திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் திருவரங்கனாக, தனக்குச் செய்த மிகப் பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான், பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அவனது சேவையையும் அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து, கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி, நாம் சிரமப்பட்டு புதிதாகக் கண்டு பிடித்து எம்பெருமானின் பெருமைகளைப் பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.
எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.
ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:
- 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என வேண்டுகிறார்.
- அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
- இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், நல்ல நெஞ்சத்தோடு செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்று குரங்குகள் மலையை நூக்க (27) வது பாசுரத்தில் சொல்கிறார்.
- உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்துகிறார்.
- ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தங்கள் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.
அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்த்தோம்.
- தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
- தான், தவம் செய்பவர்கள் கூட்டத்திலும், அடியவர்களுக்கு நல்லது செய்ய பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, தன்னால் சொந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லை, கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக மாறி தன்னுடைய இந்த பிறவி வீணானதை நினைத்து தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் வருந்துகிறார்.
- எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, எம்பெருமான் முன் வந்து நின்றதை ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் தன்னுடைய மூடத்தனம் சொல்கிறார்.
- தம்முடைய தாழ்வுகளைச் சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற 33வது பாடலில் சொல்கிறார்.
- உள்ளத்தே உறையும் மாலை என்ற 34 வது பாடலில், எம்பெருமானுக்கு அடிமை செய்பவன் போல வேஷங்களைப் போட்டு, அவன் எல்லோருடைய நெஞ்சத்தில் இருந்து, எல்லா நினைவுகளையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை புகழும்போது, தன்னுடைய கள்ளவேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டதை சொல்கிறார்.
இனி திருமாலையின் அடுத்த பகுதி.
இப்படி ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, தான் எல்லோருக்கும் அவர்கள் கேட்காமலே செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.
இனி, இந்த பகுதியில் உள்ள முதல் பாசுரத்தைப் பார்ப்போம்.
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய், சேவியேன் உன்னை அல்லால், சிக்கென செங்கண் மாலே ! ஆவியே ! அமுதே ! எந்தன் ஆருயிர் அனைய எந்தாய் ! பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே (35)
ஆழ்வார் எம்பெருமானை விட்டு விலகுவதை உணர்ந்த எம்பெருமான், அவர் ஏன் விலகுகிறார் என்று வினவ, ஆழ்வார், எல்லாம் அறிந்த எம்பெருமான் முன் பொய்களை சொல்லி அணுகினதாகவும் அதனால் அவனுக்கு சிறுமை என்று முடிவு செய்து, பற்பல ஜென்மங்களாக, ஆழ்வாரைப் பற்றி ஒன்றும் அறியாத சாதாரண மக்களுடன் சேர்ந்து இருப்பதற்கு செல்வதாக பதில் உரைக்கிறார். எம்பெருமான், இந்த பாடலில், தாம் அடியவர்களின் எந்த குறையும் பார்ப்பதில்லை என்றும், சாதாரண மக்கள் எல்லா குறைகளையும் ஒன்று விடாமல் பார்ப்பார்கள் என்றும், தாம் அடியவர்களின் எல்லா குணங்களையும் ஒன்று விடாமல் கவனித்து கருத்தில் கொள்வதாகவும் கூறி, அவனை அணுகுவதே சரியானது என்கிறார். அதற்கு ஆழ்வார், அப்படி செய்ததற்கு ஏதாவது சரித்திரம் உண்டா என்று வினவ, த்ரிவிக்ரமனாக, மூவுலங்களையும் அளந்து, எல்லாருடைய தலைகளிலும் தன்னுடைய திருவடிகளை சாத்தி, அருள் செய்து, எல்லை இல்லாத நீர்மையை (எளிமையை) காட்டியதைச் சொல்லி, ஆழ்வார் இல்லாவிட்டால், தன்னால் இருக்க முடியாது என்று உரைக்கிறார்.
சென்ற பாசுரத்தில் சொன்னது போல், இந்த பாட்டும் நம்மாழ்வாரின், வளவெழு உலகின் என்ற திருவாய்மொழி முதல் பத்து, ஐந்தாம் பதிகத்தில் சொன்னதை நினைவு படுத்தும். நம்மாழ்வார் முதல் பத்து முதல் நான்கு பதிகங்களில் நிறைய செய்தும் எம்பெருமான் மனம் இரங்கவில்லை, அதற்கு ஆழ்வார் தன்னுடைய குற்றங்களே காரணம் என்று எண்ணி விலகப்பார்த்தார். இந்த பதிகத்தில் மூன்றாம் பாட்டில் “திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன்“என்று த்ரிவிக்ரம அவதாரத்தை காட்டி, தன் பால் மனம் வைக்கத் திருத்தி (திருவாய்மொழி, 1.5.10) அவரை விலகாமல் அவருடனே இருக்கும்படி செய்கிறார். இங்கும் அதே போல், தொண்டரடி பொடி ஆழ்வாருக்கும் த்ரிவிக்ரம அவதாரத்தை காட்டி அவரையும் அவனை விட்டு விலகாமல் பார்த்து கொள்கிறார்.
அதே போல், திருவாய்மொழி (7.10.10) என்ற பாசுரத்தில், ஆழ்வார், “சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும், சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை“என்று சொல்வதில் “தன் சிந்தையில் அவனை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை தேவபிரான் அறிவான் என்றும், சிந்தையினால் செய்யப்படுவனவற்றுள் அவன் அறியாதன ஒன்றும் இல்லையே” என்றும் சொல்வது தொண்டரடிப்பொடி ஆழ்வார் விலவர சிரித்திட்டேனே என்று சொல்லும் போது சொல்வதுடன் ஒப்பிட்டு கொள்ளலாம். அங்கே நம்மாழ்வார் எம்பெருமானை தவிர வேறு ஒன்றும் தன் சிந்தையில் இல்லை என்றும் அதனை அவனே அறிவான் என்றும் சொல்வதும், இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார், தன் சிந்தையில் அவனை தவிர மற்ற விஷயங்களே உள்ளன என்றும் அதனை அவரே அறிவார் என்றும் சொல்வதும் நினைவில் கொள்ளத்தக்கது.
“மஹாபலி எல்லா உலகங்களையும் அபகரித்த போது, எல்லா உலகங்களையும் கடந்து, எல்லாருடைய தலைகளிலும் தன்னுடைய திருவடி படும்படி வியாபித்த, என் ஸ்வாமியே, உன்னைத் தவிர, வேறு ஒரு பொருளையும் சேவிக்க மாட்டேன், சிவந்த திருக்கண்களை உடையவனே, அடியவர்களின் பக்கம் இருப்பவனே, எனக்கு உயிர் போன்றவனே, அமிர்தம் போன்றவேனே, என்னுடைய அருமருந்து போன்ற உயிர்க்கு அந்தராத்மாவாக இருக்கும் என் ஸ்வாமியே, பாவியாகிய நான், உன்னைத் தவிர, பிறரை நினைக்க மாட்டேன், நான் மிக்க பாவத்தை செய்தவனே’ என்று ஆழ்வார் சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.
தாவி
முன்கூட்டியே அறிவித்துவிட்டால், பல காலங்களாக மனதில் உள்ள அகங்காரம் உள்ள சம்சாரிகள், அவன் திருவடிகளை தங்கள் தலைமீது வைக்க மறுத்து ஆணை இடுவார்கள். எப்படி திருவாய்மொழியில் (10.10.2) நம்மாழ்வார், அவன் மறுக்க முடியாதபடி, “திருவாணை, நின் ஆணை ” என்று சொன்னபடி அடியவர்கள், அவன் மறுக்க முடியாதபடி திருவடிகளை தலையில் ஏந்தி கொள்வார்களோ, அதே போல் இவர்கள் இவனது திருவடிகளை ஏற்க மறுப்பார்கள் என்று எம்பெருமான் யாரும் அறியாதபடி, யாருக்கும் களைப்பு ஏற்படாதபடி எல்லோர் தலைகளிலும் தன் திருவடி தீண்டும்படி தாவி வளர்ந்தான் என்கிறார்.
அன்று
க்ருத யுகத்தில் மஹாபலியால் மூன்று உலகங்களும் அபகரிக்கப்பட்டு, எம்பெருமானுடைய சேஷித்வமும், மக்களுடைய சேஷத்வமும் அழிந்து கிடந்த அன்று என்கிறார்.
உலகமெல்லாம்
மஹாபலியால் கவரப்பட்ட மூன்று உலகங்களை அளந்தது மட்டும் இல்லாமல், பிரம்மாவின் சத்ய லோகம் வரையில் உள்ள ஏழு உலகங்களையும் அளந்து, எல்லாவற்றிலும் உள்ள எல்லா ஜீவராசிகள் மீதும், உயர்ந்தவர்(வசிஷ்டர்), தாழ்ந்தவர் (சண்டாளர்கள்) என்ற பேதமில்லாமல், தன்னுடைய திருவடிகள் தீண்டும்படி வளர்ந்ததை காட்டுகிறார்.
தலைவிளாகக் கொண்ட
ஸஹஸ்ர ஸீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ : ஸஹஸ்ரபாத் , ஸ பூமிம், விஸ்வதோ வ்ருத்வா , அத்யதிஷ்டத் தசாங்குலம் (புருஷஸூக்தம் 1) என்றதன் படி, புருஷன் எனப்படும் நாராயணன், கணக்கற்ற தலைகளையும், அளவற்ற கண்களையும், அனந்தமான கால்களையும் உடையவர், அவர் பூமியை எல்லாப்புறமும் சூழ்ந்து, அதற்கு மேலும் எல்லையற்ற தூரம் வியாபிக்கிறார் என்று பொருள் ஆகும். அதனால், பூமியையும் மற்றும் நித்ய விபூதியான மேல் உலகங்களையும் வியாபிக்கிறார் என்று பொருள் வருவது போல், தலைவிளாக்கொண்ட என்பது, அளக்க வேண்டியதற்கு மேலே அளந்ததை காட்டுகிறது. அதே போல், காக்க வேண்டிய (ரக்ஷிக்க வேண்டிய) பொருட்களின் அளவினை விட எம்பெருமானின் காக்க வேண்டிய ஆசை (பாரிப்பு) மிக அதிகமா இருப்பதை காட்டுகிறது.
எந்தாய்
திருமங்கையாழ்வார், திருகுறுந்தாண்டகம், பாடல் 6ல் “அமரர் சென்னி பூவினை‘ என்று சொன்னபடி, நித்யஸூரிகள் தங்கள் தலையினால் தாங்கும் எம்பெருமானின் திருவடிகளை, அவற்றில் ஈடுபாடற்ற சம்சாரிகள் தலைகளிலும் எம்பெருமான் வைப்பதற்கு என்ன காரணம் என்றால், அது எம்பெருமானனுக்கு ஜீவாத்மாக்களுடன் உடன் உள்ள, விட முடியாத உறவே என்று சொல்வது கவனிக்கத்தக்கது. நம் சம்பிரதாயத்தில் நவவித சம்பந்தம் என்று பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஒன்பது விதமான சம்பந்தங்களை கூறுவார்கள்.
எம்பெருமானுடன் இருந்த இந்த உறவு, அன்று தெரியாமல் இருந்த குறை தீர, இப்போது, அவ்வுறவை அறிந்தபின்னர், ஆழ்வார் என்தந்தை என்று சொல்லாமல் எந்தாய் என்று சொல்லி, தன்னுடைய நன்றி கடனை செலுத்துகிறார். அன்று எம்பெருமான் தன் திருவடிகளால் தடவி காத்ததினால், அவனுடைய அந்த முயற்சியால் தான், இப்பொழுது திருந்தியது என்று உணர்ந்து எந்தாய் என்று அழைக்கிறார். திருப்பாவை 24ம் பாட்டில், “அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி, சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி, கன்று குணிலாய் வெறிந்தாய் கழல் போற்றி, குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி, வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி, என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.” என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அன்று என்று அங்கு சொன்னது, முன்னொரு யுகத்தில், காலத்தில், என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்து, இன்று வந்ததை குறிப்பிடுகிறார்.
தாய் தன்னுடைய குழந்தையை கட்டி கொண்டு உறங்குவது போல், எம்பெருமான், எல்லோருடைய தலைகளையும், தான் பெற்ற பேறாக கருதி, தீண்டினான். சம்சாரிகள் இன்றும் அவனுடனான உறவை அறிந்து இருக்கவில்லை என்றாலும் அவர்களுக்கும் சேர்த்து ஆழ்வார் உகக்கிறார்.
சேவியேன் உன்னை அல்லால்
ஆழ்வார், இப்பொழுது எம்பெருமானின் எளிமையை அறிந்து, அவனை விட்டு அகன்று மற்றொன்றை பற்ற மாட்டேன் என்கிறார். எம்பெருமானை விட்டால், ஆழ்வார், தான், எவர் தயவும் இன்றி, சுதந்திரமாக இருக்க வேண்டும் (சுதந்திரன்), அல்லது இன்னொருவரை சார்ந்து அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும்(பாரதந்திரியன்), இந்த இரண்டு குறையும் தனக்கு வராது என்கிறார்.
திருமந்திரத்தின் முதல் பதத்தில், பாரதந்த்ரியம் எனப்படும் எவருக்கும் அடிமையாக இருப்பதை தவிர்ப்பதையும், இரண்டாவது பதத்தில், ஸ்வாதந்த்ரியம் எனப்படும், தனக்கு தானே ராஜாவாக இருக்கும் தன்மையை தவிர்ப்பதையும், ஆழ்வார் சேவியேன் உன்னை அல்லால் என்கிறார். எம்பெருமானை சேவிப்பது வழக்கம் ஆகிவிட்டதால், வெளிவிஷயங்களையும் சேவிக்க மாட்டேன் என்ற வார்த்தைகளையே உபயோகிக்கிறார்.
சிக்கென
மேலே சொன்ன விஷயம் எல்லா காலங்களிலும் இருக்கும், தன்னுடைய ஆத்மா உள்ளவரையிலும் இருக்கும், எப்பொழுதும் இருக்கும் என்பதை சிக்கென என்றதால் சொல்கிறார். நம்மாழ்வார் “உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.” திருவாய்மொழி (2.6.1) சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அதே போல் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை இழந்து விடுவோமோ என்று கவலையுற்ற எம்பெருமானுக்கு ஆழ்வார் இந்த வார்த்தையால் உறுதி அளிக்கிறார்.
ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: என்பது, பகவத் கீதையில், எம்பெருமான், ‘எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்’ என்று சரமச்லோகத்தில் ஜீவனை கவலைப்படாதே என்று சொன்ன எம்பெருமானுக்கு, இங்கே ஆழ்வார் அபயப்ரதானம் செய்கிறார்.
செங்கண்மாலே
இந்த வார்த்தைகள், எம்பெருமானுக்கு இயற்கையில் உள்ள சிவந்த திருக்கண்களை பற்றி சொல்வது அல்ல. ஆழ்வார் சிக்கென என்று சொன்னவுடன் எம்பெருமானின் திருக்கண்களில் பிறந்த ஒரு தனிச் சிவப்பினைக் குறிக்கிறது. சென்ற பாட்டில் (திருமாலை 34), ‘வெள்கிப் போய் ‘ என்றவுடன் கவலையுற்ற எம்பெருமான், இந்த பாட்டில், “‘சேவியேன் உன்னை அல்லால் சிக்கென “ என்று சொன்னதால் உண்டான பயம் தீர்ந்து, ஆழ்வாரின் மேல் உண்டான பெரும் காதல் உள் அடங்காமல் கண் வழியே புறப்பட்டு ஒளி வீசுவதை சொல்கிறார். செங்கண்மாலே என்பதால், பெருங்காதலால் இப்படி குதறி சிவந்த கண்களை உடையவனே என்று பொருள் கொள்ளலாம்.
கண்ணும் சிவந்து , பெரியவாய் வாயும் சிவந்து, (திருவாய்மொழி 8.8.1) என்ற பாடலிலும் ஸ்வாமி நம்மாழ்வார் கண்கள் சிவந்து என்று சொன்னது, எம்பெருமானது இயற்யான கண்ணழகை சொல்வது அன்று, ஆழ்வாரோடு சேர்ந்தபின் உண்டான பூரிப்பை சொல்கிறது.
இராமாயணம், யுத்த காண்டத்தில், விபீஷணன் இராவணனை பிரிந்து இராமனை தேடி வந்த போது, சுக்ரீவன், விபீஷணன் இராவணன் தம்பி என்பதால் அவனை கொல்ல வேண்டும் என்று சொன்னதும், பிறகு அனுமன் அவனை தங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதும் இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.
“வத்யதாமேஷ தீவ்ரேண தண்டேந ஸசிவைஸ் ஸஹ, ராவணஸ்ய, ந்ருஶம்ஸஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண(யுத்த காண்டம், 17.29) என்பது, இந்த விபீஷணன் கொடூரமான ராவணனின் சகோதரன் என்பதால் அவனது மந்திரிகளுடன் சேர்ந்து தண்டனை கொடுத்துக் கொல்வோம் என்று சுக்ரீவன் ராமனிடம் சொன்னான். எம்பெருமானுக்கு ஆழ்வார் கூறிய ‘வெள்கி போய் ‘என்ற வார்த்தை, சுக்ரீவன் இராமனிடம் கூறிய வார்த்தைக்கு ஒப்புமை கூறி எம்பெருமான் திருவுள்ளம் பட்ட பாட்டை காண்பிக்கின்றது. பின்னர் இராமன் மற்றவர்கள் கருத்தினை கேட்ட போது, வாயுவின் புத்திரனான அனுமன் விபீஷணனை நம் சொந்த நபராக ஏற்றுக்கொள்ளலாம் (17.67) என்று சொன்ன வார்த்தைகள், வலிமை மிக்க இராமன் இதயத்தில் மிகவும் மகிழ்ச்சியடைய செய்து, தனது கருத்தைச் சொல்லத் தொடங்கினான் என்பது கீழ் வரும் ஸ்லோகத்தில் வருகிறது. அதராமःப்ரஸந்நாத்மா ஶ்ருத்வா வாயுஸுதஸ்ய ஹ, ப்ரத்ய பாஷத துர்த்தஷ ஶ்ருதவாநாத்ம நிஸ்திதம் (யுத்த காண்டம், 18.1). ராமாவதாரத்தில் அனுமன், ஸ்ரீராமனுக்கு வருந்தாதீர் என்று அபயம் அளித்ததாகவும், இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார் அர்ச்சாவதாரத்தில் உள்ள பெரியபெருமாளுக்கு அபயம் அளித்ததாகவும் உரையாசிரியர் சொல்கிறார். ஆழ்வார் சிக்கென என்று சொன்னபோது, எம்பெருமானுக்கு அவ்வாறே இருந்தது என்கிறார்.
செங்கண்மாலே, உன்னை அல்லால் சேவியேனே என்று சேர்த்து பார்த்தால், தன்னை பெற்றதால், பெரும் காதலால் முகம் மலரும்படி இருக்கும் எம்பெருமானத் தவிர வேறு எங்கு போவார் என்ற கருத்தை சொல்கிறது.
ஆவியே
தன்னுடைய உயிரை போன்று இருக்கும் எம்பெருமானை விட்டு எங்கே போவேன் என்கிறார் ஆழ்வார். ஆழ்வார் பிராணனை (உயிரினை), வாயுவின் ஒரு நிலையாக கருதவில்லை. திருவாய்மொழி (7.2.9) யில் சொன்னது போல், இந்த ஆழ்வார், ‘என் திருமகள் சேர் மார்வனே. என்னும் என்னுடைய ஆவியே என்னும்’ என்று ஸ்ரீமன் நாராயணனையே தன்னுடைய உயிராக நினைத்து இருப்பவர்.
அமுதே
ஆழ்வார் எம்பெருமானை வாழ்விற்கு தேவையான உயிர் போல் மட்டும் எண்ணாமல், மிகவும் இனிமையான தன்னுடைய உயிரினை சாவாமல் காக்கும் அருமருந்தமான அமுதம் என்று நினைக்கிறார்.
எந்தன் ஆருயிர் அனைய எந்தாய்
எம்பெருமான் தன்னுடைய ஆத்மாவாகவே இருக்கிறார் என்கிறார். ஆத்மாவான எம்பெருமானை விட்டு, வெறும் சரீரத்தை மட்டும் கொண்டு தான் வெளியில் வாழ முடியாது என்பது கருத்து.
அணுகத்தகாதவன் என்று எண்ணி எம்பெருமானை விட்டு அகல செல்ல நினைத்த ஆழ்வாரை, அகன்று, அழிந்து விடாதபடி, சேர்த்துக்கொண்ட சுவாமி என்பதை, இங்கே எந்தாய் என்பதால் தெரிவிக்கிறார்.
வாத்ஸல்யம் என்ற எம்பெருமானின் திருக்குணம் என்பது, குற்றம், குறைகளுடன் தம் அடியார்கள் இருந்த போதிலும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது, அதாவது, பிறந்த கன்றை, தாய்ப் பசு, அருவருப்பு இல்லாமல், ஆசையுடனும் பாசத்துடனும் நக்கிக் கொடுக்கும் அன்பையும் பாசத்தையும் போல எம்பெருமான் அடியவர்களிடம் அன்பையும் பாசத்தையும் பொழிபவர்.
இங்கே, எம்பெருமானின் வாத்ஸல்யம் அல்லது அடியவர்களிடம் பரிவு என்ற திருக்குணத்தை காட்டும் சிவந்த கண்களை உடைய செங்கண்மால் என்கிறார். ஆழ்வாருக்கு உயிராக இருப்பவனே, இத்துடன் மிக இனிமையான அமுதம் போன்றவனே, தனக்கு ஆத்மாவாக இருந்து அவரை நல்வழியில் நடத்தி செல்லும் ஆருயிர் அனைய எந்தாய் என்கிறார், இப்படி உள்ள பல பெருமைகளையும் கொண்ட எம்பெருமானை விட்டு எங்கேயும் வெளியே செல்ல இயலாது என்று ஆழ்வார் கூறுகிறார்.
பாவியேன் உன்னை அல்லால்
கீழ் பாசுரங்களில் ஐயனே அரங்கனே (33) என்றும், ‘என்னை ஆளுடைய கோவே ‘ என்றும் சொன்ன வார்த்தைகளும் பொய் தானோ என்று எம்பெருமானின் திருவுள்ளமாகுமோ என்று கவலையுற்று, எம்பெருமானை தவிர வேறு ஒன்றையும் நினைக்க மாட்டேன் என்பதை, ‘பாவியேன் உன்னை அல்லால் ‘ என்ற வார்த்தைகளால் சொல்கிறார்.
பாவியேன் பாவியேனே
பாபம் மிகுந்த சம்சாரிகளை விடாமல், எல்லோர் தலையிலும் தன்னுடைய திருவடிகளால் தீண்டிய எம்பெருமானை விட்டு ஆழ்வார் விலகி செல்ல நினைத்ததற்கு காரணம் அவரின் பாவங்களே என்று தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். இரண்டாவதாக சொன்ன ‘பாவியேனே ‘என்றது, உன்னை தவிர வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று முன்பு சொன்னதை உறுதி செய்கிறார்.
பாவியேன் பாவியேனே என்று இரண்டு வார்த்தைகளிலும் பாவி என்ற சொல் வருவது, தான் செய்த அதிக அளவு பாவங்களை குறிப்பதற்காக என்றும் எடுத்துக் கொள்ளலாம். அடியார்களின் குற்றங்களை காண மாட்டாத அளவோடு இல்லாமல், எம்பெருமானை வெறுக்கும் சம்சாரிகளையும் வெறுக்காத எம்பெருமானை தான் அகல நினைத்ததற்கு காரணம், தான் செய்த மிக அதிக அளவிலான பாவங்களே என்ற கருத்தையும் சொல்வதாக கொள்ளலாம்.
இந்த இரண்டு பாவங்களில், முதல் பாவம், ஆழ்வார் எம்பெருமானை விட்டு விலகி தன்னை தானே அழித்து கொள்ள நினைத்தது. இரண்டாவது பாவமாவது, அனைவரும் வாழ்வதற்கு காரணமாக ஆவியாயிருக்கும் எம்பெருமானையும் தான் அகல்வதின் மூலம் அழித்து, அனைவரையும் அழிக்க முற்பட்ட பாவத்தை குறிப்பதாக அமையும் என்றும் கொள்ளலாம்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னிடம் நல்ல குணங்கள் இல்லை என்றும் தீய குணங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவன் என்றும் இப்பாடலுடன் நைச்சாநுசந்தானம் என்ற நான்காம் பாகம் முடிகிறது. அடுத்த பகுதி ஆழ்வார் அருளிய திருமாலையின் மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
———-
மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே மதுர வாறே * உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு * உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதே உன்னை யன்றே * அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகருளானே. (திருமாலை 36)
இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழு நாள் விடாமல் மழை பெய்வித்த அந்த காலத்திலே பிருந்தாவனத்தில் பசு, கன்று மற்றும் அங்குள்ள அனைவரும் மழையினால் கஷ்டப் படுவதற்கு முன், மழையைத் தடுப்பதற்காக கோவர்த்தன மலையை தன்னுடைய திருக்கரத்தில் ஒரு குடையாக ஏந்திய பலம் பொருந்திய இளைஞனான எம்பெருமானை, இனிய ஆறுபோல், எல்லார்க்கும் விருப்பங்களையும் தீர்ப்பவனான எம்பெருமானை, மான் குட்டியின் விழிபோன்ற விழியையுடைய மாதர்களின் கண்களின் வலைகளில் அகப்பட்டு துடிக்கிற தனக்கு அருள் புரியாமல் இருக்கிறாரே, அந்த முழுமுதற் கடவுளை , அரங்கமா நகருளானை நோக்கியன்றோ தான் கூப்பிடுகிறேன் என்று ஆழ்வார் சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.
சென்ற பாட்டில் ‘அணுகத்தகாதவன்’ என்று ஆழ்வார் விலக முடியாதபடி தன்னுடைய நீர்மையை (எளிமையை ) காட்டி, எம்பெருமான் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அப்படி சேர்த்துக் கொண்டு பின்பு, எம்பெருமானை அடைய வேண்டும் என்ற அவா, ஆழ்வாருக்கு அதிகமாக, அப்படி அவா கொண்டவர்களை எம்பெருமான் அழைத்து செல்லும் பரமபதத்திற்கு தன்னையும் உடனே கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைபட்டார். ஆனால் எம்பெருமான் ஆழ்வாருக்கு அஜீர்ணம் தீர்ந்து நன்றாக பசித்த பின், முழுமையாக உண்டு களிப்பது போல ஆழவாரும் தன்னை நன்றாக, முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று ஆழ்வாரை காக்க வைக்க, ஆழ்வாரோ, விரோதி விஷயங்களை கண்டு பயந்தவராய், பெரியபெருமாள் நிம்மதியாக கண் வளரந்தருள முடியாதபடி, எல்லோரும் நீராய் உருகும்படி பெரும் குரலிட்டு கூப்பிடுகிறார்.
மழைக்கு
ஆழ்வார் கோஷ்டியில் ‘மழை ‘என்று குறிப்பிட்டால் அது எம்பெருமான் கோவர்த்தன மலையை தூக்கி கல் மழையில் இருந்து அனைவரையும் காப்பாற்றிய இந்திரனின் கல் மழையையே குறிக்கும். ஆனை என்று பொதுவாக சொன்னாலும் அது கஜேந்திர ஆழ்வானையே குறிப்பது போல் இதுவும் ஒன்று. ஆயர்கள், இந்திரனால் வந்த கல்மழை ஆபத்தினை தீர்த்த எம்பெருமானை தஞ்சம் அடைந்தது போல் தானும் தன்னுடைய சம்சார துக்கங்களில் இருந்து விடுபட எம்பெருமானிடம் தஞ்சம் புகுகிறார். பசியினால் வாடுபவர்கள் செல்வந்தர்களை பார்த்து யாசிப்பது போல், ஆபத்தினை போக்கும் எம்பெருமானை நோக்கி, தன்னுடைய ஆபத்தினை போக்குமாறு வேண்டுகிறார்.
அன்று ஆயர்களுக்கும், பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கல்மழையினால் ஏற்பட்ட ஆபத்தினைப் போன்றதே இன்று ஆழ்வாருக்கு சம்சாரத்தினால் ஏற்பட்ட ஆபத்து, அதனால் தன்னையும் காக்க வேண்டும் என்கிறார்.
கல்மழையினால் ஏற்பட்ட ஆபத்தினால் பாதிக்கபட்டவர்களை மட்டும் தான் எம்பெருமான் காப்பாற்றுவாரா என்றும், துன்ப மழையில் கஷ்டப்படும் எல்லோரையும் காப்பாற்ற கூடாதா என்றும், ஒரு ஊராக உள்ள எல்லோரும் துன்பப்பட்டால் தான் காப்பாற்றுவாரா என்றும், ஒரு ஊர் பட்ட துன்பங்களை தான் ஒருவனே படுவதாகவும் தன்னை காக்க கூடாதா என்றும் ஆழ்வார் கேட்கிறார்.
வரை
இந்திரன் ஏவ, மேக கூட்டங்கள், திரண்டு மழையை தொடர்ந்து கொட்ட, பசிக் கோபத்தாலே இப்படி மழை பெய்விக்கிறான் என்று உணர்ந்த எம்பெருமான், சக்ரத்தாழ்வானை கூப்பிடக்கூட நேரம் இல்லாமல், உடனே கையில் கிடைக்கக்கூடிய மலையை கையில் எடுத்து காப்பாற்றுகிறான். இதனால் எம்பெருமானுக்கு இந்த பொருளை கொண்டுதான் இந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எந்த நியதியும் இல்லை என்பது விளங்கும். ஆகையால் ஆழ்வாரை ரக்ஷிப்பதற்கும் எந்த கருவியும் இல்லை என்ற குறையும் எம்பெருமான் சொல்லமுடியாது என்பது ஆழ்வாரின் எதிர்பார்ப்பு.
பசுக்களுக்கு மழையினால் துன்பம் ஏற்படுவதற்கு முன்னரே எம்பெருமான் காத்தான் என்பதை தெரிவிக்கவே முன்பு என்று கூறுகிறார். ஆயர்கள் முதலானோர் எம்பெருமானை தவிர வேறு ஒருவரை சார்ந்து இருப்பவர் இல்லாததால் அவர்களுக்கு ஆபத்து வரும் முன்னரே காப்பாற்றுகிறான் என்றும் ஆழ்வார் கூறுகிறார். இங்கு உரையாசிரியர் ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினத்தில் இருந்து 49வது ஸ்லோகத்தை எடுத்துக்காட்டுகிறார். அந்த ஸ்லோகத்தின்படி, ஞான, சக்தியாதி குணங்கள் நிறைந்தவரும், அடியவர்களை கை விடாதவனும் ஆன எம்பெருமானிடம், , விவேகம் இல்லாத மேகங்களால் இருள் அடைந்த திசைகள் உடைய இடத்தில், இடைவிடாமல் பொழிவதால், பலவிதமாக இன்னல்களை கொடுப்பதும் ஆகிய சம்சாரமாகிய இருள் மழையில் இருந்து வழி தவறிய அடியேனை காத்து அருள்வாயாக என்று ஆளவந்தார் வேண்டுகிறார். இந்த பாடலில் தொண்டரடிபொடி ஆழ்வார், தான் இப்படி சம்சார துன்ப மழையில் நனைந்து வருந்தி அழைத்த போதும், காப்பாற்ற வரவில்லையே என்று கதறுகிறார்.
ஏந்தும்
ஏழு வயதில் எளிதாக ஒரு பூ பந்தை தூக்குவது போல் தூக்குகிறார். ஆழ்வார் தன்னை காப்பாற்றுவதால் எம்பெருமானுக்கு ஒரு பாரமாக இருக்குமோ என்ற காரணத்தினால் தான் இன்னும் காப்பாற்ற படாமல் இருக்கிறோமோ என்று கவலை படுகிறார். நம்மாழ்வார் திருவிருத்தம் 21 பாடலில் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி என்று கூறியதைப்போல், நித்ய சூரிகள் இவனுக்கு சாற்றுவதற்கு மாலைகளை ஏந்தி இருப்பது போல், எம்பெருமான் அடியவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு மலை ஏந்தி நிற்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
மைந்தனே
மலையை எளிதாக எடுப்பதற்கு தேவையான வலிமையை, மிடுக்கை, மைந்து என்ற சொல் காட்டுகிறது. மைந்தன் என்பது பாலகன் என்றும் தன்னை அண்டியவர்களை காப்பாற்றியதால் வயது குறைந்தவன் போல் ஆனான் என்றும் கொள்ளலாம். மனிதர்கள் தங்களுக்கு பிரியமான உணவு கிடைத்தவுடன் ஆனந்தம் அடைந்து வயது குறைந்தது போல் தோன்றுவது போல், எம்பெருமானுக்கு அடியார்களை ரக்ஷிப்பது மிகவும் பிரியமான ஒன்று ஆகும். அதனால் அவன் வயது குறைந்து இளையவன் ஆகிறான். இப்படி ஆழ்வாரான தன்னை காப்பது, எம்பெருமானுக்கு விருப்பானான ஒன்றாக இருந்தும், தான் இப்படி கூப்பிட்டும் வராமல் இருக்கிறானே என்று ஆழ்வார் வருந்துகிறார்.
மதுரவாரே
இனிமையான வடிவை எடுத்து நதியைப் போன்றவனே என்கிறார். முன்பு சொன்னது போல் காப்பவனாகவே இல்லாமல், அடித்து விழுங்குபவன் ஆனாலும் அவனை விட்டு செல்ல முடியாதபடி அவனுடைய வடிவழகு இருக்கிறது என்று ஆழ்வார் கூறுகிறார். மதுர கடலே என்று சொல்லாமல் மதுர ஆறே என்று ஆழ்வார் சொல்வதற்கு காரணம், கடல் நீர் உப்பு கலந்தது, குடிப்பதற்கு முடியாது, கடல், ஆறு போல் இருக்கும் இடத்தைத்தேடி ஓடி வராது; ஆறானது வெள்ளம் வந்தால், அணையை கடந்து அடித்து கொண்டு வருவது போல், ஆழ்வார் தன்னை பாவி என்று சொல்லி விலக நினைத்த போது, ஆழ்வார் விட்டு செல்ல முடியாமல் அவரை அணைத்து கொண்டதை சொல்கிறார். ஆறு பயன்படுத்துபவன் இருக்கும் இடம் தேடி செல்வது போல், இந்த மதுர ஆறும் பரமபதத்தில் தோன்றி, இடைச்சேரியில் இருக்கும் ஆழ்வாரை தேடி வருகிறது என்கிறார்.
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு, உழைக்கின்றேற்கு
இந்திரனால் பொழிந்த கல் மழையில் இருந்து வந்த ஆபத்தில் இருந்து அன்று காப்பாற்றியதாகவும் இன்று யாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் ஆக அதற்கு ஆழ்வார் விடை தருகிறார். மான் குட்டியின் கண் போன்ற கண் அழகை உடைய பெண்களின் பார்வை ஆகின்ற வலையில் அகப்பட்டு துன்பப் படுகிறேன் என்கிறார். உள்ளே அன்பு ஒன்றும் இல்லாது இருந்தாலும், எல்லாம் இவனே என்பது போல், இவனை விட்டால் வேறு கதி இல்லாதவர்கள் போலவும், வெளி வேஷம் போட்டு, அழகிய மான் குட்டியின் பார்வையாகிய வலையில் சிக்கிய ஆழ்வாரை என்பதை, உழை என்பதால் மானையும், உழைக்கன்று என்பதால் மான் குட்டியையும் சொல்கிறார். வலையானது அகப்படுத்திக் கொள்வதாய், தப்பி போக முடியாததாக உள்ளதாய், அகப்பட்டவர்க்கு எந்த பலனும் தராததாய் இருப்பது போல் இந்த பெண்களின் கண் வலை, ஆழ்வார் எம்பெருமானை பற்றி ஈடுபட முடியாததாய், இனிமை இல்லாததாய், அதில் இருந்து தப்பி போவது அரிதாவதாக உள்ளதாய் இருக்கிறது என்கிறார்.
எனக்கு
கல் மழையின் போது காப்பாற்றப்பட்ட பசுக்களை போல் துன்பப்பட்டேன் என்று தெரிந்தும், இத்தகைய துன்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியவன் எம்பெருமான் மட்டுமே என்பதையும் உணர்ந்தும், நீயே என்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டியும் என்ற ‘என்னை‘ என்று ஆழ்வார் கூறுகிறார்.
நோக்காது ஓழிவதே
கல்லால் வந்த ஆபத்திற்கு கல்லை எடுத்து காப்பாற்றியது போல், கண்ணால் வந்த ஆபத்தை கண்ணால் அருள் புரிந்து காப்பாற்ற வேண்டாமா என்று ஆழ்வார் கேட்பது போல் உள்ளது. என்னை காப்பாற்றும் போது மலையை தூக்கி காப்பாற்றும் சிரமம் இருக்காது. ஆழ்வாரின் நெஞ்சம் குளிரும்படி நோக்கினால் போதும் என்று சொல்கிறார். நோக்க வேண்டும் என்று பிரார்த்திக்காமல், நோக்காமல் இருக்கிறாயே என்று கேள்வி கேட்பதன் காரணம், தனக்கும் அவனுக்கும் உள்ள உறவை எண்ணியும், அவனது உறுதியான எளிமையை மனதில் கொண்டும் இருக்கலாம்.
இப்போதும் எம்பெருமான் வராததின் காரணம், உடனே கொடுத்து விட்டால், தான் ஒரு அயோக்கியன் என்பதை மீண்டும் சொல்லி, ஆழ்வார் தன்னை விட்டு விலகி விடுவார் என்ற எண்ணத்தினால் தான். ஆகவே அஜீரணம் தீர்ந்து பசி ஏற்பட்ட நன்றாக உண்டு அனுபவிப்பது போல, பின்னர் அனுபவம் கொடுத்து ஆழ்வார் தம்மை நன்றாக அனுபவிக்கட்டும் என்று எம்பெருமான் இருந்தான். நோய் வாய்ப்பட்ட குழந்தை மீண்டும் பசி என்று அழைப்பது, எப்படி தாய்க்கு இன்பம் கொடுக்குமோ அதே போல் எம்பெருமானும் ஆழ்வாரின் இது பற்றிய குரல் கேட்க, காத்து கிடந்தான்.
உன்னை அன்றே அழைக்கின்றேன்
ஆழ்வார், தான் யாராவது தாழ்ந்தவர் முன்னே நின்று தன்னை காப்பாற்று என்று கதறுகின்றேனா, காப்பாற்றுவதற்கு யார் இருக்கிறார் என்று காத்து இருக்கும் பெரியபெருமாள் முன்னே தானே இருக்கிறேன், வேறு வேலை இருக்கிறது என்று சொல்ல முடியாதபடி இருக்கும் எம்பெருமானிடத்தில் தானே கேட்கிறேன் என்கிறார். ஆழ்வார் அழைத்தவுடன் வர வேண்டிய நிர்பந்தம் என்ன என்று, எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வாரின் சமாதானம் ஆதிமூர்த்தி என்ற அடுத்த பதத்தில் கொடுக்கிறார்.
ஆதிமூர்த்தி
பிரளய காலத்தில் எல்லா ஜீவாத்மாக்களையும் ஒன்றாக தன்னுடைய திருவயிற்றில் வைத்து காப்பாற்றி பின் சங்கல்பத்தால் எல்லாவற்றையும் படைத்த எம்பெருமான் தானே காப்பாற்ற வேண்டும் என்கிறார். குழந்தையை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோருக்கு தானே உள்ளது, அழும் குழந்தை அம்மா என்று தானே கூப்பிடும் என்று ஆழ்வார் உரைக்கிறார்.
அரங்க மா நகருளானே
ஆழ்வாரை ரக்ஷிக்க பழைய கிணறுதனை தூர் வாருவது போல், உலகை படைத்த வரலாற்றை எல்லாம் சொல்ல வேண்டுமோ, பரமபதத்தில் இருந்து இந்த திருவரங்கத்தில் பள்ளி கொண்டு இருக்கின்ற காரணம் போதாதா என்று கேட்கிறார். இங்கே பள்ளி கொண்டு இருப்பதற்கு, ஜீவாத்மாக்களை காப்பாற்றுவது இல்லாமல் வேறு என்ன பலன் உள்ளது என்று பெரிய பெருமாளை கேட்கிறார். எல்லோரும் அவரவர் பாவ புண்ணியங்களை மட்டும் பொறுத்து உஜ்ஜீவனம் கொடுப்பதனால், பரமபதத்தில் இருந்தே செய்து இருக்கலாமே இங்கே வந்து பள்ளி கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லையே என்கிறார்.
அரங்க மா நகருளானே உன்னை அன்றே அழைக்கின்றேன் என்று சேர்த்து பார்த்தால், எம்பெருமான் பரமபதத்தில் இருந்து வந்து அழைக்க வல்லமை பெற்றவன் இல்லை என்றும், தனக்கு ருசி விளைவிக்க இங்கு, திருவரங்கத்தில், வந்து இருந்த பின், ருசி விளைந்த பின், தான் அதை இழப்பதோ என்கிறார். இப்படி கூப்பிட்ட பின்பும் எம்பெருமான் அருள் பாலிக்காமல் இருப்பது ஏன் என்றால், எம்பெருமானுக்கு பரமபதத்தில் உள்ளவர்கள் கூப்பிடுவதை தான் கேட்டு பழக்கம். சம்சாரிகள் குரல் உலக விஷயங்களுக்காகவே மட்டுமே எம்பெருமானை அழைப்பது என்று இது வரையில் இருந்தன. ஆனால் ஆழ்வார் ஒருவர் மட்டுமே, எம்பெருமான் முயற்சி செய்து தேடி பெற்றது, அதனால் இன்னும் கொஞ்சம் கேட்க வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் கொண்டதாக சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.
———-
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கங்கத்துள் ஓங்கும், * ஒளியுளார் தாமே அன்றே தந்தையும் தாயுமாவார், * எளியதோர் அருளுமன்றே, எந்திறத்து எம்பிரானார், * அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே. (திருமாலை 37)
தெளிவில்லாமல், கலங்கிய காவிரியால் சூழப்பட்டுள்ள திருவரங்கத்துள் பிரகாசிக்கும்படியான, தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். என் விஷயத்தில் செய்ய வேண்டியது, சாமானியமான குளிர்ந்த பார்வை அன்றோ, எனக்கு உபகாரகரான அவர், ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே, ஐயோ, இவர் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்பது இந்த பாடலின் பொருளுரை.
ஆழ்வார் இப்படி கதறிய போதும், பெரியபெருமாள் இரக்கம் கொண்டு, ‘வருந்தாதே’ என்று கூறாததால், ‘தம்மை தவிர வேறு யாராவது உதவி செய்பவர்கள் இருப்பார்களோ என்று எம்பெருமான் பேசாமல் இருக்கிறாரோ, ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் மற்ற பயன்களை விரும்பி இருக்கிறேன் என்று நினைக்கிறாரோ, நம்முடைய பையல் என்று சொன்னாலே உயிர் பிழைத்து விடுவேனே, என்கிறார். இதைக் கூட செய்யாமல், நாம் கதறுவதையும் கேட்டு கண் உறங்கும்படி இவன் திருவுள்ளம் இப்போது இவ்வளவு கொடியதாய் போனதே, என்று வெறுக்கிறார்.
தெளிவிலா கலங்கல்
நீர் வரத்து மாறினால் அன்றோ தெளிய இடம் உண்டு. அதற்கு இடம் இல்லாதபடி வெள்ளம் மேலும் மேலும் பெருகி வருகிற படியால் காவிரியில் கலக்கம் மாறாது இருக்கும். இந்த ஆழ்வாரும் காவிரி ஆற்றை போல் கலங்கியே இருப்பார். எம்பெருமானை பெறுவதற்கு முன்பு இவன் கிடைக்கவில்லையே என்று கலங்குவார். எம்பெருமான் கிடைத்த பின் காதலால் கலங்கி இருப்பார். அதே போல காவிரியும் திருவரங்கத்திற்கு மேற்கில் பெரிய பெருமாளை காணப் போகிறோம் என்ற கலக்கத்திலும், கிழக்கில் பிரிந்து போகிறோமே என்று வருத்தத்துடன் கலங்கி செல்லும். ஆகையால் உயிர் உள்ளவை, உயிர் அற்றவை என்று பேதம் இல்லாமல் கலங்கும் என்கிறார்.
நீர் சூழ்
‘அதனில் பெரிய என் அவாவர சூழ்ந்தாய்‘ (திருவாய்மொழி 10.10.10) என்று பெரியபெருமாள் ஆழ்வார்களை பெரும் காதலால் சூழ்ந்து கொள்வது போல, காவிரியும் பெரியபெருமாளிடத்தில் உள்ள காதலால் அவரை இந்த இடத்தில் சூழ்ந்து கொண்டபடியை சொல்கிறது.
திருப்பாற்கடல் தந்தை, அந்த கடலின் மனைவியான நான் தாய், இந்த ஸ்ரீரங்க நாயகியே மகள், இப்படிபட்ட இவர்கள் விஷயத்தில் என்ன தகுந்த சீர் செய்வேன் என்று காவிரி ஆறானது வருத்தம் அடைந்து, பிரகாசம் உடைய சாமரங்களையும், பச்சை கற்பூரத்தையும், சந்தன மரங்களையும், நல் முத்துக்களையும், மணிகளையும், அலைகளாகிய கைகளால் ஏந்தி வருகின்றாள்; அப்படிபட்ட காவிரி உங்களால் நீராடப் பட வேண்டும் என்று பாராசர பட்டாரால் அருளி செய்யபட்ட ஸ்லோகத்தை இங்கே நினைவில் கொள்ளலாம்.
உலகில் ஒவ்வொரு தாயும் தன்னுடைய மாப்பிள்ளை மகளுக்கு தகுந்த சீர் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இங்கே மகள், ரங்கநாச்சியார், செல்வங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆன, ஐஸ்வர்யங்களுக்கு எல்லாம் அதிபதியான, ஸ்ரீதேவி பிராட்டியார். மாப்பிள்ளையோ எல்லோரையும் விட சிறந்த பரமாத்மாவான அழகிய மணவாளன்; பெண்ணின் தந்தையோ சிறந்த ரத்தினங்களுக்கு உறைவிடமான திருப்பாற்கடல் ஆகும்; பெண்ணை பெற்ற தாயோ, கடல் அரசியின் நாயகியான, கங்கையில் புனிதமாகிய காவிரியாகிய நான்; இப்படி எல்லாம் தலைசிறந்தவைகளாக இருக்கும் போது, தகுந்த சீர் என்ன செய்ய போகிறேன் என்று கலங்கி, காவிரி தாய், கற்பூரம், சந்தனம், முத்து மாணிக்கம் என்ற பல சீர்களை அலைக்களாகிய கைகளில் ஏந்தி, தயங்கி தயங்கி, மத யானை போல வருகிறாள் என்று பட்டர் சொல்கிறார்.
திருவரங்கங்கத்துள் ஓங்கும் ஒளிஉளார்
ஆற்று வெள்ளத்தை நீக்கி, அடித்தரையை கண்டு உள்ளே புக அரியதாக இருப்பது போல, பெரியபெருமாளின் மேல் உள்ள ஒளி வெள்ளத்தை நீக்கி, உள்ளே புகுந்து அதற்கு இருப்பிடமான வடிவழகு காண அரியதாக உள்ளது என்கிறார். திருவரங்கதிற்கு எழுந்தருளிய பின் பரமபதத்தில் பகல் விளக்கு என்றபடி ஒளி குன்றி காணப்படுவதாக சொல்கிறார். இரவில் ஒளி போல, ஸம்ஸாரிகளுக்கு உதவும் திருவரங்கதில் ஒளி கூடி இருப்பதை போல என்கிறார். நித்ய சூரிகளுக்கு இடையே பரமபத நாதன் இருப்பது, சூரியர்களுக்கு நடுவே சூரியன் நிற்பது போல இருக்கிறது என்றும், ஸம்ஸாரிகளுக்கு, தாபங்களால் வருந்துபவர்களுக்கு நடுவே அவர் ரக்ஷித்துக் கொண்டு இருப்பது, ஒளி மிகுந்து இருப்பது போல உள்ளது என்கிறார்.
ஒளியுளார் தாமே அன்றே தந்தையும் தாயுமாவார்
சுபாலோப உபநிஷத்தில்(16) கூறுவது போல, நாராயணன் தாயாகவும் தந்தையாகவும், தன்னுடன் பிறந்தவனாகவும், தங்கும் இடமாகவும், மோக்ஷத்திற்கு உபாயமாவும், நண்பனாகவும் மோக்ஷத்தில் அடையபடுபவனாகவும் இருப்பவன் என்று கூறியதை தாமே என்ற ஏகாரத்தாலே தெரிவிக்கிறார். இப்படி இங்கே சொல்லபட்ட நாராயணன், எல்லோருக்கும் பொதுவான பரமபத நாதன் இல்லை என்றும், சிலருக்கு பொதுவான வியூக, விபவங்களும் இல்லை என்றும், மற்றைய ஆழ்வார்களுக்கு பொதுவான மற்ற அர்ச்சாவதாரங்களும் இல்லை என்றும், எனக்கே உரிய தந்தையும் தாயும் ஆன பெரியபெருமாள் என்கிறார். இப்படி எனக்கு எல்லா உறவுகளுமாய் இவரே இருக்கும் போது இவரை தவிர எனக்கு வேறு ஒரு உறவு உண்டு என்று நினத்து எம்பெருமான் பேசாமல் இருக்கிறாரோ என்கிறார்.
இங்கே மகாபாரதத்தில் வரும் (192.56) ஸ்லோகத்தின் பொருளை நினைவில் கொள்ளலாம். தர்மன் வனவாசம் செய்யும் போது, ஆபத்து காலத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனும் சத்யபாமையும் எழுந்தருளிய போது, பாராசரர், மார்க்கண்டேயர் போன்ற பல மகரிஷிகள் வந்து பெரிய சபையாக இருக்க, தர்மன் அங்கு இருந்த மகரிஷிகளிடம், தான் எல்லா தர்மங்களையும் பின்பற்றுவதாகவும் தனக்கு துன்பங்களே வருவதாகவும், துரியோதனன் போன்றவவர் தர்மங்களை பின் பற்றுவதில்லை என்றாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே என்றும் கேட்க, பலர் மேலும் தர்மங்களை பின்பற்ற சொல்ல, மார்க்கண்டேயர் சொல்லும் இந்த ஸ்லோகம் தர்மருக்கு விளக்கம் கொடுக்கிறது. இதன் அர்த்தம், எல்லா உலகங்களுக்கும் தந்தையும் தாயும் ஆனவன், லக்ஷ்மி நாதனே சரணடையத் தகுந்தவன், இவனைச் சரண் அடையுங்கள் என்று சொல்வது. எல்லா அடியவர்களுக்கும் இயற்கையிலேயே உறவினனாக இருக்கும் மாதவனை சரண் அடைவதே உண்மையான சுகத்திற்கு உதவுவது ஆகும் என்கிறார். அவனை அல்லாமல் மற்றவற்றை செய்வது ஸம்ஸாரத்தில் உழல செய்யும் என்றும் சொல்கிறார்.
பாராசர பட்டரும் தன் தம்பியான சீராம பிள்ளைக்கு துன்பம் வந்த போதும் இந்த ஸ்லோகத்தையும் அதன் அர்த்ததையும் அருளி செய்கிறார். தந்தையும் தாயும் ஆவார் என்று சொன்னது, தாயை போல இனியதையும், தந்தையை போல நல்லதையும் செய்ய கூடியவர் பெரியபெருமாளே ஆவார் என்பதாகும்.
எளியதோர் அருளுமன்றே எந்திறத்து
என் விஷயத்தில் ஆயர்களுக்கு செய்தது போல கடினமான காரியங்கள் செய்து காக்க வேண்டியது இல்லை; உங்களை தவிர நான் வேறு பலன் வேண்டுகின்றேன், அதையே தகுந்த காலத்தில் கொடுத்து விடலாம் என்று பேசாமல் இருக்கிறீர்களா என்று கேட்கிறார். விபீஷணன் போன்றவர்களைக் காக்க, வில்லை எடுத்தது போலவோ, பாண்டவர்களை காப்பாற்ற கொல்லாமாக்கோல் எடுத்தது போலோ என்னை காக்க வேண்டும் என்று இருக்கிறாரோ என்கிறார். என் விஷயத்தில் ஒரு குளிர்ந்த பார்வை பார்த்தாலே போதும் என்கிறார்.
எம்பிரானார்
எமக்கு உபகாரராக இருப்பவர், என்னைக் குளிர நோக்க வில்லையே என்று வருந்துகிறார். ஏற்கனவே பெரிய பெருமாள் செய்த உதவிகளை ஆழ்வார் மறக்காதவர் ஆகையால், இன்னும் குளிர நோக்காத போதும், உபகாரகர் என்று சொல்கிறார். இந்த உபகாரத்தையும் செய்து அருள வேண்டும் என்று வேண்டுகிறார். பெரியபெருமாள் முன்பு செய்த உபகாரங்களில் சில : தமக்கும் பெரியபெருமாளுக்கும் உள்ள உறவை ஆழ்வாருக்கு உணர்த்தியது, அதற்கு மேல் மோக்ஷத்திற்கு உபாயமும், அடைய வேண்டியவனும் அவனே என்றும் உணர்த்தியவன்; இப்போதும் நம்முடைய கூக்குரல் கேட்டு அருகில் வந்து இருப்பவன் என்பவை.
அளியன் நம் பையல்
இனி செய்ய வேண்டிய உபகாரம் என்ன என்று கேட்டதற்கு ஆழ்வார் சொல்லும் பதில். அளி என்றால் அருள் என்றும் அளியன் என்றால் அருள் புரிய தகுந்தவன் என்றும் பொருள் தரும். இவனை நாம் கருணை செய்யலாம் என்னும்படி நன்மை உடையவன், நம்முடைய பையல் என்று பெரிய பெருமாள் அருளி செய்ய கேட்கிறார். ஆழ்வாருக்கு இப்போது நம் பையல் என்று பெரியபெருமாள் சொல்லாமல் ‘ஆழ்வீரே’ என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது. அவனுக்கு அடிமை பட்டிருக்கும் நம்மை, நம் பையல் என்று நினைத்தால் போதாதா, கூப்பிடவும் வேண்டுமோ, என்று கேட்டு கொண்டு, அவனும் அப்படி கூப்பிட்டு உறுதிப் படுத்தினால் தான் தன்னுடைய சேஷத்துவம் நிலை நிற்கும் என்று ஆழ்வார் கருதுகிறார்.
மணக்கால் நம்பி, கதவை சாத்திக் கொண்டு ரகஸ்யார்த்தம் உபதேசம் செய்து கொண்டு இருந்த போது, அவரது சிஷ்யரான திருமகிழ் மாலைமார்வன், வந்து கதவை தட்ட, மணக்கால் நம்பி, ‘நம் பிள்ளையான திரு மகிழ் மாலை மார்வனுக்கு கதவை திற ‘ என்று அருளி செய்ததையும், பிள்ளை, பிள்ளை ஆழ்வான் வாயாலேயே, ‘தம்பி அப்பிள்ளை ஆழ்வான், நம்பிள்ளை என்னப்பெற்றேன்’ என்று அப்பிள்ளை ஆழ்வான் அருளி செய்ததையும் அனுசந்திப்பார்.
அம்மவோ கொடிய வாறே
வருத்தத்தால் அழும் கூக்குரல் கேட்டால் எழுந்திருக்க வேண்டாமோ, அக்குரல் கேட்டதும் கண் உறங்குவதே, இவன் திருவுள்ளம் இப்படி கொடியதாய் இருக்கின்றதே, அம்ம, என்ன இவன் தன்மை என்று கூறுகிறார். இங்கே அம்ம என்பது, வருத்தத்தின் மிகுதியை குறிக்கும். இத்துடன் இந்த பாசுரம் நிறைவு பெறுகிறது.
மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, இந்த பிரபந்தத்திற்கு அடுத்த பாடல் என்ற அளவிற்கு முக்கியமான பாடல், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போல் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.
————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply