுத்துகிறது.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க சந்த்ரனுடைய முதல் கலை போலே நீ விளங்குகிறாய் -உன் உருவம் அங்கனம் முதல் கலையை ஒத்தது
அதில் குமிழ் பிறையின் ஒரு நுனி உயர்ந்து இருப்பதான அழகை -அது குறிப்பிடும் சம்பந்தத்தைக் காட்டுகிறது –
பிறை நுனி ஒரு பக்கத்தில் உயர்ந்து இருந்தால் -மூன்றாம் பிறை போலே -அது நல்ல தானிய வளம் கொடுக்குமாம் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading