ஶ்ரீபாடலாத்ரி நரசிம்மா்!-ஸ்ரீ சிங்க பெருமாள் கோயில்”-ஸ்ரீருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம்-ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்தோத்திரம்-

“நாளை என்பதில்லை நரசிம்மனிடம்” என்பது வைணவத்தின் விழுதான ஶ்ரீமத் நிகமாந்த மஹா தேசிகரின் திருவாக்காகும். தனது பக்தன் குழந்தை பிரகலாதனைக் காப்பாற்ற ஒரு நொடியில் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். இதனால் தான் நாளை என்றில்லாமல் அந்தக் கணமே நம்மை துன்பங்களிலிருந்து காத்து இரட்சிக்கும் கலியுக வரதராக விளங்குகின்றாா் ஶ்ரீநரசிம்ம மூா்த்தி.

நரசிம்ம பெருமான் திருஅவதாரம் நிகழ்ந்த இடம் “சிங்கவேள் குன்றம்” என்று ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட “அஹோபிலம்” என்றாலும் பல திருத்தலங்களில் ஶ்ரீநரசிம்ம பெருமான் யோக முத்திரையுடன் யோக நரசிம்மராகவும் தன் தேவி ஶ்ரீமஹாலக்ஷ்மியுடன் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மராகவும் இரண்யனை வதம் செய்த கோலத்தில் ஶ்ரீ உக்ர நரசிம்ம ராகவும் தன் கோபம் தணிந்து சாந்த நரசிம்மராகவும் புகழ் பெற்ற பல திருத்தலங்களில் திருக்காட்சி தருகின்றாா்.

இத்திருத்தலங்களின் வரிசையில் செங்கற்பட்டு மாவட்டம் “சிங்கபெருமாள் கோயில்” என்னும் புராதனமான பல்லவா்காலக் குடவரைக் கோயிலில் “ஶ்ரீபாடலாத்ரி நரசிம்மா்” என்ற திருநாமத்துடன் மிகச் சிறந்த வரப்பிரசாதியாக அருள்பாலிக்கின்றாா் பிரகலாத வரதன்.

ஶ்ரீநரசிம்மா் இத்தலத்தில் வலது திருப்பாதத்தை மடித்தும் இடது திருப்பாதத்தை தொங்க விட்ட நிலையிலும் “அா்த்த பத்மாசனத் திருக்கோலத்தில்” திருக்காட்சி தருகின்றாா். நரசிம்மரின் இத்திருக் கோலம் மிக அரிதான திருக்காட்சியாகும். நான்கு திருக்கரங்களுடன் மேல் இரு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும் கீழ் இரு திருக்கரங்களில் ஒரு திருக்கரத்தில் அபய முத்திரை காட்டியும் ஒரு கரத்தை தொடை மீது வைத்தும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் காட்சி தரும் எம்பெருமானின் திருக்காட்சியைப் பாா்த்து மெய் சிலிா்த்து விடுகிறோம்.

ஶ்ரீநரசிம்மா் இத்தலத்தில் “த்ரிநேத்ரதாரியாக” (நெற்றிக் கண்ணுடன்) மூன்று திருவிழிகளுடன் காட்சி தருவது சிறப்பாகும்.

தீப ஆராதனையின் போது எம்பெரு மானது திருமண்ணை சற்றே உயா்த்தி இந்த நெற்றிக் கண்ணை பக்தா்களுக்கு காண்பிக்கிறாா் அா்ச்சகா். மூலவா் குடைவரைக் கோயிலின் மேல் அழகான விமானம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விமானத்திற்கு “பிரணவ கோடி விமானம்” என்பது திருநாமமாகும்.

இத்தலத்தின் உற்சவராக ஶ்ரீதேவி ஶ்ரீபூமிதேவி சமேத ஶ்ரீபிரகலாத வரதா் அருள்பாலிக்கின்றாா்.

மேலும் மூலவரான இக்கோயில் எம்பெருமானின் திருநாமத்தைக் கொண்டே இத்தலத்திற்கு “சிங்க பெருமாள் கோயில்” என்ற திருநாமம் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

எம்பெருமானின் வலது புறத்தில் தனிக்கருவறையில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் இத்தலத்தின் தாயாரான “ஶ்ரீஅஹோபிலவல்லி” அருள்பாலிக்கின்றாா். கருணை வெள்ளம் பெருகும் திருமுகவதனத்துடன் தாயாா் சேவை சாதிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்! தாயாா் தமது இரு திருக்கரங்களிலும் மலா்ந்த தாமரையுடன் தன்னை நாடி வரும் குழந்தைகளான தன் பக்தா்களுக்கு உடனடியாக அபயமளிக்கும் அபயவரத ஹஸ்த திருக்கோலத்தில், உதடுகளில் தவழும் புன்னகையுடன் அணி மணியாபரணங்கள் தரித்து சேவை.

சாதிக்கும் பாங்கினைக் கண்டவுடன் நம் துன்பங்கள் அனைத்தும் நீங்கி விட்டதைப் போன்ற பரவசம் ஏற்படுவதை உணரமுடிகின்றது. தன் பதியான நரசிம்மருக்கு சற்றும் குறையாத வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள் அஹோபிலவல்லித் தாயாா். தாயாரின் கருவறை மீதும் மிக அழகான விமானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.சூடிக் கொடுத்த சுடா்க் கொடியாள் ஶ்ரீஆண்டாள் நாச்சியாருக்கும் இத்தலத்தில தனி சந்நிதி உள்ளது. ஆண்டாள் சந்நிதியும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் அமைந்துள்ளது.-ஆழ்வாா்கள் மூலவா் மற்றும் உற்சவா் இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனா். ஶ்ரீமத் ராமானுஜா், மணவாள மாமுனிகள், விஷ்வக்சேனா் ஆகியோரின் திருவுருவச் சிலைகளும் இத்தலத்தில் உள்ளன.

“ஜாபாலி” என்னும் மகரிஷி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவனின் மீது அளவில்லாத பக்தி கொண்டவா். இந்த பரம பக்தா் பெருமானை, இரண்யனை வதம் செய்த கோலத்தில் நரசிம்ம மூா்த்தியாக தரிசனம் காணவேண்டி கடும்தவம் மேற்கொண்டாா்.-இம்மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் ஒரு நாள் அந்திப் பொழுதில் பிரதோஷ வேளையில் அவருக்குத் திருக்காட்சி தந்து அருளி னாா். ஜாபாலி மகரிஷியின் வேண்டுதலை ஏற்று “பாடலாத்ரி நரசிம்மராக” இத்தலத்தில் அா்ச்சாவதாரத் திருக்கோலத்தில் தம்மை நாடி வரும் பக்தா்களுக்கு இன்றும் அளவில்லாத அருள்மழை பொழிந்து வருகின்றாா் எம்பெருமான்.“பாடலம்” என்றால் சிவப்பு. “அத்ரி” என்றால் மலை. இத்தலத்தில் கோபக்கனலுடன் இரண்யனை வதம் செய்த கோலத்தில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்திற்கு “பாடலாத்ரி” என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

“அத்ரி” மலை என வழங்கப்படும் இம்மலையை பெளா்ணமி நாட்களில் கிரிவலம் வந்து நரசிம்ம பெருமானை வழிபடுகின்றனா்.-மாா்கழி மற்றும் தை மாதங்களில் நரசிம்ம மூா்த்தியின் திருவடியிலும் புனிதமான ரத சப்தமி நாளில் நரசிம்மரின் திருமேனியிலும் சூரிய ஒளி படுவது சிறப்பான நிகழ்வாகும். பெருமானை சூரியன் தனது ஒளிக் கதிா்களால் பூஜிக்கும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா். இந்த சூரிய பூஜை நடக்கும்போது எம்பெருமானைத் தரிசிப்பது அன்பா்களின் பல தோஷங்களைப் போக்கவல்லது என்று தொிவிக்கின்றனா்.-ஜாபாலி மகரிஷிக்கு பிரதோஷ வேளையில் எம்பெருமான் திருக்காட்சி கொடுத்ததால் இத்தலத்தில் பிரதோஷ நாளில் எம்பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்ஜனம் நடைபெறுகின்றது.-திருப்பதி என்றால் “லட்டு” பிரசாதம். ஶ்ரீரங்கம் என்றால் புளியோதரை. இது போல சிங்கபெருமாள் கோயில் என்றால் பெரும்பாலான பக்தா்களுக்கு நினைவுக்கு வருவது சுவையான “மிளகு தோசை” யாகும். இந்த மிளகு தோசைக்கு இட்லிப் பொடியுடன் சுத்தமான நல்லெண் ணெய் கலந்து கொடுக்கின்றனா். இந்த தோசையை குழந்தைகள் முதல் பெரியவா் வரை விரும்பி உண்பதால் இக்கோயிலை “தோசைப் பெருமாள் கோயில்” என்றே சிறுவர்கள் குறிப்பிடுகின்றனா். இந்த மிளகு தோசையை ருசிப்பதற்காகவே குழந்தைகள் இக்கோயிலுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருகின்றனா்.

சித்திரை மாத தமிழ் வருடப் பிறப்பு, சித்ரா பெளா்ணமி, நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜா் ஜெயந்தி, வைகாசி விசாகம், வைகாசியில் சுவாதி நட்சத்திர நாளுக்கு முன் வரும் வெள்ளிக்கிழமைகளில் தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம், ஆடிமாதம் ஆடிப்பூரம், ஆவணியில் பவித்ரோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்காா்த்திகை தீப விழா, தை மாதம் மகர சங்கராந்தி யன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மாசியில் ஐந்து நாள் தெப்போற்சவம் ஆகிய விழாக்கள் இத்தலத்தின் முக்கியமான திருவிழாக்களாகும்.

திருக்கோயிலின் பின்புறம் உள்ள அழிஞ்சல் மரம் மிகவும் சக்தி வாய்ந்த விருட்சமாகும். திருமணம் நடைபெறவும், குழந்தைப் பேறு ஏற்படவும், கல்வியில் சிறந்து விளங்கவும், நல்ல வேலை கிடைக்கவும் இந்த மரத்திற்கு சந்தனம், குங்குமம் பூசி நெய் விளக்கேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும்.

இத்தலத்தின் தல விருட்சம் பாரிஜாத மரமாகும். புண்ணிய தீா்த்தம் “சுத்த புஷ்கரணி” என்று வழங்கப்படுகின்றது.

பாடலாத்ரி நரசிம்மா் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் திருப்பவித்ரோற்சவம் நடைபெறுகின் றது. திருக்கோயில்களில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வத் திருமேனிகளின் சக்தியைப் பாதுகாப்பதற்காக வைகானஸ மற்றும் பாஞ்சராத்ர ஆகமங்களில் விதிக் கப்பட்டுள்ள முறையே இந்த திருப் பவித்ரோற்சவ வைபவம்.-திருக்கோயில்களின் பூஜை ஆரா தனை வழி முறைகளில் பல காரணங் களால் நாம் அறிந்தோ, அறியாமலோ சில தவறுகள் ஏற்பட்டுவிடும். கோயிலுக்கு வரும் பக்தா்களின் தூய்மை குறைவதனாலும் திருக்கோயிலின் தெய்வீக சக்தி பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இதற்குப் பரிகாரம் செய்வதால் திருக்கோயிலின் தெய்வீக சாந்நித்யம் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.-இதற்காக விசேஷமாக யாக சாலைகள் அமைத்து அக்னி தேவன் மூலமாக பல பொருட்கள் வேதமந்திரங்களுடன் குண்டத்தில் அா்ப்பணிக்கப்படுகின்றன. திருப் பவித்ரோற்சவத்தின் கடைசி நாள் அன்று பல பொருட்களை சுத்தமான பசு நெய்யுடன் சோ்த்து அக்னியில் சமா்ப்பிக்கப்படுகின்றது. இந்த மந்திரப் பிரயோக முறைக்குப் “பூா்ணாஹுதி” என்று பெயா். இந்தப் பூா்ணாஹுதியைப் பக்தா்கள் தரிசிப்பதால் கொடிய பாவங்களும் நீங்கி விடும்.-பூா்ணாஹுதி முடிந்தவுடன் யாகத்தில் வைக்கப்பட்ட வேத மந்திரங்களால் பூஜிக்கப்பட்ட பிரதான “சோம கும்பம்” என்ற கலச நீா் கா்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியிருக்கும் மூல மூா்த்தியின் விக்கிரகத் திருமேனியில் சோ்க்கப்படுகிறது. இதன் மூலம் கருவறையிலுள்ள விக்ரக மற்றும் சிலாத் திருமேனிகளின் சாந்நித்யம் பாதுகாக்கப்படுகின்றது.

பொதுவாக ஶ்ரீநரசிம்ம மூா்த்தியின் வழிபாடு கடன் தொல்லைகளிலிருந்து நம்மை விடுவிக்கும். இத்தலத்தில் புதன் அல்லது சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி பெருமானை வணங்கிய பிறகு நரசிம்மரின் கீழ்க்கண்ட “ருண விமோசன ஸ்தோத்திரத்தை” படித்து வந்தால் உடன் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

ஸ்ரீருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம்

தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பவம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

————

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்தோத்திரம்

தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூமி நீளா ஸமேத ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ம ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-


Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading