ஸ்ரீ: அப்பிள்ளார் அருளிச்செய்த சம்பிரதாய சந்திரிகை (மணவாளமாமுனிகள் வைபவம்)..

ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்
    அவனியிலே இருநூறாண்டு இரும் நீரென்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்
    பரமபதம் நாடி அவர் போவேனென்ன
நீதியாய் முன் போல நிற்க நாடி
    நிலுவைதனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணமெனும் மா வருடம் தன்னில்
    தனித்துலா மூலநாள் தான் வந்தாரே.     1

 

நற்குரோதன வருட மகரமாத
    நலமாகக் கன்னிகையை மணம் புணர்ந்து
விக்கிரம வற்சரத்தில் வீட்டிருந்து
    வேதாந்த மறைப்பொருளைச் சிந்தைசெய்து
புக்ககத்தில் பெண்பிள்ளை போலே சென்று
    புவனியுள்ள தலங்களெல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்
    துரியநிலை பெற்று உலகைஉயக்கொண்டாரே.   2    

 

செயநாமமான திருவாண்டு தன்னில்
    சீரங்கராசருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திருவீதி வாராநிற்கத்
    தென்னாட்டு வைணவரென்றொருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமாளானார்
    தன்முன்பே ஓரருத்தம் இயம்பச்சொல்லிச்
சயனம் செய்து எழுந்திருந்து சிந்தித்தாங்கே
    சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே.       3

 

வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
    வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர்பொருளை அளிக்க வேண்டும்
    கண்ணனே ! அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீசைல மந்திரத்தின்
    சயமான பாதியை ஆங்கு அருளிச்செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவிர்,
    பாதியையும் சொல்லுதும்யாம் தேற வென்றார்.    4

 

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
    திருவரங்க்ன் தினசரியை கேளா நிற்பச்
சன்னிதிமுன் கருடாழ்வார் மண்டபத்தில்
    தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து
    புகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்
சன்னிதியினின்று அரங்கர் தாமே அந்தத்
    தனியனுரை செய்து தலைக் கட்டினாரே.            5

 

நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில்
    நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
    தொல்கிழமை வளர்பக்க நாலாநாளில்
செல்வமிகு பெரியதிரு மண்டபத்தில்
    செழுந்திருவாய் மொழிப்பொருளைச் செப்புமென்றே
வல்லியுரை மணவாளர் அரங்கர் நங்கண்
    மணவாள மாமுனிக்கு வழங்கினாரே.  6

 

ஆனந்தவருடத்தில் கீழ்மை ஆண்டில்
    அழகான ஆனிதனில் மூல நாளில்
பானு வாரங்கொண்ட பகலில் செய்ய
    பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்தமயமான மண்டபத்தில்
    அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீரிட்ட வழக்கே யென்ன
    மணவாள மாமுனிகள் களித்திட்டாரே.            7

தேவியர்கள் இருவருடன் சீரரங்கேசர்
    திகழ்திருமா மணிமண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
    தமிழ்மறையை வரமுனிவன் உரைக்கக்கேட்டே
ஆவணிமா சந்தொடங்கி நடக்கும் நாளில்
    அத்தியயனத்திருநாள் அரங்க நாதா
தாவமற வீற்றிருந்து தருவாய் என்று
    தாம் நோக்கி சீயர் தமக் கருளினாரே.                8

 

அருளினதே முதலாக அரங்க ருக்கும்
    அன்று முதல் அருந்தமிழை அமைத்துக்கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
    திகழ்திருமா மணிமண்டபத்தில் வந்து
பொருளுரைக்கும் போதெல்லாம் பெருமாளுக்குப்
    புன்சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
    மதுகேட்டுச் சாற்றியது இத்தனியன் தானே.            9

 

நாமார் பெருஞ்சீர்கொள் மண்டபத்து நம்பெருமாள்
தாமாக வந்து தனித்தழைத்து-நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும்பொருளை நாள்தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து.              10

சேற்றுக்கமல வயல் சூழரங்கர் தம் சீர் தழைப்பப்
போற்றித் தொழும நல்ல அந்தணர் வாழவிப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாளமாமுனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளியல்லவோ தமிழாரணமே.          11

அப்புள்ளார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading