ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ உத்யோக பர்வம்-ஸ்ரீ  உலூகதூதாகமன பர்வம்-

துரியோதனன் சொன்ன பூனைக்கதை! – உத்யோக பர்வம் பகுதி 161அ-கர்ணன், துச்சாசனன், சகுனி ஆகியோருடன் ஆலோசித்த துரியோதனன், சூதாடியின் மகனான உலூகனை வரவழைத்து, பாண்டவர்களிடம் செல்லுமாறு அவனைப் பணித்தது; யுதிஷ்டிரனிடம் சொல்ல வேண்டியசவற்றை உலூகனிடம் துரியோதனன் சொன்னது; யுதிஷ்டிரனிடம் சொல்லுமாறு ஒரு பூனைக் கதையை உலூகனிடம் சொன்னது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஹிரண்யவதியின் {ஆற்றின்} அருகில் உயர் ஆன்ம பாண்டவர்கள் முகாமிட்டதும், கௌரவர்களும் தங்கள் முகாம்களை நிறுவிக் கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், தனது துருப்புகளைப் பலமாக நிறுத்தினான். (தன் தரப்பில் இருந்த) மன்னர்கள் அனைவருக்கும் உரிய மரியாதைகளைச் செலுத்தினான். போர் வீரர்களின் பாதுகாப்புக்காகக் காவல் படைகளையும், சோதனைச் சாவடிகளையும் அமைத்தான். பிறகு, மனிதர்களின் ஆட்சியாளர்களான கர்ணன், துச்சாசனன் மற்றும் சுபலனின் மகன் சகுனி ஆகியோரை அங்கே வரவழைத்து, அவர்களுடன் ஆலோசிக்க ஆரம்பித்தான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (முதலில்) கர்ணனிடம் ஆலோசித்த மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (அடுத்ததாக) கர்ணனுடன் சேர்த்து, தனது தம்பி துச்சாசனன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோருடனும் கூட்டாக ஆலோசித்தான். பிறகு, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, உலூகனைத் தனது முன்னிலையில் தனிமையில் அழைத்து அவனிடம் {உலூகனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான். அவன் {துரியோதனன் உலூகனிடம்}, “ஓ! உலூகா, சூதாடியின் மகனே {கைதவ்யா} {உலூகா}, பாண்டவர்களிடமும், சோமகர்களிடமும் நீ செல்வாயாக. அங்கே சென்று, வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில், (யுதிஷ்டிரனிடம்) இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக.

{யுதிஷ்டிரனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன்} “குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} பாண்டவர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்தப் பயங்கரப் போர், இறுதியில் வந்தேவிட்டது. வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் உனது தம்பிகளுடன் கூடிய நீ ஆழ்ந்த கர்ஜனையுடன் உச்சரித்தவையும் {சொன்னவையும்}, குருக்களுக்கு மத்தியில் சஞ்சயன் என்னிடம் கொண்டு வந்தவையுமான அந்தச் செருக்கு நிறைந்த வார்த்தைகளுக்கு, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நல்லது செய்யும் நேரம் இறுதியாக வந்தேவிட்டது. எனவே, நீங்கள் அனைவரும் சாதிக்கப்போவதாக உறுதியேற்ற அனைத்தையும் சாதிப்பீராக”, என்று சொல்.

குந்தியின் மூத்த மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, எனது வார்த்தைகளாகப் பின்வருவனவற்றைச் சொல்வாயாக. “அறம்சார்ந்தவனான நீ, உனது தம்பிகளுடனும், சோமகர்களுடனும், கேகயர்களுடனும் சேர்ந்து எப்படி உனது இதயத்தை அநீதியில் நிலைநிறுத்தலாம்? அனைத்து உயிர்களின் அச்சங்களையும் விலக்கவல்லவனாக நீ இருக்க வேண்டும் என நான் நினைக்கையில், அண்டத்தையே அழிக்க நீ எப்படி விரும்பலாம்? ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில், தேவர்கள் பிரகலாதனின் அரசை அவனிடம் {பிரகலாதனிடம்} இருந்து பறித்த போது, அவன் {பிரகலாதன் தேவர்களிடம்}, “தேவர்களே, எவனுடைய நீதியின் கொடிக்கம்பம் {தர்மத்துவஜம்} எப்போதும் {வெளிப்படையாக} உயர்ந்து, அவனது பாவங்கள் எப்போதும் மறைந்திருக்கிறதோ, அவன், (கதைகளில் சொல்லப்படும்) பூனையின் நடத்தையைக் கொண்டவனாவான்”, என்ற {பொருள்படும்} செய்யுளைப் {சுலோகத்தைப்} பாடியதாக நாம் கேள்விப்படுகிறோம். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எனது தந்தைக்கு {திருதராஷ்டிரருக்கு} நாரதர் உரைத்த இந்த அற்புதக் கதையை நான் உனக்கு மீண்டும் சொல்கிறேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில், ஒரு பொல்லாத பூனை, தன் வேலைகளை அனைத்தையும் கைவிட்டு, (பக்தன் ஒருவனின் முறைமையின்படி), தனது கரங்களை உயர்த்திக் கொண்டு, கங்கைக்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது. தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டதைப் போல நடித்து, அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையையும் பெறும்படி அவற்றிடம் “நான் இப்போது அறம் பயில்கிறேன்” என்று சொன்னது {சொல்லி வந்தது அந்தப் பூனை}.ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீண்ட காலத்திற்குப் பிறகு, பறவைகள் அனைத்தும் அதனிடம் {பூனையிடம்} நம்பிக்கை வைத்தன. ஒன்றாகச் சென்ற அவை {பறவைகள்}, அந்தப் பூனையைப் பாராட்டின. பறவைகளை உண்ணும் அது {அந்தப் பூனை}, அவை {பறவைகள்} அனைத்தாலும் வழிபடப்பட்டு, தன் காரியம் நிறைவேறியதாகவும், தனது தவத்தின் பயன் தனக்குக் கிடைத்துவிட்டதாகவும் கருதியது. மேலும் சில காலத்திற்குப் பிறகு, எலிகள் அந்த இடத்திற்குச் சென்றன. பெருஞ்செயலில் பெருமையுடன் உழைத்து, நோன்புகள் நோற்பதில் ஈடுபடும் ஓர் அறம் சார்ந்த உயிரினமாகவே அவை அனைத்தும் {எலிகளனைத்தும்} அதைக் {பூனையைக்} கண்டன.

அந்தத் தீர்மானமான நம்பிக்கை அடைந்த அவை {எலிகள்}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, “நமக்கு நிறைய எதிரிகள் இருக்கின்றனர். எனவே, இவர் {இந்தப் பூனை} நமது தாய்மாமனாகட்டும். மேலும் இவர் நமது குலத்தின் முதியவர்களையும் சிறுவர்களையும் எப்போதும் பாதுகாக்கட்டும்” என்று விரும்பின. இறுதியாக அந்தப் பூனையிடம் சென்ற அவை {எலிகள்} அனைத்தும், “உமது அருளால், நாங்கள் இன்பமாகத் திரிய விரும்புகிறோம். எங்களது அருள்நிறைந்த புகலிடம் நீரே, எங்களது பெரும் நண்பர் நீரே. இதன் காரணமாக, நாங்கள் எங்கள் அனைவரையும் உமது பாதுகாப்பின் கீழ் வைக்கிறோம். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர் நீர், அறத்தை ஈட்டுவதிலேயே எப்போதும் ஈடுபடுபவர் நீர். எனவே, ஓ! பெரும் அறிவாளியே {பூனையாரே}, தேவர்களைக் காக்கும் இடிதாங்கியைப் {இந்திரனைப்} போல எங்களைப் பாதுகாப்பீராக” என்றன {எலிகள்}.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அனைத்து எலிகளாலும் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பூனை, அவற்றிடம் {அந்த எலிகளிடம்}, “துறவை தொடர்வது, (நான் அருள வேண்டும் என்று அழைக்கப்பட்டு) பாதுகாப்பு தருவது ஆகிய இவை இரண்டும் ஒன்றாக நிலைத்திருப்பதை நான் காணவில்லை. எனினும், உங்கள் வேண்டுகோளுக்கு ஏற்புடைய வகையில் உங்களுக்கு நன்மை செய்வதை என்னால் தவிர்க்க முடியாது. அதே வேளையில், நீங்கள் அனைவரும் எப்போதும் எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். கடும் நோன்மை நோற்பதில் நிலைத்திருக்கும் நான், எனது தவப்பயிற்சிகளால் பலவீனமாக இருக்கிறேன். எனவே, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் வழியை என்னால் காண முடியவில்லை. எனவே, நீங்கள் அனைவரும் தினமும் என்னை ஆற்றங்கரைக்குச் சுமந்து செல்ல வேண்டும்” என்றது {பூனை}. “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன எலிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, தங்களில் முதியவை மற்றும் இளையவை ஆகியவற்றை அந்தப் பூனையிடம் ஒப்புவித்தன.

தீய ஆன்மா கொண்டதும், பாவியுமான அது {அந்தப் பூனை}, எலிகளை உண்டு, படிப்படியாகப் பருக்கவும், நல்ல நிறம் அடையவும், வலுவான உடல் உறுப்புகளைப் பெறவும் செய்தது. இப்படியே, எலிகள் எண்ணிக்கையில் குறைய ஆரம்பித்த வேளையில், அந்தப்பூனை, ஆற்றலிலும் பலத்திலும் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. பிறகு, எலிகளனைத்தும் கூடி, தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும், “நமது மாமன் {பூனையார்}, தினமும் தடித்து வளர்கிறார். நாமோ தினமும் (எண்ணிக்கையில்) குறைந்து வருகிறோம்” என்று பேசிக்கொண்டன.

பிறகு, டிண்டிகன் என்ற பெயருடைய ஒரு குறிப்பிட்ட புத்திசாலி எலி, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கூடியிருந்த எலிகளின் பெரும் கூட்டத்திற்கிடையே இந்த வார்த்தைகளைச் சொன்னது. அது {டிண்டிகன் என்ற எலி} “நீங்கள் அனைவரும் ஆற்றங்கரைக்கு ஒன்றாகச் செல்லுங்கள். நான் நமது மாமனுடன் {பூனையாருடன்} உங்களைப் பின்தொடர்ந்து வருகிறேன்” என்றது. அதற்கு அவை {அந்த எலிக்கூட்டம்}, “அற்புதம், அற்புதம்” என்று சொல்லி, தங்கள் எண்ணிக்கையில் ஒன்றை {டிண்டிகனைப்} பாராட்டின. டிண்டிகன் குறிப்பிட்டுப் பேசிய பயனுள்ள வார்த்தைகள் அனைத்தையும் அவை {அந்த எலிகள்} அப்படியே செய்தன. எனினும், இதை அறியாத அந்தப் பூனை டிண்டிகனை அன்று உண்டது. அதிக நேரத்தைக் கடத்தாத அந்த எலிகள் அனைத்தும், தங்களுக்குள் ஒன்றுக்குள் ஒன்று ஆலோசிக்கத் தொடங்கின.

பிறகு, கிலிகன் {கோலிகன்} என்ற பெயர் கொண்ட ஒரு மிக முதிர்ந்த எலி, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தனது இரத்த உறவுகளின் முன்னிலையில், நீதிமிக்க இவ்வார்த்தைகளைச் சொன்னது. அது {கிலிகன் எலிக் கூட்டத்திடம்}, “நமது அம்மான் {தாய்மாமன்}, அறம் ஈட்டுவதை உண்மையில் விரும்பவில்லை. உண்மையில் அவன் {அந்தப் பூனை} நமது எதிரியாக இருந்தாலும், கபடக்காரனைப் போல நமது நண்பனாக மாறியிருக்கிறான். உண்மையில், பழங்களையும், கிழங்குகளையும் உண்டு வாழும் ஓர் உயிரினத்தின் மலம், மயிருடன் {எலிகளின் முடிகளுடன்} இருக்காது. மேலும், அவனது {பூனையாரின்} உறுப்புகள் வளர்கின்றன. நாமோ எண்ணிக்கையில் நசிந்து வருகிறோம். அது தவிர, இந்த எட்டு நாட்களாக டிண்டிகன் காணப்படவில்லை” என்றது {கிலிகன் என்ற அந்த முதிர்ந்த எலி}. இவ்வார்த்தைகளைக் கேட்ட எலிகள் அனைத்தும் திசைகள் அனைத்திலும் சிதறி ஓடின. தீய ஆன்மா கொண்ட அந்தப் பூனையும், தான் எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பிச் சென்றது” {என்றான் துரியோதனன்}.-வைசம்பாயனர் > ஜனமேஜயனிடம் சொல்லும் கதையில்-சஞ்சயன் > திருதராஷ்டிரனிடம் சொல்லும் கதைக்குள்-துரியோதனன் > உலூகனிடம் சொல்லும் கதைக்குள்-நாரதர் > திருதராஷ்டிரனிடம் சொல்லிய பூனைகதைக்குள்-பூனை > எலி கூட்டத்திடம் சொன்ன சொல்தான், “ நான் இப்போது அறம் பயில்கிறேன் ” என்பதாகும்.

துரியோதனனின் ஏளனப் பேச்சு! – உத்யோக பர்வம் பகுதி 161ஆ-பாண்டவர்களின் சினத்தைத் தூண்டுமாறு யுதிஷ்டிரன், கிருஷ்ணன், பீமன், நகுலன், சகாதேவன், விராடன், துருபதன், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோர் ஒவ்வொருவரிடமும் தான் சொல்லியனுப்பும் வார்த்தைகளைச் சொல்லுமாறு துரியோதனன் உலூகனிடம் சொன்னது…

{யுதிஷ்டிரனிடம் சொல்ல வேண்டியவற்றை உலூகனிடம் துரியோதனன் தொடர்ந்து சொன்னான்.} {யுதிஷ்டிரனிடம் துரியோதனன்}, “ஓ! தீய ஆன்மா கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ கூட அத்தகைய பூனை நடத்தை கொண்டவனே. (கதையில் வந்த அந்தப்) பூனை எலிகளிடம் நடந்து கொண்டதைப் போலத்தான், நீயும் உனது சொந்தங்களிடம் நடந்து கொள்கிறாய். உனது பேச்சு ஒரு வகையில் இருக்கிறது, உனது நடத்தையோ வேறு வகையில் இருக்கிறது. உனது சாத்திரமும் ({சாத்திர} பக்தியும்), அமைதி நிறைந்த உனது நடத்தையும் மனிதர்களுக்கு முன்னிலையில் காட்சிப்படுத்த மட்டுமே உன்னால் செய்யப்படுகின்றன. இந்தப் பாசாங்கையெல்லாம் கைவிட்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றி, ஒருவன் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்வாயாக. ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, நீ அறம்சார்ந்தவன் இல்லையா?

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, உனது கரங்களின் ஆற்றல் மூலம் இந்தப் பூமியை அடைந்து, அந்தணர்களுக்குக் கொடையையும், இறந்து போன தனது மூதாதையருக்கு ஒருவன் செய்ய வேண்டியவற்றையும் அளிப்பாயாக. ஆண்டாண்டுகளாகத் தொடர்ச்சியாகத் துயரத்தில் பீடிக்கப்பட்டுள்ள உனது தாயாருக்கு {குந்திக்கு} நல்லதைச் செய்ய முனைவாயாக. அவளது கண்ணீரை வற்ற செய்வாயாக. போரில் (உனது எதிரிகளை) வீழ்த்தி அவளுக்கான மரியாதைகளைச் செய்வாயாக. மிகவும் பரிதாபகரமாக வெறும் ஐந்து கிராமங்களை மட்டுமே நீ கேட்டாய். அதுவும் கூட எங்களால் நிராகரிக்கப்பட்டது. ஏனெனில், “பாண்டவர்களைக் கோபமூட்டுவதில் நாம் வெற்றி காண்பது எப்படி? போரை நாம் நிலைநாட்டுவது எப்படி?” என்பனவற்றை மட்டுமே நாங்கள் முயன்று கொண்டிருந்தோம்.

உன் நிமித்தமாகவே தீய விதுரன் (எங்களால்) விரட்டப்பட்டான், அரக்கு வீட்டில் வைத்து உங்கள் அனைவரையும் எரிக்க முயன்றவர்கள் நாங்களே என்பதை நினைவுகூர்ந்து இப்போது ஆண்மையை அடைவாயாக; (உபப்லாவ்யத்தில் இருந்து) கிருஷ்ணன் குருக்களின் {கௌரவர்களின்} சபைக்குப் புறப்பட்ட போது, அவன் {கிருஷ்ணன்} மூலமாக, “ஓ! மன்னா {துரியோதனா}, கேள். போருக்கோ, அமைதிக்கோ நான் தயாராக இருக்கிறேன்” என்ற செய்தியை நீ (எங்களுக்குச்) சொன்னாய். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, போருக்கான அந்த நேரம் வந்து விட்டது என்பதை அறிவாயாக.

ஓ! யுதிஷ்டிரா, அந்த நோக்கில் நான் இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டேன். போரை விட மதிக்கத்தக்க உயர்வாக (நற்பேறாக) ஒரு க்ஷத்திரியன் வேறு எதைக் கருதுவான்? நீ க்ஷத்திரிய வகையில் பிறந்தவனாவாய். அப்படியே இந்த உலகத்தில் நீ அறியப்படுகிறாய். துரோணர், கிருபர் ஆகியோரிடம் ஆயுதங்களை அடைந்த நீ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னைப் போன்ற அதே வகைக்குச் சொந்தமானவனும், பலத்தில் உன்னைவிட உயர்வில்லாதவனுமான வாசுதேவனை {கிருஷ்ணனை} ஏன் நம்புகிறாய்?” என்று {யுதிஷ்டிரனிடம்} கேட்பாயாக.

பாண்டவர்களின் முன்னிலையில் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} நீ இந்த {பின்வரும்} வார்த்தைகளைச் சொல்ல வேண்டும், “உன் நிமித்தமாகவும், பாண்டவர்கள் நிமித்தமாகவும் உனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் நீ என்னைத் தாக்குப்பிடி {பார்ப்போம்}. குருக்களின் சபை மத்தியில் நீ எற்ற வடிவத்தை {விஸ்வரூபத்தை}, மீண்டும் ஒருமுறை ஏற்று, அர்ஜுனனுடன் சேர்ந்து (போர்க்களத்தில்) என்னை நோக்கி விரைவாயாக.

ஒரு மாயக்காரனின் தந்திரங்கள் அல்லது மாயைகள் (சில சமயங்களில்) அச்சத்தைத் தோற்றுவிக்கக்கூடும். ஆனால், போருக்காக ஆயுதம் தாங்கி நிற்பவனைப் பொறுத்தவரை, இத்தகு மோசடிகள் (போருக்கு எழுச்சியூட்டுவதைவிட) கோபத்தை மட்டுமே {அவனிடம்} தூண்டுகின்றன. *எங்களது மாய சக்திகளால், சொர்க்கம், அல்லது, வானத்திற்கு உயர்வதற்கோ, பாதாள உலகம், அல்லது இந்திரனின் நகரத்திற்குள் ஊடுறுவுவதற்கோ நாங்களும் திறன் பெற்றவர்களாகவே இருக்கிறோம். எங்கள் உடலில் பல்வேறு உருவங்களை எங்களாலும் காட்சிப்படுத்த இயலும்! பெரும் ஆணையாளன் {பிரம்மன்}, (அத்தகைய மாயக்காரனின் தந்திரங்களால்) ஒருபோதும் உயிரினங்கள் அனைத்தையும் அடக்க வில்லை. அவனது {பிரம்மனின்} சுய விருப்பத்தின் பேரிலேயே அஃது அடக்கப்படுகிறது.

ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, “திருதராஷ்டிரர் மகன்களைப் போரில் கொல்லச் செய்து, எதிர்ப்பில்லாத அரசுரிமையைப் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} நான் வழங்குவேன்” என்று எப்போதும் நீ சொல்லும் வார்த்தைகளைச் சஞ்சயன் என்னிடம் கொண்டு வந்தான். “கௌரவர்களே, என்னை இரண்டாவதாக {தனக்கு அடுத்தவனாகக்} கொண்டிருக்கும் அர்ஜுனனிடம் நீங்கள் பகைமையைத் தூண்டுகிறீர்கள் என்பதை அறிவீர்களாக”, என்றும் நீ சொல்லி இருக்கிறாய். அந்த {உனது} உறுதிமொழியைக் கடைப்பிடித்து, பாண்டவர்களுக்காக உனது சக்தியைச் செலுத்தி, உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் இப்போது போரிடுவாயாக!

{கிருஷ்ணா!} நீ ஆண்மையுள்ளவன் என்பதை எங்களுக்குக் காட்டுவாயாக! `உண்மையான ஆண்மையை நாடுவதால், பகைவர்களுக்குத் துயரத்தை ஏற்படுத்த உறுதி செய்பவனே உண்மையில் உயிரோடு இருப்பவனாகச் சொல்லப்படுகிறான்`. ஓ! கிருஷ்ணா, எக்காரணமும் இன்றி உனது புகழ் இவ்வுலகில் பெரிதாகப் பரவி இருக்கிறது! எனினும், {மீசை முதலிய} ஆண்மையின் குறிகளைத் தன்னிடம் கொண்டும், உண்மையில் அலிகளாக இருப்போர் இவ்வுலகில் பலர் இருக்கின்றனர் என்பது இப்போது அறியப்படும். குறிப்பாக நீ கம்சனின் அடிமையாவாய். உனக்கு எதிராக ஏகாதிபதியான நான் கவசம் தரித்து என்னை மறைத்துக்கொள்ளக்கூடாது!” என்று {கிருஷ்ணனிடம்} சொல்வாயாக.

(அடுத்ததாக), ஓ! உலூகா, மதிகெட்டவனும், அறியாமை நிறைந்தவனும், பெருந்தீனிக்காரனும், கொம்புகள் அகற்றப்பட்ட காளையைப் போன்றவனுமான பீமசேனனிடம் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்வாயாக. அவனிடம் {பீமனிடம்} “ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, விராடனின் நகரத்தில், வல்லவன் {வல்லன்} என்ற பெயரில் அறியப்பட்ட சமையற்காரனாக இருந்தவன் நீ! இவை அனைத்தும் உனது ஆண்மையின் சாட்சிகளாகும்! குருக்களின் சபைக்கு மத்தியில் நீ செய்த சூளுரை {சபதம்} பொய்க்காதிருக்கட்டும்! உன்னால் முடிந்தால் துச்சாசனனின் இரத்தம் குடிக்கப்படட்டும்! {உன்னால் முடிந்தால் துச்சாசனனின் இரத்தத்தைக் குடி பார்ப்போம்}.

ஓ! குந்தியின் மகனே {பீமா}, “போரில் நான் திருதராஷ்டிரரின் மகன்களை விரைந்து கொல்வேன்!” என்று நீ அடிக்கடி சொல்லியிருக்கிறாய். அதைச் சாதிப்பதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. ஓ! பாரதா {பீமா}, சமையற்கலையில் வெகுமதி பெற நீ தகுந்தவனே! எனினும், உடை, உணவு மற்றும் போர் ஆகியவற்றுக்குள் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்போது போரிடுவாயாக. ஆண்மையுடனிருப்பாயாக! உண்மையில், ஓ! பாரதா {பீமா}, உனது கதாயுதத்தை வாரி அணைத்துக் கொள்ளும் நீ பூமியில் உயிரற்று விழுந்து கிடக்க வேண்டியிருக்கும். ஓ! விருகோதரா {பீமா}, உனது சபைக்கு மத்தியில் தற்பெருமை பேசுவதில் நீ ஈடுபட்டதெல்லாம் வீணாகப் போகிறது!” என்று {பீமனிடம்} சொல்வாயாக.

ஓ! உலூகா, நகுலனிடம், நான் சொல்லும் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. {அந்த நகுலனிடம்}, “ஓ! பாரதா {நகுலா}, அமைதியாகப் போரிடுவாயாக! ஓ! பாரதா {நகுலா}, உனது ஆண்மையையும், யுதிஷ்டிரன் மேல் நீ வைத்திருக்கும் மரியாதையையும், என்னிடம் நீ கொண்டுள்ள வெறுப்பையும் நாங்கள் காண விரும்புகிறோம். கிருஷ்ணை {திரௌபதி} பட்ட துயரங்கள் அனைத்தையும் உனது மனதில் நினைவு கூர்வாயாக”, என்று {நகுலனிடம்} சொல்வாயாக.

அடுத்ததாக, (கூடியிருக்கும்) ஏகாதிபதிகளுக்கு முன்னிலையில் இந்த எனது வார்த்தைகளைச் சகாதேவனிடம் சொல்வாயாக. அவனிடம் {சகாதேவனிடம்}, “உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி, போர்க்களத்தில் இப்போது போரிடுவாயாக! உங்கள் துன்பங்கள் அனைத்தையும் நினைவுகூர்வாயாக” என்று சொல்வாயாக.

அடுத்து, விராடன் மற்றும் துருபதனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவர்களிடம், “படைப்பின் ஆரம்பத்தில் இருந்தே, பெரும் காரியங்களைச் செய்யக்கூடிய அடிமைகள் கூடத் தங்கள் முதலாளிகளை {எஜமானர்களை} முழுமையாகப் புரிந்து கொண்டதில்லை. அதே போல, செழிப்பான அரசர்களாலும் தங்கள் அடிமைகளைப் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. இந்த மன்னன் {யுதிஷ்டிரன்} புகழத்தக்கவனல்ல. இத்தகு நம்பிக்கையிலேயே நீங்கள் எனக்கு எதிராக வந்திருக்கிறீர்கள். எனவே, ஒன்றுகூடி எனக்கெதிராகப் போரிட்டு, என்னைக் கொன்று, பாண்டவர்களும் நீங்களும், உங்கள் கருத்தில் கொண்டுள்ள நோக்கங்களைச் சாதிப்பீராக” என்று சொல்வாயாக.

பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம், “{இதோ} உனக்கான நேரம் வந்துவிட்டது, நீயும் உனது நேரத்தின் காரணமாகவே {இங்கு} வந்திருக்கிறாய்! போரில் துரோணரை அணுகி, உனக்குச் சிறந்தது எது என்பதை அறிந்து கொள்வாய்! உனது நண்பனின் காரியத்தைச் சாதிப்பாயாக” என்று சொல்வாயாக.

ஓ! உலூகா, அடுத்ததாக, சிகண்டியிடம் மீண்டும் மீண்டும் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம், “வலிய கரங்களைக் கொண்ட கௌரவரும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவருமான கங்கையின் மகன் (பீஷ்மர்), பெண் என்று மட்டுமே உன்னை அறிவதால், உன்னை அவர் கொல்லமாட்டார்! {எனவே}, இப்போது அச்சமில்லாமல் போரிடுவாயாக! உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் சாதிப்பாயாக! நாங்கள் உனது ஆற்றலைக் காண விரும்புகிறோம்” என்று சொல்வாயாக.” {என்று உலூகனிடம் சொன்னான் துரியோதனன்}.

அர்ஜுனனை நிந்தித்த துரியோதனன்! – உத்யோக பர்வம் பகுதி 161இ-அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன் சொன்ன வார்த்தைகள்; அர்ஜுனன், திரௌபதி மற்றும் பாண்டவர்கள் அனுபவித்த துயரங்களைச் சொல்லி துரியோதனன் அர்ஜுனனைச் சீண்டுவது; ஆண்மையுடன் நடந்து கொள்ளுமாறு அர்ஜுனனுக்குச் சொல்லி அனுப்பிய துரியோதனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், “{உலூகனிடம்} இதைச் சொன்ன மன்னன் துரியோதனன் உரக்கச் சிரித்தான். பிறகு மீண்டும் உலூகனிடம் பேசிய அவன் {துரியோதனன்}, “வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில் மீண்டும் ஒருமுறை தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. “ஓ! வீரா {அர்ஜுனா}, எங்களை வீழ்த்தி இந்த உலகை ஆண்டுகொள், அல்லது எங்களால் வீழ்த்தப்பட்டு (உயிரிழந்து) களத்தில் விழுவாயாக! நாட்டில் இருந்து நீங்கள் துரத்தப்பட்டது, காட்டில் நீங்கள் அனுபவித்த துயரங்கள், கிருஷ்ணையின் {திரௌபதியின்} துன்பம் ஆகிய உங்கள் பாடுகளை நினைவுகூர்ந்து, ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா} உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக! க்ஷத்திரியப் பெண் ஒருத்தி மகனைப் பெற்றெடுக்கும் காரணத்திற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. எனவே, உனது பலம், சக்தி, வீரம், ஆண்மை, ஆயுதங்களின் திறம் மற்றும் வேகம் ஆகியவற்றைப் போரில் வெளிப்படுத்தி, உனது சினத்தைத் தணித்துக் கொள்வாயாக!

துயரால் பாதிப்படைந்து, உற்சாகமிழந்து, (வீட்டில் இருந்து) நீண்ட நாட்களுக்குத் துரத்தப்பட்டு, தன் நாட்டில் இருந்தும் கடத்தப்பட்ட எவனது இதயம்தான் உடையாதிருக்கும்? நற்பிறப்பு, வீரம், பிறரின் செல்வத்தில் பேராசையின்மை கொண்ட எவன் தான், தலைமுறை தலைமுறையாக ஆண்டு வரும் தனது நாடு தாக்கப்படும்போது கோபப்பட மாட்டான்? நீ சொன்ன அந்த உயர்ந்த வார்த்தைகளைச் செயலில் காட்டுவாயாக.

எதையும் செய்யும் திறனற்றுத் தற்பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவனை இழிந்த மனிதனாகவே நல்லோர் கருதுகின்றனர். எதிரிகளின் உடைமையாக இருக்கும் உனது பொருட்களையும், உனது நாட்டையும் மீட்பாயாக! போரை விரும்பும் மனிதனின் நோக்கம் இந்த இரு காரணங்களையே கொண்டிருக்கும். எனவே, உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக! பகடையில் நீ (அடிமையாக) வெல்லப்பட்டாய்! கிருஷ்ணை {திரௌபதி} எங்களால் சபைக்கு இழுத்து வரப்பட்டாள். ஆண்மையுள்ளவனாகத் தன்னைக் கருதும் மனிதன், நிச்சயம் இதற்குத் தனது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்!

பனிரெண்டு {12} நீண்ட வருடங்களாக வீட்டில் இருந்து துரத்தப்பட்ட நீங்கள் காட்டில் வசித்தீர்கள்; ஒரு முழு வருடத்தை விராடனின் சேவையில் கழித்தீர்கள். நாட்டை விட்டுத் துரத்தப்பட்டதையும், காடுகளில் சில காலம் வாழ நேர்ந்ததையும், கிருஷ்ணை {திரௌபதி} அடைந்த துயரத்தையும் உங்கள் வேதனைகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து ஆண்மையுடன் இருப்பாயாக. உன்னிடமும், உனது சகோதரர்களிடமும் மீண்டும் மீண்டும் {எங்களால்} சொல்லப்பட்ட கடுமொழிகளுக்கான உனது கோபத்தை வெளிப்படுத்துவாயாக. உண்மையில், கோபம் (போன்றவை) ஆண்மையுள்ளவனிடமே இருக்கும்.

உனது கோபம், வலிமை, ஆற்றல், அறிவு, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள உனது கரங்களின் வேகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவாயாக. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, போரிட்டு ஆண்மையுள்ளவனாக உன்னை நிரூபிப்பாயாக. உனது ஆயுதங்கள் அனைத்துக்கான மந்திர வழிபாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. குருக்ஷேத்திரக்களம் புழுதியற்று இருக்கிறது. உனது குதிரைகளும் உடல்நலத்துடன் வலுவாக உள்ளன. உனது போர்வீரர்கள் தங்கள் கூலியைப் பெற்றுவிட்டனர். எனவே, கேசவனை {கிருஷ்ணனை} (உனக்கு) அடுத்தவனாகக் கொண்டு (எங்களுடன்) போரிடுவாயாக! பீஷ்மருடன் இன்னும் மோதாமல், இத்தகு தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய்? கந்தமாதன மலைகளில் ஏறாமல், (தான் செய்யப்போகும் செயலைக் குறித்து) தற்புகழ்ச்சி பேசும் மூடனைப் போலப் பிதற்றி வரும் நீ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} ஆண்மையுள்ளவனாக இருக்கக் கடவாய்!

சூதகுலத்தானான ஒப்பற்ற கர்ணனையோ, மனிதர்களில் முதன்மையான சல்லியனையோ, வலிமைமிக்கப் போர்வீரர்களில் முதன்மையானவரும், போரில் சச்சியின் கணவனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவருமான துரோணரையோ போரில் வீழ்த்தாமல், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் உனது நாட்டை எப்படி மீட்க முடியும்? ஓ! பார்த்தா {அர்ஜுனா}, வேத கல்வியிலும், விற்கலையிலும் ஆசானாக இருப்பவரும், கல்வியின் அந்த இரு கிளைகளையும் கடந்தவரும், போரில் முதன்மையானவரும், (கோபுரம் போல) அமைதியானவரும், வலிமையில் எந்தக் குறைவையும் அறியாதவரும், படைகளின் தளபதியும், பெரும் பிரகாசம் கொண்டவருமான துரோணரையல்லவா நீ வெல்ல விரும்புகிறாய்.

காற்றால் சுமேருவின் சிகரம் நொறுக்கப்பட்டதாக நாம் கேள்விப்பட முடியாது. எனினும், நீ சொல்வது {வெல்வது} உண்மையானால், காற்று சுமேருவைச் சுமந்து சென்றுவிடும்; வானமே பூமியில் விழுந்துவிடும்; யுகங்களே கூடத் தங்கள் முறைமைகளை மாற்றிக் கொள்ளும். பார்த்தனோ {அர்ஜுனனோ}, வேறு எவனோ, எதிரிகளைக் கலங்கடிக்கும் அவரை {துரோணரை} அணுகிய பிறகு, உயிரை விரும்பும் எவன் தான் நல்ல உடலுடன் வீட்டுக்குத் திரும்ப முடியும்? தன் கால்களால் பூமியில் நடக்கும் எவன் தான், துரோணர் மற்றும் பீஷ்மரிடம் மோதி, அவர்களின் கணைகளால் அடிக்கப்பட்டு, போரில் இருந்து உயிருடன் தப்ப முடியும்?

வெல்லப்பட முடியாததும், தேவர்களின் படையைப் போன்றே தெரிவதும், தேவர்களால் காக்கப்படும் தெய்வீகப் படையைப் போன்றதும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளின் மன்னர்களாலும், காம்போஜர்கள், சகர்கள், கசர்கள், சால்வர்கள், மத்ஸ்யர்கள் {மச்ச நாட்டவர்}, நடுநாட்டின் குருக்கள், மிலேச்சர்கள், புளிந்தர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், காஞ்சிகள் {காஞ்சி நாட்டவர்} ஆகியோராலும், மனிதர்களின் தலைவர்களாலும் பாதுகாக்கப்படுவதும், போருக்குத் தயாராக இருப்பதும், கடக்க முடியாத கங்கையின் ஊற்று போல இருப்பதுமான இந்தப் பல நாட்டுப் படைகளின் வலிமையைக் கிணற்றில் வசிக்கும் தவளையைப் போல, நீ ஏன் உணர மறுக்கிறாய்?

ஓ! சிறுமதி கொண்டவனே, ஓ! மூடனே, எனது யானைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டு, என்னுடன் மோத எப்படி நீ துணிவாய்? ஓ! பார்த்தா, ஓ! பாரதா {அர்ஜுனா}, வற்றாத உனது அம்பறாத்தூணிகள், அக்னியால் உனக்குக் கொடுக்கப்பட்ட உனது தேர், உனது தெய்வீகக் கொடி ஆகியன அனைத்தும் இந்தப் போரில் எங்களால் சோதனைக்குள்ளாக்கப்படும். ஓ! அர்ஜுனா, பிதற்றாமல் போரிடுவாயாக! அதீத தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய்? போரில் வெற்றி என்பது போரிடும் முறையால் விளைவதாகும். ஒரு போரைப் பிதற்றலால் வெல்ல முடியாது”.

காண்டீவம் எங்கே போயிற்று? – உத்யோக பர்வம் பகுதி 161ஈ-அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன் சொன்ன வார்த்தைகள்; பாண்டவர்களின் பலத்தைத் தான் அறிந்திருப்பதாகவும், இருப்பினும் நாட்டைத் தன்னால் கொடுக்க முடியாது என்றும் துரியோதனன் சொன்னது; தனது படையைப் பெருங்கடலுக்கு ஒப்பிட்டு, தனது தளபதிகளை அதிலிருக்கும் உயிரினங்களாக ஒப்பிட்டுச் சொன்ன துரியோதனன்…

{அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் தொடர்ந்த துரியோதனன்}, “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கொக்கரிப்புகளின் விளைவால், செயல்கள் இவ்வுலகில் வெல்லும் என்றால், அனைவரும் தங்கள் நோக்கங்களில் வெற்றி அடைந்துவிடுவர். ஏனெனில், தற்பெருமை பேசும் திறனில்லாதவன் எவன் இருக்கிறான்? நீ உனது கூட்டாளியாக வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உனது காண்டீவத்தின் அளவு முழுமையாக ஆறு {6} முழம் என்பதை அறிவேன். உனக்கு நிகரான போர்வீரன் எவனும் இல்லை என்பதை நான் அறிவேன். இவை யாவையும் அறிந்தும், நான் இன்னும் நாட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன். பரம்பரைப் பண்புகளின் விளைவாக ஒரு மனிதன் வெற்றியை அடைவதில்லை. தலைமை ஆணையாளர் {பிரம்மா} மட்டுமே, தனது ஆணையால், காரியங்களை (பகைமையை) நட்பால் தாழச் செய்ய {அடக்க} முடியும்.

இந்தப் பதிமூன்று {13} ஆண்டுகளாக நீ அழுது புலம்பிக் கொண்டிருக்கையில் நான் அரசுரிமையை அனுபவித்தேன். *உன்னையும் உனது சொந்தங்களையும் கொன்று, அதே வழியில் தொடர்ந்து ஆளுவேன். பந்தயத்தில் அடிமையாக வெல்லப்பட்டபோது, உனது காண்டீவம் எங்கே போயிற்று? ஓ! பல்குனா {அர்ஜுனா}, பீமனின் வலிமை எங்கே போயிற்று?

கதாயுதம் தரித்த பீமசேனனாலோ, காண்டீவம் தரித்த உன்னாலோ நீங்கள் விடுதலை அடையவில்லை, ஆனால் களங்கமற்ற கிருஷ்ணையால் {திரௌபதியால்} அடைந்தீர்கள். அடிமைத்தளையில் மூழ்கி, இழிந்தோர் மட்டுமே செய்யத்தகுந்த தொழில்களில் ஈடுபட்டு, அடிமைகளாய் பணி செய்ய வேண்டிய உங்களை அந்தப் பிரஷதனின் {துருபதனின்} வீட்டு மகளே {திரௌபதியே} விடுவித்தாள். எள்ளுப்பதர்களாகவே நான் உங்கள் அனைவரையும் வகைப்படுத்தினேன். அஃது உண்மையே.

ஏனெனில், விராடனின் நகரத்தில் வாழ்ந்த போதும் பார்த்தன் (சில காலத்திற்கு) பின்னலைத் தரிக்கவில்லையா? விராடனின் மடைப்பள்ளியில் {சமையலறையில்}, சமையற்காரனாக வேலை செய்தே பீமசேனன் களைத்துப் போனான். ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, {உங்களையெல்லாம் இப்படிச் செய்த} இதுவும் எனது ஆண்மையே (ஆண்மையின் சாட்சியே)! இடைகள், பின்னல்கள் மற்றும் இடைக்கச்சைகளுடன் மோதலில் இருந்து ஓடி, உனது கூந்தலைக் கட்டிக் கொண்டு, நீ {அர்ஜுனா} பெண்களுக்கு அடற்கலை கற்றுத் தந்தாய் அல்லவா?

க்ஷத்திரியர்கள் எப்போதும் க்ஷத்திரியர்களுக்கு இப்படித்தான் தண்டனை வழங்குவார்கள். வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது அச்சங்கொண்டோ, உன்னைக் கண்டு அஞ்சியோ, ஓ! பல்குனா {அர்ஜுனா}, நான் நாட்டைக் கொடுக்க மாட்டேன். கேசவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்டு போரிடுவாயாக! வஞ்சகமோ, மாயத் தந்திரங்களோ, செப்பிடுவித்தைகளோ ஆயுதம் தரித்த மனிதனை அச்சுறுத்தாது. மாறாக அஃது அவனது கோபத்தையே தூண்டிவிடும்.

வீணாகாத ஆயுதங்களையும், கரங்களையும் கொண்ட என்னை, ஆயிரம் {1000} வாசுதேவர்கள் {கிருஷ்ணன்கள்}, நூறு {100} பல்குனர்கள் {அர்ஜுனர்கள்} அணுகினாலும், அவர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடிப்போகப் போவது உறுதி. போரில் பீஷ்மருடன் மோதுவதும், மலையைத் தலையால் மோதுவதும், பரந்து ஆழ்ந்திருக்கும் பெருங்கடலை இரு கரங்களின் உதவியால் கடப்பதும் ஒன்றே.

என் படையைப் பொறுத்தவரை, அது கண்கூடான ஒரு பெரும் கடலாகும். சரத்வானின் மகனை {கிருபரை} அதன் பெரும் மீனாகவும், விவிம்சதியை அதன் பெரும்பாம்பாகவும், பீஷ்மரை அதன் அளவிலா வலிமை கொண்ட நீரூற்றாகவும், துரோணரை அதன் வெல்லப்படமுடியாத முதலையாகவும், கர்ணன், சால்வன், சல்லியன் ஆகியோரை அதன் மீன்களாகவும், நீர்ச்சுழிகளாகவும், காம்போஜர்களின் ஆட்சியாளனை நெருப்பு உமிழும் குதிரையின் தலையாகவும், பிருஹத்பலனை அதன் கடுமையான அலைகளாகவும், சோமதத்தன் மகனை அதன் திமிங்கலமாகவும், யுயுத்சு மற்றும் துர்முகன் ஆகியோரை அதன் நீராகவும், பகதத்தனை அதன் புயலாகவும், ஸ்ரூதயுஸ், ஹிருதிகனின் மகன் ஆகியோரை அதன் வளைகுடா மற்றும் விரிகுடாக்களாகவும், துச்சாசனனை அதன் ஊற்றாகவும், சுசேஷ்ணன் மற்றும் சித்ராயு ஆகியோரை அதன் நீர் யானைகளாகவும், முதலையாகவும், ஜெயத்ரதனை அதன் (நீருக்கடியில் உள்ள) பாறையாகவும், புருமித்ரனை அதன் ஆழமாகவும், சகுனியை அதன் கரைகளாகவும் {எனது படை எனும்} அந்தப் பெருங்கடல் கொண்டுள்ளது.

ஆயுதங்களை வற்றாத அலைகளாகக் கொண்டிருக்கும் {எனது படை எனும்} இந்த ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் மூழ்கிக் களைப்பால் உணர்வை இழக்கும் உனக்கு, உனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகே, வருத்தம் உனது இதயத்தைப் பீடிக்கும். அதன் பிறகே, தூய்மையற்ற செயல்களைச் செய்யும் ஒரு மனிதனின் இதயம் சொர்க்கத்திடம் (உள்ள நம்பிக்கையில்) இருந்து திரும்புவது போல, உனது இதயமும் பூமியை ஆளும் சிந்தனையில் இருந்தும் விலகும். உண்மையில், தவத்தகுதியற்ற ஒருவனால் சொர்க்கத்தை அடைவது இயலாதது போல, நாட்டை வெல்வதும் உனக்குச் சாத்தியமாகாது” என்றான் {துரியோதனன்}.

உலூகன் தூது! – உத்யோக பர்வம் பகுதி 162-பாண்டவர்களிடம் தூது சென்ற உலூகன்; துரியோதனனின் பேச்சுச் சொல்லப் போகும் தன்னிடம் கோபமடைய வேண்டாம் என்று யுதிஷ்டிரனிடம் உலூகன் வேண்டுவது; யுதிஷ்டிரன் உலூகனுக்குத் துணிவூட்டுவது; துரியோதனன் சொன்ன யாவையும் உலூகன் யுதிஷ்டிரனிடமும், அர்ஜுனனிடமும் சொல்வது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவ முகாமை அடைந்த அந்தச் சூதாடியின் மகன் (உலூகன்), பாண்டவர்கள் முன்னிலையில் தன்னை நிறுத்திக் கொண்டு, யுதிஷ்டிரனிடம், “தூதர்கள் சொல்வதை நீர் அறிவீர்! எனவே, நான் என்ன சொல்ல வேண்டும் என்று துரியோதனர் எனக்கு அறிவுறுத்தியிருக்கிறாரோ, அவ்வார்த்தைகளை மீண்டும் நான் சொல்லும்போது என்னிடம் கோபம் கொள்வது உமக்குத் தகாது” என்றான்.

இதைக் கேட்ட யுதிஷ்டிரன் {உலூகனிடம்}, “ஓ! உலூகா அஞ்சாதே! வரையறுக்கப்பட்ட {தொலைநோக்கற்ற} பார்வை கொண்டவனும், பேராசைக்காரனுமான துரியோதனனின் கருத்துகள் என்ன என்பதை எந்தக் கவலையும் இல்லாமல் எங்களுக்குச் சொல்வாயாக!” என்றான். பிறகு, ஒப்பற்றவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான பாண்டவர்கள், சிருஞ்சயர்கள், பெரும்புகழ் கொண்ட கிருஷ்ணன், தனது மகன்களோடு இருந்த துருபதன், விராடன் மற்றும் ஏகாதிபதிகள் அனைவருக்கும் மத்தியில் உலூகன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

உலூகன் {யுதிஷ்டிரனிடம்}, “குரு வீரர்கள் அனைவரின் முன்னிலையிலும், உயர் ஆன்மா கொண்ட மன்னர் துரியோதனர் உங்களுக்குச் சொல்லி அனுப்பியது இதுவே. ஓ! யுதிஷ்டிரரே அந்த வார்த்தைகளைக் கேளும்!”

“{துரியோதனர் சொன்னார்}, பகடையில் நீ வீழ்த்தப்பட்டாய். கிருஷ்ணையும் சபைக்குக் கொண்டு வரப்பட்டாள். ஆண்மையுள்ளவனாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒருவன் இதற்குக் கோபப்படுவதே நியாயம். பனிரெண்டு {12} வருடங்களாக நீங்கள் வீட்டைவிட்டுக் காட்டுக்குத் துரத்தப்பட்டிருந்தீர்கள். முழுமையாக ஒரு வருடம் விராடனுக்குச் சேவை செய்தே நீங்கள் வாழ்ந்தீர்கள். கோபத்துக்குக் காரணமாக இருக்கும் வனவாசம் மற்றும் கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} நிகழ்த்தப்பட்ட கொடுமை ஆகியவற்றை நினைவுகூர்ந்து, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, ஆண்மையுடன் இருப்பாயாக!

ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, பலவீனனாக இருப்பினும் பீமன் ஒரு உறுதிமொழியை ஏற்றான்! அவனால் {பீமனால்} முடிந்தால் துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கட்டும்! உனது ஆயுதங்கள் முறையாக வழிபடப்பட்டு, அதன் தலைமை தெய்வங்கள் {மானசீகமாக} எழுப்பப்பட்டுவிட்டன! குருக்ஷேத்திரக் களமோ புழுதியற்று இருக்கிறது. சாலைகள் சமமாக இருக்கின்றன. உனது குதிரைகள் நன்கு ஊட்டப்பட்டிருக்கின்றன. எனவே, கேசவனை {கிருஷ்ணனை} உனது கூட்டாளியாகக் கொண்டு நாளை போரில் ஈடுபடுவாயாக!

பீஷ்மரைப் போரில் இன்னும் அணுகாமல், தற்புகழ்ச்சியில் நீ ஏன் ஈடுபடுகிறாய்? கந்தமாதன மலைகளில் தான் ஏறப்போவதைக் குறித்துத் தற்புகழ்ச்சி பேசும் ஒரு மூடனைப் போல, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ வீணான தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். ஒப்பற்றவனான சூத மகனையோ (கர்ணனையோ), வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான சல்லியனையோ, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், போரில் சச்சியின் கணவனுக்கு {இந்திரனுக்கு} இணையாக இருப்பவரையோ {துரோணரையோ} போரில் வீழ்த்தாமல், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, ஆட்சியை ஏன் நீ விரும்புகிறாய்?

வேதங்கள், வில், ஆகிய இரண்டிலும் ஆசானாக இருப்பவர் {துரோணர்}, கல்வியில் அந்த இரு கிளைகளின் எல்லைகளை அடைந்தவராவார். படைகளின் தலைவரும், கலங்கடிக்கப்பட முடியாதவரும், படையின் முன்னணியில் இருந்து போரிடுபவரும், பலத்தில் எந்தக் குறைவையும் அடையாதவருமான ஒப்பற்ற துரோணரை வீழ்த்த நீ வீணாக விரும்புகிறாய்.

காற்றால் சுமேருவின் சிகரம் நொறுக்கப்பட்டதாக நாம் இதுவரை கேள்விப்பட்டதில்லை! எனினும், நீ சொல்வது {வெல்வது} உண்மையில் நடைபெற்றால், காற்று சுமேருவைச் சுமந்து சென்றுவிடும்; வானமே பூமியில் விழுந்துவிடும்; யுகங்களே கூடத் தலைகீழாகும். உயிரை விரும்பும் எவனும், யானையின் முதுகிலோ, குதிரையிலோ, தேரிலோ இருந்து அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவரிடம் {துரோணரிடம்} போரிட்டால் (பாதுகாப்பாகவும், உடல்நலத்துடனும்) அவன் {எதிர்ப்பவன்} வீடு திரும்ப முடியுமா? தன் கால்களால் பூமியில் நடக்கும் எந்த உயிரினம்தான் தான், துரோணர் மற்றும் பீஷ்மரால் தாக்கப்பட்டும், அவர்களின் கணைகளால் துளைக்கப்பட்டும், போரில் இருந்து உயிருடன் தப்ப முடியும்?

தேவர்களின் படைகளைப் போன்று இருப்பதும், தேவர்களால் காக்கப்படும் சொர்க்கத்தைப் போல, இந்த மன்னர்களால் காக்கப்படுவதும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளின் மன்னர்களால் காக்கப்படுவதும், காம்போஜர்கள், சகர்கள், கசர்கள், சால்வர்கள், மத்ஸ்யர்கள் {மச்ச நாட்டவர்}, நடுநாட்டின் குருக்கள், மிலேச்சர்கள், புளிந்தர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், காஞ்சிகள் {காஞ்சி நாட்டவர்}, மற்றும் உண்மையில் போருக்குத் தயாராக இருக்கும் பல நாட்டவரால் நிரம்பியிருப்பதும், பெருகி வரும் அலை நிறைந்த கங்கையைப் போலக் கடக்க முடியாததும், கூடியிருக்கும் ஏகாதிபதிகளுக்குச் சொந்தமானதுமான இந்தப் படைகளின் வலிமையைக் கிணற்றில் வசிக்கும் தவளையைப் போல, நீ ஏன் உணர மறுக்கிறாய்? ஓ! சிறுமதி படைத்த மூடா {யுதிஷ்டிரா}, எனது யானைப் படைக்கு மத்தியில் நிலைத்திருக்கும் என்னிடம் நீ எப்படிப் போரிடப் போகிறாய்?” என்று {துரியோதனனின் வார்த்தைகளை யுதிஷ்டிரனிடம்} சொன்னான் {உலூகன்}.

தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன உலூகன், ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} நோக்கித் தனது முகத்தைத் திருப்பி, அவனிடம் {உலூகன் அர்ஜுனனிடம்}, “ஓ! அர்ஜுனா, தற்பெருமை பேசாமால் {பிதற்றாமல்} போரிடுவாயாக! நீ ஏன் இவ்வளவு தற்பெருமை பேசுகிறாய்? செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமே வெற்றி விளையும். பிதற்றலால் ஒரு போர் வெல்லப்படுவதில்லை. கொக்கரிப்புகளின் விளைவால், இவ்வுலகில் செயல்கள் வெல்லும் என்றால், அனைவரும் தங்கள் நோக்கங்களில் வெற்றி அடைந்துவிடுவர். ஏனெனில், தற்பெருமை பேசும் திறனில்லாதவன் எவன் இருக்கிறான்? நீ உனது கூட்டாளியாக வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உனது காண்டீவத்தின் அளவு முழுமையாக ஆறு {6} முழம் என்பதை அறிவேன். உனக்கு நிகரான போர்வீரன் எவனும் இல்லை என்பதையும் நான் அறிவேன். இவை யாவையும் அறிந்தும், நான் இன்னும் நாட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்.

பரம்பரைப் பண்புகளின் விளைவாக ஒரு மனிதன் வெற்றியை அடைவதில்லை. தலைமை ஆணையாளர் {பிரம்மா} மட்டுமே, தனது ஆணையால், காரியங்களை (பகைமையை) நட்பால் தாழச் செய்ய {அடக்க} முடியும். இந்தப் பதிமூன்று {13} ஆண்டுகளாக நீ அழுது புலம்பிக் கொண்டிருக்கையில் நான் அரசுரிமையை அனுபவித்தேன். உன்னையும் உனது சொந்தங்களையும் கொன்று, அதே வழியில் தொடர்ந்து ஆளுவேன். பகடையில் வெல்லப்பட்டு நீ அடிமையானபோது, உனது காண்டீவம் எங்கே போயிற்று? ஓ! பல்குனா {அர்ஜுனா}, பீமனின் வலிமை எங்கே போயிற்று?

கதாயுதம் தரித்த பீமசேனனாலோ, காண்டீவம் தரித்த உன்னாலோ நீங்கள் விடுதலை அடையவில்லை, ஆனால் களங்கமற்ற கிருஷ்ணையால் {திரௌபதியால் விடுதலை} அடைந்தீர்கள். அடிமைத்தழையில் மூழ்கி, இழிந்தோர் மட்டுமே செய்யத்தகுந்த தொழில்களில் ஈடுபட்டு, அடிமைகளாய் பணி செய்ய வேண்டிய உங்களை அந்தப் பிரஷதனின் {துருபதனின்} வீட்டு மகளே {திரௌபதியே} விடுவித்தாள். எள்ளுப்பதர்களாகவே நான் உங்கள் அனைவரையும் நான் வகைப்படுத்தினேன். அஃது உண்மையே. ஏனெனில், விராடனின் நகரத்தில் வாழ்ந்த போது பார்த்தன் (சில காலத்திற்கு) {கூந்தலில்} பின்னலைத் தரிக்கவில்லையா? விராடனின் மடைப்பள்ளியில் {சமையலறையில்}, சமையற்காரனாக வேலை செய்தே பீமசேனன் களைத்துப் போனான். ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, {உங்களையெல்லாம் இப்படிச் செய்த} இதுவும் எனது ஆண்மையே (ஆண்மையின் சாட்சியே)!

பின்னல்கள் மற்றும் இடைக்கச்சைகளுடன் மோதலில் இருந்து ஓடி, உனது கூந்தலைப் பின்னலாகக் கட்டிக் கொண்ட நீ {அர்ஜுனா} பெண்களுக்கு ஆடற்கலை கற்றுத் தந்தாய் அல்லவா? க்ஷத்திரியர்கள் எப்போதும் க்ஷத்திரியர்களுக்கு இப்படித்தான் தண்டனையை வழங்குவார்கள். வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது அச்சங்கொண்டோ, உன்னிடம் அச்சங்கொண்டோ, ஓ! பல்குனா {அர்ஜுனா}, நான் நாட்டைக் கொடுக்க மாட்டேன்.

கேசவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்டு போரிடுவாயாக! வஞ்சகமோ, மாயத் தந்திரங்களோ, செப்பிடுவித்தைகளோ ஆயுதம் தரித்த மனிதனை அச்சுறுத்தாது. மாறாக அஃது அவனது கோபத்தையே தூண்டிவிடும்.வீணாகாத ஆயுதங்களையும், கரங்களையும் கொண்ட என்னை, ஆயிரம் {1000} வாசுதேவர்கள் {கிருஷ்ணன்கள்}, நூறு {100} பல்குனர்கள் {அர்ஜுனர்கள்} அணுகினாலும், அவர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடிப்போகப் போவது உறுதி. போரில் பீஷ்மருடன் மோதுவதும், மலையைத் தலையால் துளைப்பதும், பரந்து ஆழ்ந்திருக்கும் பெருங்கடலை இரு கரங்களின் உதவியால் கடப்பதும் ஒன்றே.

என் படையைப் பொறுத்தவரை, அது கண்கூடான ஒரு பெரும் கடலாகும். சரத்வானின் மகனைப் {கிருபரைப்} அதன் பெரும் மீனாகவும், விவிம்சதியை அதன் சிறு மீனாகவும், பிருகத்பலனை அதன் அலைகளாகவும், சோமதத்தனை அதன் திமிங்கலமாகவும், பீஷ்மரை அதன் அளவிலா வலிமை கொண்ட பலமாகவும், துரோணரை அதன் வெல்லப்படமுடியாத முதலையாகவும், கர்ணன், சல்லியன் ஆகியோரை அதன் மீன்களாகவும், நீர்ச்சுழிகளாகவும், காம்போஜர்களின் ஆட்சியாளனை நெருப்பு உமிழும் குதிரையின் தலையாகவும், ஜெயத்ரதனை (நீருக்கடியில் உள்ள) அதன் பாறையாகவும் {மலையாகவும்}, புருமித்ரனை அதன் ஆழமாகவும், துர்மார்ஷணனை அதன் நீராகவும், சகுனியை அதன் கரைகளாகவும் {எனது படை எனும்} அந்தப் பெருங்கடல் கொண்டுள்ளது.

ஆயுதங்களை வற்றாத அலைகளாகக் கொண்டிருக்கும் {எனது படை எனும்} இந்த ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் மூழ்கிக் களைப்பால் உணர்வை இழக்கப் போகும் உனக்கு, உனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகே, உனது இதயத்தை வருத்தம் பீடிக்கும். அதன் பிறகே, தூய்மையற்ற செயல்களைச் செய்யும் ஒரு மனிதனின் இதயம் சொர்க்கத்திடம் (உள்ள நம்பிக்கையில்) இருந்து திரும்புவது போல, உனது இதயமும் பூமியை ஆளும் சிந்தனையில் இருந்தும் விலகும். உண்மையில், தவத்தகுதியற்ற ஒருவனால் சொர்க்கத்தை அடைவது இயலாதது போல, நாட்டை வெல்வதும் உனக்குச் சாத்தியமாகாது” என்றான் {என்று துரியோதனன் சொன்னதாக அர்ஜுனனிடம் உலூகன் சொன்னான்}.

சகுனியின் மகன் உலூகன்! – உத்யோக பர்வம் பகுதி 163-துரியோதனன் சொன்னனதைத் திரும்பத் திரும்பச் சொன்ன உலூகன் பாண்டவர்களின் கோபத்தைத் தூண்டியது; பீமசேனனன் தனது உறுதிமொழிகளையும் ஆணைகளையும் நினைவூட்டி துரியோதனனுக்கு உலூகன் மூலம் மறுமொழி கூறியது; உலூகனையும், உலூகனின் தந்தை சகுனியையும் தானே கொல்வதாகச் சகாதேவன் சூளுரைப்பது; அர்ஜுனன், யுதிஷ்டிரன், கிருஷ்ணன் ஆகியோர் உலூகன் மூலம் துரியோதனனுக்கு மறுமொழி சொன்னது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போல இருந்த அர்ஜுனனை தனது சொல்லடிகளால் மேலும் தூண்டும்வகையில், தான் பேசியதை மீண்டும் பேசினான் உலூகன். இதுபோன்று திரும்பத் திரும்பச் சொல்லி போதுமான அளவுக்குச் சினமூட்டப்பட்டிருந்த பாண்டவர்கள், இவ்வார்த்தைகளை (இரண்டாம் முறையாகக்) கேட்டாலும், அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனுடைய [1] {உலூகனுடைய} நிந்தனைகளைக் கேட்டு, தங்கள் பொறுமையை மீறும் வகையில் தூண்டப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் {தங்கள் இருக்கைகளில் இருந்து} எழுந்து, தங்கள் கரங்களை நீட்டினார்கள் {உதறினார்கள்}. கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்புகளைப் போல இருந்த அவர்கள், தங்களுக்குள் ஒருவர் மேல் மற்றொருவர் பார்வையை வீசத் தொடங்கினர்.

கீழ்நோக்கித் தனது முகத்தை வைத்திருந்த பீமசேனன், ஒரு பாம்பைப் போல கடுமையாக மூச்சுவிட்டபடி, இரத்தச் சிவப்புடைய தனது கடைவிழிகளால் கேசவனை {கிருஷ்ணனை} நோக்கி, அவனைச் {கிருஷ்ணனைச்} சாய்வாகப் பார்க்க ஆரம்பித்தான். அந்த வாயுத் தேவனின் மகன் {பீமன்} பெரிதும் பாதிக்கப்பட்டு, கோபத்தால் மிகவும் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, “நொடியும் தாமதிக்காமல் இங்கிருந்து சென்றுவிடு. ஓ! சூதாடியின் மகனே {உலூகா}, சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, “உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன. அதன் பொருளும் உணரப்பட்டது. நீ விரும்பியது நடைபெறட்டும்” என்ற இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.

ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பெரும் அறிவுடைய யுதிஷ்டிரனை மீண்டும் ஒருமுறை பார்த்தான். பிறகு, சிருஞ்சயர்கள், பெரும்புகழுடைய கிருஷ்ணன், தனது மகன்களுடன் கூடிய துருபதன், விராடன் மற்றும் (அங்குக் கூடியிருந்த) மன்னர்கள் அனைவருக்கும் மத்தியிலும், முன்னிலையிலும், கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்பைக் குச்சியால் எரிச்சலூட்டுவது போல, அர்ஜுனனிடம் அதே வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை சொன்ன உலூகன், மீண்டும் அவனை {அர்ஜுனனைத்} தூண்டினான். பிறகு அவன் {உலூகன்}, கிருஷ்ணன் மற்றும் பிறர் அனைவரிடமும் துரியோதனன் தனக்கு அறிவுறுத்தியபடியே சொன்னான். உலூகனால் உச்சரிக்கப்பட்ட அந்தக் கடுமையான மற்றும் ஏற்கத்தகாத வார்த்தைகளைக் கேட்ட பார்த்தன் {அர்ஜுனன்} மிகவும் கலங்கி, தனது நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனை {அர்ஜுனனை} இந்நிலையில் கண்ட அந்த ஏகாதிபதிகளின் சபையால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிருஷ்ணனுக்கும், உயர் ஆன்ம பார்த்தனும் {அர்ஜுனனுக்கும்} நேர்ந்த அவமதிப்பைக் கண்ட பாண்டவர்களின் தேர் வீரர்கள் அனைவரும் பெரிதும் கலங்கினர். அவர்கள் பெரும் மனோ உறுதி கொண்டவர்களாக இருப்பினும், அந்த மனிதர்களில் புலிகள் கோபத்தில் எரியத் {எரிச்சலடையத்} தொடங்கினர். திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கேகயத்தின் ஐந்து சகோதரர்கள், ராட்சசன் கடோத்கசன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, மன்னன் திருஷ்டகேது, பெரும் ஆற்றல் கொண்ட பீமசேனன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்த இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தங்கள் இருக்கையில் இருந்து குதித்தெழுந்தனர். கோபத்தால் அவர்களது கண்கள் சிவந்திருந்தன. சிவந்த சந்தனக் குழம்பாலும், தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் அழகிய கரங்களை அவர்கள் உதறிக் கொண்டார்கள்.

பிறகு, குந்தியின் மகனான விருகோதரன் {பீமன்}, அவர்களது உடல் அசைவுகளையும், இதயங்களையும் புரிந்து கொண்டு, தனது இருக்கையில் இருந்து எழும்பினான். தனது பற்களைக் கடித்து, தனது கடைவாயை நாவால் நக்கி, கோபத்தால் எரிந்து, தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, தனது கண்களைக் கடும் சிவப்பாக்கி,  {பீமன்} உலூகனிடம், “அறியா மூடா {உலூகா}, நாங்கள் ஏதோ அறிவாற்றலற்ற பேதையர் கூட்டம் என்று நினைத்து எங்களைத் தூண்டும் நோக்கோடு துரியோதனனால் சொல்லப்பட்ட உனது வார்த்தைகள் அனைத்தும் {எங்களால்} கேட்கப்பட்டன! இப்போது நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, {கௌரவர்களிடம் சென்று}, சூதனின் மகனும் {கர்ணனும்}, தீய இதயம் படைத்த சகுனியும் கேட்டுக் கொண்டிருக்கையில், க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் மத்தியில் அணுக முடியாதபடி இருக்கும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} திரும்பச் {இவ்வார்த்தைகளைச்} சொல்வாயாக.

{பீமன், துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம்} “நாங்கள் எப்போதும் எங்கள் அண்ணனை {யுதிஷ்டிரனை} மனநிறைவு கொள்ளச் செய்யவே முயல்கிறோம்! ஓ! தீய நடத்தை கொண்டவனே {துரியோதனா}, இதற்காகவே நாங்கள் உனது செயல்களைப் பொறுத்தோம். இதை உனக்குக் கிடைத்த உயர்ந்த நற்பேறாக நீ கருதவில்லையா? பெரும் புத்திக்கூர்மையுடையவரும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரர், நமது குலத்தின் நன்மைக்காக மட்டுமே, சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ரிஷிகேசனை {கிருஷ்ணனை} குருக்களிடம் அனுப்பி வைத்தார். விதியால் உந்தப்பட்ட நீயோ யமனுலகு செல்ல விரும்புகிறாய் என்பதில் ஐயமில்லை. வா, எங்களிடம் போரிடுவாயாக. எப்படியிருப்பினும், நாளை அது நிச்சயம் நடக்கும்!

உண்மையில், நான் உனது சகோதரர்களுடன் சேர்த்து உன்னைக் கொல்வதாகவே உறுதியேற்றிருக்கிறேன். ஓ! பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, அதில் சிறு ஐயத்திற்கும் இடங்கொடாதே. ஏனெனில் நான் உறுதியேற்றபடியே அது நடக்கும்! வருணனின் வசிப்பிடமான கடலே கூட அதன் கண்டங்களைத் திடீரென மீறலாம். மலைகளேகூடப் பிளந்து போகலாம். எனினும் எனது வார்த்தைகள் மட்டும் பொய்யாக முடியாது! யமனோ, குபேரனோ, ருத்ரனோகூட நேரடியாக உனக்குத் துணைபுரிய வந்தாலும், பாண்டவர்கள் தங்கள் உறுதிமொழியைச் சாதிப்பார்கள். {வாக்கைக் காப்பார்கள்}. நான் என் விருப்பப்படி துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கப்போவது உறுதி! கோபத்தோடு என்னை நோக்கி வரும் க்ஷத்திரியன் எவனாக இருப்பினும் யமனுலகு அனுப்புவேன். படைகளின் முன்னணியில் பீஷ்மரே வந்தாலும், நான் அவரையும் {பீஷ்மரையும்} யமனுலகு அனுப்பி வைப்பேன்! க்ஷத்திரிய சபைக்கு மத்தியில் நான் சொன்னவை நிச்சயம் உண்மையாகும். இஃது என் ஆன்மா மீது ஆணை” என்றான் {பீமன்}.

பீமசேனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கோபம் நிறைந்த சகாதேவனும், கோபத்தால் கண்கள் சிவந்து, (கூடியிருந்த) துருப்புகளுக்கு மத்தியில் பெருமை மிக்க வீரனொருவனுக்கு உரித்தான வகையில் இவ்வார்த்தைகளைச் சொன்னான். அவன் {சகாதேவன் உலூகனிடம்}, “ஓ! பாவியே {உலூகா}, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. அவற்றை உனது தந்தையிடம் {சகுனியிடம்} மீண்டும் சொல்வாயாக! {உனது தந்தையிடம்}, “உனக்கும் திருதராஷ்டிரருக்கும் உறவுமுறை இல்லையெனில், எங்களுக்கும், குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} இடையில் பிளவு {கலகம்} ஏற்பட்டிருக்காது! பாவச் செயல்களைச் செய்து, உனது குலத்தையே அழித்துக் கொள்ளும் நீ, திருதராஷ்டிரர் குலத்தின் அழிவுக்காகவும், முழு உலகத்தின் அழிவுக்காகவும், பூசலே {சண்டையே} உருவம் கொண்டு வந்தது போலப் பிறந்திருக்கிறாய்” என்று சொல்வாயாக. ஓ! உலூகா, எங்கள் பிறப்பிலிருந்தே உனது தந்தையான பாவி {சகுனி} எப்போதும் எங்களுக்குக் காயம் ஏற்படுத்தவும், தீமை செய்யவுமே முயன்றிருக்கிறான். அந்தப் பகை உறவின் எதிர்கரையை அடைய நான் விரும்புகிறேன். {தொடர்ச்சியான அந்தப் பகைக்கு அடைய முடியாத முடிவை அடையப்போகிறேன்}. அந்தச் சகுனியின் கண் முன்பாகவே முதலில் {உலூகனாகிய} உன்னைக் கொன்று, பிறகு வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் சகுனியைக் கொல்வேன்!” என்றான் {சகாதேவன்}.

பீமன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரின் சொற்களைக் கேட்ட பல்குனன் {அர்ஜுனன்}, புன்னகைத்துக் கொண்டே பீமனிடம், “ஓ! பீமசேனரே, உம்முடன் பகைமை பாராட்டுபவர் எவரும் உயிருடன் இருக்க முடியாது! அந்த மூடர்கள் தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்கள் மரணத்தின் வலையிலேயே சிக்கியிருக்கிறார்கள்! ஓ! மனிதர்களில் சிறந்தவரே {பீமரே}, உமது கடுமொழிகளுக்கு உலூகன் தகுந்தவனல்ல. தூதர்களிடம் என்ன தவறு இருக்கிறது? (சொல்ல வேண்டும்) என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டதையே அவர்கள் திரும்பச் சொல்கிறார்கள்” என்றான் {அர்ஜுனன்}.

பயங்கர ஆற்றல் கொண்ட பீமனிடம் இப்படிப் பேசிய அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, பிறகு, வீரமிக்கத் தனது கூட்டாளிகளிடமும், திருஷ்டத்யும்னன் தலைமையிலான நலன்விரும்பிகளிடமும், “வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, குறிப்பாக என்னையும் பழித்துத் திருதராஷ்டிரரின் பாவம் நிறைந்த மகன் {துரியோதனன்} சொன்ன வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள்! அவற்றைக் கேட்ட நீங்கள், எங்கள் நலனை விரும்புவதால் கோபத்தால் நிறைந்தீர்கள்! ஆனால், வாசுதவேனின் {கிருஷ்ணனின்} வலிமையாலும், உங்களது முயற்சிகளாலும் நான் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை! உங்கள் அனுமதியின் பேரில் நான் உலூகனிடம் பேசப் போகிறேன். அந்த வார்த்தைகளுக்கான மறுமொழிகளையும், உண்மையில் அவன் துரியோதனனிடம் சொல்ல வேண்டியவற்றையும் நான் சொல்லப் போகிறேன். {என்ற அர்ஜுனன் துரியோதனனிடம் சொல்லும்படி உலூகனிடம்} “நாளை விடிந்ததும், எனது பிரிவின் தலைமையில் நிலைத்திருக்கும் நான், உனது வார்த்தைகளுக்கான பதிலை எனது காண்டீவத்தின் மூலம் சொல்கிறேன்! ஏனெனில், அலிகளே வார்த்தைகளால் பதிலளிப்பார்கள்!” என்றான் {அர்ஜுனன்}.

இதைக்கேட்ட மன்னர்களில் சிறந்தோர் அனைவரும் அந்த மறுமொழியில் உள்ள புத்திக்கூர்மையால் ஆச்சரியப்பட்டுத் தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பாராட்டினார்கள். பிறகு, அந்த மன்னர்கள் அனைவரிடமும் அவர்களது வயதுக்கும், தகுதிக்கும் ஏற்றபடி மென்மையாகப் பேசிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இறுதியாக, துரியோதனனிடம் கொண்டு செல்ல வேண்டிய வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். மேலும் யுதிஷ்டிரன் {உலூகனிடம்}, “நல்ல மன்னன் எவனும் அவமதிப்பைப் பொறுக்கலாகாது. இவ்வளவு நீண்ட நேரம் நீ சொன்னதைக் கேட்ட நான், இப்போது எனது மறுமொழி என்ன என்று உன்னிடம் சொல்லப் போகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயன் திருதராஷ்டிரனிடம், “ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான யுதிஷ்டிரன், கோபத்தால் கண்கள் மிகச் சிவந்து, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, தனது நாவால் தன் கடைவாயை நக்கி, கோபம் பெருகி, தனது கண்களை ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீதும், தனது தம்பிகள் மீதும் செலுத்தியபடி, மென்மை, ஆவேசம் ஆகிய இரண்டும் நிறைந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான்.

தனது பெரும் கரங்களை வீசி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, “ஓ! உலூகா, போ. நன்றியற்றவனும், தீய எண்ணம் கொண்டவனும், பகைமையின் உருவமாக இருப்பவனும், குலத்தின் இழிந்த பாவியுமான துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. “ஓ! பாவம் நிறைந்த இழிந்தவனே {துரியோதனா}, நீ எப்போதும் பாண்டவர்களிடம் கோணலாகவே நடக்கிறாய்! ஓ! பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, க்ஷத்திரிய வகையில், எவன் தனது சொந்த பலத்தை மட்டுமே நம்பி, தனது ஆற்றலை வெளிப்படுத்தி, தனது எதிரிகளை (போருக்கு) அழைத்து, தனது வார்த்தைகளை நிறைவேற்றுகிறானோ, அவனே ஆண்மையுள்ளவன்! ஓ! பாவம்நிறைந்த இழிந்தவனே, க்ஷத்திரியனாக இருப்பாயாக. எங்களைப் போருக்கு அழைப்பாயாக!

ஓ! உனது குலத்தில் புகழற்றவனே, நாங்கள் மரியாதை வைத்திருக்கும் பிறரை உனக்கு முன்னே விட்டு, போர் செய்யாதே. ஓ! கௌரவா {துரியோதனா}, உனது சொந்த பலத்தையும், உனது சேவகர்களையும் நம்பி பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போருக்கு அழைப்பாயாக! அனைத்து வகையிலும் க்ஷத்திரியனாக இருப்பாயாக! பகைவரை எதிர்கொள்ள முடியாமல், பிறரின் வலிமையை நம்பி, தனது எதிரிகளை அழைப்பவன், உண்மையில், அலியே ஆவான்! எனினும், பிறரின் வலிமையை நம்பியிருக்கும் நீ, உன்னை உயர்வாக நினைத்துக் கொள்கிறாய்! பலவீனனாகவும், திறனற்றவனாகவும் இருக்கும் நீ, எங்களிடம் (வார்த்தைகளில்) ஏன் இப்படிக் கொக்கரிக்கிறாய்? {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}” என்று {உலூகனிடம்} சொன்னான் {யுதிஷ்டிரன்}.

கிருஷ்ணன் {உலூகனிடம்}, “ஓ! சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனது வார்த்தைகளையும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} சொல்வாயாக. “நாளை விடிந்ததும் போர் நடக்கப் போகிறது. ஓ! தீய ஆன்மா கொண்டவனே, ஆண்மையோடிருப்பாயாக! ஓ! மூடா, பாண்டவர்களுக்குத் தேரோட்டியாக மட்டுமே செயல்படத் தேர்ந்தெடுத்திருக்கும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} போரிட மாட்டான் என்று நினைத்து நீ அச்சமற்று இருக்கிறாய். எனினும், அஃது ஒருக்கணம் கூட நிலைக்காது. எனது கோபம் தூண்டப்பட்டால், வைக்கோலை எரிக்கும் நெருப்பு போல, நான் (உன்னால் கூட்டப்பட்டிருக்கும்) மன்னர்கள் அனைவரையும் எரித்துவிடுவேன்.

எனினும், யுதிஷ்டிரரின் உத்தரவின் பேரில், புலன்களை முழுமையாக அடக்கியவனும், தனியாகப் போரிடப் போகிறவனுமான உயர் ஆன்ம பல்குனனுக்கு {அர்ஜுனனுக்குத்} தேரோட்டியாக மட்டும் எனது பணிகளைச் செய்வேன். மூவுலகங்களின் எல்லைகளுக்கு அப்பால் நீ பறந்து சென்றாலும், பூமியின் ஆழங்களுக்குள் நீ மூழ்கிப் போனாலும், அந்த இடங்களில் எல்லாம் நீ அர்ஜுனனின் தேரை நாளை காலையில் காண்பாய். பீமனின் வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டது என்று நீ நினைக்கிறாய். ஆனால் துச்சாசனனின் இரத்தம் ஏற்கனவே குடிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவாயாக. என்னதான் நீ குறுக்கான, மாறுபாடான வார்த்தைகளைப் பேசினாலும், பார்த்தனோ {அர்ஜுனனோ}, மன்னன் யுதிஷ்டிரரோ, பீமசேனனோ, இரட்டையர்களோ உன்னைத் துரும்பாகவும் மதிக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்” {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}” என்று {உலூகனிடம்} சொன்னான் {கிருஷ்ணன்}.”

துரியோதனன் பெற்ற பதில்! – உத்யோக பர்வம் பகுதி 164-அர்ஜுனன், யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன், விராடன், துருபதன், சிகண்டி, திருஷ்டத்யும்னன் ஆகியோர் துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் சொன்ன வார்த்தைகள்; இறுதியாக மீண்டும் ஒருமுறை யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட உலூகன், யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுத் துரியோதனனிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொல்வது; துச்சாசனன், கர்ணன், சகுனி ஆகியோரை அழைத்த துரியோதனன் படைகளை அணிவகுக்கும்படி ஏவியது; கர்ணனின் கட்டளையின் பேரில் படை அணிவகுக்கப்படுவது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரியோதனனின் அவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் புகழ் கொண்டவனுமான குடகேசன் {அர்ஜுனன்}, மிகச் சிவந்த கண்களுடன் அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனைக் {உலூகனைக்} கண்டான். மேலும் கேசவனைப் {கிருஷ்ணனைப்} பார்த்து, தனது பெரும் கரங்களை உயரத்தூக்கி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, “எவன் தனது சொந்த பலத்தை நம்பி, தனது எதிரிகளை அழைத்து, அவர்களுடன் அச்சமற்றறு போரிடுவானோ அவனே ஆண்மகனாகச் சொல்லப்படுகிறான். எனினும், பிறரின் பலத்தை நம்பி, தனது எதிரிகளை அழைக்கும் புகழற்ற ஒரு க்ஷத்திரியன், தனது இயலாமையின் விளைவாக, மனிதர்களில் இழிந்தவனாகக் கருதப்படுகிறான். பிறரின் பலத்தை நம்பி இருக்கும் நீ (ஓ! துரியோதனா), கோழையாக இருந்து கொண்டு, ஓ! மூடா, உனது எதிரிகளை நிந்திக்கிறாய்.

எது நன்மையோ, அதையே இதயப் பூர்வமாகச் செய்பவரும், தனது ஆசைகள் அனைத்ததையும் கட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரும் அறிவுடையவருமான க்ஷத்திரியர்கள் அனைவரிலும் முதிர்ந்தவரை (பீஷ்மரை) உனது துருப்புகளின் தலைவராக நிறுவி கொண்டு, நிச்சய மரணத்திற்கு அவரை {பீஷ்மரை} ஆட்படுத்தி, தற்புகழ்ச்சியில் {பிதற்றலில்} நீ ஈடுபடுகிறாய்! ஓ! தீய புரிதல் கொண்டவனே, (இதைச் செய்வதில் இருக்கும்) உனது நோக்கத்தை, ஓ! உனது குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம். கருணையால், பாண்டுவின் மகன்கள், கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கொல்லமாட்டார்கள் என்று நினைத்தே நீ அப்படிச் செய்திருக்கிறாய். எனினும், ஓ! திருதராஷ்டிரர் மகனே {துரியோதனா}, யாரின் பலத்தை நம்பி நீ இத்தகு தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாயோ அந்தப் பீஷ்மரை வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் முதலில் நான் கொல்வேன் என்று அறிவாயாக!” {என்று துரியோதனனிடம் சொல்வாயாக.}

ஓ! சூதாடியின் மகனே {உலூகா}, (இங்கிருந்து) பாரதர்களிடம் சென்று, திருதராஷ்டிரர் மகனான துரியோதனனை அணுகி, அர்ஜுனன் சொன்னான் என்று அவனிடம் {துரியோதனனிடம்}, “அப்படியே ஆகட்டும். இந்த இரவு கடந்ததும், கடும் ஆயுத மோதல் ஏற்படப்போகிறது. உண்மையில், தோற்காத வலிமை கொண்டவரும், உண்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பவருமான பீஷ்மர், “சிருஞ்சயர்கள் மற்றும் சால்வேயர்களின் படையை நான் கொல்வேன். இதுவே எனது பணியாகட்டும். துரோணரைத் தவிர்த்து இவ்வுலகில் உள்ளோர் அனைவரையும் என்னால் கொல்ல முடியும். எனவே, பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தை ஊக்குவிக்காதிருப்பாயாக!” என்ற இவ்வார்த்தைகளைக் குருக்களுக்கு மத்தியில் வைத்து {துரியோதனனான} உன்னிடம் சொல்லியிருக்கிறார்!

இதன்காரணமாக, ஓ! துரியோதனா, நீ பாண்டவர்கள் துயரில் மூழ்கிவிட்டார்கள், நாடு நமதே என்று கருதுகிறாய். இதனால் நீ செருக்கால் நிறைந்திருக்கிறாய். எனினும், உன்னிடமே இருக்கும் ஆபத்தை நீ காணவில்லை. எனவே, முதலில் நான் குருக்களில் மூத்தவரான பீஷ்மரை உனது கண்களுக்கு முன்பாகவே கொல்வேன்! (நாளை) சூரியன் முளைக்கையில், தேர்களுடனும் கொடிக்கம்பங்களுடனும் கூடிய துருப்புகளின் தலைமையில் நின்று, தனது உறுதிமொழிகளில் உறுதியாய் இருக்கும் உனது படைகளின் தலைவரைக் காப்பாயாக. உனது புகலிடமாக இருக்கும் அவரை {பீஷ்மரை}, உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவே, எனது கணைகளால் கீழே வீழ்த்துவேன். நாளை விடிந்ததும், எனது கணைகளால் மூடப்பட்டிருக்கும் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்டு, பிதற்றலில் {தற்புகழ்ச்சியில்} ஈடுபடுவதால் என்ன நடக்கும் என்பதைச் சுயோதனன் {நீ} அறிவான்{ய்}.

ஓ! சுயோதனா {துரியோதனா}, குறுகிய பார்வை கொண்டவனும், அநீதிமிக்கவனும், எப்போதும் விதண்டாவாதம் செய்பவனும், தீய புரிதல் கொண்டவனும், நடத்தையில் கொடூரனுமான உனது தம்பி துச்சாசனனைக் குறித்து, சபைக்கு மத்தியில், கோபத்தில் பீமசேனர் சொன்னது நிறைவேறுவதை வெகுவிரைவில் நீ காண்பாய். மாயை, செருக்கு, கோபம், திமிர்த்தனம், பிதற்றல், இரக்கமற்றத்தனம், சுடு சொற்கள் மற்றும் செயல்கள், நீதியில் ஏற்படும் வெறுப்புணர்வு, பாவம் நிறைந்த தன்மை, அடுத்தவரைத் தவறாகப் பேசுதல், வயதில் முதிர்ந்தோரின் ஆலோசனைகளை மீறுதல், சாய்ந்த பார்வை மற்றும் அனைத்து வகைத் தீமைகளின் பயங்கர விளைவுகளை நீ விரைவில் காண்பாய்.

ஓ! மனிதருள் இழிந்தவனே, வாசுதேவனை {கிருஷ்ணனை} எனக்கு அடுத்தவனாகக் கொண்டிருக்கும் நான் கோபப்பட்டால், ஓ! மூடா, வாழ்விலோ, நாட்டிலோ உனக்கு எப்படி ஆசையுண்டாகும்? பீஷ்மரும், துரோணரும் அமைதிப்படுத்தப்பட்ட பிறகு, சூதனின் மகன் {கர்ணன்} வீழ்த்தப்பட்ட பிறகு, வாழ்க்கை, நாடு மற்றும் மகன்கள் மீது நீ நம்பிக்கையற்றவனாவாய். பீமசேனர் கொடுக்கும் மரண அடியால், உனது தம்பிகளும் மகன்களும் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டு, ஓ! சுயோதனா {துரியோதனா}, நீ உனது தவறான செய்கைகள் அனைத்தையும் நினைவு கூர்வாய்” என்று துரியோதனனிடம் சொல்வாயாக. ஓ! சூதாடியின் மகனே {உலூகா}, இரண்டாம் முறை நான் சூளுரைக்கமாட்டேன் என்றும் அவனிடம் சொல்வாயாக. இவை யாவும் நடைந்தேறும் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்”, என்றான் {அர்ஜுனன்}

{பிறகு, யுதிஷ்டிரன் உலூகனிடம்} [1], “ஓ! உலூகா, இங்கிருந்து செல்லும் நீ, ஓ! ஐயா, சுயோதனனிடம் {துரியோதனனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. உன் வெளிச்சத்தில் {உனது நடத்தையைக் கொண்டு} எனது நடத்தையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது உனக்குத் தகாது. உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் போன்றது, எனது நடத்தைக்கும், உனது நடத்தைக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிவாயாக! பூச்சிகளுக்கும், எறும்புகளுக்குக் கூட நான் தீங்கை விரும்ப மாட்டேன். எனவே, எனது சொந்தங்களுக்கு என்னால் எப்போதும் தீங்கை விரும்பமுடியுமா என்பதைக் குறித்து நான் என்ன சொல்ல? ஓ! ஐயா, அதற்காகவே நான் உன்னிடம் வெறும் ஐந்து கிராமங்களை மட்டும் கேட்டேன்! ஓ! தீய புரிதல் கொண்டவனே {துரியோதனா}, உன்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய பேரிடரை நீ ஏன் காணாமல் இருக்கிறாய்? காமத்தால் {ஆசையால்} சூழப்பட்ட ஆன்மா கொண்ட நீ, உனது புரிதலில் {அறிவில்} உள்ள குறைபாட்டின் காரணமாகவே வீம்புகளில் ஈடுபடுகிறாய். அதன் {அறிவில் உள்ள குறைப்பாட்டின்} காரணமாகவே நீ வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன நன்மையான வார்த்தைகளை ஏற்க மறுக்கிறாய். அதிகப் பேச்சுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? உனது நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து (எங்களுக்கு எதிராகப்} போரிடுவாயாக!” {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}. ஓ! சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனக்குத் தீங்கானதையே எப்போதும் செய்யும் அந்தக் குரு இளவரசனிடம் {துரியோதனனிடம்}, “உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன; அவற்றின் பொருளும் புரிந்து கொள்ளப்பட்டது. உன் விருப்பப்படியே {அனைத்தும்} நடக்கட்டும்” என்று (இந்த வார்த்தைகளையும்) சொல்வாயாக” {என்று [உலூகனிடம்] சொன்னான் [யுதிஷ்டிரன்]}

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}, ஓ! மன்னனின் மகனே {திருதராஷ்டிரரே}, பிறகு, பீமசேனன் மீண்டுமொருமுறை இவ்வார்த்தைகளைச் சொன்னான். பீமன் {உலூகனிடம்}, “ஓ! உலூகா, தீய மனம் கொண்டவனும், வஞ்சகம் நிறைந்தவனும், அநீதிமிக்கவனும், பாவத்தின் வடிவானவனும், கபடம் நிறைந்தவனும், தீய நடத்தை மிக்கவனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} எனது இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக.  {பீமன் துரியோதனனிடம்}, “ஓ! மனித வகையில் இழிந்தவனே {துரியோதனா}, கழுகின் வயிற்றிலோ {கழுகுக்கு இரையாகவோ}, ஹஸ்தினாபுரத்திலோ நீ வசிக்க வேண்டியிருக்கும். சபைக்கு மத்தியில் ஏற்ற உறுதி மொழியை நான் நிறைவேற்றப்போவது நிச்சயம்.

போரில் துச்சாசனனைக் கொன்று, அவனது ஆக்கை இரத்தத்தைக் குடிப்பேன் என்று நான் உண்மையின் {சத்தியத்தின்} பேரில் உறுதியேற்கிறேன். உனது (மற்ற) தம்பிகளையும் கொல்லும் நான், உனது தொடைகளையும் நொறுக்குவேன். ஓ! சுயோதனா {துரியோதனா}, அபிமன்யு எப்படி (இளைய) இளவரசர்கள் அனைவரையும் கொல்வானோ, அப்படியே நான் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் அழிப்பவனாவேன். எனது செயல்களால், நான் உங்கள் அனைவரின் மனமும் நிறையும்படி செய்வேன்!! மீண்டும் ஒருமுறை என்னைக் கேட்பாயாக. ஓ! சுயோதனா {துரியோதனா}, இரத்த சம்பந்தமுள்ள உன் தம்பிகள் அனைவரோடு உன்னையும் கொல்லும் நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் பார்வையில், மகுடம் தரித்த உனது தலையை எனது காலால் மிதிப்பேன்!” என்று {உலூகனிடம்} சொன்னான் {பீமசேனன்}.

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு நகுலன் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {நகுலன் உலூகனிடம்} “ஓ உலூகா, திருதராஷ்டிரர் மகனும், குரு குலத்தோனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, அவன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும், அவற்றின் பொருளும் கேட்கப்பட்டன என்றும், {நகுலன் துரியோதனனிடம்} “ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நீ எனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நான் செய்வேன்” என்றும் சொல்வாயாக” என்றான் {நகுலன்}.

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சகாதேவனும் பொருள் நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னான். {சகாதேவன் > உலூகனிடம்/துரியோதனனிடம்} “ஓ! சுயோதனா {துரியோதனா}, நீ விரும்பியவாறே அனைத்தும் நடக்கும்! ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, எங்கள் துன்பங்களைக் கண்டு நீ எப்படி இப்போது இன்பத்தில் பிதற்றுகிறாயோ {தற்புகழ்ச்சி பேசுகிறாயோ}, அப்படியே உனது பிள்ளைகள், சொந்தங்கள், ஆலோசகர்கள் ஆகியோருடன் நீ வருந்த வேண்டியிருக்கும்” என்றான் {சகாதேவன்}.

வயதால் மதிக்கத்தக்க விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரும் உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். “அறம் சார்ந்த ஒரு மனிதனுக்கு அடிமையாக இருப்பதும் எங்கள் விருப்பமே! எனினும், நாங்கள் அடிமைகளா, எஜமானர்களா என்பதும், யார் ஆண்மை உள்ளவன் என்பதும் நாளை தெரிந்துவிடும்” என்றனர்.

அவர்களுக்குப் பின் சிகண்டி இந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். {சிகண்டி > உலூகனிடம்/ துரியோதனனிடம்}, “பாவ நிறைவுக்கு எப்போதும் அடிமையாக இருக்கும் மன்னன் துரியோதனனிடம் நீ இவ்வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். “ஓ! மன்னா {துரியோதனா}, போரில் என்னால் விளையும் கடுஞ்செயலைக் காண்பாயாக! போரில் வெற்றி உறுதி என்று யாரை நம்பி நீ நினைக்கிறாயோ, அந்த உனது பாட்டனை {பீஷ்மரை}, அவரது தேரில் வைத்தே நான் கொல்வேன். பீஷ்மரின் அழிவுக்காகவே உயர் ஆன்ம படைப்பாளனால் {பிரம்மனால்} நான் படைக்கப்பட்டிருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் பீஷ்மரை உறுதியாகக் கொல்வேன்” என்றான் {சிகண்டி}.

இதன் பிறகு, திருஷ்டத்யும்னனும், சூதாடி மகனான உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {திருஷ்டத்யும்னன் > உலூகனிடம்/ துரியோதனனிடம்} “இளவரசன் சுயோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. “துரோணரை, அவரது நண்பர்கள் மற்றும் தொண்டர்களோடு சேர்த்து நான் கொல்வேன். எவனும் எப்போதும் செய்யாத செயலை நான் செய்வேன்” என்று {உலூகனிடம்} சொன்னான் {திருஷ்டத்யும்னன்}.

மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் ஒருமுறை கருணை நிறைந்த இந்த உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னான், {யுதிஷ்டிரன் > உலூகனிடம்/ துரியோதனனிடம்} “ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எனது சொந்தங்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. ஓ! தீய புரிதல் கொண்டோனே {துரியோதனா}, உனது தவறால் இவை யாவும் நிகழப்போவது நிச்சயமே. (என்னைச் சுற்றி இருக்கும்) இவர்கள் அனைவரும் செய்யும் பெரும் சாதனைகளின் நிறைவுக்கு, நான் நிச்சயம் அனுமதி அளிக்க வேண்டும். ஓ! உலூகா, தாமதமில்லாமல் இங்கிருந்து போ. அல்லது இங்கேயே இருப்பாயாக. ஓ! ஐயா, நீ அருளப்பட்டிருப்பாயாக. நாங்களும் உனது உறவினர்களே” என்றான் {யுதிஷ்டிரன்}.

பிறகு, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுக் கொண்ட உலூகன், அங்கிருந்து துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகன், தான் கேட்டதனைத்தையும் கவனமாக மனதில் தாங்கி, அவன் {உலூகன்} எங்கிருந்து வந்தானோ, அந்த இடத்திற்கே திரும்பினான். அங்கே வந்த அவன் {உலூகன்}, அர்ஜுனன் குற்றஞ்சாட்டிய அனைத்தையும் பழிவுணர்ச்சி கொண்ட துரியோதனனிடம் முழுமையாகச் சொன்னான். ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, அவன் {உலூகன்},  மாறாப்பற்றுடன் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீமன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், நகுலன், விராடன், துருபதன், ஆகியோரது வார்த்தைகளையும், சகாதேவன், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரது வார்த்தைகளையும், (அதன் தொடர்ச்சியாக) கேசவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பேசப்பட்ட வார்த்தைகளையும் சொன்னான்.

அந்தச் சூதாடி மகனின் {சகுனி மகன் உலூகனின்} வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான துரியோதனன், ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோரை அழைத்து, அவர்களது துருப்புகளையும், அவர்களது கூட்டாளிகளின் துருப்புகளையும், (கூடியிருக்கும்) மன்னர்கள் அனைவரையும், பிரிவுகளாக அணிவகுத்து, சூரிய உதயத்துக்கு முன் {அடுத்த நாள்} போருக்குத் தயாராக இருக்கும்படி செய்யக் கட்டளையிட்டான். பிறகு கர்ணனால் அறிவுறுத்தப்பட்ட தூதர்கள், தங்கள் தேர்களிலும், ஒட்டகங்களிலும், பெண் குதிரைகளிலும், பெரும் வேகம் கொண்ட நல்ல குதிரைகளிலும் விரைந்து ஏறி, முகாம்களின் ஊடாக விரைந்து சவாரி செய்தனர். “நாளை சூரிய உதயத்திற்கு முன் (உங்களை) அணிவகுத்துக் கொள்ளுங்கள்” என்ற கர்ணனின் கட்டளையால் அவர்கள் {துருப்புகளும் மன்னர்களும்} வரிசையாக அணிவகுத்தனர்.” என்றான் {சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.

பாண்டவப்படையின் புறப்பாடு! – உத்யோக பர்வம் பகுதி 165-யுதிஷ்டிரன் தனது படையைப் போருக்குப் புறப்படச் செய்தது; பாண்டவத் தரப்பின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எதிரிப்படையின் வீரர்களை முறையே பிரித்துக் கொடுத்த திருஷ்டத்யும்னன்; அபிமன்யுவின் மேன்மை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உலூகனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னன் தலைமையிலான படையையும், பிறரையும் புறப்படச் செய்தான். திருஷ்டத்யும்னனால் கட்டளையிடப்பட்டவையும், பயங்கரமானவையும், பூமியைப் போன்றே அசைக்க முடியாதவையும், பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரால் வழிநடத்தப்பட்டவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்களால் காக்கப்பட்டவையும், காலாட்படை, யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை ஆகிய நால்வகைப் படைகள் உள்ளடங்கியவையுமான அந்தப் பரந்த படை அசையாப் பெருங்கடலுடன் ஒப்பிடத்தக்கதாக இருந்தது. அந்தப் பரந்த படையின் தலைமையில், வலிமையான வில்லாளியும், பாஞ்சாலர்களின் இளவரசனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், துரோணரைத் தனது எதிரியாகப் பெற விரும்பியவனுமான திருஷ்டத்யும்னன் இருந்தான்.

அந்தத் திருஷ்டத்யும்னன், எதிரி படையின் குறிப்பிட்ட போர்வீரர்களுக்கு எதிராக நிறுத்துவதற்காக {தனது படையில் இருந்து) போராளிகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினான். தனது தேர் வீரர்களிடம் அவர்களது பலம் மற்றும் துணிவுக்குத் தகுந்த வகையில் உத்தரவுகளை அவன் கொடுக்கத் தொடங்கினான். சூதனின் மகனுக்கு (கர்ணனுக்கு) எதிராக அர்ஜுனனையும், துரியோதனனுக்கு எதிராகப் பீமனையும், சல்லியனுக்கு எதிராகத் திருஷ்டகேதுவையும், கௌதமரின் மகனுக்கு (கிருபருக்கு) எதிராக உத்தமௌஜசையும், கிருதவர்மனுக்கு எதிராக நகுலனையும், சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு (ஜெயத்ரதனுக்கு) எதிராக யுயுதானனையும் {சாத்யகியையும்} நிற்குமாறு அவன் {திருஷ்டத்யும்னன்} கட்டளையிட்டான்.

பீஷ்மருக்கு எதிராக நிற்பதற்காகப் படையின் முன்னணியில் சிகண்டியை நிற்கத்தூண்டினான். சகுனிக்கு எதிராகச் சகாதேவனையும், சலனுக்கு எதிராகச் சேகிதானனையும், திரிகார்த்தர்களுக்கு எதிராகத் திரௌபதியின் ஐந்து மகன்களையும் நிற்கக் கட்டளையிட்டான். (கர்ணனின் மகனான) விருஷசேனனுக்கும், எஞ்சிய பிற மன்னர்கள் அனைவருக்கும் எதிராகச் சுபத்திரையின் மகனை (அபிமன்யுவை) நிற்கத் தூண்டினான். ஏனெனில், போரில் அர்ஜுனனைவிட மேன்மையானவனாக அபிமன்யுவை அவன் {திருஷ்டத்யும்னன்} கருதினான்.

இப்படியே தனது போர்வீரர்களைத் தனித்தனியாகவும், குழுவாகவும் பிரித்தவனும், சுடர்விடும் நெருப்பின் நிறம் கொண்டவனுமான அந்த வலிமைமிக்க வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, துரோணரைத் தனது பங்காக வைத்துக் கொண்டான். துருப்புகளின் தலைவர்களுக்குத் தலைவனும், வலிமைமிக்கவனும், புத்திசாலி வில்லாளியுமான திருஷ்டத்யும்னன், தனது துருப்புகளை முறையாக அணிவகுக்கச் செய்து, உறுதியான இதயத்துடன் போருக்காகக் காத்திருந்தான். பாண்டவர்களின் போராளிகளை மேற்குறிப்பிட்டபடி அணிவகுக்கச் செய்து, பாண்டு மகன்களின் வெற்றியை அடைவதற்காகப் போர்க்களத்தில் குவிந்த மனதுடன் {மனதை ஒருநிலைப் படுத்திக்} காத்திருந்தான்.

உலூகதூதாகமன பர்வம் முற்றிற்று

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading