ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-–1-3-11-

ஸ்ரீ ஆறாயிரப்படி –1-3-11-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-

ஆஸ்ரித ஸமாச்ரயணீயத்வ அர்த்தமாக அண்ட மத்யே அவதீர்ணனாய்-தேவாதி சகல ஜனங்களுக்கும் தாஸ்யா வஹமான அம்ருத மதநாதி திவ்ய சேஷ்டிதங்களை
யுடையனாய் இருந்த எம்பெருமானுக்கு சேஷ வ்ருத்தி ரூபமாய் நிரதிசய ரஸ ரூபமாய் இருந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு
இத்திருவாய் மொழி வல்லாரை எம்பெருமான் பிரதிபந்தகங்களைப் போக்கி திருவடிகளில் கொண்டு போகப் பற்றாமை முந்துற திருவடிகளிலே கொண்டு போய்
அந்தமில் பேரின்பத் தடியரோடு இருந்த பின்னை பிரதிபந்தகமான ப்ரக்ருதி சம்பந்தத்தைப் போக்கி அருளும்
-என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-3-11-

நிகமத்தில் இப்பத்தும் அறிவார் –முந்துற அயர்வறும் அமரர்கள் வரிசையைப் பெற்று
-பின்னை சம்சார நிகில விச்சேதத்தை பெறுவார்கள்
என்கிறார் –

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-

தேவ ஜாதி அனுபவித்து வாழ அபிஷூ பிதமாம் படி கடலைக் கடந்தவனை
அமர்ந்து இருந்துள்ள பொழிலின் வளர்த்தியை யுடைய திருக் குருகூர்ச் சடகோபனுடைய
அந்தரங்க வ்ருத்திகளாய் -ரச கனமான ஆயிரம் திருவாய் மொழியிலும் இவை பத்தும் அப்யசித்தவர்கள்

——————

ஸ்ரீ பன்னீராயிரப்படி -1-3-11-

அநந்தரம் இத்திருவாய் மொழி வல்லவர்கள் நித்ய ஸூரி களோடு ஓக்க உயர்த்தியைப் போய்ப் பெற்று சம்சார சம்பந்தத்தை அறுத்தவர் என்கிறார் –

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-

அமரர்கள் தொழுது எழு -சாவாமைக்கு மருந்து ஆசைப்பட்ட தேவர்கள் -தொழுது எழு -என்று தம்மைப் போலே கையும் அஞ்சலியுமாய்க் கொண்டு கிளறும் படி
அலை கடல் கடைந்தவன் தன்னை-அலைகிற கடல் ஷூபிதமாம் படி கடைந்த அஷோப்ய ஸ்வபாவனைப் பற்ற
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்–பொருந்தின பொழிலின் அழகையுடைய திரு நகரிக்குக் கடவ ஆழ்வாருடைய
அந்தரங்க வ்ருத்திகளாய் வாசிக்க கைங்கர்யம் ஆகையால்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்–சப்த சாரஸ்யமும் அர்த்த சாரஸ்யமும் பொருந்தின ஆயிரமான அவற்றினுள்
திருப் பாற் கடலிலே அம்ருத தடாகம் போலே இருக்கிற இவை பத்தையும் அப்யஸிக்க வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–உயர்த்தியில் அமரரோடு ஒக்கச் சென்று தம்முடைய பிறவியாகிற சிக்கென்ற சிறை அறுவர் –

இத்திருவாய் மொழி ஐஞ்சீராய் நெடிலடி நான்கும் ஒத்து இருக்கையாலே கலித்துறை -நேரசை பதினாறே நிரையசை பதினேழு என்று
அடி எழுத்து ஒவ்வாது இருந்தது கட்டளைக் கலித்துறை அல்லாமையாலே –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -1-3-11-

நிகமத்தில்
இப்பத்தை அப்யசித்தவர்கள் நித்ய ஸூரிகள் வரிசையைப் பெற்று பின்பு சம்சார நிகலத்தை அறப் பெறுவார் என்கிறார்-

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-

அமரர்கள் தொழுது எழ –
கடைகிற போது அழகைக் கொண்டு -பிரயோஜனாந்தர பரரான தேவர்களும் -அநந்ய பிரயோஜனரைப் போலே அழகுக்குத் தோற்கும் படி யாயிற்று கடைந்தது
தத் ப்ராஞ்ஜ லயஸ் சர்வே பகவந்தம் ஸூ ரேச்வரா -துஷ்டுவு புண்டரீகாஷம் சரண்யம் சரணார்த்திந–
தொழுது ஏழு
-என்கிற தம் பாசுரம் ஆயிற்று என்கிறார் –

அலை கடல் கடைந்தவன் தன்னை
ஒரு கடல் நின்று ஒரு கடலைக் கடையுமா போலே அதி ஷூபிதமாகக் கடலைக் கடைந்த படி –

அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
சேர்ந்த பொழில் அழகை யுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய அந்தரங்க வ்ருத்தி யாயிற்று இவை தான்
வாசிகமான அடிமை இறே
பூர்ண விஷயத்தில் இதுக்கு மேல் செய்யலாவது இல்லையே –
தத் விப்ராசோ விபன்யவ –
நித்ய ஸூ ரிகளுக்கும் இதுவே இறே வ்ருத்தி –

அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும்
இவ் வாசிகமான அடிமை -முறை என்று -கார்யாபுத்த்யா செய்ய வேண்டாதபடி -ரச கனமாயிற்று இவ்வாயிரமும் –

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–
சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே
நித்ய ஸூரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன்
ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -1-3-11-

நிகமத்தில் , இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள்.
முற்பட நித்திய ஸூரிகள் வரிசையைப் பெற்று,
பின்னை சம்சாரமாகிற அறவைச் சிறை வெட்டிவிடப் பெறுவர்கள்
என்கிறார்.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றதைக் கடாக்ஷித்து சங்கதி –
அறவைச் சிறையாவது -அறவைக்குத் தெய்வம் துணை என்னுமா போலே -அறவை என்று தனியாய் –
அதில் அத்விதீயமான சிறையாய் துக்க ஏக ரூபமான சிறை -என்றபடி -தயநீயமான சிறை என்றுமாம்

—————–

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே
–1-3-11-

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை –
கவிழ்ந்து ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று கிடக்கிற தேவ ஜாதி யானது எழுத்து வாங்கும்படியாக ஆயிற்று,
தோளுந்தோள் மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமாறு போன்று கடைந்த படி.
குணங்களுக்குத் தோற்றுத் ‘தொழுது எழு’ என்கிற தம் பாசுரமே யாய்விட்டது
அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் ஆதலின், ‘அமரர்கள் தொழுது எழ’ என்கிறார்.

அமர் பொழில் –
சேர்ந்த பொழில்.

வளங்குருகூர் –
வளப்பத்தை யுடைத்தான திருநகரி. சடகோபன் குற்றேவல்கள் –
இத் திரு நகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொற்களைக் கொண்டு அடிமை-வாசிக கைங்கர்யம் – செய்தபடி யாயிற்று இவை தாம்.
ஆயின், சொல் அடிமை மாத்திரம் போதியதாமோ?’ எனின்,
எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் -பூர்ண விஷயத்தில் வாசிகமான விருத்திக்கு –சொற்களைக் கொண்டு செய்யும் அடிமைக்கு
மேற்படச் செய்யலாவன இல்லையே!
தத் விப்ராசோ விபன்யவ– (‘அப் பரமபதத்தில் இருக்கிற நித்திய ஸூரிகளும் துதி செய்துகொண்டே யிருக்கின்றார்கள்’ )என்கிறபடியே,
நித்திய ஸூரிகளுக்கும் தொழில் இதுவே அன்றோ?

அமர் சுவை ஆயிரம் –
ரசகனமாயிற்று -சுவை நிறைந்தனவாய் இருக்கிற ஆயிரம்.
‘இதனால், சொற்களைக் கொண்டு செய்யும் அடிமை ‘முறை’ என்று காரிய புத்தியாகச் செய்ய வேண்டா என்றபடி.

அவற்றினுள் இவை பத்தும் –
விண்ணவர் அமுது உண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட’ என்னுமாறு போன்று,
அவ் வாயிரத்துள் இத் திருவாய்மொழி-ரசகனமாயிற்று – சுவை நிறைந்ததாயிருக்கும்.

வல்லார் அமரரோடு உயர்விற்சென்று தம் பிறவி அம் சிறை அறுவர்-
இவற்றைக் கற்க வல்லவர்கள் நித்திய சூரிகளோடு ஒத்த உயர்வினையுடையராய்த்
தங்களுடைய பிறவியாகிற விலங்கு அறப் பெறுவர்கள்.
‘ஆயின், ‘பிறவி அற்று அமரரோடு உயர்விற்சென்று’ என்ன வேண்டாவோ?’ எனின்,
இப் பத்தைக் கற்ற போதே இவனை நித்திய ஸூரிகளில் ஒருவனாக நினைப்பன்;
பின்னைச் சரீரத்தின் பிரிவு பிறந்தால் போய்ப் புகுவான் இத்தனை.
அதாவது, சிறையிலே இராஜ குமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டி விடுவாரைப் போன்று,
நித்திய ஸூரிகள் வரிசையைக் கொடுத்துப் பின்னைச் சம்சாரமாகிற அஞ்சிறையைக் கழிப்பான் இறைவன் என்றபடி.
‘ஏன்? சரீரத்தின் பிரிவை உடனே உண்டாக்க ஒண்ணாதோ?’ எனின், ஒண்ணாது;
அரசன் ஒருவனுக்கு நாடு கொடுத்தால், முறைப்படி சென்று அந்நாட்டை அவன் அடைவது போன்று,
இவனும் விதிப்படியே செல்ல வேண்டும்.

இனி, ‘அமரரோடு உயர்விற்சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே,’ என்பதற்கு,
ஆதி வாஹிகரோடே விரஜையிலே சென்று ஸூஷ்ம சரீரமும் விதூநம் -நீங்கப் பெறுவர்,’ என்று கூறலுமாம்.
த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-( அருச்சுனா என்னுடைய அவதாரத்தையும் செயல்களையும்
தெய்வத்தன்மை பொருந்தியவை என்று எவன் ஒருவன் உண்மையாக அறிகிறானோ,அவன் இச் சரீரத்தை விட்டால்
பின் வேறு சரீரத்தை அடையான்; என்னையே அடைகிறான்,’ )என்று ஸ்ரீகீதையிற்கூறியது போன்று,
இவரும் அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’ என்கிறார்.

முதற்பாட்டில்,ஸூலபன் -‘எளியவன்’ என்றார்;
இரண்டாம் பாட்டில்,-ப்ரஸ்துதமான ஸுலப்யத்தை – சொன்ன அவ்வெளிமையை வகைப்படுத்தி -ச பிரகாரமாக -அருளிச்செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அத்தன்மைகள் தாம் அடியார்க்கு அறியலாம்; அல்லாதார்க்கு அறியப்போகா,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘இப்படிப்பட்டவனை அவன் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயியுங்கோள் – அடைமின்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ஆஸ்ரயணீய வஸ்து -அடையத்தக்க பொருள் இன்னது’ என்றும், ஆஸ்ரயிக்கும் பிரகாரம் -அடையும் விதம் இன்னது என்றும் அருளிச் செய்தார்;
ஏழாம் பாட்டில், ‘நீங்கள் சில் வாழ் நாள் பல் பிணிச் சிற்றறிவினிர் ஆகையாலே, விளம்பிக்க ஒண்ணாது; கடுக அடைமின,’ என்றார்:
எட்டாம் பாட்டில், ‘பற்றிய அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், பிரமன் சிவன் முதலியோர்கட்கும் காரணமானவன் வந்து அவதரிக்கைக்குக் காரணம் அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், இப்படி எளியவனானவனை முக் கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்;
முடிவில், இதனைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்கு – பலன் அருளிச் செய்தார்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அம்ருதாத் ப்ராஸனாத் மரண ராஹித்யார்த்தித்த -அமரர் -சாகாமைக்கு அம்ருதத்தில் அபிநிவேசம் உள்ளாரையும்
தனக்கு அடிமை ஆக்கிக் கொள்ள வல்லவனுடைய ஸுந்தர்ய அதிசயம் –
தோளும் தோள் மாலையும் –மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்
குற்றேவல் -குறுகின ஏவல் -அந்தரங்க கைங்கர்யம் / நெட்டேவல் -பகிரங்க கைங்கர்யம்
தத் விப்ராஸ -மேதாவிந -ஸ்துதி ஸீலா-வாசிக கைங்கர்ய பரம்/ ஜாக்ருவாம்ச -எப்போதும் ஓக்க விளங்கி நிற்பவர் /
சதா பஸ்யந்தி -போக்யதையே இழியப் பண்ணும் கார்ய புத்யா செய்ய வேண்டாம்
இத்திருவாய் மொழி ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த அவதார ரஹஸ்ய பிரகாரத்தை வெளியிடுகையாலே
அதுக்குச் சொன்ன பலமே இதுக்கும் பலம் -தேஹம் த்யக்த்வா மாமேதி புநர் ஜென்ம நைதி –
ஸ்ரோத்ரு புத்தி சமாதானார்த்தம் பாட்டுக்கள் தோறும் ப்ரமேயம் அருளிச் செய்கிறார் –

——————————–

பத்துடை யோர்க்கு என்றும் பரன் எளியனாம் பிறப்பால்;
முத்தி தரும் மா நிலத்தீர்! மூண்டு அவன் பால்-பத்தி செயும்’
என்று ரைத்த மாறன் றன் இன் சொல்லாற் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ் சிறை
–3–

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading