ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-13-பராக பத்ததி -ஸ்ரீ பாதுகா தூள் படலம் -ஸ்லோகங்கள் -351-380-

பாந்து வ: பத்ம நாபஸ்ய பாதுகா கேளி பாம்ஸவ:
அஹல்யா தேஹ நிர்மாண பர்யாய பரமாணவ:—-351-

அழகான தாமரை மலர் போன்ற திருநாபிக் கமலம் உடைய இராமன் ஸஞ்சாரம் செய்த போது,
அவனது பாதுகைகளில் இருந்து தூசிகள் கிளப்பின. அவை அகலிகையின் உடலை மீண்டும் உண்டாக்கும்
பரமாணுக்கள் போன்று தோன்றின. இப்படிப்பட்ட தூசிகள் உங்களையும் காப்பாற்றுவதாக.

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுடைய ஸ்ரீ பாதுகையின் துகள்கள் அஹல்யைக்கு உயர்ந்த சரீரத்தை உண்டு பண்ணின –
நமக்கும் எம்பெருமான் கைகர்யத்துக்கு உகந்த திவ்ய சரீரத்தை அருள வேண்டும் –

———————————————————————

தவ ஸஞ்சரணாத் ரஜோ விதூதம்
யதிதம் ரங்க நரேந்த்ர பாத ரக்ஷே
அலம் ஏதத் அநாவிலாநி கர்த்தும்
கதக க்ஷோத இவாஸூ மாநஸாநி—-352-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தேத்தாங்கொட்டையின் துகள்கள் தண்ணீரை எவ்விதம் தூய்மைப் படுத்துகின்றனவோ
அது போன்று, உனது ஸஞ்சாரத்தின் போது எழும் தூசிகள் மனதைத் தூய்மைப்படுத்திவிடுகின்றன.

ஸ்ரீ பாதுகையே -தேத்தாங்கொட்டை கலங்கின ஜலத்தைத் தெளிவிப்பது போலே உன் மீதுள்ள தூசி பக்தர்கள் மேலே பட்டாலும்
அல்லது நினைத்தாலும் -அவர்களுடைய கலங்கின மனது தெளிகின்றது –

—————————————————————————

புநருக்த பிதா மஹ அனுபாவா:
புருஷா: கேசித் அமீ புநந்தி விஸ்வம்
மதுவைரி பதாரவிந்த பந்தோ:
அபராகாஸ் தவ பாதுகே பராகை:—-353-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மதுசூதனனின் திருவடிகளுடைய பந்துவாக உள்ள உனது தூசிகள்,
இந்த உலகில் உள்ள சிலர் மீது விழுகின்றன. அப்படிப்பட்டவர்கள் ப்ரம்ம பதவி பெறவும் தகுதி உள்ளவர்கள் ஆகின்றனர் என்றாலும்,
அவர்கள் அதனை விரும்பாமல் உள்ளனர். இப்படிப்பட்ட உயர்ந்தவர்களே இந்தப் பூமியைத் தூய்மைப்படுத்துகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன் துகள்கள் எவர் மீதுபடுகின்றனவோ அவர் எம்பெருமானுடைய கைங்கர்ய சாம்ராஜ்யத்தைப் பரம புருஷார்த்தமாக
மதித்து மற்றவைகளை விரும்புவதில்லை .அப்படிப்பட்ட மஹான்கள் இவ்வுலகத்தையே சுத்தமாகச் செய்கிறார்கள் –
ஸ்ரீ பாதுகையின் பராக -துகள்கள் -சம்பந்தம் பெற்றவர்கள் அபராகர் -ஆசை அற்றவர்கள் ஆகின்றனர் -இது விசித்ரம் அன்றோ –

————————————————————————–

அபியுக்த ஜநோ நிஜார்ப்ப காணாம்
பஹுசோ ரங்க நரேந்த்ர பாத ரக்ஷே
அவலேப பிசாச மோசநார்த்தம்
ரஜஸா லிம்பதி தாவகேந தேஹாந்—-354-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனது பெருமைகளை உணர்த்த பெரியவர்கள் செய்வது என்ன?
அஹங்காரம் போன்ற பல பிசாசுகள் பீடித்துள்ள தங்கள் குழந்தையின் உடம்பை உனது துகள்கள் கொண்டு பூசி,
அந்தப் பிசாசுகளை விரட்டுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே நல்லவர்கள் ஆகிய பெரியோர் உன் மீதுள்ள தூசியை எடுத்துத் தங்கள் குழந்தைகள் மீது பூசி
கர்வம் முதலிய துர்க் குணங்கள் ஆகிற பிசாசத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகின்றனர் –

—————————————————————————

சிரஸா பரி க்ருஹ்ய லோக பாலா:
தவ ரங்கேஸ்வர பாதுகே ரஜாம்ஸி
விஷமேஷு பலேஷு தாநவாநாம்
வ்யபநீத அந்யசிரஸ்த்ரம் ஆவிசந்தி—355-

ஸ்ரீரங்கத்தின் நாயகனாகிய திருவரங்கனின் பாதுகையே! இந்திரன் முதலான தேவர்கள் உனது தூசிகளைத்
தங்கள் தலைகளில் பூசிக் கொள்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் தங்கள் தலைக்கு எந்த விதமான கவசமும்
அணியாமலேயே அசுரர்களுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டு, அவர்கள் கூட்டத்தில் புகுந்து விடுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே இந்த்ரன் முதலானோர் அஸூரர்களை வெல்லப் புறப்படும் போது உன் மீதுள்ள தூசியை சிரசில் வகித்து
வேறு தலைக் கவசம் இல்லாதவர்களாய் யுத்த பூமியில் பிரவேசிக்கிறார்கள் –

ஆசார்ய பக்தி உள்ளவர்களை ஆசை பொறாமை கர்வம் கோபம் முதலிய தீய குணங்களை அண்ட மாட்டா –

—————————————————————————-

க்ருதிந: சிரஸா ஸமுத் வஹந்த:
கதிசித் கேசவ பாதுகே ரஜஸ்தே
ரஜஸஸ் தமஸோ அபி தூர பூதம்
பரிபஸ்யந்தி விசுத்தமேவ ஸத்வம்—-356-

அழகான கேசத்தைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய துகள்களைத் தங்கள் தலைகளில்
கொள்கின்ற புண்ணியம் செய்தவர்களின் நிலை என்ன? அப்படிப்பட்டவர்கள் ரஜோ குணம், தமோ குணம் ஆகிய
இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஸத்வ குணம் நிறைந்த பரம பதத்தைக் காண்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய தூசியைத் தரிப்பவர்கள் ப்ரஹ்ம லோகம் வரையிலான சகல ஐஸ்வர்யத்தையும்
வெறுத்து அவற்றுக்கு அப்பாற்பட்ட பரம பதத்தையே பூரணமாகப் பார்த்துக் கொண்டே இருக்கின்றனர் –

———————————————————————–

அதிகம் பதம் ஆஸ்ரித: அபி வேதா:
ப்ரயத: ரங்கதுரீண பாத ரக்ஷே
அபிவாஞ்சதி ஸங்கமம் பராகை:
அபி ஜாதை: தவ தேவி நாபிஜாத:—357-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ப்ரம்மன் மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவனே என்றாலும்,
அவன் சிறந்த குலப் பெருமை உள்ள உன்னுடைய தூசிகளின் தொடர்பு அடைய விரும்புகிறான்
(இதனால் தான் நல் கதி பெறலாம் என்று எண்ணினான்).

ஸ்ரீ பாதுகையே மிகத் தாழ்ந்த குலத்தில் பிறந்தவரும் உன்னுடன் சம்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட பிறகு
உயர் குலத்தில் பிறந்ததாகத் தம்மைக் கருதுவர் –
உயர்ந்த பதவியில் இருந்தும் தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவர் தாம் உயர் குலத்தில்
பிறந்ததாகக் கருதப் படுவதற்கு உன்னுடைய தூள்களை விரும்புகிறார்கள் –

———————————————————————

ஸூத்தஸ்த்த்வ வபுஷா ஏவ பவத்யா
பாதுகே விரஜஸௌ ஹரி பாதௌ
அஸ்து கிம் புநரிதம் ரஜஸா தே
ஸூத்த ஸத்த்வ மயதா மனுஜாநாம்—-358-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ரஜோ குணம், தமோ குணம் இல்லாத தூய்மையான ஸத்வ குணம் மட்டுமே மேலிட்ட
திருமேனி கொண்டவளாக நீ உள்ளாய். உன் காரணமாகவே நம்பெருமாளின் திருவடிகளில் தூசி ஒட்டாமல் உள்ளது.
இது ஒருபுறம் இருக்கட்டும். நம்பெருமாள் பின்னே செல்பவர்களுக்கு உனது ரஜஸ் (தூசி) மூலம், அந்த ரஜஸ் (தூசி)
அவர்கள் மீது பட்டவுடன், அவர்களது ரஜோ குணம் போய் விடுகிறதே, இது எப்படி?
(ரஜஸ் மூலம் ரஜோ குணம் எப்படி நீங்குகிறது என்று வியக்கிறார்)

ஸ்ரீ பாதுகையே நீ சுத்த சத்த்வ மயமான திரு மேனியைக் கொண்டு எம்பெருமான் திருவடிகளை ரஜஸ் -புழுதி -அற்றதாகச் செய்கிறாய் –
ஆனால் பக்தர்கள் உன் ரஜஸ் சினால் -புழுதியினால் -சுத்த சத்வத்தை உடையவர்களாகச் செய்கிறாயே -அது எவ்வாறு –

———————————————————————————-

தத் ரஜஸ் தவ தநோதி பாதுகே
மாநஸாநி அகடிநாநி தேஹிநாம்
ப்ரஸ்தரஸ்ய பதவீக தஸ்ய யத்
வ்யாசகார முநி தர்ம தாரதாம்—-359-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய தூசிகளுக்கு மனிதர்களின் மனதை மென்மை யாக்கும் தன்மை உண்டு போலும்.
காரணம் – உனது தூசியினால் இராமன் சென்ற வழியில் இருந்த கல் ஒன்று மஹிரிஷியின் மனைவி
என்ற மென்மையாக பெண்ணாக ஆனது அல்லவா?

ஹே ஸ்ரீ பாதுகையே –உன்னுடைய துகள்கள் மக்களின் கடினமான மனத்தை மிகவும் மிருதுவாகச் செய்யும் தன்மை வாய்ந்தவை –
மிதிலை செல்லும் வழியில் இருந்த கடினமான ஒரு கல்லை முனிவரின் மனைவியாக அஹல்யையாக மாற்றிய பிறகு இது வெளிப்படை யன்றோ –

——————————————————————————

ரங்கேசயஸ்ய புருஷஸ்ய ஜகத் விபூத்யை
ரத்யா பரிக்ரம விதௌ மணி பாத ரக்ஷே
ஸீமந்த தேசம் அநவத்ய ஸரஸ்வதீநாம்
ஸிந்தூர யந்தி பவதீ சரிதா பராகா:—-360-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! பரம புருஷனாகிய ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீரங்கத்தில் சயனித்தபடி உள்ளான்.
அவன் இந்த உலகின் நன்மையை மனதில் கொண்டு வீதி வலம் வருகிறான்.
அப்போது உன்னிடம் இருந்து கிளம்பின தூசிகள், பெண்களின் தலையில் உள்ள வகுடில் வைக்கப்படும் குங்குமம் போன்று மாறின.

ஸ்ரீ பாதுகையே -லோக ஷேமத்தைக் கருத்தில் கொண்டு எம்பெருமான் திரு வீதியில் எழுந்து அருளுகிறார் –
அப்போது உன்னால் உண்டு பண்ணப்பட்ட தூளிகள் வேதங்கள் ஆகிற பெண்களின் வகிட்டிற்கு சிந்தூரம் சாற்றியது போல் ஆயிற்று –

——————————————————————————————–

மாந்யேந ரங்க ந்ருபதே : மணி பாத ரக்ஷே
சூடா பதாநி ரஜஸா தவ பூஷ யந்த:
கால க்ரமேண பஜதாம் கமலாஸ நத்வம்
நாபி ஸரோஜ ரஜஸாம் நிவஸந்தி மத்யே—361-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மிகவும் பெருமை உடையதும், போற்றத் தக்கதும் ஆகிய
உன்னுடைய தூசிகளை ஒரு சிலர் தங்கள் தலையில் ஏற்றுக் கொள்ளக் கூடும்.
அவர்கள் காலம் கழியக் கழிய வரிசையாக பகவானின் திருநாபிக் கமலத்தில் அமர வல்ல ப்ரம்ம பட்டம் அடைகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய தூசியைப் பக்தியுடன் சிரசில் தரிப்பவர்கள் பகவானின் நாபிக் கமல மகரந்த தூள்களின் இடையில்
வாசம் செய்யும் பிரம்ம பட்டம் முதலிய உயர்ந்த பதவிகளை அடைகிறார்கள் –

———————————————————————————

மாதர் முகுந்த சரணாவநி தாவகீநா:
சிந்தா வசீகரண சூர்ண விசேஷ கல்பா:
ஸஞ்சார பாம்ஸு கணிகா: சிரஸா வஹந்தோ
விஸ்வம் புநந்தி பத பத்ம பராக லேசை:—-362-

கண்ணனின் திருவடிகளை அவனது தாயான யசோதை போன்று காப்பாற்றும் பாதுகையே!
இந்த உலகில் உள்ளவர்களின் மனம் முழுவதும் உன் பக்கம் ஈர்க்கும் வண்ணம் உள்ள சொக்குப் பொடியாக உனது தூசிகள் உள்ளன.
அவற்றை ஒரு சிலர் தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றனர்.
அப்படிப் பட்டவர்களின் திருவடித் தூசி மூலமாக அவர்கள் இந்த உலகத்தைத் தூய்மைப் படுத்துகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திரு வீதியில் எழுந்து அருளும் போது உன்னால் கிளப்பட்ட தூசி பின்னால் வரும் பக்தர்கள் மீது படுகிறது –
அந்த தூசியைத் தலையில் தரிக்கும் மஹான்கள் சகல லோகங்களையும் தோஷம் இல்லாமல் செய்கிறார்கள் –
தங்கள் திருவடித் தாமரைகளின் தூள்களால் செய்கிறார்கள் என்றபடி –

———————————————————————————

ஆயோஜிதாநி அமலதீபி: அநந்ய லப்யே
பாதாவநி ச்ருதி வதூ படவாஸ க்ருத்யே
த்வத் ஸஞ்சர ப்ரசலிதாநி ரஜாம்ஸி சௌரே:
ப்ரக்யா பயந்தி பத பத்ம பராக சோபாம்—-363-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடமிருந்து கிளம்பும் தூசிகள் அனைத்தும்,
ஸ்ரீரங்கநாதனின் திருவடித் துளிகள் தவிர மற்ற ஏதும் சென்றடைய இயலாத, வேதங்கள் என்ற பெண்ணுக்கு
ஏற்ற வாசனைப் பொடிகளாக உள்ளன. இவ்விதம் மிகவும் கற்றவர்கள் கூறுகிறார்கள்.
அந்தத் தூசிகள் ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளிலிருந்து கிளம்பும் தூசிகள் என்று கூறுகிறோம்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எழுந்து அருளும் காலத்தில் உன்னால் கிளப்பப்படும் தூள்களை
வேதங்கள் ஆகிற பெண்கள் வாசனைப் பொடியாக தங்கள் உடம்பில் பூசிக் கொள்கிறார்கள் –
அவை பெருமாளுடைய திருவடித் தாமரையின் தூளிகளின் பெருமையை விளக்குகின்றன –

—————————————————————————–

மூர்த்தாநம் அம்ப முரபிந் மணி பாத ரக்ஷே
யேஷாம் கதாபி ரஜஸா பவதீ புநாதி
த்வாம் ஏவ தே ஸுக்ருதிந: ஸ்நபயந்தி காலே
மந்தாரதாம் ரஜஸா மகுட ஸ்யுதேந—-364-

முரன் என்ற அரக்கனை வீழ்த்திய கண்ணனின் திருவடிகளை அவன் தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே!
நீ ஒரு சிலரின் தலைகளை உன் மீது உள்ள தூசி கொண்டு தெளித்து, அவர்களைத் தூய்மைப் படுத்தக் கூடும்.
அப்படிப்பட்ட புண்ணிய சாலிகள் சரியான காலம் வந்தவுடன் இந்திரபதவி பெற்று விடுகின்றனர்.
அப்போது தங்கள் க்ரீடங்களிலுள்ள மந்தார மாலை கொண்டு உன்னை நீராட்டுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய தூள்களை பக்தியுடன் தலையில் தரிப்பவர்கள் இந்திர பட்டத்தைக் கொஞ்ச காலத்திலேயே அடைகிறார்கள் –
தங்கள் கிரீடத்தில் உள்ள மந்தார மாலையின் துகள்களால் வணங்கும் போது உனக்கு அபிஷேகம் செய்கிறார்கள் –

——————————————————————————–

ரத்யா விஹார ரஹஸா பரிதூஸராங்கீம்
ரங்கேஸ்வரஸ்ய லலிதேஷு மஹோத்ஸவேஷு
ப்ரஸ்போடயதி அவநத: மணி பாதுகே த்வாம்
கௌரீபதி: ஸவயம் இபாஜின பல்லவேந—-365-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் உத்ஸவ காலங்களில் உன்னைச் சாற்றிக் கொண்டு
திருவரங்கத்தின் திருவீதிகளில் ஸஞ்சாரம் செய்கிறான்.
அப்போது அந்த வீதிகளில் உள்ள புழுதி உன் மீது முழுவதுமாகப் படிந்து விடுகிறது.
இதனைக் கண்ட சிவன், உன்னை வணங்கியபடி, தனது தளிர் போன்ற யானைத் தோல் கொண்டு உன்னைத் துடைத்து வைக்கிறார்.

ஸ்ரீ பாதுகையே பெரிய உத்சவ காலங்களில் எம்பெருமானுடன் வந்த உன் மீது தூசி படிந்து விடுகிறது –
பரமசிவன் உன்னை வணங்கித் தன் மிருதுவான யானைத் தோலினால் உன்னைப் புழுதி இல்லாமல் துடைத்து விடுகிறார் –

——————————————————————————

நேதீயஸாம் நிஜபராக நிவேச பூர்வம்
ஸ்ப்ருஷ்ட்வா சராம்ஸி பவதீ பவரோக பாஜாம்
காடம் நிபீட்ய கருட த்வஜ பாத ரக்ஷே
மாநக்ரஹம் சமயதீவ பரைர ஸாத்யம்—366-

கருடனைக் கொடியில் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸம்ஸாரம் என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்களின் தலைகள்
உன் அருகில் வந்தவுடன், உன் மீது உள்ள தூசிகளை முதலில் அந்தத் தலைகள் மீது படியச் செய்கிறாய்.
பின்னர் அவற்றைத் தொட்டு, (சடாரி) அழுத்தமாகப் பிடித்துக் கொள்கிறாய்.
இதன் மூலம் யாராலும் ஓட்ட இயலாத அஹங்காரம் என்ற பிசாசை நீ ஓட்டி விடுகிறாய்.

ஸ்ரீ பாதுகையே திரு வீதியில் பெருமாளை சேவிக்க வந்தவர்களுக்கு உன்னை சாதிக்கிறார்கள் –
அப்பொழுது உன் துளிகளால் அவர்கள் தலையையும் தோள்களையும் தொட்டு
அவர்கள் இடமிருந்து கர்வம் முதலிய கெட்ட பிசாசுகளை விரட்டுவது போல் இருக்கிறது –

————————————————————————————

ஆபாத வல்லவ தநோ அகுமாரயூந:
பாதாவநி ப்ரவிசதோ யமுநா நிகுஞ்ஜாந்
ஆஸீத் அநங்க ஸமராத் புரத: ப்ரவ்ருத்த:
ஸேநா பராக இவ தே பதவீ பராக:—-367-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காண்பதற்குக் குழந்தை போன்று உள்ளவனும், உண்மையில் இது போன்ற பருவங்கள்
ஏதும் அற்றவனும் ஆகிய பரம புருஷனாகிய கண்ணன், ராஸ லீலைக்காக யமுனை ஆற்றின் கரைக்கு வந்தான்.
அப்போது உன்னிடமிருந்து தூசிகள் பறந்தன.
இவற்றைக் காணும் போது, நடக்க உள்ள மன்மத யுத்த்த்திற்கு முன்பாக சேனை கிளம்புவது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே யமுனை ஆற்றங்கரையில் கோபிகைகளுடன் விளையாடக் கண்ணன் எல்லாக் கொடி வீடுகளிலும் புகுந்து வந்தார்
அப்போது உன்னிடம் இருந்து தூளிகள் எம்பெருமானின் காமப் போருக்கு முன் உண்டான சேனையின் தூளிகள் போல் இருந்தன –

——————————————————————————–

கங்காபகா தட லதாக்ருஹம் ஆஸ்ரயந்த்யா:
பாதாவநி ப்ரசலிதம் பதவீ ரஜஸ்தே
ப்ராயணே பாவந தமம் ப்ரணதஸ்ய சம்போ:
உத்தூளநம் கிம் அபி நூதநம் ஆதநோதி—-368-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் உன்னைச் சாற்றிக் கொண்டு கங்கையின் கரையோரமாக நடந்தான்.
அப்போது உன் மீதுள்ள தூசிகள் அனைத்தும் அந்தக் கரையில் உள்ள புதர்களில் படிந்தன.
அந்தப் புதர்கள் அவற்றை எடுத்துத் தனது உடல் முழுவதும் பூசிக் கொள்ளும்படியாக உள்ள ஒரு பூச்சை அந்தத் தூசிகள் ஏற்படுத்துகின்றன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் உன்னைச் சாற்றிக் கொண்டு கங்கைக் கரையில் எழுந்து அருளிய போது உண்டான
தூசியைச் சிவன் தலை வணங்கி தோஷ நிவாரண அர்த்தமாக புதியதாகத் தன் உடலில் பூசிக் கொள்கிறார் –

———————————————————————————

அந்தே ததா த்வம் அவிலம்பிதம் ஆநயந்தீ
ரங்காத் புஜங்க சயநம் மணி பாத ரக்ஷே
காமம் நிவர்த்தயிதும் அர்ஹஸி ஸம்ஜ்வரம் மே
கர்ப்பூர சூர்ண படலை: இவ தூளிபிஸ் தே—-369-

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! என்னுடைய மரணம் ஏற்படும் நேரத்தில் நீ சிறிதும் தாமதம் செய்யாமல்,
ஸ்ரீரங்க விமானத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெரிய பெருமாளை அந்த இடத்திற்கு அழைத்து வரவேண்டும்.
அப்போது கர்ப்பூரத்தின் துகள்கள் போன்ற உன்னுடைய தூசிகள் என் மீது விழுந்தால், எனது வேதனைகள் முற்றிலுமாக மறைந்து விடும்.

ஸ்ரீ பாதுகையே என் கடைசிக் காலத்தில் நீ ரங்க நாதனை தாமதம் இன்றி எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு
பச்சைக் கற்பூரப் பொடி போன்ற உன் தூசியால் என் சகல பாபங்களையும் -தாபங்களையும் -நீக்க வேண்டும் –

————————————————————————

ரங்கேஸ பாத ஸஹ தர்மசரி த்வதீயாந்
மௌளௌ நிவேஸ்ய மஹிதாந் பதவீ பராகாந்
ஸந்தஸ் த்ரிவர்க்க பதவீம் அதிலங்க யந்த:
மௌளௌ பதம் விதத்தே விபுதேஸ் வரணாம்—-370-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடன் எப்போதும் சேர்ந்ததே சஞ்சாரம் செய்யும் பாதுகையே!
நன்கு அறிந்தவர்கள் உனது தூசிகளைத் தங்கள் தர்மம், அர்த்தம், காலம் (அறம், பொருள், இன்பம்)
ஆகியவற்றைக் கடந்து செல்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தேவர்களின் தலைகளில் தங்கள் கால்களை வைக்கும்படி ஆகின்றனர்.
(தேவர்கள் கூட இவர்கள் கால்களில் விழுகின்றனர் என்று கருத்து)

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய தாள்களைத் தலையில் வகித்த பெரியோர் தர்ம அர்த்த காமங்களையும்
வெறுத்துப் பரம பதத்தையே யாசிப்பவராய் தேவதைகளாலும் வணங்கப் படுகின்றனர் –

———————————————————————-

மாதஸ் ததா மாதவ பாத ரஷே
த்வயி பிரசக்தம் த்வரயோ பயாந்த்யாம்
பராம்ருசேயம் பதவீபராகம்
பிராணை ப்ரயாணாய சமுஜ்ஜிஹாநை –371-

ஸ்ரீ பாதுகையே என் பிராணன் போகும் சமயம் நீ மிக அவசரமாக வருவாய் -வெளிக் கிளம்பும் என் பிராணன்
உன் மீது படிந்துள்ள தூசியைத் துடைத்து அப்போதும் உனக்கு கைங்கர்யம் பண்ணும் பாக்யத்தைப் பெற வேண்டும் –

———————————————————————

ததாகதா ராகவ பாத ரஷே
சம்பச்ய மாநேஷூ தபோத நேஷூ
ஆஸீத ஹல்யா தவ பாம் ஸூலேசை
அபாம் ஸூலாநாம் ஸ்வயமக்ர கண்யா –372-

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனின் பாதுகையே கௌதமர் உடைய சாபத்தினால் கல்லான அஹல்யை உன் தூசி பட்டு
மாசற்றவர்களுள் முதல்வர் ஆனாள்-மஹா பதிவ்ரதை யானாள் –
தூசு படிந்தவர்கள் மாசு படிந்தவர்கள் ஆகத்தானே ஆவார்கள்
அவ்வாறு இன்றி சகல ரிஷிகளாலும் கொண்டாடாத் தகுந்தவள் ஆனாள் –

ஆசார்ய அனுக்ரஹம் மஹா பாபியைக் கூட மஹானாகச் செய்து அருளும் என்றவாறு –

——————————————————————-

பஸ்யாமி பத்மேஷண பாத ரஷே
பவாம்புதிம் பாதுமிவ ப்ரவ்ருத்தான்
பக்தோபயா நத்வரயா பவத்யா
பர்யச்யமாநான் பதவீ பராகான் –373-

ஸ்ரீ பாதுகையே நீ மிக வேகமாக பக்தர்களை அணுகும் போது அதிகமாகத் தூசி கிளம்புகிறது
அவை சம்சாரம் ஆகிற கடலைத் தூர்த்து விடும் போல் இருக்கின்றன

உன்னை வணங்கியவன் ஜனன மரண பயம் நீங்கப் பெறுகிறான் –

—————————————————————————————–

பஞ்சாயுதீ பூஷண மேவ சௌரே
யதஸ் தவைதே மணி பாதரஷே
விதந்வதே வ்யாப்ததிச பராகா
சாந்தோதயான் சத்ருசமூ பராகான் –374-

ஸ்ரீ பாதுகையே சத்ருக்களைக் கொல்வதற்காகப் பெருமாள் எழுந்து அருளுகிறார்
உன்னுடைய தூளியைக் கண்ட மாத்ரத்திலேயே சத்ருக்கள் ஓடோடிப் போகிறார்கள்
பெருமாளுடைய பஞ்சாயுதங்களும் அலங்காரத்திற்காக மட்டுமே ஆகின்றன –

———————————————————————————-

பரிணதி மகடோராம் ப்ராப்தயா யத் ப்ரபாவாத்
அலபத சிலயா ஸ்வான் கௌத்மோ தர்ம தாரான்
புநருப ஜநி சந்காவராகம் பாதுகே தத்
ப்ரசமயதி ரஜஸ்தே ராக யோகம் ப்ரஜா நாம் –375-

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய தூளிகளின் பெருமையால் கடினமான கல்லுருவினின்றும் குணத்தாலும் உருவத்தாலும்
மிருதுவான பெண்ணாக தன் தர்ம பத்தினியான அஹல்யையை மீண்டும் கௌதமர் அடைந்தார்
அது போல் சேதனர்களையும் அற்ப ஆசைகளில் ஈடுபாட்டைப் போக்கி மறுபிறப்பு உண்டோ எனும்
சங்கையையும் போக்கி உயர் குணம் கொண்டவராக ஆக்குகின்றன –

——————————————————————————-

ரஜனி விகமகாலே ராமகாதாம் படந்த
குசிகத நயமுக்தா பாதுகே பாவயந்தே
உபல சகல சக்தை த்வத் பராகைர காண்டே
ஜனித முநி களத்ரான் தண்ட காரண்ய பாகன் –376-

ஸ்ரீ பாதுகையே விஸ்வாமித்ரர் முதலிய தண்ட காரண்யத்தில் உள்ள மஹா ரிஷிகள் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுடைய சரித்ரத்தை
அனுசந்தானம் செய்யும் போது பிரதானமாக உன் தூளிகள் கௌதமரின் மனைவியை உயிர்ப்பித்ததையே அடிக்கடி நினைக்கிறார்கள்

——————————————————————————

ஸூப சரணிர ஜோபி ஸோ பயந்தீ தரித்ரீம்
பரிண திர மணீயான் ப்ரஷரந்தீ புமர்த்தான்
பவதிசி புவந வந்த்யா பாதுகே ரங்க பர்த்து
சரண முபகதாநாம் சாஸ்வதீ காமதேநு –377-

ஸ்ரீ பாதுகையே எல்லோராலும் சேவிக்கத் தகுந்தவளாகவும் தன் மார்கத்தில் தூளியால் உலகம் எல்லாம் ஷேமம் அடையச் செய்பவளும்
கடைசி காலத்தில் நிலையான இன்பத்தைத் தருபவளுமான நீ உன்னை நம்பியவருக்கு உயர்ந்த காம தேனுவாக இருக்கிறாய் –

———————————————————————————-

பவநா தரலி தஸ்தே பாதுகே ரங்க பர்த்து
விஹரண சமயேஷூ வ்யாப்த விஸ்வ பராக
விஷம விஷய வர்த்ம வ்யாகுல நாம ஜஸ்ரம்
வ்யப நயதி ஜநாநாம் வாசநா ரேணு ஜாலம் –378-

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதனுடைய சஞ்சார காலங்களிலே காற்றினால் பரப்பப் பட்ட உன் தூளிகள் விலக்கத் தகுந்த
வழிகளிலே சென்று கலங்கி இருக்கும் மனிதர்களின் மனதை புழுதி சமூகத்தைப் போக்கி சத்தப் படுத்துகின்றது –

தூளி துளியைப் போக்கும் அதிசயம் இங்கே தான் காணலாம்-

—————————————————————————–

நிஷ் பிரத்யூஹ முபாசி ஷீ மஹி முஹூர் நிச் சேஷ தோஷச்சிதோ
நித்யம் ரங்க துரந்த ரஸ்ய நிகமச்த்தோ மார்ச்சிதே பாதுகே
தத்தே மூர்த்த பிராதி பத்ம ஜநிதா தத் தாத்ருசீ சந்ததி
யாத் சஞ்சார பவித்ரித ஷிதிரஜ பங்க்திம் சதுஷ் பஞ்சஷை –379-

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னைச் சாத்திக் கொண்டு எழுந்து அருளுகிறதனால் பரிசுத்தமான உன் தூளிகளை
பிரம்மா தொடங்கி தலைமுறை தலை முறையாக சிரசில் வகிக்கிறார்கள்-
பெருமாள் ஆசார்யன் மற்றும் பாகவதர் இவர்களுடைய கைங்கர்யத்தில் எந்த விக்னமும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு
வேதங்களால் கொண்டாடப்பட்ட உன்னை த்யானிக்கிறோம் –

—————————————————————

ரஜஸா பரோ ரஜஸ் தந்ந கலு
ந லங்க்யேத பகவதோபி பதம்
கிமுத ஹ்ருதயம் மதீயம் பவதீ
யதி நாம பாதுகே ந ஸ்யாத்–380-

ஸ்ரீ பாதுகையே நீ இல்லாவிட்டால் எம்பெருமான் திருவடிகள் ரஜோ குணம் இல்லாதவையும் கூட ஒரு வேளை
ரஜஸ்ஸினால் பாதிக்கப் படலாம் எனும் போது என் மனம் ரஜோ குணத்தால் பாதிக்கப்படும் என்பதற்குக் கேட்பான் என் –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading