மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன்றாள்
தூமலர் சூடிய தொல்லருள் மாறன் துணையடிக்கீழ்
வாழ்வை யுகக்கு மிராமாநுச முநி வண்மை போற்றும்
சீர்மைய னெங்கள் தூப்புற் பிள்ளை பாதமென் சென்னியதே– — பிள்ளையந்தாதி
பூவில் மன்னு மங்கை தாள் பொருந்து மார்பனாழ் புகழ்
பாவியங்கு வேத நான்கு பாடு மாறனாகமும்
மேனியோங்கு பாடியம் விதித்த யோகி நாமமே
நாவிலங்கு தூப்புலய்யர் பாதம் நண்ணு நெஞ்சமே—- தேசிகர் சந்தவிருத்தம்
வேதமுடித் தேசிகனே வேதியர் குலத்தரசே
சாது சனங்களுக்குத் தாவளமே — போதமரும்
நின்னடியை யென்றும் நினைந்திருப்பார் பாதமென்றன்
சென்னிதனிற் சூடுமலர்.— தேசிகர் நூற்றந்தாதி
———-
மார்கழித் திங்களின்றா யிரத்தான்மதிச்
சீர் நிரைந்தோங்கு நம் சேமமாய்ச்செவ்வியார்
கார்முகில் கண்ணனுக்காசை யாலூசலே
பார்புகழ் நாநலப் புண்ணியர் பாடுவார்
கேட்பவர் கேசவன் கீர்த்தியே கேட்டவர்க்
காட்படத் தேசிகர்க் காக்கியே யெம்மிறைத்
தாட்பெருஞ் சீர்த்தியே யாட்டு நம் மூசலே
கேட்ப நின்றெம்மை யாட்கொள்ளுமோர் வள்ளலார்.
விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரை மலராள்
வளக்காதல் கொண்டுறை மார்பன் திறத்துமுன தடியார்
துளக்காத லில்லவர் தங்கள் திறத்திலுந் தூய்மை யெண்ணிக்
களக்காதல் செய்யும்நிலை கடியாய் தூப்புற்காவலனே.— பிள்ளையந்தாதி.
தேவர் முனிவர்களுஞ் சித்தர்களும் பக்தர்களும்
பூவின் மழைபொழிந்துபோற்றியே — தாவி
யுலகளந்த மாலை யுணர்ந்துகக்குந் தூப்புற்
குலகுருவே யெங்கள் குரு—– தேசிகர் நூற்றந்தாதி
பூவளருந் திருமாது புணர்ந்த நம் புண்ணியனார்
தாவளமான தனித்திவஞ் சேர்ந்து தமருடனே
நாவளரும் பெரு நான்மறையோதிய கீதமெல்லாம்
பாவளருந் தமிழ்ப் பல்லாண்டிசை யுடன்பாடுவமே.—— தேசிக மாலை
——————
ஸ்ரீ:வேதாந்ததேசிகரூசல்
காப்பு
விண்ணாகி இறையாகி விரசையாகி இசையாகி இருக்காகி இதயமாகி
மண்ணாகி மானாகி மனந்தானாகி மற்றாகி மனுவாகி மறந்தாராகி
எண்கடந்து கடைப்பட்ட யானுமாகிப் பின்னாக விரகிலியாகிப் போந்தே என் கண்
கண்ணோக்கக் கடவதிருக் கடவுளாயே காப்புயர்த்த கேசவனார் கழலே காப்பு.
நூல்
திரு வாழத் திரு வாழு மார்பர் வாழத்
திரு மார்பர் திருவடியே வாழ வன்னார்
திருவடிப்பூப் போத சடகோபர் வாழத்
தெள்ளிய சீரெதிராசர் செங்கோல் வாழ
வருண நெறிச் செவ்வி வளம் செழித்து வாழ
வைணவர்கள் குடிகுடியாய் வாழ வாழச்
சுருதி முடிக் குருப் புனித ராடிரூசல்
சீர் தூப்புல் வேங்கடவ ராடிரூசல். —1-
பாங்கிலகு பாணிநியம் பொற்காலாக
வாங்கரிய யாக்கியமோர் விட்டமாக
ஓங்கு பல பூங்கலைகள் பந்தலாக
ஆணிமறைச் சங்கிலிகள் நான்குமாக
ஆங்கு திருப்பாடியமே ஆட்டமாகப்
பாதுகை யாயிரமறையே போகமாக
ஓங்கர நாவொலிக் கோலராடிரூசல்
வேதசிரத் தேசிகனாராடி ரூசல். –2-
மாற்றருசந்தருக் கணமே மராடியாக
மன்னு நெறிச் சைமிநியம் மணையுமாக
வீற்றுயர்ந்து வித்தகராய் ஒவ்வோராட்டால்
வழுத்தவழும் வாதவழி யொழியச்சாடிச்
சாற்றுமறை யாடுகொடி நாட்டிநல்லார்
காக்குமறை முடிமிளிர்ந்த குருவாயோங்கி
நாற்றிசைக் கோர்துளக்கறுதேசாடிரூசல்
நற்றவர்க் கோருற்றதுணையாடி ரூசல். –3-
காடெஞ்சிப் பொய்யர் புறங் காட்டியோடக்
கவடர் குழுகிடுகிடென நடுங்கியாட
நாடெங்கும் நான்மறையர் நாக்கொண்டாட
நல்லுலகு நலந்திகழ்ந்து குடக்கூத்தாட
ஏடெங்கும் நற்பொருளே நேயர்நாடக்
கேசவனார் வண்புகழே தேசம்பாட
ஆடெய்து மடியழகராடி ரூசல்
ஆரியர்கட் காசிரியராடி ரூசல். –4-
நெற்றி மிசைத் திருநாமத் தேசுவீச
நூலெனமும் மறைநலமே உரம்குலாவ
ஒற்றிலகு முயர்சாற்றுப்படி துலங்கத்
தோள்மிசைச் சங்காழிதிருச் சின்னமின்ன
நற்றவர்கொள் நீள்கரத்துத் தூப்புல்துன்ன
நாமிசையே வழுவாதுநாத னோதச்
சுற்றிவரச் சூரியர்க ளாடிரூசல்
சோதியதா யோதுகுரு வாடிரூசல். –5-
சரணொன்றே அரணாகு மன்பராடச்
சுருதியுறை நாவர்கநஞ்சடைதொடுக்க
வரகவியோர் வாழிதிகழ் மொழிவழங்க
ஓசையுயரிரு கலைஞரூசலேத்தச்
சுரமிசை நற்பதமிசையும் சுத்தர்பாடச்
சிட்டர்கரம் கிட்டுதவக் கவரிவீச
வரமருளும் திருவுருவே ஆடிரூசல்
வாழுதிரு மறைத்திருவே ஆடிரூசல். –6-
மும்மதமீமாஞ்சை பொழி வேழமாக
மிடற்றழுத்து மெழுத்துமறைக் கரடியாக
வம்பர்விழுந் தருக்கணவாய் வேங்கையாக
மறைமுடியாய்க் கவிமுழங்கு சிங்கமாகத்
துன்பமெலாந் துடைத்துத்தங் கேளிர்தாங்கும்
தூணெனவே தூயவராய்த் தோன்றியூன்றி
அன்பர்குலங் காக்குமிறை யாடிரூசல்
இன்ப மருளெம் பெருமானாடிரூசல். –7-
கழிபெருமா தேவரிடை கழியடைந்து
கார்மேனிக் கடவுளராய்க் கனத்துத்தொண்டர்
வழிதழைக்கும் தமிழ்ப்பகவர் விழியேயாகி
ஒளிவிடுமோர் முச்சுடராய் உடன்மிளிர்ந்து
செழுமறையே செந்தமிழாய்ச் சங்கநாதம்
செய்துதிருக் கண்டஒலி கொண்டகண்டம்
முழங்குமுதுத் தமிழ்மறைய ராடிரூசல்
முத்தமிழ் சேர்முது மறைய ராடிரூசல். –8-
ஆசை மிசைத்தழையு மரித்தாளேபோல
ஆண்மைமிசை அறமன்னர் கோலேபோல
ஓசைமிசை உயர்செய்யுட் குணமேபோல
ஓமிசையோங் காரண நூலொலியேபோல
நேசமிசைக்கனிமாறன் பணியேபோல
நாதமிசை யூதுகுழல் சுரமேபோலத்
தேசுதிகழ் மங்கலமே ஆடிரூசல்
ஏவுமறை மாதவமே ஆடிரூசல். –9-
பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வரும் குருகேசன் விட்டுசித்தன்
துய்ய குலசேகரனம் பாணநாதன்
தொண்டரடிப்பொடி மழிசை வந்தசோதி
செய்ய தமிழ் மங்கையர்கோன் செல்வக்கோதை
சீர்மதுரரோ ரமுதர் சேர்ந்துவந்து
பெய்யுமருள் மாரி வடிவாடிரூசல்
பொய்யாத மொழிப் பகவராடிரூசல். –10- .
முடிபொலிந்து துன்னுதிரு மறைகள்யாவும்
மறையாறா யங்கமென மிளிர்ந்தவாறும்
குடியேறு கோயிலென வந்தவெந்தை
உபநிடதக் கடல்கடைந்த அமுதேயான
படியோங்கி அவனோங்கு மதியாயோங்கிப்
பாடியமா யோங்குபுக ழுடையவர்க்கே
படிகிடக்கும் படைவீர ராடிரூசல்
மறைதாங்கு மதிப்பரம ராடிரூசல். –11-
அந்தணரும் அந்தியரும் அரியடிக்கீழ்ச்
சந்தி செயச்சரண நெறித்திருவிளக்கை
நந்தாது நான்மறைநீண் முடிநிறுத்தி
நாதனடிச் சோதிமலர் நலம்துலங்கத்
தந்தருளித் திருவளர்க்கும் தகவேகொண்ட
கொண்டலென வந்துலகு கொள்ளும்வள்ளல்
சந்தமிகு தமிழ்மறைய ராடிரூசல்
சீர்கவிதார்க்கிக சிங்க ராடிரூசல். –12-
தண்ணியரைத் தன்னவராய் நண்ணித்தன்னில்
திருவுடை யாரென்று திருவுள்ளத்துள்ளும்
புண்ணியனார் மன்னுபுகழ்ப் பதங்கணங்கள்
புந்தியிடை முளைத்தரும்பிப் பூத்தபான்மை
எண்ணியிது வென்னையென எண்ணவொண்ணா
தென்றுமொரு வள்ளலிவ ரென்றேகொள்ளப்
பன்னுமறைக் கண்ணழக ராடிரூசல்
பார்புகழு மோரொரு வராடிரூசல். -13-
செய்தவரே யெய்துபயன் யாவும்சேர்க்கும்
சீரியரே யாரியரா யீண்டுத்தோன்றி
எய்தரிய பொறையொன்றே பூண்டுயாண்டும்
எம்மடி களென்றறிஞ ரேத்தநின்று
வைதவர்தம் வைவையெலாம் வாழ்த்தாயெண்ணும்
வைணவர்கோ னெனப்பெரியோர் பணிந்துபேணும்
கைதவ மானிடரெம்மா னாடிரூசல்
கண்ணொக்கும் கருணை முகிலாடிரூசல். –14-
கண்ணாகிக் கருத்தாகிக் கருணையாகிச்
சொல்லாகிப் பொருளாகித் தொடர்ச்சியாகி
நுண்ணிய பல்லுயிராகி உடலுமாகி
நல்லுருவ உலகாகி நலமேயாகி
எண்ணரிய தனதாகித் தானேயாகி
எல்லாம் தன்னுடலென்ன விரிந்தநாதன்
கண்ணோட்டம் கனத்தகுரு ஆடிரூசல்
கண்ணாகு மெய்யடிய ராடிரூசல். –15-
மண்மிசை மாமறை மணமேகமழுமாறு
மாதவனாரரு ளொன்றே பொருளாமாறு
விண்ணவரு மிங்குவர விரும்புமாறு
வேதியர்கள் வேள்வி விருந்தேற்குமாறு
கண்ணனருளுறுதி மறை கண்ணாமாறு
கதியெல்லாம் சடகோப னடியாமாறு
நண்ணு மறைத்தேசிகரே ஆடிரூசல்
நடையாடு மறைமுடியே ஆடிரூசல். –16-
விண்மேவு பத்திநெறி விளங்குபத்தர்
வித்தகராயத்திகிரிச் சிரத்துறைந்த
வண்புகழோன் திருவுருவே யன்னானாமோ
அன்றி யருள்மாரி யெழிலவனதாமோ
திண்ணமெமக் கெவ்வாறென் றூசலாடும்
திருவுள்ள முள்ளுநலர் திண்ணம்தேறக்
கண்ணொளியாய் வந்த குருவாடிரூசல்
காவலரெம் தரும குருவாடிரூசல். –17-
விளக்கொளி அத்திகிரிபதி வேங்கடக்கோன்
விண்ணாகு சிங்கமலை யோங்குசிங்கன்
துளக்கற்ற வருளமுதத் தென்னரங்கன்
துய்யதிருச் சோலைமலைச் சுந்தரத்தோள்
அளப்பரிய ஆரமுதப் பௌவமெங்கள்
குலக்கடவுள் கேசவனும் கடைக்கணித்தே
களித்துயர்த்தும் குருமூர்த்தி யாடிரூசல்
கலிதவிர்க்கு மாசிரியராடிரூசல். –18-
உலகமெலா மன்புயர ஆடிரூசல்
ஊழியமே ஊதிய மென்றாடிரூசல்
கலகமெலாம் கலக்கழிய ஆடிரூசல்
ஞாலமெலாம் ஞானமெழ ஆடிரூசல்
குலநெறிகள் குணமுறவே ஆடிரூசல்
குரவர்குணக் கடலாட ஆடிரூசல்
நலமிங்கு தேசிகரே ஆடிரூசல்
நிலத்தேவர் குலத்தேவே ஆடிரூசல். –19-
இருகலையு மொருகலை யென்றாடிரூசல்
ஈரடியு மோரடி யென்றாடிரூசல்
இருவிழியு மொருவிழி யென்றாடிரூசல்
ஈரொளியு மோரொளி யென்றாடிரூசல்
இருவழியு மொருவழி யென்றாடிரூசல்
ஈருலகு மோருலகென் றாடிரூசல்
பருமறையாம் திருமலையே ஆடிரூசல்
பொறைபுனையும் பரமகுரு ஆடிரூசல். –20-
செந்தமிழும் வடகலையும் சென்னிசேர்ந்து
செழுமறையின் செம்பொருளே சொரியவானோர்
புந்திமலர் மாதவனார் பதமலர்க்கே
பற்பணியும் சொற்பணியும் பரப்பிச்செய்து
சந்தமிகு சடகோபனடியே சூடிச்
சதுமறைக் கோர்முடிச் செல்வக்குருவாய்த்தூப்புல்
வந்தவிரு வேதகலைத் தலைவரூசல்
கேசவனோர் நாலைந்து கனிந்திசைத்தான்.–21-
————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply