ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ வன பர்வம்-ஸ்ரீ  ஆரண்யக   பர்வம்–

தொடர்ந்து சென்ற குடிமக்கள் – வனபர்வம் பகுதி 1-(ஆரண்யக பர்வம் – 01)நாட்டை விட்டு சென்ற பாண்டவர்களைத் தொடர்ந்து குடிமக்களும் செல்லுதல்; யுதிஷ்டிரன் அவர்களைச் சமாதானப்படுத்தி மீண்டும் நாட்டுக்கு அனுப்புதல்; பாண்டவர்கள் ஒரு பெரிய ஆலமரத்தடியில் அந்த இரவைக் கழித்தல்; பிராமணர்கள் அங்கு வந்து அவர்களை ஆதரித்தல்…

ஓம்! மனிதர்களில் மேன்மையானவர்களாகிய {புருஷோத்தமர்களாகிய} நாராயணன் மற்றும் நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}

ஜனமேஜயன் சொன்னான், “ஓ மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, பகடையில் திருதராஷ்டிரன் மகன்கள் மற்றும் அவர்களது ஆலோசகர்களால் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டவர்களும், அந்தத் தீயவர்களால் கோபம் தூண்டப்பட்டவர்களும், அவர்களால் கடும் மொழிகளில் பேசப்பட்டவர்களும், எனது மூதாதையர்களும், குரு இளவரசர்களுமான அந்தப் பிருதையின் மகன்கள் (அதன்பிறகு) என்ன செய்தார்கள்?(1,2) வல்லமையில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவர்களும், செல்வாக்கு இழந்தவர்களும், திடீரெனத் துன்பத்தில் மூழ்கியவர்களுமான பிருதையின் மகன்கள், காட்டில் தங்கள் நாட்களை எவ்வாறு கடத்தினர்?(3) கடும் துயரத்தில் மூழ்கி இருந்த அந்த இளவரசர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து சென்றவர்கள் யாவர்? அந்த உயர்ந்த ஆன்மாக்கள் எப்படித் தங்களைத் தாங்கிக் கொண்டார்கள்? தங்கள் வாழ்வாதாரத்தை எங்கே அடைந்தார்கள்?(4)

ஓ சிறப்புமிக்கத் தவசியே {வைசம்பாயனரே}, பிராமணர்களில் முதன்மையானவரே, எதிரிகளைக் கொல்பவர்களான அந்த வீரர்களின் பனிரெண்டு {12} வருடங்கள் காட்டில் எவ்வாறு கழிந்தது?(5) துன்பத்திற்குத் தகாதவளும், பெண்களில் சிறந்தவளும், கணவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவளும், அடக்கமும் அறமும் கொண்டவளும், எப்போதும் வாய்மை பேசுபவளுமான அந்த இளவரசி {திரௌபதி}, துன்பம் நிறைந்த அந்தக் காட்டு வாழ்க்கையை எவ்வாறு பொறுத்துக் கொண்டாள்? ஓ தவ வாழ்வையே செல்வமாகக் கொண்டவரே, ஓ பிராமணரே, இவை அனைத்தையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக.(6,7) பேராற்றலும், காந்தியும் கொண்ட அந்த வீரர்களின் வரலாற்றை நீர் உரைக்கும்போது கேட்க விரும்புகிறேன். உண்மையில் நான் பேராவலுடன் இருக்கிறேன்” என்றான் {ஜனமேஜயன்}.(8)

வைசம்பாயனர் சொன்னார், “இவ்வாறு திருதராஷ்டிரன் மகன்களாலும் அவர்களது ஆலோசகர்களாலும் பகடையில் வீழ்த்தப்பட்டு, கோபம் தூண்டப்பட்டவர்களான பிருதையின் மகன்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினர்.(9) அப்போது அந்தப் பாண்டவர்கள், ஆயுதங்களைத் தாங்கியபடியே திரௌபதியுடன் அந்த நகரத்தின் வர்த்தமான வாயில்[1] வழியே வடதிசை நோக்கி சென்றனர்.(10) (கும்பகோணம் பதிப்பில், “வர்த்தமானபுரமென்னும் கிராமத்துக்கு நேரேயுள்ள வாயிலில் வெளிப்பட்டு வடக்கு முகமாகச் சென்றார்கள்” எஎன்றிருக்கிறது.)இந்திரசேனனும் {பாண்டவர்களின் தேரோட்டி} மற்றவர்களும், தங்கள் பதினான்கு பணியாட்களுடனும், தங்கள் மனைவியருடனும் தங்கள் வேகமான தேர்களில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்[2].(11) (கும்பகோணம் பதிப்பில், “இந்திரசேனன் முதலிய பதினால்வருக்கதிகமான வேலைக்காரர்கள் எல்லா ஸ்திரீகளையும் அழைத்துக் கொண்டு வேகமாகச் செல்லும் தேர்களுடன் இவர்களைப் பின்தொடர்ந்தனர். பாரதரே, பிறகு, அந்தப் புருஷஸ்ரேஷ்டர்கள் ரதங்களிலேறிச் சென்று கங்கைக் கரையில் ப்ரமாணமென்ற பெயருள்ள பெரிய ஆலமரத்தைப் பார்த்தார்கள்” என்றிருக்கிறது.)அவர்கள் வெளியேறியதை அறிந்த குடிமக்கள் துயரம் கொண்டு பீஷ்மரையும், விதுரனையும், துரோணரையும், கௌதமரையும் {கிருபரையும்} நிந்திக்கத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் சந்தித்த அவர்கள் {குடிமக்கள்} அச்சமில்லாதவர்களாக இவ்வாறு பேசிக் கொண்டனர்.(12)

{அந்தக் குடிமக்கள்}, “ஐயோ, சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன், துச்சாசனன் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட தீயவனான துரியோதனன் நாட்டை அடைய விரும்புவதால், நம்முடன் சேர்ந்து, நமது குடும்பங்களும், நமது வீடுகளும் அழியப்போகின்றன.(13) பாவிகளால் ஆதரிக்கப்படும் பாவம் நிறைந்தவனான இந்தப் பாவி {துரியோயதனன்) நாட்டை விரும்பியதால் நமது குடும்பங்கள், நமது (மூதாதையர்கள்) பொருள்கள், நமது அறம், பொருள் அனைத்தும் அழியப் போகின்றன. இவர்கள் {பாண்டவர்கள்} இல்லாத இடத்தில் மகிழ்ச்சி எவ்வாறு இருக்கும்?(14) பெரியவர்கள் அனைவரையும் அவமதிக்கும் துரியோதனன், நன்னடத்தையைத் துறந்து, குருதியால் தனக்கு நெருக்கமானவர்களிடம் சண்டையிடுகிறான். பேராசையும், குறுகியபுத்தியும் கொண்ட அந்த வீணன் இயற்கையிலேயே கொடூரனாக இருக்கிறான்.(15) பூமிக்குத் தலைவனாகத் துரியோதனன் இருக்கும்போது, அந்த மொத்த பூமியும் அழியும். எனவே, கருணை கொண்டவர்களும், உயர்ந்த மனம் கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்களுடன் நாமும் செல்வோம்.(16) அவர்கள் தற்கட்டுப்பாடு உடையவர்கள், எப்போதும் எதிரிகளை வெல்பவர்கள், அடக்கமும் புகழும் கொண்டவர்கள். நற்செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள். எனவே உடனே அவர்களுடன் செல்வோம்.” என்றனர்”.(17)

வைசம்பாயனர் சொன்னார், “இதைச் சொல்லிக் கொண்ட குடிமக்கள், பாண்டவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அவர்களைச் சந்தித்துத் தங்கள் கரங்களைக் குவித்தவாறு, குந்தி மற்றும் மாத்ரியின் மகன்களான அவர்களிடம்,(18) “அருளப்பட்டிருப்பீராக. பெரும் துயரில் இருக்கும் எங்களை விட்டுவிட்டு, நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்?(19) நீங்கள் செல்லுமிடமெங்கும் நாங்களும் உங்களைப் பின்தொடர்வோம்! கொடூரர்களான பகைவர்களால் வஞ்சகமாக நீங்கள் வீழ்த்தப்பட்டீர்கள் என்பதை அறிந்த நாங்கள் பெரும் துயரடைந்திருக்கிறோம்.(20) அன்பான குடிமக்களான எங்களையும், உங்கள் நலனை விரும்பி அர்ப்பணிப்புடன் இருக்கும் நண்பர்களையும், நீங்கள் விரும்பியவாறு செயல்கள் செய்தவர்களையும் நீங்கள் கைவிடுவது தகாது. தீயவனான குரு மன்னனின் ஆளுகையில் அழிவைச் சந்திக்க நாங்கள் விரும்பவில்லை.(21)

மனிதர்களில் காளைகளே, நன்மையிலும், தீமையிலும் கொள்ளும் தொடர்பால் உண்டாகும் நன்மை தீமைகளைக் குறித்து நாங்கள் சொல்வதைக் கேட்பீராக.(22) துணி, நீர், நிலம், எள் ஆகியன மலர்களுடன் தாங்கள் கொள்ளும் தொடர்பால் மணப்பதைப் போல, குணங்களும் தாங்கள் தொடர்பு கொள்ளும் பொருள்களால் உண்டாகுபவையே ஆகும்.(23) உண்மையில் மூடர்களுடன் கொள்ளும் தொடர்பானது மனத்தைச் சிக்க வைக்கும் ஒரு மாயையை உண்டாக்கிறது, நல்லோருடனும், ஞானிகளுடனும் நாள்தோரும் கொள்ளும் தொடர்பானது அறப்பயிற்சிக்கு {நல்லொழுக்க நடைமுறைக்கு} வழிவகுக்கிறது.(24) எனவே, பேறு பெற விரும்புவோர், ஞானமுள்ளவர்களும், முதியவர்களும், நேர்மையானவர்களும், தூய்மையான நடத்தையுள்ளவர்களும், தவத்தகுதி உடையவர்களுமான மக்களுடன் பழக வேண்டும்.(25)

மூன்றுவகை உடைமைகளான (வேத) அறிவு, தோற்றம் {பிறப்பு}, செயல்கள் ஆகியன அனைத்தும் எவரிடம் தூய்மையாக இருக்கின்றனவோ, அவர்களுடன் தொடர்பு கொள்வது சாத்திரங்களை (சாத்திரக் கல்வியை) விட மேன்மையானதாகும்.(26) அறச்செயல்களைச் செய்யாதவர்களான எங்களைப் போன்றோர், அறவோருடன் கொள்ளும் தொடர்பால் அறத்தகுதியையும், பாவம் நிறைந்தவர்களுக்குச் செய்யும் பணிவிடையால் பாவத்தையும் அறுவடை செய்வோம்.(27) பாவிகளைப் பார்ப்பதாலும், தீண்டுவதாலும், அவர்களுடன் உரையாடுவதாலும், தொடர்பு கொள்வதாலும் நம் அறத்திற்கு அழிவு ஏற்படுகிறது. அத்தகைய மனிதர்களால் ஒருபோதும் ஆன்மத்தூய்மையை அடையமுடியாது.(28) உண்மையில், இழிந்தவர்களுடன் கொள்ளும் தொடர்பானது புத்தியை அழிக்கிறது, அக்கறையற்றோருடன் கொள்ளும் தொடர்பு புத்தியை ஈடுபாடற்றதாக்குகிறது, நல்லோருடன் கொள்ளும் தொடர்பு புத்தியை நலமடையச் செய்கிறது.(29) அறத்தகுதிகளுக்கு ஊற்றுக்கண்ணாக, மக்களால் கருதப்படுபவையும், நன்னடத்தை உள்ளவர்களால் ஏற்கப்படுபவையும், வேதங்களால் கொண்டாடப்படுபவையும், உலகத்தில் பேசப்படுபவையுமான அத்தனை குணங்களும், உலகச் செல்வங்களும், புலன்நுகர் இன்பங்களும் உங்களில் தனித்தனியாகவும் மொத்தமாகவும் இருக்கிறது. எனவே, எங்கள் நன்மை கருதி, இவ்வளவு குணங்களையும் கொண்டிருக்கும் உங்களுக்கு மத்தியிலேயே நாங்கள் வாழ விரும்புகிறோம்” என்றனர்.(30,31)

யுதிஷ்டிரன், “நாங்கள் அருளப்பட்டவர்களே, பிராமணர்களைத் தலைமையாகக் கொண்டிருக்கும் எங்கள் குடிமக்களாகிய நீங்கள், எங்கள் மீது கொண்ட அன்பாலும், இரக்கத்தாலும், இல்லாத தகுதிகளைக் கொண்டு எங்களைப் புகழ்கிறீர்கள்.(32) எனினும், என் தம்பிகளுடன் கூடிய நான், உங்களை ஒன்று செய்யச் சொல்வேன். எங்களிடம் கொண்ட அன்பினாலும், எங்கள் மீது கொண்ட இரக்கத்தாலும் நீங்கள் வேறுவகையில் செயல்படக்கூடாது.(33) எங்கள் பாட்டானாகிய பீஷ்மர், மன்னர் (திருதராஷ்டிரர்), விதுரர், எங்கள் தாய் {குந்தி} மற்றும் என் நலன் விரும்பிகள் அனைவரும் ஹஸ்தினாபுர நகரத்திலேயே இருக்கிறார்கள்.(34) எனவே, உங்கள் மனம் எங்கள் நலனை நாடினால், நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து கவலையிலும், துன்பங்களிலும் மூழ்கியிருக்கும் அவர்களைக் கவனத்துடன் பேணிக் காப்பீர்களாக.(35) நாங்கள் புறப்பட்டு வந்ததில் வருத்தமடைந்து வெகுதொலைவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள். திரும்பிச் செல்வீராக, பற்றுறுதியாக நான் உங்களிடம் ஒப்படைத்திருக்கும் உறவினர்களிடம் உங்கள் இதயங்கள் மென்மையாக இருக்கட்டும்.(36) அனைத்தையும் விட, என் இதயம் நிலைத்திருக்கும் இந்தச் செயலைச் செய்வதே நீங்கள் எனக்கு அளிக்கும் பெரும் நிறைவாகவும், {நீங்கள் எனக்குத் தெரிவிக்கும்} சிறந்த வாழ்த்தாகவும் அமையும்”, என்றான் {யுதிஷ்டிரன்}”.(37)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “நீதிமானான யுதிஷ்டிரனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட மக்கள் “”ஐயோ, மன்னா” என்று ஒரே குரலில் பெரிதாக ஒப்பாரி வைத்தனர்.(38) துயரில் மூழ்கியவர்களும், துன்பத்தால் பீடிக்கப்பட்டவர்களுமான அவர்கள், பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, அந்தப் பிருதையின் மகன்களுடைய {பாண்டவர்களின்} நற்குணங்களை நினைவு கூர்ந்தபடியே விருப்பமில்லாமல் தங்கள் பாதச்சுவடுகளை மீண்டும் பின்பற்றிச் சென்றார்கள்.(39)

குடிமக்கள் தொடர்வது நின்றதும், பாண்டவர்கள் தங்கள் தேர்களில் ஏறி கங்கைக் கரையில் உள்ளதும், பிரமாணம் என்று அழைக்கப்பட்டதுமான பெரும் ஆல மரத்தை வந்தடைந்ததனர்.(40) நாளின் முடிவில் அந்த ஆல மரத்தை அடைந்த பாண்டுவின் வீர மகன்கள், புனித நீரைத் தொட்டுத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அந்த இரவை அங்கே கழித்தனர்.(41) பெருந்துயரத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் {பாண்டவர்கள்} நீரை மட்டுமே உண்டு அந்த இரவைக் கழித்தனர். வேள்வி செய்பவர்கள் மற்றும் வேள்வி செய்யாதவர்கள் என்ற இரு பிரிவையும் சேர்ந்த குறிப்பிட்ட பிராமணர்கள், பாண்டவர்கள் மீதிருந்த அன்பினால் அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களுடன் அன்று இரவைக் கழித்தனர். பிரம்மத்தை ஓதும் அந்தப் பிராமணர்களால் சூழப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்களுக்கு மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருந்தான்.(42,43) அந்தப் பிராமணர்கள், தங்கள் (புனித) நெருப்புகளை மூட்டி, வேதங்களை ஓதவும், ஒருவருக்கொருவர் விவாதிக்கவும் தொடங்கியதும் பயங்கரமான அந்த மாலைப் பொழுது உடனடியாக அழகானது.(44) அன்னம்போன்ற இனிய குரல்களைக் கொண்ட அந்த முதன்மையான பிராமணர்கள், குருக்களில் சிறந்தவனான மன்னனை ஆறுதலளித்தபடியே இரவைக் கழித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(45)

சௌனகர் உபதேசம் – வனபர்வம் பகுதி 2-(ஆரண்யக பர்வம் – 02)-யுதிஷ்டிரன் தங்களைத் தொடர்ந்து வந்த பிராமணர்களைத் திரும்பிச் செல்ல சொன்னது; சௌனகர் யுதிஷ்டிரனுக்கு சில அறிவுரைகள் கூறியது; யுதிஷ்டிரன் சௌனகரிடம் சந்தேகம் கேட்டது; அதற்கு சௌனகர் விடையளித்தது.

வைசம்பாயனர் சொன்னார், “இரவு வெடித்துப் பகல் உதித்த போது, இரந்துண்டு {பிச்சையெடுத்து} தங்களைத் தாங்கிவந்த பிராமணர்கள் {பிராமணர்கள்}, செயற்கரிய செயல்களைச் செய்து கானகத்திற்குள் நுழையக் காத்திருந்த பாண்டவர்களின் முன்பு நின்றனர்.(1) குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அவர்களிடம், “செல்வங்களும், நாடும் என அனைத்தும் களவாடப்பட்டவர்களாகப் பெரும் துயரத்தில் இருக்கும் நாங்கள், கனிகளையும், கிழங்குகளையும் மட்டுமே உணவாகக் கொண்டு காட்டுக்குள் நுழையப்போகிறோம். இந்தக் கானகம் முழுவதும் எண்ணிலடங்கா ஊர்வனவும், இரை தேடி அலையும் விலங்குகளும் என ஆபத்துகள் நிறைந்தது. அங்கே நீங்கள் நிச்சயமாகப் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. பிராமணர்களின் பாதிப்புகள் தேவர்களைக் கூடச் சக்தி இழக்கச் செய்யக்கூடும். எனது சக்தியையும் அஃது இழக்கச் செய்யும் என்பது நிச்சயமே. எனவே, ஓ பிராமணரே, நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கே செல்லுங்கள்” என்று சொன்னான்.(2-4)

அதற்கு அந்தப் பிராமணர்கள், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீ செல்லும் பாதையே எங்கள் பாதை! எனவே, உனக்காகத் தங்களை அர்ப்பணித்து, உன்னைப் போற்றி, உண்மையான அறம் பயின்று வருபவர்களைக் கைவிடாதே!(5) தேவர்கள்கூடத் தங்களை வழிபடுபவர்கள் மீது இரக்கம் கொண்டுள்ளனர். அதுவும் குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்வை வாழும் பிராமணர்கள் மீது சிறப்பானகருணை கொண்டுள்ளனர்” என்றனர்.(6)

யுதிஷ்டிரன், “மறுபிறப்பாளர்களே {பிராமணர்களே}, நானும் என்னைப் பிராமணர்களுக்கு அர்ப்பணித்தவன்தான்! ஆனால் இந்தச் சூழ்நிலை என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது!(7) பழங்கள், கிழங்குகள் மற்றும் மான்களைச் சேகரிக்கும் எனது இந்தத் தம்பிகள், திரௌபதியின் துயரத்தாலும், நாட்டை நாங்கள் இழந்ததாலும் மதி மயங்கியவர்களாகக் கலக்கம் அடைந்திருக்கின்றனர். ஐயோ, இப்படித் துயர்கொண்டிருக்கும் அவர்களைத் துயர்நிறைந்த பணிகளில் என்னால் ஈடுபடுத்த முடியாது” என்றான்.(8,9)

அதற்கு அந்தப் பிராமணர்கள், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, எங்களைப் பாதுகாப்பதில் துயர் கொள்ளாதே! உனது இதயத்தில் எங்களுக்கான ஓர் இடத்தைத் தேடு! எங்கள் உணவை நாங்களே சம்பாதித்துக் கொண்டு, தியானம் செய்து கொண்டும், உனக்கான வழிபாடுகளைச் செய்து கொண்டும் நாங்கள் உன்னைப் பின் தொடர்ந்து வருவோம். இனிமையான உரையாடல்கள் மூலம் உன்னை மகிழ்விப்போம்” என்றனர்.(10,11)

யுதிஷ்டிரன், “ஐயமில்லாமல் நீங்கள் சொல்வது போலத்தான் இருக்கவேண்டும். மறுபிறப்பாளர்களின் {பிராமணர்களின்} துணையில் நான் எப்போதும் மகிழ்ந்தே இருக்கிறேன்! ஆனால், வீழ்ச்சியடைந்த இந்தச் சூழ்நிலையில் நானே ஒரு நிந்திக்கப்படும் பொருளாக இருக்கிறேன்.(12) துன்பப்படத் தகாதவர்களான நீங்கள் என் மீது கொண்ட அன்பால் துன்பப்படுவதையும், உங்கள் உணவை நீங்களே சம்பாதித்துக் கொள்வதையும் கண்டு, நான் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? ஓ, திருதராஷ்டிரரின் தீய மகன்களுக்கு ஐயோ!” என்றான்.(13)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மன்னன் {யுதிஷ்டிரன்}, இதைச் சொல்லிவிட்டு அழுது கொண்டே தரையில் அமர்ந்தான். சாங்கிய யோகம் அறிந்தவரும், கல்விமானும் பிராமணருமான சௌனகர் மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்},(14) “துயரத்தின் காரணம் ஆயிரமும், அச்சத்தின் காரணம் நூறும் நாளுக்கு நாள் மூடனையே மூழ்கடிக்கும். ஆனால் கல்விமானை மூழ்கடிக்காது.(15) நிச்சயமாக, உன்னைப் போன்ற நுண்ணறிவுமிக்க மனிதர்கள் இது போன்ற உண்மை அறிவுக்கு எதிரான அனைத்துவிதமான தீய செயல்களாலும், மோட்சத்திற்கு அழிவை ஏற்படுத்தும் செயல்களாலும் வஞ்சிக்கப்பட மாட்டார்கள்.(16) ஓ மன்னா, தீமைகள் அனைத்தையும் எதிர்த்து நிற்கவல்லதும், ஸ்ருதி (வேதங்கள்) மற்றும் சாத்திரக் கல்வியால் விளைவதுமான எட்டு குணங்களுடன்[1] கூடிய புத்தி உன்னில் இருக்கிறது.(17) (கேட்டுக் கொள்ள விருப்பம், கேட்டல், புரிந்து கொள்ளுதல், உபயோகித்தல், ஊகித்தல், தீயவை விலக்குதல், பொருளை நன்கு உணர்தல், உண்மையை அறிதல் ஆகிய எட்டுக் குணங்கள்)உன்னைப் போன்ற மனிதர்கள், ஏழ்மையினாலோ, நண்பர்களுக்கு ஏற்படும் துக்கத்தினாலோ, உடல்ரீதியான, மனரீதியான பாதிப்புகளாலோ ஒருபோதும் கலக்கமடைய மாட்டார்கள்.(18)

சிறப்புமிக்க ஜனகர், தற்கட்டுப்பாட்டை {ஆன்மக்கட்டுப்பாட்டைக்} குறித்துப் பழங்காலத்தில் பாடிய பாடல்களைச் {ஸ்லோகங்களைச்} சொல்கிறேன் கேட்பாயாக.(19) இவ்வுலகம் உடல் மற்றும் மனம் சார்ந்த துன்பங்களால் பீடிக்கப்படுகிறது. அதைத் தணிப்பதற்கான வழிகளைச் சுருக்கமாகவும், விவரமாகவும் நான் சொல்லப் போகிறேன் கேட்பாயாக. நோய், வலிநிறைந்த பொருட்களின் தொடர்பு {முள்}, உழைப்பு, விருப்பத்திற்குரிய பொருட்களின் தேவை ஆகிய நான்கும் உடலுக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றன. மருந்தைக் கொள்வதால் நோயைத் தணித்து விட முடியும். அதே நேரத்தில் மனம் சார்ந்த நோயானது தியான யோகத்தினால் மறக்க முற்படும்போது குணமாகிறது.(22) இந்தக் காரணத்திற்காகத்தான் மருத்துவர்கள், நோயாளி ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசியும், விரும்பும் பொருளைக் கொடுப்பதாகக் கூறியும், முதலில் நோயாளிகளின் மனம் சார்ந்த பாதிப்புகளைத் தணிக்க முயல்வர்.(23)

ஒரு குடத்தில் சூடான இரும்புப் பட்டையை நுழைக்கும்போது, அதிலுள்ள நீர் கொதிப்பைதைப் போலவே, மனத்துயரமானது உடலில் துன்பத்தை ஏற்படுத்தும்.(24) நீரானது நெருப்பைத் தணிப்பது போல, உண்மை அறிவு மனக்கலக்கத்தைத் தணிக்கும். மனம் அமைதியுற்றால், உடலும் அமைதி அடையும்.(25) பற்றே மனத்துயரத்திற்கான வேரெனத் தெரிகிறது. இந்தப் பற்றே அனைத்து உயிரினங்களுக்கும் துன்பத்தையும், அனைத்துவிதமான துயரங்களையும் கொடுக்கிறது.(26) பற்றே துயரங்கள் அனைத்திற்கும், அச்சங்கள் அனைத்திற்கும், இன்பதுன்பங்கள் அனைத்துக்கும், அனைத்துவிதமான வலிகளுக்கும் வேராக இருக்கிறது.(27) பற்றின் காரணமாகவே அனைத்து காரியங்களும் தோன்றுகின்றன. பற்றே உலக நன்மைகளின் மீது நாம் ஆசை கொள்ளக் காரணமாக இருக்கிறது. முதல்வகை இரண்டாவதைவிட மோசமானதாக இருந்தாலும் இவை இரண்டுமே தீமையின் ஊற்றுக் கண்களேயாகும்.(28)

மரப்பொந்துக்குள் நுழையும் (சிறு அளவு) நெருப்பும் எப்படி வேர் வரை முழு மரத்தையும் எரித்துவிடுகிறதோ, அதே போலப் பற்றும் எவ்வளவு சிறிதாக எனினும் அறத்தையும் {தர்மத்தையும்}, பொருளையும் {அர்த்தத்தையும்} அழித்துவிடும்.(29) உலகப் பொருட்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதால் மட்டுமே ஒருவன் அனைத்தையும் துறந்தவன் ஆகமாட்டான். எனினும், உலகத்தொடர்புகளில் இருந்து கொண்டே அதன் குறைகளை அறிந்தவனே உண்மையில் உலகத்தைத் துறந்தவன் ஆவான். தீய ஆசைகளில் இருந்து விடுபட்டு, எதையும் நம்பியிராத ஆன்மாவைப் பெற்ற ஒருவனே உண்மையில் உலகைத் துறந்தவனாவான்.(30)

எனவே, ஒருவன் நண்பர்களிடமோ, தான் ஈட்டிய செல்வத்திடமோ பற்று வைக்கக்கூடாது. அதே போல, தன்மீது வைத்திருக்கும் பற்றை, அறிவினால் களையவேண்டும்.(31) நீருக்குள் மூழ்கச் செய்தாலும் தாமரை இலை நனையாமல் இருப்பதைப் போலவே, ஒருநாள் மட்டும் நீடித்திருப்பவைக்கும், எப்போதும் நிலைத்து இருப்பவைக்கும் உள்ள வேறுபாட்டைக் காணத்தெரிந்த ஆன்மா கொண்ட மனிதன், சாத்திரங்களை அறிந்து, அறிவால் தூய்மையடைந்து, பற்றால் பாதிக்கப்படாதவனாக இருப்பான்.(32) பற்றால் பீடிக்கப்பட்ட மனிதன், ஆசையால் சித்திரவதை செய்யப்படுகிறான். அப்படி உண்டாகும் அசை, உலகப் பொருட்கள் மீது அவன் கொண்டிருக்கும் தாகத்தை அதிகரிக்கச் செய்கிறது. நிச்சயமாக இந்தத் தாகம் பாவகரமானது. இது துயரங்களின் ஊற்றுக் கண் என்று கருதப்படுகிறது.(33) இந்தக் கொடுமையான தாகமே, பாவத்துடன் கலந்து அறமற்ற செயல்களைச் செய்யத் தூண்டுகிறது.(34) இந்தத் தாகத்தைத் துறப்பவர்கள் இன்பத்தை அடைகிறார்கள். உடல் அழிந்தாலும் தீயவர்களின் தாகம் அழியாது. தீயவர்களால் அதைத் துறக்கவே முடியாது. அஃது உண்மையில் மரண நோயே ஆகும்.(35) அதற்குத் தொடக்கமும் முடிவும் கிடையாது. இதயத்தில் {மனத்தில்} குடியிருக்கும் வடிவமற்ற நெருப்பைப்போல அஃது உயிரினங்களை அழிக்கிறது.(36) ஒரு விறகில் ஊட்டப்படும் நெருப்பினால், ஒரு விறகுக்கட்டே எரிவதைப் போல, தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதன் தனது இதயத்தில் பிறந்த பேராசையினால் அழிவைச் சந்திக்கிறான்.(37)

உயிருள்ள உயிரினங்கள் அனைத்தும் மரணத்தைக் கண்டு எப்போதும் அஞ்சுவது போல, செல்வந்தர்கள், மன்னனிடமும், திருடனிடம், நீர், நெருப்பு, ஏன் உறவினர்களிடம் கூட எப்போதும் அச்சத்தையே கொண்டுள்ளனர்.(38) காற்றில் இருக்கும் இறைச்சித் துண்டு பறவைகளால் விழுங்கப்படும்; நிலத்தில் இருந்தால் இரைதேடும் விலங்குகளாலும்; நீரில் இருந்தால் மீன்களாலும் விழுங்கப்படுவதைப் போலவே, செல்வந்தன் ஒருவன் எங்கிருந்தாலும் ஆபத்தையே எதிர்நோக்கி இருக்கிறான்.(39) பலருக்கு அவர்களின் செல்வமே மரணத்தைக் கொடுக்கும் நஞ்சாகிறது. செல்வத்தில் இன்பம் காணும் ஒருவன் அதற்கு அடிமையாகி உண்மை இன்பத்தை அறியாமல் போகிறான்.(40)

பேராசையையும் மூடத்தனத்தையுமே செல்வம் அதிகரிக்கச் செய்கிறது. கஞ்சத்தனத்திற்கும், பகட்டுக்கும், தற்பெருமைக்கும், அச்சம் மற்றும் துயரத்துக்கும் செல்வமே வேராகும். இவையே ஞானமுள்ளோர் செல்வந்தர்களிடம் காணும் துன்பங்களாகும். செல்வத்தை அடைவதிலும், பாதுகாப்பதிலும் மனிதர்கள் பல துயரங்களை அடைகின்றனர். செல்வம் செலவழிந்தாலும் அதுவும் துயரத்தையே கொடுக்கும். அல்லாமலும், செல்வத்தின் பொருட்டு ஒருவனின் வாழ்வே {உயிரே} பறிபோகும். செல்வத்தைக் கைவிடுவதாலும் துயரமே மிஞ்சுகிறது. ஒருவனின் செல்வத்தால் பேணி வளர்க்கப்பட்ட மற்றொருவன், அந்தச் செல்வத்தின் பொருட்டு அவனுக்குப் பகைவனாகிறான்.(42,43) எனவே, செல்வத்தை வைத்திருத்தல் இவ்வளவு துயரங்களைக் கொடுப்பதால், அதன் அழிவைக் கண்டு ஒருவன் துயர் கொள்ளலாகாது. அறியாமை கொண்டோர் மட்டுமே நிறைவில்லாமல் இருப்பார்கள். எனினும், ஞானமுள்ளோர் எப்போதும் நிறைவுடனேயே இருப்பார்கள்.(44)

செல்வத்தின் மீதிருக்கும் தாகத்தை மட்டுப்படுத்தவே முடியாது. நிறைவுடன் இருப்பதே உயர்ந்த இன்பமாகும்; எனவே, மனநிறைவையே பின்பற்றக்கூடிய உயர்ந்த நோக்கமாக ஞானிகள் கருதுகின்றனர்.(45) இளமை, அழகு, வாழ்வு, செல்வக்குவியல், செழுமை, அன்பானவர்களின் துணை ஆகிவற்றின் நிலையாமையை உணர்ந்த ஞானிகள் அவற்றில் ஆசை கொள்வதில்லை.(46) எனவே, துன்பத்தை உணர்ந்து செல்வத்தை அடைவதைக் கைவிட வேண்டும். எந்தச் செல்வந்தனும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, அதன்காரணமாகவே அறம்சார்ந்தோர் செல்வத்தின் மீது ஆசையில்லாதவர்களை மெச்சுகிறார்கள்.(47) அறம் சார்ந்த காரியங்களுக்காகச் செல்வத்தைத் தொடர்பவர்கள்கூட அத்தகைய செயல்களில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக, சேறு பட்ட கைகளைக் கழுவிக் கொள்வதைக் காட்டிலும், சேற்றைத் தொடாமல் இருப்பது நல்லது இல்லையா?(48) ஓ யுதிஷ்டிரா, நீ ஆசைப்படாமல் இருக்க வேண்டும்! அறம் உனக்கு வேண்டும் என்றால், உலக உடைமைகள் மீதிருக்கும் ஆசைகளில் இருந்து உன்னை விடுவித்துக் கொள்” என்றார் {சௌனகர்}.(49)

யுதிஷ்டிரன், “ஓ பிராமணரே, செல்வத்தை நான் விரும்புவது, அது கிடைத்தவுடன் இன்புறுவதற்காக அல்ல. பிராமணர்களைத் தாங்கிக் கொள்ளவே நான் அதை விரும்புகிறேன். பேராசையின் காரணமாக நான் அதை விரும்பவில்லை.(50) ஓ பிராமணரே, எங்களைப் போன்ற ஒருவனால், தன்னைப் பின்பற்றுபவர்களை {சார்ந்திருப்பவர்களைப்} பேணவும், ஆதரிக்கவும் இயலவில்லை என்றால், எதற்காக அவன் இல்லற வாழ்வை மேற்கொள்ள வேண்டும்?(51)

அனைத்து உயிரினங்களும் (தாங்கள் ஈட்டிய) உணவை, தங்களைச் சார்ந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதைக் காண்கிறோம். அப்படியே இல்லற வாழ்வை வாழ்பவனும், தங்களுக்காகச் சமைத்துக் கொள்ளாதிருக்கும் யதிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் தன் உணவைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.(52) நல்ல மனிதர்களின் வீடுகள், (அமர்ந்து கொள்ள) புல்லும், (ஓய்ந்திருக்க) வெளியும், (கழுவ, தாகம் தணிக்க) நீரும், நான்காவதாக இன்சொல்லும் இல்லாமல் இருக்கலாகாது.(53) களைப்புற்றவனுக்குப் படுக்கையும், நிற்பதால் சோர்ந்தவனுக்கு இருக்கையும், தாகத்திலிருப்பவனுக்கு நீரும், பசித்திருப்பவனுக்கு உணவும் எப்போதும் கொடுக்கப்பட வேண்டும்.(54)

விருந்தினர்களை இனிமையான பார்வையாலும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்தோடும், இனிமையான வார்த்தைகளாலும் வரவேற்க வேண்டும். வீட்டின் உரிமையாளன் விருந்தினரைக் கண்டதும், உடனே எழுந்து, அந்த விருந்தினரை எதிர்கொண்டழைத்து, அவருக்கு இருக்கை அளித்து, அவரை வணங்க வேண்டும். இதுவே நிலையான அறமாகும்.(55) அக்னிஹோத்ரம் செய்யாதவர்களும், காளைகளைக் {மாடுகள்} கவனிக்காதவர்களும், உற்றார் உறவினரைப் பேணிக் காக்காதவர்களும், விருந்தினர், நண்பர்கள், மகன்கள், மனைவியர், பணியாட்கள் ஆகியோரைப் புறக்கணிப்பவர்களும் பாவத்தால் எரிக்கப்படுகின்றனர். தன் ஒருவனுக்காக மட்டுமே ஒருவன் உணவு சமைக்கக்கூடாது. தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், விருந்தினருக்கும் படைக்காமல் எவனும் எந்த விலங்கையும் கொல்லக்கூடாது. தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படைக்கப்படாத உணவை ஒருவன் உண்ணக்கூடாது.(56,57) காலையிலும், மாலையிலும் (தகுந்த) நாய்களுக்கும், சண்டாளர்களுக்கும், பறவைகளுக்கும் உணவைத் தரையிலிட்டு, வைஸ்வதேவ வேள்வியை ஒருவன் செய்ய வேண்டும்.(58) விகஸத்தை {விருந்தினர்களுக்கு / யாசகர்களுக்குக் கொடுத்து / வேள்வியில் எஞ்சிய உணவை} உண்பவர்கள், அமிர்தத்தை உண்டதாகக் கருதப்படுகிறார்கள்.(59) ஒரு விருந்தினருக்கு உணவளிப்பது ஒரு வேள்விக்கு நிகரானதாகும், ஒருவன் தன் விருந்தினரைப் பார்க்கும் இனிமையான பார்வை {1}, அர்ப்பணிப்புடன் கூடிய கவனிப்பு {2}, இனிமையான பேச்சு {3}, பின்தொடர்ந்து அவன் அளிக்கும் மரியாதை {4}, அவன் கொடுக்கும் உணவு மற்றும் நீர் {5} ஆகியவையே அந்த வேள்வியின் ஐந்து தட்சணைகள் {பஞ்சதக்ஷிணையஜ்ஞம்}ஆகும்.(60) முன்பு எப்போதும் கண்டிராதவனும், களைத்திருப்பவனுமான வழிப்போக்கனுக்கு அளவற்ற உணவைக் கொடுப்பவன் பெரும் நன்மையை அடைகிறான்.(61) இல்லற வாழ்வு வாழ்ந்து இத்தகு செயல்களைச் செய்பவன் பெரும் ஆன்மத் தகுதிகளை அடைகிறான். ஓ பிராமணரே, இதில் உமது கருத்து என்ன?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(62)

சௌனகர், “ஐயோ, இந்த உலகம் முரண்பாடுகள் நிறைந்தது. நல்லோரை அவமதிக்கவும், தீயோரை நிறைவடையவும் செய்கிறது.(63) ஐயோ, அறியாமையாலும், ஆசையாலும், தங்கள் புலன்களுக்கு அடிமைகளான மூடர்கள் கூட, மறுமையில் உண்டாகப் போகும் பசியைத் தணிக்கப் பல செயல்களைச் செய்கின்றனர்[2].(64) (கும்பகோணம் பதிப்பில், “அறிவில்லாதவன் மோகன் ராகம், ஆசை இவைகளால் மூடப்பட்டு விஷயங்களுக்குட்பட்டுப் போகத்திற்கும் உதரத்திற்குமாக யாகசேஷத்தை மேலானதாக நினைக்கிறான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அறியாமை கொண்ட மனிதர்கள் தங்கள் அறியாமையாலும், ஆசைககளாலும் பீடிக்கப்பட்டு, தங்கள் வயிறுகளையும், பாலியல் உறுப்புகளையும் நிறைவடையச் செய்வதற்கான பல செயல்களைச் செய்கின்றனர்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “மாயை மற்றும் பற்றால் இழுக்கப்படுபவர்களும், தங்கள் புலன்களை நிறைவடையச் செய்யும் அடிமைகளுமான மூடர்கள் தங்கள் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றுக்காகப் பல செயல்களைச் செய்கின்றனர்” என்றிருக்கிறது.)தீயவையும், பொல்லாதவையுமான குதிரைகளால் தன் புலனுணர்வை இழந்த ஒரு தேரோட்டியைப் போல, புலன்களால் மயக்கப்படும் மனிதர்கள் கண்களைத் திறந்து கொண்டே வழிதவறிப் {பாவ வழியில்} போகின்றனர்.(65)

ஆறு புலன்களும், தனக்குரிய பொருளைக் காணும்போது, இதயத்தில் அந்தப் பொருளைக் குறித்த ஆசை எழுகிறது.(66) ஒரு குறிப்பிட்ட புலனுக்கு இன்பம் தரும் பொருளை அடைந்து இன்புற இதயம் முன்னேறும் போது, ஒரு விருப்பம் ஊக்கப்படுத்தப்படுகிறது. எனவே அங்கே ஓர் உறுதி பிறக்கிறது.(67) ஒளியைக் கண்டு ஆசை கொண்டு நெருப்புச்சுடரில் விழும் பூச்சியைப் போல, இன்பம் நுகர் பொருட்களால் துளைக்கப்பட்ட அவன் ஆசை {சபலம்} என்ற நெருப்பில் விழுகிறான்.(68) புலன்களின் இன்பத்தால் குருடான அவன், அறியாமை இருளில் மூழ்குகிறான். தான் இன்பம் என்று நினைக்கும் மூடத்தனத்தில் மூழ்கி, தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்கிறான்.(69) அறியாமை, செயல் மற்றும் ஆசை ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு உயிரினமும், இடைவிடாமல் உருளும் சக்கரத்தைப் போல, ஒரு பிறவியில் இருந்து மற்றொரு பிறவியை அடைந்தும், இப்போது நீரில், இதோ நிலத்தில், இங்கே காற்றில் எனப் புல்லின் நுனி முதல் பிரம்மன் வரையுள்ள இருப்பின் வட்டம் முழுவதும் திரிந்து, இவ்வுலகில் பல்வேறு நிலைகளில் வீழ்கிறது.(70,71)

இவையே அறிவற்றவர்களின் நடைமுறையாக இருக்கிறது. இனி, லாபம் தரும் அறம் மற்றும் சுய விடுதலையில் {மோக்ஷத்தில் / முக்தியில்} முனைப்புடன் இருக்கும் ஞானிகளின் வழிகளைக் கேட்பாயாக.(72) வேதங்கள் செயல்படக் கட்டளையிடுகின்றன. ஆனால் செயல்பாட்டை (செயல்பாட்டில் உள்ள ஆர்வத்தை) துறக்கச் சொல்கின்றன. எனவே, நீ அபிமானத்தைத் {அபிமானம் = நோக்கமற்ற நிலை} துறந்து செயல்பட வேண்டும்.(73) வேள்விகள்{1}, (வேத) கல்வி{2}, கொடை{3}, தவம்{4}, (பேச்சிலும் செயலிலும்) வாய்மை{5}, மன்னிக்கும் தன்மை {பொறுமை}{6}, புலனடக்கம்{7}, ஆசையைத் துறத்தல்{8}, ஆகிய எட்டு கடமைகளும் {தர்மங்களும்} உண்மையி்ன் வழியை உண்டாக்குகின்றன என்று {வேதங்களில்} தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.(74) இவற்றில் முதல் நான்கும் பித்ருக்களின் உலகத்திற்கான பாதையை {பிதிருயானமார்க்கத்தை} அமைக்கின்றன. இவை அபிமானம் {நோக்கமின்மை} இல்லாமல் செய்யப்பட வேண்டும்.(75) நல்லவர்களால் எப்போதும் பின்பற்றப்படும் கடைசி நான்கும், தேவர்களின் சொர்க்கத்தை அடைய வழிவகுக்கின்றன. ஆன்மத் தூய்மை கொண்ட அனைவரும் இந்த எட்டு வழிகளையும் பின்பற்ற வேண்டும்.(76)

முக்திக்காக இந்த உலகை வெல்ல நினைப்பவர்கள், நோக்கங்களைத் துறந்து, புலன்களை அடக்கி, குறிப்பிட்ட கடும் நோன்புகள் நோற்று, அர்ப்பணிப்புடன் தங்கள் ஆசானுக்குத் தொண்டு செய்து, தங்கள் தட்சணையை நிச்சயம் கொடுத்து, விடாமுயற்சியுடன் வேதம் கற்று, செயலை இழிவாகக் கருதி கைவிட்டு, மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆசையையும் வெறுப்பையும் {விறுப்பு வெறுப்புகளைக்} கைவிட்டே தேவர்கள் செழுமையை அடைந்தனர்.(77-79) யோக செல்வத்தின் அறத்தாலேயே ருத்திரர்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோர் உயிரினங்களை ஆளுகின்றனர்.(80) எனவே, ஓ குந்தியின் மகனே, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவர்களைப் போலவே நீயும், நோக்கம் கொண்ட செயலில் இருந்து முழுமையாக விடுபட்டு, தவச் செயல்களால் யோகத்தில் வெற்றியடைய முயற்சி செய்வாயாக.(81) உனது மூதாதையர்களில் {பித்ருக்களில்} ஆண்களிடமும் பெண்களிடமும் நீ பட்டிருக்கும் கடனை உனது செயல்களால் (வேள்விகளால்) உண்டாகும் வெற்றியால் அடைத்துவிட்டாய். மறுபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்குத்} தொண்டு செய்வதற்காகத் தவத்தில் வெற்றியடைவாயாக.(82) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அந்த வெற்றியின் அறத்தால், தாங்கள் விரும்புவதைச் செய்ய முடியும்; எனவே, தவத்தைக் கைக்கொண்டு விருப்பங்கள் அனைத்தையும் அடைவாயாக” என்றார் {சௌனகர்}(83).

தௌமியர் கூறிய விளக்கம் – வனபர்வம் பகுதி 3-(ஆரண்யக பர்வம் – 03) யுதிஷ்டிரன் தௌமியரிடம் தனது இக்கட்டான நிலையைச் சொல்லி ஒரு வழி சொல்லுமாறு கேட்டது; தௌமியர் கூறிய விளக்கம்; யுதிஷ்டிரன் சூரியனை நோக்கி செய்த வழிபாடு; யுதிஷ்டிரன் சூரியனிடம் இருந்து அக்ஷயப் பாத்திரத்தை அடைந்தது…

வைசம்பாயனர் சொன்னார், “சௌனகரால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுக்கு மத்தியில் இருந்த தனது புரோகிதரை {தௌமியரை} அணுகி,(1) “வேதங்களை அறிந்த பிராமணர்கள், கானகம் நோக்கிச் செல்லும் என்னைப் பின் தொடர்ந்து வருகின்றனர். பேராபத்துகளால் துயரப்படும் என்னால் இவர்களைத் தாங்க இயலாது.(2) என்னால் இவர்களைக் கைவிடவும் முடியவில்லை. இவர்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்கும் சக்தியும் என்னிடம் இல்லை. ஓ புனிதமானவரே {தௌமியரே}, இச்சூழலில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர் சொன்னார், “அறம்சார்ந்தவர்களில் முதன்மையான தௌமியர், இதற்குச் சரியான வழியைச் சிந்திக்கத் தமது யோக சக்தியைக் கொண்டு சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலம்} மனத்தை ஒருங்கிணைத்துக் கொண்டு, யுதிஷ்டிரனிடம்,(4) “பழங்காலத்தில், படைக்கப்பட்ட அத்தனை உயிரினங்களும் பசியால் மிகவும் பாதிக்கப்பட்டன. சவிதா (சூரியன்), (அவை அனைத்துக்கும்) தந்தையைப் போல இருந்து, அவற்றின் மீது இரக்கம் கொண்டான்.(5) முதலில் வடக்கு சரிவுக்குச் {உத்தராயணம் / வடகோடு} சென்று தனது கதிர்களால் தண்ணீரை இழுத்து, தென் சரிவுக்கு {தட்சணாயனம் / தென்கோடு} வந்து, பூமிக்கு மேல் நின்றான். அப்போது வெப்பத்துக்குத் தன்னையே மையமாக வைத்துக் கொண்டான்.(6) இப்படிச் சூரியன் பூமியின் மேல் இருந்த போது, காய்கறிகளின் {தாவரங்களின்} தலைவன் (சந்திரன்), சூரிய வெப்பத்தின் விளைவை (ஆவியை), மேகங்களாக மாற்றி, நீரின் வடிவில் அவற்றைப் பொழிந்தான்.(7) இதனால் செடிகள் முளைத்தன. எனவே, சந்திரனின் தாக்கத்தின் மூலம் நனைந்த சூரியனே, வேகமாக வளரும் வித்துகளில் இருந்து புனிதமான காய்கறியாக உருமாறி ஆறு சுவைகளைத் தருகிறான். இவையே {இப்படி விளைந்தவையே} பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவாகின.(8) இவ்வாறே, உயிரினங்களின் உயிரைத் தாங்க வைக்கும் உணவு, சூரிய சக்தியை தன்னுள் கொண்டிருக்கிறது. எனவே, சூரியனே அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகிறான். ஓ யுதிஷ்டிரா, நீ அவனையே {சூரியனையே} புகலிடமாகக் கொள்வாயாக.(9) தூய பரம்பரை மற்றும் செயல்களுக்காக அறியப்படும் அனைத்து சிறப்புமிக்க ஏகாதிபதிகளும், தங்கள் மக்களுக்கு வழங்குவதற்காக உயர்ந்த தவப் பயிற்சியை மேற்கொண்டனர்.(10) பெரும் கார்த்தவீரியன், வைனியன் {வேனன் மகனான பிருது}, நகுஷன் ஆகிய அனைவரும், துன்பத்தில் இருந்த தங்கள் மக்களுக்கு, நோன்புகள் நோற்றுத் தவம் மற்றும் தியானம் ஆகியவற்றின் அறத்தால் {உணவு} கொடுத்தனர்.(11) எனவே, ஓ அறம் சார்ந்தவனே {யுதிஷ்டிரா}, நீ செயல்களின் மூலம் தூய்மையடைந்தவனாவாய். அதே போல் {அவர்களைப் போல}, நீயும் கடுந்தவங்களைச் செய்வாயாக. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அறம் சார்ந்த மறுபிறப்பாளர்களை {பிராமணர்களை} ஆதரிப்பாயாக” என்றார் {தௌமியர்}[1].(12)

(கும்பகோணம் பதிப்பில் இதற்குப் பிறகும் இன்னும் சில வரிகள் இருக்கின்றன. அவை பினவருமாறு, “இவ்விதம் அந்தக் காலத்திற்கேற்ற வார்த்தையைத் தௌம்யர் சொல்லக் கேட்ட யுதிஷ்டிரர், அவர்களிடமிருந்து எல்லாப் புருஷார்த்தங்களையும் கொடுக்கக்கூடிய மந்திரத்தை உபதேசம் பெற்றார். அஷ்டாகரமென்னும் சிறந்த மந்திரமானது ஸம்ஸார துக்கத்தை அடைந்தவர்களுக்கு எப்போதும் பிரியமானது. பிராமணர்களுக்கு அன்னத்திற்காக நியமத்திலிருக்கிறவரும், மனத்தை அடக்கியவரும், உறுதியான வ்ரதமுள்ளவரும் (ஸ்நானத்தால்) சுத்தமான சரீரமுள்ளவருமா தர்ம புத்திரர் மேலான தவத்தைச் செய்தார். அந்த அரசர் புஷ்ப முதலிய பூஜைக்குரிய பொருள்களாலும், பலிகளாலும் ஸூரியனைப் பூஜித்து, ஸூர்யனுக்கு எதிர்முகமானார். தர்மாத்மாவான தர்மபுத்திரர் கங்காஜலத்தை ஆசமனம்செய்து, இந்திரியங்களை ஜயித்துக் காற்றைப் புசித்து மனோவியாபாரத்தை நிறுத்தி, பிரணாயாமம் செய்து கொண்டு நின்றார் பிறகு, சுத்தமான அவர் சுத்தமான வாக்குகளால் ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தார்” என்றிருக்கிறது. இன்னும் யுதிஷ்டிரன் எவ்வாறெல்லாம் தவமும், நோன்பும் இருந்தான் என்பது குறித்த செய்திகள் நீள்கின்றன.)

ஜனமேஜயன், “குருக்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், அற்புதமான தோற்றம் கொண்ட சூரியனை பிராமணர்களுக்காக எப்படி வணங்கினான்?” என்று கேட்டான்.(13)

வைசம்பாயனர், “ஓ மன்னா {ஜனமேஜயா}, உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, மனத்தை அனைத்துப் பொருட்களிலிருந்தும் விலக்கி கவனமாகக் கேட்பாயாக. ஓ மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, ஒரு நேரத்தைக் குறித்துக் கொள்வாயாக. {அப்போது} நான் உனக்கு அனைத்தையும் விரிவாகச் சொல்கிறேன்.(14) ஓ சிறப்பானவனே {ஜனமேஜயா}, பழங்காலத்தில் தௌமியரால், பிருதையின் உயர் ஆன்ம மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} சொல்லப்பட்ட சூரியனின் நூற்று எட்டுப் {108} பெயர்களை {அஷ்டாகரத்தைக்} கேட்பாயாக.

தௌமியர், “சூரியன், ஆர்யமான், பகன், த்வஷ்டிரி {துவஷ்டா}, புஷன், ஆர்க்கன், சாவித்ரி, ரவி, கபஸ்திமான், அஜன், மிருத்யு {காலன்}, தாத்ரி {தாதா}, பிரபாகரன், பிருதிவீ, அபன், தேஜன் {தேஜஸ்}, கம், வாயு, {பராயணன்}, சோமன், பிருஹஸ்பதி, சுக்ரன், புதன், அங்காரகன், இந்திரன், விவஸ்வான், தீப்தாமசு, சுசி, சௌரி, சனைசரன், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஸ்கந்தன், வைஸ்ரவணன், வைதியுதக்னி, ஜாடராக்னி, ஐந்தனன், தேஜஸாமபதி, தர்மத்வஜன், வேதகர்த்தன், வேதாங்கன், வேதவாஹனன், கிருதன், திரேதன், துவாபரன், தூய்மையற்ற கலி, கலை, காஷ்டன், முகூர்த்தன், பக்ஷன், {மாஸன், ருது}, யமன், க்ஷணன், ஸம்வத்ஸரகரன், அஷ்வத்தன், காலச்சக்ரன், விபாவஸு, புருஷன், சாஸ்வதன், யோகின், வியக்தாவ்யக்தன், ஸநாதனன், காலதியக்ஷன் {லோகாதயக்ஷன்}, பிரஜாதியக்ஷன் {ஸுராதயக்ஷன்}, விஷ்வகர்மன், தமோனுதன், வருணன், ஸாகரன், அம்சு {அம்சன்}, ஜீமூதன், ஜீவனன், அரிஹன், பூதாஷ்ரயன், பூதபதி, ஸ்ரஷ்டிரி {ஸரஷ்டா}, ஸம்வர்த்தகன், வன்ஹி {வஹ்}, ஸர்வாதி {ஸர்வஸயாதி}, அலோலுபன், அனந்தன், கபிலன், பாநு, காமதன், ஸர்வதோமுகன், ஜயன், விசாலன், வரதன், மனஸ், ஸுபர்ணன், பூதாதி, சீக்ரகன், பிராணதாரனன், தன்வந்தரி, தூமகேது, அதிதேவன், அதிதேஸஸுதன், துவாதசாத்மன், அரவிந்தாக்ஷன், பித்ரு {பிதா}, மாத்ரு {மாதா}, பிதாமஹன் {பாட்டன்}, ஸ்வர்க்கதவாரன், பிரஜாதுவாரன், மோக்ஷதுவாரன், திரிவிஷ்டபன், தேஹாகார்த்தி {தேவகர்த்தன்}, பிரசந்தாத்மன், விஷ்வாத்மன், விஷ்வதோமுகன், சராசராத்மன், ஸூக்ஷமாத்மன், மற்றும் கருணையுள்ள மைத்திரேயன்.(16-27) சுயம்புவின் (பிரம்மா) சொல் படி அளவிடமுடியா சக்தி கொண்ட சூரியனின் நூற்று எட்டு {108} பெயர்கள் இவையே.(28)

“ஓ பாஸ்கரா {சூரியனே}, தங்கத்தைப் போன்றும் நெருப்பைப் போன்றும் பிரகாசித்துத் தேவர்களாலும், பித்ருக்களாலும், யக்ஷர்களாலும் வணங்கப்பட்டு, அசுரர்களாலும், நிசாசரர்களாலும், சித்தர்களாலும் வழிபடப்படுபவனே, செல்வத்தை அடைவதற்காக நான் உன்னை வணங்குகிறேன்” என்ற துதியை(29) எவனொருவன் சூரியோதயத்தின் போது, நிலைத்த கவனத்துடன் சொல்வானோ, அவன் மனைவி மக்கள் செல்வம், முற்பிறவியின் நினைவு ஆகியவற்றைப் பெறுகிறான்.(30) இந்தத் துதியைப் பாடுவதால் ஒருவன், பொறுமையையும், நினைவுத்திறனையும் பெறுகிறான். ஒரு மனிதன், தன் மனத்தை ஒருமுகப்படுத்தி, இந்தத் துதியைப் பாடட்டும். இவ்வாறு செய்வதால் அவன் துயரம், காட்டுத்தீ, பெருங்கடல் ஆகியவற்றில் நேரும் துன்பங்களுக்கு எதிரான சாட்சியாக இருந்து, தான் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் பெறுவான்” என்றார் {தௌமியர்}”.(31)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சூழ்நிலைக்கேற்ற சொற்களைத் தௌமியரிடம் இருந்து கேட்ட நீதிமானான யுதிஷ்டிரன், பிராமணர்களை ஆதரிக்க விரும்பி, மனத்தை ஒருமுகப்படுத்தி, மனத்தைத் தூய்மைப்படுத்தி, கடும் தியானத்தில் ஈடுபட்டான். நாளை உண்டாக்குபவனை {சூரியனை} மலர்களாலும் மற்ற பொருட்களாலும் பூஜித்து, தனது சடங்குகளைச் செய்தான் மன்னன் {யுதிஷ்டிரன்}.(32,33) நீரோடையில் நின்று கொண்டு, முகத்தை நாளின் தேவனுக்கு {சூரியனுக்கு} நேராக வைத்துக் கொண்டான். கங்கையின் நீரைத் தொட்ட அறம்சார்ந்த யுதிஷ்திரன், புலன்களைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, வாழ்வாதாரமாகக் காற்றை மட்டுமே கொண்டு, பிராணாயாமத்தில் ஈடுபட்ட ஆன்மாவுடன் நின்றான்.(34) தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பேச்சை அடக்கி, (சூரியனை நோக்கி) துதிபாடலை பாடத் தொடங்கினான் {யுதிஷ்டிரன்}.(35)

யுதிஷ்டிரன், “ஓ சூரியனே, நீ இந்தப் அண்டத்தின் விழியாக இருக்கிறாய். அனைத்து உடல்களுக்கும் நீயே ஆன்மாவாக இருக்கிறாய். நீயே அனைத்திற்கும் மூலமாக இருக்கிறாய். நீயே அறம் சார்ந்தவர்களின் செயல்களில் இருக்கிறாய்.(36) சாங்கிய தத்துவத்தை (ஆன்மாவின் புதிர்களை) அறிந்தவர்களுக்கு நீயே புகலிடமாக இருக்கிறாய். {மோட்சமடைய} தாழில்லாத கதவாக நீயே இருக்கிறாய். {அடிமைத்தனத்திலிருந்து} விடுதலை விரும்புவோருக்கு நீயே புகலிடமாக இருக்கிறாய்.(37) உனது தூய இரக்கத்தால், உலகத்தை நிலைக்க வைத்து, கண்டறியப்பட வைத்து, புனிதப்படுத்தி நீயே ஆதரவுமளிக்கிறாய்.(38) வேதங்களை அறிந்த பிராமணர்கள், உன் முன்னால் தோன்றி, குறிப்பிட்ட நேரத்தில் உன்னை வழிபட்டு, குறிப்பிட்ட (வேதங்களின்} கிளைகளில் இருந்து பாடல்களைப் பாடுகின்றனர். முனிவர்களால் நீயே வணங்கப்படுகிறாய்.(39)

சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், குஹ்யர்கள், நாகர்கள் ஆகியோர் வரங்களைப் பெற விரும்பி வானத்தில் உலவும் உனது தேரைத் தொடர்ந்து வருகின்றனர்.(40) உபேந்திரனுடன் (விஷ்ணுவுடன்) கூடிய முப்பத்து மூன்று {33} தேவர்களும்[2], (இவர்கள் எட்டு {8} வசுக்கள், பதினோரு {11} ருத்திரர்கள், பனிரெண்டு {12} ஆதித்யர்கள், பிரஜாபதி மற்றும் வஷத்கரன் ஆகியோர்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறர்.)மகேந்திரனும், வைமானிகங்களின்[3] வரிசைகளும் (இது தேவர்களின் வரிசை” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.)உன்னை வழிபட்டு, வெற்றியடைந்திருக்கின்றனர்[4].(41) (கும்பகோணம் பதிப்பில், “முப்பத்து மூன்று தேவதைகளும், விமானத்தோடு ஸஞ்சரிக்கும் கணங்களும், இந்திரனும், உபேந்திரனும் உம்மைப் பூஜித்து ஸித்தியை அடைந்திருக்கிறார்கள்” என்றிருக்கிறது.)தெய்வீக மந்தார மலர்களால்[5] ஆன மாலைகளை உனக்குப் படைத்து, வித்யாதரர்களில் சிறந்தவர்கள் தங்கள் ஆசைகள் அத்தனையும் அடைந்தனர்.(42)(பெரும் நறுமணமிக்க தெய்வீக மலர்கள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.)

குஹ்யர்களும், தெய்வீக மற்றும் மனிதத் தன்மையிலான பித்ருக்களின் ஏழு வகைகளும் {ஏழு பித்ரு கணங்களும்} உன்னை மட்டுமே வழிபட்டு மேன்மை அடைந்தனர்.(43) வசுக்கள், மருத்துகள், ருத்திரர்கள், சத்யஸ்கள், மரீசிபர்கள், வாலஹில்யர்கள் {வாலகில்யர்கள்}, சித்தர்கள் ஆகியோர் உன்னை வணங்கியே உயர்ந்த புகழை அடைந்தனர்.(44) ஏழு உலகங்கள் மொத்தத்திலும், பிரம்மனையும் சேர்த்து உன்னை விஞ்சிய எதையும் நான் காணவில்லை.(45) சக்தியும் பெருமையும் கொண்ட மற்றவை எனினும், அவை அனைத்தும் உனது பிரகாசத்திற்கும் சக்திக்கும் ஈடற்றவையாகும்.(46) அனைத்து ஒளியும் உன்னுள் இருக்கிறது. நீயே அனைத்து ஒளிகளின் தலைவனாவாய். உனக்குள்ளேயே (ஐந்து) பூதங்களும், நுண்ணறிவு மற்றும் ஞானம் அனைத்தும், தவமும், தவத்தன்மைகளும் இருக்கின்றன[6].(47)(இவை தவத்தின் குணங்களாகிய அணிமா, லகிமா முதலியன” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.)

அசுரர்களின் செருக்கை அடக்குபவனான சாரங்கத்தைத்[7] தாங்குபவனின் {விஷ்ணுவின்} கைகளில் இருக்கும் சக்கரத்தை, உனது சக்தியை உள்ளடக்கியே விஷ்வகர்மன் செதுக்கினான்.(48)(சிவனுக்குப் பினாகத்தைப் போல, இது விஷ்ணுவின் வில்லாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.) கோடை காலத்தில் உன் கதிர்களால் அனைத்து உடல்களில் இருந்தும், செடிகள் மற்றும் நீர்ப் பொருட்களில் இருந்தும் நீர்மையை எடுத்து, மழைக்காலத்தில் அவற்றைமழையாகப் பொழிகிறாய்.(49) உனது வெப்பம் மிகுந்த கதிர்களே மேகங்களாகி, மின்னலுடன் முழங்கி உரிய காலத்தில் மழையாகப் பொழிகிறது.(50) குளிரால் பாதிக்கப்பட்டவனுக்கு நெருப்போ, உறைவிடமோ, கம்பளி ஆடைகளோ உனது கதிர்களை விட மேலான சுகத்தைக் கொடுக்க முடியாது.(51)

பதிமூன்று தீவுகளைக்[8] கொண்ட இந்த முழு உலகத்துக்கும் நீயே ஒளியூட்டுகிறாய். (கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஸுதர்சனத்வீபம் முதலிய அவாந்தரத்வீபங்கள் சேர்ந்து பதிமுன்று என்பது பழையவுரை” என்றிருக்கிறது.)நீ மட்டுமே மூன்று உலகங்களுக்கும் எப்போதும் நன்மை செய்வதில ஈடுபடுகிறாய்.(52) நீ எழவில்லையென்றால் அண்டமே குருடாகிறது. அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் கல்விமான்களால் ஈடுபட முடியாது.(53) பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் வைசியர்கள் ஆகிய மூன்று வகையினரும் நாள்தோறும் தங்கள் கடமைகளையும், வேள்விகளையும்[9] உனது கருணையாலேயே செய்ய முடிகிறது.(54) (உரையில் உள்ள சொற்கள் அக்னிஹோத்ரம், பசுபந்தம், இஷ்டி, மந்திரம், யாகம், தபம் முதலிய காரியங்கள் ஆகும்.)நீயே பிரம்மாவின் ஆயிரம் யுக காலத்தின் ஆதியும் அந்தமுமான நாளாக இருக்கிறாய் என்று காலவரிசை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(55) மனுக்கள், மனுக்களின் மகன்கள், அண்டம், மனிதகுலம், மன்வந்தரம் மற்றும் அவற்றின் தலைவர்கள் ஆகிய அனைத்துக்கும் நீயே தலைவனாக இருக்கிறாய்.(56) பிரளய காலத்தின் போதும் உன் கோபத்தில் உண்டான ஸம்வர்தக நெருப்பு மூன்று உலகத்தையும் எரித்து விட்டு, அது மட்டுமே எஞ்சியிருக்கும்.(57) உன் கதிர்களால் உண்டாகும் பலவண்ண மேகங்கள், ஐராவத யானையுடனும், இடியுடனும் கூடி, நியமிக்கப்பட்ட {பிரளயகாலப்} பெருவெள்ளத்தைக் கொண்டுவருகின்றன[10].(58) (கும்பகோணம் பதிப்பில், “உம்முடைய கிரகத்தாலுண்டான அனேக நிறமுள்ள பெரிய மேகங்கள் ஐராவதமென்னும் மேகங்களுடனும், இடிகளுடனும் கூடிக்கொண்டு நான்கு விதமான எல்லாப் பிராணிகளையும் ஜலத்தில் முழுகச் செய்கின்றன” என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், “மேகங்களுக்கு மேலுள்ள மேகங்களுக்கு ஐராவதமென்று பெயர்” என்றும், “அண்டஜனம் = முட்டையிலிருந்து உண்டானது; ஸ்வேதஜன் = வேர்வையிலிருந்து உண்டானது; உத்பிஜ்ஜம் = பூமியைப் பிளந்து உண்டானது; ஜராயுஜம் = கருப்பையிலிருந்து உண்டானது என்று நான்கு வித பிராணிகள்” என்றிருக்கிறது.)உன்னைப் பனிரெண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, பல சூரியன்களாக மாறி, உன் கதிர்களால் பெருங்கடலை நீயே குடிக்கிறாய்.(59) இந்திரன் என்று அழைக்கப்படுபவன் நீயே. விஷ்ணு நீயே, பிரம்மன் நீயே, பிரஜாபதி நீயே, நெருப்பு {அக்னி} நீயே, நுட்பமான மனம் நீயே. தலைவனும் {பிரபுவும்} நீயே, நித்திய பிரம்மமும் நீயே.(60) ஹன்சன் நீயே, சாவித்ரி நீயே, பானு நீயே, அன்சுமாலீ நீயே, பிருஹஸ்பதி நீயே, விஸ்வஸ்வான் நீயே, மிஹிரன் நீயே, பூஷன் நீயே, மித்ரன் நீயே, மற்றும் தர்மனும் நீயே.(61) ஆயிரங்கதிர்கள் கொண்ட ஆதித்யன் நீயே, கதிர்களின் தலைவனான தபனனும் நீயே. மார்த்தாண்டன் நீயே, அர்க்கன் நீயே, ரவி நீயே, சூரியன் நீயே, சரண்யன் நீயே மற்றும் நாளை உண்டாக்குபவனும் நீயே.(62) திவாகரன் நீயே, ஸப்தஸப்தி நீயே, தூமகேசி நீயே, விரோசனன் நீயே. வேகமானவன் {அசுகாமீ} நீயே, இருளை அழிப்பவன் {தமோக்னன்} நீயே, மஞ்சள் குதிரைகள் கொண்டவவன் {ஹரிதாஷ்வன்} நீயே.(63)கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஸுதர்சனத்வீபம் முதலிய அவாந்தரத்வீபங்கள் சேர்ந்து பதிமுன்று என்பது பழையவுரை” என்றிருக்கிறது.

ஆறாவது அல்லது ஏழாவது சந்திர நாளில் {சஷ்டி அல்லது சப்தமியில்} உன்னை மரியாதையுடன் வழிபடுபவன், பணிவுடனும், மன அமைதியுடனும், லட்சுமியின் அருளுடனும் இருப்பான்.(64) சிதறாத கவனத்துடன் உன்னை வழிபடுபவன், அனைத்து அச்சம், துன்பம் மற்றும் பாதிப்புகளில் இருந்து உன்னால் விடுவிக்கப்படுகிறான்.(65) அனைத்திலும் உன்னைக் காண்பவர்கள் நீடூழி வாழ்ந்து, பாவங்களில் இருந்து விடுதலை பெற்று, நோயற்ற வாழ்வு வாழ்ந்து, இன்புற்று இருப்பர்.(66) ஓ உணவுகள் அனைத்தின் தலைவனே, எனது விருந்தினர்களுக்கு மதிப்புடன் உணவு வழங்க விரும்பும் எனக்கு, அபரிமிதமான உணவை அளிப்பாயாக.(67) உனது பாதத்தைப் புகலிடமாகக் கொண்டு உன்னைத் தொடர்பவர்களான மாடரன், அருணன், தண்டன் மற்றும் அசனி, க்ஷுபை உள்ளிட்ட அனைவரையும் வணங்குகிறேன். க்ஷுபை மற்றும் மைத்ரீ ஆகிய அனைத்து உயிர்களின் தெய்வீகத் தாய்மாரையும், பிறரையும் வணங்குகிறேன். அவர்கள் அனைவரும் தங்கள் பங்கை எனக்குக் கொடுக்கட்டும்” என்று வேண்டினான் {யுதிஷ்டிரன்}.(68,69)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ மன்னா, உலகைத் தூய்மைப்படுத்தும் சூரியன், (யுதிஷ்டிரனால்} இப்படியே வணங்கப்பட்டான். தன்னொளி கொண்டு நாளை உண்டாக்குபவன், இந்தப் பாடலால் நிறைவடைந்து, பாண்டுவின் மகன் முன்னிலையில் தகிக்கும் தனலெனத் தன்னை வெளிப்படுத்தினான்.(70) விவஸ்வான் {சூரியன்}, “நீ விரும்பியது அனைத்தையும் அடைவாய். பனிரெண்டு வருடங்களுக்குத் தேவையான உணவை நான் உனக்குத் தருகிறேன்.(71) ஓ மன்னா, நான் உனக்குக் கொடுக்கும் இந்தத் தாமிரப் பாத்திரத்தைப் பெற்றுக் கொள்வாயாக. ஓ அற்புதமான நோன்புகள் கொண்டவனே, பாஞ்சாலி, இந்தப் பாத்திரத்தை, அதன் உள்ளடக்கங்களுடன், அஃதாவது உனது சமையலறையில் சமைக்கப்பட்ட கனிகள், கிழங்குகள், இறைச்சி மற்றும் காய்கறிகளுடன் வைத்திருக்கும்வரை, இந்த நான்கு வகையான உணவுகளும் இந்த நாள் முதல் வற்றாமல் இருக்கும். இன்றிலிருந்து பதினான்காம் ஆண்டில் நீ உனது நாட்டை அடைவாய்” என்றான்.(72,73)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைச் சொன்ன அந்தத் தேவன் பிறகு மறைந்து போனான். எவன் ஒருவனும், வரம் வேண்டி இந்தப் பாடலை {ஸ்லோகத்தை} மன ஒருங்கிணைப்புடன், பாடினால் நினைக்கும் வரம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், நிச்சயம் அதை அடையலாம்.(74) மனிதர்களில் ஆணோ பெண்ணோ, தினமும் இதைப் பாடினாலோ, கேட்டாலோ, அவ்வாறு பாடும், அல்லது கேட்கும் அவனோ அவளோ, மகனை விரும்பினால் அடைவார்கள். செல்வத்தையும் கல்வியையும் விரும்பினாலும் அதையும் அடைவார்கள். ஆணோ பெண்ணோ இந்தப் பாடலை தினமும் இரு சந்திகாலத்திலும் {பொழுது உதிக்கும் அதிகாலையிலும், பொழுதுசாயும் மாலையிலும்}, பாடி வந்தால், ஆபத்துகளில் இருந்தும் கட்டுகளில் இருந்தும் விடுபடுவார்கள். இந்தப் பாடலை, சிறப்பு மிகுந்த சக்ரனுக்கு {இந்திரனுக்கு} பிரம்மனே சொல்லியிருக்கிறான்.(75-77) சக்ரனிடமிருந்து நாரதரும், நாரதரிடம் இருந்து தௌமியரும், தௌமியரிடம் இருந்து யுதிஷ்டிரனும் இதை அடைந்து, தங்கள் விருப்பங்களை அடைந்தனர்.(78) இந்தப் பாடலின் அறத்தாலேயே {தன்மையாலேயே} ஒருவன் போரில் வெற்றியை அடையலாம், பெரும் செல்வத்தையும் அடையலாம். இதைப் படிப்பவர்களை அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுவித்து, சூரியலோகத்துக்கு அழைத்துச் செல்கிறது இந்தப் பாடல்”.(79)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “வரத்தை அடைந்த குந்தியின் அறம் சார்ந்த மகன் {யுதிஷ்டிரன்}, நீரில் இருந்து எழுந்து, தௌமியரின் பாதங்களில் விழுந்து, தன் தம்பிகளை ஆரத்தழுவிக் கொண்டான்.(80) ஓ மேன்மையானவனே, அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சமையலறையில் இருந்த திரௌபதியிடம் சென்று, அவளால் வழிபடப்பட்டு, {அவர்களுக்கான} அன்றைய உணவை அவனே சமைத்தான்.(81) நான்கு வகையிலான தூய்மையான உணவு{பழங்கள், கிழங்குகள், இறைச்சி மற்றும் காய்கறி}, எவ்வளவு குறைவாக இருந்தாலும், அந்தப் பாத்திரத்தில் இட்டதும் சுவையுடன் பெருகி அளவற்றதானது. அதைக் கொண்டு யுதிஷ்டிரன் மறுபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} உணவளித்தான்.(82) பிராமணர்களுக்கு உணவு அளித்த பிறகு, தனது தம்பிகளுக்கும் கொடுத்தான். அதன் பிறகு, விகஸம் என்று அழைக்கப்பட்டதும், எஞ்சியிருப்பதுமான உணவை யுதிஷ்டிரன் உண்டான்.(83) யுதிஷ்டிரன் உண்ட பிறகு, மேலும் எஞ்சியிருந்ததைப் பிருஷதனின் மகள் {திரௌபதி} உண்டாள். அவள் உணவை உண்டதும், அன்றைய பொழுதுக்கான உணவு தீர்ந்துவிடும்.(84)

நாளை உண்டாக்குபவனிடம் {சூரியனிடம்} இருந்து, இப்படிப்பட்ட வரத்தைப் பெற்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தேவர்களைப் போலப் பிரகாசித்து, பிராமணர்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் அவர்களை மகிழ்வித்தான்.(85) தங்கள் புரோகிதருக்குக் {தௌமியருக்குக்} கீழ்ப்படிந்து நடந்த பிருதையின் மகன்கள், நற்பேற்றை அருளும் சந்திர நாள், அமாவாசை, பௌர்ணமிகளில் விதிப்படியும், சாத்திரப்படியும் உரிய மந்திரங்களுடன் வேள்விகளைச் செய்தனர்.(86) அந்த வேள்விகள் முடிந்ததும், பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, தௌமியரால் சொல்லப்பட்டவையும், நற்பேறுகளை வழங்கக்கூடியவையுமான சடங்குகள் அனைத்தையும் செய்து, அவரையும் அழைத்துக் கொண்டு, பிராமணர்களால் சூழப்பட்டவனாக, காம்யக வனத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(87)

கபடமாய்ப் பேசுகிறாய் விதுரா! – வனபர்வம் பகுதி 4-திருதராஷ்டிரன் விதுரனை அழைத்து ஆலோசனை கேட்டல்; விதுரன் பாண்டவர்களை அழைக்கச் சொல்லல்; திருதராஷ்டிரன் விதுரனை நிந்திப்பது; விதுரன் பாண்டவர்களிடம் செல்வது

வைசம்பாயனர் சொன்னார், “பாண்டவர்கள் காட்டுக்குச் சென்ற பிறகு, தனது கண்ணைப் போன்ற ஞானம் கொண்டவனும் அம்பிகையின் மகனுமான திருதராஷ்டிரன் மிகுந்த சோகத்துக்கு உள்ளானான். வசதியாக அமர்ந்திருந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, ஆழமான அறிவு கொண்ட அறம் சார்ந்த விதுரனிடம், “உனது புரிதல் பார்கவனைப் {Bhargava –சுக்கிரனைப்} போன்று தெளிவானது. அனைத்து நுட்பங்களையும், நீதிகளையும் நீ அறிவாய். அனைத்து கௌரவர்களையும் சமமான பார்வையில் பார்ப்பவன் நீ. எனக்கும் அவர்களுக்கும் எது சரியாக இருக்கும் என்பதைச் சொல். ஓ விதுரா, இப்படி காரியங்கள் நடந்திருக்கும் வேளையில், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? குடிமக்களிடம் நல்லெண்ணத்தை நான் எப்படிப் பெறுவேன்? நம்மை குடிமக்கள் வேர் வரை அழித்திடாமல் இருக்க, நான் எப்படி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவது? உகந்த அற்புதமான காரியங்கள் அனைத்தையும் நீ அறிந்திருப்பதால், எங்கள் அனைவருக்கும் சொல்” என்றான் {திருதராஷ்டிரன்}.

விதுரன், “ஓ மன்னா {திருதராஷ்டிரா} மூன்று நெறிகள் (பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியன) அறத்திலேயே தங்கள் அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றன. நாடுகளின் அடித்தளங்களும் அறத்தை அடிப்படையாகக் கொண்டவையே என்று முனிவர்கள் சொல்கிறார்கள். ஆகையால், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, உமது பலத்தில் சிறந்ததைக் கொண்டு, அறவழியில் உனது மகன்களையும், பாண்டுவின் மகன்களையும் பேணும். உனது மகன்கள் நீதிமானான யுதிஷ்டிரனை அழைத்து, பகடை ஆட்டத்தில் அவனை வீழ்த்திய போது, சுபலனின் மகனைத் {சகுனியைத்} தலைமையாகக் கொண்ட தீய ஆன்மாக்களுக்கு அந்த அறம் கிட்டியிருக்கிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, இந்த முழு அநீதியை நான் நேராக்கப் பார்க்கிறேன். ஓ குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன் பாவங்களில் இருந்து விடுபட்டு, நல்ல மனிதர்களிடம் தனது நிலையை மீட்டெடுக்கப் பார்க்கிறேன். உம்மால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அத்தனையையும் பாண்டுவின் மகன்கள் அடையட்டும். ஒரு மன்னன் தன் உடைமைகளில் திருப்திகொண்டு மற்றவர்களின் உடைமைகளுக்கு ஆசைப்படக்கூடாது என்பது நிச்சயம் உயர்ந்த அறநெறியாகும். உமது நற்பெயர் பாதிக்கப்படாது. குடும்பத்துக்குள் வேற்றுமைகள் நிலவாது. நீர் நியாயமற்றவனாக இருக்க மாட்டீர். பாண்டவர்களைத் திருப்திப்படுத்தி, சகுனியைச் சிறுமைப்படுத்துவதே இப்போது உமது முக்கிய கடமையாகும். உமது மகன்களுக்கு, அவர்கள் தொலைத்த நற்பேறை மீட்டெடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நீர் நினைத்தீரானால், ஓ மன்னா {திருதராஷ்டிரா}, இந்த நடத்தையை விரைவாக மேற்கொள்ளும். நீர் அப்படிச் செய்யவில்லை என்றால், குருக்கள் நிச்சயம் அழிவைச் சந்திப்பர். பீமசேனனோ அர்ஜுனனோ கோபப்பட்டால் எதிரிகளைக் கொல்லாமல் விட மாட்டார்கள். போரில் வல்லவனான சவ்யசச்சினையும் {அர்ஜுனனையும்}, உலகத்தின் ஆயுதங்களில் மிக வலிமையான காண்டீவத்தையும், பெரும் பலம்வாய்ந்த பீமனையும் கொண்டவர்களால் இந்த உலகத்தில் எதைத்தான் அடைய முடியாது? முன்பு, உமது மகன் {துரியோதனன்} பிறந்த காலத்தில் நான் உமக்கு *”இந்த அதிர்ஷ்டமற்ற குழந்தையைக் கைவிடும். இதில் தான் உமது குலத்தில் நன்மை இருக்கிறது” என்று சொன்னேன். ஆனால் நீர் அதன்படி நடந்து கொள்ளவில்லை. ஓ மன்னா, இப்போதும் உமது நன்மைக்கான வழியையே குறிப்பிடுகிறேன். நான் சொல்வது போல நீர் நடந்தால், பின்னால் நீர் வருந்தத் தேவையில்லை. பாண்டுவின் மகன்களுடன் சேர்ந்து உமது மகனும் {துரியோதனனும்} ஒன்றாக ஆள மகிழ்ச்சியாகச் சம்மதிப்பானானால், பிற்பாடு நீர் வருந்த வேண்டியிருக்காது. வேறு மாதிரியாகச் செய்ய வேண்டுமானால், உமது மகிழ்ச்சிக்காக உமது மகனைக் கைவிடும். துரியோதனனை ஒதுக்கி, பாண்டுவின் மகனை ஆட்சி உரிமையில் நிறுவும். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, ஆசையற்ற அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, இந்தப் பூமியை அறம் சார்ந்து ஆளட்டும். பிறகு, பூமியின் மன்னர்கள் அனைவரும் வைசியர்களைப் போல நமக்குத் தாமதமில்லாமல் காணிக்கை தருவார்கள். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, துரியோதனன், சகுனி மற்றும் கர்ணன் ஆகியோர் ஆயத்தத்துடன் பாண்டவர்களுக்காகக் காத்திருக்கட்டும். துச்சாசனன், திறந்த சபையில் பீமசேனனிடமும், துருபதனின் மகளிடமும் மன்னிப்பு கேட்கட்டும். அனைத்து அதிர்ஷ்டக்குறிகளும் கொண்ட யுதிஷ்டிரனை அரியணையில் அமர்த்தி அவனை நீர் தணிக்க வேண்டும். நீர் கேட்டதலா, நான் வேறு என்ன ஆலோசனை கூற முடியும்? இவற்றைச் செய்வதால், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, நீர் செழுமையை அடைவீர்” என்றான் {விதுரன்}.

திருதராஷ்டிரன், “ஓ விதுரா, இந்தச் சபையில் பாண்டவர்களைக் குறித்தும், என்னைக் குறித்தும் நீ சொல்லிய இவ்வார்த்தைகள், அவர்களுக்கு நன்மையே தவிர எங்களுக்கு இல்லை. எனது மனம் அதை ஏற்கவில்லை. இவற்றையெல்லாம் உனது மனத்தில் எப்படி தீர்மானம் செய்தாய்? நீ பாண்டவர்களின் சார்பாகப் பேசியதால், நீ என்னுடன் நட்பாக இல்லை என்பதைக் காண்கிறேன். பாண்டுவின் மகன்களுக்காக எனது மகன்களை நான் எப்படிக் கைவிடுவேன்? சந்தேகமற அவர்கள் எனது மைந்தர்கள்தான். ஆனால் துரியோதனன் எனது உடலில் இருந்து உதித்தவன். பாகுபாடு பார்க்காத எவன்தான் எனது உடலை மற்றவர்களுக்காகக் கைவிடச் சொல்வான்? ஓ விதுரா, உன்னை நான் உயர்ந்த மதிப்பில் வைத்திருந்தாலும், நீ சொல்வது அனைத்தும் கபடமாக இருக்கிறது. நீ விரும்பியவாறு இங்கு இருக்கவோ அல்லது இங்கிருந்து நீ போகவோ செய்யலாம். என்னதான் மகிழ்ச்சியூட்டப்பட்டாலும், கற்பற்றவள் கணவனை ஏமாற்றத்தான் செய்வாள்” என்றான்.

வைசம்பாயனர் சொன்னார், “ஓ மன்னா {ஜனமேஜயனே}, இதைச் சொன்ன திருதராஷ்டிரன், திடீரென எழுந்து, உள் அறைகளுக்குள் சென்றான். விதுரன், “இந்தக் குலம் அழிந்தது” என்று சொல்லி, பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} இருக்கும் இடத்திற்குச் சென்றான்-*“இந்த அதிர்ஷ்டமற்ற குழந்தையைக் கைவிடும். இதில் தான் உமது குலத்தில் நன்மை இருக்கிறது”

வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஜனமேஜயா, அதே சமயத்தில் திருதராஷ்டிரன் காந்தாரியிடம் நூறு மகன்களையும், வைசிய மனைவியிடம் ஒரு மகனையும் பெற்றான். பாண்டு, தனது இரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரி மூலம் ஐந்து மகன்களைப் பெற்றான். பின்னாட்களில் பெரும் ரதவீரர்களாக இருந்த அந்த ஐவரும், தேவர்களால் குரு பரம்பரைத் தொடர்ச்சிக்காகப் பெறப்பட்டவர்கள்.”

ஜனமேஜயன், “ஓ அந்தணர்களில் சிறந்தவரே, எப்படி காந்தாரி அந்த நூறு மகன்களையும் பெற்றாள்? எத்தனை வருடங்களில் பெற்றாள்?.

செல்வத்தைப் பகிர்ந்து வாழ் யுதிஷ்டிரா! – வனபர்வம் பகுதி 5-விதுரன் பாண்டவர்களைக் காம்யக வனத்தில் சந்தித்தல்; விதுரன் திருதராஷ்டிரன் சொன்னவற்றை பாண்டவர்களுக்குச் சொல்லல்..

வைசம்பாயனர் சொன்னார், “காட்டில் வாழ விரும்பிய அந்த பாரத குலத்துக் காளைகளான பாண்டவர்கள், தங்களைத் தொடர்பவர்களுடன், கங்கைக் கரையில் இருந்து குருக்ஷேத்திரக் களத்திற்குச் சென்றனர். சரஸ்வதி, திரிசத்வதி மற்றும் யமுனையில் {நதிகளில்} தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, ஒரு கானகத்தை விட்டு மற்றொரு கானகத்திற்கு மேற்கு நோக்கிப் பயணித்தனர். நீண்ட பயணத்திற்குப் பிறகு அவர்கள், முனிவர்கள் அடிக்கடி செல்லும் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள காம்யக வனத்திற்குச் சென்றனர்.

ஓ பாரதா {ஜனமேஜயா}, பறவைகளும் மான்களும் நிறைந்த அந்தக் கானகத்தில் அந்த வீரர்கள் முனிவர்களால் உற்சாகமும் ஆறுதலும் அடைந்து அங்கேயே வசிக்கத் தொடங்கினர். பாண்டவர்களைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த விதுரன், அனைத்து நற்பொருட்களும் நிரம்பிய காம்யக வனத்திற்கு தனி ரதத்தில் நுழைந்தான். வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட ரதத்தில் காம்யக வனத்தை அடைந்து, நீதிமானான யுதிஷ்டிரன் திரௌபதியுடன் ஓய்வாக இருப்பதையும், தம்பிகளும் அந்தணர்களும் சூழ்ந்திருப்பதையும் கண்டான். வேகமான எட்டுகளுடன் நடந்து வந்த விதுரனைக் கண்ட அறம்சார்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்} தனது தம்பியான பீமசேனனிடம், “என்ன செய்தியுடன் க்ஷத்தா {விதுரர்} இங்கு வருகிறார்? சகுனியால் அனுப்பப்பட்டு, மீண்டும் பகடையாட நம்மை அழைக்க வருகிறாரா? சிறு மனம் கொண்ட சகுனி நமது ஆயுதங்களையும் பகடையின் மூலம் வெல்லலாம் என நினைக்கிறானா? ஓ பீமசேனா, நான் சவாலுக்கு அழைக்கப்பட்டால், என்னால் இங்கு தங்க முடியாது. நீ வா. காண்டீவத்தின் இருப்பு சந்தேகத்துக்கிடமானால், நாம் நமது நாட்டை அடையவே முடியாது” என்றான்.

வைசம்பாயனர் சொன்னார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் எழுந்திருந்து விதுரனை வரவேற்றனர். அவர்களால் வரவேற்கப்பட்ட அஜமீட குலத்தைச் சேர்ந்தவன் (விதுரன்) அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து, வழக்கமான விசாரிப்புகளை விசாரித்தான். சிறிது நேரம் விதுரன் ஓய்வெடுத்த பிறகு, அந்த மனிதர்களில் காளைகள், அவன் {விதுரன்} வந்த காரணத்தைக் கேட்டனர். விதுரன் அவர்களுக்கு அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன் சொன்னது தொடர்பான அத்தனையும் விவரமாகச் சொன்னான்.

விதுரன், “ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, திருதராஷ்டிரன், அவரை நம்பியிருக்கும் என்னை அழைத்து தக்க மரியாதைகள் செய்து, “காரியங்கள் இப்படி நடந்திருக்கின்றன. இப்போது, பாண்டவர்களுக்கும் எனக்கும் எது நல்லது என்பதைச் சொல்.” என்று கேட்டார். நான் கௌரவர்களுக்கு திருதராஷ்டிரனுக்கும் நன்மை பயக்கும் காரியங்களைச் சொன்னேன். நான் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கும் வேறு வழி தெரியவில்லை. ஓ பாண்டவர்களே, நான் கூறிய ஆலோசனைகள் மிகுந்த நன்மை பயக்கத்தக்கவை, ஆனால் அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்} அவற்றை கவனிக்கத் தவறிவிட்டார். நோய்வாய்ப்பட்டவனுக்கு மருந்து எப்படிப் பிடிக்காதோ அப்படி எனது வார்த்தைகள் மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} தோற்றன. ஓ எதிரிகள் அற்றவனே {யுதிஷ்டிரனே}, சுத்தமான வழியில் வந்த குடும்பத்திலுள்ள அனைத்து கற்பற்ற தந்திரசாலிகளையும் அறத்தின் பாதைக்குக் கொண்டு வர முடியாது. ஆகையால் என்னால் திருதராஷ்டிரனைத் திருப்ப முடியவில்லை. மூன்று இலக்க வயது அடைந்தவனை இளம் பெண்ணுக்குப் பிடிக்காதது போல, திருதராஷ்டிரருக்கு எனது வார்த்தைகள் பிடிக்கவில்லை. நிச்சயம் குருக்களின் குலத்துக்கு அழிவு ஏற்படப்போகிறது. நிச்சயம் திருதராஷ்டிரர் நற்பேறை அடையமாட்டார். எப்படி தாமரை இலையில் விழுந்த தண்ணீர் அப்படியே நிற்கிறதோ, அதே போல எனது ஆலோசனைகள் அத்தனையும் திருதராஷ்டிரரிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பிறகு கோபம் கொண்ட திருதராஷ்டிரர், “ஓ பாரதா {விதுரா}, நீ எங்கு செல்ல விரும்புகிறாயோ அங்கே செல். இனிமேல் இந்த பூமியையோ அல்லது நகரத்தையோ ஆள உனது துணையை நாட மாட்டேன்” என்று சொன்னார். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, மன்னர் திருதராஷ்டிரனால் கைவிடப்பட்டு, நல்ல ஆலோசனைகளை வழங்கவே உன்னிடம் வந்தேன். நான் அந்தத் திறந்த சபையில் என்ன சொன்னேன் என்பதை மறுபடியும் கூறுகிறேன். நான் சொல்வதைக் கேட்டு மனதில் வைத்துக் கொள். பகைவர்களால் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டவன், பொறுமையுடன் இருந்து தனக்கு ஆதரவுகளைத் தேடிக்கொண்டு, சிறு நெருப்பை உண்டாக்கிய மனிதர்கள், அதை பெரும் நெருப்பாக மாற்றி விடுவது போல மொத்த உலகையும் தனியாக ஆள்வான். ஒருவனின் செல்வத்தை துணைவர்களுக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ச்சியாக இருந்தாலும், அதுவே துணைவர்களை அடையும் சிறந்த வழியாகும். துணைவர்களைக் கொண்டவன், உலகத்தின் அரசுரிமையை வெல்கிறான் என்று சொல்லப்படுகிறது. ஓ பாண்டவனே {யுதிஷ்டிரனே}, உனது செல்வத்தை உனது துணைவர்களுக்கு பகிர்ந்து கொடு. எப்போதும் அவர்களுடன் உண்மையாக நடந்து கொள். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசு. உனது உணவைக் கூட அவர்களுடன் பகிர்ந்து கொள். அவர்கள் எதிரில் தற்பெருமை பேசாதே! இந்த நடத்தை மன்னர்களின் செழுமையை வளர்க்கிறது!” என்றான்.

யுதிஷ்டிரன், “ஆசையில் சபலமடையாமல், இந்த உயர்ந்த அறிவை அறிந்து, நீர் அறிவுறுத்துவது போலவே நடந்து கொள்கிறேன்! காலம், இடம் குறித்து என்ன ஆலோசனை சொல்கிறீரோ அதன்படியே கவனமாக நடந்து கொள்கிறேன்” என்றான்.

துயருற்றோரை ஆதரிப்பர் அறவோர்! – வனபர்வம் பகுதி 6-விதுரன் பாண்டவர்களிடம் சென்றதும் திருதராஷ்டிரன் தனது தம்பியை நினைத்து வருந்தல்; சஞ்சயனை அனுப்பி விதுரனை அழுத்துவரச் சொல்லல்; சஞ்சயன் விதுரனை திரும்ப அழைத்து வரல்; சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரி மகிழ்ந்திருத்தல்

வைசம்பாயனர் சொன்னார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, விதுரன் பாண்டவர்களின் இருப்பிடம் சென்றதும், ஓ பாரதா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன், ஆழமான விவேகத்துடன் தனது செயலுக்காக வருந்தினான். போர் மற்றும் அமைதியில் விதுரனுக்கு இருக்கும் பெரும் புத்திசாலித்தனத்தையும், பிற்காலத்தில் பாண்டவர்களுக்கு ஏற்படப்போகும் பெரும் செல்வாக்கையும் நினைத்துப் பார்த்தான். விதுரனை நினைத்து வலி கொண்ட திருதராஷ்டிரன் சபையின் வாயிலை அணுகப்போய் (காத்திருக்கும்) மற்ற ஏகாதிபதிகளின் முன்னிலையில் உணர்வற்று கீழே விழுந்தான்.

மீண்டும் நினைவை அடைந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தரையில் இருந்து எழுந்து சஞ்சயனிடம், “எனக்கு நண்பனாக இருந்த எனது தம்பி {விதுரன்} அறதேவனைப் {தர்ம தேவனைப்} போன்றவன்! அவனை நினைத்துப் பார்த்த எனது இதயம் துயரத்தால் பற்றி எரிகிறது! செல், தாமதமில்லாமல் அறநெறிய அறிந்த எனது தம்பியை {விதுரனை} என்னிடம் அழைத்துவா!” என்றான். அதைச் சொன்ன பிறகு, அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} கதறி அழுதான். 

விதுரனை நினைத்து, வருத்தமடைந்து உள்ளம் கொதித்து, சகோதர பாசத்தால் துயரம் மேலிட்டு, சஞ்சயனிடம், “ஓ சஞ்சயா, பாவியான என்னால் கோபத்தில் துரத்தப்பட்ட எனது தம்பி {விதுரன்} இன்னும் உயிருடன் இருக்கிறானா என்பதை முதலில் உறுதி செய்! எனது ஞானமுள்ள தம்பி {விதுரன்}, அளவற்ற புத்திசாலித்தனம் கொண்ட அவன் {விதுரன்} சிறிதும் வரம்பு மீறி செயல்பட்ட குற்றவாளி கிடையாது. ஆனால், மறுபுறம், எனது கையால் செய்யப்பட்ட பெரும் தவறுகளுக்காகவே {சுட்டிக்காட்ட} வந்தான்! ஓ ஞானமுள்ளவனே {சஞ்ஜயனே}, அவனைக் கண்டுபிடித்து இங்கே கொண்டுவா. அல்லது, ஓ சஞ்சயா நான் எனது உயிரை விடுவேன்!” என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மன்னனின் {திருதராஷ்டிரனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட சஞ்சயன், தனது பாராட்டை உணர்த்தி, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி காம்யக வனம் இருக்கும் திக்கில் சென்றான். நேரத்தைக் கடத்தாமல் பாண்டுவின் மகன்கள் வசித்த வனத்தை அடைந்து மான் தோல் உடுத்தியிருந்த யுதிஷ்டிரன், தனது தம்பிகளின் பாதுகாப்பில் ஆயிரக்கணக்கான அந்தணர்களுக்கு மத்தியில் விதுரனுடன் அமர்ந்து தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் புரந்தரன் {இந்திரன்} போல இருப்பதைக் கண்டான். 

யுதிஷ்டிரனை அணுகிய சஞ்சயன் அவனை முறைப்படி வணங்கினான். பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} அவனை {சஞ்சயனை} உரிய மரியாதையுடன் வரவேற்றனர். அவன் {சஞ்சயன்} வசதியாக அமர்ந்த பிறகு, யுதிஷ்டிரன் அவனிடம் {சஞ்சயனிடம்} சில வழக்கமான விசாரிப்புகளை விசாரித்து அவனுடைய {சஞ்சயனுடைய} நன்னிலை குறித்து கேட்டான். பிறகு அவன் வந்த காரணத்தைக் குறித்தும் கேட்டான். சஞ்சயன் “அம்பிகையின் மகனான திருதராஷ்டிரர், ஓ க்ஷத்தா {விதுரா}, உம்மை நினைவு கூர்ந்தார். நேரத்தைக் கடத்தாமல் வந்து மன்னனை {திருதராஷ்டிரனே} காப்பாற்றும். ஓ மனிதர்களில் சிறந்தவரே {விதுரரே}, மனிதர்களில் முதன்மையான இந்தக் குரு இளவரசர்களின் {பாண்டவர்களின்} அனுமதியுடன், மன்னர்களில் சிங்கம்போன்றவரின் {திருதராஷ்டிரரின்} கட்டளையை ஏற்று, அவரிடம் திரும்பி வருவதே உமக்குத் தகும்!” என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சஞ்சயனால் இப்படிச் சொல்லப்பட்ட உறவினர்களுடன் நெருக்கமாக இருக்கும் புத்திசாலியான விதுரன், யுதிஷ்டிரனின் அனுமதியுடன் யானையின் பெயர் கொண்ட நகரத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பிச் சென்றான். அவன் {விதுரன்} மன்னனை {திருதராஷ்டினை} அடைந்ததும், அம்பிகையின் மகனான பெரும் சக்தி கொண்ட திருதராஷ்டிரன், அவனிடம் {விதுரனிடம்}, “எனது நற்பேறாலேயே, ஓ விதுரா, பாவங்களற்ற நீ, அறநெறிகள் அறிந்த நீ என்னை நினைவுகூர்ந்து என்னிடம் வந்திருக்கிறாய்! மேலும், ஓ பாரத குலத்தின் காளையே {விதுரனே}, நீ இல்லாத நிலையில், இரவும் பகலும் தூக்கமற்று, பூமியில் தொலைந்து போனவனாகத் தான் நான் இருந்தேன்” என்றான் {திருதராஷ்டிரன்}. 

பிறகு மன்னன் {திருதராஷ்டிரன்} விதுரனைத் தனது மடியில் அமர்த்தி, அவனது {விதுரனது} தலையை முகர்ந்து பார்த்து, “நான் உச்சரித்த வார்த்தைகளுக்காக என்னை  நீ மன்னித்துவிடு, ஓ பாவங்களற்றவனே” என்றான். விதுரன், “ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நான் உம்மை மன்னித்துவிட்டேன். நீர் எனக்கு மூத்தவர், எனது உயர்ந்த மரியாதைக்குரியவர்! நான் உம்மைக் காணும் விருப்பத்திலேயே திரும்பி வந்தேன். அனைத்து அறம்சார்ந்த மனிதர்களும், ஓ மனிதர்களில் புலியே, (உள்ளுணர்வால்) துயரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, இது  அரிதான கருத்துகளின் விளைவே! (பாண்டவர்களுக்குச் சாதகமான எனது பாகுபாடு இந்தக் காரணத்தினாலேயே உண்டானது). ஓ பாரதா {திருதராஷ்டிரா}, உமது மகன்களும், பாண்டுவின் மகன்களைப் போல எனக்கு அன்பானவர்களே. ஆனால் பின்னவர்கள் {பாண்டவர்கள்} இப்போது துயரத்தில் இருக்கின்றனர். ஆகையால் எனது இதயம் அவர்களையே விரும்புகிறது” என்றான் {விதுரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்த இரு சிறப்புமிக்க சகோதரர்களான விதுரனும், திருதராஷ்டிரனும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கோரும் பேச்சைப் பேசி, தங்களை பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக உணர்ந்தனர்.

அறம் தடுமாறினானா கர்ணன்? – வனபர்வம் பகுதி 7-விதுரன் திரும்பி வந்ததை அறிந்த துரியோதனன் பாண்டவர்களை திரும்ப அழைத்து வரப் போகிறார் மன்னர் என்று துயர் கொள்வது; கர்ணன், துச்சாசனன், சகுனி ஆகியோரை அழைத்து துரியோதனன் ஆலோசனை செய்தல்; பாண்டவர்கள் திரும்பி வந்தால் தக்க ஆலோசனை செய்வோம் என்று சகுனி சொல்வது; பாண்டவர்கள் திரும்பி வந்தால் மறுபடியும் பகடையில் வீழ்த்து என்று கர்ணன் சொல்வது; அவர்கள் திரும்பி வந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று துரியோதனன் சொல்வது; கோபம் கொண்ட கர்ணன், மூவரையும் அழைத்துக் கொண்டு பாண்டவர்களைக் கொல்ல கிளம்பியது. வியாசர் அவர்களைத் தடுத்தது….

வைசம்பாயனர் சொன்னார், “விதுரன் திரும்பி வந்ததையும், மன்னன் {திருதராஷ்டிரன்} அவனைச் சமாதானப் படுத்தியதையும் கேள்விப்பட்ட, திருதராஷ்டிரனின் தீய மனம் கொண்ட மகன் {துரியோதனன்} துயரால் எரிய ஆரம்பித்தான். அறியாமை எனும் மேகத்தால் ஞானம் மறைக்கப்பட்ட அவன் {துரியோதனன்}, சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன் மற்றும் துச்சாசனனை அழைத்து அவர்களிடம், “கற்றவரும், திருதராஷ்டிரரின் ஞானமுள்ள அமைச்சருமான விதுரர் திரும்பிவிட்டார்! பாண்டு மகன்களின் நண்பரான அவர், எப்போதும் அவர்களுக்கு நன்மை செய்வதிலேயே ஈடுபட்டு வருகிறார்.

இந்த விதுரர், அவர்களைத் {பாண்டவர்களைத்} திரும்ப அழைக்கும் வகையில் மன்னனை {திருதராஷ்டிரனை} மயக்குவதில் வெற்றிபெறும் முன்னர், எனக்கு நன்மையைச் செய்ய நினையுங்கள். எனது பாதையில் வேறு எந்தத் தடையும் இல்லை என்றாலும், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} நகருக்குள் திரும்பி வருவதை நான் கண்டால், உணவையும், நீரையும் தவிர்த்து மீண்டும் மெலிந்தவனாகிவிடுவேன். விஷத்தை உட்கொள்வேன் அல்லது தூக்கு மாட்டிக் கொள்வேன், அல்லது நெருப்புக்குள் நுழைவேன் அல்லது எனது ஆயுதங்களைக் கொண்டே என்னை நான் கொன்று கொள்வேன். ஆனால் பாண்டுவின் மகன்கள் செழிப்பாக இருப்பதை என்னால் காண முடியாது’’, {என்றான் துரியோதனன்} .

சகுனி, “ஓ மன்னா, பூமியின் தலைவா, ஏன் இப்படி அறியாமையில் இருக்கிறாய்? ஒரு குறிப்பிட்ட சபதத்தை ஏற்று பாண்டவர்கள் கானகம் சென்றுவிட்டார்கள். ஆகையால் நீ நினைப்பது நடக்காது. அகையால், அவர்கள் உனது தந்தையின் {திருதராஷ்டிரனின்} வார்த்தைகளை ஏற்கமாட்டார்கள்! இருப்பினும், அவர்களின் சபதத்தை மீறி மன்னனின் உத்தரவுக்கிணங்கி அவர்கள் தலைநகருக்குத் திரும்பினாலும், நாம் நடுநிலையாக ஏகாதிபதியின் {திருதராஷ்டிரரின்} உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து இருப்பது போலக் காண்பித்து, பாண்டவர்களை நெருக்கமாகக் கவனித்து, நமது ஆலோசனைகளைத் தொடர்வோம்” என்றான்.

துச்சாசனன், “ஓ பெரும் புத்திகூர்மை கொண்ட மாமா {சகுனி}, நீர் சொல்வது போலத் தான் இது இருக்கிறது! நீர் உச்சரிக்கும் ஞானத்தின் வார்த்தைகள் எனக்குப் புரிகிறது” என்றான்.

கர்ணன், “ஓ துரியோதனா, நாம் அனைவரும் உனது விருப்பத்தைச் சாதிக்கவே முயல்கிறோம். ஓ மன்னா {துரியோதனா}, நான் இப்போது நம்மிடம் ஒருமித்த நிலை நிலவுவதைப் பார்க்கிறேன். ஆசைகளைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள், உறுதி ஏற்றுக் கொண்ட காலத்தைக் கழிக்காமல் திரும்பி வரமாட்டார்கள். இருப்பினும்  தோல்வி மனப்பான்மையில் அவர்கள் திரும்பி வந்தால், அவர்களை மீண்டும் பகடையில் வீழ்த்து” என்றான்.

வைசம்பாயனர் சொன்னார், “கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், மன்னன் துரியோதனன் மகிழ்ச்சியற்ற இதயத்துடன், தனது ஆலோசகர்களிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். இதையெல்லாம் குறித்துக் கொண்ட கர்ணன், தனது அழகான கண்களை விரித்து, கடுமையான கோபத்துடன் தனது உறுப்புகளை {உடலை} அசைத்து, அலட்சியத்துடன் துரியோதனன், துச்சாசனன் மற்றும் சுபலனின் மகனிடம் {சகுனிடம்}, “இளவரசர்களே, எனது கருத்தை அறிந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் மன்னனின் (துரியோதனனின்) நலத்தை விரும்பி, கூப்பிய கரங்களுடன் அவனுக்காகக் காத்திருக்கும் பணியாட்கள். ஆகையால், நாம் அவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும்! 

ஆனால், நம்மால் எப்போதும் அவனது நலத்தைக் காக்க (நாம் திருதராஷ்டிரரை நம்பி இருப்பதால்) உடனே செயல்பட முடியவில்லை. நாம் இப்போது, கவசங்களைத் தரித்து, ஆயுதங்களைத் தாங்கி, நமது ரதங்களில் ஏறி, ஒன்றுசேர்ந்து சென்று, காட்டில் வாழ்ந்துவரும் பாண்டவர்களைக் கொல்லச் செல்வோம். பாண்டவர்களை அமைதிப்படுத்தி, அறியமுடியா பயணத்திற்கு அவர்களை அனுப்பிவைத்தால்தான், நாம் இருவரும், திருதராஷ்டிரரின் மகன்களும் அமைதியை அடைய முடியும். அவர்கள் {பாண்டவர்கள்}, துயரத்தில் இருக்கும்வரை, சோகத்தில் இருக்கும் வரை, உதவியற்று இருக்கும் வரை, அந்தக் காலம் வரை மட்டுமே நாம் அவர்களுக்குச் சமமானவர்கள்! இதுவே என் மனம் {கருத்து}” என்றான்.

தேரோட்டி மகனின் {கர்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் தொடர்ந்து அவனைப் பாராட்டி, “நன்று” என்று உரக்கச் சொல்லி, ஒவ்வொருவரும் தங்கள் ரதங்களில் ஏறி, இரத்தச் சிவப்பான வெற்றிக்காக ஒருங்கிணைந்து, பாண்டுவின் மகன்களைக் கொல்ல விரைந்தனர். தனது ஆன்மப் பார்வையால், அவர்கள் வெளியேறியதை அறிந்த சுத்தமான ஆன்மா கொண்ட கிருஷ்ண துவைபாயனர்{வியாசர்} அவர்களிடம் வந்து, அவர்களைப் பின்வாங்குமாறு உத்தரவிட்டார். அவர்களைத் திருப்பி அனுப்பிய அந்தப் புனிதமானவர் {வியாசர்}, அவனது கண்பார்வையைப் போன்ற புத்திகூர்மை கொண்ட மன்னனின் {திருதராஷ்டிரனின்} முன்பு விரைவாகத் தோன்றினார். வசதியாக அமர்ந்திருந்த மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} அந்தப் புனிதமானவர் {வியாசர்} பேச ஆரம்பித்தார்

வியாசர் கண்டனம் – வனபர்வம் பகுதி 8-திருதராஷ்டிரனைச் சந்தித்த வியாசர், துரியோதனன் செயல்களைக் குறித்து கண்டித்தது.

வியாசர் சொன்னார், “ஓ ஞானமுள்ள திருதராஷ்டிரா, நான் சொல்வதைக் கேள்! அனைத்து கௌரவர்களுக்கும் பெரும் நன்மையானது எது என்பது குறித்து நான் உனக்குச் சொல்கிறேன். ஓ பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்டவனே, துரியோதனனும் மற்றவர்களும் பாண்டவர்களை நேர்மையற்ற முறையில் (பகடையில்) வீழ்த்தி காட்டுக்கு அனுப்பியது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.

ஓ பாரதா {திருதராஷ்டிரா}, பதிமூன்று {13} வருடங்கள் முடிந்ததும், அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் துன்பங்களையெல்லாம் நினைவு கூர்ந்து, கடும் விஷம் போன்றதும் மரணத்தைத் தருவதுமான ஆயுதங்களை மழையென கௌரவர்கள் மீது பொழிவார்கள். இதயத்தில் தீமை கொண்ட உனது பாவகர மைந்தன் {துரியோதனன்} எப்போதும் சினம் கொண்டு, ஏன் பாண்டு மகன்களின் நாட்டை அடைய அவர்களைக் கொல்ல முயல்கிறான்? அந்த முட்டாள் {துரியோதனன்} தடுக்கப்பட்டிருக்கட்டும்; உனது மகன் {துரியோதனன்} அமைதியாக இருக்கட்டும். நாடு கடந்து இருக்கும் பாண்டவர்களைக் கொல்ல முனைந்தால், அவன் {துரியோதனன்} தனது உயிரைத் தான் இழப்பான்.

நீ ஞானமுள்ள விதுரனைப் போல, பீஷ்மனைப் போல, எங்களைப் போல, கிருபனைப் போல, துரோணனைப் போல நேர்மையுடையவன். ஓ பெரும் ஞானம் கொண்டவனே, உனது பிள்ளைகளுக்குள் பாகுபாடு பார்ப்பது தகாது. அது பாவகரமானது. கண்டிக்கத்தக்கது! ஆகையால், ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீ இதுபோன்ற காரியங்களில் இருந்து விலகியிரு!

ஓ பாரதா {திருதராஷ்டிரா}, நீ தலையிடவில்லை என்றால், பாண்டவர்கள் மீது துரியோதனன் கொண்டிருக்கும் பொறாமை, பெரும் நாசத்தையே விளைவிக்கும். அல்லது ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, உனது தீய மகன் {துரியோதனன்}, கானகத்திற்குச் சென்று பாண்டுவின் மகன்களுடன் வாழட்டும். அப்படிச் செய்தால், இப்படி ஏற்படும் தொடர்பினால், பாண்டவர்களுக்கு துரியோதனன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படலாம். அப்படி நடந்தால் நற்பேறு உனதாகும். (இருப்பினும், இப்படி நடக்காது). ஒருவனின் பிறவிக்குணம், மரணம் வரை அவனைவிட்டு நீங்காது என்று கேள்விப்படுகிறோம். ஆனால் {இவ்விஷயத்தில்} பீஷ்மன், துரோணன், விதுரன் ஆகியோர் என்ன நினைக்கிறார்கள்? நீ என்ன நினைக்கிறாய்? காலம் இருக்கும்போதே நன்மைக்கான காரியங்களைச் செய்துவிட வேண்டும். இல்லையென்றால், உனது காரியங்களுக்கு தீர்வு கிடைக்காது” என்றார் {வியாசர்}.

பலவீனனிடம் அதிக பாசம் கொள்! – வனபர்வம் பகுதி 9-வியாசர் திருதராஷ்டிரனுக்கு சுரபியின் கதையைச் சொல்லி, துரியோதனனைப் பாண்டவர்களுடன் சமாதானமாக இருக்கச் சொன்னது.

திருதராஷ்டிரன் சொன்னான், “ஓ புனிதமானவரே {வியாசரே}, நான் சூதாட்டத்தை விரும்பவில்லை. ஆனால், ஓ முனிவரே {வியாசரே}, நான் விதியால் ஈர்க்கப்பட்டு சம்மதித்தேன் என்று நினைக்கிறேன். பீஷ்மரோ, துரோணரோ, விதுரனோ, காந்தாரியோ இந்தப் பகடையாட்டத்தை விரும்பவில்லை. சந்தேகமில்லாமல், அறியாமையால் {முட்டாள்த்தனத்தால்} இவை நடந்துவிட்டன. ஓ நோன்புகள் நோற்பதால் மகிழ்பவரே, ஓ சிறந்தவரே, அனைத்தையும் அறிந்தும், பிள்ளை பாசத்தால், எனது புத்திகெட்ட மகனான துரியோதனனை என்னால் கைவிட முடியவில்லை!” என்றான்.

வியாசர், “ஓ மன்னா {திருதராஷ்டிரா}, ஓ விசித்திரவீரியனின் மகனே, நீ சொல்வது உண்மைதான்! அனைத்துப் பொருட்களைவிடவும் மகனே சிறந்தவன் என்பதையும், மகனைக் காட்டிலும் மேன்மையானது எதுவும் இல்லை என்பதையும் நாம் அறிவோம். சுரபியின் {காமதேனுவின்} கண்ணீர் போதனையால், மதிப்பு நிறைந்த பொருட்களைவிட மகனே மேன்மையானவன் என்பதை இந்திரன் அறிய வந்தான். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, இது தொடர்பாக அற்புதமானதும் கதைகளில் சிறந்ததுமான, இந்திரனுக்கும் சுரபிக்கும் நடந்த உரையாடலை இப்போது சொல்கிறேன். பழங்காலத்தில் பசுக்களின் தாயான சுரபி தேவ லோகத்தில் அழுது கொண்டிருந்தாள். ஓ குழந்தாய் {திருதராஷ்டிரா}, இந்திரன் அவளிடம் {சுரபியிடம்} இரக்கம் கொண்டு, அவளிடம், “ஓ மங்களகரமானவளே, நீ ஏன் அழுகிறாய்? தேவர்கள் நன்றாக இருக்கிறார்களா? மனிதர்களின் உலகிலோ, நாகங்களின் உலகிலோ ஏதும் தீயூழ் {துரதிர்ஷ்டம்} விழுந்ததா?” என்று கேட்டான். அதற்கு சுரபி, “உனக்கு {தேவர்களுக்கு} எந்தத் தீங்கையும் நான் காணவில்லை. ஆனால் எனது மகன் நிமித்தமாக துயரத்தில் இருக்கிறேன். ஓ கௌசிகா {இந்திரா}, அதனால்தான் அழுகிறேன். ஓ தேவர்கள் தலைவனே {இந்திரனே}, அதோ அங்கிருக்கிற கொடுமைக்கார உழவன், மரக்குச்சியால் என் பலவீனமான மகனை நையப்புடைக்கிறான். மேலும் (எடை அதிகமான) கலப்பையால் அவனைக் கொடுமைப்படுத்துகிறான். அதன் காரணமாக எனது பிள்ளை வேதனையால் துடித்து, தரையில் விழுந்து மரணத் தருவாயில் இருக்கிறான். இந்தக் காட்சியால், ஓ தேவர்கள் தலைவனே, நான் பாசத்தால் துடிக்கிறேன். அந்த ஜோடியில் வலுத்தவன் அதிக சுமையைத் தாங்கிக் கொள்கிறான். ஓ வாசவா {இந்திரா}, இருப்பினும் மற்றவன் மெலிந்து பலவீனமாகி, உடலில் உள்ள நரம்புகள் எல்லாம் தெரியும் வண்ணம் இருக்கிறான். அவன் தனது சுமையைச் சிரமத்துடன் சுமக்கிறான். அவனுக்காகவே நான் வருந்துகிறேன். ஓ வாசவா, சாட்டையடியாலும் மிகவும் துன்புறுத்தப்பட்டு சுமையைச் சுமக்க முடியாமல் அவன் இருப்பதைப் பார். அவனுக்காகவே துயரத்தால் ஆட்கொள்ளப்பட்டு, இதய பாரம் தாங்காமல், கண்களில் நீர் கொட்ட பாசத்தால் அழுகிறேன்” என்றாள் {பசுக்களின் தாயான சுரபி எனும் காமதேனு}.

அதற்கு சக்ரன் {இந்திரன்}, “ஓ அழகானவளே, ஆயிரக்கணக்கான உனது மகன்கள் (தினமும்) ஒடுக்கப்படுகின்றனர். இருப்பினும் துன்பப்படும் இவன் ஒருவனுக்காக ஏன் வருந்துகிறாய்?” என்று கேட்டான். சுரபி, “எனக்கு ஆயிரம் வாரிசுகள் இருந்தாலும், எனது பாசம் அனைவரிடமும் சமமாகவே இருக்கிறது! இருப்பினும், ஓ சக்ரா {இந்திரா}, பலவீனமாக அப்பாவியாக இருப்பவன் மேல் அதிக பாசத்தை உணர்கிறேன்” என்றாள்.

வியாசர் தொடர்ந்தார், “சுரபியிடம் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்திரன் மிகவும் ஆச்சரியப்பட்டான். ஓ குரு குலத்தவனே {திருதராஷ்டிரனே}, அவன் {இந்திரன்}, மகனே ஒருவனின் உயிரைவிட மேலானவன் என்று உணர்ந்து சமாதானமானான். பகனைத் தண்டித்த அந்த சிறப்புமிக்கவன், அடர்த்தியான மழையைப் பொழிந்து, அந்த உழவனின் வேலைக்கு தடையை விளைவித்தான். சுரபி சொன்னது போலவே, ஓ மன்னா {திருதராஷ்டிரா} உனது மகன்களிடம் சமமான பாசம் இருக்க வேண்டும். அந்தப் பாசம் பலவீனமானவர்கள் மீது அதிகம் இருக்கட்டும். எனது மகன் பாண்டு எனக்கு எப்படியோ அதேபோலத்தான் எனக்கு நீ. ஓ மகனே {திருதராஷ்டிரா}, அதே போலத்தான் ஆழமான ஞானம் கொண்ட விதுரனும். பாசத்தாலேயே இவற்றையெல்லாம் உன்னிடம் சொல்கிறேன்! ஓ பாரதா, நீ நூறு {100} மகன்களைப் பெற்றிருக்கிறாய். ஆனால் பாண்டுவுக்கோ ஐந்துதான். மேலும் அவர்கள் மோசமான நிலையில் இருக்கிறார்கள். தங்கள் நாட்களைக் கவலையுடன் கடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் உயிரை எப்படிக் காத்துக் கொள்வார்கள் என்றும், எப்படி விருத்தியடைவார்கள் என்றும் பிருதையின் {குந்தியின்} மகன்களைக் குறித்த நினைவுகள் எனது ஆன்மாவை கலக்குகின்றன! ஓ பூமியின் மன்னா {திருதராஷ்டிரா}, அனைத்து கௌரவர்களும் வாழ வேண்டும் என்று நீ விரும்பினால், உனது மகன் துரியோதனனை பாண்டவர்களுடன் சமாதானமாக இருக்கச் சொல்” என்றார் {வியாசர்}

துரியோதனன் பெற்ற சாபம்! – வனபர்வம் பகுதி 10-துரியோதனனுக்கு உபதேசம் செய்யுமாறு திருதராஷ்டிரன் வியாசரிடம் கோரல்; வியாசர் மைத்ரேயர் அதைச் செய்வார் என்று உரைத்தல்; மைத்ரேயர் துரியோதனனுக்கு அறிவுரை கூறல்; தனது ஆலோசனையைக் கேட்காத துரியோதனனை மைத்ரேயர் சபித்தல்;

திருதராஷ்டிரன் சொன்னான், “ஓ ஆழ்ந்த ஞானம் கொண்ட முனிவரே {வியாசரே}, நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது! இந்த மன்னர்கள் அறிவதைப் போல நானும் இதை அறிவேன்! குருக்களுக்கு நன்மையானவற்றை நீர் எனக்குச் சுட்டிக் காட்டியபடியே, ஓ முனிவரே, விதுரன், பீஷ்மர், துரோணர் ஆகியோரும் சுட்டிக் காட்டினர். நான் உம்முடைய உதவிக்குத் தகுதி வாய்ந்தவனானால், உமக்கு குருக்களிடம் உங்களுக்கு கருணை இருக்குமானால், எனது தீய மகன் துரியோதனனுக்கு உபதேசம் செய்யும்”

வியாசர், “ஓ மன்னா {திருதராஷ்டிரா}, பாண்டவச் சகோதரர்களைக் கண்ட பிறகு, நம்மைக் காண விரும்பி புனிதமான முனிவரான மைத்ரேயர் இங்கு வருகிறார். ஓ மன்னா, அந்தப் பலம் பொருந்திய முனிவர் {மைத்ரேயர்}, உனது குலத்தின் நன்மை கருதி உனது மகனுக்கு உபதேசிப்பார். மேலும், ஓ கௌரவனே {திருதராஷ்டிரனே}, அவர் அறிவுறுத்துவதை சந்தேகத்திற்கிடமில்லாமல் பின்பற்ற வேண்டும். அவர் பரிந்துரைப்பது செய்யப்படவில்லையானால், அந்த முனிவர் {மைத்ரேயர்} உனது மகனைக் கோபத்தால் சபிப்பார்” என்றார் {வியாசர்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைச் சொல்லிவிட்டு, வியாசர் புறப்பட்டார், பிறகு மைத்ரேயர் அங்கு வந்தார். மன்னன் {திருதராஷ்டிரன்} தனது மகனுடன் சேர்ந்து அந்த முனிவர்களின் தலைவரை {மைத்ரேயரை} மரியாதையுடன் வரவேற்று, ஆர்கியா கொடுத்து மற்ற சடங்குகளைச் செய்தான். பிறகு அம்பிகையின் மகனான மன்னன் திருதராஷ்டிரன் மரியாதை நிறைந்த வார்த்தைகளுடன் அந்த முனிவரிடம் {மைத்ரேயரிடம்}, “ஓ புனிதமானவரே, குருஜாங்காலத்திலிருந்து உங்களது பயணம் இனிமையாக அமைந்ததா? அந்த வீரர்களான ஐந்து பாண்டவர்களும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? அந்தக் குரு குலத்தின் காளைகள் குறித்த காலம் வரை வெளியே தங்க கருதியிருக்கிறார்களா? கௌரவர்களுக்கிடையே சகோதரப் பாசம் எப்போதும் பலவீனமடையுமா?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

மைத்ரேயர், “பல இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செய்து, நான் குருஜாங்காலத்தை அடைந்தேன். அங்கே நான் நீதிமானான யுதிஷ்டிரனை எதிர்பாராத விதமாக காம்யக வனத்தில் சந்தித்தேன். ஓ மேன்மையானவனே {திருதராஷ்டிரனே}, அங்கே மான் தோல் உடுத்தி, ஜடாமுடி தரித்து, ஆசிரமத்தில் தங்கியிருக்கும் உயர் ஆன்ம யுதிஷ்டிரனைக் காண பல முனிவர்கள் வந்திருந்தனர். ஓ மன்னர் மன்னா {திருதராஷ்டிரா}, அங்கேயே நான் உனது மகன்களின் பெரும்பிழையையும், பகடையாட்டத்தினால் அவர்களைத் தாக்கியிருக்கும் பேரிடரையும் குறித்துக் கேள்விப்பட்டேன். ஆகையால், அதன் காரணமாகவும் கௌரவர்களின் நன்மைக்காகவுமே நான் உன்னிடம் வந்தேன். ஓ மேன்மையானவனே, உன் மீது எனக்கு அதிக அன்பிருக்கிறது. நான் உன்னிடம் மகிழ்ச்சி கொள்கிறேன். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீயும் பீஷ்மரும் இருக்கும் போது {வாழ்ந்து கொண்டிருக்கும் போது} எக்காரணம் கொண்டும் உனது மகன்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீயே காளைகள் கட்டி வைக்கப்படும் நடு முளை போன்றவன். தண்டிக்கவும் வெகுமதி கொடுக்கவும் தகுதி உடையவன். எல்லோரையும் தாக்கப்போகும் பெருந்தீங்கை இன்னும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறாய். ஓ குரு குல வழி வந்தவனே, சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட பாவிகளின் செயல்களைப் போல உனது சபையில் நடந்த தவறுகளுக்காக, தவசிகள் உன்னை நன்றாக நினைக்கவில்லை.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பின்னர் சீற்றம் நிறைந்த இளவரசன் துரியோதனனிடம் திரும்பிய சிறப்பு மிகுந்த முனிவர் மைத்ரேயர், மெல்லிய வார்த்தைகளில், “ஓ பலம்வாய்ந்த கரம் கொண்ட துரியோதனா, ஓ சொல்திறம் மிக்க மனிதர்களில் சிறந்தவனே, ஓ சிறப்பானவனே, என் {உன்} நன்மைக்காக நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவி கொடு { give heed unto the words I utter for my good}. ஓ மன்னா {துரியோதனா}, பாண்டவர்களிடம் சண்டையிட முயலாதே! ஓ மனிதர்களில் காளையே, பாண்டவர்களைப் போல, குருக்களைப் போல, உலகத்தைப் போல உனது நன்மையை நீயே அமைத்துக் கொள். அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} அனைவரும் போரில் பெரும் பராக்கிரமம் கொண்ட வீரர்கள். பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவர்கள். அவர்கள் உடல் இடியைப் போன்று கடினமானது. தங்கள் வாக்கின் படி நடந்து கொண்டு, தங்கள் ஆண்மையின் மீது கர்வத்தோடு {பெருமையோடு} இருக்கின்றனர். அவர்கள், ஹிடிம்பனையும் கிர்மீரனையும் தலைமையாகக் கொண்ட நினைத்த உரு எடுக்கக்கூடிய, தேவர்களுக்கு எதிரிகளான கடும் ராட்சசர்களைக் கொன்றிருக்கின்றனர். அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {பாண்டவர்கள்} இங்கிருந்து சென்ற போது, அந்தக் கடும் ஆன்மா கொண்ட ராட்சசன், இரவு நேரத்தில் அவர்களுடைய பாதையைப் பெரும் மலைபோல இருந்து தடுத்தான். சிறு மானைப் புலி கொல்வதைப் போல, போரிடுவதில் மகிழ்ச்சி கொள்பவனும், பலம் பொருந்தியவர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்த மிருகத்தைக் கொன்றான். ஓ மன்னா, பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், பெரும் பலம்பொருந்திய வீரனுமான ஜராசந்தனை, ஒரு போட்டியின் போது, பீமன் எப்படிக் கொன்றான் என்பதையும் கருதிப்பார். வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, துருபதனின் மகன்களையும் மைத்துனர்களாகக் கொண்டவர்களைப் போர்க்களத்தில் சந்திக்க பலவீன நிலை மற்றும் மரணத்தை வேண்டாத எவன்தான் துணிவான்? ஓ பாரத குலத்தின் காளையே {துரியோதனா}, உனக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சமாதானம் ஏற்படட்டும்! எனது ஆலோசனைகளைப் பின்பற்று. கோபத்திடம் நீ சரணடையாதே!

“ஓ மன்னா {ஜனமேஜயா}, மைத்ரேயரால் இப்படி எச்சரிக்கப்பட்ட துரியோதனன், யானையின் துதிக்கையைப் போல இருந்த தனது தொடைகளைத் தட்டி, சிரித்துக் கொண்டே தரையைத் தனது காலால் தேய்த்து, ஒரு வார்த்தையும் பேசாமல், தலையைத் தொங்கப்போட்டவாறு நின்றான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, தான் சொன்னதைக் கேட்கவிருப்பமற்ற, பூமியை தேய்த்துக் கொண்ட துரியோதனனைக் கண்ட மைத்ரேயர் கோபம் கொண்டார். விதியால் உந்தப்பட முனிவர்களில் சிறந்த மைத்ரேயர் மிகுந்த சீற்றம் கொண்டு, துரியோதனனைச் சபிக்க தனது மனதில் எண்ணம் கொண்டார். பிறகு, மைத்ரேயர் கண்கள் கோபத்தால் சிவக்க, நீரைத் தொட்டு, திருதராஷ்டிரனின் தீய மனம் கொண்ட மகனிடம் {துரியோதனனிடம்}, “நான் சொல்வதைச் செய்ய முடியாது என்று குறிப்புகளால் உணர்த்திய இழி செயலால், ஏற்படுபடப்போகும் கனியின் பலனை விரைவாக அறுத்தெடுப்பாய். உன்னால் இழைக்கப்பட்ட பெரும் பிழைகளால் உண்டாகும் பெரும் போரில், பலம் பொருந்திய பீமன் உனது தொடையை தனது கதையின் வீச்சால் நொறுக்குவான்” என்று சபித்தார்.

அந்த முனிவர் {மைத்ரேயர்} இப்படிப் பேசி முடித்ததும், மன்னன் திருதராஷ்டிரன், அவர் சொன்னது நடக்காமல் இருக்க, அந்த முனிவரைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தான். ஆனால் மைத்ரேயர், “ஓ மன்னா, உனது மகன் பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டால், ஓ குழந்தாய், இந்த எனது சாபம், எந்த விளைவையும் ஏற்படுத்தாது, செய்யவில்லை என்றால் நான் சொன்னது நடந்தே தீரும்” என்றார்.

வைசம்பாயனர் சொன்னார், “பீமனின் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பிய மன்னர்களில் முதன்மையான துரியோதனின் தந்தை {திருதராஷ்டிரன்}, மைத்ரேயரிடம், “கிர்மீரன் எப்படி பீமனால் கொல்லப்பட்டான்?” என்று கேட்டான்.

மைத்ரேயர், “ஓ மன்னா {திருதராஷ்டிரா}, எனது வார்த்தைகளை மதிக்காத உனது மகனால் {துரியோதனனால்}, நான் உன்னிடம் மறுபடியும் பேச மாட்டேன். நான் சென்றதும், விதுரன் உனக்கு யாவையும் விளக்குவான்!” என்றார். இவற்றைச் சொன்ன மைத்ரேயர், தான் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றார். (பீமனின் கைகளால் ஏற்பட்ட) கிர்மீரனின் மரணச் செய்தியைக் கேட்ட துரியோதனன் அமைதியின்றி வெளியே சென்றான்.

ஆரண்யக பர்வம் முற்றிற்று

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading