ஸ்ரீ திருவாய் மொழி தனியன்-4-ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற
–ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது —

இனி சடகோபன் பாதங்கள் -என்றத்தை விவரியா நின்று கொண்டு திருவாய் மொழி ஹ்ருத் கதமாம் படி ஆழ்வாருக்கு பரதந்த்ரரான உடையவர் திருவடிகளைத் தொழா நின்றேன் -என்கிறது

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -3-9-11-என்னுமா போலே
அங்குத்தைக்கு அனுரூபமாய்ப் பொருந்தி இருக்கிற பெரிய புகழை யுடைய
எம்பெருமானார் தம்முடைய

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே
.–3-9-11-தகுதியான மிக்க புகழை உடையனாய் நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் -அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷ்யத்தவே பரத்வத்தை உடையவனும்-உபய விபூதி உக்தன் என்றால் -அவனுக்கு தக்கு இருக்குமா போலே சர்வேஸ்வரன் கவி என்றால் அதுக்கு போரும்படி இருக்கிற ஆழ்வார் –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதுக்கு போரும்படி ஆயிரத்திலும் இப்பத்துக்கு தகுதியான புகழை உடைத்து ஸ்வரூப அநு குணமாக அப்ராப்த விஷயத்தை தவிர்ந்து-ப்ராப்த விஷயத்திலே கவி பாட சொல்லிற்று ஆகையால் ஏறிட்ட நன்மை எல்லாம் பொறுக்கை–பிறரை கவி பாட வேண்டா -என்று உபதேசிக்க வேண்டுகிறது இஸ் சம்சாரத்தில் பிறப்பு இறே -அந்த ஜென்ம சம்பந்தம் அறும் என்கிறா

வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஒன்றுக்கு ஓன்று பொருந்தி இருப்பதாய் மலர் போன்ற திருவடிகளை பிரணதி பண்ணா நின்றேன் –
ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே என்கிறபடியே
ப்ராப்ய புத்த்யா வர்த்தமானமாய்ச் செல்லுகிறது –

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே
–1-யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால் அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ – இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்- அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் –ஸ்நந்த்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே ஸ்வாமி திருவடிகளில் சாய்ப்பதே நமக்கு பிராப்யம்

இப்படி வணங்குகிறது எதுக்காக என்னில்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –

ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன்
ஆய் கொண்ட சீர் -3-9-9- என்றும்
ஆய பெரும் புகழ் –3-9-8- என்றும் சொல்லுகிறபடி
ஆயப்படும் -வி லக்ஷணமாய் நிரவதிகமான கல்யாண குணங்களால் -பூர்ணரான ஆழ்வாருடையதாய்
அதி ஸூ லபமான திராவிட வேதத்தைத் தரிக்கும் படி நிஸ் ஸலமான மனஸ்ஸைப் பெற

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-ஆயப்பட்ட சீர் -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகணன்-ஆராயப்பட்ட சீர். என்றது, குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாக இருக்கிற கல்யாண குணங்கள்.

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8–ஆயப் பட்டு இருக்கை -ஹேய பிரதிபடமாய் இருக்கை-ஆய -என்று ஆன-என்று ஆய் -ஸ்வரூப அநு பந்தி என்றுமாம்-ரூப குணத்தோடு ஆத்ம குணத்தோடு வாசி அற ஒரோ ஒன்றோ நிரவதிகமாய் இருக்கை-

அன்றிக்கே
ஆய்ந்த பெரும் சீர் என்று –
செந்தமிழ் வேதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் –
சீர்த் தொடை ஆயிரம் –1-2-11- இறே
இந்தப் பிரபந்த தாரண அர்த்தமாக
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
 –1-2-11-சப்த லக்ஷண கதமான சீர்களினுடைய தொடையை யுடைய ஆயிரத்தில்-சீர் என்று கவிக்கு உறுப்பான அலங்காரங்களைச் சொல்லுதல்-பகவத் குணங்களைச் சொல்லுதல்–எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை’ பா இனம் – என்று கவிக்கு உறுப்பாக இருப்பன சில உள; அவற்றைச் சொல்லுதல்;-அன்றிக்கே , உபாசகன் அனுக்ரஹத்தாலே – உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த ஆயிரம் என்னுதல்.

தீ மனம் கெடுத்து —2-7-8-
மருவித் தொழும் மனத்தை –2-7-7- ஆச்சார்யன் தர வேணும் இறே —
ஆகையால்
தங்கு மனம் நீ எனக்குத் தா –பெரிய திருமொழி தனியன் -என்னும்படி
பேராத வுள்ளம் பெற -என்று எம்பெருமானாரைப் பிரார்த்திக்கிறது –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
–2-7-8-பந்த ஹேது அன்றிக்கே குண அனுபவமே யாத்ரையாம் படியான நிர்தோஷ அந்தகரணாய்-ஜென்மம் ஆகிற துழதி உண்டு -தூர்த்துக்கம் -அது போம்படியாக-விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்-அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய் நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –ஸ்ரீயபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்- பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும் போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இ றே இருப்பது –

எங்கள் கதியே ராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா
–எம்பார் அருளிச் செய்த தனியன்–இவ் வாழ்வாரைப் போலே பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து வைதிக மார்க்கத்தை நடத்தியும் உகந்து அருளின நிலங்களை உத்தரித்தும்
தத் பிரதிபாதகமான இவர் ஸ்ரீ ஸூக்தியை வர்த்திப்பித்தும் – போருமவர் இறே உடையவர் –அத்தைப் பற்ற இவ் வாழ்வார் ஸ்ரீ ஸூக்தியான திருமொழி ஆயிரமும் என் ஹிருதயத்திலே நிலைத்து நிற்கும்படி
உபகரித்து அருள வேணும் என்று எம்பெருமானாரை -அர்த்திக்கிறது -இதில் –கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் -என்கிற திவ்ய ஸூக்தியை தரிக்கும் படியான மனஸ்சைத் தந்து அருள வேணும் – குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் -என்றும் -நீலன் தனக்கு உலகில் இனியான் -என்றும் -கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான் ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து -என்றும்-எம்பெருமானாரைச் சொல்லக் கடவது இறே-அத்தாலே அவரை அபேஷிக்கிறது –

அதாவது
இவர் தான் – மாறன் அடி பணிந்து உய்ந்தவராய்
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை –இராமா -46- என்றும்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த ராமானுஜன் -இராமா –29-என்றும்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாக யுடையராய் –இராமா –64-
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் இருக்குமவராய் –இரா –60-
உறு பெரும் செல்வமும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் என்று அறிதர நிற்குமவர் ஆகையாலும் –இராமா -19-
அவர் திருவடிகள் ராமானுஜர் ஆகையால் –இவரை அர்த்திக்கிறது –

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திராவிட வேதமான ஸ்ரீ திரு வாய் மொழியை-சாஷாத் கரித்து அருளினவராய் –உயர்வற உயர்நலம் உடையவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -உளன் சுடர் மிகு சுருதியுள் -நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் – நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் – அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல்-மங்கை உறை மார்பா – அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
-என்று இப்படி ஸ்ரீ நம் ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட்ட –மிக்க இறை நிலையும் மெய்யா உயிர் நிலையும் தக்க நெறியும்-தடையாகி தொக்கியிலும் ஊழ் வினையும் வாழ் வினையும் வோதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்தியல் -என்கிறபடியே ஸ்ரீ ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட்டதாய்-அர்த்த பஞ்சகத்தையும் அடைவே பிரதிபாதிக்கிற ஸ்ரீ திருவாய் மொழி யாகிற
திராவிட வேதத்தை சார்த்தமாக தெளிந்து கொண்டு இருக்கை யாகிற-பரி பூர்ண ஞானத்தை உடையராய் –வட மொழி மறை போலே தான் தோன்றியாய் இராமல்-ஆபிஜாத்யத்தாலே உண்டான-மேம்பாடு தோற்ற – மாறன் பணித்த மறை-என்றார் .-மறை- மாறன் பணித்ததாயினும் தன்னிடம் அன்பு இல்லாதார்க்கு தன் பொருளை மறைத்திடுதல்-பற்றி –மறை -என்கிறார் – ரகுவர சரிதம் முநி ப்ரநீதம்-என்பது போலே மறை மாறன் பணித்தது –என்றார்–ஸ்ரீ திரு குருகூர் அதனை உளம் கொள் -உம்மை உய்ய கொண்டு போக-.திவ்ய தேச ப்ராவண்யமே உய்ய ஒரே வழி என்றவாறு

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன்
புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –தர்சநீயமான ஸ்ரீ திரு நகரிக்கு நாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய பாட்டு என்று கொண்டு -பிரசித்தமாய் – வேத ரூபமாய் -செம் தமிழால்-இருக்கிற ஸ்ரீ திருவாய் மொழியைத் தம்முடைய பக்தி யாகிற-வாசஸ் ஸ்தானத்திலே வைத்த
ஸ்ரீ எம்பெருமானார்
 —தென் -தர்சநீயுமான என்னுதல் -தெற்கு திக்கிலே இருக்கிறது என்னுதல் –
தென்-தர்சநீயமான-அழகு-தர்சனத்துக்கு தர்சநீயமான-ஆழ்வாரை காட்டி கொடுத்த மகாத்மயம் .தென் திசை நோக்கி கை கூப்புகிறோம்.-திரு வாய் மொழி தோறும்-குருகை -பரம பதத்தை சேர்க்கும் ஊர் என்னுதல் – பரம பதத்தோடு சமமான வைபவத்தை உடைய ஊர் என்னுதல் –
பிரான் -இப்படிப் பட்ட திரு நகரியிலே அவதரித்து லோகத்தார் எல்லாரும் உஜ்ஜீவிக்கும்படி –
தத்வ ஹித-புருஷார்த்த தத் யாதாத்ம்யங்களை-திவ்ய பிரபந்த முகேன – உபகரித்த நம் ஆழ்வார் உடைய –அன்றிக்கே –-அவ்வூரிலே அவதரிக்கையாலே எல்லாருக்கும் அவர் உத்தேச்யமாய் இருக்கிற-வழியாலே அவ்வூருக்கு உபகாரகர் -என்னவுமாம்–பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை –
அவா வற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன
-என்றும் –-தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற-முதல் தாய் சடகோபன் -என்றும் சொல்லுகிறபடியே- பத்தர் பரவும் ஆயிரம் -1-5-11–ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம்-3-9-11- பொய்யில் பாடல் ஆயிரம்–4-3-11- தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன் ஒலி புகழ் ஆயிரம்–5-2-11- சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த நாமங்களாயிரம்–5-9-11- குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆணை ஆயிரம்–6-3-11- தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல் தெளிவுற்ற ஆயிரம்–7-5-11- தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன தீர்த்தங்கள்–7-10-11-தென் குருகை –பசும் தமிழ் தன்னை-
பாட்டாய பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –
திருவாய் மொழி – 10-6 2- – -என்றும்
குருகூர் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் -திருவாய் மொழி – -10 6-11 – – -என்றும்-ஸ்ரீ குருகைப் பிரான் பாட்டு பிரசித்தம் –தன் பத்தி என்னும் – அத்தை விஸ்மரித்தால் -ஒரு ஷணம் ஒரு கல்பம் போலே இருக்கும்படி-பண்ணக் கடவதான -பரம பக்தி யாகிற அதுவும் –
தன் பக்தி –-எல்லாருடைய பக்தி போல் அன்றிக்கே –பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி அறிந்த எம்பெருமானாருடைய ப்ரேமம் அவருடைய ஞான-வைசத்யத்துக்கு தகுதியாய் இருக்கும் இறே -இப்படிப் பட்ட பக்தி யாகிற-வீட்டின் கண் வைத்த –-கண் -சப்தமி -வீடு -ஆவாசஸ்தானம் -அநர்கமான ரத்னத்தை செப்பிலே வைத்து கொண்டு இருப்பாரைப் போலே தம்முடைய பக்தி யாகிற மகா ஸௌதத்திலே வைத்துக் கொண்டு இருக்கிற–வீட்டின் கண்…ரத்னத்தை செப்பிலே வைப்பது போல
பக்தி தான் பொன் -திரு வாய் மொழி ரத்னம்–செப்பு பெட்டகத்தில் வைத்தால் போல.–தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த திருவாய் மொழி விஷயமாக எம்பெருமானாருக்கு ஏற்பட்ட பக்தி -திரு வாய் மொழிக்கு குடி இருக்கும் இல்லமாக அமைந்தது – திருவாய் மொழி அன்றி -இருப்புக் கொள்ளாத நிலையே-எம்பெருமானார் உடைய பக்தி -என்க – அதனை இல்லமாக கொண்டது திருவாய் மொழி என்பது எப்பொழுதும்-பேர் அன்புடன் அனுசந்திகப் படுவது என்னும் கருத்து கொண்டது-இவ் இல்லத்துக்கு தனி சிறப்புண்டு – அது தோன்ற-தன் பத்தி என்னும் வீடு -என்றார் 

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –எங்களுக்கு விதேயமாய் இருக்கும் ஸ்ரீ இராமானுச முனி யாகிற யானை –-பண்ணார் பாடல் -திருவாய் மொழி – 10-7-5- -என்னும்படி ஸ்ரீ ஆழ்வார் பண்ணிலே உபகரித்து அருளின செவ்வித் தமிழான ஸ்ரீ திருவாய் மொழியால் விளைந்த ஆனந்தமானது –ஒழுகா நின்றுள்ள – மதமாய்க் கொண்டு -விஸ்த்ருதமாக –வேத நூலோதுகின்றதுண்மை – என்னும்படி யதாபூத வாதித்வத்தால் வந்த மெய்ப்பாட்டை உடைய விலஷண வேதமாகிற எழில் தண்டையும் ஏந்திக் கொண்டு – நீங்கள் தன்னரசாக நடத்துகிற பூமியிலே ஒருவருக்கும் நேர் நிற்க ஒண்ணாதபடி -தள்ளிக் கொண்டு வந்து உங்கள் மேலே எதிர்ந்தது –
வாதிகளாய் உள்ளீர் -சிஷ்யர்களும் பிரசிஷ்யர்க்களுமாய் பல்கிப் பணைத்து இருந்த உங்களுடைய சம்பத்து முடிந்ததே – லோகம் பிழைத்ததே -என்று கருத்து –பண்டரு மாறன் பசும் தமிழ் –என்றதுக்கு பண்டே உள்ளதாய் -பெறுதற்கு அரிதாய் –இருந்துள்ள மாறன் பசும் தமிழ் -என்று பொருள் ஆனாலோ என்னில் -அது ஒண்ணாது .-பண்டு என்கிற சொல்லு பூர்வ கால வாசி இத்தனை அல்லது பூர்வ காலீன வஸ்து வாசி யல்லாததினாலே.பண்டு அரு என்ற–பதச் சேதமாகில்-பண்டு என்கிற பதம் கால பரமே யானாலும் – கங்கா யாகோஷம் – என்கிற இடத்தில் கங்கா சப்தம் தீர வாசகம் ஆனால் போலே –
லஷணையாய் இச் சப்தம் காலீன வஸ்து வாசகம் என்று சொல்லலாம் இறே –அந்த பஷத்தில் –பிரதித்வாபராந்தரத்திலும் ஸ்ரீ வியாச அவதாரம் பண்ணி -சம்ஸ்ர்க வேதங்களை ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே வ்யவசிக்குமா போலே பிரதி கலி யுகத்திலும் ஜ்ஞான யோகியாய் அவதரித்து ஸ்ரீ த்ரமிட வேதங்களை ஸ்ரீ சர்வேஸ்வரன் வெளி இட்டு போகிறான் என்று -பிரம்ம பார்க்கவாவ்ர்த்த பாத்மாதி புராணங்களிலே ஸூபிரசித்தமாக சொல்லுகையாலே – நித்தியமாய் -அபௌருஷேயமாய் இருந்துள்ள ஸ்ரீ திருவாய் மொழி -பாகவதர்கு ஒழிய -அந்யருக்கு வாக் மனச்சுக்களாலே ஸ்பரசிக்கவும் கூட அரிதான -என்றபடி —பண்டரு மாறன் தமிழ்–மாறன் பண்ணிலே தருகிற பசும் தமிழ் என்று இயைக்க –
மாறன்-ஸ்ரீ நம் ஆழ்வார்–பண்-ஸ்வரம்-அதனிலே தருதலாவது -அப்பண்ணிலே அமைவுறும்படிதருகை
பண்ணார் பாடல் இன் கவிகள்-ஸ்ரீ திருவாய் மொழி -10 7-5 – – என்று தாமே அருளிச் செய்தது காண்க .–இனி தருதல்- உண்டு பண்ணுதலாய் -மணம் தரு மலர் -என்பது போல –பண் தரு பசும் தமிழ் -என்று இயைதலுமாம் – புஷ்பம் பரிமளத்தொடே அலருமா போலே ஸ்ரீ திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாயிற்று இருப்பது –என்று பண்ணார் பாடல் வ்யாக்யானத்தில் ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-இங்கு நினைக்கத் தகும் .–மாறன் பண்டரு பசும் தமிழ் என்னும் இடத்தில்
கபிலர் பாட்டு என்னும் இடத்தில் போலே –செய்யுட் கிழமைக் கண் ஆறாம் வேற்றுமை தொக்க தென்று கொள்க .-பசும் தமிழ்-பசுமையான தமிழ் -பண்புத் தொகை –-பசுமையாவது -செம்மை-செவ்விய தமிழ் என்றபடி .-பொருள் விளங்கு நடையில் உள்ள தமிழ் செவ்விய தமிழ் -என்க –இனி —
பசுமை என்றும் மாறாத இளமையாய்க் கன்னித் தமிழ் என்னலுமாம் .–இனி —பசும் தமிழாவது -பிற மொழி கலப்பற்ற தூய தமிழ் என்று உரைத்தலுமாம் .-ஸ்ரீ திரு வாய் மொழி என்னாது –ஸ்ரீ மாறன் பசும் தமிழ் -என்றார்-அவருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களையும் நெஞ்சில் கொண்டு-என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -ஸ்ரீ திருவாய் மொழி -10 6-4 – -என்று
ஸ்ரீ நம் ஆழ்வாரே தம் நூல்களை இரும் தமிழ் நூல் –என்பது காண்க–இனி தமிழில் முதல் நூல் எனத்தக்கது இது ஒன்றே என்பது கருதி தமிழ் நூல்களுக்கு தாயான–திருவாய் மொழியை பசும் தமிழ் -என்றார் ஆகவுமாம்–குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் – என்றது காண்க –லஷ்மி நாதாக்ய சிந்தவ்-சடரிபுஜலத ப்ராப்ய காருண்ய நீரம் நா தாத்ரா வப்யஷி சத்த நுர குபதாம்போஜா சஷூர் ஜ்ஜ்ராப்யாம் – கத்வாதாம்ய மு நாக்யாம் சரிதம நுய தீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் சம்பூர்ய ப்ரானிசச்யே ப்ரவஹதி நிதராம்-தேசிகேந்திர பிரமௌநை – என்கிறபடியே –ஸ்ரீயபதி யாகிற கடலில் நின்றும் –ஆழ்வார் ஆகிற முகில் – பெரும் கருணை யாகிற நீரை முகந்து – ஸ்ரீ பெரிய முதலியார் ஆகிற குன்று தன்னிலே வர்ஷிக்க – அக் கருணை யானது ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ உய்யக்கொண்டார் -ஆகிய திரு வருவியாய் – பரம ஆசார்யரான ஸ்ரீ ஆள வந்தார் -ஆகிற ஆற்றிலே சென்று – ஸ்ரீ எம்பெருமானார் ஆகிய பொய்கையை பூரித்து – ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற மடையாலே தடையறப் பெருகி –சம்சாரி சேதனராகிற பயிரை நோக்கி – ரஷித்தது என்று சொல்லுகையாலே –கவியமுதம் –என்றும் –-தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலை -என்றும்
ஸ்லாக்கிக்கும்படி-சர்வருக்கும் அமுதமயம் ஆகையாலே -ஆனந்தாவஹமான ஸ்ரீ திருவாய் மொழியாலே விளைந்த ஆனந்த மானது – இவ்வளவாக பெருகி வாரா நின்றுள்ள -அம்ர்தமாய்க் கொண்டு –பண்ணார் பாடலினால் ஸ்ரீ திரு மால் இரும் சோலையான் ஆனந்தம் அதிகமாகி அவ் ஆனந்தத்துக்கு போக்கு வீடாக -தென்னா தென்னா -என்று ஆலாபனம் செய்து பாடா நிற்பானாயின்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு இத்தகைய பண்ணார் பாடலினால் ஆனந்தம் விளைய கேட்க வேண்டுமா –
தமிழ் – அதற்கு மேலே பசும் தமிழ் – அதற்கு மேலே பண் தரு பசும் தமிழ் – எல்லா வற்றிற்கும் மேலே மாறன் பண் தரு பசும் தமிழ் – ஸ்ரீ எம்பெருமானாரை மதம் பிடித்த பெரு வேழம் ஆக ஆக்குவதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும் – ஸ்ரீ திருவாய் மொழி அனுபவம் உள் அடங்காது வெளியே கண்களிலே ஆனந்த பாஷ்பமாய்ப் பெருக்கெடுத்த படி

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும்
மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –ஆத்ம குண ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்ம குணங்கள் தன்னை சர்வ விஷயமாக உபகரித்து அருளும் பரம ஔ தாரராய் –
எங்கள் குலத்துக்கு தலைவரான ஸ்ரீ எம்பெருமானார்-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் –
யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் – ஸ்ரீ திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் – ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி வர்த்திக்கும் ஸ்ரீ திருப்பதிகள் தோறும் – அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு நில்லா நிற்பர்- இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி என்று கருத்து–உண்மையான மெய் ஞானி என்று ஸ்ரீ ஆழ்வார்களைச் சொல்ல குறை இல்லை- ஸ்ரீ குறையல் பிரான் அடி கீழ் ஸ்வாமி எழுந்து அருளி இருக்கிறார் இன்றும் நாம் சேவிக்கும் படி–ஸ்ரீ ஆழ்வார் உடன் சேர்த்தி திரு மஞ்சனம் இன்றும் சேவிக்கலாமே ஸ்ரீ திரு குருகூரில்–ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரிலும் வைத்துக் கொண்டு பிரதாநரான ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்யப்பட சப்த ராசியான ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தினுடைய சர்வ கந்த -என்கிற விசேஷத்தை பிரதிபாதிக்கையாலே -தானும் பரிமளிதமாய் அநு சந்தாதாக்களுக்கு அவ் விஷயத்தைக் கொடுக்கக் கடவதாய் – யாழினிசை வேதத்தியல் -என்றும் –
தொண்டர்க்கு அமுதம் -என்றும் சொல்லுகிறபடியே போக்ய தமமாய் இருக்கிற அனுசந்தான கான ரூபமான இசையானது – எந்த எந்த ஸ்தலத்திலே நடையாடி ஸூ ப்ரதிஷ்டமாய் இருந்ததோ அவ்வவ ஸ்தலங்கள் தோறும்-
-ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரியும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வார் ஸ்ரீ திரு வாய் மொழியை- இனிமையாக இசைக்கும் இடங்களில் எல்லாம் -ஸ்ரீ எம்பெருமானார் -புக்கு நிற்கிறார் -என்க —பண்ணார் பாடல் -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரே அருளிச் செய்தமைக்கு ஏற்ப –
திருவாய் மொழியின் இன்னிசை
-என்கிறார்–ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய ஏனைய திவ்ய பிரபந்தங்களும் இயற்பா ஆதலின் இசைப்பாவான ஸ்ரீ திருவாய் மொழியின் இன்னிசை என்கிறார்–எங்கு எங்கு எல்லாம் ஸ்ரீ ரகுநாதனுடைய கீர்த்தனம் நிகழ்கின்றதோ அங்கு அங்கு எல்லாம்-மத்தகதிடை கைகளைக் கூப்பி கண்ணும் கண்ணீருமாய் ஆஞ்சநேயன் ஈடுபட்டு நிற்பது போல்-ஸ்ரீ திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் புக்கு நிற்கிறார் என்க-இன்பம் பயக்க எழில் மாதர் தன்னோடும் அவனே இனிது கேட்பானே– ஸ்ரீ ஸ்வாமி கேட்க கேட்க வேண்டுமா -மிதுனமே அங்கே இருக்க – ஸ்ரீமத் பாகவதம் பாடும் இடம் எல்லாம் கன்று குட்டி -தாய் பசு போல கண்ணன் போவது போல–நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு-திருவாய் மொழி -8 10 9- – என்று தொடங்கும் பாசுரத்தில் பேசியதற்கு ஏற்ப –ரசித்து ஸ்ரீ திருவாய் மொழி பாடும் இடங்கள் எல்லாம் பரம ரசிகரான ஸ்ரீ எம்பெருமானாரும் புக்கு நிற்கிறார் என்றது ஆயிற்று

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்

நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-ஸ்வ சம்பந்தத்தை வுடையவர்களுக்கு இன்னார் என்னும் மதிப்பை கொடுக்குமதாய்-ஹித பரமுமாய் -ப்ரியகரமுமாய் -அஞ்ஞாத ஜ்ஞாபகமுமாய் -பிராப்ய ப்ராபகங்களுமாய்- இருக்கையாலே – சீரியதாய் -நிரவதிகமான சம்பத்தும் -பிதாவும் -மாதாவும் -சதாசார்யனும் – பரிமளிதமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரனும் – ஸ்ரீ ஆழ்வார் பகவத் ப்ரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த -பரபக்தி -யாதி – ச்வபாவங்களின் உடைய அடைவிலே – உபகரித்து அருளின -திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழியே-என்று இம் மகா ப்ருதிவியில் உள்ளார் அறியும்படி நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் –
அதவா-விளங்கிய சீர் நெறி தரும் என்றது -சீர்த் தொடை யாயிரம் -திருவாய் மொழி -1 2-11 – – என்னும்படி தமக்கு பிரகாசித்த பகவத் குணங்களை அடைவே உபகரித்து அருளின -என்னவுமாம் –உறு பெரும் செல்வமும்அவிந்தந தனஞ்சய பிரசமதம் தனம் தந்தனம் -என்கிறபடியே அப்ராப்தமான சம்பத் அன்றிக்கே – தனஞ்சய விவர்த்தனம் தனமுதூட கோவர்த்தனம் சூசாத நம பாதநம்-சூ மனசா சமாராதனம் -என்றும் –-ஸாஹி ஸ்ரீர்ம்ர்தாசதாம் -என்றும் -முக்த ஐச்வர்யத்துக்கு உடல் ஆகையாலே –ப்ராப்தமாய் –-பெரும் –-ஷீணே புன்யே மர்த்த்ய லோகாம் விசந்தி -என்றும் –-ஒரு நாயகம் ஓட வுலகு உடன் ஆண்டவர்-கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் –என்றும்-சொல்லுகிறபடியே அதி ஸ்வல்பமாய் -அநித்யமாய்-இருக்கை அன்றிக்கே –
கொள்ளக் குறைவற்று இலங்கி – கொழுந்து விட்டோங்கிய -என்கிறபடியே – கொள்ளக் கொள்ள பெருகி வரக் கடவதாய் இருக்கிற – செல்வமும் – சம்பத்தும் -அளவியன்ற யந்தாதி யாயிரம் இறே -இது –சகல ஜன உஜ்ஜீவன ஏக ப்ரவர்த்தம் ஆகையாலும் –பக்தாம்ர்தம் விஸ்வ ஜன அநு மோதனம் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் சொல்லுகிறபடியே
பிரியத்தையே நடத்தக் கடவதாகையாலும் -திரு வாய் மொழியிலே – வீடு முன் முற்றவும் -என்று தொடங்கி -கண்ணன் கழலினை –என்னும் அளவும் ஆதி அந்தத்திலே ஹிதத்தையே போதிக்கையாலே ஹிதத்தை நடத்தக் கடவதாகையாலும் தாயும் தந்தையுமாய் இருக்கும்அத்ர பரத்ர சாபி – என்கிறபடியே உபய விபூதியிலும் இச் சேதனனுக்கு உபாதேய தமனாய் –பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -அஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணின சதாசார்யனும் – இவ் உபகார ஆதிக்யத்தாலே காணும் இவன் பரித்யாஜ்யனாகாதே ஒழிந்தது – உயர்த்தியை உடையனானதும் – சேதனருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்த்திப்பவன் ஆகையாலே குரு –தனக்கு ஒரு பயன் கருதாது -அவ் இறைவனுக்கு மகிச்சியை ஊட்டுதல் வேண்டும் –-இதுவே அடிமை எனப்படுவது -இத்தகைய அடிமையே ஆத்மா ஸ்வரூபத்தின் உண்மை நிலையம் -என்று முன்னம் முன்னம் மறந்த ஆத்மாவினுடைய-அனந்யார்ஹ சேஷத்வத்தை உணர்த்துதலின் திருவாய் மொழி -உயர் குருவாய் ஆயிற்று என்க –திருவாய் மொழியும் -இவை பத்தும் வீடே – 1-1 11- – என்றபடி வீடு அளிப்பதாலின் உபாயமாகவும் கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே –10 6-11 – -என்றபடி வீட்டில் உள்ளாறும் கேட்டு இன்புறும்படி இருத்தலின் ப்ராப்யமாகவும் ஆதலின் -பூ மகள் நாதன் -ஆயிற்று –சீர்-பரபக்தி -பர ஞான -பரம பக்திகள் -என்னும் நல் இயல்புகள் மறைந்து கிடந்த அவை இறைவன் அருளால் நம் ஆழ்வாருக்கு வெளிப்பட்டன –அவை தமக்கு அங்கன் வெளிப்படும் அடைவிலே அவர் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் –
பரபக்தி யாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடல் மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு –பர ஞானம் ஆவது -அத்தகைய அன்பு முதிர்ந்த நிலையில் ஏற்படும் நேரிடையான தோற்றம் – பரம பக்தி யாவது ஷண காலமும் பிரிவை சஹிக்க மாட்டாது அனுபவித்தே யாக வேண்டிய பேரன்பு – ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு சூழ் விசும்பு -திருவாய் மொழி வரையிலும் பர பக்தியும் – சூழ் விசும்பு அணி முகில் -லில் பர ஞானமும்-முனியே நான் முகனில் பரம பக்தியும் ஸ்ரீ இறைவன் அருளால் விளங்கியதாக பெரியோர் விளம்புகின்ற்றனர் –
இனி சீர்த் தொடை யாயிரம்
-என்றபடி-இறைவன் குணங்கள் அவன் அருளால் விளங்க அவ்வடைவில் நம் ஆழ்வார் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் என்னலுமாம் –

மற்றை ஆழ்வார் திவ்ய பிரபந்தங்களை அங்க உப அங்கமாக உடைய இவருடைய திராவிட வேதமான திவ்ய பிரபந்தம் ஒழிய தத் இதர கிரந்தங்களில் சபலமான மனஸ்ஸூ சலியாமல் இது ஒன்றிலுமே உற்று நிலை நிற்க வேணும் என்று அவரை அர்த்திக்கிறது -என்கை —

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading