ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-முனியே நான்முகனே முக்கண் அப்பா -ப்ரவேஸம்-

ஸ்ரீ ஆறாயிரப்படி —

இப்படி அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்த ஆழ்வார் தாம் இந்த பிரக்ருதியில்
இருந்த இருப்பைக் காணாய் என்று ஏங்கிக் கூப்பிடுகிறார்

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —

திருநாட்டில் புக்கு அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்த ஆழ்வார் அவ்விருப்பு ஞான அனுசந்தான மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்யம் அன்றிக்கே -ப்ரக்ருதி பத்தரானமையை அறிந்து மேரு சிகரத்தில் இருந்து நிர்த்துக்கனாய் மிகவும்
ஸூகியாய் நின்று வைத்து -துக்க பஹுளமாய்-துஸ் தரமாய் மிகவும் ஓர் இடத்திலும் ஸ்திதி இல்லாத படி பேர் ஆழமான கடலின் நடுவே
தள்ளுண்டவனைப் போலே அவசன்னராய் -அதுக்கு மேலே தமக்கு அவன் பண்டு கை வந்த படியையும் தன்னைப் பெறுகைக்கு
உபாயம் தானே அல்லாது இன்றிக்கே இருந்த படியையும் அவ்வளவு அன்றிக்கே -எல்லார்க்கும் அவன் அல்லது வேறு ரக்ஷகர் அன்றிக்கே
இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து -இப்படியே இருக்கிறவனை அஷணத்திலே பெறாமையாலே -பசியாலும் தாஹத்தாலும் தளர்ந்து
தாயையும் காணப் பெறாத ஸ்தநந்த்ய பிரஜை ஆர்த்தியின் மிகுதியால் கூப்பிடுமா போலே நிர்க்ருணரானாருடைய ஹ்ருதயங்களும் கூட
இரங்கும் படி வளவேழ் உலகில் படியை யுடைய தாம் தம்முடைய ஆர்த்தியின் மிகுதியால்
தம்முடைய ஸ்வரூபம் அனுசந்திக்கவும் ஷமர் இன்றிக்கே கலங்கி அவனுக்கு இட்ட அடி பேர ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் திருவாணை இட்டு
காட்டுத் தீயில் அகப்பட்டாரைப் போலே போக்கடி அற்று மஹா கிலேசத்தோடே தூத ப்ரேஷண த்தால் பிற வாயிலிட்டு நீட்டத் தவிர்ந்து
தம்மை ரக்ஷித்து அல்லது எம்பெருமானுக்கு திரு நாட்டிலும் கூட இருப்பு அரிதாம் படி பெரு மிடறு செய்து ஆர்த்த த்வனியோடு
மிகவும் கூப்பிட்டு தரிக்க மாட்டாமை சரணம் புக –
பரம தயாளுவான சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரோடே கூட பெரிய திருவடி மேலே இவர் அபேக்ஷித்தாலே போலே
தானான படியே பரி பூர்ணனாக வந்து தோற்றி அருளி -இவருடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து
-இவருடைய விடாயும் தன்னுடைய விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்து அருளினான் என்கிறார் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி —

பத்தாம் திருவாய் மொழியில் கீழ் -அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய் தேச விசேஷத்திலே புக்குத்
திரு மா மணி மண்டபத்திலே ஏறி ஸூரி பரிஷத்திலே அந்தர்பவித்து நிரதிசய ஆனந்த யுக்தனாய்க் கொண்டு
முக்தன் இருக்கும் இருப்பை அபரோஷிக்க –
பர ஞானத்தால் இது தம்முடைய பேறாக சாஷாத் கரித்து அனுபவித்தவர் -அந்த சமாதி குலைந்தவாறே –
முன்பு இருந்த சம்சாரத்தை தரிசித்து -கொடு உலகம் காட்டேலே -என்று தாம் அஞ்சி இருந்த சம்சாரத்தைத் தரிசித்து
மிகவும் ஆர்த்தராய் அபரோக்ஷ ஸித்தமான இப்பேற்றை பெற்று அல்லது தரிக்க மாட்டாத படி
பரமபக்தி ரூபமான நிரவதிக அபி நிவேசம் பிறந்து
இவ்வளவும் நம்மைப் புகுர நிறுத்தினவன் தானே முழுக்க நிர்வஹிப்பானாக ஏறிட்டுக் கொண்டு
பெரிய திருவடி திருத் தோளிலே ஸந்நிஹிதனாய்த் தம் தலையிலே திருவடிகளை வைத்து
பல பிரதானத்திலே அதி த்வரிதானாம் படியை அனுசந்தித்து
அவ்வனுசந்தான பாவநத்வத்தாலே அபரோக்ஷ சித்தனான சர்வேஸ்வரனுடைய உபகாரமான
போக்ய விக்ரஹத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ வல்லபத்வத்தையும்
சர்வ காரணத்வத்தையும்
ஸமஸ்த வாஸ்து பிரகார யோகத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
அத்யந்த பிரணயித்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
சர்வ அந்தராத்மவத்தையும்
ஸமஸ்த பிரதானத்வத்தையும்
பரிபூர்ண போக பிரதத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய சந்நிதியில் தம்முடைய
ஆர்த்தியும் அபி நிவேச அதிசயமும் தோற்றும்படி அவனுடைய உபகாரகத்வாதிகளைச் சொல்லி
மறுக்க ஒண்ணாத படி பிராட்டி திருவாணை இட்டு-
சர்வ பிரகார ரக்ஷகனான நீ எனக்குப் பூர்ண அனுபவத்தைத் தர வேணும் -என்று மிகவும் கூப்பிட
அவனும் இவருடைய வரவுக்கு ஈடாக குண விக்ரஹ விபூதி பரிபூர்ணனாய்க் கொண்டு பிராட்டியோடும் கூட
ஏக ரஸமாம்படி ஸம்ஸ்லேஷித்த பிரகாரத்தை அனுசந்தித்து
இனி இந்தப் பேற்றுக்குத் தட்டில்லை என்று நிஷ்கர்ஷித்து தாம் அவாப்த ஸமஸ்த பலரான படியைப் பேசி முடித்து அருளுகிறார் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –

திருநாட்டில் புக்கு அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்த ஆழ்வார் அவ்விருப்பு ஞான அனுசந்தான மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்யம் அன்றிக்கே –அதுக்கு மேலே இல்லை கண்டீர் இன்பம் என்றும்
-பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம்-என்றும் தாம் பிறருக்கு உபதேசிக்கிற சம்சாரத்தில்,
-ப்ரக்ருதி பத்தரானமையை அறிந்து மேரு சிகரத்தில் இருந்து நிர்த்துக்கனாய் மிகவும்
ஸூ கியாய் நின்று வைத்து -துக்க பஹுள மாய்-துஸ் தரமாய் பேர் ஆழமாய் மிகவும் ஓர் இடத்திலும் ஸ்திதி இல்லாத படி
பேர் ஆழமான கடலின் நடுவே தள்ளுண்டவனைப் போலேயும் பாதாளத்தில் விழுந்து நோவு படுமா போலேயும்
அவசன்னராய் -அதுக்கு மேலே தமக்கு அவன் பண்டு கை வந்த படியையும் தன்னைப் பெறுகைக்கு
உபாயம் தானே அல்லாது இன்றிக்கே இருந்த படியையும் அவ்வளவு அன்றிக்கே -எல்லார்க்கும் அவன் அல்லது வேறு ரக்ஷகர் அன்றிக்கே
இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து -இப்படியே இருக்கிறவனை அஷணத்திலே பெறாமையாலே -பசியாலும் தாஹத்தாலும் தளர்ந்து
தாயையும் காணப் பெறாத ஸ்தநந்த்ய பிரஜை ஆர்த்தியின் மிகுதியால் கூப்பிடுமா போலே நிர்க்ருணரானாருடைய ஹ்ருதயங்களும் கூட
இரங்கும் படி வளவேழ் உலகில் படியை யுடைய தாம் தம்முடைய ஆர்த்தியின் மிகுதியால்
தம்முடைய ஸ்வரூபம் அனுசந்திக்கவும் ஷமர் இன்றிக்கே கலங்கி அவனுக்கு இட்ட அடி பேர ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் திருவாணை இட்டு
காட்டுத் தீயில் அகப்பட்டாரைப் போலே போக்கடி அற்று மஹா கிலேசத்தோடே தூத ப்ரேஷண த்தால் பிற வாயிலிட்டு நீட்டு கையும் இன்றிக்கே –
தம்மை ரக்ஷித்து அல்லது எம்பெருமானுக்கு திரு நாட்டிலும் கூட இருப்பு அரிதாம் படி பெரு மிடறு செய்து ஆர்த்த த்வனியோடு மிகவும் கூப்பிட்டு –
–சாகாம்ருக ராவண சாயகார்த்தா ஜகமுச் சரண்யம் சரணம் ஸ்ம ராமம் -என்கிறபடியே தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக –
பரம தயாளுவான சர்வேஸ்வரன் இவற்றிலும் காட்டிலும் தான் நொந்து – பெரிய பிராட்டியாரோடே கூட பெரிய திருவடி மேலே
இவர் அபேக்ஷித்தாலே போலே தானான படியே பரி பூர்ணனாக வந்து தோற்றி அருளி -இவருடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து
-இவருடைய விடாயும் தன்னுடைய விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்து அருளினான் என்கிறார் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே அத்திரளிலே புகப் பெற்று-
என் அவா அறச் சூழ்ந்தாயே என்றும் – அவாவற்று வீடு பெற்ற என்றும் இவர் வாயாலே சொல்லும் படி
இவர் விடாயும் தீர்ந்து இவருக்கும் அவ்வருகான தன் விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து அருளினான் -என்கிறார் –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —

முனியானே -பிரவேசம் –

பரமபதத்திலே புக்கு-அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -என்கிறபடியே
எல்லை இல்லாத ஆனந்தத்தை உடையராய்-
அத் திரளிலே இருந்த இருப்பு நினைக்கக் கூடிய ஞானமே மாத்ரமாய்-
புறம்பே கண்டு அனுபவிப்பதற்கு தகுதி இன்றிக்கே இருந்தது –அதற்கு மேலே-
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6–என்றும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -திரு விருத்தம் -100-என்றும்
தாம் பிறருக்கு உபதேசிக்கிற இவ் உலகத்திலே சரீரத்தோடு கட்டுப் பட்டவராய்-
இருக்கிற படியையும் கண்டார் –
கண்டு -மேருவின் உச்சியில் துக்கம் இல்லாதவனாய்-மேலான சுகத்தை உடையவனாய் இருக்கிறான் ஒருவன்-
பல பல துக்கங்களை உடையதாய்-தாண்ட முடியாததாய்-பேர் ஆழமாய்-
ஓர் இடத்திலும் நிலை இன்றிக்கே இருக்கும்படியான பாதாளத்திலே-
விழுந்து நோவு படுமாறு போலே துக்கம் கொண்டவர் ஆனார் –

அதற்கு மேலே
பண்டு அவன் தமக்கு கை வந்த படியையும் -என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாக –
தன்னைப் பெறுகைக்கு உபாயம் தானே அல்லது வேறு இன்றிக்கே இருக்கிற படியையும்-
ஆவிக்கு ஒரு பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் –
தன் தலையிலே ஒரு உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு ஒழுகுமவனுக்கும் -மேவித் தொழும் பிரமன் சிவன் –
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படி-
எல்லா பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்-இருக்கும் படியையும் நினைந்து-
அக்கணத்தில் பெறாமையாலே-
இப்படி இருக்கிறவன் நம்மை இங்கனே நோவு பட விட்டு வைப்பதே என்று-மிகவும் துக்கம் கொண்டவர் ஆனார்-

அங்கனம் துக்கம் கொண்டவர் -தாய் தந்தையர்கள் முன்னே இருக்க பசியாலும் தாகத்தாலும்-
நோவு படுகிற சிறு குழவியானது துன்பத்தின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமாறு போலே-
வள வேழ் உலகின் -என்ற திருவாய் மொழியில் கூறிய தன்மையை உடைய தாம்-
தம் தன்மையை நினைக்க ஆற்றல் இல்லாதவராய் –
தூதர் மூளவும் அறிவிக்கவும் இயலாதவராய்-
அவனே எதிரே நின்று பிராட்டி ஆணை இட்டு தலக்கு -நாணம் -அற்றுச் சொல்லும்படியான ஆற்றாமையோடு-
இரக்கம் இல்லாதவர் உடைய மனங்களும் இரங்கும்படியாக-
அவனுக்கு தம்மைக் காப்பாற்றி அல்லது பரம பதத்தில் இருப்பு அரிதாம் படியாகவும்-
காற்றுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே துயர ஒலியோடு பெரு மிடறு செய்து கூப்பிட்டு-

தே யத்யமானா பதிதா சவிரா ந நத்யமானா பயசல்யவித்யா
சாகா ம்ருகா ராவணா சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -50-45
வானரங்கள் ராவணனுடைய அம்பால் துன்பம் உற்றவனாய் ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்கிறபடியே
தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக்கார்

இவர் சரணம் புக
அவன் அருள்கடல் ஆகையாலே-இவரை இப்படி நோவுபட இட்டு வைத்தோமே அன்றோ -என்று
இவரைக் காட்டிலும் தாம் நொந்து
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து –
பிராட்டிமாரோடே பெரிய திருவடி மேலே இவர் விரும்பியபடியே எல்லாவற்றாலும் நிறைந்தவனாய் வந்து தோற்றி
இவருடைய சரீர சம்பந்தத்தையும் அறுத்து
அடியார்கள் குழாம களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே
அத்திரளிலே புகப் பெற்று-
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும்
இவர் தாமே சொல்லலாம்படி இவர் விடாயும் தீர
இவர் விடாய்க்கு அவ்வருகான தன்னுடைய விடாயும் தீரும் படி கலந்து அருளினான் -என்கிறார்-

இப் பிரபந்தத்துக்கு தலைவன் சர்வேஸ்வரன் -பிரமேயம் –
இப்பிரபந்தம் -அவாவில் அந்தாதி -பிரமாணம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் -பிரமாதா
இனி இவருடைய அவதாரம் தான்-சர்வேஸ்வரனுடைய அவதாரத்தைப் போன்று
சாதுக்களின் உடைய புண்ணியத்தின் பலம்
பிரமேய பிரமான பிரமாதா வைலஷணயத்தையும்
இவர் அவதார வைலஷணயத்தையும்
அருளிச் செய்கிறார் –

ஷேமுசி பக்தி ரூபா -பக்தி ரூபாபன்ன -மதி நலம் -பக்தி பூமா என்றுமாம் –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்க-ஆதி லீலே-
உலகம் யாவையும் -தாம் உளவாக்கலுக்கும் நிலை பெறுத்தலும் நீங்கலும் நீங்கலா -அலகிலா விளையாட்டுடை அண்ணல் அவன் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading