ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-

போர் உடன்படிக்கைகள்! – பீஷ்ம பர்வம் பகுதி -001-கௌரவர்களும், பாண்டவர்களும் குருக்ஷேத்திரத்தில் கூடியது; தங்களுக்கு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரத  என்ற இதிகாசம்}  சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “குருக்கள் {கௌரவர்கள்}, பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கூடியிருந்த உயர் ஆன்ம மன்னர்கள் ஆகிய அந்த வீரர்கள் எப்படிப் போரிட்டனர்?” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, சொன்னார் “ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, குருக்கள், பாண்டவர்கள், சோமகர்கள் ஆகிய அந்த வீரர்கள், புனிதவெளியான [1] குருக்ஷேத்திரத்தில் எப்படிப் போரிட்டார்கள் என்பதைக் கேட்பாயாக. சோமகர்களுடன் குருக்ஷேத்திரத்திற்குள் நுழைந்த பெரும் பலம் படைத்த பாண்டவர்கள், கௌரவர்களுக்கு எதிரான வெற்றியை விரும்பி முன்னேறினர். வேதங்களின் கல்வியில் சாதித்த (அவர்கள் {பாண்டவர்கள்}) அனைவரும் போரில் பெருமகிழ்ச்சியை அடைந்தனர். போரில் வெற்றியை எதிர்பார்த்து, தங்கள் துருப்புகளுடன் (அவர்கள் {பாண்டவர்கள்}) அந்தப் போரை எதிர் கொண்டனர். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படையை அணுகியவர்களும் போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அந்த வீரர்கள், தங்கள் முகங்களைக் கிழக்கு நோக்கி வைத்துக் கொண்டு, (அந்த வெளியில் {களத்தின்}) மேற்குப் பகுதியில் தங்கள் துருப்புகளை நிறுத்தினர். குந்தியின் மகனான யுதிஷ்டிரன் சமந்தபஞ்சகம் {குருஷேத்திரம்} என்று அழைக்கப்பட்ட பகுதிக்கும் அப்பால், ஆயிரக்கணக்கான கூடாரங்களை விதிப்படி அமைத்தான்.

(வீட்டில்) குழந்தைகள் மற்றும் முதியவர்களை மட்டுமே விட்டுவிட்டு, குதிரைகள் மற்றும் மனிதர்களும் இன்றி, தேர்கள் மற்றும் யானைகளும் இன்றி இருந்த முழுப் பூமியும் வெறுமையாகத் தெரிந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, சூரியன் தனது கதிர்களை வடிக்கும் [2] ஜம்பூத்வீபப் பகுதி முழுவதிலும் இருந்து படைகள் சேகரிக்கப்பட்டிருந்தன. மாவட்டங்கள், ஆறுகள், மலைகள், வனங்கள் ஆகியவற்றில் பல யோஜனைகளுக்குப் பரந்த பகுதியில் அனைத்து இனங்களைச் [3] சார்ந்த மனிதர்களும் கூடினர். மனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், தங்கள் விலங்குகளோடு சேர்ந்த அவர்கள் அனைவருக்கும் அற்புத உணவையும், பிற இன்பநுகர் பொருட்களையும் வழங்கினான். மேலும் யுதிஷ்டிரன், அவர்களுக்குப் பல்வேறு நோட்ட மொழிகளை {அடையாளச் சொற்களை} நிர்ணயித்தான். அவற்றைச் சொல்லும் ஒருவன், பாண்டவர்களைச் சேர்ந்தவன் என்பதை அறிவதற்காக இதைச் செய்தான். அந்தக் குரு குலத்தின் வழித்தோன்றல் {யுதிஷ்டிரன்}, போர் நடைபெறும் நேரத்தில் அவர்களை அறிந்து கொள்வதற்காக அவர்கள் அனைவருக்கும் பதக்கங்களையும், பெயர்களையும் தீர்மானித்தான்.

பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனின்} கொடிநுனியைக் கண்டவனும், தனது தலைக்கு மேலே வெண்குடையைக் கொண்டவனும், ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் இருப்பவனும், தனது நூறு தம்பிகளால் சூழப்பட்டவனுமான உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, (தனது தரப்பில் உள்ள) மன்னர்கள் அனைவருடனும் சேர்ந்து பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எதிராகத் தனது துருப்புகளை அணிவகுத்தான். போரில் மகிழ்ச்சி கொள்ளும் பாஞ்சாலர்கள் துரியோதனனைக் கண்டதும், மகிழ்ச்சியால் நிறைந்து, உரத்த ஒலியைத் தரும் தங்கள் சங்குகளை ஊதினர், இனிய ஒலி தரும் பேரிகைகளையும் முழங்கினர்.

அந்தத் துருப்புகள் இப்படி மகிழ்ச்சியடைவதைக் கண்ட பாண்டுவின் மகனும் {யுதிஷ்டிரனும்}, பெரும் சக்தி கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் இதயத்தில் மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஒரே தேரில் அமர்ந்திருந்தவர்களும், மனிதர்களில் புலிகளுமான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்து, தங்கள் தெய்வீகச் சங்குகளை முழங்கினர். அந்த இருவருக்கும் சொந்தமான பெரியதின் {Gigantea} {சங்கான பாஞ்சஜன்யத்தின்} முழக்கத்தையும், பெருக்கத்தின் {Theodotes} {சங்கான தேவதத்தத்தின்} உரத்த வெடிப்பையும் கேட்ட எதிராளிகள் மலம் மற்றும் சிறுநீரைக் {மலஜலத்தைக்} கழித்தனர். கர்ஜிக்கும் சிங்கத்தின் குரலைக் கேட்டு அச்சத்தால் நிறையும் பிற விலங்குகளைப் போல, அந்த உரத்த வெடிப்புகளைக் கேட்ட படையும் அப்படியே அச்சத்தால் நிறைந்தன. அச்சம்நிறைந்த புழுதியெழுந்ததால் ஏதும் காணப்படவில்லை, ஏனெனில் திடீரெனச் சூரியனும் அவற்றால் மூடப்பட்டதால், அது {சூரியன்} மறைந்ததைப் {அஸ்தமித்ததைப்} போலத் தெரிந்தது. கருநிற மேகம் ஒன்று சுற்றிலும் இருந்த அந்தத் துருப்புகளின் மேல் இறைச்சியையும் இரத்தத்தையும் பொழிந்தது. இவையாவும் இயல்புக்கு மிக்கதாகத் தெரிந்தது.

மண்ணோடு சேர்ந்த பருக்கைக் கற்களைச் சுமந்து, அங்கே எழுந்த காற்றானது நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் போராளிகளை துன்புறுத்தியது. (இவை அனைத்தையும் விட) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா} மகிழ்ச்சி நிறைந்து போரைச் சந்திக்க நின்ற அந்தப் படைகள் இரண்டும், கலங்கிய கடல்கள் இரண்டைப் போலக் குருக்ஷேத்திரக் களத்தில் நின்றன. உண்மையில், அந்த இருபடைகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது, யுகத்தின் முடிவின் போது ஏற்படும் இரண்டு கடல்களின் மோதலைப் போல இருந்தது. கௌரவர்களால் மொய்க்கப்பட்ட அந்தப் பெரும் படையின் விளைவாக (வீட்டில்) சிறுவரும் முதியவரும் மட்டுமே இருந்ததால் முழுப் பூமியும் வெறுமையாக இருந்தது.

பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {ஜனமேஜயா}, குருக்களும், பாண்டவர்கள் மற்றும் சோமகர்களும் சில உடன்படிக்கைகளையும், பல்வேறு விதமான மோதல்கள் சம்பந்தமாக விதிகளையும் தங்களுக்குள் நிர்ணயித்துக் கொண்டனர்.

  1. சமமான சூழல் கொண்டவர்கள் {சமமானவர்களே} தங்களுக்குள் மோதிக் கொண்டு நன்கு போரிட வேண்டும்.  
  2. நன்கு போராடிய பிறகு, (துன்பத்தைக் கண்டு அஞ்சாமல்) போராளிகள் விலகினாலும், அதுவும் நமக்கு நிறைவையே தர வேண்டும். {போரிட்டு முடிந்த பிறகு, நமக்குள் அன்பு உண்டாக வேண்டும்}. 
  3. சொற்போட்டிகளில் ஈடுபடுபவர்களுடன் சொற்களாலேயே போரிட வேண்டும். [4]  
  4. படையணியை விட்டு விலகியவர்கள் கொல்லப்படக் கூடாது. 
  5. ஒரு தேர்வீரன் மற்றொரு தேர்வீரனையே எதிராளியாகக் கொள்ள வேண்டும்; யானையின் கழுத்தில் இருப்பவன், அதே போன்ற போராளியையே தனது எதிரியாகக் கொள்ள வேண்டும்; ஒரு குதிரை மற்றொரு குதிரையையே சந்திக்க வேண்டும்; ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஒரு காலாட்படை வீரர் மற்றொரு காலாட்படை வீரரையே சந்திக்க வேண்டும். 
  6. உடற்தகுதி, விருப்பம், துணிவு, பலம் ஆகிய கருதுகோள்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஒருவன் மற்றவனுக்கு அறிவிப்பைச் செய்துவிட்டு அடிக்க வேண்டும். எவனும், தயாராக இல்லாதவனையோ [5], பீதியால் தாக்குண்டவனையோ அடிக்கக் கூடாது.
  7. வேறொருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் ஒருவன், இடத்தைத் தேடிக் கொண்டிருக்கும் ஒருவன், பின்வாங்கும் ஒருவன், ஆயுதம் தகுதியற்றுவிட்டதாகக் காண்பிக்கும் ஒருவன், கவசம் தரிக்காதவன் ஆகியோர் எப்போதும் அடிக்கப்படக்கூடாது. 
  8. தேரோட்டிகள், (தேரில் பூட்டப்பட்ட அல்லது ஆயுதங்களைச் சுமந்து வரும்) விலங்குகள், ஆயுதங்களைச் சுமந்து வருவதில் ஈடுபடும் மனிதர்கள், பேரிகைகள் அடிப்பவர்கள் மற்றும் சங்கை முழக்குபவர்கள் ஆகியோர் ஒருபோதும் அடிக்கப்படக்கூடாது. 

{மேற்கண்ட} இந்த உடன்படிக்கைகளைச் செய்து கொண்ட குருக்கள், பாண்டவர்கள் மற்றும் சோமகர்கள், மிகுந்த ஆச்சரியத்துடன் ஒருவருக்கொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர். (இப்படித் தங்கள் படைகளுடன்) நிலை நின்ற அந்த மனிதர்களில் காளைகள், அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள், தங்கள் படைகளுடன் சேர்ந்து, இதயத்தில் மகிழ்ந்தனர்; அந்த மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் பிரதிபலித்தது” என்றார் {வைசம்பாயனர்}.

தெய்வீகப்பார்வையைப் பெற்ற சஞ்சயன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 002-திருதராஷ்டிரனிடம் தனிமையில் பேசிய வியாசர்; போரைக் காண திருதராஷ்டிரனுக்குப் பார்வையளிப்பதாகச் சொன்ன வியாசர்; பார்வையை மறுத்த திருதராஷ்டிரன்; வியாசர் சஞ்சயனுக்கு ஞானப்பார்வையை அருள்வது; வியாசர் தான் காணும் தீய சகுனங்களைக் குறித்துச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வர இருக்கும் கடும்போருக்காகக் கிழக்கிலும், மேற்கிலும் (நின்று கொண்டு) இருந்த அந்தப் படைகளிரண்டைக் கண்டவரும், நடந்தது, நடப்பது, நடக்கப்போவது ஆகியவற்றை {கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலங்களை} அறிந்தவரும், பாரதர்களின் பாட்டனும், வேதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், சத்தியவதியின் மகனும், புனிதமுனியுமான வியாசர், தன் கண்களுக்கு முன்பு நடப்பதைக் காண்பது போலவே அனைத்தையும் கண்டு, தனிமையில் சென்று, தனது மகன்களின் தீய கொள்கைகளை நினைத்து மன உளைச்சல் அடைந்தவனும், துன்பத்துக்கு ஆளானவனுமான விசித்திரவீரியனின் அரச மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்.

வியாசர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது மகன்களும், பிற ஏகாதிபதிகளும் தங்கள் நேரத்தை அடைந்திருக்கிறார்கள் [1]. போருக்காக அணிதிரண்டிருக்கும் அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்லப் போகிறார்கள். ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, அவர்களது நேரம் வந்துவிட்டதால், அவர்கள் அனைவரும் அழிந்தே போவார்கள். காலத்தால் கொண்டுவரப்படும் மாற்றங்களை மனதில் தாங்கும் நீ, துக்கத்தில் உனது இதயத்தைச் செலுத்தாதே. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, போரில் (போரிடும்) அவர்களை நீ காண விரும்பினால், ஓ! மகனே {திருதராஷ்டிரா}, நான் உனக்குப் பார்வையை அருள்வேன் {கொடுப்பேன்}. போரைக் காண்பாயாக!” என்றார்.

திருதராஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! மறுபிறப்பாள முனிவர்களில் சிறந்தவரே {வியாசரே}, எனது சொந்தங்களின் படுகொலையைக் காண நான் விரும்பவில்லை. எனினும், நான், உமது ஆற்றலின் மூலம், இந்தப் போரை நுணுக்கமாகக் கேட்க வேண்டும்” என்று சொன்னான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவன் {திருதராஷ்டிரன்} போரைக் காண விரும்பாமல், கேட்க விரும்பியதால், வரங்களின் தலைவனான வியாசர், சஞ்சயனுக்கு ஒரு வரத்தை அளித்தார். (அவர் திருதராஷ்டிரனிடம்), “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, இந்தச் சஞ்சயன் போரை உனக்கு விவரிப்பான். இந்தப் போர் முழுவதிலும் இவனது கண்களைத் தாண்டி எதுவும் இருக்காது. {இந்தப் போரில் நடைபெறும் எதுவும் இவனது கண்களுக்குத் தப்பாது}. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, தெய்வீகப் பார்வையை அடைந்த சஞ்சயன், போரை உனக்கு விவரிப்பான். அவன் {சஞ்சயன்} அனைத்தையும் அறிவான். வெளிப்படையாகவோ, மறைவாகவோ, பகலிலோ, இரவிலோ நடக்கும் எதையும், ஏன் மனதால் நினைக்கப்படும் அனைத்தையும்கூட இந்தச் சஞ்சயன் அறிவான்.

ஆயுதங்கள் இவனை வெட்டாது. உழைப்பு இவனைக் களைப்படையச் செய்யாது. இந்தக் கவல்கணன் மகன் {சஞ்சயன்}, அந்தப் போரில் இருந்து உயிருடன் வெளிவருவான். என்னைப் பொறுத்தவரை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரா}, இந்தக் குருக்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் புகழையும் நான் பரப்புவேன் {மஹாபாரதம் பாடுவேன்}. வருந்தாதே. ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரா}, இது விதி. துயருக்கு வழிகொடுப்பது உனக்குத் தகாது. இது தவிர்க்க இயலாததாகும். வெற்றியைப் பொறுத்தவரை, நீதி எங்கிருக்கிறதோ, அங்கேயே அஃது இருக்கும். {அறமிருக்குமிடம் வெற்றியுண்டாகும்}”, என்றார் {வியாசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர்ந்த அருளைக் கொண்டவரும், குருக்களின் புனிதப்பாட்டனுமான அவர் {வியாசர்}, இதைச் சொன்ன பிறகு, மேலும் ஒரு முறை திருதராஷ்டிரனிடம், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, இந்தப் போரில் நடக்கும் படுகொலை பெரிதாக இருக்கும். பயங்கரத்தின் அறிகுறியாக (எண்ணற்ற) {தீய} சகுனங்களை நான் இங்கே காண்கிறேன்.

பருந்துகள் {சியேனங்கள்}, கழுகுகள் {கிருத்திரங்கள்}, காகங்கள், நாரைகள் {கங்கங்கள்} [2] ஆகியவை கொக்குகளுடன் சேர்ந்து மரங்களின் மேல் இறங்கி {கொடிக்கம்ப நுனிகளில் விழுந்து}, கூட்டங்கூட்டமாகச் சேருகின்றன. போருக்கான சாத்தியக்கூறுகளினால் மகிழ்ந்திருக்கும் அவை, தங்கள் முன்னிலையில் இருப்பதைக் (களத்தைக்) {எதிர்பார்ப்புடன்} கீழே பார்க்கின்றன. ஊனுண்ணும் விலங்குகள், யானைகள் மற்றும் குதிரைகளின் இறைச்சியை உண்ணப் போகின்றன. உக்கிரமான நாரைகள் {Herons}, பயங்கரத்தை முன்னறிவிக்கும்படி, இரக்கமற்ற வகையில் கதறி, மையப் பகுதியில் சுற்றியபடி தென்பகுதியை நோக்கிச் செல்கின்றன [3]. சந்திப் பொழுதுகள் இரண்டுக்கும் முன்னரும், பின்னரும், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, சூரியன், உதிக்கும்போதும், மறையும்போதும், தலையற்ற உடல்களால் {கபந்தங்களால்} அவன் {சூரியன்} மறைக்கப்படுகிறான். மின்னலால் சக்தியூட்டப்பட்டவையும், கதாயுதம் போன்றவையும், வெள்ளை மற்றும் சிவந்த கைகளுடனும் {ஓரங்களுடனும்}, கறுத்த கழுத்துடனும் {இடைவெளியுடனும்} மூவண்ணங்களைக் கொண்டவையுமான மேகங்கள், சந்திப்பொழுதுகள் இரண்டிலும் சூரியனைச் சூழ்ந்திருக்கின்றன.

சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தும் ஒளிவீசிக் கொண்டிப்பதை நான் கண்டேன். மாலையிலும் கூட அவற்றின் அம்சங்களில் எந்த வேறுபாடும் காணப்படவில்லை. நான் இவற்றை நாள் முழுவதும், ஏன் இரவு முழுவதும்கூடக் காண்கிறேன். இவை அனைத்தும் அச்சத்தையே முன்னறிவிக்கின்றன. கார்த்திகை (மாதத்தில்}, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் {பௌர்ணமியில்} கூட, சந்திரன் தனது பொலிவை இழந்து போய், காண முடியாதவன் ஆனான். அல்லது தாமரையின் நிறத்தைக் கொண்டிருந்த ஆகாயத்தில், அவன் {சந்திரன்} நெருப்பின் நிறத்தைக் கொண்டிருந்தான். பெரும் வீரம் கொண்டவர்களும், கதாயுதங்களைப் போன்ற கரங்களைக் கொண்டவர்களுமான பூமியின் வீரத் தலைவர்கள், மன்னர்கள், இளவரசர்கள் ஆகிய பலர், கொல்லப்பட்டு, பூமியில் கிடந்து உறங்கப் போகிறார்கள் [4]. இரவு நேரங்களில், சண்டையிட்டுக் கொள்ளும் பன்றிகள் மற்றும் பூனைகளின் உக்கிரக் கூக்குரல்களைத் தினமும் நான் வானத்தில் கேட்கிறேன்.

தேவர்கள் மற்றும் தேவியரின் உருவங்கள் {பிரதிமைகள்} சில நேரங்களில் சிரிக்கின்றன; சில நேரங்களில் நடுங்குகின்றன; சில நேரங்களில் தங்கள் வாயில் இரத்தம் கக்குகின்றன; சில நேரங்களில் வேர்க்கின்றன; சில நேரங்களில் விழுந்து விடுகின்றன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, அடிக்கப்படாமலேயே பேரிகைகள் முழங்குகின்றன, (இழுவை) விலங்குகள் பூட்டப்படாமலேயே க்ஷத்திரியர்களின் பெருந்தேர்கள் நகர்கின்றன. குயில்கள் {கோகிலங்கள்}, மரங்கொத்திகள் {சதபத்ரங்கள்}, காடைகள், நீர்க்கோழிகள் {பாஸங்கள்}, கிளிகள், காகங்கள் {சாரசப்பறவைகள்}, மயில்கள் ஆகியன பயங்கரக் கூச்சலிடுகின்றன. ஆயுதங்கள் தரித்தவர்களும், கவசம் அணிந்தவர்களுமான குதிரைப்படை வீரர்கள் இங்கேயும் அங்கேயுமாகக் கடுமையாகக் கத்துகின்றனர் [5]. சூரிய உதயத்தின் போது, நூற்றுக்கணக்கான பூச்சிகளின் {சல்பங்களின்} கூட்டங்கள் காணப்படுகின்றன.

இரு சந்திப் பொழுதுகளிலும், வானத்தின் திக்குகள் பற்றி எரிவன போலத் தெரிகின்றன. மேலும், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, மேகங்கள் புழுதியையும், இறைச்சியையும் பொழிகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவளும், நீதிமான்களால் மெச்சப்படுபவளுமான அருந்ததி {நட்சத்திரம்}, இதோ, (தனது தலைவனான) வசிஷ்டரைத் தனக்குப் பின்னால் கொண்டிருக்கிறாள் {வசிஷ்டரை முந்திச் செல்கிறாள்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, சனிக் கோளும் {கிரகமும்}, ரோகிணியைப் பீடித்தபடி தோன்றுகிறது {ரோகிணி நட்சத்திரத்தைப் பீடித்தபடி சனி தோன்றுகிறான்}. நிலவில் இருக்கும் மானின் அடையாளம் {களங்கம்}, தனது வழக்கமான நிலையை விட்டு மாறுபட்டிருக்கிறது. {இவற்றால்}, ஒரு பெரிய பயங்கரம் சுட்டிக் காட்டப்படுகிறது. வானம் மேகமற்றிருந்தாலும், அங்கே ஒரு பயங்கர முழக்கம் கேட்கிறது. விலங்குகள் அனைத்தும் அழுகின்றன, அவற்றின் கண்ணீரும் வேகமாக விழுகிறது” என்றார் {வியாசர்}.”

பதிமூன்று நாட்களைக் கொண்ட பக்ஷங்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 003அ-கண்கூடாகத் தெரியும் துர்நிமித்தங்களைக் குறித்துத் திருதராஷ்டிரனிடம் பேசிய வியாசர்; பயங்கரப் பிறவிகள்; விலங்குகள் மற்றும் பறவைகளின் இயல்புக்கு மிக்க நடத்தைகள், வானத்தில் ஏற்படும் மாற்றங்கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் சேர்கைகள், வழக்கத்திற்கு மாறான, இயல்புக்கு மிக்கப் பக்ஷங்கள் பற்றிய குறிப்பு .

வியாசர் {திருதராஷ்டிரனிடம்} சொன்னார், “பசுக்களிடம் கழுதைகள் பிறக்கின்றன. தாய்மாருடன் சிலர் பாலுறவு இன்பம் கொள்கிறார்கள். காடுகளில் உள்ள மரங்கள் மலர்களையும் கனிகளையும் பருவகாலம் தவறி {அல்லது பருவகாலத்திற்கு முன்பே} காட்டுகின்றன. விரைவில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களும் {கர்ப்பிணிகளும்}, அப்படியில்லாதவர்கள் கூடப் பயங்கரர்களை {monsters} ஈன்றெடுக்கிறார்கள். ஊனுண்ணும் விலங்குகள் {நாய்கள் போன்ற விலங்குகள்}, (ஊனுண்ணும்) பறவைகளுடன் சேர்ந்து ஒன்றாக உண்கின்றன. மூன்று கொம்புகளைக் கொண்ட சிலவும், நான்கு கண்களைக் கொண்ட சிலவும், ஐந்து கால்களைக் கொண்ட சிலவும், இரண்டு பாலுறுப்புகளை {ஆண்குறிகளைக்} கொண்ட சிலவும், இரு தலைகளுடன் சிலவும், இரு வால்களுடன் சிலவும், கோரப் பற்களைக் கொண்டவையாகச் சிலவும், எனத் தங்கள் வாய்களை அகல விரித்து மங்கலமற்ற வகையில் கதறும் மங்கலமற்ற {தீய சகுனங்களை வெளிப்படுத்தும்} விலங்குகள் பிறக்கின்றன.

முகடுகளைக் கொண்டவையும், மூன்று கால்கள், நான்கு பற்கள், கொம்புகள் ஆகியவற்றைக் கொண்டவையுமான குதிரைகளும் பிறக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது நகரத்தில் கூடப் பிரம்மத்தை உச்சரிப்பவர்களின் மனைவியர், கருடர்களையும், மயில்களையும் ஈன்றெடுக்கிறார்கள். பெண் குதிரை பசுக்கன்றை ஈன்றெடுக்கிறது. பெண் நாய், நரிகளை ஈன்றெடுக்கிறது. கோழிகளும், மான்களும், கிளிகளும், மங்கலமற்ற வகையில் கதறுகின்றன.

சில பெண்கள், நான்கு அல்லது ஐந்து மகள்களை (ஒரே நேரத்தில்) ஈன்றெடுக்கிறார்கள். இப்படிப் பிறக்கும் அவர்கள், தாங்கள் பிறந்த உடனேயே, ஆடவும், பாடவும், சிரிக்கவும் செய்கிறார்கள். இழிந்த வகைகளின் உறுப்பினர்கள் {நீசர்கள்} சிரித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறார்கள். இப்படியே அச்சந்தரும் விளைவுகளை இவை சுட்டிக்காட்டுகின்றன. மரணத்தால் {காலனால்} உந்தப்பட்டவர்களைப் போலக் குழந்தைகளும், ஆயுதம் தாங்கிய உருவங்களை வரைகிறார்கள். அவர்கள் {குழந்தைகள்}, போரிடும் விருப்பத்தால், கதாயுதங்களைத் தரித்துக் கொண்டு ஒருவருக்கு எதிராக ஒருவர் விரைந்து, (விளையாட்டாகத் தாங்கள் கட்டிய) நகரங்களை இடிக்கிறார்கள் [1]. பல வகையான தாமரைகளும், ஆம்பல்களும் மரங்களில் வளர்கின்றன. பலமான காற்றுக் கடுமையாக வீசுகிறது, புழுதியும் அடங்கவில்லை.

அடிக்கடி பூமி நடுங்குகிறது. ராகு சூரியனை அணுகுகிறான். வெண்கோள் (கேது {கிரகம்}) சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது. இவையாவும் குருக்களின் அழிவையே முன்னறிவிக்கின்றன.

வால் நட்சத்திரமொன்று {தூமகேது}, புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது. இந்தப் பெரிய கோள் இரண்டு படைகளிலும் அச்சத்தைத் தரும் தீவினைகளை ஏற்படுத்தும். செவ்வாய் மகத்தை {மக நட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான். சூரியனின் வாரிசு (சனி) பக {பூரம்} நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான். சுக்கிரன் எனும் கோள் பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியை நோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான் {ஆக்கிரமிக்கப் பார்க்கிறான்}. வெண்கோள் (கேது), இந்திரனுக்குப் புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்சத்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகை கலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது. கடுமையாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரக் கூட்டம், வலமாகச் சுழல்கிறது. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப் பீடிக்கிறது. கடுங்கோள் (ராகு), சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது [2].(“கடுங்கோளான ராகு, கோரமாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தை வக்கிரகதியில் சுற்றி வருவதுடன் சித்திரை நட்சத்திரத்திற்கும், சுவாதிக்கும் மத்தியில் இருந்து கொண்டு, ரோகிணியையும் (ஒரே நட்சத்திரத்திலிருக்கிற) சந்திர சூரியர்கள் இருவரையும் பீடிக்கிறது”)

நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட சிவந்த உடல் கொண்டவன் (செவ்வாய்), சுற்றி வளைத்துச் சுழன்று {வக்கிரமாகி}, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் {சிரவண} நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் {தனது முழுப்பார்வையினால் அதை அடித்துக் கொண்டு} நிற்கிறான்.

குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகைப் பயிர்களை விளைவிக்கும் பூமி, இப்போது அனைத்து காலங்களிலும் விளையும் பயிர்களால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு வாற்கோதுமை {யவதானியக்} கதிரும் ஐந்து காதுகளுடனும் {ஐந்து தலைகளுடனும்}, {செந்நெற்கதிர்கள்} நெற்கதிர்கள் ஒவ்வொன்றும் நூறுடனும் {நூறு தலைகளுடனும்} அருளப்பட்டிருக்கின்றன. உலகங்களில் சிறந்தவையும், இந்த அண்டமே நம்பியிருக்கும் உயிரினங்களுமான பசுக்கள், கன்றுகளுக்குப் பாலூட்டிய பிறகு, வெறும் இரத்தத்தை மட்டுமே தருகின்றன. கதிர்வீச்சுக் கொண்ட ஒளிக்கதிர்கள் விற்களில் இருந்து வெளிவருகின்றன. வாட்கள் பிரகாசத்தில் சுடர்விடுகின்றன. ஆயுதங்கள், (தங்கள் முன்னே) போர் ஏற்கனவே வந்து விட்டதைப் போலக் காண்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயுதங்கள், நீர், கவசங்கள், கொடிக்கம்பங்கள் ஆகியன நெருப்பைப் போன்ற நிறத்தில் இருக்கின்றன. ஒரு பெரும் படுகொலை நடக்கப் போகிறது.

ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, பாண்டவர்களுடன் குருக்கள் மோதும் இந்தப் போரில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, பூமியானது (வீரர்களின்) கொடிக்கம்பங்களைப் படகுகளாகக் கொண்ட இரத்த ஆறாகும். அனைத்துப் புறங்களிலும் உள்ள விலங்குகளும், பறவைகளும், தீ போன்று சுடர்விடும் வாய்களுடன், கடுமையாகக் கதறி, பயங்கர விளைவுகளை முன்னறிவிக்கும் வகையில் இந்தத் தீய சகுனங்களைக் காட்டுகின்றன. ஒரு சிறகு, ஒரு கண், ஒரு கால் ஆகியவற்றைக் கொண்ட (உக்கிரமான) ஒரு பறவை, இரவு நேரத்தில் வானத்தில் பறந்து கொண்டு, கேட்பவர்களை இரத்தம் கக்க வைப்பது போலப் கோபத்தில் பயங்கரமாக அலறுகிறது [3]. ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரா}, ஆயுதங்கள் அனைத்தும் இப்போது கதிர்வீச்சுடன் சுடர்விடுவதாகத் தெரிகிறது.

மூன்று சந்திர மாதங்கள், இரண்டு முறை அதன்போக்கில் ஒரே சந்திர பிறைநாட்களில் {ஒரே சந்திர பட்சத்தில்}, ஒன்று கூடியிருக்கின்றன [4]. எனவே, முதல் மாதத்தில் இருந்து, பதிமூன்றாவது {13} நாளில் எனும்படி அது பௌர்ணமி அல்லது அமாவாசை நாளன்று சந்திரன் மற்றும் சூரியன் ஆகியோர் ராகுவினால் பீடிக்கப்பட்டார்கள். சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகிய இத்தகைய இரு விசித்திரமான கிரகணங்கள் பெரும் படுகொலையையே முன்னறிவிக்கின்றன [5]. பூமியின் திக்குகள் அனைத்தும், புழுதி மழையால் மூடப்பட்டு மங்கலமற்றுக் காணப்பட்டன. வருங்கால ஊகமாக ஆபத்தை முன்னறிவிக்கும்படி, கடும் மேகங்கள் இரவு நேரத்தில் இரத்த மாரி பொழிகின்றன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, கடுஞ்செயல்களைப் புரியும் ராகுவும், கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்தைப் பீடித்திருக்கிறான். கடும் ஆபத்தை முன்னறிவிக்கும் கடுங்காற்றுத் தொடர்ச்சியாக வீசிக்கொண்டிருக்கிறது. இவையனைத்தும், பல சோக சம்பவங்களை வகைப்படுத்தும் ஒரு போரையே தரும்.

நட்சத்திரக் கூட்டங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் [6]. ஒவ்வொரு வகையிலும் ஒன்றின் மேலோ மற்றொன்றின் மேலோ, தீய சகுனம் கொண்ட ஒரு கிரகம் தனது செல்வாக்கைச் செலுத்துமென்றால், அது பயங்கர ஆபத்துகளை முன்னறிவிப்பதாகும். ஒரு சந்திர அரைத்திங்கள் {பக்ஷம்} (வழக்கமாக) பதினான்கு நாட்களையோ, பதினைந்து நாட்களையோ அல்லது பதினாறு நாட்களையோ கொண்டிருக்கலாம். எனினும், முதல் மாதத்திலிருந்து அமாவாசை பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ, அதே போலப் பௌர்ணமி பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை. இருப்பினும் சந்திரன், சூரியன் ஆகிய இருவரும் ஒரே மாதத்தில், முதல் திங்கள் தினத்தில் இருந்து பதிமூன்றாம் நாளில் தங்கள் கிரகணங்களைக் கொண்டிருக்கின்றன” என்றார் {வியாசர்}.

மன்னர்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, யானைகளுக்குச் சொந்தக்காரர்கள் (கஜபதிகள்), குதிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் (அஸ்வபதி), மனிதர்களுக்குச் சொந்தக்காரர்கள் (நரபதி) என்பதே ஆகும். தீய சகுனத்தைச் சொல்லும் கிரகம் (பாப கிரகம்), அஸ்வினி முதலான ஒன்பது நட்சத்திரங்களைப் பீடித்தால், அஃது அஸ்வபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும்; மகம் முதலான ஒன்பது நட்சத்திரக்கூட்டங்களைப் பீடித்தால், அது கஜபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும்; மூலம் முதலான ஒன்பது நட்சத்திரக்கூட்டங்களைப் பீடித்தால், அது நலபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும். எனவே, வேறு பாபக் கிரகங்களும் மூன்று வகை நட்சத்திரக்கூட்டங்களையும் பீடித்தால், அஃது அனைத்து வகை மன்னர்களுக்கும் ஏற்படும் ஆபத்தை முன்னறிவிக்கின்றன என்றே வியாசர் இங்கே குறிப்பிடுகிறார்.”

திருதராஷ்டிரனை அறிவுறுத்திய வியாசர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 003ஆ-கோள்களின் நிலைகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் செயல்பாடுகள், இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றைத் திருதராஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய வியாசர்; நடைபெற இருக்கும் போரில் இறப்பவர்கள் நல்லுலகையே அடைவார்கள் என்று திருதராஷ்டிரன் வியாசரிடம் சொன்னது; திருதராஷ்டிரனைக் கண்டித்து, அறிவுரை கூறிய வியாசர் .

{வியாசர் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “எனவே, வழக்கத்திற்கு மாறான நாட்களில் கிரகணங்களுக்கு உட்படும் [1] சூரியனும் சந்திரனும், பூமியில் உள்ள உயிரினங்களின் பேரழிவுக்குக் காரணம் ஆவார்கள். உண்மையில், {மேற்கண்ட தேய்பிறை சதுர்த்தசி திதியில்} வாய் நிறைய இரத்தத்தைப் பருகும் ராட்சசர்களும் அதனால் தணிவடையமாட்டார்கள் {நிறைவடையமாட்டார்கள்}. பெரும் நதிகள் எதிர்த்திசையில் பாய்ந்தோடுகின்றன. நதிகளின் நீர் இரத்தமாக மாறிவிட்டது. கிணறுகள், நுரைகளை வெளியிட்ட படி, காளைகளைப் போல முழங்குகின்றன [2]இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற பிரகாசமிக்க விண்கற்கள் {கொள்ளிகள்} உரத்த சீற்றத்துடன் கீழே விழுகின்றன [3]. இந்த இரவு கடந்ததும், தீய விளைவுகள் உன்னை ஆக்கிரமிக்கும். ஒருவரை ஒருவர் சந்திப்பதற்காகத் தங்கள் வீடுகளில் இருந்து பந்தங்களுடன் வெளியே வரும் மக்கள், சுற்றிலும், மேலும் அதிகமான அடர்ந்த இருளையே எதிர்கொள்வார்கள் [4]. இது போன்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்ட பெரும் முனிவர்கள், ஆயிரக்கணக்கான மன்னர்களின் இரத்தத்தைப் பூமி குடிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.-கைலாசம், மந்தரம், இமயம் ஆகிய மலைகளில் ஆயிரக்கணக்கான வெடிச்சத்தங்கள் கேட்கின்றன; ஆயிரக்கணக்கான சிகரங்களும் பெயர்ந்து விழுகின்றன. பூமி நடுங்குவதன் விளைவால் பெரிதும் பொங்கும் நான்கு கடல்களும், பூமியைத் துன்புறுத்த அதன் கண்டங்களைத் {கரைகளைத்} தாண்டத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது [5].கூரான கூழாங்கற்கள் {பருக்கைக் கற்கள்} நிரம்பிய கடுங்காற்று, வலிமைமிக்க மரங்களைச் சாய்த்தபடி வீசிக் கொண்டிருக்கிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள சாதாரண மரங்களும், புனிதமான மரங்களும், பலத்தக் காற்றால் நசுக்கப்பட்டும், மின்னலால் தாக்கப்பட்டும் சரிந்தவண்ணம் உள்ளன. (வேள்வித்) தீயில், அந்தணர்களால் நீர்க்காணிக்கைகள் {நெய்} ஊற்றப்படும் போது, அது {நெருப்பு}, நீலமாகவோ, சிவப்பாகவோ, மஞ்சளாகவோ மாறுகிறது. அதன் சுடர்கள் உரத்த ஒலியுடன் இடதுபுறமாகச் சாய்ந்து {சுழன்று}, கெட்ட நாற்றத்தைக் கொடுக்கிறது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, தொடுதல், நுகர்தல், சுவை ஆகியன முன்பு இல்லாததைப் போல ஆகிவிட்டன. (போராளிகளின்) கொடிக்கம்பங்கள், தொடர்ச்சியாக நடுங்கியவண்ணம் புகையைக் கக்குகின்றன.

துந்துபிகளும், பேரிகைகளும், கரித்தூசி மழையை வீசியெறிகின்றன {தணலைப் பொழிகின்றன}. உயர்ந்த மரங்களின் உச்சிகள் அனைத்திலும், இடமாகச் {இடதுபுறமாகச்} சுற்றும் காகங்கள் உக்கிரமாகக் கத்துகின்றன. மேலும் அவை அனைத்தும், “பக்வா, பக்வா” [6] என்று உக்கிரமாகக் கத்தியபடி, மன்னர்களின் அழிவுக்காக {அவர்களின்} கொடிக்கம்பங்களின் நுனிகளில் வந்து அமர்கின்றன. தீய யானைகள், முழுவதும் நடுங்கியபடி, அங்குமிங்கும் ஓடி, சிறுநீரையும் மலத்தையும் கழிக்கின்றன. குதிரைகள் அனைத்தும் துக்கத்துடன் இருக்கின்றன. அதே வேளையில் யானைகள் தண்ணீரில் இறங்குகின்றன. இவையனைத்தையும் கேட்டு, ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, உலகம் அழிவுக்குள்ளாகாத வகையில், தகுந்தது எதுவோ அதைச் செய்வாயாக” என்றார் {வியாசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தன் தந்தையின் {தந்தை வியாசரின்} வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், “இவையாவும், பழங்காலத்திலேயே விதிக்கப்பட்டுவிட்டது என்றே நான் நினைக்கிறேன். மனிதர்களின் பேரழிவு நேரத்தான் போகிறது. க்ஷத்திரிய வகையினரின் கடமைகளை நோற்று மன்னர்கள் போரில் இறந்தால், வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் அவர்கள், மகிழ்ச்சியை மட்டுமே அடைவார்கள். இந்த மனிதர்களில் புலிகள், தங்கள் உயிரைப் பெரும்போரில் துறந்து, இங்கே புகழையும், அடுத்த உலகத்தில் என்றென்றைக்கும் நிலைத்த பேரின்பத்தையும் அடைவார்கள்” என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, தன் மகன் திருதராஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்டவரும், கவிஞர்களில் இளவரசருமான அந்த முனிவர் (வியாசர்), உச்சநிலை யோகத்தில் தன் மனதைக் குவித்தார். குறுகிய காலமே {ஒரு முகூர்த்த காலம்} அப்படிச் சிந்தித்த நிலையில் இருந்த அவர் {வியாசர்}, மீண்டும் ஒருமுறை, “ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரா}, காலமே அண்டத்தை அழிக்கும் என்பதில் ஐயமில்லை. அந்தக் காலமே உலகங்களைப் படைக்கவும் செய்யும். இங்கே {இவ்வுலகில்} எதுவும் நித்தியமானது கிடையாது. குருக்கள், உனது சொந்தங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு {அறம் நழுவாத} நீதியின் பாதையைக் காட்டுவாயாக. நீயே அவர்களைத் தடுக்கும் திறமையுடையவன் ஆவாய்.

சொந்தங்களின் படுகொலை பாவம் நிறைந்தது என்று சொல்லப்படுகிறது. எனக்கு ஏற்பில்லாதாதை நீ செய்யாதிருப்பாயாக. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, மரணமே {காலனே} உனது மகனின் {துரியோதனனின்} வடிவில் பிறந்திருக்கிறான். வேதங்களில் எப்போதும் படுகொலை மெச்சப்படுவதில்லை. அஃது ஒருபோதும் நன்மையைச் செய்யாது. ஒருவனுடைய குலத்தின் பழக்க வழக்கங்கள் அவனது சொந்த உடலே ஆகும். அந்தப் பழக்கவழக்கங்களை அழிப்பவனை, அதுவே கொன்றுவிடும் [7](நீதியின் பாதையில் நடக்க) உன்னால் இயலும் என்றாலும், இந்தக் குலத்தின் அழிவுக்காகவும், இந்தப் பூமியில் உள்ள அந்த மன்னர்களின் அழிவுக்காகவும், துயரத்தில் இருக்கும் ஒருவனைப் போல, உன்னைக் காலமே தவறான பாதையில் திசை திரும்பச் செய்கிறது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது நாட்டின் வடிவில் பேரிடர் உன்னிடம் வந்திருக்கிறது. உனது அறம் மிகப்பெரிய அழிவில் நிலைநிற்கிறது. நீதி {அறம் [அ] தர்மம்} என்பது என்ன என்பதை உனது மகன்களுக்குக் காட்டுவாயாக. ஓ! வெல்லப்பட முடியாதவனே {திருதராஷ்டிரா}, உனக்குப் பாவத்தைக் கொண்டு வரும் நாடு உனக்கு எப்படி மதிப்புடையதாகும்? {பாவத்தை அடைவதற்குக் காரணமான நாட்டினால் உனக்கு என்ன பயன்?}. உனது நற்பெயர், உனது அறம் மற்றும் உனது புகழைக் கவனிப்பாயாக {பாதுகாப்பாயாக}. பிறகு, நீ சொர்க்கத்தை வெல்வாய். பாண்டவர்கள் தங்கள் நாட்டைப் பெற்றுக் கொள்ளட்டும், கௌரவர்கள் அமைதியை அடையட்டும்” என்றார் {வியாசர்}.

வெற்றியாளர்களிடம் காணப்படும் அறிகுறிகள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 003இ-திருதராஷ்டிரன் வியாசரிடம் தன் நிலையை விளக்கிக் கூறுவது; வியாசரின் உத்தரவின் பேரில் தனது மனத்தில் இருப்பதைத் திருதராஷ்டிரன் கேட்பது; வெற்றி பெறப் போகும் வீரர்களிடம் காணப்படும் அறிகுறிகளையும், தோல்வியுறுபவர்களின் அறிகுறிகளையும் வியாசர் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது; படை சிதறுவதற்கான காரணங்களை வியாசர் சொல்வது…

{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் தொடர்ந்தார்}, “அந்த அந்தணர்களில் சிறந்தவர் {வியாசர்}, சோகம் நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, பேச்சுக் கலையை அறிந்தவனும், அம்பிகையின் மகனுமான திருதராஷ்டிரன், மீண்டும் ஒருமுறை அவரிடம் {வியாசரிடம்}, “வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றைக் குறித்த என் அறிவு உமக்கு ஒத்ததாகவே இருக்கிறது. இவற்றின் உண்மையை நான் அறிவேன். எனினும், சுய விருப்பங்களைக் கருத்தில் கொள்ளும் மனிதன், நீதியை இழக்கிறான். ஓ! ஐயா {வியாசரே}, நான் ஒரு சாதாரண மனிதன் என்பதை அறிவீராக. நீரோ அளவிலா சக்தி படைத்தவர். உமது சக்தியை {கருணையை} எங்களுக்கு அளிக்குமாறு நான் உம்மிடம் வேண்டுகிறேன். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ள நீரே எங்களுக்குப் புகலிடமும், வழிகாட்டியும் ஆவீர். ஓ! பெரும் முனிவரே {வியாசரே}, எனது மகன்கள் எனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இல்லை. எனது அறிவும் பாவம் இழைக்கத் துணியவில்லை. பாரதர்களின் புகழ், சாதனைகள் மற்றும் அறத்துணிவு ஆகியவற்றுக்கு நீரே காரணமாவீர். குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவருக்கும் நீர் மதிப்புமிக்கப் பாட்டனாவீர்” என்றான் {திருதராஷ்டிரன்}.

வியாசர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! விசித்திரவீரியனின் அரச மகனே {திருதராஷ்டிரா}, உனது மனதில் இருப்பதைத் தாராளமாக என்னிடம் சொல்வாயாக. நான் உனது ஐயங்களை விலக்குவேன்” என்றார்.

திருதராஷ்டிரன், “ஓ! புனிதமானவரே {வியாசரே}, போரில் வெற்றி பெறுபவர்களின் அடையாளங்கள் அனைத்தையும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்” என்றான்.

வியாசர், “(புனித) நெருப்பு, உற்சாகமான பிரகாசத்தை வகிக்கிறது {நிர்மலமான காந்தியைக் கொண்டிருக்கிறது}. அதன் ஒளி மேல்நோக்கி உயர்கிறது. அதன் சுடர் வலமாக {சுற்றி} வளைகிறது. புகையற்று அது சுடர்விடுகிறது. அதில் ஊற்றப்படும் நீர்க்காணிக்கைகள் {நெய்} நறுமணத்தைக் கொடுக்கிறது. இவையே எதிர்கால வெற்றிக்கான அடையாளங்களாகச் சொல்லப்படுகிறது. சங்குகளும், மிருதங்கங்களும், ஆழ்ந்த மற்றும் உரத்த ஒலியைக் கொடுக்கின்றன. சூரியனும், சந்திரனும் தூய கதிர்களைக் கொடுக்கிறார்கள். இவையே எதிர்கால வெற்றிக்கான அடையாளங்களாகச் சொல்லப்படுகிறது. காகங்கள் நின்று கொண்டிருந்தாலோ அல்லது சிறகடித்துக் கொண்டிருந்தாலோ கூட ஏற்புடைய வகையிலேயே கரைகின்றன. பின்னால் இருப்பவை, {காக்கைகள்}, போர்வீரர்களை முன்னேறத் தூண்டுகின்றன; அதே வேளையில் முன்னால் இருப்பவையோ, முன்னேற்றம் அனைத்தையும் தடுக்கின்றன [1].கழுகுகள், அன்னங்கள், கிளிகள், மரங்கொத்திகள் {அன்றில்கள்} ஆகியவை எங்கே இனிமையாக ஒலியெழுப்பி வலமாகச் சுற்றுகின்றனவோ, அவர்கள் {அங்கே உள்ளவர்கள்} போரில் வெல்வது உறுதி என்று அந்தணர்கள் சொல்கிறார்கள். ஆபரணங்கள், கவசங்கள், கொடிக்கம்பங்கள் அல்லது குதிரைகளின் இனிமையான கனைப்பொலி ஆகியவை எவருடைய படைப்பிரிவுகளில் காண முடியாத அளவுக்குப் பிரகாசிக்கின்றனவோ, அவர்கள் எப்போதும் எதிரிகளை வெல்வார்கள். ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, எவருடைய வீரர்கள் உற்சாகமாக முழக்கமிடுகிறார்களோ, எவருடைய சக்திகள் தணிக்கப்படாமல் இருக்கிறதோ, எவருடைய மாலைகள் வாடாமல் இருக்கின்றவோ அவர்கள் எப்போதும் போர்க்கடலைக் {போர் எனும் கடலைக்} கடப்பார்கள். எதிரியின் படைப்பிரிவுகளைத் துளைத்துக் கொண்டு எவர் உற்சாகமாக முழக்கமிட்டுக் கொண்டு, எதிரியிடம் கூட அன்பான வார்த்தைகளைச் [2] சொல்கிறார்களோ, எவர் அடிப்பதற்கு முன்பே எதிரியை எச்சரிக்கிறார்களோ அவர்கள் வெற்றியை அடைகிறார்கள்.

கேள்வி {காது கேட்கும் திறன்}, பார்வை, சுவை, தொடுதல் மற்றும் மணம் ஆகியவை மோசமான எந்தவித மாற்றத்திற்கும் ஆளாகாமல் இருந்தால் அவை மங்கலமாகும். போராளிகளுக்கு எப்போதும் இன்பமாயிருப்பதும், ஒரு வெற்றிகரமான படையின் அடையாளமாகும். வீசும் காற்றும், மேகங்களும், பறவைகளும் உதவிகரமாக இருப்பதும்; அதே வேளையில் (உதவிகரமாக இருக்கும்) மேகங்களும், வானவில்லும் நன்மையான மழையைப் பொழிவதும் வெற்றியின் மற்றொரு அடையாளமாகும் [3]. {மேகங்கள் நன்மையான மழையைப் பொழிதலும், வானவில் பின்தொடர்ந்து வருதலும் வெற்றியாளர்களின் அடையாளமாகும்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, வெற்றியால் மகுடந்தரிக்கப்படும் படைகளின் அடையாளங்கள் இவை. அதே வேளையில் ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, அழிவுக்குள்ளாவோருக்கு இவை அனைத்தும் மாறுபட்டு அமையும்.

படை சிறியதோ, பெரியதோ, போராளிகளின் குணமாக உற்சாகம் இருக்குமேயானால், அதுவே நிச்சயம் வெற்றியின் அடையாளம் ஆகும். பீதியடைந்த படைவீரன் ஒருவன், ஒரு பெரிய படையே அச்சத்துள்ளாகி பின்வாங்குவதற்குக் காரணமாக இருக்க முடியும். ஒரு படையானது பீதிக்குள்ளாகி பின்வாங்கினால், வீரமிக்கப் போர்வீரர்களும் அச்சங்கொள்ளக் காரணமாக அதுவே அமையும். ஒரு முறை உடைக்கப்பட்டு, விரட்டப்படும் ஒரு பெரும்படை அச்சத்தால் சிதறியோடும் மான்கூட்டத்தைப் போலவோ, வலிமைமிக்க ஊற்றுக் கொண்ட நீரைப் போலவோ தடுக்க {திருப்ப} முடியாததாகும். ஒரு பெரும்படை ஒருமுறை விரட்டப்பட்டாலே, அதை மீண்டும் திரளச் செய்வது இயலாது; மறுபுறம், அப்படி உடைக்கப்பட்ட அந்தப் படையினால், ஓ! பாரதா {திருதராஷ்டிரா} போரில் நன்கு திறம்பெற்றவர்கள் கூட உற்சாகத்தை இழப்பார்கள்.

அச்சத்தால் பீடிக்கப்பட்டு ஓடும் வீரர்களைக் காண்பதால், அந்தப் பீதி பல்வேறு திசைகளிலும் பரவி, விரைவில், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, முழுப் படையும் உடைந்து, அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடும். ஒரு படை இப்படி விரட்டப்படும்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, நால்வகைப் படைகளைக் கொண்ட பெரும் பிரிவுகளின் தலைமையில் இருப்போரான துணிச்சல் மிக்கத் தலைவர்களால்கூட அவர்களை {மீண்டும்} அணிதிரட்ட முடியாது. சுறுசுறுப்புடன் எப்போதும் உழைக்கும் ஒரு புத்திசாலி மனிதன், வழிகளின் {உபாயங்களின்} துணை கொண்டு (வெற்றியை அடைய) முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலமோ {சாமம் மூலமோ}, பிற வழிகளிலோ {தானம் மூலமோ} வெல்லப்படும் வெற்றியே மிகச் சிறந்ததெனச் சொல்லப்படுகிறது. (எதிரிகள் மத்தியில்) வேறுபாட்டை உண்டாக்கி {பேதம் மூலம்} பெறப்படுவது பொருட்படுத்தத்தக்கது அல்ல {சாதாரணமானதே}. அதே வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, போரின் மூலமாகப் பெறப்படும் வெற்றி இழிவானது.

போரில் பல தீமைகள் இருக்கின்றன. அதில் முதன்மையானதாகப் படுகொலை சொல்லப்படுகிறது. ஒருவரை ஒருவர் அறிந்தவர்களும், துக்கப்படாதவர்களும், குடும்பப் பந்தங்களில் இருந்து விடுபட்டவர்களும், உறுதியான தீர்மானம் கொண்டவர்களுமான ஐம்பது துணிவுமிக்க வீரர்களால் மட்டுமேகூட ஒரு பெரும் படையை நசுக்கிவிட முடியும். புறமுதுகிடாத ஐந்து, ஆறு அல்லது ஏழு பேரால் கூட வெற்றியை அடைந்துவிட முடியும். வினதையின் மகனான கருடன், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, பறவைகளின் பெருங்கூட்டத்தைக் கண்டாலும்கூட, (அவர்களை வீழ்த்த) பல தொண்டர்களின் துணையைக் கேட்க மாட்டான். எனவே ஒரு படையில் இருக்கும் வீரர்களுடைய எண்ணிக்கையின் பலம் மட்டுமே எப்போதும் வெற்றியைத் தந்துவிடாது. வெற்றி உறுதியற்றதாகும் {நிச்சயமற்றதாகும்}. அது வாய்ப்பைச் {சந்தர்ப்பத்தைச்} சார்ந்தே இருக்கிறது. வெற்றி அடைந்தவர்கள் கூட இழப்பை ஏற்க வேண்டியிருக்கும்” என்றார் {வியாசர்}.

பூமியில் உள்ள உயிரின வகைகள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 004-குருஜாங்கலத்தில் கூடியிருக்கும் மன்னர்களின் நாடுகள் மற்றும் நகரங்களின் துல்லியமான விபரங்களைச் சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் கேட்பது; சஞ்சயன் முதலில் பூமியின் சிறப்புகளைச் சொல்வது; பூமியில் வாழும் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் குறித்த குறிப்புகளைச் சொல்வது; அசைவன மற்றும் அசையாதனவற்றில் உள்ள வகைகளைச் சொன்னது; பூமிக்காக மன்னர்கள் அனைவரும் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொள்ளும் காரணத்தைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “திருதராஷ்டிரனை நோக்கி இந்த வார்த்தைகளைச் சொன்ன வியாசர் அங்கிருந்து புறப்பட்டார். இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினான். சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலம்} இப்படிச் சிந்தித்த அவன் மீண்டும் மீண்டும் பெருமூச்சு விடத் தொடங்கினான். விரைவில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, புகழத்தக்க ஆன்மாவைக் கொண்ட சஞ்சயனிடம், “ஓ! சஞ்சயா, இந்த மன்னர்கள், இந்தப் பூமியின் தலைவர்கள், இவ்வளவு வீரமிக்கவர்கள், போரில் மகிழ்ந்து, பல்வேறு ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, பூமியின் நிமித்தமாகத் தங்கள் உயிரையே விடத் தயாராக இருக்கிறார்களே. தடுக்கப்பட முடியாத அவர்கள், உண்மையில், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, யமனின் ஆட்சிப்பகுதியில் இருப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகின்றனர்.

பூமியை உடைமையாகக் கொள்வது சம்பந்தமான செழிப்பை அவர்கள் விரும்புவதால், ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளாதிருக்கிறார்கள். எனவே, பூமி பல பண்புகளைக் {குணங்களைக்} கொண்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஓ! சஞ்சயா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. வீரர்கள், பல ஆயிரங்களிலும், பத்து லட்சங்களிலும், கோடிகளிலும், ஆயிரம் கோடிகளிலும் ஒன்றுசேர்ந்து குருஜாங்கலத்திற்கு வந்திருக்கிறார்கள். ஓ! சஞ்சயா, இவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அந்த நாடுகள் மற்றும் நகரங்களின் பரிமாணங்களையும், அவற்றின் நிலைமைகளையும் துல்லியமான விபரங்களுடன் நான் கேட்க விரும்புகிறேன். அளவிடமுடியா சக்தி படைத்த அந்த மறுபிறப்பாள {பிராமண} முனிவர் வியாசரின் ஆற்றலால், தெய்வீக உணர்வு என்ற விளக்கின் ஒளியையும், அறிவுக்கண்ணையும் பெற்றவனாக நீ இருக்கிறாய்” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் அறிவு கொண்டவரே {திருதராஷ்டிரரே}, நான் எனது அறிவின்படி பூமியின் சிறப்புகளை உமக்கு எடுத்துரைப்பேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நான் உம்மை வணங்குகிறேன். இவ்வுலகில் உள்ள உயிரினங்கள், அசைவன {ஜங்கமங்கள்} மற்றும் அசையாதன {ஸ்தாவரங்கள்} என்று இருவகைகளில் உள்ளன. அசையும் உயிரினங்கள், முட்டையிடுதல் {Oviparous}, ஈன்றெடுத்தல் {Viviparous}, வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் {புழுக்கத்தால் உண்டாகும் வேர்வையில்} உண்டாகுதல் [*] என்று மூன்று வகையில் தங்கள் பிறப்பை அடைகின்றன.

அசையும் உயிரினங்களில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஈன்றெடுப்பவையே {Viviparous} {ஜராயுஜங்களே} நிச்சயம் முதன்மையானவையாக இருக்கின்றன. ஈன்றெடுக்கும் உயிரினங்களில் மனிதர்களும் விலங்குகளுமே முதன்மையானவையாக இருக்கின்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வடிவங்களில் இருக்கும் விலங்குகளின் இனவகைகள் பதினான்காக {14} இருக்கின்றன. அவற்றில் ஏழு{7} இனங்கள் காடுகளில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டிருக்கின்றன {ஆரண்யவாசிகளாக இருக்கின்றன}. ஏழு{7} இனங்கள் வீட்டில் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டிருக்கின்றன {கிராமவாசிகளாக இருக்கின்றன}. சிங்கங்கள், புலிகள், பன்றிகள், எருமைகள், யானைகள், கரடிகள் மற்றும் குரங்குகள் ஆகியன, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வனவிலங்குகளாகக் கருதப்படுகின்றன. பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், மனிதர்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகிய இந்த ஏழும் வீட்டுவிலங்குகளாகக் கற்றோரால் கருத்தப்படுகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பதினான்கே {14} வீட்டு மற்றும் வன விலங்குகளின் முழு எண்ணிக்கையாக வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றையே வேள்விகளும் சார்ந்திருக்கின்றன. வீட்டு உயிரினங்களில் மனிதனே முதன்மையானவன், அதே போல வன உயிரினங்களில் சிங்கமே முதன்மையானதாகும். அனைத்து உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றன.

காய்கறிகளே {Vegetables} {உத்பிஜ்ஜங்களே} அசையாதனவாகச் {ஸ்தாவரங்களாகச்} சொல்லப்படுகின்றன. அவற்றில் நான்கு வகைகளாக மரங்கள், புதர்ச்செடி [1], கொடிகள் [2], படர்ந்து வளரும் செடிகள் [3] என்று இருக்கின்றன. புல்வகையைச் சார்ந்த தண்டற்ற செடிவகைகள் [4] ஐந்தாவதாக வகையாக இருக்கின்றன [5].

அசையும் {மனிதன், விலங்கு} மற்றும் அசையாத {தாவர} உயிரினங்களில் இப்படியே பத்தொன்பது {19} வகை இருக்கின்றன. அவற்றின் உலகளாவிய தொகுதிகளைப் {பூதங்களைப்} பொறுத்தவரை அவை ஐந்தாக {பஞ்சபூதங்களாக} உள்ளன. இப்படியே மொத்தமாக இருபத்துநான்கான {2} இவை அனைவராலும் நன்கு அறியப்பட்டபடி காயத்ரி (பிரம்மம்) என்று விளக்கப்படுகின்றன [6].

ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இதையே அனைத்து அறங்களையும் கொண்ட புனிதமான காயத்ரியாக உண்மையாக அறிந்து கொள்பவன்,  உலக அழிவுக்குக் காரணமாக மாட்டான். அனைத்தும் பூமியில் இருந்தே எழுகின்றன {பூமியிலேயே உற்பத்தியாகின்றன}. அழிவடையும்போது அனைத்தும் பூமியிலேயே கலந்து விடுகின்றன. இந்தப் பூமி அனைத்து உயிரினங்களுக்குமான வசிப்பிடமாகவும், புகலிடமாகவும் இருக்கிறது. பூமி நித்தியமானது. எவன் பூமியைக் கொண்டிருக்கிறானோ, அவன் அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்ட முழு அண்டத்தையும் கொண்டிருக்கிறான். இதன் காரணமாகவே பூமிக்காக (அதை உடைமையாக அடைய) காத்திருக்கும் மன்னர்கள் ஒருவரை ஒருவர் கொல்கின்றனர்” என்றான் {சஞ்சயன்}.

பஞ்சபூதங்களால் உயிர்கள் தோன்றின! – பீஷ்ம பர்வம் பகுதி – 005-சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குப் பஞ்சபூதங்களின் தன்மைகளையும் அவை ஒவ்வொன்றின் பண்புகளையும் விளக்குவது; ஒரு பூதம் மற்றொன்றோடு கலக்கும் போதே உயிர்கள் தோன்றுகின்றன பூதங்கள் அழிகின்றன என்று சொல்வது; அண்டம் ஒரே சீர்மையுடன் ஒரே பெருந்திரளாக இருந்தபோது அவை ஒவ்வொன்றும் தனித்துச் சார்பற்று இருந்தன என்று சொல்வது; பஞ்சபூதங்களின் கலவை உயிரினங்களில் எவ்வளவு இருக்கிறது என்பதை அளக்க முடியாது, அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று சொல்வது; சுதர்சனத் தீவைக் குறித்துத் திருதராஷ்டிரனுக்குச் சஞ்சயன் சொல்வது….

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, நதிகள் மற்றும் மலைகளின் பெயர்கள், மாகாணங்களின் பெயர்கள், மேலும் பூமியில் இருக்கும் பிற பொருட்கள் அனைத்தையும், அதன் பரிணாமங்களையும் குறித்தும், காடுகளோடு கூடிய மொத்த உலகத்தில் முழுமையாக உள்ள பொருட்களை அறிந்தவனான நீ, ஓ சஞ்சயா எனக்கு விபரமாக எடுத்துரைப்பாயாக.”

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அண்டத்தின் பொருட்கள் அனைத்தும், (அவையவற்றில் உள்ள) ஐந்து தனிமங்களுடைய {பஞ்சபூதங்களுடைய} இருப்பின் விளைவால் சமமானவையாகவே இருக்கின்றன என்று ஞானிகளால் சொல்லப்படுகிறது. வெளி {ஆகாயம்}, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் என்பதே அந்தத் தனிமங்களாகும் {பூதங்களாகும்}. ஒலி, தொடுதல், பார்வை, சுவை, மற்றும் நறுமணம் ஆகியவை அவற்றுடைய (தனிப்பட்ட) பண்புகள் {குணங்கள்} ஆகும். இந்தத் தனிமங்கள் {ஐம்பூதங்கள்} ஒவ்வொன்றும் (தனது சொந்த பண்புகளுக்குக் கூடுதலாக) தனக்கு முன் வருவது அல்லது வருவனவற்றின் பண்பு அல்லது பண்புகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது. எனவே, உண்மையை அறிந்த முனிவர்களுடைய வாக்கின்படி, {ஒரு பூதம்} தனது சிறப்புப் பண்புடன் சேர்த்து, மற்ற நான்கின் {நான்கு பூதங்களின்} பண்புகள் {ஒலி, தொடுதல், பார்வை, சுவை ஆகிய} அனைத்தையும் கொண்டிருக்கலாம். {ஐந்து பூதங்களில் ஒன்றான} நிலமானது இவை {பூதங்கள்} அனைத்திலும் முதன்மையானதாகும்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீரில் நான்கு பண்புகள் {ஒலி, தொடுதல், பார்வை, சுவை ஆகியன} இருக்கின்றன. அதில் மணம் இல்லை. நெருப்பானது ஒலி, தொடுதல், பார்வை ஆகிய மூன்று பண்புகளை கொண்டிருக்கிறது. காற்றுக்கு ஒலி மற்றும் தொடுதல் சொந்தமாக இருக்கிறது. அதே வேளையில் வெளியில் {ஆகாயத்தில்} ஒலி மட்டுமே இருக்கிறது. இந்த ஐந்து பண்புகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வழியிலேயே), எந்த உயிரினங்கள் எல்லாம் அண்டத்தில் நிலைத்திருக்கின்றன என்பதைச் சார்ந்து இந்த ஐந்து அடிப்படை தனிமங்களிலும் {பூதங்களிலும்} நிலைத்திருக்கிறது. இந்த அண்டத்தில் சமச்சீர்மை எப்போது இருக்கிறதோ, அப்போது, அவை {அந்தப் பண்புகள்} தனித்தனியாகவும், சார்பற்றும் நிலைத்திருக்கின்றன [1].எனினும், இவை தங்கள் இயல்பான நிலையில் இல்லாமல் ஒன்றுடன் ஒன்று கலந்தால், உடல்களுடன் கூடிய உயிரினங்கள் உயிருடன் எழுகின்றன. இஃது எப்போதும் வேறுவிதமாக இருப்பதில்லை. ஒன்றினுக்குள் ஒன்று ஒன்றிணைந்து, ஒன்று வெல்லும் வரிசையில் அந்தத் தனிமங்கள் அழிவடைகின்றன; மேலும், தன் முன்பு இருக்கும் ஒன்றிலிருந்து எழும் அவை இருப்பிலும் உதிக்கின்றன {தோற்றமும் கொள்கின்றன} [2].இவை அனைத்தும் அளக்கமுடியாதவை, இவற்றின் வடிவங்கள் பிரம்மமே ஆகும். இந்த அண்டத்தில் ஐந்து தனிமங்களைக் {பஞ்சபூதங்களைக்} கொண்ட உயிரினங்களே காணப்படுகின்றன. அவற்றின் அளவுகளை உறுதிசெய்து கொள்ளவே, மனிதர்கள் தங்கள் அறிவைப் {ஊகத்தைப்} பயன்படுத்தி முயன்று கொண்டிருக்கிறார்கள். எனினும், நினைத்துப் பார்க்க முடியாத அந்தக் காரியங்களை, அறிவால் {ஊகத்தினால்} தீர்த்துவிட முயற்சிக்கக்கூடாது. (மனித) இயல்புக்கு மேலானதாக இருப்பதால், அது நினைத்துக்கூடப் பார்க்க முடியாததற்கான ஓர் அடையாளமாக இருக்கிறது.

ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, எனினும், நான் உமக்குச் சுதர்சனம் என்றழைக்கப்படும் தீவைக் குறித்து விளக்குவேன். இந்தத் தீவு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வட்டமானதும், சக்கரத்தின் வடிவம் கொண்டதுமாகும். நதிகள், பிற நீர்நிலைகள், மேகத் திரள்களைப் போன்ற மலைகள், நகரங்கள் மற்றும் பல இனிய மாகாணங்கள் அதில் நிறைந்திருக்கின்றன. மலர்கள் மற்றும் கனிகளைக் கொண்ட மரங்கள் நிறைந்து, பல்வேறு வகைகளிலான பயிர்கள் மற்றும் பிற செல்வங்களுடன் அஃது {சுதர்சனத் தீவு} இருக்கிறது. மேலும் அஃது அனைத்துப் புறங்களிலும் உப்புக் கடலால் சூழப்பட்டுள்ளது. ஒருவன் தனது முகத்தைக் கண்ணாடியில் காண்பதைப் போலவே, சுதர்சனத் தீவையும் சந்திர வட்டிலில் காண முடியும். அதன் இரண்டு பகுதிகள் அரச மரத்தைப் போன்று தெரியும், அதே வேளையில் மற்றும் இரண்டு, பெரிய முயலைப் போலத் தோன்றும். அஃது {சுதர்சனத்தீவு}, இலையுதிர்க்கும் அனைத்து வகைத் தாவரங்களின் நெருக்கத்துடன் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டுள்ளது [3].இந்தப் பகுதிகளைத் தவிர எஞ்சிய அனைத்தும் நீரேயாகும். இன்னும் என்ன மீதியிருக்கிறது என்பதை விரைவில் நான் விவரிப்பேன். எஞ்சியதை நான் பிறகு சொல்கிறேன். இப்போது சுருக்கமாக நான் விவரிப்பதைக் கேட்பீராக [4]” என்றான் {சஞ்சயன்}.

பாரதவர்ஷமும்! மேரு மலையும்!- பீஷ்ம பர்வம் பகுதி – 006அ-சுதர்சனத் தீவின் முயல் போன்ற பகுதியை விபரிக்குமாறு திருதராஷ்டிரன் சஞ்சனைத் தூண்டுவது; அந்தப் பகுதியில் உள்ள மலைகளைக் குறித்துச் சஞ்சயன் விபரிப்பது; பாரதவர்ஷம் மற்றும் பிற வர்ஷங்கள் இருக்கும் இடங்களைக் குறித்துச் சொல்வது; மேரு மலை குறித்த வர்ணனை…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, புத்திசாலியாகவும், (அனைத்தையும் குறித்த) உண்மையை அறிந்தவனாகவும் நீ இருக்கிறாய். அந்தத் தீவை {சுதர்சனத் தீவைக்} குறித்த சுருக்கமான விளக்கத்தை நீ முறையாகச் சொல்லிவிட்டாய். இப்போது அந்தத் தீவை {சுதர்சனத் தீவைக்} குறித்து எங்களுக்கு விரிவாகச் சொல்வாயாக. ஒரு முயலைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட பகுதியில் இருக்கும் நிலப்பரப்பின் பரிமாணங்களை இப்போது எங்களுக்குச் சொல்வாயாக. அரச மரத்தைப் போல இருக்கும் பகுதியைக் குறித்துப் பிறகு நீ பேசலாம்” என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னனால் {திருதராஷ்டிரனால்}, இப்படிக் கேட்கப்பட்ட சஞ்சயன் பேச ஆரம்பித்தான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கிழக்கில் இருந்து மேற்காக நீண்டபடி, கிழக்குக் கடலில் இருந்து மேற்கு கடல் வரை, சமமான அளவில் இருக்கும் [1] இந்த ஆறு மலைகள் இருக்கின்றன. அவை இமயம், ஹேமகூடம், நிஷதம் என்று அழைக்கப்படும் சிறந்த மலை, வைடூரியக் கற்கள் நிறைந்த நீலம், சந்திரனைப் போன்று வெண்மையான ஸ்வேதம், அனைத்து வகை உலோகங்களும் அடங்கிய [2] சிருங்காவன் ஆகியவை ஆகும். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சித்தர்கள் மற்றும் சாரணர்களின் வசிப்பிடங்களாக எப்போதும் இருப்பவை இந்த ஆறு மலைகளாகும்.இவை ஒவ்வொன்றுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி {பல} ஆயிரம் யோஜனைகள் ஆகும். அவற்றில் மகிழ்ச்சிகரமான பல நாடுகள் உள்ளன. ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, இந்தப் பகுதிகளே வர்ஷங்கள் [3] என்று அழைக்கப்படுகின்றன. அந்த நாடுகள் அனைத்திலும் பல்வேறு இனவகைகளைச் சேர்ந்த உயிரினங்கள் வசிக்கின்றன. (நாம் இருக்கும் நிலமான) இது பரதனின் பெயரால் அழைக்கப்படும் வர்ஷத்தில் {கண்டத்தில்} இருக்கிறது [4]. இதற்கு அடுத்ததாக (வடக்கில்) இமயத்தின் பெயரால் அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது [5]. ஹேமகூடத்துக்கு {ஹேமகூட மலைக்கு} அப்பால் இருப்பது ஹரிவர்ஷம் என்று அழைக்கப்படுகிறது. நீல மலையின் வரம்புக்குத் தெற்கே, நிஷத மலைக்கு வடக்கே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிழக்கில் இருந்து மேற்காக நீண்டிருக்கும் மால்யவதம் {மால்யவான்} என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. மால்யவதத்திற்கு அப்பால் வடக்கே கந்தமாதனம் என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது.இவை இரண்டிற்கும் (மால்யவதம் மற்றும் கந்தமாதனம் ஆகியவற்றிற்கு) இடையே தங்கத்தால் ஆன, கோள உருவிலான மேரு என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. காலைக் கதிரவனைப் போல் பிரகாசிக்கும் அது, புகையற்ற நெருப்பு போன்று இருக்கிறது. அஃது எண்பத்துநான்காயிரம் {84,000} யோஜனைகள் உயரம் கொண்டதாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் ஆழமோ எண்பத்துநான்கு யோஜனைகள் கொண்டதாக இருக்கிறது [6]. இது, மேலே, கீழே மற்றும் குறுக்கே இருக்கும் உலகங்களைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது.மேருவைத் தவிர, பதராஸ்வம், கேதுமாலம், பாரதம் என்றும் அழைக்கப்படும் ஜம்பூத்வீபம், நீதியின் தகுதியை அடைந்தவர்களின் வசிப்பிடமான உத்தர-குரு என்ற நான்கு தீவுகளும் அமைந்துள்ளன.

சுபர்ணனின் {கருடனின்} மகனான சுமுகன் என்ற பறவையானவன், மேருவில் இருக்கும் அனைத்துப் பறவைகளும் தங்க நிறத்தில் இருப்பதைக் கண்டு, நல்ல, மத்திம, தீய பறவைகளின் வேறுபாடுகளை அறியமுடியாததால் அந்த மலையைவிட்டு தான் சென்றுவிட வேண்டும் என்று நினைத்தான். ஒளிமண்டலங்களுள் முதன்மையான சூரியன், மேருவை எப்போதும் சுற்றி வருகிறான். நட்சத்திரங்களைத் {தனது} தொண்டர்களாகக் கொண்ட சந்திரனும் அப்படியே சுற்றி வருகிறான். மேலும் வாயுத்தேவனும் அப்படியே {மேருவைச்} சுற்றி வருகிறான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மலை {மேரு}, தெய்வீகக் கனிகளையும் மலர்களையும் கொண்டிருக்கிறது. தங்கத்தாலான மாளிகைகளால் அது முழுவதும் மூடப்பட்டிருக்கிறது. அந்த மலையில் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அப்சரஸ் இனக்குழுவினருடன் எப்போதும் விளையாடுகின்றனர். பிரம்மன், ருத்திரன், தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்} ஆகியோர் கூடி, அபரிமிதமான தானங்களுடன் பல்வேறு வகைகளிலான வேள்விகளை அங்கேதான் செய்தனர். தும்புரு, நாரதர், விஸ்வாவசு, ஹாஹா, ஹூஹூ ஆகியோர் அங்கே சென்று பல்வேறு பாடல்களால் தேவர்களில் முதன்மையானோரைத் துதிக்கின்றனர். உயர்ஆன்மா கொண்ட ஏழு முனிவர்களும், உயிரினங்களின் தலைவரான காசியபரும், அனைத்து பர்வ நாட்களிலும் [7] {ஒவ்வொரு பர்வகாலத்திலும்} அங்கே செல்கின்றனர். உமக்கு மங்களம் உண்டாகட்டும். அந்த மலையில் சிகரத்தில் கவி என்றும் அழைக்கப்படும் உசனஸ் {சுக்கிரன்}, (தன் சீடர்களான) தைத்தியர்களுடன் இருக்கிறார் [8].(நாம் காணும்) நகைகள், ரத்தினங்கள் ஆகியவும், விலையுயர்ந்த கற்கள் நிறைந்த அனைத்து மலைகளும் மேருவிலேயே இருக்கின்றன. அங்கிருப்பதில் நான்கில் ஒரு பங்கு புனிதமான குபேரனால் அனுபவிக்கப்படுகிறது. அதில் பதினாறில் ஒரு பங்கையே அவன் {குபேரன்} மனிதர்களுக்குக் கொடுக்கிறான். மேருவின் வடக்குப் பக்கத்தில் அனைத்துக் காலங்களில் பூக்கும் மலர்களால் நிரம்பியதும், இனிமையானதும், அற்புதமானதுமான கோங்குக் காடு ஒரு மலைத்தொடரை முழுவதும் ஆக்கிரமித்தபடி [9] இருக்கிறது. தெய்வீகத் தொண்டர்களால் {கணங்களால் = பூதங்களால்} சூழப்பட்டவனும், உமையைத் {பார்வதியைத்} துணையாகக் கொண்டவனும், அனைத்தையும் படைத்தவனும், பாதம் வரை தொங்கும் அளவுக்குக் கொன்றை மலர்களைக் {கோங்கு மலர்களைச்} சரமாக (தனது கழுத்தில்) அணிந்து கொண்டவனும், உதித்தெழுந்த மூன்று சூரியன்களைப் போன்ற பிரகாசமான முக்கண்களைக் கொண்டவனும், ஒப்பற்றவனுமான பசுபதி {சிவன்} அங்கேதான் {மேருவில்தான்} விளையாடிக் கொண்டிருக்கிறான். பேச்சில் உண்மை நிறைந்தவர்களும், அற்புத நோன்புகள் மற்றும் தவத்துறவுகளைக் கொண்டவர்களுமான சித்தர்கள் அவனைக் {சிவனைக்} காண்கிறார்கள். உண்மையில், தீய நடத்தை கொண்டோர் அந்த மஹேஸ்வரனை {சிவனைக்} காணும் திறனற்றவர்களாவர்.அந்த மலையின் சிகரத்தில் இருந்துதான், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பாகீரதி என்றும் அழைக்கப்படும் புனிதமான மங்கலக் கங்கை, நீதிமிக்கவர்களால் துதிக்கப்பட்டு, அளக்க முடியாத தனது தெய்வீக வடிவில், பயங்கர ஒலியுடன், சந்திரனின் இனிய தடாகத்தில் சக்திமிக்க வேகத்துடன் பாலோடையைப் போல விழுந்து கொண்டிருக்கிறாள். உண்மையில் கடலைப் போன்ற அந்தப் புனித மடுவை அந்தக் கங்கையே உண்டாக்கினாள். (மலைகளில் இருந்து பாயும்போது) மலைகளால்கூடத் தாங்க முடியாத கங்கையானவள், பினகை தாங்கியின் {சிவனின்} தலையில் நூறாயிரம் {ஒரு லட்சம்- 1,00,000} வருடங்கள் பிடித்து வைக்கப்பட்டாள் [10].மேருவின் மேற்குப் பக்கத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேதுமாலம் [11] இருக்கிறது, அங்கேயும் ஜம்பூகண்டம் இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரண்டும் மனிதகுலத்தின் மாபெரும் இருக்கைகளாக இருக்கின்றன. அங்கே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மனிதர்களுடைய வாழ்நாளின் அளவு பத்தாயிரம் வருடங்களாகும். மனிதர்கள் அனைவரும் அங்கே தங்க நிறத்தில் இருக்கின்றனர், பெண்கள் அனைவரும் அப்சரசுகளைப் போல இருக்கின்றனர். அங்கே வசிப்போர் அனைவரும் நோய், கவலை ஆகியவை இன்றி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அங்கே பிறக்கும் மனிதர்கள் உருக்கிய தங்கத்தின் பிரகாசத்துடன் இருக்கிறார்கள்” {என்றான் சஞ்சயன்}.

ஏழாகப் பிரிந்து பாயும் கங்கை!- பீஷ்ம பர்வம் பகுதி – 006ஆ-கந்தமாதன மலைகள், அங்கே வாழும் மக்களின் தன்மை ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது; ஏழு வர்ஷங்களின் பெயர்கள், அவை அமைந்திருக்கும் பகுதிகள் ஆகியவற்றைச் சொல்வது; கைலாசம், பிந்துசரஸ் பற்றிய குறிப்பு, கங்கையின் மூன்று ஊற்றுகள், கங்கையின் ஏழு ஓடைகள் பற்றிய குறிப்பு ; சரஸ்வதி நதி பற்றிய குறிப்பு, ஒவ்வொரு மலைகளிலும் யார் யார் வசிக்கிறார்கள் என்ற குறிப்பு, தென்னகத்தின் மலய மலை பற்றிய குறிப்பு ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது..

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “கந்தமாதனச் சிகரத்தில், குஹ்யர்களின் தலைவனான குபேரன், பல ராட்சசர்களுடனும், அப்சரசுகளின் கூட்டத்துடனும் தனது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கிறான். கந்தமாதனத்தைத் தவிர்த்து அங்கே பல மலைகளும், குன்றுகளும் இருக்கின்றன. மனித வாழ்வின் கால அளவு அங்கே {கந்தமாதன மலையில்} பதினோராயிரம் {11,000} வருடங்களாகும். அங்கே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும் இருக்கிறார்கள் [1]. அங்கே இருக்கும் பெண்கள் அனைவரும் தாமரை நிறத்துடனும் உயர்ந்த அழகுடனும் இருக்கிறார்கள்.

நீலத்தை {நீலமலையைத்} தாண்டி ஸ்வேதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. சுவேதத்தைத் தாண்டி ஹைரண்யகம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. ஹைரண்யகத்தைத் தாண்டி நாடுகளால் சூழப்பட்ட ஐராவதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. இறுதியான வர்ஷம் {ஐராவதம்}, வடக்கில் (எல்லையில்) இருக்கிறது, பாரத வர்ஷமோ தெற்கில் (எல்லையில்) இருக்கிறது. இவையிரண்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வில்லின் வடிவத்தில் இருக்கின்றன [2].

(ஸ்வேதம், ஹைரண்யகம், இளாவிருதம், ஹரிவர்ஷம், ஹைமாவத வர்ஷம் ஆகிய) ஐந்து வர்ஷங்கள் மத்தியில் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மத்தியில் இளாவிருதம் இருக்கிறது. (ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள ஐந்துடன் சேர்த்து, ஐராவதம் மற்றும் பாரதம் ஆகியவற்றைச் சேர்த்து உள்ள) இந்த ஏழு வர்ஷங்களில், வடக்கில் உள்ளவை {வர்ஷங்கள்}, அதன் உடனடித் தெற்கில் உள்ளவற்றை {வர்ஷங்களை} விட, வாழ்நாளின் காலம், உடற்கட்டு, உடல்நலம், நீதி, இன்பம் மற்றும் பொருள் ஆகிய பண்புகளில் விஞ்சி நிற்கின்றன.

இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பூமி மலைகளால் நிரம்பியிருக்கிறது. ஹேமகூடத்தின் பெரும் மலைகள் கைலாசம் என்றும் அழைக்கப்படுகின்றன. {ஹேமகூடத்தின் பெரும் மலைகளில் ஒன்றுதான் கைலாசம் என்றிருக்கலாம்}. அங்கே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வைஸ்ரவணன் {குபேரன்} தனது நேரத்தைக் குஹ்யர்களுடன் இன்பமாகக் கழிக்கிறேன். கைலாசத்திற்கு உடனடி வடக்கில், மைநாக மலைகளுக்கு அருகில், பெரியதும், தங்கச் சிகரங்களைக் கொண்டதுமான மணிமயம் {ஹரண்யசிருங்கம்} என்று அழைக்கப்படும் அழகிய மலை இருக்கிறது. இந்த மலையைத் தவிர அங்கே, பெரிதானதும், அழகானதும், படிகம் போன்றதும், (தன் கரையில்) தங்க மணல்களைக் கொண்டதுமான பிந்துசரஸ் என்கிற இனிய தடாகம் இருக்கிறது. மன்னன் பகீரதன், தன் பெயரால் {பாகீரதி என்று} அழைக்கப்படும் கங்கையைக் பார்த்தபடி பல வருடங்களாக அங்கேதான் தங்கியிருந்தான். அங்கே எண்ணிலடங்காதவையும், ரத்தினங்களாலானவையுமான வேள்விக் குச்சிகளையும் {யூபங்களையும்}, தங்கத்தாலான சைத்திய மரங்களையும் {வேள்வி மேடைகளையும்} காணலாம். ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்} அங்கேதான் வேள்விகளைச் செய்து (தவ) வெற்றியை அடைந்தான். அங்கேதான் அனைத்துயிரினங்களின் தலைவனும், உயர்ந்த சக்தியைக் கொண்டவனுமான அனைத்து உலகங்களின் நித்திய படைப்பாளன் {சிவன்}, தனது பேய்த்தொண்டர்களால் சூழப்பட்ட படி துதிக்கப்படுகிறான்.

அங்கேதான் நரன் மற்றும் நாராயணன், பிரம்மன், மனு, ஐந்தாவதாக ஸ்தாணுவும் (எப்போதும்) இருக்கின்றனர். அங்கேதான் மூன்று ஊற்றுகளைக் கொண்ட [3] தெய்வீக ஓடையான கங்கை, பிரம்மலோகத்தில் இருந்து முதலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, வஸ்வோகஸாரை, நளினி, பாவத்தைத் தூய்மைசெய்யும் சரஸ்வதி, ஜம்பூநதி, சீதை, கங்கை, ஏழாவதாகச் சிந்து என ஏழு ஓடைகளாகத் [4] தன்னைப் பிரித்துக் கொள்கிறாள். உயர்ந்த தலைவன் {சிவன்} (தானே) அந்தத் தெய்வீக ஓடையைப் பார்க்க முடியாததாக ஏற்பாடு செய்திருக்கிறான். யுக முடிவிற்குப் பிறகு (படைப்புகள் தொடங்கும் முன்) ஆயிரம் சந்தர்ப்பங்களில், அங்கேதான், (தேவர்களாலும், முனிவர்களாலும்) வேள்விகள் செய்யப்பட்டன. சரஸ்வதியைப் பொறுத்தவரை, (அவளது வழியில்) சில இடங்களில் அவள் {சரஸ்வதி} கண்ணுக்குப் புலப்படுபவளாகவும், சில இடங்களில் புலப்படாதவளாகவும் இருக்கிறாள். இந்த ஏழு அடுக்குக் கொண்ட கங்கை மூன்று உலகங்களிலும் பரந்து அறியப்படுகிறது.

ராட்சசர்கள் இமயத்திலும், குஹ்யர்கள் ஹேமகூடத்திலும், பாம்புகளும், நாகர்கள் நிஷதத்திலும், தவசிகள் கோகர்ணத்திலும் வசிக்கின்றனர். ஸ்வேத மலைகள், தேவர்கள் மற்றும் அசுரர்களின் வசிப்பிடமாகச் சொல்லப்படுகிறது. கந்தர்வர்கள் எப்போதும் நிஷதங்களிலும் {நிஷத மலைகளிலும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் நீலத்திலும் {நீல மலைகளிலும்} வசிக்கின்றனர். சிருங்கவத {சிருங்கவான்} மலைகள் எப்போதும் தேவர்களின் ஓய்விடமாகக் கருதப்படுகிறது.

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உலகத்தின் ஏழு வர்ஷங்களான இவை இப்படியே பிரிந்திருக்கின்றன. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் இவற்றிலேயே நிலைபெற்று இருக்கின்றன. தேவ மற்றும் மனித செழிப்பு ஆகிய இரண்டின் பல்வேறு வகைகள் அவற்றில் காணப்படுகின்றன. அவை எண்ண முடியாதனவாகவும் இருக்கின்றன. எனினும், நான் உம்மிடம் சொன்னதும், முயலின் வடிவத்தைக் கொண்டதுமான மகிழ்ச்சி நிறைந்த பகுதியைக் குறித்த (இவை அனைத்தையும்) தங்கள் சொந்த நன்மையில் விருப்பம் கொண்டோர் நம்புகின்றனர். நன்மையை அடைய விருப்பமுள்ளவனால் அவசியம் நம்பத்தக்கது. இந்தப் பகுதியின் எல்லைகளில், வடக்கில் ஒன்றும் {ஐராவதம்}, தெற்கில் மற்றொன்றும் {பாரதம்} என இரு வர்ஷங்கள் இருக்கின்றன. அவை இரண்டும் உமக்கு இப்போது சொல்லப்பட்டன. மேலும் நாகத்வீபம் என்றும் காசியபத்வீபம் என்று இரு தீவுகள், முயல் வடிவப் பகுதியின் இரு காதுகளாக இருக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தாமிரத் தட்டுகளைப் [5] போன்ற பாறைகளைக் கொண்டவையான அழகிய மலய மலைகள், முயல் வடிவத்தை ஒத்திருக்கும் ஜம்பூத்வீபத்தின் மற்றொரு (முக்கிய) பகுதியாக இருக்கிறது” என்றான் {சஞ்சயன்}.

நாவலந்தீவு!- பீஷ்ம பர்வம் பகுதி – 007-வடக்கு குருவைக் குறித்த வர்ணனை; அங்கிருக்கும் மரங்கள், மனிதர்கள், குளங்கள் பற்றிய குறிப்பு; பத்திராசுவம் குறித்த குறிப்பு; நாவலந்தீவு குறித்த வர்ணனை; அங்கிருக்கும் நாவல் மரம், மற்றும் அதன் கனி குறித்த குறிப்பு; நாவலந்தீவில் இருந்து உத்திர குருவுக்கு ஓடும் நதியைப் பற்றிய குறிப்பு; மால்யவாத மலையினைப் பற்றிய குறிப்பு…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, பெரும் புத்திக்கூர்மை கொண்டவனே, மேருவின் வடக்கு மற்றும் கிழக்கு பக்கத்தின் பகுதிகளையும், மால்யவான் மலைகளையும் குறித்து விரிவாக எனக்குச் சொல்வாயாக.”

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நீல மலையின் தெற்காகவும், மேருவின் வடக்காகவும், சித்தர்களின் வசிப்பிடமானதும், புனிதமானதுமான வடக்கு குரு {உத்தரக் குரு} இருக்கிறது. அங்கே இருக்கும் மரங்கள் இனிமையான கனிகளைச் சுமக்கின்றன. அவை எப்போதும் கனிகளாலும், மலர்களாலும் நிறைந்திருக்கின்றன. (அங்கே இருக்கும்) அனைத்து மலர்களும் மணமிக்கவையாகவும், கனிகள் அற்புத சுவை கொண்டவையாகவும் இருக்கின்றன. மேலும், அங்கே இருக்கும் மரங்களில் சில, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பறிப்பவரின்) விருப்பத்தின்படி கனிகளைக் கொடுக்கின்றன.

மேலும், அங்கே சில மரங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பால் சுரப்பவை {க்ஷீரிகள்} என்று அழைக்கப்படுகின்றன. அவை எப்போதும் பாலைச் சுரந்து, அமிர்தத்தைப் போன்ற சுவை கொண்ட ஆறு வேறுபட்ட வகைகளிலான உணவைக் கொடுக்கின்றன. அந்த மரங்கள் ஆடைகளையும் தருகின்றன. அவற்றின் கனிகளில் (மனிதர்களின் பயன்பாட்டுக்கான) ஆபரணங்களும் இருக்கின்றன. அந்த முழு நிலமும் தங்க மணற்துகள்களால் நிரம்பியிருக்கின்றன. அந்த இடத்தின் ஒரு பகுதி மிக இனிமை நிறைந்ததாகவும், மாணிக்கம், அல்லது வைரம், அல்லது வைடூரியம், அல்லது பிற கற்கள் மற்றும் ரத்தினங்களின் பிரகாசத்தையும் கொண்டிருக்கிறது. அனைத்து பருவகாலங்களும் அங்கே இனிமையானதாக இருக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நிலத்தில் எங்கும் சேறு இருப்பதில்லை. அங்கிருக்கும் குளங்கள் அழகானவையாகவும், சுவை நிறைந்தவையாகவும், தெளிந்த நீரைக் கொண்டனவாகவும் இருக்கின்றன.

தேவலோகத்தில் {தேவநிலையில்} இருந்து விழுந்தவர்களே அங்கே மனிதர்களாகப் பிறக்கிறார்கள். அங்கே அனைவரும் தூய பிறப்பு கொண்டவர்களாகவும், மிக அழகான தோற்றத்துடனும் இருக்கிறார்கள். (எதிர்பாலினம்) கொண்ட இரட்டையர்கள் அங்கே {தம்பதியினராகவே} பிறக்கிறார்கள். மேலும் பெண்கள் அப்சரசுகளைப் போன்ற அழகுள்ளவர்களாக இருக்கிறார்கள். (ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) பால்சுரக்கும் மரங்களில் இருந்து அமிர்தத்தைப் போன்ற இனிய சுவை கொண்ட பாலை அவர்கள் பருகுகின்றனர். அங்கே பிறக்கும் (எதிர் பாலினம் = ஒரு ஆண், ஒரு பெண் கொண்ட) இரட்டையர்கள் சமமாகவே வளர்கின்றனர். இருவரும் சம அழகுடனும், இருவரும் ஒத்த குணநலன்களுடனும், இருவரும் சமமாக உடுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அன்றில் {சக்கரவாகப் பறவைகளின்} இணையைப் போலக் காதலுடன் {அன்புடன்} வளர்கின்றனர்.

அந்த நாட்டில் இருக்கும் மக்கள் நோயின்றி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பதினோராயிரம் {11,000} வருடங்கள் {ஒன்றாக} வாழும் அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருபோதும் ஒருவரை ஒருவர் கைவிடுவதில்லை. கூர்மையான அலகுகளைக் கொண்டவையும், பெரும் பலம் கொண்டவையுமான பாருண்டங்கள் என்று அழைக்கப்படும் ஒருவகைப் பறவைகள், அவர்கள் இறந்ததும், அவர்களை எடுத்துக் கொண்டு போய், மலைக்குகைகளில் வீசுகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் இப்போது உமக்கு வடக்குக் குருக்களை {உத்தரக் குருக்களைக்} குறித்துச் சுருக்கமாக விவரித்துவிட்டேன்.

உமக்கு நான் இப்போது முறையாக மேருவின் கிழக்குப் பக்கத்தை விவரிக்கிறேன். அங்கிருக்கும் பகுதிகள் அனைத்திலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பத்திராசுவம் முதன்மையானதாகும். அங்கேதான் பத்திரசாலம் எனும் பெரும் காடும், காலாம்ரம் என்று அழைக்கப்படும் பெரும் மரமும் இருக்கின்றன. இந்தக் காலாம்ரம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எப்போதும் கனிகளாலும், மலர்களாலும் நிறைந்திருக்கிறது. மேலும், ஒரு யோஜனை உயரம் கொண்ட அந்த மரம் சித்தர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்படுகிறது. அங்கே இருக்கும் மனிதர்கள் வெண்ணிறமும், பெரும் சக்தியும், பெரும் பலமும் கொண்டிருக்கின்றனர்.

அங்கே இருக்கும் பெண்கள் ஆம்பல் {மலரின்} நிறத்தோடு மிக அழகாகவும், பார்வைக்கு இனிமையானவர்களாகவும் இருக்கிறார்கள். நிலவின் காந்தியையும், நிலவின் வெண் நிறத்தையும் கொண்டவர்களான அவர்களின் முகங்களும் முழு நிலவைப் போலவே இருக்கின்றன. அவர்களின் உடல்கள், நிலவின் கதிர்களைப் போலவே குளுமையாக இருக்கின்றன. அவர்கள் அனைவரும் பாடவும், ஆடவும் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அங்கே மனித வாழ்வின் காலம் பத்தாயிரம் {10,000} வருடங்களாகும். காலாம்ரத்தின் சாறை அருந்தும் அவர்கள் எப்போதும் இளமையுடனே இருக்கிறார்கள்.

நீலத்திற்கு {நீல மலையின்} தெற்காகவும், நிஷதத்திற்கு {நிஷதமலையின்} வடக்காகவும், நித்தியமான ஒரு பெரும் ஜம்பூ {நாவல்} மரம் இருக்கிறது. சித்தர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்படும் அந்தப் புனித மரம், விரும்பிய அனைத்தையும் கொடுக்கவல்லதாக இருக்கிறது. அந்த மரத்தின் பெயரால்தான் இந்தப் பகுதி எப்போதும் ஜம்பூத்வீபம் {நாவலந்தீவு} என்று அழைக்கப்படுகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயிரத்துநூறு {1,100} யோஜனைகள் உயரம் உள்ள இந்த மரங்களின் இளவரசன் {ஜம்பூ}, சொர்க்கத்தையே தொட்டுக் கொண்டு நிற்கிறான்.

இரண்டாயிரத்து ஐநூறு {2,500} முழங்கள் [1] பரப்பளவு கொண்ட அந்த மரத்தின் கனி பழுக்கும்போது வெடிக்கிறது. பூமியில் விழும் இந்தக் கனிகள் உரத்த ஒலியை எழுப்புகின்றன. மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவை வெள்ளி நிறத்திலான சாறை பூமியில் பொழிகின்றன. அந்த நாவற்சாறு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு நதியாகி, மேருவை வலம் வந்து, வடக்குக் குருக்களுக்கு {உத்தரக் குருவுக்கு} செல்கிறது. அந்தக் கனியின் சாறு பருகப்படும்போது, அது மன அமைதியை விளைவிக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் பிறகு தாகமே உணரப்படுவதில்லை. {அதைப் பருகுபவர்களை} முதுமை பலவீனமாக்குவதில்லை.தெய்வீக ஆபரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவதும், இந்திரகோபக பூச்சிகளின் {பட்டுப்பூச்சிகளின்} நிறத்தைப் போன்றதும், பெரும் பிரகாசம் கொண்டதுமான ஜாம்பூநதம் என்ற தங்கத்தின் வகைகளில் ஒன்று இந்த இடத்தில் உண்டாகிறது. இந்த இடத்தில் பிறப்பவர்கள் காலைச் சூரியனின் நிறத்தைக் கொண்டிருக்கின்றனர்.

மால்யவாத மலையின் உச்சியில், ஓ! பாரதக்குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யுகத்தின் முடிவில், அண்ட அழிவுக்காகச் சுடர்விட்டு எரியும் சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு எப்போதும் காணப்படுகிறது. மால்யவாதத்தின் சிகரத்தில் கிழக்கு நோக்கி பல சிறு மலைகள் இருக்கின்றன. அந்த மால்யவாதம், ஓ! மன்னா, பதினோராயிரம் {11,000} யோஜனைகள் அளவைக் கொண்டதாகும் [2]. அங்கே பிறக்கும் மனிதர்கள் தங்க நிறத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பிரம்ம லோகத்தில் இருந்து விழுந்தவர்களும், பிரம்மத்தை உச்சரிப்பவர்களுமாவர். அவர்கள் தங்கள் உயிர்வித்தை மேலெழுப்பிக் கடும் தவத்துறவுகளை மேற்கொள்கின்றனர். உயிரினங்களின் பாதுகாப்புக்காக அவர்கள் அனைவரும் சூரியனுக்குள் நுழைகிறார்கள். எண்ணிக்கையில் அறுபத்தாறாயிரம் {66,000} கொண்ட அவர்கள், அருணனுக்கு முன்பாகவே சூரியனைச் சூழ்ந்து கொண்டு செல்கிறார்கள். சூரியக் கதிர்களால் அறுபத்தாறாயிரம் {66,000} ஆண்டுகள் சுடப்பட்ட பிறகு அவர்கள் சந்திரவட்டிலில் நுழைகிறார்கள்” என்றான் {சஞ்சயன்}.

அண்டத்தில் படர்ந்து ஊடுருவி இருப்பவன்!- பீஷ்ம பர்வம் பகுதி – 008-ரோமணகம், ஹிரண்யமயம், ஐராவதம் ஆகிய வர்ஷங்களைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; பாற்கடலின் வடக்கில் இருக்கும் விஷ்ணுவின் மகிமையைச் சஞ்சயன் சொல்வது; காலமே பெரியதென்றும், அனைத்திலும் ஊடுருவி படர்ந்திருக்கும் காலத்தையே, வைகுண்டன் எனத் தேவர்களும், விஷ்ணு என மனிதர்களும் அழைக்கிறார்கள் என்று திருதராஷ்டிரன் சொல்வது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, அனைத்து வர்ஷங்கள், அனைத்து மலைகள் அனைத்தின் பெயர்களையும், அந்த மலைகளில் வசிப்போர் அனைவரின் பெயர்களையும் உண்மையில் எனக்குச் சொல்வாயாக”

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஸ்வேதத்திற்கு {ஸ்வேத மலைக்குத்} தெற்காகவும், நிஷதத்திற்கு வடக்காகவும், ரோமணகம் {ரமணகம்} என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே பிறக்கும் மனிதர்கள் அனைவரும் வெள்ளை நிறம் கொண்டோராகவும், நல்ல தாய் தந்தையரை உடையவராகவும், அழகிய குணநலன்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கே பிறப்பவர்கள் அனைவரும் எதிரிகளற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே {ரோமணகத்தில்} அவர்கள் பதினோராயிரத்து ஐநூறு {11,500) ஆண்டுகள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் வாழ்கிறார்கள்.

நிஷதத்திற்குத் தெற்கே ஹிரண்யமயம் என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே ஹைரண்யவதி என்று அழைக்கப்படும் நதி ஒன்று இருக்கிறது. அங்கேதான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பறவைகளின் முதன்மையானவன் எனப் பெயர் கொண்டவனான கருடன் வாழ்கிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் யக்ஷர்களைப் பின்பற்றுபவர்களாகவும், செல்வந்தர்களாகவும், அழகிய குணநலன்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கே இருக்கும் மனிதர்கள் பலம் கூடியவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பனிரெண்டாயிரத்து ஐநூறு {12,500} ஆண்டுகள் வாழ்கிறார்கள். அதுவே அவர்களது வாழ்வின் அளவாகும்.

ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, சிருங்காவத மலைகள் மூன்று அழகிய சிகரங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தங்கத்தாலும், {ஒன்று} ரத்னங்களாலும் ஆனது. மற்றொன்று அனைத்து வகை ரத்தினங்களாலும் செய்யப்பட்டு மிக அற்புதமானதாக இருக்கிறது. அது பெரிய மாளிகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அங்கேதான் சாண்டிலி என்ற பெயர் கொண்டவளும், சுய காந்தி கொண்டவளுமான மங்கை எப்போதும் வாழ்கிறாள்.

சிருங்காதவதத்திற்கு வடக்கே கடலின் எல்லை வரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஐராவதம் என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே இந்த ரத்தினமயமான மலையிருப்பதால், இந்த வர்ஷம் அனைத்திலும் மேன்மையானதாக இருக்கிறது. அங்கே சூரியன் வெப்பத்தைக் கொடுப்பதில்லை. மனிதர்கள் அங்கே கிழட்டுத் தன்மைக்கு ஆளாவதில்லை. நட்சத்திரங்களுடன் கூடிய நிலவுதான் அங்கே வெளிச்சத்துக்கான ஒரே தோற்றுவாயாக (ஆகாயத்தை) மூடிக் கொண்டிருக்கிறது. தாமரையின் நிறம் மற்றும் பிரகாசத்தைக் கொண்டவர்களும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்களுமான அங்கே பிறக்கும் மனிதர்கள், தாமரையின் மணத்தையும் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள். சிமிட்டாத கண்களும், (தங்கள் உடல்களில் இருந்து வெளிவரும்) இனிமையான நறுமணமும் கொண்ட அவர்கள் உணவின்றித் தங்கள் புலன்களை அடக்கி வாழ்பவர்களாவர். அவர்கள் அனைவரும் தேவர்களின் பகுதியில் இருந்து விழுந்தவர்களாவர். மேலும் அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எந்தவிதமான பாவத்தையும் செய்யாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் பதிமூன்றாயிரம் {13,000} ஆண்டுகளுக்கு அந்த வாழ்வை வாழ்கிறார்கள். ஓ பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அதுவே அவர்களது வாழ்வின் அளவாகும்.

அப்படியே பாற்கடலின் வடக்கில், அளவிலா வலிமை கொண்டவனான தலைவன் ஹரி {விஷ்ணு}, தனது தங்கத்தேரில் {பொற்சகடத்தில்} வசிக்கிறான். அந்த வாகனம், எட்டு சக்கரங்களையுடையதும், இயல்புக்குமிக்க எண்ணிலா உயிரினங்களைக் {பூதங்களைக்} கொண்டதும், மனோ வேகம் கொண்டதாகவும் இருக்கிறது. நெருப்பு போன்ற நிறமும், வலிமைமிக்க சக்தியும் கொண்ட அது ஜம்பூநதத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துயிர்களுக்கும் தலைவனான அவன் {ஹரி}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன்னில் அனைத்து வகைச் செழிப்பையும் கொண்டிருக்கிறான். (பிரளயம் ஏற்படும்போது) அவனிலேயே இந்த அண்டம் கலக்கிறது. (படைப்பின் விருப்பம் அவனைப் பீடிக்கும்போது) அவனிலிருந்தே அது மீண்டும் உற்பத்தியாகிறது. செயல்படுபவனாகவும், அனைவரையும் செயல்பட வைப்பவனாகவும் இருப்பவன் அவனே {விஷ்ணுவே}. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நிலமாகவும், நீராகவும், வெளியாகவும் {ஆகாயமாகவும்}, காற்றாகவும், நெருப்பாகவும் இருப்பவன் அவனே. அனைத்துயிர்களுக்கும் வேள்வியின் வடிவமாக இருப்பவன் அவனே. நெருப்பு {அக்னியே} அவனது {விஷ்ணுவின்} வாயாக இருக்கிறது {இருக்கிறான்}” என்றான் {சஞ்சயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சஞ்சயனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த உயர் ஆன்ம மன்னன் திருதராஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தனது மகன்களைக் குறித்த {நினைவில்} தியானத்தில் ஆழ்ந்தான். பெரும் சக்தி கொண்ட அவன் {திருதராஷ்டிரன்}, {இப்படிச்} சிந்தித்த பிறகு, இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! சூதனின் மகனே {சஞ்சயா}, அண்டத்தை அழிப்பது காலமே என்பதில் ஐயமில்லை. அனைத்தையும் மீண்டும் படைப்பதும் காலமேயாகும். இங்கே எதுவும் நிலையானதில்லை {நித்தியமில்லை}. அனைத்திலும் ஊடுருவி பரந்திருக்கும் தன்மை பெற்ற {சர்வ வியாபிகளான} நரன் மற்றும் நாராயணனே அனைத்து உயிர்களையும் அழிப்பவர்களாவர். தேவர்கள் அவனை வைகுண்டன் (அளவிலா வலிமை கொண்டவன்) என்று சொல்கின்றனர். அதே வேளையில் மனிதர்கள் அவனை விஷ்ணு (அண்டத்தில் படர்ந்து ஊடுருவி இருப்பவன்) என்று அழைக்கின்றனர்” என்றான் {திருதராஷ்டிரன்}.

பாரதத்தின் ஆறுகள் மற்றும் நாடுகள்!- பீஷ்ம பர்வம் பகுதி – 009-பாரதக் கண்டத்தைக் குறித்து விரிவாகச் சொல்லும்படி சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் கேட்பது; பாரதத்தில் உள்ள முக்கியமான மலைகள், ஆறுகள், நாடுகள் ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது; பூமியைப் பாதுகாப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்தும்; மன்னர்கள் பூமியின் மேல் ஏன் பேராசை கொள்கிறார்கள் என்பது குறித்தும் சஞ்சயன் சொல்வது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “இந்தப் புத்தியற்ற படை எங்குச் சேர்ந்திருக்கிறதோ, எதன் காரணமாக எனது மகனான இந்தத் துரியோதனன் இவ்வளவு பேராசை கொண்டவனாக இருக்கிறானோ, எதனை அடைய பாண்டுவின் மகன்களும் விரும்புகிறார்களோ, எது எனது மனதையும் பாவத்தில் ஆழ்த்துகிறதோ, எது பரதனின் பெயரால் அழைக்கப்படுகிறதோ, அப்படிப்பட்ட இந்த வர்ஷத்தைக் {கண்டத்தை – பாரதக்கண்டத்தைக்} குறித்த உண்மையை (ஓ! சஞ்சயா) எனக்குச் சொல்வாயாக. ஓ! எனது தீர்மானத்தின் படி நீ புத்திக்கூர்மையுள்ளவன் என்பதால், இதை எனக்குச் சொல்வாயாக.”

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எனது வார்த்தைகளைக் கேளும். இந்த நாட்டைக் குறித்துப் பேராசை கொண்டவர்களாகப் பாண்டுவின் மகன்கள் இல்லை. மறுபுறம், துரியோதனனே பேராசைக் கொண்டவனாக இருக்கிறான். சுபலனின் மகனான சகுனியும், மாகாணங்களின் ஆட்சியாளர்களாக இருக்கும் பிற க்ஷத்திரியர்களான பலரும் அப்படியே {பேராசை கொண்டவர்களாகவே} இருக்கிறார்கள். நான் இப்போது உமக்கு, பரதனின் பெயரால் அறியப்படும் நிலப்பகுதியைக் {பாரதக்கண்டத்தைக்} குறித்துச் சொல்கிறேன்.

இந்த நிலம் இந்திரனுக்குப் பிடித்தமானதாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பரதனின் பெயரால் அழைக்கப்படும் இந்த நிலம் {இந்தப் பாரதக்கண்டம்}, விவஸ்வானின் மகனான மனு {வைவஸ்வதமனு}, பிருது, வைனியன், உயர்ஆன்ம இக்ஷவாகு, யயாதி, அம்பரீஷன், மாந்தாதா, நகுஷன், முசுகுந்தன், உசீநரனின் மகன் சிபி, ரிஷபன், ஐலன், நிருகன், குசிகன், ஓ! ஒப்பற்றவரே {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம காதி, சோமகன், ஓ! தடுக்கப்படமுடியாதவரே {திருதராஷ்டிரரே}, திலீபன் மற்றும் ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பலசாலிகளான பிற க்ஷத்திரியர்கள் பலருக்கும் பிடித்தமானதாகும்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, நான் அதைக் கேள்விப்பட்டபடியே, நான் இப்போது அந்த நாட்டைக் குறித்து விளக்கப் போகிறேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் என்னிடம் கேட்டதற்கு நான் சொல்வதை {நான் சொல்லும் பதிலைக்} கேளும். மகேந்திரம், மலயம் சஹ்யம், சுக்திமான், ரக்ஷவான் {ரிக்ஷவான்}, விந்தியம், பாரியாத்ரம் ஆகிய இவை ஏழும் (பாரத வர்ஷத்தின் {கண்டத்தின்}) கால-மலைகளாகும் {குலாசலங்களாகும்} [1].

இவை தவிர்த்து ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கடினமானவையும், பெரியதானவையும், அற்புத பள்ளத்தாக்குகளைக் கொண்டவையுமான அறியப்படாத பல மலைகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இவை தவிர, காட்டுமிராண்டி இனத்தோரால் [2] வசிக்கப்படும் சிறு மலைகளும் இங்கே பல இருக்கின்றன. ஓ! கௌரவ்யா {திருதராஷ்டிரரே}, இரண்டு தனிமங்கள் {பூதங்கள்} கலந்தவர்களான ஆரியர்களும், மிலேச்சர்களும், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் [3], ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பிரம்மாண்டமான கங்கை, சிந்து, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, பெரும் நதியான யமுனை, திருஷத்வந்தி, விபாபை, விபாசை, ஸ்தூலவாலுகை, வேத்ரவதி ஆறு, கிருஷ்ண வேணி என்று அழைக்கப்படும் மற்றொன்று, இராவதி, விதஸ்தை, பயோஷ்ணி, தேவிகை, வேதஸ்மிருதை, வேதவதி, திரிதிவை, இக்ஷுமாலவி {இக்ஷூலை}, கரீஷ்ணி, சித்திரவாகை, சித்திரசேனை என்று அழைக்கப்படும் நதி, கோமதி, தூடபாதை, கந்தகி என்று அழைக்கப்படும் பெரும் நதி, கௌசிகி, நிஸ்சித்திரை, கிருத்யை, நிசிதை {நிசிதிரை}, லோகதாரணி {லோகிதாரணி}, ரஸசி {ரகஸ்யை}, சதகும்பை, சரயு, சர்மண்வதி, வேத்ரவதி, ஹஸ்திசோமை, திசை {திக்}, சராவதி என்று அழைக்கப்படும் நதி, வேணை, பீமரதி, காவேரி, சுலுகை, வீணை {வாணி}, சதபலை, நீவாரை, மகிளை {அஹிதை}, சுப்ரயோகை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பவித்ரை, குண்டலி, ராஜனி, புரமாலினி, பூர்வாபிராமை, வீரை, பீமை, ஓகவதி, பாலாசினி {பாசாசினி}, பாபஹரை. மகேந்திரை, பாடலாவதி, கரீஷிணி, அசிகனி, பெரும் நதியான குசசீரை, மகரி, பிரவாரை, மேனை, ஹேமை, திருதவதி, புராவதி, அனுஷ்ணை, சைப்யை, காபி, ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, சதாநீரை, அத்ரிஷ்யை, வலிமைமிக்க ஓடையான குசதாரை, சதாகாந்தை, சிவை, வீரவதி, வத்சு {வஸ்த்ரை}, சுவத்சு {சுவஸ்த்ரை}, கம்பனை, ஹிரண்யவதி, வரை, வலிமைமிக்க நதியான பஞ்சமி, ரதசித்ரை, ஜோதிரதை, விஸ்வாமித்ரை, கபிஞ்சலை, உபேந்திரை, பஹுலை, குசீரை {குவீரை}, மதுவாஹினி {அம்புவாஹினி}, விநதி, பிஞ்சலை, வேணை, பெரும் நதியான புங்கவேணை {துங்கவேணை}, விதிசை, கிருஷ்ணவேணை, தாம்ரை, கபிலை, சலு, சுவாமை, வேதாஸ்வை, பெரும் நதியான ஹரிஸ்ராவை, சீக்ரை, பிச்சிலை, பாரத்வாஜி நதி, கௌசிகி நதி, சோணை, சந்திரமை, துர்க்கமந்திரசிலை {துர்க்கை}, பிரம்மவேத்யை, ப்ருஹத்வதி, யவக்ஷை, ரோஹி, ஜாம்பூநதி, சுநசை, தமசை, தாசி, வசை {வஸாமன்யை}, வருணை, அசி, நீலை, திருமதி {திருதவதி}, வலிமைமிக்க நதியான பர்ணாசை, போமசி {மானவி}, விருஷபை, பிரம்மமேத்யை, பிருஹத்வநி என்ற ஆறுகளில் உள்ள நீரைக் குடிக்கின்றனர்.

இவையும், இவை தவிரப் பிற பெரும் நதிகளான, சதோநிர்மாயை, கிருஷ்ணை, மந்தகை, மந்தவாஹினி, மஹாகௌரி, துர்க்கை, சித்ரோபலை, ஓ! பாரதா {திருதராஷ்டிரரே), ஆகியவையும் இருக்கின்றன. சித்ரரதை, மஞ்சுளை, வாஹினி, மந்தாகினி, வைதரணி, கோஷை, மகாநதி, சுக்திமதி, அனங்கை, புஷ்பவேணி, உத்பலவதி, லோஹித்யை, கரதோயை, விருஷசப்யை {விருஷகை}, குமாரி, ரிஷிகுல்யை, மாரிஷை, சரஸ்வதி, மந்தாகிநி. சுபுண்யை, சர்வசங்கை ஆகியவையும், ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, பெரும்பலனைக் கொடுக்க வல்லவையாக இருக்கின்றன. இவை அனைத்தும் இந்த அண்டத்தின் தாய்மார்களாக இருக்கின்றன. இவை தவிரவும், (பெயர்) அறியப்படாத நதிகள் இங்கே நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் எனது நினைவில் உள்ள நதிகள் அனைத்தையும் மட்டும் இங்கே நினைவுகூர்ந்திருக்கிறேன்.

இதன்பிறகு, நான் குறிப்பிடப்போகும் மாகாணங்களின் பெயர்களைக் குறித்துக் கேளும். குரு-பாஞ்சாலம், சால்வம், மாத்ரேயம், ஜாங்கலம், சூரசேனம், கலிங்கம், போதம், மாலம், மத்ஸ்யம், சௌவல்யம், குந்தலம், காசிகோசலம், சேதி, கரூசம், போஜம், சிந்து, புளிந்தகம், உத்தமம், தசார்ணம், மேகலம், உத்கலம், பாஞ்சாலம், கௌசிஜம், நைகபிருஷ்டம், துரந்தரம், சோதம், மத்ரபூஜிங்கம், காசி, அதிகாசி {அபரகாசி}, ஜடரம், குகுரம், ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, குந்தி, அவந்தி, தசார்ணம், அதிகுந்தி {அபரகுந்தி}, கோமந்தம், மந்தகம், சண்டம், விதர்ப்பம், ரூபவாஹிகம், அஸ்வகம், பான்சுராஷ்ட்ரம், கோபராஷ்ட்ரம், கரீதியம், அதிராஜ்யம், குலாத்யம், மல்லராஷ்டிரம், கேரளம், வாரத்ராஸ்யம், ஆபவாஹம், சக்ரம், வக்ரதபம், சகம், விதேகம், மகதம், ஸ்வக்ஷம், மலயம், விஜயம், அங்கம், வங்கம், களிங்கம், யகிருல்லோமம், மல்லம், சுதேளம், பிரனராதம், மாஹிகம், சசிகம், பாஹ்லீகம், வாடதானம், ஆபீரம், காலஜோஷகம், அபராந்தம், பராந்தம், பாநாபம், சர்மமண்டலம், அடவீசிகரம், மகாபூதம், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உபாவிருத்தம், அநுபாவிருத்தம், சுராஷ்ட்ரம், கேகயம், குதம், மாஹேயம், கக்ஷம் சமுத்ரநிஷ்குடம், ஆந்திரம், மேலும் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையில் இருக்கும் பல மலை நாடுகள், மலைகளின் அடிவாரத்திலும் வெளிப்புறத்திலும் உள்ள பல நாடுகள், அங்கமலஜங்கள், மானவர்ஜகம், பிராவிருஷேயம், பார்க்கவம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புண்ட்ரம், பர்க்கம், கிராதம், சுதேஷ்ணம், யாமுனம், சகம், நிஷாதம் {நிஷதம்}, ஆனர்த்தம், நைருதம், துர்க்காலம், பிரதிமத்ஸ்யம், குந்தலம், குசலம், தீரக்ரஹம், ஈஜிகம், கன்யககுணம், திலபாரம், சமீரம், மதுமாதம் {மதுமான்}, சுகந்தகம், காஸ்மீரம், சிந்துசௌவீரம், காந்தர்வம், தர்சகம், அபீசாரம், உதூலம், சைவலம், பாஹ்லிகம், தார்வி, வானவம்தர்வம், வாதகம், அமாரதம், உரகம், பஹுவாத்யம், கௌரவ்யம், சுதாமானம், சுமல்லிகம், வத்ரம், கரீஷகம், களிந்தம், உபத்யகம், பதயானம், குசபிந்து, கச்சம், கோபாலகக்ஷம், குருவர்ணகம், கிராதம் பர்ப்பரம், சித்தம், வைதேஹம், தாம்ரலிப்தகம், ஔண்ட்ரம், பௌண்ட்ரம், சைசிகடம், பார்வதீயம் ஆகியன இருக்கின்றன.

மேலும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தெற்கில் பிற நாடுகளும் இருக்கின்றன. அவை, திராவிடம், கேரளம், பிரச்யம், மூஷிகம், வனவாசிகம், கர்நாடகம், மஹிஷகம், விகல்பம், மூஷகம், ஜில்லிகம், குந்தலம், சௌன்ருதம், நளகானனம், கான்குட்டகம், சோழம் {சோழ நாடு}, மாலவயகம், சமங்கம், கனகம், குகுரம், அங்கார-மாரிஷம், திவஜினி, உத்ஸவம், ஸங்கேதம், திரிகர்த்தம், சால்வசேனம், வகம், கோகரகம், பாஷ்திரியம், லாமவேகவசம், விந்தியசுலிகம், புளிந்தம், வல்கலம், மாலவம், வல்லவம், அதிவல்லவம் {அபரவல்லவம்}, குளிந்தம், காலவம், குண்டௌகம், கரடம், மிருஷகம், தனபாலம், சனீயம், அளிதம், பாசிவாடம், தநயம், சுலன்யம், ரிஷிகம், விதர்ப்பம், காகம், தங்கணம், அதிதங்கணம் {அபரதங்கணம்} ஆகிய நாடுகள் இருக்கின்றன.

மேலும் வடக்கேயுள்ள இனங்களில், மிலேச்சம், குரூரம், ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, யவனம், சீனம், காம்போஜம், தாருணம், மிலேச்சர்கள் வசிக்கும் நாடு, சுக்ருத்பகம், குலத்தம், ஹூணம், பாரசீகம், ரமணம், தசமாலிகம் ஆகியன இருக்கின்றன. பல க்ஷத்திரிய, வைசிய, சூத்திர குலங்களைத் தவிர மேற்கண்ட நாடுகளும் இருக்கின்றன.

மேலும் இங்கே, சூத்திர-ஆபீரம், தரதம், காஸ்மீரம், பட்டி, காசீரம், ஆத்ரேயம், பரத்வாஜம், ஸ்தனபோஷிகம், புஷோகம், களிங்கம், பல்வேறு இனங்களைச் சேர்ந்த வேடர்கள் வசிக்கும் நாடு, தோமரம், ஹன்சமார்க்கம், கரமஞ்சகம் ஆகியவையும் இருக்கின்றன. இவையும், இன்னும் பிற நாடுகளும் கிழக்கிலும் வடக்கிலும் இருக்கின்றன.

அவற்றில் குறிப்பானவற்றைச் சுருக்கமாக உமக்குச் சொன்னேன். பூமியின் வளங்கள், அதன் தன்மை மற்றும் ஆற்றலுக்கு ஏற்ப முறையாக வளர்க்கப்பட்டால் {காக்கப்பட்டால்}, அஃது எப்போதும் செழிப்பைத் தரும் பசுவைப் போல [4] இருக்கும். அதனிடம் இருந்து அறம், பொருள், இன்பம் என்ற மூன்று வகைக் கனிகளை எப்போதும் கறக்கலாம். அறம் மற்றும் பொருளை அறிந்த வீரமிக்க மன்னர்களே பூமியிடம் பேராசை கொள்கின்றனர். செயல்பாடு மிக்க அவர்கள், செல்வத்தின் மீது கொண்ட பசியால், போரில் தங்கள் உயிர்களையும் துறப்பார்கள். மனித உடல்களைக் கொண்ட உயிரினங்களைப் போலவே தெய்வீக உடல்களைக் கொண்ட உயிரினங்களுக்கும் இந்தப் பூமி புகலிடமாக இருக்கிறது [5].

ஓ! பாரதக் குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பூமியை அனுபவிக்க விரும்பும் மன்னர்கள், ஒன்றிடம் இருந்து ஒன்று இறைச்சியைப் பிடுங்கும் நாய்களைப் போல ஆகிவிட்டனர். அவர்களது இலட்சியம் வரம்பற்றதாகவும், நிறைவை அறியாததாகவும் இருக்கிறது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இதற்காகவே குருக்களும் பாண்டவர்களும் பேச்சுவார்த்தையின் {சாமத்தின்} மூலமும், வேறுபாட்டின் {பேதத்தின்} மூலமும், தானத்தின் மூலமும், போரின் {தண்டத்தின்} மூலமும் பூமியை அடைய முயற்சிக்கிறார்கள். ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, பூமி நன்றாகப் பார்த்துவரப்பட்டடால் {பராமரிக்கப்பட்டு வந்தால்}, அஃது அனைத்து உயிரினங்களுக்கும் தந்தையாகவும், தாயாகவும், பிள்ளைகளாகவும், ஆகாயமாகவும், சொர்க்கமாகவும் ஆகின்றது” என்றான் {சஞ்சயன்}.

நான்கு யுகங்கள்!- பீஷ்ம பர்வம் பகுதி – 010-நான்கு யுகங்களில் தோன்றும் மனிதர்களும், உயிரினங்களும் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, இந்தப் பாரதக் கண்டத்திலும், ஹைமவத வர்ஷத்திலும் {கண்டத்திலும்}, ஹரி வர்ஷத்திலும் வசிப்போரின் வாழ்வின் காலம், பலம், நல்லவை மற்றும் தீயவை, எதிர்காலம், கடந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றை எனக்கு விபரமாகச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாரதக்கண்டத்தில் கிருதம், திரேதம், துவாபரம் மற்றும் கலி ஆகிய நான்கு யுகங்கள் தோன்றுகின்றன. அதில் கிருதமே முதலில் தோன்றும் யுகமாகும். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கிருதத்தின் முடிவில் திரேதம் வருகிறது; திரேதத்தின் முடிவில் துவாபரம் வருகிறது, அனைத்திலும் இறுதியாகக் கலி தோன்றுகிறது.

ஓ! குருக்களில் காளையே, ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிருத சகாப்தத்தில் வாழ்வின் {ஆயுளின்} அளவு நாலாயிரம் {4000} ஆண்டுகள் எனக் கணக்கிடப்படுகிறது.  திரேதத்தில் அந்தக் காலம் மூவாயிரம் {3000} ஆண்டுகளாகும். தற்போது துவாபரத்தில், மனிதர்கள் இந்தப் பூமியில் இரண்டாயிரம் {2000} வருடங்கள் வாழ்கின்றனர். எனினும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கலியில் {கலியுகத்தில்} வாழ்வின் அளவுக்கு ஒரு நிலையான வரம்பு இருக்காது. கருவில் இருக்கும்போதும், பிறந்த உடனும் கூட மனிதர்கள் இறந்து போவார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருத யுகத்தில் பிறக்கும் மனிதர்கள், பெரும் பலம், பெரும் சக்தி,  பெரும் அறிவு ஆகிய பண்புகளையும், அழகிய தன்மைகளையும் மற்றும் செல்வங்களையும் பெற்ற பிள்ளைகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஈன்றெடுத்தார்கள். அந்தக் காலத்தில் {கிருத யுகத்தில்}, தவத்தைச் செல்வமாக உடையவர்களும், பெரும் உழைப்பைக் கொடுக்க இயன்றவர்களும், உயர் ஆன்மா, அறம் மற்றும் உண்மை நிறைந்த பேச்சைக் கொண்டவர்களுமான முனிவர்கள் பிறந்தார்கள். அந்தக் காலத்தில் {கிருத யுகத்தில்} பிறந்த க்ஷத்திரியர்களும் ஏற்புடைய குணங்கள், நல்ல திறம்வாய்ந்த உடல்கள், பெரும் சக்தி, வில்லைப் பயன்படுத்துவதில் பெரும் சாதனை, போரில் உயர்ந்த திறமை ஆகியவற்றைக் கொண்டவர்களாகவும், பெரும் துணிச்சல் {வீரம்} பெற்றவர்களாகவும் இருந்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திரேத காலத்தில் சக்கரவர்த்திகளாக இருந்த க்ஷத்திரிய மன்னர்கள் அனைவரும் கடலில் இருந்து கடல்வரை {இருக்கும் நிலத்தை} ஆண்டார்கள். திரேதத்தில், நீண்ட வாழ்நாளும், பெரும் வீரமும், போரில் பெரும் திறமையுடன் வில்லை பயன்படுத்துபவர்களும், யாருக்கும் அடிபணியாதவர்களுமான வீர க்ஷத்திரியர்கள் பிறந்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துவாபரம் தோன்றும்போது,  பெரும் உழைப்பைக் கொடுக்கவல்லவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், ஒருவரை ஒருவர் வெல்ல விரும்புபவர்களுமாக மனிதர்கள் அனைத்து (நான்கு – பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர) வகையிலும் பிறந்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கலியில் பிறக்கப்போகும் மனிதர்கள்,  சக்தி குறைந்தவர்களாகவும், பெரும் கோபம் கொண்டவர்களாகவும், பேராசை கொண்டவர்களாகவும், உண்மையில்லாதவர்களுமாக {பொய்மை நிறைந்தவர்களுமாக} பிறப்பார்கள். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கலிகாலத்தில், பொறாமை, செருக்கு {தாமே சிறந்தவர் என்ற நினைப்பு}, கோபம், ஏமாற்றுத்தனம் {வஞ்சகம்}, தீய பற்றுதல், பேராசை ஆகிய பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் பிறக்கும். ஓ! மன்னா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, இந்தத் துவாபர யுகத்தில் எஞ்சுவது சிறியதாகவே இருக்கும். {இந்தத் துவாபர யுகத்தில் நற்குணங்கள் அனைத்துக்கும் குறைவுண்டாகும்}. ஹைமவதம் என்று அறியப்படும் வர்ஷம் பாரதக் கண்டத்தைவிட மேன்மையானதாக இருக்கும். அதேவேளையில், ஹரிவர்ஷம், ஹைமவதவர்ஷத்தைவிட அனைத்து குணங்களிலும் மேன்மையானதாக இருக்கும்” என்றான் {சஞ்சயன்}.

மன்னரற்ற அரசுமுறை கொண்ட சாகத்வீபம்!- பீஷ்ம பர்வம் பகுதி – 011-ஜம்பூத்வீபத்தைத் தவிர்த்து வேறு கண்டங்களையும் விளக்குமாறு திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்டது; சாகத்வீபம் இருக்கும் பகுதியைக் குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும், அங்கிருக்கும் மக்கள் குறித்தும், அவர்களது தொழில்களைக் குறித்தும், மன்னரற்ற அரசு முறை குறித்தும் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது …

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, ஜம்பூகண்டத்தைக் குறித்து நீ எனக்கு முறையாக விளக்கிச் சொன்னாய். ஓ! சஞ்சயா, ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயனே}, கடல், சாகத்வீபம், குசத்வீபம், சால்மலித்வீபம், கிரௌஞ்சத்வீபம் ஆகியவற்றின் பரப்பளவை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. மேலும் ராகு, சோமன் {சந்திரன்}, சூரியன் ஆகியவற்றையும் எதையும் விட்டுவிடாமல் எனக்குச் சொல்வாயாக” {என்றான் திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பூமியெங்கும் பரந்திருக்கும் பல தீவுகள் இருக்கின்றன. எனினும், நான் உமக்கு ஏழு தீவுகளை மட்டும் மற்றும் சந்திரன், சூரியன் மற்றும் கோள் (ராகு) ஆகியவற்றையும் விளக்குவேன்

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஜம்பூ மலை,  பதினெட்டாயிரத்து அறுநூறு {18,600} யோஜனைகள் பரந்திருக்கிறது. உப்புக் கடலின் பரப்போ அதை விட இருமடங்காகச் {37,200 யோஜனைகளாகச்} சொல்லப்படுகிறது. அந்தக் கடல் பல நாடுகளால் நிரம்பியும், மணிகளாலும், பவளங்களாலும் அலங்கரிக்கப்பட்டும் இருக்கிறது. அது தவிரவும், அது பல்வேறு வகை உலோகங்களால், பல நிறங்களில் காட்சியளிக்கும், பல மலைகளும் அதில் நிறைந்திருக்கிறது. சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரால் நெருக்கமாகச் சூழப்பட்டிருக்கும் அந்தக் கடல் வட்ட வடிவில் இருக்கிறது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நான் இப்போது சாகத்வீபத்தைக் குறித்து உமக்குச் சொல்லப் போகிறேன். ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, அதை உமக்கு நான் முறையாக விளக்கிச் சொல்வதைக் கேட்பீராக. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தீவு, ஜம்பூத்வீபத்தைவிட இருமடங்கு பரப்புடையதாகும். கடலும், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அதைவிட இரண்டு மடங்குடையதாகும். உண்மையில், ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தச் சாகத்வீபம் அனைத்துப் புறங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. அங்கே இருக்கும் நாடுகளில் நீதி நிறைந்திருக்கிறது. அங்கே இருக்கும் மனிதர்கள் இறப்பதில்லை. {அப்படியிருக்கும்போது}, அங்கே பஞ்சம் எப்படி ஏற்படும்? அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் பொறுமையையும் பெரும் சக்தியையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நான் இப்போது சாகத்வீபத்தைக் குறித்த சுருக்கமான விளக்கத்தைச் சொல்லிவிட்டேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இது தவிர நீர் வேறு எதைக் கேட்க விரும்புகிறீர்?” {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சாகத்வீபத்தைக் குறித்த சுருக்கமான விளக்கத்தை நீ எனக்கு அளித்துவிட்டாய். ஓ! பெரும் அறிவைக் கொண்டவனே, நீ இப்போது அனைத்தையும் உண்மையில் விபரமாகக் கூறுவாயாக” என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “அந்தத் தீவில் {சாகத்வீபத் தீவில்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பொன்னால் அலங்கரிக்கப்பட்டவையும், ரத்தினங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களின் சரங்கங்களைக் கொண்டவையுமாக ஏழு மலைகள் இருக்கின்றன. அந்தத் தீவில் பல ஆறுகளும் இருக்கின்றன. அவற்றின் பெயர்களை நான் சொல்லும்போது கேட்பீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே இருக்கும் அனைத்தும் அற்புதமாவையாகவும், இனிமை நிறைந்தவையுமாக இருக்கின்றன. அந்த மலைகளில் முதன்மையாக மேரு என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. அது தேவர்கள், முனிவர்கள் மற்றும் கந்தர்வர்களின் வசிப்பிடமாக இருக்கிறது. அடுத்ததாகக் கிழக்கு நோக்கிப் படர்ந்திருக்கும் மலயம் என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது அங்கேதான் மேகங்கள் உற்பத்தியாகி, அங்கிருந்துதான் அனைத்துப் புறங்களுக்கும் செல்கின்றன.

அடுத்ததாக, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, ஜலதாரம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மலை இருக்கிறது. அங்கிருந்துதான் இந்திரன் சிறந்த தரத்தில் இருக்கும் நீரைத் தினமும் எடுக்கிறான். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அந்த நீரில் இருந்துதான் நாம் மழைக்காலங்களில் மழையைப் பெறுகிறோம். அடுத்ததாக ரைவதகம் என்று அழைக்கப்படும் உயர்ந்த மலை இருக்கிறது. அதற்கு {அந்த மலைக்கு} மேலே ஆகாயத்தில் ரேவதி என்று அழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டம் நிலையாக இருக்கிறது. இந்த ஏற்பாடு பெரும்பாட்டனாலேயே {பிரம்மனாலேயே} ஏற்படுத்தப்பட்டதாகும். இதற்கு வடக்கில், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, சியாமம் என்று அழைக்கப்படும் பெரும் மலை இருக்கிறது. புதியாய் எழுந்த மேகங்களைப் போன்ற பிரகாசத்தைக் கொண்ட அது மிக உயரமானதாகவும், அழகு நிரம்பியதாகவும், பிரகாசமான உடலைக் கொண்டதாகவும் இருக்கிறது. அந்த மலைகளின் நிறம் கருமையாகஇருப்பதால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே வசிக்கும் மக்கள் அனைவரும் கரிய நிறம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்” என்றான் {சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நீ சொன்னதிலிருந்து, ஓ! சஞ்சயா, எனது மனதில் ஒரு பெரிய ஐயம் எழுகிறது. ஓ! சூதனின் {கவல்கணனின்} மகனே {சஞ்சயா}, அங்கே இருக்கும் மக்கள் ஏன் கருப்பாக இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.

அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் மன்னா, ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, வெண்ணிறமும், கரிய நிறமும் கொண்ட மனிதர்களும், வெள்ளை மற்றும் கருப்பைக் கலவையாகக் கொண்ட இனங்களைச் சார்ந்தவர்களும் அனைத்துத் தீவுகளிலும் இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் மக்கள் அனைவருமே கருப்பாக இருப்பதால் அந்த மலையும் கருமலை {சியாம மலை} என்று அழைக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, ஓ! குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, துர்க்கசைலம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மலை இருக்கிறது.

அதன் பிறகு கேசரி என்று அழைக்கப்படும் மலை வருகிறது. அந்த மலையில் இருந்து வீசும் தென்றல் (நறுமண) வாசனையைச் சுமந்து வருகிறது. அந்த ஒவ்வொரு மலையின் அளவும், உடனடியாக அதற்கு முன் சொன்ன மலையைப் போன்று இரு மடங்கு கொண்டதாகும். ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, அறிவுடையோரால் அந்தத் தீவில் ஏழு வர்ஷங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
மேருவின் வர்ஷம் மஹாகாசம் {1} என்று அழைக்கப்படுகிறது;
நீர் தரும் (மலயம்) குமுதோத்ரம் {2} என்று அழைக்கப்படுகிறது.
ஜலதாரத்தின் வர்ஷம் சுகுமாரம் {3} என்று அழைக்கப்படுகிறது;
அதே வேளையில் ரைவதகத்தினுடையது கௌமாரம் {4} என்று அழைக்கப்படுகிறது;
சியாமத்தினுடையது மணிகாஞ்சனம் {5} என்று அழைக்கப்படுகிறது.
கேசரத்தின் வர்ஷம் மௌதாகி {6} என்று அழைக்கப்படுகிறது.
அடுத்த மலைக்கு அடுத்து உள்ளது மகாபூமன் {மஹாபௌமம்} {7} என்று அழைக்கப்படுகிறது.

அந்தத் தீவின் மத்தியில் சாகம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மரம் இருக்கிறது. அதன் உயரமும் அகலமும், ஜம்பூத்வீபத்தில் உள்ள நாவல் {ஜம்பூ} மரத்தின் அளவுக்கு இணையானதாக இருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் அந்த மரத்தை எப்போதும் துதிக்கின்றனர். சிவனை வழிபடும் பல இனிமையான மாகாணங்கள் அந்தத் தீவில் இருக்கின்றன. அங்கே சித்தர்கள், சாரணர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோர் எப்போதும் செல்கிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டரே}, அங்கே இருக்கும் மக்கள் அறம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அங்கே இருக்கும் நால்வகையினரும் தங்கள் தங்களுக்குரிய தொழில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். திருட்டுக்கான சந்தர்ப்பம் அங்கே ஏதும் காணப்படாது. முதுமை, மரணம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, நீண்ட வாழ்நாளுடன் இருக்கும் அந்த மக்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைக்காலத்தில் வளரும் ஆறுகளைப் போல வளர்கிறார்கள்.

அங்கே இருக்கும் ஆறுகள் அனைத்தும் கங்கையைப் போலவே புனித நீரால் நிரம்பி, பல்வேறு ஊற்றுகளாகச் சுகுமாரி, குமாரி, சீதாசி, கேவேரகை {வேணிகை}, மகாநதி, ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே} மணிஜலை, சக்ஷூஸ், வர்த்தனிகை என்று பிரிந்து பாய்கின்றன. அவை, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இவற்றாலும் இன்னும் பிற ஆறுகளாலும் ஆயிரக்கணக்கிலும், நூற்றுக்கணக்கிலும், புனித நீரால் முழுவதும் நிரம்பி இருக்கின்றன. அவற்றில் இருந்துதான், ஓ! குருகுலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, வாசவன் {இந்திரன்} நீரை எடுத்து மழையாகப் பொழிகிறான். அந்த ஆறுகளின் நீளங்களையும் அவற்றின் பெயர்களையும் உரைப்பது இயலாததாகும். அவை அனைத்தும் ஆறுகளில் முதன்மையானவையும், பாவத்தைப் போக்குபவையுமாகும்.

மனிதர்கள் அனைவராலும் கேட்கப்பட்டது போலவே அந்தச் சாகத் தீவில் நான்கு புனிதமான மாகாணங்கள் {நாடுகள்} இருக்கின்றன. அவை, மிருகம் {மங்கம்}, மசகம், மானசம், மந்தகம் என்பனவாகும். மிருகத்தில் {மிருக நாட்டில்}, உள்ளோர் பெரும்பாலும் தங்கள் வகைக்கான தொழில்களில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அந்தணர்களாக இருக்கின்றனர். அந்தணர்கள் விரும்பும் அனைத்தையும் கொடுக்கும் அறம்சார்ந்த க்ஷத்திரியர்கள் மசகத்தில் {மசக நாட்டில்} இருக்கிறார்கள். மானசத்தில் {மானச நாட்டில்} இருப்போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வைசிய வகைக் கடமைகளைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறிய அவர்கள் வீரர்களாகவும் அறம் மற்றும் பொருளுக்குத் தங்களை உறுதியாக அர்ப்பணித்தவர்களாகவும் இருக்கிறார்கள். மதங்கம் {மதங்க நாடு} முழுவதிலும், அறம் சார்ந்த நடத்தை கொண்ட வீரமான சூத்திரர்கள் இருக்கிறார்கள்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்த மாகாணங்களில் {நாடுகளில்},  மன்னன், தண்டனை ஆகியவை ஏதுமில்லை. தண்டிக்கத்தகுந்த மனிதர் யாரும் அங்கே இல்லை. கடமையின் விதிகளை அறிந்த அவர்கள் அனைவரும், தங்கள் தங்கள் கடமைகளில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்கின்றனர். சாகம் என்று அழைக்கப்படும் தீவைக் குறித்து இவ்வளவே சொல்ல இயலும். பெரும் சக்தி மிக்க அந்தத் தீவைக் குறித்து இந்த அளவே கேட்கப்பட வேண்டும் [1].

ஒரே தர்மம் கொண்ட நிலங்கள் ஒரு நாடே! – பீஷ்ம பர்வம் பகுதி – 012-குசத்வீபம், சால்மலிகத்வீபம், கிரௌஞ்சத்வீபம், புஷ்கரத்வீபம் ஆகிவற்றையும், அவற்றில் இருக்கும் மலைகள், கண்டங்கள் மற்றும் நாடுகள் குறித்தும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொல்வது; பல நிலங்களில் ஒரே தர்மம் பின்பற்றப் படுமானால் அவை அனைத்தும் சேர்ந்து ஒரு நாடே என்று சொல்லப்படுவதாக அறிவிப்பது; திக் கஜங்கள் குறித்துச் சொல்வது; சூரியன், சந்திரன் மற்றும் ராகுவின் பரிமாணங்களைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொல்வது; பூமி பர்வத்தைக் கேட்பதால் கிடைக்கும் பலனையும் சொல்வது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, ஓ! பெரும் மன்னா, வடக்கில் இருக்கும் தீவுகளைக் குறித்துக் கேள்விப்படப்படுவதை நான் உமக்குச் சொல்கிறேன். நான் சொல்வதை இப்போது கேளும்.

(அங்கே வடக்கில்) தெளிந்த நெய்யை நீராகக் கொண்ட கடல் இருக்கிறது. பிறகு தயிரை நீராகக் கொண்ட ஒரு கடல் இருக்கிறது. அடுத்ததாக, மதுவை நீராகக் கொண்ட கடல் இருக்கிறது. அதற்கும் அப்பால், நீரைக் கொண்ட மற்றுமொரு கடல் இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வடக்கே மேலும் செல்லச் செல்ல வரும் மலைகள் யாவும் வரிசையாக ஒன்றைவிட ஒன்று இருமடங்கு பரப்பைக் கொண்டவையாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவை இந்தக் கடல்களாலேயே சூழப்பட்டிருக்கின்றன.

அப்படி அதற்கு மத்தியில் இருக்கும் அந்தத் தீவில், சிவப்பு மனோசிலையால் {Red arsenic} {சிவந்தவரிதாரம்; நாகசிகுவிகை; சிவந்தபாஷாணம்} ஆன கௌரம் என்று அழைக்கப்படும் பெரிய மலை ஒன்றிருக்கிறது. அந்தத் தீவின் மேற்கில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாராயணனுக்குப் பிடித்த (வசிப்பிடமான) கிருஷ்ணமலை இருக்கிறது. அங்கே (அபரிமிதமாக) இருக்கும் தெய்வீக ரத்தினங்களைக் கேசவன் {கிருஷ்ணன்} காக்கிறான். அங்கிருந்தபடியே கருணை புரியும் அவன் {கிருஷ்ணன்} உயிரினங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான். அங்கிருக்கும் நாடுகளோடு சேர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குசத்வீபத்தில் உள்ள குச (தெய்வீகமான) குசப் புற்குவியலும், சால்மலிகத் தீவில் உள்ள சால்மலி மரமும் துதிக்கப்படுகிறது.

கிரௌஞ்சத் தீவில் இருப்பதும், அனைத்து வகை ரத்தினச் சுரங்கங்களையும் கொண்டதுமான மகாகிரௌஞ்சம் என்று அழைக்கப்படும் மலை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான்கு வகை மனிதர்கள் அனைவராலும் எப்போதும் துதிக்கப்படுகிறது. (அங்கே), ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரியதும், அனைத்து வகை உலோகங்களைக் கொண்டதும், கோமந்தம் என்று அழைக்கப்படுவதுமான ஒரு மலை இருக்கிறது. அதில், தாமரை மடல் போன்ற கண்களையுடையவனும், செழிப்பைக் கொண்டவனும், முக்தியடைந்தோருடன் கலந்திருப்பவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனான சக்திமிக்க நாராயணன் எப்போதும் வசிக்கிறான்.

குசத்வீபத்தில், ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, பவளப்பாறைகளால் பலவண்ண வேறுபாடுகளுடன் இருப்பதும், அந்தத் தீவின் பெயரையே தானும் கொண்டதுமான மற்றொரு மலையும் இருக்கிறது. அந்த மலை அணுக முடியாததும், தங்கத்தாலானதுமாக இருக்கிறது. ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, பெரும் பிரகாசத்தை உடையதும், சுமிதா என்று அழைக்கப்படுவதுமான மூன்றாவது மலை இருக்கிறது. ஆறாவதாக ஹரிகிரி என்ற அழைக்கப்படும் மலை இருக்கிறது. இவையே அங்கே இருக்கும் ஆறு முக்கிய மலைகளாகும் [1]

முதல் வர்ஷம் {கண்டம்} ஔதிதோ {ஔத்பிதம்} என்று அழைக்கப்படுகிறது; இரண்டாவது வேணுமண்டலம் என்றும்; மூன்றாவது சுரதா {சுரதாகாரம்} என்றும் அழைக்கப்படுகிறது; நான்காவது கம்பலம் என்ற பெயரில் அறியப்படுகிறது; ஐந்தாவது வர்ஷம் திரிதிமத் என்று அழைக்கப்படுகிறது; ஆறாவது பிரபாகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது; ஏழாவது வர்ஷம் கபிலம் என்று அழைக்கப்படுகிறது. இவையே தொடர்ச்சியான ஏழு வர்ஷங்கள் {கண்டங்கள்} ஆகும். இவற்றில், தேவர்கள், கந்தர்வர்கள், அண்டத்தின் பிற உயிரினங்கள் ஆகியன மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த வர்ஷங்களில் வசிப்போர் மரணிப்பதில்லை. அங்கே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருடர்களோ, மிலேச்ச குலங்களோ எதுவும் இல்லை. அங்கே வசிப்போர் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனேகமாக வெள்ளை நிறம் கொண்டவர்களாகவும் மிக மென்மையானவர்களாகவும் இருக்கிறார்கள்.

எஞ்சிய தீவுகளைப் பொறுத்தவரை, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, என்னால் கேட்கப்பட்டவை அனைத்தையும் நான் சொல்வேன். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவனமான மனதுடன் கேட்பீராக.

கிரௌஞ்சத் தீவில், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கிரௌஞ்சம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மலை இருக்கிறது, கிரௌஞ்சத்திற்கு அடுத்து வாமனகம் இருக்கிறது; வாமனகத்திற்கு அடுத்து அந்தகாரம் இருக்கிறது. அந்தகாரத்திற்கு அடுத்து [2], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மைநாகம் என்று அழைக்கப்படும் மலைகளில் அற்புதமான மலை இருக்கிறது. மைநாகத்திற்கு அடுத்துக் கோவிந்தம் என்று அழைக்கப்படும் மலைகளில் சிறந்த மலை இருக்கிறது. கோவிந்தத்திற்கு அடுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நிவிதம் {நிபிடம்} என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. ஓ! உமது குலத்தைப் பெருக்குபவரே {திருதராஷ்டிரரே}, இந்த மலைகள் ஒவ்வொன்றுக்கும் இடைப்பட்ட வெளிகள் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் பெருகிக்கொண்டே செல்கிறது. அவற்றில் இருக்கும் நாடுகளைக் குறித்து இப்போது நான் உமக்குச் சொல்லப்போகிறன். நான் அதைக் குறித்துச் சொல்வதைக் கேளும்.

கிரௌஞ்சத்திற்கு அருகில் உள்ள பகுதி {நாடு} குசலம் என்று அழைக்கப்படுகிறது. வாமனகதிற்கு அருகில் இருப்பது மனோனகம் என்று அழைக்கப்படுகிறது. மனோனுகத்திற்கு அடுத்தப் பகுதி {நாடு}, ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, உஷ்ணம் என்று அழைக்கப்படுகிறது. உஷ்ணத்திற்கு அடுத்துப் பிராவாரகம்; பிராவாரகத்திற்கு அடுத்து அந்தகாரகம். அந்தகாரத்திற்கு அடுத்து உள்ள நாடு முனிதேசம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த முனிதேசத்திற்கு அப்பால், சித்தர்களாலும், சாரணர்களாலும் மொய்க்கப்படுவதும் துந்துபிஸ்வநம் என்று அழைக்கப்படுவதுமான பகுதி {நாடு} இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருக்கும் மக்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கின்றனர். இந்த நாடுகள் அனைத்தும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் வசிப்பிடங்களாக இருக்கின்றன.

புஷ்கரத்தில் {என்ற தீவில்} {புஷ்கரத்வீபத்தில்}, தங்கமும், ரத்தினங்களும் நிறைந்த புஷ்கரம் என்று அழைக்கப்படும் ஒரு மலை இருக்கிறது. அங்கே தெய்வீகமான பிரஜாபதி {பிரம்மன்} எப்போதும் வசிக்கிறான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்கள் மற்றும் பெருமுனிவர்கள் அனைவரும், அவனை {பிரம்மனை} நிறைவான வார்த்தைகளால் மரியாதையாக எப்போதும் வழிபடுகின்றனர். ஜம்பூத்வீபத்தின் பல்வேறு ரத்தினங்கள் இங்கே பயன்படுத்தப் படுகின்றன.

இந்தத் தீவுகள் அனைத்திலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிரம்மச்சரியம், உண்மை {சத்தியம்}, அங்கே வசிப்போரின் தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு}, அவர்களின் உடல்நலம், வாழ்நாள் அளவு ஆகியவை (வடக்கே) செல்லச் செல்ல அந்தத் தீவுகளைப் போலவே ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரே தர்மம் மட்டுமே பின்பற்றப்படும் நிலங்கள் அனைத்தும் ஒரே நாடு என்பதால், அந்தத் தீவுகளில் உள்ள நிலங்கள் ஒரு நாட்டை மட்டுமே கொண்டிருக்கின்றன. தலைவனான பிரஜாபதி {பிரம்மதேவன்}, தனது செங்கோலை உயர்த்தியபடி, அந்தத் தீவுகளைப் பாதுகாத்துக் கொண்டு அங்கேயே வசிக்கிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனே {அங்கே} மன்னனாக இருக்கிறான். அவனே {பிரம்மனே} அவர்களுடைய அருள் நிலைக்கு ஊற்றுக்கண்ணாகவும் இருக்கிறான். அவனே, தந்தையாக இருக்கிறான், அவனே பாட்டனாகவும் இருக்கிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவனே அங்கே இருக்கும் அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தையும் காக்கிறான். ஓ கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, சமைக்கப்பட்ட உணவு தானே அங்கே வருகிறது. அதையே உயிரினங்கள் தினமும் உண்கின்றன. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, இந்தப் பகுதிகளுக்கு {நாடுகளுக்கு} அடுத்துச் சமம் என்று அழைக்கப்படும் உறைவிடம் {சமதரை} காணப்படுகிறது. அது நட்சத்திர வடிவில் நான் மூலைகளைக் கொண்டதாக இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதில் முப்பத்துமூன்று {33} மண்டலங்கள் இருக்கின்றன.

ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, அங்கேதான் அனைவராலும் துதிக்கப்பட்டபடி நான்கு அரசயானைகள் இருக்கின்றன [3]. ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவை வாமனம், ஐராவதம் ஆகினவும் மற்றொன்றும், சுப்ரதீகமும் ஆகும் [4]. மதப்பெருக்குள்ள கன்னங்களும். வாயும் {முகமும்} கொண்ட அவற்றின் அளவுகளைக் கணக்கிட நான் துணியமாட்டேன் [5]. அவற்றின் நீளம், அகலம், கனம் ஆகியன எப்போதும் உறுதியற்றதாக நிலைத்திருக்கிறது. அங்கே அந்தப் பகுதிகளில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அனைத்துத் திசைகளில் இருந்து காற்று சீரற்ற வகையில் வீசுகிறது [6]. தங்கள் வழியில் இருக்கும் அனைத்தையும் உயர இழுக்க வல்லவையும், பெரும் பிரகாசமும் கொண்ட அந்த யானைகள், தாமரை நிறத்தில் இருக்கும் தங்கள் துதிக்கைகளின் நுனிகளால் அவற்றைப் {காற்றைப்} பிடிக்கின்றன {தடுக்கின்றன}. அப்படிப் பிடித்ததும் அதே வேகத்தில் அவை அவற்றை எப்போதும் வெளியே விடுகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூச்சுவிடும் அந்த யானைகளால் இப்படி விடப்படும் காற்றே அந்தப் பூமிக்கு வருகிறது. அதனாலேயே அங்கிருக்கும் உயிரினங்கள் மூச்சை இழுத்து வாழ்கின்றன” என்றான் {சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, இது குறித்து நீ மிக விரிவாக எனக்கு அனைத்தையும் சொன்னாய். அந்தத் தீவுகளின் அமைப்பையும் நீ குறிப்பிட்டுவிட்டாய். இப்போது, ஓ! சஞ்சயா, என்ன எஞ்சியுள்ளதோ, அவற்றைச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “உண்மையில், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, தீவுகள் அனைத்தும் உமக்கு விளக்கப்பட்டுவிட்டன. இப்போது, வானத்தின் இருப்பவை, சுவர்ணபானு ஆகியவற்றைக் குறித்தும், ஓ! கௌரவர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அவற்றின் அளவுகளைக் குறித்தும் உண்மையாகச் சொல்லப் போவதை இப்போது கேட்பீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுவர்ணபானு {ராகு} வட்டவடிவிலானது என்று கேள்விப்படப்படுகிறது. அதன் விட்டம் பனிரெண்டாயிரம் {12,000; ஆரம்:12000/2=6000} யோஜனைகள் என்றும், அதன் சுற்றளவு மிகப் பெரியதாக இருப்பதால் நாற்பத்திரண்டாயிரம் {42,000} யோஜனைகள் இருப்பதாகவும், ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் கற்றோரால் சொல்லப்பட்டுள்ளது [7].

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நிலவின் விட்டம் பதினோராயிரம் {11,000} யோஜனைகளாகக் குறிப்பிடப்படுகிறது. குளிர்ந்த கதிர்களைக் கொண்ட அந்த ஒப்பற்ற கோளின் {நிலவின்} சுற்றளவோ, ஓ! குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, முப்பத்தெட்டாயிரத்துத் தொள்ளாயிரம் {38,900} யோஜனைகள் கொண்டதாக இருக்கிறது.

நன்மையானதும், வேகமாக நகர்வதும், ஒளி தருவதுமான சூரியனின் விட்டம், ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பத்தாயிரம் {10,000} யோஜனைகளாகவும், பெரிதாக இருப்பதன் விளைவால், ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே} அவனது சுற்றளவு முப்பத்தைந்தாயிரத்து எண்ணூறு {35,800} யோஜனைகளாகவும் கேட்கப்படுகிறது [8].

இவை, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அர்க்கனால் {கற்ற மனிதனால்} கணக்கிடப்பட்ட பரிமாணங்கள் ஆகும். ராகு கிரகம், பேரளவு கொண்டதன் விளைவால், அது சூரியனையும், சந்திரனையும் குறிப்பிட்ட காலங்களில் விழுங்குகிறது. இதை நான் உமக்குச் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன். அறிவியலின் கண் கொண்டு, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நீ கேட்டது அனைத்தையும் நான் இப்போது சொல்லிவிட்டேன்.

அமைதி {சமாதானம்} உமதாகட்டும். சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள படியே நான் அண்டத்தின் கட்டுமானத்தை இப்போது உமக்குச் சொன்னேன். எனவே, ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனனைத் தணிப்பீராக [9]” என்றான் {சஞ்சயன்}.

ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, இந்த அழகிய பூமி பர்வத்தைக் கேட்ட ஒரு க்ஷத்திரியன் செழிப்பை அடைகிறான். தனது விருப்பங்களை அனைத்தையும் அடைந்து, நீதிமான்களின் பாராட்டையும் பெறுகிறான். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில், கவனமாக நோன்புகளை நோற்று, இதைக் கேட்கும் ஒரு மன்னன், தனது வாழ்நாள், தனது புகழ் மற்றும் சக்தி ஆகிய அனைத்தையும் மேம்படுத்திக் கொள்கிறான். (இறந்து போன) அவனது தந்தைகள், பாட்டன்களும் இதனால் நிறைவை அடைகிறார்கள். நாம் இப்போது இருக்கும் இந்தப் பாரதக் கண்டத்தில் இருந்து பாயும் புண்ணியங்கள் அனைத்தையும் குறித்து நீர் இப்போது கேட்டுவிட்டீர்” என்றான் {சஞ்சயன்}.

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading