”பீஷ்மர் விலகட்டும்” என்ற கர்ணன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 098-தோல்விக்கு வருந்திய துரியோதனன், பீஷ்மர் ஆயுதத்தைத் தவிர்த்துவிட்டுப் போரில் இருந்து விலகிக் கொண்டால் பாண்டவர்களைத் தானே வெல்வதாகக் கூறிய கர்ணன்; கர்ணனைப் போரிட அனுமதிக்கும்படி பீஷ்மரிடம் வேண்டிய துரியோதனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மன்னன் துரியோதனன், சுபலனின் மகன் சகுனி, உமது மகன் துச்சாசனன், வெல்லப்படமுடியாத சூதனின் மகன் (கர்ணன்) ஆகியோர் ஒன்றுகூடி பின்வருமாறு ஆலோசித்தனர். “போரில் தங்களைப் பின்தொடர்வோருடன் கூடிய பாண்டுவின் மகன்களை வெற்றிக் கொள்வது எப்படி?” என்ற இஃதே அவர்களது ஆலோசனையின் பொருளாக இருந்தது.
பிறகு, சூதனின் மகனிடமும் {கர்ணனிடமும்}, வலிமைமிக்கச் சகுனியிடமும் பேசிய மன்னன் துரியோதனன், அந்தத் தனது ஆலோசகர்கள் அனைவரிடமும், “துரோணர், பீஷ்மர், கிருபர், சல்லியன், சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} ஆகியோர் பார்த்தர்களை {பாண்டவர்களைத்} தடுக்கவில்லை. இத்தகைய (அவர்களது) நடத்தையின் காரணம் என்ன என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. இவர்கள் யாராலும் கொல்லப்படாத பாண்டவர்கள் எனது படைகளை அழிக்கிறார்கள். எனவே, ஓ! கர்ணா, நான் வலிமை குன்றி வருகிறேன், மேலும், எனது ஆயுதங்களும் குறைந்து வருகின்றன [1]. தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களான வீரப்பாண்டவர்களால் நான் வஞ்சிக்கப்படுகிறேன். போரில் அவர்களைத் தாக்கி எப்படி வெல்லப் போகிறேன் என்ற ஐயம் உண்மையில் என் மனத்தை நிறைக்கிறது” என்றான் {துரியோதனன்}.
இப்படிச் சொன்ன அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} பதிலளிக்கும் வகையில், ஓ! பெரும் ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, “ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, வருந்தாதே. உனக்கு ஏற்புடையது எதுவோ, அதை நானே செய்வேன். சந்தனுவின் மகனான பீஷ்மர் இந்தப் பெரும்போரில் இருந்து விரைவில் விலகட்டும். தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, போரில் இருந்து அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} விலகியதும், அந்தப் பீஷ்மர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சோமகர்கள் அனைவருடன் கூடிய பார்த்தனை [2] {அர்ஜுனனை} நான் கொல்வேன். ஓ! மன்னா {துரியோதனா}, உண்மையாகவே இந்த உறுதியை நான் ஏற்கிறேன். உண்மையில், ஒவ்வொரு நாளும் பாண்டவர்களுக்குக் கருணை காட்டுகிறார் பீஷ்மர். இதைத்தவிரவும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை வெற்றிக் கொள்ள இயலாதவராகவும் அவர் {பீஷ்மர்} இருக்கிறார். போரில் பீஷ்மர் தன் ஆற்றலைக் காட்டி பெருமை கொள்பவராவார். மேலும் அவர் {பீஷ்மர்} போரை மிகவும் விரும்புபவருமாவார். ({பாண்டவர்களைக் கொன்றுவிட்டால்} பிறகு போரே முடிந்து விடுமாகையால்) ஒன்றுகூடியிருக்கும் பாண்டவர்களை அவர் ஏன் வெல்லப் போகிறார்? [3] எனவே, தாமதிக்காமல் பீஷ்மரின் பாசறைக்குச் சென்று, மரியாதைக்குரிய அந்த முதிர்ந்த திருவாளரை {பீஷ்மரை} ஆயுதங்களைக் கீழே வைக்கச் செய்வாயாக. அவர் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்ட பிறகு, ஓ! பாரதா {துரியோதனா}, நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய பாண்டவர்கள் என் ஒருவனாலேயே ஏற்கனவே கொல்லப்பட்டதாக நினைப்பாயாக” என்றான் {கர்ணன்}.
இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட உமது மகன் துரியோதனன், தன் தம்பி துச்சாசனனிடம், “ஓ! துச்சாசனா, என் அணிவரிசையில் நடப்போர் அனைவரையும் தாமதமில்லாமல் {நன்கு} உடுத்திக் கொள்ளச் செய்வாயாக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனிடம் பேசிய மன்னன் {துரியோதனன்}, “மனிதர்களில் முதன்மையான பீஷ்மரை இஃதை ஏற்கச்செய்துவிட்டு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கர்ணா}, தாமதமில்லாமல் நான் உன்னிடம் வருவேன். போரில் இருந்து அந்தப் பீஷ்மர் விலகிய பிறகு, போரில் நீ (எதிரியைத்) தாக்குவாயாக” என்றான்.
பிறகு உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்களுடன் (கூடிய) நூறு வேள்விகளைச்செய்தவன் {இந்திரனைப்} போலத் தன் தம்பிகளுடன் தாமதமில்லாமல் புறப்பட்டான். அப்போது, அவனது தம்பியான துச்சாசனன், புலியின் ஆற்றலைக் கொண்ட அந்த மன்னர்களில் புலியை {துரியோதனனை} குதிரையில் ஏறச் செய்தான். உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கணங்களோடும், தலையில் கிரீடத்தோடும், தன் கைகளில் பிற ஆபரணங்களோடும் தெருக்களில் சென்ற போது பிரகாசமாக ஒளிர்ந்தான்.
பந்தி {மஞ்சிஷ்டா} மலரின் [4] நிறம் கொண்ட நறுமணமிக்கச் சந்தனக்குழம்பைப் பூசி புடம்போட்ட தங்கம் போலப் பிரகாசமாக, தூய ஆடைகள் உடுத்திக் கொண்டு, சிங்கம் போன்ற விளையாட்டு {வீர} நடையுடன் கூடிய அந்தத் துரியோதனன், ஆகாயத்தில் பிரகாசமான ஒளியுடன் கூடிய சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான். அந்த மனிதர்களில் புலி {துரியோதனன்}, பீஷ்மரின் பாசறையை நோக்கிச் சென்ற போது, உலகத்தில் கொண்டாடப்படும் வலிமைமிக்க வில்லாளிகள் பலர் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். வாசவனுக்குப் {இந்திரனுக்குப்} பின்னால் நடக்கும் தேவர்களைப் போல, அவனது தம்பிகள் அவனுக்குப் பின் அணிவகுத்து நடந்தனர்.
மனிதர்களில் முதன்மையான சிலர் குதிரைகளின் மீதும், சிலர் யானைகளின் மீதும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிலர் தேர்களின் மீதும் ஏறிக் கொண்டு அனைத்துப் புறங்களிலும் அவனை {துரியோதனனைச்} சூழ்ந்து கொண்டனர். அவனது {துரியோதனனின்} நலன் விரும்பியோரில் பலர், அரசனான அவனது பாதுகாப்புக்காக ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, சொர்க்கத்தில் சக்ரனை {இந்திரனைச்} சூழ்ந்திருக்கும் தேவர்களைப் போலப் பெரும் எண்ணிக்கையில் அங்குத் தோன்றினர். கௌரவர்கள் அனைவராலும் புகழப்படும் வலிமைமிக்க அந்தக் குருக்கள் {கௌரவர்கள்} தலைவன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகழ்பெற்ற கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இருக்கும் இடத்தை {பாசறையை}நோக்கி இப்படியே சென்றான்.
தன் உடன்பிறந்த தம்பிகளால் எப்போதும் பின்தொடரப்பட்டும், சூழப்பட்டும் இருந்த அவன் {துரியோதனன்}, எதிரிகள் அனைவரையும் தடுக்கவல்லதும், யானையின் துதிக்கையைப் போன்றதும், பெரியதுமானத் தன் வலக்கரத்தை அடிக்கடி உயர்த்தியபடியே சென்றான். அந்தத் தனது கரத்தால், அனைத்துப் புறங்களில் இருந்தும் தன்னை நோக்கிக் கூப்பிய கரங்களை உயர்த்தியபடி வழியில் நின்றோரின் மரியாதைகளை {அவர்களால் தனக்கு அளிக்கப்படும் மரியாதைகளை} ஏற்றுக் கொண்டான்.
அப்படி அவன் {துரியோதனன்} சென்ற போது, பல்வேறு நாட்டு குடிமக்களின் இனிய குரல்களைக் கேட்டான். பெரும்புகழைக் கொண்ட அவன் {துரியோதனன்}, பாணர்களாலும், மாகதர்களாலும் {புகழ்பாடிகளாலும்} துதிக்கப்பட்டான். பதிலுக்கு அந்தப் பெரும் மன்னன் {துரியோதனன்} அவர்கள் அனைவருக்கும் தன் மரியாதைகளைச் செலுத்தினான் {அவர்கள் அனைவரையும் கௌரவித்தான்}. நறுமணத் தைலங்கள் ஊற்றப்பட்டுத் தங்கத்தாலான ஒளிவிளக்குகளுடன் உயர் ஆன்ம மனிதர்கள் {கிங்கரர்கள்} பலர் அவனைச் {துரியோதனனைச்} சூழ்ந்து நின்றனர். அந்தத் தங்க விளக்குகளால் சூழப்பட்ட மன்னன் {துரியோதனன்}, சுடர்மிக்கக் கோள்களுடன் கூடிய சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையைக் கொண்டோர் (பணியாட்கள்), கைகளில் பிரம்புகளுடனும், ஜரிஹாரங்களுடனும் {Jhariharas [5]} மென்மையாகச் சுற்றிலும் இருந்த கூட்டத்தை வழிவிடச் செய்தார்கள்.
பீஷ்மரின் சிறப்பான வசிப்பிடத்தை அடைந்த மன்னன் {துரியோதனன்} தன் குதிரையில் இருந்து இறங்கினான். அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {துரியோதனன்}, பீஷ்மரின் முன்னிலையை அடைந்து, பீஷ்மரை வணங்கிய பின், தங்கத்தாலானதும், அழகானதும், விலையுயர்ந்த போர்வை விரிக்கப்பட்டதுமான ஒரு சிறந்த இருக்கையில் அமர்ந்தான். கூப்பிய கரங்களுடன், கண்ணீரில் குளித்த கண்களுடன், துயரத்தில் அடைபட்ட குரலுடன் கூடிய அவன் {துரியோதனன்}, பீஷ்மரிடம், “ஓ! எதிரிகளைக் கொல்பவரே {பீஷ்மரே}, நாங்கள் இந்தப் போரில் உமது பாதுகாப்புடன் இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களையும் அசுரர்களையும் கூட வெல்லத் துணிவோம். அப்படி இருக்கும் போது, சொந்தங்கள், நண்பர்களோடு கூடிய பாண்டவர்களைப் பற்றி, அவர்கள் வீரர்களாகவே இருந்தாலும், சொல்ல என்ன இருக்கிறது? எனவே, ஓ! கங்கையின் மைந்தரே, ஓ! தலைவா {பீஷ்மரே}, எனக்குக் கருணை காட்டுவதே உமக்குத் தகும்.
பாண்டுவின் துணிச்சல்மிக்க மகன்களைத் தானவர்களைக் கொல்லும் மகேந்திரனைப் {இந்திரனைப்} போலக் கொல்வீராக. “ஓ! மன்னா {துரியோதனா}, சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரையும், கேகயர்களுடன் கூடிய காருஷர்களையும் நான் கொல்வேன்” இவையே, ஓ! பாரதரே {பீஷ்மரே}, நீர் என்னிடம் சொன்ன வார்த்தைகளாகும். இந்த வார்த்தைகள் உண்மையாகட்டும். ஒன்று கூடியிருக்கும் பார்த்தர்களையும், வலிமைமிக்க வில்லாளிகளான அந்தச் சோமகர்களையும் கொல்வீராக. ஓ பாரதரே {பீஷ்மரே}, உமது வார்த்தைகளை உண்மையாக்குவீராக.(பாண்டவர்கள் மீது கொண்ட) கருணையாலோ, ஓ! மன்னா {பீஷ்மரே}, கெடுபேறு கொண்ட {அதிர்ஷ்டமற்ற} என் மீது நீர் கொண்ட வெறுப்பினாலோ பாண்டவர்களை நீர் {கொல்லாமல்} விடுகிறீரெனில், போரின் ரத்தினமான கர்ணனைப் போரிட அனுமதிப்பீராக. அவன் {கர்ணன்}, பார்த்தர்களையும், அவர்களோடு கூடிய அவர்களது நண்பர்கள் மற்றும் சொந்தங்களையும் போரில் வெல்வான்” என்று சொன்னான் {துரியோதனன்}.
மன்னனான உமது மகன் துரியோதனன் இதைச் சொன்ன பிறகு, பயங்கர ஆற்றலைக் கொண்ட பீஷ்மரிடம் மேலும் வேறெதையும் சொல்லாமல் தன் உதடுகளை {வாயை} மூடிக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.
பீஷ்மரின் வேதனை! – பீஷ்ம பர்வம் பகுதி – 099-அர்ஜுனனின் திறமையையும், பாண்டவர்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதையும் துரியோதனனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்; சிகண்டியைத் தவிரப் பாஞ்சாலர்களைத் தான் கொல்வதாக உறுதியேற்ற பீஷ்மர்; பீஷ்மரின் உறுதியை துச்சாசனனுக்குத் தெரிவித்த துரியோதனன்; பீஷ்மரைப் பாதுகாப்பதே முதன்மையான கடமை என்று துச்சாசனனுக்கு ஆணையிட்ட துரியோதனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயர் ஆன்ம பீஷ்மர், உமது மகனின் {துரியோதனனின்} கத்தி போன்ற சொற்களால் ஆழத் துளைக்கப்பட்டுப் பெரும் துயரில் நிறைந்தார். ஆனால் மறுமொழியாக ஏற்பில்லாத {இனிமையற்ற} வார்த்தை ஒன்றையும் அவர் சொல்லவில்லை. உண்மையில், அந்தச் சொற்கத்திகளால் சிதைக்கப்பட்டு, துயராலும், சினத்தாலும் நிறைந்த அவர் {பீஷ்மர்}, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, நீண்ட நேரம் (அமைதியாகச்) சிந்தித்தார்.
உலகை அறிந்தவர்களில் முதன்மையானவரான அவர் {பீஷ்மர்}, பிறகு கோபத்தால், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் ஆகியோருடன் கூடிய உலகத்தையே எரித்துவிடுபவரைப் போலத் தன் விழிகளை உயர்த்தி, உமது மகனிடம் இந்த அமைதியான வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! துரியோதனா, உன் சொற்கத்திகளால் என்னை ஏன் இப்படித் துளைக்கிறாய்? உனக்கு எது நன்மையோ அதைச் செய்ய முழு வல்லமையுடன் முயற்சி செய்கிறேன், எப்போதும் {உனக்கு நன்மையே} செய்கிறேன். உண்மையில், உனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பியே, போரில் என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்.
உண்மையிலேயே பாண்டவர்கள் வெல்லப்படமுடியாதவர்களாவர். பாண்டுவின் அந்தத் துணிச்சல்மிக்க மகன் {அர்ஜுனன்}, போரில் சக்ரனையே {இந்திரனையே} வெற்றிக் கொண்டு காண்டவ வனத்தில் அக்னியை நிறைவு {திருப்தி} கொள்ளச் செய்தானே, அதுவே {அவன் வெல்லப்பட முடியாதவன் என்பதை உணர்த்தப்} போதுமான அறிகுறியாகும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, பாண்டுவின் அதே மகன் {அர்ஜுனன்}, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டுத் தூக்கிச் செல்லப்பட்ட உன்னை மீட்டானே, அதுவே போதுமான அறிகுறியாகும்.
அந்தச் சந்தர்ப்பத்தில், ஓ! தலைவா {துரியோதனா}, துணிச்சல்மிக்க உன் உடன் பிறந்த தம்பிகள் அனைவரும், சூத சாதியைச் சேர்ந்த அந்த ராதையின் மகனும் {கர்ணனும்} தப்பி ஓடினார்கள். (அர்ஜுனனால் நீ மீட்கப்பட்ட) அதுவும் {அந்த நிகழ்வும்} போதுமான அறிகுறியே.
அவன் {அர்ஜுனன்}, விராடனின் நகரத்தில் ஒன்றுகூடியிருந்த நம் அனைவரின் மீதும் தனியாளாகவே பாய்ந்தான். அது போதுமான அறிகுறியே.
அவன் {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்டிருந்த துரோணரையும், என்னையும் போரில் வென்று, எங்கள் ஆடைகளை எடுத்துச் சென்றான். அது போதுமான அறிகுறியே.
பசுக்களைக் கவர்ந்த அந்த முந்தைய நிகழ்விலேயே அவன் {அர்ஜுனன்}, வலிமைமிக்க வில்லாளிகளான துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சரத்வானின் மகனையும் {கிருபரையும்} தோல்வியடையச் செய்தான். அது போதுமான அறிகுறியே.
தன் ஆண்மையைக் குறித்துப் பெரிதாகத் தற்பெருமை பேசும் கர்ணனையும் தோல்வியடைச் செய்த அவன் {அர்ஜுனன்}, பின்னவனின் {கர்ணனின்} ஆடைகளை உத்தரனுக்குக் கொடுத்தான். அது போதுமான அறிகுறியே.
அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, வாசவனாலேயே {இந்திரனாலேயே} வீழ்த்தப்பட இயலாத நிவாதகவசர்களைப் போரில் வீழ்த்தினான். அது போதுமான அறிகுறியே.
சங்கு, சக்கரம், கதாயுதம் தரித்து அண்டத்தைக் காப்பவனையே {கிருஷ்ணனை} தன் பாதுகாவலனாகக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை}, போரில் பலத்தால் வெல்ல இயன்றவன் உண்மையில் எவன் இருக்கிறான்? எல்லையில்லா சக்தி படைத்தவனும், அண்டத்தையே அழிப்பவனும் அந்த வாசுதேவனே {கிருஷ்ணனே}. அனைவருக்கும் உயர்ந்த தலைவனும், தேவர்களுக்குத் தேவனும், பரமாத்மாவும், அழிவில்லாதவனும் அவனே {கிருஷ்ணனே}. நாரதராலும், இதர பெரும் முனிவர்களாலும், ஓ! மன்னா {துரியோதனா}, பலவாறாக விவரிக்கப்படுபவன் அவனே {கிருஷ்ணனே}.
எனினும், ஓ! சுயோதனா {துரியோதனா}, உன் மூடத்தனத்தின் விளைவால், சொல்லத்தக்கது எது, {சொல்லத்} தகாதது எது என்பதை நீ அறியவில்லை. மரணத்தின் விளிம்பில் நிற்கும் மனிதன் மரங்கள் அனைத்தையும் தங்கத்தாலானவையாகக் காண்கிறான். அப்படியே, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நீயும் அனைத்தையும் தலைகீழாகப் {விபரீதமாகப்} பார்க்கிறாய். பாண்டவர்களுடனும், சிருஞ்சயர்களுடனும் கடும்பகையை {நீயாகவே} தூண்டிக் கொண்ட நீ, யுத்தத்தில் இப்போது அவர்களுடன் (நீயே) போரிடுவாயாக. நீ ஆண்மையுடன் செயல்பட்டு {அதை} நாங்கள் காணும்படி செய்வாயாக.
என்னைப் பொறுத்தவரை, ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, சிகண்டியை மட்டும் தவிர்த்து, ஒன்றாகக் கூடியிருக்கும் சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரையும் நான் கொல்வேன். {ஒன்று} போரில் அவர்களால் கொல்லப்பட்டு நான் யமலோகம் செல்வேன், அல்லது போரில் அவர்களைக் கொன்று, நான் உனக்கு மகிழ்ச்சியைத் தருவேன்.
துருபதனின் மாளிகையில் முதலில் சிகண்டி பெண்ணாகவே {சிகண்டினியாகவே} பிறந்தான். வரம் அருளப்பட்டதன் விளைவாலேயே அவள் {சிகண்டினி} ஆணானாள். அனைத்துக்கும் பிறகும் கூட அவள் {இன்னும்} சிகண்டினிதானே. ஓ! பாரதா {துரியோதனா}, நான் என் உயிரையே இழப்பதாக இருந்தாலும், அவனைக் {சிகண்டியைக்} கொல்ல மாட்டேன். படைப்பாளன் {பிரம்மன்} முதலில் {முற்காலத்தில்} படைத்தவாறே அவள் {இன்னும்} அதே சிகண்டினிதான்.
ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, மகிழ்வான உறக்கத்தில் இவ்விரவைக் கடத்துவாயாக. உலகம் நீடித்திருக்கும் வரை மனிதர்களால் {வீரர்களால்} பேசப்படப்போகும் ஒரு கடும்போரை நாளை நான் போரிடப் போகிறேன் {செய்யப் போகிறேன்}” {என்றார் பீஷ்மர்}.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டவனான உமது மகன் {துரியோதனன்} அங்கிருந்து வந்துவிட்டான். {தன் குரு போன்ற} திருவாளரிடம் {பீஷ்மரிடம்} தலைவணங்கிய பிறகு அவன் {துரியோதனன்}, தனது பாசறைக்குத் திரும்பி வந்தான். திரும்பி வந்த மன்னன் {துரியோதனன்}, தனது பணியாட்களை அனுப்பிவிட்டான். பிறகு, அந்த எதிரிகளை அழிப்பவன் விரைவாகத் தனது வசிப்பிடத்திற்குள் நுழைந்தான். (பாசறைக்குள்) நுழைந்ததும், அந்த ஏகாதிபதி {துரியோதனன்}, அந்த இரவை (உறக்கத்தில்) கழித்தான்.
அந்த இரவு விடிந்ததும், எழுந்த மன்னன் {துரியோதனன்}, அரசவீரர்கள் அனைவரிடமும் “படைகளை அணிவகுக்கச் செய்வீராக. சினத்தால் தூண்டப்பட்ட பீஷ்மர் இன்று சோமகர்கள் அனைவரையும் கொல்லப் போகிறார்” என்றான். இரவில் துரியோதனனின் வெகுவான புலம்பல்களைக் கேட்டிருந்த பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவற்றைத் தனக்கான கட்டளைகளாகவே கருதினார். பெரும் துயரில் நிறைந்து, தன் அடிமைத்தனத்தை இகழ்ந்த அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, போரில் அர்ஜுனனுடனான ஒரு மோதலை நினைத்து {கருதி} வெகு நேரம் சிந்தித்தார் [1].
கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} அப்படி நினைப்பதைக் குறிப்புகளால் புரிந்து கொண்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனிடம், “ஓ! துச்சாசனா, பீஷ்மரைப் பாதுகாக்க விரைவாகத் தேர்கள் நியமிக்கப்படட்டும். (நமது படையின்) இருபத்திரண்டு {22} பிரிவுகள் முழுமையும் தூண்டப்படட்டும். பாண்டவர்களை அவர்களுடைய துருப்புகளுடன் படுகொலை செய்து அரசாட்சியைக் {நாமே} கைப்பற்றவேண்டுமென்று தொடர்ந்து பல ஆண்டுகளாக நாம் எதை சிந்தித்து கொண்டிருக்கிறோமோ அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. இக்காரியத்தில், பீஷ்மரைப் பாதுகாப்பதே நமது முதன்மையான கடமை என நான் நினைக்கிறேன். நம்மால் பாதுகாக்கப்படும் அவர் {பீஷ்மர்} போரில் நம்மையும் பாதுகாத்து, பார்த்தர்களையும் {பாண்டவர்களையும்} கொல்வார்.
தூய ஆன்மாவுடன் அவர் {பீஷ்மர்} என்னிடம், “சிகண்டியை நான் கொல்லேன். அவன் முன்பு பெண்ணாயிருந்தவன், எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, போரில் அவன் என்னால் தவிர்க்கப்பட வேண்டியவன். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, என் தந்தைக்கு நன்மை செய்ய விரும்பிய நான், முன்பு விரிந்து வளர்ந்த அரசாட்சியைத் துறந்தேன் என்பதை உலகம் அறியும்.
எனவே, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, பெண்ணையோ, முன்பு பெண்ணாக இருந்த எவரையுமோ போரில் நான் கொல்லேன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.
ஓ! மன்னா {துரியோதனா}, இந்தச் சிகண்டி முதலில் பெண்ணாகப் பிறந்தவன். நீ அந்தக் கதையைக் கேட்டிருக்கிறாய். போர் தொடங்குவதற்கு முன்னர் நான் சொன்னது போலவே அவள் சிகண்டினியாகப் பிறந்திருந்தாள். மகளாகப் பிறந்த அவள் ஆணாக ஆனாள் [2]. உண்மையில், அவள் என்னுடன் போரிடுவாள், ஆனால் நான் என் கணைகளை அவள் மீது ஏவ மாட்டேன். பாண்டவர்களின் வெற்றியை விரும்பும் பிற க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை, ஓ! ஐயா {துரியோதனா}, அவர்கள் போர்க்களத்தில் நான் அடையத்தக்க இடத்திற்கு வந்தால், நான் அவர்களைக் கொல்வேன்” என்றார் {பீஷ்மர்}. இவையே, சாத்திரங்களை அறிந்தவரும், பாரதர்களின் குலத்தலைவனுமான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} என்னிடம் சொன்ன வார்த்தைகளாகும்.
எனவே, அந்தக் கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} காப்பதே நமது முதன்மையான கடமை என்று முழு ஆன்மாவோடு {மனத்தோடு} நான் நினைக்கிறேன். பெரும் காட்டில் பாதுகாப்பில்லாத சிங்கத்தை ஓர் ஓநாய்கூடக் கொன்றுவிடலாம். ஓநாயால் கொல்லப்படும் சிங்கத்தைப் போல, சிகண்டியால் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கொல்லப்படாதிருக்கட்டும். நமது தாய்மாமன் சகுனி, சல்லியன், கிருபர், துரோணர், விவிம்சதி ஆகியோர் கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கவனமாகப் பாதுகாக்கட்டும். அவர் பாதுகாக்கப்பட்டால், (நமது) வெற்றி உறுதியே” என்றான் {துரியோதனன் துச்சாசனனிடம்}.
துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைவரும், தேர்களின் பெரும் படைப்பிரிவு ஒன்றின் துணையுடன் கங்கையின் மைந்தரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். உமது மகன்களும் பீஷ்மரைச் சுற்றித் தங்கள் நிலைகளை அமைத்துக் கொண்டு போரிடச் சென்றனர். பூமியையும் ஆகாயத்தையும் நடுங்கச் செய்தபடியும், பாண்டவர்களின் {பாண்டவப் படையினரின்} இதயங்களில் அச்சத்தை உண்டாக்கியபடியும் அவர்கள் அனைவரும் சென்றார்கள். அந்தத் தேர்களாலும், யானைகளாலும் ஆதரிக்கப்பட்ட (அந்தக் கௌரவப் படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள், போரில் கவசம் தரித்துப் பீஷ்மரைச் சூழ்ந்து நின்றார்கள். தேவர்கள் தங்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் வஜ்ரபாணியைப் {இந்திரனைப்} பாதுகாத்து நின்றது போலவே அந்த வலிமைமிக்கத் தேர்வீரரைப் {பீஷ்மரைப்} பாதுகாக்க அவர்கள் அனைவரும் தங்கள் நிலைகளை எடுத்தார்கள்.
பிறகு மீண்டுமொருமுறை தன் தம்பியிடம் {துச்சாசனனிடம்} பேசிய துரியோதனன், “யுதாமன்யு அர்ஜுனனுடைய தேரின் இடது சக்கரத்தைப் பாதுகாக்கிறான், உத்தமௌஜஸ் அவனது வலது சக்கரத்தைப் பாதுகாக்கிறான். மேலும் (இப்படிப் பாதுகாக்கப்படும்) அர்ஜுனன் சிகண்டியைப் பாதுகாக்கிறான். ஓ! துச்சாசனா, பார்த்தனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்படும் சிகண்டியால், நம் பாதுகாப்பையும் மீறி பீஷ்மரைக் கொல்ல இயலாதபடி தக்க நடவடிக்கைகளை எடுப்பாயாக” என்றான். தன் அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துச்சாசனன், பீஷ்மரை முன்னிலையில் நிறுத்தி துருப்புகளுடன் போரில் முன்னேறினான்.
(இப்படிப் பெரும் எண்ணிக்கையிலான தேர்களால் சூழப்பட்ட) பீஷ்மரைக் கண்ட தேர்வீரர்களில் முதன்மையான அந்த அர்ஜுனன், திருஷ்டத்யும்னனிடம், “ஓ! இளவரசே {திருஷ்டத்யும்னா}, இன்று பீஷ்மரின் முன்பாக மனிதர்களில் புலியான சிகண்டியை நிறுத்துவாயாக, ஓ! பாஞ்சால இளவரசே {திருஷ்டத்யும்னா}, நானே அவனுக்குப் {சிகண்டிக்குப்} பாதுகாவலனாக இருப்பேன்” என்றான் {அர்ஜுனன்}” {என்றான் சஞ்சயன்}.
சர்வதோபத்திர மண்டல வியூகங்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 100-பீஷ்மர் அமைத்துக் கொண்ட சர்வதோபத்திர வியூகம்; பாண்டவர்கள் அமைத்துக் கொண்ட வியூகம்; பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் தங்கள் வியூகங்களில் நின்ற நிலைகள்; போர் தொடங்கும் முன்பு காணப்பட்ட அபசகுனங்கள்….
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர் துருப்புகளுடன் கிளம்பினார். அவர் {பீஷ்மர்} தனது துருப்புகளைச் சர்வதோபத்திரம் என்று அழைக்கப்படும் வலிமைமிக்க வியூகத்தில் அமைத்தார் [1]. கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரனான சைப்யன், சகுனி, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் ஆகியோர் அனைவரும் பீஷ்மருடனும், உமது மகன்களுடனும் சேர்ந்து மொத்தப் படையின் முன்னணியில் தங்கள் நிலைகளை அமைத்துக் கொண்டு அந்த (கௌரவ) வியூகத்தின் முகப்பில் நின்றார்கள்.
கவசங்கள் தரித்திருந்த துரோணர், பூரிஸ்ரவஸ், சல்லியன், பகதத்தன் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வியூகத்தின் வலது பக்கத்தில் தங்கள் நிலைகளை அமைத்தனர். அஸ்வத்தாமன், சோமதத்தன், பெரும் தேர்வீரர்களான அவந்தியின் இளவரசர்கள் இருவர் {விந்தன், அனுவிந்தன்} ஆகியோர் ஒரு பெரும் படையுடன் இடது பக்கத்தைப் பாதுகாத்தனர். துரியோதனன், ஓ, ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்துப் புறங்களிலும் திரிகர்த்தர்களால் சூழப்பட்டுப் பாண்டவர்களுடன் மோதுவதற்காக வியூகத்தின் மத்தியில் தன் நிலையை அமைத்துக் கொண்டான். தேர்வீரர்களில் முதன்மையான அலம்புசன், வலிமைமிக்கத் தேர்வீரனான சுருதாயுஷ் [2] ஆகியோர் கவசங்களைத் தரித்துக் கொண்டு, வியூகத்தின் பின்புறத்திலும், எனவே மொத்தப்படையின் பின்புறத்திலும் தங்கள் நிலையை அமைத்துக் கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது வீரர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் இப்படித் தங்கள் வியூகத்தை அமைத்துக்கொண்டும், கவசம் தரித்துக் கொண்டும் எரியும் நெருப்பைப் போலத் தெரிந்தனர்.
கவசம் தரித்தவர்களான மன்னன் யுதிஷ்டிரன், பாண்டுவின் மகனான பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் {தங்கள்} வியூகத்தின் முன்னிலையில் தங்கள் நிலைகளை அமைத்துக் கொண்டனர், எனவே அவர்கள் அனைவரும் தங்கள் துருப்புகளின் முகப்பிலேயே இருந்தனர் [3]. பகையணியினரை அழிப்பவர்களான திருஷ்டத்யும்னன், விராடன், வலிமைமிக்க வில்லாளியான சாத்யகி ஆகியோர் ஒரு பெரும்படையின் துணையோடு நின்றனர். சிகண்டி, விஜயன் (அர்ஜுனன்), ராட்சசன் கடோத்கசன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சேகிதானன், வீர குந்திபோஜன் ஆகியோர், ஒரு பெரும்படையால் சூழப்பட்டுப் போருக்காக நின்றனர். பெரும் வில்லாளியான அபிமன்யு, வலிமைமிக்கத் துருபதன், (ஐந்து) கைகேய {கேகயச்} சகோதரர்கள் ஆகியோர் கவசம் தரித்துக் கொண்டு போருக்காக நின்றனர்.இப்படியே போரில் பெரும் துணிவுமிக்கவர்களான அந்தப் பாண்டவர்களும் கவசமணிந்து கொண்டு வலிமைமிக்கதும், வெல்லப்பட முடியாததுமான வியூகத்தை [4] வகுத்துக் கொண்டு போருக்காக நின்றனர்.பிறகு, ஓ! ஏகாதிபதி, உமது வியூகத்தின் மன்னர்கள் தங்கள் படைகளோடு கூடி சிறப்பாக முயற்சி செய்து, தங்களுக்கு முன்னிலையில் பீஷ்மரை நிறுத்திக் கொண்டு, போரில் பார்த்தர்களை {பாண்டவர்களை} எதிர்த்து விரைந்தனர். அதே போலவே பீமசேனனால் தலைமை தாங்கப்பட்ட பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் வெற்றியை விரும்பி, பீஷ்மருடன் போரிடுவதற்காகச் சென்றனர்.
சிங்க முழக்கங்கள், குழம்பிய கூக்குரல்கள் ஆகியவற்றுடன் தங்கள் சங்குகள், கிரகசங்கள், மாட்டுக் கொம்புகள் ஆகியவற்றை ஊதிக்கொண்டு, பேரிகைகள், பணவங்கள் ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் அடித்துக் கொண்டு பாண்டவர்கள் {பாண்டவப் படையினர்} சென்றனர். பயங்கரக் கூச்சல்களை எழுப்பியபடியே அந்தப் பாண்டவர்கள் போருக்குச் சென்றார்கள். எங்கள் பேரிகைகள், பணவங்கள், சங்குகள், துந்துபிகள் ஆகியவற்றின் ஆரவாரத்துடனும், உரத்த சிங்க முழக்கங்களுடனும், இன்னும் பிற விதங்களிலான கூச்சல்களாலும் நாங்களும் எதிரியின் கூச்சல்களுக்கு மறுமொழி கொடுத்தபடியே சினத்தால் தூண்டப்பட்டு அவர்களை எதிர்த்து பெரும் மூர்க்கத்துடன் விரைந்தோம்.
இந்த ஒலிகள் அனைத்தும் ஒன்றோடொன்று கலந்து ஒரு பயங்கர இரைச்சலை உண்டாக்கியது. பிறகு, இரு படைகளின் வீரர்களை ஒருவரையொருவர் நோக்கி விரைந்து தாக்கத் தொடங்கினர். அந்த மோதலால் உண்டான ஆரவாரத்தின் விளைவாகப் பூமியே நடுங்குவதாகத் தெரிந்தது. பறவைகளும் கடுமையாக இரைந்தபடியே காற்றில் {ஆகாயத்தில்} பறந்தன. எழும்போது ஒளிமிக்கவனாக இருந்த சூரியன் {ஒளி} மங்கினான். பெரும் பயங்கரங்களைக் குறிப்பது போலக் காற்றுக் கடுமையாக வீசியது. மோசமான படுகொலைகளை முன்னறிவிக்கும் வண்ணம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சந்தரும் நரிகள் பயங்கரமாக ஊளையிட்டபடியே உலவின.
திசைகள் எரிவது போலத் தெரிந்தன, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீலவானத்தில் இருந்து புழுதி {மண்} மாரி பொழிந்தது. இரத்தத்தோடு கூடிய எலும்புத்துண்டுகளும் அங்கே மழையாகப்பொழிந்தது. அழுது கொண்டிருந்த விலங்குகள் அனைத்தின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. கவலையால் நிறைந்த அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறுநீரையும், தங்கள் குடல்களில் இருந்த உள்ளடக்கங்களையும் {மலத்தையும்} வெளியேற்றத் தொடங்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனித ஊனுண்ணிகள், ராட்சசர்கள் ஆகியோரின் உரத்தக் கூச்சல்கள் போரின் பேரொலியையே செவிக்குப் புலப்படாதவையாக ஆக்கின. நரிகள், வல்லூறுகள், காக்கைகள் நாய்கள் ஆகியன, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான ஒலிகளை எழுப்பியபடி, களத்தில் பாயவும், கீழ்நோக்கி வரவும் ஆரம்பித்தன. சூரிய வட்டிலை {சூரியனைத்} தாக்கிய சுடர்மிகும் எரிகோள்கள் {தூமகேது} பெரும் பயங்கரங்களை முன்னறிவித்தபடி பூமியில் வேகமாக விழுந்தன.
பாண்டவர்களுக்கும் , தார்தராஷ்டிரர்களுக்கும் உரிய இரு பெரும் படைகளும், அந்தப் பயங்கர மோதலில் புயலால் நடுங்கும் காடுகளைப் போலச் சங்குகள் மற்றும் பேரிகைகள் உருவாக்கிய பெரும் ஆரவாரத்தின் விளைவாக நடுங்கின. மன்னர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் நிறைந்தவையும், தீய {அசுபமான} காலத்தில் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டவையுமான இரு படைகளும் உண்டாக்கிய ஒலி, புயலால் கலங்கடிக்கப்படும் பெருங்கடல்களின் ஒலிகளை ஒத்திருந்தது” {என்றான் சஞ்சயன்}.
அபிமன்யுவின் ஆற்றல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 101-அபிமன்யு வெளிப்படுத்திய ஆற்றல்; அபிமன்யுவை எதிர்க்க அலம்புசனை ஏவிய துரியோதனன்; அலம்புசனுக்கும் திரௌபதி மகன்களுக்கும் இடையில் நடந்த மோதல்; அலம்புசனை மயங்கச் செய்த திரௌபதியின் மகன்கள்; திரௌபதியின் மகன்கள் தங்கள் தேர்களை இழந்தது; அவர்களது நிலையைக் கண்ட அபிமன்யு அலம்புசனோடு மோதியது..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் சக்தி படைத்த உன்னத அபிமன்யு, பழுப்பு நிறத்திலான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டு, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தன் கணைமாரியைப் பொழிந்தபடி துரியோதனனின் வலிமைமிக்கப் படையை நோக்கி விரைந்தான். ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கொல்பவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கோபத்தால் தூண்டப்பட்டு, ஆயுத செல்வத்தை எடுத்துக் கொண்டு அளவற்ற கடலாகிய (கௌரவப்) படையில் மூழ்கினான். அந்தப் போரில் {அபிமன்யுவைத்} தடுக்க உமது வீரர்களால் இயலவில்லை.
அந்தப் போரில் அவனால் {அபிமன்யுவால்} ஏவப்பட்டவையான உயிரைக்குடிக்கும் கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இறந்த ஆவிகளின் மன்னனுடைய {யமனுடைய} உலகங்களுக்கு வீர க்ஷத்திரியர்கள் பலரை அனுப்பி வைத்தன. உண்மையில், கோபத்தால் தூண்டப்பட்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} அந்தப் போரில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றோ, காலனின் தண்டத்தைப் {யமதண்டத்தைப்} போன்றோ இருந்த சுடர்மிகும் கடுங்கணைகளை ஏவினான்.
அந்தப் பல்குனன் மகன் {அர்ஜுனன் மகன் அபிமன்யு}, தேர்களோடு கூடிய தேர்வீரர்களையும், குதிரையோட்டிகளோடு கூடிய குதிரைகளையும், தாங்கள் நடத்திய பெரும் விலங்குகளோடு {யானைகளோடு} கூடிய யானைவீரர்களையும் துண்டுகளாக வேகமாகப் பிளந்தான். பூமியின் ஆட்சியாளர்கள் {அரசர்கள்} மகிழ்ச்சியில் நிறைந்து, அந்த வல்லமைமிக்கச் சாதனைகளை மெச்சி அதை அடைந்தவனையும் {அபிமன்யுவையும்} புகழ்ந்தார்கள்.
அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பஞ்சுப் பொதியை வானத்தில் அனைத்துப் பக்கங்களிலும் வீசியடிக்கும் பெருங்காற்றைப் போல (கௌரவப்படையின்) அந்தப் பிரிவுகளை வீசினான். அவனால் {அபிமன்யுவால்} முறியடிக்கப்பட்ட துருப்புகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சேற்றில் மூழ்கிய யானைகளைப் போல, ஒரு பாதுகாவலனை அடையத் தவறின. துருப்புகள் அனைத்தையும் முறியடித்த பிறகு, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகைச்சுருளேதும் அற்ற சுடர்மிகும் நெருப்பைப் போல அபிமன்யு நின்று கொண்டிருந்தான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விதியால் உந்தப்பட்ட பூச்சிகளால் சுடர்மிகும் நெருப்பைத் தாங்கிக் கொள்ள முடியாததைப் போல அந்த எதிரிகளைக் கொல்பவனை {அபிமன்யுவை} உமது வீரர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. {அப்படியே விதியால் உந்தப்பட்ட கௌரவப் படையினர் அபிமன்யுவைத் தாக்கி உயிரிழந்தனர்}
பாண்டவர்களின் எதிரிகள் அனைவரையும் தாக்கிய பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியுமான அவன் {அபிமன்யு}, வஜ்ரத்தை ஏந்திய வாசவனைப் {இந்திரனைப்} போலவே அந்தக் கணத்தில் தெரிந்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பின்புறத்தடி கொண்ட அவனின் {அபிமன்யுவின்} வில்லானது, ஒவ்வொரு புறமும் நகர்ந்த போது மேகங்களுக்கு மத்தியில் தென்படும் மின்னலின் கீற்றைப் போலத் தெரிந்தது. அந்தப் போரில் அவனது வில்லின் நாணில் இருந்த வந்த நல்ல பதத்திலான {நன்கு கடினமாக்கப்பட்ட} கூரிய கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காட்டில் மலர்ந்திருக்கும் மரங்களில் இருந்து வரும் வண்டுக் கூட்டங்களைப் போல வந்தன. அந்த உயர் ஆன்ம சுபத்திரையின் மகன் {அபிமன்யு} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களுடைய தன் தேரில் களத்தில் திரிந்த போது, (அவனைத் தாக்குவதற்கு) ஒரு சந்தர்ப்பத்தையும் மக்களால் {பகை வீரர்களால்} காண இயலவில்லை.
கிருபர், துரோணர், வலிமைமிக்கத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோரையும் குழப்பியபடியே பெரும் சுறுசுறுப்புடனும், திறமையுடனும் அந்தப் பெரும் வில்லாளி {அபிமன்யு} போர்க்களத்தில் நகர்ந்து கொண்டிருந்தான். அப்படி உமது துருப்புகளை அவன் {அபிமன்யு} எரித்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இடைவிடாமல் அவனது வில் வட்டமாக வளைக்கப்படுவதையும், அது சூரியனைச் சுற்றி சில நேரங்களில் காணப்படும் வட்டமான ஒளிவளையத்துக்கு ஒப்பாக இருப்பதையும் நான் கண்டேன். துணிச்சல் மிக்க க்ஷத்திரியர்கள், இப்படித் திறமையுடன் எதிரியை எரிக்கும் அவனை {அபிமன்யுவைக்} கண்டு, அந்தச் சாதனைகளின் விளைவாக, இந்த உலகம் இரண்டு பல்குனர்களைக் {அர்ஜுனர்களைக்} கொண்டிருப்பதாகவே நினைத்தனர்.
உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனால் {அபிமன்யுவால்} பீடிக்கப்பட்ட பாரதர்களின் அந்தப் பெரும் படை, மது குடித்த பெண்ணைப் போல அங்கேயே இங்கேயும் சுற்றியது. அந்தப் பெரும்படையை முறியடித்து, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை நடுங்கச் செய்த அவன் {அபிமன்யு}, மயனை வீழ்த்திய பிறகு (தேவர்களை மகிழ்வித்த வாசவனைப் {இந்திரனைப்} போல) தன் நண்பர்களை மகிழ்வித்தான். அந்தப் போரில் அவனால் {அபிமன்யுவால்} முறியடிக்கப்பட்ட போது, உமது துருப்புகள் மேகங்களின் முழக்கத்தை ஒத்த துன்பப்பேரொலிகளை வெளியிட்டன.
ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, காற்றால் கலங்கடிக்கப்படும் அலைகள் நிறைந்த கடலின் முழக்கத்தை ஒத்ததாக இருந்த உமது துருப்புகளின் பரிதாபகரமான ஒப்பாரியைக் கேட்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ரிஷ்யசிருங்கன் மகனிடம் {அலம்புசனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அலம்புசா}, இரண்டாவது பல்குனனை {அர்ஜுனனைப்} போல இருக்கும் இந்த அபிமன்யு அவன் ஒருவனாகவே, தேவர்களின் படையை முறியடிக்கும் விருத்திரனைப் போல, சினத்தால் (எனது) படையை முறியடிக்கிறான். அனைத்து அறிவியலிலும் நன்கு திறன் பெற்ற உன்னைத் தவிர, ஓ! ராட்சசர்களில் சிறந்தவனே {அலம்புசா}, அவனுக்கு {அபிமன்யுவுக்குத்} தீர்வைத் தரும் வேறு எந்த மருந்தையும் போரில் நான் காணவில்லை. எனவே, விரைந்து சென்று, சுபத்திரையின் அந்த வீர மகனை {அபிமன்யுவைப்} போரில் கொல்வாயாக. எங்களைப் பொறுத்தவரை, பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் செல்லும் நாங்கள் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வோம்” என்று சொன்னான் {துரியோதனன்}.
இப்படிச் சொல்லப்பட்டதும், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், வலிமைமிக்க அந்த வீர ராட்சசன் {அலம்புசன்}, மழைக்காலத்தின் மேகங்களைப் போல உரத்த முழக்கங்களையிட்டபடியே போரிட விரைந்து சென்றான். அந்தப் பேரொலியின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் கலங்கடிக்கப்படும் பெருங்கடலைப் போலப் பாண்டவர்களின் அந்தப் பெரும்படை முழுமையாக நடுங்கியது. அந்த முழக்கங்களால் பீதியடைந்த போராளிகள் பலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் இன்னுயிரை விட்டுப் பூமியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார்கள். மகிழ்ச்சியால் நிறைந்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, தன் வில்லை எடுத்து, நாணில் கணையைப் பொருத்தி, தன் தேர்த்தட்டில் நடனமாடிக்கொண்டிருப்பவனாகத் தோன்றியபடியே அபிமன்யுவை எதிர்த்துச் சென்றான். பிறகு அந்தக் கோபக்கார ராட்சசன் {அலம்புசன்}, அந்தப் போரில் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} தான் அடையும் தொலைவில் கொண்டு வந்து, அவன் {அபிமன்யுவின்} அருகில் இருந்தவர்களையும் சேர்த்து அவனது படைப்பிரிவுகளை முறியடிக்கத் தொடங்கினான்.
உண்மையில், அந்த ராட்சசன் {அலம்புசன்}, தேவர்களின் படையை எதிர்த்து விரைந்த பலனைப் {பலன் என்ற அசுரனைப்} போல, அந்த வலிமைமிக்கப் பாண்டவப் படையைப் போரில் எதிர்த்து விரைந்து கொல்லவும் தொடங்கினான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பயங்கர முகத்தோற்றம் கொண்ட ராட்சசனால் போரில் தாக்கப்பட்ட துருப்புகளின் மத்தியில் நடந்த அந்தப் படுகொலை மிகப் பெரியதாக இருந்தது. தன் ஆற்றலை வெளிப்படுத்திய அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஆயிரக்கணக்கான கணைகளால் பாண்டவர்களின் அந்தப் பெரிய படையை முறியடிக்கத் தொடங்கினான். இப்படி அந்தப் பயங்கர முகம் படைத்த ராட்சசனால் {அலம்புசனால்} படுகொலை செய்யப்பட்டுப் பெரும் அச்சத்தை அடைந்த அந்தப் பாண்டவப் படை தப்பி ஓடியது.
தாமரைத் தண்டுகளைக் கலக்கும் யானையைப் போல அந்தப் படையைக் கலங்கடித்த வலிமைமிக்க ராட்சசன் {அலம்புசன்}, பிறகு, திரௌபதியின் மகன்களை எதிர்த்துப் போரிட விரைந்தான். போரில் சாதித்தவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தத் திரௌபதியின் மகன்கள், சூரியனை எதிர்த்து விரையும் ஐந்து கோள்களைப் போல அந்த ராட்சசனை {அலம்புசனை} நோக்கி விரைந்தனர். பயங்கர நிகழ்வான உலக அழிவின்போது ஐந்து கோள்களால் பீடிக்கப்படும் சந்திரனைப் போல அந்த ராட்சசர்களில் சிறந்தவன் {அலம்புசன்}, பெரும் சக்தி கொண்ட அந்தச் சகோதரர்களால் {திரௌபதியின் மகன்களால்} பீடிக்கப்பட்டான்.
பிறகு வலிமைமிக்கப் பிரதிவிந்தியன் போர்க்கோடரிகளைப் போலக் கூர்மையானவையும், கவசங்கள் அனைத்தையும் ஊடுருவ வல்ல முனைகளைக் கொண்டவையும், தீட்டப்பட்டவையுமான கணைகளால் அந்த ராட்சசனை {அலம்புசனைத்} துளைத்தான். அதன்பேரில் தன் கவசம் துளைக்கப்பட்ட அந்த ராட்சசர்களில் முதன்மையானவன் {அலம்புசன்}, சூரியக் கதிர்களால் ஊடுருவப்பட்ட மேகங்களின் திரளைப் போலத் தெரிந்தான். தங்கச் சிறகுகளைக் கொண்ட இந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட ரிஷ்யசிருங்கன் மகன் {அலம்புசன்}, ஓ! மன்னா, சுடர்மிகும் முகடுகளைக் கொண்ட ஒரு மலையைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
பிறகு, அந்த ஐந்து சகோதரர்களும், அந்த ராட்சசர்களில் முதன்மையானவனை {அலம்புசனைத்} தங்கச் சிறகுகளைக் கொண்டவையும் தீட்டப்பட்டவையுமான கணைகள் பலவற்றைக் கொண்டு அந்தப் போரில் துளைத்தனர். கோபக்காரப் பாம்புகளை ஒத்த அந்தப் பயங்கரக் கணைகளால் துளைக்கப்பட்ட அலம்புசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாம்புகளின் மன்னனைப் போலவே சினத்தால் எரிந்தான். சிலக்கணங்களிலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் தேர்வீரர்களால் ஆழத் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பெரிதும் பீடிக்கப்பட்டு நீண்ட நேரத்திற்கு [1] உணர்விழந்தவனாக {மயக்கத்தில்} நீடித்தான்.பிறகு தன் சுயநினைவு திரும்பி, கோபத்தால் தன் அளவை விட இரு மடங்கு பெருகிய அவன் {அலம்புசன்}, அவர்களது {திரௌபதி மகன்களின்} கணைகள், கொடிமரங்கள் மற்றும் விற்களை வெட்டினான். அப்போது சிரிப்பவன் போல இருந்த அவன் {அலம்புசன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து {5} கணைகளால் தாக்கினான். பிறகு, வலிமைமிக்க ராட்சசனும், பெரும் தேர்வீரனுமான அந்த அலம்புசன், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் தேர்த்தட்டில் நடனமாடுபவனைப் போல இருந்து கொண்டு, தன் சிறப்பு வாய்ந்த எதிரிகளான அந்த ஐவரின் குதிரைகளையும், பிறகு தேரோட்டிகளையும் விரைவாகக் கொன்றான். சினத்தால் எரிந்த அவன் {அலம்புசன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, பல்வேறு வண்ணங்களிலான கூரிய கணைகளால் அவர்களை {திரௌபதியின் மகன்களை} மீண்டும் துளைத்தான். இரவு உலாவியான அந்த ராட்சசன் அலம்புசன், அந்தப் பெரும் வில்லாளிகளைத் தங்கள் தேர்களை இழக்கச் செய்த பிறகு, அவர்களை {திரௌபதியின் மகன்களை} யமலோகம் அனுப்பும் விருப்பத்துடன் அவர்களை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.
தீய ஆன்மா கொண்ட அந்த ராட்சசனால் {அலம்புசனால்} அந்தப் போரில் (இப்படிப்) பீடிக்கப்பட்ட அவர்களைக் கண்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அவனிடம் {அலம்புலசனிடம்} விரைந்தான். பிறகு, அவனுக்கும் {அபிமன்யுவுக்கும்} அந்த மனித ஊனுண்ணிக்கும் {அலம்புசனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, விருத்திரனுக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப் {நடந்த போரைப்} போல இருந்தது. உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பாண்டவர்களினுடையவர்களும் {பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும்} அந்த மோதலைக் காணும் பார்வையாளர்களானார்கள்.
கடும்போரில் ஒருவரோடொருவர் மோதி, கோபத்தில் சுடர்விட்டு, பெரும் வலிமையுடன், இருந்த அவர்கள் {இருவரும்} சினத்தில் கண்கள் சிவந்து அந்தப் போரில் மற்றவனை யுக நெருப்பை ஒத்தவனாகவே கண்டனர். அவர்களுக்கிடையிலான அந்த மோதல், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, சம்பரனுக்கும் இடையில் நடந்ததைப் {நடந்த மோதலைப்} போலக் கடுமையாகவும், பயங்கரமாகவும் ஆனது.” {என்றான் சஞ்சயன்}.
அலம்புசனைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு! சாத்யகியின் வீரம்!! – பீஷ்ம பர்வம் பகுதி – 102-அபிமன்யுவுக்கும் அலம்புசனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; மாயாசக்தியைப் பயன்படுத்திய அலம்புசன்; அலம்புசனைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு; கௌரவ வீரர்கள் அனைவரும் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டது; அபிமன்யுவை எதிர்த்த பீஷ்மர்; அபிமன்யுவைக் காக்க அர்ஜுனன் விரைந்தது; அர்ஜுனனைத் தாக்கிய கிருபர்; கிருபரைத் தாக்கிய சாத்யகி; சாத்யகியின் வீரம்; சாத்யகி கிருபரைக் கொல்லாமல் தடுத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமன் சாத்யகி மோதல்; மயங்கி அமர்ந்த அஸ்வத்தாமன்; தன் மகனை மீட்க விரைந்த துரோணர்; சாத்யகி துரோணர் மோதல்; துரோணர் அர்ஜுனன் மோதல்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, வலிமைமிக்க நம் தேர்வீரர்கள் பலரைப் போரில் தாக்கிய அர்ஜுனனின் வீர மகனை {அபிமன்யுவை} அலம்புசன் எவ்வாறு எதிர்த்தான்? மேலும், பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ரிஷ்யசிருங்கன் மகனுடன் {அலம்புசனுடன்} எவ்வாறு போர்புரிந்தான்? அந்தப் போரில் நடந்ததை உள்ளபடியே இவை அனைத்தையும் விவரமாக எனக்குச் சொல்வாயாக. தேர்வீரர்களில் முதன்மையான பீமன், ராட்சசன் கடோத்கசன், நகுலன், சகாதேவன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரும் போரில் என் துருப்புகளை என்ன செய்தார்கள்? ஓ! சஞ்சயா, (விவரிப்பதில்) நீ திறம்படைத்தவனாக இருப்பதால், இவை அனைத்தையும் எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசர்களில் முதன்மையானவனுக்கும் {அலம்புசனுக்கும்}, சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கரப் போரைக் குறித்துத் தற்போது விவரிக்கிறேன். போரில் அந்த அர்ஜுனன் வெளிப்படுத்திய ஆற்றலையும், பாண்டுவின் மகனான பீமசேனன், நகுலன், சகாதேவன், பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான உமது படையின் வீரர்கள், என்று அனைவரும் அச்சமற்று செய்த பல்வேறு அற்புத சாதனைகளையும் உமக்கு நான் விவரிப்பேன்.
பேரொலிகளை எழுப்பிய அலம்புசன், அபிமன்யுவை நோக்கி மீண்டும் மீண்டும் முழங்கி, “நில், நில்” என்று சொன்னபடி, போரில் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அபிமன்யுவை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான். அதே போல அபிமன்யுவும், சிங்கம் போல மீண்டும் மீண்டும் முழங்கியபடி ரிஷ்யசிருங்கன் மகனும், முன்னவனின் {அபிமன்யுவின்} தந்தையால் {அர்ஜுனனால்} மன்னிக்கமுடியாத எதிரியுமான அந்த வலிமைமிக்க வில்லாளியை {அலம்புசனை} நோக்கி பெரும் சக்தியுடன் விரைந்தான்.
பிறகு தேர்வீரர்களில் முதன்மையானவர்களான அந்த மனிதன் {அபிமன்யு}, ராட்சன் {அலம்புசன்} ஆகிய இருவரும் தங்கள் தேர்களில் இருந்தபடியே தேவனும் தானவனும் போலத் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். அந்த ராட்சசர்களில் சிறந்தவன் {அலம்புசன்} மாயாசக்திகளைக் கொண்டிருந்தான், அதே வேளையில் பல்குனன் மகனோ {அபிமன்யுவோ} தெய்வீக ஆயுதங்களை அறிந்தவனாக இருந்தான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ரிஷ்யசிருங்கன் மகனை {அலம்புசனை} மூன்று கூரிய கணைகளாலும், பிறகு மீண்டும் ஐந்தாலும் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அலம்புசனும், அங்குசங்கள் {தோத்ரங்கள்} கொண்டு யானையைத் துளைக்கும் பாகனைப் போல அபிமன்யுவின் மார்பை ஒன்பது {9} கணைகளால் வேகமாகத் துளைத்தான்.
அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் சுறுசுறுப்புக் கொண்ட அந்த இரவு உலாவி {அலம்புசன்}, அம்மோதலில் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} ஆயிரம் {1000} கணைகளால் பீடித்தான். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அபிமன்யு, மிகக் கூர்மையான ஒன்பது {9} நேரான கணைகளால் அந்த ராட்சசர்களின் இளவரசனின் {அலம்புசனின்} அகன்ற மார்பைத் துளைத்தான். அவனது உடலைத் துளைத்துச் சென்ற அவை, அவனது உயிர்நிலைகளுக்கு உள்ளேயே ஊடுருவின. அவற்றால் தன் அங்கங்கள் சிதைக்கப்பட்ட அந்த ராட்சசர்களில் சிறந்தவன் {அலம்புசன்}, மலர்ந்த கின்சுகங்கள் {பலாச மரங்கள்} அடர்ந்திருக்கும் ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான். தங்கச் சிறகுகள் கொண்ட அந்தக் கணைகளைத் தன் உடலில் தாங்கியபடி இருந்த வலிமைமிக்க அந்த ராட்சசர்களின் இளவரசன் {அலம்புசன்}, தீப்பிடித்த ஒரு மலையைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
பிறகு, பழியுணர்வு கொண்ட அந்த ரிஷ்யசிருங்கன் மகன் {அலம்புசன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, சிறகுகள் படைத்த கணைகளின் மேகங்களால், மகேந்திரனுக்கு {இந்திரனுக்கு} இணையான அபிமன்யுவை மறைத்தான். அவனால் {அலம்புசனால்} ஏவப்பட்ட, யமதண்டங்களுக்கு ஒப்பான அந்தக் கூரிய கணைகள், அபிமன்யுவைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தன. அதே போல அர்ஜுனன் மகனால் {அபிமன்யுவால்} ஏவப்பட்ட, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளும், அலம்புசனைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தன. பிறகு சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பழங்காலத்தில் மயனைத் [1] துரத்தியடித்த சக்ரனைப் {இந்திரனைப்} போல, அந்தப் போரில் தன் நேரான கணைகளால், அந்த ராட்சனை {அலம்புசனை} போர்க்களத்தில் புறமுதுகிட நிர்பந்தித்தான் {புறமுதுகிடச் செய்தான்}.
இப்படி விரட்டப்பட்டவனும், தன் எதிராளியால் {அபிமன்யுவால்} மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டவனும், பகைவர்களை எரிப்பவனுமான அந்த ராட்சசன் {அலம்புசன்}, காரிருளை உண்டாக்கி தன் பெரும் மாயாசக்திகளை வெளிப்படுத்தினான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருந்த போராளிகள் அனைவரும் அந்த இருளால் மறைக்கப்பட்டனர். அபிமன்யுவையும் காண முடியவில்லை, அந்தப் போரில் எதிரிகளிடம் இருந்து நண்பர்களை வேறுபடுத்திப் பார்க்கவும் முடியவில்லை [2]. எனினும், அந்தப் பயங்கரக் காரிருளைக் கண்ட அபிமன்யு, ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, சுடர்மிகும் சூரியாயுதத்தைத் {பாஸ்கராஸ்திரத்தைத்} தோன்றச் செய்தான் {விடுத்தான்}. அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அண்டத்தை மீண்டும் காணும்படி ஆனது {உலகம் அனைத்தும் பிரகாசமாயிற்று}. இப்படியே அவன் {அபிமன்யு}, அந்தத் தீய ராட்சசனின் மாயையைச் செயலறச் {சமன்} செய்தான்.
பிறகு பெரும் சக்தி கொண்ட அந்த மனிதர்களின் இளவரசன் {அபிமன்யு}, கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் ஆற்றலோடு நேரான கணைகள் பலவற்றால் அந்த ராட்சர்களில் முதன்மையானவனை {அலம்புசனை} அந்தப் போரில் மறைத்தான். பல்வேறு வகைகளிலான இன்னும் பிற மாயையைகள் அந்த ராட்சசனால் {அலம்புசனால்} ஏவப்பட்டன. எனினும், ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனான பல்குனன் மகன் {அபிமன்யு} அவை அனைத்தையும் செயலறச் {சமன்} செய்தான்.
தன் மாயை அனைத்தும் அழிக்கப்பட்டு, கணைகளால் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, பிறகு, அங்கேயே தன் தேரைக் கைவிட்டு விட்டு பெரும் அச்சத்துடன் தப்பி ஓடினான். நேர்மையற்ற போருக்கு அடிமையான {நேர்மையற்ற போர் செய்தே பழக்கப்பட்ட} அந்த ராட்சசன் இப்படி வீழ்த்தப்பட்டதும், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, மதநீரால் குருடான காட்டு யானைகளின் இளவரசன் ஒன்று தாமரைகள் அடர்ந்த தடாகத்தைக் கலக்குவது போல உமது துருப்புகளைக் கலங்கடிக்கத் தொடங்கினான்.
அப்போது, சந்தனுவின் மகனான பீஷ்மர், முறியடிக்கப்பட்ட தன் துருப்புகளைக் கண்டு, அந்தச் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தார். பிறகு, தார்தராஷ்டிப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், அந்தத் தனிவீரனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டு, தங்கள் கணைகளால் பலமாகத் தாக்கத் தொடங்கினர். ஆற்றலில் தன் தந்தையை ஒத்தவனும், வீரத்திலும் வலிமையிலும் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவனும், ஆயுதம் தரித்திருப்போர் அனைவரில் முதன்மையானவனுமான அந்த வீரன் {அபிமன்யு}, தன் தந்தைக்கும் {அர்ஜுனனுக்கும்}, {தன்} தாய்மாமனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} தகுந்த பல்வேறு சாதனைகளை அந்தப் போரில் அடைந்தான்.
பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் மகனை {அபிமன்யுவை} மீட்க விரும்பி, {தான்} வந்த வழியெங்கும் உமது துருப்பினரைக் கொன்றபடி பின்னவன் {அபிமன்யு} இருந்த இடத்தை அடைந்தான். அதே போல உமது தந்தை தேவவிரதரும் {பீஷ்மரும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனை அணுகும் ராகுவைப் போல அந்தப் போரில் பார்த்தனை {அர்ஜுனனை} அணுகினார் [3]. பிறகு தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் துணையோடு கூடிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு அனைத்துப் புறங்களில் இருந்தும் அவரைப் பாதுகாத்தனர். அது போலவே கவசந்தரித்த பாண்டவர்களும், ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கடும்போரில் ஈடுபட்டிருந்த தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சரத்வானின் மகன் (கிருபர்), பீஷ்மருக்கு முன்பு நின்று கொண்டிருந்த அர்ஜுனனை இருப்பத்தைந்து {25} கணைகளால் துளைத்தார். அதன்பேரில் புலியொன்று யானையைத் தாக்குவதைப் போல, கிருபரை அணுகிய சாத்யகி, பாண்டவர்களுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தால் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் அவரைத் {கிருபரைத்} துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட கௌதமரும் பதிலுக்கு, கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட ஒன்பது கணைகளால் அந்த மது குலத்தோனின் {சாத்யகியின்} மார்பிலேயே விரைவாகத் துளைத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட அந்தச் சிநியின் பேரனும் {சாத்யகியும்},தன் வில்லைப் பலமாக வளைத்து, அவரது {கிருபரின்} உயிரையே எடுக்க வல்ல கணையொன்றை அவர் மீது வேகமாக ஏவினான்.
எனினும், நெருப்பு போன்ற துரோண மகன் {அஸ்வத்தாமன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, கிருபரை நோக்கி மூர்க்கமாக வந்து கொண்டிருந்ததும், பிரகாசத்தில் இந்திரனின் வஜ்ரத்துக்கு இணையானதுமான அந்தக் கணையை இரண்டாகத் துண்டித்தான். அதன் பேரில், தேர்வீரர்களில் முதன்மையானவனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, கிருபரை விட்டுவிட்டு, சந்திரனை எதிர்த்து ஆகாயத்தில் விரையும் ராகுவைப் போலப் போரில் துரோண மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான்.
எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, சாத்யகியின் வில்லை இரண்டாக வெட்டினான். அவனது {சாத்யகியின்} வில் அப்படி வெட்டப்பட்டதும், முன்னவன் {அஸ்வத்தாமன்} தன் கணைகளால் பின்னவனை {சாத்யகியைத்} தாக்கத் தொடங்கினான். பெரும் கடுமையைத் தாங்க வல்லதும், எதிரியைக் கொல்லவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆறு {6} கணைகளால் அந்தத் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} மார்பிலும், கரங்களிலும் தாக்கினான். இப்படித் துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த அவன் {அஸ்வத்தாமன்}, ஒருக்கணம் தன் உணர்வுகளை இழந்து, தன் கொடிக்கம்பத்தைப் பிடித்தபடியே, தன் தேர்த்தட்டில் கீழே அமர்ந்தான்.
பிறகு தன் சுயநினைவு மீண்ட அந்தத் துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, சினத்தால் தூண்டப்பட்டு, அந்தப் போரில் நாராசம் ஒன்றால் {நீண்ட கணை ஒன்றால்} அந்த விருஷ்ணி குலத்தோனை {சாத்யகியைப்} பீடித்தான். சிநியின் பேரனை {சாத்யகியை} துளைத்துச் சென்ற அந்த நாராசம், வசந்த காலத்தில் தன் துளைக்குள் நுழையும் விறுவிறுப்பான இளம்பாம்பு ஒன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. அந்தப் போரில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வேறு ஒரு பல்லத்தால் {அகன்ற தலை கொண்ட கணையால்} சாத்யகியின் அருமையான கொடிமரத்தை வெட்டினான். அந்தச் சாதனையை அடைந்த அவன் {அஸ்வத்தாமன்} சிங்க முழக்கம் செய்தான். மீண்டுமொருமுறை அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியை {சாத்யகியை} கோடை காலத்தைக் கடந்தபின் {மழைக்காலத்தில்} சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, கடுங்கணைகளின் மழையால் மறைத்தான்.
சாத்யகியும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் கணை மழையைக் கலங்கடித்து, பல்வேறு கணைமழைகளால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} விரைவில் மறைத்தான். பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, மேகங்களில் இருந்து விடுபட்டச் சூரியனைப் போல அந்தக் கணை மழையில் இருந்து விடுபட்டு, (தன் சக்தியால்) துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எரிக்க {தகிக்க} ஆரம்பித்தான். சினம் பெருக்கெடுத்த அந்த வலிமைமிக்கச் சாத்யகி, மீண்டும் ஒருமுறை தன் எதிரியை {அஸ்வத்தாமனை} ஆயிரம் கணைகளால் மறைத்து பெருங்கூச்சலிட்டான்.
ராகுவால் பீடிக்கப்பட்ட சந்திரனைப் போலத் தன் மகனைக் கண்ட பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, சிநியின் பேரனை {சாத்யகியை} நோக்கி விரைந்தார். அந்த விருஷ்ணி வீரனால் {சாத்யகியால்} பீடிக்கப்பட்ட தன் மகனை மீட்க விரும்பிய துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனை {சாத்யகியை} மிகக் கூர்மையான கணை ஒன்றால் துளைத்தார். அப்போது சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமனை விட்டுவிட்டு, அந்தப் போரில் மிகக் கூர்மையான இருபது {20} கணைகளால் துரோணரைத் துளைத்தான்.
அதன்பிறகு விரைவில், எதிரிகளை எரிப்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தப் போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான். பிறகு துரோணரும், பார்த்தனும் {அர்ஜுனனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருக்கும் புதன் மற்றும் சுக்கிரக் கோள்களைப் [4] போலக் கடுமையாகப் போரிட்டு தங்களுக்குள் மோதிக் கொண்டனர்
ருத்திரனாகத் தெரிந்த பீமசேனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 103-துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த போர்; துரோணரின் பாதுகாப்புக்காகச் சுசர்மனை ஏவிய துரியோதனன்; அர்ஜுனனுக்கும் திரிகர்த்த மன்னன் சுசர்மனுக்கு இடையில் நடந்த போர்; வாயவ்ய ஆயுதமும், சைல ஆயுதமும்; சுசர்மனைப் புறமுதுகிடச் செய்த அர்ஜுனன்; பீமனை நோக்கி யானைப் படையுடன் சென்ற பகதத்தன்; யானைகளின் தந்தங்களை உடைத்து அந்தத் தந்தங்களாலேயே அவற்றின் மத்தகங்களைப் பிளந்த பீமன்; தங்கள் படையையே நசுக்கிச் சென்ற கௌரவப் படையின் யானைகள்; கௌரவப் படை புறமுதுகிட்டோடியது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “மனிதர்களில் காளையரான, பெரும் வில்லாளி துரோணரும், பாண்டுவின் மகன் தனஞ்சயனும் {அர்ஜுனனும்} போரில் தங்களுக்குள் எவ்வாறு மோதிக்கொண்டனர்? அறிவாளியான பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு}, அந்தப் பாண்டுவின் மகன் எப்போதும் அன்புக்குரியவனாவான். அதே போலப் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆசானும் {துரோணரும்} எப்போதும் அன்புக்குரியவராவார். அந்தப் போர் வீரர்கள் இருவரும் போரில் மகிழ்ச்சியடைபவர்கள் ஆவர். மேலும் அவர்கள் இருவருமே சிங்கங்களைப் போலக் கடுமையானவர்களுமாவர். எனவே, கவனமாகப் போரிடுபவர்களான பரத்வாஜர் மகன் {துரோணர்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் தங்களுக்குள் எவ்வாறு போரிட்டனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் பார்த்தனை {அர்ஜுனனைத்} தன் அன்புக்குரியவனாகப் போரில் ஒருபோதும் உணரவில்லை. க்ஷத்திரியக் கடமைகளை நோக்கில் கொண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, தன் ஆசானை {துரோணரை} அப்படி {அன்புக்குரியவராக} உணரவில்லை.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, க்ஷத்திரியர்கள் போரில் ஒருவரையொருவர் ஒருபோதும் தவிர்ப்பதில்லை. ஒருவரையொருவர் பொருட்படுத்தாத அவர்கள் {க்ஷத்திரியர்கள்}, தந்தைமாருடனும், சகோதரர்களுடனும் போரிட்டனர்.
அந்தப் போரில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} மூன்று {3} கணைகளால் துரோணரைத் துளைத்தான். எனினும், துரோணர், போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளை மதிக்கவில்லை. உண்மையில் அந்தப் போரில் பார்த்தன் {அர்ஜுனன்} மீண்டும் ஆசானை {துரோணரைக்} கணை மழையால் மறைத்தான். அதன் பேரில் பின்னவர் {துரோணர்} ஆழ்ந்த கானகத்தின் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தார். பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணர், நேரான கணைகள் பலவற்றால் அந்த மோதலில் அர்ஜுனனை விரைவாக மறைத்தார்.
அப்போது மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் துரோணரின் வலப்பக்கத்தை ஏற்கும்படி {பாதுகாக்கும்படி} சுசர்மனை அனுப்பினான். பிறகு அந்தத் திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, சினத்தால் தூண்டப்பட்டு, தன் வில்லைப் பலமாக வளைத்து, இரும்புத் தலைகள் கொண்ட ஏராளமான கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைப்} போரில் மறைத்தான். அவ்விருவீரர்களாலும் ஏவப்பட்ட அந்தக் கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூதிர் காலத்தின் நாரைகளைப் [1] போல ஆகாயத்தில் அழகாகத் தெரிந்தன. குந்தியின் மகனை {அர்ஜுனனை} அடைந்த அந்த அம்புகள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சுவைநிறைந்த கனிகளால் கனத்து வளைந்திருந்த ஒரு மரத்திற்குள் பறவைகள் மறைவதைப் போல அவனது உடலில் நுழைந்தன.
அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனன், அந்தப் போரில் உரத்த முழக்கமிட்டபடி, திரிகர்த்தர்களின் ஆட்சியாளனையும் {சுசர்மனையும்}, அவனது மகனையும் தன் கணைகளால் துளைத்தான். யுக முடிவின் காலனைப் போன்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} துளைக்கப்பட்ட அவர்கள் {சுசர்மனும் அவனது மகனும்}, தங்கள் உயிரை விடத் தீர்மானித்துக் கொண்டு, பார்த்தனை {அர்ஜுனனைத்} தவிர்க்க விரும்பாதிருந்தார்கள். பிறகு அவர்கள் அர்ஜுனனுடைய தேரின் மீது {கணை} மழையைப் பொழிந்தனர். எனினும், அர்ஜுனன், மேகங்களின் மழைத்தாரையை ஏற்கும் மலையொன்றைப் போல அந்தக் கணைமாரியைத் தன் கணைமாரியால் ஏற்றான்.
நாங்கள் அப்போது கண்ட பீபத்சுவின் {அர்ஜுனனின்} கர லாகவம் மிக அற்புதமானதாக இருந்தது. போர்வீரர்கள் பலரால் ஏவப்பட்டுத் தாங்க முடியாததாக இருந்த அந்தக் கணைகளின் மழையை, மேகங்களை நோக்கி விரைந்து, அந்த மேகக்கூட்டங்களைச் சிதறடிக்கும் காற்றைப் போலத் தனி ஒருவனாகவே அவன் {அர்ஜுனன்} கலங்கடித்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தச் சாதனையினால் (அந்தப் போரைக் காண அங்கே கூடியிருந்த) தேவர்களும், தானவர்களும் பெரிதும் நிறைந்தனர் {திருப்தியடைந்தனர்}.
பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் திரிகர்த்தர்களுடன் ஈடுபட்டு {போரிட்டுக்} கொண்டிருந்த அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் படைப்பிரிவை எதிர்த்து வாயவ்ய ஆயுதத்தை {வாயவ்யாஸ்திரத்தை} ஏவினான். அப்போது, ஆகாயத்தைக் கலங்கச் செய்த காற்றானது, மரங்கள் பலவற்றை வீழ்த்தியும், (பகை) துருப்புகளை அடித்துக் கீழே வீழ்த்தவும் செய்தது. அப்போது, கடுமையான அந்த வாயவ்ய ஆயுதத்தைக் கண்ட துரோணர், சைலம் {சைலாஸ்திரம்} என்று அழைக்கப்பட்ட ஒரு பயங்கர ஆயுதத்தை ஏவினார். போரில் துரோணரால் அந்தக் கணை ஏவப்பட்டதும், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, காற்று தணிந்து, பத்துத் திக்குகளும் அமைதியடைந்தன.
எனினும், வீரனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, திரிகர்த்தப் படைப்பிரிவைச் சேர்ந்த அந்தத் தேர்வீரர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும் இழக்கச் செய்து, போர்க்களத்தில் அவர்களை {சுசர்மனையும் அவனது மகனையும்} புறமுதுக்கிடச் செய்தான். பிறகு, துரியோதனன், தேர்வீரர்களில் முதன்மையான கிருபர், அஸ்வத்தாமன், சல்லியன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், பாஹ்லீகர்களின் துணையோடு கூடிய பாஹ்லீகன் ஆகியோர், பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் பார்த்தனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.
அதே போல, பகதத்தனும், வலிமைமிக்கச் சுருதாயுஷும் யானைப்படைப் பிரிவு ஒன்றோடு அனைத்துப் பக்கங்களிலும் பீமனைச் சூழ்ந்து கொண்டனர்.
பூரிஸ்ரவஸ், சலன், சுபலனின் மகன் சகுனி ஆகியோர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பளபளக்கும் கூர்மையான கணைகளால் மாத்ரியின் இரட்டைமகன்களைத் {நகுலன் மற்றும் சகாதேவனைத்} தடுக்கத் தொடங்கினர்.
எனினும், பீஷ்மர், அந்தப் போரில் திருதராஷ்டிரர் மகனுடைய {துரியோதனனுடைய} துருப்புகளின் துணையைக் கொண்டு, யுதிஷ்டிரனை அணுகி, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {யுதிஷ்டிரனைச்} சூழ்ந்து கொண்டார்.
பெரும் துணிச்சலைக் கொண்டவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான அந்த விருகோதரன் {பீமன்}, தன்னை நோக்கி வரும் அந்த யானைப்படைப் பிரிவைக் கண்டு, காட்டுச் சிங்கம் ஒன்றைப் போலத் தன் கடைவாயை நனைக்க {நக்கத்} தொடங்கினான். பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமன், அந்தப் பெரும்போரில், தன் கையில் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து விரைவாகக் குதித்து உமது வீரர்களின் இதயங்களை அச்சத்தால் பீடிக்கச் செய்தான். அந்த யானை வீரர்கள், கையில் கதாயுதத்துடன் வரும் பீமசேனனைக் கண்டு, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைக் கவனமாகச் சூழ்ந்து கொண்டனர். அந்த யானைகளின் மத்தியில் இருந்த பாண்டுவின் மகன் {பீமன்}, வலிமைமிக்க மேகத்திரள்களுக்கு மத்தியில் உள்ள சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
அப்போது, பாண்டு மகன்களில் காளையான அவன் {பீமன்}, ஆகாயத்தை மறைத்திருக்கும் மேகங்களின் பெரும் திரளை விலகச் செய்யும் காற்றைப் போல அந்த யானைப் படைப் பிரிவை தன் கதாயுதத்தால் எரிக்கத் தொடங்கினான். வலிமைமிக்கவனான அந்தப் பீமசேனனால் கொல்லப்பட்ட அந்த யானைகள், மேகத்திரள்களின் முழக்கங்களைப் போலத் துன்ப ஒலியால் உரக்க அலறின. அந்தப் பெரும் விலங்குகளின் {யானைகளின்} தந்தங்களால் (தன் மேனியில்} பல்வேறு கீறல்களைக் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {பீமன்}, மலர்ந்திருக்கும் கின்சுகத்தை {அசோக மரத்தைப்} போல, அந்தப் போர்க்களத்தில் அழகாகத் தெரிந்தான்.
சில யானைகளின் தந்தங்களைப் பிடித்த அவன் {பீமன்}, அவற்றை அந்த ஆயுதங்களை {தந்தங்களை} இழக்கச் செய்தான். பிறவற்றின் {பிற யானைகளின்} தந்தங்களை முறுக்கி வெளியே எடுத்த அவன் {பீமன்}, தண்டத்தைக் கையில் கொண்ட காலனைப் போல, அந்தத் தந்தத்தைக் கொண்டே அந்தப் போரில் அவற்றின் மத்தகங்களில் தாக்கினான். அப்படிச் சிந்திய குருதியில் குளித்த தன் கதாயுதத்தை ஏந்திக் கொண்டு, கொழுப்பும் ஊனீரும் தன் மேல் சிதறிக் கிடக்க, இரத்தத்தால் பூசப்பட்டிருந்த அவன் {பீமன்}, ருத்திரனைப் போலவே தெரிந்தான். இப்படி அவனால் கொல்லப்பட்டவை போக எஞ்சி இருந்த சில பெரிய யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நட்புப் படைப்பிரிவுகளையே {தங்கள் துருப்புகளையே} கூட நசுக்கிக் கொண்டே திசைகள் அனைத்திலும் தப்பி ஓடின. அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடும் அந்தப் பெரிய யானைகளின் விளைவால், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் துருப்புகள் போர்க்களத்திலிருந்து மீண்டும் புறமுதுகிட்டோடின” {என்றான் சஞ்சயன்}.
“அகந்தையின்றிப் போரிடுவீர்” என்ற துரியோதனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 104-பீஷ்மருக்கும் சோமகர்களுக்கு இடையில் நடைபெற்ற போர்; துருபதனின் வில்லைத் துண்டித்த பீஷ்மர்; பாஞ்சாலர்களைப் பீஷ்மரிடம் இருந்து காக்க விரைந்த பாண்டவப் படையினர்; அங்கே நடந்த பயங்கரப் போர் குறித்த வர்ணனை; போர்க்களத்தில் பயங்கரமாக ஓடிய குருதிப் புனல்; பாண்டவர்களைப் புகழ்ந்தும், கௌரவர்களை இகழ்ந்தும் பேசிய வீரர்கள்; கௌரவர்களைத் துரிதப்படுத்திய துரியோதனன்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் படுகொலைகளால் நிறைந்த கடும்போர் ஒன்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மருக்கும், சோமகர்களுக்கும் இடையில் நடுப்பகல் வேளையில் நடந்தது. தேர்வீரர்களில் முதன்மையான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கூர்மையான கணைகளால் பாண்டவர்களின் படையணியை எரிக்கத் தொடங்கினார். காளைக்கூட்டங்கள், (தங்கள் நடையால்) நெல் கட்டுகளின் குவியலை அரைப்பதைப் போல உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்} அந்தத் துருப்புகளைக் கலங்கடித்தார்.
திருஷ்டத்யும்னன், சிகண்டி, விராடன் மற்றும் துருபதன் ஆகியோர், அந்தப் போரில் பீஷ்மரின் மீது பாய்ந்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரரைத் தங்கள் எண்ணற்ற கணைகளால் தாக்கினர். பிறகு திருஷ்டத்யும்னன், விராடன் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்த பீஷ்மர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துருபதன் மீது நாராசம் {நீண்ட கணை} ஒன்றை ஏவினார். பகைவர்களை அழிப்பவரான அந்தப் பீஷ்மரால் போரில் இப்படித் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளிகள், (மனிதர்களின் கால்களால்) மிதிபட்ட பாம்புகளைப் போலக் கோபத்தை அடைந்தனர்.
சிகண்டி, பாரதர்களின் பாட்டனான பீஷ்மரைக் (கணைகள் பலவற்றால்) துளைத்தான். எனினும், மங்காப் புகழ் கொண்ட அந்தப் பீஷ்மர், எதிரியைப் {சிகண்டியைப்} பெண்ணாகக் கருதி அவனைத் தாக்கவில்லை. அப்போது, திருஷ்டத்யும்னன், அந்தப் போரில் நெருப்பைப் போலக் கோபத்தில் சுடர்விட்டெரிந்து, பாட்டனை {பீஷ்மரை} மூன்று கணைகளால் கரங்களிலும், மார்பிலும் தாக்கினான். துருபதன் இருபத்தைந்து {25} கணைகளாலும், விராடன் பத்து {10} கணைகளாலும், சிகண்டி இருப்பத்தைந்து {25} கணைகளாலும் பீஷ்மரைத் துளைத்தார்கள். ஆழமாகத் துளைக்கப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்ட அந்தப் பீஷ்மர், பல வண்ண மலர்களால் நிறைந்திருந்த சிவந்த அசோகத்தை {அசோக மரத்தைப்} போலத் தெரிந்தார்.
அப்போது, அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அவர்கள் {பாண்டவப் படைவீரர்கள்} ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் பதிலுக்குத் துளைத்தார். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்லம் {அகன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால் துருபதனின் வில்லையும் துண்டித்தார். வேறு வில்லைக் கையில் எடுத்த பின்னவன் {துருபதன்}, ஐந்து கணைகளால் பீஷ்மரைத் துளைத்தான். மேலும் அவன் {துருபதன்}, அந்தப் போர்க்களத்தில், கூர்மையான மூன்று கணைகளால் பீஷ்மரின் தேரோட்டியையும் துளைத்தான்.
பிறகு, யுதிஷ்டிரனின் தலைமையிலான திரௌபதியின் மகன்கள் ஐவர், கேகய சகோதரர்கள் ஐவர், சாத்வத குலத்தின் சாத்யகி ஆகியோர் அனைவரும், திருஷ்டத்யும்னன் தலைமையிலான பாஞ்சாலர்களைக் காப்பாற்ற விரும்பி, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். அதே போல, உமது படையின் வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைப் பாதுகாக்க முனைந்து, பாண்டவப் படையை எதிர்த்துத் தங்கள் துருப்புகளின் முன்னணியில் விரைந்தனர். உமது படை மற்றும் அவர்களது படையின் மனிதர்கள் மற்றும் குதிரைகளுக்கிடையில் அங்கே கடுமையாக நடந்த அந்தப் பொது மோதல் யமனின் ஆட்சிப்பகுதிகளைப் பெருகச் செய்யும்படி இருந்தது.
தேர்வீரர்களின் மீது பாய்ந்த தேர்வீரர்கள் ஒருவரையொருவர் யமலோகத்திற்கு அனுப்பினர். அதுபோலவே, மனிதர்கள், யானை வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர் (தங்கள் வர்க்கத்தைச் சேர்ந்த) பிறர் மீது பாய்ந்து நேரான கணைகளால் அவர்களை அடுத்த உலகத்திற்கு அனுப்பினார்கள். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான கடுங்கணைகள் மூலம் தேர்வீரர்களையும், தேரோட்டிகளையும் இழந்த தேர்கள் அங்கேயும் இங்கேயும் எனப் போர்க்களமெங்கும் {குதிரைகளால்} இழுத்துச் செல்லப்பட்டன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களையும், குதிரைகளையும் நசுக்கிய அந்தத் தேர்கள் (வேகத்தில்) காற்று போன்றவையாகவும், ஆகாயத்தில் தோன்றும் (காட்சியாகத் தோன்றும்) நீராவி மாளிகைகளுக்கு {கந்தர்வ நகரங்களுக்கு} [1] ஒப்பானவையாகவும் தெரிந்தன.
கவசமணிந்தவர்களாக, காந்தியுள்ளவர்களாக, காதுகுண்டலம் மற்றும் தலைப்பாகைகளை உடையவர்களாக, தங்கத்தாலான தோள்வளைகள் மற்றும் மாலைகளைப் பூண்டவர்களாக, தேவர்களின் பிள்ளைகளுக்கு ஒப்பானவர்களாக, போரில் இந்திரனின் ஆற்றலுக்கு இணையானவர்களாக, செல்வத்தில் விஸ்வரவணனையும் {குபேரனையும்}, புத்திக்கூர்மையில் பிருஹஸ்பதியையும் விஞ்சியவர்களாக, பரந்த மாநிலங்களை ஆள்பவர்களாக, பெரும் வீரர்களாக இருந்த தேர்வீரர்களில் பலர், தங்கள் தேர்களை இழந்து அங்கேயும் இங்கேயும் சாதாரண மனிதனைப் போல ஓடுவது தெரிந்தது.
திறன்மிக்கப் பாகன்களை இழந்த பெரும் யானைகளும், ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே} {தங்கள்} நட்புப் படையணிகளையே நசுக்கியபடி ஓடி, உரத்த பிளிறல்களுடன் கீழே விழுந்தன. புதிதாக எழுந்த மேகங்களைப் போலத் தெரிந்த மிகப் பெரிய யானைகள், தங்கள் கவசங்களை இழந்து, மேகங்களைப் போலவே முழங்கிக் கொண்டு திசைகள் அனைத்திலும் ஓடுவது தெரிந்தது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவற்றின் {யானைகளின் மீதிருந்த} சாமரங்கள், பலவண்ணங்களிலான கொடிமரங்கள், தங்கப் பிடி கொண்ட குடைகள், (தங்கள் பாகர்களின்) பளபளக்கும் வேல்கள் ஆகியவை சிதறிக் கிடந்தன. தங்கள் யானைகளை இழந்த, உமது மற்றும் அவர்களது தரப்பைச் சேர்ந்த பாகன்களும், அந்தப் பயங்கர அழுத்தத்தில் ஓடியது தெரிந்தது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குதிரைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, காற்றின் வேகத்தில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடுவது தெரிந்தது. தங்கள் குதிரைகளை இழந்த குதிரை வீரர்கள் வாள்களை ஏந்திய படி {தப்பி} ஓடவோ, (அவர்களைத் தாக்கும் பிறரால்) விரட்டப்பட்டோ ஓடுவதோ தெரிந்தது. அந்தப் பயங்கரப் போரில் தப்பி ஓடும் யானையைச் சந்திக்கும் மற்றொரு யானை காலாட்படையினரையும், குதிரைகளையும் விரைவாக நசுக்கிச் சென்றது. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மிகப்பெரிய உயிரினங்கள் {யானைகள்} அந்தப் போரில் பல தேர்களை நசுக்கின. தேர்களும், (தங்கள் வழியில்) விழுந்து கிடக்கும் குதிரைகளை நசுக்கின. அப்படியே குதிரைகளும், அந்தப் போரின் அழுத்தத்தில், காலாட்படை வீரர்கள் பலரை (தங்கள் குளம்புகளால்) நசுக்கின.
இப்படியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவை ஒன்றையொன்று பல்வேறு வழிகளில் நசுக்கின. கடுமை நிறைந்த அந்தப் பயங்கரப் போரில் குருதிப் புனலோடு கூடிய ரத்த ஆறு பாய்ந்தது. விற்களின் குவியல்கள் அதன் நேரான பாதைக்குத் தடங்கல் செய்தது, (கொல்லப்பட்ட வீரர்களின்) தலைமயிர்கள் அதன் பாசிகளாகின. (உடைந்த) தேர்கள் அதன் மடுக்களாகின, கணைகள் அதன் நீர்ச்சுழிகளாகவும் அமைந்தன. குதிரைகள் அதன் மீன்களாக அமைந்தன. (உடலில் இருந்து வெட்டப்பட்ட) தலைகள் அதன் கற்பாறைகளாக அமைந்தன. அதில் {களத்தில்} இருந்த யானைகள் அதன் முதலைகளாக அமைந்தன. கவசங்களும், தலைப்பாகைகளும் அதன் நுரைகளாகின. (வீரர்களின் கைகளில் இருந்த) விற்கள் அதன் ஊற்றின் வேகமாகவும், வாள்கள் அதன் ஆமைகளாகவும் அமைந்தன. அங்கே நிறைந்திருந்த கொடிகளும், கொடிமரங்களும் அதன் கரைகளில் உள்ள மரங்களாக அமைந்தன. மனிதர்கள் அந்த ஆறு தொடர்ந்து உண்ணும் {அரிக்கும்} அதன் கரைகளாக அமைந்தனர். அதில் இருந்த மனிதஊனுண்ணிகள் அதன் அன்னங்களாக அமைந்தன. அந்த ஓடை {ஆறு} (தன் நீரூற்றால் கடலைப் பெருகச் செய்வதை விட்டு) யமனின் ஆட்சிப்பகுதியை பெருக்கியது.
வலிமைமிக்கத் தேர்வீரர்களான துணிவுமிக்க க்ஷத்திரியர்கள், அச்சமனைத்தையும் உதறிவிட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தெப்பங்கள் மற்றும் படகுகளாகச் செயல்பட்ட தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் துணையோடு அந்த ஆற்றைக் கடக்க முயன்றனர். மரணமன்னனின் {யமனின்} உலகத்திற்கு இறந்தவர்களின் ஆவிகளை இட்டுச் செல்லும் வைதரணீ நதியைப் போல, குருதிப் புனலோடு கூடிய அந்த ஆறு போரில் அஞ்சித் தங்கள் உணர்வுகளை இழந்து மயக்கமடைந்தவர்களைச் சுமந்து சென்றது.
போர்க்களத்தில் அந்தப் பயங்கர அழிவைக் கண்ட க்ஷத்திரியர்கள் அனைவரும், “ஐயோ, துரியோதனனின் தவறால் மன்னர்கள் அழிவடைகிறார்களே. ஓ!, பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட திருதராஷ்டிரன் பேராசையினால் மயங்கி, எண்ணற்ற நற்குணங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன்களிடத்தில் ஏன் பொறாமைக்கு இடமளித்தான்?” என்று உரக்கக் கூறினர்.
பாண்டவர்களைப் புகழ்ந்தும், உமது மகன்களை நிந்தித்தும், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட இந்த வகையிலான பல்வேறு அலறல்கள் அங்கே கேட்டன. அனைவருக்கும் எதிராகக் குற்றம் புரிபவனான உமது மகன் துரியோதனன், போராளிகள் அனைவராலும் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் சல்லியனிடம், “அகந்தை கொள்ளாமல் போரிடுவீராக. ஏன் எப்போதும் தாமதிக்கிறீர்கள்?” என்று கேட்டான் {துரியோதனன்}.
பகடையாட்டத்தால் விளைந்ததும், பயங்கரப் படுகொலையால் குறிக்கப்பட்டதுமான அந்தக் கடும்போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் தொடங்கியது. ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரரே}, சிறப்பு வாய்ந்த மனிதர்கள் பலரால் அதற்கு {பகடைக்கு} எதிராக எச்சரிக்கப்பட்டும் {உமது நண்பர்களின் ஆலோசனைகளை} மறுத்ததன் பயங்கரக் கனியையே {பலனையே} இப்போது நீர் காண்கிறீர்.
அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோ, அவர்களது துருப்புகளோ, அவர்களைப் பின்தொடர்பவர்களோ, கௌரவர்களோ தங்கள் உயிர்களைக் குறித்துக் கிஞ்சிற்றும் கருதிப் பார்க்கவில்லை. விதியாலோ, உமது தீய கொள்கையின் காரணமாகவோ, ஓ! மனிதர்களில் புலியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறவினர்களின் இந்தப் பயங்கரமான அழிவு நடக்கிறது” {என்றான் சஞ்சயன்}.
சாத்யகி பீஷ்மர் மோதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 105-அர்ஜுனனுக்கும் திரிகர்த்த மன்னன் சுசர்மனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தப்பி ஓடிய படைவீரர்கள்; திரிகர்த்தப்படையை முறியடித்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தாக்கிய துரியோதனன்; அபிமன்யுவுக்கும் சித்திரசேனனுக்கும் இடையில் நடந்த போர்; துரோணர்-துருபதன், பீமன்-பாஹ்லீகர்; சாத்யகி-கிருதவர்மன் ஆகியோருக்கிடையில் நடந்த போர்கள்; சாத்யகிக்கும்-பீஷ்மருக்கும் நடந்த கடுமையான போர்; சாத்யகியைப் பீஷ்மரிடம் இருந்து காக்க விரைந்த பாண்டவர்கள்
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன், தீட்டப்பட்ட தன் கணைகளின் மூலம் சுசர்மனைப் பின்தொடர்ந்து வந்த க்ஷத்திரியர்களை மரணமன்னனின் {யமனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். எனினும் அந்தப் போரில், சுசர்மனும் தன் கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். மேலும், அவன் {சுசர்மன்}, எழுபதால் {70 கணைகளால்} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, ஒன்பது {9} கணைகளால் மீண்டும் அர்ஜுனனையும் துளைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த இந்திரன் மகன் {அர்ஜுனன்}, அந்தக் கணைகளைத் தன் கணை மழையால் தடுத்து, சுசர்மனின் துருப்பினரை யமலோகத்திற்கு அனுப்பினான்.
அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சுசர்மனின் வீரர்கள்}, யுகமுடிவிலான காலனைப் போன்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} அந்தப் போரில் கொல்லப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீதியடைந்த அவர்கள் அனைவரும் போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடினார்கள். சிலர் தங்கள் குதிரைகளையும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிலர் தங்கள் தேர்களைக் கைவிட்டும், பிறர் தங்கள் யானைகளைக் கைவிட்டும் திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினார்கள். இன்னும் பிறர், தங்கள் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றுடன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} பெரும் வேகத்துடன் தப்பி ஓடினார்கள். அந்தப் பயங்கரப் போரில் தங்கள் ஆயுதங்களைப் புறந்தள்ளிய காலாட்படை வீரகள், ஒருவரையொருவர் கருதிப் பாராமல் அங்கேயும் இங்கேயும் தப்பி ஓடினர். திரிகர்த்தர்களின் ஆட்சியாளனான சுசர்மனாலும், மன்னர்களில் முதன்மையானோரான இன்னும் பிறராலும் தடுக்கப்பட்டாலும் அவர்கள் போரில் நிலைபெறவில்லை.
அந்தப் படை முறியடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் துரியோதனன், படைகள் அனைத்திற்கும் முன்னின்று, திரிகர்த்தர்கள் ஆட்சியாளனின் உயிருக்காக ({சுசர்மனைக்} காப்பதற்காகத்) தன் வீரியம் முழுமையும் பயன்படுத்திப் பீஷ்மரின் தலைமையில் அந்தப் போரில் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கினான். தன் தம்பிகள் அனைவரின் துணையோடு பல்வேறு விதமான கணைகளை இறைத்துக் கொண்டு போரில் அவன் {துரியோதனன்} நின்றான். மீதி மனிதர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
அதேபோலப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசம்பூண்டு கொண்டு, பல்குனனின் {அர்ஜுனனின்} நிமித்தமாகத் தங்கள் வீரியம் முழுமையையும் பயன்படுத்தி, பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் {பாண்டவப் படையினர்}, போரில் அந்தக் காண்டீவந்தாங்கியின் {அர்ஜுனனின்} பயங்கர ஆற்றலை அறிந்திருந்தாலும், உரத்த கூக்குரல்களுடனும் பெரும் துணிச்சலுடனும் பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்று அனைத்துப் புறங்களிலும் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். பிறகு அந்தப் பனைமரக்கொடி வீரர் {பீஷ்மர்}, அந்தப் போரில் தன் நேரான கணைகளால் பாண்டவப் படையை மறைத்தார்.
சூரியன் நடுக்கோட்டை {உச்சி வானை} அடைந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கௌரவர்கள் {கௌரவப் படையினர்} குழம்பிய திரளாக இருந்த பாண்டவர்களுடன் {பாண்டவப் படையினருடன்} போரிட்டனர். வீர சாத்யகி, ஐந்து {5} கணைகளால் கிருதவர்மனைத் துளைத்ததும், ஆயிரக்கணக்கான தன் கணைகளை இறைத்தபடி போரில் நிலைத்தான். மன்னன் துருபதனும், தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்து, மீண்டும் எழுபது {70} கணைகளால் அவரையும் {துரோணரையும்}, ஒன்பதால் {9 கணைகளால்} அவரது தேரோட்டியையும் துளைத்தான். பீமசேனனும், தன் பெரும்பாட்டனான பாஹ்லீகரைத் துளைத்து, காட்டுப் புலியைப் போல உரக்க முழங்கினான்.
அர்ஜுனன் மகன் (அபிமன்யு), கணைகள் பலவற்றால் சித்திரசேனனால் [1] துளைக்கப்பட்டு, மூன்று கணைகளால் சித்திரசேனனின் மார்பில் ஆழமாகத் துளைத்தான். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும் {அபிமன்யுவும், சித்திரசேனனும்}, ஆகாயத்தில் உள்ள வெள்ளி மற்றும் சனி கோள்களைப் போலக் களத்தில் பிரகாசமாகத் தெரிந்தனர். பிறகு எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஒன்பது கணைகளால் தன் எதிராளியின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று உரத்த முழக்கமிட்டான். அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (அதாவது சித்திரசேனன்), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து கீழே வேகமாகக் குதித்து, தாமதம் செய்யாமல் துர்முகனின் [2] தேரில் ஏறிக் கொண்டான்.வீரத் துரோணர், பின்னவனின் {துருபதனின்} தேரோட்டியையும் துளைத்தார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முகப்பில் இருந்த துருபதன் இப்படிப் பீடிக்கப்பட்டு, பழங்காலத்தில் இருந்து (தனக்கும் துரோணருக்கும் இடையில்) நீடிக்கும் பகையை நினைவுகூர்ந்து, வேகமான தன் குதிரைகளின் உதவியால் பின்வாங்கினான். பீமசேனன், மன்னன் பாஹ்லீகரை, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு கணத்திற்குள் தனது குதிரைகள், தேர் மற்றும் தேரோட்டி ஆகியவற்றை இழக்கச் செய்தான். மனிதர்களில் சிறந்த அந்தப் பாஹ்லீகர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் விழுந்து, தன் இதயத்தில் அச்சத்துடன் அந்த வாகனத்தில் இருந்து கீழே குதித்து, அந்தப் போரில் லக்ஷ்மணனின் [3] தேரில் விரைவாக ஏறினார்.
சாத்யகி, அந்தப் பயங்கரப் போரில் கிருதவர்மனைத் தடுத்து, பாட்டன் {பீஷ்மர்} மீது பாய்ந்து, பல்வேறு வகையான கணைகளை அவர் மீது பொழிந்தான். அவன் {சாத்யகி}, தன் பெரிய வில்லை அசைத்தபடி, இறகுகளால் சிறகமைந்த அறுபது தீட்டப்பட்ட கணைகளால் பாட்டனை {பீஷ்மரை} துளைத்து, தன் தேரில் நடனமாடுபவனைப் போலக் காணப்பட்டான். பிறகு பாட்டன் {பீஷ்மர்}, பாம்புகளின் மகளைப் போல அழகானதும், பெரும் வேகம் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், இரும்பினால் செய்யப்பட்டதுமான வலிமைமிக்க ஓர் ஈட்டியை அவன் {சாத்யகியின்} மீது ஏவினார். விருஷ்ணி குலத்தின் அந்த ஒப்பற்ற வீரன் {சாத்யகி}, காலனுக்கு ஒப்பான தடுக்க முடியாத அந்த ஈட்டியைக் கண்டு, தன் அசைவுகளின் நளினத்தால் {லாகவத்தால்} அதைக் கலங்கடித்தான்.
அதன் பேரில், அந்த விருஷ்ணி குலத்தோனை {சாத்யகியை} அடைய முடியாத அந்தக் கடும் ஈட்டி, சுடர் மிகுந்து பிரகாசிக்கும் ஒரு பெரிய எரி கோளைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. பிறகு, அந்த விருஷ்ணி குலத்தோன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தைப் போல ஒளிரும் தன் ஈட்டியைத் தன் உறுதியான கைகளில் ஏந்தி பாட்டனின் {பீஷ்மரின்} தேரின் மேல் வீசினான். அந்தப் பயங்கரப் போரில் சாத்யகியின் பலமான கரங்களால் வீசப்பட்ட அந்த ஈட்டி (விதி முடிந்த) மனிதனை நோக்கி வேகமாக விரையும் மரண இரவைப் போல மூர்க்கமாகச் சென்றது. எனினும் பீஷ்மர், அது தன்னை நோக்கி பெரும் சக்தியுடன் வந்த போதே, கூர் முனை கொண்ட க்ஷுரப்ரங்கள் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணைகள்} இரண்டால் அதை இரண்டாகத் துண்டித்தார்; அதன்பேரில் அது கீழே பூமியில் விழுந்தது. எதிரிகளைக் கலங்கடிப்பவரான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அந்த ஈட்டியைத் துண்டித்து, கோபத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே ஒன்பது கணைகளால் சாத்யகியின் மார்பைத் தாக்கினார்.
பிறகு அந்தப் பாண்ட வீரர்கள், ஓ! பாண்டுவின் தமையரே {திருதராஷ்டிரரே}, அந்த மதுகுலத்தோனை {சாத்யகியை} மீட்கும் பொருட்டு, தங்கள் தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு, அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு, வெற்றியை விரும்பியவர்களான பாண்டவர்கள் மற்றும் குருக்கள் ஆகிய இருவருக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்த கூடிய வகையில் கடும் போரொன்று மீண்டும் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.
யுதிஷ்டிரனிடம் விரைந்த பீமன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 106-பீஷ்மரைப் பாதுகாக்கத் துச்சாசனனை ஏவிய துரியோதனன்; நகுலன், சகாதேவன், யுதிஷ்டிரன் ஆகியோரைச் சூழ்ந்து கொண்ட சகுனி; துரியோதனன் அனுப்பிய குதிரைகள்; குதிரைப்படையை முறியடித்த பாண்டவர்கள்; யுதிஷ்டிரனுக்கு எதிராகச் சல்லியனை ஏவிய துரியோதனன்; யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும், சல்லியனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; யுதிஷ்டிரனைக் காக்க விரைந்து வந்த பீமன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோடை காலத்தின் முடிவில் ஆகாயத்தில் மேகங்களால் சூழப்பட்ட சூரியனைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டவர்களால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்ட பீஷ்மர், கோபத்தால் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட துரியோதனன் துச்சாசனனிடம், “பெரும் வில்லாளியும், எதிரிகளைக் கொல்பவருமான இந்த வீரப் பீஷ்மர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துச்சாசனா}, துணிச்சல்மிக்கப் பாண்டவர்களால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருக்கிறார். ஓ! வீரா {துச்சாசனா}, அந்த ஒப்பற்றவரைப் பாதுகாப்பதே உன் கடமை. நமது பாட்டனான பீஷ்மர், போரில் நம்மால் பாதுகாக்கப்பட்டால் பாண்டவர்களுடன் சேர்த்துப் பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வார். எனவே, பீஷ்மரைப் பாதுகாப்பதே நமது உயர்ந்த கடமை என நான் நினைக்கிறேன். ஏனெனில், நோன்புகளுடன் கூடியவரும், பெரும் வில்லாளியுமான இந்தப் பீஷ்மர் பதிலுக்கு நம்மையும் பாதுகாப்பார். எனவே, போரில் மிகக்கடினமான சாதனைகளை எப்போதும் அடையும் பாட்டனை {பீஷ்மரை} நம் துருப்புகள் அனைத்தாலும் சூழ்ந்து கொண்டு அவரைப் பாதுகாப்பாயாக” என்றான் {துரியோதனன்}.
இப்படித் துரியோதனனால் சொல்லப்பட்ட துச்சாசனன், ஒரு பெரும்படையால் அனைத்துப் புறங்களிலும் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு {போரில்} தன் நிலையை எடுத்துக் கொண்டான். கையில் பளபளக்கும் ஈட்டிகள், வாள்கள் மற்றும் வேல்களைக் கொண்டிருந்தவர்களும், செருக்குடையவர்களும், நன்கு உடுத்தியிருந்தவர்களும், கொடிகளைத் தாங்கும் பலமான உடல் கொண்டவர்களும், நன்கு பயிற்சிபெற்ற, போரில் திறம்பெற்ற சிறந்த காலாட்படை வீரர்களுடன் கலந்து நின்றவர்களுமான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குதிரைவீரர்களுடன் கூடிய சுபலனின் மகன் சகுனி, மனிதர்களில் சிறந்தோரான நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன் ஆகியோரை அனைத்துப் புறங்களிலும் சூழ்ந்து கொண்டு, அவர்களைத் தடுக்கத் தொடங்கினான்.
பிறகு மன்னன் துரியோதனன், பாண்டவர்களைத் தடுப்பதற்காகத் துணிச்சல்மிக்க (வேறு) குதிரைவீரர்கள் பத்தாயிரம் {10000} பேரை அனுப்பினான். பெரும் மூர்க்கத்துடன் எதிரியை நோக்கிப் பல கருடர்களைப் போல இவை {துரியோதனன் அனுப்பிய குதிரைகள்} விரைந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைக்குளம்புகளால் தாக்கப்பட்ட பூமி நடுங்கி பேரொலியை எழுப்பியது. தீப்பிடித்த மலையில் உள்ள ஒரு பெரும் மூங்கில்காட்டின் ஒலியை ஒத்ததாக அவற்றின் குளம்புகளின் உரத்த சடசடப்பொலிகள் கேட்கப்பட்டன. களத்தில் இவை மோதிய போது, மேகம் போல அங்கே எழுந்த புழுதி, ஆகாயத்தை அடைந்து அந்தச் சூரியனையே மறைத்தது. ஒரு பெரிய தடாகத்தின் மார்பில் {பரப்பில்} அன்னப்பறவை கூட்டங்கள் திடீரென வேகமாக இறங்கி, அது கலக்கப்படுவது போல, மூர்க்கமான அந்தக் குதிரைகளின் விளைவால் அந்தப் பாண்டவப் படை கலக்கப்பட்டது. அவற்றின் கனைப்பொலிகளின் விளைவாக அங்கே வேறு எதையும் கேட்க முடியவில்லை.
பிறகு மன்னன் யுதிஷ்டிரனும், மாத்ரியின் மூலமான பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, மழைக்காலத்தில் நீர் பெருகி, அலை நிரம்பியபடி ஆர்ப்பரிக்கும் கடலின் சக்தியைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தை {கரையைப்} போலப் போரில் அந்தக் குதிரைவீரர்களின் தாக்குதலை விரைவாகத் தடுத்தனர். பிறகு அந்த (மூன்று) தேர்வீரர்களும், ஓ! ஏகாதிபதி, தங்கள் நேரான கணைகளால் அந்தக் குதிரைவீரர்களின் தலைகளைத் துண்டித்தனர். உறுதிமிக்க அந்த வில்லாளிகளால் கொல்லப்பட்ட அவர்கள் {குதிரைவீரர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் யானைகளால் கொல்லப்படும் வலிமைமிக்க யானைகள் மலைக்குகைகளில் விழுவதைப் போலக் கீழே விழுந்தனர்.
உண்மையில், (பாண்டவப் படையின்) அந்த வீரர்கள் களம் முழுவதும் உலாவி கூர்மையான பராசங்கள் {முள்பதித்த கணைகள்} மற்றும் நேரான கணைகள் ஆகியவற்றால் அந்தக் குதிரைப்படை வீரர்களின் தலையை அறுத்தார்கள். வாள்களால் தாக்கப்பட்ட அந்தக் குதிரைவீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நெடும் மரங்கள் தங்கள் கனிகளை உதிர்ப்பதைப் போலத் தங்கள் தலைகளை உதிர்த்து துன்புற்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓட்டுநர்களோடு கூடிய குதிரைகள் களமங்கும் உயிரற்று விழுந்ததோ, விழுவதோ காணப்பட்டது. (இப்படிக்) கொல்லப்பட்ட போது, பீதியால் பீடிக்கப்பட்ட குதிரைகள், சிங்கத்தைக் கண்டு தங்கள் உயிரைக் காக்க விரும்பும் சிறு விலங்குகளைப் போலத் தப்பி ஓடின. அந்தப் போரில் தங்கள் எதிரிகளை வீழ்த்திய பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் சங்குகளை ஊதி, தங்கள் பேரிகைகளையும் முழக்கினர்.
பிறகு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன், தன் துருப்புகள் வீழ்த்தப்பட்டதைக் கண்டு துயரில் நிறைந்து, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “ஓ! தலைவா {சல்லியரே}, அங்கே பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவனின்} துணையுடன், ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {சல்லியரே}, உமது பார்வைக்கு முன்பாகவே போரில் நமது துருப்புகளை முறியடிக்கிறான். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {சல்லியரே}, கடலைத் தடுக்கும் நிலத்தை {கரையைப்} போல அவனை {யுதிஷ்டிரனைத்} தடுப்பீராக. வல்லமை உள்ளவர் என்றும், உமது ஆற்றல் தடுக்கப்பட முடியாதது என்றும் பெரிய அளவில் நீர் நன்கு அறியப்பட்டிருக்கிறீர்” என்றான் {துரியோதனன்}.
உமது மகனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த வீரச் சல்லியன், யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குத் தன் பெரும் தேர்ப்படையுடன் சென்றான். அதன்பேரில், அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்க அலையைப் போன்ற சக்தியுடன் தன்னை நோக்கி மூர்க்கமாக விரையும் சல்லியனின் அந்தப் பெரும்படையைப் போரில் தடுக்க ஆரம்பித்தான். வலிமைமிக்கத் தேர்வீரனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் பத்து {10} கணைகளால் மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} விரைவாகத் துளைத்தான். நகுலனும், சகாதேவனும் அவனை நேரான ஏழு {7} கணைகளால் தாக்கினர்.
பிறகு, அந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் தாக்கினான். மீண்டும் அவன் {சல்லியன்}, கூர்முனை கொண்ட அறுபது {60} கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சல்லியன்}, மாத்ரியின் மகன்கள் ஒவ்வொருவரையும் இரு {2} கணைகளால் தாக்கினான். அப்போது, எதிரிகளை வீழ்த்துபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், மன்னன் {யுதிஷ்டிரன்} அந்தப் போரில், காலனின் கோரப்பற்களுக்கு இடையில் இருப்பதைப் போல, சல்லியனின் தேர் அடையத்தக்க தூரத்தில் {அருகிலேயே} இருப்பதைக் கண்டு, யுதிஷ்டிரனின் பக்கம் விரைவாகச் சென்றான் [1].பிறகு, சூரியன் உச்சிவானைக் கடந்து மூழ்கிக் கொண்டிருந்த போது, கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் அங்கே (களத்தின் அந்தப் பகுதியில்) தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.
பீஷ்மரைக் கொல்ல விரைந்த கிருஷ்ணன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 107-பீஷ்மருக்கும் பாண்டவர்களுக்கு இடையில் ஏற்பட்ட போர்; பீஷ்மருடன் சேர்ந்து கொண்ட துரோணர்; பாண்டவப் படைக்குப் பீஷ்மர் ஏற்படுத்திய அழிவு; சிதறி ஓடிய பாண்டவப் படை; அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; பீஷ்மர் இருந்த இடத்திற்கு விரைந்த அர்ஜுனன்; அர்ஜுனனின் மென்மையைக் கண்டு கோபமுற்ற கிருஷ்ணன், பீஷ்மரைக் கொல்ல இரண்டாவது முறையாகத் தேரைவிட்டு இறங்கி அவரை நோக்கி மூர்க்கமாகச் சென்றது; பீஷ்மர் கிருஷ்ணனை வணங்கியது; அர்ஜுனன் கெஞ்சியது; மீண்டும் தன் தேரில் ஏறிய கிருஷ்ணன்; பீஷ்மர் பாண்டவப் படையை முறியடித்தது; ஒன்பதாம் நாள் போர் முடிவை எட்டியது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு உமது தந்தை {பீஷ்மர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் கூர்மை கொண்ட சிறப்பான கணைகளால் பார்த்தர்களையும் {பாண்டவர்களையும்}, அவர்களது துருப்புகளையும் சுற்றிலும் தாக்கத் தொடங்கினார்.
அவர் {பீஷ்மர்}, பனிரெண்டு {12} கணைகளால் பீமனையும், ஒன்பதால் {9 கணைகளால்} சாத்யகியையும் துளைத்தார். மூன்று {3} கணைகளால் நகுலனைத் துளைத்த அவர், ஏழால் {7 கணைகளால்} சகாதேவனைத் துளைத்தார். அவர் {பீஷ்மர்}, பனிரெண்டு {12} கணைகளால் யுதிஷ்டிரனைக் கரங்களிலும், மார்பிலும் துளைத்தார். மேலும், அந்த வலிமைமிக்க வீரர் {பீஷ்மர்}, திருஷ்டத்யும்னனையும் துளைத்து உரக்க முழக்கமிட்டார்.
பனிரெண்டு கணைகளால் நகுலனும், மூன்றால் {மூன்று கணைகளால்} சாத்யகியும் அவரைப் {பீஷ்மரைப்} (பதிலுக்குத்) துளைத்தனர். எழுபது கணைகளால் திருஷ்டத்யும்னனும், ஏழால் {ஏழு கணைகளால்} பீமசேனனும் அவரைத் துளைத்தனர். யுதிஷ்டிரனும் பதிலுக்குப் பனிரெண்டு கணைகளால் பாட்டனை {பீஷ்மரைத்} துளைத்தான்.
(மறுபுறம்) துரோணர், சாத்யகியைத் துளைத்து, அடுத்ததாகப் பீமசேனனைத் துளைத்தார். அவர் {துரோணர்} அவர்கள் ஒவ்வொருவரையும் யம தண்டத்திற்கு ஒப்பான ஐந்து கூரிய கணைகளால் துளைத்தார். எனினும் அவர்கள் இருவரில் ஒவ்வொருவரும் {சாத்யகியும், பீமனும்}, பதிலுக்கு மூன்று நேரான கணைகளால், அந்தணர்களில் காளையான துரோணரைத் துளைத்தனர் [1].
சௌவீரர்கள், கிதவர்கள், கிழக்கத்தியர்கள் {கீழ்நாட்டு வீரர்கள்}, மேற்கத்தியர்கள் {மேனாட்டு வீரர்கள்}, வடக்கத்தியர்கள் {வடநாட்டு வீரர்கள்}, மாளவர்கள், அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள் ஆகியோர் கூர்மையான கணைகளைக் கொண்டு பீஷ்மரால் இடையறாமல் கொல்லப்பட்டாலும், போரில் அவரை {பீஷ்மரைத்} தவிர்க்கவில்லை {விட்டு விலகவில்லை}. அதே போல, பல்வேறு ஆயுதங்களைத் தரித்துப் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த மன்னர்கள் பாண்டவர்களை (போரில் அவர்களைத் தவிர்க்க முயலாமல்) அணுகினார்கள்.
மேலும் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் புறங்களிலும் பாட்டனைச் {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தத் தேர்களின் பெரும் கூட்டத்தால் வெல்லப்படாத பீஷ்மர், அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்தாலும், காட்டின் மத்தியில் பிடித்த நெருப்பைப் போலச் சுடர்விட்டபடி தன் எதிரிகளை எரித்தார்.
பீஷ்மரின் தேரே அவரது நெருப்புக் கூடமாகவும்; அவரது வில் (அந்த நெருப்பின்) தழல்களாகவும்; வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள் {அந்நெருப்பின்} எரிபொருளாகவும் {விறகாகவும்}; அவரது கணைகள் (அந்நெருப்பின்) பொறிகளாகவும்; அவரே {பீஷ்மரே} க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரிக்கும் அந்த நெருப்பாகவும் இருந்தார். உண்மையில் அவர் {பீஷ்மர்}, பெரும் சக்தியும், கழுகின் இறகுகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட கணைகளாலும், கர்ணிகளாலும் {முள் பதித்த கணைகளாலும் barbed arrows}, நாளீகங்களாலும், நாராசங்களாலும் {நீண்ட கணைகளாலும்} பகைக்கூட்டத்தை மறைத்தார். அவர் {பீஷ்மர்}, தன் கூரிய கணைகளால் யானைகளையும், தேர்வீரர்களையும் வீழ்த்தினார். மேலும் அவர் {பீஷ்மர்} அந்தப் பெரிய தேர்ப்படையை, இலைகளாலான தலைகள் மழிக்கப்பட்ட பனங்காடு ஒன்றை {மொட்டைப்பனை மரங்கள் நிறைந்த காட்டை} ஒத்திருக்கச் செய்தார்.
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான அவர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவை தங்கள் ஓட்டுனர்களை இழக்கும்படி செய்தார். இடி முழக்கம் போன்ற பேரொலியுடன் இருந்த அவரது வில்லின் நாணொலியையும், அவரது உள்ளங்கை {தட்டல்} ஒலிகளையும் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் நடுங்கின.
உமது தந்தையின் {பீஷ்மரின்} கணைகளே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, எதிரியிடம் பேசின. உண்மையில், பீஷ்மரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் கவசங்களை மட்டும் தாக்கவில்லை (ஆனால் அவற்றைத் துளைத்துச் சென்றன) [2]. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துணிச்சல் மிக்கத் தங்கள் ஓட்டுனர்களை இழந்த பல தேர்கள் அவற்றில் பூட்டப்பட்ட வேகமான குதிரைகளால் களமெங்கும் இழுத்துச்செல்லப்படுவதை நாங்கள் கண்டோம்.
சேதிகள் {சைத்யர்கள்}, காசிகள், கரூசர்கள் ஆகியோரைச் சேர்ந்தவர்களும், பெரும் புகழையும், உன்னதப் பிறப்பையும் கொண்டவர்களும், போரில் தங்கள் உயிரை இழக்கத் துணிந்தவர்களும், களத்தில் இருந்து பின்வாங்காதவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிறந்த கொடிமரங்களை உடையவர்களுமான பதினாலாயிரம் {14000} தேர்வீரர்கள், வாயை அகல விரித்திருக்கும் அந்தகனை ஒத்த பீஷ்மரைப் போரில் சந்தித்து, அவர்கள் அனைவரும் தங்கள் தேர்களோடும், குதிரைகளோடும், யானைகளோடும் அடுத்த உலகத்திற்குச் சென்றனர். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சுகள் மற்றும் அடிமரங்கள் நொறுங்கிய சிலவும், சக்கரங்கள் நொறுங்கிய சிலவும் என நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தேர்களை நாங்கள் கண்டோம்.
வரூதங்களோடு {மரக்கூடுகளோடு} [3] உடைத்துத் தள்ளப்பட்ட தேர்கள், கீழே வீழ்த்தப்பட்டு நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் தேர்வீரர்கள், கணைகள், உடைக்கப்பட்ட அழகிய கவசங்கள், கோடரிகள் {பட்டசங்கள்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கதாயுதங்கள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, கூர்மையுள்ள கணைகள், தேர்களின் அடிமரங்கள், அம்பறாத்தூணிகள், உடைக்கப்பட்ட சக்கரங்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, எண்ணிலடங்கா விற்கள், வாள்கள், காது குண்டலங்கள் அணிந்த தலைகள், தோலாலான கையுறைகள், விரலுறைகள், கீழே வீழ்த்தப்பட்ட கொடிமரங்கள், பலவாறாக அறுக்கப்பட்ட விற்கள் ஆகியவற்றால் பூமி விரவி கிடந்தது.
பாகன்களை இழந்த யானைகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொல்லப்பட்ட (பாண்டவப் படையின்) குதிரைவீரர்களும் கீழே இறந்து கிடந்தனர். அந்த வீரப் பாண்டவர்கள் {பாண்டவ வீரர்கள்} முயற்சித்தாலும், பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்டு, போர்க்களத்தைவிட்டு ஓடும் தேர்வீரர்களைத் தடுக்க அவர்கள் சக்தியற்றவர்களாக இருந்தனர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கு இணையான சக்தியைக் கொண்ட பீஷ்மரால் அந்த வலிமைமிக்கப் படை கொல்லப்பட்ட போது, இருவராக எவரும் ஓடாதவாறு முற்றாகச் சிதறி ஓடியது.
வீழ்த்தப்பட்ட தேர்கள், யானைகள், குதிரைகள், அதிகமாகக் கீழே கிடந்த கொடிமரங்கள் ஆகியவற்றைக் கொண்ட பாண்டு மகன்களின் அந்தப் படை, உணர்வுகளை இழந்து துன்பப் பேரொலிகளை எழுப்பின. அந்நேரத்தில் விதியால் உந்தப்பட்டுத் தந்தை மகனைக் கொன்றான், மகனும் தந்தையைக் கொன்றான், நண்பன் தன் அன்புக்குரிய நண்பனை அடித்தான். பாண்டவப் படையின் போராளிகள் பலர், தங்கள் கவசங்களை எறிந்துவிட்டு, கலைந்த கேசங்களுடன் திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடுவது காணப்பட்டது. உண்மையில், அந்தப் பாண்டவத் துருப்புகள், ஏர்க்கால்களின் கட்டுப்பாட்டில் நீடிக்காமல் அச்சத்தால் காட்டுத்தனமாக {கட்டுப்பாடு இல்லாமல்} ஓடும் காளைகளைப் போலத் தெரிந்தன. உண்மையில் நாங்கள் கேட்ட துன்பக் குரல் பேரொலியாக இருந்தது.
பிறகு, அந்த யாதவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {கிருஷ்ணன்}, பாண்டவப்படை சிதறி ஓடுவதைக் கண்டு, (தான் வழிநடத்திய) சிறந்த தேரின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, பிருதையின் மகனான பீபத்சுவிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ எதிர்பார்த்த நேரம் இதோ வந்து விட்டது. இப்போதே தாக்குவாயாக, ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, அல்லது நீ உனது உணர்வுகளை இழந்துவிடுவாய். முன்னர், ஓ! வீரா {அர்ஜுனா}, விராடரின் நகரத்தில் நடந்த மன்னர்களின் கூட்டத்தில், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சஞ்சயனின் முன்னிலையில் இவ்வார்த்தைகளை நீ சொன்னாய்: “யுத்தத்தில் என்னோடு போரிடப் போகும் பீஷ்மர், துரோணர் ஆகியோரையும், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} வீர்கள் அனைவரையும், அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரையும் சேர்த்து நான் கொல்வேன்” {என்று சொன்னாய்}. ஓ! குந்தியின் மகனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, அந்த உனது வார்த்தைகளை உண்மையாக்குவாயாக. க்ஷத்திரியன் ஒருவனின் கடமையை நினைவு கூர்ந்து எந்தக் கவலையும் இல்லாமல் போரிடுவாயாக” என்றான் {கிருஷ்ணன்}.
வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனன் தன் தலையைக் கீழே தொங்கப் போட்டு, அவனைச் சாய்வாகப் பார்த்தான். பிறகு, விருப்பமில்லாமல் பதிலுரைத்த அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, “கொல்லத்தகாதவர்களைக் கொன்று நரகத்தையே இறுதியாகக் கொண்ட அரசாட்சியை அடைவது, அல்லது நாடுகடத்தப்பட்டவன் காட்டில் படும் துன்பங்களை அடைவது (இவை மட்டுமே மாற்று {இவை இரண்டில் ஒன்றையே தேர்ந்தெடுக்க முடியும்}). இவற்றில் நான் எதை அடைய வேண்டும்? குதிரைகளைத் தூண்டுவாயாக, ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, உன் கட்டளையை நான் செய்வேன் {நிறைவேற்றுவேன்}. வெல்லப்பட முடியாத வீரரான குரு பாட்டன் பீஷ்மரை நான் வீழ்த்துவேன்” என்றான் {அர்ஜுனன்}.
இப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்ட மாதவன் {கிருஷ்ணன்}, சூரியன் போலப் பார்க்கப்பட முடியாதவராகப் பிரகாசித்துக் கொண்டிருந்த பீஷ்மர் இருந்த இடத்திற்கு அந்த வெள்ளிநிறக் குதிரைகளைத் தூண்டினான். பிறகு, பின்வாங்கிச் சென்ற யுதிஷ்டிரனின் அந்தப் பெரும்படை, பீஷ்மருடன் மோதச் செல்லும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பார்த்தனை {அர்ஜுனனைக்} கண்டு, மீண்டும் போரிட வந்தது. அப்போது, குருக்களில் முதன்மையான பீஷ்மர் ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினார். பிறகு அவர் {பீஷ்மர்}, கணைமாரியால் தனஞ்சயனின் தேரை விரைவாக மறைத்தார். ஒரு கணத்திற்குள் அவனுடைய {அர்ஜுனனுடைய} தேர், குதிரைகள், தேரோட்டி {கிருஷ்ணன்} ஆகியோர் அந்தக் கணை மாரியின் விளைவால் முழுமையாகப் பார்க்கப்பட முடியாதனவாக ஆகினர் {மறைக்கப்பட்டனர்}.
எனினும் அச்சமற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்}, பொறுமையைத் திரட்டிக் கொண்டு பீஷ்மரின் கணைகளால் சிதைக்கப்பட்ட குதிரைகளைப் பெரும் சுறுசுறுப்புடன் தூண்டினான். அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற நாணொலி கொண்ட தன் தெய்வீக வில்லை {காண்டீவத்தை} எடுத்து, தன் கணைகளால் பீஷ்மரின் வில்லை (துண்டுகளாக) வெட்டி, அவரது கைகளில் இருந்து அதை {வில்லை} விழச் செய்தான்.
பிறகு, இப்படி வில் வெட்டப்பட்ட உமது தந்தையான அந்தக் குரு வீரர் {பீஷ்மர்}, கண் இமைப்பதற்குள் மற்றொரு பெரிய வில்லில் நாணேற்றினார். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அவரது {பீஷ்மரின்} அந்த வில்லையும் துண்டித்தான்.
சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அர்ஜுனன் வெளிப்படுத்திய கரநளினத்தை {கர லாகவத்தை} மெச்சி, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, நன்று செய்தாய், நன்று, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நன்று” என்றார். இப்படி அவனிடம் சொன்ன பீஷ்மர், அந்தப் போரில் மற்றொரு அழகிய வில்லை எடுத்து, பார்த்தனின் {அர்ஜுனனின்} தேரின் மேல் பல கணைகளை ஏவினார். வாசுதேவன் {கிருஷ்ணன்}, (பீஷ்மரின்) அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடிக்கும் வகையில் சுழன்று நகர்ந்து, குதிரைகளைக் கையாள்வதில் {தன்} பெரும் திறமையை வெளிப்படுத்தினான். பீஷ்மரின் கணைகளால் சிதைக்கப்பட்ட அந்த மனிதர்களில் புலிகளான இருவரும், கொம்புகளில் சிராய்ப்புகளைக் கொண்ட கோபக்காரக் காளைகள் இரண்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.
பகைவீரர்களைக் கொல்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்த மதுகுலத்து வாசுதேவன் {கிருஷ்ணன்}, மென்மையாகப் போரிடும் பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, போரில் இடையறாமல் தன் கணைமாரியைப் பொழியும் பீஷ்மரையும், இரண்டு படைகளுக்கும் நடுவில் இருந்து கொண்டு, சூரியனைப் போல அனைத்தையும் பின்னவர் {பீஷ்மர்} எரிப்பதையும், யுதிஷ்டிரனின் போராளிகளுள் முதன்மையானவர்களை அடித்து வீழ்த்துவதையும், உண்மையில், யுக முடிவில் என்ன நடக்குமோ, அதை யுதிஷ்டிரனின் படையில் {பீஷ்மர்} சாதிப்பதையும் கண்டு, அதை {கிருஷ்ணனால்} மேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த யோக சக்திகளின் பெருந்தலைவன் {கிருஷ்ணன்}, வெள்ளியைப் போலத் தெரிந்த பார்த்தனின் {அர்ஜுனனின்} குதிரைகளை விட்டுவிட்டு, கோபத்தால் நிறைந்து, அந்தப் பெரும் தேரில் இருந்து கீழே குதித்தான். அடிக்கடி சிங்கம் போல முழங்குபவனும், அளவிலா காந்தி கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த வலிமைமிக்கக் கிருஷ்ணன், சினத்தால் தாமிரம் போலச் சிவந்த கண்களுடன், தன் வெறுங்கைகளையே தன் ஆயுதமாகக் கொண்டு, தன் நடையால் அண்டத்தையே பிளந்துவிடுபவனைப் போல, பீஷ்மரைக் கொல்ல விரும்பி, கையில் சாட்டையுடன் அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான்.
மாதவன் {கிருஷ்ணன்} பீஷ்மரின் அருகே இருப்பதையும், அந்தச் சீற்றமிகு போரில் அவர் {பீஷ்மர்} மீது {கிருஷ்ணன்} பாய இருப்பதையும் கண்டு போராளிகள் அனைவரின் இதயங்களும் {மனங்களும்} மயக்கத்தில் இருப்பதாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவன் மீது கொண்ட அச்சத்தால் விளைந்த, “பீஷ்மர் கொல்லப்பட்டார், பீஷ்மர் கொல்லப்பட்டார்” என்ற இந்த உரத்த கூக்குரல்களே, அங்கே கேட்கப்பட்டன. மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனும், இந்திரநீலக்கல்லைப் போலக் கறுத்த உடலைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பீஷ்மரைத் தொடர்ந்த போது {எதிர்த்த போது}, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகங்களின் திரளைப் போல அழகாகத் தெரிந்தான். அந்த மது குலத்தின் காளை {கிருஷ்ணன்}, சிங்கம் ஒன்று யானையை நோக்கிச் செல்வதைப் போலவோ, மாட்டுமந்தையின் தலைவன் {காளை} ஒன்று, தன் வகையான மற்றொன்றை {காளையை} நோக்கிச் செல்வதைப் போலவோ, முழக்கப்பேரொலியுடன் பீஷ்மரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.
பீஷ்மர், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {புண்டரீகாக்ஷன், கிருஷ்ணன்} (இப்படித்) தன்னை நோக்கி வருவதைக் கண்டு, அச்சமற்ற வகையில் தன் பெரிய வில்லை வளைக்கத் தொடங்கினார். அச்சமற்ற இதயத்துடன் கூடிய அவர் {பீஷ்மர்}, கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்}, “வா, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷா}, வா. ஓ! தேவர்களின் தேவா, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! சாத்வதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, இந்தப் போரில் இன்று என்னைக் கீழே வீசி எறிவாயாக. ஓ! தேவா {கிருஷ்ணா}, போரில் உன்னால் கொல்லப்படுவது, ஓ! பாவமற்றவனே, ஓ! கிருஷ்ணா, உலகில் அனைத்துவகையிலும் எனக்குப் பெரும் நன்மையைச் செய்யும். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, மூவுலகங்களில் உள்ள அனைவரிலும், போரில் இன்று எனக்குச் செய்யப்படும் மதிப்பு {கௌரவம்} பெரியதாகும். ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, நீ விரும்பியவாறு என்னைத் தாக்கலாம், ஏனெனில் நான் உன் அடிமையாவேன்” என்றார் {பீஷ்மர்}.
அதேவேளையில், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பின்னாலிருந்து கேசவனை {கிருஷ்ணனை} விரைவாகத் தொடர்ந்து வந்து, தன் இரு கைகளாலும் அவனைச் {கிருஷ்ணனை} சுற்றிவளைத்துப் பிடித்தான். ஆண்மக்களில் சிறந்தவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான கிருஷ்ணன், பார்த்தனால் {அர்ஜுனனால்} {இப்படிப்} பிடிக்கப்பட்டிருந்தாலும், பின்னவனையும் {அர்ஜுனனையும்} சேர்த்து இழத்துக் கொண்டு பெரும் வேகத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தான். எனினும், பகைவீரர்களைக் கொல்பவனான வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, ரிஷிகேசனின் {கிருஷ்ணனின்} கால்களைப் பலமாகப் பற்றிக் கொண்டு, பத்தாவது எட்டில் {பத்தாவது அடியில்} பெரும் சிரமத்துடன் அவனைத் {கிருஷ்ணனை} நிறுத்தினான்.
பிறகு, கேசவனின் {கிருஷ்ணனின்} அன்பு நண்பனான அர்ஜுனன், கவலையில் நிறைந்து அவனிடம் {கிருஷ்ணனிடம்} பாசத்துடன், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, நிற்பாயாக, ஓ! கேசவா {கிருஷ்ணா}, “நான் போரிடேன்” என்று முன்பு நீ சொன்ன வார்த்தைகளைப் பொய்யாக்குவது உனக்குத் தகாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, நீ ஒரு பொய்யன் என்று மக்கள் சொல்வார்கள். இந்தச் சுமைகள் {பொறுப்புகள்} அனைத்தும் என் மீதே இருக்கின்றன. பாட்டனை {பீஷ்மரை} நான் கொல்வேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் பகைவர்களின் அழிவை அடைவதற்கான அனைத்தையும் நான் செய்வேன் என, ஓ! பகைவர்களைக் கொல்பவனே {கிருஷ்ணா}, என் ஆயுதங்கள் மீதும், உண்மை {சத்தியம்} மீதும், என் நற்செயல்களின் மீதும் நான் உறுதி கூறுகிறேன் {ஆணையேற்கிறேன்}. வெல்லப்பட முடியாதவரான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, யுக முடிவில் (அண்ட அழிவு ஏற்படும்போது) உள்ள பிறை சந்திரனைப் போல, மிக எளிமையாகக் கீழே வீசி எறிப்படுவதை இந்நாளே பார்ப்பாயாக” என்று சொன்னான் {அர்ஜுனன்}. எனினும், மாதவன் {கிருஷ்ணன்}, உயர் ஆன்ம பல்குனனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டாலும், ஒரு வார்த்தையும் பேசாமல், ஆனால் கோபத்துடன் மீண்டும் தேரின் மேல் ஏறினான் [4].
பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், தங்கள் தேரில் நின்றுகொண்டிருந்த அந்த மனிதர்களில் புலிகளான இருவர் மீதும், மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலத் தன் கணைமாரிகளை மீண்டும் பொழிந்தார். உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, கோடை காலத்தில் அனைத்துப் பொருட்களின் சக்திகளையும் தன் கதிர்களால் உறிஞ்சும் சூரியனைப் போல (பகை) வீரர்களின் உயிர்களை எடுத்தார். பாண்டவர்கள், போரில் குருக்களின் படையணிகளை உடைத்ததைப் போலவே, உமது தந்தையும் {பீஷ்மரும்} போரில் பாண்டவப் படையணிகளை உடைத்தார்.
மேலும் முறியடிக்கப்பட்டவர்களான அந்தப் படைவீரர்கள், ஆதரவற்றவர்களாகக் கொடூரமாகப் பீஷ்மரால் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்படும்போது, தன்னொளியில் சுடர்மிகும் நடுப்பகல் சூரியனைப் போல இருந்த அவரை {பீஷ்மரை} அந்தப் போரில் பார்க்கும் சக்தி கூட அற்றவர்களாக இருந்தனர். உண்மையில், அச்சத்தால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள் {பாண்டவப் படைவீரர்கள்}, அந்தப் போரில் மனித சக்திக்கு மேம்பட்ட சாதனைகளை அப்போது அடைந்து வந்த பீஷ்மரை மருட்சியுடன் கண்டனர். இப்படித் தப்பியோடும் பாண்டவத் துருப்பினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பலமான ஒரு நபரால் கீழே மிதித்துத் தள்ளப்பட்டு, எறும்புக் கூட்டத்தில் மூழ்கிய ஒரு பசுமந்தையைப் போல ஒரு பாதுகாவலனை அடையத் தவறினர் [5].
உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அபரிமிதமான கணைகளைக் கொண்டவரும், (பாண்டவப் படையின்) மன்னர்களை எரித்துக் கொண்டிருந்தவரும், அந்தக் கணைகளின் விளைவாக நெருப்புக் கதிர்களை உதிர்க்கும் சுடர்மிக்கச் சூரியனைப் போலத் தெரிந்தவரும், அசைக்கப்பட முடியாதவருமான அந்த வலிமைமிக்க வீரரைப் பாண்டவர்களால் {பாண்டவப் படையினரால்} பார்க்க இயலவில்லை. அவர் {பீஷ்மர்} இப்படிப் பாண்டவப் படையைக் கலங்கடித்துக் கொண்டிருந்த போது, பகலை உண்டாக்குபவனான ஆயிரங்கதிரோன் {சூரியன்} {தான்} மறையும் மலைகளுக்குச் சென்றான், களைத்துப் போயிருந்த துருப்புகளும் (களத்திலிருந்து) பின்வாங்குவதில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.
ஒன்பதாம் நாள் போர் முற்றும்
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply