ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–பிள்ளைத்தமிழ்–

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–பிள்ளைத்தமிழ்–

*பிள்ளைத்தமிழ் இலக்கியமானது, தமிழில் (96) தொன்னூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.

*பிள்ளைத் தமிழ் இலக்கியமானது,
இறைவனையோ, இறைவனை ஒத்த சிறப்புடைய மானிடரையோ சிறு குழந்தையாய் பாவித்து
அவர்கள் மேல் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆகும்.

குழந்தையும் அழகு, தமிழும் அழகு; அழகான குழந்தையை அழகியத் தமிழில் பாடப்படும் இந்த பிள்ளைத் தமிழ்
இலக்கியம் பேரழகு மிக்கது. அதைப் படிக்கும் போது நமக்குள்ளேயே தாய்மைப் பொங்கிவருவதை உணராது இருக்க முடியாது.
*பிள்ளைத் தமிழ் இலக்கியமானது –
1. ஆண்பால் பிள்ளைத் தமிழ்;
2.பெண்பால் பிள்ளைத தமிழ் என இரண்டு வகைப்படும்.

*ஆண்பால் பிள்ளைத் தமிழ்:

1. காப்பு
2. செங்கீரை
3. தால்
4. சப்பாணி
5. முத்தம்
6. வாரானை
7. அம்புலி
8. சிற்றில்
9. சிறுபறை
10. சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களையுடையது.

பெண்பால் பிள்ளைத் தமிழ்:
காப்புப் பருவம் முதல் அம்புலி பருவம் ஈறாக உள்ள ஏழு பருவங்களும் இருபாலார்க்கும் பொதுவானது;
ஆண்பால் பிள்ளத் தமிழில் கடைசியாக உள்ள சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் மூன்று பருவங்களுக்குப் பதிலாக

8. கழங்கு
9. அம்மானை
10. ஊசல் ஆகிய மூன்று பருவங்களும் பெண்பால் பிள்ளைத் தமிழில் வரும்.

விளக்கம்:
1. காப்புப் பருவம் – இது குழந்தையின் இரண்டாவது மாதத்தில் பாடுவது.
எந்த குழந்தையாயினும் முதலில் அதற்கு எந்த தீங்கும் நேர்ந்திடா வண்ணம்,
சிவன், பார்வதி, விநாயகர், திருமால், முருகன் என்று பலத் தெய்வங்களும் குழந்தையைக் காக்க வேண்டி,
அவர்கள் மீது பாடல்கள் பாடி, குழந்தைக்குக் காப்பிட வேண்டும்.

2. செங்கீரைப் பருவம் – இது குழந்தையின் ஐந்தாம் மாதத்தில் பாடுவது.
இந்த பருவத்தில், குழந்தை ஓரளவு தவழவும் முயற்சிக்கும்.
அதாவது, குழந்தை தன் ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித்
தலையை நிமிர்த்தி முகமாட்டும் பருவம். குழந்தை இவ்வாறு செய்யும் போது, அது செங்கீரைக் காற்றில் ஆடுவது போன்று
மிகவும் அழகாக, மனமும் அதோடு சேர்ந்து ஆடுற மாதிரி இருக்கும்.

3. தாலப் பருவம் – இது குழந்தையின் ஏழாம் மாதத்தில் பாடுவது.
தால்~நாக்கு. தாய் தன் தாலை ஆட்டிப் பாடும் போது, நாக்கின் அசைவுகளைக் குழந்தைகள் கவனித்துக் கேட்கும்.
(தாலாட்டுப் பாடும் பருவம்)

4. சப்பாணிப் பருவம் – இது ஒன்பதாம் மாதம் பாடப்படும்.
சப்பாணி என்றால் – கைகளைத் தட்டுதல்; குழந்தைத் தன் இரு கைகளையும் ஒன்றாகச் சேர்த்துத் தட்டி ஆடும் பருவம்.

5. முத்தப் பருவம் – இது குழந்தையின் பதினோறாம் மாதத்தில் பாடுவது.
பெற்றோர், தங்களுக்கு முத்தம் தருமாறு குழந்தையிடம் கெஞ்சும் பருவம்.

6. வாரானைப் பருவம் (வருகை) – இது குழந்தையின் 13ம் மாதத்தில் பாடுவது.
குழந்தை தன் ஒரு வருட காலத்தின் நிறைவில் அவர்கள் செய்யும் சாகசம், தளிர் நடைப் போடுதல்.
ஓரளவு நடக்கத் தெரிந்த தன் குழந்தையை, தாய் தன் இரு கைகளையும் முன்னே நீட்டி,
தன்னிடம் நடந்து வருமாறு அழைக்கும் பருவம்.

7. அம்புலிப் பருவம் – இது குழந்தையின் பதினைந்தாம் மாதத்தில் நிகழ்வது.
அம்புலி என்றால் நிலா. நிலவை நோக்கிக் கை நீட்டி, தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம்.

8. சிற்றில் பருவம் – இது குழந்தையின் பதினெட்டாம் மாதத்தில் பாடப்படுவது.
ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் வேறுபடுவது இந்த பருவத்தில் இருந்துதான்.
(சிற்றில் – சிறு+இல் – சிறிய வீடு)பெண்பிள்ளைகள் மணலில் சிறுவீடு கட்டி விளையாடும் பொழுது,
அவர்கள் மண்வீட்டைத் தன் சிறு பொற் பாதத்தால் உதைத்துக் கலைக்கும் பருவம்.
ஆண்டாள் கூட சொல்வாளே, நாச்சியார் திருமொழியின் இரண்டாம் திருமொழியில்(நாமமாயிரம்),
இடைப்பெண்கள் சிற்றில் சிதைக்க வேண்டாவென்று கண்ணனை வேண்டுவர்களே!
‘எங்கள் சிற்றில் வந்து சிதையேலே’ என்று ஆண்டாள் சொல்லுவா.

9. சிறுபறைப் பருவம் – இது குழந்தையின் பத்தொன்பதாம் மாதத்தில் பாடப்படும்.
ஒரு சிறிய பறையையும் குச்சியையும் வைத்து பறை கொட்டி விளையாடும் பருவம்.

10. சிறுதேர் பருவம் – இது குழந்தையின் இருபத்தி ஒன்றாம் மாதத்தில் பாடப்படுவது.
இப்பல்லாம், எங்கனா கடைக்குப் போனாக் கூட, அம்மா க்கா…, க்கா…. அப்படின்னு ஒரே அழுவாச்சி பண்ணுதுங்க.
அதாவது கார் வேணுமாம். ‘க்கா ன்னா கார்’.
அந்த காலத்துல கார் இல்லாததால தேர். பொம்மைத் தேரை உருட்டி விளையாடும் பருவம்.

பெண்பால் பிள்ளைத் தமிழ்:

கழங்காடல் – அதாவது, தாயக்கட்டை மாதிரி ஒன்ன வெச்சுக்கிட்டு உருட்டி விளையாடுவது.
அம்மானை ஆடல் – அம்மானை ன்னா பந்து. பெண்பிள்ளைகள் ஒரு பாட்டு பாடிக் கொண்டே பந்து விளையாடுவாங்க.
அப்பொழுது பாடும் பாட்டு ‘அம்மானைப் பாட்டு’.
ஊசலாடும் பருவம் – ஊஞ்சல் ஆடி விளையாடும் பருவம்.

அதுமட்டுமல்லாது, நீராடல் பருவம் என்றும் ஒரு பருவம் உண்டு.இவை அனைத்தும் ஒரு பொதுவான பருவம் தான் என்றாலும்,
அவ்வப் பொழுது வெவ்வேறு பருவங்களும் சேர்த்து, வெவ்வேறு பருவ காலத்தில் பிள்ளைத் தமிழ் பாடுவர்.

எப்படி இருந்தாலும், குழந்தையின் இரண்டாம் மாதம் முதல் இருபத்தி ஒன்றாம் மாதம் வரை உள்ள
இந்த பத்துப் பருவங்களும் பிள்ளைத்தமிழ் பாடும் பருவங்களாகும்.

இதைப்பற்றி எல்லாம் இப்போது எதற்கு என்றால், அடுத்து நாமப் பார்க்கப்போறது,
பிள்ளைத் தமிழ் இலக்கிய வகையைச் சேர்ந்த பாடல்கள்!

ஆம், ஸ்ரீ பெரியாழ்வார் தன்னை ஸ்ரீ யசோதையாகவும், இறைவனைக் குழந்தையாகவும் பாவித்துப் பாடிய
பாடல்கள் தான் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி!

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில் ஒரு தாயின் மனநிலையை அப்படியே அச்சு அசலாகப் பாடலாய்ப் பாடியுள்ளார்.

தமிழை அமிழ்து ன்னு சொன்னதே, ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியைப் படிச்சதுக்குப் பிறகுதானோ ன்னு நினைக்கத் தோணும்!!
அவ்வளவு முத்து முத்தா, மணி மணியா சொல்லியிருப்பாரு ஒரு தாயைப் போலவே.

இவர் திருமொழியில் ஆண்பாற் பிள்ளைத் தமிழை எவ்வாறு பாடியிருக்கிறார் என்றால்,
இவர் பாடிய இந்த திருமொழியில் மேலே சொன்ன பத்துப் பருவங்களிலும் அல்லாத மேலும் சில பருவங்களையும் பாடியுள்ளார்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியின் தலைப்புகளும், அதில் அவர் பாடிய பிள்ளைப் பருவங்களும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

முதற்பத்து:

முதல் திருமொழி – வண்ணமாடங்கள் (கண்ணன் திருவவதாரச் சிறப்பு)
இரண்டாம் திருமொழி – சீதக்கடல் (கண்ணனது திருமேனி அழகைப் பாதாதிகேசமாக அனுபவித்தல்)
மூன்றாம் திருமொழி – மாணிக்கங்கட்டி (தாலப்பருவம்- கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்)
நான்காம் திருமொழி – தன்முகத்து (அம்புலிப் பருவம் – சந்திரனை அழைத்தல்)
ஐந்தாம் திருமொழி – உய்யவுலகு (செங்கீரைப் பருவம் – தலையை நிமிர்த்தி முகத்தை அசைத்து ஆடுதல்)
ஆறாம் திருமொழி – மாணிக்கக்கிண்கிணி (சப்பாணிப் பருவம் – கைக்கொட்டி விளையாடுதல்)
ஏழாம் திருமொழி – தொடர்சங்கிலிகை (தளர்நடைப் பருவம் – தளர் நடை நடத்தல்)
எட்டாம் திருமொழி – பொன்னியல் (அச்சோப் பருவம் – அணைத்துக் கொள்ள அழைத்தல்)
ஒன்பதாம் திருமொழி – வட்டுநடுவே (தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

இரண்டாம் பத்து:

முதல் திருமொழி – மெச்சூது (பூச்சி காட்டி விளையாடுதல்)
இரண்டாம் திருமொழி – அரவணையாய் (கண்ணனை முலையுண்ண அழைத்தல்)
மூன்றாம் திருமொழி – போய்ப்பாடு (பன்னிரு நாமம்: காது குத்துதல்)
நான்காம் திருமொழி – வெண்ணெயளைந்த (கண்ணனை நீராட அழைத்தல்)
ஐந்தாம் திருமொழி – பின்னை மணாளனை (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்)
ஆறாம் திருமொழி – வேலிக்கோல் (காக்கையைக் கண்ணனுக்குக் கோல் கொண்டுவர விளம்புதல்
ஏழாம் திருமொழி – ஆனிரை (கண்ணனைப் பூச்சூட அழைத்தல்)
எட்டாம் திருமொழி – இந்திரனோடு (கண்ணனை திருஷ்டி தோஷம் வாராதபடி திருவந்திக் காப்பிட அழைத்தல்
ஒன்பதாம் திருமொழி – வெண்ணெய் விழுங்கி (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்)
பத்தாம் திருமொழி – ஆற்றிலிருந்து (ஆயர்மங்கையர் யசோதையிடம் கண்ணன் தீம்புகளைக் கூறி முறையிடுதல்)

மூன்றாம் பத்து:

முதல் திருமொழி – தன்னேராயிரம் (யசோதைப் பிராட்டி கண்ணனது குறும்புகளைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்)
இரண்டாம் திருமொழி – அஞ்சனவண்ணனை (யசோதைப் பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி கவலையுறுதல்)
மூன்றாம் திருமொழி – சீலைக்குதம்பை (கண்ணன் கன்றுகள் மேய்த்து வரக் கண்டு யசோதை களிப்புறல்)
நான்காம் திருமொழி – தழைகளும் (பசுக்கூட்டம்(காலிப்) பின்னேவரும் கண்ணனைக் கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்)
ஐந்தாம் திருமொழி – அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியைக் குடையாகக் கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்)
ஆறாம் திருமொழி – நாவலம் (கண்ணன் புல்லாங்குழலூதற் சிறப்பு)
ஏழாம் திருமொழி – ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்)
எட்டாம் திருமொழி – நல்லதோர் தாமரை (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்துத் தாய் பலபடி வருந்திக் கூறும் பாசுரம்)
ஒன்பதாம் திருமொழி – என்னாதன் (கிருஷ்ணாவதார இராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இரண்டு தோழியர் எதிரெதிராகக் கூறி உந்திப்பறத்தல்
{உந்திபறத்தல்- பெண்கள் பாடியும் குதித்தும் விளையாடும் ஒரு வகை விளையாட்டு.}
பத்தாம் திருமொழி – நெறிந்தகருங்குழல் (இலங்கைக்குத் தூது சென்ற திருவடி{அனுமன்}, பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித் திருமகன் கூறிய சில
அடையாளங்களைக் கூறிக் கணையாழி கொடுத்துக் களிப்பித்தல்)

நான்காம் பத்து:

முதல் திருமொழி – கதிராயிரம் (இறைவனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்)
இரண்டாம் திருமொழி – அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச் சிறப்பு)
மூன்றாம் திருமொழி – உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலை மலையின் சிறப்பு)
நான்காம் திருமொழி – நாவகாரியம் (மனம், மெய், வாக்கு ஆகிய முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு
அனுபவியாதாரை இழித்தும் கூறுதல்)
ஐந்தாம் திருமொழி – ஆசைவாய் (இறைவனிடத்தில் ஈடுபடாமலிருக்கும் சம்சாரிகளுக்கு நற்போதனை(ஹிதோபதேசம்) செய்தல்)
ஆறாம் திருமொழி – காசுங்கறையுடை ( பெற்றபிள்ளைகளுக்கு இறைவனின் திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்)
ஏழாம் திருமொழி – தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கப்படும் திருக்கண்டங்கடிநகர் என்னும் (திருப்பதியின்) திவ்யதேசத்தின் பெருமை)
எட்டாம் திருமொழி – மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1)
ஒன்பதாம் திருமொழி – மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2)
பத்தாம் திருமொழி – துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாஷிக்கும்படி அப்பொழுது வேண்டுவதற்குப் பதில் இப்பொழுதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம்
புகுதல்)

ஐந்தாம்பத்து:

முதல் திருமொழி – வாக்குத் தூய்மை (நைச்யாநுஸந்தாநம் {நைச்சியானுசந்தானம்}- தன்னைத் தாழ்த்திக் கூறுதல்)
இரண்டாம் திருமொழி – நெய்க்குடத்தை (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளைப் போல் விரும்பிப் புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல் {தன்
தேகத்தையே, இறைவனின் ஒரு திவ்யதேசமாய் அவர் கருதுகிறார்}
மூன்றாம் திருமொழி – துக்கச்சுழலையை (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவிடமாட்டேனென்று தடுத்தல்)
நான்காம் திருமொழி – சென்னியோங்கு (எம்பெருமான் தமது திருவுள்ளதில் புகுந்ததனால் ஆழ்வார் தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்)

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading