என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள்! நீரலிரே
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?
பொ-ரை : கூட்டமாக இருக்கின்ற குயில்காள்! நீங்கள் அல்லீரோ? என்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய பெருமானிடத்தில் எனக்குத் தூதாகிச் சென்று, நான் கூறுவதனைக் கூறின் குற்றம் யாது உண்டாம்? முற்பிறவிகளிற் செய்த நிறைந்த பாவங்களால் திருவடிகளில் அண்மையிலிருந்து செய்யுந் தொண்டுகளைச் செய்வதற்கு முற்பிறவியிலேயே முயலாத யான் இன்னமும் அகன்று போமதுவோ முறை?’
வி-கு : மேல் திருப்பாட்டில் ‘என்’ என்பதற்கும் இங்கு ‘என் என்பதற்கும் உள்ள பொருள் நயம் உணர்தல் தகும். பெருமானார்க்கு-வேற்றுமை மயக்கம். ‘ஒலித்தக்கால் என்னாம் உவரி’ (திருக்குற. 763) என்புழிப் போன்று, ஈண்டு ‘உரைத்தக்கால்’ என்பது வினையெச்சம். திருவடிக்கீழ்-என்பதில் ‘கீழ்’ என்பது ஏழனுருபு. முயலாதேன், பெயர். ‘தாமரைக்கண் பெருமான்’ என்றவிடத்துத் ‘தாமரைக் கண்ணான் உலகு’ என்னுங்குறள் நினைவு கூர்தல் தகும்.
ஈடு : இரண்டாம் பாட்டு. சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் மேல்; அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு: 1‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ என்கிறபடியே வந்து விழுந்தது. ‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும் நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமையின்றி ஒழியுமே, இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் மேம்பட்ட இறைவனுக்கு 2நமஸ்காரமாமித்தனை அன்றோ?
என் பெருமான்-பிரிந்த சமயத்திலும் ‘என்னுடையவன்’ என்று கூறலாம்படிகாணும் கலக்கிற சமயத்தில் அவன் இவள் இட்ட வழக்காய் இருந்தபடி. அன்றி, பிரிகிற காலத்தில் தான்வருமளவும் இவள் தரிக்கைக்காக ‘இது எங்கே இருக்கில் என், எங்கே போகில் என்? உன் பொருள் அன்றோ?’ என்று கூறிப் பிரிவானாதலின், அதனை நோக்கி, ‘என்பெருமான்’ என்கிறாள் ஆகவுமாம். தாமரைக்கண் பெருமான் – ‘பிரிவில் திருக்கண்கள் சிவந்திருக்குமோ?’ என்னில், இயற்கையான ஐஸ்வர்யத்தாலும் சிவந்திருக்கும்; தனக்குரிய பொருள்கள் பக்கலுள்ள அன்பினாலும் சிவந்திருக்கும்; கட்குடியர்களைப் போன்று இவளோடு கலந்த கலவியாலும் சிவந்திருக்கும்; அன்றி, பிரிவாலே 1அரையாறுபட்டுச் சிவந்திருக்கும். ‘ஆயின், இவற்றை எல்லாம் பிரிந்திருக்கும் இவள் கண்டாளோ?’ எனின், இவற்றை எல்லாம் இவள் அனுபவித்தவள் அன்றோ? எங்கே அனுபவித்தால்?’ எனின், முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வரியம், மூன்றாந் திருவாய்மொழியிலே வாத்ஸல்யம், 2இத்திருவாய்மொழியில் கலவியும் பிரிவும். பெருமானார்க்கு-பிருகிற போது கண்ணாலே நோக்கி இவளைத் தனக்கே உரிமையாக்கிப்போனபடி. (இங்கே இச்சொல்லுக்குத் தலைவன் என்பது பொருள்.) அன்றி, தலைவன் தனக்கு இயற்கையில் அமைந்த ஐஸ்வரியத்தோடு இவள் இடத்துள்ள குணங்களாகிய செல்வத்தையும் உடன்கொண்டு சென்றவனாதலின், இரட்டித்த செல்வத்தினையுடையவன் என்பாள், ‘பெருமான்’ என்கிறாள் எனலும் அமையும். (இங்கே ‘பெருமான்’ என்பதற்குச் ‘செல்வத்தாலே பெரியவன்’ என்பது பொருள்; அதாவது, இரட்டித்த செல்வத்தையுடையவன் என்பதாம்.)
என் தூதாய் – அவனோடே கலந்து பிரிந்து வெறுந்தரையாய் இருக்கின்ற எனக்குத் தூதாய். அதாவது, ‘கடலேறி வடிந்தாற் போலேகாணும் கிடக்கிறேன்,’ என்றபடி, உரைத்தக்கால் என் செய்யும்-உரைத்தால் என்ன தீமை உண்டாம்? ‘அவனைக்கொடுவந்து சேர்க்கச் சொல்லுகிறேனோ? ஒரு வார்த்தையைக் கூறின் என் செய்யும்?’ என்பாள், ‘உரைத்தக்கால் என் செய்யும்?’ என்கிறாள். இத்தொடரில், சென்று கூறின், அதற்குக் கைம்மாறாக அவன் உபய விபூதிகளையுந் தரினும் தருவான் என்ற குறிப்புப் பொருளும் தோன்றும். இனம் குயில்காள் – என்னைப் போன்று தனித்திருக்கின்றீர்கள் அன்றே? நீர் அலிரே – நீர்மைக்கு நீங்கள் அன்றோ? (இங்கு நீர் என்பது, நீர்மை என்ற சொல்லின் விகாரம்; நீர்மை-தன்மை) அன்றி, இதற்கு, ‘யானும் தலைவனும் சேர்ந்திருக்கும் போது கேட்டவற்றிற்கு எல்லாம் விடை பகர்ந்து வந்த நீங்கள், அவன் பிரிந்தவாறே வேறு சிலர் ஆனீர்களோ?’ என்று கூறலுமாம். (இங்கு ‘நீர்’ என்பது, முன்னிலைப் பெயர்.) முன் – நான் பாபம் பண்ணிப் போந்த காலம் ஓர் எல்லையுடன் கூடியதோ? ‘அன்று’ என்றபடி. இதனால், சென்ற காலம் அனைத்தையும் குறிக்கிறாள். செய்த – சங்கற்பித்துவிட்ட அளவேயோ? அன்று; சரீரத்தால் செய்தது என்றபடி. முழுவினையால்-அவற்றுள் ஏதேனும் 1அகஞ்சுரிப்பட்டது உண்டோ? ‘இன்று’ என்றபடி, அதாவது, ‘காலம் ஒரு வரையறைக்குட்பட்டிருந்து, அக்காலங்களில் நான் செய்து போந்த பாவங்களும் ஒரு வரையறைக்குட்பட்டிருப்பின் அன்றோ என்னால் போக்கிக்கொள்ள முடியும்?’ என்பதாம். ‘ஆயின், அத்தகைய தீவினைகளையுடைய நீர் இறைவனைச் சார்தல் எவ்வாறு முடியும்?’ எனின், இறைவனால் அத்தீவினைகளைப் போக்க ஒண்ணாது ஒழியின் அன்றோ நான் இழக்க வேண்டுவது? இங்கே 2‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாதுகாண்- 3தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக் கொண்டு போகில் அத்தனை ஒழிய, ஒன்று இரண்டு முழுக்கால் போகாதுகாண் நான் பண்ணின பாபம்,’ என்று திருக்கோட்டியூரிலேதெற்காழ்வான் கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத்துறையிற் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது.
திருவடிக்கீழ் குற்றேவல் – திருவடிகளிலே கிட்டி அந்தரங்கத் தொண்டுகளைச் செய்வதற்கு, ‘தலைவி பிரிந்து வருந்துகிறவள் ஆதலின், ‘அவனைச் சேர்வதற்கு’ என்னாது ‘திருவடிக்கீழ்க் குற்றேவல்’ என்கிறது என்னை?’ எனின், அந்தணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமாறு போன்று, இவர் பிராட்டியானாலும் மார்பால் அணைக்க நினையார்; திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை. முன் செய்ய முயலாதேன்-முற்பிறவிகளிலே நோலாத நான். இனி இதற்கு,’1‘இந்தக் காரியத்தைச் செய் என்று என்னை நியமிக்க வேண்டும்,’ என்று இளைய பெருமாள் கூறியது போன்று, ‘இன்னதைச் செய்’ என்று ஏவத் திருமுன்பே அடிமை செய்ய முயலாத நான் என்று பொருள் கூறலுமாம். முன் செய்ய முயலாதேன் இனம் அகல்வதுவோ விதி-திருவடிகளிலே அடிமை செய்கைக்குத் தக்கது ஒரு சாதனத்தை என தலையால் பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ? இனம்-‘இன்னம்’ என்பதன் விகாரம். விதி-நியாயம். 2‘எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர். இனி, ‘அகல்வதுவோ விதியினமே? என்பதனை, ‘விதியினம் அகல்வதுவோ?’ என்று மாறிக் கூட்டி, 3முதல் இல்லாதார் அன்றோ பலிசை இழப்பார்! அவன் தானே முதலாக இருக்கும் கூட்டமன்றோ இவர்கள் கூட்டம்?’ என்று பொருள் கூறலுமாம்; விதியினம் புண்ணியத்தையுடையோம். 4‘களைகண்மற்றுஇலேன்’ என்றும், 5‘உன் சரண் அல்லால் சரண் இல்லை’ என்றும், 6மைத்து எழுந்த மாமுகிலே பார்த்திருக்கு மற்றவை’ என்றும்,1‘நெறிவாசல் தானேயாய்நின்றானை’ என்றும், 2‘விழிக்குங் கண்ணிலேன் நின்கண் மற்றல்லால்’ என்றும், 3‘வாழுஞ் சோம்பர்’ என்றும் இப்படிகளிலே அன்றோ இவர்கள் கோஷ்டியில் வார்த்தைகளும் இருக்கும்படி? இனி ‘விதியினம்’ என்பதனை ‘விதியினன்’ என்றதன் திரிபாகக் கொண்டு, அதற்கு, ‘பாபத்தையுடையேனான நான்’ என்று பொருள் கூறி, நான் அகல்வதுவோ – ‘பாவத்தையுடைய நான் அகன்றே போமதுவோ?’ என்று கூறலும் ஒன்று. விதி – பாபம். ‘ஆயின், மூன்றாமடியில் ‘முழுவினையேன்’ என்றவள் ஈண்டும் ‘பாவியேன்’ என்று கூறல், கூறியது கூறலாகாதோ?’ எனின் ஆகாது; ‘தீயவினைகளைச் செய்த தீவினையேன்’ என்கிறாள். 4‘பாவமே செய்து பாவியானேன் என்றார் மங்கை மன்னனும்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply