திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்–7-2-

கீழே ஆறாம் பத்தின் ஏற்றுத் திருவாய் மொழியில் பெரிய பிராட்டியார் முன்னிலையில் திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணம் புக்கார்
எம்பெருமான் திருவடிகளில் நிற்கக் கண்டிலர்
மிக்க ஆர்த்தி உடன் புலியின் வாயில் அகப்பட்டால் போலே சப்தாதி விஷயங்களை நலிவதை வெளி இட்டார் கீழ் திருவாய் மொழியில்
இவர் ஆர்த்தியை அறியாதவன் அல்லன் எம்பெருமான்
நாலு நாள் நோவு பட்டாராகில் படுகிறார்
இவர் திவ்ய பிரபந்தம் கொண்டு நாட்டைத் திருத்தப் பார்த்தான்
இக்கோடு உலகில் இருப்பு நமக்கு பொருந்த வில்லையே
இந்நிலத்தில் இருப்பு பொருந்துவார் பலர் உண்டே அவர்களைக் கொண்டு திருத்தலாகாதா
இருப்பு பொருந்தாதாரைக் கொண்டே கார்யம் செய்ய திரு உள்ளம் பற்றினான்
இத்தால் நிலை கலங்கின ஆழ்வார் தாமான தன்மை இழந்தார்
திருத் தாயார் பாசுரமாக செல்கிறது இத் திருவாய்மொழி
திருத்தாயார் இவளை ஸ்ரீ ரெங்கநாதர் திருவடிகளிலே இட்டு வைத்துக் கொண்டு இருந்து -இவள்
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்செறிவது
அதுவும் மாட்டாது ஒழிவது
ச்ப்தையாய் இருப்பது
முதலியவற்றை ஒவ் ஒன்றாக எடுத்துச் சொல்லி
இவள் திறத்தில் நீர் என்ன செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிறீர்
என்று கேட்கும் படியாக செல்கிறது –

நம்பிள்ளை ஈடு -திருத் தாயாரும் சர்வ பரங்களையும் அவர் தலையிலே பொகட்டு
பெண் பிள்ளையை திரு மணத் தூணுக்குள்ளே இட்டு
அவருடைய அசரண்ய சரண்யத்வாதி குணங்களை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு
ஒரு கால நியதி யாதல்
ஒரு தேச நியதி யாதல்
அதிகாரி நியதி யாதல் அன்றிக்கே
சர்வ சமாஸ்ரயணீயராய் இருக்கிற படியை அனுசந்தித்து
தன் பெண் பிள்ளையினுடைய தசையை திரு உள்ளத்திலே
படுத்துகிறாள் இத் திருவாய் மொழியாலே

பட்டர் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யும் போதெல்லாம்
ஆழ்வாருக்கு ஓடுகிற தசை அறியாதே
அவருடைய பாவ வ்ருத்தியும் இன்றிக்கே
இருக்கிற நாம் என் சொல்கிறோம்
என்று திரு முடியிலே கையை வைத்துக் கொண்டு இருப்பர் –

—————————————————————————————————————————————————————————————————————————-

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும் இரு நிலம் கை துழாவி இருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே –7-2-1-

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் –
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம்
இந்நிலத்திலே இருந்து இமையோர் படியாய் இருப்பர்
என்று கொல் சேர்வது அந்தோ -என்றும்
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே – என்றும் விசாரமே பண்ணிக் கொண்டு இருக்கிறாள் –
கண் துயில் அறியாள் –சம்ச்லேஷத்தில் அவன் உறங்க ஒட்டான்
விச்லேஷத்தில் விரஹ வியசனம் உறங்க ஒட்டாது
ஆகையால் இரண்டு படியாலும் இவளுக்கு உறக்கம் இல்லாமையாலே
உறங்காள் என்னாமல் அறியாள் என்கிறது -ஈடு

கண்ணநீர் கைகளால் இறைக்கும் –
தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப் புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர -என்றும்
ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னிராமனாய் மாறடர்த்ததும் மண் அளந்ததும் சொல்லிப் பாடி
வண் பொன்னிப் போராறு போல் வரும் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் -என்றும்
நினைத்து தாரை தாரையாக கண்ணநீர் பெருக-

————————————————————————————————————————————————————————————————————————————

என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா வென்னும் கண்ண நீர் மல்க விருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திரு வரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து வுயிர்த்து வுருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில் வண்ணா தகவிதோ வென்னும்
முன் செய்து இவ்வுலகமுண்டு உமிழ்ந்து அளந்தாய் என் கொலோ முடிகின்றது இவட்கே –7-2-2-

இவளைக் கொண்டு திருக் காவிரியில் போட வல்லார் உண்டோ
திருப் பொருனலில் நீர் பிரிந்தாற்கு நிலாப் போலே உபதப்தமாய் இரா நின்றது போலே -ஈடு
இவருடைய தாபம் தாமர பரணியிலும் ஏறிப் பாய்ந்து அதில் அடி வைக்கவும் அணுகவும் போராமையாலே
திருக் காவேரியிலே திரு உள்ளம் சென்றது -என்கை-

வெவ்வுயிர்த்து வுயிர்த்து –
பிரிந்தவர்கள் பூவும் பல்லவுமான செடி கொடி மரங்களை அருகே கண்டால் ஆறி இருக்க மாட்டார்களே
நீள் பொழில் குருகூரை உஷ்ண உஷ்ணமான பெரு மூச்சு எறிதலாலே பங்கம் செய்யப் பார்த்தால் போலும்

வுருகும்-உருகுகிற படியே நிற்கும் இத்தனை
இனி நெடு மூச்சு எறிகைக்கு தர்மியும் இல்லையோ என்னும் படி வுருகும்
வெவ்விதாக பலகால் நெடு மூச்சு எறிந்து
அவ்வுஷ்ணத்தாலே வுருகா நிற்கும் -ஈடு –

முன் செய்த வினையே முகப்படாய் என்னும் –
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மகாதஸ்தி ந சம்சய –

முகில் வண்ணா தகவிதோ வென்னும்
நிக்ரஹ ரூபம் தானே பாபம்
கைம்மாறு கருதுவதும் உண்டோ
புண்ய பாபங்களை பார்த்து பின் வாங்குவது தான் உண்டோ
மேகத்துக்கு உண்டான தன்மை உனக்கு உண்டே

முன் செய்து இவ்வுலகமுண்டு உமிழ்ந்து அளந்தாய் –
உன்னுடைய ஔதார்யம் காட்டி அருளின இடங்கள் ஒன்றா இரண்டா

என் கொலோ முடிகின்றது இவட்கே
இவர் விஷயத்தில் என்ன செய்வதாக திரு உள்ளம்
இவள் நிலை என்னை முடியுமோ –

——————————————————————————————————————————————————————————————————————————————————-

வட்கிலள் இறையும் மணி வண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும்
உட்குடையசுரர் உயிர் எல்லாமுண்ட ஒருவனே என்னும் உள்ளுருகும்
கட்கிலீ யுன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும்
திட்கொடி மதிள் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே –7-2-3-

வட்கிலள் இறையும் –
வடக்கு -வெட்கம் லஜ்ஜை
நாண் மடம் அச்சம் பயிர்ப்பு -மாதர்கட்கு நிரூபகம் -நாண் முக்கியம்
மணி வண்ணா என்னும்
பெற்ற தாய் முன்னே வடிவு அழகை வெட்கம் இன்றி சொல்லி –
காமினி -தான் அகப்பட்ட துறையை சொல்லிதிரு நாடு அளவும் கேட்கும் படி கூப்பிடுகிறாள் –
வானமே நோக்கும் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்தானே -பார்க்கிறாள் -வரக் காணாமையாலே
மையாக்கும் -மயங்குகின்றாள் -அறிவு கெடுகின்றாள்
சிறிது மயக்கம் தெளிந்தவாறே
உட்குடையசுரர் உயிர் எல்லாமுண்ட ஒருவனே என்னும் –
ஆண் புலிகளான தேவர்களுக்கு மட்டுமே கார்யம் செய்ய வேண்டுமோ
பிரயோஜனாந்தர பரர்களுக்கு மட்டுமே கார்யம் செய்ய வேணுமோ
மிடுக்கர்களுக்கு மட்டுமே கார்யம் செய்ய வேண்டுமோ
கார்யம் ஆகும் அளவும் திருவடியை பற்றி நின்று பின்பு ஈச்வரோஹம் என்பார்க்கு மட்டுமே கார்யம் செய்ய வேண்டுமோ
பெண் -அநந்ய பிரயோஜனர் -அபலை -அருளாத போதும் உன் திருவடியே தஞ்சம் என்று இருப்பவளுக்கு கார்யம் செய்தால் ஆகாதோ
உட்கு -மிடுக்கம் –
உள்ளுருகும்-
அத்தலையில் உள்ள திருக் குணங்களை நினைத்தும்
தன்னுடைய மநோ ரதம் நிறைவேறாமல் இருப்பதாலும்
நீர்ப் பண்டம் போலே ஆனாள்
கட்கிலீ யுன்னைக் காணுமாறு அருளாய் -என்னும்
கட்கு இலி
ந சஷுஷா பஸ்யதி கச்ச நைனம்
திவ்யம் ததாமி தே சஷூ பச்யே மே யோகம் ஐஸ்வர்யம்
பரகத ச்வீகாரமாக காட்டி அருளினாயே
காகுத்தா கண்ணனே என்னும்
பரகத ச்வீகாரமாக காட்டி அருளின இடங்கள் பலவே கண்ணனாயும் காகுத்தனாயும்
திட்கொடி மதிள் திருவரங்கத்தாய் –
அவதார காலத்தில் இழந்தார் உடைய இழவு தீருகைக்கு அன்றோ இங்கே வந்து சாய்ந்து அருளிற்று
வருவார் எல்லாம் வாருங்கோள் என்று அன்றோ கொடி கட்டிக் கொண்டு கிடக்கிறது
இவள் திறத்து என் செய்திட்டாயே –இவள் இங்கனே பிச்சேறுகைக்கு என்ன மருந்திட்டாய்-

———————————————————————————————————————————————————————————————————-

இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும் எழுந்துலா மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல் வண்ணா கடியை காண் என்னும்
வட்டவாய் நேமி வலங்கையா வென்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும்
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே –7-2-4-

கையளாய் இருக்கும் -சிறந்த பாடம் -அம்புகள் போலே குணங்களும்
ஸ்தம்பிக்க பண்ணும்
உலாம் -உலாவும் -என்றபடி –
தோற்றக் காணாமையாலே மயங்கும் -உண்டே கை கூப்பும் –
உணர்த்தி இன்றிக்கே இருக்க பூர்வ வாசனையாலே கை கூப்பும்
மோஹித்த தசையிலும் தவிருகிறிலள்
மயங்கா நிற்கச் செய்தே உணர்த்தி உடையராய் போலே யாயிற்று அஞ்சலி பண்ணுகிறது -இருபத்து நாலாயிரப்படி
ஈடு -கை கூப்பும் -உணர்த்தியில் தொழுமவள் அல்லள்
மயங்கினால் தொழாது இருக்க வல்லள் அல்லள்
தொழுதால் சாதனகோஷ்டியில் கணக்கோ -சத்சம்ப்ரதாய நிஷ்டர் கூசுவார்களே
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்–காதலுக்கு பரிதபிக்கிறார்
மயர்வற மதி நலம் அருளினத்தை உகந்து பேசினவர்
அந்தோ காதலுக்கு மேற்பட்ட ஆபத்து இல்லை -என்கிறார்
பரிஹாரம் இல்லாமையால்மூர்ச்சிக்கும்
கடல் வண்ணா கடியை காண் என்னும் -கடல் தன்னுள்ளே சகல பதார்த்தங்களையும் அடக்கி ஒன்றை ஒன்றை நலியாத படி நோக்குமே
நீ அப்படி நோக்குவாறு காணேன்
கடியை -நிர்க்குணனாய் இருகிறாய்
வட்டவாய் நேமி வலங்கையா வென்னும்
கையும் திரு ஆழியுமான சேர்த்தி அழகை காண ஆசை
முழுவதும் சொல்ல மாட்டாமல்
நடுவே இளைத்து அரைகுறையான சொல்லாக முடித்து
வந்திடாய் என்று என்றே மயங்கும்
வந்திடாய்-வந்திடாய் விடாய்த்தவன்தாகம் தீரும் அளவும் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே
சொல்லிக் கொண்டே மயங்குகிறாள்
மயங்கின நிலையிலும் வாசனையால் அனுவர்த்தியா நிற்கும்
சிட்டனே-
ஆசார சீலன்
விபரீத லஷணையால்-உம்மைப் போலே நான்கு பேர் இருந்தால் பெண்கள் நன்றாக குடி வாழலாம்
பிராமஹத்யைகளைப் பண்ணி
பூணூலை வெளுக்க விட்டு
கையிலே பவித்ரத்தையும் இட்டு
ஒத்துச் சொல்லித் திரிவாரைப் போலே இருந்ததீ-உம்முடையபடி -ஈடு
செழு நீர்த் திருவரங்கத்தாய்-நீர் வாய்ப்பையும் நிழல் வாய்ப்பையும் கண்டு அழகியதாக கண் உறங்கவோ நீர் இங்கே வந்து சாய்ந்து அருளிற்று
இவள் திறத்தில் நீர் செய்து அருளப் பார்த்தது என் கொல்

—————————————————————————————————————————————————————————————————————–

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும்
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த வாரமுதே
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே –7-2-5-

சிந்திக்கும்-
பழைய விஷயீ காரங்களை நினைக்கத் தொடங்கினாள்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து கை கழிந்த என்னை
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப்புண்டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம் –
பொருளாக்கி கைக்கொண்டு அழகைக் காட்டி ஈடுபடுத்திக் கொண்டு உபேஷிப்பதே
திசைக்கும்
ஐயோ அந்த நிலைமை என்னோ -இப்படி ஆயிற்றே என்று கலங்கி
தேறும் –
இன்றாக நாளையேயாக இனிச் சிறிது நின்றாக நின்னருள் என்பாலதே –
கை கூப்பும்-
கீழே மயங்கும் கை கூப்பும் இங்கே தேறும் கை கூப்பும்
அஞ்சலி பந்தம் மாறாதே ஸ்வரூபம்
திருவரங்கத்துள்ளாய் என்னும் –
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய துன்பமிகு துயரகல
அயர்வு ஒன்றில்லா சுகம் வளர அகமகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென்திசை நோக்கி பள்ளி கொள்ளுகைக்கு
ஒரு பிரயோஜனம் சித்திக்க வேண்டாவோ –
வந்திக்கும் –
ஸ்தோத்ரம் பண்ணுகை -தொழுகை
முகம் முறுவல் முதலியவற்றை துதியா நின்றாள்
திருவடியில் விழுந்து கிடக்கிறாள் என்னுமாம்
ஆங்கே மழைக் கண்ணீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும்
அப்படிப் பட்ட நிலையிலே
குளிர்ந்த தண்ணீர் ததும்ப
ஆற்றாமை தோற்ற பிரானே வாராய் வாராய் பலகாலும் சொல்லி
வாராமையால் அறிவு இழந்து நின்றாள்
சிறுக்கனுக்கு தோற்றி அருளினாயே
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே
மகள் பேச்சின் அனுவாதம் -அன்றிக்கே தாயே சொல்வதாகவும் கொள்ளலாம்
அலை கடல் கடைந்த வாரமுதே
உப்புச்ச்சாறு அபேஷித்தாற்க்கு திருமேனியை நோவு படுத்தி கார்யம் செய்தாய்
ஆராவமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
அமுதிலும் ஆற்ற இனியன் -என்று இருப்பார்க்கு உதவல் ஆகாதோ
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே -உன்னைக் கிட்டி
உன் சந்நிதியிலேயே முடிய வேணும் -திண்ணிய அத்யாவசாயம் கொண்டு இருக்கும் இவளை அறிவு கெடுப்பதே –
உன் திருவடிகளை ஒரு கால் கண்டு சம்ச்லேஷிக்க வேணும் என்னும் ஆசையினால்
தன்னைத் தரித்துக் கொண்டு இருக்கிற இப் பெண் பிள்ளையை இப்பாடு படுத்த வேணுமோ -ஆறாயிரப்படி அருளிச் செயல் –

————————————————————————————————————————————————————————————————————-

மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும்
செய்யவாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத் துள்ளாய் என்னும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்லேந்தும் விண்ணோர் முதல் என்னும்
பை கொள் பாம்பணையாய் யிவள் திறத்து யருளாய் பாவியேன் செயற்பாலதுவே –7-2-6-

வ்யாமோஹத்தை பண்ணி சம்ச்லேஷித்து
அப்போதுதிருப் பவளம் திரு மேனி அழகை நினைத்து செய்யவாய் மணியே -என்கிறாள்
அரவணை விட்டு பிரியாது இருக்கிறாப் போலே இவளை பிரியாது இருக்க வேண்டாவோ
இவள் கிலேசத்தை போக்க வழி தேடாதே படுக்கையில் கிடப்பது ஏனோ
அதி ஷூத்ரமான காகத்தின் பக்கலிலே ப்ரஹ்மாச்த்ரத்தை விட்டு அருளின
உன்னுடைய சர்வ வசீகரண பிரணயித்வ குணத்தாலே
என்னுடைய மனசை அபஹரித்தவனே -ஆறாயிரப்படி
கலக்கிற சமயத்தில் தாழ நின்று
கையைக் காலைப் பிடித்த பரிமாற்றங்களை நினைத்து -மா மாயனே -என்கிறாள் –

—————————————————————————————————————————————————————————————————————-

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்ற நின்றானே
கால சக்கரத்தாய் கடலிடம் கொண்ட கடல்வண்ணா கண்ணனே என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும்
கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே –7-2-7-

அனுகூலர் இன்பம்படவும் பிரதிகூலர் துன்பம் பாடவும் உள்ள வரம்புக்கு நான் புறம்போ -பஹிர் பூதையோ
பால் -இடத்துக்கு பெயர்
அசரண்யா சரண்யன் விருதூதி திரிகிறாயே -கள்ளிச் செடியை மகா வ்ருஷம் என்னுமா போலே
நீ அருள் செய்ய கால நியமம் உண்டு என்றால் அதுவும் உன் ஆதீனம் தானே
காலன் -யமன் விரோதிக்கு ம்ருத்யுவான திரு ஆழியை உடையவனே
கடலிடம் கொண்ட கடல்வண்ணா கண்ணனே-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாகபரயங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம்
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு மெத்தையாக விரித்து
கள்ள நித்திரை கொள்வதை விட்டு
இடையனாய் வந்து
அத்தையும் விட்டு கோயிலிலே சாய்ந்து அருளினது வீணாகலாமா
சேல் கொள் தண் புனல் சூழ்-மீன் நீரை விட்டுப் பிரிந்தால் துடிக்கும் படி அறிவாயே
ஜல சர சத்வங்கள் ஜலத்தை பிரித்து தரிக்கில் அன்றோ
இவள் உம்மைப் பிரிந்து திரிக்க வல்லவள் ஆவது –
அவ் ஊரிலே வர்த்திக்கிற யுமக்கு போருமோ இவளுக்கு
முகம் காட்டாது ஒழிகிற இடம் -ஈடு
என் தீர்த்தனே என்னும் -உன்னை விட்டு வேறு போகாத பரிசுத்தியை அருளி
நான் இழிந்த துறை நீ -தீர்த்தம் என்றுமாம்
கொள் கொம்பிலிலே தரிக்க வேண்டும்படி
கண்ணும் கண்ணநீருமாய் இருக்கும் இவளை
கிருஷி பண்ணி பலித்த அளவிலே அனுபவிக்க வர வேண்டாவோ-

———————————————————————————————————————————————————————————————————————-

கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்திக் கோ நிரை காத்தவனே என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ் வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே என்னும்
எழுந்து மேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும் எங்கனே நோக்குகேன் என்னும்
செழும் தடம் புனல் சூழ் திரு வரங்கத்தாய் என் செய்கேன் என் திரு மகட்கே –7-2-8-

வானவர் கொழுந்தே -பரத்வம் பேசுகிறாள்
கோ நிரை காத்தவனே -சௌலப்யம் பேசுகிறாள்
குன்று எந்திணவனே -மீண்டும் பரத்வம்
பரத்வம் கண்டு இறாய்க்காமைக்கு சௌலப்யம்
சௌலப்யம் கண்டு இகழாமைக்கு பரத்வம் மாறி மாறி பேசி
அழும் தொழும் –
பக்தி பரவசரைப் போலே கண்ணும் கண்ணநீருமாய்
பிரபன்னரை போலே அஞ்சலி செய்தும்
ஆவி அனல வெவ் வுயிர்க்கும்-அச்சேத்யோயம் அதாஹ்யோயம்-அப்படிப்பட்ட ஆவியும் தஹித்ததாம் படி வெப்பமாக பெரு மூச்சு விடுகிறாள்
அஞ்சனா வண்ணனே என்னும் -கூப்பிட்ட வாறே மேல் நோக்கி பார்க்கிறாள்
ஒரு ஷணம் தோற்றி மறைவாயோ என்று இமைக்காமல் இருக்கிறாள்
எங்கனே நோக்குகேன் என்னும் -தான் பார்த்த திக்கிலே
வரக் காணாமையாலே பின் நோக்கி வந்து கட்டிக் கொள்ளும்
என்று புரிந்து பாரா நிற்கும் -ஈடு
என் திரு மகட்கே-பிராட்டி போலே நித்ய வாசம் பண்ண வேண்டியவள் அன்றோ-

———————————————————————————————————————————————————————————————————————————–

என் திரு மகள் சேர் மார்பனே என்னும் என்னுடை யாவியே என்னும்
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகளே என்னும்
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே தெளிகிலன் முடிவிலள் தனக்கே –7-2-9-

உரு-இடி போன்ற குரலை உடைய -உரும்-இடி போன்ற பயங்கரமான குரல்
தழுவி வதை மங்கள வழக்கு
பெரிய பிராட்டியாரை புருஷா காரமாகக் கொண்டும் பலன் பெற வில்லையே
என் என்பதை திருமகளில் அன்வயத்தி
அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை
என் திரு மகள் -என்று
திரு நாமம் சாத்தினான் -ஈடு
என் திரு மகள் சேர் மார்பனே என்னும் என்னுடை யாவியே என்னும் இயலைச் சேர்த்து நஞ்சீயர் அருள
-ஸ்ரீ ரெங்க நாதா -என்று அணையிலே சாய்ந்து அருளினார் பட்டர்-என்று அருளிச் செய்வர்
அப்போது திரு மேனியில் பிறந்த விக்ருதியைக் கண்டு
இவருக்கு பகவத் பிராப்தி அணித்தாகிறதோ என்று
அஞ்சி இருந்தேன் என்று ஜீயர் அருளிச் செய்வர் –
இவருக்கு பிராணன் ஒரு வாயு விசேஷம் அல்ல
ஒரு மிதுனம் ஆயிற்று -என்று அருளிச் செய்வர்
ஸ்ரீ பூமி பிராட்டி இடம் நீ திரு முகம் பெற அவள் பரிகரமான எங்களை நோக்கினால் தான்
அன்றியே
பாசி தூர்த்த –பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே –
நீ அருளிச் செய்த திரு வாக்கு வெருமனேயோ
ஸ்ரமம் தீர திருவரங்கத்தில் சாய்ந்து அருளி -நீர்  இவளை பற்றி என்ன சித்தாந்தம் திரு உள்ளம் பற்றி உள்ளீர்-

——————————————————————————————————————————————————————————————————————————————

முடிவிலள் தனக்கு ஓன்று அறிகிலேன் என்னும் மூ வுலகாளியே என்னும்
கடி கமழ் கொன்றச் சடையனே என்னும் நான் முகக் கடவுளே என்னும்
வடிவுடை வானோர் தலைவனே என்னும் வண் திரு வரங்கனே என்னும்
அடியடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே –7-2-10-

அனுபவிக்கும் கட்ஷங்களுக்கு முடிவு இல்லையோ
முடியும்நாள் தனக்கு இல்லையோ என்றுமாம்
தேவேந்தரன் -ருத்ரன் -நான்முகக் கடவுள் -அந்தராத்மாவாய்
இடைவிடா அனுபவத்தால் வந்த ஹர்ஷம் தோன்றும் வடிவுடைய நித்தியர்களின் நாதன்
சம்சாரிகளும் இழவாமைக்கு திரு வரண்கத்தில் திருக் கண் வளர்ந்து அருளி –
சாய்ந்து அருளின பலன் பெற வேண்டாவோ –

அடியடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே-ஆறாயிரப்படி -இனி பெருமாள்
திருவடிகளை சேர்ந்து முடிய மாட்டாள்
போய் முடிந்தாள் என்னும்படி துரத்த சாபந்னை யான இவள் —
இந்த துக்கம் எல்லாம் விஸ்ருதமாம் படி தான் ஆசைப் பட்ட படியே
பெரிய பெருமாள் திருவடிகளையே சம்ச்லேஷிக்கப் பெற்றாள் என்று
இவளுடைய திருத் தாயார் ப்ரீதை யாகிறாள் –

—————————————————————————————————————————————————————————————————————————

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி யுய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல்மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே –7-2-11-

திருவாய் மொழி முழுவதும் ஸ்ரீ ரெங்கநாதன் விஷயமாகவே என்பர்
ஆனது பற்றியே வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -பட்டர்
ஈடு -பெரிய பெருமாள் திருவடிகளிலே திருவாய் மொழி ஆயிரமும் சொல்லிற்று
திரு மோகூர்க்கு ஈத்த பத்து
திரு வேங்கடத்துக்கு இவை பத்து
என்று பிரித்துக் கொடுத்த வித்தனை
பெருமாள் திருப்பலகையிலே அமுது படியிலே மற்றைத் திருப்பதிகள்
நாயன்மார்க்கும் அளந்து கொடுக்குமா போலே என்று பிள்ளை அருளிச் செய்வர் –
முகில் வண்ண வானத்து-எம்பெருமான் உடைய திரு நாட்டில்
அவனுடைய நிழலீட்டாலே அவன் படியாய் இருக்கிற வானம்
அபி பணிபதி பாவாத் சுப்ரமந்தச் சயாலோர் மரகத ஸூ குமாரை ரங்க பர்த்துர் மயூகை
சகல ஜலதிபா நச்யா மஜீமூத ஜைத்ரம் புலகயதி விமானம் பாவனம் லோசனே ந-
வெள்ளை நிற ஸ்ரீ ரெங்க விமானம் பச்சை மா மலை போல் மேனி யனுடைய நிழலீட்டாலே ச்யாமளமாக தோற்றுகிறதே
அடியார்கள் குழாங்கள் சூழ ஆனந்த கடலில் ஆழ்ந்து இருக்கப் பெறுவார்கள் பலன் அருளி தலைக் கட்டுகிறார்-

——————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி –

கங்குல் பகலாரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டு ஓரங்கரைப் பார்த்து இங்கு இவள் பால்
என் செய நீர் எண்ணுகின்றது என்னும் நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம் –62-

—————————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading