ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ ஆதி பர்வம்-ஸ்ரீ பக வத  பர்வம் – 

அந்தணன் துயரம்! – ஆதிபர்வம் பகுதி 159-(பக வத பர்வம் – 1)ஏகச்சக்கர நகரத்தில் வசித்த பாண்டவர்கள்; மனைவியிடம் துயரத்துடன் பேசிய பிராமணன்; அதைக் கண்டு அந்தப் பிராமணனை அணுகிய குந்தி; அந்தப் பிராமணன் புலம்பியதைக் கேட்ட குந்தி…

ஜனமேஜயன், “ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, அந்தப் பெரும் தேர் வீரர்களும், குந்தி மைந்தர்களுமான பாண்டவர்கள், ஏகச்சக்கரத்திற்கு வந்த பிறகு என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் சொன்னார், “அந்தப் பெரும் தேர் வீரர்களான குந்தியின் மைந்தர்கள், ஏகச்சக்கரம் வந்ததும், ஒரு பிராமணனின் இல்லத்தில் சிறிது காலம் தங்கினர்.(2) இரந்துண்டு {பிச்சையெடுத்து} வாழும் வாழ்வை மேற்கொண்டு, மகிழ்ச்சிகரமான கானகங்களையும், நிலப்பகுதிகளையும், பல நதிகள் மற்றும் ஏரிகளையும் கண்டு, தங்கள் செயல்களால் அந்த நகரவாசிகளுக்குப் பிடித்தமானவர்களாகினர்.(3,4) இரவு வந்ததும், குந்தியின் முன் தாங்கள் இரந்து பெற்று வந்ததை ஒன்றாகச் சேர்த்து வைத்தனர்.குந்தி அவற்றை முழுமையாகச் சேர்த்து ஒவ்வொருவருக்கான பகுதியாகப் பிரித்துக் கொடுப்பாள். அதையே அவர்கள் ஒவ்வொருவரும் பெற்றுக் கொண்டனர்[1].(5)(இந்தப் பழக்கம் திரௌபதியின் திருமணத்திற்குப் பிறகு நினைவுகூரப்படுகிறது)

அந்த எதிரிகளைத் தண்டிக்கும் வீரர்கள் அனைவரும் தங்கள் தாயுடன் சேர்ந்து அந்த உணவின் முழுப் பகுதியில் சரி பாதியை உண்டபோது, பீமன் மட்டுமே தனித்து மறுபாதியை உண்டான்.(6) ஓ பாரதக் குலத்தில் காளையே, இப்படியே பாண்டவர்கள் அங்கே சிலகாலம் வாழ்ந்தனர்.(7) ஒரு நாள், பாரதர்களில் காளைகளான அவர்கள் அனைவரும் பிச்சையெடுக்கச் சென்றுவிட்டார்கள். பீமன் மட்டும் (தனது தாயுடன்) பிருதையுடன் (வீட்டில்) இருந்தான்.(8) ஓ பாரதா, அந்நாளில் அந்தப் பிராமணரின் உள் அறையில் இருந்து இதயத்தைப் பிளக்கும் அழுகைச் சத்தம் வருவதைக் குந்தி கேட்டாள்.(9) இரக்க குணமும் நன்மையை விரும்பும் இதயமும் கொண்ட குந்தியால், இப்படி அந்த பிராமணரின் இல்லத்தில் அந்தப் பரிதாபகரமான அழுகையைக் கேட்டுத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(10)

துயரத்தால் தாக்குண்ட அந்த இனிமையான பிருதை {குந்தி}, பீமனிடம் கருணை நிறைந்த வார்த்தைகளைச் சொன்னாள். அவள்,(11) “ஓ மகனே, நமது துயர் தணிந்து, இந்த பிராமணரின் இல்லத்தில், அவரால் மதிக்கப்பட்டு, திருதராஷ்டிரனின் மகனுக்குத் தெரியாமல், நாம் இங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.(12) ஓ மகனே, நாம் இங்கு மகிழ்ச்சியாக வசித்ததற்கு ஈடாக, இந்த பிராமணருக்கு நாம் செய்ய வேண்டிய நன்மையைக் குறித்து எப்போதும் நான் சிந்தித்தே வருகிறேன்.(13) ஓ குழந்தாய், எவன் செய்ந்நன்றி மறவாமல் இருக்கிறானோ அவனே உண்மையான மனிதன். தான் மற்றவர்களிடம் பெறுவதைவிட அவன் அதிகமாகத் திரும்பக் கொடுப்பான்.(14) இந்த பிராமணருக்கு ஏதோ துயரேற்பட்டிருக்கிறது. அதில் ஐயம் இல்லை. நம்மால் அவருக்கு ஏதாவது உதவி இருக்குமானால், நாம் நிச்சயம் அதைச் செய்ய வேண்டும்” என்றாள்.(15)

தாயின் வார்த்தைகளைக் கேட்ட பீமன், “ஓ தாயே, அந்த பிராமணனின் துயரம் எப்படிப்பட்டது, அஃது எங்கிருந்து உருவானது என்பதை உறுதி செய்து கொள்வாயாக. அவற்றை அறிந்தால், அஃது எவ்வளவு கடினமாக இருப்பினும் நான் அதை அவர்களுக்குச் சாதித்துக் கொடுப்பேன்” என்றான்”.(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா, தாயும் மகனும் இப்படி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, மறுபடியும் அவர்கள் அந்த பிராமணன் மற்றும் அவனது மனைவியும் அழுவதைக் கேட்டார்கள்.(17) அப்போது குந்தி, தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட கன்றைக் காணச் செல்லும் ஒரு பசுவைப் போல அந்தச் சிறப்புமிகு பிராமணன் இருந்த உள் அறைக்குள் விரைவாகச் சென்றாள்.(18) அங்கே பிராமணன், தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் சோகம் நிரம்பிய முகத்துடன் உட்கார்ந்து கொண்டு இருப்பதைக் கண்டாள்.(19)

அவன், “இவ்வுலக வாழ்வு நாணலைப் போன்று உள்ளீடற்றதாகக் கனியற்றதாக இருக்கிறது. இறுதியில் சுதந்திரம் இல்லாமல் {பிறருக்கு அடிமையாகவே} துயரத்துடனேயே முடிகிறது. வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருக்கிறது.(20) வாழ்வு என்றாலே அது துயரம் என்ற நோய்தான். வாழ்க்கை என்பது உண்மையில் துயரங்களின் தொகுப்பு மட்டும்தான்.(21) ஆன்மா ஒன்று. ஆனால் அஃது அறத்தை ஈட்ட வேண்டியிருக்கிறது, பொருள் மற்றும் இன்பத்தையும் ஈட்ட வேண்டியிருக்கிறது. இவை மூன்றையும் ஒரே நேரத்தில் செய்வதால், இவையே ஒன்றுக்குள் ஒன்று அடிக்கடி முரண்பட்டுத் துயரத்தைக் கொடுக்கின்றன.(22) சிலர் நமது விருப்பங்களில் உயர்ந்த நோக்கம் முக்தியடைவது என்கின்றனர். ஆனால் நான் அதை அடையவே முடியாது என்று நம்புகிறேன். பொருளீட்டுவது நரகத்தைத் தருகிறது. பொருளீட்டுதலில் உள்ள நாட்டம் துயரத்தைத் தருகிறது.(23) ஒருவரின் பொருள் மீது மற்றவர் ஆசை கொள்வதால், அந்தப் பொருளை அடைந்த பிறகு பெரும் துயரம் வருகிறது. ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதற்கு உடைமையாளன் துயரடைகிறான்.(24) நான் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கும் வழியை அறியவில்லை. ஆபத்திலிருந்து தப்பித்து, எனது மனைவியுடனும், குழந்தைகளுடனும் இந்தப் பகுதியைவிட்டுப் பறந்து செல்ல என்னால் முடியவில்லை.(25)

ஓ பெண்ணே நினைவுப்படுத்திப் பார், நான் முன்பே வேறு இடத்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று சொன்னேன்! நீதான் என் பேச்சைக் கேட்கவில்லை.(26) நான் பலமுறை தொடர்ந்து சொல்லியும் நீ “நான் இங்கேயே பிறந்தேன், இங்கேயே வளர்ந்தேன், இஃது எனது மூதாதையர் வீடு” என்றாய்.(27) ஓ பெண்ணே, உனது மதிப்புக்குரிய தந்தையும், தாயும், பல காலத்திற்கு முன்னரே சொர்க்கம் சென்றனர். உனது உறவினர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள். இருப்பினும் நீ இங்கேயே வாழ வேண்டும் என்று ஏன் விரும்பினாய்?(28) உனது உறவினர்கள் மீது கொண்ட பாசத்தால், நான் சொன்னதை நீ கேட்கவில்லை. ஆனால் இன்று நேரம் வந்துவிட்டது, உனது உறவினர்களில் ஒருவர் இறப்பதை நீ காணப் போகிறாய்.(29) அக்காட்சி எனக்கு வருத்தத்தை அளிக்கிறதே! எனது மரணத்திற்கான நேரம் வந்ததாகவே நான் நினைக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரை, என்னைச் சார்ந்தவர்கள் யாரும் இறப்பதை நான் அனுமதியேன்.(30)

எனது நற்காரியங்களில் எல்லாம் நீ துணை புரிந்திருக்கிறாய். சுய நலனைப் பார்க்காமல், என்னிடம் தாயைப் போல அன்பு பாராட்டினாய். தேவர்கள் உன்னை எனக்கு உண்மையான தோழியாக (நட்பாக) கொடுத்திருக்கிறார்கள். நீ மட்டுமே எனக்கு நிரந்தர வசிப்பிடமாவாய்.(31) எனது பெற்றோரால், நீ என்னுடன் இல்லறத்தில் இணைந்தாய். தூய குலத்தில் பிறந்து, நல்ல நிலையில் வளர்ந்து, பிள்ளைகளைப் பெற்று, என்னிடம் அர்ப்பணிப்புடன் இருந்து அப்பாவியாக வாழ்ந்து வந்திருக்கிறாய். உன்னை நான் தேர்ந்தெடுத்து, உரிய சடங்குகளுடன் மணந்த காரணத்தால், எனது உயிரைக் காக்கச் சபதமேற்றிருக்கும் உன்னை நான் கைவிட முடியாது. என் மகனை எவ்வாறு என்னால் கைவிட முடியும்?(32-34) இளம் வயதிலிருப்பவனும், தாடையில் முடி முளைக்காதவனுமான (முழு மனிதனாகாத) எனது மகனை நான் எப்படிக் கைவிட முடியும்? நான் ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்து அளிப்பதற்காகவே, உலகம் படைத்தோனால் என்னிடம் கொடுக்கப்பட்ட எனது மகளை நான் எப்படிக் கைவிடுவேன். அவள் {மகள்} மூலம் பெறும் மகனால் {பேரனால்} கிடைக்கும் நல்லுலகங்களை நான் எப்படி அடைவேன்?(35,36)

சில மனிதர்கள் மகனிடமே தந்தையின் பாசம் அதிகம் இருக்கும் என்கின்றனர். சிலர் மகளிடம்தான் அதிகம் இருக்கும் என்கின்றனர். ஆனால் எனக்கு இருவருமே சமமாக இருக்கின்றனர்.(37) எவளிடம் எனது நித்திய அருளும், என் பரம்பரையும், மகிழ்ச்சியுமிருக்கிறதோ அந்த எனது அப்பாவி மகளைக் கைவிட எப்படித் துணிவேன்?(38) நான், எனது வாழ்வை துறந்து மறு உலகம் சென்றாலும் என்னால் நிம்மதியாக இருக்க முடியுமா? இவர்கள் எப்படித் தங்கள் வாழ்வை நகர்த்துவார்கள்?(39) இங்கு இருக்கும் யாரையும் துறப்பது கொடுமையானதே. மறுபுறம், நான் என்னைத் தியாகம் செய்தால், நானில்லாமல் இவர்கள் அழிந்து போவார்கள்.(40) நான் வீழ்ந்துகிடக்கும் துயரமானது பெரியதாகும். இதிலிருந்து தப்பிக்க வழியறியாமல் இருக்கிறேனே. ஐயோ நான் என் நெருங்கியவர்களுடன் எங்குச் செல்வேன். நான் இவர்களுடன் சேர்ந்து மொத்தமாக இறந்து போக வேண்டும். இவர்கள் இல்லாமல் நான் உயிருடன் வாழ முடியாது!” என்றான்”.(41)

“என்னைக் கைவிடு” என்றாள் மனைவி! – ஆதிபர்வம் பகுதி 160-(பக வத பர்வம் – 2)பிராமணனிடம் அவனது மனைவி பேசியது.

வைசம்பாயனர் சொன்னார், “பிராமணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது மனைவி, “ஓ பிராமணரே! நீர் சாதாரண மனிதரைப் போலத் துயரடையக்கூடாது. இது புலம்புவதற்கான நேரமில்லை.(1) நீர் கல்விமான்; மனிதர்கள் அனைவரும் இறப்பது உறுதி என்பதை நீர் அறிவீர்; தவிர்க்க முடியாதவற்றிற்காக யாரும் வருத்தப்படக்கூடாது.(2) மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் ஒருவனின் சுயத்திற்குப் பயன்படவே ஏற்பட்டனர். புரிந்து கொள்ளும் நல்ல அறிவைக் கொண்ட நீர், உமது துயரங்களைக் கொன்று போடுவீராக. நானே அங்குச் செல்வேன்.(3) நிச்சயமாக இந்தக் காரியமே ஒரு பெண்ணின் உயர்ந்த தெய்வீகக் கடமையாகும். அஃதாவது, அவள் தனது உயிரையே தியாகம் செய்தாவது தனது கணவரின் நலத்தைப் பேண வேண்டும்.(4) அப்படிப்பட்ட எனது செயல் உம்மை மகிழ்விக்கும், இந்த உலகத்திலும், மறு உலகத்திலும் எனக்குப் புகழையுண்டாக்கும்.(5) நிச்சயமாக நான் சொல்லும் இதுவே உயர்ந்த அறமாகும். அதனால் நீர் அறத்தையும், மகிழ்வையும் ஒன்றாக அடையமுடியும்.(6)

மனைவியை ஒருவன் எக்காரணத்திற்காக விரும்புவானோ, அதை நீர் என் மூலமாக அடைந்து விட்டீர். நான் உமக்கு ஒரு மகளையும் ஒரு மகனையும் பெற்றுக் கொடுத்து எனது கடனிலிருந்து விடுபட்டுவிட்டேன்.(7) உம்மால் உமது குழந்தைகளை நன்கு பேணி பராமரித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் என்னாலோ, உம்மைப் போல மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது.(8) நீரே எனது வாழ்வும், செல்வமும், தலைவரும் ஆவீர். உம்மை இழந்தால், பிறகு நானும், இந்த இளம் பிள்ளைகளும் எப்படி வாழ முடியும்?(9) என்னைச் சார்ந்திருக்கும் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு, இவர்களைக் காப்பாற்ற நீர் இல்லாமல், தலைவனில்லாமல் விதவையாகி, அறத்தின் பாதையிலான வாழ்வை என்னால் எவ்வாறு வாழ இயலும்?(10)

நம்பிக்கையற்ற மரியாதையற்ற வீணான மனிதர்கள், இந்த உமது மகளைக் கைப்பற்ற விரும்பினால், நான் அவர்களிடம் இருந்து இவளை எப்படிப் பாதுகாப்பேன்?(11) தரையில் தூக்கியெறியப்பட்ட இறைச்சியை ஆவலுடன் உண்ணும் பறவைகளைப் போலக் கணவனை இழந்தப் பெண்ணை அடைய தீய மனிதர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.(12) நான் நிலையின்றித் தள்ளாடி, நேர்மையான மனிதர்களால் விரும்பப்படும் பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்படலாம்.(13) உமது அப்பாவி மகளான இவளை, உமது மூதாதையர்கள் நடந்த வழியில் என்றும் எவ்வாறு என்னால் நடத்திச் செல்ல முடியும்?(14) நான் தலைவனில்லாதிருக்கும் காலத்தில், இந்தக் குழந்தையை {உமது மகனை} உம்மைப்போன்ற அறம்சார்ந்தவனாக எப்படி வளர்க்க முடியும்?(15) தலைவனில்லாத என்னை அதிகாரம் செய்து, சூத்திரர்கள் வேதத்தைக் கேட்க விரும்புவது போல, நம்பத்தகாத மனிதர்கள் உமது மகளின் கரத்தைக் கேட்பார்கள்.(16)

உமது ரத்தமும் குணமும் இல்லாதவர்களுக்கு நான் உமது மகளை அளிக்காவிட்டால், அவர்கள் வேள்வி நெய்யைத் தூக்கிச் செல்லும் காக்கையைப் போல அவளைத் தூக்கிச் செல்வார்கள்.(17) உமது மகன் உம்மைப் போல் இல்லாமல் இருந்து, உமது மகளும் நம்பத்தகாதவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், இந்த உலகத்தின் நேர்மையற்ற மனிதர்களாலும் நான் நிந்திக்கப்படுவேன். அப்படி நிந்திக்கப்படும்போது நிச்சயம் சாவேன்.(18,19) உம்மையும் என்னையும் இழந்த இந்தப் பிள்ளைகள், நீர் வற்றும் போது அழியும் மீனைப் போல அழிந்து விடுவர்.(20)

நீர் {கணவர்} இல்லாமல் மூவரும் அழிவது நிச்சயம். எனவே, நீர் என்னைத் தியாகம் செய்வதே தகும்.(21) ஓ பிராமணரே! பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்த பெண், தனது தலைவனுக்கு முன்பு இறந்து போனால் அதுவே உயர்ந்த தகுதி {புண்ணியம்} என்று நீதிகளை அறிந்த மனிதர்கள் கூறுகிறார்கள்.(22) உமக்காக, மகனையும், மகளையும், உறவினர்களையும், ஏன் உயிரைக் கூட விடத் தயாராயிருக்கிறேன்.(23) தனது தலைவனுக்குப் பிடித்தமான காரியங்களை எப்போதும் செய்யும் பெண்களின் கடமையானது, வேள்விகள், துறவு, நோன்பு மற்றும் தானங்கள் அனைத்திலும் உயர்ந்ததாகும்.(24) எனவே, நான் செய்யத்துணிவது உமது குலத்துக்கும் உமக்கும் உயர்ந்த அறமாகும்.(25)

குழந்தைகள், உறவினர், மனைவியர் மற்றும் இவ்வுலகில் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும், ஒருவனைத் துயரம் மற்றும் ஆபத்தில் இருந்து காப்பதற்கே பேணி வளர்க்கப்படுகின்றன என்று ஞானியர் சொல்கின்றனர்.(26) ஒருவன் தன்னை ஆபத்திலிருந்தும், துயரத்தில் இருந்தும் விடுவித்துக் கொள்ளத் தனது செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும். அந்தச் செல்வத்தைக் கொண்டுதான் தனது மனைவியைப் பராமரித்துப் பாதுகாக்க முடியும்.(27) எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விபத்துகளுக்கு அளிக்கவே ஒருவனின் மனைவி, மகன், செல்வம், வீடு ஆகியவை அடையப்படுகின்றன என்று உண்மையைக் கற்றவர்கள் தெளிவாக விளக்குகின்றனர்.(28) ஒரு தனி மனிதனின் சுயதத்துக்கு ஈடாக, அவனது உறவினர்கள் அனைவரையும் சேர்த்து நிகர்த்துப் பார்த்தாலும் {எடைபோட்டுப் பார்த்தாலும்}, அஃது ஈடாகாது.(29) எனவே, மரியாதைக்குரியவரே, என்னைக் கைவிட்டு உமது சுயத்தைக் காத்துக் கொள்வீராக. என்னைத் தியாகம் செய்ய எனக்கு அனுமதி கொடுத்து, உமது பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வீராக.(30)

நீதிகளை அறிந்தவர்கள், பெண்கள் கொல்லப்படலாகாது என்று தங்கள் உடன்படிக்கைகளில் சொல்கின்றனர். அந்த நீதிகளை ராட்சசர்கள் அறியாதவர்களல்லர். ராட்சசர்கள் ஓர் ஆணைக் கொல்வது நிச்சயமாக இருந்தாலும், அவர்கள் ஒரு பெண்ணைக் கொல்வது ஐயத்திற்கிடமானதே. ஒழுக்க விதிகளை அறிந்த நீர், என்னை ராட்சசன் முன்பு கிடத்துவீராக.(31,32) நான் நிறைந்த மகிழ்ச்சியை அடைந்துவிட்டேன். பல இனிமையானவற்றை அடைந்திருக்கிறேன். மேலும் நிறைந்த ஆன்மத் தகுதிகளையும் ஈட்டியிருக்கிறேன். உம்மால் நான் எனக்கன்பான இந்தப் பிள்ளைகளையும் பெற்றேன். எனவே, நான் சாவதற்கு வருந்தவில்லை.(33) நான் உமக்குப் பிள்ளைகள் பெற்றுக் கொடுத்து வயதாகிவிட்டேன். நான் எப்போதும் உமக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். இவை அனைத்தையும் நினைவில் நிறுத்தியே நான் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளேன்.(34) ஓ மரியாதைக்குரியவரே, என்னைக் கைவிட்டு, நீர் மற்றுமொரு மனைவியை அடையலாம். அவள் மூலமாக நீர் ஆன்மத் தகுதிகளை மறுபடியும் அடையலாம்.(35) அதில் பாவமில்லை. ஓர் ஆணுக்கு மறுமணம் என்பது அறச்செயலே. ஆனால், அதுவே பெண்ணுக்கு இரண்டாம் கணவனை அடைந்தாலே பெரும்பாவம் ஆகும்.(36) இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, உமது தியாகம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதையும் நினைவில் கொண்டு, என்னைக் கைவிட்டு உமது சுயத்தையும், உமது குலத்தையும், உமது பிள்ளைகளையும் காத்துக் கொள்ளும்” என்றாள்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ பாரதா, மனைவியால் இப்படிச் சொல்லப்பட்ட பிராமணன், அவளைக் கட்டியணைத்துக்கொண்டான். துயரத்தால் உந்தப்பட்ட இருவரும் அமைதியாக அழுதனர்”.(37)

பாலகனின் மழலைச் சொற்கள்! – ஆதிபர்வம் பகுதி 161-(பக வத பர்வம் – 3)-தங்கள் தாயின் பேச்சைக் கேட்ட மகள் தனது தந்தையிடம் பேசியது; பச்சிளம் பாலகனின் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பிராமணக் குடும்பம்; அவர்களிடம் சென்ற குந்தி…

வைசம்பாயனர் சொன்னார், “தனது பெற்றோரின் துயர் நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட மகள் பெரும் துயரடைந்து, அவர்களிடம்,(1) “உங்களைக் கவனித்துக் கொள்ள யாருமில்லாதது போல் {அநாதைகள் போல} இவ்வளவு துயரடைந்து நீங்கள் ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்? நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, எது சரியோ அதைச் செய்யுங்கள்.(2) குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் என்னைக் கைவிடுவது என்பது ஐயத்திற்கிடமில்லாதது. எப்படியும் என்னைக் கைவிடத்தான் போகிறீர்கள். எனவே, இப்போது என்னைக் கைவிட்டு, அனைத்தையும் காத்துக் கொள்ளுங்கள்.(3) பிள்ளைகள் நம்மைக் காப்பார்கள் (இந்த உலகத்திலும், மறு உலகத்திலும்) என்று எண்ணியே ஒரு மனிதன் அவர்களைப் பெறுகிறான். என்னைப் படகாகப் பயன்படுத்தி இந்தக் கடினகால நீரோடையைக் கடந்து செல்லுங்கள்.(4)

ஒரு பிள்ளை, தனது பெற்றோரை இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் காக்கிறான். ஆகையாலேயே கற்றோர்கள் அந்தப் பிள்ளையைப் புத்ரன் (காப்பவன்)என்று அழைக்கின்றனர்.(5) மூதாதையர்கள் என்னிடமிருந்து மகளின் பிள்ளையை எதிர்பார்ப்பார்கள் (முக்திக்காக). ஆனால், (எனது பிள்ளைகளுக்காகக் காத்திராமல்) நான் எனது தந்தையைக் காப்பதன் மூலம் அவர்களைக் காத்தவளாவேன்.(6) எனது தம்பியான இவன் பச்சிளம் பருவத்தில் இருக்கிறான். எனவே, நீங்கள் அழிந்தால் அவனும் இறப்பது ஐயத்திற்கிடமில்லாதது.(7) எனது தந்தையாகிய நீர் இறந்தால், எனது தம்பியும் உம்மைத் தொடர்வான். பித்ருக்களுக்குக் கொடுக்கப்படும் பிண்டம் கொடுக்கப்படாமல் அவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாவார்கள்.(8)

எனது தந்தையாலும் தம்பியாலும் கைவிடப்பட்டு, ஏன் எனது தாயாலும் கைவிடப்பட்டு (கணவரும் பிள்ளையும் இறந்த பிறகு அவளும் உயிருடன் இருக்க மாட்டாளாகையால்) நான் பெரும் துயரத்திற்குள் ஆழ்ந்து முழுவதுமாக அழிந்து போவேன்.(9) நீரும், என் தம்பியும், என் தாயும் இந்த ஆபத்திலிருந்து தப்பித்தீர்களென்றால் நீங்கள் கொடுக்கும் பிண்டத்தால் நமது முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.(10) தானே தான் தனக்கு மகன் {நாமே நமக்கு மகனாகப் பிறக்கிறோம்}. மனைவியே ஒருவனுக்கு நட்பு, ஒரு மகளோ எப்போதும் பிரச்சனையின் ஊற்றுக்கண்ணாவாள். அந்த ஊற்றுக்கண்ணை அகற்றி உங்களைக் காத்துக் கொண்டு, எனக்கு அறவழியை அமைத்துக் கொடுங்கள்.(11) ஓ தந்தையே, நான் பெண்ணானதால், உம்மை இழந்து, உதவியற்றுத் துயரத்தில் விழுந்து, அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கும்.(12) எனவே, நான் எனது தந்தையின் குலத்தைக் காக்க எண்ணி, எனது அறத்தகுதியின் அடிப்படையில் அந்தக் கடினமான காரியத்தை முடிப்பேன்.(13)

என்னை விட்டுவிட்டு பிராமணர்களில் சிறந்த நீர் அங்கே (ராட்சசனிடம்) சென்றால், நான் மிகவும் வருந்துவேன். எனவே, ஓ தந்தையே, என்னிடம் கருணை கொள்வீராக.(14) ஓ மனிதர்களில் சிறந்தவரே, நமக்காகவும், நமது குலத்துக்காகவும், நமது அறத்தகுதிகளுக்காகவும் எப்படியும் எப்போதாவது பிரிய வேண்டிய என்னை இப்போது கைவிட்டு உங்களைக் காத்துக் கொள்வீராக.(15) ஓ தந்தையே, தவிர்க்க முடியாத இந்த விஷயத்தில் தாமதம் வேண்டாம். நீர் சொர்க்கத்திற்குச் சென்றதும் நாங்கள் எங்கள் உணவுக்காக அந்நியர்களிடம் நாய்களைப் போலப் பிச்சை எடுத்துத் திரிவதைவிட வலி நிறைந்ததாக வேறு எது இருக்க முடியும்? ஆனால் நீர் உமது உறவினர்களுடன் இந்தச் சிரமத்திலிருந்து காக்கப்பட்டாலோ, நான் மகிழ்ச்சியாகத் தேவர்கள் இருக்கும் பகுதிகளில் வாழ்வேன்.(16,17) இப்படி மகளை அளித்துவிட்டு, தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் படையல் வைத்தால் நன்மை நடக்கும் என்றே நாம் கேள்விப்படுகிறோம்” என்றாள்”.(18)

வைசம்பயாணர் தொடர்ந்தார், “அந்த பிராமணன் தனது மனைவியுடன், தனது மகளின் ஒப்பாரியைக் கேட்டு முன்னை விட அதிகத் துக்கம் கொண்டான். அம்மூவரும் சேர்ந்து அழத் தொடங்கினர்.(19) இதைக் கண்ட பச்சிளங்குழந்தையான அவர்களது மகன், இனிமையான குரலில், கண்கள் மகிழ்ச்சியில் பிரகாசிக்க,(20) “அழாதீர்கள், ஓ தந்தையே, நீரோ, ஓ தாயே, நீயோ, ஓ தமக்கையே, நீயோ அழாதீர்கள்” என்று புன்னகைத்துக் கொண்டே அவர்கள் ஒவ்வொருவரையும் அணுகினான்.(21) இறுதியில் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ஒரு புல்லை எடுத்து, ” மனிதர்களை உண்ணும் அந்த ராட்சசனை இதைக் கொண்டு நான் கொன்றுவிடுவேன்” என்றான்.(22) அவர்கள் அப்போது பெரும் துயரத்திலிருந்தாலும், குழந்தையின் இனிமையான மழலைப் பேச்சு அவர்களின் முகத்தில் பெரும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தது.(23) பிறகு குந்தி இது தான் தக்க சமயம் என்று நினைத்து, அவர்களை அணுகி, இறந்தவர்களை மீட்கும் அமுதம் போன்ற வார்த்தைகளை அவர்களிடம் பேசி, அவர்களைத் துக்கத்திலிருந்து மீட்டெடுத்தாள்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

துயர் விசாரித்தாள் குந்தி! – ஆதிபர்வம் பகுதி 162-(பக வத பர்வம் – 4)அந்தக் குடும்பம் துயருற்று அழுவதற்கான காரணத்தை அந்தப் பிராமணனிடம் கேட்ட குந்தி; பகாசுரன் மற்றும் அந்நாட்டின் மன்னன் ஆகியோரைக் குறித்தும்; அந்த ராட்சசனிடம் நகர மக்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்தும் சொன்ன பிராமணன்…

குந்தி, “நான், உங்கள் துயரத்தின் காரணத்தை அறிய விரும்புகிறேன். என்னால் முடியுமென்றால் நான் அதைக் களைந்து விடுவேன்” என்றாள்.(1)


அதற்கு அந்த பிராமணன், “ஓ துறவைச் செல்வமாகக் கொண்டவளே, நிச்சயமாக உன் பேச்சு உனக்குத் தகுதி வாய்ந்ததே! ஆனால், எங்கள் துயரம் மனிதர்களால் களையப்படமுடியாததாகும்.(2) இந்த நகரத்திற்கு அருகில், பகன் என்ற பெயர் கொண்ட ராட்சசன் ஒருவன் இருக்கிறான். மனித ஊனுண்ணியான அவனே இந்நகரத்திற்கும், இந்நாட்டிற்கும் தலைவனாவான்.(3) மனித இறைச்சியை உண்டு வாழ்பவனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான அந்த இழிந்த ராட்சசனே இந்நாட்டை ஆள்கிறான். அசுரர்களுக்கும், இந்த நகரத்திற்கும், நாட்டுக்கும் தலைவனாக இருக்கும் அவன், தன் வலிமையால் இவற்றைக் காத்து வருகிறான். எங்களுக்கு எந்த எதிரியிடமிருந்தும் அச்சம் கிடையாது. அவன் காப்பதால், நிச்சயமாக எந்த உயிரினத்திடமிருந்தும் எங்களுக்கு அச்சம் கிடையாது.(4,5)

எனினும், இவற்றிற்கெல்லாம் கூலியாக அந்த மனிதஊனுண்ணிக்கு, ஒரு வண்டிச் சோற்றையும், இரண்டு எருமை மாடுகளையும், மற்றும் இவற்றையெல்லாம் அவ்விடம் எடுத்துச் செல்ல ஒரு மனிதனையும் அனுப்புவதாக அவனுடன் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.(6)

அதன் நிமித்தமாக, இந்நகரத்தின் வீட்டு உரிமையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக அவனுக்கு உணவு அனுப்ப வேண்டும். ஒவ்வொருவருக்கும் அந்த முறைமை பல வருடங்களின் இடைவெளியில் வரும்.(7) யாராவது இந்த முறைமையை மீறத் துணியும்போது, அந்த ராட்சசன், அப்படி மீறுபவனின் குழந்தைகள் மனைவிகள் உட்பட அவனது குடும்பத்தில் அனைவரையும் கொன்று விடுவான்.(8) இந்நாட்டில் வேத்திரகீயம் {வேத்திரகீயக்ருகம்} என்ற நகரத்தில், இப்பகுதியின் மன்னன் வாழ்கிறான். அவன் அரசு நடத்தும் அறிவியலை அறியாதவனாகவும், புத்திக்கூர்மையற்றவனாகவும் இருக்கிறான். அவன் இந்த ராட்சசத் தொல்லைக்கு ஓர் வழிமுறையையும் செய்யவில்லை.(9) பலவீனமான மன்னனான அந்தப் பாவியின் ஆளுகைக்குள் இருக்கும் எங்களுக்கு இந்த நிலை நிச்சயம் வேண்டியதுதான்.(10)

பிராமணர்களை ஒரு நாட்டிற்குள் நிரந்தரமாக வசிக்க வைப்பது என்பது முடியாத காரியம். அவர்கள் யாரையும் நம்பி இராமல், பறவைகளைப் போல் நாடுவிட்டு நாடு சுதந்திரத்துடன் செல்பவர்கள்.(11) ஒருவன் முதலில் (நல்ல) மன்னனை அடைய வேண்டும். பின்பு மனைவியை அடைய வேண்டும், அதன் பிறகு செல்வம் சேர்க்க வேண்டும். இந்த மூன்றையும் ஒருவன் அடைந்தால்தான், அவனால் தனது உறவினர்களையும் பிள்ளைகளையும் காக்க முடியும்.(12) இந்த மூன்றையும் அடைவதில் எனது செயல்கள் தலைகீழாகவே இருக்கின்றன. எனவே, ஆபத்தெனும் கடலில் மூழ்கி மிகவும் சிரமப்படுகிறேன்.(13)

நான் சொன்ன அந்த முறைமை இப்போது என் மேல் விழுந்திருக்கிறது. முன்பு சொன்னது போல அந்த ராட்சசனுக்கான கூலியையும் ஒரு மனிதனையும் உணவாக நான் கொடுக்க வேண்டும்.(14) இதற்காக ஒரு மனிதனை விலைக்கு வாங்க என்னிடம் செல்வம் இல்லை. என்னால் எனது குடும்பத்தை விட்டுப் பிரியவும் முடியாது.(15) இருப்பினும் ராட்சசனிடம் (அவனது பிடியில்) இருந்தும் தப்பிக்க முடியாது. நான் இப்போது தப்பிக்க வழியில்லாமல் துயரம் எனும் கடலில் மூழ்கப்போகிறேன்.(16) நான் இன்று எனது குடும்பம் முழுவதையும் அழைத்துக் கொண்டு அந்த ராட்சசனிடம் செல்லப் போகிறேன். அவன் எங்கள் அனைவரையும் கொல்லட்டும்” என்றான் {அந்தப் பிராமணன்}”.(17)

குந்தியின் சொல்லமுதம்! – ஆதிபர்வம் பகுதி 163-(பக வத பர்வம் – 5)-பகாசுரனிடம் தன் பிள்ளையை அனுப்புவதாக அந்தப் பிராமணனிடம் சொன்ன குந்தி; அதை மறுத்த பிராமணன்; குந்தியின் பேச்சு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அப்போது, குந்தி, “ஓ பிராமணரே! இந்த ஆபத்திற்காக அஞ்சாதீர். நீர் அந்த ராட்சசனிடம் இருந்து தப்புவதற்கு ஒரு வழியை நான் காண்கிறேன்.(1) உமக்கு ஒரு மகன் தான் இருக்கிறான், அவனும் பச்சிளங்குழந்தையாக இருக்கிறான். இளமையான ஆதரவற்ற ஒரே மகளும் இருக்கிறாள். உமது மனைவி உட்பட இவர்களில் எவரும் ராட்சசனிடம் செல்வதை நான் விரும்பவில்லை.(2) ஓ பிராமணரே! எனக்கு ஐந்து மகன்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவன் ராட்சசனுக்கான அந்தக் காணிக்கையை எடுத்துக் கொண்டு செல்லட்டும்” என்றாள் {குந்தி}.(3)


இதைக் கேட்ட பிராமணன், “என் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒருபோதும் நான் இந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன். எனது வாழ்வுக்காக, ஒரு பிராமணனின் உயிரையோ அல்லது ஒரு விருந்தாளியின் உயிரையோ நான் துறக்க மாட்டேன்.(4) பாவகரக் காரியங்கள் செய்பவர்களும், தாழ்ந்த பிறப்புப் பிறந்தவர்களும் கூட இதைச் (நீ என்னைச் செய்யச் சொல்வதைச்) செய்ய மறுப்பார்கள். ஒரு பிராமணனின் நன்மைக்காக, ஒருவன் தன்னையோ அல்லது தனது வாரிசையோ தியாகம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.(5) நான் அந்த அருமையான அறிவுரையை மதித்து நடக்க விரும்புகிறேன். ஒரு பிராமணனின் மரணமா? அல்லது எனது மரணமா? என்று வரும்போது நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன்.(6)

பிராமணனைக் கொல்வது என்பது பாவத்திலேயே பெரும் பாவமாகும், அதற்கு விமோசனமே இல்லை. ஒரு பிராமணனின் உயிர்த்தியாகத்தைவிட, ஒருவன் தன்னைத் தியாகம் செய்து கொள்வதே சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.(7) ஓ அருளப்பட்டவளே, நான் என்னைத் தியாகம் செய்வதால், தற்கொலை செய்யும் குற்றவாளி ஆக மாட்டேன். இன்னொருவன் எனது உயிரை எடுக்கும்போது, எந்தப் பாவமும் என்னைப் பற்ற முடியாது.(8) ஆனால் தெரிந்தே நான் ஒரு பிராமணனை மரணத்திற்கு அனுப்பினேன் என்றால், அந்தக் கொடிய பாவகரச் செயலில் இருந்து நான் எப்போதும் தப்ப முடியாது.(9) தனது வீடு தேடி வந்தவரையோ, தன்னிடம் தஞ்சமடைந்தவர்களையோ கைவிடுவதும், தன்னிடம் மரணம் வேண்டுபவனைக் கொல்வதும் கொடூரமான பாவகரச் செயல்களாகும் என்று கல்விமான்கள் கூறியிருக்கிறார்கள்.(10)

துயர் நிறைந்த காலத்தில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட செயல்களை அறிந்த சிறந்தவர்கள், இது போன்ற கொடூரக் காரியங்களைச் செய்யக்கூடாது என்கின்றனர்.(11) நான் இன்று எனது மனைவியுடன் அழிவதே சிறந்தது. ஆனால் ஒரு பிராமணனின் மரணத்தை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்றான் {அந்தப் பிராமணன்}.(12)

குந்தி, “ஓ பிராமணரே! நானும் ஒரு பிராமணன் எப்போதும் காக்கப்பட வேண்டும் என்று உறுதியான கருத்தையே வைத்திருக்கிறேன். ஐந்து மகன்களுக்குப் பதில் எனக்கு நூறு மகன்கள் இருந்தாலும், நான் எவரிடமும் குறைவான அன்பு வைக்க முடியாது.(13) அவர்கள் அனைவரையும் என்னைப் போலவே நான் நினைப்பேன். ஆனால் இந்த ராட்சசனால் எனது மகனைக் கொல்ல முடியாது. ஏனென்றால் எனது மகன் பெரும் சக்தியும், ஆற்றலும் கொண்டவனாவான். அவனுக்கு மந்திரங்களிலும் நிபுணத்துவம் உண்டு.(14) அவன் அந்த ராட்சசனுக்கு நன்றியுடன் அவனது உணவைக் கொடுப்பான். ஆனால், அவன் தன்னைக் காத்துக் கொள்வான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.(15)

பெரும் உடல் கொண்ட பல ராட்சசர்கள் எனது வீர மகனிடம் மோதுவதை நான் கண்டிருக்கிறேன். இறுதியில் அவர்கள் எனது மகன் கையால் கொல்லப்பட்டுள்ளனர்.(16) ஆனால், ஓ பிராமணரே! இக்காரியத்தை யாரிடமும் சொல்லிவிடாதீர். ஏனென்றால், இப்படிப்பட்ட சக்தியை அடையவிரும்பும் மனிதர்களின் ஆவலால், எனது மகன்களுக்குப் பிரச்சனைகள் எழும்.(17) தனது குருவுக்குத் தெரியாமல் இந்த ஞானத்தை வேறு ஒருவனுக்கு என் மகன் கொடுத்தால், அவனுக்கு {என் மகனுக்கு} அந்த ஞானம் பயன்படாது என்று ஞானமுள்ளவர்கள் சொல்லியிருக்கின்றனர்” என்றாள் {குந்தி}.(18)

பிருதையால் இப்படிச் சொல்லப்பட்டதும், அந்த பிராமணன் தனது மனைவியுடன் மகிழ்ச்சியடைந்து, அமுதத்தைப் போன்ற குந்தியின் பேச்சை ஏற்றுக் கொண்டான்.(19) அப்போது குந்தி, அந்த பிராமணனை அழைத்துக் கொண்டு, வாயுவின் மகனிடம் (பீமனிடம்) சென்று, காரியத்தை முடித்துக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொண்டாள். அதற்குப் பீமன், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறினான்” {என்றார் வைசம்பாயனர்}.(20)

குந்தியைக் கடிந்து கொண்ட யுதிஷ்டிரன்! – ஆதிபர்வம் பகுதி 164-(பக வத பர்வம் – 6)

வைசம்பாயனர் சொன்னார், “காரியத்தை முடிப்பதாகப் பீமன் “செய்கிறேன்” என்று உறுதி கூறிய பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த நாளைக்கான தங்கள் பிச்சையைப் பெற்றுப் பாண்டவர்கள் வீடு திரும்பி வந்தனர்.(1) அப்போது பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், பீமனின் முகத்தோற்றத்தை வைத்து, அவன் சாதிக்க நினைத்திருக்கும் காரியத்தின் இயல்பை ஊகித்தான். தனது தாயின் அருகில் அமர்ந்த யுதிஷ்டிரன், அவளிடம் கமுக்கமாக,(2) “ஓ தாயே, பெரும் வலிமைமிக்கவனான பீமன் சாதிக்க நினைக்கும் காரியம் என்ன? அவன் உனது கட்டளையின் பேரில் அக்காரியத்தைச் செய்யப் போகிறானா? அல்லது சொந்த விருப்பத்தில் செய்யப் போகிறானா?” என்று கேட்டான்.(3)


குந்தி, “எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், எனது கட்டளையின் பேரில், ஒரு பிராமணனுக்கு நன்மை செய்து, {ராட்சசனிடம் இருந்து} இந்த நகரத்தை விடுவிக்கும் செயற்கரிய காரியத்தைச் செய்யப் போகிறான்” என்றாள்.(4)

யுதிஷ்டிரன், “ஓ தாயே, என்ன கடுங்காரியம் செய்துவிட்டாய்? இந்தச் செயற்கரிய கடினமான காரியம் தற்கொலைக்கு ஒப்பானதாகும். ஒருவன் தனது சொந்தக் குழந்தையைக் கைவிடுவதைக் கற்றோர் மெச்சுவதில்லை.(5) ஓ தாயே, மற்றவர்களுக்காக உனது சொந்த மகனையே தியாகம் செய்ய ஏன் விரும்புகிறாய்? ஓ தாயே, உனது பிள்ளையை இப்படிக் கைவிடுவதனால், நீ மனிதச் செயல்களுக்கு எதிராக மட்டுமல்ல, வேதங்களின் படிப்பினைகளுக்கும் எதிராகச் செயல்படுகிறாய்.(6) பீமனின் கர வலிமையை நம்பியே நாம் இரவில் மகிழ்ச்சியுடன் உறங்குகிறோம். திருதராஷ்டிரனின் தீய மகன்களிடம் இருந்து நாட்டை மீட்கும் காரியமும் அவனை நம்பியே இருக்கிறது.(7) எந்தப் பீமனின் பேராற்றலை நினைத்து துரியோதனனும் சகுனியும் விழிதட்டாமல் இரவு முழுவதும் உறங்குவதில்லையோ,(8) எந்தப் பீமன் நம்மை அரக்கு மாளிகை அபாயத்திலிருந்து மீட்டானோ, புரோசனனின் மரணத்திற்குக் காரணமான அந்தப் பீமனின் ஆற்றலை நம்பியே, திருதராஷ்டிரனின் மகன்கள் அழிந்து விட்டதாகவும், உலகத்திலுள்ள அனைத்துச் செல்வங்களையும் அடைந்துவிட்டதாகவும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.(9,10) ஓ தாயே நீ அவனைக் கைவிடுவதாக முடிவு செய்துவிட்டாயா? நீ உன் சுயநினைவை இழந்து விட்டாயா? துயரங்கள் மேகமாகச் சூழ்ந்து உனது புத்தியைக் கெடுத்துவிட்டனவா?” என்றான்.(11)

தனது மகனிடம் இருந்து இவ்வார்த்தைகளைக் கேட்ட குந்தி, “ஓ யுதிஷ்டிரா, விருகோதரனைக் {பீமனைக்} குறித்து நீ வருத்தப்படாதே. எனது புத்தியின் பலவீனத்தால் நான் இந்த முடிவை எடுக்கவில்லை.(12) திருதராஷ்டிரன் மகன்களுக்குத் தெரியாமல் நாம் இந்த பிராமணரின் இல்லத்தில் கவலையில்லாமல் வாழ்ந்து வருகிறோம். அவரும் நம்மைப் பெரிதும் மதிக்கிறார்.(13) ஓ மகனே, அதற்குக் கைம்மாறாக இதைச் செய்யத் தீர்மானித்தேன். செய்ந்நன்றியையும் நற்குணங்களையும் இழக்காதவனே மனிதன் ஆவான்.(14)

ஒருவனுக்குப் பிறர் செய்யும் காரியங்களை விடப் பலமடங்கு அதிகமாக அவன் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அரக்கு மாளிகை நிகழ்ச்சியிலும், ஹிடிம்பனின் அழிவிலும் பீமனின் வீரத்தை நான் கண்டிருக்கிறேன். விருகோதரனிடம் {பீமனிடம்} எனக்கிருக்கும் நம்பிக்கை பெரியது. பீமனது கரங்களின் பலம் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்குச் சமமானதாகும்.(15,16) அதனாலேயே, அவனால், யானை கனம் கொண்ட உங்கள் ஒவ்வொருவரையும் வாரணாவதத்திலிருந்து சுமந்து கொண்டு வர முடிந்தது. பீமனின் பலத்திற்கு ஈடாக இந்த உலகத்தில் யாரும் இல்லை; இடியைக் கையில் தாங்கி நிற்கும் போர்வீரர்களின் முதன்மையானவனையே {இந்திரனையே} அவன் வென்றுவிடுவான்.(17) அவன் பிறந்தவுடன், எனது மடியில் இருந்து, மலையின் சாரலில் விழுந்தான். அவனது உடலின் கனத்தால் அவன் விழுந்த பாறை துண்டு துண்டாக உடைந்து போனது.(18)

ஓ பாண்டுவின் மைந்தனே, இதிலிருந்தும் நான் பீமனின் பலத்தை அறிந்து கொண்டேன். இந்தக் காரணங்களுக்காகவே, பிராமணனின் எதிரிக்கு எதிராக, நான் அவனை நிறுத்தத் தீர்மானித்தேன்.(19) நான் முட்டாள்தனமாகவோ, அறியாமையாலோ அல்லது ஏதேனும் லாப நோக்கத்தோடோ இப்படிச் செயல்படவில்லை. அறச்செயல் செய்வதற்காகவே இந்த முடிவை வலிந்து எடுத்தேன்.(20) ஓ யுதிஷ்டிரா, இச்செயலால் இரு காரியங்கள் சாதிக்கப்படும்; ஒன்று பிராமணனுக்கான செய்ந்நன்றியைச் செய்வது, மற்றொன்று உயர்ந்த அறத்தகுதியை அடைவது.(21)

பிராமணனுக்கு உதவி செய்யும் க்ஷத்திரியன், அதன் பிறகு ஆனந்தமான உயர்ந்த பகுதிகளை {சொர்க்கத்தை} அடைவான் என்பது எனது உறுதி.(22) அப்படியே ஒரு க்ஷத்திரியனின் உயிரைக் காப்பாற்றும் மற்றொரு க்ஷத்திரியன் மறுவுலகில் பெறுவது போல இவ்வுலகிலும் பெரும் புகழ் பெறுவான்.(23)  ஒரு வைசியனுக்கு உதவும் க்ஷத்திரியன் இவ்வுலகத்தில் பெரும் புகழ் பெறுவான்.(24) மன்னர் இனம் தன்னைத் தஞ்சமடையும் சூத்திரனையும் காக்க வேண்டும். அப்படிச் செய்தால், அடுத்தப் பிறவியில் அவன் ஓர் அரசகுடும்பத்திலோ அரசவழியிலோ பிறந்து, வளமை பெற்று, மற்ற மன்னர்களின் மரியாதையைப் பெற்றிருப்பான்.(25) ஓ பூருகுலத்தில் முளைத்த வழித்தோன்றலே, கடந்து சென்ற நாட்களில் சிறப்புவாய்ந்த ஞானி வியாசர், கடுந்தவம் செய்து தான் கண்டதை என்னிடம் சொன்னார். எனவே, இந்தக் காரியத்தைச் செய்யும் தீர்மானத்துக்கு நான் வந்தேன்” என்றாள் {குந்தி}.(26)

பீம பகாசுர மோதல்! – ஆதிபர்வம் பகுதி 165-(பக வத பர்வம் – 7)மறுநாள் காலையில் பிராமணன் கொடுத்த உணவை வண்டியிலேற்றிக் கொண்டு, பகாசுரன் வசிக்கும் காட்டுக்குச் சென்ற பீமன்; ஓரிடத்தில் அமர்ந்து தான் கொண்டு வந்த உணவை உண்டது; அதைக் கண்டு பீமனுடன் மோத வந்த பகாசுரன்; பகாசுரனை இரத்தம் கக்கச் செய்த பீமன்…

தனது தாயின் வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், “ஓ தாயே, துயருற்ற பிராமணன் மீது இரக்கப்பட்டு, நீ வலிந்து செய்த காரியம் நிச்சயமாக சிறப்பானதேயாகும்.(1) ஓ தாயே, நீ பிராமணர்களிடம் இரக்கப்பட்டு அனுப்புவதால், நிச்சயமாகப் பீமன் அந்த மனித ஊனுண்ணியைக் கொன்று உயிருடன் திரும்புவான்.(2) ஆனால், ஓ தாயே, இந்த நகரத்தில் வசிப்பவர்களிடத்தில் யாதொன்றையும் சொல்லாமல், தனது உறுதிமொழியை {சத்தியத்தைக்} காக்குமாறு அந்த பிராமணரிடம் சொல்வாயாக” என்றான்”.(3)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இரவு கழிந்ததும், பாண்டு மைந்தன் பீமன், ராட்சசனுக்கான உணவை எடுத்துக் கொண்டு அந்த நரமாமிச உண்ணி இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.(4) பாண்டுவின் வலிமைமிக்க மகன் {பீமன்}, அந்த ராட்சசன் வசித்த கானகத்தை அணுகித் தான் கொண்டு சென்ற உணவைத் தானே உண்ணத் தொடங்கி, அந்த ராட்சசனைப் பெயர் சொல்லி உரக்க அழைத்தான்.(5) பீமனின் வார்த்தைகளைக் கேட்ட ராட்சசன், எரியும் கோபத்துடன் வெளியே வந்து, பீமன் இருக்கும் இடத்தை நெருங்கினான்.(6) பெரும் உடலும், பெரும் பலமும் கொண்டு, கண்கள் சிவக்கச் சிவந்த தாடி மற்றும் தலை மயிருடன் கூடிய அவன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். தனது பாதச் சுவடுகளால் பூமியை ஆழமாக அழுத்தினான்.(7) அவனது வாய் ஒரு காதிலிருந்து அடுத்த காது வரை விரிந்து திறந்திருந்தது. அவனது காதுகள் கணைகளின் முனைகளைப் போல இருந்தன. கடும் முகத்துடன், மூன்று கோடுகளுடன் பள்ளமான நெற்றியும் கொண்டிருந்தான் அந்த ராட்சசன்.(8)

தனது உணவை உண்ணும் பீமனைக் கண்டு, தனது உதடுகளைக் கடித்துக் கொண்டு, கோபத்தால் கண்களை அகல விரித்துப் பீமனிடம்,(9) “என் கண்ணெதிரிலேயே எனது உணவை உண்டு, எமனுலகு செல்ல விரும்பும் இந்த முட்டாள் யார்?” என்றான்.(10)

ஓ பாரதா {ஜனமேஜயா!} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமன், அந்த ராட்சசனை மதிக்காமல் ஏளனமாகச் சிரித்து, முகத்தைத் திருப்பாமலேயே உண்பதைத் தொடர்ந்தான்.(11) இதைக்கண்ட அந்த மனித ஊனுண்ணி, தனது இரு கரங்களையும் உயர்த்திக் கொண்டு பேரொலியுடன் பீமனை அங்கேயே, அப்போதே கொன்று போடுவதற்காக அவனை நோக்கி ஓடினான்.(12) எதிரி வீரர்களை அழிக்கும் விருகோதரன் {பீமன்}, அந்த ராட்சசன் மேல் தன் சிறு பார்வையை மட்டும் வீசி, மீண்டும் அவனை மதிக்காமல், ராட்சசனின் உணவைத் தொடர்ந்து உண்டான்.(13) கோபம் நிறைந்த அந்த ராட்சசன், குந்தியின் மகனான விருகோதரனை, தனது இரு கரங்களையும் ஓங்கிப் பின்னாலிருந்து வலிமையாக அடித்தான்.(14) இப்படித் தாக்கப்பட்ட பீமன், அதைச் சிறிதும் மதிக்காமல், ராட்சசனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் தொடர்ந்து உண்டு கொண்டிருந்தான்.(15)

வலிமைமிக்கவனான அந்த ராட்சசன், எரியும் கோபத்துடன், ஒரு மரத்தைப் பிடுங்கி, பீமனைத் தாக்குவதற்காக அவனிடம் ஓடினான்.(16) இதே வேளையில், மனிதர்களில் காளையான பலம்பொருந்திய பீமன், ஓய்வாக மொத்த உணவையும் உண்டு. தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, மோதலுக்காக மகிழ்ச்சியுடன் எழுந்து நின்றான்.(17) பிறகு, ஓ பாரதா, பெரும் சக்தி கொண்ட பீமன் ஏளனமாகச் சிரித்து, கோபம் கொண்ட ராட்சசன் வீசிய மரத்தைத் தனது இடது கையால் பிடித்தான்.(18) அந்த வலிமைமிக்க ராட்சசன், பல மரங்களைப் பிடுங்கி வந்து பீமன் மீது எறிந்தான். அந்தப் பாண்டவனும் அதே அளவுக்கு ராட்சசன் மீது எறிந்தான்.(19) பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதனுக்கும் ராட்சசனுக்கும் இடையில் மரங்களைக் கொண்டு நடக்கும் போர் உக்கிரமடைந்து, அந்தப் பகுதியே மரங்களற்றுப் போனது.(20)

அப்போது, அந்த ராட்சசன், தானே பகன் என்று சொல்லிக் கொண்டு, அந்தப் பாண்டவன் மீது பாய்ந்து, பெரும் பலம் வாய்ந்த பீமனைத் தனது கரங்களால் பற்றினான்.(21) அந்தப் பெரும் ஆற்றலைக் கொண்டவனும் {பீமனும்}, வலிய கரங்களைக்  கொண்ட அந்த ராட்சசனைக் கட்டிப் பிடித்து, உற்சாகமவும் வன்முறையுடனும் தனது சக்தியை வெளிப்படுத்தினான்.(22) அந்த ராட்சசன், பீமனால் இழுத்துச் செல்லப்பட்டும், பீமனைத் தான் இழுத்தும் பெரும் களைப்படைந்தவனான.(23) இந்த இருவரின் பெரும் பலத்தால் பூமாதேவி நடுங்கினாள். பெரும் மரங்கள் துண்டு துண்டாகின.(24)

பீமன், ராட்சசன் களைப்படைந்ததைக் கண்டு, அவனைக் தனது கால் முட்டிகளால் பூமியில் அழுத்தி, பெரும் பலத்துடன் தாக்கத் தொடங்கினான்.(25) பீமன், தனது கால்முட்டியை ராட்சசனின் நடு முதுகில் வைத்துக் கழுத்தைத் தனது வலக்கையால் பிடித்து, அவனது {ராட்சசனின்} இடுப்பு ஆடையை இடது கையால் பிடித்து, பெரும் பலத்துடன் அவனை இரண்டாக மடித்துப் போட்டான். அந்த நரமாமிச உண்ணி {பகாசுரன்} பயங்கரமாக அலறினான்.(26,27) ஓ ஏகாதிபதியே! இப்படிப் பீமனின் முட்டியால் ஒடிக்கப்பட்ட அந்த ராட்சசன், குருதியைக் கக்கத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(28)

புதிய பண்டிகை உதயமானது! – ஆதிபர்வம் பகுதி 166-(பக வத பர்வம் – 8)-பகன் கொல்லப்பட்டதும், அவனுடைய சொந்தங்கள் பீமனுடன் உடன்படிக்கை செய்து கொண்டது; ஏகச்சக்கர நகரத்தின் வாயிலில் பகாசுரனின் உடலைக் கிடத்திய பீமன்; பிராமணனின் வீட்டை அடைந்து, நடந்த கதையைச் சொன்ன பீமன்; பகனுடைய மரணத்தைத் திருவிழாவாகக் கொண்டாடிய அந்த நகரத்து மக்கள்.

வைசம்பாயனர் சொன்னார், “பெரும் மலையைப் போன்ற பகன், இப்படி (பீமனின் முட்டியால்) ஒடிக்கப்பட்டு, பயங்கரமாகக் கதறியபடியே இறந்தான்.(1) இச்சத்தங்களால் அச்சமடைந்த ராட்சசனின் உறவினர்கள் தங்கள் பணியாட்களுடன் வெளியே வந்தனர்.(2) உணர்வையிழந்து அச்சமடைந்திருக்கும் அவர்களைக் கண்டவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அந்தப் பீமன், அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை (நரமாமிசம் உண்பதைக் கைவிடுவோம் என்று) உறுதியேற்க வைத்து,(3) “இனி மேல் மனிதர்களைக் கொல்லாதீர்கள். அப்படி மனிதர்களைக் கொன்றீர்கள் என்றால், நீங்களும் பகனைப் போலச் சாக வேண்டியதுதான்.” என்றான்.(4)

ஓ மன்னா {ஜனமேஜயா} பீமனின் பேச்சைக் கேட்ட ராட்சசர்கள், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, பீமன் விரும்பிய உறுதியை ஏற்றனர்.(5) ஓ பாரதா {ஜனமேஜயா} அந்நாளிலிருந்து, (அந்தப் பகுதியைச் சேர்ந்த) ராட்சசர்கள் மனிதர்களுடன் சமாதானமாக வாழ்வதையே அந்த நகரவாசிகள் கண்டனர்.(6) பிறகு பீமன், உயிரற்ற அந்த நரமாமிச உண்ணியை இழுத்துச் சென்று நகரத்தின் வாயில்கள் ஒன்றில் கிடத்தி, யாரும் கவனிக்கும் முன்பே அங்கிருந்து சென்றுவிட்டான்.(7) பகனின் ரத்த சம்பந்தமுள்ள உறவினர்கள், பீமனின் பலத்தால் அவன் கொல்லப்பட்டதைக் கண்டு, மிகவும் அஞ்சி, பல திசைகளில் தப்பி ஓடினர்.(8) அதே நேரத்தில், அந்த ராட்சசனைக் கொன்ற பிறகு, பீமன் அந்தணரின் வசிப்பிடத்திற்குத் திரும்பி, யுதிஷ்டிரனிடம் நடந்தது அத்தனையையும் விவரமாகக் கூறினான்.(9)

அடுத்த நாள் காலையில் வெளியே வந்த நகரவாசிகள், உடல் முழுவதும் ரத்தத்தால் நனைந்து, தரையில் பிணமாகக் கிடக்கும் ராட்சசனைக் கண்டனர்.(10) பெரும் மலையைப் போன்ற அந்த நரமாமிச உண்ணி, சின்னாபின்னமாகச் சிதைக்கப்பட்டு தரையில் கிடப்பதைக் கண்ட பார்வையாளர்களின் முடிகள் சிலிர்த்துக் கொண்டு நின்றன.(11) அவர்கள் விரைவாக ஏகசக்கரம் திரும்பி, தாங்கள் கண்டதைத் தெரிவித்தனர். ஓ மன்னா, அதன் பிறகு, அந்நகர குடிமக்களில் இளமையானவர்களும், முதுமையானவர்களும் ஆயிரக்கணக்கில் தங்கள் மனைவியருடன் வந்து பகனைக் கண்டு, அதை ஒரு அமானுஷ்ய மனிதனின் சாதனை என்று கருதி மலைத்து நின்றனர். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, உடனே அவர்கள் தங்கள் தேவர்களிடம் வேண்டிக் கொள்ளத் தொடங்கினர்.(12,13)

அதன்பிறகு, அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்த ராட்சசனுக்கு உணவு எடுத்துச் செல்லும் முறை யாருக்கு வருகிறது என்று அவர்கள் அனைவரும் கணக்கிட்டனர். பிறகு சரியாக உறுதி செய்து கொண்டு, அவர்கள் அனைவரும் (தங்கள் ஆவலைத் தணித்துக் கொள்ள) அந்த அந்தணனிடம் வந்து கேட்டனர்.(14) இப்படியே தொடர்ச்சியாகக் கேட்கப்பட்ட அந்த அந்தணர்களில் காளையானவன், பாண்டவர்களை மறைக்க எண்ணி, குடிமக்களிடம்,(15) “நான் ராட்சசனின் உணவை எடுத்துச் செல்லப் பணிக்கப்பட்ட பிறகு, எனது உறவினர்களுடன் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது மந்திரங்கள் அறிந்த ஒரு உயர் ஆன்ம அந்தணர்,(16) நகரத்தின் துயரத்தை உறுதி செய்து கொண்டு, என்னிடம் வந்து நான் அழும் காரணத்தையும் கேட்டார். அதன் பிறகு அந்த அந்தணர்களின் முதன்மையானவர், புன்னகையுடன் எனக்கு அனைத்து வாக்குறுதிகளையும் கொடுத்து,(17) “இன்று அந்த ராட்சசப் பாவிக்கு நான் உணவு எடுத்துச் செல்கிறேன். நீ எனக்காகப் பயப்படாதே!” என்று சொல்லி,(18) உணவை எடுத்துக் கொண்டு பகன் வசித்த கானகத்திற்குச் சென்றார். நம் அனைவருக்கும் நன்மையாக அமைந்த இந்தக் காரியம் நிச்சயமாக அவராலேயே ஆனது.” என்றான்.(19)

பிறகு அந்த (நகரத்தின்) அந்தணர்களும், க்ஷத்திரியர்களும் இதைக் கேட்டு பெரிதும் ஆச்சரியமடைந்தனர். வைசியர்களும், சூத்திரர்களும் இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(20) பிறகு, குடிமக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பண்டிகையைக் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அதில் (பகன் மீதிருந்த அச்சத்திலிருந்து விடுவித்த அந்தணரின் {பீமனின்} நினைவாக) அந்தண வழிபாடே முக்கிய சடங்காக இருந்தது[1]” {என்றார் வைசம்பாயனர்}.(21)(மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த 21ம் ஸ்லோகத்தில், “அந்த இயல்புக்கு மிக்க சாதனையைக் கண்டு இவ்வாறு மகிழ்ச்சியடைந்த குடிமக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். பாண்டவர்களும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்” என்றிருக்கிறது. புதிய பண்டிகை குறித்த குறிப்பேதும் இல்லை. கும்பகோணம் பதிப்பில், “அந்தப் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களனைவரும் மிகுந்த ஆச்சரியமும் சந்தோஷமுமுற்றவர்களாகி, அப்போதே பிராம்மண பூஜை செய்தனர். பிறகு, கிராமணங்களிலுள்ளவர்கள் அனைவரும் அந்த மிகுந்த ஆச்சரியத்தைப் பார்ப்பதற்கு அந்த நகரத்திற்கு வந்தனர். பாண்டவர்களும் அங்கேயே வசித்தனர்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “இதன்பேரில் ஆச்சரியமடைந்த திளைத்த பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும், சூத்திரர்கள் அனைவரும், அந்தப் பிராமணனுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்தனர். அந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் அந்த இயல்புக்கு மிக்க ஆச்சரியத்தைக் காண வந்தனர். பிருதையின் மகன்களும் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்தனர்” என்றிருக்கிறது.)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading