ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ சபா பர்வம்-ஸ்ரீ  லோகபால சபாகயானா பர்வம்–

நாரதரின் விசாரணை! – சபாபர்வம் பகுதி 5-(லோகபால சபாகயானா பர்வம் – 01)யுதிஷ்டிரனின் சபைக்கு வந்த நாரதர்; யுதிஷ்டிரன் தன் கடமைகளைச் சரியாகச் செய்கிறானா என்பதை அவனிடம் விசாரித்தது; நாரத நீதி

வைசம்பாயனர் சொன்னார், “சிறப்பு மிகுந்த பாண்டவர்கள், அந்தச் சபையில் கந்தர்வத் தலைவர்களுடன் அமர்ந்திருந்த போது, ஓ பாரதா, வேதங்களையும் உபநிஷதங்களையும் அறிந்தவரும் – தேவர்களால் வழிபடப்படுபவரும், வரலாறுகளையும் புராணங்களையும், பழங்கால கல்பங்களையும்[1] (யுகச்சக்கரங்கள்), நியாய சாத்திரத்தையும் (தர்க்கம் – பேச்சுவார்த்தை), உச்சரிப்பு, இலக்கணம், யாப்பிலக்கிணம், அடிப்படைச் சொற்களின் விளக்கம், அறச்சடங்குகளின் விளக்கம், வானசாத்திரங்கள் ஆகியவை அடங்கிய ஆறு அங்கங்களின் முழு அறிவையும் அறிந்த தேவமுனிவரான நாரதர் அந்தக் கூட்டத்திற்கு வந்தார்.(1,2)

(கல்பங்கள் (யுகச்சக்கரங்கள்),12 மாத-ம் = 1 வருடம் ;10,80,000 வருடங்கள் = 1 யுகம் ;4 யுகங்கள் = 43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்  (சத்ய யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம்)71 சதுர் யுகம் = 30,67,20,000 சூரிய வருடங்கள் = 1 மன்வந்திரம்.இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன. (ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள்.)ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு சத்ய யுக காலம் ‘சந்தி’ என்னும் இடைப்பட்ட 17,28,000 வருட காலத்தைக் கொண்டுள்ளது. எனவே 1 மன்வந்திரம் + 1 சாந்தி = 30,67,20,000 சூரிய வருடங்கள்14 மன்வந்திரம் + 14 சந்தி = 4,31,82,72,000 சூரிய வருடங்கள்.432,00,00,000 சூரிய வருடங்கள் = 1 கல்பம்.1 கல்பம் + 1 கல்ப சாந்தி = 4,32,00,00,000 சூரிய வருடங்கள்.1 கல்பம் அல்லது 432,00,00,000 வருடங்கள் = பிரம்மனின் ஒரு பகல் பொழுது.அதே கல்ப அளவு பிரம்ம தேவனின் ஒரு இரவு ஆகும்.பிரம்மதேவனின் ஒரு நாள் என்பது = 1 பகல் கல்பம் + 1 இரவு கல்பம் = ஆக 864,00,00,000 வருடங்கள்360 நாட்கள் (360 x 864,00,00,000 வருடங்கள்) கொண்டது பிரம்மனின் ஒரு வருடம்.அப்படிப்பட்ட 100 வருடங்கள் கொண்டது பிரம்மனின் ஆயுள்.அதாவது, மேற்சொன்ன 864,00,00,000 வருடங்களை {864 கோடி வருடங்கள்} ஒரு நாளின் காலமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் 100 வருடங்கள் எவ்வளவோ அவ்வளவே நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு என்பது பாரதப் பாரம்பரிய நூல்களிலும், ஜோதிட சித்தாந்தங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.இது சாத்தியம் என்று விண்வெளி அறிவியலும் சொல்கிறது. பிரம்மனின் கல்பம், அதாவது ஒரு பகல் அல்லது ஒரு இரவுப் பொழுது நேரத்தில், நாம் இருக்கும் சூரிய மண்டலம், நமது கலக்சியின் மையத்தை 20 முறை சுற்றி வந்து விடுகிறது என்று அறிவியல் காட்டுகிறது. இந்தக் காலக் கணக்கு, பிரபஞ்ச அளவில் உள்ள காலத்தின் கணக்கு.(சூரியனின் மொத்த ஆயுள் ஏறத்தாழ 900 கோடி ஆண்டுகள். நம்முடைய சூரியன் ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள், வாழ்ந்தாகிவிட்டது. இன்னும் ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் வாழும் என அறிவியலாள்ர்கள் கணித்துள்ளனர்.)சாஸ்திர கணிப்பு படி பிரம்மனின் ஒரு நாள் என்பது 864 கோடி ஆண்டுகள். இன்றைய அறிவியல் அறிஞர்கள் கணிப்பு படி சூரியனின் ஆயுள் 900 கோடி ஆண்டுகள்.)

நாரதர், கிடைத்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு ஊகித்து அறியும் திறமையையும் பெற்றவராக இருந்தார். ஐந்து முன்மொழிகள் கொண்ட நேரியல் வாத முறையின் சரியான மற்றும் தவறான பகுதிகளைக் குறித்து தீர்மானிக்கத் தகுதிவாய்ந்தவராகவும் அவர் இருந்தார். அவர் {நாரதர்}, பெரும் ஆன்மா கொண்டு, மேலும் கீழும், சுற்றியும் இருக்கும் இந்த மொத்த பிரபஞ்சத்தையும் கண்டு, அறம் {தர்மம்}, பொருள் {செல்வம் (அர்த்தம்)}, இன்பம், வீடு {முக்தி} ஆகிய கட்டமைப்புகளில் உறுதியான தீர்மானங்களைக் கொண்டிருந்ததால், பிரகஸ்பதிக்கே தொடர்ந்து பதிலளிக்கக் கூடிய திறன் பெற்றிருந்தார்.(3-5)

தேவர்களையும் அசுரர்களையும் அடக்க அவர்களுக்குள் சச்சரவை ஏற்படுத்த விரும்பும் அவர் {நாரதர்}, சாங்கியம் மற்றும் யோக வகை தத்துவங்கள் இரண்டிலும் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருந்தார்.(6) போர் மற்றும் ஒப்பந்த அறிவியலையும், தனது உற்று அறியும் திறனால் மட்டும் அல்லாமல் ஒப்பந்தம், போர், போர்ப்பயணம், எதிரிக்கு எதிரானவைகளைப் பராமரித்தல், தந்திரங்கள், மறைந்திருத்தல் ஆகிய ஆறு அறிவியல்களைக் கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வருபவராகவும்,(7) அனைத்துக் கல்வியிலும் நிபுணத்துவம் வாய்ந்தவராகவும், போர், இசை ஆகியவற்றின் பிரியராகவும், எந்த அறிவியலாலும் எதன் மூலமாகவும், எந்த செயலின் மூலமாகவும் முறியடிக்க முடியாதவராகவும், கணக்கற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரராகவும் அவர் {நாரதர்} இருந்தார்.

பல்வேறு உலகங்களில்[2] உலவும் அந்த முனிவர் {நாரதர்} {யுதிஷ்டிரனின்} அந்த சபைக்கு வந்தார்.(8,9) அளவிட முடியாத பிரகாசமும் பெரும் சக்தியும் கொண்ட அந்த தெய்வீக முனிவர், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பாரிஜாதர், புத்திசாலியான ரைவதர், சௌமியர் மற்றும் சுமுகர் ஆகியோருடன் அங்கே இருந்தார்.(10) மனோவேகம் கொண்ட அந்த முனிவர் {நாரதர்} பாண்டவர்களைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தார். அங்கே வந்த அந்த பிராமணர் யுதிஷ்டிரனுக்கு தனது மரியாதையையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, அவன் {யுதிஷ்டிரன்} வெற்றி அடையும்படி வாழ்த்தினார்.(11)

கல்விமானான அம்முனிவர் அங்கே வந்ததைக் கண்டதும், கடமைகளின் விதிகளை அறிந்த பாண்டவர்களில் மூத்தவன் {யுதிஷ்டிரன்}, உடனே தனது தம்பிகளுடன் எழுந்தான்.(12) தாழ்மையுடன் பணிந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரனை}, மகிழ்ச்சியுடன் அந்த முனிவரை {நாரதரை} வணங்கி வழிபட்டு அவருக்கு உரிய இருக்கையை அளித்தான்.(13) அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அவருக்கு பசுவும், இயல்பாகக் கொடுக்கப்படும் காணிக்கையான தேனுடன் கலந்த அர்க்கியத்தையும், மதுபர்க்கத்தையும் கொடுத்தான். அனைத்து கடமைகளையும் அறிந்த அந்த ஏகாதிபதி அந்த முனிவரை ரத்தினங்களாலும் நகைகளாலும் முழு இதயத்துடன் வழிபட்டான்.(14) யுதிஷ்டிரனிடம் இருந்து உரிய முறையில் வழிபாட்டை ஏற்ற அந்த முனிவர் பெரும் திருப்தி கொண்டார். இப்படி பாண்டவர்களால் வழிபடப்பட்ட, வேதங்களில் முழு நிபுணத்துவம் கொண்ட அந்தப் பெரும் முனிவரான நாரதர், யுதிஷ்டிரனிடம் கீழ்க்கண்ட வார்த்தைகளில் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு குறித்து விசாரித்தார்.(15)

நாரதர், “நீ ஈட்டும் செல்வம் உரிய பொருள்களுக்காகச் செலவிடப்படுகிறதா? உனது மனம் அறத்தில் இன்பம் காண்கிறதா? நீ வாழ்க்கையின் இன்பங்களை அனுபவித்து வருகிறாயா? உனது மனம் அதன் {இன்பத்தின்} கனத்தால் மூழ்காமல் இருக்கிறதா?(16) ஓ மனிதர்களின் தலைவனே {யுதிஷ்டிரனே}, மூன்று வகையான (நல்ல, அலட்சிய, தீய வகைகளாக இருக்கும்) உனது குடிகளிடம் உனது மூதாதையர்கள் பயின்றதைப் போல அறம் மற்றும் பொருளுக்கு இசைவான உன்னத நடத்தை {ஒழுக்கத்தைக்} கொண்டிருக்கிறாயா?(17)

பொருளுக்காக அறத்துக்கும், அல்லது எளிதாக மயக்கும் இன்பத்துக்காக, அறத்துக்கும், பொருளுக்கும் தீங்கு செய்யாது இருக்கிறாயா?(18) ஓ அனைவரின் நலனின் அர்ப்பணிப்புடன் இருக்கும் அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, குறித்த நேரத்தில் அனைத்தையும் செய்ய அறிந்தவனான நீ, அறம் {அனைத்திலும் நல்லவனாக இருக்க முயற்சித்தல்}, பொருள் {சம்பாதிப்பது}, இன்பம் {மகிழ்ச்சியாக இருப்பது}, வீடு {முக்தி அடைய முயற்சி செய்தல்} ஆகியவற்றுக்கு நீதியுடன் சரியாக நேரத்தைப் பிரித்து செலவிடுகிறாயா?(19) ஓ பாவமற்றவனே, மன்னர்களின் ஆறு பண்புக்கூறுகளைக் கொண்டு (பேச்சில் புத்திசாலித்தனம், வழி செய்ய தயாராக இருத்தல், எதிரியைக் கையாள்வதில் புத்திசாலித்தனத்துடன் இருத்தல், நினைவுத் திறனுடன் இருத்தல், அறங்களையும், அரசியலையும் அறிந்து வைத்திருத்தல் ஆகியனவற்றைக் கொண்டு) ஏழு {7} வழிமுறைகளைக் (வேற்றுமை விதைத்தல், தண்டனை அளித்தல், சமரசம், பரிசுகள், மந்திரங்கள், மருத்துவம் மற்றும் மாயம் ஆகியவற்றைக்) கவனிக்கிறாயா? நீ உனது சொந்த பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்த பிறகு எதிரிகளின் பதினான்கு உடைமைகளைப்[3] பரிசோதிக்கிறாயா?(20)(அவையாவன: நாடு, கோட்டைகள், ரதங்கள், யானைகள், குதிரைப்படை, காலாட்படை, மாநிலத்தின் {நாட்டின்} முதன்மை அதிகாரிகள், உயர்குடி பெண்களின் அந்தப்புரம், உணவு வழங்கல், இராணுவம் மற்றும் பொருள் வரவுக்கான கணக்கீடுகள், நடைமுறையில் உள்ள சமயக் கட்டுப்பாடுகள் {நடைமுறையில் உள்ள மத ஒப்பந்தங்கள்}, மாநில {நாட்டின் கணக்கு வழக்குகள்} கணக்குகள், வருவாய், மதுக்கடைகள், இரகசிய எதிரிகள் ஆகும்)ஓ அறம்சார்ந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உனது எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, உனது நாட்டிலும் எதிரியின் நாட்டிலும் எட்டு தொழில்களைச் (விவசாயம், வணிகம் போன்றவை)[4] சரியாக ஆய்வு செய்து கவனிக்கிறாயா?(21)

ஓ பாரத குலத்தின் காளையே, உனது நாட்டின் ஏழு முக்கிய அதிகாரிகள் (கோட்டையின் ஆளுநர், படைகளின் தளபதி, தலைமை நீதிபதி, உள்துறை தளபதி, தலைமைப் பூசாரி, தலைமை மருத்துவர், தலைமை சோதிடர் ஆகியோர்) யாரும் உனது எதிரியின் செல்வாக்கின் காரணமாக இறக்கவில்லை என நம்புகிறேன். மேலும் அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} தாங்கள் ஈட்டிய செல்வத்தால் சோம்பேறிகள் ஆகவில்லை எனவும் நம்புகிறேன். அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்த நடக்கிறார்கள் என்றும் நம்புகிறேன்.(22) மாறுவேடத்தில் இருக்கும் உனது நம்பிக்கைக்குரிய ஒற்றர்களோ, நீயோ, அல்லது உனது அமைச்சர்களோ உனது ஆலோசனைகளை பகிரங்கப்படுத்துவதில்லை என நான் நம்புகிறேன்.(23) உனது நண்பர்கள், எதிரிகள், அந்நியர்கள் ஆகியோர் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறாயா? அமைதியையும் போரையும் சரியான நேரங்களில் செய்கிறாயா?(24) அந்நியர்களிடமும், உன்னிடம் நடுநிலையுடன் நடந்து கொள்பவர்களிடமும் நீ நடு நிலைமையுடன் நடந்து கொள்கிறாயா? ஓ வீரனே {யுதிஷ்டிரனே}, உனது அமைச்சர்களை, வயதில் மூத்தவர்களாக, கண்டிக்கும் குணம் கொண்டவர்களாக, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக் கூடாது என்பதைப் புரிந்து கொள்பவர்களாக, பிறப்பாலும் இரத்தத்தாலும் சுத்தமானவர்களாக, உன்னிடம் அர்ப்பணிப்புள்ளவர்களாக, தகுதியில் உன்னைப் போலவே இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறாயா? ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அரசர்களின் வெற்றிகளுக்கு நல்ல ஆலோசனைகளே {அமைச்சர்களே} காரணம்.(25,26)

ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, உனது நாடு, சாத்திரங்களைக் கற்றவர்களும், தங்கள் ஆலோசனைகளை ரகசியமாக வைத்துக் கொள்பவர்களுமான அமைச்சர்களால் காக்கப்படுகிறதா? எதிரிகள் அதை பலவீனப்படுத்தாமல் இருக்கின்றார்களா?(27) நீ உறக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கிறாயா? சரியான நேரத்தில் விழிக்கிறாயா? லாபம் விளைவிக்கும் தேடுதல்களை, இரவின் கடைசி மணிநேரங்களில் நினைத்து, அடுத்த நாள் நீ என்ன செய்ய வேண்டும் என்றும் என்ன செய்யக்கூடாதென்றும் தீர்மானிக்கிறாயா?(28)

எதையும் தனிமையாக நீயே தீர்மானிக்காமலும், அதே நேரத்தில் பல பேரிடம் ஆலோசனை கேட்காமலும் இருக்கிறாயா? நீ செய்ய நினைக்கும் ஆலோசனைகளை உனது நாடு அறியாமல் இருக்கிறதா?(29) சிறிய சாதனையும், பெரிய பயனும் உள்ள காரியங்களைத் தேர்ந்தெடுத்து அப்படிப்பட்டவற்றை இடையூறு வராதவாறு விரைவாகச் செய்கிறாயா?(30) உழவர்களை உனது பார்வையில் இருந்து விலக்காமல் இருக்கிறாயா? அவர்கள் உன்னை அணுக அச்சமில்லாமல் இருக்கிறார்களா? நீ உனது காரியங்களை நம்பிக்கைக்குரிய தூய்மையானவர்களையும், அனுபவம் கொண்டவர்களையும் கொண்டு செய்கிறாயா? ஓ வீர மன்னா {யுதிஷ்டிரா}, உன்னால் சாதிக்கப்பட்ட சாதனைகளையும் உன்னால் தொடங்கப்பட்டு முடியாத காரியங்களை மட்டுமே மக்கள் அறிந்து, தொடங்கப்படாததையும், ஆலோசனையில் உள்ளதையும் அறியாமல் இருக்கிறார்களா?(31,32)

இளவரசர்களுக்கும், படைகளின் தலைவர்களுக்கும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும், ஒழுக்க அறிவியலையும் கற்றுக் கொடுக்க அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமித்திருக்கிறாயா?(33) ஆயிரம் பாமரர்களைக் கொடுத்து ஒரு கல்விமானை விலைக்கு வாங்கிக் கொள்கிறாயா? கல்விமானே, நாட்டுக்குத் துயர் நிறைந்த காலங்களில் பெரும் நன்மையைச் செய்கிறான்.(34) உனது கோட்டைகளில் எப்போதும், செல்வமும், உணவும் ஆயுதங்களும், நீரும், பொறிகளும் கருவிகளும், இருக்கின்றனவா? அங்கே பொறியாளர்களும் வில்லாளிகளும் இருக்கிறார்களா?(35) புத்திசாலித்தனமும், வீரமும் கொண்ட ஒரே அமைச்சரேனும், தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்து, ஞானமும் நீதியும் கொண்டிருந்தானானால், அவனால் ஒரு மன்னனுக்கோ, மன்னனின் மகனுக்கோ பெரும் வளமையைக் கொடுக்க முடியும். எனவே, நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னிடம் அப்படிப்பட்ட அமைச்சர் இருக்கிறாரா?(36)

மும்மூன்று உளவாளிகளைக் கொண்டு உனது எதிரியின் பதினெட்டு தீர்த்தங்களைக்[5]  குறித்து அனைத்தையும் அறிந்து கொண்டு, பிறகு உன்னுடைய பதினைந்து  தீர்த்தங்களையும்[6] அறிந்து கொண்ட பிறகு அந்த மூன்று உளவாளிகளும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறியாமல் இருக்கின்றனரா?(37)(எதிரியின் 1. அமைச்சன், 2. புரோகிதன், 3. இளவரசன், 4. தளபதி, 5. வாயில் காப்போன், 6. அந்தப்புர அதிகாரி, 7. சிறைச்சாலை அதிகாரி, 8. செல்வங்களை வாங்கி வைப்பவன், 9. செல்வங்களை செலவழிப்பவன், 10. கட்டளையை நிறைவேற்றுபவன், 11. நகர அதிகாரி, 12. காரியங்களை விதிப்பவன், 13. நீதிபதி 14. சபை தலைவர், 15. தண்டனை அளிப்பவன், 16. தண்டனையை நிறைவேற்றுபவன், 17. எல்லைக் காவலாளி, 18. காட்டதிகாரி-மேற்கண்டதில் அமைச்சன், புரோகிதன், இளவரசன் நீங்கலாக மற்றது அனைத்தும். இது தன் நாட்டுக்குப் பொருந்துவது..)

எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, உனது எதிரிகளை அவர்களுக்குத் தெரியாமல் கவனத்துடன் கண்காணித்து வருகிறாயா?(38) உன்னால் மதிக்கப்படும் உனது புரோகிதர், எளிமையும், தூய குருதியும், புகழும் கொண்டவருமாக இருந்து, பொறாமை அற்றவராகவும், தாராளத்தன்மை அற்றவராகவும் இருக்கிறாரா? கட்டளை இடும் அளவுக்கு உயர்ந்த அந்தஸ்தில், நன்னடத்தையுள்ள, புத்திசாலியான, வஞ்சனை அற்ற ஒரு பிராமணனை, நெருப்பு முன்பான உனது தினச் சடங்குகளுக்காக நியமித்திருக்கிறாயா? அவர் சரியான நேரத்தில் எப்போதெல்லாம் ஹோமங்களைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறாரா? நீ நியமித்திருக்கும் கணியர் {சோதிடர்} பொருள்களின் பொது அமைப்பை அறியும் திறன் வாய்ந்தவரா? சகுனங்களை அறிந்து சொல்லத்தக்கவரா? இயற்கைத் தடங்கல்களை சமன்படுத்தவல்ல தகுதி வாய்ந்தவரா?(39-41)

மதிப்புமிக்க அலுவல்கள் நடைபெறும் இடங்களில் மதிப்புக்குரிய வேலையாட்களை நியமித்திருக்கிறாயா? அலட்சியமான அலுவல்களில் அலட்சியமானவர்களையும் கீழ்மையான அலுவல்களில் கீழ்மையானவர்களையும் நியமித்திருக்கிறாயா?(42) உயர்ந்த அலுவல்களில் வஞ்சனையற்றவர்களாகவும், பரம்பரை பரம்பரையாக நன்னடைத்தைக்குப் பேர் போன குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகவும், இயல்பானவர்களுக்கு மேலான குணம் கொண்டவர்களாகவும் இருக்கும் அமைச்சர்களை நியமித்திருக்கிறாயா?(43) உனது மக்களை கடுமையான மற்றும் கொடூரமான தண்டனைகள் கொடுத்து தண்டிக்காமல் இருக்கிறாயா? மேலும், ஓ பாரத குலத்தின் காளையே, உனது அமைச்சர்கள் உனது கட்டளைக் கீழ்ப்படிந்தே நாட்டை ஆள்கிறார்களா?(44)  வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் சில வீழ்ந்த மனிதர்களிடம் லேசாகச் {மேலும் அவர்களால் வேள்விகளைச் செய்ய இயலாதவர்கள் என்று} சொல்வது போலவும், அல்லது கர்வம் கொண்ட கணவர்களை மனைவிகள் லேசாக எடுத்துக் கொண்டு அவமதித்து தன்னடக்கமற்றவர்களாக இருப்பது போலவும் உனது அமைச்சர்கள் உன்னை அவமதிக்காமல் இருக்கின்றனரா?(45)

உனது படைகளின் தளபதி போதுமான நம்பிக்கையும், வீரமும், புத்திசாலித்தனமும், அமைதியும், நன்னடத்தையும், கொண்டு நல்ல பிறப்பாகப் பிறந்து, உனக்கு அர்ப்பணிப்புடன் இருந்து தகுதி வாய்ந்தவனாக இருக்கிறானா?(46) அனைத்து வகையிலும் திறன்வாய்ந்த, நன்னடத்தையுள்ள, பெரும் வீரம் கொண்ட உனது படையின் தலைமை அதிகாரிகளை மரியாதையுடன் கருதியும் நடத்தியும் வருகிறாயா?(47) உனது படைகளுக்குத் தேவையான சலுகைகளையும், ஊதியத்தையும் குறித்த நேரத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறாயா? இவற்றை {சலுகை + ஊதியம்} கொடுக்காதிருந்து அவர்களை ஒடுக்காமல் இருக்கிறாயா?(48) ஊதியத்தை நிலுவையில் வைப்பதும், சலுகைகளை முறையான குறித்த நேரங்களில் கொடுக்காமல் நினைத்த நேரங்களில் கொடுப்பதும், படைகளைக் கலகம் செய்யத் தூண்டும் என்றும், இவையே தீமைகளில் பெரும் தீமை என்று கற்றவர்கள் கருதுகிறார்கள் என்பதையும் அறிந்திருக்கிறாயா?(49) உயர் குடி மனிதர்களில் பெரும்பாலானவர்கள் உன்னிடம் அர்ப்பணிப்புடனும், போரில் உனக்காக தங்கள் உயிரைக் கொடுக்க தாயாராகவும் இருக்கிறார்களா?(50)

படையைப் பொறுத்தவரையில், எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஒருவன், தான் நினைத்தவாறு உத்தரவிட நீ அனுமதிக்காமல் இருக்கிறாயா?(51) உனது பணியாட்களில் யாராவது, தனித்திறமையுடன் ஒரு சாதனையைச் செய்த பிறகு, உன்னிடம் கூடுதல் மரியாதையாக கூடுதல் உணவையும் கூடுதல் ஊதியத்தையும் அடைவதில் ஏமாற்றம் கொள்ளாமல் இருக்கின்றனரா?(52) கல்விமான்களான எளிமையானவர்களையும், அனைத்து வகை அறிவிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களையும் சரியானபடி செல்வங்களைப் பரிசளித்தும், அவரவர் தகுதிக்கேற்ப மரியாதை கொடுத்தும் கௌரவித்து வருகிறாய் என நான் நம்புகிறேன்.(53) ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, உனக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் மற்றும் உனது காரியத்தைச் செய்யப்போய் துன்பத்துக்குள்ளானவரின் மனைவிமாரையும், பிள்ளைகளையும் தாங்கி வருகிறாயா?(54) ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, போரில் உன்னால் வீழ்த்தப்பட்ட எதிரி, பலவீனப்பட்டோ அல்லது உனது பாதுகாப்பை நாடியோ வந்தால், அவனை தந்தையின் பாசத்துடன் பேணிப் பாதுகாக்கிறாயா?(55)

ஓ பூமியின் தலைவா, அனைத்து மனிதர்களுக்கும் சமமானவனாக இருந்து, ஒரு தாயையோ அல்லது தந்தையையோ அணுகுவது போல அவர்கள் உன்னை அச்சமில்லாமல் அணுகும் வகையில் நீ நடந்து கொள்கிறாயா?(56) ஓ பாரதகுலத்தின் காளையே, உனது எதிரியின் துயரைக் கேட்டவுடன், நேரத்தைக் கடத்தாமல் உனது முப்படைகளையும்  அங்கே நடத்திச் செல்கிறாயா?(57) ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, நேரம் வந்ததும், அனைத்து சகுனங்களையும் கண்டு, அவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு தீர்மானத்துக்கு வந்து, வெற்றியை அளிக்கும் பனிரெண்டு மண்டலங்களையும்[7] குறித்துக் கொண்டு படைகளை நடத்துகிறாயா?(58)(சேமிப்பு, மறைவிடம், போன்றவையும் படை வீரர்கள் ஊதியத்தை முன்பணமாகக் கொடுத்தல் ஆகியவையும்.)

ஓ எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, எதிரியின் முக்கிய அதிகாரிகளுக்கு அவர்கள் தகுதிக்கேற்ப நகைகளையும், ரத்தினங்களையும் எதிரி அறியாதவாறு கொடுத்து வருகிறாயா?(59) ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, முதலில் உனது ஆன்மாவை வெற்றிகொண்டு, உனது புலன்களை உனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்பு, உனது எதிரிகள் எந்த மாதிரியான ஆசைளுக்கெல்லாம் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து வெற்றி கொள்ள முனைகிறாயா?(60) நீ எதிரியை நோக்கி படையை நடத்திச் செல்லும் முன், நான்கு கலைகளான இணக்கம் உண்டாக்குதல்{1}, பரிசளித்தல்{2}, ஒற்றுமையின்மையை விளைவித்தல்{3}, பலத்தைப் பிரயோகம் செய்தல்{4} போன்ற {சாம, தான, பேத, தண்ட} உபாயங்களைக் கடைப்பிடிக்கிறாயா?(61) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முதலில் உனது நாட்டைப் பலப்படுத்திய பிறகு நீ எதிரி நாட்டின் மீது படையெடுக்கிறாயா? அப்படி எதிரியை நோக்கி படையெடுத்து சென்ற பிறகு, எஞ்சிய சக்தியைப் பயன்படுத்தி வெற்றியை அடையப் பாடுபடுகிறாயா? அவர்களை வெற்றி கொண்ட பிறகு, அவர்களை கவனத்துடன் பாதுகாக்கிறாயா?(62) உனது படைகள், வழக்கமான துருப்புகள்{1}, கூட்டணி துருப்புகள்{2}, கூலிப்படையினர்{3}, வழக்கமில்லாத ஒழுங்கற்ற படைகள்{4} என நான்கு வகை துருப்புகளையும், ரதங்கள்{1}, யானைகள்{2}, குதிரைகள்{3}, அதிகாரிகள்{4}, காலாட்படை{5}, பணியாட்கள்{6}, நாட்டைப் பற்றிய தெளிந்த ஞானம் கொண்ட ஒற்றர்கள்{7}, மேன்மையான அதிகாரிகளால் நன்கு பழக்கப்பட்டு எதிரிகளிடம் கொடிகளைச் சுமந்து செல்வோர்{8} ஆகிய எட்டு அங்கங்களையும் கொண்டிருக்கிறதா?(63)

ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, எதிரி நாட்டின் பயிர் அறுப்பு காலத்தையும், பஞ்ச காலத்தையும் {பயிரைக் காப்பாற்றும் காலத்தையும்} கருத்தில் கொண்டு எதிரிகளைக் கொல்கிறாயா?(64) ஓ மன்னா, உனது பணியாட்களும், முகவர்களும், உனது நாட்டிலும், எதிரிகள் நாட்டிலும் தொடர்ந்து தங்கள் தங்கள் கடமைகளையாற்றி, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்கிறார்கள், என நான் நம்புகிறேன்.(65) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, உனது உணவு, நீ அணியும் ஆடைகள், நீ பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்த்துக்கொள்ள நம்பிக்கையான பணியாட்களை நியமித்திருக்கிறாய், என நான் நம்புகிறேன்.(66) ஓ மன்னா, {யுதிஷ்டிரா} உனது கருவூலம் {பொக்கிஷம்}, தானியக் களஞ்சியம், தொழுவங்கள் {மாட்டுத் தொழுவம், குதிரைக் கொட்டகை போன்றவை}, படைக்கலன்கள், பெண்களின் அந்தப்புரங்கள் ஆகியவை உனது நன்மையை விரும்பி உனக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் பணியாட்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன, என நான் நம்புகிறேன்.(67) ஓ ஏகாதிபதியே, {யுதிஷ்டிரா} முதலில், உனது வீட்டுப் பணியாட்களிடம் இருந்தும், பொது பணியாட்களிடம் இருந்தும், உனது உறவினர்களின் பணியாட்களிடம் இருந்தும், உன்னை நீ பாதுகாத்துக் கொண்டும் உனது உறவினர்களால் உனது பணியாட்களைப் பாதுகாத்துக் கொண்டும் வருகிறாய், என நான் நம்புகிறேன்.(68)

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, காலையில், நீ மதுவுக்கும், விளையாட்டுகளுக்கும், பெண்களுக்கும் செலவு செய்யும் மிதமிஞ்சிய செலவுகளைக் குறித்து, உனது பணியாட்கள் உன்னிடம் பேசாமல் இருக்கிறார்களா?(69) எப்போதும் உனது செலவு, உனது வருமானத்தில் நாலில் ஒரு பாகத்திலோ, மூன்றில் ஒரு பாகத்திலோ அல்லது அரை பாகத்திலோ முடிகிறதா?(70) உணவு, செல்வம், உறவினர், மூத்தவர், வணிகர், முதியவர், மற்ற கிளைகள், துயரத்தில் இருப்பவர்கள் ஆகியோரை எப்போதும் ஆதரித்து வருகிறாயா?(71) உனது வரவு செலவுகளைக் கவனித்துக் கொள்ள உன்னால் நியமிக்கப்பட்ட கணக்கர்களும், எழுத்தர்களும், ஒவ்வொரு நாளும் காலையில் உன்னிடம் வரவு செலவுகள் குறித்த மதிப்பீடுகளை அளிக்கிறார்களா?(72) காரியங்களைச் சாதிக்கும் பணியாட்களையும், உனது நன்மைக்காகத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களையும், புகழ் பெற்றவர்களையும் அவர்களிடம் குற்றம் இல்லாதபோதே அவர்களை அதிகாரங்களில் இருந்து விலக்காமல் இருக்கிறாயா?(73)

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, மேன்மையானவர்கள், அலட்சியமானவர்கள், கீழ்மையானவர்கள் ஆகியோரை சோதனை செய்த பிறகு, அவர்களைத் தகுந்த அலுவல்களில் நியமிக்கிறாயா?(74) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, திருடர்களையோ, சபலத்துக்கு ஆட்படுபவர்களையோ, பகையுள்ளவர்களையோ, வயதில் இளையவர்களையோ பணியில் நியமிக்காமல் இருக்கிறாயா?(75) திருடர்களாலும், பேராசைக்காரர்களாலும், சிறுவர்களாலும், பெண்களாலும் உனது நாட்டுக்குத் தொல்லை நேராமல் பார்த்துக் கொள்கிறாயா? உனது நாட்டில் இருக்கும் உழவர்கள் மனநிறைவுடன் இருக்கிறார்களா?(76) வேளாண்மை வான்மழையை மட்டும் நம்பியிராமல், பெரிய குளங்களும் ஏரிகளும் நாடு முழுவதும் தகுந்த இடைவெளி கொண்ட தொலைவுகளில் கட்டப்பட்டுள்ளனவா?(77) உனது நாட்டின் உழவர்களுக்கு விதையோ உணவோ பற்றாக்குறையில்லாமல் இருக்கின்றனவா? உழுபவர்களுக்கு அன்புடன் நூற்றுக் கணக்கில் கடன் {விதை நெல்களை} கொடுத்து, அதிகமாக இருப்பதில் நூறில் நான்கு பங்கை எடுத்துக் கொள்கிறாயா?(78)

ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, நான்கு தொழில்களான, உழவு{1}, வணிகம்{2}, கால்நடை வளர்த்தல்{3}, வட்டிக்கு கடன் கொடுத்தல்{4} ஆகியவை நேர்மையான மனிதர்களால் நடத்தப்படுகின்றனவா? ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா} இவற்றிலேயே உனது மக்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.(79) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வீரர்களும் ஞானவான்களுமான ஐந்து மனிதர்களை, நகரம்{1}, கோட்டை{2}, வணிகர்{3}, உழவர்{4}, குற்றவாளிகளைத் தண்டித்தல்{5}, ஆகிய ஐந்து அலுவலகங்களில் நியமித்து, அவர்களை {அந்த ஐவரை} நாட்டின் நன்மைக்காக ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் வேலை செய்ய வைக்கிறாயா?(80) உனது நகரங்களின் பாதுகாப்புக்காக, கிராமங்களை நகரங்கள் போலவும், சிறுகிராமங்களும் புறநகர்களும் கிராமங்கள் போலவும் செய்யப்பட்டிருக்கின்றனவா? இவையெல்லாம் உனது நேரடிக் கண்காணிப்பில் செய்யப்பட்டு, உனது முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனவா?(81) உனது நகரத்தைக் கொள்ளையிடும் கொள்ளையரும் திருடர்களும், உனது நகர்க்காவலர்களால் உனது நாட்டின் சமமான மற்றும் சமமற்றப் {மேடு பள்ளமான} பகுதிகளிலும் பின்தொடரப்படுகிறார்களா?(82) பெண்களை ஆறுதலுடன் நடத்துகிறாயா? அவர்களுக்கு உனது ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களிடம் {பெண்களிடம்} நீ எந்த நம்பிக்கையும் கொள்ளாமல், அவர்கள் {பெண்கள்} எதிரில் எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கிறாயா?(83)

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஏதாவது ஆபத்தைக் கேள்விப்பட்டாலும், அது குறித்து சிந்திக்காமல், அந்தப்புரங்களில் அனைத்து இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு படுத்துக்கிடக்காமல் இருக்கிறாயா?(84) இரவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளில்[8] உறங்கி, {நான்காவது பிரிவில்} அறத்தையும் பொருளையும் சிந்தித்து எழுகிறாயா?(85) (மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள 12 மணி நேரங்களை நான்காகப் பிரித்து, முதல் பிரிவு (ஜாமம்) மாலை நேரமாதலால் (6.00 – 9.00) தூங்காமல், இரண்டாவது பிரிவு (ஜாமம்) {9.00 – 12.00) மற்றும் மூன்றாவது பிரிவு (ஜாமம்) (12.00 – 3.00)ல்} தூங்கி, நான்காவது பிரிவில் {(ஜாமத்தில்) 3.00-6.00 மணிக்குள்})ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, சரியான நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து, நன்றாக உடுத்திக் கொண்டு, மங்கல நேரங்களை அறிந்த அமைச்சர்கள் துணையுடன் உன்னை உனது மக்களின் காட்சிக்கு அளிக்கிறாயா?(86) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, கைகளில் வாளுடனும், பல ஆயுதங்களுடனும் இருக்கும் சிவப்பு ஆடை உடுத்தியவர்கள் {மெய்காப்பாளர்கள்}, உன்னைக் காப்பதற்காக உனது அருகில் இருக்கிறார்களா?(87)

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தண்டனைக்குத் உகந்தவர்களிடமும், வழிபாட்டுக்குத் தகுந்தவர்களிடமும், உன்னிடம் அன்புடன் இருப்பர்களிடமும், உன்னை விரும்பாதவர்களிடமும், நீதி தேவன் {தர்மதேவன், யமன்} போல சமமாக நடந்து கொள்கிறாயா?(88) ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, மருந்துகளாலும், பத்தியங்களாலும், உடல்நோயையும், பெரியவர்கள் அறிவுரைகளால் மன நோயையும் குணப்படுத்திக் கொள்கிறாயா?(89) உனது உடல்நலத்தைக் கண்காணிக்கும் மருத்துவர்கள் எட்டு வகை சிகிச்சைகளை[9] அறிந்து உன்னிடம் பிணைப்புடனும், அர்ப்பணிப்புடனும் இருக்கிறார்களா?(90) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, உன்னிடம் வந்த வாதி, பிரதிவாதிகளிடையே பேராசையாலோ, அறியாமையாலோ, கர்வத்தாலோ முடிவு காணமுடியாத நிலையில் அவர்களை வஞ்சிக்காமல் இருக்கிறாயா?(91) (எட்டு வகை சிகிச்சைகள் என்பன. 1.சல்யம் = உடலுக்குள்ளிருக்கும் முள் முதலியவற்றை எடுப்பது. 2.சாலாகயம் = குத்தி நீர் எடுப்பது. 3.காயசிகித்ஸை = நோய்க்கு மருந்து கொடுப்பது. 4.பூதவித்தை=பேய் முதலியவற்றை ஓட்டுவது. 5.கௌமாரப்ருத்யம் = குழந்தைகளுக்கும், பெண்களுக்குமான சிகிச்சை. 6.அகததந்திரம் = நஞ்சு சிகிச்சை. 7.ரஸாயனதந்திரம்=உடல் பருமனையும், வாழ்நாள் நீட்டிப்பு முதலியவற்றை உண்டாக்குவது. 8.வாஜீகரணம் = போகங்களில் அதிக உற்சாகப்படுத்துவது.)பேராசையாலோ, அறியாமையிலோ, உனது பாதுகாப்பை நாடி நம்பிக்கையுடனும் அன்புடனும் வந்தவர்களை ஏமாற்றாமல் இருக்கிறாயா?(92) உனது ஆட்சியில் வசிக்கும் மக்கள், எதிரிகளால் பொருள் கொடுத்து வசப்படுத்தப்பட்டவர்களாக ஒன்று சேர்ந்து உன்னுடன் பகை கொள்ளாமல் இருக்கிறார்களா?(93) உனது எதிரிகளில் பலவீனர்கள், உனது ஆலோசனைகளாலும் வலிமையான துருப்புகளாலும் எப்போதும் நசுக்கப் படுகிறார்களா? பலவான்கள், நல்ல ஆலோசனையின் உதவியுடனோ, நல்லாலோசனை மற்றும் துருப்புகளின் உதவியுடனோ ஒடுக்கப்படுகிறார்களா?(94) உனது நாட்டின் முக்கியத் தளபதிகள் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்களா? அவர்கள் உனது உத்தரவின் பேரில் அவர்களது உயிரைக்கூட உனக்காகத் தர சித்தமாக இருக்கிறார்களா?(95எட்டு வகை சிகிச்சைகள் என்பன. 1.சல்யம் = உடலுக்குள்ளிருக்கும் முள் முதலியவற்றை எடுப்பது. 2.சாலாகயம் = குத்தி நீர் எடுப்பது. 3.காயசிகித்ஸை = நோய்க்கு மருந்து கொடுப்பது. 4.பூதவித்தை=பேய் முதலியவற்றை ஓட்டுவது. 5.கௌமாரப்ருத்யம் = குழந்தைகளுக்கும், பெண்களுக்குமான சிகிச்சை. 6.அகததந்திரம் = நஞ்சு சிகிச்சை. 7.ரஸாயனதந்திரம்=உடல் பருமனையும், வாழ்நாள் நீட்டிப்பு முதலியவற்றை உண்டாக்குவது. 8.வாஜீகரணம் = போகங்களில் அதிக உற்சாகப்படுத்துவது.

நீ பிராமணர்களையும், ஞானிகளையும் அவர்களது தரத்துக்கு ஏற்றபடியும், கல்வியின் பல கிளைகளில் அவர்கள் அடைந்த தகுதியின் அடிப்படையிலும் வழிபடுகிறாயா? இத்தகைய வழிபாடு உனக்கு நன்மையைப் பயக்கும் என்பதில் ஐயமில்லை.(96) உனக்கு முன்பே இருந்த மனிதர்களால் பயிலப்பட்ட மூன்று வேதங்களை அடிப்படையாகக் கொண்ட அறத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? அவர்களால் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களை நீயும் பின்பற்றுகிறாயா?(97) சாதித்த பிராமணர்கள் உனது இல்லத்தில் சத்துள்ள அற்புதமான உணவால் உனது பார்வையில் கொண்டாடப்படுகிறார்களா? அந்த விருந்தின் முடிவில் பணம் சம்பந்தமான பரிசுகளை அவர்கள் பெறுகிறார்களா?(98) ஆசைகளை உன் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, மனத்தில் ஒருமையுடன், வாஜபேயம் மற்றும் பௌண்டரீகம் என்ற வேள்விகளை அவற்றுக்குரிய முழு சடங்குகளுடன் செய்ய முயற்சிக்கிறாயா?(99)

உனது உறவினர்களுக்கும், மூத்தவர்களுக்கும், முதியவர்களுக்கும், தேவர்களுக்கும், துறவிகளுக்கும், பிராமணர்களுக்கும், மக்களுக்கும் நன்மையைச் செய்து கொண்டு கிராமங்களில் இருக்கும் நெடிய (ஆல) மரங்களுக்கும் நீ தலை வணங்குகிறாயா?(100) ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, யாருடைய துன்பத்துக்கும் கோபத்துக்கும் நீ காரணமாக இருக்கிறாயா? மூன்று மங்கலக்கனிகளை அருளும் புரோகிதர்கள் உனது அருகில் எப்போதும் இருக்கிறார்களா?(101) ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, நான் சொன்னவாறு உனது மனோநிலையும், பயிற்சிகளும் இருக்கின்றனவா? இவைகள் {மேலே சொன்னவைகள்} ஒருவனது புகழை பரப்பி, அறம், இன்பம் மற்றும் பொருளுக்குக் காரணமாக இருந்து வாழ்வின் நீட்சியை மேம்படுத்தும்.(102) மேற்சொன்ன வழிகளில் தன்னை அமைத்துக் கொள்பவன், தனது நாடு துயரத்திலோ அல்லது பாதிக்கப்பட்டோ இருப்பதைக் காண மாட்டான்; அந்த ஏகாதிபதி முழு உலகத்தையும் வென்று, உயர்ந்த இன்பநிலையை அனுபவிப்பான்.(103)

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, சாத்திரமறியா அமைச்சர்களின் பேராசை கொண்ட செயலால், நன்னடத்தையுள்ள, தூய ஆன்மா கொண்ட, மரியாதைக்குரிய நபர் யாரும், பொய்க் குற்றச்சாட்டின் பேரிலோ, திருட்டு காரணமாகவோ பாழாக்கப்படாமல், கொல்லப்படாமல் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.(104) ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரனே}, உனது அமைச்சர்கள் பேராசையின் காரணமாக செல்வத்துடன் பிடிபட்ட உண்மையான திருடர்களை தப்ப விடவில்லை என நான் நம்புகிறேன்.(105) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, உனது அமைச்சர்களை லஞ்சத்தால் வெல்ல முடியாது என்றும், ஏழை பணக்காரனிடையே நடக்கும் சச்சரவுகளில் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்.(106) மன்னர்கள் ஆட்படக்கூடாத பதின்நான்கு{14} தீமைகளான நாத்திகம்{1}, பொய்மை{2}, கோபம்{3}, விழிப்பற்ற நிலை {அஜாக்கிரதை}{4}, காலம் கடத்துதல்{5}, ஞானமுள்ளோரை சந்திக்காமலிருத்தல்{6}, ஒன்றும் செய்யாது சும்மா இருத்தல் – சோம்பல்{7}, மன அமைதியின்மை {ஐம்புலன்களுக்கு உட்படுதல்}{8}, ஒரே மனிதரிடம் {தான் மட்டும்} மட்டும் ஆலோசனை செய்தல்{9}, பொருள் குறித்த அறிவியலை அறியாதவர்களிடம் ஆலோசனை பெறுதல்{10}, தீர்க்கப்பட்ட ஒரு திட்டத்தைக் கைவிடுதல்{11}, ஆலோசனையை ரகசியமாக வைத்துக் கொள்ளாது வெளிப்படுத்துதல்{12}, நன்மைக்கான மங்கலக் காரியங்களைச் செய்யாமல் இருத்தல்{13}, எதையும் சிந்திக்காமல் செய்தல்{14} – ஆகியவற்றில் இருந்து நீ விடுபட்டு இருக்கிறாயா? ஓ மன்னா இவற்றால், பாழடையாத ஏகாதிபதிகள், தங்கள் அரியணையில் உறுதியாக நிலைத்திருப்பார்கள்.(107-109) உனது வேதகல்வி, உனது செல்வம் மற்றும் சாஸ்த்திர ஞானம், திருமணம் ஆகியவை கனி கொடுத்திருக்கின்றனவா?” என்று கேட்டார் {நாரதர்}”.(110)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “முனிவர் முடித்ததும், யுதிஷ்டிரன், “ஓ முனிவரே, வேதம், செல்வம், மனைவி, சாத்திர ஞானம் ஆகியவை எவ்வாறு கனி கொடுக்கின்றன?” என்று கேட்டான்.(111)

அதற்கு முனிவர் {நாரதர்}, “வேதங்கள், அதைப் படித்து முடித்து, அக்னிஹோத்ரமும், வேள்விகளும் செய்யத் தொடங்கியதும் கனியைக் கொடுக்கின்றன. செல்வம், ஒருவன் அதை அனுபவித்து பிறகு அதைத் தானமாகக் கொடுக்கும்போது கனியைக் கொடுக்கிறது. ஒரு மனைவி, அவள் பயன்படும்போதும், பிள்ளைகளைப் பெறும்போதும் கனி கொடுக்கிறாள். சாத்திர ஞானம், அடக்கத்தினாலும், நன்னடத்தையாலும் கனி கொடுக்கிறது” என்றார்”.(112)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தப் பெரும் துறவியான நாரதர், யுதிஷ்டிரனிடம் அப்படிப் பதிலுரைத்து மேலும் அந்த ஆட்சியாளனிடம், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சமூகத்தில் இருந்து ஈட்டப்படும் வரிகளில் இருந்து கூலி கொடுக்கப்படும் உனது அரசாங்கத்தின் அதிகாரிகள், லாபத்தின் மீது இருக்கும் விருப்பத்தால் உந்தப்படாமல், வெகுதூரத்தில் இருந்து வரும் வணிகர்களிடம் இருந்து சரியான நிலுவைகளைத்தான் {சுங்கத்தைத் தான்} வசூலிக்கிறார்களா? ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உனது நாட்டுக்கும் தலைநகருக்கும் பொருட்களைக் கொண்டு வரும் வணிகர்கள், போலிக் காரணங்கள் மூலம் ஏமாற்றப்படாமல் (பொருள் வாங்குபவர்களாலும் {நுகர்வோராலும்}, அதிகாரிகளாலும் {அரசாங்கத்தாலும்}) மரியாதையாக நடத்தப்படுகிறார்களா?(114-115)

ஓ ஏகாதிபதி {யதிஷ்டிரா}, பொருளாதாரக் கோட்பாடுகளை அறிந்த முதியோர்கள் சொல்லும் அறம் மற்றும் பொருள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் நிறைந்த வார்த்தைகளைக் கேட்கிறாயா?(116) வேளாண் உற்பத்தி, பசுக்கள், கனிகள் மற்றும் மலர்கள் பெருகவும் அறம் வளரவும் பிராமணர்களுக்கு தேனும், தெளிந்த நெய்யையும் பரிசாகக் கொடுக்கிறாயா?(117) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உன்னால் நியமிக்கப்பட்ட கைவினைஞர்கள் மற்றுக் கலைஞர்களுக்கு, நான்கு மாதத்திற்கு வேண்டிய அளவு வேலைக்குத் தேவையான பொருட்களையும், அவர்களது கூலியையும் முன்பே கொடுக்கிறாயா?(118) உன்னால் நியமிக்கப்பட்டவர்கள் செய்த வேலையைக் கண்டு, அவர்கள் சிறப்பை நல்ல மனிதர்கள் முன்னிலையில் பாராட்டி, பரிசளித்து, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறாயா?(119)

ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, யானைகள், குதிரைகள், தேர்கள் குறித்த காரியங்களில் (முனிவர்களின்) பழமொழிகளைப் பின்பற்றுகிறாயா?(120) ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நகருக்கும் செறிவூட்டப்பட்ட இடங்களுக்கும் பயன்படும், ஆயுத அறிவியல், போரில் பயன்படுத்தக்கூடிய கருவிகள் குறித்த பழமொழிகளும், உனது சபையில் படிக்கப்படுகிறதா?(121) ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, அனைத்து புதிர் நிறைந்த மந்திரங்களையும், அனைத்து எதிரிகளையும் அழிக்கும் நச்சுகளின் ரகசியங்களையும் அறிந்து வைத்திருக்கிறாயா?(122) நெருப்பு, பாம்புகள், மற்றும் உயிருக்கு நாசத்தை விளைவிக்ககூடய மற்ற விலங்குகள், ராட்சசர்கள் ஆகியோரிடம் இருக்கும் அச்சத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்கிறாயா?(123) அனைத்துக் கடமைகளையும் அறிந்த நீ, உனது தந்தை, குருடர், ஊமை, முடவர், உரு குலைந்தவர் {அவலட்சணமானவர்}, நண்பர்கள் இல்லாதவர்கள், வீடில்லாத துறவிகள் ஆகியோரை ஆதரித்து வருகிறாயா?(124) ஓ ஏகாதிபதி, உறக்கம்{1}, சோம்பல்{2}, அச்சம்{3}, கோபம்{4}, மனப் பலவீனம்{5}, காலம் கடத்துதல்{6} என்ற ஆறு தீமைகளை வெளியேற்றிவிட்டாயா?” என்று கேட்டார் {நாரதர்}”.(125)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சிறப்பு மிகுந்த குருக்களின் காளை {யுதிஷ்டிரன்}, அந்த பிராமணர்களில் சிறந்தவரின் வார்த்தைகளைக் கேட்டு, அவரைப் {நாரதரைப்} பணிந்து வணங்கி, அவரது பாதங்களை வழிபட்டான்.(126) அவர் {நாரதர்} கேட்ட அனைத்திலும் மனநிறைவு கொண்ட அந்த ஏகாதிபதி, தெய்வீக வடிவில் இருந்த நாரதரிடம், “நீர் வழிகாட்டிய படியே நடந்து கொள்கிறேன். உமது அறிவுறுத்தலால் எனது ஞானம் விரிந்திருக்கிறது {வளர்ந்திருக்கிறது}” என்று சொன்னான்.(127) மேலும், அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அவர் சொன்ன ஆலோசனைகளுக்கு ஏற்ப நடந்து கொண்டு, கடல்களைக் கச்சையாக அணிந்த முழு உலகையும் {உலகின் அரசுரிமையையும்} சரியான நேரத்தில் பெற்றான். நாரதர் மறுபடியும் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வகைகளைக் காக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் மன்னன், அவனது நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தி, இதற்குப் பிறகு அவன் சக்ரனின் {இந்திரனின்} உலகத்தை (விண்ணுலகத்தை) அடைவான்.” {என்றார் நாரதர்}.(128)

எனது சபைக்கு ஈடானவை உண்டா? – சபாபர்வம் பகுதி 6-(லோகபால சபாகயானா பர்வம் – 02)-நாரதரின் கேள்விகளுக்கெல்லாம் சுருக்கமாகப் பதிலளித்த யுதிஷ்டிரன்; நாரதரிடம் தனது சபைக்கு சமமாக வேறு எங்கும் கண்டதுண்டா என்று கேட்டது; தேவர்களின் சபைகளையும், பிரம்மாவின் சபையையும் நாரதர் யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டியது. அவற்றை விபரிக்கச் சொல்லி யுதிஷ்டிரன் நாரதரை வேண்டுவது…

வைசம்பாயனர் சொன்னார், “நாரதரின் வார்த்தைகளின் முடிவில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் அவரை முறைப்படி வழிபட்டான்; அவரால் {நாரதரால்} உத்தரவிடப்பட்ட அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அந்த முனிவர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சுருக்கமாக பதில் சொல்ல ஆரம்பித்தான்.(1)

யுதிஷ்டிரன், “ஓ தெய்வீகமானவரே {நாரதரே}, நீர் குறிப்பிட்டவாறு அறம் மற்றும் ஒழுக்கவிதிகளின் உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக நீதியுடனும் சரியான முறையிலும் செய்யப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை, நான் அந்த விதிகளை முறையாக எனது சக்தியில் சிறந்தவாறு கடைப்பிடித்து வருகிறேன்.(2) உண்மையில், பழங்காலத்தின் ஏகாதிபதிகளால் சரியாகச் செய்யப்பட்டச் செயல்கள் எல்லாம், சந்தேகமற, சரியான கனியைக் {பலனைக்} கொடுக்கும் என்று கருதலாம். அப்படிக் கருதி, சரியான பொருட்களை அடைய திடமான காரணங்களுடன் அந்தச் செயல்களை மேற்கொள்ளலாம்.(3) ஓ தலைவா {நாரதரே}, நாங்கள், தங்கள் ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்த ஆட்சியாளர்கள் நடந்த அறம் சார்ந்த பாதையில் நடக்கவே விரும்புகிறோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(4)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பாண்டுவின் மகனான பெரும் புகழ் கொண்ட யுதிஷ்டிரன், நாரதரின் வார்த்தைகளை மரியாதையுடன் ஏற்று, அந்த முனிவருக்குப் பதில் சொல்லிவிட்டு, சிறிது நேரம் யோசித்தான். அந்த முனிவரின் அருகில் அமர்ந்திருந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, சரியான சந்தர்ப்பத்தைக் கண்டு கொண்டு, மன்னர்களின் கூட்டத்தில், வசதியாக அமர்ந்திருந்த, அனைத்து உலகத்திற்கும் தான் விரும்பிய படியே சென்று வரக்கூடிய சக்தி படைத்த அந்த நாரதரிடம்,(5,6)

{யுதிஷ்டிரன்} “பழங்காலத்தில் பிரம்மாவால் படைக்கப்பட்ட பலவகைப்பட்ட உலகங்களில் சுற்றி, அனைத்தையும் கண்டவர் நீர்.(7) ஓ பிராமணரே {நாரதரே}, நான் ஒன்றைக் கேட்கிறேன். இந்த எனது சபாமண்டபத்தைப் போன்றோ {இதற்குச் சமமாகவோ} அல்லது இதைவிட மேன்மையாகவோ ஒரு சபாமண்டபத்தை இதற்கு முன் நீர் எங்காவது கண்டிருந்தால் எனக்குச் சொல்லும்!” என்றான்.(8)

நீதிமானான யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட நாரதர், சிரித்துக் கொண்டே அந்தப் பாண்டுவின் மகனுக்கு இனிமையாகப் பதிலளித்தார்.(9)

நாரதர், “ஓ குழந்தாய், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்களுக்கு மத்தியில் இதைப் போன்று, ரத்தினங்களாலும், விலையுயர்ந்த கற்களாலும் கட்டப்பட்ட இந்த உனது சபாமண்டபத்தைப் போல நான் கண்டதோ கேட்டதோ கிடையாது.(10) ஓ பாரதா, இருப்பினும், இறந்தவர்களின் மன்னன் (யமன்), பெரும் புத்திகூர்மை கொண்ட வருணன் (Neptune) {நெப்டியூன் கிரகம் என்கிறார் கங்குலி}, தேவர்களின் மன்னன் இந்திரன், கைலாசத்தில் தனது வீட்டினை வைத்திருப்பவன் (குபேரன்) ஆகியோரது சபா மண்டபங்களைப் பற்றி நான் உனக்குச் சொல்கிறேன்.(11) அனைத்து களைப்புகளையும் {அசௌகரியங்களையும்} விரட்டும் பிரம்மனின் தெய்வீக சபையையும் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். இந்த அனைத்து சபாமண்டபங்களும், பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு வடிவங்களையும் தங்களுக்குள் கொண்டு, மனித மற்றும் தெய்வீக வடிமைப்புகள் கொண்டதாக இருக்கின்றன. அவை எப்போதும் தேவர்களாலும், பித்ருக்களாலும், சத்யஸ்யர்களாலும், கணங்கள் என்று அழைக்கப்பட்ட சிறுதெய்வங்களாலும், தங்கள் ஆன்மாக்களை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இடைவிடாது அமைதியான முனிவர்களைக் கொண்டு வேள்விகளைச் செய்து பிராமணர்களுக்கு பரிசுகள் வழங்கி, வேள்விகளைக் காணிக்கையாக அளிக்கும் துறவிகளாலும் வணங்கப்பட்டு வருகின்றன. ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நீ நான் சொல்வதைக் கேட்க விரும்பினால், இவை எல்லாவற்றையும் நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன்”, என்றார் {நாரதர்}.(12,13)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட, உயர்ந்த ஆன்மா கொண்ட நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், (தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும்) பிராமணர்களில் முதன்மையானவர்களுடனும் (வேண்டுதல் செய்யும் வகையில்) கரங்கள் கூப்பினான்.(14)

அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், “அந்தச் சபாமண்டபங்களக் குறித்து எங்கள் அனைவருக்கும் விளக்குவீராக. நாங்கள் நீர் சொல்வதைக் கேட்க விரும்புகிறோம்.(15) ஓ பிராமணரே {நாரதரே}, எந்தப் பொருட்களைக் கொண்டு அந்த சபைகள் கட்டப்பட்டிருக்கின்றன? ஒவ்வொன்றின் பரப்பளவு என்ன? அவை ஒவ்வொன்றின் நீளங்களும் அகலங்களும் எவ்வளவு? பெருந்தகப்பனுக்காக {பிரம்மனுக்காக} அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள்? {அவருக்கு சேவை செய்பவர்கள் யார்?}(16) தேவர்களின் தலைவனான வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்}, விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள்? வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள்?(17) ஓ பிராமண முனிவரே {நாரதரே}, இவை எல்லாவற்றையும் எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து நீர் விவரிப்பதைக் கேட்க விரும்புகிறோம். உண்மையில் எங்களது ஆவல் அதிகமாக இருக்கிறது”, என்றான் {யுதிஷ்டிரன்}.(18)

பாண்டுவின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட நாரதர் அவனுக்கு மறுமொழியாக, “ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தெய்வீக சபா மண்டபங்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக சொல்கிறேன். அனைவரும் கேளுங்கள்” என்றார் {நாரதர்}.(19)

புஷ்கரமாலினி என்ற இந்திர சபை! – சபாபர்வம் பகுதி 7-(லோகபால சபாகயானா பர்வம் – 03)- இந்திரனின் தேவலோக சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை நாரதர் விவரிப்பது…

நாரதர் சொன்னார், “சக்ரனின் {இந்திரனின்} தேவலோக சபாமண்டபம் பிரகாசம் நிறைந்தாக இருக்கிறது. அவன் தனது சொந்தச் செயல்களின் கனியாக {பலனாக} அஃதை அடைந்தான். ஓ குரு குலக் கொழுந்தே {யுதிஷ்டிரனே}, அது {இந்திரனின் சபா மண்டபம்} சூரியனின் பிரகாசத்தைக் கொண்டு, சக்ரனாலேயே {இந்திரனாலேயே} கட்டப்பட்டது.(1) விரும்பிய இடங்களுக்கெல்லாம் கொண்டு செல்லும் வகையில் உள்ள அந்த தேவலோக சபா மண்டபம், நூற்று ஐம்பது யோஜனை {1 யோஜனை = 8 மைல் = 12.8 கி.மீ.,} {150யோஜனை என்றால் 1920கி.மீ} நீளமும், நூறு யோஜனைகள் அகலமும் {1280 கி.மீ. அகலமும்}, ஐந்து யோஜனைகள் {64 கி.மீ} உயரமும் கொண்டது.(2) வயதால் ஏற்படும் பலவீனத்தையும், துன்பம், களைப்பு, அச்சம் ஆகியவற்றையும் விலக்கி, நன்மைகளையும், நற்பேற்றையும் அருளும் அந்த மண்டபம், தெய்வீக மரங்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகளும், இருக்கைகளும் கொண்டு, மிதமிஞ்சிய மகழ்ச்சியைக் கொடுக்க வல்லதாக இருக்கிறது.(3)

அந்தச் சபா மண்டபத்தில், ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரனே}, ஒரு அற்புதமான இருக்கையில், அழகும் செல்வமும் கொண்ட தனது மனைவி சச்சியுடன் தேவர்களின் தலைவன் {இந்திரன்} அமர்ந்திருக்கிறான்.(4) பல வண்ணங்களுடன் கூடிய மலர் வளையங்களைத் தரித்துக் கொண்டு, தூய வெள்ளுடை உடுத்தி, தலையில் கிரீடம் தரித்து, பிரகாசமான வளையங்களைத் தனது தோளில் அணிந்து கொண்டு, விவரிக்க இயலாத ஒரு வடிவைக் கொண்டு, அழகுடனும், புகழுடனும் அமர்ந்திருக்கிறான்.(5)

நூறு வேள்விகளைச் செய்த அந்த சிறப்புமிகுந்த தேவன் {இந்திரன்}, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த சபையில் உள்ளவர்களும், இல்லற வாழ்வைப் பின்பற்றுபவர்களுமான மருத்துகளால் தினமும் காக்கப்படுகிறான் {மருத்துகளின் பணிவிடையை ஏற்கிறான்}.(6) சித்தியர்களும் {Siddhyas}, தேவலோக முனிவர்களும், சத்யஸ்களும் {Sadhyas}, தேவர்களும், பிரகாசமான நிறம் கொண்ட மருதர்களும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தேவ வடிவம் கொண்டு, அனைத்து ஆபரணங்களையும் பூண்டு, எதிரிகளை நொறுக்கும், இறவாதவர்களின் தலைவனுக்கு {இந்திரனுக்குப்} பணிவிடை கொண்டிருக்கிறார்கள்.(7,8)

ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, தூய ஆன்மாவுடன், பாவங்கள் சுத்தமாகக் கழுவப்பட்டவர்களும், நெருப்பைப் போன்று பிரகாசித்து கொண்டிருப்பவர்களும், சக்தி கொண்டவர்களும், எந்தவிதமான துயரமும் இல்லாதவர்களும், கவலை என்ற நோயில் இருந்து விடுபட்டவர்களும், சோம வேள்வியைச் செய்பவர்களான தேவலோக முனிவர்கள் அனைவரும் இருக்கும் அந்த சோம வேள்வியைச் செய்யும் அனைவரும் இந்திரனை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். பராசரர், பர்வதர், சாவர்ணி, காலவர், {ஏகதர், த்விதர், த்ரிதர்}, சங்கர், {லிகிதர், கௌரசிரர், துர்வாசர், ச்யேனர், தீர்க்கதமஷ், பவித்ரபாணி, ஸாவர்ணி,} யாஜ்ஞவல்கியர், பாலுகி, உத்தாலகர், ஸ்வேதகேது, தாண்டியர், பாண்டாயினி, ஹவிஷ்மான், கரிஷ்டர், மன்னன் ஹரிச்சந்திரன்; ஹிருத்யர், உதரசாண்டில்யர், பராசரியர், கிருஷீவலர், வாதஸ்கந்தர், விசாகர், விதாதா, காலா, காராலதந்தர், தஷ்டிரி, விஸ்வகர்மா, தும்புரு,(11-14) மேலும் பிற முனிவர்கள், அவர்களில் சிலர் பெண்கள் மூலம் பிறந்தவர்கள், மற்றவர்கள் காற்றின் மூலம் வாழ்பவர்கள், நெருப்பின் மூலம் வாழ்பவர்கள் ஆகியோர் இடியைத் தாங்கும் உலகங்களின் தலைவனான இந்திரனை வழிபடத் தயாராக நிற்கின்றனர்.

சகாதேவர், சுநீதர், பெரும் ஆன்மத் தகுதியுடைய வால்மீகி, பொய்யா மொழி கொண்ட சமீகர், வாய்மை தவறாத பிரசேதஸ், மேதாதிதி, வாமதேவர், புலஸ்தியர், புலஹர், கிரது, மருத்தர், மரீச்சி, பெரும் ஆன்மத்தகுதியுடைய ஸ்தாணு, கக்ஷீவத் {கக்ஷீவான்}, கௌதமர், தார்க்ஷ்யர், வைச்வானரர், காலகவ்ருக்ஷீய முனிவர், ஆச்ராவ்யர், ஹிரண்மயர், சம்வர்த்தர், தேவஹவ்யர், பெரும் சக்தி கொண்ட விஸ்வஸேனர், கன்வர், கத்யாயணர், ஆகியோரும் ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கர்க்கர், கௌசிகர் ஆகியோர் அனைவரும், தெய்வீக நீர்நிலைகள் மற்றும் தாவரங்கள், நம்பிக்கைகள், மேதைமைகள், கல்வி தேவி {சரஸ்வதி}, செல்வம், அறம், இன்பம், மின்னல் ஆகியவற்றுக்கு அதிபதிகளும் அங்கே இருந்தனர். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே} மழையைத் தனக்குள் அடக்கியுள்ள மேகங்கள், காற்றுகள், சத்தமாக ஒலியெழுப்பும் தெய்வீக சக்திகள்,(15-20) கிழக்கு புள்ளி {திசை}, வேள்விகளில் தெளிந்த நெய்யை அனுப்பும் இருபத்தியேழு நெருப்புகள்[1], அக்னி, சந்திரன், இந்திரனின் நெருப்பு {இந்திராக்னிகள்}, மித்ரன், சாவித்ரி {ஸவிதா}, அர்யமான்,(21) (1. கார்ஹபத்யம், 2. ஆஹவநீயம், 3. தக்ஷிணம், 4. நர்மந்த்யம், 5. வைத்யும், 6. சூரம், 7. ஸம்வர்த்தம், 8. லௌகிகம், 9. ஜாடரம், 10. விஷகம், 11. க்ரவ்யாத், 12. க்ஷேமவான், 13. வைஷ்ணவம், 14. தஸ்யுமான், 15. பலதம், 16. சாந்தம், 17. புஷ்டம், 18. விபாஸு, 19. ஜ்யோதிஷ்மான், 20. பதேர், 21. பத்ரம், 22. ஸ்விஷ்டக்ருத், 23. வஸுமான், 24. க்ரது, 25. ஸோமம், 26. பித்ருமான், 27. அங்கிரஸ் என்று கும்பகோணம் பதிப்பில் உள்ளது)பகன், விஸ்வசத்யஸ்யர்கள் {விச்வேதேவர்கள்}, {ஸாத்யர்கள்}, குரு {பிருஹஸ்பதி}, சுக்ரன், விஸ்வாவசு, சித்திரசேனன், சுமணன், தருணன்,(22) வேள்விகள் {யஜ்ஞபுருஷர்கள்}, பிராமணர்களுக்கான கொடைகள் {தக்ஷிணைகள்}, கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியன ஓ பாரதா {யுதிஷ்டிரா}, வேள்விகளில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஆகியன அங்கே காத்துக் கிடந்தன.(23) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே பல அப்சரஸ்களும், கந்தர்வர்களும், பலவகை நடனங்களையும், கருவி மற்றும் குரலால் எழுப்பப்படும் இசையையும் நற்பேற்றைக் கொண்டுவரும் சடங்குகளையும் செய்து பல திறன்களையும் வெளிக்காட்டிக் கொண்டு பலனையும், விருத்திரனையும் கொன்றவனும், சதக்ரதுவும், ஒப்பற்றவனுமான இந்திரனை வழிபட்டனர்.(24-26)

இவையெல்லாவற்றையும் தவிர்த்து, மற்றும் பல பிராமணர்களும், அரச மற்றும் தெய்வீக முனிவர்களும், நெருப்புக்கு ஒப்பாகப் பிரகாசித்து, மலர் அலங்காரங்களாலும் ஆபரணங்களாலும் நிரம்பி, பல்வேறு வகைகளிலான தெய்வீகத் தேர்களில் அந்த சபைக்கு வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கின்றனர்.(27) அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பிருஹஸ்பதியும் சுக்ரனும் அங்கே இருக்கின்றனர். இவர்களும் இன்னும் பல கடும் தவங்களை இயற்றிய ஒப்பற்ற துறவிகளும்,(28) பிருகுவும், பிரம்மாவுக்கு சமமான ஏழு முனிவர்களும், சோமனின் {சந்திரனின்} தேர் போன்ற தங்கள் தெய்வீகத் தேர்களில்  பயணித்து, அங்கே வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தனர்.(29) ஓ பெரும் கரம் கொண்ட ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, புஷ்கரமாலினி என்று அழைக்கப்பட்ட அந்த நூறு வேள்விகளைச் செய்த இந்திரனின் சபா மண்டபத்தை நான் கண்டிருக்கிறேன். யமனின் சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை இனி கேட்பாயாக” {என்றார் நாரதர்}.(30)

யம சபை! – சபாபர்வம் பகுதி 8-(லோகபால சபாகயானா பர்வம் – 04)யமனின் {தர்மதேவனின்} சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது…

நாரதர் சொன்னார், “ஓ யுதிஷ்டிரா, நான் இப்போது விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட விவஸ்வத்தின் மகனான யமனின் சபா மண்டபத்தைப் பற்றிச் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(1)

ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, அந்தச் சபா மண்டபம், நூறு யோஜனை பரப்பளவில் புடம் போட்ட தங்கமெனப் பிரகாசித்துக்  கொண்டுள்ளது. சூரியனைப் போன்றப் பிரகாசமுடைய அது {யமசபை}, விரும்பியவற்றைக் கொடுக்கவல்லது. அது மிகக் குளிராகவும், மிக வெப்பமாகவும் இல்லாமல், இதயத்தை மகிழ்ச்சியில் வைக்கிறது.(2,3) அந்தச் சபா மண்டபத்தில், துக்கமோ, வயதால் ஏற்படும் பலவீனமோ, தாகமோ பசியோ ஏற்படாது. ஏற்றுக் கொள்ள முடியாத எந்தப் பொருளுக்கும் அங்கே இடம் கிடையாது. எந்த வகையான தீய உணர்வுகளும் அங்கே எழாது.(4) தேவர்களாலும் மனிதர்களாலும் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும் அந்த மாளிகையில் உள்ளன. ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரனே}, இனிப்பான, நீர்த்தன்மையுள்ள, ஏற்புடைய, நக்கி, உறிஞ்சி, குடிக்கக்கூடிய ருசியான உணவு வகைகளும் சுவை மிகுந்த இன்பத்துக்குகந்த அனைத்துப் பொருட்களும் அபரிமிதமாக அங்கே இருக்கின்றன. அந்த மாளிகையை அலங்கரிக்கும் மலர் மாலைகளின் நறுமணம் அலாதியானது. அங்கே அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கும் மரங்கள் விரும்பும் கனியைக் கொடுக்கவல்லவை.(5,6) அங்கே இனிமையான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க குளிர்ந்த மற்றும் வெப்ப நீர்நிலைகள் உள்ளன. அந்த மாளிகையில் களங்கமற்ற அரச முனிகளும், தூய்மை மிகுந்த பிரம்ம முனிவர்களும் மகிழ்ச்சியுடன் காத்திருந்து, விவஸ்வத்தின் மகனான யமனை வழிபடுகின்றனர்.

யயாதி, நகுஷன், புரு, மாந்தாத்ரி, சோமகன், நிரிகன்,(7,8) அரசமுனி திரசதஸ்யு, கிருதவீரியன், சௌதஸ்வஸ், அரிஷ்டநேமி, சித்தன், கிருதவேகன், கிரீடி, நிமி, பிரதார்த்தனன், சிபி, மத்ஸ்யன், பிரிதுலாக்ஷன், பிரஹத்ரதன், பர்தான், மருதன், குசிகன், சங்கஸ்யன், சங்கிரிதி, துருவன், சதுராஸ்வன், சதஸ்வொர்மி, மன்னன் கார்த்தவீரியன், பரதன், சுரதன், சுனிதா, நிசதன், நளன், திவோதாசன், சுமணஸ், அம்பரீசன், பகீரதன், வியாஸ்வன், வதரஸ்வன், பிரிதுவேகன், பிரிஷதஸ்வன், வசுமனஸ், க்ஷூபன், சுமஹவளன், பிரிஷத்கு, பிருஷசேனன், புருகுத்சன், த்வைஜன், ரதின், அர்ஷ்டிசேனன், துவிலீபன், உயர்ந்த ஆன்மா கொண்ட உசீநரன்; அவுசிநரி, புண்டரிகன், சர்யதி, சரவன், சுச்சி; அங்கன், ரிஷ்டன், வேணன், துஷ்மந்தன் {துஷ்யந்தன்}, ஸ்ரீன்ஜெயா, ஜெயா, பாங்கசூரி, சுனிதா, நிஷாதா, பஹிநரா, கரந்தாமன், பால்ஹிகன், சுத்யும்னன், பலம்வாய்ந்த மது, ஐலன், பூமியின் பலம் பொருந்திய மன்னன் மருதன்; கபோடன், திரிநகன், சகாதேவன், அர்ஜுனன் ஆகியோரும்.

மேலும், வியுசவன், சஸ்வன், கிரிஷ்வன் மன்னன் சசவிந்து, தசரதனின் மகன் ராமன், லக்ஷ்மணன், பிரதார்த்தனன், அலர்கன், காக்ஷசேனன், கயன், கௌரஸ்வன், ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமன்}, நபாகன், சகரன்; பூரிதியும்னா, மஹஸ்வன், பிரதாஸ்வன், ஜனகன், மன்னன் வைன்யன், வரிசேனன், புருஜித், ஜனமேஜயன், பிரம்மதத்தன், திரிகார்த்தன், மன்னன் உபரிசரன், இந்திரத்யும்னன், பீமாஜனு, கௌரபிரிஷ்டன், நளன், கயன், பத்மன், மச்சுகுந்தன், பூரிதியும்னன், பிரசேனஜித்; அரிஷ்டநேமி, சுத்யும்னன், பிரிதுலௌஸ்வன், அஷ்டகன், மேலும், மத்ஸ்ய குலத்தின் நூறு மன்னர்களும், விபன் குலத்தில் இருந்து நூறு மன்னர்களும், ஹய குலத்தில் இருந்து நூறு மன்னர்களும்,(9-22) திருதராஷ்டிரன் என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும், ஜனமேஜயன் என்ற பெயர் கொண்ட எண்பது மன்னர்களும், பிரம்மதத்தன் என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும், ஐரி என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும்,(23) பீஷ்மன் என்ற பெயர் கொண்ட இருநூறுக்கும் அதிகமானவர்களும், பீமன் என்ற பெயர் கொண்ட நூற்றுக்கும் அதிகமானவர்களும், நூற்றுக்கணக்கான பிரதிவிந்தியர்களும், நூற்றுக்கணக்கான நாகர்களும்,(24) நூற்றுக் கணக்கான பலாசர்களும், நூற்றுக்கணக்கான கசன் மற்றும் குசன்களும், மன்னர்களுக்கு மன்னனான ஸ்தாணு, உனது தந்தை பாண்டு,(25) உசங்கவன், சதரதன், தேவராஜன், ஜெயத்ரதன், தனது அமைச்சர்களுடன் கூடிய புத்திசாலி அரசமுனி விருஷதர்வன்,(26) சசவிந்து என்ற பெயர்கொண்ட ஆயிரம் பிற மன்னர்களும், பல குதிரை வேள்விகளைச் செய்து பிராமணர்களுக்கு கொடைகளை அளித்தவர்களும், இறந்த பின்பு அங்கே வந்து, ஓ மன்னா, விவஸ்வத்தின் மகனுக்காக {யமனுக்காக} அந்தச் சபா மண்டபத்தில் காத்திருந்தனர்.(27,28)

அகத்தியர், மதங்கர், கலா, மிரித்யு (மரணம்), வேள்விகளை நடத்துபவர்கள், சித்தர்கள், யோகிகள், (அக்னிஸ்வத, பெனாப, உஷாம்ப, ஸ்வதவத், வேர்ஹிஷதா வகை சார்ந்த) பித்ருக்கள்,(29,30) வடிவம் உள்ள மற்றவர்கள், காலச்சக்கரம், வேள்வி நெய்யைச் சுமப்பவன் {அக்னி}, மனிதப் பிறப்பில் பாவம் செய்தவர்கள், குளிர்கால சங்கராந்தியில் {தக்ஷிணாயனம் = ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரையில்} இறந்தவர்கள்,(31) ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை எண்ணுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள யமனின் அதிகாரிகள், சிங்சபம், பலாசம், கசம், குச மரங்களும் செடிகளும் உடலெடுத்து அங்கே வந்து, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீதி தேவனுக்காக {யமனுக்காக}, அவனது அந்தச் சபாமண்டபத்தில் காத்திருந்து வழிபட்டனர். பித்ருக்களுடைய மன்னனின் {யமனின்} சபையில் இவர்களையும் தவிர்த்து பலரும் இருந்தனர்.(32,33) அவர்களது பெயர்களையும், செயல்களையும் குறித்து என்னால் விவரிக்க முடியாத அளவுக்கு அவர்கள் எண்ணற்றவர்களாக இருக்கின்றனர். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரனே}, அந்த மகிழ்ச்சிகரமான சபா மண்டபம், அதன் உரிமையாளரின் விருப்பப்படி எங்கும் நகரும் தன்மை கொண்டு அகன்று விரிந்து இருந்தது. அது நீண்ட காலம் தவம் செய்து விஸ்வகர்மனால் கட்டப்பட்டது.(34)

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவனது {விஸ்வகர்மனின்} ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருக்கும், அது தனது அழகுக்காகப் புகழப்படுகிறது. தீவிர நோன்பு நோற்று, அற்புதமான உறுதிகள் ஏற்று, உண்மை பேசி, அமைதியாக தூய புனிதமான செயல்களைச் செய்யும் சந்நியாசிகள், கறைகள் அற்ற உடை உடுத்தி, தன்னொளியில் பிரகாசித்து, வளையங்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கம் பளபளக்கும் காது குண்டலங்களுடன் அந்த சபைக்கு வந்து போயிருந்தனர்.(35-37) சிறப்பு மிகுந்த கந்தர்வர்களும், அப்சரஸ்களும் ஆடிக்கொண்டு அந்த அறை முழுவதையும். தங்கள் சிரிப்புச் சத்தத்துடன் சேர்த்து தங்கள் கருவிகளாலும் குரலாலும் இசையால் நிறைத்தனர்.(38) ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, அற்புதமான நறுமணமும், இனிமையான சத்தங்களும், தெய்வீக மலர்களால் ஆன மாலைகளும் அந்த மாளிகையை அருளப்பட்டதாக ஆக்கின.(39) நூறாயிரக்கணக்கான தெய்வீக அழகும், பெரும் ஞானமும் கொண்ட அறம் சார்ந்த மனிதர்கள், படைக்கப்பட்டவர்களின் தலைவனான அந்தச் சிறப்பு மிகுந்த யமனுக்காக அந்த சபா மண்டபத்தில் காத்திருந்து வழிபடுகின்றனர்.(40) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, சிறப்பு மிகுந்த பித்ருக்களின் மன்னனின் அந்த சபை இப்படியே இருக்கிறது. நான் இனி புஷ்கரமாலினி என்றே அழைக்கப்பட்ட வருணனின் சபா மண்டபத்தைக் குறித்துச் சொல்கிறேன்.(41)

வருண சபை! – சபாபர்வம் பகுதி 9-(லோகபால சபாகயானா பர்வம் – 05)-வருணனின் சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது

நாரதர் சொன்னார், “ஓ யுதிஷ்டிரா, வருணனின் தெய்வீக சபை பிரகாசத்தில் இணையற்றதாக உள்ளது. அது நீள அகலங்களில் யம சபையைப் போன்றே உள்ளது. அதன் சுவர்களும், வளைவுகளும் தூய வெள்ளை நிறத்தில் உள்ளன.(1) அது (தேவ தச்சன்) விஸ்வகர்மனால் நீருக்குள் கட்டப்பட்டது. அது சுற்றிலும் அற்புதமான கனிகளையும், மலர்களையும் கொடுக்கவல்ல தங்கத்தாலும் ரத்தினங்களாலும் ஆன மரங்களால் சூழப்பட்டுள்ளது.(2) நீலமும் மஞ்சளும், கருப்பும் கருமையும், வெள்ளையும் சிவப்பும் ஆகிய நிறங்களில் பூங்கொத்துகள் மிகுந்து இருக்கும் பல மரங்கள் அங்கே இருக்கின்றன.(3) அந்த மரங்களில், பல வண்ணங்களில் அழகாக இருக்கும், நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள், தங்கள் இனிய இசையை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.(4) அந்த மாளிகை குளிர்ச்சியாகவும் இல்லாமல், வெப்பமாகவும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சிகரமான சூழ்நிலை கொண்டதாக இருந்தது. வருணனுக்குச் சொந்தமான அந்த சபா மண்டபத்தில் பல இருக்கைகளுடன் கூடிய பல வெண்ணிற அறைகளும் இருக்கின்றன. அங்கே வருணன் தெய்வீக ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களும் நகைகளும் பூண்டு, தெய்வீக வாசனைப் பொருட்களை மேனியில் தரித்து, தனது ராணியுடன் {வாருணியுடன்} அமர்ந்திருக்கிறான். நீர்த்தேவனான வருணனுக்காகக் காத்திருந்து, ஆதித்தியர்கள் அவனை வழிபடுகிறார்கள்.(5-7)

வாசுகி, தக்ஷகன், ஐராவதன் என்று அழைக்கப்படும் நாகன், கிருஷ்ணனும் லோகிதனும், பத்மனும், பெரும் சக்தி கொண்ட சித்ரனும், கம்பலன் மற்றும் அசுவதரன் என்று அழைக்கப்படும் நாகர்களும், திருதராஷ்டிரன், வலாஹகன், மதிமான் {மணிமான்}, குண்டதாரன், கார்க்கோடகன், தனஞ்சயன், பாணிமத் {பாணிமான்}, பெரும் பலம் வாய்ந்த குண்டகன், ஓ பூமியின் தலைவனே {யுதிஷ்டிரா}, பிரஹ்லாதன், மூஷிகதன், ஜனமேஜயன் மற்றும் அனைத்து நற்குறிகளும், மண்டலங்களும் நீண்ட தலைகளும் கொண்ட பல பாம்புகளும் அங்கு இருந்தன. ஓ யுதிஷ்டிரா, இவர்கள் அனைவரும் எந்தத் துயரமும் இல்லாமல் சிறப்பு வாய்ந்த வருணனுக்காகக் காத்திருந்து, அவனை வழிபடுகிறார்கள். ஓ மன்னா, விரோசனனின் மகன் பலி, முழு உலகத்தையும் அடக்கிய நரகன்,(8-12) சங்கிரகன் {ஸமஹ்ராதன்}, விப்ரசித்தி மற்றும் தானவர்களான காலகஞ்சன், சுஹனு, துர்முகன், சங்கன், சுமணன் {ஸுமனஸ்}, சுமதி, கடோதரன், மஹாபார்ஸ்வன், கர்த்தனன், பிடரன், விஸ்வரூபன், ஸ்வரூபன், விரூபன், மஹாசிரஸ் {மஹாசிரன்}, தசக்ரீவன், வாலி, மேகவாசஸ் {மேகவாஸன்}, தசாவரன், டிட்டிபன், விடபூதன், சங்கிரதன் {ஸமஹ்லாதன்}, இந்திரதாபனன் ஆகிய தைத்தியர்களும் தானவர்களும் காது குண்டலங்களுடனும்(13-15) மலர் அலங்காரங்களுடனும், மணிமுடிகளுடனும் {கிரீடங்களுடனும்} தெய்வீக ஆடைகள் பூண்டு, தங்கள் வீரத்தால் பல வரங்களைப் பெற்று, சாகாத வரத்தை அனுபவித்து {மேலுலகில்}, நன்னடத்தை கொண்டு, நல்ல சபதங்களை மேற்கொண்டு, அந்த அறைகளில் சுருக்குக் கயிறைத் தனது ஆயுதமாகக் கொண்ட சிறப்பு மிகுந்த வருணனுக்காகக் காத்திருந்து, அவனை வழிபட்டார்கள்.

ஓ மன்னா, பெருங்கடல்கள் நான்கும், பாகீரதி {கங்கை} ஆறும், கலிந்தி {யமுனை}, விதிசை, வேணை, வேகமான நீரோட்டம் கொண்ட {வேகவாஹினி} நர்மதை, விபாசை, சதத்ரு, சந்திரபாகை, சரஸ்வதி, இராவதி, விதஸ்தை, சிந்து, தேவநதி, கோதாவரி, கிருஷ்ணவேன்வா {கிருஷ்ணவேணி}, நதிகளின் ராணி காவேரி, கிம்புனை, விசல்யை, வைதரணி ஆறு, திருதீயை, ஜ்யேஷ்டிலை, பெரும் சோணை {சோணமெனும் பெரும் நதம்}, சர்மண்வதி, பெரும் நதியான பர்ணாசை, சரயு, வாரவத்யை, நதிகளின் ராணி லாங்கலி, கரதோயை, ஆத்ரேயி, சிவுப்பு மஹாநதம் {லௌஹித்யம்}, லகன்தி {லங்கதி}, கோமதி, சந்தியை, திரிஸ்ரோதசி ஆகிய புனிதமான நதிகளும், புனிதப் பயணம் செல்லக்கூடிய உலகப்புகழ்பெற்ற இடங்கள்,(16-23) மேலும் பல நதிகள், புனித நீர்நிலைகள், ஏரிகள், கிணறுகள், நீரூற்றுகள், பெரியதும் சிறியதுமான குளங்கள் அனைத்து உருவமெடுத்து அங்கே வந்து, ஓ பாரதா {யுதிஷ்டிரா} தலைவன் வருணனுக்காகக் காத்திருந்து, அவனை வழிபட்டன.

விண்ணுலகின் {சொர்க்கத்தின்} புள்ளிகளும் {திசைகளும்}, அனைத்து மலைகளும், அனைத்து நீர் வாழ் உயிரினங்களும் வருணனை வணங்கி அங்கே நிற்கின்றன. கருவி {இசை கருவி} மற்றும் குரல் இசைக்கு தங்களை அர்ப்பணித்திருந்த கந்தர்வ, அப்சரஸ்களின் பல்வேறு இனங்களும், புகழ்ச்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டு வருணனுக்காகக் காத்திருக்கின்றனர். தான் கொண்டிருக்கும் ரத்தினங்களால் வளமான குறிப்பிட்ட அனைத்து மலைகளும் உருவம் கொண்டு அந்த சபைக்கு வந்து ஒருவருடன் ஒருவர் பேசி மகிழ்ந்தனர்.(24-27) சுனபன் என்ற பெயர் கொண்ட வருணனின், முதல் அமைச்சர் {தலைமை அமைச்சர்}, தனது மகன்கள், பேரர்கள் மற்றும் தெய்வீக நீர்நிலைகளுடனும் தனது தலைவனுக்குப் பணி செய்ய காத்திருந்தான். இப்படி உருவம் கொண்டு வந்த அனைவரும் அந்த தெய்வத்தை {வருணனை} வணங்கினர்.(28,29) ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, எனது உலக சுற்றலின் போது கண்ட வருணனின் சபா மண்டபம் இப்படித்தான் இருக்கும். இனி குபேரனின் சபா மண்டபத்தைக் குறித்து கேள்”. {என்றார் நாரதர்}.(30)

குபேர சபை! – சபாபர்வம் பகுதி 10-(லோகபால சபாகயானா பர்வம் – 06)-குபேரனின் சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது…

நாரதர் சொன்னார், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வைஸ்ராவணனின் {குபேரனின்} சபாமண்டபம், நூறு யோஜனை நீளத்துடனும், எழுபது யோஜனை அகலத்துடனும் பிரகாசத்துடன் இருக்கிறது.(1) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அது வைஸ்ரவணனின் ஆன்ம சக்தியாலேயே கட்டப்பட்டது. கைலாய மலைச் சிகரங்களின் பிராகாசத்துடன் இருக்கும் அந்த மாளிகை, தனது சுய கிரகணங்களினால் சந்திரனின் பிராகசத்துடன் இருக்கிறது.(2) குஹ்யர்களால் தாங்கப்படும் அந்த மாளிகை வானமண்டலத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தெய்வீகத் தயாரிப்பான அது, தங்கத்தாலான உயர்ந்த அறைகளுடன் அழகாக இருக்கிறது.(3) எல்லையற்ற மகிழ்ச்சியுடன் தெய்வீக வாசனைத் திரவியங்களின் நறுமணம் கமழ, வண்ணமயமான விலையுயர்ந்த நகைகளுடன் இருக்கிறது. காற்றில் மிதந்து வரும் மலைக்குன்றுகள் போல இருக்கும் வெண்ணிற மேகங்களுக்கு ஒப்பானதாக அஃது இருக்கிறது.(4) தெய்வீகத் தங்க நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு, அது மின்னல் கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாளிகைக்குள், மேலே தெய்வீக விரிப்புகள் விரிக்கப்பட்டு, கால் வைக்க அழகான கால்மனையுடன் கூடிய, சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் ஆசனம் ஒன்று இருந்தது. ஏற்றுக்கொள்ளும் உருவத்துடன் இருந்த வைஸ்ராவணன் {குபேரன்}, அருமையான உடுப்புகள் உடுத்தி, விலையுயர்ந்த ஆபரணங்கள் பூண்டு, பிரகாசிக்கும் காது குண்டலங்களுடன், தனது ஆயிரம் {1000} மனைவியரால் சூழப்பட்டு அந்த ஆசனத்தில், அமர்ந்திருக்கிறான்.(5,6)

மந்தர மலையில் இருந்து காடுகள் வழியாக முணுமுணுத்துக் கொண்டு அங்கு வரும் அருமையான குளிர்ந்த தென்றல், கூடவே தோட்டங்களில் இருந்த மல்லிகை மணத்தையும், அலகை நதியில் மார்பில் வீற்றிருக்கும் தாமரைகளின் மணத்தையும், யக்ஷர்களின் மன்னனின் நந்தனத் தோட்டத்தின் மணத்தையும் தாங்கிக் கொண்டு வருகிறது.(7,8) அங்கே கந்தர்வர்களுடன், தேவர்களும், பல இனங்களில் இருந்த வந்த அப்சரஸ்களும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தெய்வீக இனிமை கொண்ட பாடல்களைக் பாடிக் கொண்டிருக்கின்றனர்.(9) மிச்ரகேசி, ரம்பை, சித்ரசேனை, சுசிஸ்மிதை, சாருநேத்ரை, கிரிடச்சி {கிருதாசி}, மேனகை, புஞ்சிகஸ்தலை, விச்வாசி, சஹஜன்யை, பிரம்லோசை, ஊர்வசி, இரை, வர்க்கை, சௌரபேயி, சமீசி, புத்புதை, லதை போன்றோரும்,(10,11) இசையிலும் ஆடல்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஆயிரக்கணக்கான அப்சரஸ்களும் கந்தர்வர்களும் அங்கே கருவூலத் தலைவன் {பொக்கிஷத் தலைவன்} குபேரனுக்கு பணி செய்கின்றனர்.(12) பல்வேறு கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ் இனங்களின் கருவிகள் {இசைக் கருவிகள்} மற்றும் இனிமையான குரலால் அந்த மாளிகை எப்போதும் நிறைந்து இருக்கிறது.(13)

கின்னரர்கள் என்று அழைக்கப்பட்ட கந்தர்வர்களும், நரர்கள் என்று அழைக்கப்பட்ட மற்றவர்களும், மாணிபத்ரன், தனதன், ஸ்வேதபத்ரன், குஹ்யகன், கசேரகன், கண்டகண்டு, பெரும் பலம் வாய்ந்த பிரத்யோதன், குஸ்தும்புரு, பிசாசன், கஜகர்ணன், விசாலகன், வராஹகர்ணன், தாம்ரோஷ்டகன், பல்கக்ஷன், பலோதகன், ஹம்ஸசூடன், சிக்ஷவர்த்தன் {சிகாவர்த்தன்}, {ஹேமநேத்ரன்}, விபீஷணன், புஷ்பானனன், பிங்களகன், சோணிதோதன், பிரபாலகன், விருக்ஷவாஸி நிகேதன், சீரவாசஸ் {சீரவாஸன்} ஆகியோரும், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யக்ஷர்களும் குபேரனுக்காகக் காத்திருக்கின்றனர்.(14-18) தெய்வீகமான லட்சுமி தேவி அங்கேயே தங்கியிருக்கிறாள். குபேரனின் மகன் நளகுபேரனும் அங்கேயே தங்கியிருக்கிறான். நானும் {நாரதர்}, என்னைப் போன்றோரும் அங்கே அடிக்கடி சென்று வருவோம்.(19)

என்னால் பெயர் சொல்லப்படாத பல ராட்சசர்களும், பல கந்தர்வர்களும் அந்த மாளிகையில் காத்திருந்து அந்த கருவூலத் தலைவனை {குபேரனை} வழிபடுகின்றனர். மேலும், ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரா}, உமையின் சிறப்புவாய்ந்த கணவனும், படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் தலைவனுமான திரிசூதலத்தைத் தாங்கி பாகநேத்ரன் என்ற அசுரனைக் கொன்றவனும், கடுமையான வில்லைக் கொண்ட வலிமை மிக்க தெய்வமுமான முக்கண் மகாதேவன் {சிவன்}, குள்ளமான உருவம் கொண்டவையாக சிலவும், கடுமையான முகம் கொண்டவையாக சிலவும், கூன் முதுகு கொண்டவையாக சிலவும், சிவந்த கண்கள் கொண்டவையாக சிலவும், பயங்கர ஓலமிடும் சிலவும், கொழுப்பையும் சதையையும் {இறைச்சியையும்} உண்ணும் சிலவும், காண்பதற்கு பயங்கரமான சிலவும் என நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆவிகளால் சூழப்பட்டு, பலவகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, காற்றின் {வாயு} வேகம் கொண்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண் தெய்வத்துடன் {பார்வதியுடன்}, களைப்பறியாது, அங்கே தனது நண்பனான கருவூலத் தலைவன் குபேரனுக்காகக் காத்திருக்கிறான்.(20-24)

மேலும், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நூற்றுக்கணக்கான கந்தர்வத் தலைவர்களும், தங்களுக்குரிய ஆடைகளுடன் விசுவாவசு, ஹாஹா, ஹூஹூ,(25) தும்புரு, பர்வதன், சைலூஷன், இசையில் நிபுணனான சித்திரசேனன், சித்திரரதன் ஆகியோரும், எண்ணிலடங்கா கந்தர்வர்களும் அங்கே கருவூலத் தலைவனை {குபேரனை} வணங்கி நிற்கின்றனர். வித்யாதரர்களின் தலைவனான சக்ரதாமன், தன்னைத் தொடர்பவர்களுடன் சேர்ந்து(26,27) அந்த மாளிகையில் கருவூலத் தலைவனுக்காகக் {குபேரனுக்காகக்} காத்திருக்கிறான்.(28) மேலும், நூற்றுக்கணக்கான கின்னரர்களும், பகதத்தனைத் தங்கள் தலைவனாகக் கொண்ட எண்ணிலடங்கா மன்னர்களும், கிம்புருஷர்களின் தலைவனான துருமனும், ராட்சசர்களின் தலைவனான மகேந்திரனும், யக்ஷர்களுடனும் கந்தர்வர்களுடனும் கூடிய கந்தமாதனனும், பல ராட்சசர்களும் அங்கே கருவூலத் தலைவனுக்காகக் {குபேரனுக்காகக்} காத்திருக்கின்றனர்.(29,30) அறம் சார்ந்த விபீஷணனும் அங்கே தனது மூத்த தமையனான தலைவன் குபேரனை (Croesus[1] என்கிறார் கங்குலி) வழிபட்டு நிற்கிறான்.(கிரோயீசஸ் என்பவன் லிடியா {இன்றைய துருக்கி} என்ற நாட்டை ஆண்டவன் என்றும் கிரேக்க மற்றும் பாரசீக பண்பாட்டில் அவனது பெயர் வசதியான செல்வந்தனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்றும் விக்கிப்பீடியா சொல்கிறது.) இமயத்தில் இருக்கும் மலைகளும் {ஹிமாலயம்}, பாரிபாத்திரம் {பாரியத்ரம்}, விந்தியம், கைலாஸம், மந்தரம்,(31) மலயம், துர்துரம், மஹேந்திரம், கந்தமாதனம், இந்திரகீலம், சுனாபம் ஆகிய மலைகளும், மேலும் கிழக்கு மற்றும் மேற்கிலிருக்கும் {கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி} மலைகளும்,(32) இன்னும் பல மலைகளும் உருவம் கொண்டு, மேருவைத் தங்கள் அனைவரின் முன்பும் நிறுத்தி, சிறப்புமிகுந்த கருவூலத் தலைவனுக்காகக் காத்திருந்து வழிபட்டு வருகின்றன.(33)

சிறப்பு மிகுந்த நந்தீஸ்வரன் {நந்திகேசுவரர்}, மஹாகாலன் மற்றும் அம்பு போன்ற காதுகளும், கூரிய வாய்களும் கொண்டு பல ஆவிகளும், காக்ஷன் {காஷ்டன்}, குடீமுகன், தந்தி, பெரும் ஆன்மத்தகுதியுடைய விஜயன், சிவனின் வாகனமான ஆழ்ந்த கர்ஜனை செய்யும் பெரும்பலம் வாய்ந்த காளை, {தபோதிகன், சங்குகர்ணன்} ஆகிய அனைவரும் அந்த மாளிகையில் காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் தவிர்த்து, மற்ற பல ராட்சசர்களும், பிசாசங்களும் (பேய்களும்) அந்தச் சபாமண்டபத்தில் குபேரனை வழிபட்டு நிற்கின்றனர். முன்னதாக அந்த புலஸ்தியரின் மகன் (குபேரன்) தேவர்களுக்குத் தேவன், மூன்று உலகைப் படைத்தவனான, பணியாட்களால் சூழப்பட்ட அந்தத் தலைமைத் தேவனான சிவனைப் பல வகைகளில் வணங்கி, அவனது உத்தரவு பெற்ற பிறகு அமர்ந்து கொள்கிறான். மேன்மையான பவன் {சிவன்} ஒரு நாள் குபேரனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டான். அந்த நாளில் இருந்து, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தனது நண்பனான கருவூலத் தலைவனுடன் {குபேரனுடன்} எப்போதும் மகாதேவன் {சிவன்} அமர்ந்து வருகிறான்.(34-38) ரத்தினங்களில் சிறந்தவர்களும், மூவுலகங்களிலும் உள்ள அனைத்து ரத்தினங்களின் இளவரசர்களான சங்கனும் பத்மனும், உருவம் கொண்டு, பூமியிலுள்ள அனைத்து ரத்தினங்களுடன் அங்கே குபேரனை வழிபட்டு வருகின்றனர்.(39)

வான மண்டலத்தில் இணைக்கப்பட்டு, நினைத்த இடத்திற்கும் நகரும் தன்மையுள்ள, மகிழ்ச்சி நிறைந்த குபேரனின் சபாமண்டபத்தை, நான் இப்படியே பார்த்திருக்கிறேன். இனி பெருந்தகப்பனான பிரம்மனின் சபையைக் குறித்துச் சொல்கிறேன்” {என்றார் நாரதர்}.(40)

பிரம்ம சபை! – சபாபர்வம் பகுதி 11-(லோகபால சபாகயானா பர்வம் – 07)-பிரம்மாவின் சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது…

நாரதர் சொன்னார், “ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, யாராலும் விவரிக்க முடியாத பெருந்தகப்பனின் சபா மண்டபத்தைப் பற்றி அப்படியே சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(1) பழங்காலத்தில், கிருத யுகத்தில் (பொற்காலத்தில்), ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்க தேவனான ஆதித்தியன் {சூரியன்} (ஒரு முறை) விண்ணுலகில் இருந்து மனிதர்களின் மண்ணுலகுக்கு இறங்கி வந்தான்.(2) சுயம்புவான பிரம்மனின் சபா மண்டபத்தை ஏற்கனவே கண்டிருந்த ஆதித்தியன் பூமியில் மனித உருவோடு மகிழ்ச்சியாக உலவிக் கொண்டிருந்தான். அச்சந்தர்ப்பத்தில், ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அளவிடமுடியாத, பொருளாலாகாத, விவரிக்க முடியாத, உருவம் மற்றும் வடிவம் குறித்து சொல்ல முடியாத, பிரகாசத்தால் அனைத்துயிர்களின் இதயங்களையும் மகிழ்ச்சியில் மூழ்கடிக்கும் சபையான பெருந்தகப்பனின் தெய்வீக சபையைப் பற்றி அந்தப் பகலின் தேவன் {சூரியன்} என்னிடம் பேசினான்.(3,4)

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்தச் சபையின் நற்தகுதிகளைக் கேட்டு, ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, நான் அதைக் காண விரும்பினேன். பிறகு நான் ஆதித்தியனிடம் {சூரியனிடம்},(5) “ஓ மேன்மையானவனே {சூரியவனே}, நான் பெருந்தகப்பனின் {பிரம்மனின்} புனிதமான சபையைக் காண விரும்புகிறேன். ஓ ஒளியின் தலைவனே {சூரியனே}, ஓ மேன்மையானவனே எனக்குச் சொல். எந்த ஆன்ம நோன்புகளால், அல்லது எந்த செயல்களால் அல்லது எந்த வசீகரத்தால் அல்லது எந்த சடங்குகளால், நான் அந்த அற்புதமான பாவங்களை விலக்கும் சபையைக் காண முடியும்?” என்று கேட்டேன்.(6,7)

எனது வார்த்தைகளைக் கேட்ட பகலின் தேவனான ஆதித்தியன் {சூரியன்}, ஆயிரம் கதிர்களைக் கொண்ட அந்தத்தேவன் {சூரியன்}, ஓ பாரத குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இப்படி பதிலளித்தான், “மனத்தைத் தியானத்தில் ஒருமுகப்படுத்தி, பிரம்மனை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் தவம் இருக்க வேண்டும்.” என்றான். நான் இமய மலைச்சாரலுக்குச் சென்று, அந்தத் தவத்தைச் செய்தேன்.(8,9) தவத்தின் முடிவில் அந்த மேன்மையான பாவங்களற்ற பெரும் சக்தி கொண்ட களைப்பறியா தேவனான சூரியன், பிரம்மனின் சபைக்கு என்னைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.(10)

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த சபை விவரிக்க இயலாத வகையில் இருந்தது. நாம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அது வேறு வடிவை ஏற்கும். அதை வார்த்தைகளால் விவரிப்பது முடியாதது.(11) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அதன் நீள அகலங்களையும், வடிவத்தைக் குறித்துச் சொல்வதும் இயலாது. நான் அதுபோன்ற ஒன்றை என்றும் கண்டதில்லை.(12) அதற்குள் இருப்பவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பர். அங்கே குளிரும் இல்லாமல் வெப்பமும் இல்லாமல் ரம்மியமான சூழ்நிலை இருக்கும். பசி, தாகம், களைப்பு ஆகியவை அங்கு சென்றாலே காணாமல் போய்விடும்.(13) அந்த சபை பலவகைப்பட்ட பிரகாசமான ரத்தினங்களால் ஆனதாகும். அது தூண்களால் தாங்கப்படுவதாகத் தெரியவில்லை. அது அழிவற்ற நிலைத்த தன்மை கொண்டது. அந்த சுய ஒளி கொண்ட மாளிகை, தனது பல எண்ணற்ற பிரகாசிக்கும் தன்மைகளாலும், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட தெய்வீகத்தன்மையாலும் சந்திரன், சூரியன், மற்றும் நெருப்பையே விஞ்சி நிற்கிறது.(14-16) விண்ணுலகில் நிலைத்து, பகலை உண்டாக்குபவன் {சூரியனைப்} போல எரிந்து கொண்டிருக்கிறது. அந்த மாளிகையில் ஓ மன்னா, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெருந்தகப்பன் {பிரம்மன்}, மாயையினால் தன்னை உருவாக்கிக் கொண்டு அனைத்தையும் உருவாக்கி அங்கே நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்.

தக்ஷன், பிரசேதஸ், புலஹர், மரீசி, குரு கசியபர்,(17,18) பிருகு, அத்திரி, வசிஷ்டர், கௌதமர், அங்கிரஸ், புலஸ்தியர், கிரது, பிரஹலாதன், கர்த்தமர் ஆகிய {பதினான்கு} பிரஜாபதிகளும் {சிருஷ்டிகர்த்தர்களும்}, அதர்வண வேதத்தின் அங்கிரஸ் {அதர்வாங்கிரஸர்}, வாலகில்லியர், மரீசிபர், புத்திகூர்மை, விண்வெளி, ஞானம், காற்று, வெப்பம், நீர், பூமி,(19,20) ஒலி, தீண்டல் {தொடு உணர்ச்சி}, வடிவம், சுவை, மணம், இயற்கையும் அதன் வகைகளும், உலகின் அடிப்படை மற்றும் முக்கிய காரணங்கள் ஆகிய அனைத்தும் அங்கே தலைவன் பிரம்மனின் மாளிகையிலேயே வசிக்கின்றன.(21)

பெரும் சக்தி படைத்த அகஸ்தியர், பெரும் ஆன்ம சக்தி படைத்த மார்க்கண்டேயர், ஜமதக்னி, பரத்வாஜர், சம்வர்த்தர், சியவனர், மேன்மையான துர்வாசர், அறம்சார்ந்த ரிஷ்யசிருங்கர், பெரும் ஆன்மத் தகுதிகள் சிறப்புமிக்க சனத்குமாரர்கள், யோககுருக்களான அசிதர் மற்றும் தேவலர், உண்மையை அறிந்த ஜைகீஷவ்யர், ரிஷியர், அஜிதசத்ரு, பெரும் சக்தி கொண்ட மணி,(22-24) எட்டு கிளைகளுடன் கூடிய குணப்படுத்தும் சிகிச்சைகளின் அறிவியல் ஆகியவை வடிவம் கொண்டும், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, நட்சத்திரங்களுடனும் நட்சத்திர இணைப்புகளுடனும் கூடிய சந்திரன், தனது அனைத்து கதிர்களுடன் கூடிய ஆதித்தியன் {சூரியன்},(25) காற்றுகள், வேள்விகள், {வேள்விகளில்} நோக்கங்களின் தீர்மானங்கள், முக்கிய கொள்கைகள், ஆகிய சிறப்பு மிகுந்தவையும், நோன்பு நோற்கும் உயிர்களும் உருவம் கொண்டு அங்கே பிரம்மனின் சபையில் இன்னும் பலருடன் கூடி அவரைச் சேவிக்க இருக்கின்றனர். செல்வம், அறம், ஆசை, இன்பம், வெறுப்பு, துறவு, அமைதி ஆகியவை அந்தத் தலைமை தேவனின் அரண்மனையில் காத்திருக்கின்றன.(26,27)

கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் இருபது {இருபத்தேழு}[1] இனங்களும் மற்றும் அவர்களின் ஏழு இனங்களும் {மொத்தம் இருபத்தேழு இனங்கள்}, லோகபாலர்கள் (பல பகுதிகளைக் காக்கும் தலைவர்கள்),(28) சுக்ரன், பிருஹஸ்பதி, புதன், அங்காரகன் (மங்களன் {செவ்வாய்}), சனி, ராகு, மேலும் பல கிரகங்களும், (சாம வேதத்தின்) மந்திரங்களும், (அதே வேதத்தின்) சிறப்பு {ரதந்திர} மந்திரங்களும், ஹரிமத் {ஹரிமான்} மற்றும் வசுமத் {வசுமான்} (சடங்குகள்), இந்திரனுடன் கூடிய ஆதித்தியர்கள், அக்னிசோமன், இந்திராக்னி என்ற இரு அக்னிகள் {அக்னீஷோமா, மித்ராவருணா முதலிய இரட்டை தேவர்கள்}, {ஏழு} மருத்துகள்,(29,30) விஸ்வகர்மன், வசுக்கள், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, பித்ருக்கள், அனைத்து வகையான புனிதமான படையல்கள் {ஹோமத்திரவியங்கள்}, ரிக், சாம, யஜுர், மற்றும் அதர்வண ஆகிய நான்கு வேதங்கள், கல்வி அறிவியல்கள்,(31,32) வரலாறுகள் மற்றும் அனைத்து சிறு பிரிவிலான கல்விகள், வேதங்களில் பல்வேறு கிளைகள், கோள்கள், வேள்விகள், சோமன் {சந்திரன்}, அனைத்து தேவர்கள்,(33) சாவித்ரி {காயத்ரி}, ஏழு வகையான செய்யுட்கள் {வாக்குகள்}, புத்தி, பொறுமை, நினைவு {ஞாபகம்}, ஞானம், நுண்ணறிவு, புகழ், மன்னிக்கும்தன்மை,(34) சாம வேதங்களின் பாடல்கள் {சுலோகங்கள்}, பொதுவான பாடல்களின் {சுலோகங்களின்} அறிவியல், பல்வேறு உரைகளும் பாடல்களும், பல்வேறு உரைகளுடன் கூடிய விவாதங்கள் ஆகியவை அனைத்தும் உருவம் கொண்டு, ஓ மன்னா, பல தரப்பட்ட அறங்களும், செய்யுட்களும், கதைகளும், சுருக்கப்பட்ட விரிவுரைகளும் ஆகிய அனைத்தும் அந்தத் தலைமைத் தேவனின் {பிரம்மனின்} சபையில் காத்திருக்கின்றன.(35,36)

க்ஷணம் {பொழுது}, லவங்கள், முகூர்த்தங்கள், பகல், இரவு, பக்ஷங்கள் {தேய்பிறை, வளர்பிறை நாட்கள்}, மாதங்கள், ஆறு பருவகாலங்கள் {ருதுக்கள்}, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, வருடங்கள், யுகங்கள், நான்கு வகையான பகல்களும் இரவுகளும் (மனிதர்கள், பித்ருக்கள், தேவர்கள், பிரம்மா ஆகியோருக்கு தனித்தனி பகல்களும் இரவுகளும் இருக்கின்றன) நித்தியமானவை, அழிவில்லாதவை, தேயாதவை, அருமையான காலச்சக்கரம், அறச்சக்கரம் ஆகியவை அங்கே காத்திருக்கின்றன. ஓ யுதிஷ்டிரா, அதிதி, திதி, தனு, ஸுரஸை, வினதை, இரை, காலிகை, சுரபி, தேவி, ஸரமை, கௌதமி,(37-40) பிரபை, கத்ரு ஆகிய தேவர்களின் அன்னையர், ருத்ராணி, ஸ்ரீ, லக்ஷ்மி, பத்ரை,(41) சஷ்டி, பூமி {பிருத்விதேவி}, கங்கை, ஹ்ரீ, ஸ்வாஹா, கீர்த்தி, ஸுராதேவி, சச்சி {இந்திராணி}, புஷ்டி, அருந்ததி, ஸம்விருத்தி, ஆசை, நியதி, ஸ்ருஷ்டி, ரதி ஆகிய பல தேவிமார் அங்கே அனைத்தையும் படைத்தவனுக்காகக் {பிரம்மனுக்காகக்} காத்திருக்கின்றனர்.(42,43) ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், மருத்துக்கள், அஸ்வினிகள், விஸ்வேதேவர்கள், ஸாத்தியர்கள், மனோ வேகம் கொண்ட பித்ருக்கள் ஆகியோர் பெருந்தகப்பனுக்காகக் காத்திருக்கின்றனர்.(44)

ஓ மனிதர்களின் காளையே {யுதிஷ்டிரனே}, பித்ருக்களில் ஏழு வகை உண்டு என்பதை அறிந்து கொள்வாயாக. அதில் நான்கு வகையினருக்கு வடிவம் உண்டு, மீதம் மூன்று வகையினருக்கு வடிவம் கிடையாது.(45) சிறப்பு வாய்ந்த வைராஜர்கள், அக்னிஷ்வாத்தர்கள், கர்ஹபத்தியர்கள் (உடல் இல்லா மூன்று வகையான பித்ருக்கள்) விண்ணுலகில் உலவுகிறார்கள் என்பது நன்கு அறியப்பட்டதாகும்.(46) சோமபர்கள், ஏகசிருங்கர்கள், சதுர்வேதர்கள், கலர்கள் ஆகிய பித்ருக்கள் நான்கு வகை மனிதர்களால் எப்போதும் வழிபடப்படுகின்றனர்.(47) சோம பானத்தால் நிறைவடைந்த அவர்கள் சோமனை {சந்திரனை} முதலில் நிறைவடையச் செய்கின்றனர். பித்ருக்களின் அந்த அனைத்து இனங்களும் படைப்புத் தலைவனுக்காக,(48) அந்த அளவிடமுடியா தலைமைத் தேவனுக்காக மகிழ்ச்சியாக அங்கே காத்திருக்கின்றனர்.

ராட்சசர்கள், பிசாசங்கள், தானவர்கள், குஹ்யர்கள்,(49) நாகர்கள், பறவைகள் மற்றும் பலவகைப்பட்ட விலங்குகள் அசைவன அசையாதன ஆகியன அனைத்தும் பெருந்தகப்பனை வணங்கி நிற்கின்றன.(50) தேவர்களின் தலைவன் புரந்தரன் {இந்திரன்}, வருணன், குபேரன், யமன், உமையுடன் கூடிய மஹாதேவன் ஆகியோர் அங்கே எப்போதும் வருகின்றனர்.(51) ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, மஹாசேனன் (கார்த்திகேயன் {முருகன்}), பெருந்தகப்பனை வணங்கி நிற்கிறான். நாராயணன், தெய்வீக முனிவர்கள், வாலஹில்ய முனிவர்கள், பெண்களால் பிறந்தவர்களும், பெண்களால் பிறக்காதவர்களும், மேலும் உலகில் உள்ள அனைத்து அசைவன அசையாத ஆகியவையும் என்னால் அங்கே காணப்பட்டதாக அறிந்து கொள்வாயாக.(52,53)

ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, தங்கள் உயிர்வித்தை மேலெழும்பச் செய்த எண்பதாயிரம் முனிவர்களையும், மகன்களைப் பெற்ற ஐம்பதாயிரம் முனிவர்களையும் நான் அங்கு கண்டேன்.(54) விண்ணுலக வாசிகள் அனைவரும் தாங்கள் விருப்பப்படும்போது எல்லாம் தலைமைத் தேவனை {பிரம்மனைக்} கண்டு தலைவணங்கித் திரும்பி வந்தனர்.(55) ஓ மனிதர்களின் மன்னா, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெருந்தகப்பனும், பிரபஞ்சத்தின் ஆன்மாவும், அளவிடமுடியா புத்திகூர்மையும், புகழும், அனைத்து உயிர்களிடத்திலும் சமமான அன்பு கொண்டவரும், சுயம்புவுமான பிரம்மாவை தகுதிக்கேற்றவாறு மதித்து, இனிமையான பேச்சாலும், பொருட்களைப் பரிசாகக் கொடுத்தும், தேவர்களும், தைத்தியர்களும், நாகர்களும், பிராமணர்களும், யக்ஷர்களும், பறவைகளும், காலேயர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், மற்றும் அனைத்து மேன்மையான உயிரினங்களும் அங்கே அவரது விருந்தினர்களாக வந்தனர்.(56-58)

ஓ குழந்தாய் (யுதிஷ்டிரா}, அந்த அருமையான சபை எப்போதும் வந்து செல்பவர்களால் கூட்டமாக நிறைந்து இருக்கிறது.(59) அனைத்து சக்திகளும் நிறைந்து, பிரம்மரிஷிகளால் வழிபடப்பட்டிருக்கும் அந்த தெய்வீக சபை பிரம்மனின் அருள்பார்வையினால் ஒப்பற்றத்தாய் பேரெழிலுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.(60) ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரனே}, இந்த உனது சபை மனிதர்களின் சபைகளில் ஒப்பற்று இருப்பது போல, பிரம்மனின் சபை, அனைத்து உலகங்களிலும் ஒப்பற்று இருக்கிறது.(61) நான், விண்ணுலகில் இருக்கும் இந்தச் சபைகளை எல்லாம் கண்டிருக்கிறேன். இந்த உனது சபை, மனிதர்களின் உலகில் நிச்சயமாக முதன்மையானது என்பதில் மாற்றுக்கேள்வி கிடையாது” {என்றார் நாரதர்}.(62)

ராஜசூய வேள்வி செய்யலாமே! – சபாபர்வம் பகுதி 12-(லோகபால சபாகயானா பர்வம் – 08)-ஹரிச்சந்திரன் மட்டும் எப்படி இந்திரலோகத்தில் இருக்கிறான் என்று யுதிஷ்டிரன் நாரதரிடம் கேட்டது; நாரதர் ஹரிச்சந்திரனின் ராஜசூய வேள்வி குறித்து சொல்வது; பாண்டு யுதிஷ்டிரனை ராஜசூயம் செய்யச் சொன்னதாக நாரதர் யுதிஷ்டிரனிடம் சொன்னது; நாரதர் துவாரகைக்குச் சென்றது..

யுதிஷ்டிரன், “ஓ மேன்மையான மனிதர்களில் முதன்மையானவரே {நாரதரே}, நீர் வித்தியாசமான சபா மண்டபங்களை எனக்கு விளக்கிச் சொன்னீர், அதில் பூலோகத்தில் இருந்த அனைத்து ஏகாதிபதிகளும் எமனின் சபையில் இருப்பதாகத் தெரிகிறது.(1) மேலும், ஓ தலைவா {நாரதரே}, கிட்டத்தட்ட அனைத்து நாகர்களும், முக்கியமான தைத்தியர்களும், ஆறுகளும், பெருங்கடல்களும் வருணசபையில் இருப்பதாகவும் தெரிகிறது.(2) யக்ஷர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், காளையைத் தனது வாகனமாகக் கொண்டிருக்கும் தேவன் {சிவன்} ஆகியோர் கருவூலத் தலைவனின் சபையில் இருப்பதாகத் தெரிகிறது.(3) பெருந்தகப்பனின் {பிரம்மனின்} சபையில் அனைத்துப் பெரும் முனிவர்களும், தேவர்களும், கல்வியின் அனைத்துக் கிளைகளும் இருப்பதாக நீர் சொன்னீர்.(4) சக்ரனின் {இந்திரனின்} சபையைப் பொறுத்தவரை, ஓ முனிவரே {நாரதரே} நீர் கந்தர்வர்களும், பல்வேறு முனிவர்களும் இருப்பதாக அவர்களது பெயர்களைச் சொன்னீர்.(5)

ஆனால், ஓ பெரும் முனிவரே {நாரதரே}, நீர் அரசமுனி ஹரிச்சந்திரன் என்ற ஒருவரை, ஒரே ஒருவரை மட்டும், சிறப்பு மிகுந்த தேவர்கள் தலைவனின் {இந்திர} சபையில் வாழ்வதாகச் சொன்னீர்.(6) அந்தக் கொண்டாடப்பட்ட மன்னனால் என்ன நற்காரியம் செய்யப்பட்டது? அல்லது உறுதிகளுடன் கூடிய என்ன ஆன்மிக நோன்பு மேற்கொள்ளப்பட்டது? எந்தச் செயலால் அவன் {ஹரிச்சந்திரன்} இந்திரனுக்கு நிகராக இருக்கிறான்?(7) ஓ பிராமணரே {நாரதரே}, மேலும், பித்ருக்களின் உலகத்தில் விருந்தினராக இருக்கும் எனது தந்தை மேன்மைமிகு பாண்டுவை நீர் எப்படிச் சந்தித்தீர்?(8) ஓ அற்புத நோன்புகள் கொண்ட மேன்மை மிகுந்தவரே {நாரதரே}, அவர் {பாண்டு} உம்மிடம் ஏதாவது சொன்னாரா? அனைத்தையும் எனக்குச் சொல்லும். நான் உம்மிடம் இருந்து கேட்டுக் கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(9)

நாரதர், “ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, முதலில் நீ கேட்ட ஹரிச்சந்திரனைக் குறித்து நான் சொல்லப் போகிறேன்.(10) அவன் {ஹரிச்சந்திரன்} ஒரு பலம் மிகுந்த மன்னன். உண்மையில் அவன் பூமியில் மன்னர்களுக்கு மாமன்னனாக இருந்தான். பூமியின் அனைத்து மன்னர்களும் அவனது ஆளுகைக்குள் கட்டுப்பட்டார்கள்.(11) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, வெற்றிகண்ட தங்க தேரில் தனி ஒரு ஆளாக, அந்த வீரமிகுந்த மன்னன் தனது ஆயுதங்களால், முழு உலகத்தையும் அதன் ஏழு தீவுகளுடன் சேர்த்து தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.(12)

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மலைகளையும், காடுகளையும் கொண்ட முழு உலகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவன், ராஜசூய வேள்வியைச் செய்ய ஆயத்தமானான்.(13) உலகத்தில் இருந்த அனைத்து மன்னர்களும், அவனது {ஹரிச்சந்திரனது} ஆணையின் பேரில் அவனுக்கு பல செல்வங்களை வேள்விக்காகக் கொண்டு வந்து கொடுத்தனர். அவர்கள் {மன்னர்கள்} அனைவரும், அந்த வேள்வியில் நன்குண்டிருந்த பிராமணர்களுக்கு மேலும் உணவுகளையும், பரிசுப்பொருட்களையும் கொடுத்தனர்.(14)

மன்னன் ஹரிச்சந்திரன், அந்த வேள்வியில் கேட்டு வந்த அனைவருக்கும் அவர்கள் கேட்டதைவிட ஐந்து மடங்கு செல்வத்தைக் கொடுத்தான்.(15) அந்த வேள்வியின் முடிவில் அந்த மன்னன் {ஹரிச்சந்திரன்} பல நாடுகளில் இருந்து வந்திருந்த பிராமணர்களுக்கு பெரும் பரிசுகளையும் பல்வேறு செல்வங்களையும் கொடுத்தான்.(16) பலவகைப்பட்ட உணவாலும், மகிழ்ச்சிக்குரிய பொருட்களாலும், தாங்கள் விரும்பியதைவிட அதிக செல்வத்தையும், அதிகமான செல்வங்களையும் பெற்று திருப்தியடைந்த பிராமணர்கள், “மன்னன் ஹரிச்சந்திரனே அனைத்து மன்னர்களிலும் சக்தியிலும் புகழிலும் மேன்மையானவன்”, என்று சொல்ல தொடங்கினர்.(17) ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, ஓ பாரதகுலத்தின் காளையே, இந்தக் காரணத்தினாலேயே ஹரிச்சந்திரன் மற்ற ஆயிரம் மன்னர்களைவிட அதிகமாகப் பிரகாசித்தான்.(18) வலிமைமிக்கவனான ஹரிச்சந்திரன் தனது பெரும் வேள்வியை முடித்து உலகத்தை ஆட்சி செய்து, அவனது அரியணையில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(19)

ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, ராஜசூய வேள்வியைச் செய்யும் அனைத்து ஏகாதிபதிகளும் (இந்திரலோகத்தை அடைந்து) இந்திரனுடன் தங்கள் நேரத்தை மகிழ்ச்சியாகக் கடத்துகின்றனர்.(20) ஓ பாரத குலத்தின் காளையே, போர்க்களத்தில் தங்கள் முதுகைக் காட்டாமல் வாழ்வைத் துறந்த மன்னர்களும் இந்திர மாளிகையில் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.(21) கடும் ஆன்மிகத் தவங்கள் இயற்றி தங்கள் உடலைத் துறந்தவர்களும் அதே பகுதியை {இந்திர மாளிகையை} அடைந்து, காலத்திற்கும் பிரகாசித்துக் கொண்டிருப்பார்கள்.(22)

ஓ குரு குல மன்னா {யுதிஷ்டிரா}, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஹரிச்சந்திரனின் நற்பேறைக் கண்ட உனது தந்தை பாண்டு, அதனால் மிகுந்த ஆச்சரியமடைந்து, உனக்கு சிலவற்றைச் சொல்லியிருக்கிறார்.(23) நான் மனிதர்களின் உலகத்திற்குச் செல்கிறேன் என்பதை அறிந்து, என்னிடம் வந்து, என்னைப் பணிந்து வணங்கி, “ஓ முனிவரே {நாரதரே},(24) “தனது தம்பிகள் தனக்கு கீழ்ப்படிந்து நடக்கும்வரை, யுதிஷ்டிரனால் முழு உலகத்தையும் அடக்கி ஆள முடியும்” என்பதை அவனுக்குச் சொல்லுவீராக. “அதைச் சாதித்தபிறகு, அவன் பெரும் வேள்வியான ராஜசூய வேள்வியை நடத்த வேண்டும்.(25) அவன் எனது மகன். அவன் இந்த வேள்வியைச் செய்தால், நான் ஹரிச்சந்திரனைப் போல இந்திரனின் உலகத்திற்கு சென்று, அவனது {இந்திரனது} சபையில் கணக்கிலடங்கா வருடங்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்வேன்” என்று சொன்னான் {பாண்டு}.(26) நான் {நாரதர்} அவனிடம், “ஓ மன்னா {பாண்டு}, நான் மனிதர்களின் உலகத்திற்குச் சென்றால், நீ சொன்னது அனைத்தையும் உன் மகனிடம் சொல்கிறேன்” என்றேன். நான் இப்போது எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிட்டேன்.(27)

ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக. நீ அந்த வேள்வியைச் செய்தாயானால், நீயும் இறந்த உனது முன்னோர்களுடன் சேர்ந்து இறவாதவர்கள் தலைவனின் {இந்திரனின்} பகுதியில் மகிழ்ச்சியுடன் இருப்பாய்.(28) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் தடைகளுக்குப் பிறகே அந்த வேள்வியைச் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது.(29) ஒரு வகை ராட்சசர்களான பிரம்ம ராட்சசர்கள் என்போர், இது போன்ற வேள்விகளைத் தடைசெய்ய எப்போதும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து, அந்தப் பெரும் வேள்வியில் ஏதாவது குறையைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அது போன்றதொரு வேள்வியைச் செய்வதால் பெரும் போர் ஏற்பட்டு க்ஷத்திரிய குலமே உலகத்திலிருந்து அழியும் நிலை ஏற்படலாம்.(30)  ஒரு சின்ன தடை கூட உலகத்தைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும். இதையெல்லாம் சிந்தித்து, ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, உனது நன்மைக்கான செயலைச் செய்வாயாக. மிகவும் விழிப்புடன் இருந்து, நான்கு வகையான உனது குடிமக்களை காப்பதற்கு தயாராக இருப்பாயக.(31) வளமையில் வளர்ந்து, இன்பநிலை அனுபவித்து வா. பிராமணர்களுக்கு செல்வத்தைப் பரிசாகக் கொடுத்து திருப்தி செய். நீ கேட்டது அனைத்திற்கும் நான் விரிவாக பதில் சொல்லி விட்டேன். உனது அனுமதியுடன், நான் தாசார்ஹர்களின் நகரத்திற்கு (துவாராவதி {துவாரகைக்குச்}} செல்கிறேன்” என்றார் {நாரதர்}.(32)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஜனமேஜயா, இவற்றை பிருதையின் {குந்தியின்} மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொன்ன நாரதர், தன்னுடன் வந்த முனிவர்களுடன் சேர்ந்து, வந்த வழியே திரும்பிச் சென்றார்.(33) நாரதர் சென்றதும்,ஓ குரு குலத்தில் வந்தவனே {ஜனமேஜயனே}, மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் சேர்ந்து வேள்விகளில் முதன்மையான ராஜசூய வேள்வியைக் குறித்து சிந்தித்தான். {என்றார் வைசம்பாயனர்}.(34)

ஆலோசனைகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன? – சபாபர்வம் பகுதி 13-லோகபால சபாகயானா பர்வம் – 09)-யுதிஷ்டிரன் ராஜசூய வேள்வி செய்வது குறித்து தனது தம்பிகளுடனும், நண்பர்களுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசிப்பது; அமைச்சர்கள் வேள்வியை நடத்துமாறு ஆலோசனை வழங்குவது; யுதிஷ்டிரன் மறுபடி மறுபடி சிந்திப்பது; இக்காரியத்தில் கிருஷ்ணனின் முடிவை ஏற்பது எனத் தீர்மானிப்பது; துவாரகைக்குத் தூதுவரை அனுப்பவது; கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தத்தை அடைவது; யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்பது.

வைசம்பாயனர் சொன்னார், “நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் கடுமையாக பெருமூச்சு விட ஆரம்பித்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, ராஜசூயத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால், அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} மன அமைதியை இழந்தான்.(1) அந்தச் சிறப்பு வாய்ந்த (பழங்காலத்தின்) ஏகாதிபதிகளின் புகழைக் கேள்விப்பட்டும், வேள்விகள் செய்பவர்களும், புனித காரியம் செய்பவர்களும் வற்றாத இன்பம் உள்ள பகுதிகளை அடைவார்கள் என்பதில் உறுதி கொண்டான். குறிப்பாக, அந்த வேள்வியை {ராஜசூய வேள்வியைச்} செய்த அரசமுனி ஹரிச்சந்திரனை நினைத்துப் பார்த்த மன்னன் யுதிஷ்டிரன், ராஜசூய வேள்விக்கான தயாரிப்புகள் செய்ய விரும்பினான்.(2,3) பிறகு தனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்}, அந்தச் சபையில் இருந்தவர்களையும் வணங்கி, அவர்களால் வணங்கப்பட்டு வேள்வி குறித்த விவாதங்களில் ஈடுபட்டான்.(4) அதிகமாக சிந்தித்த அந்த மன்னர்களின் மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த குருக்களின் காளை, ராஜசூயத்துக்கான தயாரிப்புகளில் தனது மனத்தை ஈடுபடுத்தினான்.(5)

இருப்பினும், அற்புதமான வீரமும், சக்தியும் கொண்ட இளவரசன் {யுதிஷ்டிரன்}, அறம் மற்றும் நீதியை நினைத்துப் பார்த்து, மக்களுக்கு எது நன்மையைத் தரும் என்ற ஒரு முடிவுக்கு வர தனது இதயத்தை நிலைக்க வைத்தான்.(6) அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன் தனது குடிமக்களிடம் அன்போடு இருந்தான்.(7) எந்த வேறுபாடுகளும் பார்க்காமல் அனைத்து மக்களின் நன்மைக்காகப் பாடுபட்டான். கோபத்தையும் கடுமையையும் தவிர்த்த யுதிஷ்டிரன் எப்போதும், “ஒவ்வொருவருக்கும் எது கொடுக்கப்பட வேண்டுமோ, அதை ஒவ்வொருவருக்கும் கொடுக்கவேண்டும்” என்று சொல்வான். “அறம் {தர்மம்} அருளப்பட்டிருக்கட்டும், அறமும் யுதிஷ்டிரனும் அருளப்பட்டிருக்கட்டும்” என்பவை மட்டுமே அவன் கேட்கக்கூடிய ஒலிகளாக இருந்தன.(8) யுதிஷ்டிரன் தன்னை அப்படி வழிநடத்திக் கொண்டு, பகை வளர்த்தலை ஆதரிக்கும் எவரும் அந்த நாட்டில் இல்லாதவாறு அனைவருக்கும் ஒரு தகப்பன் கொடுக்கும் உறுதியைக் கொடுத்தான். அதனாலேயே அவன் {யுதிஷ்டிரன்} அஜாதசத்ரு (எதிரிகள் இல்லாதவன்) என்று அழைக்கப்பட்டான்.(9)

அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைவரையும் தனது குடும்பத்தில் ஒருவரைப் போலப் பாதுகாத்தான். பீமன் அனைவரையும் நீதியுடன் ஆண்டான். அர்ஜுனன் தனது இரு கரங்களையும் பயன்படுத்தி, மக்களை (வெளிப்புற/ வெளிநாட்டு) எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தான்.(10) ஞானம் கொண்ட சகாதேவன் நடுநிலையாக {பாரபட்சம் இல்லாமல்} நீதியுடன் நிர்வாகம் செய்தான். நகுலன் அனைவரிடமும் பணிவான தனது இயற்கை குணத்துடன் நடந்து கொண்டான். மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் நாடு கலகங்களிலும், அனைத்துவிதமான அச்சங்களில் இருந்தும் விடுபட்டது. அனைத்து மக்களும் தங்களுக்குரிய தொழிலில் கவனம் செலுத்தினர்.(11) மேலும் வேண்டும் என்று விரும்பாத அளவுக்கு மழை நிறைந்திருந்தது. நாடும் வளமையில் வளர்ந்தது. மன்னனின் அற ஒழுக்கத்தால், கடன் கொடுப்பவர்களும், வேள்விக்குத் தேவையான பொருட்களும், கால்நடை வளர்த்தலும், உழுதலும், வணிகமுமான அனைத்துத் தொழில்களும் வளம் பெற்றன.(12) உண்மையில் வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சிகாலத்தில், அச்சுறுத்திப் பணம் பறித்தலோ, வாடகை பாக்கிக்காகத் துன்புறுத்துதலோ, நோய், நெருப்பு, நஞ்சு அல்லது மந்திரத்தால் உண்டாகும் மரணத்தைக் குறித்த பயமோ அந்த நாட்டில் இல்லாதிருந்தது.(13) திருடர்களோ, ஏமாற்றுப் பேர்வழிகளோ, அரசுகுல நண்பர்கள் மன்னனிடமோ அல்லது தங்களுக்குள்ளோ தவறாக நடந்து கொண்டார்கள் என்று, யாரும் எப்போதும் கேள்விப்படவில்லை. ஆறு சந்தர்ப்பங்களில் {போர், ஒப்பந்தம் போன்றவை மூலம்} கைப்பற்றப்பட்ட மன்னர்கள், அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எப்போதும் நன்மை செய்ய காத்திருந்தனர். பல வகைப்பட்ட வணிகர்கள் தாங்கள் செய்த தொழிலுக்கு ஏற்றவாறு கட்டவேண்டிய வரியை சரியாகக் கட்டி வந்தனர். அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சியில் அவனது நாடு பெரும் வளமையை அடைந்தது.(14-16) உண்மையில், நாட்டின் வளமை இவற்றால் மட்டும் வளராமல், சிற்றின்பப் பற்றுள்ளவர்களாலும், நிறைவான இன்பங்களில் ஈடுபட்டு வந்தவர்களாலும் கூட அதிகரித்தது. மன்னர்களுக்கு மன்னன் யுதிஷ்டிரன் தனது ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, அனைத்தையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு, அனைத்து சாதனைகளையும் சாதித்தான்.(17) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கொண்டாடப்பட்ட சிறப்பு மிகுந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} எந்தெந்த நாடுகளை எல்லாம் கைப்பற்றினானோ, அந்தந்த நாடுகளில் பிராமணர்களில் இருந்து குடியானவன் வரை, அனைவரும் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} தங்கள் தந்தையிடமும் தாயிடமும் உள்ள பிணைப்புடன் இருந்தனர்”.(18)

வைசம்பாயனர் சொன்னார், “வாக்கில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், தனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்} தம்பிகளையும் அழைத்து அவர்களிடம் ராஜசூய வேள்வி குறித்துத் தொடர்ந்து கேட்டான்.(19) வேள்வி செய்ய விரும்பிய ஞானமுள்ள யுதிஷ்டிரனிடம் அந்த அமைச்சர்கள் இயல்பான வார்த்தைகளைக் கூறினர். அவர்கள் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(20) “ஏற்கனவே நாட்டை அடைந்திருக்கும் ஒருவன், மாமன்னர்களுக்கு {சக்ரவர்த்திகளுக்கு} உரிய எல்லா குணங்களையும் அடைய விரும்புகிறான். அந்த வேள்விகள், வருணனின் குணங்களை அடைய அந்த மன்னனுக்கு உதவி செய்கின்றன.(21) ஓ குரு குல இளவரசனே {யுதிஷ்டிரனே}, உமது நண்பர்கள் உம்மை மாமன்னர்களுக்குரிய அனைத்து தகுதிகளும் உடையவராக நினைக்கின்றனர். நீர் ராஜசூய வேள்வியை நடத்தும் சமயம் வந்துவிட்டது.(22) சாம வேதங்களின் மந்திரங்களைக் கொண்டு ஆறு நெருப்புகளை மூட்டும், கடும் நோன்புகள் நோற்கும் முனிவர்களைக் கொண்டு வேள்வியைத் தொடங்க, உமது க்ஷத்திரிய சக்தியால் உமக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.(23) ராஜசூய வேள்வியின் முடிவில், அந்த வேள்வியை நடத்திய நாட்டின் ஆட்சி உரிமை பெற்றவன், அக்னிஹோத்ரம் உள்ளிட்ட பல வேள்விகளைச் செய்ததன் கனிகளை {பயன்களை} அடைகிறான். இதனாலேயே அவன் {மன்னன்} அனைத்தையும் கைப்பற்றுபவன் என அழைக்கப்படுகிறான்.(24) ஓ பலம் வாய்ந்த கரம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இந்த வேள்வியைச் செய்ய உம்மால் முடியும். நாங்கள் அனைவரும் உமக்குக் கட்டுப்பட்டவர்கள். ஓ மாமன்னா, விரைவில் உம்மால் ராஜசூய வேள்வியை நடத்த முடியும்.(25) எனவே, மேலும் விவாதங்களை நடத்தாமல் வேள்வியை நடத்த தீர்மானியும்” என்று மன்னனின் {யுதிஷ்டிரனின்} நண்பர்களும் ஆலோசகர்களும் தனித்தனியாகவும் சேர்ந்தும் சொன்னார்கள்.(26)

மேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, எதிரிகளைக் கொல்லும் யுதிஷ்டிரன், அறம்சார்ந்தவையும், துணிவு, இனிமை மற்றும் கனம் நிறைந்தவையுமான இந்த வார்த்தைகளை மனதார ஏற்றுக் கொண்டான்.(27) ஓ பாரதா {ஜனமேஜயா}, நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் இருந்து வந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, தனது பலத்தையும் அறிந்து கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்தக் காரியம் குறித்து மீண்டும் மீண்டும் ஆலோசித்தான்.(28) அதன் பிறகு, ஆலோசனை வழங்குவதில் ஞானமுள்ள, புத்திகூர்மையுள்ள அறம் சார்ந்த யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், சிறப்புமிகுந்த ரித்விஜர்களுடனும், தனது அமைச்சர்களுடனும், தௌமியருடனும், துவைபாயணருடனும் {வியாசர்}, மேலும் மற்றவர்களுடனும் ஆலோசித்தான்.(29)

யுதிஷ்டிரன், “மாமன்னர்கள் செய்யத் தகுதி வாய்ந்ததும், சிறந்தவேள்வியுமான ராஜசூயத்தை செய்யும் எனது விருப்பம், நான் கொண்டிருக்கும் நம்பிகை மற்றும் பேச்சால் மட்டுமே கனி கொடுத்துவிடுமா?”, என்று கேட்டான்[1].(30)(கும்பகோணம் பதிப்பில், “அரசர்க்கரசன் செய்யத்தக்க சிறந்த யாகமாகிய ராஜஸூயமென்னும் மஹாயாகம் சிரத்தையுள்ள எனக்கு எப்படி முடியும்? நீங்கள் சொல்லுங்கள்” என்றிருக்கிறது.)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே {ஜனமேஜயா}, இப்படிப் பேசிய யுதிஷ்டிரனிடம் அவர்கள் {நண்பர்களும் ஆலோசகர்களும்} அனைவரும்,(31) “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அறத்தின் விதிகளை அறிந்த நீர், இந்தப் பெரும் வேள்வியான ராஜசூயத்தைச் செய்யத் தகுதி வாய்ந்தவரே” என்றனர். ரித்விஜர்களாலும், முனிவர்களாலும் இப்படிச் சொல்லப்பட்ட அந்த மன்னன்,(32) தனது அமைச்சர்கள் மற்றும் தம்பிகளின் பேச்சைப் பெரிதும் அங்கீகரித்தான். இருப்பினும், பெரும் ஞானம் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது மனத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, உலகத்திற்கு நன்மை செய்ய விருப்பம் கொண்டு, மறுபடியும் இந்தக் காரியத்தை மனத்தில் நினைத்து, தனது பலத்தையும் ஆதாரங்களையும் நினைத்து, நேரம், இடம், வரவு, செலவு ஆகியவற்றையும் எண்ணிப்பார்த்தான்.(33,34)

நன்கு ஆலோசிக்கப்பட்டு செய்யப்பட்ட ஒரு செயலால் ஞானமுள்ளவர்கள் துயரடைய மாட்டார்கள் என்பதை அவன் {யுதிஷ்டிரன்} அறிந்திருந்தான். இந்த வேள்வியைச் செய்யும் முடிவைத் தான் மட்டுமே எடுத்துவிடக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தவனும்,(35) இந்தச் சுமையைத் தனது தோள்களில் தாங்கிக் கொண்டிருந்தவனுமான யுதிஷ்டிரன், ’அனைவரையும் பாவங்களில் இருந்து காப்பாற்றும் கிருஷ்ணனே, இந்தக் காரியத்தை முடிவு செய்யத் தகுதி வாய்ந்தவன்’ என்று நினைத்தான்.(36) அவனே {கிருஷ்ணனே} மனிதர்களில் முதன்மையானவன், அளவிடமுடியா சக்தி கொண்டவன், பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவன், தனது சுயவிருப்பதின் மூலம் மட்டுமே மனிதனாகப் பிறந்த  அவனே {கிருஷ்ணனே} இதை முடிவு செய்யத் தகுதி வாய்ந்தவன் என்பதை அவன் {யுதிஷ்டிரன்} அறிந்திருந்தான்.(37) தெய்வம் போன்ற அவனது {கிருஷ்ணனது} செயல்களை நினைத்துப் பார்த்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அவன் {கிருஷ்ணன்} அறியாத எதுவும் கிடையாது என்றும், அவனால் {கிருஷ்ணனால்} அடைய முடியாததும் எதுவு இல்லை என்றும், அவனால் {கிருஷ்ணனால்} தாங்கக்கூடாது எதுவும் இல்லை என்று நினைத்தான். இந்தத் தீர்மானத்துக்கு வந்த பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரன்,(38,39) விரைவாக ஒரு தூதுவனை அனைத்து உயிர்களின் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} அனுப்பி வைத்தான்.

தனது வாழ்த்துகளையும், மூத்தவர் இளையவருக்கு உரிய மதிப்புடனும் செய்திகளைத் தூதுவனிடம் சொல்லி அனுப்பினான். விரைவாகச் செல்லும் தேரில் சென்ற அந்தத் தூதுவன் யாதவர்களுக்கு மத்தியில் துவாராவதியில் {துவாரகையில்} வசித்த கிருஷ்ணனை அணுகினான்.(40) தன்னைக் காண பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்} விருப்பம் கொண்டுள்ளான் என்பதை அறிந்த அச்யுதன் {கிருஷ்ணன்}, தனது மைத்துனனைக் காண ஆவல் கொண்டான்.(41)

வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் பல பகுதிகளை வேகமாகக் கடந்த கிருஷ்ணன், இந்திரசேனனுடன் சேர்ந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தான்.(42) இந்திரப்பிரஸ்தத்தை அடைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, நேரத்தைக் கடத்தாமல் யுதிஷ்டிரனை அணுகினான். யுதிஷ்டிரன் கிருஷ்ணனை ஒரு தந்தையின் அன்புடன் வரவேற்றான்.(43)  பீமனும் அதே போல வரவேற்றான். பிறகு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் தனது தந்தையின் தங்கையிடம் {குந்தியிடம்} சென்றான். அங்கே இரட்டையர்களால் {நகுலன் மற்றும் சகாதேவனால்} வழிபடப்பட்டு, தன்னைக் கண்டதால் பெருமகிழ்ச்சி அடைந்த தனது நண்பன் அர்ஜுனனுடன் மகிழ்ச்சியாகப் பேசத்தொடங்கினான். சிறிது நேரம் அற்புதமான அறையில் ஓய்வெடுத்த பிறகு, யுதிஷ்டிரன் அவனை {கிருஷ்ணனை} அணுகி, ராஜசூய வேள்வியைக் குறித்துச் சொன்னான்.(44,45)

யுதிஷ்டிரன், “நான் ராஜசூய வேள்வியைச் செய்ய விரும்புகிறேன். அந்த வேள்வியை ஒருவரின் தீர்மானத்தால் செய்ய முடியாது. ஓ கிருஷ்ணா, சாதிக்கத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் நீ அறிவாய்.(46) அனைத்தையும் செய்ய முடிந்தவனால் மட்டுமே இந்த வேள்வியைச் செய்ய முடியும். எவனை அனைவரும் வழிபடுகின்றனரோ, எவன் மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக இருக்கிறானோ அவன்தான் இந்த வேள்வியைச் சாதிக்க முடியும்.(47) எனது நண்பர்களும் ஆலோசகர்களும் என்னை அணுகி இந்த வேள்வியைச் செய்யச் சொல்கிறார்கள். ஆனால், ஓ கிருஷ்ணா, இக்காரியத்தில் உன் சொற்களே எனக்கான வழிக்காட்டிகளாகும்.(48) ஆலோசகர்களில் சில நண்பர்கள் சிரமங்களைக் கவனிக்க மாட்டார்கள்; சிலர் சுய விருப்பத்தின் பேரில் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்வார்கள்.(49) சிலர் ஒரு காரியத்தால் தங்களுக்கு விளையும் நன்மையை எண்ணி அப்படிச் செய்ய சொல்வார்கள். முடிவை நோக்கி இருக்கும் தீர்மானங்களில் மனிதர்கள் இப்படித்தான் ஆலோசனை வழங்குகிறார்கள்.(50) ஆனால் கிருஷ்ணா, நீ அந்த நோக்கங்களுக்கு மேலானவன். நீ ஆசையையும், கோபத்தையும் வென்றவன். உலகத்திற்கு மிகுந்த நன்மை தரக்கூடியது எது என்பதை எனக்கு நீதான் சொல்ல வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(51)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading