ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-4-1-

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-1-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

நாக பர்யங்க சாயியான பரம புருஷன் ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனாய் வந்து பிறந்து அருளி –
பிரணயி ஜன சம்ச்லேஷ ஏக போகனாகையாலே
திருவாய்ப்பாடியில் பெண் பிள்ளைகளோடு திருக் குரவை கோத்து ஸம்ஸ்லேஷித்து அருளினபடியையும்
பிரணயி ஜன பரித்ராண அர்த்தமாகையாலே தத் ஸம்ஸ்லேஷித்தில் காட்டிலும்
தனக்கு போக்யமான கோவர்த்தன மஹா கிரி சமுத்தரணமும்
விஷ அநல ஜ்வால அநபிபவநீய மஹாஹ்ரநிவாஸி காளிய நிரசன பரப்ருத ஆச்சர்ய
ஸர்வ திவ்ய சேஷ்டிதங்களையும் அனுபவித்து
அவ்வனுப ஜெனித ப்ரீதியாலே அப்ரக்ருதிங்கனாய் அவற்றையே அலற்றி இரவு நன்பகலும் நான் தவிர்கிலன்
எனக்கு இனி என்ன குறையுண்டு என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-4-1-

ப்ரீதி பூர்வகமாக இரவும் பகலும் ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெற்றேன் -இனி எனக்கு என்ன குறை உண்டு என்கிறார் –

குரவை  ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

உரவுநீர்ப் பொய்கை-விஷ ஜலம் -வலிய நீர் என்றுமாம்
அரவில் பள்ளிப் பிரான்-திரு அவதாரம் பண்ணுகைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் -நாகணை மிசை நம்பிரான் ப்ரத்யபிஜ்ஜை பண்ணுகிறது
மாய வினைகள்-ஆச்சர்யமான சேஷ்டிதங்கள்
இரவும் நன்பகலும்-எம்பெருமானைப் பெற்று அனுபவிக்கிற காலம் ஆகையால் நன்றான இரவும் பகலும் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-4-1-

முதல் பாட்டில் அவதார கந்தமான அனந்த ஸாயித்த்வத்தை யுடையனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை
ப்ரீதி ப்ரேரிதராய்க் கொண்டு சொல்லி அவிச்சின்னமாக நடக்கப் பெற்றோம் -நமக்கு என்ன குறை உண்டு -என்கிறார் –

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்-ஆய்ச்சியாரோடே கூட திருக்குரவையிலே எல்லாப் பெண்களும்
தன் கை கோத்தாராம்படி வனமாலை போலே இடையிடையே தன்னைக் கலந்து கோத்ததும்-
இந்தப் பெண்களோட்டை ரசத்துக்கு விலக்காக வந்த மழையைத் தடுக்கைக்காக ஒரு மழையை எடுத்து ஏழு நாள் அநாயாசேன
தரித்துக் கொண்டு நின்றதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல–முதிர்ந்த ஜலத்தை யுடைத்தான பொய்கையில் காளியனை முனிந்து
நியமித்த பிரகாரமும் முதலாக மற்றும் பலவாய்
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி–ஏஷ ஸ்ரீ மான் நாராயணா ஷீராப்தி நிகேதன -என்கிறபடியே
அவதார அர்த்தமாக கண் வளர்ந்து அருளின நாக பர்யந்தத்தை விட்டு வந்த உபகாரகனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஆச்சர்யங்களான
சேஷ்டிதங்களையே ப்ரீதி பரவசனாய்க் கொண்டு
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–குண கதனத்துக்கு உறுப்பான நன்மையை யுடைய இரவும் பகலும் ஓய்கிறிலோம்
நமக்கு என்ன குறைவு யுண்டு –
அநு பாவ்ய சங்கோசத்தால் வரும் குறை யுண்டோ
அனுபவ விச்சேதத்தால் வரும் குறை யுண்டோ -என்று கருத்து
தவிர்கிலேன் என்ன குறை எனக்கு என்றும் பாடம் சொல்லுவார்

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-4-1-

அஹோ ராத்ரம்   ப்ரீதி பூர்வகமாக  ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெற்றேன் -இனி எனக்கு என்ன குறை உண்டு என்கிறார் –

குரவை  ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
மின்னிடை மடவாரிலே அகலப் புக்கு தாழ நின்று பொருந்தின படி -இடைப் பெண்களோடு பொருந்தினால் போலே இருக்கிறதாயிற்று -தன்னோடு அவர்களை கோக்கை அன்றியே -அவர்களோடு தன்னை கோத்த படி -பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களோடு கலந்த ப்ரீதி உண்டாயிற்று இவரோடு கலந்த ப்ரீதி –
கோக்கை -தொடுக்கை -கை கோத்துக் கொண்டு ஆடும் கூத்து இ றே குரவைக் கூத்து -ஆவது
குன்றம்ஒன்று ஏந்தியதும்
அவர்களை அனுபவிக்கை அன்றியே -அவர்களுக்கு வந்த ஆபத்தை போக்கின படி -இந்திரன் பசி க்ராஹத்தாலே அழிய வர்ஷிக்கத் தொடங்கின வாறே முன்னே நின்றதொரு மலையை எடுத்து ரஷித்த படி
ஏந்தியதும் -ஏழு வயசில் ஏழு நாள் ஒருபடிப்பட மலையை எடுத்துக் கொடு நிற்கச் செய்தேயும் -ஆச்ரிதார்த்த ப்ரவ்ருத்தி ஆகையால் வருத்தம் அற்று இருந்த படி
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
வலியை யுடைத்தான நீர் -விஷத்தால் பாதகமான வலி யாதல் -முது நீர் ஆகையால் வலிய நீர் ஆதல் —உரவு-விஷம் என்னுதல் -வலிய என்னுதல் –
நாகங் காய்ந்ததும் -பெண்களோட்டை ஜலக் க்ரீடைக்கு விரோதி என்று காளியனை ஓட்டினதுவும் –
உள்பட மற்றும்பல-இவை முதலான சேஷ்டிதங்களுக்கு தொகை இல்லை
பிறந்த வாற்றில் பல ஹானியால் சொல்ல மாட்டிற்று இலர்
இங்கு ப்ரீதி பிரகர்ஷத்தாலே தரித்து சொல்ல மாட்டாது ஒழிகிறார்
அரவில் பள்ளிப் பிரான்-
அவதரிக்கைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் -ஆஸ்ரித விரோதியான சர்ப்பத்தை போக்கினான் -அஜ் ஜாதியிலே ஒருவனுக்கு உடம்பு கொடுத்தான் -ஜாதி பிரயுக்தம் அன்று நிரஸனம் -ஆஸ்ரித விரோதி என்று -பிறந்த வாற்றில் -நாகணை மிசை நம்பிரானை ப்ரத்யபிஜ்ஜை பண்ணுகிறார்
தன் மாய வினைகளையே அலற்றி
ஆச்சர்ய சேஷ்டிதங்களை ப்ரீதியாலே அடைவு கெடச் சொல்லி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.
நல்ல இரவும் நல்ல பகலும் -சுடர் கொள் இராப் பகல் என்று விரஹத்தில் அக்னி கல்பமான அஹோராத்ரம் போல் அன்று இ றே
தவிர்கிலன்-விடு கிறி லேன்
என்ன குறைவு எனக்கே.
கால பேதம் உள்ள தேசத்திலே இருந்து -ஏக ரூபமாக அனுபவிக்கப் பெற்ற எனக்கு -ஒரு தேசத்திலே போக வேணும் என்னும் குறை உண்டோ –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-4-1-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

அவதார கந்தம் -அநந்த சாயித்வம் -உடைய -கிருஷ்ணன் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை ப்ரீதி ப்ரேரிதராய் -அவிச்சின்னமாகப் பெற்றோமே
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்-திருக் குரவையில் -வகை மாலை போலே இடை இடையே தன்னைக் கலந்தும் –
முகம் அறிந்து பொன் கோத்தால் போலே -ரசத்துக்கு இடையூறு -மழையை தடுக்க -அநாயாசேன ஏழு நாள்கள்
உரவு நீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல-முதிர்ந்த நீர் -முனிந்து நியமித்த பிரகாரம் -காய்ச்சின வேந்தன் -மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி-நாக பர்யங்க உத்ஸ்ருஷ்ஜ்ய -க்யாகதோம் மதுராம் புரிம் -அவதாரார்தமாக பள்ளி கொண்ட —
கிருஷ்ணன் உடைய ஆச்சர்யமான சேஷ்டிதங்களை ப்ரீதி பரவசனாகக் கொண்டு
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே-இரவும் பகலும் வாசி இல்லாமல் -மத்யம மணி நியாயம் நல் இரவு நல் பகல்
நன் பகலும் -குண கதனத்துக்கு உறுப்பான நன்மை
அனுபாவ்ய சங்கோசம் இல்லாத குறை இல்லையே –
அனுபவ விச்சேத குறையும் இல்லை –
காலத்தாலும் குறை இல்லை –
தவிர்கிலம் -பன்மை பாட பேதம்

ஆய்ச்சியரோடு குரவைக் கூத்தினைக்கோத்து விளையாடியதும், கோவர்த்தனம் என்னும் மலையை ஏந்திக் குடையாகப் பிடித்ததும்,
வலிய தண்ணீரையுடைய பொய்கையிலே கிடந்த காளிங்கன் என்னும்பாம்பினை ஓட்டினதும், இவை முதலான மற்றும் பலவான,
ஆதிசேட சயனத்தையுடைய பெருமானது ஆச்சரியமான செயல்களையே சொல்லிக் கொண்டு
நல்ல இராப் பொழுதும் நல்ல பகற் பொழுதும் தவிரேன்; எனக்கு வேறு என்ன குறை உளது?
மற்றும் பல மாய வினைகளை என்று கூட்டுக. அலற்றித் தவிர்கிலன் என்க.
இத் திருவாய்மொழி, அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்.

பகலும் இரவும் கிருஷ்ணனுடைய குணங்களைப் பிரீதி முன்னாக அநுபவிக்கப் பெற்ற எனக்கு,
இனி ஒரு குறை இல்லை என்கிறார்.

ஆய்ச்சியரோடு குரவை கோத்ததும்-
“பிறந்தவாறும்” என்றாற் போலே தொடங்கி ஓர் அவதாரம் முன்னாக இழியாமல், இதிலே இழிவான் என்? என்னில்,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் உண்டான தம்முடைய பிரணய ரோஷத்தினைப் போக்கித் தம்மைச் சேர விட்டுக் கொண்டபடி,
திருக் குரவைக் கூத்தில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாற் போலே இருக்கையாலே,
அது முன்னாகப் பேசுகிறார்.

அன்றிக்கே,
நாம் அநுசந்திக்கில் அன்றோ ஓர் அடைவாக இழிவது!
அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறாராகையாலே திருக் குரவைக் கூத்தினை முதல் முன்னம் பேசுகிறார் என்னுதல்,
திருக் குரவையில் பெண்களோடு உண்டான கலவியையாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக் கொடுத்தது.
ஐந்து லக்ஷம் குடிகளிலுள்ள பெண்கள் எல்லாரோடும் கலந்த பிரீதி உண்டாயிற்று, இவர் ஒருவரோடு கலந்து பிரீதி.

தன் செல்லாமையாலே ஆயர் பெண்களுடைய மாலையிலே தன்னை முதன்மை இல்லாதவனாகச் செய்து
கொண்டு கோத்ததும். -“குரவை பிணைந்த குழகும்” என்று ஆசைப்பட்டபடியே அநுபவிக்கிறார்.
பெண்களுடைய மாலையிலே இடையீடாகத் தன்னைக் கோக்கிற போது, ‘விஜாதீயன் ஒருவன் கலந்தான்’ என்று தோற்றாதபடி
அவர்களோடே ஒரு நீராகக் கலந்தபடி. -ஒரு காதில் குண்டலம் தோடு சாத்திக் கொண்டு நீராக கலந்தானே –
பெண்களும் பெண்களும் அல்லவோ கைகளைக் கோத்து விளையாடுவார்.
திருக்குரவையில் இவனை ஒழியப் பெண்களுக்குச் செல்லாதது போலே காணும்
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில், ஆழ்வாரை ஒழிய இவனுக்குச் செல்லாமை விளைந்தபடி,
கோக்கை – தொடுத்தல். கை கோத்துக் கொண்டு ஆடும் கூத்து அன்றோ, குரவைக் கூத்து ஆகிறது.

குன்றம் ஒன்று ஏந்தியதும் –
சுவர்க்கம் என்று கொண்டு ஒரு போக பூமியாய், அங்கே தேவ மாதர்களோடே கழகம் இருந்து
புண்ணியத்தின் பலத்தை அநுபவம் பண்ணி மிக்க சுகத்தோடு இருப்பான் இந்திரன் ஒருவன் உளன் அன்றோ;
அந்த அநுபவத்தைப் பூமியிலே ஒரு பருவத்திற் பெண்களோடே கூடப் பூர்ணமாக அநுபவித்திருக்கிற இருப்பைக் கண்டு
அது பொறுக்க மாட்டாமையால் பொறாமை மிக்கு, ‘நமக்கு இட்ட சோற்றை உண்டான்’ என்று
ஒரு வியாஜமாகக் கல் மழையைப் பெய்வித்தான்;
அப்போது கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்துத் தரித்துக் கொண்டு நின்ற படி.

ஒருவன் இங்கே ஒரு நாள் மூக்குப் புதைக்குங் காட்டில் ‘நம்முடைய போகம் பகுந்து போகப் புகா நின்றது’ என்று அஞ்சி
அவரை உவரை வர விட்டுக் கலக்குமவன் அன்றோ.
‘இப்படி அநுபவிக்கிறான் சர்வேஸ்வரன்’ என்று அறியான் அன்றோ;
இவன், தன்னை மனித சஜாதீயன் ஆக்கிக் கொண்டு இருக்கையாலே.
அன்றைய தினத்தில் கல் மழையில் பசுக்களுக்கும் இடையர்க்கும் வந்த ஆபத்தைத் தீர்த்தாற் போலே யாகாதே,
இவர்க்கும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் வந்த ஆபத்தைத் தீர்த்தபடியும்.

ஏந்தியதும்-
பிறர் பொருட்டு ஆகையாலே கைக்கு ஓர் ஆபரணம் போலே ஆயிற்று.
அது தான் வருத்தமற்று இருந்தபடி. பூ ஏந்தினாற் போலே இருந்தது.
ஏழு வயதிலே ஏழு நாள் ஒருபடிப் பட தரித்துக் கொண்டு அன்றோ நின்றது!
‘இப்படி ஏழு வயதிலே ஏழு நாள் தரித்ததற்கு என் செய்வோம் நாம்’ என்று ஒருவர் நெஞ்சாறல் படாதபடி
ச கோத்திரியாய் நின்றே அன்றோ இவன் இவற்றை ரக்ஷித்தது.
( அஹம் வோ பாந்தவோ ஜாத என்றவன் அன்றோ )

உரவு நீர்-
தறை காண ஒண்ணாமையால் உண்டான ஆழத்தை யுடைத்தான மிடுக்கை யுடைய நீர் என்னுதல்.
அன்றியே,
காளியனுடைய விஷத்தால் ஒருவர்க்கும் கிட்ட ஒண்ணாத வலியை யுடைய நீர் என்னுதல்.
அன்றிக்கே,
முதுநீர் ஆகையாலே வலிய நீர் என்னுதல்.
உரவு -ஆழம் -விஷம் -வலிய-

நாகம் காய்ந்ததும் –
நாகத்தை ஓட்டியதும்.
பாம்பு அடித்து மேலிட்டுக் காணும் பெண்களோடே ஜலக் கிரீடை பண்ணிற்று.

உள் பட மற்றும் பல –
இவை முதலான செயல்களுக்கு ஓர் எண் இல்லை.
“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில், வலிமைக் குறைவாலே சொல்ல மாட்டிற்றிலர்;
இங்கு, உகப்புத் தலை மண்டை யிட்டுச் சொல்ல மாட்டுகிறிலர்.
மற்றும், இப்படிப் பெண்களுடைய கலவிக்குத் தண்ணீர்த் துரும்பு அறுத்தவை பலவாம்.

அரவில் பள்ளிப் பிரான் –
நாட்டார் உறக்கம், தமோ குணத்தால் மறைக்கப்பட்டதாய்த் தங்கள் பொருட்டேயாய் இருக்கும்;
இவன் உறக்கம் பிறருடைய ரக்ஷணத்தின் பொருட்டு இருக்கும்.
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் அல்லனோ.-திருவாய். 5. 4 : 11.–
உறங்கினானாகில் பிறருடைய ரக்ஷணத்துக்கு உடலாயிருக்கும்;
உணர்ந்திருந்தானாகிலும் அப்படியே; இது என்ன உபகாரந்தான்!

அரவில் பள்ளிப் பிரான் –
மேலே, ஒரு பாம்போடு உண்டான சேராமை சொல்லிற்று;
இங்கு, ஒரு பாம்போடு உண்டான சேர்த்தி சொல்லுகிறது.
அங்கு, போகத்தைக் காற் கடைக் கொண்டமை சொல்லிற்று;
இங்கு, போகப் பிராவண்யம் சொல்லுகிறது.
போகம் -பாம்பு -இனிமை

பிரதிகூலனான காளியனைப் பறக்க ஓட்டினான்;
அநுகூலனானவனைப் படுக்கையாகக் கொண்டான்.
இவன் தான் -அநந்த முகமாக -பல பல முகமாக அநுகூலிக்கும்;
அவனும்-அநந்த முகமாக – பல பல முகமாக அடிமை கொள்ளும்.
ஆயிரம் பைந்தலை அனந்தன் அல்லனோ.-பெரியாழ்வார் திருமொழி, 4. 3 : 10.
(பஹு முகமாக கைங்கர்யம் செய்யவே )

அரவில் பள்ளிப் பிரான் –
அவதாரங்களுக்கு அடி திருப்பாற் கடலாகையாலே அதனைச் சொல்லுதல்;
அன்றியே,
“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” –திருவாய். 5. 10 : 11.என்றதனை நினைக்கிறாராதல்.

தன் மாய வினைகளையே அலற்றி –
அவனுடைய ஆச்சரியமான செயல்களையே வாய் விட்டுத் துதி செய்து இரவும் நன் பகலும் தவிர்கிலன்-
பகவானுடைய அநுபவத்திற்கு உறுப்பாகாத அன்றே அன்றோ
சுடர் கொள் இராப் பகலாக இருப்பது; – திருவாய். 2. 1 : 4.-(அக்னி கக்கும் இரவாக அன்றோ அங்கு )
அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார்.
பிரிந்த காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது,

என்ன குறைவு எனக்கே –
“அங்குக் காலம் பிரபுவாய் இல்லை” என்று கொண்டு பகலும் இரவும் நடையாடாதது ஒரு தேச விசேடம் தேடி
அநுபவிக்கைக்குப் பட்டைப் பொதி சோறு கட்ட வேண்டும்படி குறைவாளனா யிருந்தேனோ?
ஒரே தன்மையதான அநுபவம் அன்றோ அங்கு உள்ளது;
“காலம் ஸபசதே தத்ர ந கால: தத்ரவை ப்ரபு:” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா.
பட்டைப் பொதி சோறு – பாக்குப் பட்டையில் கட்டுகிற சோறு.
பல இருதுக்களில் விளையாடினார்” –“விஜஹார பஹூந் ருதூந்”- என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25. என்கிறபடியே,
அந்த அந்தக் காலங்கள் தோறும் உண்டான அநுபவ விசேடங்களை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு குறை உண்டோ?
அன்றிக்கே,
பரத்துவ அநுபவமே அன்றோ அங்கு உள்ளது;
சீல குண அநுபவமுள்ளது இங்கே அன்றோ. ஆதலின் “என்ன குறைவு எனக்கே” என்கிறார் என்னுதல்.
(ஒரே திவ்ய தேசம் அங்கு இங்கு பஹு வாக உள்ளவை அன்றோ )

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading