யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறிய திருதராஷ்டிரன்! – அஸ்வமேத பர்வம் பகுதி – 01-கங்கைக் கரையில் பீஷ்மருக்குத் தர்ப்பணம் செலுத்தப்பட்டது; உறவுகளின் அழிவினால் துயரடைந்த யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் சொன்ன திருதராஷ்டிரன்; விதுரனின் சொற்களைப் புறக்கணித்ததே துன்பத்துக்குக் காரணமாக அமைந்தது எனச் சொன்ன திருதராஷ்டிரன்…
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் திருதராஷ்டிரன் (பீஷ்மரின் ஆத்மாவுக்கு) நீர்க்காணிக்கைகளை {தர்ப்பணங்களைச்} செலுத்திய பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், புலன்கள் தடுமாறும் நிலையில் கண்களில் நீர் ததும்ப இருந்தவனுமான யுதிஷ்டிரன், முன்னவனை {திருதராஷ்டிரனைத்} தன் முன்னே விட்டு, (ஆற்றின்) கரையில் ஏறி, வேடனால் துளைக்கப்பட்ட ஒரு யானையைப் போலக் கங்கைக் கரையின் கீழே விழுந்தான்.(1,2) அப்போது கிருஷ்ணனால் தூண்டப்பட்ட பீமன், மூழ்கிக் {விழுந்து} கொண்டிருந்த அவனைத் தாங்கி {ஏந்திக்} கொண்டான். பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவனான கிருஷ்ணன், “இவ்வாறு கூடாது” என்று சொன்னான்[1].(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், கலக்கமடைந்து தரையில் கிடப்பதையும், மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதையும் பாண்டவர்கள் கண்டார்கள்.(4) மன்னன் மனச்சோர்வுற்றவனாகவும், பலமற்றவனாகவும் இருப்பதைக் கண்ட பாண்டவர்கள், துயரத்தில் மூழ்கியவர்களாக அவனைச் சூழ்ந்து கீழே அமர்ந்தனர்.(5)உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனும், ஞானப்பார்வை கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன்களுக்காகப் பெரிதும் துயரில் பீடிக்கப்பட்டவனாக அந்த ஏகாதிபதியிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குருக்களில் புலியே, எழுவாயாக.(6) உன் கடமைகளைக் கவனிப்பாயாக. ஓ! குந்தியின் மகனே, க்ஷத்திரிய நடைமுறையின் படியே நீ இந்தப் பூமியை வென்றாய்.(7) ஓ! மனிதர்களின் தலைவா, இனி நீ உன் தம்பிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அவளை {பூமியை} அனுபவிப்பாயாக. ஓ! அறவோரில் முதன்மையானவனே, நீ எதற்காகத் துயரப்பட வேண்டும் என்பதை {என்பதற்கான காரணத்தை} நான் காணவில்லை. ஓ! பூமியின் தலைவா, கனவில் பெற்ற வளங்களைப் போல நூறு மகன்களை இழந்த காந்தாரியும், நானும் தான் வருந்த வேண்டியவர்கள்.(8) பிறழுணர்வுகளைக் கொண்ட நான், நம் நலத்தை வேண்டிய உயர் ஆன்மாவான விதுரனின் பொருள் பொதிந்த சொற்களைக் கேட்காமல் (இப்போது) வருந்திக் கொண்டிருக்கிறேன்.(9)
அறம் சார்ந்தவனும், தெய்வீக உள்நோக்குப்பார்வை {ஆன்ம அறிவைக்} கொண்டவனுமான விதுரன், “துரியோதனனின் குற்றத்தால் உமது குலம் அழியப் போகிறது.(10) ஓ! மன்னா, உமது குலத்தின் நன்மையை நீர் விரும்பினால் என் ஆலோசனையின்படி செயல்படுவீராக. தீய மனம் கொண்ட ஏகாதிபதியான இந்தச் சுயோதனனைக் கைவிடுவீராக,(11) எவ்வகையிலும் அவனைக் காண கர்ணனையோ, சகுனியையோ அனுமதியாதீர். ஆரவாரமில்லாமல், அவர்களின் சூதாட்டத்தைத் தடுத்து, ஒடுக்கி,(12) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பட்டஞ்சூட்டுவீராக. புலன்களைக் கட்டுப்படுத்தியவனான அவனே நீதியுடன் பூமியை ஆள்வான்.(13) ஓ! ஏகாதிபதி, குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை நீர் ஏற்கவில்லையென்றால், ஒரு வேள்வியைச் செய்து நாட்டின் பொறுப்பை நீரே ஏற்றுக் கொண்டு,(14) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, ஓ! குலத்தை முன்னேற்றுபவரே, அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதி, உமது உறவுகளை உமது அருளில் வாழச் செய்வீராக” என்றான் {விதுரன்}.(15)
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, தொலைநோக்குப் பார்வை கொண்ட விதுரன் இதைச் சொன்ன போதும், மூடனான நான் தீயவனான துரியோதனனைப் பின்தொடர்ந்தேன்.(16) அமைதியான அவனது {விதுரனது} இனிய பேச்சைக் காது கொடுத்துக் கேளாததன் விளைவாகவே நான் இந்தப் பெரும் துயரத்தை அடைந்து, துன்பக் கடலில் மூழ்கியிருக்கிறேன்.(17) ஓ! மன்னா, முதியவர்களான உன் தந்தையும் {நானும்}, தாயும் {காந்தாரியும்} துயரில் மூழ்கியிருப்பதைக் காண்பாயாக. ஓ! மனிதர்களின் தலைவா, நீ துயரமடைவதற்கான எந்நிகழ்வையும் நான் காணவில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}”.(18)
யுதிஷ்டிரனை ஆற்றுப்படுத்திய வியாசர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 02-யுதிஷ்டிரனைத் தேற்றிய கிருஷ்ணன்; காட்டுக்குச் செல்லக் கிருஷ்ணனிடம் அனுமதி கேட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை ஆற்றுப்படுத்திய வியாசர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நுண்ணறிவுமிக்கவனான மன்னன் திருதராஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், புத்திமானான யுதிஷ்டிரன் அமைதியடைந்தான். அப்போது கேசவன் (கிருஷ்ணன்) அவனைத் தூண்டும் வகையில்,(1) “இறந்து போன மூதாதையருக்காக ஒருவன் பெருந்துயரத்தில் ஈடுபட்டால், அவன் அவர்களைத் துயருறவே செய்கிறான்.(2) (எனவே, துயரத்தை நீக்கி) புரோகிதர்களுக்குத் தகுந்த கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றை (இப்போது) செய்வீராக; சோம மதுவால் {ஸோமரஸத்தால்} தேவர்களையும், உரிய உணவு மற்றும் பானத்தால் உமது மூதாதையரின் ஆத்மாக்களையும் நிறைவடையச் செய்வீராக.(3) உமது விருந்தினருக்கு இறைச்சியையும், பானத்தையும், இல்லாதவர்களுக்கு {ஏழைகளுக்கு}, அவர்கள் விரும்பும் கொடைகளையும் கொடுத்து நிறைவடையச் செய்வீராக. உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட ஒருவன் இவ்வாறு தன்னை அமைத்துக் கொள்ளக்கூடாது.(4)
எதை அறிய வேண்டுமோ அதை நீர் அறிந்திருக்கிறீர்; எதைச் செய்ய வேண்டுமோ, அதுவும் செய்யப்பட்டுள்ளது. பாகீரதியின் {கங்கையின்) மகனான பீஷ்மர், கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, நாரதர் மற்றும் விதுரர் ஆகியோரால் சொல்லப்பட்ட க்ஷத்திரியக் கடமைகளை {ராஜதர்மங்களை} நீர் கேட்டிருக்கிறீர்.(5) எனவே, மூடர்களின் பாதையில் நீர் நடப்பது தகாது; உமது மூதாதையரின் பாதையைப் பின்பற்றி (பேரரசுக்குரிய) சுமையைச் சுமப்பீராக {அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வீராக}.(6) ஒரு க்ஷத்திரியன் நிச்சயம் தன் (சொந்த) புகழாலேயே சொர்க்கத்தை அடைய வேண்டும். கொல்லப்பட்ட வீரர்கள் ஒருவரும் (தெய்வீகப் பகுதிகளில் இருந்து) ஒருபோதும் புறங்காட்டி ஓடமாட்டார்கள்.(7) ஓ! வலிமைமிக்க அரசே, உமது துயரைக் கைவிடுவீராக. உண்மையில் நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. இப்போரில் கொல்லப்பட்டவர்களை ஒருக்காலும் உம்மால் காண முடியாது” என்றான் {கிருஷ்ணன்}.(8)
பெரும் ஊக்கம் கொண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அறவோரின் இளவரசனான யுதிஷ்டிரனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு நிறுத்தினான்; யுதிஷ்டிரன் அவனுக்கு இவ்வாறு பதிலளித்தான்.(9) அவன் {யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம்}, “ஓ! கோவிந்தா, உனக்கு என்னிடத்தில் உள்ள அன்பை நான் முழுமையாக அறிவேன். நீ எப்போதும் என்னிடம் அன்புடனும், நட்புடனும் இருக்கிறாய்.(10) ஓ! கதாசக்கரதாரியே, ஓ! யது குலக் கொழுந்தே, ஓ! மகிமைமிக்கவனே, காட்டில் உள்ள தவசிகளின் ஆசிரமங்களுக்குச் செல்ல என்னை நீ அனுமதித்தால், நான் பெரிதும் விரும்பும் காரியத்தைச் செய்தவனாவாய்.(11) என் பாட்டன் {பீஷ்மர்}, மனிதர்களில் முதன்மையானவனும், போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனுமான கர்ணன் ஆகியோரைக் கொன்றுவிட்டு என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.(12) ஓ! ஜனார்த்தனா, என் மனம் தூய்மையடைந்து, இந்தக் கொடும்பாவத்தில் இருந்து நான் விடுபடும் வகையில் எனக்கு ஆணையிடுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.(13)
பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது, பெருஞ்சக்தி கொண்டவரும், வாழ்வின் கடமைகளை அறிந்தவருமான வியாசர், அவனை அமைதிப்படுத்தும் வகையில் இந்தச் சிறந்த சொற்களைப் பேசினார்.(14) அவர் {வியாசர்}, “என் குழந்தாய், உன் மனம் இன்னும் அமைதியடையவில்லை; எனவே, குழந்தைத்தனமான உணர்வில் நீ மீண்டும் மயக்கமடைகிறாய். ஓ! குழந்தாய், மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் எங்கள் பேச்சைக் காற்றில் சிதறடிக்க வேண்டும்?(15) போரிட்டு வாழும் க்ஷத்திரியர்களின் கடமைகளை நீ அறிவாய். தன் பங்கைச் சரியாகச் செய்த மன்னன் கவலையில் மூழ்கக்கூடாது.(16) விடுதலை {முக்திக்} கோட்பாட்டை {மோக்ஷதர்மத்தை} நம்பிக்கையுடன் கேட்டிருக்கிறாய்; ஆசையின் மூலம் எழும் நம்பிக்கையின்மைகளை {அச்ச உணர்வுகளை} உன்னிடம் இருந்து நான் மீண்டும் மீண்டும் களைந்திருக்கிறேன்.(17) ஆனால், பிறழ்புத்தி கொண்டவனான {புத்தி கெட்டவனான} நீ, நான் வெளிப்படுத்தியவற்றைக் கவனிக்காமல் அவற்றை நிச்சயம் முற்றாக மறந்திருக்கிறாய். இவ்வாறு இருக்க வேண்டாம். இத்தகைய அறியாமை உனக்குத் தகாது.(18) ஓ! பாவமற்றவனே, அனைத்து வகை பரிகாரங்களையும் நீ அறிவாய்; மேலும், அரச அறங்கள், மற்றும் கொடைப் பயன்கள் {ராஜதர்மங்கள் மற்றும் தான தர்மங்கள்} அனைத்தையும் நீ கேட்டிருக்கிறாய். (19) ஓ! பாரதா, அறங்கள் அனைத்தையும் அறிந்தவனாகவும், ஆகமங்கள் அனைத்திலும் தேர்ந்தவனாகவும் உள்ள நீ, மீண்டும் மீண்டும் அறியாமையின் மூலம் ஏன் (துயரத்தில்) மதி மயங்குகிறாய்?” என்றார் {வியாசர்}.(20)
அஸ்வமேத யாகம் செய்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 03-யுதிஷ்டிரனிடம் குதிரை வேள்வியைச் செய்யச் சொன்ன வியாசர்; அதற்குப் போதிய பொருளின்மையைச் சுட்டிக்காட்டிய யுதிஷ்டிரன்; மருத்தனின் வேள்வியில் எஞ்சிய பொருளைக் கொண்டு வரச் சொன்ன வியாசர்…
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, உனக்கு ஞானம் போதவில்லை என நான் கருதுகிறேன். ஒருவனும் தன் சொந்த ஒழுக்கத்தால் எந்தச் செயலையும் செய்வதில்லை.(1) ஓ! கௌரவமளிப்பவனே, தெய்வமே நல்ல, அல்லது தீய செயல்களில் அவனை ஈடுபடுத்துகிறது. இதில் வருந்துவதற்கு எங்கே இடமிருக்கிறது?(2) இழிசெயல்களைச் செய்துவிட்டதாக நீயே கருதிக் கொள்கிறாய். எனவே, ஓ! பாரதா, பாவத்தைக் களையும் வழியைக் கேட்பாயாக.(3)
பாவமிழைப்பவர்கள், ஓ! யுதிஷ்டிரா, தவம், வேள்வி மற்றும் கொடைகளின் மூலம் தங்களை அவற்றிலிருந்து எப்போதும் விடுவித்துக் கொள்ளலாம்.(4) ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாவம் நிறைந்த மக்கள், வேள்வி, தவங்கள் மற்றும் ஈகையினால் தூய்மையடைகின்றனர்.(5) உயர் ஆன்ம தேவர்களும், அசுரர்களும் அறத்தகுதியை ஈட்டுவதற்காக வேள்விகளைச் செய்கின்றனர்; எனவே, வேள்விகள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன.(6) உயர் ஆன்ம தேவர்கள் வேள்விகளின் மூலமே இவ்வளவு அற்புதமிக்கப் பலசாலிகளாக வளர்ந்தனர்; சடங்குகளைச் செய்தே அவர்கள் தானவர்களை வெற்றி கொண்டார்கள்.(7)
ஓ! யுதிஷ்டிரா, ராஜசூயம், குதிரை வேள்வி ஆகியவற்றையும், சர்வமேதம் மற்றும் நரமேதம் ஆகியவற்றையும் செய்வதற்கு நீ ஆயத்தமாவாயாக[1].(8) தசரதனின் மைந்தனான ராமனைப் போன்றோ, துஷ்மந்தன் {துஷ்யந்தன்} மற்றும் சகுந்தலையின் மைந்தனும், பூமியின் தலைவனும், அதிகப் பலம் வாய்ந்தவனும், உன் மூதாதையுமான மன்னன் பரதனைப் போன்றோ, விதிக்கு இணக்கமான வகையில் தக்ஷிணைகளுடன் கூடிய குதிரை வேள்வியை {அஸ்வமேத யாகத்தை} நீ செய்வாயாக” என்றார் (9,10).யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “குதிரை வேள்வியானது இளவரசர்களைத் தூய்மையடையச் செய்யும் என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஆனால், நீர் கேட்கத்தகுந்த ஒரு கருத்தையும் நான் கொண்டுள்ளேன்.(11) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பெரும் எண்ணிக்கையிலான இரத்த உறவினர்களைப் படுகொலை செய்து விட்டு சிறு அளவிலான கொடையை அளிப்பதற்குக் கூட நான் இயலாதவனாக இருக்கிறேன்; கொடுப்பதற்கு என்னிடம் செல்வமேதும் இல்லை.(12) துன்பத்தில் இருப்பவர்களும், பச்சையான {ஆறாத புதிய} காயம் கொண்டவர்களும், பரிதாப நிலையில் இருப்பவர்களும், மன்னர்களின் மகன்களுமான இந்தச் சிறுவர்களிடம் என்னால் செல்வத்தை வேண்ட முடியாது.(13) ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நானே பூமியை அளித்துவிட்டு, பெருஞ்சோகத்தில் இருக்கும்போது, ஒரு வேள்வியைச் செய்வதற்காக எவ்வாறு என்னால் கப்பம் விதிக்க முடியும்?(14)
ஓ! தவசிகளில் சிறந்தவரே, துரியோதனனின் குற்றத்தால் பூமியின் மன்னர்கள் அழிவை அடைந்தனர், {அதன் காரணமாக} நாங்களும் சிறுமைகளை அறுவடை செய்தோம்.(15) செல்வத்துக்காகத் துரியோதனன் பூமியைப் பாழாக்கினான்; தீய மனம் கொண்ட அந்தத் திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} கருவூலமும் வெறுமையாக உள்ளது.(16) (இவ்வேள்வியில்) பூமியே தக்ஷிணை; முதல் சந்தர்ப்பத்தில் பரிந்துரைக்கப்பட்ட விதி இதுவே ஆகும். இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கல்விமான்களால் இவ்விதி வழக்கமாகத் தலைகீழாகவே செய்யப்படுகிறது.(17) மேலும், ஓ! தவசியே, (இந்தச் செயல்முறைக்கு) மாற்றாக எதையும் கொள்ள நான் விரும்பவில்லை.[2] ஓ! மதிப்பிற்குரிய ஐயா, இக்காரியத்தில், உமது ஆலோசனையைச் சொல்லி எனக்கு உதவுவதே உமக்குத் தகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(18)பிருதையின் மகனால் {குந்தியின் மகன் யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் சிந்தித்த கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, நீதிமானான அம்மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்},(19) “(இப்போது) வெறுமையாக இருக்கும் இந்தக் கருவூலம் நிறையும். ஓ! பிருதையின் மகனே, உயர் ஆன்ம மருத்தனின் வேள்வியில் பிராமணர்களால் விட்டுச் செல்லப்பட்ட தங்கம் இமவான் (இமய) மலையில் இருக்கிறது” என்றார்[3].(20,21)யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “மருத்தனால் செய்யப்பட்ட அவ்வேள்வியில் எவ்வாறு அவ்வளவு தங்கத்தைத் திரட்ட முடிந்தது? மேலும், ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அவன் {மருத்தன்} எப்போது {எக்காலத்தில்} ஆட்சி செய்தான்?” என்று கேட்டான்.(22)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, கரந்தம குலத்தில் உதித்த அம்மன்னனை {மருத்தனைக்} குறித்துக் கேட்க ஆவல் உனக்கிருந்தால், பெரும் பலம் மிக்கவனும், பெருஞ்செல்வம் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி எப்போது ஆண்டான் என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக” என்றார்.(23)
அரசமுனி மருத்தன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 04-ஸம்வர்த்தர் மற்றும் மருத்தன் ஆகியோரின் வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய வியாசர்; இமய மலையின் வடபுறத்தில் வேள்வி செய்யத் தொடங்கிய ராஜரிஷி மருத்தன்…
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! அறம் சார்ந்தவரே, அரசமுனியான மருத்தனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன். ஓ! துவைபாயனரே {வியாசரே}, ஓ! பாவமற்றவரே, அதை நீர் எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குழந்தாய், கிருத யுகத்தில் மனு (பூமியின்) செங்கோல் தரித்த தலைவராக இருந்தார். அவரது மகன் பிரசாந்தி {பிரஜாதி} என்று அறியப்பட்டான்.(2) பிரசாந்திக்கு க்ஷுபன் {க்ஷுதன்} என்ற மகன் இருந்தான். தலைவனான மன்னன் இக்ஷ்வாகு, க்ஷுபனின் மகனே ஆவான்.(3) ஓ! மன்னா, அவனுடைய {இக்ஷ்வாகுவினுடைய} நூறு மகன்களும் முதன்மையான பக்தி கொண்டவர்களாக இருந்தனர். மன்னன் இக்ஷ்வாகுவினால் அவர்கள் அனைவரும் ஏகாதிபதிகளாக்கப்பட்டனர்.(4) அவர்களில் மூத்தவனான விம்சன், ஒரு முதன்மையான வில்லாளியானான். ஓ! பாரதா, மங்கலனான விவிம்சன், விம்சனின் மகனாவான்.(5)
ஓ! மன்னா, விவிம்சனுக்குப் பதினைந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும், பலமிக்க வில்லாளிகளாகவும், பிராமணர்களை மதிப்பவர்களாகவும், வாய்மை பேசுபவர்களாகவும்,(6) மென்மையானவர்களாகவும், எப்போதும் நல்லதையே பேசுபவர்களாகவும் இருந்தனர். அனைவருக்கும் மூத்தவனான கனீநேத்ரன், தன் தம்பிகள் அனைவரையும் ஒடுக்கினான்.(7) மொத்த நாட்டையும் கைப்பற்றி, தொல்லைகள் அனைத்தையும் களைந்த கனீநேத்ரனால் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை; மக்களும் அவனிடம் நிறைவடையவில்லை.(8) ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, அவனை அரியணையில் இருந்து இறக்கிய அவர்கள், அவனது மகனான ஸுவர்ச்சனுக்கு {ஸுவர்ச்சஸுக்கு} அரசுரிமையில் அதிகாரம் வழங்கி, (தங்கள் இதயங்களில்) மகிழ்ந்திருந்தனர்.(9)
அவனது மகன், (முதலாம்) காரந்தமன் {அவிக்ஷித்}, திரேதா யுகத்தின் தொடக்கத்தில் இந்திரனுக்கு இணையான ஒளியைக் கண்டு, அருள் கொண்டவனாகவும், தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(17) அந்நேரத்தில் அனைத்தும் மன்னர்களும் அவனது கட்டுப்பாட்டில் இருந்தனர்; அதே போல, அவன் தன் செல்வம் கொண்டு செய்த செயல்களாலும், தன்னுடைய ஆற்றலாலும் அவர்களுக்கு மத்தியில் பேரரசனானான்.(18) சுருக்கமாக {சொல்வதென்றால்}, அவிக்ஷித் என்ற பெயரைக் கொண்ட அந்த அறம் சார்ந்த மன்னன் {முதலாம் காரந்தமன்}, வீரத்தில் இந்திரனைப் போன்றவனாக இருந்தான்; மேலும் அவன் வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், தன் புலன்களை அடக்கியவனாகவும் இருந்தான்.(19) அவன், சக்தியில் சூரியனுக்கு ஒப்பானவனாகவும், பொறுமையில் பூமாதேவியைப் போன்றவனாகவும், புத்தியில் இந்திரனைப் போன்றவனாகவும், அமைதியில் இமவான் {இமய} மலையைப் போன்றவனாகவும் இருந்தான்.(20) கல்விமானும், திறன்மிக்கவருமான அங்கிரஸைப் புரோகிதராகக் கொண்டவனும், நூறு குதிரை வேள்விகளைச் செய்தவனுமான அந்த மன்னன் {அவிக்ஷித் / முதலாம் காரந்தமன்}, தன் செயல், எண்ணம், பேச்சு, தற்கட்டுப்பாடு மற்றும் பொறுமை ஆகியவற்றின் மூலம் தன் குடிமக்களின் இதயங்களை மகிழ்ச்சியடையச் செய்தான்.(21,22)
மன்னர்களின் தலைவனும், மருத்தன் என்ற பெயரைக் கொண்டவனுமான அவனுடைய மகன் நற்குணங்களில் தன் தந்தையை விஞ்சியவனாகவும், நீதிமானாகவும், பெரும் புகழைக் கொண்டவனாகவும் இருந்தான்; பத்தாயிரம் யானைகளின் வலிமையுடன் கூடிய அவன் இரண்டாவது விஷ்ணுவைப் போலவே இருந்தான்.(23) அந்த அறம் சார்ந்த ஏகாதிபதி, ஒரு வேள்வியைச் செய்ய விரும்பி, இமயத்தின் வடக்குப் பக்கத்தில் இருந்த மேரு மலைக்குச் சென்று பளபளக்கும் தங்கப் பாத்திரங்களை ஆயிரக்கணக்கில் உண்டாக்கச் செய்தான். அங்கே அந்த உயர்ந்த தங்க மலையில் அவன் {யாகத்திற்கான} சடங்குகளைச் செய்தான்.(24,25) பொற்கொல்லர்கள் {தட்டார்கள்}, எண்ணற்ற கலன்களையும் {குண்டங்களையும்}, பாத்திரங்களையும், சட்டிகளையும் {ஸ்தாலிகளையும்}, இருக்கைகளையும் செய்தனர்.(26) வேள்விச்சாலை இந்த இடத்தில் அருகிலேயே இருந்தது. பூமியின் அறம்சார்ந்த தலைவனான மன்னன் மருத்தன், பிற இளவரசர்களுடன் சேர்ந்து அங்கே ஒரு வேள்வியைச் செய்தான்” என்றார் {வியாசர்}.(27)தந்தையின் தீய நடத்தையையும், அவன் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதையும் கண்ட அவன் {ஸுவர்ச்சன்}, மக்களுக்கு நன்மை செய்வதில் எப்போதும் முனைப்புள்ளவனாகவும், பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், வாய்மை பேசுபவனாகவும், புலன்கள் மற்றும் எண்ணங்களை அடக்கித் தூய்மை பயில்பவனாகவும் இருந்தான். தொடர்ந்த அறம் பயில்பவனான அந்த உயர் ஆன்மாவிடம் {ஸுவர்ச்சனிடம்} குடிமக்களும் நல்ல நிறைவுடன் இருந்தனர்.(10,11) அவன் {ஸுவர்ச்சன்} தொடர்ந்து அறச்செயல்கள் செய்து வந்ததால் அவனது கருவூலங்களும், வாகனங்களும் வெகுவாகக் குறைந்தன. அவனது கருவூலம் வெறுமையானதால், சிற்றரசு இளவரசர்கள் அவனைச் சூழ்ந்து தொல்லை கொடுக்கத் தொடங்கினர்.(12) கருவூலம், குதிரைகள் மற்றும் வாகனங்கள் எண்ணிக்கையில் குறைந்திருக்கும் வேளையில், பல பகைவர்களால் இவ்வாறு ஒடுக்கப்படும்போது, மன்னன் தன்னை ஆதரிப்பவர்களுடனும், தன் தலைநகரின் குடிமக்களுடனும் பெருந்தொல்லைக்கு ஆளானான்.(13) அவனது {ஸுவர்ச்சனது} சக்தி பெரிதும் குறைந்தாலும், அம்மன்னனின் சக்தி அறத்தில் நிறுவப்பட்டிருந்ததால் பகைவர்களால் அவனைக் கொல்ல இயலவில்லை.(14) அவன் தன் குடிமக்களுடன் சேர்ந்து பெருந்துன்பத்தின் எல்லையை அடைந்தபோது, அவன் தன் கையை (வாயினால்) ஊதினான், அதிலிருந்து படைகள் தோன்றின.(15) அவன் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் எல்லைகளில் வாழ்ந்தபடியே அந்த மன்னர்கள் அனைவரையும் வெற்றி கொண்டான். ஓ! மன்னா, இந்தச் சூழ்நிலையிலிருந்து அவன் கரந்தமன்[1] என்று {என்ற பெயரால்} கொண்டாடப்பட்டான்.(16)
பிருஹஸ்பதியைத் தடுத்த இந்திரன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 05-ஸம்வர்த்தர் மற்றும் பிருஹஸ்பதிக்கு இடையிலான சச்சரவு; மருத்தனைக் கண்டு பொறாமை அடைந்த இந்திரன்; மருத்தனின் புரோகிதரான பிருஹஸ்பதியை அவனுக்கு எதிராகத் தூண்டிய இந்திரன்…
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, அம்மன்னன் {மருத்தன்} எவ்வாறு அவ்வளவு பலசாலியானான்? மேலும், ஓ! இருபிறப்பாளரே {பிராமணரே}, அவன் எவ்வாறு அவ்வளவு தங்கத்தை அடைந்தான்?(1) மேலும், ஓ! மதிப்புக்குரிய ஐயா, அந்தச் செல்வம் அனைத்தும் இப்போது எங்கே இருக்கிறது? ஓ! தவசியே, அதை நாம் அடைவது எவ்வாறு?” என்று கேட்டான்.(2)
அதன்பேரில் வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “பிரஜாபதியான தக்ஷனின் எண்ணற்ற பிள்ளைகளான அசுரர்களும், தேவர்களும் (தங்களுக்குள் போரிடுவதற்காக) ஒருவரையொருவர் அறைகூவி அழைத்துக் கொண்டிருந்ததைப் போலவே, ஓ! மன்னா, அங்கிரஸின் மகன்களான பெருஞ்சக்தி கொண்ட பிருஹஸ்பதியும், அவருக்கு இணையான நோன்புகளைக் கொண்ட தவசியான ஸம்வர்த்தரும் ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தனர். பிருஹஸ்பதி மீண்டும் மீண்டும் ஸம்வர்த்தரைக் கவலை கொள்ளச் செய்யத் தொடங்கினார்.(4,5) ஓ! பாரதா, தொடர்ந்து தமது அண்ணனால் கவலைக்குள்ளான அவர், தமது வளங்களைக் கைவிட்டுத் திறந்த வெளியைத் தவிரத் தன் உடலை மறைக்க வேறொன்றும் இல்லாத நிலையில் காட்டுக்குச் சென்றார்[1].(6)(அந்நேரத்தில்) அசுரர்களை வென்று அவர்களை அழித்திருந்த வாசவன் {இந்திரன்}, தெய்வீக உலகங்களின் ஆட்சி உரிமையை அடைந்து, அங்கிரஸின் மூத்த மகனும், பிராமணர்களில் சிறந்தவருமான பிருஹஸ்பதியைத் தன் புரோஹிதராக நியமித்தான். முற்காலத்தில், வலிமை, ஆற்றல் மற்றும் குணம்மிக்க மனிதர்களில் ஒப்பற்றவனும்; சதக்ரதுவைப் போலப் பலமிக்கவனும், அற ஆன்மா கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான மன்னன் கரந்தமன் {ஸுவர்ச்சன்} தன் குடும்பப் புரோஹிதராக அங்கிரஸைக் கொண்டிருருந்தான்.(7-9) ஓ! மன்னா, அவன் தனது வாய் மூச்சின் மூலம் தியானத்தின் காரணமாக உண்டாக்கப்பட்ட வாகனங்களையும், போர்வீரர்களையும், பின்பற்றுவோர் பலரையும், விலைமதிப்புமிக்கச் சிறந்த கட்டில்களையும் கொண்டிருந்தான். மேலும் அவனது சொந்த நற்குணங்களின் மூலம் அந்த ஏகாதிபதி அனைத்து இளவரசர்களையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.(10,11)
மேலும், அவன் விரும்பிய காலம் வரை வாழ்ந்திருந்து தனது சட உடலுடனேயே அவன் சொர்க்கிற்கு உயர்ந்தான். பகைவர்களை வெல்பவனும், யயாதியைப் போன்ற அறவோனுமான அவனது மகன் அவிக்ஷித் {காரந்தமன்},(12) பூமி அனைத்தையும் தன் ஆட்சிப் பகுதிகளின் கீழ் கொண்டு வந்தான். தகுதியிலும், வலிமையில் அம்மன்னன் {அவிக்ஷித்} தன் தந்தைக்கு {ஸுவர்ச்சனுக்கு} ஒப்பானவனாக இருந்தான்.(13) அவன் {அவிக்ஷித்}, பெரும் சக்தி கொண்டவனும், வாசவனுக்கு ஒப்பானவனுமாக மருத்தன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். பெருங்கடல்களை ஆடையாக உடுத்தியிருக்கும் பூமாதேவி அவனிடம் ஈர்ப்பு கொண்டாள்.(14) அவன் எப்போதும் தேவர்களின் தலைவனை {இந்திரனை} எதிர்த்து வந்தான்; ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, வாசவனும் மருத்தனை எதிர்த்து வந்தான்.(15)
பூமியின் தலைவனான மருத்தன், தூய்மையானவனாகவும், கச்சிதம் கொண்டவனாகவும் இருந்தான். பெரும் முயற்சி செய்தாலும் சக்ரனால் {இந்திரனால்} அவனை வெல்ல முடியவில்லை.(16) அவனைக் கட்டுப்படுத்த இயலாத அவன், தேவர்களுடன் சேர்ந்து குதிரைகளைச் செலுத்தி வந்து பிருஹஸ்பதியை அழைத்து அவரிடம் இவ்வாறு பேசினான்.(17) அவன் {இந்திரன்}, “ஓ! பிருஹஸ்பதியே, எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீர் விரும்பினால், தேவர்கள் மற்றும் மூதாதையரின் ஆன்மாக்கள் சார்பாக மருத்தனுக்காக எந்தப் புரோகித அலுவல்களையும் செய்யாதீர். ஓ! பிருஹஸ்பதியே, நான் மூவுலகங்களின் ஆட்சி உரிமையைப் பெற்றிருக்கிறேன், மருத்தனோ வெறுமனே பூமியின் ஆட்சியாளனாக மட்டுமே இருக்கிறான்.(18,19) ஓ! பிராமணரே, தேவர்களின் இறவா மன்னனுக்குப் புரோஹிதராகச் செயல்படும் உம்மால், மரணத்திற்கு உட்படும் மருத்தனுக்கும் புரோஹிதச் செயல்பாடுகளைத் தயக்கமின்றி எவ்வாறு செய்ய முடிகிறது?(20) உமக்கு நன்மை நேரட்டும். என் தரப்பையோ, ஏகாதிபதியான மருத்தனின் தரப்பையோ அடைவீராக. மருத்தனைக் கைவிட்டு என்னிடம் வருவீராக” என்றான் {இந்திரன்}.(21)
தேவர்களின் அரசனால் இவ்வாறு அழைக்கப்பட்ட பிருஹஸ்பதி, சற்று நேரம் சிந்தித்து, இறவாதவர்களின் மன்னனிடம் மறுமொழி கூறினார்.(22) அவர் {பிருஹஸ்பதி}, “உயிரினங்களின் தலைவன் நீயே, உன்னிலேயே உலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. நமுசி, விஷ்வரூபன் மற்றும் பலன் ஆகியோரை அழித்தவன் நீயே.(23) ஓ! வீரா, தேவர்களுக்குச் செழிப்பை உண்டாக்கியவன் நீயே, ஓ! பலனைக் கொன்றவனே, சொர்க்கத்தையும், பூமியையும் ஆதரிப்பவன் நீயே.(24) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ஓ! பாகனைத் தண்டித்தவனே, உனக்குப் புரோகித அலுவல் புரிந்த பிறகு, என்னால் ஒரு மானிட இளவரசனுக்கு எவ்வாறு தொண்டாற்ற முடியும்? நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(25) நெருப்பின் தேவன், வெப்பம் உண்டாக்குவதை நிறுத்தினாலோ, பூமி தன் இயல்பை மாற்றிக் கொண்டாலோ, சூரியன் ஒளி தருவதை நிறுத்தினாலோ கூட நான் ஒருபோதும் {நான் சொன்னதில்} வாய்மையில் இருந்து விலக மாட்டேன்” என்று சொன்னார் {பிருஹஸ்பதி என்றார் வியாசர்}”.(25)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிருஹஸ்பதியின் பேச்சைக் கேட்ட இந்திரன், பகை உணர்வுகள் தீர்ந்தவனாகி, அவரைப் புகழ்ந்துவிட்டு தன் மாளிகைக்குத் திரும்பச் சென்றார்”.(27)
ஸம்வர்த்தர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 06-வேள்வி செய்து தர பிருஹஸ்பதியிடம் வேண்டிய மருத்தன்; பிருஹஸ்பதி மறுத்தது; ஸம்வர்த்தரைக் குறித்து மருத்தனிடம் சொன்ன நாரதர்; ஸம்வர்த்தரைக் கண்டடைந்த மருத்தன்…
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பிருஹஸ்பதி மற்றும் ஞானியான மருத்தன் ஆகியோர் குறித்த பழைய புராணம் குறிப்பிடப்படுகிறது.(1) அங்கிரஸ் மகனான பிருஹஸ்பதி தேவர்களின் தலைவனுடன் (இந்திரனுடன்) செய்து கொண்ட உடன்படிக்கையைக் கேள்விப்பட்ட மன்னன் மருத்தன் ஒரு பெரும் வேள்விக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்தான்.(2) நாநயமிக்கவனான அந்தக் கரந்தமனின் பேரன் {மருத்தன்} தன் மனத்தில் வேள்வி குறித்த கருத்தை உருவாக்கிக் கொண்டு பிருஹஸ்பதியிடம் சென்று இவ்வாறு பேசினான்.(2)
அவன் {மருத்தன் பிருஹஸ்பதியிடம்}, “ஓ! வழிபடத்தகுந்த தவசியே, முன்பொரு சமயம் நீர் முன்மொழிந்த வேள்வியை உமது அறிவுரைக்கு இணக்கமாகச் செய்ய விரும்பி, அதற்குண்டான பொருட்களையும் திரட்டிவிட்டேன். அவ்வேள்வியைச் செய்விக்கும் புரோஹிதராக நான் உம்மையே நியமிக்க விரும்புகிறேன். ஓ! சிறந்தவரே, நீ எங்கள் குடும்பப் புரோஹிதர், எனவே, வேள்விக்குரிய பொருட்களை எடுத்துக் கொண்டு, வேள்வியை நீரே செய்வீராக” என்றான்.(4,5)
பிருஹஸ்பதி {மருத்தனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, உன் வேள்வியைச் செய்ய நான் விரும்பவில்லை. நான் தேவர்களின் தலைவனால் (இந்திரனால்) புரோஹிதராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். மேலும் இவ்வாறே செயல்படுவதாக நான் அவனுக்கு உறுதியளித்திருக்கிறேன்” என்றார்.(6)
மருத்தன் {பிருஹஸ்பதியிடம்}, “பரம்பரையாக நீரே எங்கள் குடும்பப் புரோஹிதராவீர், மேலும், இக்காரணத்திற்காகவே நான் உம்மிடம் மதிப்புக் கொண்டிருக்கிறேன். வேள்விகளில் நீர் எனக்கு உதவ வேண்டும் எனக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. எனவே, என் வேள்வியில் புரோகிதராக நீர் அலுவல் புரிய வேண்டும்” என்றான்.(7)
பிருஹஸ்பதி {மருத்தனிடம்}, “ஓ! மருத்தா, இறவாதவர்களுக்குப் {சொர்க்கவாசிகளுக்குப்} புரோஹிதராகச் செயல்பட்ட நான், இறக்கவல்ல மானிடர்களுக்கு எவ்வாறு அதுபோல் செயல்பட முடியும்? நீ இங்கிருந்து செல்வாயோ, இருப்பாயோ, இறவாதவர்களைத் {சொர்க்கவாசிகளைத்} தவிர நான் வேறு எவருக்கும் புரோஹிதராகச் செயல்படுவதை நிறுத்தி விட்டேன் என நான் உனக்குச் சொல்கிறேன்.(8) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இப்போது என்னால் உனது புரோஹிதராகச் செயல்பட இயலாது. உன் விருப்பப்படி வேள்வியைச் செய்வதற்காக வேறு எவரையும் நீ நியமித்துக் கொள்வாயாக” என்றார்”.(9)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் மருத்தன், அவமானத்தால் குழப்பமடைந்து, கவலையில் ஒடுக்கப்பட்ட மனத்துடன் இல்லம் திரும்பிக் கொண்டிருக்கும் போது, வழியில் நாரதரைச் சந்தித்தான்.(10) தெய்வீக முனிவரான நாரதரைக் கண்ட அந்த ஏகாதிபதி {மருத்தன்}, கூப்பிய கரங்களுடன் முறையாக வணங்கியபடி அவர் முன்பு நின்றான். அப்போது, நாரதர் அவனிடம் இவ்வாறு சொன்னார். அவர் {நாரதர்}, “ஓ! அரசமுனியே, மனம் நிறைந்தவனாக நீ காணப்படவில்லையே? நீ நலமாக இருக்கிறாயா? ஓ! பாவமற்றவனே, நீ எங்கே சென்றிருந்தாய்? உன் மன வருத்தத்திற்கான காரணம் எங்கிருக்கிறது?(11,12) மேலும், ஓ! மன்னா, ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உனக்கு மறுப்பேதும் இல்லையென்றால் அதை (உன் கவலைக்கான காரணத்தை) எனக்குச் சொல்வாயாக. ஓ! இளவரசே, உன் மனக்கவலையை அகற்றுவதற்கு நான் எல்லா முயற்சிகளையும் செய்வேன்” என்று சொன்னார் {நாரதர் என்றார் வியாசர்}”.(13)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெரும் முனிவரான நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் மருத்தன், தன் அற ஆசானிடம் {உபாத்யாயரிடம்} தனக்குக் கிடைத்த விருப்ப மறுப்பை அவரிடம் தெரிவித்தான்.(14)
மருத்தன் {நாரதரிடம்}, “என் வேள்வியில் புரோஹிதராகச் செயல்பட வேண்டி நான் அங்கிரஸின் மகனும், இறவாதவர்களின் புரோஹிதருமான பிருஹஸ்பதியிடம் சென்றேன், ஆனால் அவர் நான் அளித்த வாய்ப்பை ஏற்கவில்லை.(15) அவரிடம் இருந்து விருப்ப மறுப்பைப் பெற்ற நான் இனியும் வாழ விரும்பவில்லை. ஓ! நாரதரே, இவ்வாறு அவர் என்னைக் கைவிட்டதால், நான் பாவத்தால் மாசடைந்திருக்கிறேன்” என்றான்”.(16)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “அம்மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட நாரதர், ஓ! வலிமைமிக்க இளவரசே {யுதிஷ்டிரா}, அவிக்ஷித்தின் மகனான அவனை {மருத்தனை} மீட்பதாகத் தோன்றும் சொற்களை அவனுக்கு மறுமொழியாகச் சொன்னார்.(17)
நாரதர் {மருத்தனிடம்}, “சம்வர்த்தர் என்ற பெயரைக் கொண்ட அங்கிரஸின் அறம் சார்ந்த மகனொருவர் அனைத்து உயிரினங்களும் ஆச்சரியப்படும் வகையில் பூமி முழுவதும் நிர்வாணமாகத் திரிந்து வருகிறார்;(18) ஓ! இளவரசே, பிருஹஸ்பதி உன் வேள்வியைச் செய்ய விரும்பவில்லையெனில் நீ பலமிக்க அந்தச் சம்வர்த்தரிடம் செல்வாயாக. அவருக்கு உன்னிடம் நிறைவேற்பட்டால் அவர் உனக்கு வேள்வியைச் செய்து தருவார்” என்றார்.(19)
மருத்தன் {நாரதரிடம்}, “ஓ! நாரதரே, நீர் சொன்ன இந்த வார்த்தைகளால் நான் புத்துயிர் பெற்றவனாக உணர்கிறேன். ஆனால், ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, நான் சம்வர்த்தரை எங்கே காணலாம் என்பதையும், என்னால் எவ்வாறு அவரருகில் இருக்க முடியும் என்பதையும், அவரிடம் இருந்தும் விருப்ப மறுப்பைப் பெற்றால் நான் வாழ விரும்பேன் என்பதால், அவர் என்னைக் கைவிடாதவாறு நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(20,21)
நாரதர் {மருத்தனிடம்}, “ஓ! இளவரசே, மஹேஸ்வரனைக் காண விரும்பும் அவர், பித்தன் வேடத்தில் வாராணசி {காசி} நகரத்தில் சுகமாகத் திரிந்து கொண்டிருக்கிறார்.(22) அந்த நகரத்தின் வாயிலை அடைந்ததும், அதனருகில் ஏதோவோரிடத்தில் ஒரு சடலத்தை நீ வைக்க வேண்டும், ஓ! இளவரசே, எந்த மனிதர் அச்சடலத்தைக் கண்டதும் விலகிச் செல்வாரோ அந்த மனிதரையே சம்வர்த்தராக அறிவாயாக,(23) அவரை அறிந்ததும், அந்தப் பலமிக்க மனிதர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் அவரது காலடித்தடங்களைப் பின்தொடர்ந்து சென்று, (நீண்ட காலம்) ஒரு தனிமையான இடத்தில் அவர் இருப்பதைக் கண்டு, பணிவுடன் கரங்களைக் கூப்பி அவரிடம் நீ பாதுகாப்பை நாடுவாயாக.(24) {சம்வர்த்தரான} தம்மைக் குறித்த செய்தியை யார் உனக்குச் சொன்னது என அவர் உன்னைக் கேட்டால், சம்வர்த்தரைக் குறித்து நாரதர் உனக்குச் சொன்னதாக அவரிடம் சொல்வாயாக.(25) {நாரதரான} என்னைப் பின்பற்றுமாறு அவர் உன்னைக் கேட்டுக் கொண்டால், எத்தயக்கமுமின்றி நான் {நாரதராகிய நான்} நெருப்புக்குள் நுழைந்துவிட்டேன் என நீ அவருக்குச் சொல்வாயாக” என்றார் {நாரதர்}”[1].(26)வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “நாரதரின் முன்மொழிவுக்குத் தன் ஒப்புதலை அளித்த அந்த அரசமுனி, அவரை முறையாக வழிபட்ட பிறகு, அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு, வாராணசி நகரகத்திற்குப் புறப்பட்டு,(27) அஃதை {வாராணசியை} அடைந்ததும் நாரதரின் சொற்களை நினைவுகூர்ந்த அந்தப் புகழ்பெற்ற இளவரசன், நகரத்தின் வாயிலில் ஒரு சடலத்தை வைத்துச் சொன்னது போலவே செய்தான்.(28) தற்செயலாக அந்தப் பிராமணரும் {சம்வர்த்தரும்} அதே நேரத்தில் {வாராணசி} நகரத்தின் வாயிலில் நுழைந்தார். அப்போது சடலத்தைக் கண்ட அவர் திடீரென விலகிச் சென்றார்.(29)
அவர் திரும்பிச் செல்வதைக் கண்டவனும், அவிக்ஷித்தின் மகனுமான அந்த இளவரசன் {மருத்தன்}, கூப்பிய கரங்களுடனும், {சீடனாகி} அவரிடம் இருந்து அறிவுரையைப் பெறும் நோக்கத்துடனும் அவரது பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்து சென்றான்.(30) பிறகு ஒரு தனிமையான இடத்தில் அவரைக் கண்டபோது அந்தச் சம்வர்த்தர் புழுதியையும், சாம்பலையும் இறைத்து அம்மன்னன் மீது சளியையும், எச்சிலையும் துப்பினார்.(31) சம்வர்த்தரால் இவ்வாறு ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டாலும் அந்த மன்னன் பணிவுடனும், கூப்பிய கரங்களுடனும், அந்தத் தவசியை அமைதியடைச் செய்ய முயன்றான்.(32) நீண்ட காலத்திற்குப் பிறகு களைப்படைந்த சம்வர்த்தர், பல கிளைகளைக் கொண்டதும், புனிதமானதுமான ஓர் அரச மரத்தின் குளிர்ந்த நிழலை அடைந்ததும், தன் வழியில் இருந்து விலகி ஓய்வெடுக்க அமர்ந்தார்” என்றார் {வியாசர்}.(33)
உடன்பட்ட ஸம்வர்த்தர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 07-வேள்வி செய்வதற்குப் பிருஹஸ்பதியிடம் அனுமதி பெற்று வருமாறு மருத்தனிடம் கேட்ட ஸம்வர்த்தர்; முன்கதையை ஸம்வர்த்தரிடம் சொன்ன மருத்தன்; நிபந்தனையின் பேரில் வேள்வி செய்வதற்கு இணங்கிய ஸம்வர்த்தர்…
{வியாசர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, சம்வர்த்தர் {மருத்தனிடம்}, “நீ எவ்வாறு என்னை அறிந்து கொண்டாய்? மேலும் என்னைக் குறித்து உனக்குச் சொன்னது யார்? என் நன்மையை விரும்புவாயெனில் இதனை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக.(1) நீ உண்மையைச் சொன்னால், உன் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் நீ அடைவாய், நீ என்னிடம் பொய்யைச் சொன்னால், உன் தலை நூறு துண்டுகளாகப் பிளக்கும்” என்றார்.(2)
மருத்தன் {சம்வர்த்தரிடம்}, “தமது வழியில் திரிந்து கொண்டிருந்த நாரதர், நீர் எங்கள் குடும்பப் புரோஹிதரின் மகன் என உம்மைக் குறித்து என்னிடம் சொன்னார், இது (இந்தத் தகவல்) என் மனத்தை (உம்மிடம்) சீரிய நிறைவடையச் செய்தது” என்றான்.(3)
சம்வர்த்தர் {மருத்தனிடம்}, “இதை நீ என்னிடம் உண்மையாகவே சொல்லியிருக்கிறாய். வேள்விகளைச் செய்யும் ஒருவனாக அவர் (நாரதர்) என்னை அறிவார். தற்போது நாரதர் எங்கே வாழ்கிறார் என்பதை இப்போது எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார்.(4)
மருத்தன் {சம்வர்த்தரிடம்}, “தெய்வீகத் தவசிகளின் இளவரசரான அவர் (நாரதர்), உம்மைக் குறித்த இந்தச் செய்தியை எனக்குச் சொல்லிவிட்டு, உமது பாதுகாப்பில் என்னை விட்டுவிட்டு நெருப்புக்குள் நுழைந்தார்” என்றான்”.(5)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னனிடம் (மருத்தனிடம்) இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட சம்வர்த்தர் பெரும் நிறைவை அடைந்தார், மேலும் அவர் (மருத்தனிடம்), “நானும் இவையனைத்தையும் செய்யவல்லவனே” என்றார்.(6)
பிறகு, ஓ! இளவரசே, பித்தனைப் போல அலைந்து திரியும் அந்தப் பிராமணர் {சம்வர்த்தர்}, கொடுஞ்சொற்களால் மருத்தனை மீண்டும் மீண்டும் வசைபாடி,(7) “பெருமூளைக் கோளாறால் பீடிக்கப்பட்டவனும், தன்மனத்தின் சீரற்ற இச்சைகளின்படி எப்போதும் செயல்படுபவனும், இத்தகைய ஒருமை மனநிலை கொண்டவனுமான என்னைப் புரோஹிதராகக் கொண்டு ஏன் இந்த வேள்வியைச் செய்ய நீ விரும்புகிறாய்?(8) என் அண்ணன் {பிருஹஸ்பதி} வேள்விகளை நடத்த வல்லவர், அவர் வாசவனிடம் (இந்திரனிடம்) சென்று அவனது வேள்விகளைச் செய்து வருகிறார், நீயும் உன் வேள்வியை அவரைக் கொண்டே செய்வாயாக.(9) என் வீட்டுப் பொருட்களையும், அகநிலை உணவர்வுபெற்ற தேவர்களையும், வேள்வி செய்யும் வாடிக்கையாளர்களையும் என அனைத்தையும் என்னிடம் இருந்து பலவந்தமாக அபகரித்துக் கொண்டு, என் உடலை மட்டுமே இப்போதைக்கு என்னிடம் விட்டு வைத்திருக்கிறார்,(10) ஓ! அவிக்ஷித்தின் மகனே {மருத்தனே}, அனைத்து வகையிலும் அவர் என் மதிப்புக்குரியவர் என்பதால், அவரது அனுமதியின்றி எவ்வழியிலும் என்னால் உன் வேள்வியைச் செய்ய இயலாது.(11) எனவே, வேள்வி செய்யும் விருப்பமேதும் உனக்கிருந்தால், முதலில் நீ அந்தப் பிருஹஸ்பதியிடம் சென்று, அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு என்னிடம் திரும்பி வருவாயாக” என்றார்.(12)
மருத்தன், “ஓ! சம்வர்த்தரே, நான் முதலில் பிருஹஸ்பதியிடம்தான் சென்றேன், ஆனால் வாசவனின் {இந்திரனின்} ஆதரவை விரும்பிய அவர், வேள்வி செய்பவனாக என்னை விரும்பவில்லை.(13) அவர் {பிருஹஸ்பதி}, “இறவாதவர்களின் புரோஹிதர் என்ற நிலையை அடைந்த பிறகு, இறந்து போகிறவர்களுக்குப் பணி செய்ய நான் விரும்பவில்லை. பூமியின் தலைவனாகியிருக்கும் மருத்தன் எப்போதும் தன்னை எதிர்க்கும் விருப்பம் கொண்டிருக்கிறான் என்றும், மருத்தனின் வேள்வியைச் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி சக்ரனால் (இந்திரனால்) நான் தடுக்கப்பட்டேன்” என்று சொன்னார். அவ்வாறே ஆகட்டும் என்று பலனைக் கொன்றவனிடம் (இந்திரனிடம்) சொன்னதன் மூலம் உமது அண்ணன் {பிருஹஸ்பதி} அதற்கு இணங்கினார்.(15) ஓ! தவசிகளில் சிறந்தவரே {சம்வர்த்தரே}, தேவர்களின் தலைவனுடைய பாதுகாப்பை அடைவதில் அவர் வென்ற பிறகு, இதய நிறைவுடன் நான் அவரிடம் சென்றேன் என்றாலும் அவர் எனக்குப் புரோஹிதராகச் செயல்பட மறுத்துவிட்டார்.(16) இவ்வாறு மறுக்கப்பட்ட நான் இப்போது நான் கொண்டுள்ள அனைத்தையும் செலவு செய்து உம்மைக் கொண்டு ஒரு வேள்வியைச் செய்து, உமது நற்காரியங்களின் தகுதியால் வாசவனை விஞ்ச விரும்புகிறேன்.(17) ஓ! பிராமணரே {சம்வர்த்தரே}, என்னிடம் எக்குற்றமும் இல்லாமலே பிருஹஸ்பதியால் மறுக்கப்பட்ட நான் இப்போது அவரிடம் சென்று இந்த வேள்வியைச் செய்வதில் அவரது உதவியை நாட விரும்பவில்லை” என்றான்.(18)
சம்வர்த்தர் {மருத்தனிடம்}, “ஓ! மன்னா, நான் உன்னிடம் கேட்கப் போகும் அனைத்தையும் செய்வதற்கு இணங்கினால், நிச்சயம் நீ விரும்பும் அனைத்தையும் நிறைவேற்ற என்னால் முடியும்,(19) என்றாலும், உன் வேள்வியை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் பிருஹஸ்பதியும், புரந்தரனும் (இந்திரனும்) அறிய நேர்ந்தால், கோபத்தால் நிறையும் அவர்கள், உனக்குத் தீங்கிழைக்க அவர்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள் என்றும் உணர்கிறேன்.(20) எனவே, நான் என் பொறுமையையும், மாறாநிலையையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உன் நிலையுறுதியை எனக்கு உறுதிப்படுத்துவாயாக, மாறாக நான் உன்னிடம் கோபமடைந்தால், உன்னையும், உன் குடும்பத்தாரையும் சாம்பலாகக் குறைத்துவிடுவேன் (அழித்துவிடுவேன்)” என்றார்.(21)
மருத்தன் {சம்வர்த்தரிடம்}, “எப்போதேனும் நான் உம்மைக் கைவிட்டால், மலைகள் இருக்கும் வரையும், ஆயிரங்கதிர் சூரியன் தொடர்ந்து வெப்பத்தை வெளியிடும் வரையும் ஒருபோதும் நான் அருள் உலகங்களை அடையமாட்டேன்,(22) நான் உம்மைக் கைவிட்டால், ஒருபோதும் உண்மை ஞானத்தை அடையாதவனாக, உலகம் சார்ந்த (பொருள்) தேடல்களுக்கு அடிமையாகவே நான் நீடித்திருப்பேன்” என்றான்.(23)
சம்வர்த்தர் {மருத்தனிடம்}, “ஓ! அவிக்ஷித்தின் மகனே, இந்தச் செயலைச் செய்வதில் உன் மன விருப்பம் சிறந்திருக்கிறது, ஓ! மன்னா, அதே போலவே, நானும் வேள்வியைச் செய்வதற்கான {சிறந்த} திறனை என் மனத்தில் கொண்டிருக்கிறேன்,(24) ஓ! மன்னா, நீ கொண்டிருக்கும் நல்ல பொருட்கள் அனைத்தும் அழியாதனவாகும், மேலும், சக்ரனையும், தேவர்களையும், கந்தர்வர்களையும் விட நீ அவற்றை {செல்வத்தை} அதிகமாக ஆள்வாய்.(25) என்னைப் பொறுத்தவரையில், செல்வம் திரட்டுவதிலோ, வேள்விக் கொடைகளிலோ விருப்பமேதுமில்லை, இந்திரனுக்கும், என் அண்ணனுக்கும் ஏற்பில்லாததை மட்டுமே நான் செய்யப் போகிறேன் {விரும்புகிறேன்}.(26) நிச்சயம் நான் உன்னைச் சக்ரனுக்கு இணையானவனாக ஆக்குவேன், மேலும் உனக்கு ஏற்புடையதையே செய்வேன் என்பதையும் நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்[1]” என்றார் {சம்வர்த்தர்}.(27)
முஞ்சவான் மலையின் தங்கம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 08-இமயத்தில் உள்ள முஞ்சவான் மலையில் இருக்கும் தங்கத்தைக் குறித்து மருத்தனுக்குச் சொன்ன ஸம்வர்த்தர்; அங்கே சென்று சிவனைத் துதித்து தங்கத்தை அடைந்த மருத்தன்; கவலையடைந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியிடம் சென்ற இந்திரன்…
சம்வர்த்தர் {மருத்தனிடம்}, “இமய மலையின் உச்சியில் முஞ்சவான் என்ற பெயரில் ஒரு சிகரம் இருக்கிறது. அங்கே உமையின் துதிக்கத்தக்க தலைவன் (மஹாதேவன்) தொடர்ந்து தவம் செய்து கொண்டிருக்கிறான். வலிமைமிக்கவனும், வழிபடத்தகுந்தவனும், பெரும் பலம் கொண்டவனுமான அந்தத் தேவன் திரிசூல தாரியாக, பல வகைப் பூதகணங்களால் சூழப்பட்டவனாக, அங்கே பெரும் காட்டு மரங்களின் நிழலிலோ, குகைகளிலோ, அந்தப் பெரும் மலையின் முரட்டுச் சிகரங்களிலோ தன் மனைவியான உமையுடன் தன் விருப்பம் போல் திரிந்து கொண்டிருக்கிறான்.(2,3) ருத்திரர்கள், ஸாத்யர்கள், விஷ்வேதேவர்கள், வசுக்கள், யமன், வருணன், தன் பணியாட்களுடன் கூடிய குபேரன்,(4) பூதங்கள், பிசாசங்கள், அஸ்வினி தேவர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், யக்ஷர்கள், தெய்வீக முனிவர்கள்,(5) சூரிய தேவர்கள் {ஆதித்யர்கள்}, காற்றுகளுக்குத் தலைமை தாங்கும் தேவர்கள் {மருத்துகள்}, அனைத்து வகையான ராட்சசர்கள் ஆகியோர் அங்கே பல்வேறு பண்புகளைக் கொண்டவனும், உயர்ந்த ஆன்மாவுமான உமையின் தலைவனை வழிபடுகின்றனர்.(6)
மேலும், ஓ! மன்னா {மருத்தனே}, அங்கே அந்தத் துதிக்கத்தக்க தேவன், வினோதமான கொடூரத் தோற்றங்களுடன் கூடியவர்களும், முரடர்களும், விளையாட்டுத்தனம் கொண்டவர்களுமான குபேரனின் தொண்டர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(7) தன்காந்தியில் ஒளிரும் அந்த மலை காலைச் சூரியனைப் போலப் பிரகாசமானதாக இருக்கிறது.(8) இயற்கையான சதையாலான கண்களுடன் கூடிய எந்த உயிரினத்தாலும் அதன் வடிவத்தையோ, கட்டமைப்பையோ, அங்கே நிலவும் வெப்பம் அல்லது குளிரையோ, சூரியன் ஒளிர்கிறானா? காற்று வீசுகிறதா என்பதையோ உறுதிப்படுத்த முடியாது.(9) மேலும், ஓ! மன்னா, அங்கிருக்கும் எவரையும் முதுமை, பசி, தாகம், மரணம் அல்லது அச்சம் என ஏதும் பீடிக்காது.(10) ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே {மருத்தா}, அம்மலையின் அனைத்துப் பக்கங்களிலும், சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன. மேலும், ஓ! மன்னா, குபேரனுக்கு நன்மை செய்ய விரும்புபவர்களும், உயர்த்திய கரங்களுடன் கூடியவர்களுமான அவனது தொண்டர்கள், அழையாமல் நுழைபவர்களிடம் இருந்து அந்தத் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கின்றனர்.(11)
நீ அங்கே சென்று, சர்வன், வேதன், ருத்ரன், சிதிகண்டன் {கறுத்த கழுத்த கொண்டவன்}, ஸுரூபன், ஸுவர்சன் {நல்ல காந்தி கொண்டவன்}, கபர்தின் {சடையுள்ளவன்}, கராலன் {பயங்கரன்}, ஹர்யக்ஷன் {பொன்னிறக்கண்ணன்}, வரதன்,(13) திரயக்ஷன் {முக்கண்ணன்}, பூஷ்ணோதந்தபித் {சூரியனின் பற்களைத் தகர்த்தவன்}, வாமனன் {குள்ளன்}, சிவன் {நலம் அருள்பவன்}, யாம்யன் {அடக்குபவன்} அவ்யக்தரூபன், ஸத்விருத்தன் {நன்னடை கொண்டவன்}, சங்கரன்,(14) க்ஷேம்யன் {நன்மை செய்பவன்}, ஹரிகேஸன் {பொன்னிற மயிர் கொண்டவன்}, ஸ்தாணு, புருஷன், ஹரிநேத்ரன் {பொன்னிறக் கண்ணன்}, முண்டன், கிருசன் {கோபமுள்ளவன்}, உத்தரணன் {கரையேற்றுபவன்},(15) பாஸ்கரன் {பிரகாசிப்பவன்}, ஸுதீர்த்தன், தேவதேவன், ரம்ஹன் {வேகமுள்ளவன்}, உஷ்ணீஷி {தலைப்பாகை கொண்டவன்}, ஸுவக்த்ரன் {நன்முகம் கொண்டவன்}, ஸஹஸ்ராக்ஷன் {ஆயிரங்கண்ணன்}, மீடுவான் {அனைத்தையும் படைப்பவன்},(16) கிரிசன் {மலையில் படுப்பவன்}, பிரஸாந்தன் {பேரமைதி கொண்டவன்}, யதன் {சந்நியாசி}, சீரவாஸன் {மரவுரியாடை கொண்டவன்}, வில்வதண்டன் {வில்வத்தாலான தண்டம் கொண்டவன்}, சித்தன், ஸர்வதண்டதரன் {அனைவரையும் பாதுகாப்பவன்},(17) மிருகவியாதன் {வேள்வியெனும் மானை அடிக்கும் வேடன்}, மஹான், தனேசன் {வில் கொண்டவன்}, பவன் {படைப்பவன்}, வரன் {சிறந்தவன்}, ஸோமவக்த்ரன் {சந்திரன் போன்ற முகம் கொண்டவன்}, ஸித்தமந்த்ரன், சக்ஷு {கண்ணாக இருப்பவன்},(18) ஹிரண்யபாஹு {பொன்மயக்கரங்கொண்டவன்}, உக்ரன், திக்பதி {திசைகளின் தலைவன்}, லேலிஹானன் {கடைவாயை நாவால் நனைப்பவன்}, கோஷ்டன், சித்தமந்திரன், விருஷ்ணு, பசுபதி, பூதபதி {பூதங்களின் தலைவன்},(19) விருஷன், மாத்ருபக்தன் {தாய்பக்தி கொண்டவன்}, ஸேனானி {படைத்தலைவன்}, மத்யமன், ஸ்ருவஹஸ்தன் {எதிர்பார்க்கும் முகம் கொண்டவன்}, யதி, தன்வி {வில்லாளி}, பார்கவன், அஜன் {பிறப்பற்றவன்},(20) கிருஷ்ணநேத்ரன் {கறுத்த கண் கொண்டவன்}, விரூபாக்ஷன் {பெருவிழியோன்}, தீக்ஷ்ணதம்ஷ்ட்ரன் {கூரிய கோரப் பற்களைக் கொண்டவன்}, தீக்ஷ்ணன், வைஸ்வானரமுகன் {அக்னியை முகத்தில் கொண்டவன்},(21) மஹாத்யுதி, அனங்கன், ஸர்வன் {அனைத்துமாக இருப்பவன்}, திக்பதி, விலோஹிதன் {மிகச் சிவந்தவன்}, தீப்தன் {பிரகாசிப்பவன்}, தீப்தாக்ஷாயன் {பிரகாசிக்கும் கண்களைக் கொண்டவன்}, மஹௌஜன் {சிறந்த ஒளி கொண்டவன்},(22) வசுரேதஸ், ஸுவபு {நல்ல உடல் கொண்டவன்}, பிருது {பருத்தவன்}, கிருத்திவாஸன் {யானைத் தோலை உடையாகக் கொண்டவன்},(23) கபாலமாலி {மண்டையோட்டு மாலை கொண்டவன்}, ஸுவர்ணமுகுடன் {தங்க கிரீடம் கொண்டவன்}, மஹாதேவன், கிருஷ்ணன் {கறுத்தவன்}, திரயம்பகன் {முக்கண்ணன்}, அனகன் {குற்றமற்றவன்},(24) குரோதனன் {கோபமுள்ளவன்}, நிருஸம்ஸன் {கொடூரங்கொண்டவன்}, மிருது {மென்மையானவன்}, பாஹுஸாலிதண்டி {கையில் தண்டம் கொண்டவன்}, தப்ததபஸ், அக்ரூரகர்மன் {கொடூரத்தன்மையற்றவன்}, ஸஹஸ்ரஸிரஸ் {ஆயிரந்தலையோன்}, ஸஹஸ்ரசரணன் {ஆயிரங்காலோன்}, ஸ்வதாஸ்வரூபன், பஹுரூபன் {பலவடிவகங்களைக் கொண்டவன்}, தம்ஷ்ட்ரி {கோரப்பற்களைக் கொண்டவன்},(25) பினாகி {பினாகம் என்ற வில்லைக் கொண்டவன்}, மஹாதேவன், மஹாயோகி {பெரும் யோகி}, அவ்யயன் {அழிவற்றவன்}, திரிஸூலஹஸ்தன் {திரிசூலத்தைக் கையில் கொண்டவன்}, வரதன் {வரமளிப்பவன்}, திரயம்பகன் {முக்கண்ணன்}, புவனேஸ்வரன்,(26) திரிபுரக்னன், திரினயனன், திரிலோகேஸன் {மூவுலகங்களுக்கும் ஈசன்}, மஹௌஜன் {சிறந்த பலம் கொண்டவன்}, ஸர்வபூதபிரபவன் {அனைத்துக்கும் மூலமானவன்}, ஸர்வபூததாரணன் {அனைத்துக்கும் கொடுப்பவன்}, தரணீதரன் {பூமியைத் தரிப்பவன்},(27) ஈஸானன், சங்கரன், ஸர்வன், சிவன், விஸ்வேஸ்வரன், பவன், உமாபதி, பஸுபதி, விஸ்வரூபன், மஹேஸ்வரன்,(28) விரூபாக்ஷன், தஸபுஜன் {பத்துக் கரங்களைக் கொண்டவன்}, விருஷபத்வஜன் {காளை கொடி கொண்டவன்}, உக்ரன், ஸதாணு, சிவன், ரௌத்ரன், ஸர்வன், கிரீசன், ஈஸ்வரன்,(29) ஸிதிகண்டன் {நீலகண்டன்}, அஜன், ஸுக்ரன், பிருது {பருத்தவன்}, பிருதுஹரன் {பருத்தவைகளை அழிப்பவன்}, வரன், விஸ்வரூபன், விரூபாக்ஷன், பஹுரூபன் {பல வடிவங்களைக் கொண்டவன்}, உமாபதி,(30) அனங்காங்கஹரன் {மன்மதனின் உடலை அழித்தவன்}, ஹரன் {அபகரிப்பவன்}, ஸரண்யன், மஹாதேவன், சதுர்முகன் {நான்முகன்} என்று அறியப்படும் அந்தத் துதிக்கத்தக்க தேவனை ஆற்றுப்படுத்துவாயாக.(31) அங்கே சென்று அந்தத் தேவனை {மேற்கண்ட பெயர்களைச் சொல்லி} வணங்கி, அவனது பாதுகாப்பை அடைய ஏங்கிக் கேட்பாயாக. ஓ! இளவரசே, உயர் ஆன்மாவும், பெருஞ்சக்தி கொண்டவனுமான மஹாதேவனை இவ்வாறு வணங்கினால் நீ தங்கத்தை அடைவாய்.(32) இவ்வாறு அங்கே செல்லும் மனிதர்கள் தங்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்[1]” என்றார் {சம்வர்த்தர்}.
இவ்வாறு சொல்லப்பட்ட கரந்தமனின் மகன் மருத்தன், அந்த அறிவுறுத்தலுக்கு ஏற்றபடியே செய்தான்.(33) மேலும் அவன் தன் வேள்வியைச் செய்வதற்காக மனித சக்திக்கு மீறிய ஏற்பாடுகளைச் செய்தான். கைவினைஞர்கள் அவ்வேள்விக்காகத் தங்கத்தாலான பாத்திரங்களை உற்பத்தி செய்தனர்[2].(34) தேவர்களின் செல்வத்தைக் காட்டிலும் மேன்மையானதாக இருந்த மன்னன் மருத்தனின் நிறைந்த செல்வத்தைக் கேள்விப்பட்ட பிருஹஸ்பதியும், தமக்கு எதிரான சம்வர்த்தர் செல்வந்தராகிறான் என்ற எண்ணத்தால், இதயம் பீடித்தவராகக் கவலையடைந்து, நிறம் மங்கி, மிகவும் மெலிந்து போனார்.(35,36) பிருஹஸ்பதி வருத்தமடைந்திருப்பதைத் தேவர்களின் தலைவன் அறிந்தபோது, இறவாதவர்களால் தொண்டாற்றப்பட்ட அவரிடம் சென்று இவ்வாறு சொன்னான்” {என்றார் வியாசர்}.(37)
அக்னியின் அச்சம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 09-பிருஹஸ்பதியின் வருத்தம்; பிருஹஸ்பதியை ஏற்றுக்கொள்ளும்படி அக்னி தேவன் மூலம் மருத்தனிடம் சொன்ன இந்திரன்; மருத்தனின் மறுப்பு; அக்னியின் மறுப்பு…
{வியாசர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “இந்திரன், “ஓ! பிருஹஸ்பதி, நீர் அமைதியாக உறங்குகிறீரா? உமது பணியாட்கள் உமக்கு ஏற்புடையவற்றைச் செய்கிறார்களா? நீர் தேவர்களின் நன்மையை நாடுகிறீரா? ஓ! பிராமணரே, தேவர்கள் உம்மைப் பாதுகாக்கிறார்களா?” என்றான்.(1)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, நான் என் படுக்கையில் அமைதியாக உறங்குகிறேன். என் பணியாட்கள் எனக்குப் பிடித்தவாறு நடந்து கொள்கிறார்கள், மேலும் நான் எப்போதும் தேவர்களின் நன்மையை நாடுகிறேன். அவர்களும் என்னை நன்றாகப் பேணிக் காக்கிறார்கள்” என்றார்.(2)
இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, “பிறகு மனத்திலோ, உடலிலோ ஏன் இந்த வலி {துயரம்}? நீர் ஏன் இப்போது நிறம் மங்கி, தோற்றம் குலைந்திருக்கிறீர்? ஓ! பிராமணரே, உமக்கு வலியுண்டாக்கிய மக்கள் அனைவரையும் நான் கொல்லும் வகையில் அவர்கள் {அம்மக்கள்} யார் என்பதை என்னிடம் சொல்வீராக” என்று கேட்டான்.(3)
பிருஹஸ்பதி, “ஓ! இந்திரா, (பிராமணர்களுக்குப்) பெருங்கொடைகளுடன் மருத்தன் ஒரு பெரும் வேள்வியைச் செய்யப் போகிறான் என்றும், அவனது வேள்வியில் சம்வர்த்தன் புரோகிதனாகச் செயல்படப் போகிறான் என்றும் நான் கேள்விப்படுகிறேன். எனவே, அந்த வேள்வியில் அவன் புரோகிதராகச் செயல்படக்கூடாது என நான் விரும்புகிறேன்” என்றார்.(4)
இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! பிராமணரே, புனித மந்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரான நீர் தேவர்களின் புரோஹிதரான போதே உமது விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்துவிட்டீர். மேலும், மரணம் மற்றும் முதுமையின் ஆதிக்கங்களையும் கடந்துவிட்டீர். உம்மைச் சம்வர்த்தரால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான்.(5)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “பகைவனின் செழிப்பு ஒருவனது உணர்வுகளுக்கு எப்போதும் பெருந்துன்பத்தைத் தரும், இந்தக் காரணத்தினாலேயே நீ தேவர்களுடன் சேர்ந்து அசுரர்களையும், அவர்களின் உற்றார் உறவினர்களையும் துன்புறுத்தி, அவர்களில் மிகச் செழிப்பானவர்களைக் கொல்கிறாய்;(6) ஓ! தேவர்களின் தலைவா, என் பகைவன் செழிப்படைகிறான் என்ற எண்ணத்தில் என் தோற்றம் மாறியிருக்கிறது. எனவே, ஓ! இந்திரா, சம்வர்த்தனையும், மன்னன் மருத்தனையும் அனைத்து வழிமுறைகளினாலும் தடுப்பாயாக” என்றார்.(7)
அக்னியிடம் திரும்பிய இந்திரன், “ஓ! ஜாதவேதா, நான் சொல்வதைப் பின்பற்றி மன்னன் மருத்தனிடம் சென்று, பிருஹஸ்பதியை அவனிடம் கொடுத்து, இந்தப் பிருஹஸ்பதி அவனது வேள்வியைச் செய்து கொடுத்து அவனை இறவாதவனாக்குவார் {அமரனாக்குவார்} என்று அவனிடம் சொல்வாயாக” என்றான்.(8)
அக்னி {இந்திரனிடம்}, “ஓ! போற்றுதலுக்குரியவனே, இப்போதே நான் உன் தூதனாக அங்கே சென்று மன்னன் மருத்தனிடம் பிருஹஸ்பதியைக் கொடுக்கிறேன்” என்றான். இந்திரனின் சொற்களை உண்மையாக்கவும், பிருஹஸ்பதிக்கு மதிப்பளிக்கவும் அக்னி புறப்பட்டுச் சென்றான்”.(9)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “பிறகு அந்த உயர்ஆன்ம நெருப்பு தேவன், குளிர் காலத்தின் இறுதியில் வரம்பற்றுச் சுழன்று முழங்கும் வலிமைமிக்கக் காற்றைப் போலக் காடுகளையும், மரங்கள் அனைத்தையும் சூறையாடியபடி தன் குற்றேவலைப் புரியச் சென்றான்.(10)
மருத்தன் {சம்வர்த்தரிடம்}, “காண்பீராக. இன்று நெருப்பின் தேவன் தன் சொந்த உடலுடன் வருவதைக் காண்கிறேன். எனவே, ஓ! முனிவரே {சம்வர்த்தரே}, அவனுக்கு ஓர் இருக்கையையும், நீரையும், ஒரு பசுவையும், கால் கழுவ நீரையும் அளிப்பீராக” என்றான்.(11)
அக்னி {மருத்தனிடம்}, “ஓ! பாவமற்றவனே, நீ அளிக்கும் காணிக்கைகளான நீர், இருக்கை மற்றும் கால் கழுவுவதற்கான நீர் ஆகியவற்றை நான் ஏற்கிறேன். இந்திரனின் ஆணைக்கிணங்க வந்திருக்கும் அவனது தூதனாக என்னை அறிவாயாக” என்றான்.(12)
மருத்தன் {நெருப்பு தேவனிடம்}, “ஓ! நெருப்பின் தேவா, தேவர்களின் மகிமைமிக்கத் தலைவன் {இந்திரன்} மகிழ்ச்சியாக இருக்கிறானா? எங்களிடம் நிறைவுடன் இருக்கிறானா? தேவர்கள் அவனிடம் மாறாப்பற்றுடன் இருக்கின்றனரா? இவை அனைத்திலும் முறையாக என்னைத் தெளிவடையச் செய்வாயாக” என்றான்.(13)
அக்னி {மருத்தனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, சக்ரன் முற்றான மகிழ்ச்சியுடனும், உன்னிடம் நிறைவுடனும், முதுமையில் இருந்து விடுதலைபெற்றவனாக உன்னை ஆக்கும் விருப்பத்துடனும் இருக்கிறான். தேவர்கள் அனைவரும் அவனிடம் மாறாப் பற்றுடன் இருக்கிறார்கள். ஓ! மன்னா, தேவர்கள் தலைவன் {இந்திரன்} சொன்ன செய்தியைக் கேட்பாயாக.(14) ஓ! இளவரசே, மருத்தனிடம் பிருஹஸ்பதியை அளிக்கவும், உன் வேள்வியை (தேவர்களின்) இந்தப் புரோஹிதர் செய்யவும், இறக்கக்கூடியவனாக மட்டுமே இருக்கும் உன்னை இறவா நிலை அடையச் செய்யும் நோக்கத்துடனும் என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறான்” என்றான்.(15)
மருத்தன் {அக்னி தேவனிடம்}, “இருபிறப்பாள பிராமணரான சம்வர்த்தர் என் வேள்வியைச் செய்யப் போகிறார், மஹேந்திரனின் புரோஹிதராகச் செயல்பட்டவர் இப்போது இறக்கக்கூடிய மனிதர்களின் புரோஹிதராகச் செயல்படுவது நன்றாகத் தெரியவில்லை என நான் பிருஹஸ்பதியிடம் வேண்டுகிறேன்” என்றான்.(16)
அக்னி, “இந்தப் பிருஹஸ்பதி உன் புரோஹிதராகச் செயல்பட்டால், தேவராஜனின் (இந்திரனின்) ஆசியின் மூலம் தேவ மாளிகையின் உயர்ந்த பகுதியை நீ அடைவாய், மேலும் புகழடையும் நீ நிச்சயம் தேவலோகத்தை வெல்வாய்.(17) மேலும், ஓ! மனிதர்களின் தலைவா, பிருஹஸ்பதி உன் புரோஹிதராகச் செயல்பட்டால், மனிதர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளையும், தெய்வீக உலகங்களையும், பிரஜாபதியால் உண்டாக்கப்பட்ட உயர்ந்த உலகங்கள் அனைத்தையும், ஏன் தேவர்களின் மொத்த அரசையும் நீ வெல்ல இயன்றவனாவாய்” என்றான்.(18)
சம்வர்த்தர் {அக்னி தேவனிடம்}, “நீ பிருஹஸ்பதியை மருத்தனிடம் அளிப்பதற்காக மீண்டும் ஒருபோதும் வராதே; ஓ! பாவகா, அவ்வாறு நீ செயல்பட்டால் கோபமடையும் நான் என் கடுந்தீயக் கண்களால் உன்னை எரித்துவிடுவேன் என்பதை அறிவாயாக” என்றார்”.(19)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது அக்னி நெருப்பால் அடையப்போகும் அழிவை அறிந்து, அரச மரத்தின் இலைகளைப் போல நடுங்கிக் கொண்டே தேவர்களிடம் திரும்பிச் சென்றான். பிருஹஸ்பதியோடு வரும் ஆகுதிகளைச் சுமப்பவனை (அக்னியைக்) கண்ட உயர் ஆன்ம சக்ரன் பின்வருமாறு சொன்னான்:”(20)
இந்திரன் {அக்னி தேவனிடம்}, “ஓ! ஜாதவேதா (அக்னியே), என் ஆணையின்படி பிருஹஸ்பதியை மருத்தனிடம் அளிக்கச் சென்றாய். வேள்வியைச் செய்யும் அம்மன்னன் என்ன செய்தான்? அவன் நான் சொன்னதை ஏற்றானா?” என்று கேட்டான்.(21)
அக்னி {இந்திரனிடம்}, “நீ சொன்னதை மருத்தன் ஏற்கவில்லை. என்னால் தூண்டப்பட்ட போது அவன் பிருஹஸ்பதியிடம் கரங்கூப்பி மீண்டும் மீண்டும் சம்வர்த்தரே தன் புரோஹிதராகச் செயல்படுவார் என்று சொன்னான்.(22) மேலும் அவன் உலகம் சார்ந்த, மற்றும் தெய்வீக உலகங்களையும், பிரஜாபதியின் உயர்ந்த உலகங்கள் அனைத்தையும் அடைவதைத் தான் விரும்பவில்லை என்பதையும், அவ்வாறு அவன் நினைத்திருந்தால், இந்திரனின் விதிமுறைகளைத் தானே ஏற்றுக் கொண்டிருப்பான் என்பதையும் உறுதியாகச் சொன்னான்” என்றான்.(23)
இந்திரன், “நீ அந்த மன்னனிடம் திரும்பச் சென்று, அவனைச் சந்தித்து, நான் சொல்லும் முக்கியம் நிறைந்த வார்த்தைகளையும், அவன் அதற்குக் கீழ்ப்படியவில்லையெனில் நான் என் வஜ்ராயுதத்தால் அவனைத் தாக்குவேன் என்பதையும் அவனிடம் சொல்வாயாக.” என்றான்.(24)
அக்னி {இந்திரனிடம்}, “ஓ! வாசவா, இந்தக் கந்தர்வர்களின் மன்னன் {இந்தத் திருதராஷ்டிரன்} உன் தூதனாக அங்கே செல்லட்டும். நான் அங்கே செல்ல அஞ்சுகிறேன். ஓ! சக்ரா, தவப்பயிற்சிகளுக்கு அடிமையானவரும், பெரும் கோபத்திலிருப்பவருமான சம்வர்த்தர் சினத்துடன் இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்னார் என்பதை அறிவாயாக.(25) ‘மன்னன் மருத்தனிடம் பிருஹஸ்பதியை அளிப்பதற்காக எவ்வகையிலாவது நீ மீண்டும் இங்கே வந்தால், என் கடுந்தீயக் கண்களால் உன்னை நான் எரித்துவிடுவேன்’ என்று அவர் சொன்னார்” என்றான்.(26)
சக்ரன் {அக்னி தேவனிடம்}, “ஓ! ஜாதவேதா, வேறு பொருட்கள் அனைத்தையும் எரிப்பவன் நீயே, உன்னைச் சாம்பலாகக் குறைக்க வேறு எவராலும் முடியாது. ஓ! ஆகுதிகளைச் சுமப்பவனே, உன்னை நெருங்க உலகமனைத்தும் அஞ்சுகின்றன. உன்னுடைய இந்தச் சொற்கள் நம்பத்தகாதவையாகும்” என்றான்.(27)
அக்னி {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா, உன் கரங்களின் வலிமையால் நீ சொர்க்கம், பூமி மற்றும் ஆகாயத்தின் ஆட்சிப்பகுதிகளைச் சூழ்ந்து உள்ளடக்கினாய். அவ்வாறிருந்தும், (பழங்காலத்தில்) விருத்திரனால் எவ்வாறு தேவலோகத்தின் அரசுரிமையை உன்னிடம் இருந்து பறிக்க முடிந்தது?” என்று கேட்டான்.(28)
இந்திரன் {அக்னி தேவனிடம்}, “என்னால் என் பகைவர்களை அடங்கச் செய்ய முடியும். நான் விரும்பினால் மலையின் அளவை ஓரணுவாகக்கூட என்னால் குறைக்க முடியும். ஆனால், ஓ! வாஹ்னி, ஒரு பகைவனால் அளிக்கப்படும் சோம பானக் காணிக்கையை நான் ஏற்பதில்லை, பலவீனர்களை வஜ்ராயுதத்தால் நான் தாக்க மாட்டேன் (என்பதால் சில காலத்திற்கு விருத்திரனால் என்னை வெல்ல முடிந்தது). ஆனால் என்னிடம் பகை உண்டாக்கிக் கொள்வதன் மூலம் எந்த மனிதனால் அமைதியாக வாழ முடியும்?(29) நான் காலகேயர்களைப் பூமிக்கு விரட்டிவிட்டேன், தானவர்களைச் சொர்க்கத்தில் இருந்து அகற்றினேன், பிரஹலாதனின் இருப்பைச் சொர்க்கத்தில் முற்றுக்குக் கொண்டு வந்தேன். என்னிடம் பகையைத் தூண்டுவதன் மூலம் எந்த மனிதனால் அமைதியாக வாழ முடியும்?” என்று கேட்டான்.(30)
அக்னி, “ஓ! மஹேந்திரா, பழங்காலத்தில் இரட்டை தேவர்களான அஸ்வினிகளுடன் கூடிய சர்யாதியின் வேள்வியைச் சியவன முனிவர் நடத்தி, சோமக் காணிக்கையைத் தனியாகத் தானே பெற்றுக் கொண்டபோது, கோபத்தில் நிறைந்த நீ சர்யாதியின் வேள்வியைத் தடுக்க முயன்றாய் நினைவிருக்கிறதா?(31) அப்போது உன் வஜ்ரத்தால் சியவனரைப் பலவந்தமாகத் தாக்கினாய். ஓ! புரந்தரா, கோபமடைந்த அந்தப் பிராமணரால், தமது பக்தியின் சக்தியால் வஜ்ராயுதத்துடன் கூடிய உன் கரத்தை முடக்க முடிந்தது.(32) மேலும் சினத்தில் அவர் அனைத்து வடிவங்களையும் ஏற்க வல்லவனும், பயங்கரத் தோற்றம் கொண்டவனும், மதன் என்ற பெயர் கொண்டவனுமான ஓர் அசுரனை உனக்குப் பகைவனாக உண்டாக்கினார். நீ அவனைக் கண்டதும் அச்சத்தால் உன் கண்களை மூடிக் கொண்டாய்.(33) அவனுடைய பெருந்தாடைகளில் ஒன்று பூமியிலும், மற்றொன்று தேவலோகத்திலும் விரிந்திருந்தது. நூறு யோஜனைகள் நீளம் கொண்ட ஆயிரம் கூரிய பற்களுடன் அவன் காணப் பயங்கரனாக இருந்தான்.(34) வெள்ளித் தூண்களைப் போல இருந்த நான்கு முக்கியப் பற்கள் இருநூறு யோஜனை நீளம் கொண்டவையாக இருந்தன. அவன் தன் பற்களைக் கடித்துக் கொண்டும், சூலத்தை உயர்த்திக் கொண்டும் உன்னைக் கொல்லும் நோக்கோடு உன்னைத் தொடர்ந்த போது,(35) அந்தப் பயங்கர ராட்சசனைக் கண்ட நீ, பார்வையாளர்கள் அனைவருக்கும் (பரிதாபம் நிறைந்த) காட்சிப் பொருளானாய். ஓ! தானவர்களைக் கொன்றவனே, அந்த ராட்சசனிடம் கொண்ட அச்சத்தால் கூப்பிய கரங்களுடன் பணிந்து அந்தத் தவசியின் பாதுகாப்பை நீ கேட்டாய்.(36) ஓ! சக்ரா, பிராமணர்களின் வலிமை க்ஷத்திரியர்களுடையதைவிடப் பெரியதாகும். பிராமணர்களைவிட சக்திமிக்கவர்கள் வேறு எவரும் இல்லை. ஓ! சக்ரா, பிராமணர்களின் சக்தியை முறையாக அறிந்த நான், சம்வர்த்தருடன் ஒருபோதும் மோதலை விரும்பவில்லை” என்றான் {அக்னி}.(37)
வேள்வியை நிறைவடையச் செய்த இந்திரன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 10-பிருஹஸ்பதியை ஏற்றுக் கொள்ளும்படி மருத்தனுக்குச் சொல்லி அனுப்பிய இந்திரன்; மருத்தன் மறுத்தது; வேள்வியை நிறைவடையச் செய்த இந்திரன்; அங்கிருக்கும் செல்வத்தைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; அஸ்வமேத வேள்வியைச் செய்யச் சொன்னது…
இந்திரன் {அக்னி தேவனிடம்}, “அவ்வாறே இருக்கிறது. பிராமணர்களின் வலிமை பெரியது, பிராமணர்களைவிடப் பலம் நிறைந்தவர்கள் வேறு எவரும் இல்லை, ஆனால், அவிக்ஷித் மகனின் {மருத்தனின்} அற்பச் செருக்கை எல்லாம் ஒருபோதும் உள்ளச்சமநிலையுடன் பொறுத்துக் கொள்ள இயலாது. நான் என் வஜ்ரத்தைக் கொண்டு அவனைத் தாக்கப் போகிறேன்.(1) எனவே, ஓ! திருதராஷ்டிரா, நான் சொல்வது போலச் சம்வர்த்தரால் கவனிக்கப்படும் மன்னன் மருத்தனிடம் சென்று, “ஓ! இளவரசே, பிருஹஸ்பதியை நீ உன் ஆன்ம ஆசானாக ஏற்றுக் கொள்வாயாக, இல்லையெனில் நான் என் பயங்கர வஜ்ரத்தால் உன்னைத் தாக்கப் போகிறேன்” என்ற இந்தச் செய்தியை அவனிடம் சொல்வாயாக” என்றான்”.(2)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “பிறகு, திருதராஷ்டிரன் அந்த ஏகாதிபதியின் {மருத்தனின்} அரசவைக்குச் சென்று வாசவன் சொன்ன இந்தச் செய்தியைச் சொன்னான்.(3)
{கந்தர்வ மன்னனான} திருதராஷ்டிரன் {மருத்தனிடம்}, “ஓ! மனிதர்களின் தலைவா, இந்திரனின் செய்தியைச் சொல்லும் நோக்கத்துடன் உன்னிடம் வந்திருக்கும் நான் கந்தர்வன் திருதராஷ்டிரன் என்பதை அறிவாயாக. ஓ! மன்னர்களில் சிங்கமே, உயர் ஆன்மா கொண்டவனான அனைத்து உலகங்களின் தலைவன் {இந்திரன்} சொன்ன சொற்களைக் கேட்பாயாக,(4) சிந்தனைக்கெட்டாத சாதனைகளைச் செய்த அவன் (இந்திரன்), “பிருஹஸ்பதியை உன் வேள்வியைச் செய்யும் புரோஹிதராக ஏற்றுக் கொள்வாயாக. நீ என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கவில்லையெனில் பயங்கரமான என் வஜ்ராயுதத்தால் நான் உன்னைத் தாக்குவேன்” என்பதை மட்டும் சொல்லி அனுப்பினான்” என்றான்.(5)
மருத்தன் {திருதராஷ்டிரனிடம்}, “நீயும், புரந்தரன் {இந்திரன்}, விஷ்வேதேவர்கள், வசுக்கள் மற்றும் அஸ்வினிகள் ஆகியோர் அனைவரும், ஒரு நண்பனை வஞ்சிப்பதன் {மித்ரதுரோகத்தின்} விளைவுகளில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதையும், அஃது ஒரு பிராமணரைக் கொலை செய்வதைப் போன்ற பெரும்பாவமாகும் என்பதையும் அறிவீர்கள்.(6) ஓ! இளவரசே, பிருஹஸ்பதியானவர், உயர்ந்த தேவனும், வஜ்ரத்தைத் தாங்கும் உயர்ந்தவனுமான மஹேந்திரனின் புரோகிதராகவே, செயல்படட்டும், சம்வர்த்தர் என் புரோஹிதராகச் செயல்படுவார். அவனது (இந்திரனின்) சொற்களோ, உன்னுடையவையோ உனக்கு உவப்பாக இல்லை” என்றான்.(7)
கந்தர்வன் {திருதராஷ்டிரன்}, “ஓ! இளவரசர்களின் சிங்கமே, வாசவனின் பயங்கரமான போர் அறைகூவல் சொர்க்கத்தில் {ஆகாயத்தில்} முழங்குவதைக் கேட்பாயாக, இந்திரனின் ஒலியைக் கேட்பாயாக. மஹேந்திரன் உன்மீது வெளிப்படையாகவும், உறுதியாகவும் வஜ்ரத்தைப் பயன்படுத்துவான். எனவே, உன் நலத்தைக் குறித்து ஆலோசனை செய்வாயாக. ஏனெனில், அதைச் செய்வதற்குத் தகுந்த நேரமிது” என்றான்”.(8)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “திருதராஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், வாசவனின் ஊளை முழக்கத்தைக் கேட்டவனுமான மன்னன் {மருத்தன்} இந்தச் செய்தியை பக்தியில் உறுதிமிக்கவரும், அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் உயர்ந்தவருமான சம்வர்த்தரிடம் தெரிவித்தான்.(9)
மருத்தன் {சம்வர்த்தரிடம்}, “காற்றில் மிதக்கும் இந்த மழை மேகம், தற்போது இந்திரன் அருகில் இருப்பதையே நிச்சயம் குறிப்பிடுகிறது. எனவே, ஓ! பிராமணர்களின் இளவரசரே, நான் உம்மிடம் உறைவிடத்தை நாடுகிறேன், ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, இந்திரன் மீது நான் கொண்டுள்ள அச்சத்தை என் மனத்தில் இருந்து அகற்றுவீராக.(10) வஜ்ரதாரி, பயங்கரமானதும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதுமான ஒளியையும், கொண்டு வெளியின் பத்து திக்குகளையும் சூழ்ந்து வருகிறான். மேலும் இந்த வேள்விக் கூட்டத்தில் உள்ள என் உதவியாளர்கள் அனைவரும் அச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர்” என்றான்.(11)
சம்வர்த்தர் {மருத்தனிடம்}, “ஓ! மன்னர்களில் சிங்கமே, சக்ரன் மீது நீ கொண்டு அச்சம் விரைவில் விலகும், இந்தப் பயங்கரத் துன்பத்தை நான் என் மந்திரங்களின் {ஸம்ஸ்தம்பினி என்ற வித்தையின்} மூலம் விரைவில் அகற்றுவேன். அமைதியடைவாயாக, இந்திரனால் வெல்லப்படுவோம் என்ற அச்சமேதும் உனதாக வேண்டாம்.(12) நூறு வேள்விகளைச் செய்த தேவனிடம் நீ அஞ்சுவதற்கு ஏதுமில்லை. நான் என்னிடமுள்ள வசியங்களைப் பயன்படுத்துவேன். ஓ! மன்னா, தேவர்கள் அனைவரின் ஆயுதங்கள் ஏதும் அவர்களுக்குப் பயனளிக்காது.(13) வெளியின் திக்குகள் அனைத்திலும் மின்னல் கீற்றுகள் பாயட்டும், மேகங்களுக்குள் நுழையும் காற்றானது காடுகளுக்கு மத்தியில் மழையைப் பொழியட்டும், இங்கே காணப்படும் பெருவெள்ளமும், சொர்க்கங்களும், மின்னல் கீற்றுகளும் பயனளிக்கப் போவதில்லை, உனக்கு அஞ்சுவதற்கு ஏதுமில்லை,(14) வாசவன் எங்கே விரும்புகிறானோ அங்கே மழையைப் பொழியட்டும், உன் அழிவுக்காக நீர்த்திரள்களுக்கு (மேகங்களுக்கு) மத்தியில் மிதக்கும் தன் பயங்கர வஜ்ரத்தையும் பயன்படுத்தட்டும், வாஹ்னி (அக்னி) தேவன் அனைத்து வழியிலும் உன்னைப் பாதுகாத்து, உன்னை உன் விருப்பங்கள் அனைத்தையும் அடையச் செய்வான்” என்றார்.(15)
மருத்தன், “உளையிடும் காற்றுடன் சேர்ந்து இந்தப் பயங்கர வஜ்ர இடி {இடி முழக்கம்} என் காதுகளுக்குப் பயங்கரமானதாகத் தெரிகிறது. மேலும் என் இதயம் மேலும் மேலும் பீடிக்கப்படுகிறது. ஓ! பிராமணரே, தற்போது எனக்கு மன அமைதி இல்லாமல் போய்விட்டது” என்றான்.(16)
சம்வர்த்தர், “ஓ! மன்னா, பயங்கரமான இந்த இடிமுழக்கத்தால் உன் மனத்தில் எழும் அச்சம் இப்பொது அகலும். காற்றின் உதவியுடன் இடியை நான் அகற்றப் போகிறேன், உன் மனத்தில் இருக்கும் அச்சம் அனைத்தையும் விலக்கி வைத்து விட்டு உன் இதயம் விரும்பும் வரம் ஒன்றை ஏற்பாயாக, நான் அதை உனக்காகச் செய்வேன்” என்றார்.(17)
மருத்தன், “ஓ !பிராமணரே, இந்திரன் திடீரென இந்த வேள்விக்கு நேரடியாக வந்து அவனுக்கு அளிக்கப்படும் காணிக்கை ஏற்க வேண்டும் என்றும், வேறு தேவர்கள் அனைவரும் தங்களுக்குரிய காணிக்கைப் பங்குகளைப் பெற்று, அவர்களுக்கு அளிக்கப்படும் ஆகுதிகளை ஏற்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்” என்றான்.(18)
சம்வர்த்தர், “என்னுடைய மந்திர சக்தியால் நான் இந்திரனை இந்த வேள்விக்கு நேரடியாக ஈர்த்திருக்கிறேன். ஓ! ஏகாதிபதி, இந்த வேள்விக்கு வரும் வேறு தேவர்களால் வழிபடப்பட்டுத் தன் குதிரைகளுடன் வந்து கொண்டிருக்கும் இந்திரனைக் காண்பாயாக” என்றார்.(19)
அப்போது பிற தேவர்களால் கவனிக்கப்பட்ட தேவர்களின் தலைவன் {இந்திரன்}, மிகச் சிறந்த குதிரைகளால் இழுக்கப்படும் தன் தேரைச் செலுத்திக் கொண்டு, அவிக்ஷித் மகனுடைய {மருத்தனுடைய} வேள்விப்பீடத்தை அணுகி, அந்த ஒப்பற்ற ஏகாதிபதியின் சோம ஆகுதிகளைப் பருகினான்.(20) புரோஹிதருடன் கூடிய மன்னன் மருத்தன், தேவர்க்கூட்டத்துடன் வந்திருக்கும் இந்திரனை வரவேற்க நிறைவான மனத்துடன் எழுந்து, சாத்திரங்களின்படி முறையான மற்றும் முதன்மையான கௌரவங்களுடன் அந்தத் தேவர்களின் தலைவனை {இந்திரனை} வரவேற்றான்.(21)
சம்வர்த்தர், “ஓ! இந்திரா, உனக்கு நல்வரவு, ஓ! கல்விமானே, ஓ! பலன் மற்றும் விருத்திரனைக் கொன்றவனே, உன் இருப்பால் இவ்வேள்வி மகத்தானதானது. என்னால் உண்டாக்கப்பட்ட இந்தச் சோமச் சாற்றை நீ மீண்டும் பருகுவாயாக” என்றான்.(22)
மருத்தன், “ஓ! இந்திரா, அன்புடன் என்னை நோக்குவாயாக, உன் இருப்பால் என் வேள்வி முழுமையடைந்தது, மேலும் என் வாழ்வும் நல்விளைவுகளால் அருளப்பட்டிருக்கிறது. ஓ! சூரேந்திரா, பிருஹஸ்பதியின் தம்பியான இந்தச் சிறந்த பிராமணர் என் வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுகிறார்” என்றான்.(23)
இந்திரன், “பிருஹஸ்பதியின் தம்பியான இந்த உயர்ந்த சக்தி கொண்ட தவசியை உன் புரோஹிதராக நான் அறிவேன், ஓ! ஏகாதிபதி, இவரது அழைப்பின் பேரில் இந்த வேள்விக்கு வந்த நான், உன்னிடம் முழு நிறைவையடைந்தேன். உன்னிடம் நான் கொண்டிருந்த எதிர்ப்புணர்வு அழிந்தது” என்றான்.(24)
சம்வர்த்தர், “ஓ! தேவர்களின் இளவரசே, “நீ எங்களிடம் நிறைவடைந்திருந்தால், இந்த வேள்விக்கான அனைத்து ஆணைகளையும் நீயே கொடுப்பாயாக, ஓ! சூரேந்திரா, ஓ! தேவா, இஃது உன்னால் ஆனது என்பதை உலகம் அனைத்தும் அறிந்து கொள்ளும் வகையில் (தேவர்களுக்கான) வேள்விப்பங்குகளை நீயே விதிப்பாயாக” என்றார்”.(25)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “அங்கிரஸ் மகனால் {சம்வர்த்தரால்} இவ்வேறு கேட்டுக்கொள்ளப்பட்ட சக்ரன், ஓவியத்தில் மகத்தான வகையில் தெரிவது போன்ற ஆயிரம் சிறந்த அறைகளுடன் கூடிய ஒரு சபாமண்டபத்தைக் கட்டுமாறும், பெரியதும், நீடித்து நிலைக்கக்கூடியதும், கந்தர்வர்கள் மற்றும், அப்சரஸ்கள் ஏறிவரப் பயன்படக்கூடியதுமான படிக்கட்டுகளை விரைவாக நிறைவடையச் செய்யுமாறும், சொர்க்கத்தில் இந்திரனின் அரண்மனையில் உள்ளதைப் போன்று அப்சரஸ்கள் நடனம் ஆடுவதற்காக வேள்விக்களத்தில் ஒரு பகுதியை ஒதுக்குமாறும் தேவர்களுக்கு ஆணையிட்டான்.(26,27)
ஓ! மன்னா, இவ்வாறு ஆணையிடப்பட்ட புகழ்பெற்ற சொர்க்கவாசிகள் சக்ரனின் ஆணைகளை விரைவாக நிறைவேற்றினர். அப்போது, ஓ! மன்னா, புகழப்பட்டவனும், முழுமையாக நிறைவடைந்தவனுமான இந்திரன் மன்னன் மருத்தனிடம்,(28) “ஓ! இளவரசே, உனக்கு முன்பு சென்ற உன் மூதாதையர்களும், வேறு தேவர்களும் இந்த வேள்வியில் உன்னுடன் தொடர்பு கொண்டு, உன்னால் அளிக்கப்பட்ட காணிக்கைகளை ஏற்று முழுமையாக நிறைவடைந்திருக்கின்றனர்.(29) ஓ! மன்னா, மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்கள், அக்னியுடன் தொடர்புடைய {அக்னிக்குக் கொடுக்கப்பட வேண்டிய} சிவப்புக் காளையையும், விஷ்வேதேவர்களுடன் தொடர்புடைய பல நிறத் தோல் கொண்டதும், முறையாகப் புனிதமாக்கப்பட்டதுமான நீல காளையையும் வேள்விப்பீடத்தில் காணிக்கையளிக்கட்டும் {ஆலம்பனம் செய்யட்டும்}” என்றான்.(30)
அப்போது, ஓ! மன்னா, அந்த வேள்வி விழா காந்தியில் வளர்ந்தது, அங்கே தேவர்கள் தாங்களே உணவைத் திரட்டினர், தேவர்களின் தலைவனும், {பச்சைக்} குதிரைகளைக் கொண்டவனுமான சக்ரன் {இந்திரன்}, பிராமணர்களால் வழிபடப்பட்டவனாக வேள்விக்கு உதவி செய்பவனானான்.(31) அப்போது வேள்விப் பீடத்தில் ஏறியவரும், சுடர்மிக்க நெருப்பில் இரண்டாவது உடலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தவருமான சம்வர்த்தர், தேவர்க்கூட்டங்களை உரக்க அழைத்து, புனித மந்திரங்களைச் சொல்லி நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையளித்தார்.(32) பிறகு அந்தப் பலனைக் கொன்றவன் {இந்திரன்} முதலில் சோமச் சாற்றைப் பருகினான், அதன் பிறகு தேவர்க்கூட்டங்கள் சோமத்தைப் பருகினர். அதன் பிறகு மன்னனின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அனைவரும் முழு நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் திரும்பிச் சென்றனர்.(33)
பிறகு, பகைவர்களைக் கொல்பவனான அந்த ஏகாதிபதி, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், பல்வேறு இடங்களில் தங்கக் குவியல்களை வைத்து, பிராமணர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடுத்து செல்வத்தின் தேவனான குபேரனைப் போல மகத்தானவனாகத் தெரிந்தான்.(34) பொங்கும் இதயத்துடன் கூடிய மன்னன், பல்வேறு வகைச் செல்வங்களால் தன் கருவூலத்தை நிறைத்து, ஆன்ம ஆசானின் அனுமதியுடன் (தன் நாட்டுக்குத்) திரும்பி, கடலின் எல்லைகள் வரை நீண்டிருந்த மொத்த ஆட்சிப்பகுதியையும் தொடர்ந்து ஆட்சி செய்தான்.(35) இவ்வுலகில் இவ்வளவு அறம் சார்ந்தவனாக இருந்த அம்மன்னனின் வேள்வியில் அபரிமிதமான அளவில் தங்கம் திரட்டப்பட்டது, ஓ! இளவரசே, இப்போது நீ அந்தத் தங்கத்தைத் திரட்டி, முறையான சடங்குகளுடன் தேவர்களை வழிபட்டு இந்த வேள்வியைச் செய்வாயாக” என்றார் {வியாசர்}”.(36)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது சத்தியவதி மகனின் (வியாசரின்) இந்தப் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பாண்டவ இளவரசனான யுதிஷ்டிரன், அந்த வளங்களைக் கொண்டு தன் வேள்வியைச் செய்ய விரும்பி, தன் அமைச்சர்களுடன் மீண்டும் மீண்டும் ஆலோசனை செய்தான்”.(37)
இந்திரன் விருத்திரன் போர்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 11-விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அற்புதச் செயல்களைச் செய்யும் வியாசர் மன்னனுடனான {யுதிஷ்டிரருடனான} தமது பேச்சை நிறைவு செய்த போது, உயர்ந்த பலம் கொண்டவனான வசுதேவர் மகன் (கிருஷ்ணன்) அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான். பிருதையின் மகனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மனம் பீடிக்கப்பட்டவனாகவும், உறவினர்களற்றவனாகவும், போரில் கொல்லப்பட்ட உற்றாருடையவனாகவும் கிரகணத்தால் இருளடைந்த சூரியனைப் போன்றோ, புகையும் நெருப்பைப் போலவோ இருப்பவனாகவும், விழுந்த சிகரம் போலத் தெரிபவனாகவும் இருப்பதை அறிந்த விருஷ்ணி குலத் தூணானவன் (கிருஷ்ணன்), தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஆறுதல் அளிக்கும் வகையில் அவனிடம் இவ்வாறு பேசினான்.(1-3)
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “இதயக் கோணல்கள் அனைத்தும் அழிவுக்கே (நித்திய தண்டனைக்கே) வழிவகுக்கும், மேலும் ஒழுக்கமனைத்தும் பிரம்மத்திற்கே (ஆன்மச் சிறப்புக்கே) வழிகுக்கும். இதுவே, இது மட்டுமே உண்மை ஞானங்கள் அனைத்தின் குறிக்கோளும், நோக்கமுமாகும். (இதைப் புரிந்து கொண்டவனை) மனத்தின் கவனச்சிதறலால் என்ன செய்துவிட முடியும்?(4) உமது சொந்த சதைக்குள் {உடலுக்குள்} இன்னும் மறைந்திருக்கும் பகைவர்களை நீர் அறியவில்லை என்பதால், உமது கர்மமும் ஒழியவில்லை, உமது பகைவர்களும் அடக்கப்படவில்லை.(5) (எனவே) இந்திரனுக்கும், விருத்திரனுக்கும் இடையில் நடந்த போர் குறித்த கதையை நடந்தவாறே, அதனை நான் கேட்டவாறே உண்மையில் உமக்கு உரைக்கப் போகிறேன்.(6)
பழங்காலத்தில், ஓ! மன்னா, பிருத்வியானது (பூமியானது) விருத்திரனால் சூழப்பட்டது. மணங்கள் அனைத்தின் இருக்கையாக இருக்கும் பூமிக்குரிய பொருள் {தன்மை} இவ்வாறு பிரிக்கப்பட்டதால், அனைத்துப் பக்கங்களிலும் கெட்ட மணங்கள் {துர்நாற்றங்கள்} எழுந்தன. நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்) இச்செயலால் மிகவும் சினமடைந்தவனாக விருத்திரன் மீது தன் வஜ்ராயுதத்தை ஏவினான்.(7,8)
வலிமைமிக்கவனான இந்திரனின் வஜ்ராயுத்தால் ஆழமாகக் காயமடைந்த விருத்திரன் (நீர்நிலைகளுக்குள்) நுழைந்தான். அவ்வாறு செய்ததால் அவன் அவற்றின் தன்மைகளை அழித்தான்.(9) விருத்திரனால் நீர்நிலைகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றின் நீர்த்தன்மைகள் அவற்றைவிட்டு அகன்றன. இதனால் பெருங்கோபம் அடைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ராயுதத்தால் அவனைத் தாக்கினான்.(10)
மிகப்பெரும் பலசாலியான இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்ட அவன் (விருத்திரன்) ஜோதிக்குள் (ஒளிப்பொருளுக்குள்) தஞ்சம்புகுந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைச் சுருக்கினான்.(11) விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஒளிரும் பொருள் அதன் தன்மை, நிறம் மற்றும் வடிவத்தை இழந்ததும்(12) கோபம் நிறைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ரத்தை அவன் மேல் ஏவினான்.
அளவற்ற சக்தி கொண்ட இந்திரனால் மீண்டும் இவ்வாறு காயமடைந்த(13) விருந்திரன், திடீரென வாயுவுக்குள் நுழைந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைக் கெடுத்தான்.(14) விருத்திரனால் ஆட்கொள்ளப்பட்ட அந்தப் பொருள் {வாயு} அதன் தன்மையையும், தீண்டலையும் இழந்தது. மீண்டும் கோபத்தால் நிறைந்த இந்திரன், அவன் மீண்டும் தன் வஜ்ரத்தை வீசினான்.
அந்த வலிமைமிக்கவனால் (இந்திரனால்) காயமடைந்த அவன் ஆகாசத்தை (வெளியை) மூழ்கடித்து அதன் உள்ளார்ந்த தன்மையைப் பறித்தான். விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஆகாசத்தின் இயல்பு, ஒலி ஆகியவை அழிந்தன. நூறு வேள்விகளைச் செய்த தேவன் இதனால் பெருஞ்சினம் கொண்டு அவனை மீண்டும் தன் வஜ்ரத்தால் தாக்கினான்.(15,16)
வலிமைமிக்க இந்திரனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {விருத்திரன்} திடீரென (சக்ரனின் {இந்திரனின்}) உடலுக்குள் நுழைந்து அதன் முக்கியப் பண்புகளை அபகரித்தான்.(17) விருத்திரனால் பீடிக்கப்பட்ட அவன் {இந்திரன்} பெரும் மாயையில் நிறைந்திருந்தான்.
ஓ! மதிப்பிற்குரிய ஐயா, பாரதக் குலத்தில் பெரும் வலிமைமிக்கவரே,(18) (அவன் இவ்வாறு பீடிக்கப்பட்டபோது) வசிஷ்டர் அவனுக்கு ஆறுதலளித்தார் என்றும், நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, தன் உடலுக்குள் இருந்த விருத்திரனை தன் புலப்படாத வஜ்ரத்தின் மூலம் கொன்றான் என்று கேள்விப்படுகிறோம். ஓ! இளவரசரே, இந்தத் தெய்வீக ரகசியம் சக்ரனால் பெருந்தவசிகளுக்குச் சொல்லப்பட்டது, பதிலுக்கு அவர்கள் அஃதை எனக்குச் சொன்னார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(19,20)
நோய் போக்கும் வழிமுறைகள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 12-உடல் மற்றும் மன நோய்களைப் போக்கும் வழிமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “உடல் சார்ந்து {சாரீரம்}, மனம் சார்ந்து {மானஸம்} என இருவகை நோய்கள் உள்ளன. உடலும், மனமும் ஒன்றோடொன்று செயல்பரிமாற்றம் செய்து கொள்ளும்போது, அவை {நோய்கள்} உண்டாகின்றன. மேலும் அவ்விரண்டின் தொடர்பில்லாமல் ஒருபோதும் அவை எழுவதில்லை.(1) உடலில் உண்டான நோய் உடல்நோய் என்றும், மனத்தை இருக்கையாகக் கொண்டது மன நோய் என்றும் அறியப்படுகின்றன.(2) ஓ! மன்னா, குளிர், வெப்பம் (சளி {கபம்} மற்றும் பித்தம்), காற்றுமயவுடனீர் {வாதம்} ஆகியவை {அதாவது வாதம், பித்தம், கபம் ஆகியவை} உடலில் தோன்றும் முக்கிய மாற்றங்களாகும், இந்த உடநீர்கள் சமமாகப் பிரிந்து, முறையான அளவுகளில் இருக்கும்போது அவை உடல்நலத்தைக் குறிக்கும் நல்ல அறிகுறிகளாகின்றன.(3) வெப்ப உடனீர்கள் குளிர்ச்சியாலும், குளிர் உடனீர்கள் வெப்பத்தாலும் செயல்படுகின்றன (தணிக்கப்படுகின்றன). சத்வம், ரஜஸ், தமஸ் என்பவை ஆன்ம குணங்களாகும்,(4) உரிய அளவுகளில் அவற்றின் இருப்பு (மன) நலத்தைக் குறிக்கிறது என்று கல்விமான்களால் சொல்லப்படுகிறது. ஆனால், இவை மூன்றில் ஏதாவதொன்று மேம்பட்டால், (சமநிலையை மீட்டெடுக்க) சில தீர்வுகள் இருக்கின்றன.(5)
மகிழ்ச்சி கவலையாலும், கவலை மகிழ்ச்சியாலும் வெல்லப்படுகின்றன. கவலையால் பீடிக்கப்பட்ட மக்கள் சிலர் (கடந்தகால) மகிழ்ச்சியை நினைவுகூர விரும்புகின்றனர், அதே வேளையில் பிறரோ மகிழ்ச்சியை அனுபவிக்கும்போது, கடந்த காலக் கவலையை நினைவுகூர விரும்புகின்றனர்.(6) ஆனால் நீரோ, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, உமது கவலைகளையும், உமது மகிழ்ச்சியையும் நினைவுகூர விரும்பவில்லை எனும்போது, கவலை என்ற இந்த மாயையைத் தவிர நீர் வேறு எதை நினைவுகூர விரும்புகிறீர்? அல்லது, ஓ! பிருதையின் மகனே, உமது உள்ளார்ந்த இயல்பாக இருக்கும் இதன் மூலம்(7) நீர் தற்செயலாக வெல்லப்படுகிறீரா?
மாதவிடாய் காலத்தில், சபா மண்டபத்தில் பாண்டவர்கள் அனைவரின் முன்னிலும் தன் உடலை மறைத்துக் கொள்ள ஒரேயொரு துண்டுத் துணியுடன் கிருஷ்ணை {திரௌபதி} நின்று கொண்டிருந்த அந்தப் பரிதாபக்காட்சியை நீர் உமது மனத்தில் நினைவுகூர விரும்பவில்லை. நகரத்தை விட்டுப் புறப்பட்டு, நாடு கடந்து, மான் தோலை உமது ஆடையாகக் கொண்டு, பெருங்காட்டில் நீர் திரிந்ததை நினைத்துப் பார்க்கமாட்டீர், அதேபோல, ஜடாசுரனிடம் அடைந்த துன்பம், சித்திரசேனனுடனான போர், சைந்தவர்களால் நீர் அடைந்த துன்பங்கள் ஆகியவற்றையும் நீர் உமது மனத்தில் நினைவுகூரமாட்டீர்.(8-11) ஓ! பிருதையின் மகனே, பகைவர்களை வென்றவரே, நாடு கடத்தப்பட்டு, முற்றான தலைமறைவு வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தபோது கீசகனால் திரௌபதி உதைக்கப்பட்டதையோ,(12) உமக்கும், துரோணருக்கும், பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற போர் நிகழ்வுகளையோ நீர் நினைவுகூர்வதும் முறையாகாது. ஒவ்வொருவரும் தனியாக மனத்தால் எதிர்த்துப் போரிடுவதற்கான நேரம் இப்போது வாய்த்திருக்கிறது[1].(13)எனவே, ஓ! பாரதகுலத்தின் தலைவரே, உமது மனத்திற்கு எதிராகப் போரிடத் தயாராவீராக, நுண்மயமாதல் {தியானம் செய்தல்} மற்றும், உமது சொந்த கர்மத்தின் தகுதியால் புரியாத புதிராக இருப்பதன் (இருக்கும் மனத்தின்) அடுத்தக் கரையை நீர் அடைவீராக.(14) இந்தப் போரில் உமக்கு ஏவுகணைகளோ, நண்பர்களோ, பணியாட்களோ தேவையில்லை. தனியாகப் போரிட வேண்டிய போருக்கான காலம் இப்போது வாய்த்திருக்கிறது.(15) இந்தப் போராட்டத்தில் வெல்லப்பட்டால், நீர் மிக அவலமான நிலையை அடைவீர், ஓ! குந்தியின் மகனே, இஃதை அறிந்து வெற்றியை அடையும்படி செயல்படுவீராக.(16) அனைத்து உயிரினங்களின் விதியையும் இந்த ஞானத்தையும் அறிந்து கொண்டு, உமது மூதாதையரின் ஒழுக்கத்தைப் பின்பற்றி முறையாக உமது நாட்டை ஆள்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(17)
காமகீதை – ஆசையை வெல்வதெப்படி? – அஸ்வமேதபர்வம் பகுதி – 13-ஆசை வெல்லப்பட முடியாதது என்பதையும், அதை வெல்வதற்குரிய வழிமுறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலக்கொழுந்தே, (நாடு முதலியவை போன்ற) புறப்பொருட்களைக் கைவிடுவதன் மூலம் விடுதலை {முக்தி} அடையப்படுவதில்லை, சதைக்கு (உடலுக்குத்) தீனிபோடும் பொருட்களைக் கைவிடுவதன் மூலமே அஃது அடையப்படுகிறது.(1) புறப் பொருட்களை மட்டுமே கைவிட்டவனும், அதே வேளையில் ஆசைகள் மற்றும் சதைப் பலவீனங்கள் ஆகியவற்றில் மூழ்கியவனுமான மனிதனால் அடையப்படும் அறம் {பண்பு} மற்றும் மகிழ்ச்சி ஆகியன நமது எதிரிகளின் பங்காகட்டும் {நமது எதிரிகளுக்கு உண்டாகட்டும்}.(2) இரண்டு எழுத்துகளைக் கொண்டது மிருத்யுவாகும் (ஆன்மாவின் மரணம் அல்லது கேடு ஆகும்), மூன்று எழுத்துகளைக் கொண்டது சாஸ்வத பிரம்மம் அல்லது நித்திய ஆன்மாவாகும். இஃது அல்லது அஃது என்னுடையது என்ற அகங்காரம், அல்லது உலகம் சார்ந்த பொருட்களுக்கு அடிமையாக இருக்கும் நிலையே மிருத்தியுவாகும், மேலும் அவ்வுணர்வின்மையே சாஸ்வதமாகும்.(3) ஓ! மன்னா, பிரம்மம் மற்றும் மிருத்யு ஆகிய இவ்விரண்டும் அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களிலும் தங்கள் இருக்கையைக் கொண்டு, புலப்படாத நிலையிலேயே நீடித்து நிச்சயம் ஒன்றோடொன்று போர்புரியச் செய்கின்றன[1].(4)ஓ! பாரதரே, எந்த உயிரினமும் ஒருபோதும் அழிவடைவதில்லை என்பது உண்மையானால், ஓர் உயிரினத்தின் உடலைத் துளைப்பதன் (அழிப்பதன்) மூலம் ஏற்படும் அதன் மரணத்தினால் ஒருவன் குற்றவுணர்வை அடையத் தேவையில்லை.(5) அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய படைப்புடன் கூடிய மொத்த பூமியின் அரசுரிமையையும் அடைந்த மனிதன் அதனிடம் பற்று கொள்ளாமலோ, அதனை அனுபவிப்பதில் மூழ்காமலோ இருந்தால் அம்மனிதனுக்கு இவ்வுலகம் என்ன செய்யும்?(6) ஆனால், ஓ! பிருதையின் மகனே, உலகத்தைத் துறந்து காட்டில் துறவியாகக் காட்டுக்கிழங்குகளையும் உணவுகளையும் உண்டு வாழும் மனிதன் உலகில் உள்ள நல்ல பொருட்களில் ஏக்கம் கொண்டு, அவற்றுக்கு அடிமையாக இருந்தால் அவன் தன் வாயில் மிருத்யுவை (மரணத்தைக்) கொண்டிருக்கலாம் {அவன் மிருத்யுவின் வாயில் இருக்கிறான்} என்று சொல்லப்படுகிறது.(7) ஓ! பாரதரே, புறத்திலும், அகத்திலும் உமக்குள்ள எதிரிகளின் தன்மையை (உமது ஆன்மப் பார்வையின் மூலம்) கவனமாகக் காண்பீராக. நிலையான உண்மையின் இயல்பைக் காண இயன்ற மனிதன், பேரச்சத்தின் (கேட்டின் {அழிவின்}) ஆதிக்கத்தைக் கடக்க இயன்றவனாவான்.(8)
உலகம் சார்ந்த ஆசைகளில் மூழ்கியுள்ளோரின் ஒழுக்கத்தை மனிதர்கள் உவப்பாகப் பார்ப்பதில்லை, ஆசை இல்லாமல் (ஆசையை வேராகக் கொள்ளாத) எந்தச் செயலுமில்லை, மேலும் ஆசைகள் (காமங்கள்) அனைத்தும் மனத்தின் அங்கங்களை (கிளைகளைப்) போன்றனவாகும். எனவே, இதை அறிந்த ஞானிகள் தங்கள் ஆசைகளை அடக்குகின்றனர். பரமாத்மாவோடு ஒன்றிணையும் யோகியானவன், தனது முந்தைய பல்வேறு பிறவிகளின் நடைமுறைகள் {பழக்கங்கள்} காரணமாக, (விடுதலை {முக்தி} அடைவதற்கு) யோகத்தையே மிகச் சரியான வழியாக அறிகிறான். ஆன்மாவின் ஆசைகள் பக்தி மற்றும் அறத்தைக் கடத்துவனவல்ல, ஆசைகளை அடக்குவதே முற்றான உண்மை அறத்தின் வேராக இருக்கிறது என்பதை நினைவுகூரும் மனிதர்கள், முன்னேற்றத்தை அடைந்து விடலாம் என்ற நோக்கத்தோடு ஈகை பயில்தல், வேத கல்வி, தவம், உலகம் சார்ந்த செழிப்பை அடைவதற்கான வேத சடங்குகள், விழாக்கள், வேள்விகள், அறவிதிகள், தியானம் ஆகியவற்றில் ஈடுபடுவதில்லை.(9-11) பழங்கதைகளை அறிந்த தவசிகள், இந்த உண்மையை விளக்கும் வகையில் காமகீதை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கதைகளை உரைக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரரே, அவற்றை விளக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(12)
(காமன் சொல்கிறான்) (“அனைத்து ஆசைகளையும் அடக்குதல், யோகப் பயிற்சி முதலிய) உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் எந்த உயிரினத்தாலும் என்னை அழிக்க இயலாது.(13) ஒரு மனிதன் என் சக்தியை அறிந்தும், வேண்டுதல்கள் {ஜபங்கள்} முதலியவற்றை முணுமுணுப்பதன் மூலம் என்னை அழிக்க முனைந்தால், நானே அவனுக்குள் உள்ள அகநிலைத் தன்னுணர்வு என்று நம்பச் செய்து, வஞ்சிப்பதன் மூலம் நான் அவனை வெல்வேன்[2]. பல்வேறு கொடைகளுடன் கூடிய வேள்விகளின் மூலம் அவன் என்னை அழிக்க விரும்பினால்,(14) அசையும் படைப்புகளுக்கு மத்தியில் மிகவும் அறம்சார்ந்த உயிரினமாக அவனது மனத்தில் தோன்றி வஞ்சிப்பேன், வேதங்கள் மற்றும் வேதாங்கங்களில் தேர்ச்சி அடைவதன் மூலம் என்னை அவன் ஒழிக்க விரும்பினால், அசைவில்லாத படைப்புகளுக்கு மத்தியில் உள்ள அற ஆன்மாவாக அவனது மனத்திற்குத் தோன்றி அவனை வெல்வேன்.(15)வாய்மையைத் தன் பலமாகக் கொண்ட ஒரு மனிதன், பொறுமையின் மூலம் என்னை வெல்ல விரும்பினால்,(16) நான் புலப்படாதவனாக அவனது மனமாகவே அவனுக்குத் தோன்றுவேன். கடும் அறப்பயிற்சிகள் செய்யும் {கடும் விரதங்களுடன் கூடிய} மனிதன், தவத்தின் மூலம் என்னை அழிக்க விரும்பினால்,(17) அவன் என்னை அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் தவத்தின் தோற்றத்திலேயே அவனது மனத்தில் நான் தோன்றுவேன். கல்விமானான ஒரு மனிதன்,(18) விடுதலையை {முக்தியை} அடையும் நோக்கத்துடன் என்னை அழிக்க விரும்பினால், விடுதலையை நோக்கமாகக் கொண்ட அத்தகைய மனிதனின் முகத்தில் சிரித்து மகிழ்ந்தாடுகிறேன். எந்த உயிரினத்தாலும் கொல்லப்படவோ, அழிக்கப்படவோ முடியாதவனாகவும், எப்போதும் நீடித்திருக்கும் ஒப்பற்றவனாகவும் நானே இருக்கிறேன் {நான் எவனாலும் கொல்லப்பட முடியாதவன்” என்றான் காமன்}.(19)
ஓ! இளவரசே {யுதிஷ்டிரரே}, இந்தக் காரணத்தினால் நீரும் உமது ஆசைகளை (காமத்தை) அறத்தின் பக்கம் திருப்பினால் அந்த வழிமுறையின் மூலம் நீர் உமக்கான நன்மையை அடையலாம்.(20) எனவே, கொடைகளுடன் கூடிய குதிரை வேள்வியையும், பெரும் காந்தியுடையவையும், கொடைகளுடன் கூடியவையுமான பல்வேறு வேள்விகள் பிறவற்றையும் உரிய முறையில் செய்வதற்கு ஆயத்தமாவீராக.(21) போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கும் உமது நண்பர்களைக் கண்டு மீண்டும் துயரம் உம்மை ஆட்கொள்ள வேண்டாம். இந்தப் போரில் கொல்லப்பட்ட மனிதர்களை மீண்டும் உயிருடன் உம்மால் பார்க்க முடியாது.(22) எனவே, இம்மையில் புகழை அடையவும் (மறுமையில்) மிகச் சரியான வழியை அடையவும் கொடைகளுடன் கூடிய மகத்தான வேள்விகளை நீர் செய்வீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(23)
ஹஸ்தினாபுரம் திரும்பிய யுதிஷ்டிரன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 14-வியாசர் முதலியோர் யுதிஷ்டிரனைத் தேற்றியது; பீஷ்மர் முதலியோருக்கு ஈமச் சடங்குகளைச் செய்து ஹஸ்தினாபுரம் திரும்பிய யுதிஷ்டிரன்..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நண்பர்களை இழந்த அரசமுனி யுதிஷ்டிரன், பெரும் தவத்தகுதிகளைக் கொண்ட இந்த முனிவர்களால் இவ்வாறு ஆறுதல் சொல்லப்பட்டான்.(1) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, வழிபடத்தகுந்த விஷ்டரஸ்ரவனாலும் {கிருஷ்ணனாலும்}, கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தேவஸ்தானர், நாரதர், பீமன், நகுலன், கிருஷ்ணை (திரௌபதி), சகாதேவன், புத்திமானான விஜயன் {அர்ஜுனன்} ஆகியோராலும், இன்னும் பிற பெரும் மனிதர்களாலும், சாஸ்திரங்களை நன்கு அறிந்த பிராமணர்களாலும் உற்சாகமளிக்கப்பட்ட அந்த மனிதர்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தனது மன நோய்கள், தன் அன்புக்குரிய உறவினர்களின் மரணத்தால் எழுந்த கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டான்.(2-4)
இறந்து போன தன் நண்பர்களுக்கான ஈமச் சடங்குகளைச் செய்த அந்த ஏகாதிபதி யுதிஷ்டிரன், பிராமணர்கள் மற்றும் தேவர்களைக் கௌரவித்து, கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமியின் அரசுரிமையைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான்.(5) தன் நாட்டை மீட்ட அந்தக் குரு இளவரசன் {யுதிஷ்டிரன்}, அமைதியான மனத்துடன் கூடியவனாக, அங்கிருந்த வியாசர், நாரதர் மற்றும் பிற தவசிகளிடம் இவ்வாறு சொன்னான்.(6)
{யுதிஷ்டிரன்}, “பெரியவர்களும், புராதனமானவர்களும், முதிர்ந்தவர்களுமான உங்களைப் போன்ற தவசிகளின் வார்த்தைகளால் ஆறுதலடைந்தேன், இப்போது கவலைக்கான எந்தக் காரணமும் எனக்கில்லை.(7) அதேபோல, நான் பெருஞ்செல்வத்தை அடைந்திருக்கிறேன், அதைக் கொண்டு தேவர்களை வழிபடுவேன். எனவே, உங்கள் துணையுடன் நான் இப்போது அந்த வேள்வியைச் செய்வேன்.(8) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அந்த (இமாலயப்) பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது என்று நாம் கேள்விப்படுகிறோம். எனவே, ஓ! பிராமணரே, தவசியே, பாட்டனே, உமது பாதுகாப்பின் கீழ் நாங்கள் இமய மலைகளைப் பாதுகாப்பாக அடையும் வகையில் ஆணையிடுவீராக. நான் செய்யப் போகும் வேள்வி முழுமையாக உமது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது, மேலும், துதிக்கத்தகுந்த தெய்வீக முனிவரான நாரதர் மற்றும் தேவஸ்தானர் ஆகியோரும் எங்கள் நலத்திற்கான நல்ல பொருள் பொதிந்த சிறந்த சொற்களைச் சொல்லியிருக்கின்றனர்.(9,10) பெருஞ்சோதனைகளும், துன்பங்களும் நிறைந்த காலத்தில் பேறற்ற எந்த மனிதனும், அறம்சார்ந்த மனிதர்களால் அங்கீகரிக்கப்படும் இத்தகைய ஆசான்கள் மற்றும் நண்பர்களின் தொண்டைப் பெறும் நற்பேற்றைப் பெற்றதில்லை” {என்றான் யுதிஷ்டிரன்}.(11)
மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பெருந்தவசிகள், மன்னனிடமும் {யுதிஷ்டிரனிடமும்}, கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடமும் இமய மலைப் பகுதிகளுக்குச் செல்லுமாறு ஆணையிட்டுவிட்டு, அங்கே கூடியிருந்த கூட்டத்தின் முன்னிலையே மறைந்து போனார்கள். அதன்பிறகு, தர்மனின் அரச மகனான மன்னன் {யுதிஷ்டிரன்} சற்று நேரம் அங்கே அமர்ந்திருந்தான்.(12,13) பீஷ்மர் மாண்டதன் விளைவால் பாண்டவர்கள் அப்போது அவருடைய ஈமச் சடங்குகளைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவ்வாறு அவர்கள் ஈடுபட்டிருந்தபோது, பீஷ்மர், கர்ணன் மற்றும் முதன்மையான பிற கௌரவர்களின் சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளில் {உத்தரக்கிரியைச் செய்வதில்} பிராமணர்களுக்கு அவர்கள் பெருங்கொடைகளை அளித்ததால் நெடுங்காலம் கடந்ததைப் போலத் தெரிந்தது. அப்போது அந்தக் குருகுல வழித்தோன்றல்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்},(14,15) (போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கான) ஈமச்சடங்குகளைத் திருதராஷ்டிரனோடு சேர்ந்து செய்து, பிராமணர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடையளிதான். முன்னே செல்லும் திருதராஷ்டிரனுடன் கூடிய அந்தப் பாண்டவத் தலைவன் {யுதிஷ்டிரன்}(16) ஹஸ்தினாபுர நகரத்திற்குள் நுழைந்தான். ஞானக்கண்களைக் கொண்டவனும், தன் பெரியப்பாவுமான அரசனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஆறுதல் சொன்ன அந்த அறம்சார்ந்த இளவரசன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகளுடன் சேர்ந்து பூமியைத் தொடர்ந்து ஆண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(17,18)
துவாரகைக்குத் திரும்ப விரும்பிய கிருஷ்ணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 15-களிப்புற்றிருந்த கிருஷ்ணார்ஜுனர்கள்; துவாரகைக்குத் திரும்ப விரும்புவதாகவும், யுதிஷ்டிரரிடம் அதற்கு அனுமதி பெறும்படியும் அர்ஜுனனிடம் கேட்ட கிருஷ்ணன்..
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} [1], “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பாண்டவர்கள் தங்கள் நாட்டை மீண்டும் அடைந்து அமைதியடைந்தபோது, போர்வீரர்களான வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பூமியின் தலைவா, பாண்டவர்கள் தங்கள் ஆட்சிப்பகுதிகளை மீண்டும் அடைந்து தணிவடைந்தபோது, வாசுதேவனும், தனஞ்சயனும் பெரும் மகிழ்ச்சியடைந்து,(2) விசித்திரமான காடுகள், மலைகள், தாழ்வரைகள், புண்ணியத் தீர்த்தங்கள், தடாகங்கள், ஆறுகள், நந்தவனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் சொர்க்கத்தின் தேவர்களைப் போலப் பெரும் நிறைவுடனிருந்து, இந்திரனின் நந்தவனத்தில் திரியும் அஸ்வினி தேவர்களைப் போலப் பெரும் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.(3,4) ஓ! பாரதா, உயர் ஆன்மக் கிருஷ்ணனும் அந்தப் பாண்டுவின் மகனும் (தனஞ்சயனும்) இந்திரப்பிரஸ்தத்தின் அழகிய சபா மண்டபத்திற்குள் நுழைந்து பெரும் இன்பத்துடன் தங்கள் காலத்தைக் கழித்தனர்.(5)
ஓ! இளவரசே, அங்கே அவர்கள் போரில் நிகழ்ந்த பரபரப்பான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கடந்த கால வாழ்வின் துன்பங்கள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து தங்கள் காலத்தைக் கடத்தினர்.(6) இதய மகிழ்ச்சியுடன் கூடியவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான அந்தப் பழங்காலத் தவசிகள் இருவரும், தவசிகள் மற்றும் தேவர்களின் குலங்களைக் குறித்த மரபாய்வுகளைச் செய்வதில் ஈடுபட்டனர்.(7) அப்போது, காரியங்கள் அனைத்தின் நிச்சயத்தை அறிந்த கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் சிறந்த பாணி மற்றும் ஆழத்துடன் இனிமையாகவும், அழகாகவும் பேசினான்.(8) தன் மகன்கள் மற்றும், ஆயிரக்கணக்கான உறவினர்கள் இறந்ததனால் பீடிக்கப்பட்டிருந்த பிருதையின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆறுதலளித்தான்.(9) பெரும் தவத்தகுதியைக் கொண்டவனும், அனைத்துப் பொருட்களின் அறிவியலை அறிந்தவனுமான அவன் முறையாக அவனுக்கு ஆறுதலைக் கூறி, தன் மேனியில் இருந்த பெருஞ்சுமை அகற்றப்பட்டவனைப் போலச் சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொண்டான்.(10) பிறகு அந்தக் கோவிந்தன், நல்ல பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்ட இனிய பேச்சால் அர்ஜுனனுக்கு ஆறுதல் கூறினான்.(11)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! அர்ஜுனா, பகைவர்களுக்குப் பயங்கரனே, உன் கரத்தின் பலத்தைச் சார்ந்து மொத்த உலகையும் மன்னனான தர்மனின் மகன் {யுதிஷ்டிரர்} வென்றிருக்கிறார்.(12) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அறம்சார்ந்த மன்னரான யுதிஷ்டிரர், பீமசேனர் மற்றும் இரட்டையர் தம்பிகள் ஆகியோரின் வலிமையின் மூலம் இப்போது பூமியின் அரசுரிமையை ஒரு பகையுமின்றி அனுபவிக்கிறார்.(13)
ஓ! அறத்தை அறிந்தவனே {அர்ஜுனனே}, அறத்தால் மட்டுமே மன்னரால் தன் நாட்டை எதிரிகள் அனைவரிடம் இருந்து மீட்டெடுக்க முடிந்தது, அறத்தினுடைய செயல்பாட்டின் மூலமே மன்னன் சுயோதனனும் போரில் கொல்லப்பட்டான்.(14) ஓ! பிருதையின் மகனே, குரு குலத்தின் தூணாக இருப்பவனே, பேராசை கொண்டவர்களும், எப்போதும் பேச்சில் முரட்டுத்தனம் கொண்டவர்களும், அறத்திற்கு மாறான நடைமுறையில் விருப்பம் கொண்டவர்களுமான தீய திருதராஷ்டிர மைந்தர்களும்,(15) அவர்களது தொண்டர்களும் கொல்லப்பட்டனர். பூமியின் தலைவரும், தர்மனின் மகனுமான மன்னர் {யுதிஷ்டிரர்}, பூமியில் உள்ள அரசு முழுமையையும் அமைதியாக அனுபவிக்கிறார்.(16) நானும், ஓ! பாண்டுவின் மகனே, உன்னுடன் சேர்ந்து காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியாகத் திரிந்து என் காலத்தைக் கழிக்கிறேன்.(17) ஓ! பகைவர்களுக்குப் பயங்கரனே, எங்கே நீயும், பிருதையும் {குந்தியும்}, தர்மனின் மகனான மன்னரும், பீமசேனரும், மாத்ரியின் இரு மகன்களும் இருக்கிறார்களோ அங்கே நான் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?(18) ஓ! குருவின் வழித்தோன்றலே, வசுதேவர், பலதேவர் மற்றும் பிற விருஷ்ணி குலத் தலைவர்களைக் காணாமல் உன்னுடன் சேர்ந்து இனிமை நிறைந்தவையும், புனிதமானவையும், சொர்க்கம் போன்றவையுமான சபாமண்டபங்களில் வெகு காலத்தைக் கழித்துவிட்டேன்.(19,20)
நான் இப்போது துவாரவதி {துவாரகைக்குச்} செல்ல விரும்புகிறேன். எனவே, ஓ! மனிதர்களில் பெரும் வீரமிக்கவனே {அர்ஜுனா}, நான் செல்வதை ஏற்பாயாக.(21) மன்னர் யுதிஷ்டிரன் பெருந்துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்தபோது, பீஷ்மருடன் சேர்ந்து நானும் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த புராணங்களைச் சொல்லி அவரது துயரைக் களைந்திருக்கிறேன். உயர்ந்த மனம் கொண்டவரும், இசைந்து கொடுப்பவருமான யுதிஷ்டிரன் நமது அரசராக இருந்தாலும், புராணங்கள் அனைத்தையும் அறிந்தவராக இருந்தாலும், எங்கள் வார்த்தைகளில் உரிய கவனத்தைச் செலுத்தினார்.(22) தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} வாய்மைக்கு மதிப்பளித்து, நன்றியுணர்வுடன், அறம்சார்ந்தவர்களாக இருப்பதால் அவரது அறமும், நல்ல குணமும், உறுதியான சக்தியும் எப்போதும் நிலைத்திருக்கும்.(23,24) ஓ! அர்ஜுனா, உனக்கு விருப்பமிருந்தால் உயர்ந்த மனம் கொண்ட அந்த இளவரசரிடம் {யுதிஷ்டிரரிடம்} சென்று, இந்த இடத்தைவிட்டுப் புறப்படும் என் நோக்கத்தை அவரிடம் சொல்வாயாக.(25)
நான் துவாராவதி நகரத்திற்குச் செல்வதைவிடு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, எனக்கு மரணமே நேர்ந்தாலும் அவருக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய நான் விரும்பவில்லை {அவர் விரும்பாவிட்டால் துவாராவதி செல்ல மாட்டேன்}.(26) ஓ! பிருதையின் மகனே, குருவின் வழித்தோன்றலே, உனக்கு ஏற்புடையதையும் நல்லதையும் மட்டுமே செய்ய விரும்பி இப்போது ஓர் உண்மையைச் சொல்கிறேன். அதில் இரு பொருள் கொண்ட ஏதும் எந்த வகையிலும் இருக்காது. திருதராஷ்டிரர் மகனும், அவனுடைய படைகளும், தொண்டர்களும் கொல்லப்பட்ட பிறகும்,(27,28) மலைகள், காடுகள், வனங்கள், கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி மற்றும் பல்வேறு ரத்தினங்கள் நிறைந்திருக்கும் குரு மன்னனின் நாடு ஆகியவை தர்மனின் மகனுடைய {யுதிஷ்டிரருடைய} ஆளுகையின் கீழ் வந்துவிட்ட பிறகும், இனிமேலும் நான் இங்கிருக்க வேண்டிய தேவையில்லை. ஓ! பாரதக் குலத்தில் முதன்மையான இளவரசனே, அந்த அறம் சார்ந்த இளவரசர் {யுதிஷ்டிரர்}, தன் நாடாக உள்ள பூமி முழுவதையும் நீதியுடன் ஆண்டு,(29,30) உயர் ஆன்மாவைக் கொண்ட எண்ணற்ற சித்தர்களின் மதிப்புடன் கூடிய பாராட்டுகளைப் பெற்று, சபையில் உள்ள கட்டியங்கூறுவோரால் தன் புகழ் சொல்லப்பட்டுத் துதிக்கப்பெறட்டும்.(31)
ஓ! குரு குலத்தின் தலைவா {அர்ஜுனா}, குரு குலத்தைப் பெருமளவு உயர்த்தும் மன்னனின் {யுதிஷ்டிரரின்} முன்பு என்னுடன் வந்து துவாரகைக்குத் திரும்பும் என் நோக்கத்தைக் குறித்து அவருக்குச் சொல்வாயாக.(32) ஓ! பிருதையின் மகனே, குருக்களின் உயர் ஆன்ம மன்னர் யுதிஷ்டிரர் என்னிடம் எப்போதும் அன்பும் மதிப்பும் கொள்வதைப் போலவே, நான் என் உடலையும், என் வீட்டில் நான் கொண்டுள்ள செல்வமனைத்தையும் அவரது வசமே வைத்திருக்கிறேன் {அவருக்கே அர்ப்பணம் செய்திருக்கிறேன்}.(33) ஓ! இளவரசே, பார்த்தா (பிருதையின் மகனே), இந்தப் பூமியானது உனது ஆட்சியின் கீழும், சிறந்த குணத்தைக் கொண்டவரும், வழிபடத்தகுந்தவருமான யுதிஷ்டிரருடைய ஆட்சியின் கீழும் இருக்கும்போது, நான் உங்களிடம் கொண்ட அன்புக்காகத் தவிர நான் இங்கிருக்க வேண்டிய அவசியமே இல்லை” என்றான் {கிருஷ்ணன்}.(34)
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மீண்டும் மீண்டும் ஐயங்கொள்ளும் அர்ஜுனனிடம், உன்னத இதயம் கொண்ட ஜனார்த்தனன் இவ்வாறு கேட்டுக் கொண்ட போது, அவனுக்குரிய கௌரவங்கள் அனைத்தையும் அளித்த அவன், கவலை நிறைந்தவனாக, வெறுமனே “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(35)
ஸித்த காஸ்யப ஸம்வாதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 16-கீதையை மறுபடியும் உரைக்கும்படி கோவிந்தனிடம் கேட்ட அர்ஜுனன்; சித்தர் மற்றும் காசியபருக்கிடையில் நடந்த உரையாடலைச் சொன்ன கிருஷ்ணன்…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பகைவர்களைக் கொன்றுவிட்டு சபா மண்டபத்திற்குச் சென்ற உயர் ஆன்ம கேசவன் மற்றும் அர்ஜுனனுக்கிடையில் என்ன உரையாடல் நடந்தது?” என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் நாட்டை மீட்ட பிருதையின் மகன் (அர்ஜுனன்), தெய்வீக அழகுடைய அந்த அரண்மனையில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், கிருஷ்ணனின் துணையுடனும் வேறு எதையும் செய்யாமல் தன் காலத்தை இன்பமாகக் கழித்தான்.(2) ஒருநாள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவ்விருவரும் சொர்க்கத்தின் ஒரு பகுதியைப் போலத் தூய்மையாகத் தெரிந்த அந்த அரண்மனையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றனர். மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அவர்கள், தங்கள் உறவினர்கள் மற்றும் பணியாட்களால் சூழப்பட்டிருந்தனர்.(3)
கிருஷ்ணனுடனான தோழமையால் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பாண்டுவின் மகன் அர்ஜுனன், இனிமைநிறைந்த அம்மாளிகையைக் கண்டு, தன் தோழனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, போர் அணுகி வந்தபோது உன் பெருமையை நான் அறிந்தேன்.(4) ஓ! தேவகியின் மகனே, அண்டத்தின் தலைவனான உன் வடிவத்தை நான் அறிந்தேன்.(5) ஓ! கேசவா, புனிதனான நீ அந்நேரத்தில் அன்புடன் எனக்குச் சொன்னதனைத்தையும் என் மனத்தின் நிலையின்மையால் மறந்துவிட்டேன்.(6) எனினும், அந்த உண்மைகளை அறிய மீண்டும் மீண்டும் நான் ஆவல் கொள்கிறேன். நீயோ விரைவில் துவாரகை செல்லப் போகிறாய்” என்றான்”.(7)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், வலிமைமிக்கவனும், சக்திமானும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், பல்குனனை {அர்ஜுனனை} ஆரத்தழுவி பின்வருமாறு பதில் கூறினான்.(8)
வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, “புதிர்கள் {இரகசியங்கள்} எனக் கருதப்படும் உண்மைகளை உன்னைக் கேட்கச் செய்தேன். நிலையான உண்மைகளை நான் உனக்குச் சொன்னேன். அறத்தின் நிலையான வடிவம் {ஸனாதன தர்மத்தின் ஸ்வரூபம்} குறித்தும், நித்திய உலகங்கள் அனைத்தைக் குறித்தும் நான் உனக்குச் சொன்னேன்.(9) நான் உனக்குச் சொன்னதை மடமையினால் நீ புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிவது பெரும் ஒவ்வாமையைத் தருகிறது. அச்சமயத்தில் நான் உன்னிடம் சொன்னது அனைத்தையும் இப்போது நினைவுகூர்ந்து என்னால் உனக்குச் சொல்ல இயலாது.(10) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ நம்பிக்கையற்றவனாகவும், புத்தி கெட்டவனாகவும் இருக்கிறாய். ஓ! தனஞ்சயா, அச்சந்தர்ப்பத்தில் நான் சொன்ன அனைத்தையும் விரிவாக மீண்டும் சொல்ல என்னால் இயலாது.(11)
(அப்போது நான் உனக்குச் சொன்ன) அந்த அறம் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளப் போதுமானதற்கும் காலம் அதிகமானதாகும். அது குறித்து மீண்டும் விரிவாக என்னால் சொல்ல முடியாது.(12) யோகத்தில் என்னை நானே குவித்துக் கொண்ட பிறகு பரப்பிரம்மம் குறித்து உன்னிடம் உரையாடினேன். எனினும், அதே காரியம் குறித்த ஒரு பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்கிறேன்.(13) ஓ! கடமையை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் சொல்லப் போகும் அனைத்தையும் என் போதனைக்கு ஏற்ற புத்தியுடன் கேட்டால், உன்னால் உயர்ந்த கதியை அடைவதில் வெல்ல முடியும்.(14) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, ஒரு சந்தர்ப்பத்தில் சொர்க்கத்தில் இருந்து ஒரு பிராமணர் எங்களிடம் வந்தார். தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அவர் பிரம்ம லோகத்தில் இருந்து வந்தார். எங்களால் அவர் முறையாகக் கௌரவிக்கப்பட்டார்.(15) ஓ! பிருதையின் மகனே, சொர்க்க வடிவங்களுக்கு ஏற்புடைய வகையில் எங்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் எவ்வகையான ஐயுணர்வுக்கும் வசப்படாமல் கேட்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(16)
பிராமணன், “ஓ! கிருஷ்ணா, (உன் சொந்த நன்மைக்காக அல்லாமல்) அனைத்து உயிரினங்களிடம் கொண்ட கருணையால் உந்தப்பட்டு, மோக்ஷ அறம் தொடர்பாக நீ என்னிடம் எதைக் கேட்டாயோ, மாயைகள் அனைத்தையும் எது அழிக்குமோ, ஓ! உயர்ந்த பலத்தைக் கொண்டவனே,(17) ஓ! மதுசூதனா அதை நான் உனக்கு முறையாகச் சொல்லப் போகிறேன். ஓ! மாதவா, நான் சொல்வதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(18) தவம் செய்தவரும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், காசியபர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பிராமணர் அறப்புதிர்கள் {தர்மங்கள் குறித்த சாஸ்திர ரஹஸ்யங்கள்} அனைத்தையும் அறிந்த மற்றொரு பிராமணரிடம் சென்றார்.(19) உண்மையில், பின்னவர், உயிரினங்களின் மரணம் மற்றும் மறுபிறவிகள் குறித்துச் சாத்திரங்கள் போதிக்கும் அறிவு அனைத்திலும், யோகம் தரும் அனைத்துப் பொருட்களின் நேரடி அறிவு ஆகியவற்றிலும் தேர்ச்சி அடைந்தவராக இருந்தார். அவர் உலகம் தொடர்பான காரியங்களில் உள்ள உண்மைகள் அனைத்திலும் நல்ல நிபுணராக இருந்தார். இன்ப, துன்பங்களின் உண்மையையும் நன்கு அறிந்தவராக இருந்தார்.(20) அவர் பிறப்பு மற்றும் மரணம் குறித்தும், நிறை {புண்ணியம்} மற்றும் குறை {பாவம்} ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளையும் அறிந்திருந்தார். தற்செயல்களின் {சுய கர்மத்தின்} விளைவால் உயர்ந்த மற்றும் இழிந்த உடல் கொண்ட உயிரினங்களால் அடையப்படும் கதிகளைக் காண்பவராக இருந்தார்.(21)
உலகில் இருந்து விடுதலை {முக்தி} அடைந்த ஒருவரைப் போல அவர் வாழ்ந்தார். தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராகவும், முற்றான ஆன்ம அமைதியை அடைந்தவராகவும் இருந்த அவர், தமது புலன்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். பிரம்ம ஒளியால் சுடர்விடுபவராகவும், {நினைத்தாலே} விரும்பிய இடமெங்கும் செல்லக்கூடியவராகவும் இருந்தார். விரும்பினால் அனைவரின் கண்களின் முன்பும் மறைந்து போகும் அறிவியலை அவர் அறிந்திருந்தார். அவர் புலப்படாத சித்தர்கள் மற்றும் தெய்வீக இசைக் கலைஞர்களின் துணையுடன் திரிபவராக இருந்தார். மனிதர்களின் பரபரப்புக்கு அப்பால் ஏதோவோரிடம் அவர்களுடன் அமர்ந்து உரையாடுபவராகவும் இருந்தார். அவர் காற்றைப் போல அனைத்துப் பொருட்களில் இருந்தும் தொடர்பறுந்தவராக இருந்தார். உண்மையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்த காசியபர் அவரைக் காண விரும்பினார். நுண்ணறிவைக் கொண்டவரும், பிராமணர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான அவர் {காசியபர்} அந்தத் தவசியை அணுகினார்.(22-24) தவம் செய்பவரும் புண்ணியம் ஈட்ட விரும்பியவருமான காசியபர், அந்த அற்புதக் குணங்கள் அனைத்தையும் கண்டதும் அந்தத் தவசியின் பாதங்களில் குவிந்த இதயத்துடன் விழுந்தார்.(25) அவருடைய இயல்புக்கு மீறிய சாதனைகளைக் கண்ட காசியபர், ஒரு சீடன் தன் ஆசானுக்காகக் கடமையுணர்வுடனும், மதிப்புடனும் காத்திருப்பதைப் போல அந்த முதன்மையான பிராமணரிடம் காத்திருந்து, அவரைத் தணிப்பதில் வென்றார்.(26) ஓ! பகைவர்களை வாட்டுபவனே {கிருஷ்ணா}, சாத்திரக் கல்வி, சிறந்த ஒழுக்கம் ஆகியவற்றைத் தவிர இந்தச் சாதனைகள் அனைத்தையும் செய்திருந்த அந்தப் பிராமணரை, ஓர் ஆசானிடம் கீழ்ப்படிந்திருக்கும் சீடனைப் போலத் தம் பக்தியால் நிறைவடையச் செய்தார்.(27) காசியபரிடம் நிறைவடைந்த அந்தப் பிராமணர் ஒரு நாள் அவரிடம் உற்சாகமாகவும், உயர்ந்த வெற்றியில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டும் பின்வருமாறு பேசினார். ஓ! ஜனார்த்தனா, அந்த வார்த்தைகளை நான் மீண்டும் சொல்கிறேன் கேட்பாயாக.(28)
வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரான அந்தத் தவசி {சித்தர்}, “ஓ! மகனே {காசியபா}, பல்வேறு செயல்களின் மூலமும், தகுதியின் {புண்ணியத்தின்} துணை மூலமும் இறந்து போகக்கூடிய உயிரினங்கள் இம்மையில் பல்வேறு கதிகளையும், சொர்க்கத்தில் வசிப்பிடத்தையும் அடைகின்றன.(29) எங்கும் உயர்ந்த மகிழ்ச்சி கிடையாது; எங்கும் நிலையான வசிப்பிடம் கிடையாது. துன்பத்துடன் அடையப்பட்ட உயர்ந்த உலகங்களில் இருந்து மீண்டும் மீண்டும் விழ்ச்சிகள் நேரிடும்.(30) பாவத்தில் ஈடுபட்டதன் விளைவாகக் காமமும், கோபமும் நிறைந்தவனாக, பேராசையால் மயக்கப்பட்டவனாக இருந்த நான் பரிதாபகரமான, மங்கலமற்ற பல்வேறு கதிகளை அடைய வேண்டி இருந்தது.(31) நான் மீண்டும் மீண்டும் இறந்து, மீண்டும் மீண்டும் பிறந்தேன். நான் பல்வேறு வகை உணவுகளை உண்டேன், நான் பல்வேறு முலைகளைப் பருகியிருக்கிறேன்.(32)
ஒருவருக்கொருவர் வெவ்வேறான பல்வேறு வகைத் தாய்மாரையும், பல்வேறு வகைத் தந்தைமாரையும் நான் கண்டிருக்கிறேன். ஓ! பாவமற்றவனே, பல்வேறு வகை இன்பங்களையும், பல்வேறு வகைத் துயரங்களையும் எனதாகியிருக்கின்றன.(33) பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் எனக்கு ஏற்புடையவற்றில் இருந்து பிரிக்கப்பட்டு, ஏற்பில்லாதவற்றோடு சேர்க்கப்பட்டிருக்கிறேன். கடும் உழைப்பினால் செல்வத்தை ஈட்டி, அதை இழந்திருக்கிறேன்.(34) அவமதிப்புகள், அதீத துயரங்கள் ஆகியவற்றை மன்னர்களிடம் இருந்தும், உறவினர்களிடம் இருந்தும் நான் அடைந்திருக்கிறேன்.(35) அவமானங்கள், மரணம், மிகக் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் சிறைவாசம் ஆகியவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். நரகத்தில் விழுவதும், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் பெரும் சித்திரவதைகளும் எனதாகியிருக்கின்றன.(36) முதுமையும், நோய்களும் மீண்டும் மீண்டும் என்னைத் தாக்கியிருக்கின்றன, அடிக்கடி அபரிமிதமான அளவில் பேரிடர்கள் நேர்ந்திருக்கின்றன. முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் கருத்துகளில் இருந்தும் பாயும் துன்பங்களை இவ்வுலகில் நான் மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்கிறேன்.(37)
இவை யாவற்றுக்கும் பிறகு, ஒரு நாள், துன்பத்தில் மூழ்கியிருந்த எனக்கு வெறுமையான மனத்தளர்ச்சி {நம்பிக்கையின்மை} ஏற்பட்டது. வடிவமற்ற புகலிடத்தை நான் அடைந்தேன். பெரும் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த நான் இன்ப துன்பங்கள் நிறைந்த இந்தப் பூமியைக் கைவிட்டேன்[1].(38) இந்தப் பாதையைப் புரிந்து கொண்ட நான், இவ்வுலகில் தானே பயின்று வந்தேன். அதன் பிறகு, ஆன்ம அமைதியின் மூலம் நீ காணும் இந்த வெற்றியை அடைந்தேன்.(39) (இங்கிருந்து நான் சென்ற பிறகு) இவ்வுலகத்திற்கு நான் மீண்டும் வர மாட்டேன். உண்மையில், நிலைத்த பிரம்மத்துக்குள் ஈர்க்கப்படும் நிலையை நான் அடையும் வரை, அண்டத்தின் இறுதி அழிவு வரை எனக்கு நேரும் மகிழ்ச்சிகரமான கதிகளையும், இந்த அண்டத்தில் உள்ள உயிரினங்களின் கதிகளையும் பார்த்துக் கொண்டிருப்பேன்[2].(40) இந்தச் சிறந்த வெற்றியை அடைந்திருக்கும் நான் இவ்வுலகில் இருந்து சென்ற பிறகு, அதற்கு மேலிருப்பது எதுவோ (சத்தியலோகத்திற்கு) செல்வேன். அங்கிருந்து மேலும் உயர்வானதை அடைவேன் (பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுவேன்).(41) புலப்படாத நிலையான அந்தப் பிரம்ம நிலையை உண்மையில் நான் அடைவேன். இதில் உனக்கு எந்த ஐயமும் வேண்டாம். ஓ! பகைவரை எரிப்பவனே, இறந்து போகும் உயிரினங்களைக் கொண்ட இவ்வுலகிற்கு மீண்டும் நான் திரும்ப மாட்டேன்.(42)ஓ! பெரும் ஞானியே, நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன். நான் உனக்குச் செய்ய வேண்டியதென்ன என்பதைச் சொல்வாயாக. நீ இங்கே வந்திருக்கும் நோக்கம் நிறைவேறுவதற்கான காலம் வந்துவிட்டது.(43) நீ என்னை நாடி வந்ததற்கான நோக்கத்தை உண்மையில் நான் அறிவேன். அதனால்தான் நான் உனக்கு இந்தச் சிறு குறிப்பைத் தருகிறேன்.(44) ஓ! பெரும் ஞானமும், அனுபவமும் கொண்டவனே, உன் நடத்தையில் நான் உயர்ந்த நிறைவை அடைந்திருக்கிறேன். நீ என்னைக் கேள்வி கேட்கலாம். உன் விருப்பப்படியே உனக்கு நன்மையானவற்றைக் குறித்து நான் உனக்குச் சொல்வேன்.(45) உன் புத்தி பெரியதென நான் நினைக்கிறேன். அந்தப் புத்தியின் துணையுடன்தான் நீ என்னை அறிந்து கொண்டாய் என்பதால் நான் உண்மையில் உன்னை வெகுவாக மெச்சுகிறேன். ஓ! காசியபா, நீ நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாவாய்” என்றார் {அந்த சித்தர்}.(46)
ஜனனமரணங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 17-உயிரினங்களின் பிறப்பு மற்றும் இறப்புக் குறித்துக் காசியபருக்குக் கூறிய சித்தர்…
வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “அந்தத் தவசியின் பாதங்களைத் தீண்டிய அந்தப் பிராமணர் {காசியபர்}, பதிலளிப்பதற்கு மிகக் கடினமான சில கேள்விகளை அவரிடம் கேட்டார். அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவர், குறிப்பிடப்பட்ட அந்தக் கடமைகள் குறித்து அப்போது உரையாடினர்.(1)
காசியபர், “உடல் எவ்வாறு சிதைவடைகிறது?<1> மற்றொன்று {மற்றொரு உடல்} எவ்வாறு அடையப்படுகிறது?<2> துன்பம் நிறைந்த மறுபிறவி சுழற்சியை மீண்டும் மீண்டும் கடந்த பிறகு ஒருவன் எவ்வாறு விடுதலை {முக்தி} அடைகிறான்?<3>(2) சிலகாலம் பிரகிருதியை அனுபவித்துவிட்டு, (அந்தப் பிரகிருதி தரும்) குறிப்பிட்ட உடலை ஜீவன் எவ்வாறு கைவிடுகிறது?<4> உடலில் இருந்து விடுபட்ட ஜீவன், அதனில் இருந்து வேறுபட்டதை (பிரம்மத்தை) எவ்வாறு அடைகிறது?<5>(3) ஒரு மனிதன் தன்னால் செய்யப்படும் நல்ல மற்றும் தீய செயல்களை எவ்வாறு அனுபவிக்கிறான் (அனுபவிக்கவும் அதன் விளைவுகளை எவ்வாறு பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்)?<6> உடலை இழந்த ஒருவனுடைய செயல்கள் எங்கிருக்கின்றன {சரீரமற்ற ஆத்மாவுக்கு (சரீரத்திற்குக் காரணமான) கர்மம் எங்கிருந்து வருகிறது}?<7>” என்று கேட்டார்”[1].(4)(முதல் கேள்வி உடல் அழிவடைவது குறித்தது. இரண்டாவது, மீண்டும் உடலை அடையும் விதம் தொடர்புடையது. மூன்றாவது, மறுபிறப்பைத் தவிர்க்கும் விதம் குறித்தது. நான்காவது, ஜீவனுக்கு உடலைக் கொடுக்கச் செயல்படும் காரணங்கள் தொடர்புடையது. “பிரகிருதி” என்று சொல்வதன் மூலம் இயற்கை அல்லது உடலுக்குக் காரணமான விழிப்புணர்வின்மை பொருள் கொள்ளப்படுகிறது. ஐந்தாவது, அன்யத் அல்லது பரம், அஃதாவது இறுதி விடுதலை {முக்தி} அல்லது பிரம்மத்துக்குள் ஈர்க்கப்படுதல் எவ்வாறு நிகழ்கிறது என்பது தொடர்பானது. ஆறாவது, செயற்கனிகள் {செயல்களின் பலன்கள்} எவ்வகையில் அனுபவிக்கப்படுகின்றன அல்லது தாங்கிக் கொள்ளப்படுகின்றன என்பதன் தொடர்பானது. ஏழாவது, உடலற்ற ஜீவனைச் செயல்கள் {கர்மங்கள்} பிணைக்கும் வழிமுறைகளைக் குறித்துப் பேசுகிறது”){கிருஷ்ணனுடன் உரையாடிக் கொண்டிருந்த} பிராமணர், “இவ்வாறு காசியபரால் தூண்டப்பட்டவரும், முக்தருமான அந்தத் தவசி அந்தக் கேளவிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் பதிலளித்தார். ஓ விருஷ்ணி குலக் கொழுந்தே, அவர் சொன்ன பதில்களை நான் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(5)
முக்தரான அந்தத் தவசி {சித்தர்}, “ஜீவன் ஏற்றுக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட உடலால் செய்யப்படுபவையும், வாழ்வை நீட்டிக்கச் செய்யவல்லவையும், புகழைக் கொண்டுவரக்கூடியவையுமான செயல்கள் தீர்ந்து போகும்போது,(6) உடல்கொண்டதும், வாழ்வு குறுகியதுமான அந்த ஜீவன், வாழ்வுக்கும், உடல்நலத்திற்கும் பகையான செயல்களைச் செய்யத் தொடங்குகிறது. அழிவு அணுகும்போது அவனுடைய புத்தி முறையான நடைமுறையில் இருந்து விலகுகிறது.(7) தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதன், தன்னுடைய உடல் கட்டுமானம், பலம், தன் உயிர் மற்றும் வருடத்தின் காலம் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்ட பிறகும் கூட, ஒழுங்கற்ற இடைவெளிகளில் உண்ணவும், தனக்குப் பகையான உணவை உண்ணவும் தொடங்குகிறான்[2].(8) அத்தகைய நேரத்தில் அவன் மிகத் தீங்கான நடைமுறைகளில் {செயல்களில்} ஈடுபடுகிறான். சில வேளைகளில் அவன் அதிகமாக உண்கிறான், மேலும் சில சமயங்களில் அவன் மொத்தமாக உணவைத் தவிர்க்கிறான்.(9) கெட்ட உணவையோ, கெட்ட இறைச்சியையோ உண்கிறான், அல்லது கெட்ட பானத்தைப் பருகுகிறான், அல்லது ஒன்றோடொன்று பொருந்தாத உட்பொருள்களாலான உணவை உண்கிறான். நன்மை தரக்கூடிய கடின உணவை அதிக அளவில் அவன் உண்கிறான், அல்லது முன்பு உண்ட உணவு செரிக்கும் முன்பே மீண்டும் உண்கிறான்.(10)அதிகமான வேலைகளிலும், உரிய அளவுக்கு மீறிய பாலியல் இன்பத்திலும் ஈடுபடுகிறான், அல்லது வேலைக்கான ஆதாரத்தால் தன்னுடைய உடல் உறுப்புகளின் தூண்டுதல்களை ஒடுக்குகிறான்.(11) அல்லது அவன் அதிகச் சுவையுள்ள உணவை உண்ணவோ, பகல் வேளையில் உறங்குவதில் ஈடுபடவோ செய்கிறான். முறையாகச் செரிக்கப்படாத உணவானது, வேளை வரும்போது தானே குற்றங்களை {தோஷங்களைத்} தூண்டுகிறது[3].(12) உடலில் இவ்வாறு குற்றங்கள் தூண்டப்படுவதன் மூலம் அவன் நோயடைந்து மரணத்தை அடைகிறான். சில வேளைகளில் ஒருவன் (தான் இறந்து போவதற்காக) தூக்கிட்டுக் கொள்வது {உத்பந்தனம்} போன்ற பிறழ்நடத்தை அல்லது இயல்பற்ற செயல்களின் ஈடுபடுகிறான்.(13) இந்தக் காரணங்களினால் ஓர் உயிரினத்தின் உடல் அழிவடைகிறது. நான் உனக்குச் சொல்லும் வகையில் இதைச் சரியாகப் புரிந்து கொள்வாயாக.(14)கடுமையடையும் காற்றால் {வாயுவால் / வாதத்தால்} தூண்டப்பட்ட உடல் வெப்பமானது, ஒன்றன்பின் ஒன்றாக உடலின் ஒவ்வொரு பகுதியையும் அடைந்து, உயிர் மூச்சுகள் {மூச்சு நகர்வுகள்} அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.(15) உடல் முழுவதும் தூண்டப்பட்டதை உண்மையில் அறிந்து கொள்ளும் வெப்பமானது, உயிர் தங்கியிருப்பதாகச் சொல்லப்படும் உடலின் முக்கியப் பகுதிகள் அனைத்தையும் மிகக் கடுமையாகத் துளைக்கிறது.(16) இதன் விளைவாக ஜீவன் பெரும் துன்பத்தை உணர்ந்து, தன் உடல் உறையில் இருந்து விரைவாக விடைபெறுகிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, உடல் உறுப்புகளின் முக்கிய அங்கங்கள் இவ்வாறு பீடிக்கப்படும்போது பெரும் துன்பத்தில் மூழ்கும் ஜீவன் உடலை விட்டு நழுவுகிறது என்பதை அறிவாயாக. அனைத்து உயிரினங்களும் பிறப்பு மற்றும் இறப்பால் பீடிக்கப்படுகின்றன.(17,18) ஓ! பிராமணர்களின் தலைவா, ஒரு மனிதன் தன் உடலைக் கைவிடும்போது அவனால் உணரப்படும் வலியானது, அவன் ஒரு கருவறைக்குள் முதலில் நுழையும்போதோ, அதைவிட்டு வெளியேறும்போதோ {பிறக்கும்போதோ} அவனால் உணரப்படும் வலியைப் போன்றதே ஆகும். அவனது மூட்டுகள் கிட்டத்தட்ட விலகி, (கருவறைக்குள்) உள்ள நீரின் மூலம் அவன் பெரும் துன்பமடைகிறான்.(19,20)
(மற்றொரு) கடுங்காற்றால் {வாயுவால்} தூண்டப்படும், உடல் காற்றானது, குளிர் மூலம் தூண்டப்பட்டு, (உடல் என்று அழைக்கப்படும்) பருப்பொருள் ஒன்றியத்தை, எண்ணிக்கையில் ஐந்தான பூதங்களாகச் சிதைவுறச் செய்கிறது.(21) ஐந்து அடிப்படை பூதங்களின் இந்தக் கலவைக்குள் தோன்றும பிராணன் என்றும் அபானன் என்றும் அழைக்கப்படும் உயிர்மூச்சுகளில் வசிக்கும் காற்றானது, துன்பச் சூழ்நிலையில் இருந்து உடல்கொண்ட உயிரினத்தை விட்டு அகன்று, மேல் நோக்கி எழுகிறது.(22) இவ்வாறே காற்றானது உடலை விட்டு விலகுகிறது. பிறகே மூச்சில்லாமை காணப்படுகிறது. அதன் பிறகு அந்த மனிதன் வெப்பம், மூச்சு, அழகு மற்றும் நினைவு அற்றவன் ஆகிறான்.(23) (ஜீவனும் பிரம்மமே என்பதால்) பிரம்மத்தால் கைவிடப்படும் மனிதன் இறந்தவன் எனச் சொல்லப்படுகிறான். அந்த உடலைத் தாங்கியவன், உணரத்தக்க அனைத்துப் பொருட்களையும் எந்தக் குழாய்களின் {புலன்களின்} வழியாக உணர்ந்தானோ, அவற்றின் மூலம் அதற்கு மேலும் அவற்றை அவன் உணரமாட்டான்.(24)
உடலில் உள்ள அந்தக் குழாய்களில் {புலன்களில்} உயிர்மூச்சுகளை உணவில் இருந்து நித்திய ஜீவனே உண்டாக்குகிறது.(25) ஒன்று திரளும் பூதங்கள் சில பகுதிகளில் உறுதியாக ஒன்றிணைகின்றன. அந்தப் பகுதிகளே உடலில் முக்கியப் பகுதிகள் {மர்மஸ்தானங்கள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிவாயாக. இவ்வாறே சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.(26) அந்த முக்கியப் பகுதிகள் துளைக்கப்படும்போது, மேலே எழும் ஜீவனானது, உயிரினத்தின் இதயத்திற்குள் நுழைந்து, தாமதமில்லாமல் அசைவூட்டக் கோட்பாட்டை நிறுத்துகிறது.(27) அந்த உயிரினம் அப்போதும் நினைவுக் கோட்பாட்டுடன் கூடியதாக இருந்தாலும், எதையும் அறியத் தவறுகிறது. முக்கியப் பகுதிகள் அனைத்தும் மூழ்கியதும், அந்த உயிரினத்தின் ஞானம் இருளால் மூடப்படுகிறது.(28)
வசிக்கக்கூடிய இடங்கள் அனைத்தையும் இழந்த ஜீவன் அப்போது காற்றால் கலங்கடிக்கப்படுகிறது. அதன் பிறகு அவன், ஆழமானதும், நீண்டதும், துன்பம் நிறைந்ததுமான மூச்சைவிட்டு,(29) அசைவூட்டமுள்ள உடலை நடுங்கச் செய்தபடி விரைவாக வெளியேறுகிறான். எனினும், உடலில் இருந்து தொடர்பறுந்த ஜீவன், தன் செயல்களால் சூழப்பட்டிருக்கிறான்.(30) தான் செய்த மங்கலச் செயல்கள் அனைத்தின் புண்ணியங்கள் மற்றும் தன் பாவங்கள் அனைத்தாலும் அவன் அனைத்துப் புறங்களிலும் சூழப்படுகிறான். ஞானமும், சாத்தியத் தீர்மானங்களின் அறிவையும் கொண்ட பிராமணர்கள், அவன் புண்ணியத்தைக் கொண்டிருக்கிறானா, அல்லது பாவத்தைக் கொண்டிருக்கிறானா என்பதைச் சில குறியீடுகளின் மூலம் அறிந்து கொள்கிறார்கள். கண்களைக் கொண்ட மனிதர்கள், இருளுக்கு மத்தியில் விட்டில் பூச்சியானது தோன்றி மறைவதைக் காண்பதைப் போலவே, அறிவுக் கண் கொண்டவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான மனிதர்கள், தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் உடலைவிட்டு ஜீவன் செல்வதையும், மறுபிறவியில் அவன் கருவறைக்குள் நுழைவதையும் காண்கிறார்கள். ஜீவனுக்கு மூன்று உலகங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் காணப்படுகிறது.(31,34)
உயிரினங்கள் வசிக்கும் இவ்வுலகம் செயற்களம் என்றழைக்கப்படுகிறது. நல்ல அல்லது தீய செயல்களை நிறைவேற்றும் உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் பேரில் உண்டாகும் கனிகளை அடைகின்றன.(35) தாங்கள் செய்யும் செயல்களின் விளைவாக உயிரினங்கள் இம்மையில் மேன்மையான அல்லது தாழ்ந்த இன்பங்களை அடைகின்றன. இங்கே தீச்செயல் செய்பவர்கள் தங்கள் செயல்களின் விளைவாக நரகத்தை அடைகிறார்கள்.(36) உயிரினங்கள் தலைகீழாகத் தொங்கி மூழ்கி, சமைக்கப்படும் நிலை மிகத் துன்பகரமான ஒன்றாகும். அங்கிருந்து தப்புவது மிகக் கடினமாகும். உண்மையில் ஒருவன் இந்தத் துன்பத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகக் கடினமாக முயல வேண்டும்.(37)
இவ்வுலகில் இருந்து உயர்ந்து சென்ற பிறகு உயிரினங்கள் உண்மையில் வசிக்கப் போகும் உலகங்களை இப்போது சொல்லப் போகிறேன். கவனத்துடன் கேட்பாயாக.(38) நான் சொல்வதைக் கேட்பதன் மூலம், புத்தியில் உறுதியையும், (நல்ல மற்றும் தீய) செயல்களைப் புரிந்து கொள்வதில் ஒரு தெளிவையும் நீ அடைவாய். ஆகாயத்தில் ஒளிரும் நட்சத்திர உலகங்கள், சந்திர வட்டில் மற்றும் சொந்த ஒளியில் அண்டத்தில் ஒளிரும் சூரிய வட்டில் ஆகியவை அறம் சார்ந்த செயல்களைச் செய்த உயிரினங்கள் அனைத்திற்குமான உலகங்கள் என்பதை நீ அறிவாயாக.(39,40)
புண்ணிங்கள் தீர்ந்ததும் அவர்கள் அந்த உலகங்களில் இருந்து மீண்டும் வீழ்ச்சியடைகிறார்கள். சொர்க்கத்திலும்கூட, தாழ்ந்த, மேன்மையான, நடுத்தரமான இன்பநிலைகள் என்ற வேறுபாடு இருக்கிறது.(41) சொர்க்கத்திலேயே கூட, தன்னைவிட அதிகச் செழிப்புடன் இருப்பவர்களைக் கண்டு நிறைவின்மை ஏற்படுகிறது. இவையே நான் விரிவாகக் குறிப்பிட்ட இலக்குகள் {கதிகள்} ஆகும்.(42) இதன்பிறகு, ஜீவன் கருவறை வாசத்தை அடையும் நிலை குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மறுபிறப்பாளனே, நான் சொல்லப் போவதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக” என்றார் {சித்தர்}.(43)
ஜனனம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 18-ஜீவன் கருவறையை அடைவது முதலியவற்றைக் குறித்துக் காசியபருக்குச் சொன்ன சித்தர்…
பிராமணர் {சித்தர் காசியபரிடம்}, “ஜீவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அழிவடைவதில்லை. உடலுக்குப் பின் உடலைப் பெறுவதன் மூலம் அந்தச் செயல்கள் அவற்றுக்குத் தொடர்புடைய கனிகளை {பலன்களை} உண்டாக்குகின்றன.(1) கனி சுமக்கும் மரம், விளைச்சலுக்கான காலம் வரும்போது, பெரும் அளவிலான கனிகளை விளைவிப்பத்தைப் போலவே, தூய இதயத்துடன் அடையப்படும் தகுதியும் {புண்ணியமும்}, (பேரின்பம் எனும்) பயிரைப் பெருமளவில் விளைவிக்கச் செய்யும்.(2) அதே போலவே, பாவம் நிறைந்த இதயத்துடன் செய்யப்படும் பாவம், துன்பமெனும் பெரும்பயிரை விளைவிக்கும். ஆன்மா (அல்லது ஜீவன்), மனத்தை மேலே கொண்டு செயல்படுமாறு தன்னிடமே சொல்லிக் கொள்கிறது.(3) ஜீவன், தான் செய்யும் செயல்கள் அனைத்துடன், காமம் மற்றும் கோபத்தில் மூழ்கி, கருவறைக்குள் எவ்வாறு நுழைகிறது என்பதைக் கேட்பாயாக.(4)
குருதியுடன் கலந்த உயிர்வித்தானது, பெண்களின் கருவறைக்குள் புகுந்து, (அவனது) நல்ல அல்லது தீய செயல்களின் மூலம் பிறந்த (ஜீவனின்) களமாகிறது.(5) அதன் நுட்பம் மற்றும் புலப்படா நிலை ஆகியவற்றின் விளைவால் ஜீவனானது, உடலுக்குப் பின் உடலை அடைந்தாலும் எதனுடனும் பற்று கொள்வதில்லை. எனவே, அது {ஜீவன்} நித்திய பிரம்மம் என்றழைக்கப்படுகிறது[1].(6) அதுவே (ஜீவன், அல்லது பிரம்மமே) உயிரினங்கள் அனைத்தின் வித்தாகிறது. அதன் விளைவாலேயே உயிரினங்கள் உயிருடன் வாழ்கின்றன. கருவில் பகுதி, பகுதியாக அனைத்து அங்கங்களிலும் நுழையும் ஜீவன், மனத்தின் குணத்தை ஏற்றுக் கொண்டும், பிராணனுக்குச் சொந்தமான பகுதிகள் அனைத்துக்குள்ளும் வசித்துக் கொண்டும் (உயிரை {வாழ்வை}) ஆதரிக்கிறது. இதன் விளைவாக மனத்துடன் கூடிய கருவானது தன் அங்கங்களை அசைக்கத் தொடங்குகிறது.(7,8)உருக்கப்பட்ட இரும்பானது (வார்ப்புக்குள்) ஊற்றப்படும்போது, அந்த வார்ப்பின் வடிவைப் பெறுவதைப் போலவே, ஜீவனும் கருவை அடைந்து அவ்வாறே ஆகிறது.(9) இரும்புத்திரளுக்குள் நுழையும் நெருப்பானது, அதை வெகுவாகச் சுடுவதைப் போலவே, கருவில் வெளிப்படும் ஜீவனும் அவ்வாறே செய்கிறது என்பதை அறிவாயாக.(10) அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு (அதனுள் இருக்கும் அனைத்துப் பொருட்களையும்) கண்டுபிடிப்பதைப் போல, மனமும், உடலின் பல்வேறு அங்கங்களைக் கண்டுபிடிக்கிறது.(11) முந்தைய உடலில் ஜீவன் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்கள் எதனையும் நிச்சயம் அஃது அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ வேண்டும்.(12) அவ்வாறு அனுபவிக்கவும், சகித்துக் கொள்ளவும் செய்வதன் மூலம் முந்தைய செயல்கள் தீர்ந்து, ஜீவனானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் தியானத்தில் உள்ள கடமைகளின் அறிவை அடைவதில் வெல்லும் வரை மீண்டும் மீண்டும் வேறு செயல்களைக் குவிக்கிறது.(13)
ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இதைப் பொறுத்தவரை, மீண்டும் மீண்டும் நிகழும் மறுபிறவி சுழற்சிகளின் போது, ஜீவனை மகிழ்ச்சியடையச் செய்யும் செயல்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(14) கொடைகள் {தானம்}, தவம் செய்வது {விரதம்}, பிரம்மச்சரியம், விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பிரம்மம் தரித்தல், தற்கட்டுப்பாடு, அமைதி, அனைத்து உயிரினங்களிடமும் கருணை,(15) ஆசைகளைக் கட்டுப்படுத்தல், கொடூரந்தவிர்த்தல், பிறருக்கு உரியதை அபகரிக்காமல் இருத்தல், போலியான செயல்கள் அனைத்தையும் மனத்தாலும் செய்யாதிருத்தல்,(16) தாய்க்கும், தந்தைக்கும் மதிப்புடன் தொண்டாற்றுதல், தேவர்களையும், விருந்தினர்களையும் கௌரவித்தல், ஆசான்களை வழிபடுதல், இரக்கம், தூய்மை, அனைத்து உறுப்புகளையும் நிலையாகக் கட்டுப்படுத்தல்,(17) நற்செயல்கள் அனைத்தையும் செய்தல் ஆகியவை நல்லொழுக்கமென அமைவதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய ஒழுக்கத்திலிருந்தே உயிரினங்கள் அனைத்தையும் நிலையாகப் பாதுகாக்கும் அறம் எழுகிறது.(18) இத்தகைய ஒழுக்கத்தை நல்லோருக்கு மத்தியில் எப்போதும் ஒருவன் காணலாம். உண்மையில், அத்தகைய ஒழுக்கம் அங்கேயே நிலையாக வசிக்கிறது. அமைதியான ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் செய்யும் நடைமுறைச் செயல்களே அறத்தைக் குறிக்கின்றன.(19) நிலையான அறமாக அமையும் நடைமுறைச் செயல்கள் அவர்களுக்கு மத்தியிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. அறம் நோற்கும் ஒருவன் ஒருபோதும் துன்ப கதியை அடைய மாட்டான்.(20)
உலகமானது, அறத்தில் இருந்து வீழும்போது, நல்லோரின் ஒழுக்கத்தின் மூலமே அறப்பாதையில் {மீண்டும்} அது நிலைநிறுத்தப்படுகிறது. யோகியானவன் விடுதலையடைகிறான் {முக்தியடைகிறான்}, எனவே அவன் இவர்களை {நல்லோரை} விடவும் சிறந்தவனாக இருக்கிறான்.(21) நீதிமானாகச் செயல்படும் ஒருவன், தான் செய்ய வேண்டியவற்றை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாக நீண்ட காலம் செய்து வரும்போதே உலகத்திலிருந்து அவன் வீடுபேறடைவது நிகழ்கிறது.(22) ஓர் உயிரினமானது தான் முந்தைய பிறவியில் செய்த செயல்களின் பலன்களை இவ்வாறே அடைகிறது. இந்தச் செயல்கள் அனைத்தும் காரணமாக அமைவதன் விளைவாகவே ஒருவன், தனது உண்மை வடிவில் இருந்து வேறு பட்ட நிலையில் இவ்வுலகை அடைகிறான்.(23) இந்தக் கேள்வியைப் பொறுத்தவரையில் இவ்வுலகில் ஐயமிருக்கிறது. (ஜீவனால்) ஓருடல் ஏற்கப்படுவது முதலில் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?(24)
உலகமனைத்துக்குப் பெரும்பாட்டனான பிரம்மன் முதலில் தன் உடலை அமைத்துக் கொண்டு, அதன்பிறகு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களையும் முழுமையாகப் படைத்தான்.(25) முதலில் தன்னுடலை ஏற்றப் பிறகே அவன் பிரதானத்தைப் படைத்தான். அனைத்தையும் எது மறைக்குமோ, உயர்ந்தது என அனைவரும் எதனை அறிந்தார்களோ அந்தப் பிரதானமே உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் பொருள் காரணமாக அமைகிறது.(26) காணக்கூடிய இஃது {உடல்} அழியத்தக்கதென்றும், மற்றது {காணமுடியாத ஆன்மா} இறப்பற்றது மற்றும் அழிவில்லாதது என்றும் சொல்லப்படுகிறது. (காணப்படக்கூடிய) இது க்ஷரம் (அழியக்கூடியது) என்று சொல்லப்படுகிறது; எனினும், மற்றது {ஆன்மா} இறப்பற்றது (என்றும்) அக்ஷரம் (அழிவற்றது) என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு புருஷனாலும் மொத்தமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட {உடல், ஆன்மா மற்றும் பிரம்மம் ஆகிய} இவை மூன்றும் {உடல் மற்றும் ஜீவன் என்ற} இருமையாக இருக்கின்றன[2].(27) முதலில் (உடல் கொண்ட வடிவில் தோன்றிக்) காணப்பட்ட பிரஜாபதி {பிரம்மன்}, (பிறகு) அடிப்படை பூதங்கள் அனைத்தையும், அசைவற்ற உயிரினங்கள் அனைத்தையும் படைத்தான். இதுவே பண்டைய கேள்வியாகும் {பழைமையான வேதமாகும்}.(28)அதில் (உடலை ஏற்றுக் கொண்டதில்), காலம், பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த குடிபெயர்வுகள், மறுபிறவிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பெரும்பாட்டன் ஓர் எல்லையை விதித்தான்.(29) நுண்ணறிவு கொண்டவனும், தன் ஆன்மாவைக் கண்டவனுமான ஒரு மனிதன், முற்பிறவிகள் குறித்துச் சொல்வதைப் போலவே நான் சொல்வது அனைத்தும் முறையானவையும், சரியானவையுமாகும்.(30) இன்பமும், துன்பமும் நிலையில்லாதவை என்று சரியான பார்வையில் காண்பவனும், உடலைப் புனிதமற்ற திரட்டாகவும், அழிவை செயற்பாட்டு விதியாகவும் கருதுபவனும்,(31) சிறிய அளவிலான இன்பமும் கூட உண்மையில் துன்பமே என்பதை நினைவுகூருபவனுமான மனிதன், கடப்பதற்கு மிக அரிதான உலகம் சார்ந்த இடம்பெயர்வு எனும் இந்தப் பயங்கரப் பெருங்கடலை {ஸம்ஸரஸமுத்திரத்தைக்} கடப்பதில் வெல்வான்.(32) முதுமை, மரணம் மற்றும் நோயால் துன்புற்றாலும், பிரதானத்தைப் புரிந்து கொள்ளும் ஒருவன், நனவுநிலையுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தினுள்ளும் வசிக்கும் நனவுநிலையை {சைதன்யத்தைச்} சமமாகப் பார்ப்பான்.(33) பரம இருக்கையை {மேலான கதியை} நாடும் ஒருவன், (வேறு) பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் பாகுபாடற்றவனாக ஆகிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இது தொடர்பாக வாய்மைக்கு ஏற்புடைய வகையில் நான் உனக்கு ஞானத்தைப் போதிக்கப் போகிறேன்.(34) ஓ! கல்விமானான பிராமணா {காசியபா}, அந்த அழிவற்ற இருக்கையை {மேலான கதியை} நான் அறிவிக்கும்போது, சிறந்த ஞானமாக அமைவதை நீ முழுமையாகப் புரிந்து கொள்வாயாக” என்றார் {சித்தர்}.(35)
மோக்ஷஸாதனம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 19-முக்தியை அடையும் வழிமுறைகளைக் குறித்துக் காசியபருக்குச் சொன்ன சித்தர்; சித்தர் கூறியதை அர்ஜுனனிடம் முழுமையாகச் சொல்லி முடித்த கிருஷ்ணன்…
பிராமணர் {சித்தர் காசியபரிடம்}, “(அனைத்துப் பொருட்களின்) ஒரே கொள்ளிடத்தில் {பிரம்மத்தில்} ஈர்க்கப்பட்டவனும், அனைத்துப் பொருட்களுடனான தன் அடையாளத்தைக் குறித்த எண்ணத்தில் இருந்து விடுபட்டவனும், தன் இருப்பைக் குறித்து நினைப்பதையே நிறுத்தியவனுமான ஒருவன், {யோகத்தின் மூலம்} ஒன்றன்பின் ஒன்றாக இவற்றைப் படிப்படியாகக் கைவிட்டு தன் கட்டுகளைக் கடப்பதில் வெல்கிறான்[1].(1) அனைத்திற்கும் நண்பனும், அனைத்தையும் தாங்குபவனும் {பொறுத்துக் கொள்பவனும்}, அமைதியாக இருப்பவனும், தன் புலன்கள் அனைத்தையும் வென்றவனும், அச்சம் மற்றும் கோபமற்றவனும், ஆன்மக்கட்டுப்பாடு கொண்டவனுமான மனிதன் தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} வெல்கிறான்.(2) தன்னைப் போலவே வேறு உயிரினங்கள் அனைத்துடனும் நடந்து கொள்பவனும், கட்டுப்பாடு, தூய்மை, பகட்டின்மை, மமதையின்மை ஆகியவற்றைக் கொண்டவனுமான ஒருவன் அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்தவனாகக் கருதப்படுகிறான்.(3) பிறப்பிறப்பு {ஜனனமரணம்}, இன்பதுன்பம், ஈட்டலிழத்தல் {லாபநஷ்டம்}, ஏற்புடைமை ஏற்பில்லாமை ஆகியவற்றைச் சமமாகக் காணும் ஒருவனும் விடுதலை {முக்தி} அடைகிறான்.(4) பிறர் பொருளை அபகரிக்க விரும்பாதவனும், எவரையும் அவமதிக்காதவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், பற்றிலிருந்து விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனுமான ஒருவன் அனைத்து வழியில் விடுதலை {முக்தி} அடைந்தவனாவான்.(5)
பகைவனோ, உறவினனோ, பிள்ளையோ இல்லாதவனும், அறம், பொருள் மற்றும் இன்பத்தைக் கைவிட்டவனும், ஆசை அல்லது பேராசையில் இருந்து விடுபட்டவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைந்தவனாவான்.(6) தகுதியையோ {புண்ணியத்தையோ}, குறையையோ {பாவத்தையோ} ஈட்டாதவனும், முற்பிறவிகளில் குவிக்கப்பட்ட தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் குறைகளை {பாவங்களைக்} கைவிட்டவனும், அமைதியான ஆன்மாவை அடைய தன்னுடலின் பூதங்களை வீணாக்குபவனும், முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்தவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்.(7) செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவனும், ஆசை அல்லது பேராசையில் இருந்து விடுபட்டவனும், சகிப்புத் தன்மை கொண்டதாகவோ, பிறப்பு, இறப்பு மற்றும் முதுமையை எப்போதும் கொண்ட அஸ்வத {அரச} மரத்தைப் போலவோ அண்டத்தைப் பார்ப்பவனும்,(8) துறவில் நிலைத்த புத்தியைக் கொண்டவனும், தன் குற்றங்களிலேயே எப்போதும் கண்களைக் கொண்டவனுமான ஒருவன் தன்னைக் கட்டியிருக்கும் கட்டுகளில் இருந்து விரைவாகத் தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} வெற்றி அடைகிறான்[2].(9) மணம் {கந்தம்}, சுவை {ரஸம்}, ஊறு {ஸ்பர்சம் / தீண்டல்}, ஒலி {சப்தம்}, உடைமைகள் {பந்தம்}, பார்வை {ரூபம் / வடிவம்} அற்றதும், அறிய முடியாததுமாகத் தன் ஆன்மாவைக் காண்பவன் விடுதலை {முக்தி} அடைகிறான் {மோக்ஷமடைகிறான்}[3].(10)ஐம்பூதங்களின் குணங்களற்றதாகவும், வடிவமும், காரணமும் அற்றதாகவும், குணங்களை அனுபவித்தாலும் அவையற்றதாகவும் தன் ஆன்மாவைக் காணும் ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்[4].(11) உடல் மற்றும் மனம் தொடர்பான காரியங்கள் அனைத்தையும் புத்தியின் துணையுடன் கைவிடும் ஒருவன், விறகற்ற நெருப்பைப் போல {தனக்கெனத்} தனித்த இருப்பற்ற நிலையைப் படிப்படியாக அடைகிறான்.(12) அனைத்து மனப்பதிவுகளில் {எண்ணங்களில்} இருந்தும் விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்தவனும், உடைமைகளேதும் அற்றவனும், தவத்தின் வழிகாட்டுதலின்படி தன் புலன்கள் அனைத்தையும் பயன்படுத்துபவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்[5].(13) மனப்பதிவுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட ஒருவன், நித்தியமானதும், மேலானதும், அமைதி நிறைந்ததும், நிலையானதும், நீடித்ததும், அழிவற்றதுமான பிரம்மத்தை அடைகிறான்.(14) எதைக் காட்டிலும் மேன்மையானது வேறேதும் இல்லையோ அந்த யோக அறிவியலையும் {யோக சாஸ்திரத்தையும்}, தியானத்தின் மூலம் யோகிகள் எவ்வாறு ஆன்மாவை மிகச்சரியாகக் காண்கிறார்கள் என்பதையும் இனி உனக்குச் சொல்லப் போகிறேன்[6].(15)அது தொடர்பான வழிமுறைகளை நான் முறையாக அறிவிக்கிறேன். உடலுக்குள் உள்ள ஆன்மாவை எவற்றின் வழியாகச் செலுத்துவதன் மூலம் தொடக்கமும், முடிவுமற்ற ஒன்றை ஒருவனால் காண முடியுமோ அந்தக் கதவுகளைக் குறித்து என்னிடம் இருந்து தெரிந்து கொள்வாயாக.(16) புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் {புலன்நுகர் பொருட்களில்} இருந்து விலக்கும் ஒருவன், ஆத்மாவில் தன் மனத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்; அதற்கு முன்பே அவன் கடுமையான தவங்களைச் செய்து, விடுதலைக்கு வழிவகுக்கும் மனக்குவிப்பைப் பயில வேண்டும்[7].(17) எப்போதும் மனச்செறிவாக்கத்தைப் பயில்பவனும், தவங்களை நோற்பவனும், புத்தியுடன் கூடியவனும், கல்விமானுமான ஒரு பிராமணன், உடலுக்குள் ஆன்மாவைக் காணச் செய்யும் யோக அறிவியலின் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.(18) முழுமையான தியானத்தை வழக்கமாகக் கொண்ட அந்த நல்லோன் ஆன்மாவில் மனத்தைச் செறிவடையச் செய்வதில் வென்றால், தன் ஆன்மாவிலேயே பரமாத்மாவைக் காண்பான்.(19) தற்கட்டுப்பாட்டுடனும், எப்போதும் செறிவுடனும் {மனக்குவிப்புடனும்}, தன் புலன்கள் அனைத்தையும் வென்ற நிலையிலும், தூய்மையான ஆன்மாவுடனும் கூடிய ஒரு மனிதன், அத்தகைய முழுமையான மனச்செறிவின் விளைவால் ஆன்மாவைக் கொண்டே ஆன்மாவைக் காண்பதில் வெல்வான்.(20)எவனோ ஒருவனைக் கனவில் காணும் ஒருவன் விழித்துக் கொண்ட பிறகு, “இவன் அவனே” என அடையாளம் கண்டு கொள்வதைப் போலவே ஆழ்ந்த தியானத்தின் சமாதி நிலையில் பரமாத்மாவைக் காணும் நல்லோன், அந்தச் சமாதி நிலையில் இருந்து விழித்துக் கொண்ட பிறகு {மேற்கண்டவாறே} அடையாளம் காண்கிறான்[8].(21) முஞ்சப் புல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிறகு ஈர்க்கைக் காணும் ஒருவனைப் போலவே, உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஆன்மாவையே ஒரு யோகி காண்கிறான்.(22) உடலானது முஞ்சம் என்றழைக்கப் படுகிறது, ஈர்க்கானது ஆன்மாவாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சிறந்த எடுத்துக்காட்டானது யோகத்தை அறிந்த மனிதர்களால் முன்வைக்கப்படுகிறது.(23) உடலைச் சுமப்பவன் யோகத்தில் போதுமான அளவுக்கு ஆன்மாவைக் காணும்போது, அவன் தனக்கு மேல் எவனும் இல்லாதவனாகவும், மூவுலகங்களுக்கும் தலைவனாகவும் ஆகிறான்[9].(24) அவன் தன் விருப்பத்தின் பேரில் பல்வேறு உடல்களை ஏற்கவல்லவனாவதில் வெல்கிறான். முதுமை மற்றும் மரணத்தைத் தவிர்க்கும் அவன் வருந்துவதோ, பெருங்களிப்படைவதோ கிடையாது.(25)யோகத்தில் மனங்குவிந்த தற்கட்டுப்பாடுடைய மனிதன், தேவர்களுக்கான தெய்வத்தன்மையை (தனக்காக) உண்டாக்கிக் கொள்வான். அவன், நிலையற்றதாக இருக்கும் தன் உடலைக் கைவிட்டு மாறாவியல்புடைய பிரம்மத்தை அடைகிறான்[10].(26) உயிரினங்கள் (தன் கண்களுக்கு முன்பே) அழிவடையும்போதும் அவனுக்குள் அச்சம் எழுவதில்லை. உயிரினங்கள் அனைத்தும் பீடிக்கப்படும்போதும் எவனாலும் அவன் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை.(27) ஆசையற்றவனும், அமைதியான மனம் கொண்டவனுமான யோகியானவன், துன்பம், கவலை, அச்சம் ஆகியவற்றாலும், பற்றும் மற்றும் அன்பிலிருந்து உண்டாகும் பயங்கர விளைவுகளாலும் ஒருபோதும் நிலைகுலைவதில்லை.(28) அவனை ஆயுதங்கள் துளைப்பதில்லை; அவனுக்கு மரணமுமில்லை. அவனை விட மகிழ்ச்சியான வேறு எவனையும் இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாது.(29) போதுமான அளவுக்குத் தன் ஆன்மாவைச் செறிவடையச் செய்யும் அவன் நிலையாகத் தன்னைச் சார்ந்தே வாழ்கிறான். அவன், முதுமை, துன்பம் மற்றும் இன்பத்தை விலக்கி சுகமாக உறங்குகிறான்.(30) தனது மனித உடலைக் கைவிடும் அவன் தன் விருப்பத்தின் பேரில் (வேறு) வடிவங்களை ஏற்கிறான். ஒருவன் யோகம் அளிக்கும் கோன்மையை அனுபவிக்கும்போது, யோக அர்ப்பணிப்பில் இருந்து அவன் ஒருபோதும் வீழ்ந்துவிடக்கூடாது[11].(31) ஒருவன் யோகத்தில் போதுமான அர்ப்பணிப்பைச் செலுத்தித் தனக்குள்ளே ஆன்மாவைக் கண்டபிறகு, அவன் நூறு வேள்விகளைச் செய்தவனையும் {இந்திரனையும்} பொருட்படுத்தமாட்டான்[12].(32)முழுமையாகத் தியானிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவன் யோகத்தை அடைவதில் எவ்வாறு வெல்கிறான் என்பதை இனி சொல்லப் போகிறேன் கேட்பாயாக. சூரியனுக்குப் பின்னால் உள்ள திசைப்புள்ளியின் நினைப்பில் மனத்தை நிலைக்கச் செய்து, தான் வாழும் மாளிகைக்கு வெளியே அல்லாமல் உள்ளேயே ஒருவன் வாழ வேண்டும். அந்த மாளிகைக்குள் வசித்துக் கொண்டே மனமானது தன் அக மற்றும் புற (இயக்கங்கள்) வாயிலாகத் தான் வாசிக்கும் அந்தக் குறிப்பிட்ட அறையைப் பார்க்க வேண்டும். ஆழமான தியானத்தில் ஒருவன் (அண்டத்தின் ஆன்மாவான பிரம்மத்தை) அனைத்தையும் பார்க்கும்போது, அந்த மனம் வசிப்பதற்குப் பிரம்மத்தைத் தவிரப் புறப்பொருள் வேறேதும் இல்லை. ஆள் அரவமற்ற காட்டில் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு,(33-36) மனத்தை அவற்றிலேயே நிலைக்கச் செய்யும் ஒருவன், தனது உடலுக்குப் புறத்திலேயும், அகத்திலேயும் உள்ள அனைத்தையும் குறித்துத் தியானிக்க வேண்டும். அவன் தனது பற்கள், மேல்வாய், நாவு, தொண்டை, கழுத்து போன்றவற்றிலும், இதயம் மற்றும் இதயத்தின் நாடிகள் ஆகியவற்றிலும் {மனத்தைச் செலுத்தி} தியானம் செய்ய வேண்டும்”[13].(37)பிராமணர் {சித்தர்} தொடர்ந்தார், “இவ்வாறு நான் சொன்னதும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நுண்ணறிவுமிக்க அந்தச் சீடன் {காசியபன்}, விளக்குவதற்குக் கடினமான இந்த விடுதலை அறம் {மோக்ஷதர்மம்} குறித்து மீண்டும் என்னிடம் கேட்டான்.(38) அவன் {காசியபன்}, “காலாகாலம் உண்ணப்படும் இந்த உணவானது வயிற்றுக்குள் செரிப்பது எவ்வாறு? அது சாறாக மாறுவது எவ்வாறு? மேலமும் அது குருதியாக மாறுவது எவ்வாறு?(39) சதை, மஜ்ஜை, நரம்புகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை அது வளர்ப்பது எவ்வாறு? உடல் படைத்த உயிரினங்களில் இருக்கும் உறுப்புகள் வளர்வது எவ்வாறு?(40) வளரும் மனிதனிடம் பலம் வளர்வது எவ்வாறு? ஊட்டச்சத்தற்றத் தனிமங்கள் அனைத்தும், {மலம் உள்ளிட்ட} மாசுகள் அனைத்தும் தனித்தனியாக வெளியேறுவது எவ்வாறு?(41) மூச்சை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நேர்வது எவ்வாறு? ஆன்மாவானது, உடலுக்குள் குறிப்பிட்ட எந்த இருப்பிடத்தில் வசிக்கிறது?(42)
ஜீவன் முயற்சியுள்ளவனாக உடலைத் தாங்குவது எவ்வாறு? (ஒரு குறிப்பிட உடலை விட்டகன்ற பிறகு) அவன் {ஜீவன்} மீண்டும் வசிக்கும் உடல் எந்த நிறத்தை என்ன வகையைக் கொண்டதாக இருக்கும்?(43) ஓ! புனிதமானவரே, ஓ! பாவமற்றவரே, இவை யாவற்றையும் எனக்கு மிகச் சரியாகச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான் {சீடன் காசியபன்}. ஓ! மாதவா, இவ்வாறே கல்விமானான அந்தப் பிராமணனால் {காசியபனால்} நான் கேள்வி கேட்கப்பட்டேன்.(44) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவனே நான் (என் குருவிடம் இருந்து) கேட்டிருக்கும் வகையிலேயே அவனுக்கு மறுமொழி கூறினே1ன். ஒருவன் தன் அறையில் வைத்த ஏதோ ஒரு மதிப்புமிக்கப் பொருளில் தன் மனத்தை வைத்திருப்பதைப் போலவே,(45) புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தித் தன் உடலில் மனத்தை நிறுத்தி, வழிப்புணர்வின்மைகள் அனைத்தையும் தவிர்த்து ஆன்மாவை நாட வேண்டும்.(46) இவ்வழியில் எப்போதும் விடாமுயற்சியுடன் தன்னில் நிறைவடையும் ஒருவன், குறுகிய காலத்திற்குள் பிரம்மத்தை ஆடைந்து, அதன் மூலம் அவன் பிரதானத்தை அறிகிறான்[14].(47)அவன் கண்களுக்குப் புலப்படுவதில்லை; அதே போலப் புலன்கள் அனைத்திற்கும் புலப்படுவதில்லை. மனம் எனும் விளக்கால் மட்டுமே பேரான்மாவைக் காண முடியும்.(48) அவன் அனைத்துப் பக்கங்களிலும் கைகளையும், கால்களையும் கொண்டவனாகிறான்; அனைத்துப் புறங்களிலும் காதுகளைக் கொண்டவனாகிறான்; உலகில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் அவன் படர்ந்தூடுருவி வசிக்கிறான்[15].(49) ஜீவனானவன், (ஞானம் வாய்க்கும்போது, முஞ்சப் புல்லில் இருந்து ஈர்க்கைக் காண்பதைப் போல) உடலில் இருந்து ஆன்மாவைத் தனியாகக் காண்கிறான். உடலில் மனத்தைத் தாங்குவதன் மூலம் உடலுடன் கூடிய பிரம்மத்தைக் கைவிட்டு, குணங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்ட பிரம்மத்தை அவன் காண்கிறான்[16].(50) அவன் ஆன்மாவை அந்நேரம் உள்ளபடியே மனத்தில் கண்டு புன்னகைக்கிறான். அந்தப் பிரம்மத்தைச் சார்ந்து அவன் என்னில்[17] விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(51) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே {காசியபா}, இந்தப் புதிர்கள் {ரகசியங்கள்} அனைத்தும் இப்போது என்னால் அறிவிக்கப்பட்டன. நான் இவ்விடத்தைவிட்டு அகல உன் அனுமதியை வினவுகிறேன். நீயும் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(52) ஓ! கிருஷ்ணா, அந்தச் சந்தர்ப்பத்தில் என்னால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கடுந்தவங்களைக் கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்ட பிராமணனுமான என் சீடன் {காசியபன்} தான் விரும்பிய இடத்திற்குச் சென்றான்” என்றார் {சித்தர்}”.(53)வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} தொடர்ந்தான், “ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்ன அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தை} முறையாக என்னிடம் சொல்லிவிட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(54) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நீ முழுமையாக உன் மனத்தைச் செலுத்தி இந்த உரையாடலைக் கேட்டாயா? நீ உனது தேரில் இருந்த போது இதையே {இக்கருத்துகளையே} நீ கேட்டாய்.(55) ஓ! பிருதையின் மகனே, குழம்பிய புத்தியைக் கொண்ட, அல்லது கல்வியின் மூலம் எந்த ஞானத்தையும் அடையாத, அல்லது தன் உடலுக்குப் பொருந்தாத உணவை உண்ணும், அல்லது தூய்மையடையாத ஆன்மாவைக் கொண்ட ஒருவனால் இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பது என் கருத்தாகும்[18].(56)ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தேவர்களுக்கு மத்தியில் பெரும்புதிராக {ரகஸ்யமாக} இருப்பது (உனக்கு) அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பிருதையின் மகனே, இந்த உலகத்தில் உள்ள மனிதனால் எந்த இடத்திலோ, எந்த நேரத்திலோ இது கேட்கப்பட்டதில்லை.(57) ஓ! பாவமற்றவனே, உன்னைத் தவிர வேறு எவனும் இதைக் கேட்கத் தகுந்தவனல்ல. இந்நேரத்தில், குழம்பிய உள் ஆன்மாவைக் கொண்ட ஒருவனால் இஃதை எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது.(58) ஓ! குந்தியின் மகனே, தேவர்களின் உலகமானது, செயலறத்தைப் பின்பற்றுபவர்களால் {புண்ணியக் கர்மங்களைச் செய்தவர்களால்} நிறைந்திருக்கிறது. {மனிதன் தன்} இறக்கக் கூடிய உடல் வடிவத்தை (செயல்தவிர்க்கும் அறத்தைப் பயில்வதன் மூலம்) விடுவது தேவர்களுக்கு ஏற்புடையதல்ல[19].(59) ஓ! பிருதையின் மகனே, ஒருவன் தன் உடலைக் கைவிடுவதன் மூலம் இறவா நிலையை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் நித்திய பிரம்ம நிலையே அந்த உயர்ந்த இலக்காகும்.(60) பாவப் பிறவிகளான பெண்கள், வைசியர்கள், சூத்திரர்களும் கூட இவ்வறத்தைப் பின்பற்றுவதன் மூலம் அந்த உயர்ந்த இலக்கை அடைகிறார்கள்.(60) அவ்வாறிருக்கையில், ஓ! பிருதையின் மகனே, பெருங்கல்வி கற்றவர்களும், தங்கள் வகைக்கான கடமைகளில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?[20](62)இது {இவ்வறமானது} (சார்ந்திருக்கும்) காரணங்கள்; இஃதை அடைவதற்குரிய வழிமுறைகள்; அதனை முழுமையான அடைவது {சித்தியடைவது} மற்றும் விடுதலை {முக்தி} என்ற பயன் மற்றும் துன்பம் சார்ந்த உண்மைகளில் உறுதியடைதல் ஆகியற்றுடன் விதிக்கப்பட்டிருக்கிறது.(63) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதைவிடப் பெரிதான மகிழ்ச்சி நிறைந்தது வேறொன்றுமில்லை. ஓ! பாண்டுவின் மகனே, புத்தி, நம்பிக்கை, ஆற்றலுடன் கூடியவனும், இறக்கக்கூடியவனுமான மனிதன், உலகத்தால் உறுதியென {முக்கியமானதெனக்} கருதப்படுவதை உறுதியற்றதெனக் கைவிட்டு, இந்த வழிமுறைகளின் மூலம் குறுகிய காலத்திலேயே பரம நிலையை அடைவதில் வெல்கிறான்[21].(64,65) இதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை என்பது மட்டுமே சொல்லக்கூடியது. ஓ பிருதையின் மகனே, ஆறு மாத காலம் தொடர் பயிற்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒருவனிடம் யோகம் நிகழ்கிறது” {என்றான் கிருஷ்ணன்}.(66)
எழுவகைப்படைப்பு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 20-பூதங்கள், பிராணன் முதலியவற்றைக் குறித்து ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடலை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…
வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பிருதையின் மகனே, இது தொடர்பாகப் பழங்கதையில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) ஒரு குறிப்பிட்ட பிராமணரின் மனைவியானவள், அனைத்து வகை ஞானவிஞ்ஞானங்களில் முழுத் தேர்ச்சியடைந்தவரும், தனியாக அமர்ந்திருந்தவரும், தன் கணவருமான அந்தப் பிராமணரைக் கண்டு, அவரிடம்,(2) “(அறச்) செயல்கள் அனைத்தையும் கைவிட்டு அமர்ந்திருப்பவரும், என்னிடம் கடுமையாக நடந்து கொள்பவரும், {உம்மைத் தவிர வேறு கதி இல்லாதவளான என்னை} எண்ணியுணராதவருமான உம்மைக் கணவராக அடைந்திருக்கும் நான் எந்த உலகத்திற்குச் செல்வேன்?[1](3) கணவனால் அடையப்படும் உலகங்களையே மனைவியும் அடைகிறாள் என நாம் கேள்விப்படுகிறோம். உண்மையில், உம்மைக் கணவராகப் பெற்ற நான் அடையாப்போகும் கதி யாது?” என்று கேட்டாள்.(4)இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டவரும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவருமான அந்தப் பிராமணர் புன்னகைத்தவாறே அவளிடம், “ஓ! அருளப்பட்ட மங்கையே, ஓ! பாவமற்றவளே, நீ சொல்லும் இந்த வார்த்தைகளால் நான் புண்படவில்லை.(5) பிறரின் உதவியுடன் செய்யப்படுபவதும், (செய்யப்படும் பெருந்திரள் தன்மையால்) காணப்படுபவதும் {கண்ணுக்குத் தெரிவதும்}, உண்மையானதுமான எந்தச் செயலும், செயல்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் செய்யப்படுகிறது[2].(6) ஞானம் இல்லாதவர்கள், தங்கள் செயல்களின் மூலம் திரிபுக்காட்சியையே {மாயையே} திரட்டுகின்றனர். ஒருக்கணமும் செயல்களில் இருந்து விடுதலை என்பது இவ்வுலகில் அடையப்பட முடியாததாகும்.(7) பிறப்பு முதல் வேறு வடிவம் அடைவது வரை, உடல், மனம் அல்லது வாக்கால் செய்யப்படும் நல்ல மற்றும் தீய வினைகளை அனைத்து உயிரினங்களும் செய்கின்றன.(8) (சோமச்சாறு மற்றும் ஆகுதிகளுக்கான நெய் போன்ற) புலப்படத்தக்கப் பொருட்களால் வகைப்படுத்தப்படும் அந்த (செயல்) பாதைகள் ராட்சசர்களால் அழிக்கப்பட்டதால், அவற்றில் இருந்து விலகி என் ஆன்மாவின் துணையுடன் உடலில் உள்ள இருக்கையைக் கண்டடைந்தேன்[3].(9) முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்த பிரம்மம் வசிப்பது அங்கேயே, அக்னியுடன் கூடிய சோமன் இருப்பதும் அங்கேயே; அனைத்து உயிரினங்களையும் தாங்குபவனும், புத்தியைத் தூண்டுபவனுமானவனும் (வாயுவும்) அங்கே இருந்து நகர்ந்து கொண்டிருக்கிறான்[4].(10)பெரும்பாட்டனான பிரம்மனும், பிறரும் அந்த இருக்கையை அடைவதற்காகவே {இடத்திற்காகவே} யோகத்தில் குவிந்து அழிவற்றவனை வழிபடுகிறார்கள். கல்விமான்களும், சிறந்த நோன்புகளையும், அமைதியான ஆன்மாக்களையும் கொண்டவர்களும், புலன்களை முற்றாக வென்றவர்களுமான மனிதர்களும் அந்த இருக்கைக்காகவே முயற்சி செய்கிறார்கள்.(11) மணப்புலனால் {மூக்கால்} அதை {பிரம்மத்தை} நுகர இயலாது; நாவால் சுவைக்கவும் முடியாது; தீண்டல் புலன்களால் தொடவும் முடியாது. மனத்தால் மட்டுமே அஃது அடையப்படுகிறது.(12) கண்ணால் அதை வெல்ல முடியாது. கேள்விப் புலனை {காதுகளை} அது கடந்திருக்கிறது. மணம், சுவை, ஊறு, {ஒலி} மற்றும் வடிவம் ஆகிய குணங்களற்றதாக அஃது இருக்கிறது.(13) அதனிலிருந்தே நன்கு விதிக்கப்பட்ட அண்டம் எழுகிறது, மேலும், அதனிலேயே {பிரம்மத்தையே} அது {அண்டம்} நிலைத்துமிருக்கிறது. பிராணன், அபானன், சமானன், வியானன், உதானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள்,(14) அதனிலிருந்தே {பிரம்மத்திலிருந்தே} பாய்கின்றன, மேலும் அதற்குள்ளேயே அவை மீண்டும் நுழைகின்றன. பிராமணன் மற்றும் அபானன் என்ற மூச்சுகள், சமானன் மற்றும் வியானனுக்கிடையிலேயே நகர்கின்றன.(15) ஆன்மா உறங்கும்போது, சமானன் மற்றும் வியானன் ஆகிய இரண்டும் உள்ளீர்க்கப்படுகின்றன. அபானனுக்கும், பிராணனுக்கும் இடையில் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில் உதானன் வசிக்கிறது.(16)
எனவே, பிராணனும், அபானனும், உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைக் கைவிடுவதில்லை. இவ்வாறு உயிர்க் காற்றுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூச்சானது உதானன் என்றழைக்கப்படுகிறது.(17) எனவே பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்} என்னையே தங்கள் இலக்காகக் கொண்டு தவங்களைச் செய்கிறார்கள்[4]. ஒன்றையொன்று வழிங்கி உடலுக்குள் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த உயிர் மூச்சுகள் அனைத்திற்கும் மத்தியில் ஏழு தழல்களால் ஆன வைஸ்வாநரன் என்றழைக்கப்படும் நெருப்பு {அக்னி} சுடர்விட்டெரிகிறது. மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காது,(18,19) மனம் மற்றும் புத்தி ஆகிய இந்த ஏழும் வைஸ்வாநரனுடைய தழலின் ஏழு நாவுகளாக விளங்குகின்றன. முகரத்தக்கது, காணத்தக்கது, பருகத்தக்கது {குடிக்கத்தக்கது}, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது,(20) நினைக்கத்தக்கது, புரிந்து கொள்ளத்தக்கது ஆகிய இவையே எனக்கான ஏழு வகை விறகுகளாகின்றன. முகர்வது, உண்பது, காண்பது, தொடுவது, ஐந்தாவதாகக் கேட்பது,(21) நினைப்பது, புரிந்து கொள்வது ஆகிய இவையே ஏழு பெரும்புரோகிதர்களாகும்.(22)ஓ! அருளப்பட்டவளே, முகரத்தக்கது, பருகத்தக்கது, காணத்தக்கது, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது, நினைக்கத்தக்கது, அறியத்தக்கது என்ற ஏழு நெருப்புகளில், ஏழு வழிகளில் ஏழு ஆகுதிகளை முறையாகக் கைவிடும் வேள்வி செய்பவர்களான கல்விமான்கள், அவற்றைத் தங்கள் கருவறைக்குள் உண்டாக்குகிறார்கள்[5]. பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி,(23,24) மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் (அனைத்துப் பொருட்களின்) கருவறைகள் என்றழைக்கப்படுகின்றன. வேள்விக் காணிக்கைகளாக அமையும் குணங்கள் அனைத்தும் நெருப்பில் பிறந்த குணத்திற்குள் நுழைகின்றன;(25) அந்த வசிப்பிடத்திற்குள் வசிக்கும் அவை தங்கள் தங்களுக்குரிய கருவறைகளில் மீண்டும் பிறக்கின்றன. அனைத்துப் பொருட்களையும் எது உண்டாக்குமோ அதில் அவை அழிவுக்காலம் வரை உள்ளீர்க்கப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கும்.(26) அதிலிருந்தே மணம் உண்டாகிறது, அதிலிருந்தே சுவை உண்டாகிறது, அதிலிருந்தே நிறம் உண்டாகிறது, அதிலிருந்தே தீண்டலுணர்வு உண்டாகிறது;(27) அதிலிருந்தே ஒலி உண்டாகிறது, அதிலிருந்தே ஐயம் எழுகிறது, அதிலிருந்தே அழிவும் உண்டாகிறது. இவ்விதமாகவே இவை ஏழுவகைப் படைப்புகளாக அறியப்படுகின்றன.(28) இவ்வகையிலேயே இவையனைத்தும் பழங்காலத்தவர்களால் புரிந்து கொள்ளப்பட்டன. ஆகுதிகளின் முழுமையான மூன்று காணிக்கைகள் முழுமையடைந்து ஒளியால் நிறைகிறது[6]” என்றார் {பிராமணர்}.(29)
மனம், வாக்கு, ஜீவன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 21-பத்துப் புலன்களின் குணங்களைக் குறித்தும், மனம், சொல் மற்றும் ஜீவனுக்கிடையில் நடந்த உரையாடலைக் குறித்தும் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…
பிராமணர், “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. பத்து ஹோத்ரிகளின் (ஹோதாக்களின் / வேள்விப்புரோகிதர்களின்) அமைப்பு {விதி} எவ்வகையானது என்பதைப் புரிந்து கொள்வாயாக.(1) ஓ! அழகியே, காதுகள், தோல், இரு கண்கள், நாவு, மூக்கு, இரு கால்கள், இரு கைகள், பிறப்புறுப்பு {உபஸ்தம் / உபத்தம்}, அடியில் உள்ள குதம் {பாயு} மற்றும் வாக்கு ஆகியனவே வேள்வி செய்யும் அந்தப் பத்துப் புரோகிதர்களாகும் {ஹோத்ரிகளாகும்}.(2) ஒலி {சப்தம்}, ஊறு {தீண்டல் / ஸ்பர்சம்}, நிறம் {ரூபம்}, சுவை {ரஸம்}, மணம் {கந்தம்}, வாக்கு, செயல், நடை, உயிர்வித்து {ரேதஸ்}, சிறுநீர், மலம் ஆகியவற்றை வெளியேற்றல் ஆகியவையே பத்து ஆகுதிகளாகும் {ஹவிஸுகளாகும்}.(3)
ஓ! அழகியே, திசைப் புள்ளிகள், காற்று {வாயு}, சூரியன், சந்திரன், பூமி {பிருதிவி}, நெருப்பு {அக்னி}, விஷ்ணு, இந்திரன், பிரஜாபதி மற்றும் மித்திரன் ஆகியவை பத்து (வேள்வி) நெருப்புகள் {அக்னிகள்} ஆகும்.(4) (அறிவு மற்றும் செயல்) புலன்கள் பத்தும் வேள்விப்புரோகிதர்கள் {ஹோத்ரிகள்}. ஆகுதிகள் பத்தாகும். ஓ! அழகியே மனமானது வேள்விக்கரண்டியாகவும், (வேள்வி செய்பவனால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்கள்) செல்வமாகவும் புலன்நுகர் பொருட்களே இந்தப் பத்து நெருப்புகளுக்குள் இடப்படும் விறகுகளாகவும் இருக்கின்றன[1],(5). எஞ்சியிருப்பது தூய்மையான உயர்ந்த ஞானமாகும். (ஞானத்திலிருந்து) இந்த அண்டமனைத்தும் வேறுபட்டவை என்று நாம் கேள்விப்படுகிறோம்.(6)ஞானத்திற்குரிய பொருட்கள் அனைத்தும் மனமாகும். ஞானமானது (மனம் அதனுடன் பற்றில்லாதது என்பதை) உணர மட்டுமே செய்கிறது. நுட்பமான வடிவில் பொதியப்பட்டிருப்பவனான அறிபவன் (அல்லது ஜீவன்), உயிர்வித்தால் உண்டாக்கப்படுகிறது திரளுடலுக்குள் வசிக்கிறான்[2].(7) உடலைச் சுமப்பது {இதயம்} கார்ஹபத்ய நெருப்பு ஆகும். அதனிலிருந்து மற்றொன்று உண்டாகிறது. மனமானது ஆஹவனீய நெருப்பாகும். அதனுள்ளேயே காணிக்கை ஊற்றப்படுகிறது.(8) அதனிலிருந்தே வேதம் (அல்லது சொல்) உண்டானது; (அதனிலிருந்தே மனம் உண்டானது); (படைப்பை விரும்பும்) மனமானது தன்னை வேதத்தில் (அல்லது சொல்லில்) நிறுவி கொள்கிறது. அதன் பிறகு குறிப்பிட்ட நிறங்களில் வேறுபடும் வடிவம் (அல்லது நிறம்) எழுகிறது. அது மனத்தை நோக்கி ஓடுகிறது[3]” என்றார் {பிராமணர்}.(9)அந்தப் பிராமணரின் மனைவி, “ஏன் சொல்லானது முதலில் எழுந்தது? மனத்தால் எண்ணப்பட்ட பின்னர் இருப்புக்குள் சொல் எழுந்ததைக் கண்ட பிறகு மனம் எழுந்ததேன்?(10) மதியானது (பிராணனானது) மனத்தில் புகலிடம் கொள்கிறது என்று எந்த அதிகாரத்தை {சாஸ்திர விதியைக்} கொண்டு சொல்லப்படுகிறது? மேலும், கனவற்ற உறக்கத்தில் {ஸுஷுப்தியில்} மனம் தனித்திருந்தாலும், பிராணனானது (அனைத்துப் பொருட்களையும்} உணர்வதில்லையே ஏன்? அப்போது அதைத் தடுப்பதெது?” என்று கேட்டாள்[4].(11)பிராமணர், “இத்தகைய தலைமைப் பண்பின் விளைவால் (பிராணனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து) தலைவனாக இருக்கும் அபானக் காற்று {அபானவாயு}, அதனையும் {பிராணனையும்} தன்னைப் போலாக்குகிறது. (அபானனைப் போலவே ஆகும்) பிராணக் காற்றின் {பிராணவாயுவின்} கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமே மன இயக்கமெனச் சொல்லப்படுகிறது. எனவே மனமானது பிராணனைச் சார்ந்தே இருக்கிறது (பிராணனோ மனத்தைச் சார்ந்திருப்பதில்லை). எனவே, கனவற்ற உறக்கத்தில் மனம் மறைந்தாலும் பிராணன் மறைவதில்லை.(12) ஆனால், சொல் மற்றும் மனம் குறித்து நீ என்னிடம் கேட்பதால், அவற்றுக்கிடையில் நடந்த உரையாடலை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(13)
பருப்பொருளின் ஆத்மாவிடம் {ஜீவனிடம்} சென்ற சொல் {வாக்கு} மற்றும் மனம் ஆகிய இரண்டும், அவனிடம் {ஜீவனிடம்}, “எங்களில் மேன்மையானவர் யார் என்பதைச் சொல்வாயாக. ஓ! பலமிக்கவனே, எங்கள் ஐயத்தைக் களைவாயாக” என்றன[5].(14)அச்சந்தர்ப்பத்தில், அந்தப் புனிதமானவன் {ஜீவன்}, “மனமே (மேன்மையானது) என்பதில் ஐயமில்லை” என்றான். அவனிடம் {ஜீவனிடம்} சொல்லானவள், “உன் விருப்பமனைத்தையும் நானே கனியச் செய்கிறேன்” என்றாள்[6].(15)பிராமணர் {ஜீவனெனும் பிராமணன் சொல்லிடம் சொல்வது என்று கொள்ள வேண்டும்}, “அசைவது, அசையாதது என எனக்கு இரு மனங்கள் இருப்பதை அறிவாயாக. உண்மையில், அசையாதது என்னிடமுள்ளது; அசைவது உன் ஆளுகையில் இருக்கிறது[7].(16) உன் ஆளுகையில் இருப்பதாகக் குறிப்பிடப்படும் மந்திரம், எழுத்து, அல்லது குரல் வடிவில் உள்ளதே {சொல்லே} உண்மையில் அசையும் மனம் என்று சொல்லப்படுகிறது. எனவே, (புறப்பொருளுடன் மட்டுமே தொடர்புடைய மற்றொரு மனமான) நீயே {அசையும் மனமே} மேன்மையானவன்.(17) ஆனால், ஓ! அழகியே {சொல் எனும் அழகியே}, (அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்வதில்) நீ தானாகவே ஈடுபடுவதால், மூச்சை என்னுள் நிறைத்துக் கொண்டு நான் உன்னைச் சொல்கிறேன்[8].(18) சொல்லெனும் தேவி {சரஸ்வதியான நீ} எப்போதும் பிராணன் மற்றும் அபானனுக்கிடையிலே வசித்து வருகிறாள் {வருகிறாய்}. ஆனால், ஓ! அருளப்பட்டவளே, அபானனில் மூழ்கி, பிராணனிலிருந்து தொடர்பறுத்துக் கொள்வதன் விளைவால் மேல்நோக்கி உந்தப்படும் அவள் {நீ}, பிரஜாபதியிடம் {ஜீவனிடம்} ஓடிச் சென்று, “ஓ! புனிதமானவனே, என்னிடம் நிறைவு கொள்வாயாக” என்கிறாள் {என்றாய்}.(19) அப்போது பிராணன், சொல்லை வளர்த்தெடுத்து மீண்டும் தோன்றுகிறது. எனவே, சொல்லானவள், ஒருபோதும் எதையும் சொல்லாதவளாக ஆழ்ந்த மூச்சை வெளியிடுகிறாள்.(20) சொல்லானவள் எப்போதும் ஒலியுடனும், ஒலியில்லாமலும் பாய்கிறாள். அவை இரண்டில், ஒலியுடன் கூடிய சொல்லைக் காட்டிலும், ஒலியற்ற சொல்லே மேன்மையானவள்.(21) சிறந்த பாலைக் கொண்டுள்ள பசுவைப் போலவே (ஒலியற்ற சொல்லானவள்) பல்வேறு வகைப் பொருள்களைத் தருகிறாள். இவளே, பிரம்மத்தைச் சொல்லும் நித்தியத்தை (விடுதலையை {முக்தியை}) விளைவிக்கிறாள்” {என்றான் ஜீவன்}”.(22) ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, சொல்லானவள், தெய்வீகமானது, தெய்வீகமற்றது என்ற தன்னிரு சக்திகளின் விளைவால் பசுவாகிறாள். சொல்லானவள் இவ்விரு நுட்பமான வடிவங்களில் பாய்வதில் உள்ள வேறுபாட்டைக் காண்பாயாக” என்றார் {பிராமணர்}[9][10].(23)அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “பேச விரும்பினாலும், பழங்காலத்தில் {வாக்கியங்கள் உண்டாகாமல் இருந்ததால்} பேச முடியாதவளாக இருந்த சொல்லின் தேவி என்ன செய்தாள்?” என்று கேட்டாள்.(24)
பிராமணர், “பிராணனால் உடலில் உண்டான சொல்லானவள், பிறகு பிராணனில் இருந்து அபானனை அடைந்தாள். பிறகு உதானனாக மாறி, உடலைவிட்டு வெளியேறி, வியானனைக் கொண்டு அனைத்துப் புறங்களையும் சூழ்ந்தாள்.(25) அதன் பிறகு அவள் சமானனில் வசித்தாள். இவ்வகையிலேயே முற்காலத்தில் சொல்லானவள் பேசினாள். மனமானவன் அசைவில்லாதவனாக இருப்பதன் விளைவால் சிறப்படைகிறான். அசைவுள்ளவளாக இருப்பதன் விளைவால் சொல்லின் தேவியும் சிறப்படைகிறாள்” என்றார் {பிராமணர்}.(26)
மனமும், இந்திரியங்களும்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 22-மனத்துக்கும், புலன்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…
பிராமணர், “ஓ! அருளப்பட்டவளே, வேள்விப்புரோஹிதர்கள் எழுவரின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக ஒரு பழங்கதைச் சொல்லப்படுகிறது.(1) மூக்கு {க்ராணம்}, கண்கள் {சக்ஷுஸ்}, நாவு {ஜிஹ்வை}, தோல் {துவக்கு}, ஐந்தாவதாகக் காதுகள் {ஸ்ரோத்ரம்}, மனம் மற்றும் புத்தி ஆகியவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட தனித்துவம் கொண்ட ஏழு வேள்விப்புரோஹிதர்களாகும்.(2) நுட்பமான வெளியில் வசிக்கும் அவை ஒன்றையொன்று காண்பதில்லை. ஓ! அழகியே, இந்த ஏழு வேள்விப் புரோஹிதர்களையும் அதனதன் இயல்பின்படி அறிந்து கொள்வாயாக” என்றார்.(3)
அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “நுட்பமான வெளியில் இருக்கும் இவை ஒன்றையொன்று காணாமல் இருப்பதெவ்வாறு? ஓ! புனிதமானவரே, அவற்றின் (அவை ஒவ்வொன்றின்) இயல்புகள் என்னென்ன? ஓ! தலைவா, இவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டாள்.(4)
பிராமணர், “(எந்தப் பொருளின்) குணங்களையும் அறியாதிருப்பது, (அந்தப் பொருளைக் குறித்த) அறியாமையே {அவிஜ்ஞானம்} ஆகும்; அதே வேளையில், அந்தக் குணங்களை அறிவது அறிவாகும் (அறிவு {அபிஜ்ஞதை} என்று அழைக்கப்படுகிறது). இந்த ஏழில் எந்த ஒன்றும் மற்றொன்றின் குணங்களை அறிவதிலோ, புரிந்து கொள்வதிலோ ஒருபோதும் வெல்வதில்லை.(5)
நாக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் புத்தி ஆகியன மணங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மூக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(6) மூக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன சுவைகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. நாக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(7) மூக்கு, நாக்கு, காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன நிறங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. கண்கள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(8) மூக்கு, நாக்கு, கண்கள், காதுகள், புத்தி மற்றும் மனம் ஆகியன தீண்டல் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. தோல் மட்டுமே அவற்றை உணர்கிறது.(9) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன ஒலிகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. காதுகள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(10) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் புத்தி ஆகியன ஐயங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மனம் மட்டுமே அவற்றை உணர்கிறது.(11) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் மனம் ஆகியன (உறுதியான அறிவைத்) தீர்மானிக்கும் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை {அவை ஒரு தீர்மானத்தை அடைவதில்லை}. புத்தி மட்டுமேஅவற்றை உணர்கிறது {புத்தியே தீர்மானிக்கிறது}.(12)
ஓ! அழகிய மங்கையே, இது தொடர்பாகப் புலன்களுக்கும், மனத்திற்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(13)
மனம், “நானில்லாமல் மூக்கு நுகர்வதில்லை. (நானில்லாமல்) நாக்கானது சுவையை உணர்வதில்லை. நான் இல்லாதபோது, கண்கள் நிறத்தைப் பற்றுவதில்லை, தோல் தீண்டலை உணர்வதில்லை,(14) காதுகள் ஒலியை உணர்வதில்லை. நான் நித்தியமானவனாகவும், பூதங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகவும் இருக்கிறேன்.(15) வசிப்பதற்கு யாருமில்லாத வெற்று வசிப்பிடங்களைப் போலவும், தழல்கள் தணிக்கப்பட்ட நெருப்பைப் போலவும், நானில்லாத போது புலன்கள் ஒருபோதும் ஒளிர்வதில்லை.(16) ஈரமானவையும், உலர்ந்தவையுமாக உள்ள விறகுகளை (நெருப்பை மூட்டத் தவறுவதைப்) போல, நான் இல்லாமல் புலன்கள் முயன்றாலும், குணங்களையும், பொருள்களையும் உணர்வதில் அனைத்து உயிரினங்களும் தவறுகின்றன[1]” என்றது {மனம்}.(17)இச்சொற்களைக் கேட்ட புலன்கள் {இந்திரியங்கள்}, “உண்மையில், நாங்களோ, எங்கள் பொருட்களோ இல்லாமல் உன்னால் இன்பங்களை அனுபவிக்க முடியுமென்றால் இக்காரியத்தில் நீ நினைப்பதே உண்மையாக இருக்கும்[2].(18) நாங்கள் அழிந்த பிறகு, நிறைவும், உயிர்த்தரிப்பும், உன் இன்பங்களும் தொடருமானால் நீ நினைப்பதே உண்மையாகும்;(19) நாங்கள் அழிந்து, பொருள்கள் இருந்து எங்கள் துணையின்றி உன் விருப்பத்தால் மட்டுமே உன்னால் அவற்றை அனுபவிக்க முடியுமென்றால், நீ நினைப்பதே உண்மையாகும்.(20) மேலும், எங்கள் பொருள்களின் மீது உனக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறதென நீ கருதினால், நிறத்தை மூக்கின் மூலமாகவும், சுவையைக் கண்களின் மூலமாகவும் உணர்வாயாக.(21) மணத்தைக் காதுகளின் மூலமாகவும், தீண்டலை நாவின் மூலமாகவும் உணர்வாயாக. மேலும் ஒலிகளைத் தோலின் மூலமாகவும், தீண்டலைப் புத்தியின் மூலமாகவும் உண்ர்வாயாக.(22) பலம் நிறைந்தவர்கள் எந்த விதிகளின் ஆளுகையையும் ஏற்பதில்லை. விதிகள் பலவீனமானவர்களுக்காக மட்டுமே இருக்கின்றன. இதற்கு முன் அனுபவிக்கப்படாத இன்பங்களைப் பற்றுவாயாக; (பிறரால்) முன்பே சுவைக்கப்பட்டவற்றில் இன்புறுவது உனக்குத் தகாது.(23)சுருதிகளுக்காக (அவற்றை அடைவதற்காக) ஆசானை நாடி, ஸ்ருதிகளை அடைந்த பிறகு (அவற்றின் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம்) அவை சொல்லும் கருத்துகளில் வசிக்கும் சீடனைப் போலவே,(24) கடந்த காலத்திலோ, எதிர்காலத்திலோ, உறக்கத்திலோ, விழிப்புநிலையிலோ எங்களால் காட்டப்படும் பொருட்களை உன்னுடையவையென நீ கருதுகிறாய்.(25) மேலும், புத்தி குறைந்த உயிரினங்களின் மனம் திசைத்திரும்பி உற்சாகமற்றதாக இருக்கும்போதும் நாங்கள் எங்கள் பொருள்களில் இயக்கத்தை வெளிப்படுத்தி அவற்றின் {அந்த உயிரினங்களின்} உயிரைத் தாங்கிப் பிடிப்பதும் காணப்படுகிறது[3].(26) ஓர் உயிரினம், கனவுகளில் ஈடுபட்டு, எண்ணற்ற நோக்கங்களை அமைத்துக் கொண்டாலும், அஃது அனுபவிக்கும் விருப்பத்தால் பீடிக்கப்படும்போது, புலன்நுகர் பொருட்களிடம் மட்டுமே ஓடுவதும் காணப்படுகிறது[4].(27) மன நோக்கங்களை மட்டுமே சார்ந்தவையும், உண்மையான புலன் நுகர் பொருட்களின் தொடர்பற்றவையுமான இன்பங்களுக்குள் ஒருவன் நுழையும்போது, விறகு தீர்ந்ததும் தூண்டப்பட்ட நெருப்பைப் போல உயிர்மூச்சுகள் தீர்ந்து அவன் மரணத்தையே சந்திக்கிறான்[5].(28) நாங்கள் எங்களுக்குரிய குணங்களின் தொடர்புடையவர்களாக இருக்கிறோம் என்பது உண்மையே; எங்களில் ஒன்று மற்றொன்றின் குணங்களை அறியாதிருக்கிறோம் என்பதும் உண்மையே. ஆனால், நாங்கள் இல்லாமல் உன்னால் ஒன்றையும் உணர முடியாது. நாங்கள் இல்லாமல் உனக்கு இன்பமேதும் கிடையாது” என்றன {புலன்கள்}.(29)
பஞ்சவாயுக்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 23-பிராணன், அபானன் முதலிய ஐந்து உயிர்க்காற்றுகளின் சிறப்பைக் குறித்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…
பிராமணர், “ஓ! அருளப்பட்ட மங்கையே, ஐந்து வேள்விப் புரோஹிதர்களின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) பிராணன், அபானன், உதானன், சமானன் மற்றும் வியானன் ஆகியவையே ஐந்து வேள்விப்புரோஹிதர்கள் என்பதைப் பெருங்கோட்பாடாகக் கல்விமான்கள் அறிகிறார்கள்” என்றார்.(20)
அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “இயற்கையாக ஏழு வேள்விப் புரோஹிதர்கள் இருப்பதாக முன்னர் நான் எண்ணியிருந்தேன். உண்மையில் வேள்விப் புரோஹிதர்களின் எண்ணிக்கை ஐந்தானதைக் குறிக்கும் பெருங்கோட்பாட்டை எனக்கு அறிவிப்பீராக” என்று கேட்டாள்.(3)
பிராமணர், “பிராணனால் பேணப்படும் காற்றானது {வாயுவானது} பின்னர் அபானனாகப் பிறக்கிறது. அபானனால் பேணப்படும் காற்றானது வியானனாகப் பெருகுகிறது.(4) வியானனால் பேணப்படும் காற்றானது உதானனாகப் பெருகுகிறது. உதானனால் பேணப்படும் காற்றானது பின்னர்ச் சமானனாக உண்டாகிறது.(5) நல்லவையான அவை பழங்காலத்தில் முதல் பிறவியான பெரும்பாட்டனிடம், “எங்களில் முதன்மையானவர் யார் என்பதைச் சொல்வீராக. {நீர் குறிப்பிடும்} அந்த நபரே எங்கள் தலைவன் ஆகட்டும்” என்றன.(6)
பிரம்மன், “(உங்களில்) எவன் அழிந்தால் உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடையுமோ, எவனுடைய நகர்வால் அவை நகருமோ அவனே உங்களில் முதன்மையானவன் ஆவான். நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்வீராக” என்றான்.(7)
பிராணன், “நான் அழிந்ததும், உயிரினங்களில் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் அசைவதால் அவை மீண்டும் அசைகின்றன. (எனவே) நானே முதன்மையானவன். இதோ அழியப்போகிறேன் பார்ப்பீர்களாக” என்றான் {பிராணன்}”.(8)
பிராமணர் தொடர்ந்தார், “பிறகு பிராணன் அழிந்து மீண்டும் நகரத் தொடங்கியது. அப்போது, ஓ! அருளப்பட்டவளே, சமானனும், உதானனும் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்,(9) “நாங்கள் இவை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதைப் போல நீ இங்கே வசிப்பதில்லை. ஓ! பிராணனே, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. அபானன் மட்டுமே உன் ஆளுகைக்குள் இருக்கிறான். மீண்டும் பிராணன் இயங்கத் தொடங்கியதும், அவனிடம் அபானன் பேசினான்.(10)
அபானன், “நான் அழிவடையும் போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் திரியும்போது அவை மீண்டும் திரிகின்றன. எனவே, நானே முதன்மையானவனாவேன். இதோ அழியப் போகிறேன் பார்ப்பீர்களாக ” என்றான் {அபானன்}”.(11)
பிராமணர் தொடர்ந்தார், “வியானன் மற்றும் உதானன் ஆகிய இருவரும், இவ்வாறு சொன்ன அபானனிடம், “ஓ! அபானா, நீ முதன்மையானவனல்ல. பிராணன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்” என்றனர். பிறகு அபானன் நகரத் தொடங்கியது.(12)
வியானன் மீண்டும் அவனிடம் {அபானனிடம்}, “(உயிர்க் காற்றுகள்) அனைத்திலும் நானே முதன்மையானவன். அதற்கென்ன காரணம் என்பதைக் கேட்பாயாக.(13) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. (எனவே) நானே முதன்மையானவனாவேன். இதோ நான் அழியப் போகிறேன், பார்ப்பாயாக” என்றான் {வியானன்}”.(14)
பிராமணர் தொடர்ந்தார், “பிறகு வியானன் அழிவடைந்து மீண்டும் நகரத் தொடங்கினான். பிராணன், அபானன், உதானன் மற்றும் சமானன் ஆகியோர் இதற்கு,(15) “ஓ! வியானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. சமானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருக்கிறான்” என்றனர்.
வியானன் நகரத் தொடங்கியதும், சமானன் அவனிடம் {வியானனிடம்},(16) “நானே உங்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவேன். அதற்கு என்ன காரணம் என்பதைக் கேட்பாயாக. நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக” என்றான் {சமானன்}.(17)
சமானன் நகரத் தொடங்கியதும்,[1] உதானன் அவனிடம் {சமானனிடம்}, “உயிர்க்காற்றுகள் அனைத்திலும் நானே முதன்மையானவன் ஆவேன். அதற்குக் காரணம் என்னவென்பதைக் கேட்பாயாக.(18) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக” என்றான் {உதானன்}.(19)உதானன் அழிந்து, மீண்டும் நகரத் தொடங்கினான். அப்போது பிராணன், அபானன், சமானன் மற்றும் வியானன் ஆகியோர் அவனிடம், “ஓ! உதானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. வியானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்” என்றனர்”.(20)
பிராமணர் தொடர்ந்தார், “அவ்வாறு திரண்டிருந்த அவர்களிடம் உயிரினங்களின் தலைவனான பிரம்மன், “நீங்கள் அனைவரும் சிறப்புள்ளவர்களாகவும், சிறப்பில்லாதவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவரிலும் ஒருவர் மற்றொருவரின் குணத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.(21) நீங்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குரிய வட்டங்களில் முதன்மையானவர்களாகவும், ஒருவர் மற்றொருவரின் குணங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள்” என்றான்.
இவ்வாறே அனைத்து உயிரினங்களின் தலைவன் அங்கே கூடியிருந்த அவர்களிடம் சொன்னான்,(22) “ஒருவன் நிலையாக இருப்பவன்; மற்றொருவன் நகர்பவன். சிறப்புக் குணங்களின் விளைவால் உயிர்க்காற்றுகள் ஐவரும் நகர்கின்றனர். என் தன்மை ஒன்று. அந்த ஒன்றே பல்வேறு வடிவங்களை ஏற்கிறது {ஒருவன் மற்றொருவனுக்கு ஆத்மாவாக இருந்து பல வகைகளில் பெருகுகிறான்}.(23) நீங்கள் ஒருவருக்கொருவர் நட்பாகவும், ஒருவரையொருவர் நிறைவடையச் செய்பவர்களாகவும் ஆகி அமைதியாக விடைபெற்றுக் கொள்வீராக. நீங்கள் அருளப்பட்டிருப்பீராக, நீங்கள் ஒருவரையொருவர் தாங்குவீராக” {என்றான் பிரம்மன்}”.(24)
உதானனென்னும் பிரம்மம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 24-தேவமதரும், நாரதரும் படைப்பு முதலியவற்றைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்ததைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்…
பிராமணர் {தன் மனைவியிடம்}, “இது தொடர்பாக நாரதருக்கும், முனிவர் தேவமதருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1)
தேவமதர், “ஓர் உயிரினம் பிறக்கும்போது முதலில் இருப்புக்குள் வருவதெது? பிராணனா? அபானனா? சமானனா? வியானனா? அல்லது உதானனா?” என்று கேட்டார்.(2)
நாரதர், “அந்த உயிரினம் எதைக் கொண்டு படைக்கப்படுகிறதோ அதைவிட வேறொன்று அந்த உயிரனத்தை முதலில் அடைகிறது. உயிர்க்காற்றுகள் குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் செல்லும் இரட்டைகளாக {துவந்தவங்களாக} இருப்பனவென அறியப்படுகின்றன” என்றார் {நாரதர்}[1].(3)
தேவமதர், “(உயிர் காற்றுகளில்) எவரால் ஓர் உயிரினம் உண்டாக்கப்படுகிறது? அவர்களில் முதலில் வருவது எவர்? குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும், கீழ்யோக்கியும் நகரும் இரட்டை உயர்க்காற்றுகள் எவை என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.(4)
நாரதர், “சங்கல்பத்தில் (விருப்பத்தில்) இருந்து இன்பம் {ஆனந்தம்} எழுகிறது. அஃது ஒலியில் இருந்தும் எழுகிறது. அது சுவையில் இருந்தும் எழுகிறது; அது நிறத்தில் இருந்தும் எழுகிறது.(5) உயிர்நீரில் {சுக்கிலத்தில்} இருந்து குருதியில் {சோணிதத்தில்} கலந்து முதலில் பாய்வது பிராணனாகும். பிராணனால் உயிர் நீர் மாறுதலையடைந்ததும், அபானன் பாய்கிறது.(6) உயிர்நீரில் இருந்தும் இன்பம் எழுகிறது. சுவையில் இருந்தும் அஃது எழுகிறது. இதுவே உதானனின் வடிவமாகும் (விளைவாகும்). கலவியில் இருந்து இன்பம் உண்டாகிறது.(7) ஆசையில் இருந்து உயிர் நீர் {சுக்கிலம்} உண்டாகிறது. ஆசையில் இருந்து மாதவிடாய் சுழற்சியும் {ரஜஸும்} உண்டாகிறது. சமானன் மற்றும் வியானனால் உண்டாக்கப்பட்ட உயிர்நீர் மற்றும் குருதியின கலவிக்குள்,(8) பிராணன் மற்றும் அபானனைக் கொண்ட இரட்டை குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும் நகர்ந்து நுழைகிறது. வியானன், சமானன் ஆகிய இரண்டும் குறுக்குவெட்டாக நகரும் ஓர் இரட்டையாக அமைகின்றன.(9)
தேவர்கள் அனைவரும் அக்னியாக (நெருப்பாக) இருக்கின்றனர். இதுவே வேதத்தின் போதனையாகும். நுண்ணறிவுடன் கூடிய ஒரு பிராமணனிடம் அக்னியைக் குறித்த அறிவு எழுகிறது.(10) அந்த நெருப்பின் புகை இருளின் (இருள் {தமஸ்} என்றழைக்கப்படும் குணத்தின்) வடிவில் இருக்கிறது. ஆசை என்ற பெயரில் அறியப்படும் குணம் {ரஜஸ்} அதன் சாம்பலில் இருக்கிறது. நல்லியல்பின் குணம் {சத்வ குணம்} ஆகுதிகள் ஊற்றப்படும் நெருப்பின் பகுதியில் இருந்து எழுகிறது[2].(11) வேள்விகளைக் குறித்து அறிந்தவர்கள் சமானனும், வியானனும் நல்லியல்பின் குணத்தில் இருந்து வந்தன என்பதை அறிவார்கள். பிராணனும், அபானனும் (தெளிந்த நெய்யாலான) ஆகுதிகளின் பகுதிகளாகும். அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது.(12) பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த வடிவம் (அல்லது இருக்கை) ஆகும். இரட்டைகளில் தனித்துவமானதெது என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(13) பகலும், இரவும் இரட்டையாக அமைகின்றன. அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது. பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்[3].(14)இருப்பு, இல்லாமை என்பன இரட்டையாக அமைகின்றன. அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது. பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்.(15) முதலில் இருப்பது சமானன். பின்னிருப்பது வியானன். பின்னதின் {வியானனின்} இயக்கம் அதன் {சமானனின்} மூலமே நடைபெறுகிறது. இரண்டாவதாக, மீண்டும் சமானன் இயங்கத் தொடங்குகிறது.(16) வியானன் மட்டுமே அமைதியாக இருக்கிறது. அமைதியே நித்திய பிரம்மமாகும். பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்[4].(17)
நாராயணன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 25-செயல்பாடு மற்றும் செய்பவன் ஆகியவை குறித்தும், நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பது குறித்தும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…
பிராமணர், “இது தொடர்பாகச் சாதுர்ஹோத்ரத்தின் ({சாதுர்ஹோத்ர} வேள்வியின்) அமைப்பு {விதி} என்ன என்பது குறித்த இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) அது குறித்த விதிகளை இப்போது முழுமையாகச் சொல்லப் போகிறேன். ஓ! இனிய பெண்ணே, இந்த அற்புதம் நிறைந்த புதிரை {ரகசியத்தை} அறிவிக்கப் போகிறேன் கேட்பாயாக.(2) கருவி {கரணம்}, இயக்கம் {கர்மா}, இயக்கி {செயல்படுத்துபவன் / கர்த்தா}, விடுதலை {முக்தி / மோக்ஷம்} ஆகிய இவையே அண்டத்தைச் சூழ்ந்திருக்கும் நான்கு வேள்விப் புரோகிதர்களாகும். (இது தொடர்பாக) {அதனதனுக்கு} ஒப்படைக்கப்பட்டிருக்கும் காரணங்களை முழுமையாகக் கேட்பாயாக. (3,4)
மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காதுகள், மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் குணங்களின் (குணங்கள் குறித்த அறிவின்) காரணங்கள் {கரணத்தைக் காரணங்களாகக் கொண்டவை} என அறிய வேண்டும். மணம், சுவை, நிறம், ஒலி, எண்ணிக்கையில் ஐந்தாவதாகத் தீண்டல்,(5) {நினைக்கத்தக்க} மனத்தின் நோக்கங்கள், {அறியத்தக்க} புத்தியின் நோக்கங்கள் ஆகிய இவை ஏழும் செயற்காரணங்கள் {கர்மாவைக் காரணங்களாகக் கொண்டவை} ஆகும். நுகர்பவன், உண்பவன், காண்பவன், பேசுபவன், எண்ணிக்கையில் ஐந்தாவதாகக் கேட்பவன்,(6) நினைப்பவன், அறிபவன் ஆகிய இவர்கள் எழுவரும் செயற்பாட்டுக் காரணங்களாக {கர்த்தாவைக் காரணமாகக் கொண்டவர்களாக} அறியப்பட வேண்டும். குணங்களைக் கொண்ட இவை, ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ உள்ள தங்கள் குணங்களையே அனுபவிக்கின்றன[1].(7)ஆத்மாவைப் பொறுத்தவரையில் அது குணங்களற்றதாகும். இவை ஏழும்தான் விடுதலைக்கான காரணங்களாகும். கல்விமான்கள் மற்றும் போதுமான புத்தியைக் கொண்டவர்களிடம் தேவர்களின் நிலையில் உள்ள குணங்கள் உரிய இடத்தில் உள்ளவையும், விதிக்கப்பட்டதற்கு ஏற்புடையவையுமான ஆகுதிகளை உண்கின்றன. கல்வியற்ற ஒருவன், பல்வேறு வகை உணவுகளை உண்டு, அகந்தை புத்தியால் {மமதையால்} பீடிக்கப்படுகிறான்[2].(8,9) தனக்கான உணவை மட்டுமே செரிப்பவன் அகந்தை புத்தியால் அழிவடைகிறான். உண்ணத்தகாத உணவை உண்பதும், மதுவைப் பருகுவதும் அவனை அழிவடையச் செய்கிறது.(10) அவன் (தான் உண்ட) உணவை அழிக்கிறான், அந்த உணவை அழித்து, தன்னையும் அவன் அழித்துக் கொள்கிறான். எனினும், கல்வி கற்றவனும், பலம்பொருந்தியவனுமான மனிதன், தன் உணவை மீண்டும் உற்பத்தி செய்வதற்காக அஃதை அழிக்கிறான்.(11) அவன் உண்ணும் உணவில் இருந்து மிகச் சிறு அத்துமீறலும் நிகழாது.மனத்தால் எண்ணப்படும் எதுவும், வாக்கால் சொல்லப்படும் எதவும்,(12) காதால் கேட்கப்படும் எதுவும், கண்ணால் காணப்படும் எதுவும், தீண்டல் (புலனால் {தோலால்}) தீண்டப்படும் எதுவும், மூக்கால் நுகரப்படும் எதுவும்,(13) புலன்கள் அனைத்தையும், ஆறாவதாக மனத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, உடலுக்குள் எரிந்து கொண்டிருக்கும் உயர்ந்த தகுதிகளைக் கொண்ட நெருப்பான ஆத்மாவுக்குள் ஊற்றப்பட வேண்டிய தெளிந்த நெய்யாலான ஆகுதியாக அமைகிறது[3].(14) என்னைப் பொறுத்தவரையில், யோகத்தால் அமையும் வேள்வியானது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வேள்வி தொடர்கிற இடத்தில் அறிவு நெருப்பை விளைவிக்கும் ஊற்று உதிக்கிறது. மேல்நோக்கிய உயிர் காற்றான பிராணனே அவ்வேள்வியின் ஸ்தோத்திரமாகும். கீழ்நோக்கிய உயிர் காற்றான அபானனே அதன் சஸ்திரமாகும். அனைத்தையும் துறப்பதே, அந்த வேள்வியின் சிறந்த தக்ஷிணையாகும்.(15)பிரம்மமாக உள்ள நனவு {அகங்காரம்}, மனம் மற்றும் புத்தி ஆகிய ஒவ்வொன்றும், ஹோத்ரியும், அத்வர்யு, உத்காத்ரி ஆகியவையாகும். பிரஸாஸ்திரியும், அவரது சாஸ்திரமும் உண்மையாகும். தனி இருப்பை நிறுத்தல் (அல்லது விடுதலையே {முக்தியே}) தக்ஷிணையாகும்[4].(16) இது தொடர்பாக, நாராயணனை அறிந்த மக்கள் சில ரிக்குகளை உரைக்கின்றனர. பழங்காலத்தில் தெய்வீகமான நாராயணனுக்கு விலங்குகள் காணிக்கயளிக்கப்பட்டன[5].(17) அப்போது சில சாமங்களும் பாடப்படுகின்றன. இதில் ஓர் உரிமை ஏற்படுகிறது. ஓ! மருண்டவளே, தெய்வீக நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பதை அறிவாயாக” என்றார் {பிராமணர்}.(18)
காமசாரி, பிரம்மசாரி! – அஸ்வமேதபர்வம் பகுதி – 26-பிரம்மன் ஒரே சொல்லால் பிரம்மத்தை உபதேசித்தது; தேவர்கள் முதலியோர் தத்தமது அறிவுக்குத்தக்கபடி அதைப் புரிந்து கொண்டது ஆகியவற்றைக் குறித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…
பிராமணர், “ஆட்சியாளன் ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறொருவனுமில்லை. அந்த ஆட்சியாளன் இதயத்தில் வசிக்கிறான். அவனைக் குறித்து இப்போது சொல்லப்போகிறேன். சாய்தளத்தில் ஓடும் நீரைப் போல அவனால் உந்தப்பட்டும் நான், அவனது வழிநடத்தலின்படியே நகர்கிறேன் {காரியங்களைச் செய்கிறேன்}.(1) ஆசான் {குரு} ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறொருவருமில்லை. அவரைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகை உணர்வுடன் இருக்கின்றன[1].(2) உற்றவன் {உறவினன்} ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. இதயத்தில் வசிக்கும் அவனைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். அவரால் போதிக்கப்படும் உறவினர்கள் உறவினர்களைக் கொண்டவர்களாகிறார்கள்” {என்றார் பிராமணர்}. {கிருஷ்ணன் தொடர்ந்தான்}, “மேலும், ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}[2], {அந்தப் பிரமாணர் தம் மனைவியிடம்}, “முனிவரெழுவரும் {சப்தரிஷிகளும்} ஆகாயத்தில் ஒளிர்கிறார்கள்.(3){ஐயங்களை} அகற்றுபவர் ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறு ஒருவருமில்லை. அவர் இதயத்தில் வசிக்கிறார். அவரைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். குருவுடன் வாழ்வதற்கு உரிய வாழ்வுமுறையில் {பிரம்மச்சரிய ஆசிரமத்தில்} அந்தக் குருவுடன் வாழ்ந்த சக்ரன் {இந்திரன்}, உலகங்கள் அனைத்தின் ஆட்சியுரிமையை அடைந்தான்[3].(4) பகைவன் ஒருவனே. அவனைத்தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. அவன் இதயத்தில் வசிக்கிறான். நான் இப்போது அவனைக் குறித்துச் சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகையுணர்வு உள்ளவையாக இருக்கின்றன.(5)இது தொடர்பாக உயிரினங்கள் அனைத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} இருந்து பாம்புகள் {பன்னகர்கள்}, தேவர்கள் மற்றும் முனிவர்கள் பெற்ற போதனை குறித்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(6) உயிரினங்கள் அனைத்தின் தலைவனைச் சுற்றி அமர்ந்திருந்த தேவர்கள், முனிவர்கள், பாம்புகள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அவனிடம், “எங்களுக்கான உயர்ந்த நன்மை அறிவிக்கப்படட்டும்” என்றனர்.(7)
அந்தப் புனிதமானவன் {பிரம்மன்}. உயர்ந்த நன்மையைக் குறித்துக் கேட்ட அவர்களிடம் ஓரசை {ஓரெழுத்துப்} பிரம்மமான ஓம் என்ற சொல்லை மட்டுமே சொன்னான். இதைக் கேட்ட அவர்கள் பல்வேறு திசைகளில் ஓடிச் சென்றனர்.(8) இவ்வாறு அனைத்துத் திசைகளிலும் ஓடிச் சென்றவர்களுக்கு மத்தியில் ஆசையில் இருந்து எழுந்த தற்போதனையில் இருந்து, முதலில் பாம்புகளிடம் கடிக்கும் மனோநிலை {தன்மை} உண்டானது.(9) அசுரர்களிடம், தங்கள் இயல்பிலேயே பிறந்த பகட்டும், செருக்கும் கூடிய மனோநிலை எழுந்தது. தேவர்கள் கொடைகள் அளிக்கும் தன்மையையும், பெரும் முனிவர்கள் தற்கட்டுப்பாட்டையும் அடைந்தனர்.(10) ஓர் ஆசானிடம் சென்று, ஒரு சொல்லால் போதிக்கப்பட்ட (தூய்மையாக்கப்பட்ட) பாம்புகளும், தேவர்களும், முனிவர்களும், தானவர்களும் பல்வேறு மனநிலைகளை {தன்மைகளை} அடைந்தனர்.(11) தான் பேசுவதைத் தானே கேட்டு, அதை முறையாக ஒருவன் புரிந்து கொள்கிறான். மீண்டும் அவன் பேசும்போது மேலும் கேட்கிறான். {தன்னைத் தவிர அவனுக்கு} இரண்டாவதாக வேறோர் ஆசான் இல்லை[4].(12)அவனது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தே பின்னர்ச் செயல்பாடு தோன்றுகிறது. சொல்பவன், புரிந்து கொள்பவன், கேட்பவன், பகைவன் ஆகியோர் இதயத்தில் நிறுத்தப்படுகின்றனர்.(13) உலகில் பாவகரமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்தவனாகிறான். இவ்வுலகில் மங்கலமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் மங்கலச் செயல்களைச் செய்தவனாகிறான்.(14) ஆசையால் தூண்டப்பட்டுப் புலனின்பங்களுக்கு அடிமையாவதன் மூலம் ஒரு மனிதன் கட்டுப்பாடில்லா ஒழுக்கம் கொண்டவனாகிறான் {காமசாரியாகிறான்}. தன் புலன்களை அடக்குவதிலேயே எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ள ஒருவன் பிரம்மச்சாரியாகிறான்.(15) நோன்புகள் மற்றும் செயல்பாடுகளைக் கைவிடும் அவன் பிரம்மத்தை மட்டுமே அடைக்கலமாகக் கொள்கிறான். எப்போதும் தன்னைப் பிரம்மத்துடன் அடையாளக் கண்டு, இவ்வுலகில் திரிபவன் பிரம்மச்சாரியாகிறான்.(16)
பிரம்மமே அவனது விறகாகும்; பிரம்மமே அவனது நெருப்பாகும்; பிரம்மமே அவனது தோற்றமாகும்; பிரம்மமே அவனது நீராகும்; பிரம்மமே அவனது ஆசான் ஆகும்; பிரம்மத்திலேயே அவன் மூழ்கியிருக்கிறான்.(17) ஞானிகளால் புரிந்து கொள்ளப்படும் வகையில் உள்ள பிரம்மச்சரியம் இவ்வளவு நுட்பமானதே. அதைப் புரிந்து கொண்டு, க்ஷேத்ரஜ்ஞனால் போதிக்கப்படும் அவர்கள் அதையே பின்பற்றுகிறார்கள்” என்றார் {பிராமணர்}.(18)
புனிதக்காடு! – அஸ்வமேதபர்வம் பகுதி – 27-ஞானம் மற்றும் பிரம்மம் ஆகியவற்றைக் காடாகச் சித்தரித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…
பிராமணர், “குறிக்கோள்களையே ஈக்களாகவும், கொசுக்களாகவும், இன்ப துன்பங்களை வெப்பம் மற்றும் குளிராகவும், கவனமின்மையையே {மோஹத்தையே} காரிருளாகவும், பேராசை மற்றும் நோய்களை ஊர்வனவாகவும் {பாம்புகளாகவும்}, செல்வத்தை ஒற்றை ஆபத்து நிறைந்த சாலையாகவும், கோபம் மற்றும் காமத்தைக் கள்வர்களாகவும் கொண்டவையும், கடக்க முடியாதவையுமான நிலப்பரப்புகளை {உலகத்தைக்) கடந்து பிரம்மமெனும் இந்தப் பெருங்காட்டுக்குள் நான் நுழைந்துவிட்டேன்” என்றார்.(1,2)
அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, அந்தக் காடு எங்கே இருக்கிறது? அதன் மரங்கள் யாவை? ஆறுகள் யாவை? மலைகளும், குன்றுகளும் யாவை? அந்தக் காடு எவ்வளவு தொலைவில் இருக்கிறது?” என்று கேட்டாள்.(3)
பிராமணர், “அதனில் {பிரம்மத்தில்} இருந்து வேறுபட்டது ஏதுமில்லை. அதைவிட மிக இனிமைமிக்க வேறு எதுவுமில்லை. அதில் இருந்து பிரியாமல் இருப்பது வேறேதும் இல்லை. அதைவிடப் பீடிக்கக்கூடியது வேறேதுமில்லை.(4) அதைவிடச் சிறியது வேறேதும் இல்லை. அதைவிடப் பெரியது வேறேதும் இல்லை. அதைவிட நுட்பமானது வேறேதும் இல்லை. அதற்கு ஒப்பான மகிழ்ச்சி வேறேதும் இல்லை.(5) அதற்குள் நுழையும் மறுபிறப்பாளர்கள் இன்ப துன்பங்களை உடனே கடந்து விடுகிறார்கள். (அதன் பிறகு) அவர்கள் வேறு எந்த உயிரினத்தின் முன்பும் அச்சத்துடன் ஒருபோதும் நிற்பதில்லை, அதே போல வேறு எந்த உயிரினமும் அவர்களைக் கண்டு அஞ்சுவதில்லை.(6) அந்தக் காட்டில் {பிரம்மத்தில்} பெரு மரங்கள் ஏழும், கனிகள் ஏழும் இருக்கின்றன, விருந்தினர்கள் எழுவரும் இருக்கின்றனர். அங்கே ஏழு ஆசிரமங்களும், ஏழு தியான யோகங்களும் (யோக வடிவங்களும்) {சமாதிகளும்}, ஏழு தொடக்க நிலைகளும் (வடிவங்களும்) {தீக்ஷைகளும்} இருக்கின்றன. இதுவே அந்தக் காட்டைக் குறித்த விளக்கமாகும்[1].(7)அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {மனமாகிய} மரங்கள் {ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களாலான} ஐந்து நிறங்களிலான சிறந்த மலர்களையும், கனிகளையும் உண்டாக்குகின்றன.(8) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் மரங்கள் இரு வகைகளைச் சார்ந்தவையும், சிறந்த நிறங்களைக் கொண்டவையுமான {புலன் நுகர் பொருட்களின் அனுபவம் என்ற} மலர்களையும், {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(9) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {கண்கள் எனும்} மரங்கள் {இன்பம் துன்பம் என்ற} இரு நிறங்களைச் சார்ந்தவையும், நறுமணம் மிக்கவையுமான {சொர்க்கம் முதலான} மலர்களையும், {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(10) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் மரங்கள், {சுகம் என்ற} ஒரு நிறத்தைச் சார்ந்தவையும், நறுமணமிக்கவையுமான {பிரம்மானுபவமென்கிற} மலர்களையும், {ஆனந்தம் எனும்} கனிகளையும் உண்டாக்குகின்றன.(11) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {புத்தி மற்றும் மனம் என்ற} இரு மரங்கள், வெளிப்படாத வண்ணங்களிலான பல மலர்களையும் {மனோநிலைகளையும்}, {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(12) அங்கே நல்ல மனம் {ஞானம்} கொண்ட ஒரு நெருப்பு {ஆத்மா} இருக்கிறது. அது பிரம்மனுடன் தொடர்பில் இருக்கிறது. அங்கே ஐம்புலன்களும் விறகுகளாகின்றன. (மனம் முதலானவற்றை அதைக் கொண்டு ஹோமம் செய்தால்} அவற்றில் இருந்து விடுதலையின் ஏழு வடிவங்களும் {மோக்ஷங்களும்} ஏழு தொடக்க நிலை வடிவங்களை {தீக்ஷைகளும்} உண்டாக்குகின்றன. குணங்களே கனிகளாக இருக்கின்றன, அந்தக் கனிகளை உண்பவர்களே {தேவர்களென்னும்} விருந்தினர்களாக இருக்கின்றனர்.(13)
அங்கே பல்வேறு இடங்களில் பெரும் முனிவர்கள் {புலன்களுக்குரிய தேவர்கள்} அந்த விருந்தோம்பலை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு வழிபடப்படும் அவர்கள் அழிவடையும்போது {லயமடையும்போது [இல்லாது போகும்போது]} மற்றொரு காடு பிரகாசிக்கிறது.(14) அந்தக் காட்டில், புத்தியே மரம்; விடுதலையே {முக்தியே} கனி; அமைதியே {சாந்தியே} அது கொண்ட நிழல் ஆகும். அது ஞானத்தையே தன் ஓய்வில்லமாகவும், மனநிறைவை நீராகவும், க்ஷேத்ரஜ்ஞனை சூரியனாகவும் கொண்டுள்ளது.(15) மேல்நோக்கியோ, கீழ்நோக்கியோ, கிடைமட்டத்திலோ அதன் எல்லையை உறுதி செய்ய முடியாது.(16) கீழ்நோக்கி முகங்களைக் கொண்டவர்களும் {தலை குனிந்திருப்பவர்களும்}, பிரகாசத்துடன் கூடியவர்களும், தலைமுறைகளை உண்டாக்கக்கூடியவர்களுமான ஏழு பெண்கள் எப்போதும் அங்கே வசித்து வருகின்றனர். உண்மையை உறிஞ்சும் முரண்பாட்டைப் போல அனைத்து உயிரினங்களிடம் இருந்தும் அவர்கள் பல்வேறு சுவைகளைப் பெறுகின்றனர். வசிஷ்டரைத் தங்களில் முதன்மையானவராகக் கொண்டவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான முனிவரெழுவர் {சப்தரிஷிகளும்} அதிலேயே உண்டாகி அங்கேயே வசிக்கின்றனர்.(18)
சூரியனைப் பின்தொடரும் கதிர்களைப் போலவே, புகழ் {கீர்த்தி}, ஒளி {பிரகாசம்}, மேன்மை, அகவொளி {தெளிவு}, வெற்றி, ஒழுங்கு {கச்சிதத்தன்மை}, சக்தி ஆகிய ஏழும் அதைப் பின்தொடர்ந்து செல்கின்றன.(19) அங்கே மலைகளும், குன்றுகளும் ஒன்று திரண்டிருக்கின்றன. பிரம்மத்தில் பிறந்த நீரைக் கொண்ட ஆறுகளும் ஓடைகளும் அங்கே ஓடிக் கொண்டிருக்கின்றன.(20) அங்கே வேள்வி செய்வதற்கான ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் அவை சங்கமுமாகின்றன. தங்கள் ஆன்மாக்களில் நிறைவடைவோர் அங்கே பெரும்பாட்டனை {பிரம்மனை} நோக்கிச் செல்கின்றனர்.(21) ஆசைகளைக் குறைத்துக் கொண்டவர்களும், சிறந்த நோன்புகளைச் செய்வதில் ஆசை கொண்டவர்களும், தவங்களின் மூலம் பாவங்களை எரித்தவர்களுமான மனிதர்கள் தங்கள் ஆன்மாக்களிலேயே கலந்து பிரம்மத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(22) ஞானக்காடு குறித்து அறிந்தவர்கள் அமைதியைப் புகழ்கிறார்கள். பிறவியை அடைந்தவர்கள், அந்தக் காட்டை நோக்கத்தில் கொண்டு தங்கள் துணிவை இழக்காதிருக்க வேண்டும்.(23) பிராமணர்களால் புரிந்து கொள்ளப்பட்டும் அந்தப் புனிதக்காடு இத்தகையதே. அதைப் புரிந்து கொண்ட அவர்கள், க்ஷேத்ரஜ்ஞனால் செலுத்தப்பட்டு (விதிக்கு இணக்கமாக) வாழ்கின்றனர்” என்றார் {பிராமணர்}.(24)
யாகஹிம்ஸை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 28-வேள்விகளில் நேரும் தீங்கு குற்றமாகாது என்று ஓர் அத்வர்யுவுக்கும் யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…
பிராமணர், “நான் மணங்களை நுகர்வதில்லை. நான் சுவைகளை உணர்வதில்லை. நான் நிறங்களைக் காண்பதில்லை. நான் தீண்டுவதில்லை. (எழும்) பல்வேறு ஒலிகளையும் நான் கேட்பதில்லை. எவ்வகைக் காரியத்தையும் {தீர்மானத்தையும்} நான் செய்வதில்லை.(1) விரும்பப்படும் பொருட்களை விருப்பம் கொள்வது இயற்கையே; விரும்பப்படாத பொருட்களை வெறுப்புக் கொள்வதும் இயற்கையே. அசைவூட்டமுள்ள உடல்களுக்குள் ஆன்மா நுழையும்போது, மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் செல்லும் உயிர் காற்றுகளின் {பிராண வாயு மற்றும் அபான வாயுவின்} மூலம் இயற்கையில் இருந்தே விருப்பும், வெறுப்பும் எழுகின்றன[1].(2) அவற்றில் இருந்து பிரிந்த நிலையிலேயே மற்றவை இருக்கின்றன; அவற்றில் நித்திய இயல்புகள் இருக்கின்றன; (இவற்றையும்) அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களையும், யோகிகள் உடலில் காண்கின்றனர். அதில் வசிக்கும் நான், ஒரு போதும் ஆசை, கோபம், முதுமை மற்றும் மரணத்தின் மூலம் எழும் எதனிலும் பற்று கொள்வதில்லை.(3)தாமரையின் {தாமரை இலையில் உள்ள} நீர்த்துளியில் எந்தக் களங்கமும் இல்லாததைப் போலவே, விரும்பத்தக்க பொருள் எதனிலும் விருப்பமின்மை, தீமை எதனிலும் வெறுப்பின்மை ஆகிய என் இயல்புகளிலும் எந்தக் களங்கமுமில்லை[2].(4) மாறுபட்ட இயல்புகளைக் காணும் நிலையான ஒருவனுக்கு (கொள்கைக்கு) இவை நிலையற்ற உடைமைகளாகின்றன. செயல்பாடுகள் நிகழ்த்தப்பட்டாலும், சூரியக் கதிர்களின் திரள் வானத்தைப் பற்றாததைப் போல {அவன் அனுபவிக்கும்} இன்பங்களின் திரளும் அவற்றுடன் அவனைப் பற்றுகொள்ளச் செய்யாது. இது தொடர்பாக ஓர் அத்வர்யுவுக்கும், ஒரு யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! புகழ்பெற்ற பெண்மணியே, அதைக் கேட்பாயாக.(5,6)ஒரு வேள்விச் சடங்கில் நீர் தெளிக்கப்படும் {புரோக்ஷிக்கப்படும்} விலங்கைக் கண்ட ஒரு யதி {சந்நியாஸி}, அத்வர்யுவிடம் “இஃது உயிர்க்கொலை” என்றார்.(7)
அத்வர்யு {சந்நியாசியிடம்}, “இந்த ஆடு அழிவையடையாது. இக்காரியத்தில் வேத அறிவிப்பு உண்மையானால், (இந்த வேள்வியினால்) இவ்விலங்கு பெரும் நன்மையை அடையும்.(8) பூமியாலான இந்த விலங்கின் பகுதி பூமிக்குச் செல்லும். நீரில் பிறந்த இதன் பகுதி நீருக்குள் நுழையும்.(9) இதன் கண்கள் சூரியனுக்குள்ளும்; இதன் காதுகள் பல்வேறு திசைப்புள்ளிகளிலும், இதன் உயிர் காற்றுகள் ஆகாயத்துக்குள்ளும் நுழையும். சாத்திரங்களைப் பின்பற்றும் நான் (இந்த விலங்கைக் கொல்வதற்குத் துணைபுரிவதால்) எத்தீங்கையும் இழைக்கவில்லை” என்றார்.(10)
யதி {சந்நியாசி அத்வர்யுவிடம்}, “இந்த ஆட்டின் உயிர் காற்றுகளை இவ்வாறு பிரிப்பதில் இத்தகைய நன்மையைக் கண்டால், இந்த வேள்வி ஆட்டுக்கானதாகிறது. இதை நீர் செய்ய வேண்டிய அவசியமென்ன {இதனால் உமக்கென்ன பயன்}?(11) (இந்த ஆட்டின்) சகோதரன், தந்தை, தாய் மற்றும் நண்பன் ஆகியோர் இதில் தங்கள் அனுமதியை உமக்கு அளிக்க வேண்டும். (அவற்றிடம்) இஃதை {இந்த ஆட்டை} அழைத்துச் சென்று அவற்றுடன் {அந்த ஆடுகளுடன்} ஆலோசிப்பீராக. இந்த ஆடானது குறிப்பாகச் சுதந்திரமற்றதாகும் {அவற்றை [அந்த ஆடுகளைச்] சார்ந்திருப்பதாகும்}.(12) இதில் தங்கள் ஒப்புதலை அளிக்கக்கூடியவர்களைப் பார்ப்பதே உமக்குத் தகும். அவற்றின் ஒப்புதலைக் கேட்ட பிறகே, இக்காரியம் கருத்தில் கொள்ளத் தகுந்ததாகும்.(13) இந்த ஆட்டின் உயிர்க்காற்றுகள் தங்கள் தங்களுக்குரிய மூலங்களிடம் திரும்பிச் செல்கின்றன. உயிரற்ற உடல் மட்டுமே எஞ்சுகிறது. இதையே நான் நினைக்கிறேன்.(14)
விறகுடன் ஒப்பிடக்கூடிய (ஒரு விலங்கின்) உயிரற்ற உடலின் மூலம் இன்பமடைய விரும்புவோருக்கு (வேள்விக்கான) விறகே அந்த விலங்குதான்.(15) தீங்கிழையாமையே {கொல்லாமையே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். இதுவே நம் பெரியோர் சொல்லிக் கொடுத்ததாகும். கொடுமையற்ற செயலே செய்யப்பட வேண்டும் என்பதே நாம் அறிவதாகும். அதில் (உயிரினங்களைக்) கொல்லாமை என்பதே கருத்தாகும். நான் மேலும் ஏதாவது சொன்னால், பல்வேறு வகையான குற்றச் செயல்களை உம்மால் செய்ய முடியும் (என்று அப்போது தோன்றும்).(17) அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் கொடுமை தவிர்த்தலே நமக்கு ஏற்புடையதாகும். நேரடியாக உணக்கூடியவற்றிலிருந்து நாம் இதை நிறுவுகிறோம். நேரடியான அகப்பார்வையை {கருத்தைக்} கடந்திருப்பதை நாம் சார்ந்திருக்கவில்லை[3]” என்றார் {யதி}.(18)அத்யர்யு, “பூமிக்குச் சொந்தமான மணத்தின் குணங்களை நீர் அனுபவிக்கிறீர். நீர் தொடர்புடைய சுவைகளைப் பருகுகிறீர். ஒளியுடல்களுக்குச் சொந்தமான நிறங்களைக் காண்கிறீர். காற்றைத் தோற்றுவாயாகக் கொண்ட குணங்களைத் தீண்டுகிறீர்.(19) வெளி (அல்லது ஆகாயத்தைத்) தோற்றுவாயாகக் கொண்ட ஒலிகளைக் கேட்கிறீர். மனத்தால் எண்ணங்களைச் சிந்திக்கிறீர். இந்த உட்பொருட்கள் (பூதங்கள்) அனைத்தும் உயிருள்ளவை என்பதே உமது கருத்தாகும்.(20) அப்போது அந்த உயிர்களை எடுக்காமல் நீர் தவிர்ப்பதில்லை. உண்மையில் நீர் கொலையிலேயே ஈடுபடுகிறீர். கொலையில்லாமல் எந்த இயக்கமும் நடைபெறாது {ஹிம்ஸை இன்றி ஒரு காரியமுமில்லை}. அல்லது, ஓ! மறுபிறப்பாளரே, வேறென்ன நீர் நினைக்கிறீர்?” என்று கேட்டார்.(21)
யதி, “அழிவற்றது {அக்ஷரம்} மற்றும் அழியக்கூடியது {க்ஷரம்} என்பன ஆன்மாவின் இரட்டை வெளிப்பாடாக அமைகின்றன. இவற்றில் அழிவற்றதே இருப்பில் உள்ளது. அழியக்கூடியது அதிக அளவில் இருப்பில் இல்லாததெனச் சொல்லப்படுகிறது.(22) உயிர்க்காற்று, நாக்கு, மனம், நல்லியல்பின் {சத்வ} குணம், ஆசை {ரஜோ} குணம் ஆகிய அனைத்தும் இருப்பில் உள்ளவை. இருப்பிலுள்ள இவற்றில் இருந்து விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், எந்த எதிர்பார்ப்பையும் வளர்க்காதவனும்,(23) அனைத்து உயிரினங்களிடமும் ஒரே வகையில் {சமமாக} நடந்து கொள்பவனும், மமதையில் இருந்து விடுபட்டவனும், தற்கட்டுப்பாடுடையவனும், தன் சுற்றுச்சூழலில் இருந்து விடுபட்டவனுமான ஒருவனுக்கு எதனிடமும் அச்சம் ஏற்படுவதில்லை[4]” என்றார்.(24)
அத்யர்யு, “ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ஒருவன் நல்லோருடன் வசிக்க வேண்டும். உமது கருத்துகளைக் கேட்பதால் என் புத்தி ஒளியுடன் ஒளிர்கிறது.(25) ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! மறுபிறப்பாளரே, உம்மை ஒரு தேவனாக நம்பும் நான், மந்திரங்களின் உதவியால் இந்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் என்னிடம் குற்றமுண்டாவதில்லை என்று சொல்கிறேன்” என்றார்”.(26)
பிராமணர் தொடர்ந்தார், “இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு யதி அமைதியாக இருந்தார். அத்யர்யுவும் மாயையில் இருந்து விடுபட்டு அந்தப் பெரும் வேள்வியைச் செய்தார்.(27) பிராமணர்கள், மிக நுட்பமான விடுதலையை {முக்தியை} இவ்வகையிலேயே புரிந்து கொள்கிறார்கள்; அதைப் புரிந்து கொண்டு, அதற்கு இணக்கமாகவும், அனைத்தையும் காணும் க்ஷேத்ரஜ்ஞனால் வழிநடத்தப்பட்டும் வாழ்கிறார்கள்” {என்றார் பிராமணர்}.(28)
அஹிம்ஸை! – அஸ்வமேதபர்வம் பகுதி – 29-கார்த்தவீரியனுக்கும் பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பரசுராமரின் கதையையும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…
பிராமணர், “இது தொடர்பாகக் கார்த்தவீரியனுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) ஆயிரங்கரங்களையும், கார்த்தவீரியார்ஜுனன் என்ற பெயரையும் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவன் தனது வில்லைக் கொண்டு, பெருங்கடலின் கரைகள் வரை விரிந்திருக்கும் பூமியை வென்றான்.(2) ஒரு காலத்தில், தன் வலிமையில் செருக்குடன் இருந்த அவன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, நீரின் அந்தப் பெருங்கொள்ளிடத்தின் {பெருங்கடலின்} மேல் நூற்றுக்கணக்கான கணைகளை மழையாகப் பொழிந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3)
கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கிய அந்தப் பெருங்கடல் {ஸமுத்திரம்}, “ஓ! வீரா, (என் மீது) உன் கணைகளை ஏவாதே. நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக.(4) ஓ! மன்னர்களில் புலியே, என்னிடம் உறைவிடத்தை அடைந்திருக்கும் உயிரினங்கள், உன்னால் ஏவப்பட்டும் இந்த வலிமைமிக்கக் கணைகளால் கொல்லப்படுகின்றன. ஓ! தலைவா, அவற்றுக்குப் பாதுகாப்பை நல்குவாயாக” என்றது.(5)
அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, “போரில் எனக்கு இணையாகக் களத்தில் என்னை எதிர்த்தது நிற்கக் கூடிய வில்லாளி வேறு எவனும் இருந்தால் அவனது பெயரை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(6)
பெருங்கடல், “ஓ! மன்னா, பெரும் முனிவர் ஜமதக்னியைக் குறித்து நீ கேள்விப்பட்டிருப்பாய், அவருடைய மகன் {பரசுராமர்} உன்னை விருந்தினராக முறையாக வரவேற்கத் தகுந்தவராவார்” என்றது.(7)
அப்போது பெருங்கோபத்தில் நிறைந்த அந்த மன்னன் அங்கிருந்து புறப்பட்டான். அந்த ஆசிரமத்தை அடைந்து, ராமரை {பரசுராமரை} அவன் கண்டான்.(8) ராமருக்குப் பகையான செயல்கள் பலவற்றை அவன் தன் உறவினர்களைக் கொண்டு செய்து, மேலும் மேலும் அந்த உயர் ஆன்ம வீரருக்குத் தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.(9) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, அந்த ராமரின் அளவிடமுடியாத சக்தி, சுடர்விட்டெரிந்து பகைவனின் துருப்புகளை எரித்தது.(10) போர்க்கோடரியை எடுத்துக் கொண்டு தன் சக்தியைத் திடீரென வெளிப்படுத்திய ராமர், பல கிளைகளைக் கொண்ட மரம் போல இருந்தவனும், ஆயிரம் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரனை வெட்டினார்.(11) கொல்லப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் அவனைக் கண்ட அவனது உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி, தங்கள் ஈட்டிகளை {சக்தி ஆயுதங்களை} எடுத்துக் கொண்டு, அங்கே அமர்ந்திருந்த ராமரை நோக்கி அனைத்துப் புறங்களில் இருந்தும் விரைந்தனர்.(12)
ராமரும் தமது வில்லை எடுத்துக் கொண்டு, விரைவாகத் தமது தேரிலேறி கணைமாரியைப் பொழிந்து அந்த மன்னனின் படையைத் தண்டித்தார்.(13) அப்போது, ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் சிலர் சிங்கத்தால் பீடிக்கப்பட்ட மான்களைப் போல மலைக்காடுகளுக்குள் நுழைந்தனர்.(14) ராமரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தங்கள் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாக வெளிப்படுத்த இயலாத அவர்களின் சந்ததியினர், பிராமணர்களைக் காண இயலாததால் {சூத்திரத்தன்மையைக் கொண்ட} விருஷலர்களானார்கள்[1].(15) இவ்வகையில் க்ஷத்திரியர்களான திரவிடர்கள், ஆபீரர்கள், புண்ட்ரர்கள், சபரர்கள் ஆகியோர், (பிறப்பின் மூலம்) க்ஷத்திரியர்களுக்கான கடமைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் (தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்யாமல்) வீழ்ச்சியையடைந்து விருஷலர்களானார்கள்.(16) வீரப்பிள்ளைகளை இழந்திருந்த க்ஷத்திரியப் பெண்கள் பிராமணர்களின் மூலம் ஈன்றெடுத்த க்ஷத்திரியர்களும் மீண்டும் மீண்டும் அந்த ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கொல்லப்பட்டனர்.(17) இவ்வகையில் இருபத்தோரு முறை படுகொலைகள் நடந்தேறின.அதன் இறுதியில், உடலற்ற ஒரு குரல் சொர்க்கத்தில் இருந்து எழுந்து, மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் ராமரிடம் இனிமையாக,(18) “ஓ! ராமா, ஓ! ராமா, இதைத் தவிர்ப்பாயாக. ஓ! மகனே, தாழ்ந்தவர்களாக இருக்கும் க்ஷத்திரியர்களை இவ்வாறு மீண்டும் மீண்டும் அழிப்பதில் என்ன தகுதியை {பயனை} நீ காண்கிறாய்?” என்றது[2].(19)
இவ்வழியிலேயே, ஓ! அருளப்பட்ட மங்கையே, ரிசீகரின் தலைமையிலான அவரது பாட்டன்கள் அந்த உயர்ஆன்மாவிடம், “இதைத் தவிர்ப்பாயாக” என்றனர்.(20)
எனினும், தமது தந்தை கொலை செய்யப்பட்டதை மன்னிக்க முடியாத ராமர் {பரசுராமர்}, அந்த முனிவர்களிடம், “என்னைத் தடுப்பது உங்களுக்குத் தகாது” என்றார்.(21)
அப்போது, பித்ருக்கள், “ஓ! வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, க்ஷத்திரியர்களில் இழிவான இவர்களைக் கொல்வது உனக்குத் தகாது. ஒரு பிராமணனாக இருக்கும் நீ இந்த மன்னர்களைக் கொல்வது முறையாகாது” என்றனர்.(22)
மன்னன் அலர்க்கன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 30-பரசுராமரின் பித்ருக்கள் அவருக்கு அலர்க்கனின் கதையைச் சொன்னது; க்ஷத்திரியக் கொலையை விட்டுக் கடுந்தவம் செய்த பரசுராமர்…
பித்ருக்கள் {பரசுராமரிடம்}, “இது தொடர்பாக ஒரு பழைய வரலாறு குறிப்பிடப்படுகிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அதைக் கேட்டுவிட்டு அதன்படியே செயல்படுவாயாக.(1) கடும் தவங்களுடன் கூடியவனும், அலர்க்கன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அரச முனி இருந்தான். கடமைகள் அனைத்தையும் அறிந்தவனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனுமான அவன், பேச்சில் வாய்மையுடனும், தன் நோன்பில் மிக உறுதியுடையவனுமாக இருந்தான்.(2) கடல்கள் வரை விரிந்திருக்கும் மொத்த உலகையும் வென்று கடுஞ்சாதனையைச் செய்த அவன், நுட்பமானதில் தன் மனத்தை நிறுவினான்.(3) ஓ பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அந்தப் பெருஞ்சாதனைகள் அனைத்தையும் கைவிட்டு ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, நுட்பமானதை நோக்கி தன் மனத்தைத் திருப்பினான்.(4)
அலர்க்கன், “என் மனம் வலுவாக இருக்கிறது. மனத்தை வென்ற பிறகு ஒருவனின் வெற்றி நிரந்தரமானதாகிறது. பகைவர்களால் சூழப்பட்டிருந்தாலும் நான் (இது முதல்) என் கணைகளைப் பிற பொருட்களின் மீது ஏவுவேன்.(5) நிலையின்மையின் விளைவால் மனிதர்கள் அனைவரையும் செயல்களை நிறைவேற்றுவதில் நிறுவும் மனத்தின் மீது நான் மிகக் கூரிய கணைகளை ஏவப்போகிறேன்” என்றான்.(6)
மனம், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும். உன் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட நிலையில் நீ மரணமடைவாய்.(7) என்னை அழிப்பதற்குரிய வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {மனத்தின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(8)
அலர்க்கன், “இது (மூக்கு) மணங்கள் பலவற்றை நுகர்ந்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி மூக்கின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(9)
மூக்கு, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(10) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {மூக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(11)
அலர்க்கன், “இது (இந்த நாக்கு), சுவைமிக்கச் சுவைகளை அனுபவித்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி நாக்கின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(12)
நாக்கு, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(13) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(14)
அலர்க்கன், “தீண்டலுக்குரிய பல்வேறு பொருட்களைத் தொடும் தோலானது {துவக்கானது}, அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கங்க {கழுகின்} இறகுகளுடன் கூடிய பல்வேறு கணைகளால் அந்தத் தோலைப் பிளக்கப் போகிறேன்” என்றான்.(15)
தோலானது, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(16) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {தோலின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(17)
அலர்க்கன், “இவை (காதுகள்) பல்வேறு ஒலிகளைக் கேட்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கணைகளைக் கூராக்கிக் காதுகளின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(18)
காதுகள், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(19) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றன. {காதுகளின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(20)
அலர்க்கன், “கண்கள், பல்வேறு நிறங்களைக் கண்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கூரிய கணைககைக் கொண்டு கண்களை அழிக்கப்போகிறேன்” என்றான்.(21)
கண்கள், “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(22) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(23)
அலர்க்கன், “இது (இந்தப் புத்தி), ஆராயும் முறையின் {பிரஜ்ஞையினால்} துணை கொண்டு பல தீர்மானங்களை {பலவித நிச்சயங்களை} எட்டுகிறது. எனவே, கணைகளைக் கூராக்கி இந்தப் புத்தியின் மேல் ஏவப்போகிறேன்” என்றான்.(24)
புத்தி, “ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய். என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக” என்றது {என்றனர் பித்ருக்கள்}”.(25)
{பித்ருக்குள் சொன்னதாகப்} பிராமணர் தொடர்ந்தார், “அப்போது, செய்வதற்கரிய கடுந்தவங்களை அங்கேயே செய்த அலர்க்கன், (தன் தவங்களின்) உயர்ந்த சக்தியின் மூலமும், இந்த ஏழையும் அழிப்பதற்குரிய கணைகளை அடையத் தவறினான்.(26) பலம் கொண்ட அவன், அப்போது குவிந்த மனத்துடன் சிந்திக்கத் தொடங்கினான். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே {பரசுராமா}, நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையான அலர்க்கன், நீண்ட காலம் சிந்தித்தும் யோகத்தைவிடச் சிறந்த வேறெதையும் அடையத் தவறினான். ஒரே நோக்கத்தில் தன் மனத்தை நிறுவிய அவன், யோகத்தில் ஈடுபட்டவாறே முற்றிலும் அசையாதிருந்தான்[1].(27,28) சக்தியுடன் கூடிய அவன், யோகத்தின் மூலமாகத் தன் ஆன்மாவுக்குள் நுழைந்து, ஒரே கணையால் தன் புலன்கள் அனைத்தையும் கொன்று, அதன் மூலம் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(29)ஆச்சரியத்தால் நிறைந்த அந்த அரசமுனி அப்போது இந்த ஸ்லோகத்தைப் பாடினான்: {அலர்க்கன்}, “ஐயோ, புறச்செயல்கள் அனைத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது பரிதாபத்திற்குரியது.(30) ஐயோ, இதற்கு முன்பு இன்பங்களில் தாகத்துடன் ஆசையுள்ள நாம் அரசுரிமையை (அரசுரிமையின் இன்பங்களை) விரும்பினோம். அதன்பிறகு நான் இதைக் கற்றிருக்கிறேன். யோகத்தைவிட உயர்ந்த மகிழ்ச்சி வேறேதும் இல்லை” {என்றான் அலர்க்கன்}.(31) ஓ! ராமா, இஃதை அறிவாயாக. க்ஷத்திரியர்களைக் கொல்வதை நிறுத்துவாயாக. கடுந்தவங்களைப் பயில்வாயாக. அப்போது நீ நன்மையை அடைவாய்” என்றனர் {பித்ருக்கள்}.(32)
இவ்வாறு தமது பாட்டன்மாரால் சொல்லப்பட்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, கடுந்தவங்களைப் பயின்றார். அவற்றைப் பயின்ற அந்த உயர்ந்த அருளைக் கொண்டவர் {பரசுராமர்}, அடைவதற்கரிதான வெற்றியை அடைந்தார்” {என்றார் பிராமணர்}.(33)
காமமடக்கல்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 31-மன்னன் அம்பரீஷ்ன் சொன்ன மோக்ஷஸாதன வழிமுறையைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…
பிராமணர், “இவ்வுலகில் {குணங்கள் என்ற} மூன்று பகைவர்கள் இருக்கின்றன. குணங்களுக்கு ஏற்புடைய வகையில் அவை ஒன்பது வகையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உவகை {ப்ரஹர்ஷம்}, மனநிறைவு {பிரீதி}, மகிழ்ச்சி {ஆநந்தம்} ஆகிய மூன்று குணங்களும் நல்லியல்பின் {சத்வத்தின்} தொடர்புடையவை ஆகும்[1].(1) பேராசை {சோகம்}, கோபம் மற்றும் வெறுப்பு {துவேஷம்} ஆகிய மூன்று குணங்களும் ஆசையின் {ரஜஸின்} தொடர்புடையவை ஆகும். தளர்ச்சி {ஸ்வப்நம்}, சோம்பல், திரிபுணர்வு {மோஹம்} ஆகிய மூன்று குணங்களும் இருளின் {தமஸின்} தொடர்புடையவை ஆகும்.(2) புத்தியுள்ள மனிதன் கணைமாரிகளால் இவற்றை வெட்டி, அமைதியான ஆன்மாவுடன் புலன்களைக் கட்டுப்படுத்தி, சோம்பலில் இருந்து விடுபட்டு, மற்றவற்றை வெல்லத் துணிய வேண்டும்[2].(3)பழைய யுகங்களை {கல்பங்களைக் குறித்து} நன்கறிந்தவர்கள், அமைதியான ஆன்மாவை அடைந்த மன்னன் அம்பரீஷனால் இது தொடர்பாகப் பழங்காலத்தில் பாடப்பட்ட ஸ்லோகங்களைச் சொல்கின்றனர்.(4) {பற்று, பேராசை முதலிய} பல்வேறு வகைக் குற்றங்கள் {தோஷங்கள்} பெருகி, நீதிமான்கள் {ஸாதுக்கள்} பீடிக்கப்பட்டபோது, பெரும் புகழைக் கொண்டவனான அம்பரீஷன், அரசுரிமையை ஏற்பதற்காகத் தன் பலத்தைப் பயன்படுத்தினான்[3].(5) தன் குற்றங்களை அடக்கி, நீதிமான்களை வழிபட்ட அவன், பெரும் வெற்றியை அடைந்து இந்த ஸ்லோகங்களைப் பாடினான்.(6){அம்பரீஷன்}, “என் குற்றங்கள் பலவற்றை நான் வென்றேன். பகைவர்கள் அனைவரையும் நான் கொன்றேன். ஆனால், அழிக்கப்படுத்தகுந்த ஒரு பெரிய தீமை என்னால் அழிக்கப்படாமல் இருக்கிறது.(7) அந்தக் குற்றத்தால் தூண்டப்படும் இந்த ஜீவன், ஆசையில் இருந்து விடுதலை அடையத் தவறுகிறது. ஆசையால் பீடிக்கப்படும் ஒருவன் அறிந்து கொள்ளாமலேயே அகழிகளுக்குள் {பள்ளங்களுக்குள்} ஓடுகிறான்.(8) அந்தக் குற்றத்தால் {தோஷத்தால்} தூண்டப்படும் அவன், தடை செய்யப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறான். கூர்முனை வாளால் நீ அந்தப் பேராசையை {லோபத்தை} வெட்டுவாயாக.(9)
பேராசையில் இருந்து விருப்பம் எழுகிறது. விருப்பத்தில் இருந்தே கவலையும் பாய்கிறது. விருப்பத்தின் வசப்படும் மனிதன் ஆசை {ரஜோ குணம்} தொடர்புடைய குணங்கள் பலவற்றை அடைகிறான்.(10) இவை அனைத்தையும் அடைந்த பிறகு அவன் இருளின் {தமோ குணத்தின்} தொடர்புடைய பல குணங்களை அடைகிறான்.(11) அந்தக் குணங்களின் விளைவால் அவன் உடலோடு கலந்த பற்றுகளுடன் மீண்டும் மீண்டும் பிறவிகளை அடைந்து செயல்படத் தூண்டப்படுகிறான். உயிர்வாழும் காலம் தீர்ந்ததும், பிளந்து சிதறிய உடலைக் கொண்ட அவன் மீண்டும் பிறவிக்குக் காரணமான மரணத்தை அடைகிறான்.(12) எனவே, இதை முறையாகப் புரிந்து கொண்டு, புத்தியால் பேராசையை வெல்லும் ஒருவன் தன் ஆன்மாவுக்குள் ஓர் அரசை விரும்ப வேண்டும். இதுவே (உண்மையான) அரசாகும் {ராஜ்யமாகும்}. வேறு அரசேதும் இங்கே இல்லை. முறையாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஆன்மாவே மன்னனாவான்” {என்றான் அம்பரீஷன்}.(13)
பெரும்புகழைக் கொண்டவனும், முதன்மைக் குற்றமான பேராசையை வெட்டியவனுமான மன்னன் அம்பரீஷன், அரசு குறித்துப் பாடி தன் முன்னேயே வைத்துக் கொண்ட ஸ்லோகங்கள் இவையே ஆகும்” என்றார் {பிராமணர்}.(14)
தர்மச்சக்கரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 32-மமதை விலக்கல் குறித்து ஒரு பிராமணனுக்கும் மன்னன் ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…
பிராமணர், “ஓ! பெண்ணே, இது தொடர்பாக ஒரு பிராமணருக்கும், (மன்னன்) ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) மன்னன் ஜனகன், (ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்) குற்றம் புரிந்த ஒரு பிராமணனைத் தண்டிக்க விரும்பி, அவனிடம், “நீ என் ஆட்சிப்பகுதிகளில் வசிக்கலாகாது” என்றான்.(2)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், மன்னர்களில் சிறந்தவனான அவனிடம் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, உன் ஆளுகைக்குள் உள்ள ஆட்சிப்பகுதிகளின் எல்லைகளை எனக்குச் சொல்வாயாக.(3) ஓ! தலைவா, நான் மற்றொரு மன்னனின் ஆட்சிப்பகுதிக்குள் வசிக்க விரும்புகிறேன். ஓ! பூமியின் தலைவா, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் உன் ஆணைக்குக் கீழ்ப்படிய நான் விரும்புகிறேன்” என்றான்.(4)
புகழ்பெற்ற பிராமணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டும், வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே ஒரு சொல்லையும் மறுமொழியாகச் சொல்லாதிருந்தான்.(5) சூரியனை விழுங்கும் கோளை {ராஹுவைப்} போல, அளவிலா சக்தி கொண்ட அந்த மன்னனின் புத்தித் திடீரென மயங்கியதால், அவன் சிந்தனையில் மூழ்கியவாறு அமர்ந்தான்.(6) அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், ஆறுதலடைந்த அந்த மன்னன், ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு அந்தப் பிராமணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(7)ஜனகன், “மூதாதையர் வழியாக எனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருந்தாலும், மொத்த பூமியில் தேடினாலும் என் ஆட்சிப்பகுதியை நான் காணத் தவறுகிறேன்.(8) பூமியில் அதைக் காண நான் தவறியபோது, (அதை) மிதிலையில் தேடினேன். மதிலையில் நான் அதைக் காணத் தவறியபோது, என் பிள்ளைகளுக்கு மத்தியில் அதைத் தேடினேன்.(9) அங்கேயும் நான் அதைக் காணத் தவறியபோது, எனக்குப் புத்தி மயக்கம் ஏற்பட்டது. அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், நுண்ணறிவு எனக்குத் திரும்பக் கிடைத்தது.(10) அப்போது எனக்கென ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது அனைத்தும் என் ஆட்சிப்பகுதியே என நினைத்தேன். இந்த உடலும் எனதில்லை, அல்லது மொத்த பூமியும் எனதே.(11) அதே நேரத்தில், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அது பிறருக்குச் சொந்தமான அளவுக்கு எனக்கும் சொந்தம் என நினைக்கிறேன். எனவே, விரும்பியவரை நீ (இங்கேயே) வசிப்பாயாக. விரும்பிய வரையில் அனுபவிப்பாயாக” என்றான்.(12)
பிராமணன், “மூதாதையர் வழியாக உனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருக்கும்போது, எந்தப் புத்தியைச் சார்ந்து, {எனதென்ற} அந்த மமதையை விட்டாய் என்பதை எனக்குச் சொல்வாயாக.(13) அனைத்தும் உன் ஆட்சிப்பகுதியாக அமைகிறது என்ற தீர்மானத்திற்கு எந்தப் புத்தியைச் சார்ந்து நீ வந்தாய்? உண்மையில், எந்தக் கருத்தின் மூலம் உனக்கு ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது {எந்தக் கருத்தின் மூலம்} அனைத்தும் உனது ஆட்சிப்பகுதியாகிறது?” என்று கேட்டான்.(14)
ஜனகன், “அனைத்துக் காரியங்களிலும் இங்கே உள்ள {செழுமை மற்றும் வறுமை என்ற} கட்டுவரம்புகள் அனைத்தும் முடிவுள்ளவை என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே, எனதென்று அழைக்கப்படக்கூடிய எதையும் என்னால் காண முடியவில்லை.(15) இது யாருடையது என்று (கருதி), எவருடைய உடைமையையும் குறித்த வேத உரையை நினைத்தேன். எனவே, எனது என்ற (என்று அழைக்கக்கூடிய) எதையும் என் புத்தியைக் கொண்டு என்னால் காண முடியவில்லை[1].(16) இந்தக் கருத்தைச் சார்ந்தே நான் மமதையைக் கைவிட்டேன். நான் எங்கும் ஆட்சிப் பகுதியைக் கொண்டுள்ளேன் என்ற தீர்மானத்திற்கு வர நான் சார்ந்திருக்கும் கருத்தென்ன என்பதை இப்போது கேட்பாயாக.(17) என் மூக்கில் உள்ள மணங்களையும் எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட பூமியானது எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(18) என் நாவுடன் தொடர்புடைய சுவைகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட நீர் எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(19)என் கண்களுக்குத் தொடர்புடைய நிறம் அல்லது ஒளியை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒளி எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(20) என் தோலுடன் தொடர்புடைய தீண்டல் உணர்வுகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட காற்று, எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(21) என் காதுகளுடன் தொடர்புடைய ஒலிகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒலிகள் எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டவையே.(22) என் மத்தில் எப்போதும் உள்ள மனத்தை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட மனமானது எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டதே.(23) நான் செய்யும் இந்தச் செயல்கள் அனைத்தும், தேவர்கள், பித்ருக்கள், பூதங்கள் மற்றும் விருந்தினர்களுக்கானவையே” என்றான் {ஜனகன்}.(24)
அப்போது புன்னகைத்த அந்தப் பிராமணன் மீண்டும் ஜனகனிடம், “நான் தர்மன், உன்னைச் சோதிக்கவே இன்று இங்கே வந்தேன்.(25) பிரம்மத்தை உந்தியாகக் கொண்டதும், புத்தியை ஆரங்களாகக் கொண்டதும், ஒழிவடையாததும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தைச்} சுற்றளவாகக் கொண்டதுமான இந்தச் சக்கரத்தை {தர்மச்சக்கரத்தை} இயக்கத்தில் நிறவக்கூடியவன் நீயே” என்றான்.(26)
பிரம்மஜ்ஞானம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 33-தம் மகிமையைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்…
பிராமணர், “ஓ! மருண்டவளே, உன் புத்தியைக் கொண்டு நிந்திக்கும் வகையில் நான் இவ்வுலகில் திரியவில்லை. நான் வேத ஞானம் கொண்ட ஒரு பிராமணன் ஆவேன். நான் விடுதலை பெற்றவன் {முக்தன்}. நான் ஒரு காட்டுத் துறவி. நான் ஓர் இல்லறத்தானின் கடமைகளை நோற்பவன். நோன்புகளையும் நோற்கிறேன்.(1)
நல்ல மற்றும் தீய செயல்களைக் கொண்டு நீ பார்க்கும் வகையில் நானில்லை. இவ்வண்டத்தில் உள்ள அனைத்திலும் நான் படர்ந்தூடுருவி இருக்கிறேன் {வியாபித்திருக்கிறேன்}.(2)
இவ்வுலகில் அசைவனவாகவோ, அசையாதனவாகவோ இருக்கும் உயிரினம் எதுவும், அனைத்து மரங்களிலும் உள்ள நெருப்பைப் போல அனைத்தையும் எரிப்பவனாக {அக்னியாக} என்னை அறிகின்றன.(3)
(ஒரு கையில்) மொத்த உலகத்தின் ஆட்சியுரிமையோ, சொர்க்கத்தின் ஆட்சியுரிமையோ இருக்கிறது, அல்லது {மறுகையில்} (அண்டத்துடன் {பிரம்மத்துடன்} என்னை அடையாளம் காணும்) இந்த ஞானமும் {புத்தியும்} இருக்கிறது. ஞானமே {புத்தியே} என் செல்வமாகும்[1].(4)இல்லறத்தாராகவோ, காட்டில் வசிப்பவராகவோ, ஆசான்களுடன் வசிப்பவராகவோ, சந்நியாசிகளின் மத்தியில் வசிப்பவராகவோ அதை {புத்தியைப்} புரிந்து கொள்பவதே பிராமணர்களுக்கான ஒற்றைப் பாதையாகும்[2].(5)குழப்பமற்றவையான பல {வாழ்வுமுறை / ஆசிரம} அடையாளங்களின் மூலம் ஞானம் {புத்தி} ஒன்றே வழிபடப்படுகிறது. எந்த அடையாளங்களையும், வாழ்வுமுறைகளையும் பின்பற்றுவோர், அமைதியைத் தன் சாரமாகக் கொண்ட {அடக்கமுள்ள} புத்தியை அடைவதன் மூலம், பல்வேறு ஆறுகள் கடலில் கலப்பதைப் போல அந்த ஒன்றையே அடைகின்றனர்[3].(6)இந்தப் பாதையைப் புத்தியின் உதவியுடன் கடக்கலாமே அன்றி உடலால் முடியாது. செயல்களுக்குத் தொடக்கமும், முடிவும் உண்டு, உடலானது செயல்களையே தன் கட்டுகளாக {பந்தங்களாக்} கொண்டுள்ளது[4].(7)எனவே, ஓ! அருளப்பட்ட மங்கையே, மறுமையைக் குறித்த எந்த அச்ச உணர்வும் உனக்குத் தேவையில்லை. உண்மையான உட்பொருளில் {பிரம்ம ஞானத்தில்} உன் இதயத்தை {புத்தியைச்} செலுத்தினால் என் ஆன்மாவுக்குள் நீ வருவாய் {என்னுடைய ஆத்மாவை நீ அடைவாய்}” என்றார் {பிராமணர்}.(8)
க்ஷேத்ரஜ்ஞன் நானே! – அஸ்வமேதபர்வம் பகுதி – 34-பிராமணரும், அவரது மனைவியும், மனமும் புத்தியும் என்பதை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…
பிராமணரின் மனைவி {பிராம்மணி}, “அற்பு புத்தி உள்ளவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனுமான ஒரு மனிதனால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. என் புத்தியானது மிகச் சிறியதாகவும், சுருக்கமானதாகவும், குழம்பியதாகவும் இருக்கிறது.(1) (நீர் சொல்லும்) ஞானத்தை அடைவதற்குரிய வழிமுறைகளை எனக்குச் சொல்வீராக. ஞானம் பாயும் அந்த ஊற்றுக் கண்ணைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றாள்.(2)
பிராமணர், “பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள புத்தியானது கீழ் அரணி என்றும்; ஆசான் மேல் அரணி என்றும், தவங்களும், சாத்திரங்களில் நல்ல அறிவும் {அந்த அரணிக்கட்டைகளுக்குள்} உராய்வை ஏற்படுத்தும் காரணிகள் என்றும் அறிவாயாக. அதனிலிருந்து ஞானமெனும் நெருப்பு உண்டாகும்.(3)” என்றார்.(3)
பிராமணரின் மனைவி, “இந்தப் பிரம்ம அடையாளத்தைப் பொறுத்தவரையில், எது க்ஷேத்ரஜ்ஞன் என்று பெயரிடப்படுகிறது? உண்மையில், அதை {அந்த அடையாளத்தைப்} பற்றக்கூடிய {அதைக் குறித்த} விளக்கம் எங்கே தோன்றுகிறது.?” என்று கேட்டாள்[1].(4)பிராமணர், “அவன் {க்ஷேத்திரஜ்ஞன்} அடையாளங்கள் அற்றவனாகவும், குணங்களற்றவனாகவும் இருக்கிறான். அவனே எனக் கருதப்படக்கூடிய எந்தக் காரணமும் இல்லை. எனினும், அவனைக் கைப்பற்றவோ, கைப்பாற்றாதிருக்கவோ உரிய வழிமுறைகளை உனக்குச் சொல்லப் போகிறேன்.(5)
நல்ல வழிமுறைகளைக் காணலாம்; வண்டுகளால் (உணரப்படும் மலர்களைப் போல) அவற்றை உணரலாம். அந்த வழிமுறைகள் செயல்களால் தூய்மையாக்கப்பட்ட புத்தியைக் கொண்டவையாகும். தூய்மையடையாத புத்தியைக் கொண்டோர், தங்கள் அறியாமையின் மூலம், அந்த உட்பொருள் ஞானம் மற்றும் பிறவற்றின் குணங்களோடு இருப்பதாகக் கருதுகிறார்கள்[2].(6) இது செய்யப்படவேண்டும், அல்லது இது செய்யப்படக்கூடாது என்று விடுதலையை {முக்தியை} அடைவதற்கான விதிகள் வகுக்கப்படவில்லை. எவரிடம் ஆன்ம அறிவு எழுகிறதோ அவனால் மட்டுமே காணவும், கேட்கவும் முடியும்[3].(7) புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ஒருவன், வெளிப்பட்டவற்றையும், வெளிப்படாதவற்றையும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பல பகுதிகளாகப் புரிந்து கொள்ள வேண்டும்.(8) உண்மையில் ஒருவன் வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட பல்வேறு பொருட்களையும், நேரடியாக உணரக்கூடிய அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது, எதற்கு மேல் எதுவும் இல்லையோ அது {பிரம்மஜ்ஞானம்}, (தியானம், தற்கட்டுப்பாடு முதலிய) பயிற்சிகளில் இருந்து உண்டாகும்” என்றார்[4]“.(9)அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “அப்போது, க்ஷேத்திரஜ்ஞன் அழிந்ததும் அந்தப் பிராமணரின் மனைவியுடைய மனமானது, க்ஷேத்திர ஞானத்தின் விளைவால் க்ஷேத்திரஜ்ஞனைக் கடந்த ஒன்றானது” என்றான்[5].(10)அர்ஜுனன், “உண்மையில், ஓ! கிருஷ்ணா, இத்தகைய வெற்றியை அடைந்தவர்களான அந்தப் பிராமணனின் மனைவியும், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரும் எங்கே இருக்கின்றனர். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இது குறித்து எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(11)
அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன}, “என் மனமே அந்தப் பிராமணன் என்றும், என் புத்தியே அந்தப் பிராமணனின் மனைவி என்றும் அறிவாயாக. ஓ! தனஞ்சயா, க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லப்படுபவன் நானே” என்றான்.(12)
பரப்பிரம்ம ஸ்வரூபம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 35-பரப்பிரம்மத்தையும், அதனை அடையும் வழிமுறையையும் குறித்து ஓர் ஆசானுக்கும், சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், முனிவர்களுக்குப் பிரம்மன் சொன்னதையும் அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்…
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “உயர்ந்த அறிவுப்பொருளான பிரம்மத்தைக் குறித்து எனக்கு விளக்குவதே உனக்குத் தகும். உன் கருணையால் எனது மனம் நுட்பமானவையும், ஆய்வு சார்ந்தவையுமான இந்த விளக்கங்களில் திளைத்திருக்கிறது” என்று கேட்டான்.(1)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, “பிரம்மம் குறித்த காரியத்தில் ஓர் ஆசானுக்கும், அவரது சீடருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழைய வரலாறு இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! பகைவர்களை எரிப்பவனே, ஒரு காலத்தில் ஒரு புத்திசாலி சீடன், (சுகமாக) அமர்ந்திருந்தவரும், கடும் நோன்புகளைக் கொண்டவரும், தன் ஆசானுமான ஒரு குறிப்பிடத்தக்க பிராமணரிடம், “உண்மையில், உயர்ந்த நன்மை யாது?(3) ஓ! புனிதமானவரே, உயர்ந்த நன்மையை அடைய விரும்பி, என்னை நான் உம் பாதங்களில் கிடத்திக் கொள்கிறேன். ஓ! கல்விமானான பிராமணரே, நான் கேட்பதை எனக்கு விளக்கிச் சொல்லுமாறு தலைவணங்கி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.(4)
ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனனே}, இவ்வாறு சொன்ன அந்தச் சீடனிடம் அந்த ஆசான், “ஓ! மறுபிறப்பாளனே, உன் ஐயங்கள் அனைத்திற்கும் நான் விளக்கம் சொல்வேன்” என்றார்.(5)
ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {அர்ஜுனனே}, தன் ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தன் ஆசானிடம் பேரர்ப்பணிப்பு கொண்டவனுமான அந்தச் சீடன், கூப்பிய கரங்களுடன் பின்வருமாறு பேசினான். ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, அவன் சொன்னதைக் கேட்பாயாக.(6)
அந்தச் சீடன், “நான் எங்கிருந்து வந்தேன்? நீர் எங்கிருந்து வந்தீர்? உயர்ந்த உண்மை எதுவோ அதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் எந்த மூலத்திலிருந்து உண்டாகின?(7) உயிரினங்கள் எதைக் கொண்டு வாழ்கின்றன? அவற்றின் வாழ்வின் அளவு எவ்வளவு? உண்மை எது? ஓ! கல்விமானான பிராமணரே, தவம் எது? நல்லோரால் குணங்கள் என்றழைக்கப்படுவன எவை?(8) மங்கலப் பாதைகள் என்றழைக்கப்படுபவை எவை? மகிழ்ச்சி எது? பாவம் எது? ஓ! புனிதமானவரே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, ஓ! கல்விமானான முனிவரே, என்னுடைய இந்தக் கேள்விக்கு, சரியாகவும், உண்மையாகவும், துல்லியமாகவும் பதிலளிப்பதே உமக்குத் தகும். இவ்வுலகத்தில் {இம்மையில்} இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவல்ல வேறு நபர் யார் இருக்கிறார்?(9,10) ஓ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, இவற்றுக்குப் பதிலளிப்பீராக. என் ஆவல் பெரிதாக இருக்கிறது. விடுதலை {முக்தி} குறித்த கடமைகளில் நன்கு திறம்பெற்றவராக உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவர் நீரே.(11) அனைத்து வகை ஐயங்களையும் களையவல்லவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை. உலக வாழ்வுக்கு அஞ்சி, விடுதலையை அடைய நாம் விரும்புகிறோம்” என்றான்.(12)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனனே}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவனே, தன் ஆசானிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அமைதியுடையவனும், (ஆசானுக்கு) ஏற்புடைய வகையில் எப்போதும் நடந்து கொள்பவனும், கிட்டத்தட்ட ஆசானின் நிழலாகவே அவரது பக்கத்தில் நிலையாக வாழ்ந்தவனும், தற்கட்டுப்பாடுடையவனும், யதியின் வாழ்வை வாழ்ந்தவனும், பிரம்மச்சாரியும், பணிவுடன் அவரது அறிவுரையை நாடியவனுமான அந்தச் சீடனிடம், நுண்ணறிவு மிக்கவரும், நோன்புகளை நோற்பவருமான அந்த ஆசான், அனைத்துக் கேள்விகளுக்கும் முறையான விளக்கங்களைச் சொன்னார்”.(13,14)
ஆசான், “(பழங்காலத்தில்) இவை அனைத்தும் (உலகங்கள் அனைத்திற்கும் பெரும்பாட்டனான) பிரம்மன் மூலம் அறிவிக்கப்பட்டன. முனிவர்களில் முதன்மையானவர்களால் மெச்சப்படுவதும், பயிலப்படுவதும், வேத அறிவைச் சார்ந்ததுமான அஃது உண்மையான உட்பொருளின் கருத்தைக் கொண்டதாகும்.(15) நாம் ஞானத்தையே உயர்ந்த நோக்கமாகவும், துறவையே சிறந்த தவமாகவும் கருதுகிறோம். சூழ்நிலைகளால் மாற்றமடையாததும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் இருப்பதுமான ஆன்ம {ஆன்மா} அறிவின் உண்மை நோக்கத்தை நிச்சயமாக அறிந்தவன், எங்குச் செல்ல விரும்பினாலும், அங்கே செல்வதில் வென்று உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.
கல்விமானும், அனைத்துப் பொருட்களின் வசிப்பிடத்தையும் ஒரே இடத்தில் காண்பவனும், அதன் கடுமையைக் காண்பவனும்,(16,17) பன்மையில் ஒருமையைக் காண்பவனுமான ஒருவன் பேரிடரில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் வெல்கிறான்[1]. எதையும் ஆசைப்படாதவனும், எந்தப் பொருளிலும் எனது என்ற கருத்தை வளர்க்காதவனுமான ஒருவன்,(18) இவ்வுலகில் வசித்தாலும், பிரம்மத்துடன் அடையாளங்காணப்படுபவனாகக் கருதப்படுவான். பிரதானத்தின் (அல்லது இயற்கையின்) குணங்களைக் குறித்த உண்மையை அறிந்தவனும், இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களின் படைப்பையும் அறிந்தவனும்,(19) எனது என்ற கருத்தை அமைத்துக் கொள்ளாதவனும், செருக்கற்றவனுமான ஒருவன், தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} நிச்சயம் வெல்வான்.வெளிப்படாததைத் தன் முளைப்பயிராகக் கொண்டதும், புத்தியைத் தன் தண்டாகக் கொண்டதும், உயர்ந்த சுய நினைவை {பெரிய அகங்காரத்தைத்} தன் கிளைகளாகக் கொண்டதும், உயிரணுவின் உணர்வுகளைத் தன் தளிர்களாகக் கொண்டதும், (ஐம்)பெரும்பூதங்களைத் தன் மலர் மொட்டுகளாகக் கொண்டதும், இலைகளுடன் கூடியவையும், மலர்களை எப்போதும் கொண்டவையுமான கொம்புகளாகத் திரள்கூறுகளைக் கொண்டதும், இருப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் சார்ந்திருப்பதும், பிரம்மத்தையே வித்தாகக் கொண்டதும், நித்தியமானதுமான பெரும் மரத்தை முறையாகப் புரிந்து கொண்டு அறிவெனும் கூரிய வாளால் அனைத்து தத்துவங்களையும் வெட்டுபவன், பிறப்பிறப்பைக் கைவிட்டு இறவாமையை அடைகிறான் {அமரனாகிறான்}.(20-23) சித்தர் கூட்டங்களால் நன்கறியப்பட்டவையும், தொலை சுழல்கள் {முந்திய கல்பத்தில் உள்ளவையும்}, உண்மையில் நித்தியமானவையும், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் முதலியவை தொடர்பானவையுமான தீர்மானங்கள், அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகியவற்றை,(24) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, நான் உனக்கு அறிவிக்கப் போகிறேன். இவை நல்லவை என்றழைக்கப்படுபவையாக அமைந்திருக்கின்றன. ஞானம் கொண்ட மனிதர்கள், இவ்வுலகில் அவற்றைப் புரிந்து கொண்டு வெற்றியை அடைகிறார்கள்.(25)
பழங்காலத்தில், பிருஹஸ்பதி, பரத்வாஜர், கௌதமர், பார்க்கவர், வசிஷ்டர், கசியபர், விஷ்வாமித்திரர் ஆகியோர் ஒருவரையொருவர் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஒன்றுகூடினர். அனைத்துப் பாதைகளிலும் பயணித்து, தாங்கள் செய்த செயல்களால் களைப்படைந்த பிறகு அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு ஒன்றுகூடினார்கள்.(26,27) அந்த மறுபிறப்பாளர்கள், தவசியின் மகனான அங்கிரஸைத் தங்கள் தலைமையில் கொண்டு பெரும்பாட்டனின் {பிரம்மனின்} உலகத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்திருந்த பிரம்மனைக் கண்டார்கள்.(28) சுகமாக வீற்றிருந்து அந்த உயர் ஆன்மாவிடம் தலைவணங்கிய அந்தப் பெரும் முனிவர்கள், பணிவுள்ளவர்களாக உயர்ந்த நன்மையெனக் கருதப்படக்கூடிய இந்த முக்கியமான கேள்விகளை அவனிடம் கேட்டார்கள்.(29)
{அவர்கள்}, “ஒரு நல்ல மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? பாவத்தில் இருந்து ஒருவன் எவ்வாறு விடுதலை அடைவான்? எங்களுக்கு மங்கலமான பாதைகள் எவை? வாய்மை எது? பாவம் எது?(30) எந்தச் செயல்பாட்டின் மூலம் வடக்கு {உத்தரம்}, தெற்கு {தக்ஷிணம்} எனும் இரு பாதைகள் {கர்மமார்க்கங்கள்} அடையப்படுகின்றன? அழிவு என்றால் என்ன? விடுதலை {முக்தி} என்றால் என்ன? இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களின் பிறப்பும், இறப்பும் என்னென்ன?” {என்று கேட்டனர்}.(31)
ஓ! சீடா, இவ்வாறு கேட்கப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} சாத்திரங்களுக்கு இணக்கமான வகையில் அவர்களிடம் என்ன சொன்னான் என்பதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். நீ கேட்பாயாக.(32)
பிரம்மன், “அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் வாய்மையில் இருந்து பிறக்கின்றன. அவை தவத்தின் (அல்லது செயல்பாட்டின்) மூலமே வாழ்கின்றன. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவர்களே, இதைப் புரிந்து கொள்வீராக. அவற்றினுடைய செயல்பாடுகளின் விளைவால், தங்கள் சொந்த மூலத்தைக் கடந்து அவை வாழ்கின்றன[2].(33) வாய்மையானது, குணங்களுடன் கலக்கும்போது, எப்போதும் ஐந்து குறியீடுகளுடன் கொண்டதாகிறது. வாய்மையே பிரம்மன், வாய்மையே தவம், வாய்மையே பிரஜாபதி.(34) வாய்மையிலிருந்தே அனைத்து உயிரினங்களும் உண்டாகின. வாய்மையே இருப்பிலுள்ள அண்டமாகும். இதன்காரணமாகவே, யோகத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களும், கோபம் மற்றும் கவலையைக் கடந்தவர்களும், (ஒவ்வொருவரும் கடக்க வேண்டியதும், கீழே உள்ளதுமான சதுப்புநிலத்தைத் தவிர்த்து அனைவரும் செல்ல வேண்டிய) பாலமாக அறத்தைக் கருதுபவர்களுமான பிராமணர்கள் வாய்மையைப் புகலிடமாக அடைகின்றனர். ஒருவரையொருவர் தடுப்பவர்களும், ஞானம் கொண்டவர்களுமான பிராமணர்களையும், வகைகளையும் {வர்ணங்களையும்}, நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சார்ந்தவர்களையும் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(35-37) அறம் அல்லது கடமை என்பது நான்கு கால்களைக் கொண்டிருந்தாலும் ஒன்றேயாகும். மறுபிறப்பாளர்களே, மங்கலமானதும், நன்மையை விளைவிக்கக்கூடியதுமான பாதையைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன்.(38)ஞானம் கொண்ட மனிதர்கள், பிரம்மத்தோடு அடையாளங் காணப்படும் நிலையை அடைவதற்காக இந்தப் பாதையிலேயே தொடர்ந்து நடக்கிறார்கள். உயர்ந்ததும், புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமானதுமான அந்தப் பாதையைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன்.(39) உயர்வாக அருளப்பட்டவர்களே, எது உயர்ந்த இருக்கையோ அதை முழுமையாகவும் விரிவாகவும் புரிந்து கொள்வீராக. பிரம்மச்சாரிகளின் தொடர்புடைய வாழ்வுமுறையே {ஆசிரமமே} முதற்படியாகச் சொல்லப்படுகிறது.(40) இல்லறம் இரண்டாம் படியாகும். அதன் பிறகு காட்டுவாசமாகும். அதன் பிறகு வருவது, அத்யாத்மா தொடர்பான உயர்ந்த படி என்று அறியப்பட வேண்டும்[3].(41) அத்யாத்மாவை அடையாதவரை {சந்நியாசம் பெற்று ஆத்மதரிசனம் உண்டாகாதவரை} ஒருவன் ஒளி, வெளி (அல்லது ஆகாயம்), சூரியன், காற்று {வாயு} ஆகியவற்றையும் இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரையும் பார்க்க முடியாது.(42)(அத்யாத்மாவை அடைவதற்குரிய) வழிமுறைகளை நான் அறிவிக்கப் போகிறேன். அவற்றை நீங்கள் முதலில் புரிந்து கொள்வீராக. கனிகள், கிழங்குகள் மற்றும் காற்றை உண்டு, காடுகளில் வசிக்கும் தவசிகளால் பின்பற்றப்படும் காட்டு வாழ்வுமுறையானது {வானப்ரஸ்தாஸ்ரமமானது}, மூன்று மறுபிறப்பாள வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்} விதிக்கப்பட்டிருக்கிறது. இல்லற வாழ்வுமுறை {கிருஹஸ்தாஸ்ரமம்} அனைத்து வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்} விதிக்கப்பட்டிருக்கிறது.(43,44) ஞானம் கொண்டவர்கள், அறம் அல்லது கடமையானது நம்பிக்கையையே {சிரத்தையையே} தன் (முக்கியக்) குறியீடாகக் கொண்டுள்ளது என்று சொல்கின்றனர். இவ்வாறே தேவர்களிடம் செல்ல வழிவகுக்கும் பாதைகளை நான் உங்களுக்கு அறிவித்துவிட்டேன். இந்தப் பாதைகள் பக்திக்கான பாலங்களாகும்.(45) இவற்றில் ஒரு வாழ்வுமுறையைத் தனியாகப் பின்பற்றுபவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான மனிதன், உயிரினங்கள் அனைத்தின் உற்பத்தி மற்றும் அழிவை காலத்தில் புரிந்து கொள்வதில் எப்போதும் வெல்கிறான்.(46)
நான் இப்போது, அனைத்துப் பொருட்களிலும் பகுதிகளாக வசிக்கும் பூதங்களைக் காரணங்களுடனும், துல்லியமாகவும் அறிவிக்கப் போகிறேன்.(47) பேரான்மா {மஹத்தத்வம்}, புலப்படாதது {அவ்யக்தம்}, அஹங்காரம் (அடையாள உணர்வு), (அறிவு மற்றும் செயல்) புலன்கள் {இந்திரியங்கள்} பதினொன்று, ஐம்பெரும்பூதங்கள்,(48) ஐம்பூதங்களின் {ஒலி முதலிய} குறிப்பிடத்தக்க பண்புகள் ஆகியவை நித்திய படைப்பாக அமைகின்றன. இந்த இருபத்துநான்கு தத்துவங்களும் (இன்னும்) ஒன்றும் சொல்லப்பட்டன.(49) இந்தத் தத்துவங்கள் அனைத்தின் உற்பத்தியையும், அழிவையும் புரிந்து கொள்ளும் ஞானம் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் மத்தியில் மனிதனாக இருப்பவனுமான அந்த மனிதன், ஒருபோதும் மாயை அடையமாட்டான்.(50) தத்துவங்களையும், குணங்கள் அனைத்தையும், தேவர்கள் அனைவரையும் துல்லியமாகப் புரிந்து கொள்பவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைவதில் வெல்கிறான். கட்டுகள் {பந்தங்கள்} அனைத்தில் இருந்தும் விடுபடும் அத்தகைய மனிதன், களங்கமற்ற தூய்மை கொண்ட உலகங்கள் அனைத்தையும் அனுபவிப்பதில் வெல்கிறான்” என்றான் {பிரம்மன்}.(51)
தமஸ்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 36-தமோ குணத்தைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…
பிரம்மன், “புலப்படாததும், தெளிவில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதும் {நீக்கமற நிறைந்திருப்பதும்}, எப்போதும் நீடித்திருப்பதும், மாற்றமில்லாததுமாக எது இருக்கிறதோ, அதைக் குணங்கள் மூன்றைக் கொண்டதும், உட்பொருட்கள் {பூதங்கள்} ஐந்தைக் கொண்டதும், இணைவாசல்கள் ஒன்பதைக் கொண்டதுமான நகரமாக (அல்லது மாளிகையாக) அறிய வேண்டும்.(1) இது (பொருட்களை) வேறுபடுத்திப் பார்க்கும் மனம் உள்ளிட்ட பதினொன்றால் சூழப்பட்டதாகவும், புத்தியை ஆட்சியாளனாகக் கொண்டதாகவும், பதினொன்றின் தொகையாகவும் இருக்கிறது[1].(2) அதில் உள்ள மூன்று குழாய்கள் {நாளங்கள்} தொடர்ந்து அஃதை ஆதரிக்கின்றன. இவையே மூன்று நாடிகளாகும். தொடர்ந்து இயங்கும் இவை தங்கள் சாரமாக மூன்று குணங்களைக் கொண்டுள்ளன.(3) இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்} மற்றும் நல்லியல்பு {சத்வம்} ஆகிய இவை (மூன்றே) குணங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. இவை ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன.(4) இவை ஒன்றிலொன்று புகலிடத்தைக் கொள்கின்றன. இவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன. மேலும் இவை ஒன்றோடொன்று கலந்து இருக்கின்றன. ஐந்து (அடிப்படை) பூதங்கள் (இந்த) முக்குணங்களால் வகைப்படுத்தப்படுகின்றன {தனிச்சிறப்படைகின்றன}.(5)நல்லியல்பு {நற்குணம்/சத்வம்} இருளுக்கு {கெட்ட குணத்திற்குப்/ தமஸுக்குப்} போட்டியாகும் {எதிராகும்}. நல்லியல்புக்குப் போட்டியாக இருப்பது ஆசை {ரஜஸ்} ஆகும். நல்லியல்பும் ஆசைக்குப் போட்டியாக இருக்கிறது. நல்லியல்புக்கு இருள் போட்டியாகவும் இருக்கிறது.(6) எங்கே இருள் {தமஸ்} கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே ஆசை {ரஜஸ்} பாயக் காணலாம். எங்கே ஆசை {ரஜஸ்} கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே நல்லியல்பு {சத்வம்} பாயக் காணலாம்.(7) இருளானது {கெட்ட குணமானது/ தமஸ் குணமானது}, இரவை (அல்லது தெளிவின்மையைத்) தன் சாரமாகக் கொண்டிருப்பதை அறிய வேண்டும். {மற்ற இரண்டு குணங்களுடன் சேர்ந்து} மூன்று தன்மைகளைக் கொண்டிருக்கும் இது {தமஸ் குணம்} மாயை {மோஹம்} என்று(ம்) அழைக்கப்படுகிறது. இஃது அநீதியை (அல்லது பாவத்தைத்) தன் குறியீடாகக் கொண்டு எப்போதும் பாவம் நிறைந்த செயல்களிலேயே இருக்கிறது. இதுவே இருளின் இயல்பாக இருக்கிறது, மேலும் இது {கெட்ட குணம்} மற்றவற்றில் {மற்ற இரண்டு குணங்களிலும்} அடைபட்டிருப்பதாகவும் காணப்படுகிறது.(8) ஆசையானது {ரஜஸ் குணமானது} செயல்பாட்டையே தன் சாரமாகக் கொண்டிருக்கிறது. இது வெற்றிகரமான செயல்களுக்குக் காரணமாக அமைகிறது. இது மேலோங்கியிருக்கும்போது உற்பத்தியையே தன் குறியீடாக அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் கொண்டிருக்கிறது.(9) காந்தி, எளிமை மற்றும் நம்பிக்கை ஆகியன அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் நல்லியல்பின் {சத்வ குணத்தின்} வடிவங்களாக, அஃதாவது ஒளியாக இருப்பதாக நல்லோர் அனைவரும் கருதுகின்றனர்.(10)
அவற்றின் {தமஸ் குணத்தின்} தன்மைகளுடைய உண்மையான இயல்பை நான் காரணங்களுடன் இப்போது அறிவிக்கப் போகிறேன். இவற்றைத் திரட்டாகவும், தனித்தனியாகவும் கூறலாம். நீங்கள் அவற்றைப் புரிந்து கொள்வீர்களாக.(11) முற்றான மாயை {மோஹம்}, அறியாமை {அஞ்ஞானம்}, ஈகையின்மை {ஈயாமை}, செயலில் தீர்மானமின்மை {கர்மங்களை நிச்சயிக்காமை}, உறக்கம் {நித்திரை}, அகந்தை {கர்வம்}, அச்சம் {பயம்}, பேராசை, துயரம் {சோகம்}, நற்செயல்களை நிந்தித்தல் {புண்ணியத்தைத் தூஷிப்பது},(12) நினைவிழப்பு {மறதி}, தீர்மானத்தை எட்டுவதில் முதிர்ச்சியின்மை {நல்ல புத்தியின்மை}, நம்பிக்கையின்மை {நாஸ்திகனாக இருப்பது}, ஒழுக்க விதிகள் அனைத்தையும் மீறுதல் {கெட்ட நடை}, பாகுபாட்டை விரும்புதல் {யுக்தாயுக்தங்களை [தகுதி மற்றும் தகுதியின்மைகளைத்] தெரிந்து கொள்ளாமை}, குருட்டுத்தன்மை {எல்லா இந்திரியங்களையும் உள்ளபடி அறியாமை}, தீய நடத்தை {தாழ்ந்த ஜாதியின் தொழில்களைச் செய்வது},(13) செயற்திறன் இல்லாத போதே பெருமையடித்தல் {செய்யப்படாததைச் செய்யப்பட்டதாக நினைப்பது}, அறியாமையில் அறிவின் அனுமானம் {அஜ்ஞானத்தை ஞானமாக நினைப்பது}, நட்பின்மை (அல்லது பகைமை), தீய மனோநிலை {கெட்ட அபிப்பிராயம்}, நம்பிக்கையின்மை {அஸ்ரத்தை}, மூடப்புத்தி,(14) கோணல்புத்தி {நேர்மையில்லாமை}, சேர்ந்திருக்க இயலாமை {நல்லறிவின்மை}, பாவம் நிறைந்த செயல்பாடு {பாபகார்யம்}, புத்தியில்லாமை {அறியாமை}, எழுச்சியின்மை {(சோம்பல் முதலியவற்றால்) ஒன்றும் செய்யாமலிருப்பது}, தளர்ச்சி {பக்தியில்லாமை}, தற்கட்டுப்பாட்டின்மை {இந்திரியங்களை ஜயிக்காமலிருப்பது}, சிறுமையடைதல் {தரமிழத்தல் / இழிவான காரியத்தில் ஆசை}(15) ஆகிய இந்தக் குணங்கள் இருளுக்கு {தமஸ் குணத்திற்குச்} சொந்தமானவையாக அறியப்படுகின்றன.
இவ்வுலக மாயையுடன் தொடர்புடைய பிற மனநிலைகள் அனைத்தும் இருளின் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவையே. எப்போதும் பிறரைத் தவறாகப் பேசுவது, தேவர்களையும், பிராமணர்களையும் நிந்திப்பது,(16,17) ஈகையின்மை, பகட்டு, எண்ணமயக்கம், கோபம், மன்னிக்கும் தன்மை இல்லாமை, அனைத்து உயிரினங்களிடமும் பகைமை ஆகியன இருளின் {தமஸ் குணத்தின்} இயல்புகளாகக் கருதப்படுகின்றன.(18) (வீணான தன்மை அல்லது பயனற்ற தன்மையின் விளைவால்) செய்யப்படும் தகுதியற்ற செயல்கள் எவையும், (கொடையாளியின் தகுதியின்மை, அகாலம், பொருளில் உரிமையின்மை ஆகியவற்றின் விளைவால்) கொடுக்கப்படும் கொடைகள் எவையும், வீணாக உண்பதும் இருள் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவையே.(19) அவதூறு செய்வதில் ஈடுபடுதல், மன்னிக்கும் தன்மையின்மை, பகைமை, பகட்டு, நம்பிக்கையின்மை ஆகியவையும் இருளின் {தமஸ் குணத்தின்} இயல்புகளாகச் சொல்லப்படுகின்றன.(20) இவ்வுலக மனிதர்களில், இவை மற்றும் இவை போன்ற குற்றங்களை இயல்பாகக் கொண்டவர்களும், (சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும்) தடைகளை உடைப்பவர்களுமாக இருப்பவர்கள் அனைவரும் இருள் குணம் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவர்களாக {தாமஸர்களாகக்} கருதப்படுகிறார்கள்.(21)
எப்போதும் பாவம் நிறைந்த செயல்களையே செய்யும் இம்மனிதர்கள் பிறக்கும் கருவறைகளை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். {திர்யக் என்னும்} நரகத்திற்குச் செல்ல விதிக்கப்பட்ட அவர்கள் அந்த வகையிலேயே மூழ்குகிறார்கள். உண்மையில் அவர்கள் காட்டுமிராண்டி படைப்புகளாகப் (பிறக்கும்) நரகத்தில் மூழ்குகிறார்கள்.(22) அவர்கள் அசைவற்ற {உயிரூட்டமற்ற} பொருட்களாகவோ, விலங்குகளாகவோ, சுமை சுமக்கும் விலங்குகளாகவோ, ஊனுண்ணும் உயிரனங்களாகவோ, பாம்புகளாகவோ, புழுக்கள், பூச்சிகள் மற்றும் பறவைகளாகவோ;(23) முட்டையிடும் வகையைச் சேர்ந்த உயிரினங்களாகவோ, நான்கு கால்களைக் கொண்ட பல்வேறு உயிரினங்களாகவோ, மனிதர்களில் கிறுக்கர்களாகவோ, செவிடர்களாகவோ, ஊமைகளாகவோ, பயங்க நோய்களால் பீடிக்கப்பட்ட மனிதர்களாகவோ, தூய்மையற்றவர்களாகவோ ஆகிறார்கள்.(24) தீய நடத்தை கொண்ட இம்மனிதர்கள் எப்போதும் தங்கள் செயல்களின் குறியீடுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருளில் மூழ்குகிறார்கள். அவர்கள் எப்போதும் கீழ்நோக்கிய போக்கு கொண்டவர்களாக (கீழ்நோக்கி இடம் பெயர்பவர்களாக) இருக்கிறார்கள். இருளின் குணம் {தமஸ் குணம்} தொடர்புடைய இவர்கள் இருளில் மூழ்குகிறார்கள் {இவர்கள் அவாக்ஸ்ரோதஸுகள் [இழிவான கதியை அடைவதற்கேற்ற சித்த விருத்தியுள்ளவர்கள்] என்று சொல்லப்படுகின்றனர்}.(25)
அவர்கள் முன்னேற்றத்திற்கும், மேன்மையடைவதற்கும் உரிய வழிமுறைகளையும், உண்மையில் அவர்கள் அவர்கள் அடையும் வழிமுறைகளையும் இப்போது நான் சொல்லப் போகிறேன்.(26) மனித வகையன்றி வேறு வகையில் பிறவி எடுக்கும் மனிதர்கள், கடமைகளில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்களின் அறச் சடங்களை நோக்கமாகக் கொண்டு வளர்ந்து, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்ய விரும்பி,(27) அத்தகைய தூய்மைச் சடங்குகளின் துணை மூலம் மேல்நோக்கி உயர்வதில் வெல்கிறார்கள். உண்மையில், (தங்களை மேம்படுத்திக் கொள்ளப்) போராடும் அவர்கள் இறுதியாகப் பக்திமான்களான இந்தப் பிராமணர்கள் அடையும் அதே உலகங்களை அடைகிறார்கள். உண்மையில், அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள். இதுவே வேதத்தில் உள்ள திறனாய்வாகும்.(28) மனித வகையன்றி வேறு வகையில் பிறவி எடுப்பவர்கள், தங்கள் தங்கள் செயல்களுக்கேற்ப வளர்ந்து முதிர்ந்து, இறுதியில் அவ்வாறே மனிதப் பிறவியையும் அடைகிறார்கள்.(29) பாவம் நிறைந்த பிறவிகளாகச் சண்டாளர்களாகவோ, செவிடர்களாகவோ, குருடர்களாகவோ பிறக்கும் அவர்கள், இவ்வுலகின் போக்கில் இடம்பெயர்ந்து, சரியான முறையில் அடுத்தடுத்து உயர்ந்த சாதிகளை அடைந்து, சூத்திர வகையைக் கடந்து, இருள் {தமஸ் குணம்} தொடர்பான குணங்களின் விளைவுகளைக் கடக்கிறார்கள்.(30,31)
ஆசைக்குரிய பொருட்களில் பற்றுக் கொள்வது பெரும் மாயையெனக் கருதப்படுகிறது. தவசிகள் {வேத மந்திரங்களைக் கண்டவர்கள்; சிறந்த ஞானமுள்ளவர்கள்}, முனிவர்கள் {மனனம் செய்பவர்கள், இன்பதுன்பங்களில் கலக்கமடையாதவர்கள்}, தேவர்கள் ஆகியோரும் இம்மையில் இன்பத்தை விரும்பி மயக்கமடைகின்றனர்.(32) இருள், மாயை, பெரும் மாயை, கோபம் மற்றும் மரணம் என்றழைக்கப்படும் பெருங்குழப்பமான {தாமிஸ்ரம் மற்றும் அந்ததாமிஸ்ரம்} குருடாக்கும் தெளிவின்மை (ஆகிய இவையே ஐந்து பெருந்துன்பங்களாகும்). கோபமே பெரும் தெளிவின்மையாகும் (சில வேளைகளில் இந்தப் பட்டியலில் சேரும் பகைமையோ, வெற்றோ அல்ல).(33) கல்விமான்களான பிராமணர்களே, இருளின் (தமஸ் குணத்தின்) நிறம் (இயல்பு), தன்மை, தோற்றம் ஆகியவற்றைப் பொருத்தவரையில், அனைத்தையும் முறையான வரிசையில் மிகச் சரியாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.(34) இஃதை உண்மையில் புரிந்து கொள்பவன் யார்? இஃதை உண்மையில் காண்பவன் யார்? உண்மையில் இல்லாததை உண்மையாகக் காண்பதே, இருளின் {தமஸ் குணத்தின்} உண்மையான தன்மையாகும்.(35) இருளின் குணங்கள் பல்வேறு வகைகளில் உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இருளின் உயர்ந்த மற்றும் இழிந்த வடிவங்களை முறையாக என்னால் உங்களுக்கு விளக்கப்பட்டது. இங்கே குறிப்பிடப்பட்ட குணங்களை எப்போதும் மனத்தில் தாங்கும் மனிதன், இருள் தொடர்புடைய தன்மைகள் அனைத்தில் இருந்தும் நிச்சயம் விடுபடுவதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்}.(36)
ரஜஸ்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 37-ரஜோ குணத்தைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…
பிரம்மன், “இருப்பவற்றுள் சிறந்தவர்களே {பிராமணர்களே}, இப்போது ஆசை (குணம்) குறித்து {ரஜோ குணத்தை} உங்களுக்கு மிகச் சரியாக அறிவிக்கப் போகிறேன். உயர்வாக அருளப்பட்டவர்களே, ஆசை தொடர்புடைய குணங்கள் எவை என்பதைப் புரிந்து கொள்வீராக.(1)
(பிறருக்குத்) தீங்கிழைத்தல் {ஸந்தாபம்}, அழகு {ரூபம்}, உழைப்பு {ஸ்ரமம்}, இன்பம் {ஸுகம்} மற்றும் துன்பம் {துக்கம்}, குளிர் மற்றும் வெப்பம், தலைமை (அல்லது அதிகாரம்) {ஐஸ்வர்யம்}, போர் {சண்டை}, அமைதி, வாதம், நிறைவின்மை {வெறுப்பு}, நீடிக்குந்திறன் {பொறுமை},(2) வலிமை {பலம்}, வீரம் {சௌர்யம்}, செருக்கு {மதம்}, கோபம், முயற்சி {அலைதல்}, சச்சரவு (அல்லது மோதல்) {கலகம்}, பொறாமை, ஆசை, வன்மம் {கோள் சொல்வது}, போர் {யுத்தம்}, எனதென்ற உணர்வு அல்லது மமதை, (பிறரைப்) பாதுகாப்பது {ரக்ஷிப்பது},(3) கொலை, கட்டுதல், பீடித்தல், வாங்கல் மற்றும் விற்றல், வெட்டுதல், மற்றொருவன் அணிந்திருக்கும் கவசத்தைப் பிளத்தல்,(4) கடுமை {உக்ரம்}, கொடூரம் {பயங்கரம்}, நிந்தித்தல் {உரக்கப் பேசுதல்}, பிறர் குற்றங்களைச் சுட்டிக் காட்டல் {பிறனுடைய தனத்தில் ஆசைப்படுவது}, உலகம் சார்ந்த காரியங்களில் முற்றான அர்ப்பணிப்புள்ள எண்ணங்கள் {லோகத்தைப் பற்றின கவலை}, கவலை {தொடர்ச்சியான கவலை}, பகைமை {மாத்ஸர்யம்}, பிறரை நிந்தித்தல் {அவமதித்துப் பேசுவது}, போலிப் பேச்சு {பொய் சொல்வது}, போலியான அல்லது வீணான கொடைகள் {பொய்யான கொடை}, தயக்கம் மற்றும் ஐயம், பேச்சில் தற்பெருமை {விபரீதப் பேச்சு}, புகழ் {ஸ்தோத்திரம் செய்வது} மற்றும் இகழ் {நிந்திப்பது}, போற்றுதல் {கொண்டாதுவது}, ஆற்றல் {ப்ரதாபம்}, எதிர்ப்பு {பரிசர்யை},(5,6) (நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்களைக்) கவனித்தல் {சுஸ்ரூஷை, அதட்டல்}, (ஆசான்கள் மற்றும் பெற்றோரின் ஆணைகளுக்குக்) கீழ்ப்படிதல் {அடுப்பது}, தொண்டு {ஸேவை} அல்லது இக்கட்டில் உதவி, ஆசை அல்லது தாகத்தை வளர்த்தல், புத்திசாலித்தனம் அல்லது திறமையான நடத்தை {வியவஹாரத்தில் திறமை}, கொள்கை {நீதி பேசுவது}, கவனமின்மை {தவறுதல்}, தரக்குறைவாக நடத்தல் {அபவாதம் சொல்வது}, உடைமைகள் {எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது},(7) மனிதர்கள், பெண்கள், விலங்குகள், உயிரற்ற பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு மத்தியில் நீடித்திருக்கும் பல்வேறு வகையான அலங்காரங்கள்,(8) துயரம் {மனவருத்தம்}, நம்பிக்கையின்மை, நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் {நியமங்கள்}, (நல்விளைவுகளை) எதிர்பார்க்கும் செயல்பாடுகள், பொதுத் தொண்டுக்குரிய பல்வேறு செயல்கள்,(9) ஸ்வாஹாவைப் பொறுத்தவரையில் உள்ள சடங்குகள் {ஸ்வாஹாகாரம்}, வணக்கம் {நமஸ்காரம்}, ஸ்வதா மற்றும் வஷட் சடங்குகள் {ஸ்வதாகாரம், வஷட்காரம்}, பிறரின் வேள்விகளை நடத்தித் தருதல் {யாகம் செய்விப்பது}, கல்வி போதித்தல் {ஓதுவித்தல்}, வேள்விகளைச் செய்தல் {யாகம் செய்தல்}, கல்வி {அத்யயனம் செய்வது},(10) கொடையளித்தல் {கொடுப்பது}, கொடையேற்றல் {வாங்குவது}, பரிகாரச் சடங்குகள் {பிராயச்சித்தங்கள்}, மங்கலச் செயல்கள் {மங்களமான காரியம்}, இதையும், அதையும் வேண்டி விரும்புதல், எதற்காகவோ, யாருக்காகவோ உணரப்படும் நோக்கத்தின் தகுதிகளில் உண்டாகும் அன்பு {ஸ்நேகம்},(11) துரோகம் ,வஞ்சனை {கபடம்}, மதிப்பு மற்றும் மதிப்பின்மை, களவு {திருட்டு}, கொலை {ஹிம்ஸை}, மறைக்கும் ஆசை {அருவருப்பு}, சோர்வு {மனவருத்தம்}, விழிப்புணர்வு,(12) பகட்டுத்தோற்றம் {டம்பம்}, அகந்தை {கர்வம்}, பற்று {ஆசை}, அர்ப்பணிப்பு {பக்தி}, மனநிறைவு {திருப்தி}, மகிழ்ச்சி {மிகுந்தஸந்தோஷம்}, சூதாட்டம், மரபுநயக்கேடு {ஜனங்களைப் பற்றிய பேச்சு}, பெண்களில் இருந்து எழும் உறவுகள் {ஸம்பந்தங்கள்}அனைத்தும், ஆடல் {நர்த்தனம்}, கருவியிசை {வாத்தியம்} மற்றும் பாடல்களில் {கானம்} பற்று {அனுபவித்தல்} ஆகிய இந்தக் குணங்கள் அனைத்தும் ஆசைக்குரியவை {ரஜோகுணத்திற்குரியவை} என்று சொல்லப்படுகின்றன.(13,14)
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைத் தியானிப்பவர்களும், அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற முத்தொகையில் {புருஷார்த்தங்களில்} அர்ப்பணிப்புள்ளவர்களும்,(15) ஆசையின் தூண்டுதலால் செயல்பட்டு, ஒவ்வொரு ஆசையின் பொருட்டும் செல்வத்தை அடைவதில் களிப்படைபவர்களுமான மனிதர்கள், ஆசையால் {ரஜோகுணத்தால்} சூழப்பட்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இம்மனிதர்கள் கீழ்நோக்கிய போக்கைக் கொண்டவர்களாவர் {அர்வாக்ஸ்ரோதஸுகள்}.(16) மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் இவர்கள், இன்பத்திற்கு வசப்பட்டவர்களாகிறார்கள். இம்மைக்கு உரியவற்றிலும், மறுமைக்குரிய கனிகளிலும் இவர்கள் ஆசை கொள்கிறார்கள். இவர்கள் கொடை அளிப்பவர்களாகவும், கொடைகளை ஏற்பவர்களாகவும், பித்ருக்களுக்குக் காணிக்கைகளை அளித்து, வேள்வித்தீயில் ஆகுதிகளை ஊற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.(17) ஆசை குணங்களின் வகைகள் உங்களுக்கு (இவ்வாறே) அறிவிக்கப்பட்டன. அது {ரஜோ குணம்} வழிவகுக்கும் ஒழுக்க நடைமுறைகளும் உங்களுக்கு முறையாக விளக்கப்பட்டன. இந்தக் குணங்களை எப்போதும் புரிந்து கொள்ளும் மனிதன், ஆசை {ரஜோ குணம்} தொடர்புடைய இவை அனைத்தில் {ராஜஸமான எல்லாக் குணங்களில்} இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்வதில் வெல்கிறான்” என்றான் {பிரம்மன்}.(18)
ஸத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 38
பிரம்மன், “இனி, (நமது பட்டியலின்படி) மூன்றாவதாக வரும் சிறந்த குணத்தை {ஸத்வ குணத்தை} உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அஃது, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதாகவும், குற்றமற்றதாகவும், நல்லோரின் ஒழுக்கமாகவும் அமைந்திருக்கிறது.(1)
இன்பம் {ஆனந்தம்}, நிறைவு {பிரீதி}, மேதகைமை {மேன்மை}, அறிவொளி {பிரகாசித்தல்}, மகிழ்ச்சி {ஸுகம்}, கஞ்சத்தனமின்மை (அல்லது ஈகை) {தைன்யமில்லாதிருத்தல்}, அச்சமின்மை {பயமில்லாதிருத்தல்}, மனநிறைவு {ஸந்தோஷம்}, நம்பிக்கை கொண்ட மனநிலை {ஸ்ரத்தை},(2) மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துணிவு {தைரியம்}, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமை {அஹிம்ஸை}, சமத்துவம், வாய்மை, நேர்மை, கோபமின்மை, வன்மமின்மை {அஸூயையின்மை}, தூய்மை {சுத்தி}, புத்திக்கூர்மை {ஸாமர்த்தியம்}, ஆற்றல் {பாரக்ரமம்} (ஆகியவை நல்லியல்பின் குணம் தொடர்புடையனவாகும்).(3)
யோகக்கடமையில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், அறிவு {ஞானம்}, ஒழுக்கம் {கர்மம்}, தொண்டு {ஸேவை} ஆகியவற்றை வீணெனக் கருதி, மறுமையில் உயர்ந்ததை அடைகிறான்.(4) எனதென்ற கருத்தில் இருந்து விடுதலை, நானென்ற கருத்தில் இருந்து விடுதல், எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதல், அனைத்தையும் சம கண்ணில் பார்த்தல், ஆசையில் இருந்து விடுதலை ஆகிய இவையே நல்லோரின் நித்திய அறமாக {ஸனாதன தர்மமாக} அமைகின்றன.(5)
தன்னம்பிக்கை {நம்பிக்கை}, அடக்கம் {வெட்கம்}, மன்னிக்கும்தன்மை {பொறுமை}, துறவு {ஈதல்}, தூய்மை {சுத்தி}, சோம்பலின்மை, கொடூரமின்மை, மயக்கமின்மை {மோகமின்மை}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, இழித்துக் கூறும் மனமின்மை {கோள் சொல்லாமை},(6) மகிழ்ச்சி {ஸந்தோஷம்}, நிறைவு {திருப்தி}, பேர் உவகை {கர்வமின்மை}, பணிவு {வணக்கம்}, நன்னடத்தை {நல்ல கார்யத்தைச் செய்வது}, அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட செயல்கள் அனைத்திலும் தூய்மை {மோக்ஷத்திற்குரிய கர்மத்தைக் கபடமின்றிச் செய்தல்}, நேர்மையான புத்தி {சுத்தசித்தனாக இருத்தல்}, (பற்றுகளிலிருந்து) விடுதலை),(7) கருத்தின்மை {உதாஸீனனாக இருப்பது}, பிரம்மச்சரியம், முழுமையான துறவு {எல்லா ஆசைகளையும் விடுவது}, எனதென்ற கருத்தில் இருந்து விடுதலை {மமதையில்லாமை}, எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை {விரும்பாமை}, தொடர்ந்து நீதியைக் கடைப்பிடித்தல் {தர்மங்கெடாமல் இருப்பது},(8) கொடைகள் {தானம்}, வேள்விகள் {யாகம்}, கல்வி {அத்யயனம்}, நோன்புகள் {விரதம்}, கொடையேற்பு {பிரதிக்ரஹம்}, கடமைகளை நோற்றல், தவங்கள் ஆகியன வீணென்ற நம்பிக்கை,(9) என்ற இந்தக் குணங்களை ஒழுக்கமாகக் கொண்டவர்களும், நீதியைப் பின்பற்றுபவர்களும், வேதங்களுக்கு இணக்கமாக இருப்பவர்களுமான பிராமணர்கள், ஞானிகள் என்றும், சரியான பார்வை கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.(10)
பாவங்கள் அனைத்தையும் கைவிட்டு, துன்பத்தில் இருந்து விடுதலையடைந்தவர்களும், ஞானம் கொண்டவர்களுமான அம்மனிதர்கள், சொர்க்கத்தை அடைந்து, (தங்களுக்கென) பல்வேறு உடல்களைப் படைக்கிறார்கள்.(11)
சொர்க்கத்தில் வசிக்கும் தேவர்களைப் போலவே, இந்த உயர் ஆன்மாக்களும் தங்கள் மனத்தின் இயக்கத்தால் {ஈசித்வத்தால்} அனைத்தையும் ஆளும் சக்தி {வசித்வம்}, தற்கட்டுப்பாடு {லகுத்வம்}, நுட்பம் {அணுத்வம்} ஆகியவற்றை அடைகிறார்கள்.(12) இத்தகைய மனிதர்கள் மேல்நோக்கிய போக்கு கொண்டவர்களாக {ஊர்த்வஸ்ரோதஸுகளாகச்} சொல்லப்படுகிறார்கள். இவர்கள் அனைத்தையும் மாற்றியமைக்கவல்ல மெய்யான தேவர்களாக {வைகாரி தேவர்களாக} இருக்கிறார்கள். சொர்க்கத்தை அடையும் அவர்கள், தங்கள் இயல்பின்படியே அனைத்துப் பொருட்களையும் மாற்றி அமைக்கின்றனர்.(13) அவர்கள், தாங்கள் விரும்பும் பொருட்களை அடைந்து அவற்றை அனுபவிக்கின்றனர். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இவ்வாறே நான் நல்லியல்பின் {சத்வ} குணம் தொடர்புடைய ஒழுக்கத்தை உங்களுக்கு விளக்கிச் சொன்னேன். இவற்றை முறையாகப் புரிந்து கொள்ளும் ஒருவன் தான் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவான்.(14) நல்லியல்பு தொடர்பான குணங்களே குறிப்பாக அறிவிக்கப்பட்டன. அந்தக் குணங்களைக் கொண்ட ஒழுக்கமும் முறையாக நிறுவப்பட்டது. எந்த மனிதன் இந்தக் குணங்களை எப்போதும் புரிந்து கொள்வானோ, அவன் இந்தக் குணங்களில் பற்று கொள்ளாமலே இவற்றை அனுபவிப்பதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்}.(15)
முக்குணம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 39-முக்குணங்களைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…
பிரம்மன், “குணங்கள் அனைத்தையும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக அறிவிக்க இயலாது. ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} மற்றும் இருள் {தமஸ் குணங்கள்} ஒன்று கலந்த நிலையிலேயே காணப்படுகின்றன.(1) அவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. அவை ஒன்றையொன்று தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன. அதே போல அவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.(2) நல்லியல்பு {சத்வம்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது. இதில் ஐயமேதும் இல்லை. இருளும் {தமஸும்}, நல்லியல்பும் {சத்வமும்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது.(3) அவை ஒன்றாக இணைந்தும், கூட்டாக நகர்ந்தும் தங்கள் பயணத்தைச் செய்கின்றன. உண்மையில் காரணத்தோடோ, காரணமில்லாமலோ செயல்படும்போது அவரை ஒரே அமைப்பாகவே செயல்படுகின்றன.(4)
வளர்ச்சியில் எவ்வளவு வேறுபட்டாலும் ஒன்றோடொன்று சேர்ந்து செயல்படும் இவை அனைத்தும் பெருகும் வகையையும், குறையும் வகையையும் இப்போது அறிவிக்கப் போகிறேன்.(5) எங்கே (எடுத்துக்காட்டாக) தாழ்ந்த உயிரினங்களில் அதிக அளவில் இருள் {தமஸ்} இருக்கிறதோ, அங்கே ஆசை {ரஜஸ்} குறைவான அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறது.(6) எங்கே நடுநிலை உயிரினங்களில் அதிக அளவில் ஆசை {ரஜஸ்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} சிறிய அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடச் சிறிய அளவிலும் இருக்கிறது.(7) எங்கே மேல்நோக்கான போக்குக் கொண்ட உயிரினங்களில் அதிக அளவில் நல்லியல்பு {சத்வம்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} குறைந்த அளவிலும், ஆசை {ரஜஸ்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறதென அறியப்பட வேண்டும்.(8)
நல்லியல்பானது {சத்வம் என்பது} புலன்களில் மாற்றங்களை விளைவிக்கும் ஊற்றாகும். மேலும் அதுவே சிறந்த அறிவொளியாகவும் இருக்கிறது. நல்லியல்பைவிட உயர்ந்த கடமை வேறேதும் விதிக்கப்படவில்லை.(9) நல்லியல்பில் {சத்வத்தில்} நிலைத்திருப்பவர்கள் மேல்நோக்கிச் செல்கிறார்கள். ஆசையில் {ரஜஸில்} நிலைத்திருப்பவர்கள் நடுவில் இருக்கிறார்கள். இருளில் {தமஸில்} நிலைத்திருப்பவர்கள், தாழ்ந்த குணங்களால் வகைப்படுத்தப்பட்டுக் கீழ்நோக்கி மூழ்குவார்கள்.(10) இருள் {தமஸ்} சூத்திரனில் நிகழ்கிறது; ஆசை {ரஜஸ்} க்ஷத்திரியனிலும், உயர்ந்ததாக இருக்கும் நல்லியல்பு {சத்வம்} பிராமணனிலும் நிகழ்கின்றன. இவ்வாறே மூன்று குணங்களும் மூன்று வகைகளிலும் {வர்ணங்களிலும்} இருக்கின்றன.(11) தொலைவில் இருந்து கண்டாலும், இருள், நல்லியல்பு மற்றும் ஆசை என்ற குணங்கள் மூன்றும் கலந்த நிலையிலும், கூட்டாகவும் காணப்படுகின்றன. அவை ஒருபோதும் தனியான நிலையில் காணப்படுவதில்லை[1].(12)தீச்செயல் செய்யும் மனிதர்கள், சூரியன் எழுவதைக் கண்டு அச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் வழியில் வெப்பத்தால் பீடிக்கப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.(13) சூரியன் நல்லியல்பில் வளர்ந்தது; தீச்செயல் புரியும் மனிதர்கள் இருளை {தமஸைக்} குறிக்கின்றனர்; பயணிகள் தங்கள் வழியில் உணரும் வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் என்று சொல்லப்படுகிறது.(14) ஒளியைக் குறிக்கும் சூரியன் நல்லியல்பாகும் {ஸத்வமாகும்}; வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் கொண்டதாகும்; பர்வன் நாட்களில் சூரியன் மறைவது (அல்லது கிரஹணம்} இருளை {தமஸைக்} குறிக்கும் என்று அறியப்பட வேண்டும்.(15) இவ்வாறே இந்த முக்குணங்களும் ஒளியுடல்கள் அனைத்திலும் இருக்கின்றன. அவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வழிகளில் மீண்டும் மீண்டும் செயல்படுகின்றன.(16)
அசைவில்லா பொருட்களின் மத்தியில் இருள் {தமஸ்} குணம் அதிக அளவில் இருக்கிறது. ஆசை {ரஜஸ்} தொடர்புடைய குணங்கள், தொடர் மாற்றங்களுக்கு உட்படும் {அழகு, உறைப்பு, புளிப்பு உள்ளிட்ட} குணங்களாக அவற்றில் {அந்த அசைவற்ற பொருட்களில்} இருக்கின்றன. அவற்றின் எண்ணெய் தன்மையுள்ள குணங்கள், நல்லியல்பின் {சத்வத்தின்} தொடர்புடையனவாகும்[2].(17) பகலை மூன்று வகையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரவு மூன்று வகையாக இருக்குமாறே விதிக்கப்பட்டிருக்கிறது. பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, மாதங்கள், வருடங்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்}, ஸந்திகள்[3] ஆகியவையும் மூன்று வகையாக அறியத்தக்கவையே.(18) கொடுக்கப்படும் கொடைகள் மூன்று வகையாகும். அவற்றில் உண்டாகும் வேள்விகள் மூன்று வகையாகும். உலகங்கள் மூன்று வகையாகும்; தேவர்கள் மூன்று வகையாவர்; ஞானம் மூன்று வகையாகும்; பாதை அல்லது கதியும் மூன்று வகையாகும்.(19) கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், அறம், பொருள், இன்பம், பிராணன், அபானன், உதானன் ஆகியவையும் முக்குணங்களால் நிறைந்தவையே.(20)இவ்வுலகில் உள்ள எந்தப் பொருளிலும், அதில் உள்ள அனைத்திலும் முக்குணங்கள் நிறைந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் இந்த முக்குணங்களும் மாறி மாறி செயல்படுகின்றன.(21) உண்மையில், இந்த முக்குணங்களும் வெளிப்படாத ஒரு வடிவத்திலேயே எப்போதும் செயல்படுகின்றன. நல்லியல்பு {ஸத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் மூன்றின் படைப்பும் நித்தியமானவையே.(22) முக்குணங்களையும் உள்ளடக்கிய புலப்படாதது {அவ்யக்தமானது}, இருள் {தமஸ்}, காணப்படாதது {அவ்யக்தம்}, புனிதமானது {சிவம்}, நிலையானது {தாம்}, பிறப்பற்றது {ரஜஸ்}, கருவறை {யோனி}, நித்தியமானது {ஸநாதனம்}, இயற்கை {பிரகிருதி}, மாற்றம் அல்லது திருத்தம் {விகாரம்}, அழிவு {பிரளயம்}, பிரதானம், உற்பத்தி {பிரபவம்} மற்றும் ஈர்த்தல் {அப்யயம்}, வளர்ச்சியின்மை {அனுத்ரிக்தம்}, சிறிதல்லாதது (அதாவது பெரியது) {அநூனம்}, கலக்கமற்றது {அகம்பம்}, அசையாதது {அசலம்}, நிலையானது {த்ருவம்}, இருப்பில் உள்ளது {ஸத்}, இருப்பற்றது {அஸத்} என்று சொல்லப்படுகிறது.(23,24)
ஆன்மா தொடர்புடைய காரியங்களைத் தியானிப்போரால் இந்தப் பெயர்கள் அறியப்பட வேண்டும்.(25) புலப்படாததன் {அவ்யக்தத்தின்} பெயர்கள் அனைத்தையும், குணங்களையும், (அந்தக் குணங்களின்) தூய இயக்கங்களையும் {கதிகளையும்} மிகச் சரியாக அறிந்தவனும், பிரிவுகள் அனைத்தின் உண்மைகளையும் நன்கறிந்தவனும், உடலில் இருந்து விடுபட்டவனுமான {தேஹாபிமானம் விலகியவனுமான} மனிதன், குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு {கெடுதியற்றவனாகி} முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்” என்றான் {பிரம்மன்}.(23)
மஹத்தத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 40- மஹத்தத்வம் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…
பிரம்மன், ” புலப்படாததிலிருந்து முதலில் பெரும் நுண்ணறிவைக் கொண்டதும், அனைத்துக் குணங்களின் ஊற்றுக்கண்ணுமான பேரான்மாவானது {மஹத்தத்வம்} உண்டானது. அதுவே முதல் படைப்பென்று சொல்லப்படுகிறது.(1) அந்தப் பேரான்மாவானது {மஹத்தத்வமானது}, பேரான்மா, மதி, விஷ்ணு, ஜிஷ்ணு, பெரும் வீரமிக்கச் சம்பு {சம்பு, வீர்யவான்}, புத்தி, ஞானமடைவதற்கான வழிமுறைகள் {பிரஜ்ஞை}, உணர்வதற்கான வழிமுறைகள் {உபலப்தி}, புகழ் {கியாதி}, துணிவு {த்ருதி}, நினைவு {ஸ்ம்ருதி} என்று ஒத்த சொற்களால் {ஒரே பொருளுள்ள பல சொற்களால்} குறிப்பிடப்படுகிறது. கல்விமானான ஒரு பிராமணன் இஃதை அறிந்து கொண்டு ஒருபோதும் மாயையால் தாக்கப்படாமல் இருக்க வேண்டும்.(2,3)
அஃது அனைத்துப் பக்கங்களிலும் கைகளையும், கால்களையும் கொண்டுள்ளது. அனைத்துப் பக்கங்களிலும் அது காதுகளைக் கொண்டுள்ளது. அண்டத்தில் உள்ள அனைத்திலும் அது படர்ந்தூடுருவி இருக்கிறது.(4) பெருஞ்சக்தி கொண்ட அஃது அனைத்தின் இதயத்திலும் நிலைத்திருக்கிறது. நுட்பமடைதல் {அணிமா / உடலைப் பஞ்சினும் ஒப்பதாக மாற்றிப் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் மறைதல்}, அதிக எடையற்றத் தன்மையடைதல் {லகிமா / கனமற்றதாகும் ஆற்றல்}, செல்வாக்கு {பிராப்தி / மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடையப் பெறுதல் / காலநிலைகளை மாறச் செய்தல்} ஆகியவை அதனுடையவையே. அஃது அனைத்திற்கும் தலைவனாகவும் {ஈசானனாகவும்}, பிரகாசத்தோடு அடையாளம் காணப்படுவதாகவும் {ஜோதியாகவும்}, சிதைவை அறியாததாகவும் {அழிவற்றதாகவும்} இருக்கிறது.(5)
புத்தியின் இயல்பைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும், நல்லியல்பின் மனநிலையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அனைவரும், தியானம் பயிலும் அனைவரும், எப்போதும் யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வாய்மையில் உறுதியாக இருப்பவர்களும், புலன்களை அடக்கியவர்களும், ஞானம் கொண்டவர்களும், பேராசையில் இருந்து விடுபட்டவர்கள், கோபத்தை வென்றவர்கள், உற்சாகம் நிறைந்த இதயங்களைக் கொண்டவர்கள், ஞானம் கொண்டவர்கள், எனது என்ற கருத்துகளில் இருந்து விடுபட்டவர்கள், அகந்தையற்றவர்கள் ஆகியோர் அதனையே அடைகின்றனர்.(6,7)
அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்ட இவர்கள் அனைவரும் மேன்மையான {மகத்துவ} நிலையை அடைகிறார்கள். புனிதமானதாகவும், உயர்ந்த இலக்காகவும் இருக்கும் பேரான்மாவை {மகத்தத்வத்தைப்} புரிந்து கொள்ளும் மனிதன், மாயையிலிருந்து விடுபட்டவனாகிறான்.(8) சுயம்புவான விஷ்ணு முதன்மையான படைப்புகளின் தலைவனாகிறான். {இதயக்} குகையில் கிடப்பவனும், பரமனும் {மேலானவன்}, புராதனனும் {புராணபுருஷனும்}, அண்ட வடிவம் கொண்டவனும் {விஷ்வரூபனும்}, பொன்னார்மேனியனும் {ஸுவர்ணமயனும்}, புத்தியுடன் கூடிய மனிதர்கள் அனைவரின் உயர்ந்த இலக்காக {புத்திமான்களின் சிறந்த கதியாக} இருப்பவனுமான அந்தத் தலைவனை {பிரபுவை} இவ்வாறு அறியும் புத்தியுள்ள மனிதன், புத்தியைக் கடந்தவனாக வாழ்கிறான்” என்றான் {பிரம்மன்}.(9)
அஹங்காரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 41-அஹங்காரம் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…
பிரம்மன், “முதலில் உண்டான அந்த மஹத் {நான் என்று உண்டானதால்) அஹங்காரம் என்றழைக்கப்படுகிறது. நான் என்று அஃது எழுந்தபோது, அஃது இரண்டாம் படைப்பென்று {ஸிருஷ்டி என்று}அழைக்கப்படலாயிற்று.(1)
அந்த அகங்காரத்தின் மாறுதல்களில் இருந்தே உயிரினங்கள் அனைத்தும் உண்டானதால், அதுவே {அஹங்காரமே} அவற்றின் {அந்த உயிரினங்களின்} பிறப்பிடம் {பூதாதி வைகாரிகன்} என்று சொல்லப்படுகிறது. அது தூய ஒளியாகவும் {தைஜஸனனாகவும்}, நனவுநிலையை ஆதரிப்பதாகவும் {சேதனனாகவும்} இருக்கிறது. அதுவே பிரஜாபதியாகும்[1].(2)-அஃது ஒரு தேவனாகவும், தேவர்களைப் படைப்பவனாகவும், மனமாகவும் இருக்கிறது. அதுவே மூவுலகங்களையும் படைக்கிறது. “இவை அனைத்தும் நானே” என எது உணருமோ அதுவே இதுவென {அபிமானம் / அகங்காரமெனச்} சொல்லப்படுகிறது.(3)
ஆன்மா தொடர்புடைய அறிவில் நிறைவுடன் இருப்பவர்களும், ஆன்மாவைத் தியானிப்பவர்களும், வேதகல்வி மற்றும் வேள்விகளின் மூலம் வெற்றியை அடைந்தவர்களுமான தவசிகளுக்கான நித்திய உலகம் {ஸனாதனமான லோகம்} {அனிருத்தனென்று பெயருள்ள} அதுவே {அஹங்காரமே} ஆகும்.(4)
ஆன்மாவின் நனவாலேயே ஒருவன் குணங்களை அனுபவிக்கிறான். அனைத்து உயிரினங்களுக்கும் தோற்றுவாயாக இருப்பதும், அனைத்து உயிரினங்களையும் படைப்பதுமான அஃது (அனைத்து உயிரினங்களையும்) இவ்வழியிலேயே உண்டாக்குகிறது. அதுவே அனைத்து மாற்றங்களையும் விளைவிக்கிறது. அதுவே அனைத்தையும் அசைய வைக்கிறது. தன்னொளியால் அதுவே அண்டத்திற்கும் ஒளியூட்டுகிறது” என்றான் {பிரம்மன்}.
அத்யாத்மம், அதிபூதம், தைவதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 42- பூதங்கள் முதலியவை அஹங்காரத்தில் இருந்து படைக்கப்பட்டன என்பதைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…
பிரம்மன், “உண்மையில் அகங்காரத்தில் இருந்தே ஐம்பெரும் பூதங்களும் பிறந்தன. அவை பூமி {பிருதிவி}, காற்று {வாயு}, ஆகாயம், நீர் {ஜலம்} மற்றும் ஐந்தாவதாக ஒளியாகும் {தேஜஸாகும்}.(1) இந்த ஐம்பெரும் பூதங்களில் ஒலி, தீண்டல், நிறம், சுவை மற்றும் மணம் ஆகியவற்றின் இயக்கத்தில் அனைத்து உயிரினங்களும் மயக்கமடைகின்றன.(2) ஞானிகளே, பெரும்பூதங்களுக்கு அழிவு ஏற்படப்போகும் நெருக்கத்தில், அண்டத்தின் அழிவுக்காலம் நெருங்கும் போது, அனைத்து உயிரினங்களும் பேரச்சத்தால் பீடிக்கப்படுகின்றன.(3) இருப்பிலுள்ள ஒவ்வொரு பொருளும் எதில் இருந்து உண்டானதோ அதிலேயே கறைந்து போகும். படைப்பு நடைபெற்ற வரிசைக்கு நேர்மாறான வகையில் அழிவு ஏற்படும். உண்மையில், பிறப்பைப் பொறுத்தவரையில் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றில் இருந்து பிறக்கின்றன.(4) இருப்பிலுள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் கறையும்போதும் {முற்பிறவியின்} வலிமைமிக்க நினைவைக் கொண்டவர்களான ஞானிகள் ஒருபோதும் கறைவதில்லை {லயமடைவதில்லை}.(5)
ஒலி, தீண்டல், நிறம், சுவை, ஐந்தாவதாக மணம் என்பன அதன் விளைவுகளாகும். எனினும், நிலையற்றவையான அவை மாயை {அநித்யம்} என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன.(6) பேராசை உண்டானதால் {பயன் கருதி செய்யப்பட்ட செயல்களால்} விளைந்தவையும், ஒன்றுக்கொன்று வேறுபடாதவையும், உண்மைத்தன்மை இல்லாதவையும், சதை மற்றும் குருதியுடன் இணைக்கப்பட்டு இருப்பவையும், ஒன்றையொன்று சார்ந்திருப்பவையும்,(7) ஆன்மாவுக்கு வெளியே இருப்பவையுமான இவை அனைத்தும் ஆதரவற்றவையாகவும், சக்தியற்றவையாகவும் இருக்கின்றன. பிரானன், அபானன், உதானன், சமானன், வியானன் ஆகிய(8) ஐந்து காற்றுகளும் {வாயுக்களும்} எப்போதும் ஆன்மாவுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவையாகும். வாக்கு, மனம், புத்தி ஆகியவற்றுடன் சேர்ந்திருக்கும் இவையே எட்டு உட்பொருட்களாலான அண்டமாக அமைகின்றன {இவை ஜீவனுக்கு மோக்ஷம் வரையில் நித்யமாக இருக்கும் ஸூக்ஷ்ம சரீரமாகும்}.(9) தோல், மூக்கு, காதுகள், கண்கள், நாக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியவனும், மனம் தூய்மையடைந்தவனும், (சரியான பாதையில் இருந்து) புத்தி பிறழாதவனும்,(10) எட்டு நெருப்புகளால் ஒருபோதும் எரிக்கப்படாத மனம் கொண்டவனுமான ஒருவன், தனக்கு மேலேதுமற்ற மங்கல பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.(11)
மறுபிறப்பாளர்களே, பதினோரு உறுப்புகள் என்று அழைக்கப்படுபவையும், அஹங்காரத்தில் எழுந்தவையும் பற்றி {புலன்களைப் பற்றி}நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(12) காதுகள் {செவி}, தோல் {த்வக்கு}, இரு கண்கள், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு, இரு கால்கள், குதம் {பாயு}, பிறப்புறுப்பு {குறி}, இரு கைகள், பத்தாவதாக வாக்கு ஆகியனவே அவை.(13) பதினோராவதாக மனத்தைக் கொண்ட இவையே புலன்களின் கூட்டமாக {இந்திரிய ஸமூஹமாக} அமைகின்றன. ஒருவன் முதலில் இந்தக் கூட்டத்தை வெல்ல வேண்டும். அப்போதுதான் (அவனில்) பிரம்ம ஒளி துலங்கும்.(14) இவற்றுள் ஐந்து அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} என்றும், ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} என்றும் அழைக்கப்படுகின்றன. காதுகள் முதலான ஐந்தும் உண்மையில் அறிவு தொடர்புடையனவாகச் சொல்லப்படுகின்றன.(15) எஞ்சியவை எந்த வேற்றுமையுமின்றிச் செயல்களோடு தொடர்புடையவையாக உள்ளன. மனமானது, இரண்டிற்கும் உரியவையாகக் கருதப்பட வேண்டும். உயர்ந்த நிலையில் இருக்கும் புத்தியானது பனிரெண்டாவதாக இருக்கிறது.(16) இவ்வாறு பதினோரு உறுப்புகளும் {புலன்களும்} முறையான வரிசையில் பட்டியலிடப்பட்டன. இவற்றைப் புரிந்து கொண்டே அனைத்தையும் தாங்கள் அடைந்துவிட்டதாகக் கல்விமான்கள் நினைக்கிறார்கள்.(17)
இதன் பிறகு, பல்வேறு வகையான உறுப்புகள் {புலன்கள்} அனைத்தையும் நான் பட்டியலிடப்போகிறேன். வெளியானது (அல்லது ஆகாயம் என்பது) முதல் அமைப்பாகும் {பூதமாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது காதுகள் என்று அழைக்கப்படுகிறது.(18) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அஃது ஒலியாகிறது. (இதன்) தலைமைத் தேவன் {அதிதைய்வதம்} திசைகளாகும். காற்றானது {வாயு என்பது} இரண்டாவது அமைப்பாகும் {பூதமாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது தோல் {த்வக்} என்று அறியப்படுகிறது.(19) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} தீண்டலுக்குரிய பொருட்கள் என்று அறியப்படுகிறது. இங்கே தலைமைத் தேவன் {அதிதைய்வதம்} தீண்டலாகும் {மின்னலாகும்}. ஒளி மூன்றாவதாகச் சொல்லப்படுகிறது. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது கண்கள் {நேத்திரம்} என்றறியப்படுகிறது.(20) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது நிறம் {ரூபம்} என்று அறியப்படுகிறது; சூரியனே அதன் தலைமைத்தேவனாவான் {அதிதைவதமாவான்}. நான்காவதாக (நான்காவது அமைப்பாக {பூதமாக}) நீர் {ஜலம்} அறியப்பட வேண்டும். ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது நாக்கு என்று சொல்லப்படுகிறது.(21) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது சுவை {ரஸம்} என்று சொல்லப்படுகிறது. இங்கே சோமன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். ஐந்தாவது அமைப்பு {பூதம்} பூமியாகும் {பிருதிவியாகும்}. ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது {அத்யாத்மமாக} அது மூக்கு {க்ராணம்} என்று சொல்லப்படுகிறது.(22) பொருட்களுடன் இணைந்திருக்கும்போது {அதிபூதமாக} அது மணம் {கந்தம்} என்று சொல்லப்படுகிறது; அங்கே காற்று {வாயு} தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். இவ்வாறே ஐந்து அமைப்புகளும் {பூதங்களும்} எவ்வாறு மூன்று தொகுப்புகளாகப் பிரிந்திருக்கின்றன என்பது அறிவிக்கப்பட்டது.(23)
இனி, (வேறு) புலன்கள் பலவற்றைக் குறித்த அனைத்தையும் நான் அறிவிக்கப் போகிறேன். பாதங்கள் இரண்டும் ஆன்மாவுடன் தொடர்புடையனவாக {அத்யாத்மமென்று) குறிப்பிடப்படுகின்றன என வாய்மை அறிந்த பிராமணர்கள் சொல்கின்றனர்.(24) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அஃது அசைவாக {நடையாக} இருக்கிறது. விஷ்ணு அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். கீழ்நோக்கிப் பாயும் அபானக் காற்றானது {அபான வாயுவானது} {அத்யாத்மமாக} ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது குதம் { பாயு} என்றழைக்கப்படுகிறது.(25) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது கழிவாக {மலஜலமாக} வெளியேறுகிறது. மித்ரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். பிறப்புறுப்பானது ஆன்மாவுடன் இணைந்திருக்கும்போது அனைத்து உயிரினங்களையும் உண்டாக்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.(26) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அஃது உயிர்வித்தாக {சுக்ரம்-ஆக} இருக்கிறது. பிரஜாபதி {குறி} அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். கைகள் இரண்டும் ஆன்மாவுடன் தொடர்புடையனவென {அத்யாத்மமென்று) ஆன்ம உறவுகளை அறிந்த மனிதர்களால் குறிப்பிடப்படுகின்றன.(27) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது செயல்களாக {கிரியைகளாக} இருக்கிறது. இந்திரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான்.
அடுத்ததாக, தேவர்கள் அனைவருடன் தொடர்புடைய வாக்கு ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(28) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது பேசுபொருளாக {பேசப்படுவதாக} இருக்கிறது. அக்னி அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். ஐம்பூதங்களின் ஆன்மாவுக்குள் நகரும் மனமானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாகக்} குறிப்பிடப்படுகிறது.(29) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது மன இயக்கமாக {ஸங்கல்பமாக} இருக்கிறது. சந்திரமாஸ் {சந்திரன்} அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். உலகவாழ்வின் மொத்த இயக்கத்திற்கும் காரணமாக இருக்கும் அகங்காரமானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(30) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது நனவாக {அபிமானமாக} இருக்கிறது. ருத்ரன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான். {மனத்தோடு சேர்த்து} ஆறு புலன்களையும் தூண்டும் புத்தியானது, ஆன்மாவுடன் தொடர்புடையதாக {அத்யாத்மமாக} இருக்கிறது.(31) {அதிபூதமாக} பொருட்களுடன் இணைந்திருக்கும்போது அது புரிந்து கொள்ளப்படும் ஒன்றாக {அறிவதாக} இருக்கிறது. பிரம்மன் அதன் தலைமைத் தேவனாக {அதிதைவதமாக} இருக்கிறான்.
இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் மூன்று இருக்கைகள் {ஸ்தானங்கள்} இருக்கின்றன. நான்காவது சாத்தியமற்றதாகும்.(32) அவை {அந்த இருக்கைகள்} நிலம், நீர் மற்றும் ஆகாயமாகும். பிறவிமுறை நான்கு வகைப்படும். முட்டைகளில் இருந்து சில பிறக்கின்றன {அண்டஜம்}; பூமியைப் பிளந்து மேல்நோக்கி எழும் புழுக்களில் இருந்து சில பிறக்கின்றன {உத்பிஜ்ஜம்}; கழிவுப்பொருட்களில் இருந்து சில பிறக்கின்றன {ஸ்வேதஜம்}; கருவறைகளின் சதைப்பந்துகளில் இருந்து சில பிறக்கின்றன {ஜராயுஜம்}.(33) இவ்வாறே உயிரினங்கள் அனைத்தும் நான்கு வகைப் பிறவிமுறைகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. வானத்தில் பறப்பவையும் {பறவைகளும்}, தங்கள் மார்புகளைக் கொண்டு தவழ்பவையும் {பாம்புகளும்}, வேறு சில தாழ்ந்த பிறவிகளும் முட்டைகளில் இருந்து பிறப்பவையாக அண்டஜங்களாக அறியப்பட வேண்டும்.(34) பூச்சிகளும், அதுபோன்ற வேறு உயிரினங்களும் {கிருமிகளும்} கழிவுப்பொருட்களில் இருந்து பிறப்பவையாக {ஸ்வேதஜங்களென்று} சொல்லப்படுகின்றன.(35) இவை இரண்டாம் பிறவிமுறை கொண்டவை என்றும், இழிந்தவையென்றும் சொல்லப்படுகின்றன. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, சில காலம் கழித்து, பூமியைப் பிளந்து வெளிவரும் உயிரினங்கள்,(36) புழுக்களில் இருந்து பிறந்தவை என்று {உத்பிஜ்ஜங்களென்று} சொல்லப்படுகின்றன. இரு கால்களையோ, பல கால்களையோ கொண்டவையும், குறுக்கும்நெடுக்கமாக நடப்பவையுமான {திர்யக்கான கதியுள்ளவையுமான} உயிரினங்கள்,(37) கருவறைகளில் பிறந்தவையாக {ஜராயுஜங்களாக} இருக்கின்றன. அவற்றிலும் சில பழுதுள்ள வடிவம் கொண்டவையாக {வேறுபாடுள்ளவைகளாக} இருக்கின்றன.
பிரம்மத்தின் நித்திய கருவறையை {பிரம்மஸாக்ஷாத்காரத்தை, தவம் என்றும், புண்ணியச் செயல்கள் என்றும் இருவகையாக அறியப்பட வேண்டும்[1]. இதுவே கல்விமான்களின் கோட்பாடாகும். செயல்பாடு {கர்மம்} என்பது வேள்வி, வேள்வியில் அளிக்கப்படும் கொடைகள், பிறவி அடைந்த ஒவ்வொருவருக்கும் புனிதக் கடமையான கல்வி எனப் பலவகைப்படும் என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்; இதுவே பழங்காலத்தவர்களின் போதனையாகும். மறுபிறப்பாளர்களின் தலைவர்களே, இதை முறையாகப் புரிந்து கொண்டவன் யோகத்தைக் கொண்டவன் {யோகி எனக்} கருதப்படுகிறான்.(38-40) அத்தகைய மனிதன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடுவான் என்பதையும் அறிவீராக. இவ்வாறே நான் அத்யாத்மக் கோட்பாட்டை முறையாக உங்களுக்கு அறிவித்தேன்.(41) கடமைகள் அனைத்தையும் அறிந்த முனிவர்களே, ஞானம் கொண்ட மனிதர்கள் என்று கருதப்படுபவர்களால் இந்த ஞானம் {அத்யாத்மவிதி} அடையப்படுகிறது. புலன்கள் {இந்திரியங்கள்}, புலன்நுகர்பொருட்கள் {இந்திரியவிஷயங்கள்}, ஐம்பெரும்பூதங்கள் {ஐந்துமஹாபூதங்கள்}என்ற இவை அனைத்தையும் சேர்த்தே ஒருவன் தன் மனத்தில் கொள்ள வேண்டும்[2].(42) (ஈர்ப்பின் மூலம்) அனைத்தும் மனத்திற்குள் மட்டுப்படும்போது ஒருவன் அதற்கு மேலும் வாழ்வின் இன்பங்களை மதிப்பதில்லை. ஞானம் கொண்ட புத்தியுடன் கூடிய கல்விமான்கள் அதையே உண்மையான இன்பமாகக் கருதுகிறார்[3].(43)இனி, அனைத்து உட்பொருட்களையும் பொருத்தவரையில், மென்மையான மற்றும் கடுமையான வழிமுறைகளின் மூலம் நுண் தத்துவங்களில் பற்றுதலை உண்டாக்குவதும், மங்கலம் நிறைந்ததுமான துறவை {நிவ்ருத்தியைக்} குறித்துச் சொல்லப் போகிறேன்.(44) குணங்களைக் குணங்களற்றவையாகக் கொண்டதும், பற்றிலிருந்து விடுபட்டதும், தனிமையில் வாழ்வதும், வேறுபாடுகளைக் காணாததும், பிரம்மம் நிறைந்ததுமான ஒழுக்கமே இன்பங்கள் அனைத்தின் பிறப்பிடமாகும்.(45) உறுப்புகள் அனைத்தையும் உள்ளீர்த்துக் கொள்ளும் ஆமையைப் போல அனைத்துப்புறங்களில் இருந்தும் ஆசைகள் அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் கல்விமானும், ஆசைகளற்றவனும், அனைத்தில் இருந்தும் விடுபட்டவனுமான மனிதன் எப்போதும் இன்பமாக இருக்கிறான்.(46) ஆசைகள் அனைத்தையும் தன் ஆன்மாவுக்குள் கட்டுப்படுத்தி, தாகத்தை அழித்து, தியானத்தில் குவிந்து, அனைத்து உயிரினங்களிடமும் நண்பனாகும் நல்லிதயம் கொண்டவன் பிரம்மத்துடன் ஒன்றிணைவதற்குத் தகுந்தவனாவதில் வெல்கிறான்.(47) தங்களுக்குரிய பொருட்களை {புலன்நுகர் பொருட்களை} எப்போதும் பின்தொடரும் புலன்களை அடக்குவதன் மூலமும், வசிப்பிடங்களைக் கைவிடுவதன் மூலமும், அத்யாத்ம நெருப்பானது {ஆத்மஜ்ஞானமென்கிற அக்னியானது}, தியானம் செய்யும் மனிதனிடம் சுடர்விட்டெரிகிறது.(48)
விறகுகளில் ஊட்டப்பட்ட நெருப்பானது, சுடர்மிக்கத் தழல்களை வெளிப்படுத்துவதன் மூலம் பிரகாசத்தை அடைவதை {ஒளியைத் தருவதைப்} போலவே பேராத்மாவானது, புலன்களை அடக்குவதன் விளைவால் பிரகாசிக்கிறது.(49) அமைதியான ஆன்மாவைக் கொண்ட ஒருவன் தன் இதயத்திற்குள்ளேயே அனைத்துப் பொருட்களையும் காணும்போது, தன்னொளியால் எரியும் அவன், நுட்பத்திலும் நுட்பமானதும், ஒப்பற்ற சிறப்பைக் கொண்டதும் எதுவோ அதை அடைகிறான்.(50) நெருப்பை நிறமாகவும், நீரையும், வேறு நீர்மங்களையும் குருதியாகவும், காற்றை {வாயுவைத்} தோலாகவும், பூமியை மனத்தைத் தாங்கும் அருவருக்கத்தக்கதாகவும் (சதை மற்றும் எலும்பு முதலியவையாகவும்), வெளியை (அல்லது வானத்தை) ஒலியாகவும் கொண்டதும்; நோய் மற்றும் கவலை பரவியதும்; ஐந்து ஓடைகளிலால் சுழப்பட்டதும்; ஐந்து பூதங்களால் ஆனதும்; ஒன்பது வாயில்களையும், இரண்டு தேவர்களையும் கொண்டதும்; (தூய்மையற்ற தன்மையின் காரணமாக) ஆசை நிறைந்ததும்; காணத்தகுதியற்றதும்; முக்குணங்களால் ஆனதும்; (காற்று {வாயு / வாதம்}, பித்தம், சளி {கபம்} என்ற) மூன்று கூறுகளைக் கொண்டதும்; அனைத்து வகைப் பற்றுகளிலும் இன்புற்றிருப்பதும், மாயை நிறைந்ததுமாக உடல் இருக்கிறது.(51-53)
இந்த மனித உலகில் அசைப்பதற்குக் கடினமானதாகவும், தன்னை ஆதரித்துக் கொள்ளப் புத்தியைச் சார்ந்திருப்பதுமாக அஃது இருக்கிறது. இவ்வுலகில் அவ்வுடலே தொடர்ந்து சுழலும் காலச்சக்கரமாக இருக்கிறது.(54) உண்மையில், பயங்கரமானதும், அடியற்ற பெருங்கடலுமான அது மோகம் என்றழைக்கப்படுகிறது. தேவர்களுடன் கூடிய (மொத்த) அண்டத்தையும் விழிப்படையச் செய்வதும் நீட்டுவதும், சுருக்குவதும் இவ்வுடலே ஆகும்.(55) புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவன், நித்தியமானவையும், கைவிடுவதற்கு மிக அரியவையுமான காமம், கோபம், அச்சம், பேராசை, பகை, பொய்மை ஆகியவற்றைக் கைவிடுகிறான். உடலின் முக்குணங்களையும், ஐம்பூதங்களையும் இவ்வுலகில் அடக்கும் ஒருவன் சொர்க்கத்தில் உயர்ந்த இருக்கையை {ஸ்தானத்தைப்} பெறுகிறான். அவனாலேயே முடிவிலி {எல்லையற்ற பேரளவு} அடையப்படுகிறது.(57) ஐம்புலன்களெனும் பெரிய கரைகளைக் கொண்டதும், மனோவிருப்பங்களையே வெள்ளமாகவும், மோகத்தைத் தடாகமாகவும் கொண்ட அந்த ஆற்றைக் கடக்கும் ஒருவன் காமம் மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் அடக்க வேண்டும்.(58)
அத்தகைய மனிதன், குற்றங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, மனத்திற்குள் மனத்தைக் குவித்து, தன்னைத் தனக்குள் கண்டு உயர்ந்ததை {பரப்பிரம்மத்தைக்} காண்பான்.(59) அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்ளும் அவன், சில நேரங்களில் ஒன்றாகத் தோன்றுவதும், சில நேரங்களில் பலவாகவும் தோன்றுபவையும், காலாகாலத்திற்கு மாறிக் கொண்டே இருப்பவையுமான அனைத்து உயிரினங்களிலும் தன்னைத் தானே காண்கிறான்.(60) ஒரு விளக்கில் இருந்து நூறு விளக்குகள் உண்டாவதைப் போல அவனால் எண்ணற்ற உடல்களை உணர முடியும் என்பதில் ஐயமில்லை. உண்மையில், விஷ்ணு அவனே, மித்திரன், வருணன், அக்னி மற்றும் பிரஜாபதியும் அவனே.(61) படைப்பவனும், விதிப்பவனும் அவனே; அனைத்துத் திசைகளிலும் முகங்களைக் கொண்டவனும், பலம் கொண்டவனுமான தலைவன் அவனே. அனைத்து உயிரினங்களின் இதயமாக இருக்கும் அவனில் பேராத்மா {பரமாத்மா} ஒளிர்கிறான்.(62) கல்விமான்களான பிராமணர்கள், தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், பிசாசங்கள், பித்ருக்கள், பறவைகள், ராட்சசக்கூட்டங்கள்; பூத கணங்கள் மற்றும் பெரும் முனிவர்களின் கூட்டங்கள் அனைத்தும் அவனைப் புகழ்கின்றன” என்றான் {பிரம்மன்}.(63)
க்ஷேத்ரஜ்ஞன்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 43-க்ஷத்திரியர்களிடம் ரஜோ குணத்தின் முக்கியத்துவம்; ஸத்வ குணம் கொண்ட பிராமணர்கள்; ஓவ்வொன்றின் சிறப்பியல்புகள்; தீங்கிழையாமை; க்ஷேத்ரஜ்ஞன் ஆகியவற்றைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்.
பிரம்மன், “மனிதர்களில் அரச க்ஷத்திரியர்கள் நடுக்குணம் {ரஜோ குணம்} கொண்டவர்கள். வாகனங்களில் யானை (அவ்வாறே); காட்டில் வசிப்பவற்றுள் சிங்கம்;(1) (வேள்வி) விலங்குகள் அனைத்திலும் ஆடு; வளைகளில் வாழ்பவற்றுள் பாம்பு; கால்நடைகளுக்கு மத்தியில் காளை; பெண்களுக்கு மத்தியில் ஆண்கள் (ஆகியோரும் அவ்வாறே).(2) இவ்வுலகில் நியக்ரோதம் {ஆல மரம்}, ஜம்பு {நாவல் மரம்}, பிப்பலம் {அரசமரம்}, சால்மலி {முள்ளிலவமரம்}, சிம்சபை {நூக்கம் / சீஷம்}, மேஷசிருங்கம், {மூங்கில் வகையைச் சார்ந்த} கீசகம் ஆகியவை மரங்களில் முதன்மையானவையாக இருக்கின்றன என்பதில் ஐயமில்லை.(3) ஹிமவான் {இமயமலை}, பாரிபாத்ரம் {பாரியாத்ரம்}, ஸஹ்யம், விந்தியம், திரிகூடவான், ஸ்வேதம், நீலம், பாஸம், கோஷ்டவான் {ராஷ்ட்ரவான்},(4) குருஸ்கந்தம் {ப்ருசஸ்கந்தம்}, மஹேந்திரம், மால்யவான் ஆகிவை மலைகளில் முதன்மையானவையாகும். அதே போல மருத்துகள் கணங்களில் முதன்மையானவர்கள் ஆவர்.(5)
கோள்கள் அனைத்திற்கும் சூரியனும், நட்சத்திரக்கூட்டங்கள் அனைத்திற்கும் சந்திரமாஸும் தலைவர்களாவர். யமன் பித்ருக்களின் தலைவனாவான்; பெருங்கடலானது ஆறுகள் அனைத்திற்கும் தலைமையானதாகும்.(6) வருணன் நீர்நிலைகளின் மன்னனாவான். இந்திரன் மருத்துகளின் மன்னனாவான். வெப்பங்கள் {உஷ்ணங்கள்} அனைத்திற்கும் அர்க்கனும், ஒளிகள் {ஜ்யோதிகள்} அனைத்திற்கும் இந்திரனும் மன்னர்களாவர்[1]. பூதங்களுக்கு அக்னியும், பிராமணர்களுக்குப் பிருஹஸ்பதியும் நித்திய தலைவர்களாவர். சோமன் (இலையுதிர்) மூலிகைகளின் தலைவனாகவும், விஷ்ணு வலிமை நிறைந்த மனிதர்களனைவரிலும் முதன்மையானவனாகவும் திகழ்கின்றனர்.(8) ருத்திரர்களுக்கு {ரூபங்களுக்குத்} தாஷ்டிரியும் {துவஷ்டாவும்}, அனைத்து உயிரினங்களுக்கு {பசுக்களுக்கு} சிவனும் மன்னர்களாக இருக்கின்றனர். தொடக்கச் சடங்குகள் {தக்ஷிணைகள்} அனைத்திலும் முதன்மையாக வேள்வி முதன்மையானதாக இருக்கிறது, தேவர்களில் மகவத் {இந்திரன்} முதன்மையானவனாக இருக்கிறான்[2].(9) திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் தலைவனாக வடக்கு இருக்கிறது; கல்விமான்களான பிராமணர்கள் அனைவருக்கும் தலைவனாகப் பெருஞ்சக்தி கொண்ட சோமன் திகழ்கிறான். மதிப்புமிக்க ரத்தினர்கள் அனைத்திற்கும் குபேரனும், தேவர்கள் அனைவருக்கும் புரந்தரனும் {இந்திரனும்} தலைவர்களாக இருக்கின்றனர்.(10)இவ்வாறே பொருட்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பு இருக்கிறது. பிரஜாபதி உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக இருக்கிறான். எந்தப் பொருளாக இருந்தாலும், நானே பிரம்மம் நிறைந்தவன், நானே முதன்மையானவன்.(11) என்னையோ, விஷ்ணுவையோ தவிர உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை. பிரம்மம் நிறைந்தவனான பெரும் விஷ்ணு, மன்னர்கள் அனைவருக்கும் மன்னனாக {பேரரசனாக} இருக்கிறான். அவனையே ஆட்சியாளனாகவும், படைப்பாளனாகவும், பிறப்பற்ற ஹரியாகவும் அறிவீராக.(12) மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள், தேவர்கள், தானவர்கள் மற்றும் நாகர்களின் ஆட்சியாளன் அவனே ஆவான்.(13) ஆசை நிறைந்த மனிதர்களால் பின்தொடரப்படுபவர்களுக்கு {பெண்களுக்கு} மத்தியில் அழகிய கண்களைக் கொண்ட மஹேஸ்வரியே பெருந்தேவியாவாள்[3].(14) அவள் பார்வதி என்று வேறு பெயரிலும் அழைக்கப்படுகிறாள். உமா தேவியையே பெண்கள் அனைவரிலும் முதன்மையானவளாகவும், மங்கலமிக்கவளாகவும் அறிவீராக. இன்பத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் பெண்களுக்கு மத்தியில் பெரும் காந்தியைக் கொண்ட அப்ஸரஸ்களே முதன்மையானவர்களாவர்.(15)மன்னர்கள் பக்தியில் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள், பிராமணர்கள் பக்திக்குச் செல்லும் பாலங்களாக {அணைகளாக} இருக்கின்றனர். எனவே, மன்னன் எப்போதும் இருபிறப்பாளர்களைப் பாதுகாக்க முனைய வேண்டும்.(16) எந்த மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் நல்ல மனிதர்கள் நலிவடைகிறார்களோ அவர்கள் தங்கள் வகைக்கான அறங்களை இழந்தவர்களெனக் கருதப்படுவார்கள். மறுமையில் அவர்கள் தவறான பாதைகளில் செல்ல நேரிடும் {அவர்கள் இழிவான கதியை அடைவார்கள்}.(17) எந்த மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் நன்மக்கள் பாதுகாக்கப்படுகிறார்களோ, அவர்கள் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.(18) உண்மையில், அந்த உயர் ஆன்மாக்கள் உயர்ந்த இருக்கையை அடைகிறார்கள். மறுபிறப்பாளர்களில் முதன்மையானோரே இதைப் புரிந்து கொள்வீராக. இனி எப்போதும் நீடித்திருக்கும் கடமைகளின் குறியீடுகளை {தர்மலக்ஷணத்தைச்} சொல்லப் போகிறேன்.(19) தீங்கிழையாமையே உயர்ந்த கடமையாகும். தீங்கிழைத்தல் மறத்தின் குறியீடாகும். காந்தி தேவர்களின் குறியீடாகும். மனிதர்கள் செயல்களைத் தங்கள் குறியீடுகளாகக் கொண்டுள்ளனர்.(20)
வானம் (அல்லது வெளி) ஒலியைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. காற்று {வாயு} தீண்டலைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. ஒளியின் சிறப்பியல்பு நிறமாகவும் {ரூபமாகவும்}, நீரின் சிறப்பியல்பு சுவையாகவும் இருக்கின்றன.(21) அனைத்துப் பொருட்களையும் தாங்கும் பூமி மணத்தைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டிருக்கிறது. வாக்கானது, செம்மைப்படுத்தப்பட்ட உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் கொண்ட சொற்களைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது.(22) மனம் எண்ணத்தை {சிந்தையைத்} தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. மேலும் எண்ணமானது, புத்தியின் சிறப்பியல்பாகவும் சொல்லப்படுகிறது. மனத்தால் எண்ணப்படும் பொருட்கள் புத்தியால் துல்லியமாக உறுதி செய்யப்படுகின்றன.(23) புத்தியானது, விடாமுயற்சியின் மூலம் பொருட்கள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது என்பதில் ஐயமில்லை. அறியப்படாமல் இருப்பது (வாழ்வது) நல்ல மனிதனின் சிறப்பியல்பாகும்[4].(24) அர்ப்பணிப்பு {பக்தி}, செயல்களைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. ஞானமானது, துறவின் சிறப்பியல்பாக இருக்கிறது. எனவே, புத்தியுள்ள மனிதன் ஞானத்தை நோக்கமாகக் கொண்டு துறவை பயில வேண்டும்.(25) துறவை மேற்கொள்பவனும், ஞானம் கொண்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும், இருளையும் {அறியாமையையும்}, மரணத்தையும், மூப்பையும் கடந்தவனுமான மனிதன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(26)இவ்வாறே நான் கடமைகளின் குறியீடுகள் குறித்து உங்களுக்கு முறையாக அறிவித்தேன். இனி, குணங்களை அடைவது (புரிந்து கொள்வது) குறித்து உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(27) பூமி தொடர்புடைய மணம், மூக்கால் அடையப்படுகிறது. மூக்கில் வசிக்கும் காற்றானது, மணத்தை உணர்ந்து கொள்வதற்காக (ஒரு முகவராக) நியமிக்கப்பட்டதைப் போல இருக்கிறது.(28) சுவையானது நீரின் சாரமாக இருக்கிறது. அது நாக்கால் அடையப்படுகிறது. நாவில் வசிக்கும் சோமன், சுவையை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(29) ஒளியுடலின் குணம் நிறமாகும். அது கண்களால் அடையப்படுகிறது. எப்போதும் கண்களில் வசிப்பவனாக ஆதித்தியன், நிறத்தை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(31) தீண்டலானது எப்போதும் காற்றுத் தொடர்பானதாக (காற்றின் குணமாக) இருக்கிறது. அது தோலால் உணரப்படுகிறது. தோலில் எப்போதும் வசிக்கும் காற்று {வாயு}, தீண்டலை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது.(31)
வானத்தின் குணம் ஒலியாகும். அது காதுகளால் அடையப்படுகிறது. காதுகளில் வசிக்கும் திசைகள் அனைத்தும், ஒலியை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன.(32) மனத்தின் குணம் எண்ணம் {சிந்தை} ஆகும். அது புத்தியால் அடையப்படுகிறது. இதயத்தில் வசித்து நனவைத் தாங்குபவன் {ஜீவன்}, மனத்தை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(33) புத்தியானது, உறுதிப்பாடு அல்லது நிச்சய உணர்வின் வடிவத்திலும், மஹத்-ஆனது, ஞானத்தின் வடிவத்திலும் உணரப்படுகின்றன. உணரப்படாதது (பிரகிருதி), நிச்சய உணர்வுக்குப் பிறகு அனைத்துப் பொருட்களையும் அடைவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவானதாகும். இதில் ஐயமேதும் இல்லை[5].(34) சாரத்தைப் பொறுத்தவரையில், நித்தியமானதும், குணங்களற்றதுமான க்ஷேத்ரஜ்ஞன், சின்னங்களால் {குறியீடுகளால் / லிங்கத்தால்} அடையப்பட இயலாததாக இருக்கிறது. எனவே சின்னங்களற்ற க்ஷேத்ரஜ்ஞனின் சிறப்பியல்பானது, தூய ஞானமாகும்.(35) புலப்படாதது, க்ஷேத்ரம் என்றழைக்கப்படும் சின்னத்தில் வசித்துக் கொண்டு, குணங்களை உண்டாக்குவதாகவும், ஈர்ப்பதாகவும் இருக்கிறது. அது மறைந்திருந்தாலும், நான் அதைப் பார்க்கவும், அறியவும், கேட்கவும் செய்கிறேன்.(36)புருஷன் அஃதை அறிகிறான்; எனவே அவன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான். க்ஷேத்ரஜ்ஞன், குணங்களின் இயக்கங்களையும், இயக்கமற்ற நிலையையும் உணர்கிறான்.(37) மீண்டும் மீண்டும் உண்டாகுபவையும், புத்தியற்றவையுமான குணங்கள், படைக்கப்பட வேண்டிய பொருட்களாகவும், தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவுகளுடன் கூடியதாகவும் தங்களை ஒருபோதும் அறிவதில்லை.(38) உயர்ந்ததும், பெரியதும், குணங்களையும், குணங்களில் பிறக்கும் பொருட்களையும் கடந்திருப்பதுமான ஒன்றை {பிரம்மத்தை} க்ஷேத்ரஜ்ஞன் மட்டுமே அடைகிறான்; வேறெதுவும் அடைவதில்லை.(39) எனவே, கடமைகளைப் புரிந்து கொள்ளும் ஒருவன், குணங்களையும், புத்தியையும் கைவிட்டு, தன் பாவங்கள் அழிக்கப்பட்டு, குணங்களைக் கடந்தவனாக க்ஷேத்ரஜ்ஞனில் நுழைகிறான் {பரமாத்மாவை அடைகிறான்}.(40) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், எவருக்கும் தலைவணங்காதவனும், ஸ்வாஹா இல்லாதவனும் {ஸ்வாஹாகாரமற்றவனும்}, அசையாதவனும், இருப்பிடமற்றவனுமாக க்ஷேத்ரஜ்ஞன் இருக்கிறான். அவனே உயர்ந்த தலைவனாவான் {தெய்வமாவான் / விபுவாவான்}” என்றான் {பிரம்மன்}.(41)-
ஞானம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 44ஞானமே மோக்ஷஸாதனம் என்பது குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…
பிரம்மன், “தொடக்கம், நடுநிலை, முடிவு ஆகியவற்றையும், பெயர் மற்றும் சிறப்பியல்புகளைக் கொண்டவை அனைத்தையும், அவற்றை அடைவதற்குரிய வழிமுறைகளுடன் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(1) முதலில் பகல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகே இரவு எழுந்தது. மாதங்களில் வளர்பிறை நாட்கள் முதன்மையானவை என்று சொல்லப்படுகிறது. விண்மீன் கூட்டங்கள் சிரவணத்தை {திருவோணம் நட்சத்திரத்தைத்} தங்களில் முதன்மையானதாகக் கொண்டுள்ளன; பருவ காலங்கள் தங்களில் பனிக் காலத்தை (குளிர் காலத்தை) முதன்மையானதாகக் கொண்டுள்ளன.(2) மணங்கள் அனைத்தின் பிறப்பிடமாகப் பூமியும், சுவைகள் அனைத்தின் பிறப்பிடமாக நீரும் இருக்கின்றன. நிறங்கள் அனைத்தின் பிறப்பிடமாகச் சூரிய ஒளியும், தீண்டல் உணர்வுகளின் பிறப்பிடமாகக் காற்றும் {வாயுவும்} இருக்கின்றன.(3) அதே போல ஒலியின் பிறப்பிடமாக வெளி (அல்லது வானம்) இருக்கிறது. இவையே பூதங்களின் குணங்களாகும். இனி, பொருட்கள் அனைத்திலும் முதன்மையானவற்றையும், உயர்ந்தவற்றையும் நான் அறிவிக்கப் போகிறேன்.(4)
ஒளிகள் {தேஜஸுகள்} அனைத்திலும் சூரியனே முதன்மையானவன். பூதங்கள் அனைத்திலும் நெருப்பே முதன்மையானது {அக்னியே முதன்மையானவன்}. கல்விக்கிளைகள் {வித்தைகள்} அனைத்திலும் சாவித்ரியே முதன்மையானவள். தேவர்கள் அனைவரிலும் பிரஜாபதியே முதன்மையானவன்.(5) வேதங்கள் அனைத்திலும் ஓம் என்ற அசையே முதன்மையானது, காற்றுகள் {வாயுக்கள்} அனைத்திலும் உயிர் காற்றான பிராணனே முதன்மையானது. இவ்வுலகில் பரிந்துரைக்கப்படும் அனைத்தும் சாவித்ரி என்றழைக்கப்படுகிறது[1].(6) சந்தஸ்கள் அனைத்திலும் காயத்ரி முதன்மையானது; (வேள்வி) விலங்குகள் அனைத்திலும் ஆடு முதன்மையானது. நான்கு கால் உயிரினங்களில் பசுக்களே முதன்மையானவை. மனிதர்கள் அனைவரிலும் இருபிறப்பாளர்கள் முதன்மையானவர்கள்.(7)பறவைகள் அனைத்திலும் பருந்தே முதன்மையானது. வேள்விகளில் நெருப்பில் தெளிந்த நெய்யை ஊற்றுவதே {ஹோமமே} முதன்மையானது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, ஊர்வனவற்றில் பாம்பே முதன்மையானது.(8) யுகங்கள் அனைத்திலும் கிருதமே முதன்மையானது; இதில் ஐயமேதும் இல்லை. மதிப்புமிக்கப் பொருட்கள் அனைத்திலும் பொன்னே முதன்மையானது.(9) செடிகள் அனைத்திலும் யவம் {வாற்கோதுமை} முதன்மையானது. உண்ணத்தக்க, அல்லது விழங்கத்தக்க அனைத்துப் பொருட்களிலும் உணவே முதன்மையானது. பருகத்தகுந்த நீர்மங்கள் அனைத்திலும் நீரே முதன்மையானது.(10)
அசையாத பொருட்கள் அனைத்திலும் வேறுபாடில்லாமல், பிரம்மனின் நித்திய புனிதக் களமான பிலக்ஷமே {ப்லக்ஷமரமே [அரசமரமே]} முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது[2].(11) பிரஜாபதிகள் அனைவரிலும் நானே முதன்மையானவன். இதில் ஐயமேதும் இல்லை. நினைத்தற்கரிய ஆன்மாவும், தானே இருப்பவனுமான விஷ்ணு என்னிலும் உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[3].(12) மலைகள் அனைத்திலும் பெரும் மேருவே முதலில் பிறந்ததெனச் சொல்லப்படுகிறது. அடிவானத்தின் முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்திலும் கிழக்கே முதன்மையானதாகவும், முதலில் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.(13)ஆறுகள் அனைத்திலும், மூன்று ஓடைகளைக் கொண்ட கங்கையே முதலில் பிறந்தவளாகச் சொல்லப்படுகிறாள். அதே போலக் கிணறுகள் மற்றும் நீரின் கொள்ளிடங்கள் அனைத்திலும் பெருங்கடலே முதலில் பிறந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(14) தேவர்கள், தானவர்கள், பூதங்கள், பிசாசங்கள், பாம்புகள் {உரகர்கள்}, ராட்சசர்கள், மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள் ஆகியோர் அனைவருக்கும் உயர்ந்த தலைவனாக {பிரபுவாக} ஈஸ்வரன் இருக்கிறான்.(15) பிரம்மம் நிறைந்தவனும், மூவுலகங்களிலும் தனக்கு உயர்ந்தவர் எவரும் இல்லாதவனுமான பெரும் விஷ்ணுவே {மஹாவிஷ்ணுவே} அண்டமனைத்திலும் முதன்மையானவனாக இருக்கிறான்.(16)
வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திலும் இல்லற வாழ்வுமுறையே {கிருஹஸ்தாஸ்ரமமே [இல்லறமே]} முதன்மையானதாகும். இதில் ஐயமேதுமில்லை. புலப்படாததே {அவ்யக்தமானதே} அனைத்திற்கும் பிறப்பிடமாகவும் முடிவாகவும் உள்ளது.(17) சூரியன் மறைவில் பகலும், சூரியன் எழுச்சியில் இரவும் முடிகின்றன. இன்பத்தின் முடிவு கவலையாகவும், கவலையின் முடிவு இன்பமாகவும் எப்போதும் இருக்கிறது.(18) ஒன்றுதிரளும் அனைத்தும் வெளிப்படுவதையும், ஏற்றங்கள் அனைத்தும் வீழ்ச்சியையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. தொடர்புகள் அனைத்தும் தொடர்பறுதலையும், பிறப்பு இறப்பையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன.(19)
செயல்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன, பிறந்தவை அனைத்தும் நிச்சயம் இறப்பைச் சந்திக்கின்றன. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் இவ்வுலகில் நிலையற்றவையாக இருக்கின்றன.(20) வேள்வி {யாகம்}, கொடைகள் {தானம்}, தவங்கள், கல்வி {அத்யயனம்}, நோன்புகள் {விரதங்கள்}, நியமங்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. ஞானம் மட்டுமே முடிவற்றதாகும் {ஞானத்திற்கு நாசமில்லை}.(21) எனவே, அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், நான், எனது என்ற மமதையில் இருந்து விடுபட்டவனும், அகங்காரமற்றவனுமான ஒருவன் தூய அறிவால் {சுத்தமான ஞானத்தால்} பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்” என்றான் {பிரம்மன்}.(22)
சிஷ்டாசாரம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 45-காலச்சக்கரம் எனும் உடல்; இல்லறம்; நல்லோருக்குப் பொருந்தும் ஒழுக்கம் ஆகியவை குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…
பிரம்மன், “வாழ்வுச்சக்கரம் {காலச்சக்கரம்} சுழன்று கொண்டே இருக்கிறது. அது {அந்தச் சக்கரம்} புத்தியைத் தன் பலமாகவும், மனத்தை (அது சார்ந்திருக்கும்) அச்சாகவும் {ஸ்தம்பமாகவும்}, புலன்கூட்டங்களைக் கட்டுகளாகவும், (ஐந்து) பெரும்பூதங்களைக் குழிசியாகவும் {ஆர்களுக்குக் குடமாகவும்}, இல்லத்தைச் சுற்றளவாகவும் கொண்டிருக்கிறது[1].(1) அது முதுமை {ஜரை} மற்றும் துயரம் {சோகம்} ஆகியற்றில் மூழ்கியிருக்கிறது, நோய்களையும் {வியாதிகளையும்}, பேரிடர்களையும் {வியஸங்களையும்} தன் சந்ததியாகவும் கொண்டிருக்கிறது. அந்தச் சக்கரம் காலம் மற்றும் இடம் {தேசம்}தொடர்புடையதாக இருக்கிறது. அஃது உழைப்பு மற்றும் உடற்பயிற்சியைத் தன் ஒலியாகக் கொண்டுள்ளது.(2) பகலும், இரவும் அந்தச் சக்கரத்தின் சுழற்சிகளாக உள்ளன. வெப்பம் மற்றும் குளிரால் அது சூழப்பட்டிருக்கிறது. அஃது இன்பதுன்பங்களை இணைப்புகளாகவும், பசி தாகங்களைத் தன்னில் {இணைப்புகளில்} அறையப்படும் ஆணிகளாகவும் கொண்டுள்ளது.(3) சூரிய ஒளியும், நிழலும் அதன் தடங்களாக (விளைவுகளாக) இருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உள்ள குறுகிய காலத்திலேயே அதைக் கலக்கம் கொள்ளவல்லதாக இருக்கிறது. அது பயங்கரமான மாய நீரால் சூழப்பட்டிருக்கிறது. அஃது எப்போதும் நனவற்றநிலையில் சுழன்று கொண்டே இருக்கிறது.(4) அது மாதங்களாலும், அரைமாதங்களாலும் {பக்ஷங்களாலும்} அளக்கப்படுகிறது. அஃது எப்போதும் சீரற்றதாக (எப்போதும் மாறும் தன்மை கொண்டதாக), அனைத்து உலகங்களிலும் திரிகிறது. தவமும், நோன்புகளும் அதற்குச் சேறு ஆகின்றன. ஆசையின் சக்தி அதை இயக்குகிறது[2].(5)அது பேரகங்காரத்தால் ஒளியூட்டப்பட்டு, குணங்களின் மூலம் தக்க வைக்கப்படுகிறது. (விரும்பியதை அடையாததால் உண்டாகும்) எரிச்சல்கள் {மனச்சோர்வுகள்} அதைச் சுற்றிலும் கட்டப்பட்டுள்ள பிணைப்புகளாக இருக்கின்றன. அது துன்பம் மற்றும் அழிவுக்கு மத்தியில் சுழல்கிறது.(6) அது செயல்கள் {கர்மங்கள்} மற்றும் செயல்கருவிகள் {காரணங்கள்} ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கிறது. அது பெரியதாகவும், பற்றுகளால் நீட்டிக்கப்படுவதாகவும் இருக்கிறது. ஆசை மற்றும் பேராசையின் {லோபத்தின்} மூலம் அது நிலையற்ற தன்மையை அடைகிறது. அது பலவகையான அறியாமைகளில் இருந்து உண்டாக்குகிறது.(7) அஃது அச்சம் மற்றும் மயக்கம் கொள்வதாகவும், அனைத்து உயிரினங்களின் மயக்கத்துக்குக் காரணமாகவும் இருக்கிறது. அஃது இன்ப துன்பங்களை நோக்கி நகர்ந்து, ஆசை மற்றும் கோபத்தை உடைமையாக அடைகிறது.(8) அது மஹத் முதல் திரள் பூதங்கள் வரையிலான உட்பொருள்களால் ஆனது. அஃது இடைவிடாத உற்பத்தி மற்றும் அழிவின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. அதன் வேகம் மனத்தைப் போன்றதாகும், மேலும் அது மனத்தையே தன் எல்லையாகக் கொண்டுள்ளது[3].(9) முரண்பட்ட இரட்டைகள் மற்றும் நனவற்ற நிலை ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்த வாழ்வுச்சக்கரமானது {உடலானது}, இறவாதவர்களுடன் {தேவர்களுடன்} கூடிய அண்டத்தைக் கைவிடவும், சுருக்கவும், சரிபார்க்கவும் வேண்டும்[4].(10)இந்த வாழ்வுச்சக்கரத்தின் இயக்கத்தையும், நிறுத்தத்தையும் எப்போதும் துல்லியமாகப் புரிந்து கொள்ளும் மனிதன், உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும் ஒருபோதும் மயங்கியவனாகத் தென்படுவதில்லை.(11) அனைத்து மனப்பதிவுகளில் {எண்ணங்களில்} இருந்தும் விடுபட்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்திலும் இருந்து விலகி, பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட ஒருவன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(12) இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, பிரம்மச்சாரி, காட்டில் ஒதுங்கி வாழ்பவன் {வானப்பிரஸ்தன்}, துறவி {ஸந்யாசி} ஆகிய வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} நான்கும் இல்லறத்தானின் வாழ்வுமுறையையே தங்கள் அடித்தளமாகக் கொண்டுள்ளன.(13) இந்த உலகில் பரிந்துரைக்கப்படும் விதிமுறைகளில் {ஆசிரமங்களில்} எவற்றைக் கடைப்பிடித்தாலும் நன்மையே பயக்கும். இத்தகைய நோற்றல் எப்போதும் உயர்வாகவே பேசப்பட்டிருக்கிறது.(14) சடங்குகளால் முதலில் தூய்மையடைந்தவனும், முறையாக நோன்புகளை நோற்றவனும், உயர்ந்த தகுதிகளைக் கொண்ட ஓர் இனத்தில் பிறந்தவனும், வேதங்களைப் புரிந்து கொண்டவனுமான ஒருவன், (தன் ஆசானின் இல்லத்தில் இருந்து) திரும்ப வேண்டும்[5].(15)தான் மணந்து கொண்ட மனைவியிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் நல்லோரைப் போன்ற ஒழுக்கத்துடன், புலன்களை அடக்கி, நிறைந்த நம்பிக்கையுடன் கூடிய ஒருவன் இவ்வுலகில் ஐந்து வேள்விகளைச் செய்ய வேண்டும்.(16) தேவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவளித்த பிறகு எஞ்சியதை உண்பவனும், தன் வாழ்வுமுறையின்படி {ஆசிரமத்தின்படி} வேள்விகளையும், கொடைகளையும் முறையாகச் செய்பவனும்,(17) பற்றில்லாமல் கைகள் மற்றும் கால்களைச் செயல்படுத்துபவனும், பற்றில்லாமல் தன் கண்ணைச் செயல்படுத்துபவனும், தவங்களில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், வாக்கு மற்றும் வாக்கின் வரம்புகளைப் பற்றில்லாமல் செயல்படுத்தாதவனுமான ஒருவன், சிஷ்டன் அல்லது நல்லவன் என்ற பகுப்பின் {பிரிவின்} கீழ் வருவான்[6].(18) அவன் எப்போதும் புனிதநூலை {பூணாலைத்} தரிக்கவும், (தூய) வெள்ளுடை உடுத்தவும், தூய நோன்புகளை நோற்கவும், எப்போதும் நல்லோரின் துணையுடன் இருக்கவும், கொடைகளை அளிக்கவும், தற்கட்டுப்பாட்டைப் பயிலவும் வேண்டும்.(19) அவன் தன் காமத்தையும், வயிற்றையும் அடக்கி, உலகளாவிய கருணையைப் பயின்று, நல்லோருக்குப் பொருந்தும் ஒழுக்கத்தில் {சிஷ்டாசாரத்தில் பொருந்தியவனாகத்} தன்னை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் மூங்கில் தடியையும், நீர் நிறைந்த குடத்தையும் {கமண்டலுவையும்} சுமக்க வேண்டும்.(20)கல்வி பயின்றவனான அவன் கற்பிக்கவும், தானே வேள்வி செய்யவும், பிறரின் வேள்வியை நடத்தித் தரவும் வேண்டும். அவன் தான் பெற்ற கொடைகளை அளிக்கவும் {கொடையளிக்கவும்} வேண்டும். உண்மையில் ஒருவன் இந்த ஆறு செயல்களின் மூலம் தன் ஒழுக்கத்தை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்[7].(21) (சீடர்களுக்குக்) கற்பித்தல், பிறரின் வேள்விகளை நடத்தித் தருதல், தூய்மையானவனிடம் இருந்து கொடைகளை ஏற்றல் ஆகிய இந்த மூன்று செயல்களும் பிராமணர்களுக்கான வாழ்வாதாரமாக {ஜீவனோபாயாமாக} அமைகின்றன என்பதை அறிவீராக.(22) கொடையளித்தல், கல்வி கற்றல் மற்றும் வேள்வி செய்தல் என்று எண்ணிக்கையில் மூன்றாக எஞ்சியிருக்கும் கடமைகள் தகுதியுடன் {புண்ணியத்துடன்} கூடியவையாக இருக்கின்றன[8].(23) தவம் செய்பவனாகவும், தற்கட்டுப்பாடுடையவனாகவும், உலகளாவிய கருணை பயில்பவனாகவும், மன்னிக்கும் தன்மை கொண்டவனாகவும், அனைத்து உயிரினங்களையும் சமமான பார்வையில் பார்ப்பவனாகவும் கடமைகளை அறிந்தவனாகவும் இருக்கும் மனிதன், அந்த மூன்று செயல்களில் ஒருபோதும் கவனமில்லாமல் இருந்து விடக்கூடாது {அவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும்}.(24) தூய இதயம் கொண்டவனும், இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} பின்பற்றுபவனும், கடும் நோன்புகளை நோற்பவனும் இவ்வாறு அர்ப்பணிப்புடன் இருப்பனும், இவ்வாறு கடமைகள் அனைத்தையும் தன் சக்திக்குத் தகுந்தவாறு செய்வபனும், கல்விமானுமான பிராமணன், சொர்க்கத்தைக் கைப்பற்றுவதில் வெல்வான்” என்றான் {பிரம்மன்},(25)
உத்தம பதம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 46
பிரம்மன், “மேற்குறிப்பிட்ட வழியில் தன் சக்திக்குத் தகுந்தவாறு முறையாகப் படிப்பவனும், பிரம்மச்சாரியாக வாழ்பவனும், தன் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவனும், கல்வி கொண்டவனும், நோன்புகள் நோற்பவனும், புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துபவனும், ஆசானுக்கு ஏற்புடையதும், நன்மையானதும் எதுவோ அதில் அர்ப்பணிப்புள்ளவனும், வாய்மைக் கடமை பயில்வதில் உறுதியாக இருப்பவனும், எப்போதும் தூய்மையுள்ளவனுமான ஒருவன்,(1,2) தன் ஆசானின் அனுமதியுடன் உணவை இகழாமல் உண்ண வேண்டும். பிச்சையில் கிட்டியவற்றால் அமைந்த ஹவிஷ்யத்தை அவன் உண்ண வேண்டும். மேலும் அவன் (வழிகாட்டுதலின் படியே) நிற்கவும், அமரவும், செயல்படவும் வேண்டும்[1].(3) அவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு குவிந்த மனத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அவன் எப்போதும் வில்வத்தலோ, பலாசத்தாலோ ஆன தண்டத்தைத் தரிக்க வேண்டும்.(4) மறுபிறப்பாள மனிதனின் ஆடைகள் பட்டு, பருத்தி, மான் தோல் அல்லது முழுமையாகப் பழுப்புச் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆடையாகவோ இருத்தல் வேண்டும்.(5)முஞ்சப்புல்லாலான கச்சையும் {அரைநாணும்} இருக்க வேண்டும். அவன் தன் தலையில் சடாமுடி தரித்துத் தினமும் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். அவன் புனித நூல் {பூணூல்} தரிக்கவும் {யஜ்ஞோபவீதமுள்ளவனும்}, சாத்திரங்களைப் படிக்கவும், பேராசையில் இருந்து விடுபடவும், நோன்புகள் நோற்பதில் உறுதியாக இருக்கவும் வேண்டும்.(6) அவன் மனத்தை அடக்கியவாறு தூய நீரைக் கொண்டு செய்யப்படும் படையல்களால் தேவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். அத்தகைய பிரம்மச்சாரி மெச்சத்தகுந்தவனாவான்.(7) மேலீர்க்கப்பட்ட உயிர்வித்துடன், மனத்தைக் குவித்து இவ்வாறு அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒருவன் சொர்க்கத்தைக் கைப்பற்றுவதில் வெல்கிறான்.(8) தூய்மைச் சடங்குகள் அனைத்தாலும் தூய்மையடைந்து, பிரம்மச்சாரியாக வாழும் ஒருவன், தன் கிராமத்தில் இருந்து வெளியேறி, அடுத்ததாக (பற்றுகள் அனைத்தையும்) துறந்து, காடுகளில் தவசியாக வாழ வேண்டும்.(9) அவன் விலங்குத் தோல்கள் அல்லது மரப்பட்டைகளை உடுத்திக் கொண்டு, காலையும், மாலையும் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். எப்போதும் காட்டுக்குள்ளேயே வாழும் அவன், ஒருபோதும் மக்கள் வசிக்கும் இடத்திற்குத் திரும்பக் கூடாது.(10)
விருந்தினர்கள் வரும்போது அவர்களை மதித்து, உறைவிடமளிக்கும் அவன், கனிகள், இலைகள், கிழங்குகள் மற்றும் சியாமகம் {சாமை} ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும்.(11) அவன் சோம்பலில்லாமல் தான் பெறும் நீர், காற்று மற்றும் காட்டுப் பொருட்கள் அனைத்தையும் கொண்டு வாழ வேண்டும். அவன் தனது தொடக்க விதிமுறைகளின்படி முறையான வரிசையில் இவற்றைக் கொண்டு வாழ வேண்டும்[2].(12) அவன் தன்னிடம் வரும் விருந்தினருக்கு கனிகளையும், கிழங்குகளையும் கொடுத்து மதிக்க வேண்டும். அதன் பிறகு அவன் சோம்பலில்லாமல் தன்னிடம் உள்ள வேறு உணவுப் பொருட்களையும் கொடுக்க வேண்டும்.(13) பேச்சைக் கட்டுப்படுத்தி, தேவர்களையும், விருந்தினர்களையும் நிறைவடையச் செய்த பிறகு அவன் உண்ணலாம். அவன் மனம் பொறாமையில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். அவன் சிறிதளவே உண்டு, எப்போதும் தேவர்களைச் சார்ந்திருக்க வேண்டும்.(14) தற்கட்டுப்பாடுடன், உலகளாவிய கருணை பயின்று, மன்னிக்கும் தன்மையுடன் கூடிய அவன் (நாவிதரின் இயக்கங்களுக்கு இடமளிக்காமல்) தாடியும், முயிரும் வளர்க்க வேண்டும். வேள்விகளைச் செய்து, சாத்திரக் கல்விக்குத் தன்னை அர்ப்பணிக்கும் அவன், வாய்மைக் கடமையை நோற்பதில் எப்போதும் உறுதியுள்ளவனாக இருக்க வேண்டும்[3].(15)எப்போதும் தூய்மையாக உள்ள உடலுடனும், புத்திசாலித்தனத்துடனும், குவிந்த மனத்தோடு காட்டில் வசித்து, புலன்களை அடக்கியிருக்கும் ஒரு காட்டுத்துறவி {வானப்பிரஸ்தன்} இவ்வாறே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சொர்க்கத்தைக் கைப்பற்றுவான்.(16) விடுதலையை {முக்தியை} அடைய விரும்பும் ஓர் இல்லறத்தானோ {கிருஹஸ்தனோ}, பிரம்மச்சாரியோ, காட்டுத்துறவியோ சிறந்த ஒழுக்கமுறை என்றழைக்கப்படும் நடைமுறையை {உத்தம நடையைப்} பின்பற்ற வேண்டும்.(17) முற்றான தீங்கிழையாமை என்ற உறுதிமொழியை அனைத்து உயிரினங்களுக்கும் அளிக்கும் அவன், தன் செயல்பாடுகள் அனைத்தையும் முற்றிலும் துறக்க வேண்டும். அவன் அனைத்து உயிரினங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதில் தன் பங்கைச் செலுத்தி, உலகளாவிய நட்பைப் பயின்று, புலன்கள் அனைத்தையும் அடக்கி ஒரு தவசியாக இருக்க வேண்டும்.(18) கேட்காமலும் {யாசியாமலும்}, தொல்லையில்லாமலும் {நிச்சயிக்காமலும்}, தானாகவும் {தற்செயலாகவும்} கிடைக்கும் உணவைக் கொண்டு அவன் நெருப்பை அமைக்க வேண்டும். எந்த இடத்தில் புகை அடங்கியிருக்கிறதோ, எங்கே வசிப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே உண்டுவிட்டனரோ அங்கே அவன் பிச்சை வாங்கச் செல்ல வேண்டும்[4].(19) விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் ஒழுக்கத்தை அறிந்த மனிதன், {தான் செல்லப்போகும் இடத்தில்} (சமையலுக்குப் பயன்படுத்தும்) பாத்திரங்கள் துலக்கப்பட்ட பிறகு {அங்கே} பிச்சை கேட்க செல்ல வேண்டும்.(20)தன்னுயிரைத் தாங்கிக் கொள்வதற்கு வேண்டியதை மட்டுமே வேண்டி, குவிந்த மனத்துடன் பிச்சை கேட்கச் செல்லும் அவன் உரிய நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும். பிறருக்குப் பொதுவான வருவாயில் அவன் விருப்பம் கொள்ளக்கூடாது, கௌரவிக்கப்படும்போது உண்ணக்கூடாது.(21) துறவி {சந்நியாசி} வாழ்வுமுறையைப் பின்பற்றும் மனிதன், மதிப்புடன் வழங்கப்படும் கொடைகளைத் தவிர்ப்பதற்காகத் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும். உண்ணும்போது, பிறர் உண்டதன் எச்சத்தையோ, கசப்பு, துவர்ப்பு, கார்ப்புள்ள உணவையோ அவன் உண்ணக்கூடாது.(22) இனிய சுவை கொண்ட உணவு வகைகளையும் அவன் உண்ணக்கூடாது. அவன் தன் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும்.(23) விடுதலையை {முக்தியை} அறிந்த ஒருவன், எந்த உயிரினத்திற்கும் தடங்கல் ஏற்படுத்தாமல் தன் வாழ்வாதாரத்தை அடைய வேண்டும். பிச்சை வாங்கச் செல்லும்போது (அதே நோக்கத்துடன் செல்லும்) மற்றொருவனைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாது.(24)
அவன் தன் பக்தியை வெளியிடக்கூடாது; அவன் ஆசையில் இருந்து விடுபட்டவனாக ஒதுக்குப்புறமான {ஆளரவமற்ற} இடங்களுக்கே செல்ல வேண்டும். வெறுமையான வீட்டையோ, காட்டையோ, ஏதோவொரு மரத்தடியையோ, ஆற்றையோ,(25) ஒரு மலைக்குகையையோ அவன் தன் உறைவிடமாகக் கொள்ளலாம். கோடைக் காலத்தில் அவன் மக்கள் வசிக்கும் இடங்களில் ஓரிரவை மட்டுமே கழிக்கலாம்; மழைக்காலங்களில் அவன் ஒரே இடத்தில் வசிக்கலாம்.(26) அவன் ஒரு புழுவைப் போல உலகில் சூரியனால் சுட்டிக் காட்டப்படும் பாதையில் பயணிக்க வேண்டும். உயிரினங்களிடம் கொள்ளும் கருணையை நோக்கமாகக் கொண்டு அவன் பூமியில் நடக்க வேண்டும்.(27) அவன் ஒருபோதும் எதையும் குவிக்கக்கூடாது, நண்பர்களுடன் வசிப்பதைத் தவிர்க்க வேண்டும். விடுதலையை {முக்தியை} அறிந்த மனிதன் நாள் தோறும் தன் செயல்கள் அனைத்தையும் தூய நீரைக் கொண்டே செய்ய வேண்டும்.(28) அத்தகைய மனிதன் (ஆற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ) இறைக்கப்பட்ட நீரைக் கொண்டே எப்போதும் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். தீங்கிழையாமை {அஹிம்ஸை}, பிரம்மச்சரியம், வாய்மை {ஸத்யம்}, எளிமை {கபடமின்மை},(29) கோபத்திலிருந்து விடுதலை {குரோதமின்மை}, இகழ்வதில் இருந்து விடுதலை {அஸூயையின்மை}, தற்கட்டுப்பாடு {மனவடக்கம்}, புறங்கூறுவதில் இருந்து விடுதலை {கோட்சொல்லாமை} ஆகியவற்றைப் பெற்ற ஒருவன் புலனடக்கத்துடன் கூடியவனாக, உறுதியுடன் இந்த எட்டு நோன்புகளையும் பயில வேண்டும்.(30)
அவன் எப்போதும் பாவமற்றதும், வஞ்சகமற்றதும், கோணலற்றதுமான ஒழுக்க முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பற்றிலிருந்து விடுபட்டவனான அவன், விருந்தினராக வருபவருக்கு (குறைந்தது) ஒரு கவளம் உணவையாவது உண்ணக் கொடுக்க வேண்டும்.(31) அவன் தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும். நீதிமிக்க வழிமுறைகளில் அடையப்பட்ட உணவையே அவன் உண்ண வேண்டும், ஆசையின் ஆணைகளைப் பின்தொடரக்கூடாது.(32) உணவு, உடை ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேலும், அவன் தான் உண்ணக்கூடிய அளவைத் தவிர அதிகமாக ஏற்கக்கூடாது.(33) அவன் பிறரிடம் இருந்து கொடைகளை ஏற்கவோ, பிறருக்குக் கொடையளிக்கவோ தூண்டுதல் பெறக்கூடாது. உயிரினங்களின் ஆதரவற்ற நிலையின் காரணமாக ஞானமுள்ள ஒரு மனிதன் எதையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.(34) அவன் பிறரின் உடைமைகளை அபகரிக்கவோ, எதையும் கேட்காமல் எடுத்துக் கொள்ளவோ கூடாது. எதையும் அனுபவித்து விட்டு, அதை மீண்டும் பெற விரும்புமளவுக்கு அதனில் பற்று கொள்ளக்கூடாது.(35)
அவன் எந்தச் செயலையும் செய்ய விரும்பும்போது, வேறு எவருக்கும் உரிமையற்ற மண், நீர், கற்கள், இலைகள், மலர்கள் கனிகள் ஆகியவற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.(36) கைவினைஞர் {சிற்பி} தொழிலைச் செய்து அவன் வாழக்கூடாது, மேலும் அவன் பொன்னில் ஆசை கொள்ளக்கூடாது. அவன் வெறுக்கவோ, (கல்வி நாடாதவனுக்குக்) கற்பிக்கவோ, எந்த உடைமைகளையும் உரிமையாகக் கொள்ளவோ கூடாது.(37) நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதை {ஸ்ரத்தையினால் பரிசுத்தமானவற்றை} மட்டுமே அவன் உண்ண வேண்டும். அவன் சர்ச்சைகளில் இருந்து விலகயிருக்க வேண்டும். அமுதமாகச் சொல்லப்படும் ஒழுக்க நடைமுறையையே அவன் பின்பற்ற வேண்டும். அவன் எதனிலும் பற்றுக் கொள்ளாமல், எந்த உயிரினத்துடனும் நெருக்கமான உறவுகளில் ஒருபோதும் நுழையாமல் இருக்க வேண்டும்[5].(38) பயனில் எதிர்பார்ப்புள்ள, அல்லது உயிருக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய, அல்லது செல்வத்தையோ, பொருளையோ பதுக்கக்கூடிய எந்தச் செயலையும் அவன் செய்யவோ, செய்வதற்குக் காரணமாக அமையவோ கூடாது.(39) பொருட்கள் அனைத்தையும் புறக்கணித்து, (இல்லமற்றவனாக) சொற்பமானவற்றில் நிறைவடையும் அவன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களிடம் சமமான நடத்தை கொண்டவனாக இருக்க வேண்டும்.(40)அவன் மற்றொருவனை ஒருபோதும் எரிச்சலூட்டக்கூடாது; அதேபோல மற்றொருவனிடம் எரிச்சலடையவும் கூடாது. அனைத்து உயிரினங்களாலும் எவன் நம்பப்படுகிறானோ அவனே விடுதலையை {முக்தியைப்} புரிந்து கொண்டவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்.(41) அவன் கடந்த காலத்தை நினையாமல், எதிர்காலத்தைக் குறித்துக் கவலைகொள்ளாமல் இருக்க வேண்டும். அவன் நிகழ்காலம் பரிந்துரைக்கும் நேரத்தைக் குவிந்த மனத்துடன் அலட்சியம் செய்ய வேண்டும்[6].(42) அவன் கண்ணாலோ, மனத்தாலோ, வாக்காலோ எதையும் ஒருபோதும் தூய்மையிழக்கச் செய்யக்கூடாது. அவன் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ குற்றமெதுவும் செய்யக்கூடாது.(43) ஆமை தன் உறுப்புகளை உள்ளீர்த்துக் கொள்வதைப் போலப் புலன்களை அடக்கும் ஒருவன் தன் புலன்களையும், மனத்தையும் மட்டுப்படுத்தி, முற்றிலும் அமைதியான புத்தியை வளர்த்து, அனைத்திலும் திறனடைய முயற்சிக்க வேண்டும்.(44) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஒருவருக்கும் தலைவணங்காமல், ஸ்வாஹா சொல்லப்படும் சடங்குகளைத் தவிர்க்கும் ஒருவன் நான் என்ற மமதை மற்றும் அகங்காரத்தில் இருந்து விடுபட வேண்டும். தூய இதயத்துடன் கூடிய அவன், தன்னிடம் இல்லாததை அடையவோ, தன்னிடம் இருப்பதைப் பாதுகாக்கவோ முயற்சிக்ககூடாது.(45) எதிர்பார்ப்புகளில் இருந்து விடுபட்டு, குணங்களை நீக்கி, அமைதியடையும் ஒருவன் பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டு, எதையும் சாராதவனாக இருக்க வேண்டும். தன்னிலே பற்றுக் கொண்டு அனைத்தையும் புரிந்து கொள்ளும் ஒருவன், ஐயமில்லாமல் விடுதலையடைவான் {முக்தியடைவான்}.(46)கைகள், கால்கள், முதுகு, தலை, வயிறு அற்றதும், குணங்கள் அனைத்தின் இயக்கத்தில் இருந்தும் விடுபட்டதும், முழுமையானதும் {தனித்திருப்பதும்}, களங்கமற்றதும் {நிர்மலமானதும்}, நிலையானதும் {ஸ்திரமானதும்},(47) மணம் {கந்தம்}, சுவை {ரஸம்}, தீண்டல் {ஸ்பரிசம்}, நிறம் {ரூபம்} மற்றும் ஒலியற்றதும் {சப்தமற்றதும்}, (கவனமான ஆய்வின் மூலம்) புரிந்து கொள்ளப்பட வேண்டியதும் {அனுசரிக்கத்தக்கதும்}, பற்றற்றதும், தசையற்றதும்,(48) கவலையில் இருந்து விடுபட்டதும், மங்காததும் {அழிவற்றதும்}, தெய்வீகமானதும் {திவ்யமானதும்}, ஒரு வீட்டில் வசித்தாலும் அனைத்து உயிரினங்களிலும் இருப்பதுமான சுயத்தை {ஆன்மாவை} உணர்ந்தவர்கள் இறப்பில் இருந்து தப்புவதில் வெல்கிறார்கள்.(49) புத்தியோ, புலன்களோ, தேவர்களோ, வேதங்களோ, வேள்விகளோ, (மேன்மையான அருள் கொண்ட) உலகங்களோ, தவமோ, நோன்புகளோ அஃதை அடைவதில்லை.(50) ஞானம் கொண்டவர்களால் அடையப்படுவதாகவும், அடையாளங்களால் அறிய முடியாததாகவும் அது சொல்லப்படுகிறது. எனவே, அடையாளங்களற்ற அதன் இயல்புகளை அறிந்த மனிதன் பக்தியுடன் கூடிய வாய்மையை {தர்மத்தைப்} பயில வேண்டும்[7].(51) இல்லறம் மேற்கொள்ளும் கல்விமான், உண்மை அறிவுக்கு இணக்கமான ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மயக்கமடையாத ஒருவனும் {ஞானியானவன்}, மயக்கமடைந்த {அஜ்ஞானியான} ஒருவன் பயிலும் பக்தியில் {தர்மத்தில்} குறை காணாமல் அவ்வகையிலேயே அதைப் பயில வேண்டும்[8].(52) நல்லோரின் நடைமுறைகளில் குறைகாணாமல், தன்னை எப்போதும் அவமதிப்பவர்களான பிறரைத் தூண்டும் வகையிலான பக்தி நடைமுறை கொண்ட ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.(53)இத்தகைய ஒழுக்கத்துடன் கூடிய மனிதன் தவசிகளில் முதன்மையானவன் {சிறந்த முனிவன்} எனச் சொல்லப்படுகிறான். புலன்கள், புலன்நுகர் பொருட்கள், (ஐந்து) பெரும்பூதங்கள்,(54) மனம், புத்தி, அகங்காரம், புலப்படாதது {அவ்யக்தம்}, புருஷன் ஆகியவற்றைச் சரியான அனுமானங்களின் துணையுடன் முறையாகப் புரிந்து கொண்ட பிறகே(55) ஒருவன் அனைத்துப் பந்தங்களில் இருந்தும் விடுபட்டுச் சொர்க்கத்தை அடைகிறான். வாய்மையை அறிந்த ஒருவன், உயிர் போகும் வேளையில் இவை அனைத்தையும் புரிந்து கொண்டு(56) உரிய தனிமையான இடத்தில் தியானிக்க வேண்டும். அதன்பிறகு, எதையும் சாராதிருக்கும் அவன் விடுதலையை {முக்தியை} அடைவான். வெளியிலுள்ள {ஆகாயத்திலுள்ள} காற்றைப் போலப் பந்தங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, குவித்தவற்றைத் தீர்த்து, எவ்வகைத் துன்பமுமின்றி மிக உயர்ந்த இலக்கை அவன் அடைவான்” என்றான் {பிரம்மன்}.(57)
பிரம்மவிருக்ஷம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 47-மோக்ஷஸாதனங்களான துறவு, அறிவு, தவம் ஆகியவற்றைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…
பிரம்மன், “குறிப்பிட்ட உண்மையைச் சொன்னவர்களான புராதனர்கள், துறவே தவம் என்று சொல்கின்றனர். பிரம்மத்தைப் பிறப்பிடமாகக் கொண்டதில் வசிக்கும் பிராமணர்கள், ஞானமே உயர்ந்த பிரம்மம் என்று புரிந்து கொள்கிறார்கள்[1].(1) பிரம்மம் மிகத் தொலைவிலிருக்கிறது, அஃதை அடைவது வேத ஞானத்தைச் சார்ந்திருக்கிறது. அது முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்ததாகவும், குணங்கள் ஏதும் அற்றதாகவும், நித்தியமானதாகவும், எண்ணமுடியாத குணங்களைக் கொண்டதாகவும், உயர்ந்ததாகவும் இருக்கிறது.(2) ஞானிகள் தங்கள் ஞானம் மற்றும் தவத்தின் மூலமே அந்த உயர்ந்ததைக் காண்கின்றனர். உண்மையில், களங்கமற்ற மனங்களைக் கொண்டவர்களும், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களும், ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {தமோ குணம்} ஆகியவற்றைக் கடந்தவர்களுமாக அவர்கள் இருக்கின்றனர் (அவர்களே அதைக் காண்பதில் வெல்கிறார்கள்).(3)எப்போதும் துறவில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான அவர்கள், இன்பம் மற்றும் அமைதியின் பாதையில் அடையாளம் காணப்படும் உயர்ந்த தலைவனை {பரமேஸ்வரனை} தவத்தின் உதவியால் அடைவதில் வெல்கிறார்கள்.(4) தவம் ஒளி {சிறந்த தீபம்} என்று சொல்லப்படுகிறது. ஒழுக்கம் பக்திக்கு வழிவகுக்கிறது {தர்மத்திற்கு ஸாதமாகும்}. ஞானம் உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. துறவே சிறந்த தவமாகும்.(5) அனைத்தையும் துல்லியமாகத் தீர்மானிப்பதன் மூலம் கலக்கமற்றதும், ஞானத்தோடு அடையாளம் காணப்படுவதும், அனைத்துப் பொருட்களிலும் வசிப்பதுமான சுயத்தை {ஆன்மாவைப்} புரிந்து கொள்ளும் ஒருவன் எங்கும் செல்வதில் வெல்கிறான் {அனைத்தையும் அறிந்தவனென்று இவ்வுலகில் சொல்லப்படுகிறான்}.(6)
சேர்தல் மற்றும் பிரிதல், வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றைக் காணும் கல்விமான் துன்பத்தில் இருந்து விடுபடுகிறான்.(7) எதையும் விரும்பாதவனும், எதையும் இகழாதவனுமான ஒருவன் இவ்வுலகில் வசிக்குபோதே பிரம்மத்துடன் கலப்பதற்குத் தகுந்தவனாகிறான்.(8) பிரதானத்தின் குணங்கள் குறித்த உண்மைகளை அறிந்து, அனைத்துப் பொருட்களிலும் பிரதானம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்பவனும், நான் என்ற மமதையிலிருந்தும், அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவனுமான ஒருவன் நிச்சயம் விடுதலை {முக்தி} அடைகிறான்.(9)
முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், எவருக்கும் தலைவணங்காதவனும், ஸ்வதா சடங்குகளைக் கடந்தவனுமான ஒருவன், எது முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்டதாக இருக்கிறதோ, எது நித்தியமானதோ, எது குணங்களற்றதாக இருக்கிறதோ அஃதை அமைதியான மனநிலையின் துணையால் மட்டுமே அடைந்து விடுகிறான்.(10) குணங்களில் இருந்து வளர்ந்து வரும் நல்லவையோ, அல்லவையோவான செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, வாய்மை, பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடும் ஓர் உயிரினம் நிச்சயம் விடுதலையடைகிறது {முக்தியடைகிறது}.(11)
புலப்படாததைத் தன் பிறப்பிடமாகக் கொண்டதும், புத்தியைத் தண்டாக {அடிமரமாகக்} கொண்டதும், அகங்காரம் என்ற பெருங்கோட்பட்டை கிளைகளாகக் கொண்டதும், புலன்களைச் சிறு தளிர்கள் முளைக்கும் பொந்துகளாகக் கொண்டதும்,(12) (ஐந்து) பெரும்பூதங்களைப் பெருங்கிளைகளாகக் கொண்டதும், புலன்நுகர் பொருட்களை எப்போதும் இலைகளுடனும், அலங்கரிக்கும் மலர்களுடனும் கூடியதும், இனிமையான மற்றும் இனிமையற்ற கனிகளை உண்டாக்கக்கூடிய சிறு கிளைகளாகக் கொண்டதுமான(13) நித்தியமான பிரம்ம மரமே அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கும் அமைப்பாகிறது. வாய்மையில் ஞானம் என்ற வாளைக் கொண்டு அம்மரத்தை வெட்டிப் பிளக்கும் ஞானமுள்ள மனிதன்,(14) பற்றில் உண்டானவையும், பிறப்பு, முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றை உண்டாக்குபவையுமான கட்டுகளை {பந்தங்களைக்} கைவிட்டு, நான் எனது என்ற மமதை மற்றும் அகங்காரத்தில் இருந்து விடுபட்டு நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைவான்[2].(15)மாற்றமில்லாதவையும், நண்பர்களும், புத்தியற்றவையாக அறியப்பட வேண்டியவையுமான இரு பறவைகள் இருக்கின்றன. இவையிரண்டில் இருந்து வேறுபட்ட மற்றொன்று புத்தி என்றழைக்கப்படுகிறது.(16) ஞான இயல்பற்றதும், புத்தியற்றதுமான சுயம் {ஆன்மா}, எது இயற்கைக்கும் மேலானதோ அதை அறியும்போது, க்ஷேத்திரத்தைப் புரிந்து கொண்டு, குணங்கள் அனைத்தையும் கடந்த புத்தியுடன் கூடியதாக அனைத்தையும் தெரிந்து கொண்டு பாவங்கள அனைத்தில் இருந்து விடுதலை அடைகிறது[3]” என்றான் {பிரம்மன்}.(17)
ஏகத்வம், நானாத்வம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 48-யோகிகளின் வகைகளையும், மோக்ஷத்தை விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு கருத்துகளையும் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…
பிரம்மன், “{பிரம்மமே உலகம் என்று சொல்லும்} சிலர் பிரம்மத்தை {பிரபஞ்சம் என்ற} மரமாகக் கருதுகின்றனர். சிலர் பிரம்மத்தை பெருங்காடாக {பிரபஞ்சமாகக்} கருதுகின்றனர். {பிரம்மம் உலகம் ஆவதில்லை, உலகமே பிரம்மத்தில் இருந்து தோன்றுகிறது என்று சொல்லும்} சிலர் கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டுக் கடந்த நிலையாக அதை {பிரம்மத்தைக்} கருதுகின்றனர்.(1) இவை யாவும் புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்து உண்டாகி ஈர்க்கப்படுகிறது என்று அவர்கள் {ஸாங்கியர்கள்} நினைக்கின்றனர். {பிரம்மமே உலகம் என்று சொல்லும்} எவன் தன் முடிவு வருங்காலத்தில் ஒரேயொரு மூச்சுவிடும்பொழுதில் ஆன்மாவை அடைந்து {அதனுடன்} ஒரே நிலையை அடைகிறானோ அவன் இறவாமைக்குத் தகுந்தவனாகிறான். கண்ணிமைக்கும் காலத்திற்குள்ளாக சுயத்தைச் சுயத்தில் அடக்கும் ஒருவன் {பிரம்மத்தில் இருந்தே உலகம் உண்டாகிறது என்று சொல்பவன்} தன் அமைதியின் மூலம் ஞானிகளால் அடையப்படும் வற்றாத உடைமையை {மோக்ஷத்தை} அடைகிறான். பிராணாயாமம்[1] என்றழைக்கப்படும் வழிமுறையின்படி உயிர் மூச்சுகளை மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்துவதன் மூலமும்,(2-4)பத்து, அல்லது பனிரெண்டின்[2] மூலமும் அவன் இருபத்து நான்கையும் கடந்திருப்பதை அடைகிறான்.இவ்வாறே முதலில் அமைதியான ஆன்மாவை அடையும் {நிர்மலமான சத்வ குணமுள்ள} ஒருவன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைகிறான்.(5) புலப்படாததில் இருந்து எழுவதில் {அவ்யக்தத்தில்} நல்லியல்பின் {சத்வ} குணம் அதிக ஆதிக்கம் செலுத்தும்போது அவன் இறவாமையை அடைய {அமிருதனாக இருக்கத்} தகுந்தவனாகிறான். நல்லியல்பை அறிந்தவர்கள், நல்லியல்பைக் காட்டிலும் உயர்ந்தது வேறேதுமில்லை என்று சொல்லி அதை உயர்வாகப் புகழ்கின்றனர்.(6) புருஷன் நல்லியல்பைச் சார்ந்திருக்கிறான் என்பதை நாம் உள்ளுணர்வின் மூலம் அறிகிறோம். மறுபிறப்பாளர்களே, வேறு எந்த வழிமுறைகளின் மூலமும் புருஷனை அடைவது சாத்தியமில்லை.(7)
மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துணிவு {தைரியம்}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்ஸை}, சீர்மை {ஸமமாக இருப்பது}, வாய்மை {உண்மை}, நேர்மை, அறிவு {ஞானம்}, கொடை {தியாகம்}, துறவு {ஸந்யாஸம்} ஆகியன நல்லியல்பில் இருந்து எழும் ஒழுக்க நடைமுறையின் சிறப்பியல்புகளாக {ஸத்வத்தின் கார்யங்களெனச்} சொல்லப்படுகின்றன.(8) இந்த உள்ளுணர்வின் மூலமே ஞானிகள், புருஷன் மற்றும் நல்லியல்பின் அடையாளங்களை {ஒன்றென} நம்புகிறார்கள். இதில் ஐயமேதுமில்லை.(9) ஞானத்தில் அர்ப்பணிப்புள்ள கல்விமான்கள் சிலர், க்ஷேத்ரஜ்ஞன் {புருஷன்} மற்றும் இயற்கைக்கு {சத்வத்திற்கு} இடையிலான ஒற்றுமையை வலியுறுத்திச் சொல்கின்றனர். எனினும், இது சரியல்ல.(10)
இயற்கையானது {சத்வம்}, புருஷனிலிருந்து வேறுபட்டது எனச் சொன்னால், அதுவும் கருத்தின்மையையே குறிக்கும்.(11) உண்மையில், வேற்றுமையும், ஒற்றுமையும் (புருஷனுக்கும், இயற்கைக்கும் பொருந்துவதாக) அறியப்பட வேண்டும். ஒற்றுமையும் {ஏகத்வமும்}, வேற்றுமையும் {நானாத்வமும்} இவ்வாறே விதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே கல்விமான்களின் கோட்பாடாகும். கொதுகு {கொசு} மற்றும் அத்திப்பழத்தில் ஒற்றுமையும், வேற்றுமையும் காணப்படுகின்றன.(12) நீரில் இருக்கும் மீன் வேறாக இருப்பதைப் போலவே இவை இரண்டின் (புருஷன் மற்றும் இயற்கையின் {சத்வத்தின்} உறவு இருக்கிறது. உண்மையில் அவற்றின் உறவானது தாமரை இலையில் உள்ள நீர்த்துளிகளைப் போன்றதாகும்” என்றான் {பிரம்மன்}”.(13)
ஆசான் தொடர்ந்தார், “{பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், கல்விமான்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான அந்தப் பிராமணர்கள் சில ஐயங்களை உணர்ந்தனர். (எனவே) அவர்கள் மீண்டும் ஒருமுறை (அனைத்துயிரினங்களின்) பெரும்பாட்டனைக் கேள்வி கேட்டனர்” {என்றார் ஆசான்}[3].(14)
ஸம்சயங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 49-பலர் பலவாறாகச் சொல்லும் தர்மங்களில் தங்களுக்குள்ள ஐயங்களைப் பிரம்மனிடம் கேட்ட முனிவர்கள்…
முனிவர்கள் {பிரம்மனிடம்}, “கடமைகளில் {தர்மங்களில்} எது நிறைவேற்றுவதற்கு மிகவும் தகுந்ததாகக் கருதப்படுகிறது? கடமைகளில் பல்வேறு வழிமுறைகள் முரண்பட்டவையாக இருப்பதை நாம் காண்கிறோம்.(1) சிலர் உடலுக்கு (உடல் அழிந்த) பிறகும் (அஃது {ஆத்மா} எஞ்சி) இருக்கிறது என்று சொல்கிறார்கள். மற்றவர்கள் அஃது அவ்வாறிருப்பதில்லை என்று சொல்கிறார்கள். சிலர் அனைத்தும் ஐயம் நிறைந்தன என்று சொல்கிறார்கள். வேறு சிலருக்கு ஐயங்கள் ஏதுமில்லை[1].(2)சிலர், நித்தியமானது (கோட்பாடு) நித்தியமானதல்ல என்று சொல்கிறார்கள். சிலர் அஃது இருக்கிறது என்றும், வேறு சிலர் அஃது இல்லை என்றும் சொல்கிறார்கள். சிலர் அஃது ஒரு வடிவில் அல்லது இரு வடிவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள், வேறு சிலர் அது கலந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.(3) பிரம்மத்தை அறிந்தவர்களும், வாய்மை பேசுபவர்களுமான பிராமணர்கள் சிலர் அஃது ஒன்றே என்று கருதுகிறார்கள். வேறு சிலர் அது வேறுபட்டது எனவும், மேலும் சிலர் அது பல வகையானது என்றும் கருதுகிறார்கள்.(4)
சிலர் காலமும், வெளியும் {இடமும் / தேசமும்} இருக்கின்றன என்று சொல்கின்றனர்; வேறு சிலர் அஃது அவ்வாறில்லை என்று சொல்கின்றனர். சிலர் தங்கள் தலைகளில் ஜடா முடி தரித்து மான் தோல் உடுத்துகின்றனர். வேறு சிலர் தலையை மழித்து, முற்றிலும் அடையின்றி இருக்கின்றனர்.(5) சிலர் குளிப்பதை முற்றிலும் தவிர்ப்பதை ஆதரிக்கின்றனர், சிலர் குளிப்பதை ஆதரிக்கின்றனர். தேவர்கள், பிரம்மத்தை அறிந்த பிராமணர்கள், மற்றும் வாய்மை உணர்வுகளுடன் கூடியவர்களுக்கு மத்தியில் இத்தகைய வேறுபட்ட கருத்துகள் தென்படுகின்றன.(6)
சிலர் உணவு {ஆஹாரம்} உட்கொள்வதை ஆதரிக்கின்றனர்; வேறு சிலர் உண்ணா நோன்புகளில் {உபவாஸங்களில்} அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். சிலர் செயல்பாட்டை {கர்மாவை} மெச்சுகின்றனர். வேறு சிலர் முற்றான அமைதியை {அடக்கத்தை} மெச்சுகின்றனர்.(7) சிலர் விடுதலையை {முக்தியை / மோக்ஷத்தை} மெச்சுகின்றனர். வேறு சிலர் பல்வேறு வகை இன்பங்களை {போகங்களை} மெச்சுகின்றனர்.(8)
சிலர் பல்வேறு வகைச் செல்வங்களை விரும்புகின்றனர். சிலர் வறுமையை விரும்புகின்றனர். சிலர் {தியானம் முதலிய} வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். வேறு சிலர் அவ்வாறில்லை என்கின்றனர்.(9) சிலர் தீங்கிழைக்காத வாழ்வில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். வேறு சிலர் அழிவைச் செய்வதில் அடிமையாக இருக்கிறார்கள். சிலர் தகுதியையும் {புண்ணியம் செய்வதையும்}, மகிமையையும் {புகழடைவதையும்} ஆதரிக்கின்றனர். வேறு சிலர் அவ்வாறில்லை என்கின்றனர்.(10)
சிலர் நல்லியல்பில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். வேறு சிலர் ஐயத்தில் நிறுவப்பட்டுள்ளனர். சிலர் இன்பத்தை ஆதரிக்கின்றனர். சிலர் துன்பத்தை ஆதரிக்கின்றனர். வேறு சிலர் அது தியானம் என்று சொல்கின்றனர்[2].(11) கல்விமான்களான பிராமணர்கள் சிலர் அது வேள்வி என்று சொல்கின்றனர். மேலும் சிலர் அது கொடை என்கின்றனர். சிலர் தவங்களை மெச்சுகின்றனர். வேறு சிலர் சாத்திரக்கல்வியை மெச்சுகின்றனர்.(12)சிலர் ஞானமும், துறவும் (பின்பற்றப்பட வேண்டும்) என்கின்றனர். உட்கூறுகளைச் சிந்திக்கும் வேறு சிலர் {ஸாதனங்கள் எல்லாம் பூர்த்தியாக இருப்பதினாலேயே உண்டாகிறது} அஃது இயற்கை என்கின்றனர். சிலர் அனைத்தையும் போற்றுகின்றனர். சிலர் எதையும் போற்றுவதில்லை.(13) ஓ! தேவர்களில் முதன்மையானவரே, இவ்வாறு குழப்பமுடையதும், பல்வேறு வகை முரண்பாடுகள் நிறைந்ததுமான கடமைகளில் நாங்கள் மயக்கமடைந்து, {சிறந்தது எது என்ற} எந்தத் தீர்மானத்தையும் எட்ட இயலாதவர்களாக இருக்கிறோம்.(14)
“இது நல்லது, இது நல்லது” என்று சொல்லி மனிதர்கள் செயல்படுகிறார்கள். ஒரு கடமையில் {தர்மத்தில்} பற்றுடன் இருக்கும் ஒருவன் அந்தக் கடமையே சிறந்ததென மெச்சுகிறான்.(15) இந்தக் காரணத்தினாலேயே எங்கள் புத்தி {ஒழுங்கற்றதாக} நொறுங்குகிறது, எங்கள் மனமும் திசை திரும்புகிறது. எனவே, ஓ! இருப்பவை அனைத்திலும் சிறந்தவரே, நாங்கள் நன்மையை அறிய விரும்புகிறோம்.(16) எது (பெரும்) புதிரோ, எது க்ஷேத்ரஜ்ஞன் மற்றும் இயற்கைக்கிடையிலான {சத்வத்திற்கிடையிலான} தொடர்பை உண்டாக்குகிறதோ, அதை இதன் பிறகு எங்களுக்கு அறிவிப்பதே உமக்குத் தகும்” என்று கேட்டனர் {முனிவர்கள்}.(17)
கல்விமான்களான அந்தப் பிராமணர்களால் இவ்வாறு கேட்கப்பட்டதும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், அற ஆன்மாவும், சிறப்புமிக்கவனுமான உலகங்களின் படைப்பாளன் {பிரம்மன்} அவர்கள் கேட்டதைக் குறித்துத் துல்லியமாக அவர்களுக்கு அறிவித்தான்” {என்றார் ஆசான்}.(18)
பஞ்சபூத குணங்கள்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 50-தர்மத்தோடு கூடிய ஞானமே மோக்ஷஸாதனம் என்பதையும், க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞனுக்கு இடையிலான தொடர்பையும், பஞ்ச பூதங்களின் குணங்களையும் முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்…
பிரம்மன், “சரி, நீங்கள் கேட்பதை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். தம்மிடம் வந்த சீடனுக்கு ஓர் ஆசானால் சொல்லப்பட்டவற்றை அறிவீராக.(1) அவை அனைத்தையும் கேட்டு (என்னவாக இருக்கலாம் என்பதை) நீங்கள் தீர்மானிப்பீராக. எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமல் இருப்பதே{எல்லாப் பிராணிகளுக்கும் ஹிம்ஸை செய்யாமலிருப்பதே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாக {சிறந்த தர்மத்திற்கு லக்ஷணமாகக்} கருதப்படுகிறது.(2) இது கவலையில் இருந்தும் விடுபட்டதும், புனிதத்தன்மையின் அறிகுறியாகவும் இருக்கும் உயர்ந்த இருக்கையாகும் {ஸ்தானமாகும்}. குறிப்பிட்ட உண்மையைக் கண்டவர்களான புராதனர்கள், ஞானமே உயர்ந்த இன்பம் என்று சொல்கின்றனர்.(3)
எனவே, ஒருவன் தூய அறிவின் மூலம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அழிவு மற்றும் தீங்கு செய்வதில் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத்தில் நம்பிக்கையற்றவர்களாக {நாத்திகர்களாக} இருப்பவர்களும்,(4) பேராசை மற்றும் மயக்கத்துடன் கூடியவர்களாக இருப்பதன் விளைவால் நரகத்திற்குச் செல்வார்கள். எதிர்பார்ப்பால் தூண்டப்பட்டுச் சோம்பலின்றிச் செயல்களைச் செய்பவர்கள்,(5) மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து, இன்பத்தில் திளைக்கிறார்கள். எதிர்பார்ப்புகள் இன்றி, குவிந்த மனத்துடனும், நம்பிக்கையுடனும் செயல்களைச் செய்பவர்களும், கல்வி மற்றும் ஞானத்துடன் கூடியவர்களுமான மனிதர்கள், தெளிவாகப் பார்ப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(6)
இனி, க்ஷேத்ரஜ்ஞன் மற்றும் இயற்கையின் {சத்வத்தின்} சேர்க்கையும், பிரிதலும் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைச் சொல்லப் போகிறேன். மனிதர்களில் சிறந்தவர்களே, கேட்பீராக. பொருள் {விஷயம்} மற்றும் கருப்பொருளுக்கு {விஷயிக்கு} இடையிலான உறவுமுறையாக இது சொல்லப்படுகிறது[1].(7,8) புருஷன் எப்போதும் கருப்பொருளாவான்; இயற்கை {சத்வம்} பொருளெனச் சொல்லப்படுகிறது. கொதுகும் {கொசுவும்}, அத்திப்பழமும் போல இருக்கின்றன என உரையாடலின் முன் பகுதியில் சொல்வதன் மூலம் அவை விளக்கப்படுகின்றன.(9)அனுபவிக்கத்தகுந்த பொருளாக இருக்கும் இயற்கை புத்தியற்றதாகவும், எதையும் அறியாததாகவும் இருக்கிறது. எனினும், அதை அனுபவிப்பவன் அதை அறிவான் எனச் சொல்லப்படுகிறது. அனுபவிப்பவன் க்ஷேத்ரஜ்ஞனாகவும், அனுபவிக்கப்படுவது இயற்கையாகவும் {சத்வமாகவும்} இருக்கின்றன.(10) இயற்கையானது, முரண்பட்ட இரட்டைகளால் அமைந்ததாகவும் {குணங்களைக் கொண்டதாகவும்} இருக்கிறது என்று ஞானிகள் சொல்கின்றனர். மறுபுறம், க்ஷேத்ரஜ்ஞன், முரண்பட்ட இரட்டைகள் அற்றவனாகவும், பகுதிகள் அற்றவனாகவும், நித்தியமானவனாகவும், சாரத்தைப் பொருத்தவரையில் குணங்களில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான்.(11) அவன் அனைத்திலும் ஒரே தன்மையுடனும், ஞானத்துடனும் வசிக்கிறான். தாமரை இலை நீரை (அனுபவிப்பதைப்) போல அவன் {க்ஷேத்ரஜ்ஞன்} எப்போதும் இயற்கையை {சத்வத்தை} அனுபவிக்கிறான்.(12)
ஞானம் கொண்டவனான அவன், குணங்கள் அனைத்துடன் தொடர்பு கொள்ள நேர்ந்தாலும் ஒருபோதும் களங்கப்படாதவனாக இருக்கிறான்.(13) தாமரை இலையில் நிலையில்லாதிருக்கும் நீர்த்துளியைப் போலப் புருஷன் பற்றற்றவனாக இருக்கிறான். இயற்கையானது புருஷனின் உடைமையாக இருக்கிறது என்பதே (சாத்திரங்களின்) நிச்சயமான தீர்மானமாகும்.(14) இவ்விரண்டும் (புருஷனும் இயற்கையும்) பொருள் மற்றும் அதைப் படைப்பவனுக்கிடையிலுள்ள உறவுமுறையுடன் கூடியவையாக இருக்கின்றன[2].இருளடைந்த இடத்திற்கு ஒருவன் தன்னுடன் விளக்கை எடுத்துச் செல்வதைப் போல,(15) உயர்ந்ததை விரும்புபவர்கள் இயற்கை எனும் விளக்குடன் செல்கின்றனர்[3]. (எண்ணையும், திரியும் போன்ற) பொருளும், குணமும் இருக்கும் வரை விளக்கும் ஒளிர்கிறது.(16) எனினும், பொருளும் குணமும் (அல்லது எண்ணெயும், திரியும்) தீரும்போது சுடரும் அணைகிறது. இவ்வாறே இயற்கை வெளிப்படுவதாகச் சொல்லப்படுகிறது, புருஷன் வெளிப்படாதவனாகச் சொல்லப்படுகிறான்.(17) கல்விமான்களான பிராமணர்களே இதைப் புரிந்து கொள்வீராக. சரி, நான் மேலும் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். ஆயிரம் (விளக்கங்களைச்) சொன்னாலும், தீய புத்தி உள்ள ஒருவன் ஞானத்தை அடைவதில் வெல்வதில்லை.(18)எனினும், புத்தியுள்ள ஒருவன், நான்கில் ஒரு பகுதியின் (கால் பாக விளக்கத்தின்) மூலமே மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான். இவ்வாறே கடமைகளை நிறைவேற்றல் வழிமுறைகளைச் சார்ந்தது என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.(19) வழிமுறைகள் குறித்த ஞானமுள்ள புத்திசாலி, உயர்ந்த இன்பத்தை அடைவதில் வெல்கிறான்.(20) பயணத்திற்குத் தேவையான பொருட்கள் இல்லாமல் {கட்டுச்சோறின்றி} சாலையில் பயணிக்கும் மனிதன், மன உலைவுடன் பயணித்து, தன் பயணம் முடிவடைவதற்கு முன்பே அழிவையும் அடைவதைப் போலவே, செயல்களில் கனிகளும், கனியின்மையும் நேரிடும் என்பதை அறிய வேண்டும்[4].(21)ஒருவனுடைய சுயத்திற்கு {அகத்திற்கு} எது ஏற்புடையது, எது ஏற்புடையதல்ல என்பதை ஆய்வு செய்வது நன்மையை விளைவிக்கும்[5]. உண்மையை உணராத மனிதனின் வாழ்வில் முன்னேற்றமானது, ஒரு மனிதன் முன்பின் காணாத நீண்ட சாலையில் மூர்க்கமாகப் பயணிப்பதை {ஓடிச் செல்வதைப்} போன்றதாகும். எனினும், புத்தியுள்ளோரின் முன்னேற்றமானது, அதே சாலையில் வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைச் செலுத்துவதற்குச் சமமானதாகும். மலையின் உச்சிக்கு ஏறிய பிறகு ஒருவன் பூமியின் பரப்பில் கண்களைச் செலுத்தக்கூடாது[6].(22-24)தேரில் பயணித்தாலும், உணர முடியாத துன்பத்தால் பீடிக்கப்படும் ஒரு மனிதனைக் காணும் புத்திசாலி, தேருக்கான பாதை உள்ள தொலைவு வரையே தேரில் பயணிப்பான்[7].(25) கல்விமானான மனிதன், தேருக்கான பாதை முடிவடைவதைக் காணும்போது, மேலும் பயணிக்கத் தன் தேரைத் தவிர்க்கிறான். வாய்மை மற்றும் யோகத்தின் (அல்லது ஞானம் மற்றும் பக்தியின்) விதிகளை அறிந்த புத்திசாலி மனிதனும் இவ்வாறே செல்வான்.(26) குணங்களை அறிந்த மனிதன், அடுத்தடுத்து என்னென்ன என்பனவற்றைப் புரிந்து கொண்டே முன்னேறிச் செல்வான்[8].(27)பயங்கரப் பெருங்கடலில் ஒருவன் அறியாமையால் படகில்லாமல் தன்னிரு கைகளுடன் {கைகளை நம்பி} மட்டுமே மூழ்கும்போது நிச்சயம் அழிவையே எதிர்நோக்குவான்;(28) அதே வேளையில், வேறுபாடுகளை அறிந்த ஞானம் கொண்ட மனிதன் {பகுத்தறியும் மனிதன்}, துடுப்புடன் கூடிய படகில் களைப்பில்லாமல் தடாகத்தைக் கடந்து, மறுகரையை அடைந்து, படகைக் கைவிட்டுவிட்டு, நான், எனது என்ற மமதை எண்ணத்தில் இருந்து விடுபடுகிறான்.(29) இது தேர் மற்றும் பாதசாரி குறித்த எடுத்துக்காட்டின் மூலம் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. பற்றின் விளைவால் அறியாமையில் மூழ்கியிருக்கும் ஒருவன், படகில் ஒட்டும் மீனவனைப் போல அதனுடன் ஒட்டிக் கொள்கிறான்.(30)
நான் எனது என்ற மமதையில் மூழ்கும் ஒருவன் குறுகிய எல்லைகளுக்குள்ளேயே திரிகிறான். ஒரு படகில் ஏறிய பிறகு நிலத்தில் செல்ல முடியாது.(31) அதேபோல, ஒருவன் தேரில் ஏறிய பிறகு நீரில் செல்ல முடியாது. வெவ்வேறு நோக்கங்களுக்கு இவ்வாறே வெவ்வேறு செயல்பாடுகள் உள்ளன.(32) இவ்வுலகில் செயல்கள் செய்யப்படுவதைப் போலவே அவற்றைச் செய்பவனுக்கான விளைவுகளும் நேர்கின்றன. மணமற்றதும், சுவையற்றதும், தீண்டல் மற்றும் ஒலியற்றதும் எதுவோ,(33) புத்தியின் துணையுடன் தவசிகளால் தியானிக்கப்படுவது எதுவோ அது பிரதானம் என்று சொல்லப்படுகிறது.
அந்தப் பிரதானமே வெளிப்படாததாக {புலப்படாததாக / அவ்யக்தமாக} இருக்கிறது. வெளிப்படாததன் வளர்ச்சியே மஹத் ஆகும். பிரதானம் மஹத் ஆன பிறகு நேரும் வளர்ச்சியே அஹங்காரமாகும். அஹங்காரத்திலிருந்து பெரும்பூதங்கள் என்றழைக்கப்படும் வளர்ச்சி உண்டாகிறது.(35) முறையே அந்தப் புலன்நுகர் பொருட்கள், பெரும்பூதங்களிலிருந்து உண்டாகும் வளர்ச்சிகள் என்று சொல்லப்படுகின்றன. வெளிப்படாதது வித்தின் இயல்பைக் கொண்டதாகும். அதன் சாரம் உற்பத்தியாக இருக்கிறது.(36)
பேராத்மா {மஹத்} ஒரு வித்தின் குணங்களைக் கொண்டதென்றும் {காரணமென்றும்}, அஃது ஓர் உற்பத்திப் பொருள் என்றும் {காரியமென்றும்} நாம் கேள்விப்படுகிறோம்[9]. மேலும், அஹங்காரமும் வித்தின் இயல்பைக் கொண்டதாகவும், உற்பத்திப்பொருளாகவும் இருக்கிறது.(37) ஐம்பெரும்பூதங்களும் வித்தின் இயல்பைக் கொண்டவையாகவும், உற்பத்திப் பொருட்களாகவும் இருக்கின்றன. பெரும்பூதங்களுக்குரிய பொருட்கள் {விஷயங்களும்} வித்தின் இயல்பைக் கொண்டு உற்பத்திப் பொருட்களை விளைவிக்கின்றன. இவை சித்தத்தைத் தங்கள் உடைமையாகக் கொண்டுள்ளன. அவற்றில், வெளி {ஆகாயம்} ஒரு குணத்தையும், காற்று {வாயு} இரண்டு குணங்களையும் கொண்டிருக்கின்றன.(38,39)ஒளி, மூன்று குணங்களைக் கொண்டிருப்பதாகவும், நீர் நான்கு குணங்களைக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அசைவன மற்றும் அசையாதன நிரம்பிய பூமி ஐந்து குணங்களைக் கொண்டதாக அறியப்படுகிறது.(40) அவள் அனைத்து உட்பொருட்களின் பிறப்பிடமாகவும், இனியன, அல்லாதன நிறைந்த தேவியாகவும் இருக்கிறாள். ஒலி, தீண்டல், நிறம், சுவை மற்றும் ஐந்தாவதான மணம் ஆகியவை,(41) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, பூமியின் ஐந்து குணங்களாக இருக்கின்றன. எப்போதும் பூமிக்கு உரியதாக இருக்கும் மணம் பல்வேறு வகைகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(42)
நான் மணத்தின் எண்ணற்ற குணங்களை விரிவாகச் சொல்லப் போகிறேன். ஏற்புடையது {இஷ்டம்}, ஏற்பில்லாதது {அனிஷ்டம்}, இனியது {மதுரம்}, புளிப்பானது {அம்லம்}, கடுமையானது {கடு}, பரவலானது {நிர்ஹாரி}, கச்சிதமானது {ஸம்ஹதம்}, எண்ணெயானது {ஸ்நிக்தம்}, உலர்ந்தது {ரூக்ஷம்}, தெளிவானது {விசதம்} என்ற {பத்து} வகைகளில் மணம் இருக்கிறது.(43) இவ்வாறே பூமிக்கு உரிய மணம் பத்து வகைகளில் இருக்கிறது என்று அறியப்பட வேண்டும்[10].(44) ஒலி, தீண்டல், நிறம், சுவை ஆகியன நீரின் குணங்களாகும். நான் இனி சுவையின் குணங்களைச் சொல்லப் போகிறேன். சுவை பல்வேறு வகைப்பட்டதெனச் சொல்லப்படுகிறது.(45)இனியது {இனிப்பு}, புளிப்பு, கடுமையானது {கார்ப்பு}, கசப்பானது, துவர்ப்பானது மற்றும் உவர்ப்பானது என்று {என்ற வகைகளில் சுவை} இருக்கிறது. இவ்வாறே நீர் தொடர்பானது என்று சொல்லப்படும் சுவை ஆறு வகைகளில் இருக்கிறது.(46) ஒளியானது, ஒலி, தீண்டல் மற்றும் நிறம் என்ற மூன்று குணங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நிறம் ஒளியின் குணமாகும், மேலும் நிறம் பல வகையெனச் சொல்லப்படுகிறது.(47) வெள்ளை, கருப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், சாம்பல், குட்டை, நீளம், இளைத்தது, பருத்தது, வட்டம் {நாற்கோணம்}, வட்டம்(48) ஆகிய பனிரெண்டு வகைகள் ஒளிக்குரிய நிறத்திற்கு இருக்கின்றன.
வயது முதிர்ந்தவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், பேச்சில் வாய்மை நிறைந்தவர்களுமான பிராமணர்களால் இது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.(49) ஒலியும் {சப்தமும்}, தீண்டலும் {ஸ்பர்சமும்} காற்றின் {வாயுவின்} இரு குணங்களாக அறியப்படுகின்றன. தீண்டல் பல்வேறு வகைகளில் சொல்லப்படுகிறது.(50) முரடு, குளிர் {சீதம்}, வெப்பம் {உஷ்ணம்}, இளையது {பிச்சிலம்}, தெளிவு {விசதம்}, கடுமை {கடினம்}, எண்ணெய் {ஸ்நிக்தம்}, வழுவழுப்பானது {சிக்கணம்}, வழுக்கும்தன்மையுள்ளது {ஸ்லக்ஷணம்}, துன்பம்நிறைந்தது {தாருணம் / கூச்சம் நிறைந்தது}, மென்மையானது {மிருது}[11](51) என்ற பனிரெண்டு வகைகளில் காற்றின் குணமான தீண்டல் இருக்கிறதென வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், உண்மையைக் கண்டவர்களுமான பிராமணர்களால் சொல்லப்படுகிறது.(52)இனி, வெளி ஒரேயொரு குணத்தைக் கொண்டது, அஃது ஒலி என்று சொல்லப்படுகிறது. ஒலியின் எண்ணற்ற குணங்களை நான் விரிவாகச் சொல்லப் போகிறன்.(53) காந்தாரத்துடன் சேர்ந்த ஷட்ஜம் மற்றும் ரிஷபம், மத்யமம், பஞ்சமம், நிஷாதம், தைவதம், இவற்றையும் தவிர ஏற்புடைய ஒலிகள் {இஷ்டம்}, ஏற்பில்லாத ஒலிகள் {அனிஷ்டம்}, ஸம்ஹதம் {கச்சிதமானது} எனப் பல உட்பொருட்களைக் கொண்டதாக இருக்கிறது[12].(54) வெளியில் பிறக்கும் ஒலி இவ்வாறே பத்து வகைகளாக இருக்கிறது என அறிய வேண்டும்.-(ஐந்து) பூதங்களில் வெளியே உயர்ந்ததாகும். அஹங்காரம் அதைவிட உயர்ந்தது.(55) அஹங்காரத்தைவிடப் புத்தி உயர்ந்தது. புத்தியைவிட ஆன்மா உயர்ந்தது. ஆன்மாவைவிடப் புலப்படாதது {அவ்யக்தம்} உயர்ந்தது. புலப்படாததைவிடப் புருஷன் உயர்ந்தவன்.(56) இருப்பிலுள்ள உயிரினங்களுக்கு மத்தியில் உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும் அறிந்தவனும், செயல்கள் அனைத்தின் விதிமுறைகள் அறிந்தவனும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னையே அமைத்துக் கொள்பவனுமான ஒருவன், மங்கிமறையாத ஆன்மாவை அடைகிறான்” என்றான் {பிரம்மன்}.(57)
ஸநாதன தர்மம்! – அஸ்வமேதபர்வம் பகுதி – 51-க்ஷேத்ரஜ்ஞன் குறித்த மேலும் சில அவதானிப்புகளை முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்; பிரம்மன் சொன்ன சொற்களின்படியே நடக்க வேண்டுமென அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல அர்ஜுனனிடம் அனுமதி கேட்ட கிருஷ்ணன்; அர்ஜுனனின் பதில்..
பிரம்மன், “இந்த ஐந்து பூதங்களைக் கட்டுப்படுத்துவதிலும், அவற்றை வளர்ப்பதிலும் ஆட்சியாளனாக மனமே இருப்பதால், அதுவே பூதங்களின் ஆன்மாவாக இருக்கிறது.(1) மனமே எப்போதும் பெரும்பூதங்களுக்குத் தலைமை தாங்குகிறது. அதிகாரத்தை அறிவிக்கும் புத்தியானது க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுகிறது[1].(2) நல்ல குதிரைகளைப் பூட்டும் சாரதியைப் போல மனமானது புலன்களைப் பூட்டுகிறது. புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியன எப்போதும் க்ஷேத்ரஜ்ஞனுடன் இணைந்திருக்கிறது.(3) பெருங்குதிரைகள் பூட்டப்பட்டதும், புத்தியைக் கடிவாளமாகக் கொண்டதுமான தேரில் ஏறும் தனிப்பட்ட ஆன்மாவானது அனைத்துப் பக்கங்களிலும் அதைச் செலுத்துகிறது.(4) (குதிரைகளாகப்) புலன்கள் பூட்டப்பட்டதும், மனத்தைச் சாரதியாகக் கொண்டதும், புத்தியை நித்திய கடிவாளமாகக் கொண்டதுமாகப் பெரும் பிரம்மத் தேர் இருக்கிறது[2].(5)கல்வியும், ஞானமும் கொண்டவனும், இவ்வழியில் பிரம்மத்தேரை எப்போதும் புரிந்து கொள்பவனுமான மனிதன், அனைத்துப் பொருள்களுக்கு {உலகங்களுக்கு} மத்தியிலும் ஒருபோதும் மயக்கத்தில் {அறியாமையில் / மோஹத்தில்} மூழ்க மாட்டான்.(6) பிரம்மம் எனும் இந்தக் காடு புலப்படாததில் தொடங்கி, பொருட்திரளில் முடிகிது. அஃது அசையும், மற்றும் அசையாத பொருட்களையும் சேர்த்துக் கொண்டு, சூரியன் மற்றும் சந்திரனிடம் இருந்து ஒளியைப் பெற்றுக் கொண்டு, கோள்கள் மற்றும் விண்மீன்கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அஃது ஆறுகள் மற்றும் மலைகள் எனும் வலைகளால் எப்போதும் நிறைந்திருக்கிறது. எப்போதும் அது பல்வேறு வகை நீர்நிலைகளுடன் பிரகாசிக்கிறது. அஃது அனைத்து உயிரினங்களுக்கு வாழ்வாதார வழிமுறையாக இருக்கிறது. மேலும் அஃது அனைத்து உயிரினங்களின் இலக்காகவும் இருக்கிறது. அந்தக் காட்டிலேயே க்ஷேத்ரஜ்ஞன் எப்போதும் திரிகிறான்.(7-9) இவ்வுலகில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் எதுவும் முதலில் அழிவதாக இருக்கிறது {அவையே முதலில் லயமடைகின்றன}. அதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் {பூதங்களையும்} தொகுக்கும் குணங்கள் (அழிவை அடைகின்றன).(10)
குணங்களுக்குப் பிறகு ஐம்பூதங்கள் (அழிவையடைகின்றன). இதுவே பொருட்களின் {பூதங்களின்} படிநிலையாகும். தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், அசுரர்கள்,(11) ராட்சசர்கள் ஆகியோரனைவரும் இயற்கையில் இருந்தே உண்டாகின்றனர், {வேள்விகள் முதலான} செயல்களில் இருந்தோ, {பிரம்மா முதலான} காரணத்தில் இருந்தோ உண்டாவதில்லை. அண்டத்தைப் படைப்பவர்களான பிராமணர்கள் இம்மையில் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்[3].(12) அவர்களில் இருந்து உதிக்கும் அனைத்தும் வேளை வரும்போது கடலில் அலைகளைப் போல அந்த ஐம்பூதங்களிலேயே கறைகின்றன {அழிகின்றன / லயமடைகின்றன}.(13) பெரும்பூதங்கள் அனைத்தும் அண்டத்தைத் தொகுக்கும் பூதங்களைக் கடந்தவையாகும். ஐம்பூதங்களில் இருந்து விடுபட்டவன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(14) பலமிக்கவனான பிரஜாபதியே அனைத்தையும் மனத்திலேயே உண்டாக்கினான். அதே போல முனிவர்களும் தவத்தின் துணையுடன் தேவர்களின் நிலையை அடைந்தனர்.(15)அதேபோலவே, துல்லியத்தை அடைந்தவர்களும், யோகக் குவிப்புக்கு வல்லவர்களும், கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்பவர்களுமாக இருப்பவர்கள் தவத்தின் மூலம் மூவுலகத்தையும் உணர்கிறார்கள்.(16) அடையப்படும் உடைமைகளான அனைத்திற்கும் தவமே வேராக இருப்பதால் மருந்துகள், மூலிகைகள் மற்றும் பல்வேறு அறிவியல்கள் அனைத்தும் தவம் எனும் வழிமுறையால் மட்டுமே அடையப்படுகிறது.(17) தவம் தடுக்கப்பட முடியாதது என்பதால், அடைதற்கரிதான எதுவும், கற்பதற்கரிதான எதுவும், வெல்வதற்கரிதான எதுவும், கடப்பதற்கரிதான எதுவும் என அனைத்தும் தவத்தின் மூலம் அடையப்படுகின்றன.(18) மதுவைப் பருகியவன், பிராமணனைக் கொன்றவன், களவாடுபவன், கருவை அழித்தவன், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவன் ஆகியோரும் நன்கு செய்யப்படும் தவத்தின் மூலம் பாவத்தில் இருந்து தூய்மையடைகிறார்கள்.(19)
மனிதர்கள், பித்ருக்கள், தேவர்கள், (வேள்வி) விலங்குகள், பறவைகள், விலங்குகள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும்,(20) தவங்களில் தங்களை எப்போதும் அர்ப்பணித்துக் கொள்வதன் மூலம், தவத்தால் மட்டுமே வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றன. அதே போலவே, பெரும் மாயசக்திகளுடன் கூடிய தேவர்களும் சொர்க்கத்தை அடைந்தனர்.(21) சோம்பலின்றி, அஹங்காரம் நிறைந்தவர்களாக எதிர்பார்ப்புகளுடன் கூடிய செயல்களைச் செய்பவர்கள் பிரஜாபதியின் முன்னிலையை அடைகிறார்கள்.(22) எனினும், மமதையற்றவர்களும், தூய்மையான தியான யோகத்தின் மூலம் அகங்காரத்தில் இருந்து விடுபட்டவர்களுமான உயர் ஆன்மாக்கள் பெருமைக்குரிய உயர்ந்த உலகங்களை அடைகின்றனர்.(23) சுயத்தைச் சிறப்பாகப் புரிந்து கொள்பவர்கள், தியான யோகத்தை அடைந்து, எப்போதும் தங்கள் மனங்களை உற்சாகம் நிறைந்தவையாக்கி, புலப்படாத இன்பத்திரளுக்குள் நுழைகின்றனர்.(24) மமதை மற்றும் அஹங்காரத்தில் இருந்து விடுபட்டவர்களும், தியான யோகத்தில் நிறைவை அடைந்து மீண்டும் பிறப்பவர்களுமான மனிதர்கள், (அத்தகைய வாழ்வில் இருந்து விடுபடும்போது) புலப்படாத பெரியதற்கு ஒதுக்கப்பட்ட உயர்ந்த உலகத்திற்குள் நுழைகிறார்கள்.(25)
அதே புலப்படாததில் (கோட்பாட்டில்) பிறந்து, இருள் {தமஸ்} மற்றும் ஆசை {ரஜோ} குணங்களில் இருந்து விடுபட்டு, நல்லியல்பின் {சத்வ} குணத்தை மட்டுமே பிற்பற்றுபவன் அதையே மீண்டும் அடைந்து,(26) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான்[4]. அத்தகைய ஒருவனே துல்லியமான க்ஷேத்ரஜ்ஞனாக அறியப்பட வேண்டும். எவன் தன்னை அறிவானோ, அவன் வேதங்களை அறிவான்[5].(27) மனத்தில் (மனக்கட்டுப்பாட்டில்) இருந்து தூய ஞானத்தை அடையும் தவசி தற்கட்டுப்பாட்டுடன் அமர வேண்டும். ஒருவனுடைய மனம் எதனில் நிறுவப்பட்டுள்ளதோ அவன் அதுவாகவே ஆகிறான். இதுவே நித்தியப் புதிராகும் {ஸநாதனமான ரஹஸ்யமாகும்}.(28) புலப்படாததை {அவ்யக்தத்தை} தொடக்கமாகவும், குணத்திரளை {விசேஷங்களை} முடிவாகவும் கொண்டது ஞானமின்மையை {அவித்தையைத்} தன் குறியீடாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நீங்கள் குணங்களற்ற இயல்பைக் கொண்டதெது {அது ஞானம்} என்பதை நீங்கள் புரிந்து கொள்வீராக.(29) மிருத்யு (மரணம்) இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகும்; நித்திய பிரம்மம் மூன்றெழுத்துகளைக் கொண்டதாகும். மமதையே மரணம், மமதைக்கு எதிர்நிலை நித்தியமாகும்[6].(30)கெட்ட புத்தியினால் வழிநடத்தப்படும் சில மனிதர்கள் செயல்களை மெச்சுகின்றனர். எனினும், உயர் ஆன்மாக்களைக் கொண்ட புராதனர்களாக எண்ணப்படுவோர் ஒருபோதும் செயல்களை மெச்சுவதில்லை.(31) செயல்பாட்டின் மூலம் பதினாறாலான உடலுடன் ஓர் உயிரினம் பிறக்கிறது[7]. (உண்மை) ஞானம், (உடலின் நனவுடன் கூடிய சுயத்தை) புருஷனை விழுங்குகிறது. அமிர்தத்தை உண்பவர்களுக்கு இதுவே மிக ஏற்புடையதாக இருக்கிறது[8].(32) எனவே, (வாழ்வெனும் கடலின்) மறுகைவரை விரிந்த பார்வையைக் கொண்டவர்கள், செயல்களில் பற்றேதும் வைப்பதில்லை. எனினும், இந்தப் புருஷன் ஞானம் நிறைந்தவனாக இருக்கிறானேயன்றி செயல்நிறைந்தவனாக அல்ல[9].(33) மரணமற்றவனும், மாற்றமில்லாதவனும், அறியப்படமுடியாதவனும், நித்தியமானவனும், அழிவற்றவனும், பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், கட்டுப்படுத்தப்படாதவனுமான ஆன்மாவைப் புரிந்து கொள்பவன் இறப்பதில்லை.(34) முன்னவனெவனும் இல்லாதவனும், படைக்கப்படாதவனும், மாற்றமில்லாதவனும், வெல்லப்படாதவனும், அமுதம் உண்பவர்களாலும் புரிந்து கொள்ளப்பட முடியாதவனுமான ஆன்மாவை இவ்வாறு புரிந்து கொள்பவன், இவ்வழிமுறைகளின் மூலம் தானே புரிந்து கொள்ளப்பட முடியாதவனாகவும், இறப்பில்லாதவனாகவும் ஆகிறான்.(35)மனப்பதிவுகள் {எண்ணங்கள்} அனைத்தையும் அகற்றி, ஆன்மாவுக்குள் ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, எதைவிடப் பெரியதேதும் இல்லையோ அந்த மங்கலமான பிரம்மத்தை அவன் புரிந்து கொள்கிறான்.(36) புத்தி தெளிவடைந்ததும் அவன் அமைதியை அடைவதில் வெல்கிறான். ஒரு கனவில் நடைபெறுவதைப் போல இருப்பதே அமைதியின் அறிகுறியாகும்[10].(37) இதுவே,, ஞானத்தை நோக்கமாகக் கொண்டவர்களும், விடுதலையடைந்தவர்களுமான இவர்களின் இலக்காகும். அடுத்தடுத்த வளர்ச்சிகளில் பிறக்கும் இயக்கங்கள் அனைத்தையும் அவர்கள் காண்கிறார்கள்[11].(38) இஃது உலகப்பற்றற்றவர்களின் இலக்காகும். இது நித்திய நடைமுறையாகும். இது ஞானிகள் அடையக்கூடிய உடைமையாகும். இதுவே இகழப்படாத ஒழுக்கமுறையுமாகும்.(39) இந்த இலக்கானது, அனைத்து உயிரினங்களிடமும் ஒத்த நடை கொண்டவனும், பற்றற்றவனும், எதிர்பார்ப்பில்லாதவனும் {பயன் கருதாதவனும்}, அனைத்துப் பொருட்களையும் நிகராகக் காண்பவனுமான ஒருவனால் அடையக்கூடியதாக இருக்கிறது.(40) மறுபிறப்பாள முனிவர்களில் முதன்மையானவர்களே, நான் அனைத்தையும் உங்களுக்கு அறிவித்து விட்டேன். இவ்வழியில் உடனே செயல்பட்டு வெற்றியை அடைவீராக” என்றான் {பிரம்மன்}”.(41)ஆசான் தொடர்ந்தார், “ஆசானான பிரம்மனால் இவ்வாறு சொல்லப்பட்டவர்களான அந்த உயர் ஆன்ம தவசிகள் அதன்படியே செயல்பட்டு, (பேரின்ப) உலகங்கள் பலவற்றை அடைந்தனர்.(42) ஓ! அருளப்பட்டவனே, ஓ! தூய ஆன்மா கொண்டவனே, என்னால் அறிவிக்கப்பட்டதும், பிரம்மனால் சொல்லப்பட்டதுமான சொற்களின்படியே நீயும் முறையாகச் செயல்படுவாயாக. அப்போது நீ வெற்றியை அடைவாய்” என்றார் {ஆசான்}”.(43)
வாசுதேவன் சொன்னான், “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இவ்வாறு அந்த ஆசானால் உயர்ந்த அறக்கோட்பாடுகள் கற்பிக்கப்பட்ட அந்தச் சீடன், அதன்படியே அனைத்தையும் செய்து, விடுதலையை {முக்தியை} அடைந்தான்.(44) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த அந்தச் சீடன், எங்கே கவலைப்பட வேண்டியதில்லையோ அந்த இருக்கையை {ஸ்தானத்தை} அடைந்தான்” {என்றான் வாசுதேவன்}.(45)
அர்ஜுனன், “ஓ! கிருஷ்ணா, ஓ! ஜனார்த்தனா, அந்தப் பிராமணரும், அந்தச் சீடரும் உண்மையில் யாவர்? ஓ! தலைவா, அஃது என்னால் கேட்கத்தகுந்ததாக இருந்தால் உண்மையாக எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(46)
வாசுதேவன், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நானே ஆசான் என்றும், என் மனமே என் சீடன் என்றும் அறிவாயாக. ஓ! தனஞ்சயா, உன்னிடம் கொண்ட பற்றின் {அன்பின்} காரணமாக நான் இந்தப் புதிரை {ரஹஸ்யத்தை} உனக்குச் சொன்னேன்.(47) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, உனக்கு என்னிடம் அன்பேதும் இருந்தால் ஆன்மா குறித்த இந்தப் போதனைகளைக் கேட்ட நீ எப்போதும் (அவற்றின்படியே) செயல்படுவாயாக.(48) ஓ! பகைவரைப் பிளப்பவனே, இவ்வறத்தை முறையாகப் பயிலும்போது நீ உன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு முழுமையான விடுதலையை {முக்தியை} அடைவாயாக.(49) முன்னர், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, போருக்கான காலம் வந்தபோது, இந்த அறமே என்னால் (உனக்கு) அறிவிக்கப்பட்டது. எனவே, உன் மனத்தை அதில் நிறுவுவாயாக.(50) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் தலைவரான என் தந்தையைக் கண்டு நெடுங்காலம் ஆகிவிட்டது. ஓ! பல்குனா {அர்ஜுனா}, உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு நான் மீண்டும் அவரைக் காண விரும்புகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}”.(51)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொன்ன கிருஷ்ணனிடம், மறுமொழியாகத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, “நாம் இன்று இந்த நகரத்தில் {இந்திரப்பிரஸ்தத்தில்} இருந்து புறப்பட்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்வோம்.(52) அற ஆன்மாவான மன்னன் யுதிஷ்டிரரை அங்கே சந்தித்து, (உன் நோக்கத்தை) அவரிடம் தெரிவித்தபிறகு நீ உன் சொந்த நகரத்திற்கு {துவாரகைக்குச்} செல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}[12].(53)
அநுகீதை முற்றும்
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply